கல்பொருசிறுநுரை - 7

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் – 2

சாத்யகி சொன்னான் “அரசவையிலிருந்து வெளியே வந்தபோது உளம்சலித்திருந்தேன். அவ்வண்ணமே திரும்பி ரிஷபவனத்திற்குச் சென்றுவிடவேண்டும் என்றும், என் ஆநிரைகளுடன் அறியாக் காடொன்றில் அமர்ந்திருக்கவேண்டும் என்றும், காட்டுவிலங்குபோல அங்கேயே இறந்து மண்ணாகி மறைந்துவிடவேண்டும் என்றும் விழைந்தேன். ஆனால் என்னால் அது இயலாதென்றும் அறிந்திருந்தேன். அரசே, என் பற்று உங்கள்மேல் மட்டும் அல்ல. நான் இளைஞனாக வந்து இந்த ஐந்து அனல்முத்திரைகளை பெற்றுக்கொண்ட நாளில் கண்ட பொன்பொலிந்த துவாரகை என் கண்ணிலும் கனவிலும் திகழ்கிறது. என் கண்முன் அது சரியலாகாது என்பதே என் விழைவு. எனக்குப் பின் அது என்னவாகும் என்று எண்ண முடியவில்லை. ஆனால் அன்று நான் செய்வதற்கொன்றுமில்லை. இன்று நான் செய்யக்கூடுவன சில உண்டு. அவற்றை செய்யாதொழிந்தால் நான் சென்றமைய எங்கும் நிலைகொண்ட மண்ணிருக்க முடியாது. வேறுவழியே இல்லை.”

ஆம், இப்புவியில் உலகியலில் திளைப்பவர் அனைவரும் அடையும் முதுமைத்துயர் இதுவே. உலகியலில் ஈட்டிய அனைத்தையும் எட்டுக் கைகளாலும் கட்டித்தழுவிக்கொண்டு அசைவிலாது கிடக்கவே அவர்கள் விழைகிறார்கள். எத்தனை இறுக்கினாலும் அது கரைந்தழியும் என்ற உண்மையை அவர்களால் ஏற்கவே முடிவதில்லை. தன் மைந்தரிடமும் அரசை அளிக்கமுடியாத முதிய அரசர்கள் பலர் உண்டு. தன் பெயரர்கள் முதுமக்களாகும் வரை அரியணையில் அமர்ந்தவர்களும் உண்டு. அவர்களை இயக்குவது பொருள்விழைவல்ல, ஆதிக்கவெறியும் அல்ல. தானறிந்த உலகில் தான் ஈட்டியவற்றை அழியாது வைத்துக்கொள்ளவேண்டும் என்ற வீண்எண்ணமே. ஆனால் அதை அறிந்தாலும் அதிலிருந்து என்னால் வெளியேற முடியவில்லை.

அரசரை அவர் தனியறைக்குள் சென்று கண்டேன். அவ்வறைக்குள் இருந்தவர் யுதிஷ்டிரன் என்றே முதலில் நினைத்தேன். யுயுத்ஸு சூழ அமர்ந்த புலவர்களுடன் நூலாய்ந்துகொண்டிருந்தார். குறுகி தழைந்த தோள்கள், தாழ்ந்த தலை. என் சொல்கேட்டு உள்ளே சென்ற ஏவலன் மீண்டுவந்து நுழைவொப்புதலை அறிவிக்க நான் சென்று தலைவணங்கினேன். “அஸ்தினபுரியின் அரசருக்கு வணக்கம். நான் துவாரகையிலிருந்து வருகிறேன்” என்றபோதுதான் அவர் சொற்களின் சூழ்கையிலிருந்து விடுபட்டு என்னை நோக்கி வந்தார். “வருக, யாதவரே! ரிஷபவனத்திலிருந்து வருகிறீர்களா?” என எழுந்து என்னை வரவேற்றார். பீடம் அளித்தார். “நான் துவாரகையிலிருந்து வருகிறேன். அரசுச்செய்தி ஒன்றுடன்” என்றேன். “நீங்கள் அரசியை சந்திக்கவேண்டும்” என்றார்.

