கிராதம் - 35

[ 16 ]

தண்டகாரண்யம் வறண்டு தூசுபடிந்த புதர்களுடன் சூழ்ந்திருந்தது. முட்புதர்களுக்குள் சருகுகள் சலசலக்க ஓடி பாறைமேல் தாவி ஏறிநின்று செதில் உப்பி வண்ணம் மாற்றிக்கொண்ட பச்சோந்தியின் களைத்த கண்களில் நீண்ட கால வறட்சியின் சலிப்பு தெரிந்தது. காலடி பதிந்த இடங்களில் கூழாங்கற்கள் எழுந்து உருண்டு சரிவிறங்கி சருகுகளை ஒலிக்கச்செய்தன. வியர்வை உடலில் வழிய இடையில் கைவைத்து நின்று “நீர் இருக்கிறதா, பைலரே?” என்று ஜைமினி கேட்டான்.

“அது உள்ளம் கொண்ட விடாய். நீர் இப்போது கேட்ட கதை அவ்விடாயை அளிக்கிறது” என்றான் பைலன். “மிகக்குறைவாகவே நீர் உள்ளது. நீரின் பசுமை தெரியத்தொடங்கிய பின்னர் நாம் நீர் அருந்துவதே நன்று.” விண்ணை நோக்கி “வெளித்துக்கிடக்கிறது. மரங்களின் இலைகள்கூட தளர்ந்துவிட்டிருக்கின்றன. சோர்ந்த பசுவின் காதுகள்போல தொங்குகிறது இந்த செண்பகமரத்தின் இலை” என்றான்.

சண்டன் “அது சிறந்த கவிதை” என்றான். “நானும் கவிதை எழுதுபவனே” என்றான் ஜைமினி. “ஆம், நான் இல்லை என்று சொல்லவில்லையே? இதுவும் கவிதைதான்” என்றான் சண்டன். “கவிஞர் பலவகை. சொல்லை படைக்கலமாக்கியவர். சொல்லை துடுப்பென ஆக்கியவர். சொல்சூடி வானெழுபவர். சொல்லை ஆடையென அணியென சூடிக்கொள்பவர்.” ஜைமினி “நான் என்ன செய்யவேண்டுமென எனக்கே தெரியும்” என்றான். “அது நன்று. தெளிவிருப்பவர்கள் நெடுந்தொலைவு அலையவேண்டியிருக்காது” என்றான் சண்டன்.

பைலன் “சற்று தொலைவுதான். மலைச்சரிவில் ஒரு உணவுநிலை உள்ளது என்கிறார் சண்டர்” என்றான். “எனக்கு உடனடியாக அருந்த நீர் வேண்டும். அதன்பின்னரே நான் கால்வைக்க முடியும்” என்றான் ஜைமினி. “நீர் மிகச்சிறிதளவே உள்ளது. ஒருவேளை உமக்கே தேவையாகலாம்” என்றான் சண்டன். “நீர்” என்றான் ஜைமினி. சண்டன் நீரை கொண்டுசென்று அவனுக்கு அளிக்க அதை வாங்கி முழுக்க குடித்தபின் குடுவையை திருப்பி அளித்தான். “முற்றருந்தலாகாது என்பது ஒரு முறைமை” என்றான் பைலன். ஜைமினி அதைக் கேளாதவன் போல “செல்லலாம்” என்றான்.

“செல்வோம்” என்றான் சண்டன். அவர்கள் காய்ந்த நிலத்தினூடாக கூர்ந்த முட்களை ஒதுக்கி உருளும் பாறைகளைக் கடந்து சென்றார்கள். “சொல்க!” என்றான் பைலன். “யவனநாட்டிலிருந்து  திரும்பி வந்துகொண்டிருந்த காப்பிரிநாட்டு வணிகக்குழுவினர் பாலைநிலத்தில் வெற்றுடலுடன் சடைக்கற்றைசூடி சிரித்தும் நடனமிட்டும் சென்றுகொண்டிருந்த பித்தனை கண்டார்கள். அவனை அவர்கள் தங்கள் அத்திரிகள் ஒன்றின்மேல் ஏற்றிக்கொண்டார்கள். அவர்களின் காப்பிரிநாட்டு துறைநகர் ஒன்றுக்கு கொண்டுசென்றார்கள்.”

