மாமலர் - 11
11. தொலைமலர்
“எல்லைக்குள் நிற்றல்… அந்தச் சொற்றொடர் மிக பாதுகாப்பாக உணரச்செய்கிறது” என்றாள் திரௌபதி. “அரசுசூழ்தலை கற்றநாள் முதல் நான் உணர்ந்த ஒன்று. மானுடர் பேசிக் கொள்வதனைத்துமே எல்லைக்குட்பட்டவைதான். சொல்லுக்கு முன்னரே இருவரும் ஆடும் களம் எல்லைகொண்டுவிடுகிறது. அவ்வெல்லைதான் அனைத்துச் சொற்களுக்கும் பொருள்விரிவை அளிக்கிறது. எல்லை குறுகும்தோறும் சொற்கள் எடைமிகுந்து தெய்வச்சிலைகள்போல் அலகிலாத ஆழம்கொண்டு அச்சுறுத்தத் தொடங்கிவிடுகின்றன. சொற்களைக் கொண்டு ஒரு நுண்ணிய களமாடலைத்தான் அரசவைகளில் நிகழ்த்துகிறோம்.” பீமன் “எல்லா இடமும் எங்குமிருக்கும் அரசனின் அவைதான் என்பர் முனிவர்” என்று நகைத்தான். அவளும் உடன் நகைத்தாள்.
அதன்பின் அவள் சொற்கள் மேலும் இயல்பாக ஒலிக்கலாயின. “காம்பில்யத்தில் வாழ்கையில் பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினியாக அல்லாது வேறெவ்வகையிலும் நான் என்னை உணரவில்லை. அதற்கென்று ஒவ்வொரு நாளும் திட்டமிட்டேன். நான் கற்றதெல்லாம் அதற்காகவே. நிகரற்ற பெருநகரமொன்றை எனக்கென உருவகித்தேன். அதை சூத்ராகிகளுடன் பல ஆண்டுகாலம் சூழ்ந்து வரைபடத்தில் எழுப்பினேன். அக்கனவை கையில் வைத்தபடி என் எண்ணங்களுக்கு ஊர்தியாகும் கணவனைக் குறித்து மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தேன். அவன் எனக்கு இணையாக பாரதவர்ஷத்தின் அரியணை அமர்பவன். பிறிதொன்றையும் நான் எண்ணவில்லை என்று நானே நம்பியிருந்தேன். அவ்வாறல்ல என்று நானறிந்த ஒரு தருணம் வந்தது.”
பீமன் “ஆம், புரிகிறது.” என்றான். அவள் அதை சொல்லவேண்டாமே என அவன் எண்ணியது உடலில் ஒரு மிகமெல்லிய அசைவென வெளிப்பட்டது. ஆனால் அவள் தடையின்றி சொல்லூறும் உளம்கொண்டிருந்தாள். “பெண்ணென்று மட்டும் நின்றிருக்கும் ஒரு தருணம். அதனுடன் இந்த மணம் இணைந்துகொண்டுள்ளது என இப்போது உணர்கிறேன். இதை அப்போது நினைவுகூர்ந்தேனா என்று தெரியவில்லை. ஆனால் உள்ளத்தில் இணைந்துவிட்டிருப்பது பின்னர் ஒருநாள் தெரிந்தது. உள்ளே ஒரு சிலந்தி ஒவ்வொன்றையும் தாவித்தாவி மெல்லிய நூலால் இணைத்துக்கொண்டே இருக்கிறது” என்றாள். மீண்டும் வெளியே விழிநோக்க “இத்தனை நாட்களுக்குப்பின் மீண்டும் அந்த மணம் இங்கு வந்துள்ளது. இப்போது அந்த மணத்தை என் மூக்கு உண்மையிலேயே உணர்கிறது. இங்கெங்கோ விழுந்து கிடக்கிறது அந்த மலர்” என்றாள்.