நான் ஏற்கெனவே அரசியை சந்தித்ததையும் அவரிடம் கூறியதையும் முழுக்க மீண்டும் உரைத்தேன். கேட்டு முடித்தபின் அவர் விழிகளை சற்று தாழ்த்தி அமர்ந்தபின் “நான் இங்கிருந்து நெறியை மட்டுமே கூற முடியும். அரசி கூறுவதுதான் நடைமுறை மெய்மை. நூல்நெறிகளின் படி பிறிதொரு அரசின் முடிசூழ் உரிமையில் ஓர் அரசன் தலையிடுவதென்றால் மூன்று சூழ்நிலைகள் அமையவேண்டும். தலையிடும் அரசனும் அவ்வரசனும் ஒற்றைக்குருதி கொண்டவர்களாக இருக்கவேண்டும். அதுவே முதன்மைநெறி. அதை சாத்விகம் என்கிறார்கள். அல்லது அவர்கள் ஒரு நதிநீரை பகிர்ந்துகொண்டவர்களாக இருக்கவேண்டும். ஒரு நிலப்பாதையை பகிர்ந்து கொண்டிருக்க வேண்டும் அந்நிலையில் தலையிடுவது மத்திமம் எனப்படுகிறது. அவ்வரசன் தன் எதிரிகளுடன் சேர்ந்து ஆற்றல் பெற்றவனாக ஆகும் வாய்ப்பிருக்கும்போது முந்திக்கொள்வது அரசுசூழ்தலில் உகந்தது, அறத்தின்படி அதகம் எனப்படுகிறது” என்றார்.

“யாதவரே, துவாரகையுடன் நமக்கு இம்மூன்று வகையிலும் உறவில்லை. எனில் எவ்வண்ணம் நாம் இதில் தலையிட இயலும்?” என்றார் யுயுத்ஸு. சிற்றவையென சூழ்ந்து அமர்ந்திருந்த புலவர்களில் ஒருவர் “வரலாற்று நூல்களின்படி அஸ்தினபுரிக்கு துவாரகையுடன் எந்த அரசாடலும் இருக்க இயலாது” என்றார். நான் சினத்துடன் எழுந்து தலைவணங்கி “இனி இந்நகருக்குள் இதன்பொருட்டு நான் வரமாட்டேன்” என்று சொல்லி வெளிவந்தேன். ஆனால் அவ்வண்ணம் சொன்னது யுயுத்ஸுவை ஆறுதல்கொள்ளச் செய்வதையே கண்டேன். அவர் “தாங்கள் சினம் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நான் இங்கே அரசன் என அமர்ந்திருக்கவில்லை. தொகுக்கப்பட்ட இரு நெறிநூலடுக்குகளின் காவலன் என என்னை நிறுத்திச் சென்றிருக்கிறார் மூத்தவர்” என்றார்.

அன்றே அஸ்தினபுரியிலிருந்து நீங்கினேன். இன்றைய அஸ்தினபுரி நாம் அறிந்த நகரல்ல. அது பலமுறை சுழற்றிவிடப்பட்ட சூதுச்சகடம்போல் விழிகளை குழப்பியது. நான் பல முறை வழி தவறினேன். அந்தணர் ஒருவரிடம் வழி உசாவியே என்னால் வெளிவர முடிந்தது. முற்றிலும் அயல் முகங்கள். முகங்கள் இடங்களை அயலாக ஆக்கிவிடுகின்றன. தொலைவிலிருந்து பார்த்தபோது அந்நகரின் ஓசையே அயலெனத் தோன்றியது. அதன் கோட்டை பகலொளியில் கண்கூச சுடர்விட்டுக்கொண்டிருந்தது. ஒளியே நம்மை குருடாக்கும் என அங்கே அறிந்தேன். அக்கோட்டையை வெட்டவெளி என எண்ணி அருகணைந்தபின் திகைத்தேன். வழி மீண்டு என் புரவியில் தனித்து துயருற்று மீண்டும் துவாரகைக்கே சென்றேன்.

