கல்பொருசிறுநுரை - 6

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் – 1

சாத்யகி மலைப்பாதைகளினூடாக ஏழு நாட்கள் பயணம் செய்து மந்தரத்தை அடைந்தபோது இளம்புலரி எழுந்திருந்தது. இரவெலாம் அவனது புரவி தன் விழியொளியாலேயே வழி தேர்ந்து அங்கு வந்து சேர்ந்திருந்தது. தரையில் முகர்ந்து முன்னர் சென்ற புரவிகளின் மணம் பெற்றுக்கொண்டு, அவ்வப்போது மூக்கு சீறியும், சினைத்தும், குளம்புகளால் காலைத் தட்டியும் அது நடந்தது. இரவில் நிலவொளி எழுந்திருந்தது அதற்கு உதவியாக இருந்தது. புரவியின் மீது கடிவாளத்தை தளரப்பற்றி தோள் தழைய அரைத்துயிலிலென சாத்யகி அமர்ந்திருந்தான். சுற்றிலும் விரிந்திருந்த முட்புதர்ப் பெருநிலம் பல்லாயிரம் பூச்சிகளின் குரல்கள் இணைந்து உருவான முழக்கமாக இருந்தது. விண்மீன்கள் சிதறி வானில் பரவியிருந்தன. காற்று எல்லா திசைகளிலிருந்தும் மாறி மாறி வீசிக்கொண்டிருந்தது.

அவ்வப்போது வானை நோக்கி செல்லும் திசையை அவன் உறுதி செய்துகொண்டான். அங்கு திசை தவறுவதற்கான வாய்ப்புகளே இருக்கவில்லை. புரவிக்குளம்புகளாலான ஒற்றைப் பாதை வளைந்து ஏறி இறங்கி, மலைஇடுக்குகளில் புகுந்து வெளிவந்து, தனி ஓடைபோல் சென்றுகொண்டிருந்தது. புதர்க்காடுகளுக்குள் சிறு விலங்குகள் சலசலத்து ஓடின. இரு முறை அவன் கூட்டமாக செல்லும் யானைகளை பார்த்தான். இருட்குவைகள் எழுந்து எழுந்து இருளுக்குள் செல்வதுபோல் அவை அகன்றன. அவன் வருகையை முன்னரே உணர்ந்துவிட்டிருந்த அன்னை யானை சிறிய பிளிறல்களால் பிற யானைகளுக்கு அறிவுறுத்தியது. பிறிதொரு மந்தை சரிவுக்குக் கீழே நிற்பதை அங்கிருந்து எழுந்த குரல் காட்டியது. அவன் புரவி குளம்புகளால் தரையைத் தட்டியபடி அவை சாலையைக் கடந்து மறுபக்கம் செல்லும்பொருட்டு காத்து நின்றது. அவை சென்றபின் பெருமூச்சுடன் காலெடுத்து வைத்து நடந்தது.

வழியில் அவன் எங்கோ சற்று துயின்றிருக்கவேண்டும். விழித்தபோது விண்மீன்கள் இடம் மாறியிருந்தன. விழி துழாவி தேடியபடி வழியை கண்டடைந்தான். பெருமூச்சுடன் கைகளைத் தூக்கி உடலை நிமிர்த்தி சோம்பல் முறித்தான். புலரும்போதேனும் அம்மலையிடுக்குத் தாழ்வரை துலங்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டான். புரவி இரு மலைகளின் இடைவெளியினூடாக விளிம்பை சென்றடைந்தபோது எதிரே கீழிருந்து குளிர்காற்று வந்து அறைந்தது. கீழே கண் துலங்கும்படி வெளிச்சம் பரவியிருந்தது. அதில் பசுமை நிறைந்து காற்றில் கொப்பளித்தது. சூழ்ந்திருந்த வானம் மெல்லிய வெளிச்சத்துடன் முழுவட்டமெனத் தெரிந்தது. தாழ்வரையின் நடுவே மந்தரத்தை அவன் கண்டான். அக்காட்சியில் தன்னை மறந்தவனாக நெடுநேரம் அமர்ந்திருந்தான்.

