கார்கடல் - 61
பார்பாரிகன் சொன்னான்: விந்தியமலைக்கு அப்பால், ஜனஸ்தானத்தை தலைநகராகக் கொண்டு அமைந்திருந்த நாடு அரக்கர்களின் தொல்நிலமாகிய தண்டகம். முன்பு அது தண்டகப்பெருங்காடு என அழைக்கப்பட்டிருந்தது. அங்கே அரக்கர் குலத்தின் பதினெட்டு குடிகள் வாழ்ந்தார்கள். அவர்களை ஒருங்கிணைத்து ஆற்றல்மிக்க அரசு என்றாக்கியவர் தொல்லரக்க மன்னர் கரனும் அவருடைய இளையோராகிய தூஷணரும் திரிசிரஸும். இலங்கையை ஆண்ட அரக்கர்குலப் பேரரசர் ராவணனுக்கு உடன்குருதியர் அவர்கள். அலைகள் என எழுந்தும் பின் அமைந்தும் மீண்டும் எழுந்தும் கொண்டிருக்கும் அரக்கர்களின் வரலாற்றில் எழுந்த பேரலை அவர்களின் ஆட்சிக்காலம்.
இக்கதையை மூத்தோர் கூறுகின்றனர். பிரம்மனின் மைந்தர் புலஸ்தியர். அவரில் பிறந்த பிரஜாபதி விஸ்ரவஸ். விஸ்ரவஸ் அரக்கர்தெய்வமாகிய குபேரனை பெற்றார். குபேரன் மண்ணில் இருந்தும் கல்லில் இருந்தும் பொன்னில் இருந்தும் மூன்று அழகிய மகளிரை படைத்தார். மண்ணில் எழுந்தவள் மாலினி. கல்லில் பிறந்தவள் ராகை. பொன்னில் உருவானவள் புஷ்போஷ்கடை. அவர்கள் மண்ணால் ஆன பூமிகை என்னும் காட்டிலும் கல்லால் ஆன சிலாதலம் என்னும் காட்டிலும் பொன்னாலான ஹிரண்யம் என்னும் காட்டிலும் வாழ்ந்தனர். விஸ்ரவஸ் அவர்களின் காட்டுக்குச் சென்று அவர்களை மணந்து மைந்தர்களை பெற்றார். புஷ்போஷ்கடைக்கு ராவணனும் கும்பகர்ணனும் மைந்தனாகப் பிறந்தனர். மாலினியில் பிறந்தவர் விபீஷணர். ராகைக்கு கரனும் சூர்ப்பனகையும் பிறந்தனர்.
தன் ஏழு அகவை வரை கரன் அன்னையிடம் வளர்ந்தார். பின்னர் தந்தையிடம் சென்றுசேர்ந்தார். தந்தைக்குப் பணிவிடை செய்து மூன்று சொற்கொடைகளை பெற்றார். ஒருமுறை கேட்ட சொல்லை மறப்பதில்லை, ஒற்றை அம்பில் உள்ளத்தின் அனைத்துச் சொற்களையும் குவிக்க இயலும், உள்ளத்தில் சொல் என ஆவநாழி ஓயாமலிருக்கும். “நீ உன் உள்ளம் ஒழியும் ஒருவரைக் காணும்போது ஆவநாழியும் ஒழிந்து அவரிடம் தோற்பாய்” என்றார் தந்தை. “தந்தையே, மானுடருக்கும் அரக்கருக்கும் அசுரருக்கும் உள்ளத்தில் சொல் ஓயும் தருணம் உண்டா?” என்றார் கரன். “ஆம், உள்ளத்தில் சொல் எழுவது மெய்மையென்னும் இலக்கு நோக்கி செல்வதற்காகவே. இலக்கில்லாச் சொற்களும் இல்லை, இலக்கடையும் சொற்களும் இல்லை. பல்லாயிரம்கோடிச் சொற்கள் இலக்கு பிறழ்ந்து உதிர்கின்றன. அச்சொற்களின் பூசலே உள்ளம் என்பது” என்றார் விஸ்ரவஸ்.
“உளம் ஓயும் கணம் அமைவது மெய்மையை நாடிச்சென்று அடையும்போது மட்டுமே” என்றார் விஸ்ரவஸ். “நாடாதோர்க்கு அது அருளப்படுமா?” என்றார் கரன். “மெய்மை அவர்களை நாடிவரவும்கூடும்” என்றார் விஸ்ரவஸ். “நான் நாடப்போவதில்லை. எனவே என் உள்ளத்தில் சொல்லும் ஆவநாழியில் அம்பும் ஒருபோதும் ஒழியாது” என்றார் கரன். அன்னை அவருக்கு அரக்கர்குலம் மீண்டெழவேண்டும் என்னும் கனவை அளித்தாள். “எழுவதனூடாகவே அரக்கர் வாழ்கிறார்கள். அமைவதன் மெய்மை அவர்களுக்குரியதல்ல” என்றாள் ராகை. விஸ்ரவஸின் குருதியில் ராகையின் நீர்ப்பாவைத் தோற்றமான அனுராகைக்குப் பிறந்தவர் தூஷணர். ராகையின் நிழலுருவான சுராகையை விஸ்ரவஸ் புணர்ந்து பெற்றவர் திரிசிரஸ். கரன் தன் பதினெட்டாவது அகவையில் அரக்கர்குலங்கள் வாழும் நிலத்தைத் தேடி தெற்கே சென்றார். விந்தியனைக் கடந்து தண்டகத்தை அடைந்தார்.