செல்லும் வழியில் சினம் ஓய்ந்து சொல் தெளிந்தபோது ஒன்று உணர்ந்தேன். அரசே, சம்வகை கூறியது உண்மை, இனி எந்த நாடும் துவாரகையின் அரசியலில் தலையிடப்போவதில்லை. சிந்துநாடு உட்பூசல்களில் சிக்கிக் கிடக்கிறது. கூர்ஜரம் ஒடிந்து கிடக்கிறது. மாளவம் சுருங்கி செயலற்றுவிட்டது. பிற நாடுகள் அனைத்தும் நெடுந்தொலைவில் எங்கோ உள்ளன. குருக்ஷேத்ரப் பெரும்போருக்குப் பின் ஒவ்வொரு நாடும் ஆற்றல் அழிந்துவிட்டிருக்கிறது. ஆற்றல்மிக்க அரசுதான் நாடுகளுக்குள் சிற்றரசர்களையும் குடித்தலைவர்களையும் அடக்கி கோன்மையை நிலைநாட்டியிருக்கிறது. அரசன் தளர்கையில் பூசல்கள் வெடிக்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும் துவாரகையின் கதையே நிகழ்கிறது. ஆகவே ஒவ்வொரு நாடும் இன்னொரு நாட்டில் பூசல்கள் நிகழ்வதில் ஆறுதல் கொள்கிறது. முடிந்தால் ஒற்றர்கள் வழியாக பூசல்களை வளர்க்கிறது.

பூசல் நிகழும் நாட்டில் முதலில் வீழ்ச்சியடைவது வணிகம். நிலைகொண்ட கோல் இல்லை என்னும் செய்தியல்ல ஐயமேகூட வணிகர்களை விலக்கிவிடுகிறது. அங்கே காவல் இல்லை. கள்வர்களை அச்சுறுத்தும் சொல் இல்லை. அரசனில்லா நாட்டில் நின்ற தூணும் வரி கேட்கும் என்று வணிகர்களிடையே ஒரு சொல் உண்டு. இன்று துவாரகையின் நிலையும் அதுவே. அங்கே உங்கள் மைந்தர்கள் அனைவருமே வரி கொள்கிறார்கள். குடித்தலைவர்கள் தனித்தனியாக வரி கொள்கிறார்கள். ஒருவர் வரி கொண்டார் என்றால் அந்த அளவுக்கு அவர் தன்னை மிஞ்சிவிட்டார் என்று உணர்பவர் தானும் வரி கேட்டு வணிகன் முன் வாளுடன் நிற்கிறார்.

துவாரகைக்கு கரைவணிகர்கள் வராமலாயினர். ஆகவே துறைமுகத்தை கடல்வணிகர்கள் தவிர்க்கத் தொடங்கினர். நாளுக்கு நூறு கலம் வந்த துறைமேடையில் இன்று ஒரு கலம் வந்தணைந்தால் அரிது. வருபவர்களிடமும் தோன்றியபடி வரி கொள்ளப்படுகிறது. வணிகர்கள் ஐயங்களால் ஆட்டுவிக்கப்படுபவர்கள். ஐயங்களை பரப்புபவர்கள். துவாரகையின் தெருக்கள் ஒழிந்துகிடக்கின்றன. பண்டநிலைகள் உப்பு உதிர்ந்து பாழடைகின்றன. ஆயினும் குடிகள் எதையும் உணரவில்லை. அவர்களிடம் சென்றகாலத்துச் செல்வம் எஞ்சியிருக்கிறது. அதைக்கொண்டு முன்பெனவே உண்டு குடித்து களியாடி பூசலிட்டு வாழ்கிறார்கள். அரசே, எக்குடியாயினும் எவ்வரசாயினும் ஒருதலைமுறைக்கு மேல் செல்வம் பெருகிச் செல்லக்கூடாது. களஞ்சியத்தில் நெல் இருப்பவன் வயலில் கிளியிறங்குவதை காண்பதில்லை.

உண்மையில் துவாரகை என்ற பெயரையே பாரதவர்ஷத்தின் மக்கள் மறந்துவிட்டிருக்கிறார்கள். எவரேனும் இயல்பாக அச்சொல்லை சொல்லிக் கேட்பதே அரிதாக இருப்பதை நான் அவ்வாறு எண்ணியபோதுதான் தெளிவுற உணர்ந்தேன். இத்தனை எளிதாக எங்கள் பெருநகர் மறக்கப்படுமென்பதை எண்ணிப்பார்க்க இயலவில்லை. துவாரகைக்குச் செல்லும் வழியில் சிற்றூர் ஒன்றின் அருகே பெருஞ்சாலையோரம் சூதர் குழுவினருடன் அமர்ந்திருக்கையில் பேச்சினூடாக “நான் துவாரகையிலிருந்து வருகிறேன்” என்றபோது ஒருவன் “துவாரகையா? அது அஸ்தினபுரியின் அருகில் அல்லவா உள்ளது?” என்றான். பிறிதொருவன் “இல்லை, தண்டகாரண்யத்திற்கு கிழக்கே” என்றான். இன்னொருவன் “அது முன்பிருந்த ஒரு நகரம், இன்றில்லை” என்றான். ஒருவன் “இன்று அவ்வாறு பல சிற்றூர்கள் உள்ளன” என்றான்.

