மாமலர் - 10

10. வான்மணம்

பின்னிரவில் தன்னை எழுப்பியது சேக்கையில் தன் இடக்கை உணர்ந்த வெறுமையே என விழித்து சில கணங்களுக்குப் பின்னரே பீமன் அறிந்தான். ஆழ்துயிலிலும் அவன் வலக்கை இயல்பாக நீண்டுசென்று அவளைத் தொட்டு அறிந்து கனவுக்குள் வந்து சொல்லிக்கொண்டிருந்தது. அங்கே அவள் காட்டுப்பெண்ணாக இருந்தாள். அவள் அரசி என்று மீண்டும் மீண்டும் நினைவுறுத்தியது கை. அவள் கிடந்த இடத்தின் மரவுரிக்குழியை துழாவி திகைத்து கை கொண்ட அசைவே புற உலகென அவனுள் வந்து உலைந்தது. எழுந்தவன் அரையிருளில் அச்சிற்றறையைச் சுற்றி நோக்கியபோதுகூட வலக்கை அவ்விடத்தை தொட்டுக்கொண்டிருந்தது.

எழுந்து ஆடையை எடுத்து சுற்றிக்கொண்டு வாயிலை பார்த்தான். மூங்கில்படல் சற்றே திறந்திருக்க, வாழைத்தண்டென வெளிறிய வானம் நின்றிருந்தது. பறவைக்குரல் ஒன்று குழறிக்கொண்டிருக்க காற்று குளிர்ந்த பெருக்கென அறைக்குள் வந்து சுழன்றது. அவள் ஆடை அப்பால் சிறுமேடையில் மெல்ல அசைந்துகொண்டிருந்தது. என்ன என்றறியாது எழுந்த பதற்றத்தை அவனே சற்று விலகிநின்று வியந்தபடி கதவை திறந்தான்.

மஞ்சத்தறையின் வெளிவிளிம்பிலோ அடுமனைக்குச் செல்லும் பாலத்திலோ அடுமனை குடில்விளிம்புகளிலோ அவள் இல்லையென்பதை சில கணங்களில் உணர்ந்தான். தன் உடல் முழுக்க பரவிய அச்சத்தை மூச்சை இழுத்துவிட்டு அமைதிகொள்ளச்செய்ய முயன்றான். எடைமிக்க காலடிகளுடன் உட்கூடத்திற்கு வந்தபோது அப்பதற்றம் உடலிலிருந்து விலகி உள்ளிறங்கி உள்ளம் முழுக்க நிறைந்திருந்தது. உதடுகளை இறுக்கி அவற்றை சிறை கட்டினான். எவரையும் எழுப்பலாகாது என்ற எண்ணத்துடன் மெல்ல காலடி வைத்து குடில் முகப்புக்கு வந்து கீழே பார்த்தான்.

முதல் விழியோட்டலிலேயே தோட்டத்தில் மலர்ச்செடிகளுக்கு நடுவில் அவள் இருப்பதை பார்த்துவிட்டான். அனைத்துச் சுருள்விற்களும் இறுக்கமிழந்து நெகிழ உடல் எளிதாகியது. நீள்மூச்சுகளாக விட்டபடி தூண் சாய்ந்து அவளை நோக்கிநின்றான். கவிழ்த்திட்ட கூடையொன்றில் அமர்ந்து முழங்கால்மேல் கைவைத்து கைகளில் தாடையைத் தாங்கியபடி தொடுவானைப் பார்த்து அமர்ந்திருந்த திரௌபதியின் முகம் வானின் மெல்லிய ஒளியில் எண்ணெய்ப் பூச்சு பெற்ற கருங்கற்சிலையென தெரிந்தது. நீள்குழல் முன்னெடுத்து மடியில் போடப்பட்டிருந்தது. அவளுக்கு சற்று அப்பால் வேலித்தடி மீது நான்கு பெருங்குரங்குகள் அவளைப் பார்த்தபடி காவலென அமர்ந்திருந்தன. மரக்கிளைகளுக்கு மேல் மேலும் பல குரங்குகள் அவளை நோக்கி வால்தொங்க துயில்பவைபோல தொய்ந்தும் அவ்வப்போது சிறுசெவி அசைத்தும் அமர்ந்திருந்தன.