ராகையின் மைந்தன் கல்லால் ஆன உடல்கொண்டிருந்தார். அவரை எதிர்க்க எவராலும் இயலவில்லை. தொல்லரக்கர்குடியின் அனைத்து மல்லர்களையும் வென்று அவர் அனைவருக்கும் தலைமைகொண்டார். அனைத்துக் குடிகளையும் தண்டகத்தில் ஓடும் மாலினி என்னும் நதியின் கரையில் கூடச்செய்து தனக்கு முடிசூடவைத்தார். அந்த இடம் பின்னர் ஜனஸ்தானம் என்னும் ஊராகியது. அதைச்சுற்றி மரங்களாலான பெருங்கோட்டை ஒன்றை அவர் அமைத்தார். உள்ளே மாளிகைகளும் கடைவீதிகளும் அமைந்தன. அரக்கர்குலம் அவர் தலைமையில் வெல்லற்கரியதாகியது. வெற்றியால் செல்வம் நிறைந்ததாக மாறியது. ஜனஸ்தானம் பெருநகரென வளர்ந்தது.
தூஷணர் நகர்க்காவலர். திரிசிரஸ் மலைக்காவலர். அவர்களால் தண்டகம் எதிரிகள் எண்ணவும் அஞ்சும் பெற்றியை அடைந்தது. அந்நாளில் அயோத்தியின் அரசமைந்தனாகிய ராகவராமன் தன் துணைவியுடன் தென்காடு புக்கு அங்கே பஞ்சவடி என்னும் காட்டுக்குள் குடியிருந்தார். கரனின் தங்கையான சூர்ப்பனகை அவரை சிறையெடுத்துவர முயன்று மூக்கும் முலையும் அறுக்கப்பட்டாள். சினந்தெழுந்த கரன் ராகவராமனுடன் போருக்குச் சென்றார். ஒழியா அம்புகளுடன் ராமனுக்கு எதிர்நின்று போரிட்டபோது ஒரு கணத்தில் தன் உள்ளத்தில் சொல்லும் ஆவநாழியில் அம்பும் இல்லாததை உணர்ந்தார். அவர் நெஞ்சு துளைத்துச் சென்றது ராகவராமனின் அம்பு.
தண்டகம் சிதைவுற்று பெருமையழிந்தது. மீண்டும் பலதலைமுறைக்காலம் பதினெட்டு அரக்கர்குடிகளும் சிதறிப்பரந்து மலைமக்களாக உருமாறி வறுமைகொண்டு வாழ்ந்தனர். நெடுங்காலம் அவர்களை பிற ஷத்ரிய அரசர்கள் வேட்டையாடி மேலும் மேலும் உள்காடுகளுக்குள் செலுத்தினர். அவர்கள் ஆண்ட ஆற்றுவழிகளின் மேல் கட்டுப்பாட்டை இழந்தனர். மலைவழிகளையும் பிறர் கைப்பற்றிக்கொண்டனர். பின்னர் அவர்களைப்பற்றிய அனைத்துச் சொற்களும் நினைவிலிருந்து அழிந்தன. ஷத்ரிய அரசர்களும் அவர்களால் காக்கப்பட்ட வணிகர்களும் அவர்களை அறியாதோர் ஆயினர்.
ஆனால் அவர்கள் மட்டும் தங்கள் இறந்தகாலத்தை அறிந்திருந்தனர். அவர்களின் நூற்றெட்டு ஊர்களிலும் கரனுக்கும் இரு இளையோருக்கும் கல்பதிட்டைகள் இருந்தன. மாதந்தோறும் ஊன்பலிகொண்டு அவர்கள் குடிகளை வாழ்த்தினர். ஆண்டுக்கொருமுறை அரக்கர்கோன் ராவணனுக்கும் இளையோருக்கும் ஊன்பலியும் பெருஞ்சோற்றுக்கொடையும் அளித்து விழவெடுத்தனர். அவர்களின் இளையோர் தங்கள் குலக்கதைகளைக் கேட்டு வளர்ந்தனர். பின்னர் அக்கதைகள் பெருகி வெற்றுக் கற்பனைகள் என்றாயின. இளையோர் அவற்றை இளமையின் மகிழ்ச்சிகளில் ஒன்றென எண்ணி கடந்துசென்றனர்.
அந்நாளில் ஒருமுறை அக்காட்டினூடாக ரிஷ்யசிருங்கர் என்னும் முனிவர் கடந்துசென்றார். அவர் விபாண்டகர் என்னும் முனிவரின் மைந்தர். அங்கநாட்டை அதன் பெரும்பஞ்சத்திலிருந்து மீட்டு அந்நாட்டை ஆண்ட ரோமபாதன் என்னும் அரசனின் மகள் சாந்தையை மணந்தவர். முனிவர்களும் வணங்கும் மாமுனிவர். தண்டகக் காட்டைக் கடக்கையில் வழிதவறி நீரில்லா வறண்ட நிலத்தினூடாக அலைந்து கற்பாறை ஒன்றின்மேல் அவர் நினைவிழந்து விழுந்துகிடந்தார். அங்கே அவரைக் கண்டடைந்த அரக்கர்குலமகள் ருதிரை அவரைத் தூக்கி தன் குடிலுக்கு கொண்டுவந்தாள். அவளுக்கு என்ன கைம்மாறு செய்யவேண்டும் என கேட்ட முனிவரிடம் தனக்கு ஒரு மைந்தனை அளிக்கவேண்டும் என்றும், அவன் அரக்கர்குலத்தை முழுதாளவேண்டும் என்றும் அவள் கோரினாள்.
