கல்பொருசிறுநுரை - 4

பகுதி இரண்டு : நீலச்சிறுபீலி – 2

இளைய யாதவர் குடிலின் அறைக்குள் வந்து அங்கிருந்த மென்மரத்தாலான மணை மீது கால் மடித்து அமர்ந்து, மூங்கில் தட்டியால் ஆன சுவரில் சாய்ந்து, மடிமேல் கைகளைக் கோத்து வைத்துக்கொண்டு புன்னகையுடன் “கூறுக!” என்றார். அங்கு வந்தபோதிருந்த அனைத்து உளநிலைகளும் மறைந்து அதுவரை குழந்தைகளுடன் ஒளிந்து விளையாடி, கூவிச் சிரித்து அடைந்த அனைத்து மலர்வுகளுடன் அர்ஜுனன் அவர் முன் அமர்ந்தான். தொடர்ந்து விளையாட்டைப் பற்றியே பேசவிருப்பவன்போல “மிகத் துடிப்பான குழந்தைகள். அவர்களின் ஒளிந்துகொள்ளும் திறன் வியப்பூட்டுவது” என்றான்.

“எல்லாக் குழந்தைகளும் ஒளிந்துகொள்ள விரும்புகின்றன, கண்டுபிடிக்கப்படுகையில் மகிழ்ச்சி கொள்கின்றன” என்று இளைய யாதவர் சொன்னார். “சிறு விலங்குகள் கூட.” அவர் விழிகள் சிரிப்பில் இடுங்கின. “சிற்றகவையில் நான் விரும்பி ஆடியது இது. ஆயர்பாடியில் நான் ஒளிந்துகொள்ளாத இடங்களே இல்லை என்பார்கள். பானைகளுக்கு உள்ளேயும் மண்ணிலிருக்கும் சிறு பிளவுகளுக்குள்ளும் கூட ஒளிந்துகொள்வேன். கட்டாந்தரையில் மறைபவன், காற்றில் ஊறி எழுபவன் என என்னைப்பற்றி பாடுவார்கள். அசைவிலாதிருப்பேன். என்னை அங்கில்லை என எண்ணிக்கொள்வேன். எங்குமில்லை என உளம் அமைவேன். இல்லாமலாவேன். என் அருகிருப்பவர்கூட என்னை உணரமுடியாது.”

“ஆயர்பாடியே என்னைத் தேடி அலையும். நூற்றுக்கணக்கான குரல்கள் என் பெயர் சொல்லி அழைக்கும். ஆடல் முடிந்துவிட்டது, பொழுதிறங்குகிறது கண்ணா, வந்து விடு என்று என் அன்னை அழைப்பாள். எங்கிருக்கிறாய், என்ன செய்கிறாய் என்று கூவுவாள். வெண்ணை இருக்கிறது, வெல்லம் இருக்கிறது என்பாள். வராவிட்டால் இருட்டறையில் அடைப்பேன், மத்துப்பிடியால் அடிப்பேன் என அச்சுறுத்துவாள். முதலில் சிரித்தபடி, பின் பதறியபடி, பின்னர் எப்போதோ அதில் அழுகை கலக்கத்தொடங்கும். உரிய அளவு அவர்கள் அழுதுவிட்டார்களா என்று நான் பார்த்துக்கொண்டிருப்பேன். என் பொருட்டு அழுவதில் எவரெல்லாம் முந்தியிருக்கிறார்கள் என்று பார்ப்பேன். முதலில் சிரிப்பேன். பின்னர் என் பொருட்டு அழுபவர்களுடன் நானும் இணைந்து அழுவேன். என்னை அவர்கள் கண்டெடுக்கையில் கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பேன். அவர்கள் என்னை தழுவுகையில் நான் அவர்களை தழுவிக்கொள்வேன்.”

