கிராதம் - 63

[ 3 ]

திருவிடத்தின் காடுகள் மாறா இருள் நிறைந்தவை. மயன் அமைத்த அசுரர் மாளிகையின் பெருந்தூண்களென எழுந்த அடிமரங்களின் மேல் சினந்தெழுந்த கொம்புகள் எனத் திமிறிநின்ற கிளைகள்சூடிய பச்சை இலைத்தழைப்பு பிளவிடாக் கூரைவெளியென மூடியிருக்க  நிழல்வரைவாகவும் விழியொளியாகவும் மூச்சொலியாகவும் காலரவமாகவுமே மான்களும் மிளாக்களும் காட்டெருதுகளும் அங்கே அறியப்படலாயின. செம்புக்கலம் சிலம்பும் ஒலியாக வால்துடிக்கும் அணில்களும்  சிறுமுழவு மீட்டும் ஒலியாக குவிந்து துள்ளும்  குழிமுயல்களும்  இரும்புரசும் ஒலியாக காட்டு ஆடுகளும் இருள்மடிப்புகளுக்கு அப்பால் இருப்புணர்த்தின.

முதலைத் தோலென்றும் யானைக் காலென்றும் ஆமை ஓடென்றும் தோற்றம்கொண்ட செதில்செறிந்த அடிமரங்களின் வேர்க்கிளைகள் உருகிவழிந்து மண்ணிலூன்றிய கொம்பரக்கின் விழுதுகளெனப் பரவிய மண்ணில் சிற்றிலைப்புற்களும் பச்சிலைப்பூசணங்களும் பரவி மூடியிருந்தன. விழுந்து மண்ணில் பாதி உடல்புதைந்த தொல்மரங்களின் மேல் எழுந்த வெண்ணிறக் காளான் குடைகள் அப்பச்சையலை எழுப்பிய நுரை எனத் தெரிந்தன.

கூரிலை பசலைக்கொடிகளும் ஒட்டிப்பற்றி மேலேறும் இத்திள்களும்  மட்டுமே அங்கு கை தொடும் இலைகளெனத் தெரிந்தன. இலைநுனிகள் அனைத்திலும் தளிர்ப்பச்சை உடல்கொண்ட சிறுதவளைகள் விழித்து அமர்ந்திருந்தன. காலடியோசையில் அவை தாவி எழுந்து இலைமாறி அமர்ந்து ஆடின. உடல்மேல் பட்ட சிறு தவளை நீர்த்துளியென்றே நடுக்கம் தோன்றச்செய்தது. காட்டுக்குள் மென்புகையென நீராவி நிறைந்திருந்தது. அடியிலைகளில் அது பனித்து நுனிக்கூம்புகளில் துளித்துச் சொட்டியது. சொட்டுமொலியில் காடு படிகமாலை உருட்டி ஊழ்கநுண்சொல் உரைத்து அமைந்திருப்பதெனத் தோன்றியது. துயிலும் மாடுகளின் காதுகள் போல்  கவிழ்ந்தும் இளையோர் கைவிரித்ததுபோல் விரிந்தும் சூழ்ந்திருந்தன இலைகள்.

அவற்றுக்கிடையே சிறு கால்கள் வைத்து  வாலை அசைத்து உடுக்குத்தோலை கையால் மீட்டும் ஒலியுடன் குழறியபடி செம்போத்துகள் ஊடுருவி ஓடி அலைந்தன. நுரைக்கொழுந்தென வால் சிலிர்த்த கீரிகள் தாவிச் சென்றன. மெல்ல இழுபட்டு வளைவால் ஒளியெழுப்பி நெளிவை விழியில் எஞ்சவிட்டுச் சென்றது நாகம். பெருமரங்கள் மேல் தொற்றி அமர்ந்து கொண்டை உலைத்து கொத்திய மரங்கொத்திகள் உளியோசை எழுப்பின. அது பல்லாயிரம் கற்தச்சர்களால் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் மாளிகையென அக்காட்டை எண்ணச்செய்தது.

அவ்வடர்காட்டிலும் கால்புழக்கம் பதித்த வழியொன்று சென்றிருப்பதை சற்று விழி தெளிந்த பின்னரே காணமுடிந்தது. அது பசுமைக்குள் வேறொரு பசுந்தடமென கண்ணறிகிறதா கருத்துணர்கிறதா என்னும் மயல்கூட்டி தெரிந்தது. பின்னர் அவ்வழி சென்ற உடல்களையும் அவ்வுடல்களை நாயின் நாக்கு நுனிகளென ஈரக்குளிருடன் நக்கி அசைந்த இலைநுனிகளையும் காண முடிந்தது. மொழியிலும் சித்தத்திலும் எவரெவரோ சென்ற தடங்கள் என பைலன் நினைத்துக்கொண்டான். அவ்வெண்ணம் எழுந்ததுமே கண்முன் விரியும் காட்டை அழுத்திச்சுருக்கி ஒரு ஒப்புமை மட்டுமே என்றாக்க விழைவதுதான் எது என அவன் சித்தம் வியந்தது.

