குருதிச்சாரல் - 20

பகுதி மூன்று : மலைச்சுனையின் ஓசை – 3

blஉபப்பிலாவ்யத்தின் சிறு அவைக்கூடத்திற்குச் சென்று குந்தியையும் திரௌபதியையும் சந்தித்து முறைமைகளும் இன்சொற்களும் ஆற்றிமுடிந்த பின்னர் விஜயை அவளுக்கென அளிக்கப்பட்ட சிறிய அறைக்குள் அபயையுடன் சென்றாள். “ஒவ்வொருவரும் இங்கு பிறிதொன்றிற்காக காத்திருக்கிறார்கள்” என்று அபயை சொன்னாள். “என்ன?” என்று அவள் கேட்டாள். “தூதொன்று வந்திருக்கிறது என்றார்கள்” என்றாள் அபயை. “அஸ்தினபுரியிலிருந்து திருதராஷ்டிரரின் மொழியணுக்கன் சஞ்சயன் அவருடைய தனிச்செய்தியுடன் வந்திருக்கிறான். இன்று மாலை அவையில் அதை உரைக்கவிருக்கிறான்.”

விஜயை ஆர்வமின்றி “என்ன செய்தி?” என்றாள். “அதை உய்த்துணர்வது மிக எளிது. பேரரசரின் சொற்கள் இவையே” என்ற அபயை திருதராஷ்டிரர் போலவே குரலெழுப்பி “என் மைந்தர் என் சொற்களை பொருட்டாக எடுக்கவில்லை. ஆகவே என்மேல் மெய்யான அன்புள்ள மைந்தராகிய உங்களிடம் என் சொற்களை சொல்லுகிறேன். என் சொற்களை நீங்கள் தலைக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். எதன்பொருட்டும் போருக்கு எழவேண்டியதில்லை. முற்றிலும் நிலம் துறந்தாலும்கூட படைமுகம் நிற்கவேண்டியதில்லை. இது என் ஆணையும் மன்றாட்டுமாகும்” என்றாள்.

விஜயை கண்களைச் சுருக்கி நோக்கி “பதினான்கு ஆண்டுகள் கானில் உழன்ற பின்னர் திரும்பி வந்தது இச்சொற்களை கேட்பதற்கா?” என்றாள். அபயை “அப்படி துணிந்து அவை நடுவே கேட்கும் இயல்பு கொண்டவர் இரண்டாமவர் பீமசேனர். ஆனால் அவர் அதை கேட்கமாட்டார்” என்றாள். விஜயை “ஏன்?” என்றாள். “பெருந்தோள்கள் இருவருக்கும்” என்றாள் அபயை. விஜயை அதை உள்வாங்காமல் தலையை அசைத்தபடி “என்ன நிகழ்கிறது என்றே புரியவில்லை. இந்நகருக்குள் நுழைந்த முதற்கணம் நான் உணர்ந்ததென்ன தெரியுமா? நான் அங்கிருந்து கிளம்பியே இருக்கக்கூடாது என்றுதான்” என்றாள்.

“நீங்கள் அங்கிருக்க இயலாது என்று உங்களுக்கே தெரியும். அந்நகர் உங்களை புறந்தள்ளிவிட்டது. இனி எந்நிலையிலும் அங்கே மீண்டும் செல்லவியலாது” என்றாள் அபயை. “ஆம், ஆகவேதான் கிளம்பினேன். ஆனால் ஏதேனும் ஒரு வழியிருக்கிறதா என்று பிறிதொருமுறை எண்ணியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. மத்ர நாட்டுக்குள் நான் இருந்தால்தானே அரசியல் சிக்கல்? அருகில் உள்ள காடுகளில் தவக்குடில் ஒன்று அமைத்து அங்கு குடியிருந்திருந்தால் அதிலென்ன பிழை? இவ்விரு நாடுகளின் போர்களுக்குள் என் உள்ளத்தை அளிக்காமல் அங்கே நான் வாழ்ந்தாலென்ன?” என்றாள்.

அபயை “விழைவின் பொருட்டு துறத்தல், புதிய கருத்துதான். முனிவர்களும் ஒருவேளை இதை பிறிதொருமுறை எண்ணிப்பார்க்கக்கூடும்” என்றாள். சீற்றத்துடன் “செல்க! எதுவும் உனக்கு நகையாடலே” என்றபின் விஜயை தன் அறைக்குள் நுழைந்து மஞ்சத்தில் அமர்ந்தாள். அவள் ஆடைப்பேழையையும் அணிப்பேழையையும் அறைக்குள் வைத்துவிட்டு “இளைப்பாறுக, அரசி! நான் தங்களுக்குரிய ஒழுங்குகளைச் செய்துவிட்டு வருகிறேன்” என்று அபயை வெளியே சென்றாள்.

விஜயை கைகளைக் கட்டியபடி தலைகுனிந்து மஞ்சத்தில் அமர்ந்திருந்தாள். சாளரத்திற்கு வெளியே பறவைக்குரல்கள் எழுந்துகொண்டிருந்தன. காற்றில் இலைகளின் சலசலப்பு. மாளிகையின் கதவு கீல்களில் அசையும் ஓசையும் சேடியரும் ஏவலரும் பேசும் மங்கிய ஓசைகளும் எழுந்தன. அங்கு வந்த பயணத்திலும் நகர் நுழைவிலும் அரண்மனை அமைவிலும் ஒருமுறைகூட சகதேவனையோ சுகோத்ரனையோ எண்ணிக்கொண்டதில்லை என்று அவள் நினைவுகூர்ந்தாள். அவர்களின் தோற்றங்களே நீர்ப்பாவைபோல் மெல்ல அசைந்தபடி தொலைவில் தெரிந்தன. உற்றுநோக்குந்தோறும் தெளிவிழந்தன.

