கல்பொருசிறுநுரை - 3
பகுதி இரண்டு : நீலச்சிறுபீலி – 1
தண்டகாரண்யத்தின் நடுவே பதினெட்டு மலைமுடிகளால் சூழப்பட்ட பள்ளத்தாக்கில் நடுவே அமைந்திருந்தது மந்தரம் எனும் அச்சிற்றூர். அர்ஜுனன் சௌந்தர்யம், சௌம்யம் என அழைக்கப்பட்ட இரு மலைமுகடுகளுக்கு நடுவே மண்மடிந்து மலைச்சரிவு என்றாகி இறங்கி வந்து வளைந்தெழுந்து மேலே செல்லும் கணவாயினூடாக புரவியில் வந்து விளிம்பில் நின்று கீழே பசுமை நிறைந்து பின்மாலை ஒளியில் அலைகொண்டிருந்த அப்பள்ளத்தாக்கை பார்த்தான். அந்தப் புரவிப்பாதை மலைச்சரிவில் செந்நிற உள்ளங்கை வரி என இறங்கிச் சுழன்று மந்தரம் நோக்கி சென்றது. வானில் பறந்த செம்பருந்தின் நிழல் அக்குவைநிலத்தின் பசுமையலைகளுக்குமேல் சென்றது. பருந்து அவனுக்கு இணையான உயரத்தில் சுழன்று அருகணைந்தபோது அதன் நீட்டப்பட்ட அலகை, வெண்கழுத்தை, விழிமணிகளை அவன் கண்டான்.
மையத்தில் அமைந்த மந்தரத்தில் இருந்து எழுந்து விரிந்து பரவிய பதினெட்டு ஊர்கள் அப்பள்ளத்தாக்கின் பசுமைக்குள் மறைந்தும் தெளிந்தும் என தெரிந்தன. அவை ஒவ்வொன்றும் மந்தரத்துடன் செந்நிற வரிப்பாதைகளால் இணைக்கப்பட்டிருந்தன. மலைகளில் இருந்து இறங்கிய வெள்ளி மின்னும் சிற்றோடைகள் அருவிகளென விழுந்தும், வளைந்து சுழன்றிறங்கியும், இணைந்து சிற்றாறுகள் என்றாகி மந்தரத்தை நோக்கி சென்றன. வலமும் இடமும் அவ்வூரை வளைத்த ஆறுகள் ஒன்றிணைந்து ஊர்த்வம், ஆர்த்ரம் என்று பெயரிடப்பட்ட இரு மலைகளின் நடுவே பாறை வெடிப்பென உருவாகி இருந்த பள்ளத்தில் விழுந்து ஒற்றை அருவியென பெருகி கீழிறங்கி அகன்று சென்றன.
அர்ஜுனன் அந்த நிலப்பகுதியைப்பற்றி முன்னரே அறிந்திருந்தான். நெடுங்காலம் மழை இல்லாமல் ஆகி, உயிர்கள் வறண்டு, வெம்புழுதிக் குழியென்று மாறிவிட்டிருந்த மண் அது. அங்கு நிகழ்ந்த பேரறச்செயல் ஒன்றினால் வான்மழை கொண்டது. மூன்றாண்டு காலம் இடைவெளியிலாது பெய்த மழையால் அது செழிப்புற்றது. மண்ணுக்குள்ளிருந்து பசுமையும் சிறகுகளுமாக உயிர் பெருகி, தளிர் நுரைத்து, மலர் நுரைத்து, ஓங்கி எழுந்து மூடியது. பாவலர் அந்நிலத்தை தேடி வந்துகொண்டிருந்தனர். அங்கிருந்த பெயரற்ற மலைகள் அனைத்திற்கும் பெயர்கள் அமைந்தன. சொல் பெற்றதும் அவை முகம் கொண்டன. பொருள் சூடின.