மலைகளுக்கு அப்பால் கதிர்முகம் எழுந்தது. அனைத்து முடிப்பாறைகளும் ஒரு பக்கம் பொன்னாக மாறின. பறவைகள் தெளிந்த வானில் சிறகுலைத்து சுழன்று சுழன்று எழுந்தமர்ந்தன. அங்கிருந்து ஓசைகள் எதுவும் கேட்கவில்லை. உயிர்களின் ஓசைகள் நெடுந்தொலைவு கேட்பதில்லை. படைக்கலன்களும் கருவிகளும் எழுப்பும் ஓசைகளே காற்றைக் கடந்தும் சென்று சேர்கின்றன. அவை உயிர்க்குலங்களுக்கு அப்பால் என எழும் விழைவு கொண்டவை. உயிர்க்குலங்களின் ஓசைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டவையும்கூட. அவன் புரவியைத் தட்டி அதை புழுதி படிந்த பாதையினூடாக கீழே இறக்கிக்கொண்டு சென்றான். வளைந்து வளைந்து இறங்கியபோது தன்னை ஒரு பருந்தென உணர்ந்தான்.

பச்சைப்புல் இடைவரை செழித்துப் பரந்து கிடந்த நிலத்தை அடைந்ததும் அவன் புரவி காலை ஊன்றி நின்றுவிட்டது. “செல்க! செல்க!” என்று அவன் அதை தட்டினான். அது தலையை அசைத்து ஓசை எழுப்பியது. அவன் அச்சிற்றூருக்கு இருக்கும் தொலைவை பார்த்த பின்னர் கடிவாளத்தையும் சேணத்தையும் கழற்றி அங்கிருந்த சிறிய மரத்தின் மீது தொங்கவிட்டான். அதன் பின்பக்கம் தட்டி “செல்க!” என்றபின் நடந்து மந்தரத்தை சென்றடைந்தான். நீர் நிரம்பி ஓடிக்கொண்டிருந்த ஓடைக்கு அருகே வந்து குனிந்து கைகால்களை கழுவிக்கொண்டு மறுபக்கம் கால் வைத்து மரப்பாதையிலேறி ஊருக்குள் நுழைந்தான்.

எதிரே கையில் கூடையுடன் வந்த முதுமகள் அவனிடம் இயல்பாக “வடநிலத்து முனிவரை பார்க்க வந்திருக்கிறீர்களா?” என்றாள். பிறிதெவரும் அங்கு வருவதில்லை என்று அவ்வினாவிலிருந்து உணர்ந்து அவன் புன்னகையுடன் “ஆம், அன்னையே. வணங்குகிறேன்” என்றான். அவளுக்கு முகமன் உரைக்கத் தெரியவில்லை. வெறுமனே தலையசைத்தாள். அவள் “அங்கு மரத்தடியில் அமர்ந்திருக்கிறார். செல்க!” என்றாள். அவன் இளைய யாதவரின் குடில்வாயிலை வந்தடைந்தான். உள்ளே எவரும் இருப்பதுபோல் தெரியவில்லை. உள்ளே பொருளென எதுவுமே இல்லை என்று தோன்றியது. திரும்பிப் பார்த்தபோது குறுங்காட்டின் விளிம்பில் மரத்தடியின் வேரில் இளைய யாதவர் அமர்ந்து குழலூதிக்கொண்டிருப்பதை கண்டான். அருகணைந்து சற்று அப்பால் நின்றான்.

மரக்கூட்டங்களின்மேல் புலரியொளி எழுந்திருந்தது. பறவைகள் பறந்திறங்கி புற்பரப்பில் அமர்ந்து எழுந்தன. அவன் வருவதை எவரும் உணரவில்லை. அவரைச் சூழ்ந்து குழந்தைகள் அமர்ந்திருந்தன. பெரும்பாலும் பெண் குழந்தைகள். இளைய யாதவர் விழிமூடியிருந்தார். சற்றே பெரிய குழந்தைகளின் நீண்ட விழிகள் இசையில் மயங்கி சிவந்து வெறிப்பு கொண்டிருந்தன. துயிலென இமை தழைந்திருக்க முகம் தழைந்து கனவில் குழைந்திருக்க அமர்ந்தும் படுத்தும் இளம்குழவிகள் இசையில் அமைந்திருந்தன. ஒவ்வொரு முகமாக நோக்கியபடி அவன் நின்றான். மானுடர் பிறிது எவரேனும் இசையில் அத்தனை தோய இயலுமா? பெண்களைப்போல ஆண்கள் இசைக்கு முழுதளிக்க இயலுமா? பெண்களும் குழவிப்பருவத்திலன்றி இசையே என்றாக முடியுமா?

