கார்கடல் - 80

ele1ஆவக்காவலரை நோக்கி “எனது ஆவநாழியை…” என்று சொன்னபடி திரும்பிய அர்ஜுனன் தன் கால்களுக்குக் கீழே நிலம் இழுபட்டதுபோல் உணர்ந்து மண்ணை நோக்கி சென்றான். நெடுந்தொலைவு கீழிறங்கிக்கொண்டே இருக்கும் உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. மண் சுவர்போல் எழுந்துவந்து அவன் முகத்தை அறைந்தது. ஒருகணம் நினைவிழந்திருக்கக்கூடும். இளைய யாதவரும் சகதேவனும் சேர்ந்து அவனை மெல்ல தூக்கி அமரச்செய்வதை அவன் உணர்ந்தான். நகுலன் கொண்டுவந்த நீரை அவன் முகத்தில் அள்ளி வீசினார் இளைய யாதவர். அவன் விழித்துக்கொண்டு “ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை” என்றபடி எழுந்தான். சகதேவன் “துயில்நீப்பு” என்றான்.

இளைய யாதவர் “ஆம், துயில் இல்லாதவனுக்கும் துயில்நீப்பின் களைப்பு உண்டு” என்றார். அவர் முகத்திலிருந்த புன்னகையை திடுக்கிட்டு ஒருகணம் திரும்பிப்பார்த்த பின் அர்ஜுனன் உரக்க நகைத்தான். “அந்த அம்பின் விசை உன் உடலில் இன்னமும் எஞ்சியிருக்கிறது. இங்குள்ள அனைவரையும் அது அதிரச்செய்திருக்கும்” என்று இளைய யாதவர் சொன்னார். “நம் உடல் நீர்ப்பை. உள்ளே நீர் நலுங்கிக்கொண்டே இருக்கிறது. மண்ணில் பரவவும் விண்ணில் திரளவும் விழைகிறது. அந்த அம்பு நம் நீர்மையை நிலையழியச் செய்துவிட்டது.”

அர்ஜுனன் கைகளை நீட்டி தலைக்குமேல் குவித்து முதுகெலும்பை நிமிர்த்தியபடி “எனது ஆவநாழியை நிரப்புக!” என்றான். “மீண்டும் அவரை எதிர்கொள்ளச் செல்கிறாயா?” என்று இளைய யாதவர் கேட்டார். “ஆம், அவரை எதிர்கொண்டே ஆகவேண்டும். தனது ஆவநாழியிலிருந்து அவர் விசை மிக்க அம்புகளை எடுத்துக்கொண்டே இருக்கிறார். இன்று அவரையும் அங்கரையும் எதிர்கொள்ளாது இங்கு நாம் போர் நிகழ்த்தவே இயலாது” என்றான் அர்ஜுனன். “அவர் முன் எவரும் தனித்துச் செல்லவேண்டாம். மைந்தர்கள் அவரிடமிருந்து அகன்றே நிற்கட்டும்” என்று சகதேவன் சொன்னான். “அவர் இன்று மைந்தர்கொலை செய்யும் உளநிலையில் இருக்கிறார்.”

அப்பாலிருந்து செய்திஏவலன் பாய்ந்து வந்து புரவியிலிருந்து இறங்கி அணுகி அர்ஜுனனை வணங்கி “ஆசிரியர் பேரழிவை உருவாக்கிக்கொண்டிருக்கிறார், இளவரசே. விசை மிக்க புதிய அம்புகளை அவர் எடுக்கிறார். நாகத்திரள்போல் நூறு புகைச்சுருள்களுடன் வரும் காலாஸ்திரம். அனல் கக்கி வரும் ஆக்னேயாஸ்திரம். சுழல்களை உருவாக்கியபடி வரும் வாருணாஸ்திரம்…” என்று அவன் சொன்னான். “இடியோசைபோல் வெடிப்பவை, மண்ணிலும் காற்றிலும் அனல் பரப்புபவை. சற்று முன் மூன்று அம்புகளை அவர் அறைந்தார். நமது படைவீரர்கள் அனைவரும் நிலநடுக்கம் உருவானதைப்போல் உணர்ந்தனர். பலர் உடல் நடுக்குற்று கீழே விழுந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் வாயுமிழ்ந்து இன்னமும் விழி ஒருமை கூடாதவர்களாக கிடக்கிறார்கள்.”