அவை இருப்பதை அறியாதவண்ணம் அவள் தனக்குள் மூழ்கியிருந்தது தெரிந்தது. அருகே செல்வதா மீண்டும் மஞ்சத்திற்கே திரும்பிவிடலாமா என்று எண்ணினான். எம்முடிவும் எடுக்காமல் உடலை அசைத்தபோது அதுவே படிகளை நாடிச்சென்றது. தான் இறங்கும் ஒலி கேட்டு அவள் திரும்பிப்பார்ப்பாள் என்று எதிர்பார்த்தான். ஆனால் முற்றத்தில் இறங்கி பாத்திகளுக்கு நடுவே இடப்பட்ட சிறுபாதை வழியாக நடந்தபோதுகூட அவள் அவனை அறிந்ததாகத் தெரியவில்லை.

MAMALAR_EPI_10

அத்தனை குரங்குகளும் முதலிலேயே அவனைப் பார்த்து செவிகோட்டி காட்டிவிட்டிருந்தன. அவன் அணுகுவதை உணர்ந்ததும் முதற்பெருங்குரங்கின் வால் சற்று வளைந்து அசைந்தது. தன் தலையை அசைத்து அதற்கு அவன் செய்கை காட்டினான். மெல்ல முனகியபடி அது மீண்டும் மரக்கிளையில் உடல் குவித்து அமைந்தது. அடிவயிற்றிலிருந்து சிறு உண்ணியைப் பிடுங்கி பிறைநிலவொளியில் கூர்ந்து நோக்கியது. அதன் மென்முடிப்பரப்பு குளிரில் சிலிர்த்து இரவின் மெல்லிய ஒளியில் ஊறித்தெரிந்தது.

பீமன் மிக அருகே சென்றுநின்ற பிறகுதான் திரௌபதி அவனை உணர்ந்தாள். இலை விழுந்த சிறு சுனையென உடல் முழுக்க மெல்லிய விதிர்ப்பு எழ நிமிர்ந்து அவனைப் பார்த்து புன்னகைத்தாள். “ஏன் இங்கிருக்கிறாய்?” என்றான். “துயில் கலைந்தது” என்று அவள் சொன்னாள். “உன்னைத் தேடினேன்” என்று அவன் சொன்னான். “நீயில்லாத உணர்வை கை அடைந்தபோது விழித்துக்கொண்டேன்” என்றான். அவள் புன்னகைத்தபோது இருளில் பல்நிரைகளின் ஒளி தெரிந்தது. “அஞ்சிவிட்டீர்களா?” என்றாள். “பதற்றம் கொண்டேன்” என்றபடி அவன் அமர்வதற்காக சுற்றும் முற்றும் நோக்கினான். அப்பால் கிடந்த பிறிதொரு மூங்கில்கூடையை எடுத்துவந்து அவளருகே போட்டு அதில் அமர்ந்து முழங்கால்கள் மேல் கைமுட்டுகளை ஊன்றிக்கொண்டான்.

கைநகங்களை நிரத்தி அவற்றை நோக்கியபடி இயல்பான குரலில் “மீண்டும் எவரேனும் தூக்கிச் சென்றிருப்பார்கள் என்று எண்ணினீர்களா?” என்றாள். அப்போதுதான் தான் அடைந்த எண்ணங்களை அவன் திரும்பிப்பார்த்தான். விந்தை உணர்வுடன் தலையசைத்து “இல்லை. அவ்வெண்ணம் ஒருகணம்கூட எழவில்லை” என்றான். “பிறகு…?” என்று அவள் கேட்டாள். அவன் சற்றுநேரம் சொல்தவித்தபின் “கதவைத் திறந்து நீ வெளியேறுவதை ஒரு கணம் என் உள்ளம் உருவெளித் தோற்றமாக கண்டுவிட்டது” என்றான்.

“வெளியேறுவது என்றால்…” என்று அவள் கேட்டாள். “வெளியேறுவதுதான்… இவை அனைத்திலிருந்தும்” என்றான் பீமன். அவள் நிமிர்ந்து அவனை நோக்கியபோது விழிகளின் நீர்மை வானின் மெல்லொளியில் துலக்கமாகத் தெரிந்தது. மீண்டும் கைகள் மேல் தாடையை வைத்தபோது வளையல்கள் மெல்லிய ஒலியுடன் ஒருங்குகூடின. அவள் ஆடை சரிந்து மண்ணில் நுனி விழுந்தது. “வெளியேறி எங்கு செல்வது?” என்றாள்.

