கிராதம் - 61
[ 25 ]
அர்ஜுனன் எழுந்து நின்று கிளம்பும்பொருட்டு இயல்பாக ஆடைதிருத்தியபோது திடுக்கிடலை உணர்ந்தான். ஆணின் ஆடையில் தானிருப்பதை உணர்ந்ததும் பதற்றத்துடன் ஓடிச்சென்று ஆடியில் நோக்கினான். பொருந்தா ஆடையுடன் அங்கு தெரிந்த உருவத்தை அவனால் அரைக்கணம்கூட நோக்கமுடியவில்லை. “யாரங்கே?” என்று கூவினான். அப்பால் சிற்றறைக்கதவு திறந்து உள்ளே வந்த கந்தர்வ ஏவலர் பணிந்தனர். “எனக்குரிய ஆடைகளை எடுங்கள்… உடனே” என்றான். அவர்கள் தலைதாழ்த்தினர்.
அவனை ஏழு கந்தர்வமகளிர் அழைத்துச்சென்று பெண்டிருக்கான அணியறையில் தீட்டப்பட்ட வெள்ளியாலான பேராடிமுன் அமரச்செய்தனர். மலர்மரத்தில் சிட்டுக்குருவிகள் மொய்ப்பதுபோல அவர்களின் விரல்கள் அவன் மேல் தொட்டும் விலகியும் குவிந்தும் விரிந்தும் அணிசெய்யலாயின. அவன் ஆடியில் தன் உருவை நோக்கிக்கொண்டிருந்தான். ஆணின் ஆடை அகன்றதும் பெருஞ்சுமை ஒன்று அகன்றதென அவன் உடல் எளிதாகியது. அவர்கள் எடுத்துக்காட்டிய ஆடைகள் எதுவும் அவனுக்கு உகக்கவில்லை. எங்கோ தன்னை நோக்கியிருக்கும் விழிகளுக்காகவே அவன் தன் உருவை புனைய விழைந்தான்.
ஆடைகளை மாறிமாறி நோக்கி தலையை ஆட்டிக்கொண்டிருந்தவனை நோக்கி குனிந்த கந்தர்வப்பெண் “அரசி, ஓர் ஆடையை நீங்கள் ஏற்றே ஆகவேண்டும். ஆடைகள் எவையும் உள்ளம் கொண்ட கனவை அணுகாதென்றறிக! காலம் சென்றுகொண்டிருக்கிறது” என்றாள். இளநீலப்பட்டாடையை கையில் எடுத்துக்கொண்டு “இது அவ்விழிகளுக்கு உகக்குமா?” என அவன் எண்ணினான். எவ்விழிகள்? அவை நூறு ஆயிரம் பல்லாயிரமெனப் பெருகிய ஓரிணைவிழிகள் என அப்போது உணர்ந்தான். யார் அவன்? அவன் பெண்ணுள்ளத்தின் ஆழ்கனவிலிருந்து தன் உருத்திரட்டி எழுபவன். இன்னமும் அவன் முழுதுருவாகவில்லை. விழியென்றே ஆகி எங்கோ நின்றிருப்பவன்.
நீள்மூச்சுடன் “இதுவே போதும்” என்றாள். ஆடையும் அணியும் புனைந்து முகச்சுண்ணமும் விழிக்கரியும் இதழ்ச்செம்மையும் தீட்டி கைகளிலும் கால்களிலும் செம்பஞ்சுக்குழம்பு பூசி மலர்ச்சாறும் கோரோசனையும் கஸ்தூரியும் என நறுமணம் கொண்டு எழுந்தபோது விழிகள் முழுமையாக மாறிவிட்டிருந்தன. தன் உருவை நோக்கியபடி நின்றபோது இளமூச்சில் முலைக்குவைகள் எழுந்தமைந்தன. கைகள் கழுத்தைத் தொட்டு விலகின. “கிளம்புக, அரசி!” என்றாள் கந்தர்வப்பெண். “ஆம்” என்றபடி அவள் ஆடிமுன்னால் அப்படியே நின்றாள். நூறு விழிகொண்டு தன்னை நோக்கிக்கொண்டிருந்தாள். நோக்கி நோக்கி தன்னை தீட்டினாள். அகன்றுநின்று ஆணென்றாகி மீண்டும் நோக்கினாள்.