உடனே ஓர் இசைச்சூதன் கதை சொன்னான். “அறிக, இளைய யாதவரால் கடல்நுரைகளைக் கொண்டு பாறைகள்மேல் உருவாக்கப்பட்டது துவாரகை!” அரசே, அவன் சொன்ன கதை இது. மதுராபுரியை வென்றபின் மூத்தவராகிய பலராமருடன் முடியுரிமைக்காக பூசலிட்டீர்கள். குடிவழக்கப்படி முடியுரிமை மூத்தவருக்கே என்றனர் குடிமூத்தோர். ஆகவே நீங்கள் விலகிச் சென்றீர்கள். தொலைநிலத்துக் கடல்முனை ஒன்றை அடைந்தீர்கள். உங்கள் மாயக்குழலை மீட்டியபடி கரைப்பாறையில் நின்றபோது இசைகேட்டு கடல் கொந்தளித்தது. பொங்கிய அலைகளில் இருந்து வெண்ணுரை கிளம்பி வந்து குவிந்தெழுந்து அந்நகரமாகியது. அதன் குடிகளும் படைகளும் ஏவலரும் காவலரும் உங்கள் குழலிசை உருவாக்கும் மாயையே. “அந்நகர் அவர் கண்ட கனவு. அங்கே குழலிசை கேட்டுக்கொண்டே இருக்கும். ஒருகணம் அதை கேட்காமலாகிறவர்கள் அங்கே நகரமே இல்லை, வெறும் பாறைகள்தான் உள்ளன என்று கண்டு திகைப்பார்கள்” என்றான். சலிப்புடன் நான் எழுந்துவிட்டேன்.

எவ்வண்ணம் ஒரு நகரை இப்படி மறக்கிறார்கள்? அரசே, ஒரு நகர் பாரதவர்ஷத்தின் ஓர் உறுப்பு. அங்கே குருதி என வந்து சென்றுகொண்டிருப்பவர்கள் வணிகர்கள். மூச்சு என வந்து செல்பவர்கள் சூதர்கள். பல்லாயிரம் சிற்றூர்கள் துவாரகைக்காக பொருட்களை செய்தன. பலநூறு நகர்களிலிருந்து அங்கு செல்லும் வண்டிகளும் படகுகளும் கிளம்பின. பல்லாயிரம் பல்லாயிரம் அங்காடிகளில் துவாரகையின் பொருட்கள் விற்கப்பட்டன. கைகளில் திகழ்ந்தன. நாவுகளில் அப்பெயர் ஒலித்தது. சூதரும் வணிகரும் வராதாகும்போது மெல்ல மெல்ல அந்நகர் உயிரற்றதாகிறது. உயிரிழக்கும் உறுப்பு உதிர்வது உடலின் நெறிகளில் ஒன்று. துவாரகையை பாரதவர்ஷம் உதிர்க்க ஒருங்கிவிட்டது. அதில் மீண்டும் உயிர் எழவில்லை எனில் மீள முடியாமல் ஆகும்.

ஆனாலும்கூட சூதர்கள் அதை எவ்வண்ணம் மறக்கிறார்கள்? எண்ணி எண்ணி வியக்கிறேன். இப்புவியில் துவாரகை அளவிற்கு பாடப்பட்ட பெருநகர் பிறிதொன்றுண்டா என்ன? உண்மையில் பாடிப் பாடித்தான் அதை மறக்கிறார்கள். சொல் சேர்த்து சொல் சேர்த்து அதைப் புனைந்து பிறிதொன்றாக்கி விண்ணுக்கு எழுப்பி தங்கள் சொல்லுலகில் கொண்டுசென்று நிறுத்திக்கொண்டார்கள். காவியங்களில் துவாரகை என்றும் இருக்கும். நாவுகளில் என்றும் திகழும். அது பிறிதொரு நகர், அதற்கு மண்ணோ கல்லோ தேவையில்லை. மானுடரோ அரசோ மணிமுடியோ அங்கே இல்லை. அதற்கு காலமில்லை. ஒருவேளை அங்கு ஒளியுடன் அந்நகர் திகழ வேண்டுமெனில் இங்கு இந்நகர் மண்ணில் உதிர்ந்து மறைந்தாகவேண்டும் போலிருக்கிறது.