“அங்கே சென்று நீரைக் கண்டபின்னர்தான் அவன் மீண்டான். முதன்முதலாக மானுடரைக்கண்டதும் அவனால் அதை அடையாளம் காணவே முடியவில்லை. ஆனால் அவனுள் இருந்த விலங்கு சுனைகளைக் கண்டடையும் திறன்கொண்டிருந்தது என்பதை அவர்கள் உணர்ந்தனர். அவன் மொழியிழந்திருந்தான். அனைத்து முறைகளையும் இழந்திருந்தான். கடல்கண்டதும் கைவிரித்து அதை நோக்கி ஓடி மயங்கி விழுந்தான். பதினெட்டு நாட்கள் அழுதபடியும் அரற்றியபடியும் அரைவிழிப்பு நிலையில் இருந்தான். அதற்குள் அவன் உடலின் குலக்குறிகளிலிருந்து அவன் அர்ஜுனன் என அவர்கள் உணர்ந்துகொண்டிருந்தனர்.”

“விழித்து மொழியெழுந்ததும் அவன் கிழக்கு என்றே சொன்னான்” என்றான் சண்டன். “அங்கிருந்து காப்பிரிகளின் கலத்தில் ஏறி தென்முனை சுற்றிக்கொண்டு அவன் கிழக்கே இந்திரகீல மலையை தேடிச்சென்றான்.” முகம் மலர்ந்து கேட்டுக்கொண்டு வந்த பைலன் சண்டனை நோக்கி முன்னால் சென்று உள்ள எழுச்சியுடன் “திசைவெற்றி என்னும் சொல்லே உள்ளத்தை எழுச்சி கொள்ளச்செய்கிறது, சண்டரே” என்றான்.

தோளில் இட்ட முழவை விளையாட்டாகத் தட்டியபடி வேர்கள் மேல் தாவித்தாவி முன்னே சென்ற சண்டன்  நின்று திரும்பிநோக்கி “ஆம், தவழ்ந்து இல்லம் விட்டு வெளியே வந்து படியில் அமர்ந்து தொலைவை நோக்கும் குழவி அடையும் முதல் உணர்வு அது. வெல்வதற்குத் திறந்திருப்பவை திசைகள் என்ற எண்ணம் அதை ஒவ்வொரு கணமும் தூண்டிக்கொண்டிருக்கிறது” என்றான்.

“ஒவ்வொரு முறை நாம் பார்க்கும்போதும் அதன் கால்கள் கொண்டுசெல்லும் தொலைவின் இறுதி எல்லையில்தான் அது நின்றுகொண்டிருக்கிறது. பின்னர் எப்போதோ திசைகள் சுவர்களாகின்றன. உள்ளே நின்று நெஞ்சில் அறைந்து தொண்டை உடையும்படி கூவி ஓங்கி உதைத்து கொந்தளிக்கிறோம்.  தலையை அறைந்து யார் அங்கே, என்னை கேட்கிறீர்களா, எனக்கு மறுமொழி அளிப்பீர்களா, என்னை அறிவீர்களா என்று ஆர்ப்பரிக்கிறோம். சோர்ந்து உடைந்து தனிமையிலமர்ந்து கண்ணீர்விடுகிறோம்.”

“பின்பு ஒரு கட்டம் வருகிறது. திசைகள் இறுகி கோட்டைகளாகின்றன. முடிவின்மையிலிருந்து அலையலையென எழுந்துவரும் அனைத்தையும் தடுத்து அப்பால் நிறுத்தி நம்மைக் காக்க உறுதிகொண்டு நின்றுள்ளன. திசைகளுக்கு அப்பாலுள்ள வெளி அச்சுறுத்துகிறது. திசைகளுக்குள் அடைபட்ட வெளி குழப்புகிறது. இன்னும் சிறிதாகுக இக்கோட்டை, இன்னும் அணுகுக இச்சுவர்கள் என்று ஏங்குகிறோம். நாம் விழைய விழைய திசைகள் அணுகி வருகின்றன. சிற்றூராகின்றன. இல்லச்சுவர்களாகின்றன. கவசமாகின்றன. உடை என்றாகின்றன. தோல் என்றாகின்றன.”

சண்டன் முழவில் கையோட்டி “தந்தனத் தானன தானே – தன தந்தன தானன தானே” என்றான். மெல்ல துள்ளி ஆடியபடி “வயதேற வயதேற சுருங்குவதேனடி  கண்ணே? வாழ்க்கை அறிந்திட அறிந்திட அகலுவதேனடி பெண்ணே? விழிசூட மொழிசூட மழலையென்றாகிறார் கண்ணே – மாந்தர் வீட்டுக்குள் ஒடுங்கும் விந்தைதான் என்னடி பெண்ணே?” என்று பாடினான். பைலன் “வீட்டுக்குள் ஓட்டுக்குள் அடங்குவதேனடி பெண்ணே – வெளியென திசையென வேறொன்று நிற்கையில் கண்ணே?” என்று உடன் பாடினான்.