அந்த ஆறுகள் சுஜலை என்றும் சுஃபலை என்றும் பெயர் பெற்றன. இணைந்து ஒன்றாகியபோது சுவாகை என்று ஆகியது. அவ்வூர் மந்தரமென்ற பெயரைப் பெற்றபோது சூழ்ந்திருந்த ஒவ்வொரு ஊருக்கும் அவ்வாறே நற்பெயர்கள் அமைந்தன. தொலைதூர நிலங்களில் இருந்து மானுடர் அங்கு வந்து குடியேறினர். நிலம் எவ்வகை நன்றோ அவ்வகை நன்று மானுடர்கள். மானுடர் எவ்வகை நன்றோ அவ்வகை நன்று நிலம். அந்நிலத்தைப் பற்றி சொற்கள்தான் வந்துகொண்டிருந்தன, பொருட்கள் என எதையும் அவன் காணவில்லை. “அங்கிருந்து கொண்டுவரப்பட்டவை எவை?” என்று அவன் கேட்டபோது வணிகன் “அரசே, அவர்கள் எதையும் விற்பதில்லை” என்றான். “ஏன்?” என்று அவன் கேட்டான். “அவர்கள் எதையும் வாங்குவதில்லை” என்று வணிகன் சொன்னான். அர்ஜுனன் புன்னகைத்தான். “அவர்கள் தங்களுக்கு வேண்டியனவற்றை மட்டுமே படைக்கிறார்கள்” என்றான் வணிகன்.
அர்ஜுனன் தன் புரவியைத் தட்டி செம்மண் பூழி பறந்த சாலையில் சுழன்றிறங்கினான். பொன்னிற முகிலொன்றால் தாங்கி விண்ணிலிருந்து இறக்கி கொண்டுசெல்லப்படுவதுபோல் அந்நிலம் நோக்கி அவன் செல்வதை அவனே தொலைவிலிருந்தென கண்டான். எண்ணியதைவிட விரைவில் பள்ளத்தாக்கை அடையமுடிந்தது. அங்கு மிகக் குறைவாகவே வேளாண்மை நடந்தது என்பது தெரிந்தது. வளம் மிகுந்த நிலம் இயல்பாகவே விளைசெடிகள், கனிமரங்கள், கொடிகள் செறிந்து வயல்போல் மாறிவிட்டிருந்தது. ஆங்காங்கே ஓடைநீர் செறுத்து கொண்டுவரப்பட்டு தேக்கப்பட்ட சிறிய வயல்களில் நெல்லும் பிற மணிகளும் பயிரிடப்பட்டிருந்தன. அவற்றின் பசுமையலைப்பரப்பு காற்றில் துவண்டது.
அவ்வேளையில் வயல்களில் எவரும் இருக்கவில்லை. புல் செழித்து இடையளவு வளர்ந்திருந்த நிலத்தில் புல் மேலேயே களைத்ததுபோல் படுத்து அசைபோட்டுக்கொண்டிருந்தன ஆநிரைகள். பருத்த உடலும் அச்சமின்மையின் மிதப்பும் கொண்டவை. மங்கிய விழிகளில் துயில் நிறைந்திருந்தது. செவிகள் சோம்பலுடன் அசைந்தன. அந்த புல்செறிந்த மண்ணில் அவை பகல் முழுக்க நடந்து மேய வேண்டியதில்லை. அந்நிலத்திற்கு வந்த ஓரிரு நாழிகையிலேயே அவற்றின் வயிறு நிறைந்துவிட்டிருக்கும். பசும்புல்பரப்பு விளைந்த நெல்வயல்போல் நீளிலை செறிந்து வெண்கதிர் சூடி காற்றில் உலைந்தாடிக்கொண்டிருந்தது.
