குருதிச்சாரல் - 21

பகுதி மூன்று : மலைச்சுனையின் ஓசை – 4

blஉபப்பிலாவ்யத்தின் அவையில் அரசியருக்குரிய பீடத்தில் முன்னரே தேவிகையும் குந்தியும் அமர்ந்திருந்தனர். அவைச்சேடி வழிகாட்ட தேவிகையின் அருகிலிருந்த சிறுபீடத்தில் விஜயை அமர்ந்தாள். தேவிகை சற்றே தலை தாழ்த்தி “பிந்திவிட்டாய்” என்றாள். “ஆம்” என்ற விஜயை “துயின்றுவிட்டேன்” என்றாள். தேவிகை புன்னகைத்து “புரிகிறது” என்றாள். அவள் கையை மெல்ல தட்டி விஜயை புன்னகைத்தாள்.

தேவிகை அவள் விழிகளுக்குள் நோக்கி “தேவையிருக்கிறதே, இல்லையா?” என்றாள். விஜயை தலைகுனிந்து சிரிக்க “அதிலும் இன்று…” என்றாள். “ஏன்?” என்றாள் விஜயை. “இன்று பால்ஹிகரைப் பற்றி பேசிக்கொண்டோம்.” விஜயை நெஞ்சு படபடக்க “மெதுவாக” என்றாள். “என்ன மெதுவாக? அன்னை எதையும் கேட்கமாட்டார்” என்றாள் தேவிகை. விஜயை சற்றுநேரம் கழித்து “அது ஏன்?” என்றாள். “என்ன?” என்றாள் தேவிகை. “ஏன் அவை இரண்டும் இணைகின்றன?” தேவிகை புன்னகைத்த பின் “நாம் விரும்பப்படுகிறோம் என்பதனாலா?” என்றாள். “இல்லை, வெல்லப்படுகிறோம் என்பதனால்” என்றாள் விஜயை. “உன் நச்சுநா சேடியிடம் கேள், என்ன சொல்வாள் என” என்றாள்.

விஜயை திரும்பி நோக்க அபயை அருகே வந்து தலைதாழ்த்தினாள். “நாங்கள் இங்கு பேசிக்கொண்டிருந்ததைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய் என கேட்க விரும்பினோம்” என்றாள் தேவிகை. “தெரிகிறது” என்ற அபயை “அடிமைகளின் உவகை அது, உடையோனை ஏமாற்றுவதன் களி” என்றாள். தேவிகை சினத்துடன் நோக்க புன்னகைத்து தலைவணங்கி அபயை அப்பால் சென்றாள். “அவளிடம் கேட்டிருக்கக்கூடாது” என்றாள் விஜயை. சட்டென்று நகைத்து “சரியாகவே சொல்கிறாள்” என்றாள் தேவிகை.

அவையில் குடித்தலைவர் ஒவ்வொருவராக வந்து அமரத் தொடங்கியிருந்தனர். நகுலனும் சகதேவனும் அவையமைவை மேல்நோட்டம் செய்துகொண்டிருந்தனர். இறுகக் கட்டிய தோலாடையும் தோள்களில் பரவிய குழல்கற்றைகளுமாக பீமன் வந்து அவனுடைய பீடத்தில் அமர்ந்தான். “விராடஇளவரசி வரவில்லையா?” என்று விஜயை மெல்லிய குரலில் தேவிகையிடம் கேட்டாள். “அவளுக்கு தலைசுழற்சியும் மயக்கமும் இருக்கிறது. ஐந்து நாட்களாக வாயுமிழ்கிறாள்” என்றாள் தேவிகை. “ஏன்?” என்று புருவங்கள் சுளிக்க விஜயை கேட்டாள். தேவிகை “அதுதான் என்று ஐயுறுகிறார்கள். இன்னும் ஓரிரு நாட்களுக்குப் பின்னரே எதையும் கூறமுடியும் என்கிறார்கள்” என்றாள்.

“அத்தனை விரைவாகவா? இளையோன் இங்கு ஓர் இரவு மட்டும்தான் உடன் தங்கினான் என்கிறார்கள்?” என்றாள் விஜயை. “ஓரிரவு போதுமே” என்று தேவிகை சொன்னாள். “ஆம், அதுவும் ஓர் அரசமுறைமை மட்டுமே என்றால் போதும்” என்றாள் விஜயை. தேவிகை புன்னகைத்தாள். விஜயை திரும்பி அபயையை நோக்கிய பின் விழிதிருப்பிக்கொண்டாள். அவர்கள் உரையாடுவதை உணர்ந்த குந்தி திரும்பிப்பார்க்க இருவரும் சொல்லடங்கி அமைதியாயினர்.