“அரசி” என்றாள் கந்தர்வப்பெண். அவள் “செல்வோம்” என ஆடையை அள்ளிக்கொண்டு மெல்ல நடந்தாள். அணிகுலுங்கும் ஓசையும் ஆடைநலுங்கும் ஒலியும் மெல்லிய மந்தணச்சொற்களென அவளுடன் வந்தன. அவை அவள் ஒளிந்துகொள்ளும் மலர்க்காடு. அவள் அங்கிருந்தபடி நோக்கிக்கொண்டிருந்தாள். எவ்விழிகள் என் இறையே? எவர் முகத்தில் பூத்தவை? அவளைக் கண்ட அத்தனை ஆண்விழிகளும் மின் கொண்டு பின் அணைந்தன. அவள் படியிறங்கி கூடம் கடந்து வெளிமுற்றத்தை அடைந்தாள்.
மாதலி அவளைக் கண்டதும் எவ்வியப்பையும் காட்டவில்லை. “வருக!” என்றபின் தேர்ப்பீடம் மீது ஏறிக்கொண்டான். அவள் தேரிலேறி இந்திரபீடத்தில் அமர்ந்து தன் வலக்காலை இடக்கால் மேல் வைத்து ஆடையைத் திருத்தி குழல் சீர்படுத்தி “செல்க!” என்றாள். தேர் குலுங்கிக் கிளம்பியது. “என்னிடம் ஊர்வசி சொன்னாள்” என்றான் மாதலி அவளை நோக்காமல். அவள் ஒன்றும் சொல்லவில்லை. “சினந்திருந்தாள். அவள் இட்ட தீச்சொல்லுக்காக வருந்தினாள்.” அவள் “அது நன்றே” என்றாள். மாதலி “எதுவும் நன்றே” என்றான். அவன் புன்னகைப்பது முதுகிலேயே தெரிந்தது.
“நான் இவ்வுருக்கொள்ளாமலிருந்தால் எந்தையை அவைநின்று எதிர்கொள்ளத் துணிந்திருக்க மாட்டேன்” என்றாள் விஜயை. “ஏன்?” என்று மாதலி கேட்டான். “அறியேன். இவ்வுடலில் இருக்கையில் இதுவரை அறியாத துணிவொன்றை அடைகிறேன்” என்றாள் விஜயை. “தந்தையை மீறும் துணிவா?” என்றான் மாதலி. “ஆம், உண்மை. நான் பிறந்த இடத்திற்குரியவள் அல்ல என்னும் உணர்வு. முற்றாக என்னை வெட்டிக்கொண்டு சென்றுவிடவேண்டுமென்னும் விழைவு” என்றாள். “நான் இங்குள்ள எவருக்கும் இதுவரையிலான எவற்றுக்கும் உரியவளல்ல என இயல்பாகவே என் அகம் உணர்கிறது, தந்தையே.”
மாதலி தோள்குலுங்க மெல்ல சிரித்து “அதை உணராத பெண் எவள்?” என்றான். “ஆம், நான் எவருக்குரியவளென அறியேன். ஆனால் எங்கோ எவரோ என்னை முற்றுரிமைகொள்ளவிருக்கிறார் என்பதை மட்டும் நன்குணர்ந்திருக்கிறேன்” என்றாள் விஜயை. மாதலி “நன்று மகளே, அவ்வண்ணமே ஆகுக! தன்னை முற்றளித்து முழுவுரிமைகொண்டு வெல்பவள் பெண் என்பது மூத்தோர் சொல்மரபு” என்றான். தேர் நகரின் தெருக்களினூடாகச் சென்றது. “எந்தை என் உருமாற்றத்தை அறிந்திருப்பாரா?” என்றாள் விஜயை. “ஆம், ஊர்வசி அவரிடம் சொல்லாமலிருக்க முடியாது.” அவள் “நன்று, நான் அறிந்த விழிகள் முன்பு சென்று நிற்கவேண்டுமென்பது சற்றே எளிது” என்றாள்.
“அவையில் இருப்பவர் அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை” என்றான் மாதலி. “எவர் அறிந்தாலென்ன? நான் எந்தையையும் என் மூத்தவரையும் மட்டுமே எண்ணுகிறேன்” என்றாள் அவள். “விந்தைதான். இவ்வுருவில் என்னை எவர் எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என உய்த்துணரவே இயலவில்லை.” மெல்ல சிரித்தபடி “எந்தை முன்னரே அறிந்து எதிர்நோக்கியிருந்தாலும் என் உருவம் கண்டதும் அதிர்ச்சியே கொள்வார் என நினைக்கிறேன். மூத்தவரும் என்னை ஏற்றுக்கொள்ள மறுப்பார்” என்றாள். மாதலி “உள்ளம் எவ்வண்ணம் செல்லுமென எவர் அறிவார்?” என்றான்.
