கிராதம் - 34

[ 14 ]

விண்ணொளியால் ஆன ஜலதம், கொந்தளிப்புகளால் ஆன தரங்கம், கொப்பளிக்கும் அலைகளால் ஆன கல்லோலம், நீலநீர் ஊசலாடும் உத்கலிகம், சிலிர்த்து விதிர்க்கும் குளிர்ப்பரப்பாலான ஆர்ணவம் ஆகிய ஐந்து ஆழங்களை அர்ஜுனன் கடந்துசென்றான். ஆறாவது ஆழமான ஊர்மிகத்தில் மூழ்கிய பெருங்கலங்கள் அன்னைமடியில் துயிலும் மதலைகள் என மெல்ல ஆடிக்கொண்டிருந்தன. ஏழாவது ஆழமான தரளம் கரிய நீர்க்குமிழி ஒன்றின் பரப்பு போல மாபெரும் விழியொன்றின் வளைவு போல மெல்ல அதிர்ந்துகொண்டிருந்தது.

நீருக்குள் அவனை ஆழ்ந்து மேலும் ஆழ்ந்து அழைத்துச்சென்றனர் நாகர்கள். ஆழத்தை அறியும்தோறும் அவன் உடல் எடைகொண்டபடியே சென்றது.  எடைமிகும்தோறும் இறுகி சுருங்கி ஒளிகொண்டது. பாதரசம்போல ஆயிற்று அவன் குருதி. ரசம் உறைந்து ஒளிரும் உலோகமென உடல்கொண்டான். அவன் நகங்கள் மீன்விழிகளென்றாயின. அவன் உள்ளம் உடலுக்குள் செறிந்து ஒளிகொண்டு பிறிதொரு விழி என ஆகியது.

தரளத்தின் மென்பரப்பை மெல்ல கைகளால் தொட்டுத் திறந்து அவனை உள்ளே அனுப்பினர். அவனுக்குப்பின்னால் ஒளிக்குமிழி வாயில் மூடியது. அப்பால் அவன் வருணனின் மாளிகையை கண்டான். நோக்கு நிலைக்க  நெஞ்சழிந்து நெடுநேரம் அப்படியே மிதந்துகொண்டிருந்தபின் அதைநோக்கி சென்றான்.

முற்றிலும் நீராலானது. அதன் நூற்றெட்டு அடுக்குகளும் ஆயிரத்தெட்டு உப்பரிகைகளும் பத்தாயிரத்தெட்டு சாளரங்களும் செழித்து கிளையும் இலையும் விரித்து குமிழிகளையும் மலர்களையும் சூடி நின்றிருக்கும் நீர்ச்செடிக்குவை என நின்று நெளிந்துகொண்டிருந்தன. மிதந்து அணுகிய அர்ஜுனனை ஏழு வாருணீகர் வந்து எதிர்கொண்டு அழைத்துச்சென்றனர்.

வாருணீகர் நெளியும் நீருடலும் நீல விழிகளும் கொண்டிருந்தனர். அவர்களின் சிறகுகள் நீரலைகள்போல நீருக்குள் மிதந்து பறந்தலைந்தன.  பெருமாளிகையின் முதல்வாயிலை அவர்கள் சுட்டுவிரலால் தொட்டதும் நீர்க்குமிழிப்படலமென வண்ணச்சித்திரம் காட்டி நின்றிருந்த அது உடைந்து திறந்து அவர்களை உள்ளே விட்டது. பின்பக்கம் மீண்டும் அது குமிழியென மூடிக்கொண்டது.

அவனைநோக்கி சிரித்த வாருணீகன் “இவையனைத்தும் குமிழிகளே” என்றான். “நீர்க்குமிழிகளே நீருக்குள் கடினமானவை” என்றான் இன்னொருவன். அவன் கைகளைப்பற்றி அணுகிய  இன்னொரு வாருணீகன் “இந்த மாளிகையே நீர்க்குமிழிகளாலான நுரை” என்றான். “நீங்கள் நோக்குவது நுரையின் ஒருபகுதியை. பதினெட்டுலட்சம் குமிழிகள் கொண்டது இந்நுரைப்படலம்” என்றான் ஒருவன். “குமிழிகள் அனைத்திலும் ஒரேதருணத்தில் தோன்ற இயன்றவர் என் தலைவர்” என்றான் பிறிதொருவன்.

“வருக!” என அவனை அழைத்துச்சென்றனர். நீர்க்குமிழியின் உட்பக்கமென சுவர்களில் வண்ணச்சித்திரங்கள் இழுபட்டும் சுருண்டும் அசைந்த அறைக்குள் சென்றதும் அவனை மூன்று மைந்தர் எதிர்கொண்டழைத்தனர். “வருக, இளையபாண்டவரே! நான் மேற்றிசைத்தலைவரின் மைந்தனான சுஷேணன். இவர்கள் என் இளையோரான வந்தியும் வசிஷ்டனும். உங்களை எதிர்கொண்டழைக்கும்படி அரசரின் ஆணை” என்றான் மூத்தவன். “வாருணர்களை வணங்குகிறேன்” என்றான் அர்ஜுனன்.

“நாங்கள் எங்கள் தந்தைக்கு அமைச்சர்களாகவும் இங்கு அமைந்துள்ளோம்” என்றான் சுஷேணன். “நீங்கள் இங்கு வந்தது ஏன் என நாங்கள் அறியலாமா?” என்றான் வந்தி. “நான் வருணனை வென்று செல்ல வந்துள்ளேன். திசைத்தெய்வங்களை வெல்லாமல் திசைமையத்தில் அமர இயலாதென்று உணர்ந்துள்ளேன்” என்றான் அர்ஜுனன். “இளவரசே, நீங்கள் வென்று கடக்க விழையும் வருணன் யார்?” என்றான் சுஷேணன். “ஏனென்றால் இங்கு மூன்று வருணர்கள் உள்ளனர்.”

