கிராதம் - 62

பகுதி ஏழு : பாசுபதம்

[ 1 ]

பைலனும் ஜைமினியும் சுமந்துவும் தொடர திருவிட நிலத்திற்குள் நுழைந்தபோது சண்டன் அர்ஜுனனின் இந்திரபுரிபுகுகை குறித்த ஏழு வெவ்வேறு காவியங்களின் கதைகளை சொல்லிமுடித்திருந்தான். அவர்கள் கேட்ட ஐயங்கள் அனைத்திற்கும் பிறிதொரு கதையையே அவன் மறுமொழியாக சொன்னான். ஒரு கட்டத்தில் அவர்கள் முற்றிலும் வினாக்கள் அழிந்து கதைச்சுழலுக்குள் மூழ்கி செவியும் விழியும் மட்டுமேயென தொடர்ந்து வந்தனர்.

“விண்ணிலிருந்து மீண்டும் இந்திரகீலமலைக்கு வந்து விழுந்தான் இளைய பாண்டவன் என்கின்றன கதைகள். அங்கிருந்து அடர்காடுகளின் வழியாக அவன் இமயமலையடுக்குகள்வரை சென்றான். இமயத்தின் இடுக்குகள் வழியாக கடல்தேடி வரும் பீதர்நாட்டு வணிகர்களுடன் சேர்ந்து சென்றான். அவர்களைப் பிரிந்து கின்னரகுடியினருடன் இணைந்துகொண்டு மேற்கு நோக்கி சென்றான். பதினெட்டு மாதங்களில் அவன் கயிலைக்குச் செல்லும் மாவிரதர்களைக் கண்டு அவர்களுடன் இணைந்துகொண்டான். எங்கும் நில்லாதவன் என்பதனால் அவனை சலன் என அழைக்கின்றன நூல்கள்” என்றான் சண்டன்.

அவர்கள் பயோஷ்னி என்னும் சிற்றாற்றின் கரையை வந்தடைந்திருந்தனர். பாறைகள் செறிந்திருந்த மலைச்சரிவில் நுரைத்தும் சீறியும் சென்றுகொண்டிருந்தது நீர்ப்பெருக்கு. சண்டன் நாணல்களைப் பறித்து இணைத்துக்கட்டி நீள்கூம்புவடிவ மீன்கோரியை முடையத்தொடங்கினான். களைத்த கால்களுடன் இளையோர் அவனைச் சூழ்ந்து அமர்ந்தனர். ஜைமினி “அவன் அங்கே கற்ற வேதம் எது?” என்றான். “அவன் அங்கே கடந்தது இந்திரனை முதன்மையாக்கிய மகாவஜ்ரம்” என்றான் சண்டன்.

“அவ்வேதம் இன்றில்லையா?” என்றான் ஜைமினி. சண்டன் புன்னகைத்து “எந்த வேதமும் முற்றழிவதில்லை, அந்தணரே. அது மண்ணுக்குள் வேரென்று நீடிக்கும். ஒவ்வொரு சொல்லிலும் அதன் பொருளும் இணைந்திருக்கும்” என்றான். ஜைமினி பெருமூச்சுடன் “நான் கற்றதே வேறு” என்றான். “சொல்க!” என்றான் சண்டன். ஜைமினி தயங்க “சொல்க அந்தணரே, இக்காடே ஒரு கல்விநிலை அல்லவா?” என்றான் சண்டன். ஜைமினி “பிரம்மனின் நாவிலிருந்து எழுந்து ககனவெளியில் ஒலியலைகளாக நீடித்தவை வேதங்கள். மானுடரால் உருவாக்கப்பட்டவை அல்ல என்பதனால் அவை ஔபௌருஷேயங்கள். மானுடனுக்கு சொல்லப்பட்டவை என்பதனால் சுருதிகள்” என்றான்.

“வேதம் பெற்ற அனைவருமே முனிவர் என்றும் வேதச்சொல்லைத் தொகுத்த அனைவருமே வியாசர்கள் என்றும் முன்னோரால் அழைக்கப்பட்டனர். சொல்தேர்ந்து வேதம் தொகுத்த முதல் வியாசர் நூறாயிரம் நூல்களாக வேதங்களை வகுத்தமைத்தார். அவற்றை ரிக், யஜூர், சாமம், அதர்வமெனப் பகுத்தார். ரிக்கால் ஹௌத்ரத்தையும் யஜுஸால் அத்வார்யவத்தையும் சாமத்தால் ஔல்காத்ரத்தையும் அதர்வத்தால் பிரம்மதத்துவத்தையும் அடையலாகுமென நிறுவினார். அழைப்பும் அளிப்பும் உசாவலும் பெறுதலுமாக வேதம் அமைந்தது.”