ருதிரைக்கு ரிஷ்யசிருங்கரில் மைந்தனாகப் பிறந்தவர் மாமன்னர் அலம்புஷர். அவர் வடக்கே அரக்கர்குடியை மீட்டெழுப்பிய பகாசுரரின் உதவியுடன் அரக்கர்குடியை ஒருங்குதிரட்டினார். பகாசுரரின் செல்வத்தைப் பெற்று தொன்மையான ஜனஸ்தானத்தை மீட்டுக் கட்டினார். இம்முறை மலைப்பாறைகளை அடுக்கி உருவாக்கப்பட்ட கோட்டையாக அது அமைந்தது. பகாசுரரின் படைகளை கடன்பெற்றுச் சென்று தங்கள் நீர்வழிகளையும் மலைப்பாதைகளையும் மீண்டும் கைப்பற்றி மலையுச்சிகளில் காவல்நிலைகளை அமைத்து உரிமைகொண்டார். மீண்டும் ஜனஸ்தானம் செல்வமும் பெருமையும் கொண்டது.
அசுரமன்னர் பகன் கொல்லப்பட்ட செய்தியை அறிந்ததும் அலம்புஷர் உளம்கொதித்தார். உடனே படைகொண்டு சென்று பழி தீர்க்கவேண்டுமென எழுந்தார். அமைச்சர்கள் அவரை சினம்காக்கச் செய்தனர். “பகாசுரரைக் கொன்றவர் எவர் என நாம் இன்னமும் முழுதறியோம். பாண்டவ இளையவரால் கொல்லப்பட்டார் என்கிறார்கள்… அவரை நாம் இப்போது தேடிக் கண்டடைய இயலாது” என்றனர். “எனில் அவர்களின் நகரமாகிய அஸ்தினபுரியை அழிப்போம்” என்றார் அலம்புஷர். “அரசே, அஸ்தினபுரியிலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அஸ்தினபுரிக்கு எதிரிகளாகவும்கூடும்… அவ்வண்ணம் நிகழுமென்றால் நாம் அஸ்தினபுரியுடன் இணைந்து சென்று அசுரமன்னர் பகனின் இறப்புக்கு பழியீடு செய்வோம்” என்றார் அமைச்சர்.
அலம்புஷர் காத்திருந்தார். அசுரமன்னர் பகனுக்கு அவருடைய நகரத்தின் நடுவே நடுகல் ஒன்றை நாட்டி நாள்தோறும் குருதிபலி கொடுத்தார். பழியீடு செய்து அவரைக் கொன்றவனின் குருதியில் நனைத்த ஆடையை கொண்டுவந்து அங்கே வைத்து வணங்குவதுவரை அந்த பலிக்கொடை நீடிக்கும் என்று வஞ்சினம் உரைத்தார். அஸ்தினபுரிக்கும் இந்திரப்பிரஸ்தத்திற்கும் இடையேயான பூசல்களை ஒவ்வொருநாளும் ஒற்றர்களினூடாக அறிந்துகொண்டிருந்தார். அஸ்தினபுரி படையெழுந்ததும் தாங்களும் சேர்ந்துகொள்வதாக செய்தி அனுப்பினார்.
படைகள் திரண்டுகொண்டிருக்கையில் இளைய யாதவரின் செய்தியுடன் பாணாசுரரின் மைந்தர் சக்ரரும் மேற்கு நிஷாதஅரசின் ஹிரண்யநாபனும் அவன் இளையோன் ஹிரண்யபாகுவும் ஜனஸ்தானத்திற்கு வந்தனர். “அரக்கர்க்கரசே, இதுவே நாம் ஒருங்கிணைவதற்கான முதன்மைத் தருணம். இப்போது எளிய பகைமைகளையும் வஞ்சங்களையும் சுமந்துகொண்டு உளம்பிரிவோமாயின் நம் கொடிவழிகள் நம்மை பழிக்கும்…” என்று சக்ரர் சொன்னார். “என் தந்தை இளைய யாதவருடன் போரிட்டு கையிழந்தார் என அறிந்திருப்பீர்கள். ஆனால் இன்று நாங்கள் யாதவர்களுக்கு மகற்கொடை கொடுத்த குடி என அறியப்படுகிறோம். எங்கள் குலமகள் உஷை இன்று துவாரகைக்கு அரசியாக அமர்ந்திருக்கிறாள்.”
“இளைய யாதவருக்கு குருதியுறவுகொண்டவர்கள் அசுரர்கள் என பாரதவர்ஷமே இன்று அறியும்” என்று சக்ரர் தொடர்ந்தார். “இங்கு அவர் சொல் வாழுமென்றால் நாமும் வாழ்வோம். இனி அசுரர்களுக்கும் பிறருக்குமான போர்கள் இல்லை. அசுரகுடியினருக்கும் பிறருக்குமான கூட்டில் புதிய அரசகுடிகள் இங்கே எழும். குடியால் அல்ல, ஆற்றலாலும் அறத்தாலும் அரசுகள் அமையும்…” மேற்கு நிஷாதஅரசின் ஹிரண்யநாபன் “புதிய அறம் ஒன்று இங்கே எழும். அதை சொல்லில் அமைத்த புதியவேதம் நிலைகொள்ளும். இது அதற்கான போர்… ஆகவேதான் இதில் அரக்கரும் அசுரரும் நிஷாதரும் கிராதரும் பாண்டவர்களின் பக்கம் அணிதிரண்டிருக்கிறார்கள்” என்றார்.
“ஆனால் என் வஞ்சம் இளைய பாண்டவரிடம்” என்று அலம்புஷர் சொன்னார். “அதை நாங்கள் அறிவோம். அதை கடந்து வருக என உங்களை அழைக்கவே நேரில் வந்தோம்” என்றார் சக்ரர். “இந்தப் போரில் பாண்டவர் தரப்பில் வந்துகூடியிருக்கும் அத்தனை நிஷாதருக்கும் கிராதருக்கும் அசுரருக்கும் அரக்கருக்கும் அவ்வண்ணம் பழைய பழியின் கதைகள் பலநூறு உள்ளன. நமக்கும் அவர்களுக்குமான போர் என்பது இந்த யுகத்தில் தொடங்கியது அல்ல. ஆனால் வரும் யுகத்தில் அது மறைவதற்கு வாய்ப்புள்ளது. அதன்பொருட்டு களமிறங்குவோம். அதை வென்று நம் கொடிவழியினருக்கு அளிப்போம்.”