மானுடர் தங்கள் கனவிலிருந்து எழுப்பிக்கொள்ளும் அப்பெருநகரை எவரேனும் இங்கு வந்து கல்லிலும் மண்ணிலும் கண்டால் சலிப்புறுவார்கள் போலும். அக்கற்பனை மேல் உள்ள வெறுப்பாலேயே இந்நகரை உதறுகிறார்களா? பெருவீரர்கள் இளமையிலேயே உயிர்துறக்க வேண்டுமென்பது ஒரு காவிய நெறி. இருந்து இயலா உடலுடன் அவர்கள் வாழ்வார்கள் எனில் அவர்களின் கதைகள் பொருளிழக்கும். அதுவே துவாரகையின் ஊழா? பாரதவர்ஷமே அவ்வண்ணம் விழைகிறதா? அவ்விழைவுதான் தீச்சொல் என எழுந்து அந்நகரை மூடியிருக்கிறதா? எண்ணும்போது கருநாகம் பாதி விழுங்கிய வெண்பறவை என்றே துவாரகை என் கற்பனையில் எழுகிறது.

எண்ணி எண்ணி சலிக்கிறேன், எவ்வண்ணம் சொற்கூட்டுவது என்று எனக்குத் தெரியவில்லை. தாங்கள் தங்கள் கனவிலிருந்து உயிர்கொடுத்து அமைத்த அம்மாநகர் அழிந்துகொண்டிருக்கிறது. துவாரகையின் தெருக்களில் இன்று நிகழ்வதென்ன என்று கூற விழைகிறேன். அரசே, துவாரகை தொலைவிலிருந்து நோக்கும்போதுதான் ஒன்று. அது உள்ளே மூன்று துண்டுகளாக ஆகிவிட்டிருக்கிறது. நகரின் கடலோரத் தென்பகுதியை சத்யபாமையின் மைந்தர்கள் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். இளவரசர் ஃபானு அங்கே ஒரு யாதவப் படைப்பிரிவை சூழ நிறுத்தி பதினெட்டு துணைமாளிகைகளை தன் ஆட்சியில் வைத்திருக்கிறார். துறைமுகமும் சூழ்பகுதியும் சாம்பனின் ஆணையில் உள்ளன. துறைமுகம் முதல் பண்டநிலை வரை சாம்பன் தனது அசுரப் படைகளை நிறுத்தியிருக்கிறார்.

அரசே, துவாரகையை பிற நிலங்களுடன் இணைக்கும் நான்கு பெருவழிப் பாதைகளையும், அவற்றுக்கு நடுவே உள்ள பாலைவனப் பகுதியையும் ருக்மிணியின் மைந்தர்கள் ஆட்சி செய்கிறார்கள். பிரத்யும்னனின் படைகளின் பாடிவீடுகள் அங்கே அமைந்துள்ளன. சத்யபாமையின் மைந்தர் ஃபானுவின் தலைமையில் அந்தகர்கள் ஒருங்கிணைய போஜரும் விருஷ்ணிகளும் தங்கள் குடித்தலைவர்களின் தலைமையில் அவருடன் முரண்பட்டும் பூசலிட்டும் உடனிருக்கிறார்கள். இன்றுள்ள அரசியல் நாளொரு நிலை என மாறிக்கொண்டிருக்கிறது. சாம்பனும் பிரத்யும்னனுமே முதன்மை எதிரிகள். யாதவர்கள் எப்பக்கம் சேர்வார்கள் என்பதே வினா. ஷத்ரியர்களின் பக்கம் சேர்வார்கள் என்றால் யாதவர்கள் அங்கே இரண்டாம் குடிகள். நிஷாதர்களுடன் சேர்ந்தால் என்றென்றும் தாங்களும் நிஷாதர்களாக கருதப்படுவார்கள். ஆகவே அவர்கள் அந்திப்பறவைகள் என அலைபாய்கிறார்கள்.