அர்ஜுனன் அவை புகுந்தபோது வாழ்த்தொலிகள் எழுந்தன. அவனை சுரேசர் அழைத்துச்சென்று பீடத்தில் அமர்த்தியதும் சௌனகர் அவை மேடைமேல் ஏறி அனைவருக்கும் வாழ்த்துரைத்து அரசரும் அரசியும் அவைபுகவிருப்பதை அறிவித்தார். வெளியே மங்கல இசையும் குரவையொலியும் எழுந்தன. அவை எழுந்து நின்று வாழ்த்து கூவியது. சிறிய வாயிலினூடாக வந்த அறிவிப்புநிமித்திகன் அவை நடுவே நின்று வலம்புரிச் சங்கொலி எழுப்பி யுதிஷ்டிரரின் வரவை அறிவித்தான். மங்கலத்தாலங்களுடன் ஐந்து அணிச்சேடியர் அவைக்குள் நுழைந்தனர். இசைச்சூதர்கள் எழுவர் முழங்கியபடி தொடர்ந்து வந்தனர்.

வாழ்த்தொலிகள் முழங்க அரிமலர் பொழிய கைகூப்பியபடி யுதிஷ்டிரரும் திரௌபதியும் அவைக்குள் புகுந்து வணங்கிய பின் அரியணையில் அமர்ந்தனர். சௌனகர் அரசையும் குடியையும் கோலையும் வாழ்த்தி மங்கலச் சொல்லுரைத்தார். அந்தணர் மூவர் எழுந்து வேதம் ஓதி கங்கை நீர் தெளித்து யுதிஷ்டிரரை வாழ்த்தினர். பொற்தாலத்தில் கொண்டுவரப்பட்ட மணிமுடியை சௌனகரும் தௌம்யரும் எடுத்து அளிக்க யுதிஷ்டிரர் சூடிக்கொண்டார். தௌம்யர் அளித்த செங்கோலை வாங்கி அரியணையில் அமர்ந்து சூழ்ந்திருந்த அவையினர் வீசிய மஞ்சள் அரிசியையும் மலர்களையும் தலைதாழ்த்தி பெற்றுக்கொண்டார்.

‘இந்தச் சிற்றூரின் அரசனென்று இருப்பது இழிவு, அதை அவர் உணர்ந்திருக்கிறாரா என்ன?’ என்று விஜயை எண்ணிக்கொண்டாள். அக்கணமே திரும்பி விழிகளை சந்தித்த தேவிகையும் அதையே எண்ணுவதை உணர்ந்தாள். புன்னகைத்து முகத்தை திருப்பிக்கொண்டாள். உணர்வுகள் வெளிப்படவேண்டாம் என்பதற்காக தலைஆடையை இழுத்து மறைத்துக்கொண்டு கைகளை மடியில் வைத்தாள். வளைகள் குலுங்கிய ஓசை கேட்டு திரும்பிப்பார்த்த குந்தி அவ்வுணர்வுகளை புரிந்துகொண்டவள்போல ஒருகணம் விழிநிலைத்த பின் திரும்பினாள்.

அவைவணக்கங்களும் குடியினர் அரசருக்கு திருமுன்வைப்பு அளிக்கும் சடங்குகளும் முடிந்த பின் யுதிஷ்டிரர் முறையான அரசாணைகளாக அந்தணர்களுக்கு கொடையளிக்கும் மூன்று நறுக்குகளை வெளியிட்டார். அதன்பின் சௌனகர் அவை மேடைமேல் எழுந்து அனைவருக்கும் வாழ்த்து கூறி சஞ்சயன் திருதராஷ்டிரரின் தூதுச் செய்தியுடன் அவைபுகுந்திருப்பதை அறிவித்தார். அவை அதைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. “இன்று காலை அஸ்தினபுரியிலிருந்து பேரரசர் திருதராஷ்டிரரின் தனிச்செய்தியுடன் அவரது அணுக்கராகிய சஞ்சயன் இங்கு வந்திருக்கிறார். அரசருக்கும் அவையினருக்கும் பேரரசரின் செய்தியை முன்வைக்கவேண்டுமென்று அவரிடம் இந்த அவை கோருகிறது” என்றார்.