சகதேவன் கானகமேகும்போது சுகோத்ரனுக்கு அகவை இரண்டு அணுகிக்கொண்டிருந்தது. அவன் அவளிடம் “அவன் தௌம்ரரிடம் நிமித்தநூலும் வானூலும் கற்கவேண்டும். அவரிடம் நான் கூறியிருக்கிறேன். நிமித்தநூல் யாத்த சூரியதேவரின் வழிவந்தவர் தௌம்ரர். அவரிடம் மைந்தன் வளரட்டும்” என்றான். அவள் தலைதாழ்த்தி அவ்வாறே என்றாள். மேலும் ஒரு சொல் உரைக்கலாகாதென்று எண்ணினாள். ஆனால் சேடியர்அறையில் தொட்டிலில் துயின்றுகொண்டிருந்த சுகோத்ரனின் தோற்றம் விழிமுன் எழ ஆற்றமாட்டாமல் “அவன் சொல்திருந்தா குழந்தை” என்றாள்.

“அறிக, நிமித்தஞானம் மட்டும் மொழிக்கு முன்னரே கற்கப்படவேண்டும். சொற்களுக்கு உலகியல் அளிக்கும் பொருளே இயல்பாகக் கிடைப்பது. அதற்கு முன்னரே காலமும் வானமும் அளிக்கும் மெய்ப்பொருளை அறிந்தவனே நிமித்தவியலின் மெய்மையை தொடமுடியும். மொழியறிந்த பின் நிமித்தநூல் கற்பவன் நிமித்தஞானத்தை தானறிந்த உலகியல் மொழிக்குபெயர்த்து புரிந்துகொள்பவன். அவன் புரிந்துகொள்ளலாம், உணர்ந்துகொள்ளல் இயலாது. இது கல்லையும் மண்ணையும் அளக்கும் கணக்கு அல்ல, வான்முகிலையும் காற்றையும் அளக்கும் கணக்கு” என்றான் சகதேவன்.

“ஆசிரியரிடமிருந்தே அவன் மொழியையும் கற்கவேண்டும். அவன் வந்து நின்றிருக்கையில் அவனிடமிருந்து நான் மேலும் கற்கவேண்டும்.” அவள் தலையசைத்தாள். அவன் அவள் கன்னத்தைப்பற்றி தூக்கி “கண்ணீர்விடுகிறாயா?” என்றான். அவள் கன்னங்களில் நீர் வழிய “ஆம்” என்றாள். “இன்றொருநாளோடு விழிநீரை விடுக! பதின்மூன்றாண்டுகள் துயருடனிருக்க எவராலும் இயலாது. அத்தனை காலம் நோன்புகள் கொள்வதும் மடமை. நான் மீண்டுவருவேன். உன் உள்ளத்திலும் உடலிலும் இளமையை தக்கவைத்துக்கொள்” என்றான்.

சுகோத்ரனின் தாலிக்காப்பு விழவுக்கு மறுநாளே தௌம்ரர் தன் ஏழு மாணவர்களுடன் இந்திரப்பிரஸ்தத்திற்கு வந்தார். குந்தி மைந்தனை ஒரு தாலத்தில் படுக்கவைத்து பொன்நாணயங்களால் மூடி இரு கைகளால் எடுத்து அவருக்கு அளிக்க அவர் வணங்கி பெற்றுக்கொண்டார். தேவிகையும் கரேணுமதியும் பலந்தரையும் விழிநீர் உகுத்தனர். அவள் வெற்றுவிழிகளுடன் நோக்கி நின்றாள். அத்தருணத்தை கண்ணீருடன், கொந்தளிப்புடன் தன்னுள் நிகழ்த்திச் சலித்திருந்தாள். மைந்தன் விழிமுன் இருந்து அகன்றதும் பெருமூச்சுடன் திரும்பினாள். கால்தளர்ந்து மயங்கிவிழுந்தாள். விழித்துக்கொண்டபோது மஞ்சத்தில் இருந்தாள். அருகே தேவிகையும் கரேணுமதியும் இருந்தனர். அவள் சொல்லின்றி அழுதுகொண்டிருந்தாள்.

இரண்டு நாட்களுக்குப் பின் அவள் மத்ரநாட்டுக்கு கிளம்பினாள். ஆடைகளை களைந்திடுவதுபோல அனைத்தையும் விலக்கிக்கொண்டு சகலபுரியை சென்றடைந்தாள். சுகோத்ரன் ஆண்டுக்கொருமுறை வந்து அவளைக் கண்டு வணங்கி வாழ்த்துபெற்றுச் சென்றான். அவனுக்கும் அவன் உடன்பிறந்தாருக்குமிடையே உறவேதுமிருக்கவில்லை. அவன் படைக்கலம் ஏந்தத் தெரியாதவனாகவும் அரசமுறைமைகள் ஏதும் கற்காதவனாகவும் இருந்தான். அவர்கள் அவனை இன்சொல்லுடன் விலக்கினர். அவனும் அவர்களை விட்டு அகன்றே நின்றான். அவன் அவளைக் கண்டு வணங்கும்போது விழியும் கையும் அறிந்ததை மறுத்து அறியாத அந்தணச் சிறுவன் அவன் என்றே அவள் உள்ளம் உணர்ந்துகொண்டிருந்தது.