அர்ஜுனன் “இப்போது அவரை யார் எதிர்கொள்கிறார்கள்?” என்றான். “இளவரசர்கள் சுருதகீர்த்தியும் சர்வதரும் இருபுறத்திலாக நின்று அவரை தாக்கினார்கள். இப்போது அவர் முன் எவருமில்லை” என்று செய்திக்காவலன் சொன்னான். “செல்வோம்” என்றபடி அர்ஜுனன் தன் தேரை நோக்கி சென்றான். புதிய புரவிகளுடன் வந்து நின்ற தேர்க்காவலன் அவனை தலைவணங்கி மேலேறுவதற்கான படியை வைத்தான். அர்ஜுனன் அதில் தாவி ஏறிக்கொண்டதும் அருகணைந்து கடிவாளக்கற்றையை இடக்கையால் பற்றி வலக்கையால் அமரத்தின் இருக்கையை தொட்டபடி இளைய யாதவர் கேட்டார் “அவரிடம் போர்புரிவதெப்படி என்று அறிவாயா?” அர்ஜுனன் “அவருக்குள் நுழைவதற்கான சிறு பழுது ஒன்றை சென்ற முறை கண்டேன் என்று நினைக்கிறேன்” என்றான். “ஆம், நமது எதிரியை நாம் வெல்வது நாம் அறிந்த அவருடைய சிறுமை ஒன்றினூடாகவே. ஒவ்வொரு சிறுமையும் ஒரு விரிசல். ஒரு திறந்திட்ட வாயில். ஒரு சிறுமையினூடாக பல்லாயிரம் சிறுமைகளை அம்பெய்து அம்பெய்து கண்டுபிடிக்க முடியும்.”

“வளைதேடும் நாகங்கள்போல் நமது சித்தம் எதிரியின் ஆளுமையில் முட்டி முட்டித் தவிக்கிறது. பல்லாயிரம் அம்புகள் சென்று அறைந்து வீணாகி உதிர்கையில் ஒன்று எப்படியோ உள்ளே செல்கிறது. அது அறிந்த வழியை பிறிதொன்று சென்று பெரிதாக்குகிறது. வழிகள் திறக்க திறக்க அவர் வீழ்ச்சியடைகிறார். நீ முதல் நுழைவுக்கான வழியை மட்டுமே கண்டடைந்திருக்கிறாய். அது அவரை நீ எதிர்த்து நிற்பதற்கான ஓர் அடித்தளம் மட்டுமே. அதனூடாக களத்தில் அவர் மேல் ஓர் அம்பை நீ செலுத்த இயலும்” என்று இளைய யாதவர் சொன்னார். அர்ஜுனன் “ஆம்” என்றான். இளைய யாதவர் “பார்த்தா, ஒருவரை நீ வெல்கிறாய் எனில் அதன் பொருள் அவரைவிட ஒரு அணுவளவேனும் நீ முழுமையாக மேலெழுந்திருக்கிறாய் என்பதே. உன் ஆசிரியரைவிட நீ உயர்ந்தாலொழிய இக்களத்தில் அவரை கொல்ல இயலாது” என்றார்.

அர்ஜுனன் “நான் அவரைவிட சிறியவன். அவரது காலடியில் அமர்ந்து அவர் கொடையென அளித்தவற்றைப் பெற்று எழுந்தவன். ஆகவே ஒரு நிலையிலும் அவரை என்னால் கடந்து எழ இயலாது. இக்களத்தில் நான் உணர்ந்தது அதைத்தான். என் அம்புகள் அதனாலேயே அவர் அம்புகளுக்கு முன் மடிந்தன” என்றான். இளைய யாதவர் புன்னகை விரிய “ஆனால் நீ எங்கு அவரைவிட மேலானவன் ஆனாய் என்று அவர் அறிவார்” என்றார். அர்ஜுனன் விழிகள் சுருங்கி கூர்ந்து நோக்க “அதைத்தான் அவர் தன் வாயால் சொன்னார். தன்னிடமிருந்து கிளம்பிய அந்த மாணவனை அவர் அறிவார். ஆனால் அதற்குப் பின்னர் மேலெழுந்து நீ பெற்றதென்ன எனும் திகைப்பு அவரில் உள்ளது. அதை இக்களத்தில் காட்டு என்று அறைகூவினார். அது என்ன என்று அறியும் தவிப்பே அச்சொல்லில் உள்ளது” என்றார் இளைய யாதவர்.