அர்ஜுனன் திகைப்புடன் நோக்க வசிஷ்டன் புன்னகையுடன் சொன்னான் “இளவரசே, காசிய பிரஜாபதிக்கு அதிதியில் பிறந்த பன்னிரு மைந்தர்களில் ஒருவர்  முதல் வருணன். தாதா, ஆரியமான், மித்ரன், சுக்ரன், அம்சன், பகன், விவஸ்வான், பூஷா, சவிதா, துவஷ்டா, விஷ்ணு ஆகியோருடன் வருணனும் விண்ணில் ஒரு மீன் என பிறந்தார். ஒளியுடன் பெருவெளியில் திகழ்ந்தார். திசைகளை பிரம்மன் படைத்தபோது மேற்குக்கு அவரை தலைவனாக்கினார். பின் ஏழு கடல்களை பிறப்பித்தபோது அவற்றின் முடிவிலா அலைகளை ஆள்பவராக ஆக்கினார். நான் ஆதித்யனாகிய வருணனின் மைந்தன்.”

“நான்  தொல்லரசனாகிய வருணனின் மகன்” என்றான் வந்தி. “புலக பிரஜாபதிக்கு க்‌ஷமை என்னும் மனைவியில் பிறந்தவர் கர்த்தம பிரஜாபதி. பொறுமையின் மைந்தர். உர்வரியான் ஸஹிஷ்ணை என்னும் உடன்பிறந்தார் கொண்டவர். வளத்தான் இடமும் பொறுத்தாள் வலமும் நிற்க பெருந்தவம் செய்து பிரஜாபதி என்றானவர்.”

தவம் செய்கையில் புகைஎழக்கண்டு நெருப்பென எண்ணி விழிதிறந்தார்.  தொலைவில் ஒரு புகை எழக்கண்டார். அதன் சுருள்களை ஒரு மங்கையின் கூந்தல் என அவர் உள்ளம் எண்ணியது. அக்காமம் அவளை உருக்கொள்ளச் செய்தது. இடைதிரண்டு முலை முகிழ்த்து முகம்கொண்டு அவள் எழுந்தாள். அவளை அவர் தூம்ரை என்றழைத்தார், அவளைக்கூடி அவர் ஒரு மைந்தனைப் பெற்றார்.

தூயவனாகிய அவனை அவர் சுசித்மான் என அழைத்தார். ஒளி ஊடுருவும் உடல்கொண்டிருந்தான் அம்மைந்தன். கங்கைக்கரையில் அவன் இளையோருடன் நீராடச்சென்றபோது அலைகளில் மூழ்கி மறைந்தான். உடன்சென்றோர் அஞ்சி ஓடிவந்து கர்த்தமரிடம் அச்செய்தியை சொன்னார்கள். அவர் அப்போது வேள்வியில் இருந்தார். எடுத்த நெய்க்கரண்டியை வானில் நிறுத்தி, “இக்கணமே என் மைந்தன் திரும்பி வரட்டும்” என ஆணையிட்டார்.

கங்கைவழியாக கடலுக்குச் சென்றுவிட்டிருந்தான் சுசித்மான். கர்த்தமரின் ஆணையை தேவர்கள் கடலரசனிடம் வந்து சொன்னார்கள். “பிரஜாபதியின் ஆணை. அவரால் சொல்லப்பட்ட வேதச்சொல் முழுமையடையவில்லை. அது முழுமையடையும்வரை இப்புவியில் எதுவும் பிறக்கமுடியாது” என்றனர். ஆழிவேந்தன் அம்மைந்தனை இரு கைகளாலும் அள்ளி எடுத்தான். தான் ஒரு முதலை என உருக்கொண்டு தன்மேல் அவனை ஏற்றி கங்கைவழியாக நீந்தி கர்த்தமரின் வேள்விச்சாலையை வந்தடைந்தான்.

நீர்மணிமாலைகளையும் பவள ஆரங்களையும் மைந்தன் அணிந்திருந்தான். சங்குகளால் வளையலும் அருமணிகள் பதிக்கப்பட்ட முடியும் கொண்டிருந்தான். மைந்தனை அள்ளி அணைத்த கர்த்தமர் அவனை வரமென வந்தவன் என்னும் பொருளில் வருணன் என்றழைத்தார். கடல்களை அவன் ஆளவேண்டுமென ஆணையிட்டார். அந்த ஆணையின்படி ஏழ்கடல்களின் அரசனென ஆனான் வருணன்.

இளமைந்தனாகிய வருணன் முதிர்ந்து முடிசூடி பாரதவர்ஷத்தின் மேற்குத்திசையை முழுதாண்டான். மேற்குக்கடல்களின் அலைகள் அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டன. அவன் கையசைத்த  திசைகளில் கடற்காற்றுக்கள் வீசின. அவன் ஆணைப்படி பல்லாயிரம் நாவாய்கள் கடல்களின் மேல் ஏறி அயல்நிலங்களை சென்றடைந்தன. கடற்பறவைகள் போல துறைநகரங்களில் அவன் கலங்கள் சென்றணைந்து பாய்விரித்து மீண்டன. தனித்த நிலத்தில் வாழ்ந்த மக்களுக்கு அயல்மகரந்தங்களுடன் வந்தன அந்தக்கலங்கள். ஒவ்வொரு குலத்துக்கும் பிறகுலத்திலிருந்து குருதியுடன் விந்தைப்பொருட்களுடன் புத்தறிதல்களுடன் அவை சென்று சேர்ந்தன.