சகதேவன் எப்படி இருப்பான் என அவள் தன்னுள் வினவிக்கொண்டாள். அவர் முதுமை கொண்டிருக்கக்கூடும். தலை நரையோடி முகம் தொய்ந்து இதழ்களில் நகை மறைந்து, விழிகள் சலிப்புக்கொண்டு… அவள் எழுந்து சென்று அறையிலிருந்த சிறிய ஆடியில் தன் முகத்தை பார்த்தாள். திடுக்கிட்டவள்போல அப்பால் சென்றாள். நெஞ்சு படபடத்து நின்றாள். மீண்டும் ஒருமுறை அவ்வாடியை தன்னால் பார்க்க முடியுமென்று தோன்றவில்லை. இல்லை, இது என் முகமல்ல என்று அவளுக்குள்ளிருந்த சிறுமி வீரிட்டாள். இல்லை இல்லை இல்லை என சித்தம் ஓடிக்கொண்டிருந்தது.

மத்ரநாட்டு எல்லை கடந்ததும் தன்னில் அமைந்த முகம் இது. நெற்றியோர நரை, வாயைச்சுற்றிய மடிப்புகள், கண்களுக்குக்கீழ் கருநிழல். இம்முதுமகள் நிழல் என என்னைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தாள். இவளை அஞ்சியே விரைந்தோடிக்கொண்டிருந்தேன். இவளை இங்கே உதறி மீண்டும் மத்ரநாட்டுக்குச் சென்றுவிடவேண்டும். இந்த ஆடியில் இவள் இருப்பாள். மீண்டும் ஒருமுறை இங்கு வந்தால் என்னை பற்றிக்கொண்டு படர்வாள். ஆனால் இங்கே வரப்போவதே இல்லை. எனது சிறுநாட்டின் மலைமுடிகள் சூழ்ந்த எல்லைக்கு வெளியே காலடி வைக்கப்போவதே இல்லை.

எழுந்து கதவைத் திறந்து வெளியே ஓடி படிகளில் இறங்கி கூடத்தை அடைந்து தேர்ப்பாகனிடம் “பூட்டுக தேரை!” என்று ஆணையிட்டாள். தேர் வந்து நிற்க ஏறியமர்ந்து “செல்க… செல்க!” என்றாள். “எங்கு அரசி?” என்றான். “மீண்டும்… மீண்டும்” என்றாள். அவையனைத்தும் நொடியில் நிகழ்ந்து மறைய நீள்மூச்செறிந்து மீண்டும் சென்று தன் மஞ்சத்தில் அமர்ந்தாள். பெருமூச்சுக்கள் வந்தபடியே இருந்தன.

கதவு மெல்ல தட்டப்பட்டது. “வருக!” என்று அவள் குரலெழுப்பியதும் தேவிகை உள்ளே வந்தாள். அவளை வெறுமனே நோக்கி அமர்ந்திருந்தாள் விஜயை. தேவிகை அவள் அருகே வந்து பீடத்தில் அமர்ந்து “இளைப்பாற வேண்டுமல்லவா?” என்றாள். “இல்லை, தேரிலேயே நன்கு துயின்றுகொண்டுதான் வந்தேன்” என்றாள் விஜயை. “நீ களைத்திருந்தாய். உன்னைப் பார்த்ததும் நான் அடைந்த முதல் எண்ணமே இத்தனை அகவை ஆயிற்றா இருவருக்கும் என்றுதான்” என்றாள் தேவிகை. விஜயை கசப்புடன் “நான் திரும்பிப்போக விரும்புகிறேன்” என்றாள். “அவ்வாறு திரும்ப முடிந்தால் எவ்வளவு நன்று! நானும் சிபிநாட்டின் செம்பாலையில் அன்றி பிறிதெங்கும் வாழ விரும்பவில்லை” என்று தேவிகை சொன்னாள். “ஆனால் நாம் இங்கேதான் இருந்தாகவேண்டும். ஒவ்வொரு கணமுமென போர் அணுகிக்கொண்டிருக்கிறது.”

“அதற்கு நாமென்ன செய்ய முடியும்?” என்று விஜயை கேட்டாள். ஒருமுறைகூட அவள் போரை தன்னுடன் தொடர்புடையதென்று எண்ணவேயில்லை என்று அப்போதுதான் உணர்ந்தாள். “நாம் அதை தடுக்க முடியும். பிறருக்கு பல கணிப்புகள் உள்ளன, நிலம் குலம் புகழ் என. நமக்கு எதுவுமில்லை. நமது மைந்தர் தவிர” என்றாள். “நமது மைந்தர் இதில் எங்கு வருகிறார்கள்?” என்றாள் விஜயை. “அறிவிலியா நீ? போர் நிகழ்ந்தால் முதற்களப்பலி யார்? நமது மைந்தரல்லவா?” விஜயை “ஆனால்…” என்றாள். “களம்செல்பவர் மட்டும் எதிரிகளின் இலக்காக இருக்கவேண்டும் என்பதில்லை” என்றாள் தேவிகை.