அடர்காட்டின் முகப்பிலேயே நீண்ட கழிகளை வெட்டி முனை கூரச்செய்து அவர்களுக்கு அளித்திருந்தான் சண்டன். கூர்கழியுடன் வைசம்பாயனன் முன்னால் செல்ல பைலனும் ஜைமினியும் சுமந்துவும் பின்னால் சென்றனர். மூங்கில் வளைத்து காட்டுக்கொடி கட்டி இறுக்கிய வில்லை வலக்கையில் ஏந்தி மூங்கில் கூர்கொண்ட அம்புகளை தோள் தூளிகளில் நிறைத்து திசைகள்தோறும் விழி செலுத்தி இலைச்செறிவுகளுக்குள்ளும் மரங்களின் மறைவுக்கு அப்பாலும் கூர்நோக்கியபடி சண்டன் நடந்தான்.

அவர்களின் காலடியோசை பெருகி காட்டின் பசுமைவெளிக்கு உள்ளே எதிரொலித்து ஒரு படை நகர்வென செவிமயக்கு அளித்தது. கையெட்டும் தொலைவுக்கு அப்பால் விழியும் எட்டாதொரு பயணத்தை பைலன் முன்னர் எண்ணியிருக்கவே இல்லை. “இத்தனை தழைக்கக்கூடும் காடு என்று இதற்கு முன்னால் அறிந்ததே இல்லை, சண்டரே” என்றான். “இமயக்காடுகளை கண்டிருக்கிறேன். அவையும் இத்தனை தழைத்து பசுமை மட்டுமே என்றானதில்லை.” மூச்சிரைக்க அவன் நின்றான். மூச்சென நீராவி எழுவதை கண்டான். கொதிகலம் இவ்வுடல். ஆனால் வெளியே உருகுகையில் உள்ளே குளிர்ந்திருக்கிறது இது.

சுமந்து “ஆம், பசுமையை நீலமென்றும் கருமையென்றும் ஏன் சொல்கிறார்கள் என்று இன்றுதான் அறிந்தேன். இதுவே மலைநின்ற மாலின் வண்ணம்” என்றான். ஜைமினி “குளிர்நிறைந்த இமயக்காடு அஞ்சிய எருதின் உடலென சிலிர்த்திருக்கிறது. வறண்ட தண்டகாரண்யம் முட்பன்றியென சினந்திருக்கிறது. இக்காட்டின் ஒவ்வொரு இலையும் இளமைந்தர் கைகளைப்போல்  தொட்டு அழைக்கின்றன. கிளைமுனைகள் அன்னையர் வாழ்த்து என தலைதொட்டுத் தழுவுகின்றன” என்றான்.

சண்டன் “தென்னகமே பெருங்காடுகளின் நிலம். இங்கு ஆண்டுக்கு மூன்று மழைக்காலம். இது வாயுவும் வருணனும் புரக்கும் அரசு. இதோ, அடிமரமென பெருத்து பசும்பெருக்கென இலை சூடி நிற்கும் இவை அனைத்தும் தென்கடலில் காற்று மொண்டு வந்த மழைநீரே” என்றான். “பாரதவர்ஷத்தை வேள்வியில் எழுந்த அனல் என்று உரைப்பதுண்டு நூலோர். அதன் கொழுந்து இமயம் என்றால் கரித்தழலே திருவிடம். பாரதம் அறத்தின் குளிர்ச்சுனை என்பர் கவிஞர். அதன் வெள்ளியலைகளே இமயம்,  குளிர்ந்திருண்ட ஆழமே திருவிடம்.”

“கரியதாகையால் இக்காடு காளிகவனம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள மக்கள் காளிகர் எனப்படுகின்றனர். பாதாளத்தை ஆளும் வாசுகியின் வழிவந்த காளிகன் என்னும் கருநாகத்தின்  நச்சில் இருந்து முளைத்தெழுந்த காளர்கள் என்னும் தொல்பிரஜாபதிகள் நூற்றெண்மரால் உருவாக்கப்பட்ட குலம் என அவர்கள் தங்களைப்பற்றி சொல்கிறார்கள். தொல்நாகர்குலங்களுக்கும் இவர்களுக்கும் அணுக்கம் மிகுதி. இவர்களை கருநாகர்கள் என்றும் அப்பால் தாழ்வரைகளில் வாழ்பவர்களை பைநாகர்கள் என்றும் சொல்லும் மரபுண்டு.”

