குருதிச்சாரல் - 19

பகுதி மூன்று : மலைச்சுனையின் ஓசை – 2

blஉபப்பிலாவ்யத்தின் சிறிய கோட்டையை அணுக அணுக விஜயை விந்தையானதோர் எக்களிப்பை அடைந்தாள். தன்னுள் எழுந்துகொண்டிருப்பது உவகை என்றுகூட அவள் முதலில் அறியவில்லை. “மிகச் சிறிய கோட்டை, அது கோட்டைதானா?” என்றாள். அபயை “கோட்டை என்பது ஒரு பொதுப்புரிதல்தான், அரசி. காவலர்கள்தான் மெய்யான கோட்டை” என்றாள். விஜயை “இது ஒரு வேலி… வெறுமனே மண்ணை அள்ளிவைத்து கட்டியிருக்கிறார்கள்” என்றாள். “இது விராடர்களின் வட எல்லைக் காவலரண் மட்டுமே… காலப்போக்கில் சிற்றூரென உருவாகியது.”

விஜயை “இங்கா அரசர்நிரையை அழைத்து தங்கச்செய்து அபிமன்யூவின் மணநிகழ்வை முடித்தனர்?” என்றாள். சிரித்தபடி “அரசர்கள் தங்க தவக்குடில்களை அமைத்தனர் போலும்” என்றபோதுதான் அபயையே அவள் உள்ளத்தை புரிந்துகொண்டாள். “ஆம், சகலபுரியில் இளவரசர்களுக்கு மணநிகழ்வு ஒருங்குசெய்தபோதுகூட நாம் மரப்பட்டை இல்லங்களைத்தான் மலைச்சாரலில் அமைத்தோம்” என்றாள். திரும்பிப்பார்த்த விஜயை அபயையின் விழிகளில் இருந்த நகைப்பைக் கண்டதுமே தன்னுள்ளத்தை தானே புரிந்துகொண்டாள். “மூத்தவர் ருக்மாங்கதர் இதை புரிந்துகொள்ளாமல் தந்தையிடம் பூசலிட்டார், அரசர்களை பாடிவீடுகளில் தங்கச்செய்வதாக. இதோ குருகுலத்து அரசர்கள் குடிலமைத்து தங்கவைத்திருக்கிறார்கள்” என்றாள் அபயை.

விஜயை கைகளை கட்டிக்கொண்டு தேர் கோட்டைக்குள் நுழைவதை நோக்கிக்கொண்டிருந்தாள். கோட்டைக்கு அப்பாலிருந்த சிறு முற்றத்தில் காவலர்களின் சிறிய குழு நின்றிருந்தது. அவர்களுக்குப் பின்னால் நூற்றுக்கணக்கான கைவிடுவிற்படைகள் நின்றிருந்தன. ஐந்தாள் உயரமான முதுமூங்கில்கள் எருமைத்தோல் நாணால் இழுத்துக்கட்டி அம்பு பூட்டப்பட்டு விம்மிக் காத்திருந்தன. அவை அமைக்கப்பட்டிருந்த கோணங்களை விஜயை நோக்குவதைக் கண்ட அபயை “சாலையை மட்டும் அம்புகள் குறி வைக்கவில்லை, அருகிருக்கும் குறுங்காட்டை முழுமையாகவே குறி வைத்துள்ளன” என்றாள். “ஆம்” என்றாள் விஜயை. “அதுதான் புரியவில்லை.”

அபயை “சாலையை கோட்டை மேலிருந்தே எதிர்கொள்ளமுடியும். குறுங்காட்டுக்குள் பதுங்கிவரும் எதிரி உயரமற்ற கோட்டை மேலிருந்து தெரியமாட்டான்” என்றாள். “வரும்வழியிலேயே பார்த்திருப்பீர்கள். குறுங்காடெங்கும் தைலமரங்களும் எண்ணைப்புல்லும் நட்டு வளர்க்கப்பட்டுள்ளன” என்றாள் அபயை. விஜயை “நான் நோக்கவில்லை” என்றாள். “இந்த அம்புகளில் அரக்குப் பந்தங்கள் அமைத்து கொளுத்தி ஏவினால் போதும், நகரைச் சூழ்ந்து ஒரு அனல் வளையம் உருவாகிவிடும்…” என்றாள் அபயை. விஜயை திகைத்து “ஆம்” என்றாள்.