“அன்னை அருவருப்பு கொள்வார். அருகணையவே மறுப்பார்” என்றாள் விஜயை. மாதலி ஒன்றும் சொல்லவில்லை. “ஆனால் எவர்கொள்ளும் உணர்வும் எனக்கு ஒரு பொருட்டல்ல என்று தோன்றுகிறது. நான் எனக்குரிய உடலில் இருக்கிறேன் என்று உணர்கிறேன்.” மாதலி அறியாமல் திரும்பி நோக்கினான். “உண்மை, தந்தையே. நான் இப்போதுதான் முற்றமைகிறேன். அவ்வுடலில் நான் அடைந்த தனிமை இதிலில்லை. அது கன்றுதேடும் தாய்முலைக்கண் போல எக்கணமும் உறுத்து தவித்துக்கொண்டிருந்தது. இது தன்னுள் நிறைந்துள்ளது.”
“அவ்வண்ணமென்றால் நன்று” என்றான் மாதலி. “ஆனால் இது தன்னை பிறிதொருவர் முன் படைக்க விழைகிறது. கோடிவிதைகள் புதைந்துகிடக்கும் நிலம்போல பெருக விழைகிறது” என்றாள் விஜயை. அவள் மேலும் சொல்ல வாயெடுத்ததுமே நாணம் கொண்டு தன்னை அடக்கிக்கொண்டாள். அவள் சொற்களுக்காகக் காத்த மாதலியின் தோளிறுக்கம் சிலகணங்களுக்குப்பின் மெல்ல தளர்ந்தது. “ஆம், இதுவும் முழுமைகொண்டது அல்ல. ஆனால் இதன் தனிமையும் தவிப்பும்கூட தன்னளவிலேயே நிறைவானவை. பிறிதொன்றில்லாமலேயே தன்னிலிருந்து அனைத்தையும் உருவாக்கி நிறைய இதனால் முடியும்.”
அச்சொற்கள் ஓடிக்கொண்டிருக்கையிலேயே அவள் முழுதறிந்துவிட்டாள். மெய்ப்புகொண்டு இருகைகளாலும் முலைகளை பற்றிக்கொண்டாள். “இறையே, முழுமுதலே!” என மெல்ல கூவினாள். மூச்சிரைக்க அவள் உடல் தவித்தது. எழுந்து நிற்கப்போகிறவள்போல ஓர் அசைவு அவளில் எழுந்து அடங்கியது. மாதலி என்ன என்று கேட்க எழுந்த வினாவை அடக்குவது தெரிந்தது. அவன் உள்ளத் தயக்கத்தை கடிவாளம் வழியாக அறிந்த புரவிகள் மென்னடையிட்டன. அந்த சீர்தாளத்தில் அமைந்தது அத்தருணம்.
“தந்தையே, அது அவர்தான்” என்றாள் விஜயை. “எப்படி இதை எண்ணாமலிருந்தேன்? பிறிதெவர்?” அதை உணர்ந்ததும் மாதலி “ஆம்” என்றான். “நான் அவரை எண்ணி என்னை அமைத்துக்கொள்ள வேண்டியவள். அவரால் முழுமையாக நிறைக்கப்பட வேண்டியவள்” என்றாள். மாதலி பெருமூச்சுவிட்டான். “என் நல்லூழ் இது. அவரை முழுதுணரவே இப்பெண்ணுடலில் அமைந்தேன் போலும். உருகி விழிநீர் சிந்தி அவரை அறிவேன். முழுதும் படைத்து முற்றழிந்து அவரென்றாவேன்.” அவள் குரல் நனைந்து ஊறிய பட்டுபோல் மென்மைகொண்டிருந்தது. எவரிடமென்றில்லாமல் அவள் அகம் வீரிட்டது. “காணும் கேட்கும் சுவைக்கும் முகரும் உணரும் எண்ணும் அனைத்தும் அவரென்றே ஆகுக! தெய்வங்களே, இனி அவர் முகம்சூடியே என்னை அணுகுக!”