குழலிசையே பெண்களுக்குரியது. சுழன்று சுழன்று இனிமை மேலும் இனிமை என்று செல்வது. குழைந்து மன்றாடி உருகி திளைத்து எழுந்து ஒளிர்ந்து பொலிந்து மீண்டும் எழுவது. பெண்டிர் மட்டுமே அதை முழுதுணர முடியும். அதன் அத்தனை அசைவுகளிலும் பெண்மை இருந்தது. சிற்றோடைகளில், தளிர்க்கொடிகளில், புகைச்சுருள்களில், பட்டின் நெளிவுகளில், மெல்லிறகுகளில் எழும் பெண்மை. பாலைநிலத்து அலைகளில், நீர் நுரையில் , திசைவளைவில் தோன்றும் மென்மை. அவன் பெருமூச்சுடன் மீண்டபோது விழிநீர் வழிந்து மார்பை நனைத்திருந்தது. இரு கைகளையும் மார்பில் சேர்த்து வைத்து தலைகுனிந்து நின்றிருந்தான்.

குழலை உதட்டிலிருந்து எடுத்தபின் விழிதிறந்த இளைய யாதவர் அவனை நோக்கி “வருக!” என்றார். அவன் அச்சொல்லை நெடுந்தொலைவில் என கேட்டான். “எப்போது வந்தாய்?” என்றார் இளைய யாதவர். அவன் முழந்தாளிட்டு மண்ணில் அமர்ந்து தலைவணங்கினான். “என்ன நிகழ்வு?” என்று அவர் கேட்டார். “எத்தனை காலமாகிறது இக்குழலோசை என் செவியில் கேட்டு!” என்றான். “இங்கு ஒவ்வொரு நாளும் இசைக்கிறேன். நாளில் பெரும்பகுதி குழலிசையும் விளையாட்டும்தான்” என்றார். “ஆம், குடிலுக்குள் பார்த்தேன். நூலென எதுவுமில்லை” என்று அவன் சொன்னான்.

பெண் குழந்தைகள் இசை நின்றுவிட்டதை அறியாதவைபோல் அங்கு பரவியிருந்தன. அவன் நோக்குவதைப் பார்த்து இளைய யாதவர் புன்னகைத்து “தேனீக்கள்போல இசை கேட்க வேண்டும் என்பார்கள். தேனில் பிறந்து உடல்கொள்கின்றன. தேனையே சிறகாகக்கொண்டவை அவை எனப்படுகின்றன. அவற்றின் அசைவு தேனின் நடனம். அவற்றின் இசை தேனின் ஓசை” என்றார். சாத்யகி “இவ்விசை பெண்டிருக்குரியது என்று எனக்குத் தோன்றியது” என்றான். “ஆம், அவர்களை அணுகியறியும் ஆண்களால் இசைக்கப்படவேண்டியது” என்று இளைய யாதவர் கூறினார். சாத்யகி புன்னகைத்தான்.

அவர் அவன் தோளில் கைவைத்து எழுந்துகொண்டு குழலை இடைக்கச்சையில் செருகியபடி நடந்தார். அவன் பெருமூச்சுகளை விட்டுக்கொண்டு உடன் நடந்தான். “கூறுக!” என்றார் இளைய யாதவர். “அரசே, தாங்கள் நகர் திரும்ப வேண்டும்” என்று அவன் சொன்னான். “அதைக் கூறவா இத்தனை தொலைவு வந்தாய்?” என்றார். “ஆம், அதை கூறுவதற்காக மட்டுமே தேடி வந்தேன்” என்று சாத்யகி சொன்னான். “தாங்கள் அறியாதது எதுவும் இன்றில்லை. எனினும் அறிய வேண்டியவற்றை அறிவிப்பது என் கடமை என்பதனால் வந்தேன்.” அவர் ஒன்றும் சொல்லவில்லை. “என் சொற்கள் சொல்லப்பட்டன என்றாகவேண்டும், சொல்லியிருக்கலாம் என்று தோன்றலாகாது. ஆகவேதான்” என்றான்.

“சொல்” என்றார். “துவாரகை இன்று எந்நிலையில் இருக்கிறது என்று அறியவேண்டும். ஒருவேளை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் தோன்றுகிறது. ஏனெனில் மைந்தரைப்பற்றி தீயவை எதையும் தந்தையர் அறிவதே இல்லை. அவர்களின் அகத்திலிருந்து ஒன்று எழுந்து அவற்றை விலக்குகிறது. ஆகவே அவர்களின் விழி காண மறுக்கிறது” என்றான். இளைய யாதவர் ஒன்றும் சொல்லாமல் தலைகுனிந்து நடந்தார். “அஸ்தினபுரியிலிருந்து அரசரிளையோர் நால்வரும் கிளம்பிச்சென்றுவிட்டனர் என்று தாங்கள் அறிந்திருப்பீர்கள். சில நாட்களுக்கு முன் அரசர் யுதிஷ்டிரனும் அரசியுடன் கானேகினார். அஸ்தினபுரியின் அரசு இன்று அவர் குடியின் இளையவர் யுயுத்ஸுவிடம் அளிக்கப்பட்டுள்ளது. யுயுத்ஸு மணந்த சூதப்பெண் சம்வகையால் அப்பேரரசு இன்று நடத்தப்படுகிறது” என்றான்.