சண்டன் “எதனடிப்படையில் அந்த நூறாயிரம் நூல்கள் தொகுக்கப்பட்டன? எப்படி அவற்றில் இன்றிருப்பவை மட்டும் எஞ்சின?” என்றான். ஜைமினி “அது மானுடரின் வீழ்ச்சி. முன்பிருந்த மூதாதையர் வானென விரியும் உளம்கொண்டிருந்தனர். அவர்கள் வேதமன்றி பிறிதொன்றிலாது வாழ்ந்தனர். மானுடம் வளர்ந்ததும் விழைவுகள் பெருகின. வேதம் அறியமுடியாமைக்கு ஆற்றும் கடமைகளையே வேள்வியெனக் கொண்டது. விழைவுக்கு இலக்காகும் பொருளுக்கென ஆற்றப்படும் கடமைகளனைத்தும் வேதமறுப்பே. வேதமறுப்பு மானுட உள்ளத்தை குறுகச் செய்தது. அதற்கேற்ப வேதம் குறைந்து வந்தது. ஒவ்வொருநாளும் ஒரு பாடலென வேதம் மானுடரால் கைவிடப்படுகிறது” என்றான்.

சண்டன் “அந்தணரே, வேதமென இங்கு வந்த மெய்ச்சொல் வடக்கே எழுந்த பனிமலையடுக்குகளைப்போன்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன் ஒரு பகுதி முதன்மைகொள்கிறது. சில பகுதிகள் கண்டெடுக்கப்படுகின்றன. சில பகுதிகள் கைவிடப்படுகின்றன. பெரும்பகுதி எவராலும் காணப்படாமல் அங்கிருக்கிறது. அறிந்தவேதமே நாம் பேசும் வேதம். அறியாவேதத்தின் நுனியே அது என்று அறிக!” என்றான். “இமயமலையடுக்குகளுக்குள் பயணம் செய்பவர்கள் அங்கு அசுரரும் அரக்கரும் கின்னரரும் கந்தர்வரும் வாழ்ந்து விட்டுச்சென்ற பெருநகர்கள் ஒழிந்து கிடப்பதை காண்பார்கள். அவர்கள் எதை வென்றார்கள்? எதை இழந்தார்கள்?” என்று சண்டன் கேட்டான்.

“வேதங்களுக்குள் விடப்பட்ட வேதங்கள் புதைந்திருக்கின்றன என்று அறியாதவன் வேதங்களை பொருள்கொள்ள இயலாது” என்று அவன் தனக்குத்தானே என சொல்லிக்கொண்டான். பின்னர் கூடையை எடுத்தபடி மீன்கொள்ளும்பொருட்டு பாறைகளின் மேல் தாவிச்சென்றான். இருபாறைகளின் நடுவே பீரிட்டு வளைந்து விழுந்த நீர்ப்பெருக்கின் குறுக்காக அந்தக் கூடையை சற்றுநேரம் வைத்து நீர் வளைந்து தெறிக்கச் சுழற்றி வீசி எடுத்தான். அதில் வெள்ளியிலைகளென மீன்கள் துள்ளின. அவற்றை செவிள்கள் வழியாக நாணலில் கோத்து இடையிலணிந்துகொண்டான்.

“செல்வோம், நாமும் உணவு தேடி மீளவேண்டும். இருட்டிக்கொண்டிருக்கிறது” என்றான் சுமந்து. பைலன் “வெள்ளித் திறவுகோல்களை கொத்தாகக் கட்டி இடைசூடி நின்றிருக்கும் வாயிற்காவலன் போலிருக்கிறார்” என்று சண்டனை நோக்கி சொன்னான். “யார் அவர் என என் உள்ளம் வினவிக்கொண்டே இருக்கிறது. ஒரு வழிகாட்டி என உணர்கிறேன். எதன்பொருட்டு நம்மை அவரிடம் ஒப்படைத்துள்ளது ஊழ்? நாம் எங்கு சென்றுகொண்டிருக்கிறோம்?” என்றான் ஜைமினி. “நெடுந்தூரம் வந்துள்ளோம். இக்கொடும்பயணத்தை நமக்கு அமைத்த நெறி வீண்விளையாட்டை விரும்பாதென்றே கொள்வோம்” என்றான் பைலன்.