“இங்கா?” என்றான் பீமன். “ஆம், அந்த மணத்தை தேடித்தான் இங்கு வந்தேன். இங்கு அமர்ந்தபிறகு மிகத்தெளிவாகவே உணர்கிறேன். இங்குதான் விழுந்துகிடக்கிறது அந்த நறுமணம்.” பீமன் சுற்றிலும் நோக்கியபடி “கல்யாண சௌகந்திகமா?” என குரலில் ஏளனம் எழ கேட்டான். அவள் தலையசைத்தாள். அவன் எழுந்து “சரி, இங்குள்ள அனைத்து உதிர்ந்த மலர்களையும் சேர்த்து தருகிறேன். அந்த மலரை எடுத்து எனக்குக் காட்டு” என்றான். “இச்சோலையில் இப்போது பல்லாயிரம் மலர்கள் விரிந்து உதிர்ந்துள்ளன. அத்தனை உதிர்ந்த மலர்கள் நடுவே அந்த மலரை என்னால் பிரித்தறிய முடியாது” என்றாள் அவள். “ஏன்?” என்றான். “தெரியவில்லை, எந்த மலரை முகர்ந்தாலும் அந்த மலரின் மணமே இப்போது தெரியும்.” அவன் “பிறகெப்படி அதை கண்டடைவது?” என்றான்.
அவள் இதழ்கள் நடுவே பல்வரிசையின் கீழ்நுனி தெரிய புன்னகைத்து “என் மூக்கு அறியும் நறுமணத்தை நீங்களும் உணர்ந்தால் போதும்” என்றாள். அதே புன்னகையுடன் அவன் “அதற்கு உன் கனவுக்குள் நான் வரவேண்டும்” என்றான். “அதை உங்களுக்குள் எழுப்ப முடியுமென்று எண்ணித்தான் இத்தனை சொற்கள். இத்தகைய நேரடி உணர்வுகளைச் சொல்வதில் அணிகளும் உவமைகளும் எத்தனை பொருளற்றவை என தோன்றுகிறது. இதற்கு அப்பால் சொல்வதற்கு ஒன்றுமில்லை. நான் இந்த நறுமணத்தை, அல்லது இதைப்போன்ற எதையோ ஒன்றை, எங்கெல்லாம் அறிந்தேன் என்று மட்டும் சொல்கிறேன்.” பீமன் மீண்டும் அமர்ந்து “சொல்!” என்றான். என்ன விளையாட்டு இது என ஒரு கணம் சலிப்புற்றான். எழுந்து காட்டுக்குள் சென்றுவிடவேண்டுமென அகம் விழைய அதை கடந்தான். அவள் சொல்லப்போவதை தான் விரும்பமுடியாதென்று முன்னரே உள்ளம் அறிந்தது எப்படி?
“நீங்கள் விழையாததை சொல்லாமலிருக்கலாமென எண்ணினேன். ஆனால் அதைச் சொல்லவே என் நெஞ்சு தாவுகிறது” என்றாள். பீமன் “ம்” என்றான். “எந்தப் பெண்ணும் கணவனுக்கு அதன் ஒரு சிறுநுனியை காட்டியிருப்பாள், இல்லையா?” என்றாள் அவள். அறியாது அவள் விழிகளில் விழிதொட்டு “என்ன?” என்றான் பீமன். உடனே புரிந்துகொண்டு அப்பால் நோக்கினான். ஆனால் அவன் உடல் விழியாயிற்று. “அது அவள் அவனைக் கடந்து செல்லும் ஒரு தருணம். தன்னில் ஒன்று எப்போதும் மிஞ்சியிருக்கிறது என்று சொல்லவே பெண் விழைவாள்” என்று அவள் சொன்னாள். அவன் இவள் தன்னிடம் எதிர்பார்ப்பதென்ன என்று எண்ணினான். அதை தான் அளிக்கலாகாது. ஆனால் அனைத்தையும் அறிந்தும் ஆட உளம்குவியாதவன் தான் என மறுகணம் உணர்ந்தான்.