“அன்று ஒரு சிறுவனாக என்னில் ஓடியது என்ன என்று இன்று கணிக்க முடிவதில்லை. ஆனால் தேடுந்தோறும் அருகணைவதில் ஒரு அழகு உள்ளது என்று எனக்குத் தோன்றும். திரும்பி அவர்களை நோக்கி நான் செல்கையில் என்னை மிகவும் தேடி மிக உளம் உருகி தவித்தவர்களே பேரின்பத்தை அடைகிறார்கள் என்பதை கண்டேன். ஓடிவந்து என் அருகே விழுந்து அள்ளி நெஞ்சோடணைத்து உடலெங்கும் முத்தமிட்டு கண்ணீருடன் என் மார்பிலும் முகத்திலும் முகம் சேர்த்துக்கொள்ளும் அன்னை அடையும் அந்தப் பேரின்பத்தை அவளுக்கு அளிக்க விரும்புவேன். நான் அடையும் இன்பமென்பது அவர்களுக்கு அளித்து அவ்வின்பத்திலிருந்து பெற்றுக்கொள்ளும் பங்கு மட்டும்தான்.”

அவர் உரக்க நகைத்து “இழந்ததைப் பெறுவதொன்றே புவியில் இன்பமென்று எஞ்சியிருக்கிறது மானுடருக்கு என்று பின்னாளில் சாந்தீபனி குருநிலையின் ஆசிரியர் எனக்கு கற்பித்தார். விழிநீரும் வியர்வையும் சிந்தி உழைத்து, உளமொருக்கி தவம் செய்து செல்வங்களென, சிறப்புகள் என மானுடர் பெறுவன அனைத்தும் குழவியாக இங்கு வருகையில் அவர்களுக்கு அளிக்கப்பட்டவை. அவர்களைச் சூழ்ந்து அமைந்திருந்தவை. அவர்கள் புதிதாக அடைவதில்லை, மீளப்பெறுகிறார்கள். அவற்றை முன்னர் அறிந்திருக்கிறார்கள் என்பதனால்தான் அடைந்ததுமே நிறைவுகொள்கிறார்கள். மானுடர் அடையும் அனைத்து இன்பங்களின்போதும் அவர்கள் குழவியராகிறார்கள். நடத்தையில், பேச்சில், எண்ணத்தில் குழவிகளென துள்ளுகிறார்கள்” என்றார்.

“இங்கு இக்குழவியருடன் அமர்ந்து விளையாடுவதை நெடுங்காலத்துக்குப் பிறகு கூர்ந்து பார்த்து ஆசிரியர் சொல் எவ்வளவு உண்மை என்று வியந்துகொண்டிருக்கிறேன். இச்சிறு ஊரில் குழந்தைகள் மலைகளையும் ஆறுகளையும் தங்கள் களத்தில் எடுத்து வைத்து விளையாடுகின்றனர். ஒரு கூழாங்கல் மலையாகிறது. ஒரு தளிர்க்கொடி ஆறாகிறது. அவர்கள் விண்மீன்களையும் விண்விற்களையும் எடுத்தாள்கின்றனர். அவர்களின் களத்தில் பிரம்மம் அமைத்த பெருஞ்செல்வங்கள் அனைத்தும் விளையாட்டுப் பாவைகளென வந்து அமைந்திருப்பதை பார்க்கிறேன். அவை அவர்களுக்கு அளிக்கும் பேரின்பத்தை அவற்றை இழந்து பின்னர் பிறிதொரு வடிவில் எப்போதோ கண்டடைகிறார்கள். கடலை இழந்து துளியைப் பெற்று கடலை கற்பனை செய்து களிப்படைகிறார்கள். கடலில் திளைக்கிறார்கள் சிறுமைந்தர்.”

“ஆகவேதான் சொல் முதிரா சிறு குழவியர்கூட மெய்மையின் சொற்களை கூறிவிடுகிறார்கள். நேற்று ருத்ரன் கைநீட்டி புல்வெளியை நோக்கிக்கொண்டு என்னிடம் சொன்னான். நான் அங்கு சென்று அந்தப் புல்லை மேய்ந்தபோது தலையாட்டினேன், என்மேல் ஒரு நீலக் குருவி வந்து அமர்ந்தது என்று. அக்குருவி அமர்ந்த தடத்தை அவன் உடலில் பார்க்க முடியுமென்று தோன்றியது. இரண்டின்மை என்பதை குழவிகள் மிக இயல்பாக அடைகின்றன. அவை அறிவதில்லை, ஆகின்றன. வளர்கையில் இரண்டில் ஒன்றெனத் திரண்டு தானென அமைந்த பின்னர் அடைந்த அனைத்தையும் இழந்து இழந்து மீண்டும் அப்பெருநிலையை நோக்கி செல்லத்தவிக்கிறார்கள் மானுடர்.”