அந்த அல்லலை வளர்க்கிறார்கள் பிரத்யும்னனும் சாம்பனும். ஒருவேளை யாதவர்கள் மறுபக்கம் செல்வார்கள் என்றால் தங்களுக்கு ஆதரவாக அக்குடிகளில் ஒன்றை பிரித்தெடுத்துக்கொள்ளும் திட்டம் இரு சாராருக்குமே உள்ளது. ஆகவே இரு சாராருமே யாதவர்களிடையே பூசலை வளர்க்கிறார்கள். உண்மையில் யாதவர் நடுவே இருக்கும் இப்பூசலே இன்று துவாரகையில் இன்றுநாளை என போரை ஒத்திப்போட்டு செயற்கையான அமைதியை உருவாக்கியிருக்கிறது. யாதவர் ஒருங்கிணைந்து ஒருபக்கம் சென்றால் போர் தொடங்கிவிடும். சாம்பனும் பிரத்யும்னனும் போரிட்டால் இரு பக்கமும் அழிவே எஞ்சும். நிஷாதர்கள் எண்ணிக்கை வல்லமை கொண்டவர்கள், ஷத்ரியர்கள் போரில் வெறிகொண்டவர்கள். நடுவே யாதவர்களோ பூசலிடும் விழைவை வெல்லத் தெரியாதவர்கள்.

அரசே, யாதவர் நடுவே சிறிய சண்டைகள் ஓய்ந்த நாளே இல்லை. நான் கிளம்பும் அன்று கூட அந்தகர்களின் குழு ஒன்று சென்று போஜர்களின் குடிகளைத் தாக்கி படைக்கலங்களையும் செல்வங்களையும் கொள்ளையடித்து மீண்டது. போஜர்கள் அந்தகர்களை தாக்கினார்கள். எந்த நோக்கமும் இல்லாமல் விருஷ்ணிகளில் சிலரும் சேர்ந்து அந்தகர்களை தாக்க ஃபானுவின் படை வந்து போஜர்களை மட்டும் தாக்கி துரத்தியது. விருஷ்ணிகளை அரசப் படைகள் தாக்கவில்லை என்ற செய்தி பரவியபோது போஜர்களும் அந்தகர்களும் இணைந்துகொண்டனர். அவர்கள் விருஷ்ணிகளை தாக்க முற்பட்டனர். நான் என் படைகள் அனைத்தையும் திரட்டிக் கொண்டு நிறுத்தி இரு யாதவநிரைகளையும் பிரித்து இரவெலாம் பேசிப் பேசி சொல்லமையச் செய்தேன்.

துவாரகையின் அரியணைப் போட்டியில் அயலவர் இன்னமும் நேரடியாக பங்கெடுக்கவில்லை. ஆனால் எப்போது வேண்டுமென்றாலும் படையுடன் வந்து துவாரகையைச் சூழ்ந்துகொள்ளச் சித்தமாக இருப்பதாக விதர்ப்பத்தின் ருக்மி பிரத்யும்னனுக்கு செய்தி அனுப்பியிருக்கிறார். அவர் உண்மையில் துவாரகைக்கு அரசராக வேண்டுமென விழைவது சாருதேஷ்ணனைத்தான். பிரத்யும்னனின் குருதியில் வந்த மைந்தர் அனிருத்தன் பாணாசுரரின் மகள் உஷையை மணந்திருக்கிறார். அவரே பிரத்யும்னனுக்குப் பின் அரசராகக்கூடும். அனிருத்தனின் மைந்தர் வஜ்ரநாபனின் படைக்கலம்கொள்ளல் சடங்கை பெருவிழாவாகவே பிரத்யும்னன் எடுத்தார். அது ருக்மியை சினம்கொள்ளச் செய்திருக்கிறது. அது ஒரு சிறு தயக்கமாக எஞ்சியிருக்கிறது.