“என் மணத்தன்னேற்புக்கு முந்தைய நாள் ஐங்குழல் அன்னையரின் ஆலயத்தில் தொழச்சென்றபோது ஒருவரை சந்தித்தேன். நாராயணியின் ஆலயத்தில்.” பீமன் அவள் சொல்வதற்காக விழி செலுத்தி அமர்ந்திருந்தான். “கரிய ஒளிகொண்ட நெடிய உடல். மார்பில் கட்டப்பட்ட கைகள். இளநகைப்பின் ஒளிகொண்ட கண்கள். அருகே பேருடலரான தோழர்” என அவள் தொடர்ந்தாள். அவன் புரிந்துகொண்டானா என அவள் ஐயுறுகிறாளா என எண்ணிய பீமன் “ஆம்” என்றான். அவள் அக்குரலை கேட்டதாகவே தெரியவில்லை. “பின்னர் ஒருவனை வாளுருவி வெட்டும் பொருட்டு சென்றேன். அன்றுமின்றும் அவனுக்கிணையாக நான் எவரையும் வெறுத்ததில்லை. ஆனால் எந்நிலையிலும் அவனை என்னால் கொல்ல முடியாதென்று அறிந்து உடைந்து அமர்ந்து அழுதேன். இறுதி விம்மலுடன் அவ்வழுகை முடிந்தபோது உள்ளம் மலர்ந்து அந்த மணத்தை உணர்ந்தேன்.”
பீமன் தலையசைத்தான். “அவன் என் களித்தோழன், இரண்டாமவரே” என்றாள். “அவன் மைந்தன் அவ்வடிவில் பிறந்து என்னுடன் ஆடத்தொடங்கியதும் அவன் மேலும் இனியவனாக ஆனான்.” நிலையற்று ஒன்றோடொன்று பின்னி உரசிக்கொண்டிருந்த அவள் விரல்கள் நடக்கும் தேளின் கால்களும் கொடுக்குகளும் போல அசைவதாக அவன் நினைத்தான். அந்த எண்ணத்தை உணர்ந்ததும் புன்னகை எழுந்தது. கவிஞர்களைப்போல நல்ல ஒப்பணிகள் தனக்கு தோன்றவே போவதில்லை போலும். அவன் முகத்தில் விரியவில்லை என்றாலும் அப்புன்னகையை உணர்ந்து அவள் திரும்பி நோக்கினாள். பின்னர் இயல்பாக அவ்வுணர்ச்சிகளுக்குள் இழுக்கப்பட்டு பேசலானாள்.
“பின்னர் ஒருமுறை மூத்தோரும் கற்றோரும் அரசரும் குலத்தோரும் கூடிய அவைமன்றில் நான் நின்றேன். நான் சூடிய ஆணவங்கள் அனைத்தும் களையப்பட்டு சிறுத்து வெறுமைகொண்டேன். பாண்டவரே, அன்று என் உள்ளம் வேறெதையும் எண்ணவில்லை. என் உடல் என் உடல் என்றே பதறியது. இங்கு பெண் என்பவள் வெறும் உடல் மட்டுமே என்று அன்று உணர்ந்தேன். புடவியில் எந்த ஆணும் அவளுக்கு காப்பல்ல என்று அப்போது அறிந்தேன்.” அவள் குரல் அத்தனை இயல்பாக ஒலித்தமையால் அவன் திரும்பி அவளை நோக்கினான். அவள் கன்னவளைவுகளில் கழுத்தின் நெகிழ்கோட்டில் வானொளி விளிம்பு தெரிந்தது. ஒரு சொல்விளையாட்டினூடாக அவள் வெளிப்பட இடமளித்துவிட்டோம் என அவன் அறிந்தான்.
“அவ்வுடைவு எளிதல்ல. எப்பெண்ணுக்கும் அது முழு இறப்பே” என்றாள். “எப்படியோ பிறந்த கணம் முதல் ஆணின் அன்புக்கும் கொஞ்சலுக்கும் உரியவளாக, ஆணின் கைகளால் வேலிகட்டி காக்கப்படுபவளாக, ஆணை கொழுகொம்பென பற்றி ஏறுபவளாகத்தான் பெண் இங்கு வளர்கிறாள். பாண்டவரே, அது ஐவரும் இறந்த நாள். திருஷ்டத்யும்னன் இறந்த நாள். துருபதன் இறந்த நாள். ஐந்து மைந்தர்கள் பொருளிழந்த நாள். நெஞ்சில் நிறைந்த ஆழிவண்ணன் மறைந்த நாள். அதிலிருந்து மீள எனக்கு நெடுநாட்களாயிற்று. ஆனால் அவ்வாறு மீண்டபின்னரே நான் என எஞ்சினேன். நான் என நிறைவுடன் உணரலானேன்.”