ஜைமினி “இதென்ன காட்டுத்தனமான பாடல்? இலக்கணமே இல்லை” என்றான். அவன் அருகே சென்று மிக அருகே குனிந்து “காட்டு வெள்ளம் கரைமீறி வருகுது பெண்ணே – கண்டு குளிரென்று குடிலுக்குள் ஒளிவாயோ கண்ணே?” என்றான் சண்டன். ஜைமினி பல்லைக்கடித்து முன்னால் சென்றான்.

சண்டன் முழவின் கதி மாற்றி முழக்கி “எட்டு திக்கும் ஆடையென்றாகிடும் வெறுமை – விண் தொட்டு தலையெழ நின்றிடும் முழுமை” என்றான். பைலன் உரக்க நகைத்து “எவராயினும் திசைகளை சூடிக்கொண்டுதான் விண்ணேகுகிறார்கள் மனிதர்கள்” என்றான். சண்டன் “ஆம், ஆனால் உயிருடன் உணர்வுடன் ஆடை களைந்து இல்லம் களைந்து ஊர் களைந்து அச்சம் களைந்து ஆணவம் களைந்து அமையும் உணர்வனைத்தையும் களைந்து திசைகளைச் சூடி நின்றிருப்பதற்கோர் ஆண்மை வேண்டும்” என்றான்.

“அருகநெறியினரின் பாதை அது” என்றான் ஜைமினி. “அவர்கள் தங்கள் உடலை இழிவுசெய்பவர்கள். உடல் இறைவாழும் ஆலயம். அதை இடிபாடுகளாகக் கொண்டு அலைகிறார்கள்.” சண்டன் அவனை நோக்கி சென்று முழவை முழக்கியபடி “ஆலயம் கண்டவர்  அறிவதேயில்லை கண்ணே – அணி ஆலயம் என்பதும் ஆடையே யாகும் பெண்ணே” என்றான். ஜைமினி “நாம் இங்கே என்ன செய்கிறோம்? இருட்டுவதற்குள் செல்ல நெடுந்தொலைவு எஞ்சியிருக்கிறது” என்றான்.

முழவை விரைந்து முழக்கிய சண்டன் சட்டென்று தன் மரவுரியைக் கழற்றி அப்பாலிட்டான். வெற்றுடலுடன் கால் தூக்கி வெறிநடமிட்டுச் சுழன்றாடி நின்றான். ஜைமினி திகைத்து அப்பால் திரும்ப அவன் முன்னால் சென்று நின்று தட்தட்தட் என்று முழவை அறைந்து “அந்தணரே, அந்த முப்புரியை கழற்றி வீசுக! அந்த மரவுரியை வீசுக! காற்றை அணிக! திசைகளை அணிக! வேதமழையின் முதல்துளி உங்கள் மேல் விழட்டும்” என்றான். ஜைமினி “அப்பால் செல்க!” என்றான்.

பைலன் தன் ஆடையைக் களைந்து வீசினான். கைகளைத் தூக்கியபடி சண்டனுடன் சேர்ந்து நடனமிட்டான். “ஆம், ஆம், ஆம்!” என்று முழவு முழங்கியது. “ஆம்! ஆம்! ஆம்!” என்று பைலன் கைகொட்டி ஆடினான். “ஆம், ஆம், ஆம்! செத்ததன் வயிற்றினில் சித்தம் இருப்பது பித்தர் அறிவாரோ? ஆம், ஆம், ஆம்! பித்தென்றும் பிழையென்றும் முற்றி எழுவதை மூடர் அறிவாரோ? பற்றிடும் யாவிலும் பேய்கள் வாழ்வதை பாவியர் அறிவாரோ? கற்றிடும் சொற்களே கால்தளை ஆவதை கவிஞர் அறியாரோ?”

அப்பால் ஒரு மரத்தடியில் சென்று வேர்களில் அமர்ந்து அவர்களை விழிசுருக்கி நோக்கிக்கொண்டிருந்தான் ஜைமினி. அவர்கள் ஆடுந்தோறும் வெறிகொண்டனர். வெறியேறும்தோறும் விசைகொண்டனர். விசைமுழுக்கும்தோறும் தாளம் பிசிறின்றி எழுந்தது. கைகளும் கால்களும் விழிகளும் விரல்களும் தாளமென்றேயாகி துடிக்க அவர்கள் ஒருவரை ஒருவர் நிறைத்தாடினர். ஒருவரோடு ஒருவர் நிறைந்து ஆடினர்.