“யாதவரே, நான் அவரிடமிருந்து எழுந்து விலகி அலைந்து தவம்புரிந்து பெற்றவை பல உண்டு. அவரிடமிருந்து நான் உளவிலக்கம் கொண்டதே மேலும் கற்கும்பொருட்டு ஊழ் என்னை உந்தியதால்தான் என எண்ணியதுமுண்டு. ஆனால் இன்று அறிகிறேன், எவையுமே அவரிலிருந்து அகன்று நான் அறிந்தவை அல்ல. அவர் அளித்த அடித்தளத்தின் மீது நான் அமைத்துக்கொண்டவையே அனைத்தும். மூவிழியனின் மலையுச்சியில் நான் பெற்ற பாசுபதம்கூட” என்றான். “உன்னில் ஒரு துளியேனும் எஞ்சுவதென ஏதுமில்லையா?” என்றார் இளைய யாதவர். “எதையும் என்னால் உணர இயலவில்லை” என்று அர்ஜுனன் சொன்னான். “எனில் செல்க! களமெழுந்து அவருடன் பொருதுகையில் அவர் அளித்த ஒவ்வொன்றையும் திருப்பிக்கொடு. அவரை நோக்கி எழும் ஒவ்வொரு அம்பும் முன்னர் உனக்கு அவர் அளித்ததாக இருக்கட்டும். பிறிதொரு முறை அதை நீ கையிலெடுக்கக் கூடாது. ஆசிரியரே இதோ இதை உங்களுக்கு அளிக்கிறேன். இதை மீளப் பெற்றுக்கொண்டு என்னை வாழ்த்துக என்று உரைத்து அம்பு தொடு.”

“ஒவ்வொரு அம்பாக செல்லட்டும். எய்து எய்து உன் ஆவநாழி முற்றொழியட்டும். அவர் அளிக்காத ஒரு அம்பு உன்னிடம் எஞ்சுமெனில் அதைக்கொண்டு நீ அவரை வெல்ல இயலும்” என்று இளைய யாதவர் சொன்னார். அர்ஜுனன் “அதன் பின் என்னிடம் எஞ்சுவதென்ன? அவர் அளித்தவற்றால் நிறைந்திருப்பவன் நான்” என்றான். “அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களின் கொடையால் நிறைந்தவர்களே. ஆயினும் ஆசிரியர் அளிக்காத ஒன்றிலிருந்தே அவர்கள் தன்னைக் கண்டு எழ இயலும். அதனூடாகவே முழுமை கொள்ளவும் கூடும். இது தவமென்று எண்ணுக!” என்று இளைய யாதவர் சொன்னார். அர்ஜுனன் தலைவணங்கி தன் காண்டீபத்தை எடுத்துக்கொண்டான்.

ele1அர்ஜுனன் தேரில் சென்றுகொண்டிருக்கையிலேயே எதிரில் வந்த செய்திக்காவலன் “இளவரசே, துரோணர் பேரழிவை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். பன்னிரு மாயஅம்புகளால் அவர் களத்தை அறைந்தார். விண்ணிலிருந்து மலைகள் என பாறைகள் நம் படைகள் மேல் விழுந்தன. மண் அதிர்ந்து பெரும்குழியென்றாகி அங்கே நீர் பெருகிக்கொண்டிருக்கிறது. இறந்த உடல்கள் அனைத்தும் உடல் அதிர்ந்து செவிகள் வெடித்து குருதி வழிய முகம் வலித்து கிடக்கின்றன. அவருக்கு எதிர் நிற்க இயலாமல் நம் வீரர்கள் அனைவரும் பின்னடைந்துவிட்டனர். இப்போது வில்லவர் எவராலும் எதிர்க்கப்படாமல் அவர் களம் நின்று பொருதிக்கொண்டிருக்கிறார்” என்று கூவினான். “திருஷ்டத்யும்னர் என்ன செய்கிறார்?” என்று அர்ஜுனன் கேட்டான். “அவர் இன்னும் எழவில்லை. உடலில் ஆழ்ந்த புண்கள் உள்ளன. கட்டுகள் போட்டு அகிபீனா அளித்து படுக்க வைத்திருக்கிறார்கள். நம் இளவரசர்கள் சுருதகீர்த்தியும் சுதசோமரும் சர்வதரும் புண்பட்டு பின் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள். சாத்யகி சற்று முன்னர் களத்தில் புண்பட்டு வீழ்ந்தார். சிகண்டி தன்னினைவின்றி மருத்துவர் நடுவே கிடக்கிறார்” என்றான் செய்திக்காவலன்.