பிச்சியைப்போல அவள் இரு கைகளையும் கோத்து இறுக்கி அதில் முகம் புதைத்து அதிர்ந்தாள். பீலியும் குழலும் விழியொளியும் நகையொளியும் அன்றி இவ்விழிகளுக்கு பிறிதேதும் உவப்பல்ல. கரியவன் தோளும் நெஞ்சும் அன்றி நான் அமையுமிடம் ஏதுமில்லை. உணர்வெழுச்சியால் அவள் தோள்களை குறுக்கினாள். மெல்லிய விம்மலொன்று அவளிலிருந்து எழ மாதலி திரும்பிப்பார்த்தான். அவள் உடல்குலுங்க அழுதுகொண்டிருப்பதை நோக்கியபின் புரவிகளின் முதுகில் சவுக்கால் மெல்ல தொட்டான். அவை விரைவுகொண்டன.
[ 26 ]
இந்திர அவைக்குள் அவள் நுழைந்தபோது அனைத்து விழிகளும் திரும்பி அவளை நோக்கி உடனே திடுக்கிட்டு விலகிக்கொண்டன. அந்நோக்கே ஓர் சேர்ந்தொலியென எழுந்தமைந்தது. பின் ஆழ்ந்த அமைதியில் அவள் தன் ஆடையும் அணிகளும் ஒலிக்க மெல்ல நடந்தாள். அவளை மீண்டும் நோக்கியபின் இந்திரன் பெருமூச்சுவிட்டான். பாலி இருகைகளையும் கோத்து இறுக்க பெரும்புயங்கள் எழுந்தமைந்தன. உடலுக்குள் இருந்து இன்னொரு உடல் எழுந்து வெளியேறத் துடிப்பதென ஓர் அசைவு நிகழ்ந்தது. சனகரும் சனந்தனரும் சனாதனரும் சனத்குமாரரும் மட்டும் விழிகளில் நிறைந்த மைந்தர்களுக்குரிய ஆர்வத்தின் இளநகையுடன் அவளை நோக்கிக்கொண்டிருந்தனர்.
இந்திராணி இரு கனிவூறிய விழிகளுடன் அருகணைந்து அவள் கைகளை வளையல்களுடன் சேர்த்து பற்றிக்கொண்டாள். “வாடி” என்றாள். அவள் “அன்னையே, நிகழ்ந்ததை அறிந்திருப்பீர்கள்” என்றாள். “ஆம்” என்றாள் அவள். “அதனாலென்ன? நீ என் மகள்” என்று சொல்லி “வருக, உனக்கான பீடத்திலமர்க!” என அழைத்துச்சென்று அமர்த்தினாள். “நான் எவ்வகையிலும் துயருறவில்லை, அன்னையே. மாறாக உவகைதான் கொள்கிறேன்” என்றாள். “ஆம், அதையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது” என்றாள் இந்திராணி.
அவள் ஊர்வசியின் கண்களை சந்திக்க அவள் பதறி விலக்கிக்கொண்டாள். ரம்பையும் திலோத்தமையும் கிருதாசியும் பூர்வசித்தியும் ஸ்வயம்பிரபையும் அவளை நோக்கிக்கொண்டிருந்தனர். அவள் மிஸ்ரகேசியின் விழிகளை சந்தித்ததும் புன்னகைத்தாள். அவள் திகைத்து விழிவிலக்கி மீண்டும் நோக்கினாள். மிகமெல்லிய புன்னகை இதழ்களில் எழ தண்டகௌரியின் கைகளை தொட்டாள். அவளருகே அமர்ந்திருந்த வரூதினியும் கோபாலியும் “என்ன?” என மெல்ல கேட்க அவள் இதழ்மட்டும் அசைய ஏதோ சொன்னாள். அவர்கள் அவள் விழிகளை சந்திக்க அனைத்து முகங்களும் புன்னகையின் ஒளி சூடின.
பின்னால் நின்ற ஸகஜன்யையும் கும்பயோனியும் பிரஜாகரையும் அப்புன்னகையை அவர்களின் உடல்களிலேயே அசைவெனக் கண்டனர். சித்ரலேகை “என்ன?” என்றாள். எவரும் சொல்லாமலேயே அனைவரும் அவள் விழிகளை அறிந்தனர். ரம்பை புன்னகையுடன் அவளுக்கு மட்டுமே தெரியும்படி மெல்ல தலையசைத்தாள். திலோத்தமை அதை நோக்கியபின் குறும்புச்சிரிப்புடன் அவள் ஆரம் நன்றாக உள்ளது என கைவிரல் செய்கையால் காட்டினாள். அவள் அதைத் தொட்டு நோக்கியபின் சரி என தலையசைத்தாள். விழியுணரா சரடொன்று சிலந்திவலையென விரிந்து பின்னி அவர்களை மட்டும் ஒரு தனியுலகில் ஒன்றாக்கியது. தேவமகளிர் ஒவ்வொருவராக அதில் வந்து இணைந்துகொண்டிருந்தனர்.