“அரசி, இது சிறிய கோட்டை. மிக எளிதில் மகதமோ மாளவமோ கூர்ஜரமோ படைகொண்டுவந்து இதை கைப்பற்றிவிடமுடியும். ஏன் இதுவரை அவர்கள் அதை செய்யவில்லை?” என்றாள் அபயை. விஜயை பேசாமலிருந்தாள். “உள்ளிருப்பவர் இளைய பாண்டவர் அர்ஜுனர். வெல்லற்கரியவர்… மெய்யாகச் சொன்னால் இச்சிறுகோட்டை ஒரு பெரிய பொறி. இதில் விழாமலிருக்கும் அறிவு அரசர்களுக்கிருக்கிறது.” விஜயை பெருமூச்சுவிட்டாள். “இந்திரப்பிரஸ்தத்தால் பாண்டவர்கள் ஆற்றல்பெறவில்லை அரசி, அவர்களின் பெருமையும் அந்நகரால் அல்ல” என்றாள் அபயை.

விஜயை அச்சொற்களை கேளாதவளாக உபப்பிலாவ்யத்தின் சிறிய தெருக்களை நோக்கிக்கொண்டிருந்தாள். உயரமான தேர்த்தட்டிலிருந்தபோது இருபுறமும் இருந்த மாளிகைகளின் கூரைவிளிம்பே தெரிந்தது. ஈரடுக்கு மாளிகைகளின் உப்பரிகைகளில் இருந்த காவலர்கள் விழிதிருப்பி தேரின் கொடியை நோக்கினர். விஜயை பெருமூச்சுவிட்டாள். சகலபுரிக்கு வெளியே அவள் கண்ட முதல் பெருநகரம் காம்பில்யம். அதுவே அவளை திகைக்கச் செய்தது. அந்நகரின் கோட்டை அவளுக்குள் ஒரு கொடுங்கனவெனப் பதிந்திருந்தது. கலப்பைக்கொடி பறக்கும் தேரில் அவள் காம்பில்யத்திற்குள் நுழைந்தபோது நாற்புறமும் கட்டடங்கள் சினம்கொண்ட யானைகள்போல கரிய அலைகளாக எழுந்து சூழ்ந்துகொண்ட உணர்வையே அடைந்தாள். அருகே அமர்ந்திருந்த அபயை “காம்பில்யத்தைவிட இருமடங்கு பெரியது அஸ்தினபுரி, அரசி” என்றாள்.

முன்னரே அஸ்தினபுரியைப்பற்றி அவள் கேள்விப்பட்டிருந்தாள். கதைகளினூடாக அது அவளுக்குள் வளர்ந்து ஒரு மாயநகரியாகவே கனவுகளுக்குள் நிறைந்திருந்தது. அதன் கோபுரமுகடுகளில் மலைக்கழுகுகள் அமர்ந்திருக்கும் என்றும் ஆயிரம் கைவிடுபடைகளில் ஆயிரம் கந்தர்வர்கள் நிறுவப்பட்டு எதிரிகளுக்காக காத்திருக்கிறார்கள் என்றும் அந்நகரில் காலையிலும் மாலையிலும் முன்னோர் இளங்காற்றுகளாக வீசி நகரை தூய்மைப்படுத்துகிறார்கள் என்றும் விறலியர் பாடுகையில் அதை மேலும் பெரிய உளக்காட்சியாகவே அவள் வளர்த்துக்கொண்டாள்.

அவளை அஸ்தினபுரியின் இளவரசர் சகதேவருக்கு மணம்பேசி முடித்திருக்கும் செய்தியை அபயைதான் வந்து சொன்னாள். “ஆனால் பாண்டவக்குடியை இன்று ஆள்பவர் பேரரசி திரௌபதி. இளையவரின் அரசி என்று உங்களுக்கு கொடியும் பல்லக்கும் உண்டு. மலைமகளுக்கு அதுவே பெரிய பேறு” என்றாள். அவள் அருகிருந்த கலத்தை எடுத்து அபயைமேல் வீசி “கொன்றுவிடுவேன்… கொன்றுவிடுவேன்” என்று கூவினாள். அபயை அதை எளிதில் தவிர்த்து “இந்தச் சினமே நீங்கள் ஒருநாளில் மணமகளாகிவிடுவீர்கள் என்பதற்கான சான்று, இளவரசி. மணம்பேசப்படுவதை நான்கு நாட்களாகவே அறிந்திருப்பீர்கள். அஸ்தினபுரி மீது கொண்ட விழைவால் அந்த மணத்தை ஏற்றுக்கொண்டுவிட்டீர்கள். அதன்பொருட்டு நாணமும் கொள்கிறீர்கள். ஆகவே சினம் கொள்கிறீர்கள்” என்றாள்.