காட்டுக்குள் நுழைந்தபோது அவர்கள் அமைதிகொண்டிருந்தனர்.  முட்காடுகள் வழியாக வந்திருந்த அவர்களுக்கு பேரிலைச் செடிகள் கொண்ட பசுங்காடு அறியாமலேயே உவகையை அளித்தது. சருகுமெத்தையில் அவர்கள் கால்கள் புதைந்தன. உடல்தொட்ட மரங்களிலிருந்து மலர்ப்பொடிகள் உதிர்ந்தன. புதர்களுக்குள் செம்போத்து ஊடுருவி ஓடியது. ஆர்வத்துடன் ஒரு குரங்கு இறங்கி வந்து அவர்களை நோக்கியது. அதன் தோழி கீழிறங்கி வர மேலே செல்லும்படி அதை எச்சரித்தது.

பைலன் அருகே நின்ற வாழையின் மடல்களைப் பிய்த்து வாயில் வைத்து தேனுண்ண உறிஞ்சினான். “இது அந்தி. வாழைத்தேன் காலையிலேயே இருக்கும்” என்றான் சுமந்து. “ஆசிரியரின் மெய்ச்சொற்களை புலரியிலேயே அடையவேண்டும், அவை மலர்த்தேனைப் போன்றவை என்று ஒரு நெறிநூல் உரைக்கிறது” என்றான் ஜைமினி. “இந்தக் காட்டில்கூட நாம் நூல்களிலிருந்து விடுதலை பெறமாட்டோமா என்ன?” என்றான் பைலன். “காடாகச் சூழ்ந்திருக்கின்றன நாம் கற்ற நூல்கள்” என்றான் சுமந்து. “இலக்கணமற்றது, ஏடென்றும் பாதமென்றும் பிரிக்கப்படாத நூல் இது.”

“நாம் கனிகொள்ள வந்தோம், அதைச் செய்வோம்” என்று ஜைமினி எரிச்சலுடன் சொன்னான். “எதையும் தத்துவமாக ஆக்கவில்லை என்றால் உங்களுக்கு சொல் திகட்டுகிறதுபோலும். இதோ, இந்த மரங்களும் செடிகளும்கூட உவமைகளாக ஆகிவிடுவோமா என அஞ்சி நடுங்கி நிற்கின்றன.” சுமந்து வெடித்துச் சிரித்துவிட்டான். பைலன் சிரித்தபடி “ஜைமின்யரே, நீங்கள்கூட வேடிக்கை பேசமுடியும் என இன்று அறிந்தேன்” என்றான்.

ஜைமினி கொடிகளைப் பற்றி இழுத்து வேர்புதைந்த இடத்தைச் சுட்ட பைலன் சிறு கூர்கழியால் அகழ்ந்து கிழங்குகளை வெளியே எடுத்தான். உச்சிக்கிளைகளில் இருந்த காய்களை அக்கொடியிலேயே கவண் கட்டி வீசி எறிந்து பற்றி இழுத்து பறித்தனர். அக்கொடிகளைப் பின்னி கூடையாக்கி அவற்றில் காய்களையும் கிழங்குகளையும் சேர்த்து தூக்கிக்கொண்டனர். அச்செயலில் அவர்கள் மூழ்கியபோது சொல்லாடல் இயல்பாக நின்று அமைதி சூழ்ந்துகொண்டது.

“வேதம் பிரம்மனிலிருந்து பிறந்தது என்று அனைத்து நூல்களும் சொல்கின்றன” என்று எண்ணியிராத தருணத்தில் ஜைமினி தொடங்கினான். சுமந்துவும் பைலனும் அப்போது பிரம்மனைப்பற்றித்தான் எண்ணிக்கொண்டிருப்பதை உணர்ந்து சற்று திடுக்கிட்டனர். “ஆனால் ஒவ்வொரு நூலும் பிரம்மனின் தோற்றம் பற்றி ஒவ்வொரு கதையை சொல்கிறது.” அவன் என்ன எண்ணிக்கொண்டிருக்கிறான் என்பதை நுட்பமாகத் தொடர்ந்தன இருவரின் உள்ளங்களும். “அவ்வாறென்றால் ஒவ்வொரு பிரம்மனும் படைத்த வேதங்களும் வேறுவேறா?” என்று அவன் கேட்டபோது அம்புவிடுபட்ட வில்லென அவர்களின் அகங்கள் நிலைமீண்டன.