இளைய யாதவர் கேட்டுக்கொண்டு நடந்தார். “துவாரகையிலிருந்து பரீக்ஷித்தை இந்திரப்பிரஸ்தத்துக்கு கொண்டுசென்றுவிட்டார்கள். அவனுக்கு பதினெட்டு ஆண்டு அகவை நிறையும்போது மணிமுடியை அவனிடம் அளித்துவிட்டு அரசு ஒழியவேண்டும் என்பது யுயுத்ஸுவுக்கு அரசர் இட்ட ஆணை. அதுவரை யுயுத்ஸுவின் சொல்லே அஸ்தினபுரியை ஆளும். அச்சொல்லுக்கு மெய்ச்சொல் சாந்தி நூல்களும் அனுசாசன நூல்களும் நிலைகொள்கின்றன.” இளைய யாதவர் ஒன்றும் சொல்லவில்லை என்று கண்டு அவன் தொடர்ந்தான். “அஸ்தினபுரி சம்வகையால் முறையாகவே ஆளப்படுகிறது. அரசி என்றும் அன்னை என்றும் கொல்வேல் கொற்றவை என்றும் அவரை மக்கள் வணங்குகிறார்கள். சத்யவதியின் வடிவம் அவர் என்கிறார்கள். யுயுத்ஸு நெறி நோக்க அந்நெறிகளை செயலாக்குகிறார். சொல்லும் பொருளுமென அவர்கள் இணைந்துள்ளார்கள் என்று சூதர்கள் பாடுகிறார்கள்.”

“ஆனால் ஏழு முறை நான் சென்று பார்த்தபோது அஸ்தினபுரியின் அவையிலும் அரசரிடமும் நான் ஒன்று உணர்ந்தேன். அது சம்வகையில் இருந்து உருவான கொள்கை என தெளிந்தேன்” என சாத்யகி தொடர்ந்தான். “அவர்களுக்கு இன்று துவாரகையுடனோ பிற துணைநாடுகளுடனோ நேரடித் தொடர்புகள் ஏதுமில்லை. அங்கநாடும் இடும்பநாடும் மட்டுமே தன் குருதித் தொடர்பு நாடென்று அரசி எண்ணுகிறார். கர்ணனின் மைந்தன் முடி சூடி அதை ஆள்கிறான். பார்பாரிகனின் இளையோன் இடும்பநாட்டை ஆள்கிறான். பிற நாடுகள் எதன் உட்சிக்கல்களிலும் அஸ்தினபுரி தலையிடுவதில்லை. நான் அனுப்பிய தூது எதற்குமே முறையான மறுமொழி வரவில்லை. துவாரகையிலிருந்து செல்லும் செய்திகள் எதையுமே ஓரிரு சொற்களுக்கு மேல் அரசி செவிகொள்வதில்லை என்று தூதர் உரைத்தனர்.”

துவாரகையின் நிலையை அரசி கருத்தில் கொள்ளவேண்டுமென்று சொல்வதற்காக முதல்முறையாக நான் அங்கு சென்றேன். என்னை ரிஷபவனத்தின் அரசன் என்ற நிலையில் அரசி அவையில் வரவேற்றார். என் தூதை சொல்லும்படி ஆணையிட்டார். நான் “அரசி, துவாரகைப் பெருநகர் குடிப்பூசல்களாலும் முடிப்பூசல்களாலும் அழிந்துகொண்டிருக்கிறது. அஸ்தினபுரியை ஆக்கியவர் துவாரகையின் அரசராகிய இளைய யாதவர். அவரே அஸ்தினபுரிக்கும் காவலர் என அறிவீர்கள். இளைய யாதவரின் நகரை தாங்கள் அழியவிடலாகாது. படையுடன் வந்து அங்கு நெறி நிலைநாட்டவேண்டும்” என்றேன். அவையினர் அரசியின் சொற்களுக்காகக் காத்து அமர்ந்திருந்தனர்.