விஜயை வாளை உருவியபடி “கொன்றுவிடுவேன்… இழிமகளே, என்னை சிறுமைசெய்கிறாயா?” என்றாள். “கன்னியருக்கு காதல் சங்குவளைபோல. அணிவதெல்லாம் உடைந்தே அகலும், புதியதற்கு இடமளிக்கும்” என்றாள் அபயை. “போ! போய்விடு!” என்று விஜயை கூவினாள். பின் உடைந்து அழுதபடி மஞ்சத்தில் விழுந்தாள். பகலெல்லாம் அழுதுகொண்டிருந்தாள். அன்னை மாலையில் அவள் அறைக்கு வந்தாள். “ஏன் விழிநீர் விடுகிறாய், என் செல்லமே?” என்று அவள் கூந்தலை வருடினாள். “நன்றாக அழுதுவிடு… அழட்டும், அழுகையினூடாகவே பெண்கள் தங்களைத்தாங்களே கடக்கிறார்கள் என்று நான்தான் சொன்னேன்.” அவள் அன்னையின் மடியில் தலைவைத்து கதறி அழுதாள்.

“இதோ பார், நாம் அரசியர். நீ அடுமனைப்பெண்டாகவோ வயலில் உழலும் வேளாட்டியாகவோ பிறக்கவில்லை. நீ அடைந்த அரசகேளிக்கை அனைத்தும் இப்பிறப்பால் உனக்கு கிடைத்தவையே. அவை வெறுமனே அளிக்கப்படுவதில்லை. ஆணென்றால் களம்நின்று குலம்காக்கவேண்டுமென்ற கடமை உள்ளது. பெண்ணென்றால் குடிபெருக்கவேண்டும் என்பது மூதாதையரின் ஆணை. நாம் கருவறைகளன்றி பிறிதல்ல. எது மத்ரத்திற்கு உகந்ததோ அதைச் செய்வதே உன் கடமை. இன்று பாண்டவகுடியுடனான உறவே நமக்கு உகந்தது என எவருமறிவர். பால்ஹிகம் சிற்றரசு. அவனோ அதற்கு அரசன்கூட அல்ல. அவ்வெண்ணத்தை ஒழிக! அது நமக்கு நன்றல்ல. பாண்டவர்களின் உறவு நம்மை இங்கே உரம்கொண்டவர்களாக நிறுத்தும்.”

“உன் உளத்துயரை நான் அறிவேன். மெய்யே, இது ஓர் அரசியல் பலிபீடம். நீ மட்டுமல்ல, பெண்களெல்லாம் அதில் பலிவிலங்குகளே. ஆனால் அரசியர் பிறந்ததே அவ்வாறு தன்னை பலிகொடுக்கவே” என்றாள் அன்னை. அவள் மீண்டும் கதறி அழுதாள். ஆனால் மிக எளிதாக அந்த பாவனையினூடாக கடந்து மறுபக்கம் சென்றாள். தன்னை பலிமகள் என்றும் நாட்டுக்காக தற்கொடை கொடுத்துக்கொண்டவள் என்றும் எண்ணி எண்ணி பின் அதை நம்பினாள். மணநாள் நெருங்குகையில் எண்ணி எண்ணி கன்னம் சிவப்பவளாக ஆகிவிட்டிருந்தாள்.

எப்போதுமே அவள் சடங்குகளை சலிப்பாகவே பார்த்துவந்திருந்தாள். அரசவையில் முகத்தின்மேல் தலையாடையை இழுத்துவிட்டுக்கொண்டு அரைத்துயிலில் அமர்ந்திருப்பாள். ஆனால் திருமணத்தை ஒட்டிய ஒவ்வொரு சடங்கும் அவளை உளம்கிளரச்செய்து கனவுமயக்கில் நிறுத்தி வைத்தது. மங்கல இசையும் நறுமணங்களும் வண்ணங்களும் இன்சுவையுமாக புலன்களனைத்தும் நிறைந்து வழிந்தன. எண்ணங்கள் நேற்றுநாளை இல்லாமல் அன்றில் நின்று நுரைத்தன. அணிகொள்ளல்கள், அவையமர்வுகள், ஆலயம்தொழல்கள், கலைநிகழ்வுகள், வாழ்த்துக்கள், வணக்கங்கள். சடங்குகள் என்பவை தான்கொண்ட மகிழ்வை அடையாளநிகழ்வுகளாக ஆக்கி மூதாதையர் வகுத்துவைத்தவை என அவள் உணர்ந்தாள். அவற்றை மீண்டும் மகிழ்வுகளாக ஆக்கிக்கொள்பவர்கள் மானுடத்தினூடாக ஓடிச்செல்லும் கொண்டாட்டமொன்றின் துளியென்றாகிறார்கள்.