“இக்காட்டுக்குள் வருவதுவரை என்னுள் நானே ஒடுங்கி புற உலகை முற்றிலும் தவிர்த்து உள்ளோடும் எண்ணங்களை மட்டுமே ஓயாது அளைந்து கொண்டிருந்தேன். சிடுக்கவிழ்க்க முனைந்து சலித்து விரல்கள் மேலும் மேலுமென முடிச்சுகளைப் போடுவதை உணர்ந்து அதை முற்றிலுமாக கைவிட்டேன். எஞ்சியது சமைப்பதும், தூய்மை செய்வதும் மட்டுமே. ஆடைகளைந்து காட்டுச்சுனைகளிலும் ஆறுகளிலும் நீராடுகையில் மட்டுமே புரியாத விடுதலையொன்றை உணர்ந்தேன். எளிய செயல்களில் மூழ்க முடிந்தமை எனக்கு மூதன்னையர் அளித்த அளி. சமையல் என்பது மீண்டும் மீண்டும் ஒன்றே. தூய்மை செய்வது அதனிலும் எளிது. ஆனால் இச்செயல்களினூடாக என்னை நான் மாற்றிக்கொண்டுவிட்டதை மெல்ல அறிந்தேன்.”
“வெறும் அடுமனைப்பெண், பிறிதொன்றுமல்லாது இருத்தல். அவ்விடுதலையை கொண்டாடத் தொடங்கினேன். விழித்தெழுகையில் அன்று எதை சமைப்பது என்பதைப் பற்றியன்றி பிறிதொன்றையும் எண்ணவேண்டாம் என்றிருக்கும் நிலை. இதுவே நிறைவு. இது என்னை கனியச்செய்யும் என எண்ணியிருந்தேன்” என்றாள் திரௌபதி. “ஆனால் இக்கனவு என்னை மீண்டும் வந்து தொட்டுள்ளது. ஏன் என்று தெரியவில்லை. அனைத்தும் குலைந்துவிட்டன. மீண்டும் ஒரு தொடக்கம் போல.” அவள் குனிந்து நோக்கி “அந்த மலர்… இங்கெங்கோ அது விழுந்து கிடக்கிறது. விண்ணிலிருந்து விழுந்திருக்கிறது” என்றாள்.
“இதுவும் ஒரு உளமயக்குதான், தேவி” என்றான் பீமன். “எளிய அடுமனைப்பெண் என உன்னை ஆக்கிக்கொண்டு நீ அடையும் விடுதலைக்கு ஓர் எல்லை உள்ளது. அவ்வெல்லையை அடைந்தபின் உன் ஆழத்துறையும் ஆணவத்தில் விரல் படுகிறது, அது விழித்துக்கொள்கிறது. இல்லை, நான் வேறு என்கிறது. எல்லைக்கப்பால் பிறிதொன்று என உள்ளம் தேடுகிறது. எளிய மானுடராக இப்புவியில் பிறப்பவர்கள் மட்டுமே எளியராக வாழமுடியும். பிறிதொன்றெனப் பிறந்த எவரும் தங்களை உதிர்க்க முடியாது.”
“மிகச் சிலரால் முடியலாம், அதைத்தான் தவம் என்று சொல்கிறார்கள் போலும். துறந்திறங்குபவர்களில் ஆயிரம் பேர்களில் ஒருவர் மட்டுமே அமர முடிகிறது. அமர்ந்தவர்களில் ஆயிரம் பேர்களில் ஒருவர் மட்டுமே அங்கு நிலைக்க முடிகிறது” என்று பீமன் தொடர்ந்தான். “பார்த்தாயல்லவா…? மூத்தவரும் இளையவனும் தேடிச்சென்று அடைந்தபின் திரும்பிவந்து அமைந்துள்ளார்கள். வென்றதெல்லாம் இப்புவிக்குரியவை என்றால் சென்றதன் பொருள்தான் என்ன?”