அலம்புஷரின் அமைச்சர் “அவ்வண்ணம் மறையும் பகையா அது? நமது தெய்வங்கள் வேறு. நமது வேதம் வேறு. நமது மூதாதையர் வாழும் உலகம் முற்றிலும் வேறு” என்றார். “அமைச்சரே, நம் குடியில் பிறந்தவர்களே அவர்கள் வணங்கும் தெய்வங்களான வருணனும் இந்திரனும் யமனும் குபேரனும் என நூல்கள் சொல்கின்றன. வேள்வியில் அவிகொண்டு அவர்கள் தேவர்களாயினர். அரக்கர் குடியில் பிறந்த இடும்பியின் மைந்தர் கடோத்கஜர் இன்று அரசகுடி மங்கையை மணந்திருக்கிறார். அவர் குடியில் நாளைய பெரும்புகழ்கொள்ளும் அரசகுடி எழும் என்கின்றனர் நிமித்திகர். நாமறிந்த காலம் கதைகளில் வாழ்வது. வரவிருப்பதோ தெய்வங்களின் கனவில் எழுவது…” என்றார் சக்ரர்.
அமைச்சர் “குருதி ஒருபோதும் எல்லைகளை மீறாது” என்றார். “இல்லை அமைச்சரே, குருதி கங்கையைப்போல. அது இணைப்பெருக்குகள் வழியாகவே ஆற்றல்கொள்கிறது. கிளைப்பெருக்குகளாக விரிந்து மண்ணாள்கிறது” என்றார் ஹிரண்யநாபன். “இங்குள்ள ஷத்ரியர் அனைவரின் குலவழியிலும் தொல்லரக்கரான விருஷபர்வனின் குருதி உள்ளது என்று உணர்க! அவர்களனைவரும் தொல்லன்னை சர்மிஷ்டையின் மைந்தர்கள் என்று நாம் அறிந்துள்ளோம்.” அமைச்சர் “அவையெல்லாம் கதைகள்” என்றார். “இவையும் கதைகளாகும். கதைகளே விதைகள், அவற்றிலிருந்தே வாழ்வு முளைத்தெழுகிறது” என்றார் சக்ரர்.
“நான் சொல்லிழந்துள்ளேன் சக்ரரே… என்ன முடிவெடுப்பதென்று அறியாதவனாகி விட்டேன்” என்றார் அலம்புஷர். அமைச்சர் “நாம் நம் தெய்வங்களிடமே கோருவோம்… அவர்கள் முடிவுசெய்க!” என்றார். “ஆம், அதுவே அரக்கர்களின் வழி” என்றார் அலம்புஷர். “மூதாதையர் நல்ல முடிவை எடுக்கட்டும்… எதிர்பார்த்திருக்கிறோம்” என்றபின் சக்ரரும் நிஷாத அரசர்களும் திரும்பிச்சென்றார்கள். அலம்புஷர் அமைதியிழந்து அரண்மனைக்குள் அலைந்தார். அமைச்சர் “நாம் நம் தெய்வங்களிடமே கோருவோம்… தெய்வங்கள் முடிவெடுத்தால் மட்டுமே நம் குடிகள் அச்சொல்லுக்கு கட்டுப்படும்” என்றார். “நம் முடிவு தலைமுறைத் தொடர்களுக்கு அப்பால் வருங்காலத்தைய மைந்தருக்கும் உரியது. அதை நாம் எண்ணி எடுக்க முடியாது. எண்ணாது எடுக்கவேண்டுமென்றால் தெய்வமெழவேண்டும்.”
அமைச்சர் குடித்தலைவர்களை அழைத்து பெருங்குழு ஒன்றை கூட்டினார். அதன்படி மூதாதையருக்கு பெருஞ்சோற்றுக் கொடைவிழா ஒன்று ஒருங்கமைக்கப்பட்டது. அரக்கர்களின் குடிகள் மலைப்பாதைகளினூடாக எறும்புநிரைகளாக வந்து குழுமினர். ஊர்மையத்தில் அமைந்திருந்த மூதாதையர் ஆலயத்தில் அரக்கர்கோன் ராவணனுக்கும் தம்பியருக்கும் அவர்களின் குடிமூத்தவரான கரனுக்கும் தூஷணருக்கும் திரிசிரஸுக்கும் ஏழு முழுத்த எருமைகளை வெட்டிப் பலியிட்டு பூசைசெய்தனர். ஊனும் கள்ளும் அன்னமும் மலரும் படைத்து வணங்கினர். முழவுகள் “எழு எழு எழு” என முழங்கிக்கொண்டிருந்தன. கொம்புகள் “ஆகுக! ஆகுக!” என இறைஞ்சின.
முதற்பூசகரில் வெறியாட்டுகொண்டு எழுந்தார் அரக்கர்கோன் ராவணன். “என் மைந்தரே, நீங்கள் ஆழியும் சங்கும் ஏந்தியவனின் அடிபணிக! அவன் குடிகளென்றாகுக! அவனுடன் நின்றுபொருதுக! உங்கள் கொடிவழியினரில் அவன் ஆணை திகழ்க! உங்கள் வேதங்களில் அவன் சொல் முளைவிட்டு எழுக!” என்று ஆணையிட்டார். கும்பகர்ணனும் விபீஷணனும் பூசகரில் எழுந்து அவ்வாணையையே அளித்தனர். பின்னர் கரன் எழுந்தார். “ஆம், குருதி விரிந்தெழுக! மலைப்பனைபோல் நம் விதைகள் காடெங்கும் பரவுக! இந்நிலமெங்கும் நம் சொல்லே முளைவிடுக!” என்றார். தூஷணரும் திரிசிரஸும் அவர்களில் எழுந்து அவ்வாணையை மேலும் உரைத்தனர்.