ஒரு கணத்தில் அனைத்தையும் உணர்ந்துகொண்டு விஜயை எழுந்து நின்றாள். அவள் கால்கள் நடுங்கத்தொடங்கின. எதையாவது பற்றிக்கொள்ள வேண்டுமென்று தவித்த கைகள் தேவிகை அமர்ந்திருந்த பீடத்தின் கைப்பிடியை சென்றடைந்தன. “ஏன்? அவர்கள் என்ன பிழை செய்தார்கள்?” என்றாள். “அரசமைந்தராகப் பிறந்தது, வேறென்ன?” என்றாள் தேவிகை. “அறிக, இரு தரப்பிலும் முதல் அம்புகள் மைந்தரின் பொருட்டே எடுக்கப்படும். இந்தப் போர்விரும்பிகளின் முன் தலையை அறைந்து உடைத்தாவது இப்போரை நாம் நிறுத்தியாகவேண்டும். இல்லையேல் மைந்தரை இழந்தவராவோம். நம் வயிற்றில் பிறந்ததன்றி அவர்கள் பிழை எதுவும் செய்யவில்லை. இக்கடனை நாம் நிறைவேற்றியாகவேண்டும்.”

“ஆம்” என்ற விஜயை தேவிகையின் கைகளை பற்றிக்கொண்டு “நாம் என்னடி செய்வது?” என்றாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது. “நான் அவரை பார்த்தேன்” என்று தேவிகை சொன்னாள். “யாரை?” என்று கேட்டபோதே விஜயைக்கு புரிந்துவிட்டது. “குருஷேத்திரத்தில் ஒரு பூசெய்கைக்குச் சென்றிருந்தேன். திரும்பிவரும் வழியில் ஒரு விடுதியில் அவரை சந்தித்தேன். அவரிடம் இப்போரை அவர் நிறுத்த முடியுமா என்று நான் மன்றாடினேன். என்னை இங்கு வரச்சொன்னார். அவர் அஸ்தினபுரிக்கு கிளம்பிச்சென்றார் . தன் முழு வல்லமையாலும் நமக்காக இப்போரை நிறுத்த முயல்வதாக சொன்னார்.”

“அவருடைய முயற்சியின் விளைவாகவே சஞ்சயன் இங்கு வந்துள்ளான். இறுதி வாய்ப்பு அது. பாண்டவர்களுக்குமேல் தந்தையின் ஆணை இன்று அவையில் ஒலிக்கும். போரிலிருந்து பீமசேனர் விலகுவாரென்றால் அதன்பின் இங்கே ஒன்றும் நிகழாது” என்றாள் தேவிகை. “திருதராஷ்டிரரின் ஆணையை பீமசேனர் ஒருபோதும் மீறமாட்டார் என்று என் உள்ளம் உறுதியாகச் சொல்கிறது.” விஜயை “போர் நின்றுவிடுமா? மெய்யாகவா?” என்று கேட்டாள். “நின்றுவிடும் என்றால் இனி இதன்பொருட்டே நிகழும். பேரரசரின் தனிச்சொல்லைக் கொண்டு சஞ்சயன் வந்துள்ளான். சஞ்சயனின் நாவில் எழும் சொற்கள் அவருடைய சொற்களே. இந்த அவையிலாவது அது ஒலிக்கட்டும்.”

விஜயை மீண்டும் மஞ்சத்தில் அமர்ந்து “தெய்வங்கள் அருளவேண்டும். உளம் கொண்டு எப்பிழையும் செய்யாதவர்கள் நம் மைந்தர். இன்னும் வாழ்க்கையை அவர்கள் அறியவில்லை. அவர்கள் பொருட்டேனும் நன்று நிகழவேண்டும்” என்றாள். “இரு தரப்பிலும் பலர் விழைவது இதுவே. அவ்விழைவுகள் முனை கொள்ளட்டும்” என்றாள் தேவிகை. பின்னர் “நான் உன்னிடம் சொல்லவந்தது ஒன்றே. அவையில் இன்று சஞ்சயன் தூது முன்வைக்கப்படுகையில் பாஞ்சாலத்து அரசி தன் வஞ்சினத்தை ஒழிப்பதாக எழுந்து அறிவிப்பாள். ஏனென்றால் அவள் முன்னரே அதை சொல்லிவிட்டாள். அவள் இன்று இந்த வஞ்சங்களின் சூழலில் இல்லை” என்றாள்.

“மெய்யாகவா?” என்றாள் விஜயை. “அவளுடலுக்குள் பிறிதொருத்தி குடியேறியதுபோல் தோன்றுகிறது. அவளருகே நின்றிருக்கையில் முற்றிலும் அறியாத ஒருவரின் அணுக்கத்தையே என் உள்ளம் உணர்கிறது” என்றாள் தேவிகை. “தந்தை சொல்லை மீறலாகாதென்று சான்றோரும் உரைப்பார்கள். அதற்கப்பால் ஏதேனும் சொல் அவையிலெழுமென்றால் நம் மைந்தர் பொருட்டு நாம் எழுந்து பேசவேண்டும். அவையை அஞ்சியோ முறைமைக்குப் பணிந்தோ நாம் வாளாவிருக்கக் கூடாது.”