காட்டுப்பூனை ஒன்று மரக்கிளை ஒன்றின் தளிர்க்கொத்து சூடிய நுனி நோக்கி மெல்ல நடந்து வந்தது. அதன் மெல்லிய கால்வைப்புக்கேற்ப கிளை குரங்குவால்போல் வளைந்து தழைந்து இலைகள் குலுங்க அமைந்தது. இரு சுடர்மணிகளென விழிகொண்டு அவர்களை நோக்கி செவிமடித்து தலைதாழ்த்தி வால்தூக்கி அசைத்தது அனல்வரிகள் கொண்ட செம்பூனை. அனல்கொழுந்து  என அதன் நாக்கு நீண்டு வளைந்து செல்ல ஆழ்ந்த குரலில் அகவியபின்  அக்கிளையை உலைத்து மலர்பொழியத் தாவி எழுந்து பிறிதொரு கிளை பற்றி நிலைகொண்டு நீள்வாலைத் தூக்கியபடி நடந்து அப்பால் சென்று மறைந்தது.

“நிகரென எவருமில்லை என்றறிந்த நிமிர்வு” என்று ஜைமினி சொன்னான். “எளிய பூனை தன் எண்ணத்தால் புலியென்றாகி விட்டது.” பைலன் புன்னகைத்து  “முழவுநடனத்தின் தாளம்!” என்றான். அது குரங்குகளின் ஒலி. அலையலையென எழுந்தமைந்து கேட்டது அது. ஆனால் அவை இலைத்தழைப்புக்கு மேல் எங்கோ இருந்தன. அங்கு ஒற்றை ஓசைப்பரப்பென அலைகொண்டு நிறைந்திருந்த பறவைக்குரல்களுடன் அவையும் கலந்து ஒலித்தன.

“இக்காட்டின் முதன்மை விலங்கு யானையே” என்றான் சண்டன். “இக்காடு போலவே கரியது. இதன் ஆழம்போல  ஓசையற்றது. கிளை முறிபடும் ஒலியில் மட்டுமே இங்கு யானையை அறிய முடியும். பெருங்களிறுக்கூட்டம் ஒன்று மிக அருகே கடந்து செல்லும்போதுகூட அச்சிறு ஒலிகளை அன்றி நாம் எதையும் கேட்க முடியாது. நம்மீது கருணைகொண்ட வழிகாட்டிப்பறவைகள் கூறும் மொழி கேட்க பழகிக்கொண்டால் ஒழிய இக்காட்டை எவரும் கடக்க இயலாது.”

“தென்னகத்தின் இப்பெருங்காடு கீழே கடல் சூழ்ந்திருக்கும் நீள்நிலம் சேர்த்து வைத்திருக்கும் செல்வக்குவைகளுக்கான காவலரண் என்கிறார்கள். செல்வம் உறையுமிடமென்பதனால் இது திருவிடம். இங்கு அமைந்துள்ளன நூற்றெட்டு அன்னையர் குடிகொள்ளும் ஆற்றல் மையங்கள். அதற்கப்பால் மும்முடியர்கள் ஆளும் தமிழ்த்தொல்நிலம்.    மாறாக்கன்னிமை கொண்ட முதல் தெய்வம் அமர்ந்திருக்கும் முக்கடல் முனம்பு. இப்பாரதவர்ஷம் அக்கன்னியின் தவத்தால் ஆளப்படுகிறது” என்றான் சண்டன்.

“சிற்றாடை கட்டி சிறுமியென அங்கிருப்பவள் பாரதவர்ஷமெங்கும் தேவியென, அன்னையென நூறாயிரம் முகம்கொண்டு நிறைந்திருக்கிறாள். பிடாரி என்றும் பேரருள் கொண்டவள் என்றும் உருக் காட்டுகிறாள்” என்று அவன் தொடர்ந்தான். “காளிகம் என்னும் இக்காடும் கன்னி அன்னையின் ஆலயம் என்கின்றன கதைகள். இதன் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ளது கருங்குமரித் தெய்வம் கௌசிகையின் ஆலயம். அவளை குமரிமுனை அமர்ந்த கன்னியின் பிறிது வடிவம் என்று வழிபடுகிறார்கள் நூற்றெட்டு தொல்குலத்தோர். ஆண்டிற்கு மும்முறை சூழ்ந்துள்ள ஊர்களிலிருந்து காடுகளுக்குள் புகுந்து அவள் ஆலயத்தை வந்தடைந்து படையலும் பூசெய்கையும் முடித்து திரும்புகிறார்கள். இங்குள பாதைகள் அனைத்தும் அன்னை ஆலயத்திற்குச் செல்லும் மானுடரின் கால் பட்டுப் பிறந்தவையே.”