“ஏனோ இத்தருணத்தில் முன்பு கற்ற அன்னைநெறியின் கதையே என் நெஞ்சில் முதன்மையென எழுகிறது” என்றான் ஜைமினி “யுகத்தொடக்கத்தில் விஷ்ணு ஒரு கைமகவாக ஆலிலையில் கிடந்தார். அவரில் தன்னுணர்வு எழுந்தது. அது அச்சமென்றாகியது. அந்த மகவு வீரிட்டழுதது. அப்போது விண்ணிலிருந்து மெல்லிய மூச்சு அதன்மேல் பட்டது. ‘நான் யார்? எனையீன்றது எவர்? எதன்பொருட்டு?’ என அவர் உள்ளம் வினவியது. விண்நிறையும் இடிமுழக்கமாக ஓர் ஒலியெழுந்தது. *சர்வ கல்விதமேவாகம்****, நான்யாஸ்தி சனாதனம்***. இவையனைத்தும் நானே. நானன்றி தொடக்கமென ஏதுமில்லை.”

விஷ்ணு நிமிர்ந்து நோக்கினார். நான்கு கைகளில் சங்கும் சக்கரமும் கதையும் மலரும் கொண்டு அன்னை அவர்முன் தோன்றினாள். அவள் நிழலும் வண்ணம்கொண்டிருந்தது. ரதி, ஃபூதி, புத்தி, மதி, கீர்த்தி, திருதி, ஸ்மிருதி, சிரத்தை, மேதை, ஸ்வதை, ஸ்வாகை, க்ஷுதை, நித்ரை, தயை, கதி, துஷ்டி, புஷ்டி, க்ஷமை, லஜ்ஜை, ஜ்ரும்பை, தந்த்ரி என்னும் அன்னையாற்றல்களாக அந்நிழல் பெருகிச் சூழ்ந்தது. அறியாமகவு அலகிலா அன்னையரைக் கொண்டதாக ஆகியது.

தன் கனிந்த விழிகளால் நோக்கி அன்னை சொன்னாள் “மைந்தா, நீ என் காலத்தின் ஒரு கணம். முடிவிலாது பிறந்து அழிந்து மீள்கிறாய். நீ வளர்க!” அவள் அதை எடுத்து தன் முலைகள்மேல் சேர்த்தாள். அமுதை உண்டு இளமைந்தன் கண்மயங்கலானான். அவன் செவிகளில் அன்னையின் சொல் எழுந்தது. “நீ பெருகுக! நீ சத்வகுணத்தான். பெருநிலை கொண்டமைந்தவன். மெய்மைக்கடல்மேல் அறிதுயில் கொள்க! உன் தொப்புளில் இருந்து ரஜோகுணத்தான் எழுக! செயல்நிலை கொண்ட அவனை பிரம்மன் என்று அழைக்கட்டும் முனிவர். பிரம்மன் புடவிப்பெருக்கை படைப்பான். அது வளர்ந்து தன் விசையால் மையம் கொள்கையில் அதிலெழுக தமோகுணத்தானாகிய மகாருத்ரன்! எதிர்நிலை கொண்ட அவனை அழிவிலா நஞ்சென்றும் அனல்வண்ணனென்றும் அழிப்போன் என்றும் ஆடவல்லான் என்றும் அறியட்டும் மெய்யுணர்ந்தோர்.”

“அவ்வாறு பிறந்தனர் மூன்று தெய்வங்களும் முப்பத்துமுக்கோடி தேவர்களும் எண்ணிலாப் புடவிகளும் அவற்றை இணைத்தாடும் ஊழ்ப்பெருக்கும்” என்றான் ஜைமினி. “பிறிதொரு நூலில் உள்ள கதை சற்றே மாறுபடுகிறது. காலத்தொடக்கத்தில் இங்கிருந்தது விண்நீர் மட்டுமே. அதன் அலைகளென தன்னை நிகழ்த்திக்கொண்டிருந்தவள் அன்னை. அவள் தானென்றும் தோழியரென்றும் உடல்கள் கொண்டு அதில் நீராடித் திளைத்தபோது அவள் அண்டத்துளி ஒன்று அந்நீர்ப்பரப்பில் விழுந்து பொற்துகளென சுடர்விட்டது. அன்னை அதைக் கண்டாள். நீ தவத்தான் படைப்பவனாகி எழுக என ஆணையிட்டாள். பின் தானே அதன் உயிரென புகுந்து எழுந்து வளர்ந்து புடவிகளை படைத்தெடுத்தாள்.”