சற்றுநேரம் எண்ணம்சூழ்ந்த பின் அரசி என்னிடம் “எதை நிலைநாட்டவேண்டும்?” என்று கேட்டார். “குலத்தார் நடுவே ஒருமையை. அரியணையில் அரசை. குடிகளிடையே நம்பிக்கையை” என்றேன். “அங்கு அரசரால் முடிசூட்டப்பட்டவர் யார்?” என்று சம்வகை கேட்டார். “அரசர் இருக்கையிலேயே ருக்மிணியின்  மைந்தர் சாருதேஷ்ணன் பட்டத்து இளவரசராக அவையமர்ந்தது உண்டு” என்றேன். “அப்போது பிரத்யும்னன் சம்பராசுரரின் அரண்மனையில் இருந்தார்.” சம்வகை “ஆம், ஆனால் யாதவக் குடியவைகளில் பட்டத்து இளவரசர் என அமர்ந்திருந்தவர் சத்யபாமையின் மைந்தரான பானு” என்றார். “ஆம், ஆனால்…” என்றபின் நிறுத்திக்கொண்டேன். “ஆனால் பின்னாளில் படைகொண்டு சென்று வென்றவர்கள் ருக்மிணியின் மைந்தர் பிரத்யும்னனும் ஜாம்பவதியின் மைந்தர் சாம்பனும். அவர்கள் படைநிலங்களில் பட்டத்து இளவரசர்களாக அமர்ந்ததுண்டு” என்றார்.

அவர் சொல்லவருவது என்ன என்று எனக்கு புரிந்தது. “ஆம், அதனால்தான் இத்தனை குழப்பங்களும். அதன்பொருட்டே தங்கள் உதவியை நாடி வந்தேன்” என்றேன். “குடிப்பூசல் எவரிடம்?” என்று சம்வகை கேட்டார். அவர் அனைத்தும் அறிந்திருந்திருக்கிறார் என்று தெரிந்தது. ஆனால் நான் சொல்லவேண்டும் என எதிர்பார்க்கிறார். நான் குறைத்துச் சொல்ல முடியாது, பெருக்கவும். ஆகவே நிகழ்வதை சொன்னேன். “அரசி, அங்கே மூன்று குலக்குழுக்கள் என மக்கள் பிரிந்திருக்கின்றனர். ஏனென்றால் அரசகுடியினர் அவ்வண்ணம் பிரிந்திருக்கிறார்கள். துவாரகையின் மக்களில் பெரும்பகுதியினர் யாதவர்களே. அவர்கள் சத்யபாமையின் மைந்தர் பானுவை அரசனாக எண்ணுகிறார்கள்.”

“இன்னொரு சாரார் ஷத்ரியர்கள். வெவ்வேறு காலங்களில் துவாரகைக்கு வந்தவர்கள். பெரும்பாலும் அரசர் மணம்கொண்ட நாடுகளிலிருந்து வந்தவர்கள். அரசுப்பொறுப்புகளையும் படைப்பொறுப்புகளையும் நடத்தியவர்கள். அவர்கள் ருக்மிணிதேவியின் மைந்தர் பிரத்யும்னனையே தங்கள் அரசர் என எண்ணுகிறார்கள். ஷத்ரியர்களில் பெரும்பாலானவர்கள் ருக்மிணிதேவியின் விதர்ப்பநாட்டவர். அரசி நக்னஜித்தியின் கோசலநாட்டினரும், மித்ரவிந்தையின் அவந்தியினரும், பத்ரையின் கேகயத்தினரும் பிரத்யும்னனை ஆதரிக்கிறார்கள். ஷத்ரியர்களின் எண்ணிக்கை வலுவானதாகவே உள்ளது” என்றேன்.

“எஞ்சியோர் நிஷாதர், அசுரர்” என்றார் சம்வகை. “ஆம், அரசி. ஆனால் அவர்களின் எண்ணிக்கையும் சிறிதல்ல” என்றேன். “நிஷாதகுடியினரான ஜாம்பவதியின் மைந்தர் சாம்பர் பெருவீரர். அவருடன் காளிந்தியின் மைந்தர்கள் சுருதனும் பிறரும் நின்றிருக்கிறார்கள். மத்ரநாட்டு அரசி லக்ஷ்மணை ஷத்ரியர்களுடன் நின்றிருக்க விரும்பினார்கள். ஆனால் அவைகளில் அவர் மைந்தர்கள் நிஷாதர்களாகவே நடத்தப்பட்டனர். ஆகவே சென்ற சில மாதங்களாக அவர்கள் சாம்பனின் ஆதரவாளர்களாக மாறிவிட்டிருக்கிறார்கள். துவாரகையில் நிஷாதர், அரக்கர், அசுரர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே முன்பு இருந்தது. ஆனால் இப்போது வெவ்வேறு நிலங்களில் இருந்து வந்து குடியேறி நிறைந்திருக்கிறார்கள். யாதவர்களிலும் ஷத்ரியர்களிலும் பலர் குருக்ஷேத்ரப் போரில் கொல்லப்பட்டுவிட்டனர். ஆகவே ஏனையோர் பெருகித்தெரிகிறார்கள்.”

