கார்கடல் - 15
துச்சாதனன் கர்ணனின் அருகே செல்கையில் நடை தளர்ந்தான். கைகள் கூப்பியிருக்க விழிநீர் வழிய நின்ற அவனை தொலைவிலேயே கண்டு தேரிலிருந்து இறங்கி இரு கைகளையும் விரித்தபடி கர்ணன் எதிர்கொண்டான். துச்சாதனன் அருகணைந்து அவன் கால்களை நோக்கி குனிய கர்ணன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான். துச்சாதனனின் தலை கர்ணனின் மார்பளவுக்கே இருந்தது. ஒரு சொல்லும் இல்லாமல் அவன் கர்ணனின் மார்பில் தலைவைத்து விம்மி அழுதான். கர்ணன் அப்பால் நின்ற சமனையும் சகனையும் அருகே அழைத்து தன் கைவளையத்திற்குள் எடுத்துக்கொண்டான்.
துச்சாதனன் மூச்சை இழுத்து விட்டுக்கொண்டு கண்களைத் துடைத்தபடி விலக கர்ணன் “செல்வோம், இளையோனே” என்று சொல்லி திரும்பி தன் அகம்படியினரை நோக்கி புரவிகளை கொண்டுவரும்படி கைகாட்டினான். “நான் முறைமைச் சொல் உரைக்கவில்லை. சூதரும் பிறரும் வந்துள்ளனர். முறைமைகள்…” என துச்சாதனன் தவிப்பு கொள்ள “எதுவும் தேவையில்லை. நாம் முடிந்தவரை விரைந்து சென்று அரசரை பார்ப்போம்” என்றான் கர்ணன். “அவர் அங்கே அவைக்களத்தில் தங்களுக்காக காத்திருக்கிறார், அரசே. இரவு முழுக்க உங்களுக்கான காத்திருப்பாகவே நீடிக்கிறது” என்றான் சமன். கர்ணன் புன்னகைத்து “செல்வோம்” என்று வீரன் கொண்டுவந்து நிறுத்திய புரவியில் ஏறிக்கொண்டான்.
துச்சாதனன் புன்னகையுடன் “நீங்கள் வருவீர்கள் என்று உறுதியாகவே தெரியும். ஆயினும் வந்தது நிறைவளிக்கிறது, மூத்தவரே. இனி நாங்கள் அஞ்சுவதற்கேதுமில்லை. உங்கள் வில் இங்கு எழுந்தது எங்கள் மூத்தவர் மூன்று தெய்வங்களாலும் காக்கப்பட்டதற்கு நிகர்” என்றான். கர்ணன் ஒன்றும் சொல்லாமல் புரவியை செலுத்தினான். மானுடப்பெருக்காக திசைஎல்லை வரை பரந்திருந்த படைகளைப் பார்த்ததுமே அவன் முகம் மலர்வதை துச்சாதனன் கண்டான். படைத்தலைவனுக்கு படைகளை பார்ப்பதைப்போல் இனிது பிறிதில்லை என்று தோன்றியதுமே வணிகனுக்கு அங்காடியை பார்ப்பதுபோல் என்று ஒரு மறு எண்ணமும் எழ அவன் புன்னகைத்துக்கொண்டான். உள்ளம் மலர்ந்திருந்தமையால்தான் அவ்வெண்ணம் எழுந்தது என பின்னர் எண்ணினான்.
கௌரவப் படைகளுக்குள் நுழைந்து செல்லச்செல்ல கர்ணன் சற்று அமைதியிழந்து சுட்டுவிரலால் மீசையைச் சுழற்றியபடி இருபுறமும் விழியோட்டிக்கொண்டு வந்தான். அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி துச்சாதனன் தன் தேரில் நின்றிருந்தான். மையப்படை காவலரண் முன் வந்து நின்றதும் கர்ணன் இறங்கி இரு கைகளையும் விரித்து சோம்பல் முறித்தான். துச்சாதனன் அருகே வந்து “தங்களுக்காக மாதுலரும் மூத்தவரும் பிறரும் அவைகூடி காத்திருக்கிறார்கள், மூத்தவரே” என்றான். கர்ணன் “ஆம்” என்றபின் துச்சாதனனிடம் “படையமைவை வகுப்பது யார்?” என்று கேட்டான்.