“வெளியேறும்போது அதை நாம் பெரிதாக எண்ணுவதில்லை. எம்முடிவும் எடுக்காமல் வெளியேறுகிறோம். அல்லது அப்போதைக்கென ஓர் இலக்கை கற்பனை செய்துகொள்கிறோம்” என்றான் பீமன். அவள் புன்னகைத்து “வெளியேறுவது எவ்வளவு பெரிய கனவு, இல்லையா? வெளியேறிவிட முடியும் என்ற நம்பிக்கை, வெளியேறுவதைப் பற்றிய பல வகையான கற்பனைகள், அவற்றினூடாகத்தான் அனைத்தையும் கடந்து வருகிறார்கள் மானுடர்கள்” என்றாள். “ஆம்” என்றபின் அவன் நகைத்து “துணிந்து வெளியேறியவர்கள் அவ்விரு இன்பங்களையும் இழந்துவிடுகிறார்கள். மீண்டும் ஒருமுறை வெளியேறுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியே இல்லை” என்றான்.

இரு கன்னங்களிலும் நீள்குழிகள் விழ இதழ்கள் நீள “உங்கள் வழக்கமான கசப்பு” என்றபின் அவள் தலை திருப்பி சூழ மலர்ந்திருந்த மலர்களை நோக்கினாள். அவன் வானை பார்த்தான். விடிய நெடுநேரமிருப்பது தெரிந்தது. விண்மீன்களின் பொருளற்ற பெருக்கு. பெருங்கூட்டமென்றாலும் ஒவ்வொன்றும் தன்னந்தனிமையில் மின்னிக்கொண்டிருந்தன. “புலரி மலர்கள் விரிய இன்னும் பொழுதிருக்கிறது” என்றான். அவள் அதைக் கேட்டதாக தெரியவில்லை. “கருக்கிருட்டு எழும் பொழுது. தென்குளிர் காற்றிலேறவிருக்கிறது.” அவள் “ம்” என்றாள். “அதனூடாகத்தான் மலர்களை விரியச்செய்யும் கந்தர்வர்கள் மண்ணிறங்குகிறார்கள் என்று கதைகள் சொல்கின்றன.”

அவள் கீழிருந்து ஒரு இலையை கையிலெடுத்தாள். அதை விரல்களால் நெருடியும் சுழற்றியும் நோக்கியிருந்தபின் தலைதிருப்பி “நான் ஒரு மலரின் நறுமணத்தை துயிலுக்குள் அறிந்தேன்” என்றாள். “என்ன மலர்?” என்று அவன் கேட்டான். “தெரியவில்லை. கனவுக்குள் அது செண்பகம் போலவோ பாரிஜாதம் போலவோ தோன்றியது. அல்லது அறியாத வேறு ஏதோ மலர்போல. கனவுக்குள்ளே பாரிஜாதம் என்று முதலில் எண்ணியதும், செண்பகமா என்று வியந்ததும் நினைவிலிருக்கிறது” என்று அவள் சொன்னாள்.

“கனவிலிருந்து ஒரு நறுமணத்தை மீட்டெடுப்பது எளிதல்ல” என்றான் பீமன். “எண்ணங்களைக்கூட தொகுத்துக்கொள்ளலாம்.” திரௌபதி “ஆனால் விழித்துக்கொண்டு எழுந்தமர்ந்தபோதும் ஆடை தேடி அணிந்துகொண்டபோதும்கூட அந்த நறுமணத்தை முகர்ந்துகொண்டிருந்தேன்” என்றாள். “விழித்த பிறகும் கனவு நீடிப்பதுண்டு” என்றான் பீமன். “அவ்வாறல்ல… அது வெறும் கனவல்ல. நான் துயின்றுகொண்டிருந்தபோது மிக அருகே அந்த மணம் வந்திருக்கிறது… உண்மையிலேயே” என்றாள்.