மின்னலில் அவர்கள் ஒளியெனத் தெரிந்து அணைய ஜைமினி பாய்ந்து எழுந்தான். இடியோசை காட்டுக்குள் விழுந்து முழக்கம்கொண்டது. முகில்கள் பிளிறியமைந்ததுமே பிறிதொரு பெருமின்னலால் மரங்களனைத்தும் வெண்தழல்களாகி துடித்தணைந்தன. இடியோசை எழுந்து முற்றமைதியை விரித்தது. மீண்டும் செவி எழுந்தபோது காடெங்கும் பறவைக்குரல்கள் எழுந்து முழக்கமாவதைக் கேட்டான். மரக்கிளைகளில் குரங்குகள் கிளர்ச்சிகொண்டு தாவிப்பாய்ந்து சுழன்றுவந்தன.

தொலைவில் மண்மணம் எழுந்தது. இளநுங்கின் மணம் என ஒருமுறையும் வறுபட்ட பருப்பின் மணமென மறுமுறையும் புதுக்குருதியா என ஆழத்திலும் ஐயமெழுப்பும் மணம். உள்ளம் கிளர்ந்தெழ எழுந்த ஜைமினி மீண்டும் அமர்ந்துகொண்டான். ஆனால் அவன் கால்கள் துடித்து மண்ணில் அசைந்தன. அதை உணர்ந்ததும் அவன் அவற்றை இறுக ஊன்றி அழுத்திக்கொண்டான்.

முதல் மழைத்துளி அவன் மேல் விழுந்தது. உடலைக்குறுக்கி மழைத்துளிகளின் அறைதலை வாங்கிக்கொண்டான். அவனைச் சூழ்ந்த காடு பேரொலியாகியது. மின்னலில் நனைந்துசொட்டிய இலைகள் வெள்ளியொளிகொண்டு மின்னி அணைந்தன. மீண்டுமொரு இடிப்பெருக்கு. மீண்டுமொரு மின்னல் அதிர்வு. அவர்கள் மழையில் ஆடிக்கொண்டிருப்பதை அவன் அடிமரத்தின் குவைக்குழி ஒன்றுக்குள் உடலை நன்கு செலுத்தி ஒடுங்கிக்கொண்டு விழிவிரித்து நோக்கிக்கொண்டிருந்தான்.

KIRATHAM_EPI_35

“அந்தணரே, விடாய் தீர இந்த நீர் போதுமா?” என்றான் சண்டன். மழைக்குள் அவன் பற்கள் வெண்மையாக தெரிந்து மறைந்தன. “உங்கள் விடாய் தீர்ந்த பின்னர் எஞ்சும் மழையை என்ன செய்வீர்கள்?” ஜைமினி முகம் திருப்பி அப்பால் நோக்கினான். சண்டன் “காய்ந்த நிலமென விரிக! மழைமுழுமையையும் பருகலாகும்”  என்றான். பைலன் “வருக, ஜைமின்யரே!” என்றான். ஜைமினி திரும்பி நோக்காமல் மழை தழுவ சிலிர்த்துக்கொண்டிருந்த நெல்லிமரத்தை நோக்கிக்கொண்டிருந்தான்.

[ 17 ]

உடைகள் நீர்சொட்ட உடல்குளிர்ந்து நடுநடுங்கிக்கொண்டிருக்க அவர்கள் உணவுநிலையை சென்றடைந்தனர். அங்கே முன்னரே ஐம்பதுக்கும் மேற்பட்ட வழிநடையர் கூடியிருந்தனர். அடுமனைப்புகை தொலைவிலெழக்கண்டதும் உளம் மலர்ந்த சண்டன் “அன்னம்!” என்றான். பைலன் “ஆம், அன்னம்” என்று கூவினான். ஜைமினி சிரித்தபடி “நீங்கள் கொள்ளும் மகிழ்ச்சிகளில் நான் தடையின்றி பங்கெடுப்பது இதில் மட்டுமே” என்றான்.

“திசைவென்றவனின் கதையை நாம் இன்னமும் முடிக்கவில்லை, சண்டரே” என்றான் பைலன்.  ஜைமினி “திசை மூர்த்திகளிடமிருந்து அர்ஜுனன் மெய்யறிதல்களை பெற்றான். அவர்கள் அவனை வாழ்த்தி சொல்லளித்தனர். அது எப்படி வென்றதாகும்?” என்றான். “வெல்லப்படாத எதுவும் அடையப்படுவதில்லை, அந்தணரே” என்றான் சண்டன்.