அர்ஜுனன் அவர் பேசுவதை வியப்புடன் கேட்டுக்கொண்டிருந்தான். அவர் சொல்லடங்கி நெடுநாட்களாகிறது. ஒவ்வொன்றையும் அறிந்தவரின் சலிப்பு. அப்போது ஒவ்வொன்றையும் புதிதாகக் கண்டடைவதன் கிளர்ச்சி அடைந்திருந்தார். அவன் விழிகளைப் பார்த்தபின் சிரித்து “நன்று, இத்தனை தொலைவு விலகி வந்து இங்கு தங்கியிருப்பதும் உகந்ததே” என்றார். அர்ஜுனன் “இங்கு எவரேனும் வருவதுண்டா?” என்றான். “மிக அரிதாக. துவாரகையில் இருப்பவர்களுக்கு நான் இங்கு தங்கியிருப்பது தெரியாது. சாத்யகி ஒருவேளை ஒற்றர்கள் வழியாக அறியக்கூடும்” என்றார் இளைய யாதவர். அர்ஜுனன் “நான் சூதர்களிடம் கேட்டு அறிந்தேன்” என்றான்.

“ஆம், சூதர்கள் எவ்வண்ணமோ அறிந்திருக்கிறார்கள். தங்களுக்குள் மந்தணச் செய்தியாக இதை பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். எனக்குச் சொல்லியாக வேண்டுமெனத் தோன்றும் கதைகள் தங்களிடம் இருந்தால் நெடுந்தொலைவு நடந்து இங்கு வருகிறார்கள். இங்கு அவர்களுக்குக் கொடுப்பதற்கு பரிசுகள் எதுவும் இல்லை. வெறுங்கையுடன் திரும்ப விருப்புள்ளவர்கள் வந்தடைகிறார்கள். நீ அறிந்திருப்பாய், இச்சிற்றூரில் பணம் என்பது இல்லை. ஆகவே பொன்னும் வெள்ளியும் மதிப்பு கொண்டது அல்ல. இங்குள்ளோருக்கு அருமணிகளும் உலோகங்களும் பயன்பாட்டுப் பொருட்கள் மட்டுமே. ஆகவே இங்கு இரும்புக்கு இருக்கும் மதிப்பு செம்புக்கு இல்லை, செம்பின் மதிப்பு வெண்கலத்திற்கு இல்லை, வெண்கலத்தின் மதிப்பு பொன்னுக்கு இல்லை” என்றார் இளைய யாதவர்.

“மெய்யாகவே இங்கே ஒரு குழந்தை கேட்டது, இரும்பைவிட மென்மையான பொன்னை எப்படி மதிப்பு மிக்கதென்று மலைகளுக்கு அப்பால் உள்ளவர்கள் கருதுகிறார்கள் என்று. இவர்கள் இங்கிருந்து கிளம்பி மலைப்பகுதிகளின் காடுகளுக்குச் சென்று அலையும் குடிகளாகத் தங்கி மீண்டு வந்தவர்கள். அவர்களின் மைந்தர்கள் இங்கு பிறந்தவர்கள். இங்கு வந்தவர்கள் தாங்கள் வாழ்ந்த இடங்களை, வந்த வழிகளை முற்றாகவே மறந்துவிட்டிருக்கின்றனர். இங்கு இந்த மலைக்குகைக்குள் மழை கடுகி இறங்குகிறது. ஆகவே இங்குள்ளோர் பெருங்குடியென திரண்டிருக்கிறார்கள். இவர்கள் விழைவன அனைத்தும் இங்குள்ளன. ஆகவே விற்பதற்கும் வாங்குவதற்கும் ஏதுமில்லை. வணிகர்கள் இங்கு தேடி வருவதுமில்லை” என்றார் இளைய யாதவர். “எனவே இங்கே ஒவ்வொன்றும் இங்குள்ள மதிப்பையே அடைகின்றன. வெளியுலகின் மதிப்புகள் இங்கில்லை.”