துச்சாதனன் “அஸ்வத்தாமர் படை அமைவுகளை வகுக்கிறார். இறுதிப் படைசூழ்கையை அவையில் சொல்லாடி செம்மை செய்துகொள்கிறோம். பெரும்பாலும் அஸ்வத்தாமரும் ஜயத்ரதரும் இணைந்து படையை நடத்துகிறார்கள். துரோணரின் எண்ணத்தையும் தெரிந்துகொள்கிறோம்” என்றான். கர்ணன் “நூல்களில் கண்டபடி அமைக்கிறார்” என்றபடி நடந்தான். துச்சாதனன் அருகே நடந்தபடி “தாங்கள் சொல்வது விளங்கவில்லை, மூத்தவரே” என்றான். “மிகச் சரியாக படைநூல்கள் கூறும்படி அமைக்கப்பட்டுள்ளன இச்சூழ்கைகள். ஆனால் நூல்களில் இல்லாத ஒன்று எப்போதும் படைகளில் நிகழும். அதுவே போரை வடிவமைக்கும்” என்று கர்ணன் சொன்னான்.
“அஸ்வத்தாமர் ஒவ்வொன்றையும் எண்ணி இயற்றுபவர்” என்று துச்சாதனன் சொன்னான். “ஆம். ஆனால் முதல்நாள் படைகள் இங்கு அமைந்ததுமே ஒவ்வொரு பகுதிக்கும் சென்று நோக்கி இங்குள்ள படைகளின் இயல்பை உணர்ந்து படையமைவை அமைத்திருக்கவேண்டும். நாளை இங்கிருந்து எவ்வண்ணம் படைகள் எழுமென்பதை இன்று இங்கு படைகள் அமைந்திருக்கும் முறையிலிருந்தே என்னால் கணிக்க முடிகிறது” என்றபின் “அவர் நூல்கள் கூறியபடி வேல்படை விற்படை யானை குதிரைப் படைகளை முறையாக கலந்து அமைக்கிறார். அது போதாது” என்றான் கர்ணன்.
படைகளை பார்த்தபடி கர்ணன் தொடர்ந்தான். “படைகளின் குலங்களுக்கும் நாடுகளுக்கும் ஏற்ப அவற்றின் இயல்புகளும் அமைந்துள்ளன. அவ்வியல்பும் கருத்தில் கொள்ளப்படவேண்டும். சிற்றரசர்கள் மற்றும் நிஷாத குடிகளிலிருந்து உருவானவர்களின் படைகள் அருகருகே அமையலாகாது. அவற்றுக்கு நடுவே தொல்குடி ஷத்ரியர்களின் படைகளும் அமைந்திருக்கவேண்டும். நிஷாத படைப்பிரிவுகள் நேரடியாக ஒன்றுக்கொன்று தொடர்புகொள்ளவும் களத்தில் ஒற்றைப்படையென இணையவும் ஒருபோதும் வாய்ப்பளிக்கலாகாது.”
கர்ணனுடன் சென்ற சுபாகு அவன் சொல்வதை புரிந்துகொண்டு திரும்பிப் பார்த்தபின் “மெய்தான். பலமுறை களத்தில் அவர்கள் ஒற்றைத்திரளென்றாகி திரும்பி ஓடியிருக்கிறார்கள்” என்றான். கர்ணன் “அச்சம் எளிதில் பரவக்கூடியது. களத்தில் திகழும் இரு விசைகள் அச்சமும் ஆணவமும். அச்சமே அடித்தளம். அதை தாங்கி தடுப்பது வீரனின் ஆணவம். ஆணவம் தொற்றிக்கொள்வது அல்ல. அதை உடல்மொழியாக, அடையாளங்களாக, போர்க்கூச்சல்களாக மாற்றிக்கொள்ளவேண்டும். ஷத்ரியர் நெடுங்காலமாக அதை செய்து வருகிறார்கள்” என்றான்.
துச்சாதனன் “மெய்தான். நிஷாதர்களும் கிராதர்களும் எளிதில் அஞ்சிவிடுகிறார்கள். இறப்பதற்கு அவர்களுக்கு தயக்கமில்லை. ஆயினும் ஏன் அஞ்சுகிறார்கள் என்று நான் எண்ணியதுண்டு. எங்கோ சிலர் அஞ்சினால் அவர்கள் அச்சக்குரலெழுப்புகிறார்கள். அதை கேட்டு அறியாமலேயே பிறரும் பின்திரும்பி ஓடத் தொடங்குகிறார்கள்” என்றான். சுபாகு “மான்கூட்டங்கள் போல அச்சத்தை ஓர் காவலாக கொண்டிருக்கிறார்கள். அசைவுகளினூடாக அதை பிறருக்கும் பரப்புகிறார்கள்” என்றான்.