அவை நிகழ்வுகளை அவள் அறியவில்லை. முறைமைச்சொற்களும் வாழ்த்துகளும் அறிவிப்புகளும் முற்றிலும் பொருளிழந்து பிறிதொரு உலகிலென நிகழ்ந்துகொண்டிருந்தன. அங்கிருந்த அத்தனை பெண்களின் ஆடைகளையும் அவள் அறிந்துவிட்டிருந்தாள். அணிகளின் அத்தனை செதுக்குகளையும் நோக்கிவிட்டிருந்தாள். விழிகளும் இதழ்களும் விரல்நுனிகளும் உரைத்த ஒலியிலா மொழியில் அவர்கள் கருத்துக்களை சொன்னார்கள். பாராட்டுக்களை ஏற்றார்கள். கச்சபர் இந்திரனை வாழ்த்தி முழங்கும் சொற்களை எடுத்தபோது மேனகை மிகநுட்பமாக உதடுகளைச் சுழித்து பழிப்பு காட்டினாள். அத்தனைப் பெண்விழிகளும் சிரிப்புகளால் ஒளிவிட்டன.
நடுவே புகுந்த இந்திராணியின் விழி அவர்களை அதட்டியபோது அனைவரும் அதை அடக்கிக்கொண்டனர். லோமசர் தன் அழியா காமத்துறப்பு நோன்பைச் சொல்லி அவையை வாழ்த்தியபோது அப்படியா என பொய்வியப்பு காட்டினாள் விழிகளால் வியந்து கும்பயோனி. உண்மையாடி என்றாள் மேனகை. ஆம் எனக்குத்தெரியும் என்றாள் கிருதாசி. சீ என்றாள் மேனகை. என்ன அதில் என்றாள் பிரஜாகரை. போடி என மேனகை அதட்டினாள். சரிதான் என்று திலோத்தமை அவர்களை அடக்கினாள். மானுடர் நடுவே தேவர்களென அப்பாலெழுந்த வாய்ச்சொற்கள் நடுவே அவர்களின் நுண்மொழி உலவியது.
இந்திரனின் குரலை அவள் கேட்டுக்கொண்டிருந்தாள். பலமுறை ஏதோ சொல்லப்பட்டது. பின்புதான் அத்தனை விழிகளும் தன்னை நோக்குவதை அவள் உணர்ந்தாள். இந்திராணி அவள் தொடையைத் தொட்டு “உன்னிடம்தான் சொல்லப்படுகிறது, இளையவளே” என்றாள். அவள் திடுக்கிட்டு விழித்து “என்ன?” என்றாள். “உன்னிடம் ஊர்வசியை அனுப்பியவன் நான். உன்மேல் விழுந்த தீச்சொல்லும் அவளுடையதே. மைந்தா, நீ அதை விட்டு விலகி எழமுடியும். அவளிடம் சொல்மீட்க ஆணையிடுகிறேன்” என்றான் இந்திரன். “தந்தையே, தாங்கள் என்னை மைந்தா என்றழைக்கும் சொல் என்னை கூசவைக்கிறது” என்றாள். இந்திரன் நாவெடுக்கும் முன் “நான் இவ்வுடலிலேயே இனிதமைந்துள்ளேன். பிறிதொன்றை வேண்டேன்” என்றாள்.
இந்திரன் சினம்கொண்டு கைநீட்டி ஏதோ சொல்லவந்தான். சுளித்த முகத்தில் பற்கள் இறுகியிருந்தன. பின் தன்னை எளிதாக்கிக்கொண்டு “நான் உன்னை புரிந்துகொள்கிறேன், மகளே. உள்ளம் என்பது நீர். கலத்தின் உருவே அதற்கும். ஆனால் இவ்வுடல் உன்னுடையதல்ல” என்றான். “இல்லை தந்தையே, பாறையென இறுகியிருந்தது நீர்பட்டு மென்சேறாகியிருக்கிறது, அவ்வளவே” என்றாள். “வீண் சொல் பேசாதே. இது அவளிட்ட தீச்சொல். அவள் இதை திருப்பி எடுக்கமுடியும்” என்றான் இந்திரன். “நான் அதை விழையவில்லை. சொல்மீட்சிக்கு நான் கோராமல் அவள் அருளமுடியாது” என்றாள் அவள். “என்னுள் இருந்த ஒரு முள்ளை இழந்து அமைந்திருக்கும் இதுவே என் பெருநிலை.”