“முடிவிலாக் கதைகள்” என்று பைலன் சொன்னான். “பிரம்மனின் பிறப்பு குறித்த கதைகளை நாம் இங்கு பேசுவோம் என்றால் நம் அகவை முதிர்ந்து சிதைசேர்வதுவரை ஒருகணமும் ஒழியாது பேசிக்கொண்டிருக்கலாம். இங்குள்ள குலங்கள் அனைத்தும் பிரம்மனைப்பற்றி ஒரு கதையை வைத்துள்ளன. குடிகளுக்கு ஒரு கதை அப்பெருங்கதைக்குள் இருக்கும். நூல்களில் அக்கதைகள் நூறுமுகங்கள் கொண்டு வளரும்.” ஜைமினி “அன்னையைப்பற்றி வேதங்கள் என்ன சொல்கின்றன என்று எண்ணிக்கொண்டேன்” என்றான். மூவரும் சிலகணங்கள் அமைதிகொண்டனர்.

“வாக்தேவி என்றும் அதிதி என்றும் அன்னையின் முகங்கள் உள்ளன. ராத்ரி, உஷை, சந்த்யை என அன்னை முகம் காட்டுகிறாள். ஆனால் வேள்விக்குரிய முதன்மைத்தெய்வமாகவோ தேவர்களை ஈன்ற பேரன்னையாகவோ அவளை வேதங்கள் உரைப்பதில்லை” என்றான் சுமந்து. ஜைமினி “உரைக்கும் வேதங்கள் எங்கேனும் உள்ளனவா?” என்றான். அவர்கள் மீண்டும் அமைதியானார்கள். “அறியாவேதங்கள் என சண்டர் சொல்வது அவற்றைத்தானா?” அவர்கள் தங்கள் தனித்த எண்ண ஓட்டங்களில் மூழ்கியவர்களாக நடந்தனர்.

நீண்டநேரம் கழித்து மீண்டும் ஜைமினி சொன்னான் “அப்படியென்றால் திசைநான்கையும் வென்று அர்ஜுனன் அடைந்த வேதமெய்மையின் பொருள்தான் என்ன? வேதங்களை அறிந்து கடப்பது ஒருவனுக்கு இயல்வதாகுமா?” பைலன் “ஒவ்வொரு வேதமும் பிறிதொன்றை முழுமைப்படுத்துகிறது என்கின்றன நூல்கள்” என்றான். அவன் சொன்னதென்ன என்று அவர்களுக்கு புரியவில்லை. அவர்கள் அவனை திரும்பிப்பார்த்தனர். அவனும் தான் சொன்னதன் பொருளென்ன என்று உணராதவன்போல திகைத்து அவர்களை நோக்கினான். பின்னர் புன்னகைத்து “கற்றவை அனைத்தையும் முற்றிலும் கலைத்துவிட்டார் சூதர்” என்றான். அச்சொல்லில் எளிதாகி அவர்கள் நகைத்தனர்.

சுமந்து “கிழங்குகளின் வேதம் விதைகளுக்கில்லை. காய்களுடன் இணைந்து வேதமும் கனிகிறது” என்றபின் “அரிய சொல்லாட்சி… எனக்கே இதை எங்கேனும் எழுதவேண்டும் போலிருக்கிறது” என்றான். “மானின் வேதத்தை மானை உண்ணும் புலி தானும் அடைகிறது” என்றான் பைலன். “பைலரே, வேண்டாம். வேதமறுப்பும் வேதநகையாட்டும் பழி சேர்க்கும்” என்றான் ஜைமினி. “வேதப்பழி பிறிதொரு வேதமாகிறது” என்றான் பைலன். சுமந்து “ஆ, மெய்யாகவே அது ஓர் அரிய எண்ணம். நம் மெய்யாடலின் வரலாற்றை அதனூடாகச் சென்று அணுகியறியமுடியுமென்று தோன்றுகிறது” என்றான்.

“வேடிக்கை வேண்டாம்” என்றான் ஜைமினி சினத்துடன். “வேதங்களை நாம் கிளிகளுக்கு கற்பிப்போம். பாரதவர்ஷமெங்கும் அவை சென்று அத்தனை கிளிகளையும் வேதமொழி சொல்லப் பயிற்றும். வேதமொலிக்கும் காடுகளில் வேதம் கனிந்த கனிகள் எழும். அவற்றை உண்ட மானுடர் அவியுண்ட தேவர்களென்றாவார்கள்” என்றான் பைலன். “அக்கனிகள் அழுகி நிலத்தில் விழுந்தால் பாதாளநாகங்களால் உண்ணப்படும். அவை பொன்னுடல்கொண்டு நெளியும். வேதம் கீழுலகங்களை முற்றழிக்கும்” என்றான் சுமந்து. “வேண்டாம், இங்கேயே நிறுத்திக்கொள்வோம்” என்று ஜைமினி குரல் உடையச் சொன்னான்.