அவள் அவன் சொற்களைக் கேட்காமல் தன் உளஒழுக்கை தொடர்ந்து சென்றாள். “அந்த மணம் நான் உங்களுடன் இருக்கும்போது மட்டும் ஏன் வந்தது? அதைத்தான் எண்ணிக்கொண்டிருக்கிறேன். உங்கள் கைகளின் எடை என் மேல் இருப்பதை எப்போதும் விரும்புவேன். இன்று விழித்துக்கொண்ட பின்னும் உங்கள் துயிலோசையுடன் இணைந்தே அந்த மணம் எனக்குத் தெரிந்தது. உங்கள் கையிலிருந்து நழுவி நான் எழுந்தபோது ஒருகணம் அது உங்கள் மணம் என்றுணர்ந்தேன். படிகளில் இறங்கி வரும்போது அந்த மணத்தை நான் முன்பு அறிந்திருக்கிறேன் என்று தோன்றியது. முன்பு எப்போதோ உங்கள் மணமாக அதை அறிந்திருக்கிறேன்.”
“எப்போது என நான் மீளமீள கேட்டுக்கொண்டேன். முன்பு என்னை நீங்கள் காம்பில்யநகரின் தெருக்களினூடாக தேரில் வைத்து இழுத்துச் சென்றபோது? உங்கள் தோளிலேறி நான் கங்கையில் நீந்திக் களித்தபோது…? தெரியவில்லை. அதையெல்லாம் இணைத்துக்கொள்ள விழைகிறேனா? உள்ளத்தை பின்தொடர்வது புகையைப் பற்ற முயல்வதுபோல…” பீமன் “இங்கிருந்து அவற்றை எண்ணிக்கொண்டாயா?” என்றான். “ஆம், ஒவ்வொரு கணமாக எண்ணி கோத்துக்கொண்டேன். ஆனால் என் அறிவுக்குத் தெரிகிறது என் உள்ளாழத்தின் நுண்நெகிழ்வு ஒருபோதும் உங்களுக்கென இருந்ததில்லை. அனைத்தையும் களைந்திட்டு மீறிவந்து களியாடுகையில் ஒரு துணைமட்டுமே நீங்கள்.”
“இன்று உங்களுக்காகவே நிறைந்திருக்கிறேன், பாண்டவரே. நான் அதை எப்படி உங்களுக்கு சொல்வது? எத்தனை சொன்னபிறகும் சொல்லப்படாமல் அங்கேயே இருக்கிறதே?” என்றாள். சட்டென்று அவள் உதடுகளை அழுத்திக்கொண்டு விம்மலை அடக்கினாள். மெல்லிய ஓசை எழ பீமன் அவள் கைகளை தொட்டான். “நான் என்ன செய்வது, தேவி? நான் அளிப்பதற்கு என்ன உள்ளது? உயிர் எனில் இக்கணம் பிறிதொரு எண்ணமில்லாமல் அதை அளிப்பேன்” என்றான்.
அவள் தன் இருகைகளாலும் அவன் கைகளைப்பற்றி பொத்தி வைத்துக்கொண்டாள். “ஆம், நான் அதை அறிவேன். அன்று சிந்து மன்னனை இழுத்து வந்தபோது பிறர் விழிகள் எதிலும் இல்லாத ஒன்று உங்கள் விழிகளில் இருந்தது. அது பெரும்சினம். பிறிதொன்றுக்குமன்றி எனக்கென மட்டுமே எழுந்த சினம். பாண்டவரே, அக்கணம் நீங்கள் எனக்குரியவரானீர். இனி எனக்கு பிறிதெவரும் கணவர் அல்ல.”