“அதை பின்னர் பார்ப்போம்” என்றார் வசிட்டர். “இவ்வவை கூடியிருப்பது தேவர்க்கரசர் தன் மைந்தரை அவைநிறுத்தி வாழ்த்தும்பொருட்டு. அது நிகழட்டும்.” இந்திரன் சொல்லெடுப்பதற்குள் “மைந்தனென்றும் மகளென்றும் ஆனது ஒன்றே. அதன் தோற்றங்களை நாம் கருத்தில் கொள்ளவேண்டியதில்லை” என்றார். இந்திரன் பெருமூச்சுடன் கைகளைக் கோத்து அதில் முகத்தை பதித்துக்கொண்டான். பாலி உரக்க “இளையவனே, நான் உன்னை அவ்வண்ணமே அழைப்பேன். தந்தை உன்னிடம் விழைவதென்ன என்று நீ நன்கறிவாய். அதை அவர் இந்த அவைமேடையில் அரசகோல்சூடி நின்று மீண்டும் கோருகிறார்” என்றான். அவன் அவள் விழிகளை அப்போதுதான் நோக்கினான். “இல்லை, ஆணையிடுகிறார்” என்றான்.
அவள் அவனை நேர்விழிகளால் நோக்கி “பொறுத்தருள்க, மூத்தவரே! தந்தையும் அன்னையும் இவ்வவையும் என்னை முனியலாகாது. நான் இங்குள்ளவள் அல்ல. உங்கள் எவருக்கும் உரிமைப்பட்டவளும் அல்ல. எச்சொல்லும் எவ்வுணர்வும் எந்நெறியும் என்னை கட்டுப்படுத்தாது” என்றாள். பாலி திகைத்து அவளை நோக்கி நின்றான். இதழ்கள் சிலமுறை சொற்களுக்காக அசைந்தன. பின்னர் திரும்பி இந்திரனை நோக்கிவிட்டு “நீ உன் தந்தையின் அவையிலமர்ந்துள்ளாய்” என்றான். “ஆம், அவர் என் தந்தை. அதை நான் மறுக்கவில்லை. ஆனால் நான் அவருக்குரியவளல்ல.”
“பின் எவருக்குரியவள்?” என்று பாலி உரக்க கேட்டான். பெரிய கைகளை விரித்தபடி அவளை நோக்கி வந்தான். “அவருக்கு” என அவள் சொன்னாள். அக்கணமே அலையென அவளை அறைந்து மூழ்கடித்த நாணத்தால் தலைகவிழ்ந்து உடல் விதிர்த்து தோள்குறுக “அவர்தான்” என்றாள். அவள் இதழ்கள் நடுங்கின. இமைகள் அதிர்ந்தன. “யார்?” என்று அவன் கூவினான். “நீங்களனைவரும் அறிவீர்கள்” என்றாள் அவள். அவன் என்ன இது என்பதுபோல கைவிரித்தான். இந்திரன் தன் தலையை கையால் அறைந்துகொண்டான்.
“நீங்கள் ஆண்கள். உங்கள் உலகில் நின்றபடி இதை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. நான் என்னை முற்றளித்துவிட்டவள்” என்றாள். “அப்படி முற்றளிக்க எவராலும் முடியாது. அறிவிலிபோல் சொல்லெடுக்காதே. உளம்கொண்டு உடல்கொண்ட எவரும் தனிமையின் ஒரு துளியேனும் உள்ளே எஞ்சவைத்தவர்களே” என்றான் இந்திரன். “இல்லை, காதல்கொண்ட பெண்ணின் இயல்பு அது. காதலின் பெருநிலையை வாழ்நாளெல்லாம் நீட்டித்துக்கொண்டவளுக்கு அது இயல்வதே” என்று அவள் சொன்னாள்.