“ஆம்” என்றாள் விஜயை. தேவிகை “நாம் பேசவேண்டியதென்ன என்பதை வகுத்துக்கொண்டிருக்கிறேன். இந்த அவையில் இன்றே அனைத்தும் முடிவாகவேண்டும்” என்றாள். “ஆம், நான் உன் அருகே அமர்ந்திருப்பேன். நான் எழுந்து அவை நடுவே சொல்வேன். தேவையென்றால் அரசர் முன் சென்று நெஞ்சில் அறைந்து ஆணையிடுகிறேன். என் இறப்பின்மீது இப்போர் முடியுமென்றால் அவ்வாறே ஆகட்டும் என்று சொல்வேன்” என்றாள். “நாம் முழு உணர்வையும் வெளிக்காட்டியாகவேண்டும்” என்று சொன்ன தேவிகை எழுந்து “ஓய்வெடு. நான் வருகிறேன்” என்றாள்.

தோளைத் தட்டியபின் அவள் திரும்பிச்செல்லும்போது மெல்லிய குரலில் விஜயை “தேவிகை’ என்றாள். தேவிகை நின்று திரும்ப “நம் பொருட்டா அவர் இதை செய்தார்?” என்றாள். தேவிகை விழி தாழ்த்தி முகம் கனிந்து “நம் பொருட்டும்தான்” என்றாள். விஜயை “அவ்வளவு எஞ்சியிருக்குமா என்ன?” என்றாள். “ஏன்?” என்றாள் தேவிகை. “நாம் மறந்துவிட்டோம் அல்லவா?” என்றாள் விஜயை. தேவிகை “முயன்றோம்” என்றாள். “இருந்தாலும் அவ்வளவு காலத்திற்குப் பிறகு…” என்றாள் விஜயை. “காலம் என்ன செய்யும்?” என்றபின் தேவிகை வெளியே சென்றாள்.

விஜயை ஒரு ஊழ்க நுண்சொல்லென அதை பெற்றாள். மஞ்சத்தில் அமர்ந்து கைகளை மடியில் கோட்டியபின் “காலம் என்ன செய்யும்! காலம் என்ன செய்யும்!” என்று தனக்குள் மீள மீள சொல்லிக்கொண்டாள்.

blஉபப்பிலாவ்யத்தின் ஏவல்பெண்டு அறைக்குள் வந்து முறைமைச்சொல் உரைத்து சகதேவன் அவளைப் பார்க்க வருவதை அறிவித்தபோது முதலில் அச்சொற்கள் விஜயைக்கு எந்தப் பொருளையும் அளிக்கவில்லை. தனது ஆடைப்பேழையிலிருந்து பொன்னூல் பின்னலிட்ட வெண்பட்டு ஒன்றை வெளியே எடுத்தவள் இயல்பாகத் திரும்பி “யார்?” என்றாள். அவள் “பாண்டவ இளைய அரசர் சகதேவர்” என்றாள். அப்போதும் அகம் எழாமல் “நான் அவைக்கு செல்லப்போகிறேன் அல்லவா?” என்றாள்.

ஏவல்பெண்டு விழிகளில் எந்த மாறுதலுமின்றி “இளைய பாண்டவர் சகதேவர் தன் அரசியை சந்திக்க வருவதாக செய்தி அனுப்பியிருக்கிறார், அரசி” என்றாள். அதன் பின்னரே அவள் அகம் விழித்துக்கொண்டது. தன்னை முற்றிலும் உள்ளிழுத்துக்கொண்டு “அது அடியவளின் பேறு. தவம் முதிர்ந்தவள் என காத்திருக்கிறேன் என்னும் சொல்லை அவருக்கு உரை” என்றாள். அவள் தலைவணங்கி வெளியே சென்றபின் தளர்ந்த காலடிகளுடன் சென்று மஞ்சத்தில் அமர்ந்தாள். அத்தருணத்தை ஏன் முன்னரே எதிர்பார்த்து உளம் நடித்துக் கொண்டிருக்கவில்லை என்று வியந்தாள்.

ஒரு வாழ்வுத்தருணம் நிகழும்போது முன்னரே எதிர்பார்த்தபடி இருப்பதில்லை. ஆனால் அவ்வெதிர்பார்ப்பின்போது அதை மீள மீள உளம்நடிப்பதால் அத்தருணம் பழகியதாக இருக்கிறது. அப்போது பூணவேண்டிய தோற்றமும், இயற்றவேண்டிய நடிப்பும், கொள்ளவேண்டிய உணர்வுகளும் பெரும்பாலும் வகுக்கப்பட்டுவிட்டிருக்கின்றன. முற்றிலும் புதியதாக அது நிகழ்கையில்கூட நின்றிருக்கும் இடத்திலிருந்து அப்புதிய இடத்திற்குச் செல்வதன் உலைவு மட்டும்தான் உள்ளது. ஓர் எண்ணா இடர் என அது நிகழ்கையில் அனைத்துப் புலன்க ofளும் முற்றிலும் செயலற்றுவிடுகின்றன. சொற்கள், விழியசைவுகள், மெய்ப்பாடுகள் எதுவும் உடலிலிருந்து எழுவதில்லை. உள்ளிருக்கும் அது தன்னை ஒரு சிறுபுள்ளியென சுருக்கிக்கொண்டு இருளில் புதைந்து அமர்ந்து விழியொளி மட்டுமென மாறி வெறுமனே நோக்கிக்கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு தருணத்தையும் முன்னரே நிகழ்த்திக்கொள்ளும் உளநடிப்புகள் ஒன்று தொட்டு ஒன்றென ஒழுகும் வாழ்வெனும் பெருக்கில் ஒவ்வொரு தருணத்தையும் பொருத்துவதற்கான முயற்சிகளே என்று அவளுக்குத் தோன்றியது. எண்ணியிரா நிகழ்வு எழுகையில் அது அப்பெருக்குடன் ஒட்டாமல் முற்றிலும் அயலென நிற்கிறது.