அப்போது முதல் பூசகரில் எழுந்த ராவணப்பிரபுவை மீறி எழுந்தது பகாசுரரின் குரல். “என் வஞ்சம் அணையாது… என் வஞ்சம் என்றுமிருக்கும். எனக்காக அளிக்கப்பட்ட சொல்லை ஒருபோதும் நான் கைவிடப்போவதில்லை.” மண்ணிலிருந்து துள்ளி எழுந்து வெறிகொண்டாடி கூச்சலிட்டார் பூசகர். “என் பழிக்கு மறுநிகர் இல்லை… எனக்களிக்கப்பட்ட சொல்லை நிறைவேற்றுங்கள்… இல்லையேல் இக்குடியை அழிப்பேன். இங்குள்ள விளைநிலங்களில் நஞ்சாவேன். கருவறைகளில் நோயாவேன். பசுக்களில் அனலென ஊறுவேன். என்னை நிறைவடையச்செய்க! என் பழியை நிகர்செய்க!”
பிற தெய்வங்கள் ஒவ்வொன்றாக விழுந்து மலையேற பகாசுரர் மட்டும் நின்று ஆடினார். இரு கைகளிலும் பந்தங்களை ஏந்திச் சுழன்றார். அவரை நோக்கி நின்றிருந்த அரக்கர்கள் தன்னுணர்வு கொண்டு “வஞ்சம் எழுக! பெருவஞ்சமே எழுக! ஆம், பழிநிகர் செய்வோம்! பழிநிகர் செய்ய உயிரளிப்போம்!” என தங்கள் கதைகளையும் விற்களையும் வாள்களையும் வேல்களையும் தூக்கி ஆட்டி கூச்சலிட்டனர். கைகூப்பியபடி எரிதழல்சூடி ஆடிக்கொண்டிருந்த பகாசுரரை நோக்கிக்கொண்டிருந்த அலம்புஷர் “ஆம்!” என தலைவணங்கினார்.
அலம்புஷரின் படைகள் கௌரவப் படைகளை சென்றடைந்தன. அங்கிருந்த மூன்று அலம்புஷர்களில் ஒருவர் கடோத்கஜரால் கொல்லப்பட்டார். ஜடாசுரரின் குலமைந்தரான இரண்டாமவர் சாத்யகியால் கொல்லப்பட்டார். அவர்கள் ஒவ்வொருவரும் உயிர்விடுகையில் அலம்புஷரைத் தேடி சக்ரரின் சொல் வந்தது. “இந்தக் களத்தில் வீணே உயிர்விடவேண்டியதில்லை, அரக்கர்க்கரசே. இங்கே பிற எவரும் வெல்லப்போவதில்லை. வெல்லும் சொல்லை நம் குடிக்குரியதாக்குக! இன்னமும்கூட உங்களுக்கு வாய்ப்புள்ளது.” அலம்புஷர் “நான் சொல்லுக்கு கட்டுப்பட்டவன்” என சொல்லி அனுப்பினார். “மூன்று சொற்களுக்கு அரக்கர்குடியினர் கட்டுப்பட்டவர்கள். நெறிநூல்களின் சொற்களைவிட மும்மடங்கு மூதாதையர் சொற்களுக்கு. மூதாதையர் சொற்களைவிட மும்மடங்கு தான் உரைத்த சொற்களுக்கு. என் சொற்களுடன் இறுதிவரை களத்தில் நின்றிருப்பேன்.”
இரவுப்போருக்கு முடிவெடுக்கப்பட்டதும் சகுனியிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. அவர் தன் இரு படைத்தலைவர்களுடன் சகுனியின் பாடிவீட்டுக்குச் சென்றபோது அங்கே அஸ்வத்தாமர் இருந்தார். அருகே காககுலத்து அரக்கனான அலாயுதனும் இருந்தான். காகச்சிறகுகள் கொண்ட தலையணியும் கரிய யானைத்தோலாடையும் அணிந்து கல்மணி மாலைகள் அணிந்திருந்த அலாயுதன் எழுந்து அவரை வரவேற்றான். அவனை பலமுறை சந்தித்திருந்தாலும் அலம்புஷர் அணுக்கம்கொள்ள விழைந்ததில்லை. அறியாமையும் ஆணவமும் கொண்ட இளைஞன் என்னும் உளப்பதிவே அவனைப்பற்றி இருந்தது. அலாயுதன் கன்னங்கரிய நிறமும், நரம்புகள் ஓடிய பெரிய கைகளும், முன்னுந்திய தாடையும், மின்னும் சிறிய விழிகளும்கொண்டு விலங்கியல்பைக் காட்டுபவனாக தோன்றினான். அவன் அலம்புஷரை வணங்கி “இன்று நமது நாள், அரக்கர்க்கரசே” என்றான். அலம்புஷர் “ஆம்” என்று மட்டும் சொன்னார்.
அஸ்வத்தாமர் எழுந்து வந்து அலம்புஷரை தோள்தழுவி வரவேற்று “வருக, அரக்கர்க்கரசே! இன்று நாம் அரக்கர்குலத்தவரை நம்பியே போரிடவேண்டிய நிலையில் இருக்கிறோம்” என்றார். அன்று இரவுப்போர் நிகழக்கூடும் என்னும் சொல் படைகளிடையே புழங்கிக்கொண்டிருப்பதை அலம்புஷர் கேட்டிருந்தார். சகுனி “இன்றிரவு அவர்கள் தாக்குவார்கள் என உறுதியாகியிருக்கிறது. கடோத்கஜன் தலைமையில் அவர்கள் எழவிருக்கிறார்கள். இரவில் கடோத்கஜன் ஏழுமடங்கு ஆற்றல்கொண்டவனாக ஆவான் என்கிறார்கள். நாங்கள் இரவில் விழியற்றவர்கள் என அறிந்திருப்பீர்கள். உங்கள் விழிகளை எங்களுக்குக் கொடுங்கள்” என்றார். அலம்புஷர் “இருளில் நாங்கள் எங்கள் தெய்வங்களின் துணையையும் பெறுகிறோம்” என்றார். “உங்கள் இருவரின் படைகளும் பன்னிரு பிரிவுகளாகப் பிரிந்து களத்தில் நிற்கவேண்டும்… உங்களால் நாங்கள் வழிநடத்தப்படவேண்டும்” என்றார் அஸ்வத்தாமர்.