சீற்றத்துடன் ஜைமினி “தெய்வங்களை எவரும் வெல்வதில்லை. வேள்விக்கு முன் வந்து அவி கொள்ளும் விண்ணவர் திசைவேந்தர். மானுடன் அவர்களை வெல்ல முடியாது” என்றான். அதே சிரிப்புடன் “வென்றவர் அனைவரும் தெய்வங்களை வென்றவர்களே” என்றான் சண்டன். “தெய்வங்கள் வெல்வதற்குரிய இலக்குகள் என்றறிந்தவனே வெல்வதற்கு எழுகிறான். தெய்வங்களை அடைகிறான். கடந்து சென்று தெய்வமென்றும் ஆகிறான்.”

ஜைமினி “உமது எளிய சூத மெய்யறிவு அவ்வாறு சொல்லலாம். வேத மெய்மை அதை ஏற்காது” என்றான். சண்டன் “மெய்மை எனும் பசுவை ஓட்டி வந்து இல்லத்தூணில் கட்டி கறந்தெடுத்த பாலே வேதம் என்று பிராம்மணம் ஒன்று சொல்கிறது. வெல்லப்படாத ஒன்றை எப்படி கட்டிவைத்தார்கள் உமது வேத மூதாதையர்?’’ என்றான். ஜைமினி உரக்க “நான் உங்களிடம் பேச விரும்பவில்லை. நீங்கள் இருவருமே வேத மறுப்புக் கொள்கை கொண்டவர்கள்” என்றான்.

“அந்தணரே, வேத மறுப்புக் கொள்கை கொண்ட இருவருடன் சொல்லுரசி உங்கள் வேதத்தை கூர்தீட்டிக் கொள்ளலாமல்லவா?” என்று  கேட்டபின் பைலனை பார்த்தான் சண்டன். பைலன் புன்னகைத்தான். “நான் உங்களிடம் பேச விரும்பவில்லை” என்றபின் ஜைமினி முன்னால் நடந்தான். அவர்களிடமிருந்து முற்றிலும் விலகுவதுபோல நடந்துசென்று பின்னர் தயங்கி நின்று அவர்கள் வருவதற்காக காத்தான்.

பைலன் “எந்தச் சொல்லாடலையும் அவர் விரும்புவதில்லை” என்றான். “அஞ்சுகிறார். நம்பிக்கைகளை சூடியிருப்பவர்கள் கைக்குழந்தைகளை இடையில் வைத்த அன்னையரைவிட எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள். அமுதூட்டி நெஞ்சணைத்து துயில்கையில் விழித்திருந்து   பேணி வளர்க்கிறார்கள். ஒவ்வொரு கணமும் அதையே எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். பிறனெல்லாம் எதிரியே என அச்சம் கொள்கிறார்கள்” என்று சண்டன் நகைத்தான்.

“நான்காவது பாதம் அர்ஜுனனின் இந்திர உலக பயணத்தைப் பற்றியதல்லவா?” என்று பைலன் கேட்டான். “காப்பிரிகளின் கலங்களுடன் அவன் கிழக்கே சென்றதாக சொன்னீர்கள். இந்திரகீலம் கிழக்கே எங்கோ உள்ளது என்பார்கள். பாரதவர்ஷத்தில் பல இந்திரகீலங்கள் உள்ளன.” சண்டன் “இந்திரவில் சூடி நிற்கும் மலைகளனைத்தும் இந்திரகீலங்களே” என்றான். “ஆனால் கீழைக்கதிர் பாரதவர்ஷத்திற்குள் காலடி வைப்பது இந்திரகீலத்தின் உச்சிப்பாறைமேல் என்பார்கள். அது காமரூபத்திற்கும் மணிபூரகத்திற்கும் அப்பால் விரிந்துள்ள மானுடர் அணுகமுடியா பசுங்காடுகளுக்கும் அப்பால் எங்கோ உள்ளது.”

அச்சொற்களை தொலைவிலிருந்தே கேட்டு மரங்களைப் பார்த்து அக்கறையற்று நிற்பது போன்ற தோரணையில் ஜைமினி அவர்களை எதிர்நோக்கினான். அதைப் பார்த்த சண்டன் புன்னகையுடன் பைலனைப் பார்த்து கண்களை காட்டினான். பைலன் “அவர் அர்ஜுனனை வழிபடுகிறார்” என்றான். “அவர் வேதமெய்யறிந்த பெருவீரர் என அவருடைய குருமுறை எண்ணுகிறது.” அவர்கள் அருகே சென்றதும் ஜைமினி “நாம் அன்னசாலையை நெருங்கிக்கொண்டிருக்கிறோம்” என ஆர்வமற்றவன்போல் சொன்னான்.