தன் கைகள் பட்டாடையை கசக்கிக்கொண்டிருப்பதை உணர்ந்து அதை மஞ்சத்தில் வைத்து கைகளால் நீவினாள். பின்னர் எழுந்து சென்று வாயிலிலிருந்த சிறிய மணியை அடித்தாள். அபயை வந்து அறைவாயிலில் நின்று தலைவணங்கினாள். “அரசரை நான் சந்திக்கவிருக்கிறேன்” என்றாள் விஜயை. “ஆம், இங்கு வந்தால் நிகழவேண்டியது அதுதானே?” என்றாள் அபயை. “அதற்குமுன் மைந்தரை சந்திக்கலாம் என்று எண்ணினேன்” என்றாள் விஜயை. “இப்போது அவர்கள் எவரும் இங்கில்லையே” என்றாள் அபயை. “அதை அறிந்துதானே வந்தோம்?”

விஜயை பொருளற்ற வினாவாக “சுகோத்ரன் எப்போது வருவதாக சொல்லப்பட்டது?” என்றாள். “போரில் அவரை ஈடுபடுத்தும் எண்ணம் இவர்களுக்குண்டா என்று தெரியவில்லை. அவருக்கு படைக்கலப் பயிற்சியே இல்லை என்றார்கள்” என்றாள் அபயை. “ஆம், அந்தணன்போலவே இருந்தான் சென்றமுறை பார்க்கையிலும். நீ படைக்கலமே பயிலவில்லையா என்றேன். உள்ளத்தில் ஒரு பகுதியை அதற்கென பகுக்கவேண்டாம் என்றார் ஆசிரியர் என்றான்.” அபயை சிரித்து “அவ்வண்ணமென்றால் காமத்திற்கும் பகுக்கமாட்டார் என நினைக்கிறேன்” என்றபின் “அணிகொள்க, அரசி!” என்றாள். “வேண்டாம், நான் இவ்வண்ணமே இருக்க விழைகிறேன்” என்றாள் விஜயை. அபயை ஒருகணம் நோக்கிவிட்டு “அதுவும் நன்றே” என வெளியே சென்றாள்.

சகதேவன் அறைக்குள் நுழைந்ததும் முதற்கணம் அவளைப் பார்த்து திகைத்ததை அவள் உணர்ந்தாள். அது அவள் தோற்றத்திலிருந்த முதுமையால்தான் என்பதை அக்கணமே அவளுள் உறையும் பெண் அறிந்தாள். அவன் மீது எழுந்த கடும்கசப்பை விழிகளிலும் புன்னகையிலும் காட்டாமல் இருக்கும் பொருட்டு விழிதாழ்த்தி முகம் திருப்பிக்கொண்டாள். சகதேவன் அந்த விலக்கத்தை அப்போது விரும்பினான். அவ்விடைவெளியில் தன்னை அவன் மீண்டும் தொகுத்துக்கொண்டான். இயல்பான குரலில் “பார்த்து நெடுநாளாகிறது” என்றான்.

அந்தச் சொற்றொடரின் பொருளின்மை அவளை மீண்டும் சீற்றம்கொள்ளச் செய்தது. ஒருபோதும் அவன் அன்பையோ, எல்லைக்கப்பால் அணுக்கத்தையோகூட தன் சொல்லில் வெளிக்காட்டியவனல்ல என்று அவளுக்குத் தெரிந்திருந்தாலும்கூட அத்தருணத்தில் அவள் பிறிதொன்றை எதிர்பார்த்தாள். “ஆம், பதினான்கு ஆண்டுகள்” என்று அவளில் எழுந்த பிறிதொருத்தி மறுமொழியுரைத்தாள். “மைந்தனை எப்போது பார்த்தாய்?” என்று சகதேவன் கேட்டான். “சென்ற ஆண்டு” என்று அவள் சொன்னாள். “வளர்ந்துவிட்டிருப்பான்” என்றான் சகதேவன். “ஆம், அந்தணச் சிறுவன் போலிருக்கிறான்” என்றாள். “அவ்வண்ணம் அவன் ஆகவேண்டுமென்றே விரும்பினேன். பிற எந்தப் பறவையும் அமராத மரத்தில் அமர்வது நிமித்தமெய்ஞானம் எனும் பறவை” என்றான் சகதேவன்.