[ 4 ]

காளிகக்காட்டின் காலடிப்பாதையில் சண்டன் நான்கு பக்கமும் ஓடும் விழிகளுடன் காடெனச் சூழ்ந்துள்ள இலைகளையே செவிகளென எண்ணியவன்போல அன்னையின் கதையை சொல்லிக்கொண்டு வந்தான். இளையோர் நால்வரும் அவன் குரல் கேட்கும் பொருட்டு விரைவழிந்து சற்று உடல் நெருங்கிக்கொண்டார்கள். “மகாபைரவர் இயற்றிய பிரசண்ட புராணத்தின் கதை இது” என்று சண்டன் சொன்னான். “இமயமலையில் தாட்சாயணியாகப் பிறந்தவள் முதற்சிவத்தின் இடம் அமைந்த சிவை. அவளே தெற்கே திருவிடத்தின் காளிகப்பெருங்காட்டில் அழகிய குறமகளென வந்தாள். அது முதலன்னையும் தந்தையும் கொள்ளும் ஆடல். மானுடரில் விலங்குகளில் பறவைகளில் பூச்சிகளில் புழுக்களில் நுண்ணுயிர்களில் அவர்கள் காதல்கனிந்த இணைகளென பிறந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களின் கூடலாலும் ஊடலாலும் இயக்கப்படுகின்றன உயிர்க்குலங்கள்.”

காளிககுலமே காராமணி நிறம் கொண்டது. அவர்கள் நடுவே கருமணி என அவள் ஒளிகொண்டிருந்தாள். அவளை காளி என்று அழைத்தனர் அவள் குலத்தோர். காளுதல் என்றால் இருளொளி கொள்ளல் என்று அவர்களின் மொழிப்பொருள். அவள் கன்னங்களின் வளைவில் வானொளி மின்னும் என்று  சொல்கின்றன தொல்கதைகள். இருளில் இருக்கையில் அவள் உடல்கொண்ட ஒளியே அச்சூழலைத் துலக்கும் என்கின்றன. அவள் கூந்தலொளியை மேனிக்கருமையின் ஒளி மிஞ்சும் என்றும் மேனிக்கருமையை விழிக்கருமை அஞ்சச் செய்யும் என்றும் கூறுகின்றனர் கவிஞர். அவள் நகங்களும் கருவண்ணம் கொண்டவை. அவை நோக்கு கொண்ட விழிகள் என ஒளிர்பவை.

தன் குலம் ஈன்ற அருமுத்தை நிகரற்ற ஒருவனுக்கே அளிக்க வேண்டுமென்று நோற்றிருந்தார் அவள் தந்தையாகிய கராளர். காளிகர் குடியின் தலைக்குடி அவருடையது. ஆயிரத்தெட்டு பேரன்னையர் பிறந்து பேற்றுத்தவமியற்றி நிறைந்து தெய்வமாகி நோன்பிருக்கும் மகளிரின் படையல்கொண்டு விண்ணமர்ந்திருக்கும் குருதிக்கொடிவழி அவருடையது. அவ்வன்னையரின் அருள் கொண்டு எழுந்த மகளை வேட்டு தன் இல்லம் வருபவர் எவராக இருப்பினும் காளிக குலத்தின் முதற்தெய்வமாக அமர்ந்திருக்கும் ஏழுதலை நாகமாகிய காளிகனின் ஆலயத்திற்குள் சென்று அவன்  அருளாணை பெற்று வரவேண்டும் என்று அறிவித்திருந்தார்.

அவள் அழகை காட்டுப்பாடலில் கேட்டு உளம் மயங்கி அங்கு வந்த இளையோரில் பலர் அவ்வாணையைக் கேட்டதுமே அஞ்சி விலகினர். துணிந்தவர் அனைவரும் பெருநாகங்கள் செறிந்த புற்றுக்குவை அமைந்த அக்கோயிலுக்குள் சென்று  அக்கணமே சீறிச் சொடுக்கும் இமைநோக்குள்ள நச்சு தீண்டி இறந்தனர். அந்நச்சு தொட்டதுமே அவர்களின் உடல்கள் காளிகர்போல் கருமைகொண்டன. முகத்தில் களியுவகை என சிரிப்பு ஒன்று எழுந்து உறைந்தது. கூப்பிய கைகளுடன் விரைத்துக்கிடந்த அவர்களின் உடல்களை மூங்கில் தெப்பத்தில் கட்டி பயோஷ்னியின் பெருக்கில் இட்டு திசைசேர்த்தனர் அக்குலத்தோர். ஒவ்வொரு நாளும் பயோஷ்னியில் ஒழுகும் ஒரு உடல் அவளை ஊருக்கு அறிவித்துச் சென்றது.