மேலிருந்து பார்க்கையில் அந்நிலத்தின்மீது பறவைகள் செறிந்து சுழன்றுகொண்டிருப்பதை அவன் கண்டான். அங்கே நிறைய உணவிருக்கக்கூடும் என்றே எண்ணினான். கீழே வந்த பின்னர் அது ஏன் என்று தெரிந்தது. அங்கு புல்பரப்பு முழுக்க சிற்றுயிர்கள் துள்ளித் தெறித்தும், சுண்டிப் பறந்தும், சிறகு அதிர்ந்துச் சுழன்றும், புகையென அலைகொண்டும் சுழித்தும் எழுந்தும் அமைந்தும் ஒளிர்ந்து பறந்துகொண்டிருந்தன. அவற்றைப் பிடிக்கும் சிறு குருவிகள் பல்லாயிரக்கணக்கில் சிலைத்தும் கொஞ்சியும் பறந்தன. சிறகடிப்பால் நிறைந்திருந்தது காற்று.
வண்ணங்கள்! பறவைகளென, மலர்களென, மணிக்கற்களென, பூச்சிகளென, சிற்றுயிர்களென. சாலையை சொடுக்கிக் கடந்து சென்ற ஒரு பாம்புகூட பல வண்ணங்களில் மின்னியது. செம்மண் பசுமையாகிறது, பசுமை மலர்களாகிறது, மலர்கள் சிறகுகள் கொள்கின்றன. புரவி அவன் ஆணையை மீறி நின்று பசும்புல்லை தின்னத் தொடங்கியது. அதன் வாயில் புல் கடிபடும் ஓசையைக் கேட்டபடி அவன் நின்றான். விலங்குகள் மேயும் ஒலி அவனை முகம் மலரச்செய்வது. சுவை சுவை என்று அவை ஒலிப்பதுபோல. சுவை அதன் உடலெங்கும் சிற்றலையென பரவியது. புட்டத்திலும் பிடரியிலும் சிலிர்த்த வாலில் சுழன்றது. குளம்புகளை மெல்ல எடுத்து வைத்து முன்னகர்ந்தபடி, செவிகளை விடைத்து அசைத்து தலையை உலுக்கி சிற்றுயிர்களை உதறி உதறி அது மேய்ந்துகொண்டிருந்தது.
அவன் அதன் அருகே இடையில் கைவைத்து நின்று அந்நிலத்தை நோக்கிக்கொண்டிருந்தான். ஒளிர்ந்த பசுமை உளம் நிறையச்செய்து இனிய பெருமூச்சுகளாக எழுந்துகொண்டிருந்தது. விழிநீர் கசியும் ஒரு நெகிழ்வு. சொல்லென்று திரள ஒண்ணாத ஓர் உணர்வு. தலையில் மூன்றடுக்காக ஏந்திய கலங்களுடன், பசுவொன்றை பற்றியபடி ஆயர் பெண்ணொருத்தி அப்பாதையில் வந்தாள், அர்ஜுனன் பாதையிலிருந்து விலகி செழித்த புல்லுக்குள் நுழைந்து அங்கே பாசிபடர்ந்து கிடந்த கல்லொன்றின் மேல் ஏறி நின்றான். அவன் புரவி அவனை வெறுமனே திரும்பி நோக்கிவிட்டு கழுத்தைத் திருப்பி விலாவை நக்கியபின் மீண்டும் மேய்ந்தது.
அவன் காலடியில் ஈரமண்ணிலிருந்து சிற்றுயிர்கள் எம்பிக் குதித்தன. அவள் விழி சுருக்கி அவனை கூர்ந்து பார்த்தபடி வந்தாள். பசு நன்கு பெருத்து, கால்கள் அவ்வெடை தாங்காமல் ஒன்றோடொன்று பின்ன, மெல்ல வாலைச் சுழற்றியபடி, திமில் கொழுத்து அதிர்ந்து வலப்பக்கம் சரிந்து துள்ள, மதம் கொண்ட கண்கள் எதையும் நோக்காதொழிய மெல்ல நடந்து வந்தது. அப்பெண்ணும் சென்று செய்வதற்கொன்றுமில்லை என்பதுபோல் மிக இயல்பாக நடந்து வந்தாள். அயலவரை நோக்கி அஞ்சுவது அங்கில்லை என்று அவள் நோக்கு காட்டியது. புன்னகைத்தபடி அருகணைந்து “எவர்?” என்றாள்.