“இந்திர உலகுக்குச் சென்று தன் பெயர்த்தந்தையைப் பார்த்து பணிந்து மெய்யறியவைப் பெற்று அர்ஜுனன் மீண்டதை முழுமையான தனி பாதமாகவே கவிஞர் பாடியிருக்கிறார் அல்லவா, அது ஏன்?” என்று பைலன் கேட்டான். “மூன்று திசைகளிலிருந்தும் அவர் பெற்றது மெய்யறிதலின் மூன்று முகங்களை. கிழக்கில் எழுவதே முதல்மெய்மை” என்றான் சண்டன். “அப்படியென்றால் கிழக்கல்லவா முதலில் சென்றிருக்க வேண்டிய திசை?” என்று ஜைமினி தன்னை அறியாமலேயே சண்டனின் அருகே வந்து கேட்டான். “ஆம், அந்தணரே. ஆனால் அறிதலில் மட்டும் படிப்படியாக மேலெழுவதே உகந்தது” என்றான் சண்டன்.

“இருண்ட தெற்கின் இறப்புலகில் இருந்து தொடங்கி உயிர் முளைகொண்டெழும் கிழக்குவரை செல்வதே உகந்த சுற்று” என்றான் பைலன். சண்டன் உரக்க நகைத்து “நாம் அப்படி சொல்லிக்கொள்ளலாம். அப்படி நிகழ்ந்தது என்று மட்டுமே சூதனால் பாடமுடியும்” என்றான். ஜைமினி “சண்டரே, வேதமெய்ப்பொருளை அறிய வேத முதன்மைத் தெய்வமாகிய இந்திரனிடமல்லவா அர்ஜுனன் சென்றிருக்க வேண்டும்?” என்றான்.

“வேதமூதாதையர் அறிந்த முதல்தெய்வம் யமனே” என்றான் சண்டன். “இப்பெருநிலம் முழுக்க இன்னமும் ஆழ்காட்டுக்குள்ளும் உயர்மலைகளுக்குமேலும் தொல்குடிகள் வாழ்கின்றனர். அவர்கள் நாவில் வாழ்கின்றது வேதமெனும் கனிவிளைந்த சொற்காடு. அவர்களின் முதல்தெய்வம் காலமும் இறப்பும் நோயும் மீட்புமெனத் தோன்றி அருளும் தென்புலத்தோன். அவர்களின் மூதாதையரை அழைத்துச்சென்றவன், அவர்கள் வாழும் தென்னுலகை ஆள்பவன். அனைத்துக்கும் பொருள் அளிக்கும் முழுமையில் குடிகொள்பவன்.”

“பின்னர் எழுந்தவன் குபேரன். ஈட்டிவைக்கும் அனைத்துக்கும் தலைவன். அந்தணரே, வடக்கே இமயமலையுச்சியில் கீரி ஒன்றுள்ளது. மண்ணுக்குள் ஆழ்துளையிட்டு வாழ்வது. பனிக்காலம் முழுக்க அங்கே மறைந்திருப்பதனால் அது ஒவ்வொரு மணியாகச் சேர்த்து கரந்து வைக்கும் இயல்புகொண்டது. குளிர்காலத்தில் மலைக்கீரி வளைகளை அகழ்வது அங்குள்ளவர்களின் தொழில்களில் ஒன்று. பல தருணங்களில் பொன்னும் அருமணிகளும் அங்கே சேர்க்கப்பட்டிருக்கும். அக்கீரியை அவர்கள் தெய்வமென வழிபடுகிறார்கள். அதை குபேரன் என்கின்றன தொல்கதைகள். கொழுத்து உருண்ட அதன் வடிவிலேயே குபேரனும் இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்.”