நான் மேலே சொல்வதற்காக அரசி காத்திருந்தார். “யாதவர்களிடையே குடிப்பூசல் உள்ளது. விருஷ்ணிகளும் போஜர்களும் அந்தகர்களும் முரண் கொண்டு நின்றிருக்கின்றனர். விருஷ்ணிகள் தங்களுடையதே துவாரகை என எண்ணுகிறார்கள். அந்த எண்ணம் பிற யாதவர்களை ஒவ்வாமைகொள்ளச் செய்கிறது. சததன்வாவின் கொலைக்கு பழிவாங்கும் வெறி இன்னும் அந்தகர்களிடையே உள்ளது. குருக்ஷேத்ரப் போரிலிருந்து திரும்பி வந்த கிருதவர்மன் அந்தகர்களின் தலைவனாக ஆகிக்கொண்டிருக்கிறார். அவர் இன்னும் துவாரகையை வந்தடையவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்றும் எவருக்கும் தெரியவில்லை. ஆனால் அவரைப்பற்றி பேசிக்கொண்டே இருக்கிறார்கள். போஜர்கள் விருஷ்ணிகள் மீதான ஐயத்தால் அந்தகர்களுடன் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள்.”

“இன்று தேவை துவாரகையின் குடிகளிடையே ஒத்திசைவை உருவாக்கி அரியணையை உறுதி செய்தல். இளைய யாதவர் அமர்ந்த அரியணையில் உரிய அரசரை அமர்த்தி, அவருடைய கோலுக்கு அஸ்தினபுரியின் வாள் துணையாகும் என அறிவித்தல். அதை செய்தாகவேண்டும் அஸ்தினபுரியின் அரசர்” என்று உரைத்தேன். சம்வகை “நன்று, அவ்வண்ணம் ஒருவரை நான் அரியணையில் அமர்த்துகிறேன். அதன் பின் நான் என்ன செய்யவேண்டும்? அவரை பிறர் ஏற்கவில்லை எனில் என்ன வழி?” என்றார். “அஸ்தினபுரியின் பெரும்படை அவ்வரசருக்கு துணை இருக்கிறதென்று குடிகள் அறிந்தால் போதும்” என்றேன்.

அரசி சற்றே புன்னகைத்து “அப்பெரும்படை இங்கிருந்து கிளம்பிச்சென்று பெரும்பாலை நிலங்களுக்கு அப்பால் துவாரகையில் நெடுங்காலம் தங்க இயலாது. பூசலொன்று வருமெனில் இங்கிருந்து கிளம்பி அங்கு வரை செல்வதும் எளிதல்ல. யாதவரே, துவாரகை பாரதவர்ஷத்திலிருந்து விரிந்த வெறுநிலங்களால் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே பாரதவர்ஷத்தின் எந்த நாடும் அதை ஆள இயலாது. முன்பு அந்நிலத்தை இளைய யாதவர் தெரிவு செய்ததே பாரதவர்ஷத்தின் கைகள் அங்கு செல்லக்கூடாதென்பதற்காகத்தான். இன்று அதுவே எதிர்விளைவை உருவாக்கியுள்ளது. அஸ்தினபுரியல்ல, எந்த நாடும் துவாரகையை முழுதும் கட்டுப்படுத்த இயலாது” என்றார்.

“துவாரகை தன் நெறிகளை தானே கண்டடைய வேண்டும். தன் அரசரை அதுவே தெரிவு செய்யவேண்டும். அஸ்தினபுரி உண்மையில் அங்கே செய்வதற்கொன்றுமில்லை” என்றார் சம்வகை. “அரசி, அவ்வண்ணம் தாங்கள் எங்களை கைவிடலாகாது” என்றேன். “இது கைவிடுவதல்ல. இயலாத ஒன்றை பொறுப்பேற்றுகொள்ளலாகாது என்பது அரசுசூழ்தலின் நெறிகளில் ஒன்று. தொடங்காதிருக்கையில் அச்சமேனும் எஞ்சும், தொடங்கி தோல்வியடைந்தால் அது வீழ்ச்சியின் தொடக்கம் என்று ஆகக்கூடும்” என்றார் சம்வகை. “நேரடியாகவே சொல்கிறேனே, அங்கே இரு மாவீரர்கள் உள்ளனர். அனிருத்தனும் சாம்பனும்தான் பாரதவர்ஷத்தில் இன்றிருக்கும் போர்வீரர்களில் முதன்மையானவர்கள். அஸ்தினபுரியில் இன்று ஐந்து அரசர்களும் இல்லை. அவர்களின் மைந்தர்களும் களம்பட்டுவிட்டனர். அனிருத்தனுக்கும் சாம்பனுக்கும் எதிராக நாங்கள் எவரை படைமுகம் கொள்ளச் செய்யமுடியும்?”