சஞ்சயன் சற்றே கூன் விழுந்த சிறிய உடலும் பெரிய குரல்வளையும் நரம்புகள் தெரிந்த நீண்ட கைகளும் ஒட்டிய வயிறும் கொண்டிருந்தான். ஒருகணத்தில் வேதவேள்விக்குப் பிந்தைய பெருங்கொடையாட்டில் நிரையில் கைநீட்டி நின்றிருக்கும் பல்லாயிரம் எளிய அந்தணர்களில் ஒருவனென்று எண்ணும்படி தோன்றினான். சூதன் உடலில் எழுந்த அந்தணன். அவையிலெழுந்து அரசரையும் அவையையும் கைகூப்பி வணங்கியபின் உரத்த குரலில் அவன் பேசத்தொடங்கியதுமே விஜயை சிறிய துணுக்குறலுடன் அவன் விழியறியா பிறிதொருவன் என்றுணர்ந்தாள்.

அவன் குரல் நன்கு அமைக்கப்பட்ட வெண்கல மணியின் கூர்கொண்டிருந்தது. அந்த அவையில் அந்தக் கணம் அவன் வாயிலிருந்து எழுந்தாலும்கூட அச்சொற்கள் அவனினூடாக வேறெங்கிருந்தோ ஒலிப்பவை என்று தோன்றியது. அவன் உச்சரிப்பே அவன் செம்மொழி கற்றுத்தேர்ந்தவன் என காட்டியது. சொல்லடுக்குகளில் இருந்த பிசிறற்ற இணைவு அவன் நூல்களில் திளைப்பவன் என தெரிவித்தது. ஆனால் கற்று அறிந்த நூல்கள் எவையும் அவன் உடலிலோ விழியிலோ முற்றிலும் தெரியவில்லை என்பதன் விந்தையைத்தான் அவள் எண்ணிக்கொண்டாள்.

ஐந்து பேர் இருக்கும் ஓர் அவையில் ஓரிரு சொற்றொடர்களுக்குள்ளேயே அங்கிருப்போர் அனைவரும் முற்றிலும் அவனை மறந்துவிடக்கூடும். ஓர் உயிரற்ற பொருளென அவர்களின் நுண்புலனும் அவனை பிழையாக எண்ணிவிடக்கூடும். ஏன் அவனை இளைய யாதவருடன் இணைத்து எண்ணிக்கொள்கிறோம் என்று அவள் திகைப்புடன் தனக்குள் உசாவிக்கொண்டாள். அவ்விணைவு நிகழ்வதற்கான எந்த முதல்வைப்பும் எண்ணத்திற்கு சிக்கவில்லை. அவன் ஒருமுறையேனும் இளைய யாதவரை நேரில் பார்க்கவோ சொல்லாடவோ வாய்ப்பிருந்திருக்காது என்றே தோன்றியது.

“இவன் ஏன் அவரை நினைவூட்டுகிறான்?” என்று தேவிகை மெல்ல கேட்டாள். அதை எண்ணிக்கொண்டிருந்தாலும் செவியொலியாகக் கேட்டபோது விஜயை திடுக்கிட்டாள். “ஆம்” என்றாள். “ஒரு மன்றுமேடையில் அவர் சொற்களை இவன் எழுந்து சொல்வதுபோல உளமயக்கு ஏற்பட்டது எனக்கு” என்றாள் தேவிகை. “இவன் கற்றவன்” என்றாள் விஜயை. “கற்றவர் அமரும் அவைகள் இங்கே பலநூறு” என்று தேவிகை சொன்னாள். “இவன் முற்றிலும் ஒளியற்றவன், அவரோ அருமணி.”

விழிதிருப்பிய கணம் ஒரு விந்தையான உளமயக்கு அவளுக்கு ஏற்பட்டது. அந்த அவை இருக்கும் காலவெளியுடன் தொடர்பின்றி வேறெங்கோ நின்றவனாக சஞ்சயன் பேசிக்கொண்டிருந்தான். முற்றிலும் அனைத்திலிருந்தும் விடுபட்டு நிற்கும் இவன் யார்? அச்சொல் உள்ளத்தில் எழுந்ததுமே விஜயை மெய்ப்பு கொண்டாள். இவனும் அவரைப்போல முற்றிலும் அகன்று நின்றிருக்கிறான். இங்கு நிகழும் எதிலும் எவ்வகையிலும் உளம் அளிக்காது நோக்கி நின்றிருப்பவர்கள் அவர்கள் இருவருமே.

இம்மானுடப்பெருந்திரளின் பதற்றமும் சினமும் விழைவும் வஞ்சமும் துயரும் தனிமையும் இவனுக்கும் ஒரு பொருட்டே அல்ல. இவையனைத்தும் நிகழ்ந்து மொழி பதிவென்றாகி ஓலை அடுக்குகளின் எழுத்துகளென உருமாறி மந்தணச் சுவடி அறைகளின் தடுக்குகளில் ஒடுங்கிய பின் காலத்தின் வேறேதோ மூலையிலிருந்து கிளம்பிவந்து எடுத்து புழுதி போக மேலாடையால் மெல்லத் துடைத்து ஒவ்வொன்றாக படித்துக்கொண்டிருக்கும் ஒருவனின் விழிகள் இவை.