அவர் இளைஞனைப்போல பேசிக்கொண்டே இருக்க விழைந்தார். “வணிகம் என்பது என்ன? ஒவ்வொன்றுக்கும் மதிப்பளிக்கும் செயல் அது. ஒப்பிட்டு ஒப்பிட்டு அம்மதிப்பை அது அளிக்கிறது. ஒன்றை பிறிதொன்றுடன். ஓர் ஊர் மதிப்பை பிறிதொரு ஊருடன். ஒவ்வொன்றையும் உலகத்துடன். ஒப்பிட ஏதுமில்லாதபோது மதிப்பிட இயலாது நின்றுவிடுகிறது.” அவர் தனக்குத்தானே பேசிக்கொண்டிருப்பதாக அவனுக்குப் பட்டது. “வணிகம் எங்கும் சென்று தொட்டுவிடுகிறது. உலகம் வணிகமென்னும் பல்லாயிரம் கைகளால் ஒவ்வொன்றையும் இழுத்துக்கொண்டிருக்கிறது. சொல்லையும் அது விட்டுவைப்பதில்லை” என்றார்.

“ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒன்றுக்கு ஒன்று பொருள் அளித்தே சொற்கள் இங்கே திகழ்கின்றன. ஒரு சொல்லுக்கு மொத்த மொழியும் பொருளை அளிக்கிறது என்பார்கள். எழுகையில் சொல் அனைத்தும் வேதமே என்று ஒரு கூற்று உண்டு. வேதச்சொல் என்பது மின்மினிபோல. ஒளியை ஏந்தியிருக்கும் எளிய சிறுபூச்சி. அதன் கால்கள், சிறகுகள், கண்கள், வயிறு, வாய் அனைத்துமே அவ்வொளிக்காக. அவை இல்லையேல் அவ்வொளி பறக்க இயலாது. ஒரு நாவால் சொல்லப்பட்டு இன்னொரு செவியால் கேட்கப்படுகையிலேயே வேதம் மானுடத்தன்மை கொள்ளத் தொடங்கிவிடுகிறது. அது வணிகக் களத்தில் வந்தமைந்து ஒப்பீட்டு மதிப்பை பெறத் தொடங்கிவிடுகிறது. ஒருபுறம் இன்மையின் அமைதியும் மறுபுறம் முளைத்தெழும் பொருளின் முடிவிலியும் கொண்டது நாம் அறியும் வேதச்சொல். இணைகையில் பொருள்செறிகையில் அது இவ்வுலகுக்குரியது. மலையிறங்கும் நதி மாசுபடுகிறது. மலையிறங்கா நதி பயனற்றது. தன்னை மாசுபடுத்தி மன்பதைக்கு ஊட்டுவதே அன்னைப்பெருக்கு…” அவர் கண்களை மூடி கைகளைக் கட்டி அமர்ந்திருந்தார். பின்னர் “அவ்வண்ணமே அது ஆகும். அதன் நெறி அது” என்றார்.

சற்றுநேர அமைதிக்குப் பின் “இங்குள்ளோர் தங்களை அறிந்திருக்கவில்லை” என்று அர்ஜுனன் சொன்னான். இளைய யாதவர் உரக்க நகைத்து “அன்றி மெய்யாகவே அறிந்திருக்கிறார்களா? என் மேல் சுமத்தப்பட்ட அனைத்தையும் கழற்றிவிட்டு முற்புலரி கருவறைத்தெய்வமென அணியிலியாக அமர்ந்திருக்கிறேனா?” என்றார். சில கணங்களுக்குப் பின் அர்ஜுனன் “ஆம்” என்றான். “நன்று சொன்னாய். நீ என்னைத் தேடி வந்தது எதன்பொருட்டு?” என்றார் இளைய யாதவர்.