முதல்முறை அவள் சகதேவனை காம்பில்யத்திலிருந்து வந்திருந்த மணக்குழுவின் நடுவே கண்டபோது உள்ளம் நுரைத்தெழ விழிதாழ்த்திக்கொண்டாள். “இருவர், ஒருவர் கரியவர். இன்னொருவர் வெண்மை. வெண்ணிறத்தார் உங்களுக்கு, அரசி” என்றாள் அபயை. “அழகர்… பாண்டவர்களிலேயே அவர் மாறா இளமைகொண்டவர் என்கிறார்கள்.” ஒருகணம் மட்டுமே நோக்கியமையாலேயே அவ்வுருவம் விழிகளுக்குள் பருப்பொருளெனப் படிந்து எண்ணப்பெருக்கு அலைத்தலைத்து கழுவிச்சென்றாலும் அழியாது அங்கிருந்தது. அவனை அகவிழிகளால் நோக்கியபடி புறவிழிகள் மலைத்திருக்க மஞ்சத்தில் கிடந்தாள். சித்தமழிந்து துயில்கொள்கையில் அவன் மேலும் தெளிவுருக்கொண்டு புன்னகையும் விழியொளியும் சூடி அருகணைந்தான். அவன் உடலின் வெம்மையையும் மணத்தையும் உணரமுடிந்தது. அவன் விரல்களின் மெல்லிய தொடுகையை அறிய இயன்றது. பின் அவன் உதடுகளின் ஊன்மணம்கொண்ட முத்தத்தையும் அவள் அடைந்தாள்.

பதினெட்டு நாள் மணநிகழ்வுகள் முடிந்த பின்னர் காம்பில்யத்திலிருந்து வந்த மகட்கோள் குழுவுடன் அவள் கிளம்பியபோது அன்னையர் அரண்மனை முற்றம் வரை வந்து தழுவி விழிநீர் உகுத்து அன்புச்சொல்லும் ஆற்றுப்படுத்தலும் உரைத்து வழியனுப்பினர். மூத்த அரசரும் தந்தையும் கோட்டைமுகப்பு வரை வந்து வாழ்த்தி சொல்லளித்தனர். மூத்தவர்கள் ருக்மாங்கதனும் ருக்மரதனும் நூற்றெட்டு வண்டிகளில் சீர்வரிசைகளுடன் உடன்வந்தனர். தேரின் பட்டுத்திரைகளை விலக்கி தொடர்ந்து வந்த அந்த வண்டிநிரைகளை நோக்கியபோது அவள் உளம்பெருகினாள். அருகிருந்த அபயையிடம் “இத்தனை சீர்வரிசை தேவையா? சகலபுரியின் கருவூலமே ஒழிந்து உடன்வருவது போலுள்ளது” என்றாள். “ஆம் அரசி, பெரும்பாலும் கருவூலம் நம்முடன் கிளம்பிவிட்டது” என்றாள் அபயை.

பின்னர் புன்னகைத்து “ஆனால் தாழ்வில்லை. இன்னும் ஓராண்டுக்குள் அதை ஈட்டிவிடமுடியும்” என்றாள் அபயை. விஜயை அவள் சொற்களிலிருந்த நஞ்சை உணர்ந்து “ஏன்?” என்றாள். “நேற்றே மூத்த அரசர் சுங்கநிலைகளின்மேல் மத்ரத்தின் கலப்பைக்கொடி ஏறுவதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார்” என்றாள். “என்னை வைத்து வணிகம் செய்கிறார்கள் என்கிறாயா?” என்றாள் விஜயை. “ஆம், என்ன ஐயம்?” என்றாள் அபயை. சினத்துடன் சொல்லெடுத்தபின் விஜயை வாய்நிறுத்திக்கொண்டாள். ஆனால் சற்றுநேரத்திலேயே உள்ளம் மீண்டும் திரும்பிக்கொண்டது. ஆம், என்னை வைத்து வணிகம் செய்கிறார்கள். என் மதிப்பு சகலபுரியைவிட, மத்ரத்தைவிட பெரியது. என் குடியே பெருங்குலமாகும். என் நகரின் கோல் பெருகும். நான் அவர்களுக்கு அருளிய திருமகள்.