அர்ஜுனன் “நான் அயல்நாட்டவன். காங்கேய நிலத்தில் இருந்து வருகிறேன். வடதிசை முனிவர் ஒருவர் இங்கு நிலை அமைத்திருப்பதாக அறிந்தேன். அவரை வணங்கிச் செல்லலாம் என்று வந்தேன்” என்றான். அவள் “இங்குதான் ஊர்நடுவில் அவரது இல்லம். கரியோன் என்று அவர் தன் பெயரைச் சொன்னார். அப்பேரிலேயே நாங்கள் அழைக்கிறோம். ஆனால் அவர் இங்கிருப்பது பிறிதெவருக்கும் தெரியாது. அவரை மிக அரிதாகவே எவரேனும் வந்து பார்க்கிறார்கள். அவர்களும் அவர் இங்கிருப்பதை வந்த பின்னரே அறிகிறார்கள். தனிமையில் இங்கிருக்கிறார். தவம் செய்வதும் இல்லை, நூலாய்வதும் இல்லை” என்றாள்.
அர்ஜுனன் புன்னகைத்து “மைந்தருடன் விளையாடுகிறார் போலும்” என்றான். அவள் உரக்க நகைத்து “ஆம், எப்படி அறிந்தீர்கள்? காலை எழுந்ததிலிருந்து இரவு துயில்வது வரை அவருடன் இருப்பவர்கள் இளம் சிறுவர்களும் சிறுமியருமே. அவர் கூறுவது அவர்களுக்கே புரிகிறது. சலிப்பின்றி குழந்தைகளுடன் விளையாட முதியவரால் இயலும் என்பதை இப்போதுதான் பார்க்கிறேன். அவரை கண்டுபிடிப்பது எளிது. ஊருக்குள் நுழைகையில் எங்கு இளஞ்சிறார் ஒலி கேட்கிறதோ அங்கு செல்லுங்கள். அங்கு அவர் அவர்களுடன் ஆடிக்கொண்டிருப்பார். ஆனால் தேடி அணைபவர்களுடன் பெரும்பாலும் அவர் ஒன்றும் பேசுவதில்லை. அவர்கள் கூற வேண்டியதை கூறிவிட்டு வணங்கி மீள்கிறார்கள்” என்றாள். அர்ஜுனன் “நானும் வணங்கி மீளவே வந்தேன்” என்றான்.
அவளுடைய பசு சற்று முன்னால் சென்று தலைதூக்கி சரிந்துகொண்டிருக்கும் வானொளியைப் பார்த்தபடி நின்றது. “கருவுற்றிருக்கிறதா?” என்று அவன் பசுவை நோக்கி கேட்டான். “ஆம், இரண்டு கன்றுகள் வயிற்றில் இருக்கின்றன” என்று அவள் சொன்னாள். “இங்கு வந்தபோது சிறு கன்றாக இருந்தது. இங்கிருக்கும் பசுமையில் விரைவிலேயே பேருருக்கொண்டுவிட்டது. இங்கு பெரும்பாலும் கன்றுகள் இரண்டிரண்டாகவே பிறக்கின்றன. கண்ணெதிரிலேயே ஆநிரை பெருகிச்சூழ்கிறது. ஒவ்வொன்றும் இங்கே நூறுமேனி பெருகுகின்றன. இந்நிலத்தில் உயிர் நிறைந்திருக்கிறது.” அர்ஜுனன் “அறிவேன்” என்று சொன்னான். “இறையருள்” என்றபின் அவள் நடந்தகன்றாள்.