நான் திகைத்துவிட்டேன். அரசி தன் நுண்மாண் நுழைபுலத் தேர்ச்சிக்கு அடியில் எளிய பொதுக்குடிப் பெண்ணே என்பதை அந்த நேரடிச்சொல் காட்டியது. ஆனால் அவர் மேலும் பேசியபோது கடந்து காணும் கண்கொண்ட பேரரசி அவர் என்று தெரிந்தது. “யாதவரே, இன்று அஸ்தினபுரி பாரதவர்ஷத்தின் மாபெரும் பேரரசு. அரசுகளும் அமைப்புகளும் வளர்வதில் எப்போதும் ஒரு முறைமை தெரிகிறது. அவை வளர வளர அவற்றில் உள்ள ஒவ்வொன்றும் வளர்கின்றன. அவற்றைச் சூழ்ந்திருக்கும் ஒவ்வொன்றும் அதேயளவு வளர்கின்றன. பிழைகள் வளர்கின்றன, முரண்பாடுகள் வளர்கின்றன, அன்றாடச் சிக்கல்கள் ஒவ்வொன்றும் பேருருக் கொள்கின்றன. ஒரு சிறுநாட்டில் ஒரேநாளில் முடியும் ஒரு சின்னஞ்சிறு இடர் பேரரசில் பல மாதங்கள், பல ஆண்டுகள் நீளக்கூடும். ஏனென்றால் ஒவ்வொன்றுடனும் அப்பேரரசின் பேரமைப்பில் உள்ள ஒவ்வொன்றும் வந்து சேர்ந்துகொள்கிறது. சினங்கள், ஐயங்கள், கசப்புகள், குழப்பங்கள், பிழைகள் எல்லாம் வந்தமைந்து ஒவ்வொரு புள்ளியும் பேருருக்கொண்டு பேரெடைகொண்டு வீங்கிப் பெருத்து எழுகிறது.”

“ஆனால் விந்தை என இன்னொன்றும் உண்டு. அப்பேரரசின் ஆட்சியமைப்பு அவ்வண்ணம் பெரிதாக வளர்ந்துசெல்வதில்லை. அது நுரைபெருப்பதுபோல நோக்க நோக்கப் பெருகி வியனுருக் கொள்ளும். அதன் உட்கூறுகள் வளர்ந்து விரிந்து செல்லும். அவற்றுக்கிடையே எண்ணி எண்ணித் தொடமுடியாத தொடர்பாடல்முறைமைகள் அமையும். மானுட உருவாக்கமா தெய்வப்படைப்பா என்று உணரமுடியாத அளவுக்கு நுண்ணியதும் சிக்கலானதும் பேருருக்கொண்டதுமான ஓர் ஆட்சியமைப்பு சில ஆண்டுகளில் தன்னைத்தானே கட்டிக்கொண்டு வளர்ந்து தலைக்குமேல் என எழுந்து நிற்கும்.”

“ஆனால் அவ்வளர்ச்சிக்கு ஓர் எல்லை உண்டு. அங்கே அது உறைந்து நிற்கத் தொடங்கும். புற்றென வளர்ந்து பாறையென ஆகிவிட்டதுபோல. அதன்பின் அதனால் எழமுடியாது. ஆனால் பேரரசோ முந்தைய விரைவிலேயே பெருகிக்கொண்டிருக்கும். ஒரு கட்டத்தில் ஆட்சியமைப்பு அதன்முன் திகைத்து நிற்கும். அது நிலைக்கத் தொடங்கியதுமே செயலிழக்கவும் தொடங்கும். ஏனென்றால் செயலாற்றும்பொருட்டு உருவானவை அதன் அமைப்புகளும் நெறிகளும். வளர்ந்துகொண்டே இருக்கும் ஒன்றின் முறைமைகள் அதிலுள்ளவை. நிலைகொண்டதுமே அதன் கூறுகள் ஒன்றுடன் ஒன்று முட்டி உரசிப் பின்னி சிடுக்காகும். அதன் ஆற்றல் அழியலாகும். அது வளர்ந்ததைவிட மேலும் விரைவாக அது அழியத்தொடங்கும். நெரிபடும் ஒலிகள் கேட்கும். ஒரு கணத்தில் யானையைக் கட்டிய சங்கிலிபோல ஆட்சியமைப்பு உடைந்து தெறிக்கும். அப்பேரரசு சரியும்” என்று அரசி சொன்னார்.