பீமன் நகைத்து “கல்யாண சௌகந்திகம் என்றொரு மலரைப்பற்றி சூதர்கள் பாடுவதுண்டு. கன்னியரின் துயிலில் மட்டுமே மணம் பரப்பும் தேவமலர். மூன்றாம் விண்ணில் கந்தர்வர்களின் உலகின் கன்னிமூலையில் அம்மலர் பூத்த மரம் நின்றிருக்கிறது. அதன் மலர்களில் ஒன்று பின்னிரவுப்பொழுதில் கந்தர்வர் மண்ணிலிறங்கும்போது அரிதாக தானும் நழுவி மண்ணில் உதிர்கிறது. அதைச் சிலர் எரிவிண்மீன் என காணக்கூடும். எரிவிண்மீன் சிவந்த நிறம்கொண்டது. கல்யாண சௌகந்திகம் வெண்ணிறமானது” என்றான்.

“இளமையில் என் செவிலி அதை சொல்லியிருக்கிறாள்” என்றாள் திரௌபதி. “அந்த நறுமணம் அது விழும் இடத்தில் இருக்கும் கன்னியரின் கனவுக்குள் எழும். அவர்களை அது காதலில் அகம் ஒளிரச்செய்யும். விழித்தபின் பிச்சிகளாக்கும். சூழ்ந்திருக்கும் அனைத்தையும் வெறுக்க வைக்கும். உடலுருகி விழிகுழிந்து வாய்உலர்ந்து நோய்கொள்வார்கள். அறியாத ஒன்றை மட்டுமே எண்ணி எண்ணி தவமிருப்பார்கள். கல்யாண சௌகந்திகத்தின் மணம்பெற்ற பெண் மானுட ஆண்களை விரும்புவதில்லை. அவள் உடலுருகி அழகிழந்துகொண்டே இருப்பாள். ஆனால் பின்னிரவின் ஒளியில் பேரழகியாவாள். அப்போது அவ்வழி செல்லும் கந்தர்வர்கள் அவளை ஒரு மலரென மணம்பெற்று அருகணைகிறார்கள். அழகனாகிய கந்தர்வன் ஒருவன் வந்து அவள் கைபற்றி அழைத்துச் செல்வான்” என்றான் பீமன்.

“அரிய கதை” என்றாள் திரௌபதி. பீமன் மெல்ல நகைத்து “கல்யாண சௌகந்திகத்தின் மணத்தை முதல் முறையாக அன்னையொருத்தி பெற்றிருக்கிறாள்” என்றான். சில கணங்கள் அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவனுடைய நகைப்பு அவளுக்கு சென்று சேரவில்லை என்பதுபோல் நீர்த்துளியென அசைவிலாது ததும்பும் முகத்துடன் குனிந்து மலர்களை நோக்கிக்கொண்டிருந்தாள். “என்ன…?” என்றான் பீமன். “தெரியவில்லை. என்னை நான் அன்னையென்று உணர்கிறேனா, இல்லை கன்னியென்றா, சிறுமியென்றா? ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு வகை என்றே சொல்லமுடிகிறது. இன்ன தருணத்தில் இவ்வாறு என்று முன்பொருபோதும் சொல்லிவிடவும் கூடுவதில்லை” என்றாள்.

“நான் சொல்லவா?” என்றான் பீமன். “நேற்றிரவு உன்னை அன்னை என்று என்னிடம் சொன்னாய். மூதன்னை என எண்ணிக்கொண்டு துயின்றாய். உன்னுள் வாழும் கன்னி அதனால் சீண்டப்பட்டாள். கல்யாண சௌகந்திகத்தை கனவில் வரவழைத்தாள்.” திரௌபதி சிறு சீற்றத்துடன் தலைதிருப்பி “ஏன்? அன்னை என்பதில் என்ன குறை?” என்றாள். “அது முதுமையும்கூட அல்லவா?” என்றான் பீமன். “அழகியர் அஞ்சுவது முதுமையை மட்டும்தான்.” அவள் தரையிலிருந்த ஒரு சுள்ளியை எடுத்து பூழி மண்ணில் எதையோ வரைந்தபடி தன் எண்ணங்களைத் தொடர்ந்தவளாக அமர்ந்திருந்தாள். பீமன் மீண்டும் அவள் தன்முன் இருந்து மறைந்துவிட்டதைப்போல உணர்ந்தான். அவளைத் தக்கவைக்கவே அவன் பேசிக்கொண்டிருந்தான். மீண்டும் ஒரு பேச்சைத் தொடங்க எண்ணி ஆனால் எதைப்பற்றி என தெளிவிலாமல் எண்ணம் அலைய அவளை நோக்கிக்கொண்டிருந்தான்.