பின் அவள் வெல்லமுடியாதவள் என்றே அறியப்படலானாள். உச்சிப்பாறை முகட்டில் கனிந்த தேன்கூடு அவள் என்றனர் அயலூர்களின் அங்காடிப்பாடகர். அரியதேதும் இறைவனுக்கே என்றனர் காடுகளின் முதுகுலத்தோர். அவளையீன்ற அன்னை  தன் மகள் கன்னியென்று நின்றுவிடுவாள் என்று அஞ்சி துயர்கொண்டு ஏங்கலானாள். “கன்னியென்று நின்றிருப்பதே அவள் ஊழென்றால் அவ்வண்ணமே ஆகுக!” என்று அவள் தந்தை சொன்னார். ஆனால் தன் ஆழுள்ளத்தில் அமைதியிழந்தமையால் அவளை நோக்குவதையே தவிர்த்தார். நாள்தோறும் ஒளிகொள்ளும் இவள் ஒருநாள் சுடரென்றாகி விண்புகுவாள் போலும் என்றனர் குடிப்பாணர். அவள் நோற்கும் கன்னிமை கனிந்து கணவன் வருவான் என்றார் குலப்பூசகர்.

அவளை மணப்பதற்கென்று அனல்வண்ணன் விந்தியஅடுக்கின் ஏழு மலையை படியென்றாக்கி இறங்கி வந்தான். செஞ்சடைச்சுருள் மகுடத்தில் அனலென காந்தள் மலர் சூடி, நெற்றியில் வெண்சாம்பல் பொடி பூசி, நாகக்குழை அணிந்து, வெள்விடை மேல் வந்தவன் காளிகக்குடி வாழும் ஊர் நடுவே மன்றுநின்று தன் உடுக்கை ஒலித்தான்.  எவெரெவெரெவரென ஒலித்தது குறுந்தோல் வட்டக் கொட்டு. குடில்களுக்குள் இருந்து எட்டிப்பார்த்தவர்கள் “யார் இவன்? எருக்குமாலை அணிந்திருக்கிறான். பன்றிப்பல் பிறை சூடிய செஞ்சடையன். முன்பு கண்டதில்லையே இவனை” என வியந்தனர். தன் மையக்குடில் விட்டு நாகபடம் செதுக்கிய மரக்கொந்தையும் கல்மணிமாலையும் அணிந்து வெளிவந்த கராளரை நோக்கி அவன்  முழங்கும் குரலில் “குறவர்க்கரசே, உன் மகளை மணம்கொள்ள வந்துள்ளேன்” என்று உரைத்தான்.

இளிவரல் புன்னகையுடன் கராளர் “மகட்கொடை மறுத்தல் எங்கள் அன்றாட நிகழ்வாகி ஐந்தாண்டுகள் ஆகின்றன, செஞ்சடையரே.  முடிகொண்ட மாமன்னர்கள் அனுப்பிய தூதர்கள் வந்து இங்கு நிரைகொண்டு நிற்காது ஒரு நாளும் கடந்து சென்றதில்லை. எங்கள் குலதெய்வமென அமர்ந்திருக்கும் கூர்நஞ்சின் தொடுகையேற்று இறந்தவர் நிரையோ அதனினும் பெரிது. மலைமகனெனத் தோன்றுகிறீர். விரைவிலா விடையேறி வந்திருக்கின்றீர். உமக்கும் அதுவே நெறி” என்றார்.

தன் முப்பிரி வேலை தோள்சாய்த்து இனிய புன்னகையுடன் எரிவண்ணன் சொன்னான் “நஞ்சு எனக்குப் புதியதல்ல. நான் உண்ணும் அமுதே அது. காட்டுக, உங்கள் குல தெய்வம் உறையும் புற்றுக்கோயிலை!” அவன் புன்னகையின் தெளிவு அவர்களை குழப்பியது. கராளர் ஒருமுறை தன் துணைவியை திரும்பி நோக்கியபின் “அவ்வண்ணமே ஆகுக!” என்றார். அவள் அவன் மேனிப்பொலிவை நோக்கி கைகூப்பி கண்ணீர்ப்படலம் ஒளிவிட நின்றிருந்தாள்.  “ஆனால் இது உன் தேர்வு என்றும் இவ்விறப்புப் பழிக்கு எங்கள் குடி பொறுப்பல்ல என்றும் நீரையோ நிலத்தையோ தொட்டு நீ ஆணையளிக்கவேண்டும்” என்றார் கராளர். அவன் நிலம் தொட்டு “ஆணை ஆணை ஆணை. இது என் முற்றுறுதி” என்றான்.