அவ்வெண்ணம் தோன்றியதுமே அவள் சஞ்சயன்மேல் கடும்வெறுப்பை அடைந்தாள். அவன் தன்னை நோக்கி ஒரு சொல் சொன்னால்கூட நெய் எரிகொண்டதென பற்றி எழுவோம் என்று தோன்றியது. இங்கிருக்கும் எவரும் உனக்கு மானுடரே அல்லவென்றால் இந்த அவையில் எழுந்து எதை பேசிக்கொண்டிருக்கிறாய்? ஆணவம் மிகுந்தவன். ஆணவத்தாலேயே அகன்றவன். அல்லது அகன்றிருப்பதே ஆணவமா? அகன்றிருப்பவர்கள் அளியற்றவர்கள். அன்பென்றும் வெறுப்பென்றும் விழைவென்றும் உறுதியென்றும் பற்றென்றும் மீட்பென்றும் இப்புவியுடன் தொடர்பு கொண்டிருக்கிறவர்கள் மட்டுமே நம்மிடம் பேச தகுதி கொண்டவர்கள். இவன் கருவறை தெய்வங்களின் இரக்கமற்ற குளிர்ந்துறைந்த கன்மை கொண்டவன்.

சஞ்சயன் முறைமைப்படி யுதிஷ்டிரரின் கொடிவழியையும் கோலையும் மணிமுடியையும் அரியணையையும் குடிச்சூழலையும் வாழ்த்தி முகமனுரைத்தான். பாண்டவர் நால்வரையும் அரசி திரௌபதியையும் தனித்தனியாக புகழ்மொழி கூறி வணங்கினான். உபப்பிலாவ்யத்தின் அந்தச் சிற்றவைக்கு வாழ்த்துரைத்த பின் தன் செய்திக்கு வந்தான். “அரசருக்கும் அவைக்கும் என மாமன்னர் திருதராஷ்டிரரின் தனிச்செய்தியுடன் இங்கு வந்துள்ளேன். குருமரபின் குருதித் தொடர்ச்சியென இன்று எஞ்சியிருக்கும் திருதராஷ்டிரரின் சொல் இந்த அவையில் என் நாவினூடாக எழுகிறது. சொல்லில் அமைகிறது ஆத்மா என்கின்றன நூல்கள். சொல்லென இங்கு அவர் அவைநிற்கிறார். அவர் வாழ்க!”

“அவையோரே, இங்கு வருவது வரை அச்செய்தியின் புறத்தை பேரவைக்கும் அகத்தை அரசரின் தனிச் சிற்றவைக்கும் அளிக்கவேண்டுமென்று பகுத்துக்கொண்டிருந்தேன். இக்கணம் இவ்வவையில் எழுந்தபோது ஒன்றுணர்ந்தேன். மாமன்னரின் அவ்வுணர்வுகள் அனைத்துமே பாண்டவ முதல்வருக்கோ இளையோருக்கோ மட்டும் உரியவை அல்ல. இப்பேரவை நோக்கி, இதன் பின்புலமாக அமைந்துள்ள பாரதவர்ஷத்தை நோக்கியே அவருள்ளம் வெளிப்பட்டிருக்கிறது” என்றான் சஞ்சயன். அவையினரின் விழிகளை விஜயை நோக்கினாள். அவர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள்?

“அவர் இதற்குமுன் கூறாச் சொற்கள் ஏதும் இப்போது எழவில்லை. மேலென வெறும் விழிநீர் மட்டுமே அவரிடம் இருந்து எழுந்திருக்கிறது” என்றான் சஞ்சயன். “இங்கு நான் அவருடையதென சொல்லும் அத்தனை சொற்களும் விழிநீர்த்துளிகளே. பாண்டவ முதல்வரே, இளையோரே, தந்தையென எழுந்து நின்று உங்கள் தலைதொட்டு வாழ்த்தி குருவின் கொடிவழி வந்த திருதராஷ்டிர மாமன்னர் இவ்வாறு உரைக்கிறார். மைந்தரே, எந்நிலையிலும் போர் ஒழிக! போரெனில் கொலை. கொலையில் நன்றென்றும் கொடிதென்றும் இல்லை. உடன்பிறந்தார் குருதிகொண்டு எவரும் இப்புவியில் இன்பத்தையும் புகழையும் அடையமுடியாது.”