தன் உள்ளம் ஏன் பொங்கியெழவில்லை என அவன் வியந்தான். அத்தனை நேருச்சங்களிலும் அலையடங்கிவிடுகின்றன எண்ணங்கள். அப்பாலென விலகிநின்று நோக்குகின்றது தன்னிலை. “அன்று அவன் பொருட்டு என் உளம் இரங்கியது. ஆனால் இரவு துயில்கையில் உங்கள் விழிகள் மட்டுமே நெஞ்சில் எஞ்சியிருந்தது. அதிலிருந்த அனலை பேருவகையுடன் மீள மீள என் விழிக்குள் தீட்டிக்கொண்டேன். நாட்கணக்கில் ஒருகணம்கூட விடாமல் அதைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன் என்று சொன்னால் ஒருவேளை நம்ப மாட்டீர்கள்.”
நீள்மூச்சுடன் “நெடுங்காலம் ஆயிற்று பாண்டவரே, அப்படி பிறிதொன்றை எண்ணியும் விலக்க முடியாமல் முற்றிலும் இழந்து எண்ணிக்கொண்டிருக்கும் நிலை வாய்த்து” என அவள் சொன்னாள். “ஒருகணத்தில் அத்துன்பத்தை எண்ணிச் சலித்து சினம் கொண்டேன். என்ன இது? மீண்டும் ஒரு துயரை… பெண்போல என்று கசந்து என்னையே கடிந்துகொண்டேன். பின்னர் தோன்றியது, பெண்ணென்றும் பேதையென்றும் இருக்கும் நிலை வாய்த்தது நல்லூழல்லவா என்று. எண்ணி கரையவும் நினைந்து விழிநீர் மல்கவும் ஒன்று எஞ்சியிருப்பது மூதன்னையர் கொடைபோலும்.”
பீமன் ஏதோ சொல்ல நாவெடுத்து சொற்களில்லாமல் தலையை மட்டும் அசைத்து “நாம்…” என்றான். அவள் பெருமூச்சுவிட்ட ஓசையில் அவன் சொல் கரைந்தது. மீண்டும் உதடசைய அவள் “போதும், நாம் இதையெல்லாம் பேசவேண்டாம். பேசும்தோறும் எளியவையாகின்றன. இவ்வுலகைச் சார்ந்தவையாகின்றன. இவை இப்படியே மானுடர்க்கரிய பிறிதொரு வெளியில் கிடக்கட்டும். எந்த அறிவாலும் எடுத்து கோக்கப்படாமல் அப்படியே சிதறி பரந்திருக்கட்டும்” என்றாள். “ஆம்” என்று அவன் சொன்னான். அப்பேச்சை முடித்துவிட விரும்பினான்.
அவள் மீண்டும் சுற்றிப்பார்த்து “இப்போது நன்றாக உணர்கிறேன் அந்த மணத்தை” என்றாள். “எத்திசையிலிருந்து…?” என்று அவன் கேட்டான். “அதை சொல்லத் தெரியவில்லை. என்னைச் சூழ்ந்து காற்று வீசும் ஒவ்வொரு திசையிலிருந்தும் வருகிறது. கூர்கையில் அகன்றும் அகல்கையில் கூர்ந்தும் விளையாடுகிறது. உள்ளத்தை குளிர் என சூழ்கிறது. நறுமணம் எத்தனை இனிய நினைவுகளை எழுப்புகிறது என்று எண்ணி வியந்தேன். எங்கெங்கோ நிகழ்ந்து எவ்வண்ணமோ உருமாறிக் கிடக்கும் அத்தனை இனிமைகளையும் ஒரு சரடென கோத்து தனி மாலையாக ஆக்கமுடியுமென்றால் அது நறுமணம் மட்டுமே.” அவள் புன்னகைத்து “நீங்கள் சொன்ன கதையின்படி, இது என் கன்னிமையின் மணம்” என்றாள்.