அந்த மிதப்பை அபயை கலைக்கக்கூடும் என்று எண்ணி அதன்பின் காம்பில்யம் வருவதுவரை அவளிடம் ஒருசொல்லும் பேசவில்லை. “நாம் நாளை காலை காம்பில்யத்தை சென்றடைவோம், அரசி” என்றாள் அபயை. அவர்களின் தேர்நிரை மலைச்சரிவுப் பாதையில் இறங்கிக்கொண்டிருந்தது. முன்னால் சென்றுகொண்டிருந்த தேர்களில் மின்கதிர்கொடியும் கலப்பைக்கொடியும் பறந்துகொண்டிருந்தன. “ஆம், சொன்னார்கள்” என்றாள் விஜயை. “அஸ்தினபுரி கதைகளினூடாக நம் உள்ளத்தில் பேருருவம் கொண்டிருக்கும், ஆனால் நேரில் பார்க்கையில் நம் கற்பனைகளை வெல்லும் என்கிறார்கள்.” அப்போது அந்நகரமே தன் உடைமை என்னும் மாயஎண்ணத்தால் அவள் உளமெழப்பெற்றாள்.

“ஆம், ஹஸ்தியின் நகரம்! பிரதீபரின் நகரம்” என்றாள். அபயை “இன்று பாரதவர்ஷத்தில் அதைவிடப் பெரிய நகரம் துவாரகை மட்டுமே என்கிறார்கள்” என்றாள். அவள் நெஞ்சு கொப்பளிக்க “ஆம், ஆனால் துவாரகை என்ன இருந்தாலும் யாதவபுரி” என்றாள். அபயை “ஆனால் அதை அனைவரும் அஞ்சுகிறார்கள். இங்குள்ள அத்தனை அரசுசூழ்தல்களும் துவாரகைக்கு எதிராகவே மையம்கொள்கின்றன. அறிந்திருப்பீர்கள் அரசி, நேற்றுமுன்நாள் அஸ்தினபுரியின் இளவரசி துச்சளையை சிந்துவின் அரசர் ஜயத்ரதருக்கு மணமளிக்க முடிவெடுத்திருக்கிறார்கள்” என்றாள். அவள் கயிற்றைப்பற்றி ஒளிவிடும் நீர்ப்பரப்பை நோக்கியபடி “ஓ” என்றாள்.

“சோமதத்தரின் மைந்தர் பூரிசிரவஸும் அங்குதான் இருக்கிறார்” என்றாள் அபயை. அவள் தலையசைத்தாள். உள்ளம் விம்மி அவளுக்கு விழிநீர் சுரந்தது. எண்ணிய அனைத்தும் என ஒரு சொல் எழுந்தது அகத்தில். ஆம், எண்ணிய அனைத்தும். எண்ணிய அனைத்தும். ஆனால் எண்ணிய அனைத்தும் அவ்வாறு எளிதில் நிகழுமா என்ன? எண்ணிய அனைத்தும் நிகழும் ஒருவர் உண்டா? எண்ணிய அனைத்தும் நிகழ்வது நன்றா? உளம்விலக்கி காம்பில்யத்தின் பெருஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த தேர்களை நோக்கினாள். சாலையின் மேடுபள்ளங்களில் ஏறியமைந்து அவை மெல்லிய கூட்டுநடனம் ஒன்றிலிருந்தன. கொடிகள் அவற்றை வானில் தூக்கமுயலும் பறவைகள்போல.

காம்பில்யத்தின் கோட்டை அணுகிவருவதைக் கண்டதும் அவள் ஒரு திடுக்கிடலை உணர்ந்தாள். முதலில் அது ஒரு மலைச்சுவர் என்றே எண்ணினாள். அதன் நடுவே கணவாய் ஒன்றுள்ளதுபோலும் என எண்ணி விழிவிலக்கியபோது அதன்மேல் காவல்மாடங்கள் தெரிந்தன. அது கோட்டை என்று தெரிந்ததும் அபயையின் கைகளை பற்றிக்கொண்டாள். “இத்தனை பெரிய கோட்டை!” என்று நீண்டநேரத்திற்குப்பின் சொன்னாள். “ஆம், அத்தனை பெரிய எதிரிகள்” என்றாள் அபயை. ஒருகணம் கழித்தே அச்சொல்லின் பொருள் அவளுக்குள் நுழைந்தது. திடுக்கிட்டவளாக அபயையின் தோளை பற்றிக்கொண்டாள். “ஆம்” என்றாள்.