குறுமுழவு மீட்டி குலப்பூசகர் முன்னால் செல்ல குருத்தோலை முடிசூடி குடி மூத்தோர் எழுவர் அவனைச் சூழ்ந்து உடன்அழைத்துச் சென்றனர். விந்தை காண்பதற்காக இளையோரும் பெண்களுமென ஒரு பெருங்கூட்டம் அவர்களைத் தொடர்ந்து சென்றது. அவன் நடந்தபோது இடையணிந்திருந்த வெள்ளெலும்பு குடைந்து செய்த மணிமாலைகள் மெல்ல குலுங்கின. அவன் காலடிபட்ட புற்கள் வணங்கி எழுந்தன. நோக்க நோக்க கிராத வடிவம் நெஞ்சள்ளும் பேரழகுகொள்வதன் மாயமென்ன என்று பெண்டிர் அகத்தே வியந்தனர். பெருமூச்சுவிட்டபடி அவனையன்றி பிறிது நோக்காது உடன் சென்றனர்.

நூற்றெட்டு மூங்கில் கால் நாட்டி எழுப்பிய தன் குடிலின் தெற்குச் சாளரத்தினூடாக விழிகளில் இளநகையொளிர காளி அவன் செல்வதை நோக்கியிருந்தாள். இருபுறமும் நின்ற அவள் தோழிகள் ஜயையும் விஜயையும் ஜயந்தியும் அபராஜிதையும் அவள் நிலைமாற்றம் கண்டு  களியாடினர். “முத்து வயலை அறுவடை செய்யும் பாண்டியன் தோற்றுத் திரும்பியது உன் வாயில். நெல்மலை கொண்ட சோழன் இளிவரலுக்குள்ளானான். பெருங்களிறுகளை கால்களாகக் கொண்ட சேரன் மகள் மறுக்கப்பட்டான். நூறு காதுகளைக் கொண்ட திருவிட பெருமன்னன் இன்னமும் உன்னை நினைத்து ஏங்குகிறான். இவனோ நீற்றுப்பொடி பூசி புலித்தோல் ஆடையணிந்து வந்திருக்கும் மலைமகன். விழி கண்டால் பித்தனென்று தோன்றுகிறது” என்றாள் ஜயை.

“இவனுடன் சென்று நீ உச்சிமலைக் குகையில் பூதங்கள் ஏவல் செய்ய வாழப்போகிறாயா என்ன? அவனுக்கு புலித்தோல் எனில் உனக்கு மான்தோல். வெள்ளெலும்பில் அணிகள்.  உனக்கும் இருக்கும் முடிப்பிறைப் பல்லும் முப்பிரிவேலும். உன்  இதழ்மேல் இதழ் பதித்து அவன் முத்தமிடுகையில் உன் நெற்றியிலும் எழும் ஒரு மூன்றாம் விழி. கரியவளே, காட்டிலிருந்து மேலும் அகக்காட்டுக்குச் செல்வதே உன் ஊழ் போலும்” என்றாள் விஜயை.

“பித்தன். அவனுக்கிணையாக நீயும் பிச்சியென்றாவாயா? அவன் ஆட்டும் உடுக்கொலிக்கு நீ ஆடிக்களிப்பாயா?” என்றாள் ஜயந்தி. “உடனாட அந்த உச்சிமலையில் பூதநிரைகளே எழும். நாதமென்று இந்தக் காளை திமிலசைக்கக்கூடும்” என்றாள் அபராஜிதை. “ஒருகையில் தழலும் மறுகையில் தாளமும் கொண்டிருப்பான். மான் தொடர மழுவேந்தி நின்ற மலைவேடன்.  அவன் துணைவியாகிய நீ கொள்ளும் ஊர்தி எது?” என்று ஜயை சிரித்தாள். “வெள்ளெருது அஞ்சும் சிம்மம்…” என்று விஜயை சொன்னாள்.

அவளோ அவ்விளிவரலை புகழ்மொழியாக ஏற்று மெய்சிலிர்த்துக்கொண்டிருந்தாள். தன் உடல் இனிய மயிர்ப்பு கொள்வது ஏன்? முலைக்குவைகள் குறுவியர்வையுடன் விம்மித் தணிவது ஏன்? தொண்டை வறள்கையில் இதழ் ஈரம் கொள்வது ஏன்? மூச்சு வெப்பம் கொள்கையில் கண்கள் பனிப்பது ஏன்? அதுவரை அறிந்திராத மெய்ப்பாடுகளால் தளர்ந்து சாளரக்கழிகளை இருகைகளாலும் பற்றிக்கொண்டு தலைசாய்த்து விழித்த கனவிலென அசைவிழந்திருந்தாள். பின் அறியா உள எழுச்சியால் அவள் கண்ணீர்விடலானாள்.