மீசையை நீவியபடி கர்ணன் சொன்னான் “தொல்குடிகள் திரும்பி ஓடுவது அச்சத்தால் மட்டும் அல்ல. அனைத்துக்கும் மேலாக அவர்கள் தங்கள் குலம் நீடிக்கவேண்டும் என்பதையே கருதுகிறார்கள். போரில் முற்றழியலாகாது என கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள்.” சுபாகு ஏதோ சொல்ல முகக்குறிகொள்ள கர்ணன் தொடர்ந்தான். “ஆனால் ஷத்ரியர் முற்றழிவதற்கென்றே படைக்கப்பட்டவர்கள். தோற்றுமடங்குவதைவிட முற்றழிவதே மேல் என பயிற்றுவிக்கப்பட்டவர்கள். ஏனென்றால் தங்கள் குடியின் நான்கு கைகளில் ஒன்றே தாங்கள் என அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அவர்கள் அழிந்தாலும் அவர்களின் குடி அழியாது. வைசியர்களில் இருந்தும் சூத்திரர்களில் இருந்தும் அவர்களின் குடி ஷத்ரியர்களை உருவாக்கிக்கொள்ள முடியும். அவ்வாறு முன்னரும் நடந்துள்ளது.”
சுபாகு “முதலைபோல கைகால்கள் மீண்டும் முளைக்கும்போலும்” என்றான். கர்ணன் சிரித்தான். துச்சாதனன் “ஷத்ரியர்கள் அச்சத்தை மறைக்கக் கற்றவர்கள்” என்று சிரித்தான். கர்ணனும் சிரித்து “மெய்தான். பின்னடைகையில் அதை ஒரு போர்சூழ்ச்சியாக எண்ணிக்கொள்ளவும், அவ்வாறே குரலெழுப்பிக் கொள்ளவும் அவர்களால் இயலும்” என்றான். தாங்கள் அந்தச் சிரிப்பினூடாக கர்ணனின் வருகையை கொண்டாடிக்கொண்டிருப்பதாக துச்சாதனன் உணர்ந்தான். “தாங்கள் ஆணையிடுங்கள், மூத்தவரே! படையெழுகை நிகழ்வதற்குள் படையமைப்பை மாற்றிவிடலாம்” என்றபடி சுபாகு கர்ணனை தொடர்ந்தான். கர்ணன் “இன்னும் இப்படைகளை நடத்தும் பொறுப்பு எனக்கு அளிக்கப்படவில்லை. ஆகவே நான் ஆணையிடுவது முறையாக இருக்காது” என்றான்.
துச்சாதனன் “தாங்கள் எனக்கு ஆணையிடலாம். நான் அவ்வாணையை நிறைவேற்றுகையில் எவரும் என்னை தடுக்க இயலாது. நான் அஸ்தினபுரி அரசனின் செம்பாதி” என்றான். கர்ணன் மீண்டும் நகைத்து “எவருக்கும் அதில் ஐயமும் இருக்காது. ஆனால் துரோணர் மெய்யை அறிவார்” என்றான். துச்சாதனன் சில கணங்கள் அவனை கூர்ந்து பார்த்துவிட்டு “மெய்தான்” என்றபின் “விந்தையாக உள்ளது, மூத்தவரே. இத்தனை ஆண்டுகளில் பாரதவர்ஷத்தில் விழுந்த அனைத்து முடிச்சுகளும் இந்தப் போர்க்களத்தில் சிலநாட்களில் அவிழவிருக்கின்றன. பல அறுந்துகொண்டிருக்கின்றன” என்றான். தலையை அசைத்து “தன் விற்களத்திலிருந்து உங்களை துரோணர் வெளியேற்றிய காட்சி இன்னும் என் விழிகளில் இருக்கிறது. இன்று முதன்மை வீரராக உங்களை அவர் தன் படையில் நிறுத்தப்போகிறார்” என்றான்.