இளைய யாதவர் “இளையவர் மீண்டும் எப்போது அவரிடம் போருக்கு சென்றார்கள்?” என்றார். “களமுகப்பில் எவருமில்லை என்று கண்டு சர்வதரும் சுதசோமரும் சுருதசேனரும் சேர்ந்து அவரை எதிர்த்தனர். அரைநாழிகை பொழுதுகூட அவர் முன் நிற்க இயலவில்லை. அவர் எடுத்த மாய அம்பினால் யானை துதிக்கையால் தூக்கிச் சுழற்றப்பட்டதுபோல் சர்வதர் சென்று பின்னணியிலெங்கோ விழுந்தார். இரு கைகளாலும் தலையையும் காதுகளையும் அழுந்த பற்றிக்கொண்டு சுதசோமர் தேர்த்தட்டில் விழுந்து தன் தலையை ஓங்கி அறைந்துகொண்டு மயங்கினார். சுருதசேனர் வாயிலும் மூக்கிலும் செவியிலும் குருதி வழிய தேரிலிருந்து தாவி கீழே விழுந்து நினைவழிந்தார்” என்று செய்திக்காவலன் சொன்னான்.

இளைய யாதவரை நோக்கி “செல்க! முன்செல்க!” என்று வெறியுடன் அர்ஜுனன் கூவினான். “உன் போர்த்திட்டத்தை வகுத்துவிட்டாயா?” என்று இளைய யாதவர் கேட்டார். “எனது திட்டம் ஒன்றே. யாதவரே, நான் என் எஞ்சும் துளியை அவர் முன் வைக்கப்போகிறேன். அது என் ஆணவம் எனில் ஆணவம். நஞ்செனில் நஞ்சு. கீழ்மை எனில் கீழ்மை. அவர் காலடியை விழிசூடியே இன்றும் புலரி எழுகிறேன். ஆனால் அவரை விஞ்சிச்சென்றுவிட வேண்டுமென்ற ஆணவத்தாலேயே அவரிலிருந்து விலகி எழுந்தேன். அத்துளியை பெருக்கிக்கொள்ள வேண்டுமென்பதனாலேயே மலைகளிலும் பாலை நிலங்களிலும் அலைந்தேன். அவருக்கு மேல் என அடுக்கி வைக்கவே அரிய அம்புகளை பெற்றேன். அந்த ஆணவத்தைக்கொண்டு அவர் முன் நிறுத்துகிறேன். அது ஒன்றே என்னில் எஞ்சி நிற்பது” என்று அர்ஜுனன் கூவினான்.

இரு புறத்திலும் நகுலனும் சகதேவனும் தேரில் அவனை பின்தொடர்ந்து வந்தனர். சகதேவன் “இளையவரே, அவர் அரிய அம்புகள் எடுத்துக்கொண்டிருக்கிறார். அவருடன் தாங்கள் தனித்துப் போரிட வேண்டாம். தங்கள் சகடக்காவலென நாங்களிருவரும் வருகிறோம்” என்றான். அர்ஜுனன் “வருக!” என்று கைகாட்டிவிட்டு படைகளினூடாகச் சென்றான். ஆனால் சற்று நேரத்திலேயே முரசுகள் ஓசையிடத் தொடங்கின. “அங்கரை எதிர்கொள்க! பீமசேனர் தனித்திருக்கிறார்! அங்கரை எதிர்கொள்ள நம் படைகள் எழுக!” அர்ஜுனன் திரும்பி சகதேவனிடம் “நீங்களிருவரும் சென்று மூத்தவருக்கு துணை நில்லுங்கள். அங்கரால் அவர் வீழக்கூடாது” என்றான். நகுலன் “நாங்கள்…” என்று ஏதோ சொல்ல “இது என் ஆணை. செல்க! சென்று அவருக்கு துணை நில்லுங்கள்!” என்றான் அர்ஜுனன்.