பெருநாகம் குடிகொண்ட ஆலய முகப்பை அடைந்து அதன் கதவென அமைந்த ஏழு மூங்கில்களை விலக்கி பூசகர் சொன்னார் “இதன் வாயிலுக்கு இப்பால் நின்று வழிபடுவதுதான் எங்கள் வழக்கம். நூற்றெட்டு முகடுகள் கொண்டதும் ஆயிரத்தொரு வாய்கள் கொண்டதுமான இந்தப் புற்றுக்குவை பல்லாயிரம் ஆண்டுகளாக இங்குள்ளது. இதன் பணிக்கென்று இக்காட்டில் பிறந்து வந்தவர்கள் நாங்கள். இங்கு இறப்பிலாது வாழும் எழுதலைப் பெருநாகமான காளிகன் நூற்றெட்டுமுறை கரிய மண்ணைக் கொத்தி எங்களை முளைத்தெழ வைத்தது என்பது தொல்கதை. படையலும் பூசைகளும் வெளியிலிருக்கும் இந்த மூன்று பலிபீடங்களில் மட்டுமே நிகழ்வது வழக்கம்.”

அவன் மேல் நீறிட்டு வாழ்த்தி பூசகர் சொன்னார் “நீ எங்கள் குல மகளை கைக்கொள்ள வேண்டுமென்றால் இவ்வெல்லை தாண்டி செல்லவேண்டும். அப்புற்றுகளில் ஒன்றின் வாய்க்குள் கைவிட்டு மாநாகர்களே அருள்க, இக்குலக் கன்னியை எனக்கு நல்குக என்று கோரவேண்டும். அவர்கள் அருளினார்கள் என்றால் நீ உயிருடன் மீண்டு இப்படிக்கு இப்பால் வருவாய். எங்கள் குலம் உனக்குப் பணியும். எங்கள் குலமகள் உன் குடிக்குரியவளாவாள்.”

புன்னகையுடன் “நன்று, நான் அதை இயற்றுவேன்” என்றபின் தன் முப்பிரிவேலையும் அதில் கட்டிய உடுக்கையையும் அங்கே சாற்றிவைத்து எலும்புமணிக் கங்கணம் ஒலித்த கைகளை நீட்டி படிதொட்டு சென்னிசூடி வணங்கி அவன் வாயில் கடந்து உள்ளே சென்றான். அங்கிருந்த கன்னியர் அஞ்சி மூச்சிழுத்து நெஞ்சழுத்தி ஏங்கி “என்ன நிகழ்கிறது! தென்றிசையன்னையரே, நீங்களே சான்று” என்றனர். இளையோர் அவன் அசைவுகளை நோக்கி அவற்றுக்கேற்ப அறியாது அசையும் தசைகளுடன் இறுகிய நாணில் அம்பென நின்றனர்.

புற்றுக்குவையை அணுகி ஒருகணம் நோக்கிவிட்டு முதற்குவையில் கால் வைத்து இரண்டாம் முகடில் கைபற்றித் தொற்றி அவன் மேலேறினான்.  வெளியே நின்ற பூசகர் பதற்றத்துடன் “இளையோனே, அறியாது செய்கிறாய் நீ. இதன் நூற்றெட்டு வாய்களில் பாதாளப் பெருநாகங்களின் புவிமீள் வழிகள் அமைந்துள்ளன. அது கார்க்கோடகனின் முகடு. அப்பால் அதோ, அது திருதராஷ்டிரனுக்குரியது. இது மணிகர்ணனின் முகடு. அதனருகே உள்ளது அஜமுகனின் வழி. இப்பால் வியாஹ்ரன். மேலே உச்சிவாய் திறந்திருப்பது வாசுகியின் மைந்தனும் எங்கள் குலதெய்வமுமான காளிகனின் குகைவாய். ஒருமுறை உமிழ்ந்தால் இப்புவியை முற்றெரித்து சாம்பலாக்கி பறக்கவிடும் வல்லமைகொண்ட அருநஞ்சு அவன் நாவில் உள்ளது” என்று கூவினார்.

“நீ அங்கு செல்லவேண்டியதில்லை. இப்புற்றிலுள்ள அனைத்து நாகங்களும் அவனே. ஏதேனுமொரு புற்றுவாயை அணுகி அதற்குள் கைவிட்டு நாகத்தின் அருள் கொண்டால் போதும்” என்றார் முதுகுலத்தார் ஒருவர். இல்லத்துச் சாளரத்தில் நின்றிருந்த அவளிடம் ஓடிவந்த ஜயை “புற்றுமுகம் பற்றி ஏறுகிறான். பெருநாகங்களை அறைகூவுகிறான்” என்றாள். விஜயை “அவன் சற்றும் அஞ்சவில்லை. இளமைந்தன் மணல்மேட்டிலாடுவதுபோல ஏறிச் செல்கிறான்” என்றாள். அவள் அதை வேறொரு விழியால் அண்மையிலென கண்டுகொண்டிருப்பவள் போலிருந்தாள்.