கர்ணன் “இன்னும் அம்முடிவு எட்டப்படவில்லை” என்றான். துச்சாதனன் “எவருக்கும் வேறு வழியில்லை, மூத்தவரே. தாங்கள் இன்னும் போர்க்களத்தை பார்க்கவில்லை. போர்க்களத்தில் எழும் அறியா விசைகளின் நெறிகளால் நாம் தோல்வி காண்கிறோம் எனில் அதுகூட புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால் இங்கே ஒருமுறைகூட நாம் முழுத் தோல்வியை அடையவில்லை. நம்மிடம் நிகரற்ற வீரர்கள் இருக்கிறார்கள். ஆயினும் எங்கள் அனைவருக்கும் தெரிந்துள்ளது, இந்தப் பெருங்கட்டமைப்பு அடித்தளம் ஆற்றலிழந்து சரிந்துகொண்டிருக்கிறது என. அது பீஷ்ம பிதாமகர் களம்படுவது போன்ற பெருநிகழ்வில் மட்டும் தெரிவதில்லை. ஒவ்வொரு சிறுநிகழ்விலும் வெளிப்படுகிறது. அடிசரிந்து நிற்கும் கல்ஆலயத்தின் ஒவ்வொரு தூணும் சற்றேனும் நிலை மாறியிருப்பதுபோல” என்றான்.
கர்ணன் துச்சாதனனின் தோளில் கையை வைத்து “களத்திற்கு வந்தபின் பேசக் கற்றுக்கொண்டாய், இளையோனே” என்றான். துச்சாதனன் நகைத்து “இங்கே போருக்கு நிகராகவே ஒவ்வொரு நாளும் சொற்களமும் நிகழ்கிறது” என்றான்.
துரியோதனனின் பாடிவீட்டின் முன் நின்றிருந்த துச்சலனும் துர்முகனும் அங்கிருந்து கர்ணனை நோக்கி வந்தனர். தலைவணங்கி “தங்களுக்காக மூத்தவர் அவைகூடி காத்திருக்கிறார். இளைப்பாறிச் செல்வதற்கு பொழுதில்லை, மூத்தவரே” என்றான் துர்முகன். அப்போதுதான் துச்சாதனன் ஒன்றை உணர்ந்தான். விடிவதற்கு இன்னும் ஒரு நாழிகைக்கு மேலிருக்கும். அப்படியென்றால் சற்று முன் கர்ணன் குருக்ஷேத்ரத்திற்குள் புகுந்தபோது அவன் கண்ட ஒளி எது? வானிலிருந்து புலரியின் பெய்யொளி என்று அப்போது தோன்றியது. முகில் ஒன்று சற்றே விலகி அவ்வொளியை பாய்ச்சியது என. அது விழிமயக்கா? அன்றி எங்கேனும் நீர்ப்பரப்பு பந்த ஒளியை எதிர்பாய்ச்சியதா? ஆனால் அவனுக்கு முற்றிலும் தெளிவாக இருந்தது, அது முதற்புலரியின் பொன்னொளியேதான்.
அவன் திரும்பி கர்ணனை பார்த்தான். கர்ணன் அப்போது சற்றே நிலையழிந்து உள்ளோடும் எண்ணங்களுக்குள் அளைந்துகொண்டிருப்பது தெரிந்தது. சுட்டுவிரல் காற்றில் சுழித்து ஓடும் நீரில் எதையோ எழுதிப்பார்ப்பவன்போல. தலையை மெல்ல அசைத்து எதையோ மறுத்தான். பின்பு விழிதூக்கி தொலைவு வரை விரிந்திருந்த படைவெளியையும் அதன்மேல் கவிந்திருந்த மெல்லொளி ஊறிப்பரவிய வானையும் பார்த்தான். துச்சலன் உள்ளே சென்று கர்ணனின் வரவறிவித்து மீண்டான். இருவரும் வருக என்று கைகாட்டினான். கர்ணன் நீள் காலடி எடுத்து வைத்து உள்ளே நுழைந்தான்.
துச்சாதனன் உடன் சென்றபடி மீண்டும் கர்ணனை நிமிர்ந்து நோக்கினான். குருக்ஷேத்ரத்திற்குள் நுழைந்த கர்ணனின் ஒளி விழிக்குள் எழுந்தது. செஞ்சுடர் விரிந்த புலரிக் கதிரவன்போல. மெய்யாகவே அது உளமயக்கோ விழிமயக்கோ அல்ல. இவர் யார்? இது மானுட உயிர். பிணியும் துயர் சாக்காடும் கொண்டது. அது பிறிதொன்று. விறகு எரிகையில் எழும் விந்தையான கிளர்ச்சியொன்றை மிக இளமையில் அவன் அடைந்தான். விறகுக்குள்ளிருந்து இத்தனை ஒளி மிக்க ஒன்று எப்படி பீறிட்டெழுகிறதென்று வியப்பான். காய்ந்து மண்ணில் கிடக்கும் ஒவ்வொரு விறகுக்குள்ளும் பேரழகும் ஆற்றலும் கொண்ட அது உறைகிறதா என்ன? அனலுறையாத பொருளென்று எதுவும் இல்லை, இங்குள்ள பொருளனைத்தும் அனல் கொண்ட நிலைவடிவங்களே என்று பின்னர் கிருபர் அவனுக்கு கல்விச்சாலையில் சொன்னார்.