“உண்ணப்படும் கனிகளைவிட உதிரும் கனிகளே மிகுதி. அவியுண்ட அடியுலகோர் விண்ணவராவர். ஆழம் விண்ணென்றாகும். மணல்கடிகை திரும்புவதுபோல ஏழுலகும் தலைகீழாகும்” என்று பைலன் சொன்னான். “விஷ்ணு ஆழுலகில் பாற்கடலில் படுத்திருப்பார். வானெங்கும் நாகங்கள் நெளியும்.” ஜைமினி நின்று அழுகை கலந்த உரத்த குரலில் “வேண்டாம்! வேண்டாம்! போதும்!” என்று கூவினான். “சரி போதும்” என்று பைலன் சிரித்துக்கொண்டே சொன்னான். சுமந்து “வேதங்களைப்பற்றிய மெய்யறிதலை இனிமேல் நாம் இவரிடம் பகிர்ந்துகொள்ளவேண்டாம்” என்றான். “வேதங்களை இவர் அன்னை சொன்ன தந்தையின் பெயர் என நம்புகிறார்” என்றான் பைலன். “பைலரே” என ஜைமினி கூவ “சரி, இனி இல்லை” என்றான் பைலன்.

அவர்கள் திரும்பி ஆற்றங்கரையை அடைந்தபோது காட்டுக்குள் இருள் பரவி பறவைகள் சேக்கேறும் ஒலிகள் எழுந்துகொண்டிருந்தன. ஜைமினி தலைகுனிந்தவனாக நடந்தான். ஆற்றங்கரை மணலில் அவர்களின் கால்கள் புதையும் ஒலி எழுந்தது. ஜைமினி “நகையாடலாயினும்…” என்றான். “என்ன?” என்றான் பைலன். “நகையாடலாயினும் எண்ணவேண்டிய சொற்களே” என்றான் அவன். பைலன் சிரித்து “நகையாட்டிலன்றி எவரும் கூரியவற்றை சொல்லமுடியாது, ஜைமின்யரே” என்றான்.

[ 2 ]

பயோஷ்னியின் நீரில் ஒளி கலங்கி அலையடித்துக்கொண்டிருந்தது. ஈரப்பாறைகளில் சிந்திய குங்குமம்போல செம்மை வழிந்தது. நாணல்களுக்கு அப்பால் பாறை ஒன்றின் பரப்பில் சண்டன் அனல் மூட்டி அதில் மீன்களை சுட்டுக்கொண்டிருந்தான். அவன் மீனைச் சுட்டு முடிப்பதற்காக அவர்கள் காத்திருந்தனர். சுட்ட மீன்களை இலையொன்றில் அடுக்கி வைத்துக்கொண்டிருந்த அவன் அவர்கள் வருவதைக் கண்டும் விழிதிருப்பவில்லை. சரியான பதத்தில் மீன் வெந்து நீலச்சுடர் எழுவதற்காக அவன் விழிகள் கூர்ந்திருந்தன.

மீன்களைச் சுட்டு முடிந்ததும் அவன் எழுந்துகொண்டு “நீங்கள் உங்கள் உணவை சுடலாம்” என்றான். ஜைமினி தன் கிழங்குக்கூடையுடன் முன்னால் அடிவைக்க “அனல் ஊனுண்டு செழித்திருக்கிறது, அந்தணரே” என்றான் சண்டன். அறியாது ஜைமினி தயங்க நகைத்து “தூய அனலைத் தேடுகிறீர் போலும்” என்றான்.

ஜைமினி திரும்பி தன் தோழர்களை நோக்கிவிட்டு முன்னால் சென்று கிழங்குகளை சுடத்தொடங்கினான். கண்களில் புன்னகையுடன் பிற இருவரும் வந்து அருகமைந்து கிழங்குகளை சுட்டனர். சண்டன் அப்பால் அமர்ந்து மீனை உண்டு முட்களை அருகிருந்த இலைமேல் வைத்தான். ஜைமினி திரும்பிப்பார்க்க “முன்பு மீன்கள் வானில் பறந்திருந்தன என்று சொல்கிறார்கள், அந்தணரே” என்றான். “மெய்யாகவா?” என்றான் சுமந்து. “ஆம், நான் இமயமலையின் உச்சிப்பாறை ஒன்றில் மீன்கள் பதிந்து உருவான முள்வடிவை கண்டிருக்கிறேன்” என்றான்.