அதன்பின் அவளால் அச்சமின்றி அக்கோட்டையை பார்க்கமுடியவில்லை. கோட்டைகளும் பெருநகர்களும் அவளை பதற்றப்படுத்தின. காம்பில்யத்திலிருந்து மறுநாளே துவாரகைக்குச் சென்றபோது அப்பெருநகரின் மாளிகைகள் அரக்கர்படைகள் என வந்து சூழ்ந்துகொண்டதாகவே உணர்ந்தாள். தொலைவிலேயே அக்கோட்டையை பார்ப்பதைத் தவிர்க்க கைகளால் கண்களை மூடிக்கொண்டாள். புற்றுவளர்வதுபோல நகரங்கள் வளர்கின்றன என்று அவளுக்குத் தோன்றியது. சிறுசிதல்பெருக்கென மக்கள் பிறந்திறந்து பிறந்திறந்து அதை அவர்கள் எழுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். இந்திரப்பிரஸ்தம் அவளுக்கு நகரென்றே தோன்றவில்லை. அது மலைமுடிகளின் சூழ்கை. மானுடரை ஒருபொருட்டெனக் கருதாதவை மலைகள்.

blஉபப்பிலாவ்யத்தின் மக்களை விஜயை திரைச்சீலையினூடாக நோக்கிக்கொண்டிருந்தாள். அவர்கள் அவள் தேரிலிருந்த கலப்பைக்கொடியை பார்த்துவிட்டிருந்தார்கள். உணர்வில்லாத விழிகளுடன் அதை நோக்கி நின்றனர். அவள் காவலரின் விழிகளை நோக்கினாள். அவற்றிலும் அதே உணர்வின்மை. திரையை மூடிவிட்டு “மத்ரம் அஸ்தினபுரியுடன் சேர்ந்துகொண்டதை இவர்கள் அறிவார்களா?” என்றாள். “உறுதியாக அறிந்திருப்பார்கள், அரசி. பொதுவாக இத்தகைய தருணங்களில் மக்கள் அரசுச்செய்திகளை அறிய மிகுந்த ஆவல்கொண்டிருப்பார்கள்.”

விஜயை மீண்டும் வெளியே பார்த்துவிட்டு “ஆனால் அவர்கள் அரசுச்செய்திகளை எப்படி அறியமுடியும்?” என்றாள். அபயை “ஒருவராக அவர்கள் அறிவது சிறிதே. ஆனால் ஒரு நகரென்பது பல்லாயிரம்பேர் சேர்ந்த பேருள்ளம். அதற்கு செவியும் கண்ணும் நாவும் பல்லாயிரம் மடங்கு. ஊசிவிழும் ஒலியையும் அது கேட்கும். விழியசைவில் எண்ணங்களை படித்தெடுக்கும்” என்றாள் அபயை. “அரசி, மக்களிடமிருந்து எதையும் மெய்யாகவே மறைக்கவியலாது. மறைப்பதற்கு வழி ஒன்றே, மக்கள் விரும்புவதொன்றை அவர்களுக்கு அளித்தல். அதைக்கொண்டு மெய்யை மறைத்தல். அவர்களே அதை பெருக்கிக்கொள்வார்கள்.”

“நீ அரசவைகளில் அமரவேண்டியவள்” என்றாள் விஜயை. “நினைவறிந்தநாள் முதலே நான் அரசவைகளில்தானே இருக்கிறேன்? எந்தப் பக்கமும் நிற்காதவளென்பதனால் மேலும் கற்கிறேன்” என்றாள் அபயை. விஜயை “இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்னைப்பற்றி?” என்றாள். “அவர்களின் விழிகளை நோக்கவேண்டாம், அரசி. மேலெழுந்தவர்கள் முன் அவற்றை மறைக்கக் கற்றிருப்பார்கள். அவர்களின் உடல்களை நோக்குக! அவை கட்டற்றவை…” என்றாள் அபயை. “விழிகளை மறைக்கும்தோறும் உடல்கள் திமிறிக்கொண்டு பேசத்தொடங்குகின்றன.”

அதைத்தான் மத்ரத்திலும் அபயை சொன்னாள் என்பதை விஜயை நினைவுகூர்ந்தாள். ஆனால் அவள் அதை தவிர்த்தாள். “மக்கள் ஏற்கபோவதில்லை. மூத்தவர்களை அஞ்சி உடனே எதிர்வினை எழாமலிருக்கலாம். அவைகூடுகையில் குரல்கள் எழும், ஐயமில்லை” என்றாள். “இது பாண்டவர்களின் குருதி என தங்களை எண்ணிக்கொள்பவர்களின் மண்.” அபயை “நோக்குக… உடல்களில் வெளிப்படுவதென்ன என்று மட்டும் நோக்குக!” என்றாள். செய்தி வந்த அன்று பகலெல்லாம் மஞ்சத்தில் சோர்ந்து கிடந்துவிட்டு மாலை எழுந்து கொற்றவை ஆலயத்திற்கு திறந்த பல்லக்கில் செல்கையில் இருபுறமும் ஒழுகிய நகர்மக்களின் முகங்களை நோக்கிக்கொண்டிருந்தாள். ஒவ்வொரு கண்களும் மாறிவிட்டிருந்தன. முற்றிலும் புதிய சிரிப்புகள் முகங்களில் ஒளிவிட்டன.