“பின்னர் மண்டியிட்டு உங்களை அள்ளி நெஞ்சோடணைத்து கௌரவரின் தந்தை இவ்வாறு கோருகிறார். இனியவர்களே, களத்தில் என் மைந்தர் குருதி சிந்தி வீழ்வதைக் காணும் தீயூழை நீங்கள் அளிக்கலாகாது. என் மைந்தருக்கு எத்தீங்கும் நிகழலாகாது. எளிய தந்தையென என் கண்ணீர் உங்கள் காலடியில் விழுகிறது. ஆணையென்றல்ல, மன்றாட்டென்று என் சொற்கள் அமைக! அளிகூர்க! யுதிஷ்டிரா, உன் இளையோர் ஏவும் அம்பனைத்தும் என் நெஞ்சுக்கே என்றுணர்க! ஒரு சொல்லே நான் கோருவது. மைந்தர்களே, என் மைந்தர்களை கொல்லற்க!” சஞ்சயன் கைகூப்பி தலைவணங்கினான்.

blயுதிஷ்டிரரும் இளையோரும் அவையோரும் அச்சொற்களை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை என்று தெரிந்தது. சஞ்சயன் சொல்லி முடித்த பின்னரும் அவை ஓசையின்றி திகைத்து அமைந்திருந்தது. விஜயை பெருமூச்சு எழ அதை அடக்கியபடி தேவிகையை நோக்கினாள். அவள் விழிகள் பக்கவாட்டில் இரு பெரிய நீர்மணிகள் என மின்னிக்கொண்டிருந்தன. குந்தி அரக்குச் சிலை என அமைந்திருந்தாள். ஒரு கூட்டத்தின் அமைதி என்பது எத்தனை எடைகொண்டது என்று அவள் உணர்ந்தாள்.

அரசரையும் இளையோரையும் குடித்தலைவர்களையும் விழியோட்டி நோக்கியபின் சௌனகர் “இந்த அவையில் அரசர் எம்முடிவை எடுக்க வேண்டுமென்று உரைக்கவிரும்பும் குடித்தலைவர்கள் தங்கள் எண்ணத்தை கூறலாம்” என்றார். அதன் பின்னரும் குடியவை மெல்லிய மெய்நடுக்கு கலந்த அமைதியுடன் அமர்ந்திருந்தது. யுதிஷ்டிரர் மெல்ல அசைந்து “உரைக்கப்பட்ட சொற்களுக்கு என்ன பொருள் என்பதை என் உள்ளம் இன்னும்கூட முழுதும் உள்வாங்கவில்லை. ஒன்றுமட்டும் உரைக்கிறேன், தந்தையென எழுந்து நின்று திருதராஷ்டிரர் சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கும் நாங்கள் கட்டுப்பட்டவர்கள்” என்றார்.

அவை மெல்ல தளர்ந்தது. அது எதிர்பார்த்திருந்ததும் அச்சொற்களையே என முகங்களின் இயல்புமீளல் காட்டியது. “தந்தையின் ஆணையை மீறி ஒருகணமேனும் எண்ண எனக்கு இயலாது. ஆகவே இக்கணத்தில் இந்த அவையில் பாண்டவப் படைத்தரப்பு கௌரவரை போரில் சந்திப்பதென்னும் வாய்ப்பு முழுமையாகவே தவிர்க்கப்படுகிறது. அதை குறித்து எவரும் எச்சொல்லும் என்னிடம் உரைக்கவேண்டியதில்லை. பிறிதென்ன என்று மட்டும் நாம் பேசுவோம்” என்றார். தான் வேண்டியதை உரைத்துவிட்ட நிறைவுடன் யுதிஷ்டிரர் கால்களை நீட்டிக்கொண்டார்.

மீண்டும் அவை அமைதி கொண்டிருந்தது. சௌனகர் அர்ஜுனனிடம் “இளையவரே, தங்கள் எண்ணத்தை சொல்க!” என்றார். அர்ஜுனன் எழுந்து வணங்கி “மூத்தவருக்கு தந்தை எப்படியோ அப்படியே எனக்கு மூத்தவர். அவரது சொல் எதுவோ அதுவே எனக்கு ஆணை. நான் உரைப்பதற்கு எதுவுமில்லை” என்றான். சௌனகர் சகதேவனை நோக்கி “இளையவரே, உங்களை நோக்கியே இந்த அவை காத்திருக்கிறது என்று அறிவீர்கள்” என்றார். சகதேவன் எழுந்து “தந்தையின் ஆணை மைந்தரென நம்மை முற்றாக கட்டுப்படுத்தும். உண்மையில் அவர் நம்மிடம் இரந்து சொல் கோரும்வரை நாம் சென்றதே பெரும்பிழை. ஆகவே போரை முற்றிலும் தவிர்ப்போம். அதைக் குறித்து சொல் இனி இல்லை” என்றான்.