சகதேவன் “சகடக்காவலர்கள் இருவரும் இன்றி தாங்கள் ஆசிரியர் முன் சென்று நிற்பது நன்றல்ல. தாங்கள் தனியர். இருபுறத்திலிருந்தும் சுழன்று வந்து தாக்கும் அம்புகளை அவர் கொண்டிருக்கிறார்” என்றான். அர்ஜுனன் “நான் எஞ்சியுள்ள இளமைந்தரை கூட்டிச்செல்கிறேன். செல்க!” என்றான். தலைவணங்கி நகுலனும் சகதேவனும் சென்றபின் அர்ஜுனனின் தேர் முன்னால் சென்றது. அர்ஜுனன் தேரில் நின்றபடியே கையசைத்து தன்னைத் தொடர்ந்து வந்த ஆணைக்காவலரிடம் “எஞ்சும் மைந்தர்கள் என்னுடன் எழுக! இருவர் உடன் எனக்கு ஆவக்காவலராக வருக!” என்றான். ஏவலர்கள் அவனிடமிருந்து விலகிச்சென்றனர். மிகத்தொலைவில் வெண்குடைபோல் புகை எழுந்து விண்ணில் கவிந்தது. பின் அது காற்றால் கரைத்து உருவழித்து அள்ளிச்செல்லப்பட்டது. அதன் பின்னரே செவி நடுக்குறும் அதன் வெடியோசை எழுந்தது. ஒருகணம் கழித்து வெட்டுண்ட கால் ஒன்று பெருந்தொடையுடன் வந்து அவர்களின் தேர் மகுடத்தில் விழுந்து குருதிச்சேற்றில் வழுக்கி கீழே உதிர்ந்தது.

அர்ஜுனன் “போரில் இதுகாறும் எவரும் இத்தகைய அம்புகளை எடுத்ததில்லை… இது மானுடருடன் போரிடவேண்டிய அம்பு அல்ல” என்றான். இளைய யாதவர் “தோளிலும் நாணிலும் நம்பிக்கை இழக்கும்போது இத்தகைய பேரம்புகள் எழுந்து வருகின்றன. பார்த்தா, அவரைக் கொல்லும் அம்பு உன் தோளிலிருந்து மட்டுமே விசையேற்றுக் கொண்டிருக்கவேண்டும்” என்றார். ஆணைக்காவலன் விரைந்தோடி வந்து “அரசமைந்தர்கள் நிர்மித்ரரும் சர்வதரும் மட்டுமே இங்கிருக்கிறார்கள். சதானீகர் பீமசேனருடன் துணை நின்று போரிடுகிறார். பிரதிவிந்தியர் தந்தையுடன் நின்றிருக்கிறார்” என்றான். “எனில் அவர்கள் வரட்டும். அவர்கள் உடன் வருக!” என்றபடி அர்ஜுனன் மேலும் விரைவைக் கூட்டி முன்னால் சென்றான். “சர்வதர் களைத்திருக்கிறார்… புண்பட்டிருக்கிறார்” என்றான் ஆணைக்காவலன். “வேறு வழியில்லை” என்றான் அர்ஜுனன்.

அர்ஜுனனின் தேர் துரோணரை அணுகியபோது பின்னணியில் இருந்த படைப்பெருக்கிலிருந்து விசைகொண்ட தேர்களில் நிர்மித்ரனும் சர்வதனும் வந்து அவனுடன் இணைந்துகொண்டனர். “இருவரும் என் இரு பக்கங்களையும் காத்துக்கொள்க! நான் அறியாத அம்புகள் எவையேனும் இரு திசைகளிலுமிருந்து என்னை அணுகுமென்றால் அவற்றை அறைந்து வீழ்த்துக! முன்னால் வரவேண்டாம். ஆசிரியரின் அம்பு எல்லைக்குள் நுழையவேண்டாம்” என்று அர்ஜுனன் ஆணையிட்டான். அம்புகளை விடாது தொடுத்தபடி சென்று துரோணரின் போர்வளையத்திற்குள் நுழைந்தான். அவனுடைய சகட ஓசை உரக்க எழ அஞ்சி கூச்சலிட்டு சிதறி ஓடிக்கொண்டிருந்த பாண்டவ வீரர்கள் கூச்சலிட்டனர்.