அவற்றிலிருந்த மாறுபாட்டை முதலில் உணர்ந்தாள். அது என்ன என்று தொட்டறிந்து சென்று அது ஓர் எக்களிப்பென்று புரிந்துகொண்டாள். அது எதன் பொருட்டென்று துழாவிய உள்ளம் சென்று எதிலோ முட்டி அஞ்சி திரும்பிவந்தது. அருகிருந்த அபயையின் கைகளைப்பற்றி “ஆமடி, இந்நகர் மக்கள் மகிழ்கிறார்கள். அஸ்தினபுரியுடனான உறவை அவர்கள் கொண்டாடுகிறார்கள்” என்றாள்.

“அது ஏன் என்று எண்ணுகிறீர்கள்?” என்று அபயை கேட்டாள். “நீ சொல்!” என்றாள். “தங்கள் எண்ணத்தை சொல்லுங்கள், உடன் வந்து இணைந்து கொள்கிறேன்” என்று அபயை சொல்லி சிரித்தாள். “நினைவறிந்த நாள் முதலே இவர்கள் பாண்டவர்களை தங்களவர் என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே அது பழகிய எண்ணம். அஸ்தினபுரியுடன் சேர்ந்துகொள்வதென்பது புதியது. ஆகவே உளக்கிளர்ச்சி அளிப்பது. மக்கள் உளக்கிளர்ச்சி அளிக்கும் எதையும் சென்று தழுவிக்கொள்கிறார்கள். அது ஆலகாலமாகவோ எரியாகவோ இருப்பினும்.”

“மெய்தான்” என்று நகைத்த அபயை “மேலும் ஒன்றுள்ளது. இவர்கள் தங்கள் அன்பை பாண்டவர்களுக்கு அளித்துக்கொண்டே இருக்கிறார்கள். அன்பை அளிக்கும் ஒவ்வொருவரும் மிக அரிதான ஒன்றை தங்களிடம் இருந்து அளிக்கிறோம் என்று எண்ணம் கொண்டிருப்பார்கள். அவ்வுள்ளத்தின் ஆழத்தில் பிறிதொரு மூலை அதற்கு நிகரான ஒன்றை எதிர்பார்த்துக்கொண்டே இருக்கும். அவ்வன்பு அவர்களுக்கு மிக மிக அரிதானதென்பதனால் அவர்கள் எதிர்பார்ப்பது அதைவிட மிக அரிதான ஒன்றையே. ஆகவே அன்பை அளிக்கும் எவரும் அதற்கு அவர்கள் வைக்கும் மிகச் சிறிய விலையைக்கூட திரும்பப் பெறுவதில்லை” என்றாள்.

“அன்புகாட்டுபவர்கள் சிறுமைபடுத்தப்பட்டதாக ஒரு தருணத்தில் உணராமல் இருக்க வாய்ப்பேயில்லை” என்றாள் அபயை. “அரசி, அன்பு திரிந்தே வெறுப்பாகிறது. இப்புவியில் இதுவரை பேரழிவுகளை உருவாக்கியது அன்பே. கடல் எனக் குருதி கோரி பீடத்தில் அமர்ந்திருக்கும் அப்பெருந்தெய்வம் அன்பென பிறிதொரு பெயரையும் கொண்டது.” “இப்படி எதை வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டே போகலாம்” என்று சொல்லி விஜயை தலைதிருப்பினாள்.