அவன் முகத்தில் எழுந்த கனிந்த புன்னகை அவனை அவளுக்கு சற்று அருகே கொண்டுவந்தது. “இள அகவையில் நான் இருந்ததைப் போலவே இருக்கிறான், அதே சொற்களைக்கூட சொல்கிறான் என்றார்கள்” என்றான். அவன் நினைவில் அவள் அகம் மலர்ந்தது. புன்னகையுடன் “அவனையும் பிறரையும் இங்கு பார்க்கலாமென்று எண்ணினேன்” என்றாள். “மைந்தர்கள் இந்திரப்பிரஸ்தத்துக்கு சென்றிருக்கிறார்கள். இங்கு அவர்கள் தங்குவதற்கு இடமுமில்லை, ஆற்ற பணியுமில்லை” என்று சகதேவன் சொன்னான். “ஆனால் அவன் இங்கு வருவான் என்று ஏனோ எண்ணினேன்” என்று விஜயை சொன்னாள். “அவன் இன்னமும் கற்றுநிறையவில்லை” என்றான் சகதேவன்.

மைந்தனின் நினைவுகளினூடாக இருவரும் அணுகி வந்து ஒருவரை ஒருவர் உளம் தொட்டுக்கொள்வதை அவள் உணர்ந்தாள். அப்போது தன் முன் நின்றுகொண்டிருப்பது மைந்தனா கொழுநனா என்றே அவள் அகம் மயங்கியது. அவனைப்பற்றி பேசவிரும்பினாள். “பதினான்கு ஆண்டுகள் அவனையும் பிரிந்துதான் இருந்தேன். ஆண்டுக்கு ஒருமுறை அவன் அங்கு வருவதுண்டு. விழவுகளிலும் முறைமைகளிலும் பங்கெடுப்பதற்காக. ஒவ்வொரு முறையும் முற்றிலும் பிறிதொருவனாக அவன் உளம் மாறியிருப்பான். சொல்திருந்துவதையும் எண்ணங்கள் கூர்கொள்வதையும் ஓரிரு சொற்களிலேயே உணர்வேன்” என்றாள்.

“நிமித்தநூல் அனைவரையும் நூல்களைப்போல அறிந்து கடக்கப்படவேண்டிவையாக ஆக்கிவிடுகிறது” என்றான் சகதேவன். “அவன் என்னிடம் அணுக்கமாக உரையாடுவதில்லை. நாங்கள் இருவரும் தனித்து பேசும் தருணங்களே பெரும்பாலும் அமைந்ததுமில்லை. ஆயினும் அவன் வந்து சென்ற பல மாதங்களுக்கு நான் அவனுடன்தான் இருப்பேன்” என்றாள்.

சகதேவன் மஞ்சத்தில் இயல்பாக படுத்தபடி “விந்தைதான், நான் கிளம்புகையில் அவன் கைக்குழவி. குழவி என்றே அவனை என் உள்ளத்தில் இருத்தியுமிருந்தேன். பதினான்கு ஆண்டுகள் காட்டிலும் கானகவாழ்விலும் அவனை இளமைந்தனென்றே நெஞ்சிலும் தோளிலும் அமரவைத்து இன்சொல்லாடினேன். மீண்டு வந்து இளைஞனாக அவனை என் முன் காண்கையில் எவ்வாறு உணர்வேன் என்று எண்ணியபோது தயங்கி பின்னடைந்தேன். ஆனால் இந்நகருக்குள் நுழைந்ததுமே என் அகத்தில் அவன் வளர்ந்து இளைஞனாகிவிட்டான்” என்றான். “என் உள்ளத்தில் பிறிதொரு ஆழம் அவனை ஒவ்வொரு நாளும் வளரவைத்து பார்த்துக்கொண்டிருந்தது என்பதை அப்போது உணர்ந்தேன்.”

மஞ்சத்தில் அவனருகே அவள் அமர்ந்தாள். “நினைவிருக்கிறதா? ஒருமுறை இந்திரப்பிரஸ்தத்தின் காண்டவக்காட்டின் உள்ளே சூக்தவனம் என்னும் சோலையில் நாம் தங்கியிருந்தோம். சிறிய காட்டுக்குடில். மூங்கில் பிளந்து அமைத்த சிறிய மஞ்சம். நம் இருவருக்குமிடையே அவனை படுக்க வைத்தபடி ஒற்றைதோல் போர்வையால் போர்த்து வெளியே சீவிடின் ஒலியும் மான்களின் குமிறலும் இரவின் ஒட்டுமொத்த முழக்கத்திற்குள் எழுவதை கேட்டுக்கொண்டிருந்தோம். சிறுசாளரத்துக்கு வெளியே ஒரு விண்மீன் கண்மின்னிக்கொண்டிருந்தது” என்று சகதேவன் சொன்னான்.

“அதை எப்படி மறப்பது!” என்று அவள் சொன்னாள். அவள் உள்ளம் உருகி விழிநீர் துளிர்த்தது. அழுகையை அடக்க உதடுகளை அழுத்தியபடி தலைகுனிந்தாள். முற்றிலுமாக அந்நாட்களை அம்முகங்களை எப்படி மறந்தோம் என்று அவள் உள்ளம் வியந்தது. அவ்வியப்பினாலோ என்னவோ மறுமுனை மேலும் மேலும் துயர்கொண்டு நீர்மைபெற்றது. அவன் கால்களை இடக்கையால் தொட்டாள். மெல்ல வருடிச்சென்று கால்விரல்களைப் பற்றி இழுத்தபடி “நான் அந்நாட்களிலேயே வாழ்ந்தேன்” என்றாள். அவன் “என்ன செய்வது? பெரும்பாலும் இறந்தகாலத்திலேயே வாழும்படி அமைக்கப்பட்டோம்” என்றான்.