அவனை கடல்களின் அரசன் என்று சூதர் பாடினர். மொழிகளை ஆள்பவன் விழியெட்டா நெடுந்தொலைவுகளை சுருட்டி கையிலொரு பாசக்கயிறெனச் சூடியவன். காற்றுகளை அறிந்தவன். நீர்வெளியில் இருந்து மழைகொண்டு மண்மீது பரவும் பருவக்காற்றுகளின் தேவன். வான்மழைகளை வகுப்பவன். நாற்பருவங்களை நிலைநிறுத்துபவன். அவனுக்கு கடல்முகங்கள் தோறும் ஆலயங்கள் அமைத்தனர். அங்கே அவன் செதிலெழுந்த முதலைமேல் அமர்ந்து பலிகளை பெற்றுக்கொண்டான். அவனுக்கு அளிக்கப்படும் அவி காரென வரும் இந்திரனுக்கும் நாளென வரும் கதிரவனுக்கும் சுவையென வரும் சோமனுக்கும் நோயென்றும் மருந்தென்றும் வரும் அஸ்வினிதேவர்களுக்கும் செல்கின்றது என்று கொண்டனர்.

“அவனே எந்தை” என்றான்  வந்தி. அர்ஜுனன் “ஆம். அறிந்துள்ளேன்” என்றான்.  அவனை நோக்கி புன்னகைத்த சுஷேணன் “எந்தை பிறிதொரு வருணன். இங்கு முன்புவாழ்ந்த அசுரகுடித்தலைவர்” என்றான். அவர்கள் பெரும்பாலையில் இருந்த ஏழு ஊற்றுக்களை நம்பி தொல்பழங்காலம் முதல் வாழ்ந்தவர்கள். வானிலிருந்து வந்தணையும் பறவைகளும் மண்ணுள் ஒளிந்து வாழும் சிற்றுயிர்களும் முள்மரங்களின் கனிகளுமே அவர்களின் உணவாக இருந்தன. கள்ளிச்செடியென இலையிலும் கிளையிலும் வேரிலும் முளையெழுவது, வெறுநிலத்திலும் அழியாமலிருப்பது அக்குலம்.”

ஆனால் ஏழு ஊற்றுக்களும் மெல்ல வற்றலாயின. அக்குடிகள் கிடைக்கும் நீரை பகிர்ந்துகொண்டு அங்கேயே வாழ்ந்தனர். அவர்களைச் சூழ்ந்திருந்தது வெண்ணிற அனலால் ஆன மணல்வெளி. அது அப்பால் செல்ல ஒப்பாத தெய்வங்களின் கோட்டை என அவர்கள் எண்ணினர். ஒருநாள் அவர்களின் குடித்தலைவர் மண்மறைந்தார். தன் ஒரேமைந்தனிடம் உன் குருதி இது, உன்னவர் என்று சொல்லி கைகாட்டிவிட்டு கண்மூடினார். இளமைந்தன் குடித்தலைமை கொண்டான்.

கடக்கமுடியாதவை என்னவென்று தன் தந்தையிடமிருந்து அவன் தந்தை கற்றிருந்தார். அவற்றை கடக்கலாம்போலும் என்னும் எண்ணத்தை அவன் தன் குருதியின் ஆழத்திலிருந்து அடைந்தான். தன்குடிகளை அழைத்தபடி எரிமணல்வேலியை கடந்து சென்றான். சினம்கொண்ட தெய்வங்கள் அவன்மேல் அனல்சொரிந்தன. எரிவளியெனச் சூழ்ந்து கொப்பளித்தன.  உறுமி எச்சரித்தது வானம்.

அஞ்சாது தன்னை எதிர்த்து நிற்பவனை தெய்வங்கள் விரும்புகின்றன. குளிர்ந்த காற்று வந்து அவர்களை மூடியது. பாலையின் சிறகென மணல் எழுந்து வானைமூடி வெயிலை அணைத்தது. வானிலிருந்து மீன் என உணவு பொழியலாயிற்று. அதை உண்டபடி அவர்கள் அலையற்ற கரிய கடலொன்றை வந்தடைந்தனர். உப்புக்களால் வேலியிட்டு காக்கப்பட்டது அக்கடல். இனிய ஊற்றுக்களால் சூழப்பட்டிருந்தது. அக்கடலில் இருந்து கைகளாலேயே மீன்களை பிடிக்கமுடிந்தது. அம்மீன்களைக் கொள்ளவரும் பறவைகளை கண்ணி எறிந்து கொள்ளமுடிந்தது. அக்கடலோரம் அவன் தன் குடிகளை தங்கும்படி செய்தான்.

அவன் குடி அங்கே பெருகியது. நெடுந்தொலை கிழக்கின் ஒதுங்கிய துறைநகர்களுக்கு அவர்கள் முதலைவடிவ நாவாய்களில் ஏறிச் சென்றனர். உப்பின் உடைமையாளர்கள் என்பதனால் அவர்கள் லவணர் என அழைக்கப்பட்டனர். அவர்களின் உப்புத்தூண்கள் மலைச்சிற்றூர்கள் வரை சென்றன. கடல்கடைந்து இனிய வெண்ணையை எடுப்பவர்கள் அவர்கள் என்று கொள்ளப்பட்டனர். கடலுக்குத் தலைவர்களான அவர்களின் தலைவனை சிற்றூர்கள் தோறும் தெய்வமென நிறுவி வழிபடலாயினர். கடல்களை ஆள்பவனாகிய அவனே மழைகளை நிலைநிறுத்துபவன் என்று தொல்கதைகள் சொல்லின.