அப்பால் நாண் துடிக்க அம்புகளை செலுத்தி பாண்டவப் படையை கொன்று வீழ்த்திக்கொண்டிருந்த துரோணர் அதை கேட்டார். திரும்பி உரக்க நகைத்தபடி “மீண்டு வந்துள்ளாயா? எடு உன் அரிய அம்புகளை. எடு, மூடா” என்று கூவினார். கைசுட்டி தன் முன் கருகி புகைந்து கொண்டிருந்த களத்தை காட்டி “இதைப்போல் என் களத்தை எரியவைக்கும் அம்பிருந்தால் எடு!” என்று கூவினார். அவரைச் சூழ்ந்து கிடந்த மானுட உடல்கள் ஒன்றுகூட முழுவடிவில் இல்லையென்பதை அர்ஜுனன் கண்டான். ஆயிரம் வாள்களால் கொத்தி துண்டுகளாக்கி வானிலிருந்து அள்ளி வீசப்பட்டதுபோல் கிடந்தன கைகளும் கால்களும் நெஞ்சுகளும் தலைகளும். அவன் உடல் குளிர்ந்து செயலழிந்தது. உள்ளம் விசைகொண்டு எழுந்து உடற்தசைகளை அறைந்தது. அவன் விலங்குபோல வெறிக்கூச்சலிட்டான்.

ஆவநாழியில் கைவிட்டெடுத்த முதல் அம்பை அர்ஜுனன் நினைவுகூர்ந்தான். கிருபரின் பயிற்சிநிலைக்கு படைக்கலப் பூசனை நாளில் வந்த துரோணரை கால்தொட்டு வணங்கி எழுந்தபோது அவர் புன்னகையுடன் குனிந்து அவனுக்கு அளித்த முதல் அம்பு அது. அவன் அதன் முனையை தொடப்போக “அம்புமுனையை விழிகளாலேயே தொடவேண்டும்” என்று அவர் சொன்னார். அர்ஜுனன் அம்பை நாணில் பொருத்தி இழுத்துச் சிரித்தபடி சுழன்று மூன்று திசையிலும் இலக்குகளுக்காக தேடினான். அங்கு நின்றிருந்த குந்தியும் திருதராஷ்டிரரும் பீஷ்மரும் படைத்தலைவர்களும் உரக்க நகைத்து அஞ்சுவதுபோல் கைகாட்டி பின்னடைந்தனர். திருதராஷ்டிரர் “குறி பார்க்கிறானா? மைந்தா, இதோ என்னை குறி பார். என் நெஞ்சுக்கு வருக உன் அம்பு!” என்று சிரித்தபடி தலையை அசைத்தார்.

அர்ஜுனன் திரும்பி பீஷ்மரை நோக்கி அம்பை ஏவினான். கிளை உலுக்கி எழுந்து செல்லும் சிறிய பறவைபோல் அது அவரை நோக்கி செல்ல அவர் சிரித்தபடி வலக்கையால் அந்த அம்பை காற்றிலேயே பற்றி கையிலெடுத்தார். “நீங்கள் அளித்த முதல் அம்பு, பெரும்பாலும் இலக்கடைந்துவிட்டது, துரோணரே” என்றார். “தந்தை நெஞ்சில் உதைக்காமல் தாவ இயலுமா?” என்றார் கிருபர். துரோணர் உரக்க நகைத்து இன்னொரு அம்பை அவனிடம் கொடுத்து “இது இன்னும் பெரியது… இதை ஏவுக!” என்றார். அவ்விரண்டாவது அம்பை அவன் துரோணரை நோக்கி செலுத்த அவர் அதை கையால் பற்றினார். கிருபர் புன்னகையுடன் “நன்று. ஆசிரியரின் நெஞ்சை நோக்கி முதல் அம்பை எய்பவன் அவரைக் கடந்து செல்வான்” என்றார்.