“அவை எப்படி நீர்வாழ்வில் அமைந்தன?” என்றான் ஜைமினி அறியாமல். “அவற்றின் வேதம் சொல்மாறியிருக்கும்” என்றான் சண்டன். பைலனும் சுமந்துவும் சிரிக்க சுட்ட கிழங்குகளை எடுத்துக்கொண்டு ஜைமினி அப்பால் சென்று திரும்பி அமர்ந்து உண்ணத்தொடங்கினான். “சினம் கொள்கிறார்” என்றான் பைலன். “சினப்பது அவருக்கு நன்று. சினத்தினூடாகவே அவர் கற்றுக்கொள்கிறார்” என்றான் சண்டன்.

புதர்களுக்குள் ஓர் அசைவு கேட்க சண்டன் எட்டி அனலில் இருந்த கொள்ளிவிறகொன்றை கையிலெடுத்துக்கொண்டான். “மானா?” என்றான் பைலன். “அல்ல” என்ற சண்டன் “யார்?” என்றான். அங்கிருந்து “நீங்கள் யார்?” என குரல் கேட்டது. “இளையவர்” என்றான் சண்டன். பின்னர் உரக்க “நான் சூதன். மூன்று அந்தண இளையோரும் என்னுடனிருக்கிறார்கள்” என்றான். அங்கிருந்த குரல் “நான் அந்தணச் சிறுவன். என் பெயர் வைசம்பாயனன்” என்றது.

சண்டன் எழுந்து அந்தக் கொள்ளியை காற்றில் சுழற்றி அனலூட்டி கொழுந்தாடச்செய்தான். அந்த ஒளியில் தொலைவில் நின்ற இளையவனை காணமுடிந்தது. “வருக, அந்தணரே! நீங்கள் உரிய குழுவுடன் இணைந்துள்ளீர்கள்” என்றான் சண்டன். வைசம்பாயனன் ஆற்றின் பாறைகளை மெல்லக் கடந்து அருகே வந்தான். “முதலில் உண்ணுங்கள்” என்றான் சண்டன். “ஆம், நான் பசிகொண்டிருக்கிறேன். என்னிடம் சில கிழங்குகள் உள்ளன” என்றபடி அவன் அனலருகே அமர்ந்தான். “அவற்றை பின்னர் சுடுவோம். இப்போது சுட்டவற்றை உண்ணுக!” என்றான் சண்டன்.

அவன் உண்பதை அவர்கள் நோக்கி அமர்ந்திருந்தனர். உண்டு முடித்து கமுகுப்பாளைத் தொன்னையிலிருந்து நீரை அருந்திவிட்டு அவன் நிமிர்ந்து “கடும்பசி. வரும் வழி அடர்காடு. ஏதேனும் நீர்க்கரையில் இரவு தங்கவேண்டுமென்பதற்காக கடுநடையிட்டு வந்தேன்” என்றான். “அன்னம் அன்னத்தை அறியும் தருணத்தை நோக்கியிருப்பதுபோல நிறைவளிப்பது பிறிதொன்றில்லை” என்றான் சண்டன். “ஆம், இந்த நெடும்பாதையில் நான் மெய்யென்று முதலில் அறிந்தது பசியையே” என்றான் வைசம்பாயனன்.

அவன் வாயிலிருந்து ஏப்பம் ஒன்று எழுந்தது. “வேதநாதங்களில் முதன்மையானது உயிர்கள் கொள்ளும் ஏப்பம் என்று ஒரு சூதனின் சொல்லை வைசாலியில் கேட்டேன்” என்றான் வைசம்பாயனன். “ஜடரவேதம் என அதை அவர் சொன்னார்.” பின்னர் பைலனை நோக்கி தலைவணங்கி “விசும்ப குலத்தில் வந்தவன். என் பெயர் என வைசம்பாயனன் என்பதை கொண்டிருக்கிறேன்” என்றான். பைலனும் சுமந்துவும் ஜைமினியும் குலமும் குருமுறையும் பெயரும் சொல்லி தங்களை அறிமுகம் செய்துகொண்டார்கள்.

அவர்கள் வாழ்த்துரைத்து முடித்ததும் சண்டன் “நான் சூதனாகிய சண்டன்” என சுருக்கமாக தன்னை சொன்னான். “எங்கு செல்கிறீர்கள்?” என்று பைலன் கேட்டான். வைசம்பாயனன் “நொதித்த கள் கலம்விட்டு எழுவதைப்போல மாணவர்கள் குருநிலைகளிலிருந்து வெளியே செல்கிறார்கள் என்று ஒரு சூதன் சில நாட்களுக்கு முன் பாடக்கேட்டேன்” என்றான். “எனக்கு மெய்மையை அறிவிக்கும் ஆசிரியர் ஒருவரை தேடிச்செல்கிறேன்.” ஜைமினி “அந்த ஒப்புமை எனக்குப் புரியவில்லை” என்றான். வைசம்பாயனன் “அது ஒரு பகடி, ஜைமின்யரே. புளித்தெழும் நுரை ஆணவமே. வழிவதே நிகழ்கிறது, வெளியேற்றம் அல்ல” என்றான்.