அவர்களின் ஆயிரத்தெட்டு தொல்லூர்கள் அலையற்ற கரியகடலைச்சூழ்ந்தே அமைந்திருந்தன. அவர்களின் கிளைக்குடிகள் தொலைவிலிருந்த பெருங்கடல் துறைகளில் குடியேறியிருந்தாலும் மூத்தாரும் முதலோரும் அலையிலாக்கடல் அருகிலேயே வாழ்ந்தனர். எவரையும் உள்ளே செல்ல ஒப்பாத அதன் அடித்தட்டு தெய்வங்கள் வாழும் ஆழம் என அவர்கள் அறிந்தனர். இறந்தவர்களை அக்கடலுக்குள் செலுத்தி ஆண்டுதோறும் பலிகொடுத்து வணங்கினர்.

“பல்லாயிரம் ஆண்டுகளுக்குப்பின் அக்கடலில் மீன்கள் இறந்து மறையலாயின. மீன் என விளங்கிய விழிகளை மூடி கடல் துயில்கொள்கிறது என்றனர் அவர்களின் பூசகர். அவர்கள் தங்கள் ஊர்களை கைவிட்டுவிட்டு தொலைவிலிருந்த பெருங்கடல்துறைகளை நோக்கி சென்றனர். அங்கிருந்து கிழக்கும் மேற்குமாக விரிந்து சென்றுகொண்டே இருந்தனர். அலையிலாக்கடல் அவர்களின் மொழியிலும் கனவிலும் மட்டும் எஞ்சியது.” என்றான் சுஷேணன். “இளையபாண்டவரே, தாங்கள் இறங்கி வந்துள்ளது அம்மக்களின் தெய்வங்களும் முன்னோர்களும் வாழும் ஆழத்திற்கு என்றறிக! அவர்களின் முதற்றாதையாகிய வருணனின் மைந்தன் நான்.”

“இம்மூன்று தெய்வங்களும் இந்நீராழத்திற்குள் கோல்கொண்டுள்ளன” என்றான் சுஷேணன். “இவர்களில் நீங்கள் சென்று கண்டு வெல்ல விழைவது எவரை?” அர்ஜுனன் “கசியபரின் மைந்தரை வேதத்தால் வெல்ல விழைகிறேன். கர்த்தமரின் மைந்தரை என் குருதியால் கடக்க விழைகிறேன்.  இளவரசர்களே, தொல்குடி அசுரர் தலைவரை என் தோள்கொண்டு எதிர்க்க எண்ணுகிறேன். மூவரையும் கடந்து எனக்கென எழும் நாலாமவரிடமிருந்து எனக்குரிய மெய்மையை நான் பெற்றாகவேண்டும்” என்றான்.

புன்னகைத்து “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான் சுஷேணன். “வேதமொன்றே தெய்வங்களை வெல்வதென்று அறிந்திருப்பீர்கள். மூவருக்கும் உரிய வேதங்களை கற்று தெளிவுற்றிருப்பீர் என எண்ணுகிறேன். உங்களுக்குரிய வழிகள் திறப்பதாக!” வந்தி “செல்வதற்குரிய வேதத்துடன் மீள்வதற்குரிய வேதமும் உங்களுடனிருக்கட்டும்” என்றான். வசிஷ்டன் “வேதமென்றானது  துணைவருக!” என்று வாழ்த்தினான்.

[ 15 ]

வருணனின் மாளிகையின் முதற்கதவைத் திறந்ததும் அங்கு நின்றிருந்த கடைவாருணனாகிய புஷ்கரன் வணங்கி “வருக, இளையவரே! நான் வாருணனாகிய புஷ்கரன். உங்களை எந்தையர் மூவரிடமும் அழைத்துச்செல்ல வந்துள்ளேன்” என்றான். வணங்கி “நன்று” என்றான் அர்ஜுனன். “அளவிலா அருளும் எல்லையில்லா முனிவும் கொண்டவர் அவர் என அறிந்திருப்பீர்” என்றான் புஷ்கரன். அர்ஜுனன் “ஆம், இரண்டையும் பெரும்பாலைகளில் அறிந்தேன்” என்றான்.

முதல் வாயிலை அடைந்ததும் புஷ்கரன் “இது என் எல்லை, இனி உங்கள் பயணம்” என்றான். அர்ஜுனன் தலைவணங்கி முன்னால் சென்றான். நீர்க்குமிழி வாயிலின் அருகே இரு வாருணீகர் தோன்றினர். பொன்னிறமான கொம்புகள் எழுந்த வரையாட்டின் தலைகொண்டிருந்தனர். “வருக!” என்று வணங்கி உள்ளே அழைத்துச் சென்றனர். “வருணனை வாழ்த்தும் முதல் வேதச் சொல்லை ஓதுக, வீரரே! அதுவே இங்குள்ள முறை” என்றான் ஒரு வாருணன். “அது அவருக்குரிய வரியாக இருந்தாகவேண்டும். இல்லை என்றால் நீங்கள் மீள இயலாது என்று அறிக!”

அவர்கள் ஒரு குமிழிக்கதவைத் திறந்து அவனை உள்ளே கொண்டுசென்றார்கள். அலைகொண்டு மெல்ல ஆடிநின்ற நீர்வெளிக்குள் இறங்கி ஈர்த்து இழுத்து எடுத்துக்கொண்ட அடியிலி ஒன்றை நோக்கி அவன் ஆழ்ந்து சென்றான். நீலநிறமான இருளுக்குள் ஒளியும் நாகங்களும் நெளிந்தாடின. விழிகளென மட்டுமே தோற்றம் காட்டிய மீன்கள் உருக்கொண்டு எழுந்து அணுகி விலகி உருகி மறைந்தன.