கூடி நின்றவர்களில் ஒருத்தி தன் நிறையழிந்து “வேண்டாம்! நச்சுப்பெருக்கு அப்புற்று. விலகிவிடுங்கள். இளையோனே, வீண் முயற்சி வேண்டாம்” என கூவினாள். அதிலெழுந்து அலைகொண்ட பெண்டிர் அத்தனைபேரும் அவனை நோக்கி கைநீட்டி “வேண்டாம்… மீள்க!” என்று கூவி அழுதனர். அவன் அச்சொற்களை கேட்கவில்லை. முதன்மைப்புற்றுமேல் ஏறி காளிகனின் பாதைக்குள் தன் கையை விட்டான். புற்று ஒரு பெருஞ்சங்கமென்றாகி உள்ளே கார்வை எழுந்தது. அனைத்து வாயில்களிலிருந்தும் கரிய நாகத்தலைகள் சீறி எழுந்தன.

விறகுக்குவையிலிருந்து எழுந்தாடும் கரிய தழல் நாக்குகள்போல அனைத்து புற்றுவாய்களிலிருந்தும் எழுந்த நாகங்கள் சீறி நெளிந்தன. நீட்டிப் பறந்தன இருமுனை நாக்குகள். சிறுமணிக் கண்களில் அனற்துளி அசைந்தது. அணுகி நின்றிருந்த அனைவரும் அஞ்சி விலகி பின்னடைந்தனர். அலறல்களும் அழுகைகளும் கூக்குரல்களும் எழுந்து சூழ்ந்தன. அவற்றின் சீறல்கள் இணைந்து நீரலை ஒன்று எழுந்தணுகுவதுபோல ஒலித்தன. மையப்பெருவாயிலிலிருந்து ஏழு தலைகளும் பறக்கும் செந்நாவும் செம்மணி விழிகளுமாக அள்ள எழுந்த ஏழுவிரல் கைபோல எழுந்து நின்றாடியது கருநாகமாகிய காளிகன்.

 IMG-20161221-WA0000

அதன் கழுத்தைப்பற்றி உருவி எடுத்து கையில் சுழற்றித் தூக்கி தன் கழுத்தில் அணிந்துகொண்டு அவன் இறங்கினான். கரிய கடலலை என எழுந்து பேருருக்கொண்டு எழுந்த அதன் படம் அவன் தொட்டதுமே சுருங்கி எடுத்ததுமே மேலும் சிறுத்து  கழுத்தில் அணிந்ததும் கருமணிகோத்த ஆரமென ஆன விந்தையை அவர்கள் ஓசையடங்கி வாய்திறந்து விழிமலைத்த திகைப்புடன் பார்த்தனர். என்றும் அவன் நெஞ்சிலேயே அமைந்திருந்தது அது என்று அவர்களுக்குத் தோன்றியது.

புன்னகையுடன் வெளியே வந்து அவன் “நீங்கள் சொன்னதை செய்துவிட்டேன். குலத்தோரே, உங்கள் குலமகளை கைபிடிக்க விழைகிறேன்” என்றான். ஆயிரம் குரல்கள் ஒரே கணத்தில் வெடித்து எழுந்தன. “அவ்வண்ணமே ஆகுக! இனி எங்கள் குலம்காக்கும் தெய்வமென  நீங்களே நின்றருள்க! இங்கு அளிக்கப்படும் படையல் அனைத்திலும் உங்கள் சுவைதேர் நா வந்து படுக!”

பூசகர் குரல் நடுங்க கைகூப்பி “எந்தையே, துயர்கொள்கையில் எங்கள் குரல் உங்கள் செவிகளை வந்தடையட்டும். அஞ்சுகையில் எங்கள் குரலின்மையை நீங்கள் கேட்குமாறாகட்டும். எங்கள் கொடிவழிகளுக்கு காப்பென்று உங்கள் பேரையே என்றும் உரைப்போம்” என்றார். “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான் அவன்.

ஜயையும் விஜயையும் ஓடிவந்து காளியின் இருதோள்களையும் பற்றிக்கொண்டு “வென்றானடி அப்பித்தன். இனி உன் கைபற்றுவான் அவன்” என்றனர். அவள் கண்ணீர் வழிய அசைவற்று தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். “வருந்துகிறாயா?” என்றாள் ஜயந்தி. “அவள் உடல் சொல்கிறது, அது உவகை” என்றாள் அபராஜிதை. அவள் அச்சொற்களுக்கெல்லாம் அப்பால் எங்கோ இருந்தாள்.