“யாதவரே, அஸ்தினபுரி பெருவேள்விக்குப் பின் மக்கள் செறிந்து வணிகம் பெருகி வளம் நிறைந்து வாழத் தொடங்கிவிட்டது. ஆனால் அங்கிருந்து நாங்கள் ஒவ்வொருவராக கிளம்பிக்கொண்டிருக்கிறோம். அந்நகரில் எங்கள் எவராலும் வாழ முடியவில்லை. ஒவ்வொருவரும் கையில் அடைந்தவற்றை கண்ணெதிரே தூக்கி நோக்குகையில் இதன் பொருட்டா என்ற துணுக்குறலை அடைகிறோம். சொல்லொணா விலை கொடுத்துப் பெற்ற பயனற்ற சிறு பொருளெனத் தோன்றுகின்றன அஸ்தினபுரியின் மணிமுடியும் செங்கோலும். அனைத்தும் செழிக்கும் நகரில் அரசன் செய்வதற்கொன்றுமில்லை என்பார்கள். அங்கு மூத்தவரும் வாளாவிருக்கிறார்” என்று அர்ஜுனன் சொன்னான்.

“அவர் நெறிசூழ்வதை விட்டுவிட்டார். வகுக்கப்பட்டுவிட்ட நெறிநூல்களை அவர் தன் உள்ளத்திலிருந்தே விலக்கிவிட்டிருக்கிறார். அதை ஒருநாள் அவரிடம் நானே கேட்டேன். நான் இதுகாறும் நெறிசூழ்ந்தது, எண்ணி எண்ணி வந்தடைந்தது இரு பெரும் நூல்தொகைகளைத்தான். அவை இனி இங்கிருக்கும், என் செங்கோல் அதை நிறுவிவிட்டது. அந்நூலை கையில் வைத்து சொல்லாள்பவன் எவனாயினும் தருமனே. நான் செய்வதற்கு ஒன்றுமில்லை என்றார். நான் ஒருநாள் சென்றபோது அவர் தனிமையில் அமர்ந்து சூதாடிக்கொண்டிருந்தார். நாற்களத்தில் கருக்களென எவையுமில்லை என்பதை கண்டேன். விந்தை என எண்ணி அருகே சென்றேன்.”

“அவர் என்னை திரும்பி நோக்கி, கருக்கள் வைக்காமல் ஆடும் ஆடல் ஒன்று உண்டு. உள்ளத்தால் தொட்டுத் தொட்டு ஆடுவது என்றார். தனிமையில் நாற்களம் ஆடுகையில் எப்போதும் எதிர்த்தரப்பில் என் எதிரியை கற்பனை செய்து நிறுத்துவேன். அவ்வண்ணம் நிலைகொள்ளும் எதிரியும் நானே என பின்னர் உணர்ந்தேன். எதிரியை வெறுத்தேன், எனவே என்னை வெறுத்தேன். என்னை விரும்பினேன், எனவே எதிரியை விரும்பினேன். என் இடைவெளிகளை எதிரியென்றாகி நிறைத்துக்கொண்டேன். என் எல்லைகளை எதிரியினூடாகக் கடந்தேன். என்னை நானே வென்றும் தோற்றும் ஆடினேன். இப்போதுதான் முதல்முறையாக எதிர்ப்பக்கம் எவருமில்லாமல் ஆடிக்கொண்டிருக்கிறேன் என்றார்.”

“என்னால் அவர் சொல்வதென்ன என்று புரிந்துகொள்ள முடியவில்லை. எதிர்த்தரப்பின் காய்நகர்த்தலை எவரென்று அமைந்து செய்வீர்கள் என்று கேட்டேன். எதிர்த்தரப்பில் காய்நகர்த்தப்படுவதில்லை என்றார். அதெப்படி என்றேன். இளையோனே, இது ஒற்றைத்திசை நகர்வுகள் மட்டுமே கொண்ட ஆட்டம் என்றார். அவர் உளம் கலங்கியிருக்கிறாரோ என்றுகூடத் தோன்றியது. அவர் சிரித்து என் உளம் தெளிவாகவே இருக்கிறது. இவ்வகையிலும் ஆடக்கூடும். ஏன் ஆட்டம் என்பது இருமையாலானதாக இருக்கவேண்டும் என்றார்.”