இந்திரன் சலிப்புடன் தலையசைத்து “வீண் சொல்” என்றான். “தந்தையே, அவ்வண்ணம் கணம் முறியாது காதலில் வாழ்ந்தவள் ஒருத்தியேனும் இருந்தாள். அவள் பெயர் ராதை” என்றாள். அவை முழுக்க வியப்பின் கார்வை எழுந்தது. “நான் இக்கணம் எனக்கு அணுக்கமானவளாக உணர்வது அவளை மட்டுமே. என்னை அறியக்கூடுபவளும் அவள் ஒருத்தியே” என்றாள். பின்னர் எழுந்து “நன்று, இந்த அவையில் அதைச் சொல்லும்பொருட்டே இங்கு வந்தேன். முழுதுருக்கொண்டு பிரம்மம் எழுந்து வந்தாலும் என் உள்ளத்தை மாற்றமுடியாதென்று இனி நான் சொல்லவேண்டியதில்லை” என்றாள்.
அவை நோக்கி கைகூப்பி “என்னை வாழ்த்துக, முனிவர்களே! என்னுடன் இருங்கள், தேவர்களே. இனி நான் ராதை” என்றபின் அவைமேடை விட்டிறங்கினாள். அவள் படிகளில் கால்வைத்து கீழே சென்று அவைமுகப்பினூடாக நடக்கையில் இந்திரன் கை நீட்டி “விஜயை” என்றான். அவள் தயங்கிநின்றாள். “தந்தையைத் தேடிவந்து நீ வெறுங்கையுடன் மீளவேண்டியதில்லை. நீ விழைந்ததைக் கோருக!” என்றான். அவள் திரும்பி அவனை நோக்கி “தந்தையே, நான் படைக்கலம்கொள்ளவே வந்தேன். அப்படைக்கலம் அவருக்கு துணைநிற்பது. ஒருவேளை களத்தில் உங்களுக்கு எதிர்வருவது” என்றாள்.
“ஆம்” என்றபோது இந்திரனின் தோள்களில் தசைகள் மெல்ல தளர்ந்தன. “அவ்வாறென்றாலும் ஆகுக! நீ உன் படைக்கலத்தை கோரலாம்.” அவள் “உங்களாலும் வெல்லப்படமுடியாத படைக்கலம்” என்றாள். இந்திரன் விழிகள் அசைவற்றிருக்க நோக்கி அமர்ந்திருந்தான். பாலி “மகாவஜ்ரமா?” என்றான். “ஆம், அதுவன்றி வேறேதும் வேண்டியதில்லை” என்றாள். பாலி சினத்துடன் கையை தூக்கியபடி முன்னால் வர இந்திரன் அவன் தோளைத் தொட்டு தடுத்தான். எழுந்து “நன்று, ஈன்றோரில்லம் நீங்கும் எந்தப் பெண்ணும் விழைவது தந்தையை தன் கொழுநன் வெல்லவேண்டும் என்றே” என்றபோதே அவன் முகம் மலர்ந்தது. “ஆனால் அதை அவள் கேட்பதிலுள்ள தன்னலத்தின் கள்ளமில்லா அழகுக்கு முன் எந்தத் தந்தையும் தோற்றாகவேண்டும். கொள்க, மகளே!” என்றான்.
அவள் திரும்பிவந்து அவன் காலடியைத் தொட்டு சென்னிசூடினாள். அவள் தோள்பற்றி தன் மார்புடன் அணைத்து காதில் மகாவஜ்ர நுண்சொல்லை மும்முறை சொன்னான் இந்திரன். அவள் அதை மும்முறை திரும்பச் சொல்லி மீண்டும் வணங்கினாள். “சென்று வருக! உன்னுடன் என்றுமிருக்கட்டும் இப்படைக்கலம். இது உன்னை வெல்லமுடியாதவனாக நிலைநிறுத்தட்டும்” என்றான். “தங்கள் வாழ்த்துக்களால் நிறைநிலைகொண்டேன், தந்தையே” என அவள் சொன்னாள்.