அவை “ஆம்! ஆம்! ஆம்!” என கார்வைகொண்டது. “அதன் பொருளென்பது நமக்கு அவர்கள் நாம் உரிமைகொண்ட நிலத்தையோ நகரையோ அளிக்கப்போவதில்லை என்பதே. சஞ்சயன் அதை தெளிவுபடுத்தவேண்டும்” என்றான் சகதேவன். சஞ்சயன் “என் தூதில் அச்சொற்கள் இல்லை. எளிய தந்தையொருவரின் விழிநீரை மட்டுமே இந்த அவைக்கு நான் கொண்டுவந்தேன்” என்றான். சகதேவன் “அது போதும். இந்தத் தூது துரியோதனன் அறியாமல் இங்கு வந்துள்ளது என்பதே அதை உணர்த்துகிறது. நாம் எண்ண பிறிதொன்றுமில்லை” என்றான்.

“அவையீரே, அரசே, நாம் நம் முடியுரிமையை, மண்ணுரிமையை முற்றிலும் இந்த அவையில் இப்போதே கைவிடவேண்டும். எவரும் மறுக்கமுடியாத குருதியடையாளமே நம் மூத்தோர் நமக்களித்த செல்வம் எனக் கொள்வோம். மூத்தவரின் காண்டீபம் துணையுள்ளது. இரண்டாமவரின் பெருந்தோள்கள் உடனுள்ளன. நம் நிலத்தை நாம் வெல்வோம். நம் குடிவழிகளுக்கு புதிய ஒரு மணிமுடியை உருவாக்கிச் செல்வோம். இன்னுமொரு பதினைந்தாண்டு காலம் கான்வாழ்வும் அலைவுகளும்தான் நமக்கு தந்தை அளிக்கும் கொடை எனில் அவ்வாறே ஆகுக!” என்றான் சகதேவன்.

சகதேவனின் சொற்களுக்காக அவை காத்து அமைந்திருந்தது. அவன் “தந்தையர் மைந்தருக்கு அளிக்கும் நற்பெயரும் புகழும் செல்வமும் மட்டுமல்ல இழிசொல்லும் பழியும் கடனும் கூட அவர்களின் நல்வாழ்த்தென்றே கொள்ளப்படவேண்டும். தந்தையர் மைந்தருக்களிப்பவை எவையாயினும் இறுதியில் அவை நலம்பயப்பவையே என்று சொல்கின்றன நூல்கள். நம் தந்தை அளித்த இவற்றை தலைகொள்வோம். நன்றே நமக்கு நிகழும்” என்றான்.

யுதிஷ்டிரர் “இளையோனே, நீ பிறிதொன்று சொல்லமாட்டாய் என்று எனக்குத் தெரியும். இன்று தந்தைசொல் எழுந்தபோது ஒருகணத்தில் என் உள்ளம் தெளிவு கொண்டது. இத்தனை நாள் அலைப்புண்டு நிலையழிந்திருந்தேன். ஆற்றா கொடுநோயொன்று நீங்கியதென்று நிறைவடைகிறேன். இனி நாம் எண்ணுவதற்கேதுமில்லை” என்றார்.

சகதேவன் “மூத்தவரே, எஞ்சுவது ஒரு வினா மட்டுமே. நம் குலமகள் அவை நடுவே சிறுமையுற்று நின்றாள். அது மண்ணுக்கும் முடியுரிமைக்குமான பூசல் சார்ந்ததல்ல. பெண்ணுக்கும் ஆணென எழும் கீழ்மைக்குமான பூசல். மண்ணையும் முடியையும் துறந்து போகலாம். அன்றுரைத்த வஞ்சினச் சொல்லைத் துறந்து நாம் போகலாகாது. மண்ணையும் முடியையும் துறந்தால் நாம் போற்றப்படுவோம். அவ்வஞ்சினத்தை துறந்து போனால் தலைமுறைகள்தோறும் இழிவு நம்மை தொடர்ந்து வரும். நம் கொடிவழிகள் நம்மை தூற்றும்” என்றான்.

“அறிக, நாம் கொண்டுள்ள வஞ்சம் நம் குலமகளுக்காக அல்ல. குலமகளிர் என இப்புவியில் எழுந்த அத்தனை பெண்டிருக்காகவும்தான். நாம் எண்ணியும் உணரமுடியாத நெடுங்காலத்தில் பிறந்தெழுந்துவரும் அனைத்து தலைமுறைகளுக்காகவும் அவ்வவையில் நின்று வஞ்சினம் உரைத்தோம். அதை துறக்கவிருக்கிறோமா? அது ஒன்றே இவ்வவையில் நாம் எண்ணிமுடிக்கவேண்டியது” என்றபின் கைகூப்பி அவன் அமர்ந்தான்.