ஆனால் அந்தகர்களின் தரப்பில் கிருதவர்மன் களமிறங்குவார் என்றால் ஐயமே இன்றி உடனே ருக்மி படைகொண்டு வருவார். மதுராபுரியிலிருந்து பலராமரின் படைகள் துவாரகைக்கு வருமென்றாலும் ருக்மியின் படை நகருக்குள் நுழையும். அசுரர்களின் ஆதரவு எவருக்கு என்பது இன்னும் தெளிவாகவில்லை. பாணாசுரரின் குடியின் ஆதரவு அனிருத்தனுக்கே என எண்ணப்படுகிறது. சம்பராசுரரும் ஹிரண்யநாபரும் பிரத்யும்னனையே ஆதரிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் நிஷாதராகிய சாம்பனை ஆதரிக்கும் வாய்ப்பும் உண்டு. துவாரகை அயல்நிலத்துப் படைகளின் ஆடற்களமாக எக்கணமும் ஆகக்கூடும். அரசே, உச்சிக்கோடையில் புல்வெளி என இருக்கிறது துவாரகை. இளவரசர்கள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடங்களில் பற்றி எரியும் நெருப்பை அணைக்கும் பதற்றத்தில் இருக்கிறார்கள்.

அரசியர் எண்மரும் இந்த அரசியலிலிருந்து முற்றாக விலகிவிட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கணமும் இந்நகரத்தை ஆண்ட பேரரசி சத்யபாமை முற்றிலும் துறவு பூண்டதுபோல் கடலோரத்தில் சிறுமாளிகையில் தனித்து வாழ்கிறார். ஒருநாளும் தன் மைந்தர்கள் தன்னை வந்து சந்திக்கலாகாதென்று ஆணையிட்டிருக்கிறார். செய்திகள் எதையும் எவரும் அங்கே கொண்டுசென்று சேர்க்க கூடாதென்று சொல்லப்பட்டிருக்கிறது. யாதவ அரசி பாமைக்கு ஒவ்வொரு சொல்லுக்கு எதிர்ச்சொல் வைத்தவர் ஷத்ரிய அரசி ருக்மிணி. எண்ணத்திற்கு எதிரெண்ணம் என நிகழ்ந்தவர். இன்று செயலோய்ந்து மைந்தருடன் தங்கியிருக்கிறார். அவரும் அவ்வண்ணமே அரசு செய்திகள் எதையுமே கேட்டு அறிவதில்லை.

ஒருவகையில் அவர்களின் விலக்கமும் நகருக்கு நன்றென்று தோன்றுகிறது. அவர்கள் சொல் எவ்வகையிலும் பொருள்கொள்ளப்போவதில்லை. மைந்தர் வளர்ந்து அவர்களின் கைகளை கடந்துசென்றுவிட்டிருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் கண்காணிக்கிறார்கள். எதிரிகள் குறித்த செய்திகளை நாளுக்கு நூறுதடவை கேட்டு அறிந்துகொள்கிறார்கள். எதிரிகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். எண்ணுகிறார்கள், கனவுகாண்கிறார்கள். அங்கே பிறிதொரு சொல்லோ எண்ணமோ கனவோ இல்லை. ஒருவர் கொள்ளும் வஞ்சம் அவர் எதிரியிலும் அதே வகையில் வஞ்சத்தை எழுப்புகிறது என்பதை இப்போது கண்டேன். வஞ்சம்போல் பிரதிபலிப்பது வேறொன்றும் இல்லை. வஞ்சம் இலாத ஒருவரேனும் துவாரகையில் உண்டா என்பதே ஐயமாக இருக்கிறது.

வஞ்சச் சூழல் பிறரை அங்கே வாழமுடியாமலாக்குகிறது. நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் திரிந்தே பொருள்படுகிறது. எவரிடமும் விழிநோக்கி பேசமுடிவதில்லை. மெல்லமெல்ல நாமும் சொற்களை எண்ணித்தெரிந்து சொல்லத் தொடங்குகிறோம். நம் உள்ளமும் சூழ்ச்சி கொள்கிறது. எண்ணினால் விந்தை, மொழி இத்தனை ஆழ்ந்த பள்ளங்கள் கொண்டது, இத்தனை அவிழ்க்க முடியாத சிடுக்குகள் கொண்டது என இன்றே அறிந்தேன். அதைவிடவும் விந்தை ஒன்றுண்டு. நற்பொழுதுகளில் மொழியை இனிதாக்கும் கவிதைகளும் பாடல்களும் வஞ்சச் சூழல்களில் எரியை காற்றென ஐயங்களையும் குழப்பங்களையும் பகைமையையும் மூட்டிவிடுகின்றன. அரசே, இன்று துவாரகையில் வஞ்சம் அணையாது திகழ்வது சூதர்களால்தான்.