“நாம் இதை மீண்டும் பேசவேண்டியதில்லை” என்றான் பீமன். “ஆம், நாம் உள்ளே செல்வோம். குளிர் மிகுந்து வருகிறது” என்றபடி திரௌபதி எழுந்தாள். குழலை பின்னுக்கு தூக்கிவிட்டு குனிந்து ஆடையை சீரமைத்தாள். அவ்வசைவுகளில் மீண்டும் அவள் அறிந்த பெண்ணென்றாவதை அவன் உணர்ந்தான். அவன் நோக்கை உணர்ந்து நிமிர்ந்து புன்னகைத்து “செல்வோம்” என்றாள். எடை விலக காற்றில் மெல்ல மிதந்தெழும் பட்டு ஆடைபோல அவள் தோன்றினாள். நெடுநேரம் பேசிமுடித்த பெண்களுக்குரிய உளவிடுதலை உடலில் எழுகிறது என அவன் எண்ணிக்கொண்டான். ஆடிநோக்கி அணிபுனைவதுபோல. சிறுமியர் முதுமகளென்றும் பாடினி என்றும் பேய்மகள் என்றும் ஆடைகொண்டு மாற்றுரு பூண்டு மகிழ்வதுபோல.
அவள் திரும்பி “என்ன?” என்றபோது எதிர்காற்றில் குழல் எழுந்து பறந்தது. கழுத்தைத் திருப்பி அதை அள்ளிச்சுழற்றினாள். அவ்வசைவில் உளம் அதிர்ந்தபோது அவன் அந்த நறுமணத்தை உணர்ந்தான். “ஆம், ஒரு நறுமணம்” என்றான். அவள் “என்ன?” என்றாள். “நீ சொன்ன மணம். நான் இதுவரை அறியாத ஒரு மணம்” என்றபடி அவன் எழுந்தான். “நீ சொன்னது உண்மை. இங்கு ஏதோ மலர் விழுந்திருக்கிறது. காற்றில் வந்து விழுந்திருக்கலாம். அல்லது இக்குரங்குகள் கொண்டு வந்திருக்கலாம்” என்றான்.
அவள் ஐயம்கொண்டு “பாரிஜாதமாக இருக்குமோ?” என்றாள். “இல்லை, ஒருகணம் பாரிஜாதம் என்றே தோன்றியது. ஆனால் அதற்கு இத்தனை எரிமணம் இல்லை. செண்பகம் என்று எண்ணினால் அதுவே தோன்றுகிறது… ஆனால் இது நான் அறிந்திராத மணம்” என்றான் பீமன். “எங்கிருந்து?” என்று அவள் ஐயம் விலகாத குரலில் கேட்டாள். “அனைத்து திசைகளிலிருந்தும்தான். ஒரு மலரா? ஒரு மலர் எப்படி அனைத்து திசைகளிலிருந்தும் மணமெழுப்ப முடியும்?” அவன் பரபரப்புடன் சுற்றிலும் குனிந்து தேடினான். “என் விழிகளுக்கேதும் தென்படவில்லை… இப்போது அந்த மணம் மறைந்துவிட்டது.” நிமிர்ந்து மூக்கைத்தூக்கி காற்றை ஏற்றான். “என் உளமயக்கு என எண்ணத்தோன்றுகிறது. ஆனால் நான் மிகத்தெளிவாகவே அந்த மணத்தை அறிந்தேன்” என்றான்.
அவள் அவன் கைகளைப் பற்றி தன் நெஞ்சில் வைத்துக்கொண்டாள். “அந்த மணம்தான்… கல்யாண சௌகந்திகம்” என்றாள். அவள் கழுத்தில் ஒரு நரம்பு எழுந்து சிறிய முடிச்சுடன் அசைந்தது. மூச்சுக்குழி பதைத்தது. அவன் நகைத்து “கல்யாண சௌகந்திகத்தின் மணத்தை ஆண்கள் அறியமுடியாது என்று தொல்கதைகள் சொல்கின்றன” என்றான். “முடியும், மெய்க்காதல் கொண்ட ஆண் அறிய முடியும். ஆகவேதான் தாங்கள் அறிந்திருக்கிறீர்கள்.” என்றாள். உருகியதுபோன்ற குரலில் “என் நெஞ்சின் நறுமணத்தை இப்புவியில் தாங்கள் மட்டுமே அறியமுடியும்” என்றாள்.