அலாயுதன் “நான் என் படைகளை ஒரே ஒரு சுடர்ச்செய்கை வழியாக அணிபிரித்துவிட முடியும்” என்றான். அலம்புஷர் “இன்றுதான் மூதாதையர் குறித்த நாள்போலும்” என்றார். “என் வஞ்சத்தை நான் இன்று தீர்க்கவேண்டும். இளைய பாண்டவர் பீமசேனரை இன்று கொன்று குருதிகொள்வேன். பகாசுரருக்கு அளித்த சொல்லை நிறைவுசெய்வேன்.” அவரை குறுக்கே மறித்த அலாயுதன் “நானும் பீமசேனரை கொல்வேன் என்று வஞ்சம் உரைத்து இங்கு வந்தேன்” என்றான். எரிச்சலுடன் விழிசுருக்கி “எதன்பொருட்டு?” என்றார் அலம்புஷர். “என் குடியின் மூத்தவராகிய பகாசுரரை பீமசேனர் அறைந்துகொன்றார்… குருதிப்பழி ஒருபோதும் தீர்க்கப்படாது விடப்படலாகாது என்றார் என் அன்னை. நான் அன்னைக்கு அளித்த சொல்லின்பொருட்டே இங்கு வந்தேன்” என்று அலாயுதன் சொன்னான். அலம்புஷர் ஏதோ சொல்ல வாயெடுத்த பின் விழிவிலக்கி அதை தவிர்த்தார்.
அஸ்வத்தாமர் “இன்று களத்தில் பீமசேனர் ஆற்றலற்றவர். உங்கள் கதைகள் அவரைத் தேடிச் செல்லட்டும். உங்களில் எவருக்கு பழிநிகர் செய்யும் வாய்ப்பை அருள்கின்றன தெய்வங்கள் என்று பார்ப்போம்” என்றார். அலம்புஷர் “நான் பீமசேனரைக் கொன்று பழி தீர்ப்பேன். என் சொல் இந்த இரவில் வெறியாட்டுகொண்டு எழும் தெய்வம்போல் நின்றுள்ளது” என்றார். “ஆம், இன்றுதான் என்று என் அகம் எழுகிறது” என்றான் அலாயுதன். “உங்கள் படைகள் களமெழுக!” என்று சகுனி ஆணையிட்டார். தலைவணங்கி அலம்புஷர் எழுந்தபோது அலாயுதனும் எழுந்துகொண்டான். சகுனியும் அஸ்வத்தாமரும் அவர்களுக்கு விடைகொடுத்தனர். அஸ்வத்தாமர் சில அடி உடன் வந்து “மன்னர் சிதைக்களம் சென்றிருக்கிறார். அங்கிருந்து படைமுகம் செல்வார். நீங்கள் அவரை அங்கே சந்திக்கலாம்” என்றார்.
அவர்கள் இருவரும் வெளியே வந்தனர். அலம்புஷர் தன் உடலின் எடைகூடி கணுக்கால்களை அழுத்துவதுபோல் உணர்ந்தார். ஆனால் அலாயுதன் உணர்வுக்கொந்தளிப்பு அடைந்திருந்தான். “இன்று போர் நிறைவுறும்… இன்றுடன் தெரியும் நாம் நூறு ஷத்ரியர்களுக்கு நிகரானவர்கள் என” என்றான். கௌரவப் படைகளுக்குள் சிறிய அகல்சுடர்கள் அலைவதை அலம்புஷர் பார்த்தார். இருளுக்குள் படைகள் இடம்மாறிக் கொண்டிருப்பதை உணரமுடிந்தது. கீற்றுநிலா முழுமையாகவே முகில்களுக்குள் அமைந்திருந்தது. அலாயுதன் “இரவுப்போருக்காகவே காத்திருந்தேன். இவர்களின் போர்நெறிகள் அனைத்தும் தங்களுக்குள் போர்புரிவதன் பொருட்டு இவர்கள் உருவாக்கிக் கொண்டவை. வெட்டவெளியில் வெளிச்சம் நிறைந்த பொழுதில் முறையாக முரசறைவித்து வஞ்சினம் கூறி படைநெறிகளின்படி பொருதிக்கொள்கிறார்கள். இந்த அறிவின்மைக்கு நாம் ஏன் உடன்படவேண்டும் என்றே நான் உசாவிக்கொண்டிருந்தேன். காலில்லாதவர்களின் ஊரில் கைகளால் நடந்து போரிடும்படி நெறியிருக்கும்… அறிவின்மை… இன்றேனும் நாம் நமது வழிகளின்படி போரிடுவோம்…” என்றான்.