புது எண்ணம் எழுந்ததுபோல் முகம் தூக்கி, முகத்தில் நிழலுடன் சரிந்து ஆடிய குழல்கற்றையை விரல்களால் எடுத்து செவிக்குப்பின் செருகியபடி, விரிந்த விழிகளில் ஒளி தெரிய திரௌபதி அவனை ஏறிட்டாள். “உண்மையிலேயே அப்படி ஒரு மலர் எங்கேனும் இருக்கக்கூடுமா என்ன?” என்றாள். அவள் அத்தனை நேரம் அதைத்தான் எண்ணிக்கொண்டிருக்கிறாளா என எண்ணி உள்ளூர புன்னகைத்தபடி பீமன் “இருந்தால் அதை உனக்கு நான் கொண்டுவருவேன்” என்றான். “விளையாட்டல்ல, அப்படி ஒரு மலரில்லாமல் புராணங்களில் அது எவ்வாறு சொல்லப்பட்டிருக்கும்?” என்றாள். “புராணங்கள் அப்படி பல்லாயிரம் கதைகளை சொல்கின்றன, அரசி” என்று அவன் சொன்னான்.

அவள் இல்லையென்பதுபோல் தலையசைத்தாள். “ஆழியும் சங்கும் கதையும் மலருமேந்தி விண்ணில் ஒருவன் நின்றிருக்கிறான் என்றால் அது தொல்கதை மட்டும்தான். ஆனால் தொல்கதையால் அப்படி உருவமளிக்கப்பட்ட ஒன்று அவர்களால் உணரப்பட்டிருக்கிறது என்பதே அதன் மெய்” என்றாள். அவளில் எழுந்த அகவிசை அவனை குழப்பம் கொள்ளச்செய்தது. “என்ன சொல்ல வருகிறாய்?” என்று கேட்டான். “கல்யாண சௌகந்திகம் என்றுணரப்பட்டது எது?” என்றாள். பீமன் “கனவு” என்றான். முடிந்தவரை குரலை தட்டையாக ஒலிக்கவைத்து “இளமையில் இவையனைத்திற்கும் அப்பால் என்றுதான் உள்ளம் எழுகிறது. அவ்வெழுச்சி வெளியுலகை முட்டித் திரும்பி வருகையில் உள் நிறைகிறது. கனவுக்குள் செல்லத்தான் முடிவற்ற தொலைவு இருக்கிறதே! ஆண்கள் அவர்கள் வெல்லவிருக்கும் உலகை கனவு காண்கிறார்கள். பெரும்புகழை எண்ணி ஏங்குகிறார்கள். பெண்கள் கொள்ளும் கனவும் ஏக்கமும் இப்படி ஒரு மலராக உள்மலர்ந்திருக்கலாம்” என்றான்.

“அதைத்தான் நான் கேட்க விரும்புகிறேன்” என்றாள் அவள். “அது எது?” பீமன் குரலை எளிமையாகவே ஒலிக்கவிட்டபடி “அதை நான் எப்படி சொல்ல முடியும்? நான் பெண்ணல்ல” என்றான். அவள் சில கணங்கள் குனிந்து தரையை கீறிக்கொண்டிருந்தபின் மெல்லிய குரலில் “இரண்டாமவரே, நான் என் அறியா இளமையை இப்போது எண்ணிக்கொண்டேன்” என்றாள். பீமன் “தன் சிற்றிளமையை எண்ணி விடியலில் விழித்துக்கொள்ளாத பெண் எவளும் புவியில் இல்லை என்று நினைக்கிறேன்” என்றான். “ஆம், பெண் வாழ்க்கை என்பது சிறுமியென்றிருக்கையில் அவள் பூண்ட வண்ணங்களும் சிறகுகளும் ஒவ்வொன்றாக உதிர்வது மட்டும்தான் என்று விறலியர் பாடலொன்று சொல்கிறது” என்றாள்.