அவன் அவள் கண்களைப் பார்த்து “ஆம்” என்றான். “பிறிதெவரும் அறியமுடியாது” என அவள் அவனுக்கு மட்டுமே கேட்கும் குரலில் சொன்னாள். “தாங்கள் அறியவில்லை என்பது அவ்வளவு பெரிய தவிப்பை என்னுள் ஏற்படுத்தியது. அறிந்துவிட்டீர்கள் எனும்போது பிறகெப்படி என்று என் உள்ளம் துள்ளியது. தாங்கள் அறியாத ஏதும் என்னுள் இல்லை” என்றாள். பட்டு நலுங்குவதுபோன்ற குரல். தளிர்க்கொத்து அசைவதுபோன்ற குரல். வீணைக்கம்பிமேல் தலைமயிர் இழுபட்டதுபோன்ற குரல். “ஐவரில் நான் மிகக்குறைவாகப் பேசியவர் நீங்கள். மிக அணுக்கமாக என்னுள் நுழைந்தவர் நீங்கள் மட்டுமே. மாமல்லரே, எனக்கு அந்த நறுமலரை கொண்டு வாருங்கள்” என்றாள்.
“எந்த நறுமலரை?” என்று பீமன் கேட்டான். அதன்பின்னரே அந்த வினாவிலிருந்த பேதைமையை உணர்ந்தான். அவள் அவன் கையை அழுத்தி புன்னகையுடன் “இப்போது நீங்கள் மணம் அறிந்த அந்த நறுமலரை. கல்யாண சௌகந்திகம்” என்றாள். அவன் “என்ன சொல்கிறாய்?” என்றான். “இது ஒரு உளமயக்காக இருக்கலாம். உன் சொற்களால் நானும் உள்ளே வந்திருக்கலாம்.” அவள் “இல்லை, உளமயக்கு இல்லை. உளமயக்கு இத்தனை விழிப்பு நிலையில் எழ வாய்ப்பில்லை. இங்கு ஒரு மலர் மணக்கிறது. எங்கோ அது நின்றுள்ளது. ஏதேனும் பறவை அதை கொண்டுவந்திருக்கலாம். மாருதர்களில் எவரேனும் கொண்டு வந்திருக்கலாம்… அதில் ஒரு மலரை எனக்கு கொண்டு வாருங்கள்” என்றாள்.
எந்த எண்ணமும் இன்றி பீமன் “சரி” என்றான். அவள் அவன் தோளில் மெல்ல தலைசாய்த்து “கொண்டு வாருங்கள், இரண்டாமவரே. அதை என் விடாய் தீர முகர்கிறேன். அதன் பின் உயிர்வாழ வேண்டுமா என்று அப்போது முடிவெடுக்கிறேன்” என்றாள். அவள் முகத்தைப்பற்றி “என்ன இது?” என்றான் அவன் பதற்றத்துடன். அவன் கையைப்பற்றி தன் உடலில் அழுத்திக்கொண்டு புடைத்த புயங்களில் முகம் அமர்த்தி அவள் மெல்ல விம்மினாள். கண்ணின் நீர் அவனைத் தொட்டது. “எனக்கு அந்த மலர் வேண்டும், பாண்டவரே. அந்த மலர் வேண்டும் எனக்கு” என்று சிறுமியைப்போல் தலையை அசைத்து சொன்னாள்.
“நன்று, அப்படி ஒரு மலர் உண்டென்றால் அதை நான் கொண்டுவருகிறேன்” என்று பீமன் சொன்னான். “உண்டு, அது எங்கோ உள்ளது. எனக்கு ஐயமே இல்லை.” பீமன் “அதைக் கொண்டுவந்து உன் குழலில் சூட்டுகிறேன்” என்றான். அவள் அவன் நெஞ்சில் மெல்ல தலையால் முட்டி “விளையாட்டல்ல, உண்மையாகவே எனக்கு அது வேண்டும்” என்றாள். “விளையாடவில்லை, தேவி. நான் அதை கொண்டுவருகிறேன். இது ஆணை!” என்றான். அவள் விழிப்பீலிகளில் கண்ணீருடன் நிமிர்ந்து அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.