அர்ஜுனன் உள்ளே நுழைந்த நீர்க்குமிழியறை வெண்ணிற ஒளிகொண்டிருந்தது. அவ்வவையில் உதத்யரும் கஸ்யபரும் உள்ளிட்ட முனிவர்கள் அமர்ந்திருந்தனர். “அறம் ஓம்பி அமைந்த முனிவர் அனைவரின் மெய்யுடல்களும் இங்குள்ளன. அவர்கள் எங்கிருந்தாலும் இங்கும் இருப்பார்கள்” என்றான் வாருணீகன். அர்ஜுனன் விஸ்வாமித்திரரை வசிட்டரை பிருகுவை கௌதமரை அங்கே கண்டான். நோக்க நோக்க அச்சபை விரிந்தபடியே சென்றது.

அவைமேடையில் நீர்க்குமிழியாலான வெண்ணிற அரியணையில் பொன்னிற உடலுடன் வருணன் தன் துணைவி கௌரியுடன் அமர்ந்திருந்தான். அவன் வலக்கையருகே பாசக்கயிறு அமைந்திருந்தது. அர்ஜுனன் உள்ளே நுழைந்ததும் தலைவணங்கி “நீரின் தலைவனை, பெருங்கடல்களை ஆள்பவனை, மழையென காப்பவனை, நெறிகளில் கட்டுண்டவனை வணங்குகிறேன்” என்றான்.

வருணனின் விழிகள் சுருங்கின. “நான் எங்கு கட்டுண்டவன்?” என்றான். “அரசே, பெருங்கடல்கள் பல்லாயிரம்கோடிமுறை எழுந்தமைந்தாலும் கரைமீறுவதில்லை. அவற்றைக் கட்டியிருக்கும் நெறியே கரையை ஆள்கிறது.  அது உம் கையிலிருக்கும் அக்கயிறு. ஆனால் நீங்கள் மானுடர் இயற்றும் நான்கு அறங்களால் கட்டப்பட்டவர். வேள்வியும் அறமும்  கொடையும் புரத்தலும் வாழும் மண்ணில் நீங்கள் பெய்திறங்கியாகவேண்டும்” என்றான்.

“ஆம்” என்று வருணன் சொன்னான். “என்னை வென்று மீள நீ வந்திருப்பதாக அறிந்தேன்.” அர்ஜுனன் “ஆம்” என்றான். “யமனிடம் தண்டகை என்னும் படைக்கலத்தையும் குபேரனிடம் அந்தர்த்தானை என்னும் ஆவத்தையும் பெற்று மீண்டேன். உங்களிடமிருந்து வெல்லற்கரிய அம்பொன்றை பெறவிழைகிறேன்.” வருணன் “என்னை வென்று அதைக் கொள்க!” என்றான் வருணன். “வேதச்சொல்லால் உங்களை வெல்லலாம் என்பது நெறி. அரசே, உங்கள் செவியறிந்த முதல்வேதச்சொல்லையே படைக்கலமாகக் கொண்டுள்ளேன்” என்றான்.

வருணன் முகம்கூர்ந்தான். அர்ஜுனன் உரத்தகுரலில் சந்தம் கூட சொல்கூர்மை திகழ ரிக்வேதச் செய்யுளைப் பாடினான்:

“வருணனே,  இறைவடிவோனே உன்னை வணங்குகிறேன்

நாங்கள் எளிய மானுடர்

நாள்தோறும் உன் நெறிகளை மீறிக்கொண்டிருக்கிறோம்

எங்களை இறப்புக்கு இரையாக்காது அருள்க!

ஒவ்வாதன கண்டு நீ கொள்ளும் பெருஞ்சினத்தால்

எங்களை அழிக்கலாகாது எந்தையே.

உன் அளிதேடி இதோ வந்துள்ளோம்.

உன் நெஞ்சத்தை வேதச்சொல்லால் கட்டுகிறோம்

கடிவாளமிட்ட புரவிகளால் தேரை என”

வருணனின் முகம் மலர்ந்தது. “ஆம், இவ்வேதச்சொல்லையே நான் எந்தை பிரம்மனிடமிருந்து ஏழுகடல்களின் உரிமையைப்பெற்றபோது என்னை வாழ்த்தி முனிவர்கள் பாடினர்.” அர்ஜுனன் “ஆம், இதுவே தொன்மையானது” என்றான். “நன்று. நீ என்னை வென்றாய். ஆனால் என் முகங்கள் மூன்று. அவற்றையும் வென்று மீள்க!” என்றான் வருணன்.

மூன்று அஜமுக வாருணீகர்களுடன் அர்ஜுனன் சென்றான். நீர்க்குமிழி வாயிலைத் திறந்து அவனை மேலும் ஆழத்திற்கு செலுத்தினர் அவர்கள்.  நீர்த்துளிகள் ஒவ்வொன்றும் நூறாயிரம் மடங்கு எடைகொண்டிருந்த கர்த்தம் அணுவடிவ உயிர்கள் மட்டுமே கொண்ட ககனம்  ஒவ்வொன்றும் உடலழிந்து சாரம் மட்டுமென்றே ஆகியிருந்த நிம்னம் அலைகளே அற்ற தாரம் நீர்செறிந்து பாறையென்றான குப்தம் பாறைசெறிந்து வைரமென்றான காகம் செறிவே ஒளியென்றான நிவதம் என்னும் ஏழு ஆழங்களைக் கடந்து இறங்கிச்சென்றான்.