அவளுள் எழுந்த எண்ணங்கள் அவள் உடலை மெல்ல அதிர வைப்பதை அரையிருளிலேயே அவன் கண்டான். “நீ அரண்மனை மகளிர்கோட்டத்திற்குள் வாழ்ந்த இளவரசி. சிறகுகள் அந்தக் கட்டடங்களுக்குள்ளேயே எல்லை வகுக்கப்பட்டவை” என்றான். “ஆம். ஆனால் என் தந்தையை நான் மிக அணுக்கமாக உணர்ந்த நாட்கள் அவை. அன்றெல்லாம் விழித்திருக்கும் பொழுதெல்லாம் அவரை தொட்டுக்கொண்டிருக்க விழைவேன். இளங்குழந்தையாக அவர் கால்களைப் பற்றுவதற்காக தவழ்ந்து சென்றதை நினைவுகூர்கிறேன். அரண்மனைக்குள் அவர் அணிந்திருக்கும் பொன்னூல் பின்னிய பாதக்குறடுகளையும் முழங்கால்வரை வந்திருக்கும் அரசப்பட்டாடையின் பொன்வண்ண மடிப்புகளையும் என்னால் மிக அணுக்கமென இப்போது பார்க்க முடிகிறது. கால் பற்றி எழுந்து நிற்கையில் அவர் முழங்கால் அளவுக்கே நான் இருந்தேன் என்பதே இப்போது தெரிகிறது.”

கனவை கண்முன் பார்த்தபடி சொல்வதுபோல அவள் பேசினாள். “என் இடையின் இரு பக்கமும் பதியும் அவரது காய்த்துப்போன பெரிய விரல்களின் தொடுகையை எத்தனையோ முறை கனவுகளில் மீட்டுக்கொண்டிருக்கிறேன். உரக்க நகைத்தபடி என்னைத் தூக்கி காற்றில் வீசிப்பிடித்து கூச்சலிடுவார். ‘உலகின் அரசி! உலகின் அரசி!’ என்பார். என்னை எப்போதும் பேரரசி என்றே அவர் சொல்லியிருக்கிறார். பின்னர் அனைவருமே அதை சொல்லத்தொடங்கினர். பிறிதொன்றிலாது அவ்வாறு நான் என்னை உணர்ந்தது அதனூடாகவே.”

“சிறுமகவென அவர் கைகளில் கால்களும் கைகளும் வீசி பறந்துகொண்டிருப்பேன். குனிந்து அவரது ஒளிரும் விழிகளையும் கலைந்து காற்றில் அலையும் குழல்களையும் முறுக்கி மேல்நோக்கிய மீசையையும் மின்னும் பற்களையும் பார்த்து எம்பிக் குதிப்பேன். அவரது தோள்களில் அமர்ந்து தலைமயிரைப் பற்றிஉலுக்கி விரைந்து செல் விரைந்து செல் புரவியே என்று கூச்சலிடுவேன். சிற்றாடை அணியும் வயது வரும்வரை அவர் தோள்களில் நான் அமர்ந்திருப்பதுண்டு. புலரியில் செவிலியின் அருகிலிருந்து எழுந்து பீடத்தை இழுத்திட்டு தாழ்திறந்து வெளியேறி இடைநாழிகளில் நடந்து தந்தையின் மஞ்சத்தறையை அடைவேன். காவலன் என்னை தடுப்பதில்லை. கதவைத் திறந்து உள்ளே சென்று அவரது போர்வைக்குள் படுத்துக்கொள்வேன். மார்பிலும் வயிற்றிலும் இருந்த மென்மயிர்களுக்குள் முகம் புதைப்பேன். தோள்களிலிருந்து இறங்கி கைகளுக்கு வரும் பெருநரம்பில் சுட்டுவிரலோட்டுவேன். மணிக்கட்டில் அந்நரம்புகளை அழுத்தி யாழ் மீட்டுவேன். அந்த இளவெம்மைக்குள் துயின்றதுபோல் பிறகெப்போதும் இன்துயிலை நான் அறிந்ததில்லை.”