ஜைமினி “அப்படி சொல்லமுடியுமா என்ன?” என்றான். பைலன் “அது பகடி. அதை அவரே சொல்லியும்விட்டார். பகடியை ஆராய்வதென்பது உடையை பஞ்சாக்கிப் பார்ப்பதுபோல” என்றான். ஜைமினி “வெளியேறாதவர்கள் எதை கண்டடைய முடியும்?” என்றான். “முற்றிலும் வெளியேறுபவர்களே கண்டடையமுடியும் என்று அதற்குப் பொருள்” என்றான் வைசம்பாயனன். “வெளியேறும்போதே முழுமையாகத்தானே கிளம்புகிறோம்?” என்றான் ஜைமினி. சுமந்து “பகடியையே வேதமெய்ப்பொருள் என ஆய்பவர் அவர், வைசம்பாயனரே” என்றான். “ஆம், அதை அவரைப் பார்த்ததுமே அறிந்துகொண்டேன்” என்றான் வைசம்பாயனன்.

சண்டன் சிரித்து “நன்று, நால்வரும் நிகரானவர்களே” என்றான். வைசம்பாயனன் “நானும் அதையே உணர்ந்தேன், சண்டரே” என்றான். “திசையானைகளைப்போல கிளம்பியிருக்கிறீர்கள்” என்றபின் சண்டன் உரக்க நகைத்து “அல்லது திசையாமைகளா?” என்றான். வைசம்பாயனன் “அது இலக்கு அமைந்திருக்கும் இடத்தைப் பொறுத்தது. செல்லுமிடம் எங்கிருக்கிறதென்று தெரியவில்லை என்றால் விரைவும் அமைவும் நிகர் அல்லவா?” என்றான்.

“வைசம்பாயனரே, உங்களிடம் ஒரு வினா. நாங்கள் சற்றுமுன் அதைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம்” என்றான் பைலன். “இவர் அன்னைநெறிவந்த நூல்களில் பிரம்மனை முதலாற்றலாகிய பேரன்னை படைத்தமை குறித்து சொன்னார். அன்னை படைத்த பிரம்மனின் சொல்லில் எழுந்த வேதங்கள் ஏன் அன்னையைப் பாடவில்லை?” என்றான். சுமந்து “அல்லது பாடும் வேதங்கள் எங்கேனும் உள்ளனவா? நீர் அறிவீரா?” என்றான்.

“இருக்க வாய்ப்பில்லை” என்றான் வைசம்பாயனன். “வேதமென்றால் வேர்நீர் செடியை என தேவர்களை வளர்க்கவேண்டும். குன்றாது குறையாது என்றுமிருப்பவளை வேதம் வழுத்தவும் பெருக்கவும் வேண்டியதில்லை.” சற்றே முன்னகர்ந்து “இங்குள அனைத்தும் அவள் வடிவே என்றால் வேதமும் அவளே. வாக்கென வந்து வேதமென அமைந்தவள் அன்னை” என்றான்.

சண்டன் முகம் மாறியது. அனலை உந்தி செம்பொறி பறக்க விறகமைத்தபோது அவன் முகமும் அனலொளி கொண்டது. “நீர் கற்றவர், அந்தணரே” என்றான். “தொன்மையான பாடல் ஒன்று அவளை வேதமே உடலென்றானவள் என்கின்றது. சிக்ஷை அவள் குரல், சந்தம் அவள் நடை, வியாகரணம் அவள் ஆடை, நிருக்தம் அவள் காலடி, கல்பம் அவள் அருட்கை, ஜ்யோதிஷம் அவள் அளிக்கை. வேதமென்று இங்கு ஓதப்படும் அனைத்தும் அவளென்று அறிகின்றனர் அன்னைநெறி அமைந்த படிவர்.”

அனல்மேல் எடைமிக்க காட்டுவிறகுகளை ஒன்றன்மேல் ஒன்றென சாய்த்து அமர்த்தினான் சண்டன். அனல் மெல்ல அவற்றில் பரவி எழலாயிற்று. “அகலாது அணுகாது அறிக, இகல்வென்று நின்றாடும் அனலை!” என்றபின் அவன் தன் உடலை சுருட்டிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டான். பிற நால்வரும் செந்தழலின் ஆடலை, உடனாடும் நிழல்வெளியின் பெரும்பித்தை நோக்கி அமர்ந்திருந்தனர்.