அங்கே ஒளிக்குமிழி எனத்தெரிந்த ஆழ்வருணனின் மாளிகையை அணுகினான். அங்கிருந்த வாருணீகர் வெள்ளியாலான கலைமான் கொம்புகளும் குளம்புகளும் கொண்டிருந்தனர். “வருக, இளவரசே!” என அவர்கள் அவனை வரவேற்றனர். “ஆழங்களின் வருணரின் அவைக்கு வருக!” என அழைத்துச்சென்றனர்.

அவன் அவர்களுடன் மூத்த வருணனின் அரசவைக்குள் நுழைந்தான். “இவர்  நீர்களின் தலைவராகிய வருணனின் பிறிதொரு வடிவம் அல்லவா?’ என்றான் அர்ஜுனன். “அல்ல, இவர் வருணரின் தந்தை” என்றான் முதல் வாருணீகன். “தந்தையின் நாவிலிருந்து மைந்தர் முளைத்தெழுந்தார். அவரது சொல்லே மைந்தர்” என்றான் இரண்டாவது வாருணீகன். “தந்தை முடிவிலாத கைகளால் ஆனவர். செயல்வடிவர். அவரை வெல்வது எது என்றறிக!” என்றான் மூன்றாமவன்.

செந்நிறமான பெருங்குமிழிக்குள் அமைந்திருந்தது  முந்தைவருணனின் அவைக்கூடம். அங்கே அமர்ந்திருந்த அரசர்கள் அனைவரையும் அர்ஜுனன் கண்டான். பரதன், உபரிசிரவஸு, சிபி, தசரதன், ராமன், யயாதி, குரு, வாலி, மாவலி என அவனறிந்த முகங்கள். அரசர்களின் முகங்களாக முளைத்து மண்ணில்பெருகியிருந்தவை. “இது துலாமுள் ஆடாது மண்புரந்து மழைநிகழ்த்திய மாமன்னர்களின் அவை” என்றான் வாருணீகன்.

அர்ஜுனன் அவர்களை உடல் பணிந்து வணங்கினான். மேலே பெரிய செங்குருதித்துளி என ஒளி கொண்டிருந்த அரியணைமேல் நீண்ட வெண்தாடியுடன், தோளில் புரண்ட வெண்குழல்கற்றைகளுடன் அமர்ந்திருந்த முதிய வருணனை நோக்கி திரும்பி “நெறிகளின் தேவனே, உமக்கே அடைக்கலம்”  என மண் தொடக்குனிந்து வணங்கினான். அவனருகே முதிய வருணானி அமர்ந்திருந்தாள். “அறத்தானின் அறத்துணைவி எனக்கு அன்னையெனக் கனிக!” என்றான்.

செந்நிறத் தலைப்பாகையும் செம்மணிக்குண்டலங்களும் அணிந்திருந்த அமைச்சர் எழுந்து “இளவரசே, முதுவருணரின் அவைக்கு வருக! அரசரை வென்று சொல்கொண்டு மீள விழைகிறீர்கள் என்றறிந்தோம். அரசரை வாழ்த்தும் முதல் தொல்வேதச் சொல்லை சொல்க! அதுவே ஆம் என்றால் அவர் அருள் கொண்டு மீளலாம்” என்றார்.

முதியவருணனின் குரல் அலையோசைகளின் முழக்கம் கொண்டிருந்தது. “இளையோனே, அச்சொற்கள் என் முழுமையை ஒரு துளியேனும் எஞ்சாமல் அள்ளி தன்னுள் நிரப்பியவை. அச்சொற்கள் அன்றி பிற எதைச் சொன்னாலும் நீ இங்கு சிறையிடப்படுவாய் என்று அறிக!”

அவருடைய கைகள் பெருகுவதை அவன் கண்டான். ஓரிரு கணங்களில் கடலலைப்பெருக்கென பல்லாயிரங்களென கைகள் விரிய அவர் பேருருத்தோற்றம் கொண்டார். அவன் அவரை நோக்கியபடி “ஆம், ஆணை” என்றபின் முந்தைய அவையில் பாடிய அவ்வேதவரிகளையே மீண்டும் பாடினான். “உன் நெஞ்சத்தை வேதச்சொல்லால் கட்டுகிறோம், கடிவாளமிட்ட புரவிகளால் தேரை என” என்று மும்முறை ஓதிமுடித்தான்.

முதியவருணனின் கண்கள் கனிந்தன. புன்னகையுடன் திரும்பி “ஆம், நான் முதலைவடிவ கடரசன் மேலேறி கரையணைந்தபோது எந்தை கர்த்தமர் இச்சொற்களைப் பாடியபடி கைநீட்டி என்னை அணைந்தார். என்னைத்தூக்கி தன் தலைமேல் வைத்துக்கொண்டு இவனே அவன் இவனே ஆம் என்று கூவினார். அன்று நான் இக்கடல்கள் அனைத்தையும் அரசெனக் கொண்டேன்” என்றார்.

“நன்று, உனக்கென கனிவுகொண்டேன். இளையோனே, எங்களுக்கெல்லாம் பெருந்தந்தை ஆழங்களின் அடியில் இன்னொரு அவையில் கொலுவமர்ந்திருக்கிறார். அங்கு சென்று அவர் சொல்லையும் வென்றுவருக!” என்றார் வருணன். “அவ்வாறே” என வணங்கி அவன் மூன்று  மான்கொம்பு வாருணீகர்களுடன் சென்றான்.