அவள் தலைகுனிந்து மென்குரலில் “மீண்டு வந்தீர்களே, அதுவே நிறைவெனக்கு” என்றாள். அவன் சற்றே புரண்டு அவள் கையைப்பற்றி “முதற்கணம் உன்னை பார்த்தபோது உன் முதுமை என்னை துணுக்குற வைத்தது. ஏனெனில் என் உள்ளத்தில் நீ வளரவே இல்லை. என்னை மணந்து வந்த அதே கோலத்திலேயே உன்னை உளம் செதுக்கியிருக்கிறேன். ஆனால் சில கணங்களுக்குள்ளேயே இப்போது உன் முதுமையை விரும்புகிறேன் என்று தோன்றுகிறது” என்றான். அவள் கைகளில் புடைத்திருந்த நீல நரம்புகளை அழுத்தியபடி “முதுமை உன் தசைகளை குழைய வைத்திருக்கிறது. பிறிதொரு கனிவு உன் முகத்தில் குடியேறியிருக்கிறது. என் உள்ளத்திலும் உடலிலும் எழுந்துள்ள முதுமைக்கு அதுவே துணையென அமைய முடியும்” என்றான்.

அவள் புன்னகைத்து “இப்படி சொல்லி ஆற்றிக்கொள்கிறீர்களா?” என்றாள். “இல்லை, மெய்யாகவே உன் அகவைமுதிர்வை அழகின் உருமாற்றம் என்றே உணர்கிறேன்” என்று அவன் சொன்னான். “முன்பு உன் கன்னங்கள் இத்தனை கொழுவியதாக இருக்கவில்லை. உன் கழுத்திலும் தோள்களிலும் இந்த அழகிய வரிகள் விழுந்திருக்கவும் இல்லை.” அவள் குனிந்து தன் தோள்களை பார்க்க அவன் கைகளால் அவள் கழுத்தை தொட்டான். “மிக நுண்ணிய ஆரங்களை நீ சூடியிருப்பதுபோல் இந்தத் தோல்வரிகள்” என்றான். “இதை கவிஞர் தாமரை நூலிழைகள் என்கிறார்கள்.”

அவள் அவன் விழிகளுக்குள் நோக்கி “நீங்கள் சொன்ன பின்னர் அதை நானும் அழகென்று உணர்கிறேன்” என்றாள். மிக மெல்ல ஒரு இழுப்பு அவன் கையில் எழுந்தது. அதை காத்திருந்தவள்போல் அவன் அருகே படுத்தாள். அவன் கைகள் அவளை அணைத்து உடலுடன் சேர்த்துக்கொண்டன. “முற்றிலும் தனிமை. பதினான்கு ஆண்டுகள்” என்றான். அவள் மிகக் கூரிய நச்சு முள்ளொன்றை தன்னுள் உணர்ந்து “ஏன்? அவள் உடன் இருந்தாளே?” என்றாள். “ஆம், ஆனால் அவள் பேரரசி. நாங்கள் அவள் ஏவலர்” என்றான். அவள் மேலும் கருதி கணுக்கணுவென முன் சென்று “பேரரசியின் துணைவர் ஆகுகையில் பெருமிதம் அல்லவா எழவேண்டும்?” என்றாள். “ஆம், பெருமிதம் உண்டு. கூடவே விலக்கமும் உண்டு” என்றான்.

அவளை முத்தமிட்டான். அம்முத்தத்தினூடாக உடலணுக்கமும் ஆழ்ந்த அகவிலக்கமும் கொண்டு இருவரும் மூச்சிரைத்தனர். “என் குருதியில் பீதர்நிலம் உள்ளது. எங்கள் முகங்களில் சுருக்கங்கள் மிகுதி” என்றாள். “ஆம், நனைந்த மஞ்சள்பட்டுபோல” என அவன் அவள் கன்னங்களை வருடி முத்தமிட்டான். “நான் உன்னை நினைத்துக்கொண்டதெல்லாம் சோர்ந்து தனிமைகொள்ளும்போது மட்டுமே. ஆடைகளைந்து அமர்வதற்கான இடம் ஒன்று மானுடர் அனைவருக்கும் வேண்டும். எனக்கு அது உன் மஞ்சம்” என்றான்.

அவள் அச்சொற்களின் பொருளை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளவில்லை. “என்னை முற்றிலும் வெல்ல நான் ஒப்புக்கொள்ளும் ஒரு களம். நான் முழுதமையும் ஒரு பீடம்” என்று அவன் சொன்னான். ஒரு கணத்தில் அவன் சொன்னதனைத்தும் அவளுக்கு புரிய “என் தெய்வமே!” என்ற மெல்லிய முனகலுடன் கைகளாலும் கால்களாலும் அவனை அள்ளி தன் உடலுடன் அணைத்துக்கொண்டாள். வெறிகொண்டவள்போல அவன் முகத்திலும் தோள்களிலும் முத்தமிட்டாள். அவன் முகத்தை தன் முலைக்குவடுகளுக்குள் வைத்து இறுக்கிக்கொண்டாள். கேவி அழுபவன்போல் மெல்லிய முனகலொன்று அவனிடம் எழுவதை கேட்டாள்.