“எனில் ஆட்டநெறிகள் அனைத்தும் மறைந்துவிடுகின்றன அல்லவா? அந்நெறிகள்தானே ஆட்டம் எனப்படுகின்றன என்றேன். இல்லை, நெறிகள் சற்றே திரிபு கொள்கின்றன, அவ்வளவுதான் என்றார். நான் புரியாமல் நின்றிருப்பதைக் கண்டு உன்னிடம் புரியவைக்க இயலாது. நீயே கண்டடையவேண்டியதுதான் என்றார். நான் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. ஆனால் அவரை நோக்கிக்கொண்டே இருந்தேன். அவர் சொல்லடங்கிவிட்டிருந்தார். இருக்கையில் இல்லாமலாகி மீண்டார். அவைகளில் அமர்ந்திருக்கையில் அவர் அங்கில்லை என்பதை உணர்ந்தேன், பிறரும் அவ்வுணர்வை அடைந்தார்கள் என அறிந்தேன்.”

அஸ்தினபுரியில் என் உடன்பிறந்தார் ஒவ்வொருவரும் தங்கள் உலகுக்குள் சுருங்கிவிட்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் அவர்களுக்குரியது எது எனக் கொண்டிருந்தார்களோ அதை இழந்துவிட்டிருந்தனர். பீமசேனன் கதையை தொடவில்லை. காடுகளில் அவரை குரங்குகள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் காட்டுக்குள் சென்று அவ்வப்போது மட்டுமே மீண்டார். அவரிடம் பிறர் பேசியே நெடுநாட்களாகின்றது என்றார்கள். நகுலன் புரவிகளையும் சகதேவன் நிமித்தநூல்களையும் மறந்தனர். அவர்கள் எங்கே வாழ்கிறார்கள் என்றே எனக்குத் தெரியவில்லை. யாதவரே, அவ்வப்போது அரண்மனை இடைநாழிகளில் அவர்களை நேருக்குநேர் சந்திப்பேன். முற்றிலும் அயலவர்போல் விழிதொட்டுக்கொள்வோம். வெற்றுச் சொல் எடுத்து பேசிக்கொண்டு உடனே விலகிச் செல்வோம்.

நான் திரௌபதியை ஒரே ஒருமுறை, துர்க்கையன்னையின் ஆலயத்துப் பூசனையின்போது மட்டுமே பார்த்தேன். அவள் என்னை அறியவில்லை என்று தோன்றியது. நான் நோக்கிய அந்த முதிய பெண்மணி நான் எவ்வகையிலும் அறிந்தவள் அல்ல. அவள் நீள்குழல் முற்றிலும் நரையோடி வெண்ணுரை என தோளில் வழிந்திருந்தது. உடல் மெலிந்து தளர்ந்திருந்தது. ஆகவே அவளுடைய பெரிய எலும்புக்கூட்டு வடிவம் மேலும் துலங்கியது. கண்கள் நோக்கிழந்தவை என, உள்திரும்பியவை என தோன்றின. அவள் முன் நிற்கையில் அமைதியிழந்தேன். ஆகவே என்னை பின்னிழுத்துக்கொண்டேன்.

நான் சுபத்திரையை மீண்டும் பார்க்கவே இல்லை. அவள் துவாரகையில் இருக்கிறாள் என்றும், அஸ்தினபுரியுடனான அனைத்து உறவுகளையும் துணித்துக்கொண்டுவிட்டாள் என்றும் அறிந்தேன். அஸ்தினபுரியிலிருந்து எச்சொல்லும் தனக்கு வரலாகாது என ஆணையிட்டிருந்தாள். துவாரகையில் இளமைந்தன் பரீக்ஷித் இருப்பதுவரை சற்றேனும் தொடர்பிருந்தது. அவனை இங்கே கொண்டுவந்த பின்னர் அதுவும் அறுபட்டு மறக்கப்பட்டது. மைந்தன் உடல்தேறிவிட்டான், ஆனால் நலம்பெறவில்லை. அவனைப் பார்ப்பவர்கள் அவனுடைய மூதாதை பாண்டுவைப் போலவே இருப்பதாகச் சொன்னார்கள். குருகுலத்தின் ஊழ் துரத்துகிறது என்றார்கள். பாண்டுவும் விசித்திரவீரியனும் தேவாபியும் என தொடரும் அறியமுடியாத ஒரு கதைச்சரடு.