“வருணன் மேலைநிலத்தில் மழைநோக்கி அமர்ந்திருக்கும் மக்களின் வேதத்தில் எழுந்த தெய்வம். வேழாம்பலும் மழைக்குருவிகளும் அவனை அறிகின்றன என்கின்றனர் தொல்குடிகள். முதல்மூவரும் அமர்ந்த வேதபீடத்தை பின்னர் இந்திரன் வென்றான் என்கின்றனர் வேதமறிந்த அறிவர். வகுக்கப்பட்ட தொல்வேதம் வருணனின் புகழ் பாடியது. தொடர்ந்த நால்வேதம் இந்திரனையே முதல் தலைவனாகக் கொண்டது. விரிந்த பாலைநிலத்திலிருந்தும் காடுசெறிந்த தென்னிலத்தில் இருந்தும் மலைமேல் பனியுலகில் இருந்தும் நமது மூதாதையர் புல்வெளி விரிந்த பசுநிலத்திற்கு வந்தபோது கண்ட தேவன் அவன்.”

“புல்வெளிகளைப் புரக்கும் தெய்வம் அவர்களுக்கு மேலும் உகந்தவனாக ஆகியிருக்கலாம். இன்றும் பசும்புல்வெளியின் மீது இளமழை நின்றிருக்கையில் கதிரெழக்காண்பது ஒரு பெருங்காட்சியே” என்றான் பைலன். “இம்மண்ணில் காலூன்றி நின்று மானுடர் காணும் காட்சியில் மழைவில்லுக்கு நிகரான அழகு கொண்டது வேறொன்றுமில்லை. இடியோசைக்கு நிகரான ஆற்றல் கொண்ட எதுவுமில்லை. குளிர் காற்றுக்கு நிகரான இனிமைகொண்ட எதுவும் இல்லை.”

ஜைமினி முகம் மலர “ஆம், எங்கள் குல மூதாதையர் என்றும் இந்திரன் பூசகர்களாகவே இருந்துள்ளனர். இந்திரநாதம் விண்ணில் எழும் நாளிலேயே அவர்கள் மூதாதையரை வாழ்த்தும் வேள்விகளை செய்வார்கள்” என்றான். “ஏனென்றால் இந்திரன் பிறரைப்போல அசுரர்களிடமிருந்து எழவில்லை. ஒருபோதும் அசுரர்களால் வழிபடப்பட்டதில்லை” என்றான் சண்டன். ஜைமினி  சினத்துடன் “மீண்டும் மீண்டும் அனைத்தையும் அசுரர்களிடம் கொண்டுசென்று சேர்க்கவே விழைகிறீர்” என்றான். “ஆம், ஏனென்றால் நான் அசுரன்” என்றான் சண்டன்.

அதன்பின்னர் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. அன்னசாலை அணுகிவந்தது. சிறிய மண்பாதை ஒன்று அதை நோக்கி இறங்கிச்சென்றது. மழைநனைந்து மிதிபட்டு அது சேறாகிவிட்டிருந்தது. அவர்கள் அதில் ஒவ்வொருவராக இறங்கிச்சென்றனர். ஜைமினி “அவ்வண்ணமென்றால் வருணனை வைதிகர் போற்றுவது ஏன்?” என்றான். “அவன் இந்திரனுக்கு உகந்த தோழனாக ஆனான் என்பது தொல்கதை” என்றான் சண்டன். ஜைமினி “எப்படி?” என்றான்.

“நீங்கள் அறிந்திருப்பீர்கள், அந்தணரே. விருத்திராசுரனுக்கு எதிரான போரில் வருணன் இந்திரனுடன் துணைநின்றான். அதன்பொருட்டே வேள்விகளில் அவிகொள்ளலானான். அவிகொண்டு அவன் ஒளிபெற்று ஆதித்யனாக மாறினான். வைதிகர் வணங்கும் தெய்வமென்று அமர்ந்தான்” என்றான் சண்டன். “இங்கே மிக அருகில் கரூஷம் என்னும் சுனை ஒன்றுள்ளது. விருத்திரனைக் கொன்ற பழியை இந்திரன் அங்குவந்து நீராடி தவமிருந்து அகற்றிக்கொண்டதாக சொல்கிறார்கள் இங்குள்ள தொல்குடிகள். நாளை நாம் அங்கு செல்வோம்.”

ஜைமினி ஒன்றும் சொல்லவில்லை. பைலன் “இனிய இரவொன்று அமையுமென நினைக்கிறேன். இன்னுணவு, குளிர்ந்த மழைக்காற்று” என்றான். அன்னசாலையில் இருந்து வெளியே வந்த புரப்போன் கைகூப்பி “அந்தணர்களுக்கும் வழிப்போக்கருக்கும் நல்வரவு. உணவுகொண்டு எங்களை வாழ்த்துக!” என்றான். “ஆம், இனிய அன்னசாலை. பாலையில் சுனைபோல பேரருளின் வடிவம் இது” என்றான் பைலன். “நீராடி உணவுண்ணலாம். அப்பால் ஒரு சிறு சுனை உள்ளது. மழைக்குளிரில் அந்நீர் இனிய வெம்மையுடன் இருக்கும்” என்றான் புரப்போன்.