“இது அவர்களின் போர்” என்றார் அலம்புஷர். “மெய், ஆனால் இதற்குள் நாம் நமது போரை நிகழ்த்தும்பொருட்டே வந்துள்ளோம்” என்று அலாயுதன் சொன்னான். அலம்புஷர் “இல்லை, அவர்களின் போரில் ஊடுகலந்து போரிடவே நம்மால் இன்று இயலும். நம்மால் நேரடியாக பீமசேனரையோ பாண்டவர்களையோ வெல்ல இயலாது என்பதனாலேயே இங்கு வந்துள்ளோம்” என்றார். அலாயுதன் இளையோருக்கே உரிய முறையில் பொறுமையற்று தலையை அசைத்தான். “நாம் தோற்கடிக்கப்படுவது அவர்களால் அல்ல, நம்மை எதிர்க்க அங்கே சூழ்ந்திருக்கும் அரக்கர்களால்தான். நான் இரவில் பலமுறை விண்ணிலெழுந்து பாண்டவப் படைகளுக்குள் செல்ல முயன்றேன். இருளிலேயே பாண்டவரை கொன்று மீளமுடியுமா என்று பார்த்தேன். அங்கே காவலுக்கிருப்பவர்கள் இடும்பர்கள். காட்டுநாய்களை மோப்பம் பிடிக்கும் நாட்டுநாய்கள் அவர்கள்.”
அவன் தரையில் துப்பி “நான் இத்தருணத்திற்காகவே காத்திருந்தேன். இரவு என்னை பெருகிஎழச் செய்கிறது. இன்று நான் பாண்டவர்குலத்து வீணனை களத்தில் வீழ்த்துவேன். பகாசுரருக்காக பழிநிகர் செய்தேன் என என் குடியால் புகழப்படுவேன்” என்றான். அலைகளில் படகுபோல நிலைகொள்ளாமல் அசைந்த அவன் உடலை நோக்கியபின் அலம்புஷர் “விந்தைதான்… நான் மட்டுமே பகாசுரருக்காக வஞ்சினம் உரைத்துள்ளேன் என எண்ணினேன்” என்றார். “அரசே, இங்கு மட்டும் ஏழு அரக்கர்குலத்து வீரர்கள் பகாசுரரின் பழியை ஈடுசெய்வதற்காக களம்புகுந்துள்ளனர்” என்றான் அலாயுதன். அலம்புஷர் “ஆனால் பகாசுரருக்கு நேரடிக் குருதிவழி என ஏதுமில்லை” என்றார். “ஆம், ஆனால் நாம் அனைவருமே ஒற்றைக்குருதி” என்றான் அலாயுதன். அவனுடைய பெரிய கைகள் ஒவ்வொரு சொல்லுக்கும் அசைந்தன. அவற்றைக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாதவன் போலிருந்தன அவன் அசைவுகள். கைகளை கோத்துக்கொண்டான். தலையை தடவினான். முகவாயை வருடிக்கொண்டான். மார்பில் கட்டிக்கொண்டு உடனே விலக்கினான்.
அலம்புஷர் தன்னைச் சூழ்ந்திருந்த கௌரவப் படைப்பெருக்கை நோக்கியபின் “நாம் மட்டும்தான் வஞ்சங்களை இப்படி பெருக்கிக்கொள்கிறோமா? வஞ்சத்தால் வாழ்கிறது நம் குடி என்பார்கள் மூதாதையர். ஆனால் இப்போது நோக்குகையில் நாம் வஞ்சங்களால் அழிகிறோமா என்னும் எண்ணம் ஏற்படுகிறது” என்றார். படைகளைச் சுட்டி “பார், இவர்கள் போரிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். போர்க்களத்திலிருந்து வஞ்சங்களை கொண்டுசெல்வார்கள் என்றால் இவர்களின் ஒவ்வொரு குடியிலும் பல்லாயிரம் வஞ்சினங்கள் உரைக்கப்படவேண்டும். ஒவ்வொரு வீரனுக்கும் ஆயிரம் வஞ்சங்களேனும் வந்து சேர்ந்திருக்கும். கொடுந்தெய்வங்களைப்போல அவர்களை அவை ஆட்டிவைத்திருக்கும். அவர்களால் வேறெதையும் எண்ணியிருக்க முடியாது. அறமோ நெறியோ அவர்களில் எழுவதற்கு வாய்ப்பில்லை” என்றார்.
அலாயுதன் “ஆம், நான் அதை எண்ணியதுண்டு. பீமசேனனால் கொல்லப்பட்ட மகதத்தின் அரசர் ஜராசந்தனின் கொடிவழியினர் அங்கே பாண்டவர்களுடன் நின்று போரிடுகிறார்கள்” என்றான். “இழிமக்கள், இறந்தவர்களின் உணர்ச்சிகளை மறந்து இருப்பவர்கள் வெற்றுஉடல்களென வாழ்கிறார்கள். விலங்குகளே வஞ்சமற்றவை. வஞ்சத்தை கற்றுக்கொண்ட விலங்கே மானுடன். அரக்கர்க்கரசே, நாம் வஞ்சங்களால்தான் குடிகளாக தொகுத்துக்கொள்கிறோம். குலங்களாக இணைகிறோம். வஞ்சமே நம் மூதாதையரை நம்முடன் இணைக்கிறது. நம் வழியாக நம் கொடிவழியினருக்கு சென்றுசேர்கிறது. வஞ்சச்சரடால் கோக்கப்பட்ட மணிகளே நாம் என்கின்றன தொல்லுரைகள்.” அவன் மீண்டும் ஓங்கி துப்பி “கீழ்மக்கள். விலங்குகளைப்போல் நுகர்வதே இன்பமென்று எண்ணுபவர்கள். இப்போருடன் இவர்கள் முற்றழிவார்கள் என்றால் களைகள் எரிந்தணைந்த மண்ணில் விளைகள் பெருகுவதுபோல் அரக்கர் குடி வளர்ந்தெழுந்து மண் நிறைக்கும்” என்றான்.