“மகாவஜ்ரத்தின் முதன்மை இங்கு முடிந்தது” என பாலி கசப்புடன் சொன்னான். “தந்தையே, இனி மகாநாராயணமே வேதமெனத் திகழும். அதை நீங்களே தொடங்கிவைத்துவிட்டீர்கள்.” இந்திரன் “ஆம்” என்றான். “சென்று அவனிடம் அதை சொல்லச்சொல்லுங்கள் இவளிடம். அவன் நெய்யும் வேதப்பெருவலையில் ஒரு திசைக்காவலனாக அமைவீர்கள். அவன் வேள்விச்சாலையில் அவிகொள்ள நிரையிலொருவராக நின்றிருப்பீர்கள்.” இந்திரன் பெருமூச்சுடன் “அவ்வண்ணமென்றால் அதுவே ஆகுக! நான் இத்தருணத்தை பிறிதொருவகையில் கடக்கவியலாது” என்றான். வசிட்டர் “அது அவ்வண்ணமே ஆகவேண்டுமென்பதே ஊழ், அரசே” என்றார். “அறமே வேதமென உருக்கொள்கிறது. அறம் வளர்வதே இறைநெறி. வளர்தலென்பது உதிர்தலும் முளைத்தலுமென நிகழும் முடிவிலா மாற்றம்.”
“சென்றுவருகிறேன், தந்தையே. நான் வந்த பணி முடிந்தது” என்றாள். இந்திராணியை அணுகி கால்தொட்டு வணங்கிவிட்டு பாலியின் அருகே வந்தாள். “வாழ்த்துக, மூத்தவரே!” என அவன் கால்களை தொடக்குனிந்தாள். “வெற்றி கொள்க!” என்று பாலி அவள் தலையைத் தொட்டு நற்சொல் உரைத்தான். அவள் நிமிர்ந்ததும் பொய்க்கடுமையை முகத்தில் நிறுத்தி “உன்னை இவ்வண்ணம் காண அவன் விழையமாட்டான். நீ படைக்கலங்களுடன் வந்து வில்விஜயன் என தன் போர்க்களங்களில் நிற்கவேண்டுமென்றே எண்ணுவான்” என்றான். அவள் திகைத்து இந்திரனை நோக்க “ஆம், மகளே. அவன் உன்னை இங்கு அனுப்பியது அதன்பொருட்டே” என்றான்.
“அவர் என்னை அனுப்பவில்லை” என்றாள் அவள். “நீங்களிருவரும் கொண்ட அப்போர் நிகழ்ந்ததல்ல. நிகழ்த்தப்பட்டது” என்றான் பாலி. அவள் பெருமூச்சுவிட்டாள். “ஆனாலும்…” என சொல்லத் தொடங்கியதுமே இந்திரன் “நீ இவ்வுடலில் எழுந்தது ஆணென இருந்து அறியமுடியாத பெரும் பிரேமையை அடையும்பொருட்டே. அதை வென்று சூடி முழுமைகொண்டுவிட்டாய். இது உன்னுள் கனவின் விதையென என்றுமிருக்கும். உன் மெய்யறிதல்களை கனியவைக்கும்” என்றான். அவள் “ஆம்” என்றாள்.
“ஊர்வசியின் தீச்சொல் அழியவேண்டியதில்லை. அவள் ஆணையிடும் காலம் மட்டும் நீ பெண்ணென்று வாழ்ந்தால் போதும். அக்காலத்தை நீ விழையும்படி தெரிவுசெய்யலாம்” என்றான் இந்திரன். ஊர்வசி “ஆம் இளைய பாண்டவரே, அக்காலமொன்று வரும். அன்று என் தீச்சொல்லே நற்சொல்லென்று உங்களுக்கு துணையிருக்கும்” என்றாள். கைகூப்பி “அவ்வாறே ஆகுக!” என்றான் அர்ஜுனன். ஊர்வசி அருகே வந்து அவன் கைகளைப் பற்றியபடி “மீட்டு எடுத்த சொல் என் உடலில் ஒரு கரிய மச்சமென எப்போதும் இருக்கும். அக்குறையை ஓர் அருமணி என நான் சூடியிருப்பேன்” என்றாள்.
அவள் தொட்டதுமே அவன் முலைகரைந்து தோள்பெருத்து கைகள் இறுகி அர்ஜுனன் என்றானான். அவள் விழிகளை நோக்கியபடி “இன்று அறிகிறேன் உன் அகத்தை” என்றான். அவள் அவன் விழிகளை நோக்காமல் திரும்பிக்கொண்டு சிலம்புகள் ஒலிக்க வளையல்கள் குலுங்க ஆடை நெகிழ்ந்து நீண்டு தரையில் இழுபட்டுத் தொடர விரைந்தோடி உள்ளே சென்றாள். அர்ஜுனன் சுரமகளிர் விழிகளை நோக்கினான். அவை மீண்டும் அகன்று வேறொன்றாக விரிந்திருந்தன. அவையை கைகூப்பி வணங்கிவிட்டு அவன் வெளியே நடந்தான்.