அவனுடைய புரவி பிறிதொன்றிலாத ஊழ்கத்திலென புல் தின்று கொண்டிருந்தது. அதன் கடைவாயில் கடிபட்ட வேர்கள் உதிர்ந்தன. பசிய நுரை திரண்டு சொட்டியது. அப்பாலிருந்து இரண்டு புரவிகள் எழுந்து அதை நோக்கி வந்தன. அவை புல் உண்டு வயிறு நிறைந்திருந்தமையால் விளையாடத் துவங்கின. அவன் புரவியை நோக்கி ஒரு பெண் புரவி தலையை குலுக்கியது. அவன் புரவி திரும்பி தன் விலாவை நாவால் நக்கியபின் அர்ஜுனனிடம் மெல்லிய ஓசையில் அவனது கருத்தென்ன என்று கேட்டது. அர்ஜுனன் ஒருகணம் எண்ணியபின் அதன் சேணத்தையும் கடிவாளத்தையும் அவிழ்த்து கையிலெடுத்துக்கொண்டு “செல்க, மகிழ்க!” என்றபின் திரும்பி அந்தப் பாதையினூடாக ஊர் நோக்கி நடந்தான்.
அர்ஜுனன் சீரான நடையுடன் அவ்வூரை அணைந்தான். வயலுக்கும் ஊருக்கும் நடுவே வேறுபடுத்தும் வேலியோ பிற அடையாளங்களோ இருக்கவில்லை. சுற்றிச்சென்ற ஓடையொன்றின் மீது மூன்று மரத்தடிகள் சேர்த்து போடப்பட்டிருந்தன. அதன் மேல் நடந்து ஊருக்குள் நுழைந்தான். தெருவென அமைப்பு எதுவும் இன்றி ஒன்றுக்குள் ஒன்று சுழன்று செல்லும் வட்டங்களாக வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்து அகழ்ந்தெடுத்த செம்மண்ணை குழைத்துச் செய்த செங்கட்டிகளை அடுக்கி எழுப்பிய சுவர்களின் மீது முடைந்த புல்லை கூரையென்றாக்கி கட்டப்பட்ட தாழ்வான இல்லங்கள். அகன்ற குளிர்ந்த திண்ணைகள். நெய்விளக்குகள் எரியும் சிறிய பிறைகள்.
தெருக்களில் வண்டிகள் என எவையும் சென்ற தடம் தெரியவில்லை. புரவிக்குளம்புத் தடம் கூட இல்லை. அவ்வேளையில் அனைத்து இல்லங்களிலிருந்தும் சிறுவர்கள் இறங்கி முற்றத்தில் ஓடி விளையாடிக்கொண்டிருந்தனர். திண்ணைகளில் கால்நீட்டி அமர்ந்த முதுபெண்டிர் ஒருவரோடொருவர் பேசி, வெற்றிலை மென்று சிறு சிறு கைவேலைகளில் ஈடுபட்டிருந்தனர். ஓரிருவர் அவனை குனிந்து நோக்கினர். எவருமே அயலவரைக் கண்ட அசைவு காட்டவில்லை. எவருக்கும் புதியவன் ஒரு விந்தை என்றும் தோன்றவில்லை. அவன் தெருவில் குறுக்கே ஓடிய இரு குழந்தைகளை தன் மீது அவர்கள் மோதிவிடாதபடி பற்றி நிறுத்தி தலையில் கைவைத்து குழலைக் கலைத்து சிரித்து “செல்க!” என்றான். ஒரு குழந்தை அவனை சிறிய சுட்டுவிரலால் காட்டி எதையோ சொல்லவருவதுபோல் உதடு குவித்தது. பின்னர் முன்னால் ஓடியது.
ஊருக்கு நடுவே அமைந்திருந்த குடிலைச் சுற்றி குழந்தைகளின் கூச்சல் மிகுந்திருந்தது. அணுகுந்தோறும் அது அவருடைய இடம் என்று அவன் அறிந்தான். குடில் முற்றத்திற்குச் சென்றபோது அங்கு ஓடிக்கொண்டிருந்த அத்தனை குழந்தைகளும் வெவ்வேறு இடங்களில் சென்று மறைந்தன. காலடியோசையில் பதுங்கும் சிறு பூச்சிகள்போல அவை மண்ணின் துளைகளுக்குள் மறைந்துவிட்டன என்று தோன்றியது. ஓரிரு கணங்களில் அத்தனை குழந்தைகளும் எப்படி விழியிலிருந்து மறைய முடியும் என்று அவன் வியந்தான். சுற்றிச் சுற்றி பார்த்தபோது அங்கு எவரும் இல்லை என்றே தோன்றியது.