“ஆம், இவர்கள் போர்க்கள வஞ்சங்களை வளர்ப்பதில்லை. அவற்றை களத்தை ஆளும் தெய்வங்களுக்கு அளித்த பின் வெறுமையை மட்டுமே இங்கிருந்து பெற்றுக்கொண்டு மீள்கிறார்கள். எல்லா வெறுமையும் ஏதோ ஒரு மெய்மையின் புறவடிவம்தான். ஆகவேதான் இவர்கள் போர்க்களத்தை அறநிலம் என்றும் மெய்மையின் ஊற்று என்றும் புகழ்கிறார்கள்” என்றார் அலம்புஷர். “இவர்களிடமிருக்கும் அத்தனை மெய்மைகளும் வெவ்வேறு போர்க்களங்களிலிருந்து இவர்கள் பெற்றுக்கொண்டவை போலும். அந்நெறிகளால்தான் இவர்கள் மேலும் மேலும் ஆற்றல்கொண்டவர்களாக ஆகிறார்கள்.” அலாயுதன் “என்ன வீண்பேச்சு இது? இவர்களுக்கு களத்தில் அச்சமும் ஐயமும் அன்றி நெறியென்று ஏதுமில்லை என அறியாதவரா நீங்கள்?” என்றான்.
“ஆம், களமெழுவதற்கு முன் நெறிகளை வகுத்துக்கொள்கிறார்கள். களம் அமைந்ததுமே நெறிகளை மீறுகிறார்கள். ஆனால் அந்நெறிகள் முந்தைய களங்களால் அடையப்பட்டவை. இக்களத்தில் அவை உடைபடுவது இயல்பே. ஆனால் இக்களத்தில் அவர்கள் அடையும் நெறி இன்னொரு பெரும்போர் வரை இவர்களை ஆளும்” என்று அலம்புஷர் சொன்னார். “அங்கே இளைய யாதவன் உருவாக்கும் சொல் என்பது இப்போரில் திரண்டெழும் நெறிகளால் உலகியலென வகுக்கப்படலாம். இங்கே அது பல்லாயிரம் தலைமுறைக்காலம் நின்று ஆட்சிசெய்யலாம்.”
“வீண்பேச்சு! வீண்பேச்சு!” என்று அலாயுதன் கூவினான். “இவர்கள் வஞ்சம் கொள்ளாதிருப்பது அனைத்தையும் மறந்துவிடுவதனால்தான். இவர்கள் பழிகளையும் பிழைகளையும்கூட மறந்துவிடுவது ஒன்றின்பொருட்டே, நிலம். நிலம் மட்டுமே இவர்களின் இலக்கு. நெறியெனக் கொள்வது அதை வெல்லும் வழிகளை மட்டுமே. அதை மறைக்கவே சொல்பெருக்குகிறார்கள். இவர்களை பலிகொண்டு நிறையாத குருதித்தெய்வமென ஆட்டிவைக்கிறது நிலம். நிலத்தை பகுத்துப்பெறுவதற்காக பெற்ற தந்தையை கொல்பவர்கள் இவர்களில் உண்டு. போரில் மைந்தரையும் தந்தையரையும் குடி முழுதையும் இழந்தாலும் கையளவு நிலம்பெற்றால் மகிழ்ந்து நிறைவுறும் கீழோர்” என்றான் அலாயுதன்.
“நாம் அவர்களிடமிருந்து அதைத்தான் கற்றுக்கொள்ளவேண்டுமா என்ன?” என்றார் அலம்புஷர். “என்ன சொல்கிறீர்கள்? நிலத்தையா? நிலத்தின்பொருட்டு நாம் நம் குலநெறிகளை குருதிவஞ்சங்களை கைவிடவேண்டும் என்கிறீர்களா?” என்றான் அலாயுதன். “யானை பெரும்பசி கொண்டது, ஆகவே அது உணவையே ஊழ்கப்பொருளாகக் கொண்டுள்ளது என்று சொல்வார்கள். இவர்கள் நிலம்மீது கொண்டிருக்கும் பற்றும் வெறியும் இவர்களுக்குள் தெய்வங்கள் பொறித்ததாக இருக்கலாம். இவர்களின் தெய்வங்கள் இவர்களுக்கு பரவுக, எங்கும் நிறைக என ஆணையிடுகின்றன போலும்” என்றார் அலம்புஷர். “நோக்குக, இவர்களின் நெறிகளும் விழைவுகளும் எதுவானாலும் ஆகுக! இவர்கள் பாரதவர்ஷத்தை நிறைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு போருக்குப் பின்னரும் மும்மடங்கு ஆற்றல்கொண்டவர்களாக ஆகிறார்கள். பேரழிவுகள் இவர்களை பெருகச்செய்கின்றன. எண்ணிக் கொள்க, இப்பெரும்போருக்குப் பின் இவர்கள் மேலும் பொலிவடைவார்கள்! இந்நிலத்தை முற்றாக நிறைத்துப் பொங்கி வெளியேயும் செல்வார்கள்.”
“ஆனால் நாம் வஞ்சமெனும் தெய்வத்திற்கு குருதிபலி கொடுத்துக்கொண்டிருக்கிறோம்” என அலம்புஷர் சொன்னார். அவர் சொல்வது புரியாமல் எரிச்சலுடன் மேலே சொல்லவந்த அலாயுதனை கையமர்த்தித் தடுத்து “ஆம், நானும் அதன்பொருட்டே வந்தேன். இக்கணம் வரை என் தெய்வங்களின் மேல் ஐயமற்றவனாகவே இருந்தேன். ஆனால் இப்போது தனித்து நின்றிருக்கிறேன். துணையற்ற, உறவற்ற வெளியில் நிலைகொள்வதைவிட பெரிய வெறுமை தெய்வங்களற்ற வெளியில் நின்றிருப்பது” என்றார். உரக்க நகைத்து “நன்று, எவ்வெறுமையும் மெய்மையின் மறுவடிவே என்றுதான் சொல்லப்பட்டுள்ளது” என்றபின் தன் புரவி நோக்கி நடந்தார்.