அவர்கள் அவனை அழைத்துச்செல்கையில் ஒருவன் “அங்கிருப்பவர் ஒவ்வொரு மூச்சிலும் நுரைக்குமிழிகள் என வருணர்களை முடிவிலாது பிறப்பிக்கும் மூதாதை என்று அறிந்துள்ளோம். எவரும் அவரைக் கண்டதில்லை” என்றான். பிறிதொருவன் “பெருங்கடல்களை தன் பிடரிமயிர் சிலிர்ப்பின் நீர்த்துளிகளெனச் சூடியவர். புயற்காற்றுகளை இமையசைவாகக் கொண்டவர்” என்றான். “சொல்லப்படும் அனைத்துச் சொற்களுக்கும் அப்பாற்பட்டவர். அனைத்து எண்ணங்களுக்கும் அடியிலிருப்பவர். அனைத்துக் கனவுகளாலும் ஆனவர்.”

நீர்ப்படல வாயிலைத் திறந்து அவனை அப்பால் செறிந்திருந்த இருளுக்குள் செலுத்தினார்கள். விழிகள் அழியும் திமிரம், உடலும் நோக்கழியும் அந்தகம், எண்ணம் நோக்கழியும்  சாரதம், உருவங்களேதும்  எஞ்சாத சியாமம், எண்ணங்களே மிஞ்சாத தமம், இருள் ஒளிகொள்ளத்தொடங்கும் அசிதம், இருளே ஒளியென்றான கிருஷ்ணம் என்னும் ஏழு ஆழங்களைக் கடந்து அவன் முதல்வருணனின் மாளிகையை அடைந்தான்.

பன்றிமுகமுள்ள மூன்று வாருணீகர்களால் அவன் அழைத்துச்செல்லப்பட்டான். அவர்கள் இருளுடல் இருள்நீரில் வடிவுகொண்டும் வடிவழிந்தும் தெரிந்தனர். அவர்களை நோக்கி அறிந்தபின்னரே அவர்களுக்கு விழிகளில்லை என்பதை அவன் அறிந்தான். தான் அவர்களை விழிகள் வழியாக நோக்கவில்லை என்பதை அதன் பின்னர் உணர்ந்தான்.

“பெருஞ்சினத்தவர் இங்கமைந்த எந்தை. அவர் அவைபுகுந்து தேவரோ மானுடரோ அசுரரோ இதுவரை மீண்டதில்லை” என்றான் ஒருவன். “அவர் அவைக்குச் சென்று அருள்பெற்று மீள்பவர் அனைத்து நெறிச்சரடுகளுக்கும் அப்பால் முதல்நெறியென்று அமைந்துள்ள ஒன்றை அறிந்தவர் ஆவார்” என்றான் இன்னொருவன். மூன்றாமவன் “அவர் அருள் கொண்டவர் தன்னை தன் அறச்சரடுகளால் முழுக்க பிணைத்துக்கொண்டவர் ஆகிவிடுவார்” என்றான்.

முதல்வருணனின் அவை நீலநிறமாக இருந்தது. அதனுள் நுழைந்த அர்ஜுனன் அங்கே அவன் முற்றிலும் அறியாத குலத்தலைவர்கள் செறிந்திருப்பதைக் கண்டான். தங்கள் குடிக்குறிகளையும் குலமுடிகளையும் அணிந்து கோல்சூடியிருந்தனர். முகங்கள்தோறும் தொட்டுத்தேடியபின் முதல் முகத்தை அவன் அடையாளம் கண்டான். அஸ்தினபுரியின் தொல்குடித்தலைவர் ஒருவர் அவர் என அறிந்த மறுகணமே அனைவரையும் அடையாளம் காணலானான். குலத்தலைவர்களாக, குடிமூத்தோராக, தெருக்களிலும் அங்காடிகளிலும் கழனிகளிலும் சாவடிகளிலும் நிறைந்திருக்கும் குடிமக்கள்பெருக்காக.

அரசமேடை கரிய கல்லால் ஆனது. அதன்மேல் கரிய உடல்கொண்ட வருணன் எரியும் அனல்விழிகளுடன் அமர்ந்திருந்தார். தோளில் வழிந்து தொடையில் விழுந்து தரையில் கிடந்தன சடைமுடிக்கற்றைகள். சடைத்திரிகளான தாடி மடியில் விழுந்திருந்தது. வடிகாதுகள் தசைவளையங்கள் என தோளில் தொங்கின. “எந்தைக்கு வணக்கம். எளிய மைந்தன் தங்கள் அவைநாடி வந்துள்ளேன்” என்றான் அர்ஜுனன்.

KIRATHAM_EPI_34

“நீ பாண்டுவின் மைந்தன் அல்லவா?” என்றார் அவர். அவர் கைகளில் நீண்ட பறவையலகுகள் போல நகங்கள் எழுந்திருந்தன. “உன் தந்தையின் நெறித்தூய்மையால் இங்கு வந்தாய் நீ.” அர்ஜுனன் “ஆம், எப்போதும் அவரால் வழிநடத்தப்படுகிறேன்” என்றான். “உன் தந்தை நீயென்றாக விழைந்தார். எனவே நீ நிகழ்கிறாய்” என்றார் வருணன். “எந்தையே, நான் தங்கள் அருள்கொண்டு செல்ல வந்தவன்.”

“நீ என் தொல்குடி என்னைப்பற்றிப் பாடிய வாழ்த்தை அறிவாயா?” என்றார் வருணன். “வெயிலெரியும் பாலைகளில் வழிதவறும்போதும், விழிதிறந்த சுனைகளைக் கண்டு ஓடிச்சென்று அள்ளி வாயில் விடுவதற்கு முன்னரும் விண்மீன்களை நோக்கி படுத்திருக்கையிலும் விடியொளியில் விழிதிறந்து எழுந்த உடனேயும் அவர்கள் அதைப்பாடினர். உங்கள் மொழிகளனைத்தும் எழுந்த வயல். உங்கள் குடிநிரைகள் அனைத்துக்கும் ஊற்று.”