அவன் குனிந்து சிறிய வாயிலினூடாக குடிலின் அறைக்குள் பார்த்தான். அங்கிருந்து எவரும் வெளிவரவில்லை. தன் கையிலிருந்த சேணத்தையும் கடிவாளத்தையும் திண்ணையில் வைத்துவிட்டு, மண் படிந்த தோல் குறடுகளைக் கழற்றி படியில் வைத்து, மெல்ல நடந்து ஏறி குனிந்து உள்ளே சென்று, குளிர்ந்த அரையிருள் பரவிய அறைக்குள் நின்று சுற்றிலும் பார்த்தான். அங்கு நிலத்தில் இரண்டு மணைப்பலகைகளும் ஒரு சிறு விளக்குமேடையும் இருந்தன. உண்பதற்குரிய மரக்கப்பரைகள் ஓர் ஓரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேலே தொங்கிய கொடியில் படுப்பதற்குரிய பாயும் மரவுரியும் சுருட்டி வைக்கப்பட்டிருந்தன. பிறிதொன்றும் அங்கிருக்கவில்லை. அங்கு எவரும் குடியிருப்பதாகக்கூட தெரியவில்லை. அவ்வப்போது எவரோ வந்து தங்கிச்செல்லும் இடம் எனத் தோன்றியது.
மீண்டும் முற்றத்திற்கு வந்து, அங்குதானா என்று எவரிடமேனும் கேட்கலாமா என்று எண்ணி திரும்பிப்பார்த்தான். தொலைவிலிருந்து இளைய யாதவர் சிற்றில் நோக்கி நாற்புறமும் விழியோட்டித் தேடியபடி வருவதை பார்த்தான். அவர் அவனைப் பார்த்து புன்னகைத்துவிட்டு மேலும் பொருட்படுத்தாமல் திரும்பித்திரும்பி சிறு இடுக்குகளை எல்லாம் பார்த்தார்.
“எங்கே போய்விட்டீர்கள்? என்னால் எவரையுமே கண்டுபிடிக்க இயலவில்லை. ஒருவர்கூட கண்ணுக்குத் தென்படவில்லை. அய்யய்யோ என்ன செய்வேன்!” என்றார். அப்போதுதான் தன்னருகே சுவர் மடிப்புக்குள் இரண்டு அகவை தோன்றும் சிறுவன் ஒருவன் மறைந்து நின்றிருப்பதை அர்ஜுனன் கண்டான். அவன் சுவரோடு ஒட்டி முகம் மறைத்து நின்று ஓசையிலாது குலுங்கி சிரித்துக்கொண்டான்.
ஒருகணத்தில் அந்தப் பகுதியெங்கும் மறைந்திருந்த அத்தனை குழந்தைகளையும் அவன் பார்த்துவிட்டான். சற்று முன் ஒருவர்கூட ஏன் விழிக்குத் தென்படவில்லை என்று எண்ணியபோது அப்போது அவர்களின் உலகில் தான் இல்லை என்று தோன்றியது. இளைய யாதவர் முற்றத்தில் ஒவ்வொரு இடமாகச் சென்று குழந்தைகளை தேடினார். தரையில் கிடந்த புல்முடைந்த தடுக்கொன்றை தூக்கிப் பார்த்தபோது அவன் அருகே நின்றிருந்த சிறுவன் சற்று ஓசையெழ நகைத்தான். பின்னர் குனிந்து ஊ என்றொரு ஓசை எழுப்பினான். “பிடித்துவிட்டேன்!” என்று சொல்லிக்கொண்டு ஓடிவந்து இளைய யாதவர் அவனை தொட்டார். அவன் உடல் குலுங்க நகைத்து அந்நகைப்பின் விசையாலேயே விழுந்து கால்களை உதைத்து கைகளை பறப்பதுபோல் அசைத்து துடித்தான்.