“முதலில் நான் அங்கிருந்து கிளம்பினேன்” என்று அர்ஜுனன் தொடர்ந்தான். “ஏன் கிளம்பினேன் என்று சொல்லத் தெரியவில்லை. அங்கே இருக்கமுடியவில்லை. அங்கே என்னை இருத்திக்கொள்ள பலவாறாக முயன்றேன். அது என் இடம், நான் வென்றெடுத்தது, எனக்குரிய கடமைகள் கொண்டது என்று என்னுள் வாழ்ந்த ஷத்ரியனிடம் சொல்லிச் சொல்லி சலித்தேன். அருகிருக்கும் காடுகளில் சென்று மீளலாம் என என்னுள் வாழும் வில்லவனுக்குச் சொல்லி ஓய்ந்தேன். என் உடன்பிறந்தார் உறவினர் அனைவருமே அயலார் எனத் தோன்றினர். அவர்களின் ஒவ்வொரு சொல்லும் வேறெவரை நோக்கியோ சென்றன. நான் வெற்றுவிழிகளுடன் நிற்பதைக் கண்டு அவர்கள் ஒன்றை மீண்டும் மீண்டும் சொன்னார்கள். அதைக் கேட்டு எரிச்சலுற்று நான் கூச்சலிட்டேன். அத்தனை பேரிடமும் பூசலிட்டேன். என் நரம்புகள் இழுபட்டு நின்றன. நான் அதிர்ந்துகொண்டே இருந்தேன்.”

அவ்வரண்மனை, அந்நகரம், அங்கிருக்கும் ஒவ்வொரு பொருளும் எனக்கு அலுப்பூட்டின. அவை மாறா வடிவு கொண்டிருந்தன. ஆகவே வளராப் பொருள் கொண்டிருந்தன” என்றான் அர்ஜுனன். “ஒருநாள் என் அறையில் அமர்ந்திருந்தேன். எதிரே மரத்தாலான பீடம் ஒன்று இருந்தது. அதன் முழுமைவடிவு, அவ்வடிவில் அது தன்னை அமைத்துக்கொண்டு அங்கிருந்தமையில் இருந்த நாணின்மை என்னை கூசவைத்தது. இரும்பைக் கடிப்பதுபோல. சில கணங்களில் எழுந்து வெளியே ஓடி முற்றத்தில் உருவற்ற முகில்களின் கீழே நின்றேன். இவ்வுணர்வை நான் எவரிடமும் சொல்லிவிட முடியாது, யாதவரே. இது வெறும் உளக்குழப்பமாகக் கூட இருக்கலாம். ஆனால் இதை நான் உணர்கிறேன். என்னுள் இரும்பு உரசிக்கொள்வதுபோல ஓர் ஒவ்வாமையின் ஓசையே எழுகிறது. என் அகச்சொற்களில் எல்லாம் அவ்வோசைதான்.

ஒருநாள் காலையில் எழுந்தேன். ஓர் எண்ணமும் எழவில்லை, ஆனால் நான் கிளம்பிக் கொண்டிருந்தேன். கிளம்புகிறேன் என எண்ண எண்ண உவகை கொண்டேன். விடுதலையை என் உடல் உணர்ந்தது. என் நடையும் முகமும் மாறிவிட்டன. மூத்தவரைச் சென்று பார்த்தேன். என் எண்ணத்தைச் சொன்னதும் அவர் திகைப்பின்றி, ஆர்வமும் இன்றி, சோர்வுடன் “எங்கு செல்கிறாய்?” என்று கேட்டார். “திசைப்பயணம் ஒன்று செய்யலாம் என்றிருக்கிறேன்” என்றேன். அவ்வெண்ணமே அப்போதுதான் தோன்றியது. “நாம் பாரதவர்ஷத்தை வென்றுவிட்டோம், முழுதாள்கிறோம். இனியென்ன?” என்றார். “இனி நாம் வென்றுவிட்டோம் என்னும் எண்ணம் நம்மையும் பிறரையும் ஆளவேண்டும். நம் முதல் தோல்வியை எத்தனை ஒத்திப்போடுகிறோமோ அத்தனை நன்று.”