அவன் அவளுக்குள் அணங்கு ஒன்று புகுந்துகொண்டதா என எண்ணி புன்னகைத்தான். ஆனால் பிறிதொருத்தியாக மாறி பேசத்தொடங்குவது பெண்களின் இயல்பு என்று தோன்றியது. பகடைக்காய்களென புரள விழைகிறார்கள். அதனூடாக ஆர்வத்தை தங்கள் மேல் குவிக்கிறார்கள். “இன்று எண்ணியபோது எந்தையன்றி பிற ஆண் எவரும் என் நெஞ்சைத் தொட்டுள்ளாரா என்றே ஐயுற்றேன்” என்றாள் திரௌபதி. பீமன் தன் பேருடலை சற்று அசைத்து “நன்று, இதைச் சொல்லாத பெண்கள் அரிதாகவே இருப்பார்கள் என்று எண்ணுகிறேன். இதைச் சொல்ல வாய்ப்பில்லாத வாழ்வமைந்த பெண்கள் பேரளிக்குரியவர்கள். பின் என்ன?” என்றபடி எழுந்து கொண்டான்.

அவள் அமர்ந்தபடியே நிமிர்ந்து நோக்கி “நான் சொல்வதை தாங்கள் முழுமையாக கேட்கவில்லை, இரண்டாமவரே” என்றாள். “சொல்!” என்றபின் பீமன் வேறுபக்கம் திரும்பினான். தன் உடல் முழுக்க எழுந்த பொறுமையின்மையின் அசைவை அவனே விரும்பவில்லை. அதை அடக்கும்பொருட்டு உடலை இறுக்கிக்கொண்டபோது அது சினமென தெரிய மீண்டும் தளர வைத்தான். யானையென அவன் உடலில் அசைவு ததும்பிக்கொண்டிருந்தது. கைகளை மார்பில் கட்டிக்கொண்டான். “இம்மலரின் நறுமணத்தை நான் முதலில் அறிந்தது எந்தையின் அணைப்புக்குள் துயிலும் அந்த வயதிலேயேதானா என்று இன்று எண்ணிக் கொண்டேன்” என்றாள்.

“சிறுமியருக்கு இம்மலரின் மணம் தெரியாது என்று தொல்கதைகள் சொல்கின்றன” என்றான் பீமன். அவள் “அன்றே உள்ளத்தில் நான் கன்னியாக இருந்திருக்கலாம்” என்று சொன்னாள். “நான் சிறுமியென இருந்த நாட்களே குறைவு. சிறுமியர் எவருடனும் என்னால் இணைய முடியவில்லை. தந்தையுடன் இருக்கும்பொருட்டு எப்போதும் அரசவையிலேயே இருந்தேன். அங்கிருப்பதை நிறுவும்பொருட்டு அரசுசூழ்தலை கற்றேன். அறிந்தவளென என்னை வெளிப்படுத்திக்கொண்டேன். நான் பாஞ்சாலத்திற்குரியவளல்ல என்றும் உறையிலிருந்து உருவப்படவிருக்கும் வாள் மட்டுமே என்றும் எண்ணிக்கொண்டிருந்தேன். மெல்லுணர்வுகள் எவையும் என்னில் எழுந்ததாக நினைவுகொள்ளவில்லை.”

“ஆனால் எப்போதோ அந்த நறுமணத்தை நான் அறிந்திருக்கிறேன். விழித்தெழுந்து எண்ணி ஏங்கி அழுதிருக்கிறேன். என் தலையைக் கோதியபடி எந்தை மீண்டும் மீண்டும் ஏன் அழுகிறாய் என்று வினவியதை நினைவுகூர்கிறேன். அப்போது அவரது தொடுகையை வெறுத்து கையைத் தூக்கி விலக்கிவிட்டு உடல் சுருக்கி விசும்பி அழுதேன். மீண்டும் என்னைத் தொடாமல் என்னிடம் குனிந்து அவர் மன்றாடினார். ‘என் அரசியல்லவா? என் குலதெய்வமல்லவா? எனையாளும் விண்ணரசியல்லவா? சொல் தேவி, உனக்கு என்ன வேண்டும்? உன் காலடியில் என் தலையை வைக்கிறேன். உன் காலடியில் இந்நாடு பணியும். என்ன வேண்டும் சொல்? என் அன்னை அல்லவா?’ என்றார். என்னால் ஏதும் சொல்லக் கூடவில்லை.”