பிற குழவிகள் அனைத்தும் வெவ்வேறு இடங்களிலிருந்து வெளிவந்து உரக்க கூவி நகைத்தன. “தோற்றுவிட்டான்! ருத்ரன் தோற்றுவிட்டான்!” என்று கூவின. இளைய யாதவர் அவனை இரு கைகளாலும் பிடித்துத் தூக்கி முற்றத்தில் கொண்டுவந்து சுழற்றி நிறுத்தி “இவன் முறை… இனி இவன் முறை” என்றார். ஒரு பெண் குழந்தை அர்ஜுனனை நோக்கி “இவர் விளையாட வரவில்லையா?” என்றாள். அர்ஜுனன் தயங்கி “இல்லை, நான்…” என்றான். “அவரும் இந்த ஆட்டத்தில் உண்டு” என்று இளைய யாதவர் சொன்னார்.
அர்ஜுனன் புன்னகைத்து ஏதோ சொல்வதற்குள் ருத்ரன் “நான் எண்ணத்தொடங்குவேன்” என்றான். “எண்ணு” என்று சொன்ன பின்னர் இளைய யாதவர் காட்டை நோக்கி ஓடினார். குழந்தைகள் ஒவ்வொருவரும் நீரில் மீன்கள் சிதறி மறைவதுபோல் மறைந்தனர். அர்ஜுனன் ஒருகணம் திகைத்த பின் சிரித்தபடி இல்லத்திற்குள் புகுந்தான். சுற்றி நோக்கியபின் சுவரில் கால்வைத்து எம்பி உடலை எழுப்பி மேலே உத்தரத்திற்கு மேல் அமர்ந்துகொண்டான். ருத்ரன் எண்ணி முடித்து “வருகிறேன்! வருகிறேன்” என்று கூவியபின் கண்களிலிருந்து கையை எடுத்து சுற்றுமுற்றும் பார்த்தான். பின்னர் கீழிருந்த காலடித்தடங்களை பார்த்தபடி தேடத் தொடங்கினான்.
அவனால் எவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. புல்பரப்புக்குள் ஒளிந்திருந்த பெண்குழந்தையை அவன் அணுகும்போது பின்னாலிருந்த வேறொரு பெண் குழந்தை “கூ!” என்று ஓசையிட்டது. உடனே எண்ணம் சிதறி அவன் ஓசை கேட்ட இடம் நோக்கி வந்தான். அதை அணுகுவதற்குள் வேறொரு இடத்தில் ஓசை கேட்டது. அவன் சுழன்று சுழன்று தேடினான். தனக்குத்தானே “எங்கே இருக்கிறீர்கள்?” என்று கேட்டுக்கொண்டான். “நான் பிடிப்பேன்!” என்று வஞ்சினம் உரைத்தான். “நேற்று உன்னை மூன்று தரம் பிடித்தேன்!” என்று யாரிடமோ கூறினான். பிறகு மீண்டும் இல்லத்தை அணுகி உள்ளே அறைகளை பார்த்தபின் பின்பக்கம் இறங்கி வெளியே சுற்றி மீண்டு வந்தான்.