அந்த இரண்டாவது அம்பு கையில் திகழ்வதை அர்ஜுனன் அறிந்தான். அவர் சொன்னவை ஒவ்வொரு சொல்லாக அம்பென எழுந்துகொண்டிருந்தன. அவர் உரைத்த கொள்கைகள், தோள்தொட்டு வில்நிறுத்தி தழுவியதுபோல் அவனுக்குப் பின்னால் நின்று செவியிலெனச் சொன்ன மந்தணங்கள், அந்திக் கருக்கிருளில் அருகிருத்தி மரவுரியால் அவனையும் தன்னையும் போர்த்தி செவியில் உரைத்த நுண்சொற்கள். இருளுருகி ஓடும் கங்கையில் நீந்துகையில், தலைதுவட்டுகையில், ஆடை பிழிந்து உலர்த்துகையில், வீசும் புலரிக்காற்றில் உடல் நடுக்குற திரும்பி வருகையில், முதற்புலரி ஒளியில் குடில் முற்றத்தில் அமர்ந்து சொல்லாய்கையில் அவர் கூறிய ஒவ்வொரு அம்பையும் அவரை நோக்கி அவன் எய்தான்.

ஆசிரியரே, இது உங்களுக்கு. ஆசிரியரே, இவற்றை கொள்க! இனி இவை என்னில் எஞ்சவேண்டியதில்லை! ஆசிரியரே, இதோ என் கடன்கள் ஒவ்வொன்றையும் தீர்க்கிறேன். ஆசிரியரே, தாங்கள் அளித்த ஒவ்வொன்றும் இதோ மீள்கின்றன. உங்களுக்குள் இருந்து என்னை இழுத்து அகற்றுக! அவ்விடத்தில் இந்த அம்பை நிறைத்துக்கொள்க! நூறு அம்புகள். ஒவ்வொரு அம்பும் வினாவாகி எழுப்பிய பல்லாயிரம் பல்லாயிரம் அம்புகள். ஒவ்வொரு விடையும் வளர்ந்து பெருகிய பல இலக்கம் அம்புகள். அம்புநிலம், அதில் வாழ்ந்தேன். அம்புவானம், அதில் எழுந்தேன். அம்புகளின் காடு. அம்புகள் இலைகளென எழுந்த மரத்தடியில் ஊழ்கம் செய்தேன். ஆசிரியரே, இவற்றை உங்களால் எளிதில் முறித்தெறிய இயலும். எஞ்சுவதொன்று உண்டு. நீங்கள் மறுமொழி இயற்ற முடியாத வினா அது. நீங்கள் ஒருபோதும் அறிந்திராத அர்ஜுனனை காட்டும் அம்பு.

அவன் துயில்கையில் அருகணைந்து குனிந்து செவிகளில் அவர் சொன்ன அம்புகள். அவன் கனவுக்குள் எழுந்து அவர் கற்பித்த அம்புகள். அவன் அகன்றிருக்கையில் அஸ்வத்தாமனுக்கு மட்டுமென அவர் கற்பித்தவை. அப்போது அவன் அங்கிருக்க வேண்டுமென ஆழுளம் விழைய அவ்விழைவை தொட்டெழுப்பி அவன் அங்கு செல்லாமலேயே எங்கிருந்தோ உணர்ந்துகொண்டவை. அவர் உடலசைவுகளில், கைக்கரவுகளில் இருந்து கற்பதறியாமலே அவன் கற்றுக்கொண்டவை. தன்னிடம் உள்ளதென்றே அவன் அறிந்திராதவை. என்று வந்தது, எங்கிருந்தது, எவரிடம் இருந்து பெற்றது என்று அறியாமல் எழுபவை. ஆசிரியரே, இவை ஒவ்வொன்றும் உங்களுக்குரியவை. உங்களுக்குள் இவை இருப்பதையும் நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொன்றும் நீங்கள் உங்களை அறியும் கணங்கள் என்று அமைக!