அங்கு இனி திகழும் சொல்லென ஒன்றே எஞ்சுகின்றது. தங்கள் ஆணை. தாங்கள் வந்தாகவேண்டும். நகர்புகுந்து தந்தை என எழுந்து தங்கள் மைந்தருக்கு ஆணையிடுக! அந்நகர் மேல் தங்கள் கோல் எழவேண்டும். தாங்கள் அங்கு மீண்டும் அரியணை அமராவிடில் அந்நகர் அழியும், ஐயமில்லை. அதை கூறவே இங்கு வந்தேன். தாங்கள் அந்நகரை ஆக்கியது இத்தகைய கீழ்மை நிறைந்த அழிவின் பொருட்டல்ல அல்லவா? உங்கள் சொல்லுக்கு நிகராக துவாரகை என்னும் பொருளும் அங்கே நிலைகொள்ளவேண்டும் அல்லவா? அரசே, ஆக்கப்பட்ட அனைத்தும் அழியும் என்பதை அறிந்திருப்பீர்கள் என்பதை அறியாதவனல்ல நான். ஆனால் அவை தன் கண்ணெதிரிலேயே அழியவேண்டுமென்று விழைபவர் எவரும் இருக்கமாட்டார்கள். மைந்தர் சாவை கண்முன் காண்பதைப்போல் தந்தைகொள்ளும் பெருந்துயர் வேறேது?

ஆம், நீங்கள் அளித்த பெருஞ்செல்வத்தை யாதவர் இழந்துவிட்டனர். பேரருவி முன் கைக்குவை நீட்டி நீர் அருந்துபவர்கள் அவர்கள். அவர்களின் விடாயளவே அவர்களுக்குத் தேவை. தங்கள் சிறுமையை அவர்கள் இன்னும் உணரவில்லை. அச்சிறுமையையே படைக்கலம் என, பீடமெனக் கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களை நீங்கள் அறியமாட்டீர்களா என்ன? அறிந்த பின்னர் நீங்கள் அளித்ததுதானே அந்நகர்? அரசே, இன்று அவர்கள் சிறியோர் ஆக இருக்கலாம். அவர்களின் குருதியில் பெருமைமிக்க மைந்தர் எழக்கூடுமே? அவர்களின்பொருட்டு அந்நகர் அங்கே நின்றிருக்கலாகுமே? அந்நகரை அவர்கள் இழந்தால் எழும் மைந்தர் இடிபாடுகளை அல்லவா அடைவார்கள்? இன்மைகூட நன்று, அங்கே கனவுகள் எழமுடியும். அரசே, இடிந்தவை மாபெரும் சுமை. அவற்றைக் கடந்து முளைத்தெழுவது பற்பல தலைமுறைகளால் இயல்வது அல்ல.

சாத்யகியின் குரல் எழுந்தது. அவன் குனிந்து இளைய யாதவரின் கால்களை பிடித்துக்கொண்டான். “எழுக அரசே, தங்கள் குடி காக்க எழுக! எங்கள் கொடிவழியினருக்காக எழுக! உங்கள் அடிவணங்கி இதுநாள்வரை வாழ்ந்தவன். என் குருதிவழியின் இறுதித்துளியையும் தங்கள்பொருட்டு அளித்தவன். என் விழிநீர் கண்டு இரங்குக! அங்கு நீங்கள் எழுந்தருளுவதொன்றே போதும். தங்களால் ஒரு சொல்லில் ஒரு விரலசைவில் அந்நகரை மீட்க இயலும். பிற எவரையும்விட அதை நன்கு அறிந்தவன் நான். தெய்வமொன்றே எங்களை காக்கமுடியும், பிறிதொரு தெய்வம் எங்களுக்கு இல்லை. தெய்வமெழுந்தும் எங்கள் குலம் அழியுமென்றால் இப்பாரதவர்ஷத்தின் குலங்களில் கீழ்க்குலம் என்றே நாங்கள் அறியப்படுவோம். அருள்க!”