முழந்தாளிட்டு அவள் அருகே வந்த அபயை “எண்ணி நோக்குக, அரசி! இந்த மக்களில் எழுந்த சொற்களை நான் சொல்கிறேன். எங்களை எளிதென்று எண்ணினாயல்லவா? எங்கள் அன்பு காற்றென நீரென வெறுமனே கிடைப்பதென்பது உன் கருத்தல்லவா? இப்போது உணர்க, அது அரிது. உன் தகுதியால் அல்ல, நம் ஊழினாலும் அல்ல, என் கனிவால் அது உனக்கு அளிக்கப்பட்டது. அதை அடைந்தபோது நீ வணங்கவில்லை. இன்று அதை தவிர்க்கையில் உணர்ந்து உணர்ந்து நீ தவிப்பாய். இறங்கி வருவாய், மன்றாடி விழிநீர் சிந்துவாய், ஏமாற்றம் கொண்டு துயில் நீப்பாய். அதுவே என் அன்புக்கு நீ அளிக்கும் மெய்யான எதிர்வினை. அது உச்சம்கொண்டு நீ என்மேல் கொலை வஞ்சம் கொள்வாய் எனில் என் அன்பு முற்றுணரப்பட்டதென்றே நான் பொருள்கொள்வேன். அதுதான் அவர்களின் உள்ளம், ஐயமே வேண்டாம்” என்றாள்.

இருண்ட திரைகளை கிழித்துச்செல்கையில் அபயை புல்லினூடாக பதுங்கிச்செல்லும் சிறுத்தையென்றாவாள். அவள் காலடிகள் ஓசையற்றவையாகும். விழிகள் சுடர்விடும். அவள் குரல் தாழ்ந்து தாழ்ந்து விஜயைக்குள் இருந்தே எழுவதைப்போல் ஒலித்தது. “அரசி, மானுட உள்ளங்கள் அனைத்தும் ஒன்றே. வேறுபாடுகள் மிகச் சிறியவை. மானுடர் திரளென ஆகுகையில் அனைவருள்ளும் திரளும் பொதுவான ஒன்றே பருவுருக்கொண்டெழுகிறது” என்றாள் அபயை. “ஆம்” என்று விஜயை பெருமூச்சுவிட்டாள்.

உபப்பிலாவ்யத்தின் ஒவ்வொரு கட்டடமும் அவளை அமைதியடையச் செய்தது. அரண்மனைக்குச் சென்று சேர்வதற்குள்ளாகவே முகப்பில் அவளை வரவேற்க தேவிகையும் சேடியரும் வந்திருந்தார்கள். தேர் சிறிய அரண்மனை முற்றத்தைச் சென்றடைந்தபோது உபப்பிலாவ்யம் அவளுக்குள் சகலபுரியாகவே உருமாறிவிட்டிருந்தது. தேரிலிருந்து இறங்கிய அவளை அணுகிய தேவிகை “வருக, மத்ரநாட்டரசி… நல்வரவாகுக!” என்றாள். “உன்னை முதலில் சந்தித்தது நிறைவளிக்கிறது” என்றாள் விஜயை.

உபப்பிலாவ்யத்தின் சேடிகள் அனைவரும் விராடபுரியினர் என்பதை விஜயை கண்டாள். அவர்களின் விழிகள் அவளை தொட்டுச்சென்றபோது ஓர் ஒவ்வாமையை உணர்ந்தாள். அரண்மனைக்குள் நுழைகையிலேயே அந்நகர் அளித்த அனைத்து ஆறுதல்களும் அகன்றன. அக்கணமே அங்கிருந்தே சகலபுரிக்கு திரும்பிவிடவேண்டும் என்ற விழைவை அடைந்தாள். அது ஏன் என எண்ணியபடியே சென்றாள். தேவிகை “பேரரசியும் அரசியும் மைய அறையில் உள்ளனர். நாம் நேராக அங்கே செல்வோம்” என்றாள். அப்போது அவள் தன் உணர்வுகளின் ஊற்றை அடையாளம் கண்டுகொண்டாள்.

காம்பில்யத்திற்கு சீர்வரிசை நிரையுடன் சென்று அரண்மனை முகப்பில் இறங்கியபோது அவளை எதிர்கொள்ள குந்தியும் திரௌபதியும் வந்திருந்தனர். மங்கல இசை சூழ, எழு மங்கலத்தாலங்களேந்தி வந்து அணிச்சேடியர் குரவையிட்டு வாழ்த்தினர். வைதிகர் கங்கை நீர்தெளித்து வேதமோதி நலம் வழுத்தினர். குரவையொலிகள் சூழ அருகணைந்த குந்தியின் கால்களைத் தொட்டு அவள் வணங்கினாள். அவள் நெற்றியில் கைவைத்து “நன்மங்கலங்கள் கொள்க! நீடு வாழ்க! கொடிவழி பெருகுக!” என வாழ்த்திய குந்தி அவளை தோள்தொட்டு தூக்கி அணைத்தபடி திரௌபதியிடம் “பீதர்நாட்டுப் பெண்டிரைப் போலிருக்கிறாள் அல்லவா?” என்றாள். திரௌபதி புன்னகை புரிந்தாள்.