யுதிஷ்டிரர் தலையை கையால் பற்றியபடி “ஆம், அதை நம்மால் துறக்க இயலாது. பதினான்கு ஆண்டுகள் ஒரு நாள்கூட ஒழியாது என் தலைக்குள் ஓடியது மண்ணோ முடியோ அல்ல, அவ்வஞ்சமே. எரிந்தெழுந்த பேருருவென பிரம்மத்தை என் கண் முன் கண்டபோதுகூட அங்கு சென்று அதுவென்றாகி அமையாமல் இவ்வுருக்கொண்டு இங்கு நான் மீண்டது அவ்வொரு வஞ்சத்துளி என்னில் எஞ்சியிருந்ததனால்தான். மெய்யாகவே இந்த அவையிலிருந்து இதையே நான் சொல்லவேண்டியிருக்கிறது. அவ்வஞ்சத்திலிருந்து என்னால் விலக இயலவில்லை. ஒருகணமேனும் நான் அவ்வஞ்சத்தை பொறுத்துக்கொண்டதும் இல்லை. அனல்மேல் சருகென சொற்களை அள்ளி அள்ளி போட்டுக்கொண்டிருக்கிறேன்” என்றார்.

சகதேவன் “முதல்வஞ்சம் உரைத்தவர் பாஞ்சாலத்தரசி. அவ்வஞ்சத்தை அவர் கடக்கிறாரா என்று அறிய விரும்புகிறேன்” என்றான். திரௌபதி எங்கோ விழியமைத்து கனவிலென அமைந்திருந்தவள் கலைந்தெழுந்து விழி அளித்து மெல்லிய குரலில் “நான் முன்னரே மும்முறை இதை சொல்லிவிட்டேன். இப்புவியில் எவர் மீதும் எனக்கு வஞ்சமில்லை” என்றாள். அவையில் ஒரு வியப்பொலி மெல்லிய இரைச்சலென எழுந்தது. “மானுடர் மிக மிகச் சிறியவர் என்றே இவ்வாண்டுகளினூடாக வாழ்ந்தறிந்திருக்கிறேன். ஆகவே அவர்கள் செய்யும் பிழைகளும், சூடும் சிறுமைகளும், கொள்ளும் வஞ்சங்களும் மிக மிகச் சிறியவையே. பொருட்படுத்தி நினைவுகூர்ந்து கொண்டு உடன்செல்லும் தகுதி படைத்த மானுடச் செயல் எதுவும் இப்புவியில் இல்லை.”

அவையை நோக்கி “அனைத்தும் கடந்து போகட்டும். இன்றுவரை வாழ்ந்துவந்த என் வாழ்விலிருந்து ஒரு சொல்லையேனும் நாளை நிகழும் என் வாழ்வுக்கு கொண்டுசெல்ல நான் எண்ணவில்லை.  என் அன்னையரின் குடிமரபை, நான் இருந்த அரசை, கொழுநரை, ஈன்ற மைந்தரை, கொண்டுள்ள இப்பெயரையும்கூடத் துறந்து பிறிதொரு வாழ்வுக்குச் செல்லவே விழைகிறேன். முதுதந்தையின் ஆணை அதற்கொரு தொடக்கமாகுமென்றால் அது நன்றே” என்று அவள் சொன்னபோது பலர் அறியாது கைகூப்பினர்.

சகதேவன் “இனி அவையெழுந்து உரைக்கவேண்டியவர் மூத்தவர்” என்றான். பீமன் குழல் கற்றைகள் முகத்தில் சரிய தலைகுனிந்து மடியில் கோர்த்த பெருங்கைகளுடன் அமர்ந்திருந்தான். “மூத்தவரே…” என்றான் அருகே அமர்ந்திருந்த நகுலன். பீமனில் அசைவெழாதது கண்டு மீண்டும் “மூத்தவரே…” என்றான். பீமன் எழுந்து “ஆம்” என்றான். உரத்த குரலில் “மெய் உரைப்பதென்றால் என் வஞ்சத்தை ஓர் அணுவும் நான் குறைக்கவில்லை. எஞ்சிய வாழ்நாள் முழுக்க அவ்வஞ்சத்தை எரியவிட்டே வாழவும் செய்வேன். ஒரு தருணத்திலும் என் குலமகளின் பொருட்டு அவைநின்று நான் உரைத்த சொற்களில் ஒரு மாத்திரையேனும் பின்னெடுக்க மாட்டேன்” என்றான்.