“அதைச்சொல்கையிலேயே நீ எங்களவன் ஆகிறாய்” என்றார் ஒருவர். “இல்லையேல் நீ அயலவன், இங்குள்ள கோடானுகோடி விழியிலா மீன்களில் ஒன்று என காலமிலாது வாழ்வாய்.” அர்ஜுனன் அவரை வணங்கி “அறிவேன், மூத்தவரே. நீங்கள் என் குடிமூத்தவராகிய குருவின் முகம் கொண்டவர். அவருக்கும் மூத்தவர்கள் சூடிய முகம் நீங்கள். உங்கள் முகம் கொண்டு இங்கு நின்றிருக்கிறேன்.” அவருடைய கண்கள் கனிந்தன. “சொல்” என்றார்.

அர்ஜுனன் அந்த முதல்வேதப்பாடலையே பாடினான் “வருணனே,  இறைவடிவோனே உன்னை வணங்குகிறேன். நாங்கள் எளிய மானுடர். நாள்தோறும் உன் நெறிகளை மீறிக்கொண்டிருக்கிறோம். எங்களை இறப்புக்கு இரையாக்காது அருள்க!” அவன் பாடிமுடித்ததும் முகம் மலர்ந்த வருணன் “ஆம், தொன்மையான பாடல். நம் குடியின் வாழ்த்து” என்றார். “நன்று மைந்தா, நீ என்னவன். வருக!”

அவர் கைநீட்ட அவன் அணுகி அவர் காலடிக்குச் சென்று குனிந்து நகங்கள் நீண்டு பின்னிய முதியகாலடிகளைத் தொட்டு வணங்கினான். அவர் அவன் தலைமேல் கைகளை வைத்தார். “முதல்மைந்தனைத் தொட்டபோது இவ்வெழுச்சியை அடைந்தேன்” என்றார். அவனை தோள்பற்றி இழுத்து தன் மடியில் அமரச்செய்துகொண்டார். திரும்பி அருகிருந்த வருணையிடம் “இவனை நினைவுகூர்கிறாயா?” என்றார்.

“இவனுக்களித்த முலைப்பாலின் எச்சத்தை உடலில் உணர்கிறேன்” என்றாள் அவள். கைநீட்டி அவன் கன்னங்களை வருடியபடி “அழகன்! என் மைந்தன். அவன் விழிகளால் பெண்கள் பித்தாகிறார்கள்” என நகைத்தாள். வருணன் வெடிப்புறு குரலில் நகைத்து “அன்னையை மகிழ்விப்பவன் வாழ்நாளெல்லாம் பெண்டிரை வென்றுகொண்டிருப்பான்” என்றார். அவர்கள் இருவரும் சேர்ந்து உடல்குலுங்க நகைத்தனர்.

வருணை அவன் கைகளை வருடி “படைக்கல வடுக்கள்” என்றாள். “இவை புண்ணென்றிருக்கையில் வலித்திருக்கும் அல்லவா?” அர்ஜுனன் “போரே வலியளிப்பதுதான், அன்னையே” என்றான். வருணன் “உன்னை எவரும் போரில் வெல்லமுடியாது, மைந்தா” என்றார். “கேள், தந்தை உனக்களிக்கவேண்டியதென்ன?” அர்ஜுனன் “உங்கள் மிகச்சிறந்த சொல்லை” என்றான்.

“ஆம், அதுவே முறை” என்றார் “இதுவே அது. வல்லமை எதுவும் கட்டுண்டாகவேண்டும்” என்று சொல்லி அவன் நெற்றிமேல் கையை வைத்தார். அர்ஜுனன்  கைகூப்பி அதை ஏற்றான். மும்முறை அந்த அழியாச்சொல்லை தன்னுள் சொல்லி பதித்துக்கொண்டான். “அனைத்தையும் கட்டும் சரடொன்று உள்ளது. அறமெனும் சொல். அதை உனக்களிக்கிறேன். உன் அம்பென்று அது அமைக!” என்றார். “ஆம், அருள் அது” என்றான் அர்ஜுனன்.

அவர் திரும்பி நோக்க அமைச்சர் ஒருவர் அணுகி ஒரு தாலத்தில் வைக்கப்பட்ட பாசச்சுருளை அவரிடம் நீட்டினார். அவர் அதை எடுத்து சுருட்டியதும் யானைவால்முடியைப்போல சுருட்டி கணையாழியாக்கினார். அவன் கையில் அதை அணிவித்து “இது உன்னுடன் என்றுமிருக்கட்டும்!” என்றார். “தங்கள் ஆணை” என்றான் அர்ஜுனன்.

“மைந்தா, என்னிடம் நீ கோருவதென்ன?” என்றாள் வருணை. “மைந்தர் அன்னையிடம் எதையும் கோரலாகாது. பசிப்பதற்கு முன் ஊறுபவை முலைகள்” என்றான் அர்ஜுனன். “நீ என்றுமே சொல்வலன்…” என்று சிரித்த வருணை அவன் தலையில் மெல்ல அடித்து “மூடா மூடா” என்றாள். அவன் குழல்களைப்பற்றி மெல்ல உலுக்கி “என் மகன்” என்று முகம் கனிந்து விழி நீர்மைகொள்ள தனக்குள் என சொன்னாள்.