நான் தயங்கி “இல்லை. என்னால் இங்கு நிலைகொள்ள இயலவில்லை” என்றேன். “ஒவ்வொரு நாளும் நான் முற்றாக அறிந்திராத புதிய ஊரில் துயில் விழித்தால் மட்டுமே என்னை நான் தொகுத்துக்கொள்ள இயலும். நான் மலையேறிக் கொண்டிருப்பவன், எடை உதிர்த்து முன் செல்ல வேண்டியவன். என்னை வாழ்த்துங்கள்” என்றேன். அவர் என்னை நெடுநேரம் நோக்கிக்கொண்டிருந்தார். அவர் என்னிடம் வந்துசேர அத்தனை தொலைவு இருந்தது. அவருடன் இருக்கையில் நானும் நெடுந்தொலைவிலேயே இருந்தேன். யாதவரே, அஸ்தினபுரியில் இருக்கும் மூத்தவரை எனக்கு அணுக்கமானவராக உணரவே இயலவில்லை. அவரை எங்கள் கடந்தகாலங்களில், காட்டில் வைத்துப்பார்க்கையிலேயே என் உடன்பிறந்தார் என எண்ணமுடிகிறது.

மூத்தவர் நீள்மூச்சுடன் “இது இவ்வாறே ஆகுமென்று எனக்குத் தோன்றியிருந்தது. நினைவறிந்த நாள் முதலே நாம் நாடோடிகளாக வாழ்ந்திருக்கிறோம். இன்று இங்கு வந்து இவ்வண்ணம் அமையவேண்டும் என்று எண்ணியிருந்தோம். ஆனால் அமைவது நமக்கு பழக்கமில்லை. நம்முடையவை நின்ற கால்கள் அல்ல. அரண்மனை மஞ்சத்தறைகளைவிட வழியோரத்து மரத்தடிகளையே நாம் மிகுதியும் அறிந்திருக்கிறோம்” என்ற பின் “செல்க! உன்னில் இருந்து தேடும் ஒன்று முழுதமையுமெனில் எங்கேனும் நீயும் அமரமுடியும். அதுவரை சென்றுகொண்டிருப்பாய். கடல்வரை நதி நிற்பதில்லை என்பார்கள்” என்றார்.

நான் அவர் கால் தொட்டு வாழ்த்து பெற்றேன். “இளையோனே, நீ மகிழ்வுடன் இருப்பாய் எனில் என்னையும் இளையோரையும் இந்நிலத்தையும் நீ துறப்பதிலும் பிழையில்லை. நீ திரும்பி வரவேண்டும் என்னும் ஆணையை ஒரு தோள்சுமையென உனக்கு நான் அளிக்கப்போவதில்லை” என்றார். நான் என் கைவில்லை மட்டும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினேன். தாங்கள் எங்கு இருப்பீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. உங்களை தேடிவரவேண்டும் என்னும் எண்ணமும் எனக்கு இருக்கவில்லை. ஆனால் அஸ்தினபுரியில் இருந்து கிளம்பியதுமே என் அகம் உங்களை நாடுவதை நான் உணர்ந்துகொண்டேன்.

“யாதவரே, நீங்கள் இருக்கக்கூடும் என்று எண்ணி எண்ணி நான் தேடி வந்த இடங்களிலெல்லாம் இருந்தீர்கள். ஆனால் நான் முன்னரே அறிந்த ஒரு வடிவில். எனக்கு அருளும் விழிகளுடன். இப்போது நான் முற்றிலும் அறியாத ஓர் இடத்தில் எனக்குத் தெரியாத ஒரு முகம் சூடி நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்திலேயே நீங்கள் மெய்யாக இருக்கிறீர்கள் என்று எனக்குத் தோன்றியது. அதை எவ்வண்ணம் கண்டுபிடிப்பதென்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும் உங்களை எண்ணி எண்ணி என் எல்லைகளைக் கடந்து இத்தொலைவை வென்றேன். இந்தப் பாதை நான் எனக்குள் அமைத்து நீட்டி நீட்டி வந்தடைந்த ஒன்று” என்று அர்ஜுனன் சொன்னான்.

“இங்கு வந்து உங்களைப் பார்க்கையில் உணர்கிறேன். நீங்கள் இருக்கும் நிலையை முன்னர் அறிந்திருக்கிறேன். ஆனால் உங்களைப் பார்க்கும் என்னை இந்நிலையில் நான் உணர்ந்ததே இல்லை” என்று அர்ஜுனன் சொன்னான். இளைய யாதவர் புன்னகை செய்தார்.