“யாதவரே, அடித்தளம் மீது அமைக்கப்பட்ட எந்தக் கட்டடமும் ஒருநாள் விரிசலிட்டு மண்மேல் விழும் என்பார்கள் சிற்பிகள். ஒவ்வொரு கட்டடத்தையும் மண் இழுத்துக்கொண்டிருக்கிறது. எடையென ஒவ்வொரு பொருளிலும் அவ்விழைவே திகழ்கிறது. ஒரு கட்டடம் கட்டப்பட்டு மிகச் சில நாட்களுக்குள்ளாகவே அதில் முதல் விரிசல் தோன்றிவிடுகிறது. எத்தனை அடைத்தாலும் எவ்வளவு திருத்தினாலும் அந்த விரிசல் பெரிதாகிக்கொண்டேதான் இருக்கும். ஏனென்றால் அது மண்ணின் விசை. மண்ணின் பேருருவுக்கு முன் மலைகள் சிறுபூழித்துணுக்குகள்தான். விரிசலை மறைக்கலாம். அவ்விரிசலை ஏற்றுக்கொண்டே மேலே செல்லலாம். ஆனால் உறுதியாக, மாற்றே இன்றி விரிசல் அக்கட்டடத்தின்மேல் படரும், பிளந்து வீழ்த்தும்.”

“பேரரசின் வளர்ச்சியும் எங்கோ நின்றுவிடும். நிலத்தின் இயல்பால் அது கட்டுப்படுத்தப்படும். படைகள் செல்லும் தொலைவு என்னும் எல்லை எப்படியாயினும் அதற்குண்டு. ஆனால் அப்பேரரசு உருவாக்கும் அச்சமும் ஐயமும் அதன் மீதான காழ்ப்பும் பெருகிக்கொண்டே செல்பவை. ஒன்று பிறிதை வளர்க்க அவை இருளென எழுந்து சூழ்ந்துகொள்பவை. ஆகவே என்றேனும் ஒருநாள் எந்தப் பேரரசுக்கும் அதன் எதிரிகள் மும்மடங்கென ஆவார்கள். அவர்களால் அப்பேரரசு வெல்லப்படும். அதன் மீதிருக்கும் அச்சமும் ஐயமும் காழ்ப்பும் பகைவெறியாக மாறி அதை முற்றழிக்கும். இம்மண்ணில் அவ்வண்ணம் அழிந்து மறைந்த பேரரசுகள் மண்ணில் பூழியென கரைந்தன. சொல்லில் கனவென நிலைகொள்கின்றன.”

“ஆகவே இங்கே நான் ஒவ்வொரு நாளையும் அடியொழுக்கு நிறைந்த ஆற்றை என கடக்கிறேன். ஒவ்வொரு காலடியையும் சேற்றுநிலத்து யானை என வைக்கிறேன். இன்று நான் செய்யும் ஒரு சிறுபிழை போதும், பெருகிப்பெருகி இப்பேரரசை அது வீழ்த்திவிடும். என் கண்முன்கூட அது நிகழலாம். ஆகவே நான் துவாரகையில் தலையிடப்போவதில்லை” என்று சொல்லி அரசி கைகூப்பினார். “அரசி, துவாரகையின் இடர் என்பது…” என நான் மேலும் தொடங்க அரசி “சேற்றுநிலம் என நான் சொன்னதே துவாரகையைத்தான், யாதவரே” என்றபின் எனக்கான அவைச்சொல் முடிந்துவிட்டதைக் காட்டும்பொருட்டு மறுபக்கம் திரும்பிக்கொண்டார். நான் எழுந்து தலைவணங்கி வெளிவந்தேன்.

முற்றத்தில் நின்று பேசிக்கொண்டிருப்பதை உணர்ந்த சாத்யகி “தாங்கள் அமரலாமே?” என்று இளைய யாதவரிடம் சொன்னான். “ஆம்” என்று அவர் சென்று திண்ணையில் இடப்பட்ட ஈச்சம்பாயில் அமர்ந்துகொண்டார். சாத்யகி அவர் அருகே வந்தான். அவன் கீழே அமரப்போக அவர் அவன் தோளைப் பற்றி இழுத்து தன் அருகே தனக்கிணையாக அமரச்செய்தார். அவன் உடல் குறுகினான். “இங்கே மேல்கீழ் என ஏதுமில்லை. மானுடரிலும் பொருட்களிலும்” என்று இளைய யாதவர் சொன்னார். சாத்யகி தலையசைத்தான்.