அவன் உள்ளம் சோர்ந்திருப்பது தெரிந்தது. “நான் அம்மாவிடம் கூறுவேன்” என்றான். “நீ பழம் தின்றது எனக்குத் தெரியும்” என்றான். பிறகு “பிடிபடுபவர்களுக்கு நான் வெல்லம் தருவேன்” என்றான். அர்ஜுனன் சிரித்துவிட்டான். அவன் அச்சிரிப்பினூடாக தன்னை காட்டிவிட்டான் என்று தோன்றியது. ருத்ரன் படிகளினூடாக உள்ளே வந்து மேலே பார்த்து “பிடித்துவிட்டேன்! பிடித்துவிட்டேன்! இங்கிருக்கிறார்!” என்றான். இரு கைகளையும் விரித்து “இங்கிருக்கிறார்! பிடித்துவிட்டேன்! எவ்வளவு பெரியவரை பிடித்துவிட்டேன்!” என்றான். அர்ஜுனன் உத்தரத்தில் தொங்கி கீழிறங்கி “ஆம், பிடித்துவிட்டான்” என்றான். ருத்ரன் ஓடிவந்து அவன் இடையில் இருந்த ஆடையை பற்றிக்கொண்டு கூச்சலிட்டு துள்ளித் துள்ளி உடல் அதிர்ந்தான். அச்சிற்றுடலிலிருந்து எழுந்த ஆற்றல் அவனை வியப்படைய வைத்தது. தொண்டை நரம்புகள் புடைத்திருந்தன. உடல் நாணேற்றப்பட்ட வில் எனத் தெரிந்தது. கூச்சல் செவிகளை ரீங்கரிக்கச் செய்தது.
நான்கு திசைகளிலிருந்தும் குழந்தைகள் ஓடி வந்தனர். இளைய யாதவர் அருகணைந்து “இவர் தோற்பார் என எனக்குத் தெரியும்” என்றார். “எப்படி தெரியும்?” என்று ஒருவன் கேட்டான். “இவரால் ஒளிந்துகொள்ளவே முடியாது” என்றார் இளைய யாதவர். அவன் “நீங்கள் ஒளிந்துகொண்டால் பிடிக்கவே முடியாது” என்றான். அர்ஜுனன் “ஆம், அவர் சிறு அகவையிலேயே மிக நன்றாக ஒளிந்துகொள்ளக்கூடியவர். அவருக்கும் சேர்த்து நான்தான் வெளிப்படுவேன்” என்றான். “இப்போது உங்கள் முறை…” என்று ஒரு பெண்குழந்தை சொன்னது.
“இவள் பெயர் தயை. இந்த ஊர் தலைவரின் மகள்” என்று இளைய யாதவர் சொன்னார். அர்ஜுனன் “இந்த அகவையிலேயே அன்னைபோல் இருக்கிறாள்” என்றான். “எவ்வண்ணமோ பெயருக்கேற்றபடி பெண்கள் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள்” என்றார் இளைய யாதவர். “இது அவள் மூதன்னையின் பெயர்.” தயை “என்ன பேசுகிறீர்கள்? இப்போது அவர் முறை” என்று சொன்னாள். “இவளுடைய மூதன்னை மறைந்துவிட்டாள். இங்கே மழையை கொண்டுவந்தவள். அவளை தெய்வமென நிறுத்தி வழிபடுகிறார்கள்” என்றார் இளைய யாதவர். “அவர் பிடிக்கவேண்டும்… அவருடைய முறை!” என்று தயை கூச்சலிட்டாள்.
“ஆம், நீ பிடி” என்றபடி இளைய யாதவர் விலகிச் சென்றார். குழந்தைகள் கூச்சலிட்டபடி அகன்றன. அர்ஜுனன் கண்களை மூடிக்கொண்டான். ஒன்று இரண்டு என எண்ணத் தொடங்கினான். தன்மேல் விழிகளை உணர்ந்தான். பலநூறு விழிகள். அவை அனைத்தும் இளையோருக்குரியவை. சிறுவர்களுக்குரியவை. மெய்ப்பு கொண்டு அவன் விழிகளைத் திறந்து சூழ நோக்கினான். அவன் கால்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. மீண்டும் கண்களை மூடியபோது முகங்கள் ஒவ்வொன்றையாக பார்த்தான். அவன் கண்களில் இருந்து நீர் வழியலாயிற்று.
“எண்ணியாகிவிட்டதா?” என்று தயை கேட்டாள். “ஆம்” என்று அவன் சொன்னான். கண்களைத் துடைத்தபின் திரும்பி “வருகிறேன்… வந்துகொண்டிருக்கிறேன்!” என்று கூவியபடி அக்குழந்தைகளைத் தேடிச் சென்றான்.