துரோணர் அவ்வம்புகளை முதலில் புன்னகையுடன், பின்னர் எரிச்சலுடன், பின்னர் மெல்லிய சலிப்புடன் எதிர்கொண்டார். அறியா அம்புகள் முன் சற்றே திகைத்தார். வியப்புற்று, பின் சீற்றமடைந்து, பின்னர் சினம் பெருக உடல் துடிக்க அவற்றை அறைந்து வீழ்த்தினார். அர்ஜுனன் தன் ஆவநாழியில் கைவிட்டு திகைத்து அசையாமல் நின்றான். “எடு அதை. எய்து வீழ்த்து. இதோ அத்தருணம்!” என்று துரோணரை கைசுட்டி இளைய யாதவர் சொன்னார். அர்ஜுனனின் உடல் கண்ணுக்குத் தெரியா சரடுகளால் கட்டுண்டதுபோல் அசைவிழந்து அதிர்ந்தது. துரோணர் உரக்க நகைத்தபடி “அவ்வளவுதானா? இனி எஞ்சுவது ஒன்றில்லையா? நீ கற்றது பிறிதென்ன?” என்று கூவினார். வெறியுடன் நகைத்தபடி “மூடா, இதோ என்னில் எஞ்சியுள்ளது நீ அறியாத ஓர் அம்பு. எந்த ஆசிரியனும் தனக்கென கரந்துவைக்கும் ஒரு துளி. இந்த அம்பின் பெயர் என்னவென்று இன்னமும் தெய்வங்கள் முடிவு செய்யவில்லை!” என்று அவனை நோக்கி அம்பொன்றை எய்தார்.

அர்ஜுனனின் தேருக்கடியில் பாய்ந்து சென்று பேரோசையுடன் வெடித்து தேரை மண்ணிலிருந்து ஆளுயரத்திற்குத் தூக்கி அப்பால் வீசியது அது. இளைய யாதவர் தேரிலிருந்து மறுதிசை நோக்கி பாய்ந்தெழுந்து அப்பால் சென்று கால் பதித்து விழுந்து சுழன்றெழுந்தார். தேருடன் அர்ஜுனன் விழுந்து அதன் முறிவுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டான். அவனை நோக்கி வில்லுடன் பாய முற்பட்ட நிர்மித்ரனை துரோணர் அம்பால் அறைந்து தூக்கி அப்பாலிட்டார். சர்வதனை அறைந்து மண்ணில் வீழ்த்தினார். பேரம்பொன்றை எடுத்து அர்ஜுனனை நோக்கி குறிவைத்து “இது என் மூதாதையரும் அறியாதது. இது என்னை ஆக்கிய தெய்வங்களும் அறியாதது. இதை மண்ணில் எவரும் எதிர்கொள்ள இயலாது. எய்தபின் நானே தடுக்க இயலாது” என்றபின் விலங்குபோல் ஓசையிட்டபடி அதை அவனை நோக்கி எய்தார்.

இளைய யாதவர் “அஸ்வத்தாமன் என்று கூவு! அஸ்வத்தாமன் என்று கூவு!” என்று அர்ஜுனனை நோக்கி குரலெழுப்பினார். அர்ஜுனன் “அஸ்வத்தாமன்! அஸ்வத்தாமன்!” என்று கூறினான். அந்த அம்பு தேரை மீண்டும் தாக்கி தூக்கி அப்பால் வீச அதிலிருந்து உதிர்பவன்போல் அர்ஜுனன் நிலத்தில் விழுந்தான். அவன் கவசங்களைக் கட்டிய தோல்பட்டைகளும் ஆடைகளும் தீப்பற்றிக்கொண்டன. அவன் பாய்ந்து ஓடி குருதிச் சேற்றில் விழுந்துருண்டு அதை அணைத்தான். பொசுங்கி புகையெழுந்த உடலுடன் அவன் பாண்டவப் படைவிரிவை நோக்கி ஓட துரோணர் தன் முகத்தில் படிந்த புழுதியை உதடுகுவித்து துப்பிவிட்டு வில்லைத் தூக்கியபடி மறுபுறம் திரும்பிக்கொண்டார். தேரை கைவிட்டுவிட்டு இளைய யாதவர் அவர் செல்வதை நோக்கி இடையில் கைவைத்து நின்றார்.