“நீராடியபடியேதான் வந்தோம்” என்றான் சண்டன். பைலன் “ஆம்” என்றான். ஜைமினி “நீராடாது உணவுண்பதா? நீர் அந்தணர் அல்லவா?” என்றான். பைலன் சண்டனிடம் “நீர் சென்று உணவுண்ணும். எனக்கு வேறுவழியே இல்லை” என்றான். சண்டன் “உமது ஊழ் அது” என்றபின் சிரித்தபடியே முழவுடன் விலகிச்சென்றான். “நீராடி வருக அந்தணரே, நான் என் முழவை உலரச்செய்யவேண்டும். மூன்று உழக்கு மது அருந்திய நாவென உளறுகிறது” என்றான்.

“நீராடுவோம்” என்றான் ஜைமினி. அவர்கள் அன்னசாலையை சுற்றிக்கொண்டு நடந்தனர். “இவர் சொல்லும் கதைகளை எல்லாம் நான் உதிரிச்செய்திகளாக முன்னரே கேட்டிருக்கிறேன்” என்று ஜைமினி சொன்னான். “அவற்றில் எப்பொருளும் இல்லை. அவை மெய்யறிதலை வெறும் குலப்போராகவும் அரசாடலாகவும் குறுக்கிவிடுகின்றன. அவற்றுக்குள் சென்றுவிட்டவரால் மெய்மையை ஒருபோதும் சென்று தொடமுடியாது.” பைலன் “நடக்காத பறவை ஒன்று இல்லை, ஜைமின்யரே” என்றான்.

ஜைமினி “உம்மை அவருடைய மாயம் கட்டிவிட்டது. நான் ஒன்றும் சொல்வதற்கில்லை இனி” என்றான். அவர்கள் குறும்புதர்கள் சூழ்ந்த சிறிய சுனையை அணுகியபோது அங்கே சிறுவன் மட்டும்  நீராடிக்கொண்டிருப்பதைக் கண்டனர். சுனையில் இருந்து நீர் அள்ளிக் குளிப்பதற்காக கமுகுப்பாளைத் தொன்னைகள் போடப்பட்டிருந்தன. அவன் நீரை அள்ளி மேலே விட்டு உடல் சிலிர்த்து உரக்க நகைத்தான்.

ஜைமினி முகம் மலர்ந்து “அந்தணர்” என்றான். “ஆம், நான் முதலில் ஏதோ வெண்ணிற மரம் என நினைத்தேன்” என்றான் பைலன். காற்று வீச மழைத்துளிகள் சொட்டியபடி கிளைகள் அசைந்தன. அவர்கள் அருகே அணுகியபின்னர்தான் சிறுவன் அவர்களைக் கண்டான். “வணங்குகிறேன், உத்தமர்களே” என்றான். “அங்கிரீச மரபில் வந்தவனும் விஸ்வகரின் மைந்தனுமாகிய என் பெயர் சுமந்து.” ஜைமினி தன்னை அறிமுகம் செய்துகொண்டான்.

பைலன் தன்னை அறிமுகம் செய்துகொண்டபோது “ஆம், உங்களை நான் கேள்விப்பட்டேன். நான் வைஜயந்தம் என்னும் சிற்றூரில் ஒரு வேதசாலைக்குச் சென்றபோது என்னைப்போலவே ஒரு சிறுவன் வந்துசென்றதாகச் சொன்னார்கள். உங்கள் பெயரையும் சொன்னார்கள்” என்றான். “என்னைப்போலவே செல்கிறீர்களா?” என்றான் பைலன்.

“ஆம், நான் வேதமெய்ப்பொருள் அறிந்த வியாசராகிய கிருஷ்ண துவைபாயனரை அன்றி பிறிதெவரையும் இனிமேல் ஆசிரியன் எனக்கொள்ளமாட்டேன் என்று உறுதிகொண்டுள்ளேன்” என்றான் சுமந்து. “கிழக்கே வங்கத்தில் என் சிற்றூரான தீர்க்கஜலத்தில் இருந்து குடியும் குலமும் விட்டு நான் கிளம்பியது அதன்பொருட்டே. தனியாக இத்தனை தொலைவு வந்துவிட்டேன். சென்றடையாமல் ஓய்வதில்லை.”