“ஆனால் எந்தை இட்ட ஆணை என்னை முழுக்க ஆள்வதே. குலமூதாதையென தருக்கி நின்று அவர் சொல்லியிருந்தால் அதை உதறி முன்சென்றிருப்பேன். குலத்தின்மேல் சொல்லாண்மை அற்றவர் குலமூதாதை என்று ஆணையிடும் உரிமையற்றவர். குடிமூத்தார் என்றும் அவர் நின்று ஆணையிடமுடியாது, ஏனெனில் குடிநெறியனைத்தையும் கைவிட்டுவிட்டு அங்கு அமர்ந்திருக்கிறார். ஆனால் மைந்தரை முன்வைத்து எளிய தந்தையென்று அவர் கூறிய சொல் என்னை முற்றிலும் ஆள்கிறது. எந்தையின் கண்ணீரை அருகிலென காண்கிறேன். அதற்கப்பால் ஒரு சொல்லும் என்னுள் இல்லை.”

சஞ்சயனிடம் திரும்பி “சஞ்சயரே சென்று சொல்க, அவர் சொல் தலைகொள்ளப்பட்டது என்று. என் கை எத்தருணத்திலும் அவர் மைந்தருக்கெதிராக எழாது என்று. கூடவே இதையும் உரையுங்கள், அவர் மைந்தனாகிய நான் ஒவ்வொரு கணமும் அனல்பற்றி எரிந்தபடி எஞ்சிய வாழ்நாளெல்லாம் திகழவே அவர் ஆணையிட்டிருக்கிறார் என்று. உடல்நீத்து விண்ணேகிய பின்பும்கூட ஒருகணமும் அமைதியற்றே இருப்பேன் என்று. மண்ணிலிருந்து வரும் ஒரு துளிநீரையோ அன்னத்தையோ ஏற்கும் தகுதியவற்றனாக மூச்சுலகில் வாழ அவர் எனக்கு ஆணையிட்டிருக்கிறார். அவ்வாணையும் தலைகொள்ளப்பட்டது என்று அவரிடம் சொல்க!” என்றபின் திரும்பி அவையிலிருந்து வெளியே சென்றான்.

அவன் காலடியோசை அவைக்குள் எதிரொலித்து அடங்கியது. தொலைவில் அது நுண்ணொலியாக தொடர்வதாக விஜயைக்கு தோன்றியது. அவையில் நிகழ்ந்த எந்த உணர்வையும் பெற்றுக்கொள்ளாதவனாக சஞ்சயன் நின்றான். சகதேவன் “அன்னையே, உங்கள் சொல்லும் எழுந்தால் அவைநிறைவு செய்யலாம்” என்று குந்தியை நோக்கி சொன்னான். குந்தி தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். விஜயை தேவிகையை நோக்க தேவிகை குந்தியின் கைகளை மெல்ல தொட்டாள். குந்தியின் விரல்கள் நடுங்கிக்கொண்டிருப்பதை விஜயை கண்டாள்.

சகதேவன் “அன்னையே, இந்நிலத்தில் தொல்குடி முறைமையின்படி தந்தை சொல்லை மீற ஆணையிடும் உரிமை அன்னையருக்கு உண்டு. நீங்கள் உங்கள் மைந்தருக்கு ஆணையிடலாம். இக்கணம்முதல் அவர் உங்கள் தந்தையல்ல என்றுகூட சொல் வகுக்கலாம். உங்கள் சொல்லில் உள்ளது அவை முடிவு” என்றான். குந்தி மேலும் தலைகுனிய வெண்பட்டாடை அவள் தலையிலிருந்து சரிந்து முகத்தை மறைத்தது. அவள் கண்களிலிருந்து கண்ணீர் மடிமேல் வைக்கப்பட்ட முழங்கையில் சொட்டுவதை விஜயை கண்டாள்.

தேவிகையிடம் மெல்ல “என்னடி?” என்றாள். ஒன்றுமில்லை என்று தலையாட்டிய பின் தேவிகை குந்தியின் கைகளை பற்றினாள். குந்தி மேலும் நடுங்கிக்கொண்டிருந்தாள். திரௌபதி அங்கில்லை என அமர்ந்திருப்பதை விஜயை கண்டாள். குந்தியின் வலக்காலும் வலக்கையும் சுண்டியிழுக்கப்பட்டதுபோல் அதிர்ந்தன. இருக்கையின் ஒருபக்கமாக சரிந்து விழுந்தாள். தேவிகை எழுந்து அவளை மெல்ல தூக்கினாள். சேடி ஓடிவந்து “என்ன? என்ன?” என்றாள். தேவிகை “நினைவிழந்துவிட்டார்… களைப்புதான்” என்றாள்.