“இன்று சொல்லியிருந்தால் என்ன சொல்லியிருப்பேன்? நீங்கள் சிறிதாகிவிட்டீர்கள் தந்தையே என்றா? நீங்கள் அளித்ததன் பேருருவம் எனக்குத் தேவை என்றா? அதுவும் ஓர் எளிமைப்படுத்தல்தான்” என்றாள் திரௌபதி. “இந்த நறுமணத்தை நான் அறிந்தேன் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் முன்னரே பலமுறை அறிந்துளேன் என்னும் எண்ணத்தை அகற்றமுடியவில்லை.” அவள் கைகளைக் கோத்து அதன் மேல் முகத்தை வைத்துக்கொண்டாள். “நான் விழைவதென்ன? எங்கு செல்லவிருக்கிறேன்? எதன்பொருட்டு உளம்கரைந்து கண்ணீர்விடுகிறேன். இரண்டாமவரே, என்னை நன்கறிந்த எவரேனும் சொல்லக்கூடும் என்றால் முதன்மையாக தாங்களே.”

மெல்லிய படபடப்பை அடைந்தவனாக பீமன் சொன்னான் “நாம் இதைப்பற்றி மேலும் பேச வேண்டியதில்லை, அரசி.” அவள் “ஏன்?” என்று கேட்டாள். “இத்தனை ஆழ்ந்து கணவனும் மனைவியும் உளம் பரிமாறிக்கொள்ளலாகாது.” அவள் “ஏன்?” என்று புருவம் சுருக்கி மீண்டும் கேட்டாள். “உறவென்பது ஒரு நுண்ணிய நடிப்பு. முன்னோர் முன், குலத்தின் முன், உலகின் முன்… அதற்கப்பால் நாம் யார்?” அவள் “ஏன் ஆணும் பெண்ணுமென இருக்கமுடியாதா?” என்றாள். “முடியும்” என்றான் பீமன். “நீ அரசியன்றி ஒரு காட்டுப்பெண்ணாக இருந்தால். நான் பாண்டவனாக அல்லாமல் இருந்தால்.”

அவள் நீள்மூச்சுடன் “உண்மைதான்” என்றாள். “இப்போது இவற்றையெல்லாம் சொல்லும்போதே ஒவ்வொன்றையும் அறியாது நான் நிறம் மாற்றிக்கொண்டதை உணர்கிறேன். இங்கு சொல்லப்படுபவை அனைத்துமே உங்களுக்காகவே சொல்பூண்கின்றன. ஆகவே இவை மெய்யல்ல. மெய்போலும்மே, மெய்போலும்மே…” பின்னர் சிறிய சொல்லின்மை வழியாக தன்னுள் சொல்சேர்த்துக்கொண்டு “மடை வழியாக வெளிவருகையில் நீர் மடை வடிவம் கொள்கிறது என்று விறலியர் பாடல் உண்டு. ஆனால் இவ்வண்ணமேனும் இதைச் சொல்லவில்லை என்றால் என் நெஞ்சு சற்றேனும் அதை கடக்கமுடியாது, பாண்டவரே” என்றாள்.

பீமன் உளம் நெகிழ்ந்து காற்றில் எழுந்து பறந்த குழலை கைகளால் அள்ளி தோளுக்குமேல் போட்டபடி மீண்டும் மூங்கில் கூடையில் அமர்ந்தான். “இது முறை. நாம் இருவரும் கொள்ளும் அணிகளையும் ஆடைகளையும் மாற்றுமுகங்களையும் கலைக்காமல் அமர்ந்து அவ்வெல்லைக்குள் பேசிக்கொள்வோம்” என்றான். அவள் முகம் மலர்ந்தது அரையிருளிலும் தெரிந்தது. உடல் முறுக்கவிழ கால்களை எளிதாக நீட்டிக்கொண்டு “ஆம்” என்றாள். “இதை ஓர் இனிய ஆடலென்றே கொள்வோம். நாளை புலரிக்குப்பின் பொருளேதும் கொள்ளாத சொற்கள். இவ்விரவைக் கடப்பதற்குரிய உளநடிப்புகள்.” பீமன் “ஆம்” என்று புன்னகைத்தான்.