கர்ணன் அவைபுகுந்ததும் வாழ்த்தொலிகள் எழுந்தன. அனைவரும் எழுந்து நின்று “அங்கநாட்டு அரசருக்கு இன்வரவு!” என்று முகமன் கூறினர். அரியணையிலிருந்த துரியோதனன் இரு கைகளையும் விரித்தபடி முன்னால் வந்தான். கர்ணன் கைவிரித்து அருகணைய இருவரும் தோள்தழுவிக்கொண்டனர். துரியோதனன் சற்று விம்முவதுபோல் துச்சாதனனுக்கு தோன்றியது. தோள்களைத் தட்டியபடி பெருமூச்சுடன் இருவரும் பிரிந்தனர். துரியோதனனின் விழிகள் நீரணிந்திருப்பதை தொலைவிலேயே துச்சாதனன் கண்டான். அக்கணமே உளம் விம்மி அவனும் விழி நனைந்தான்.
கர்ணன் சென்று துரோணரை கால்தொட்டு சென்னி சூடினான். துரோணர் அமர்ந்தபடி இடக்கையை அவன் தலைக்குமேல் நீட்டி தொடாமல் வாழ்த்துச்சொல்லை முணுமுணுத்தார். துச்சாதனன் இயல்பாக விழிதிருப்பி அங்கிருந்தவர்களை பார்த்தான். அனைவருமே உணர்வெழுச்சி கொண்டிருப்பதை அறியமுடிந்தது. அஸ்வத்தாமனும் ஜயத்ரதனும்கூட விழிகளில் நீர்மை மின்ன நின்றிருந்தனர். இயல்பாக சல்யரை பார்த்த துச்சாதனன் திகைத்தான். அவர் முகம் கடுஞ்சினம் கொண்டதுபோல இழுபட்டிருந்தது. இரு கைகளையும் இறுக முஷ்டி சுருட்டி தொடையோடு சேர்த்து மெல்ல தட்டிக்கொண்டிருந்தார்.
கர்ணன் திரும்பி அவரை அணுகி குனிந்து அவர் கால்களைத் தொட்டு சென்னி சூடியபோது அந்த முகம் நெகிழ்ந்து கடுந்துயர் கொண்டதுபோல் மாறியது. இரு கைகளையும் அவன் தலைமேல் வைத்து நடுங்கும் உதடுகளுடன் வாழ்த்து சொன்னார். அவன் எழுந்ததும் அவன் இரு கைகளையும் பற்றிக்கொண்டு அசைத்து மேலும் மேலும் வாழ்த்து சொன்னார். கர்ணனின் முகத்தில் தத்தளிப்பு தெரிந்தது. எதையோ சொல்ல விழைந்து தயங்குபவன்போல. அல்லது அவைச்சிறுமை கொள்பவன்போல. அக்கணமே அங்கிருந்து விலகிச் சென்றுவிட விழைபவன்போல.
கர்ணன் சகுனியை நோக்கி சென்று குனிந்து தாள்தொட்டு வணங்கினான். அவர் தலையில் கைவைத்து வாழ்த்தினார். அஸ்வத்தாமன் கர்ணன் அருகே வந்து வணங்கி கர்ணன் அமரவேண்டிய பீடத்தை காட்டினான். கர்ணன் அங்கு அமர்ந்த பின்னர்தான் துச்சாதனன் சிறிய உளநடுக்குடன் உணர்ந்தான், அது பீஷ்மர் முன்பு அமர்ந்திருந்த பீடம். அதில் எப்போதும் விரிக்கப்பட்டிருக்கும் செம்பழுப்பு மரவுரி அகற்றப்பட்டு இளஞ்செந்நிற விரிப்பு இடப்பட்டிருந்தது. கர்ணன் அதில் அமர்ந்து தன் கால்களை நீட்டிக்கொண்டான். அவ்வசைவு ஏன் அந்த இருக்கையை அவனுக்காக அஸ்வத்தாமன் தெரிந்தெடுத்தான் என்பதை காட்டியது. அங்கு போடப்பட்டிருந்த இருக்கைகளிலேயே அதுதான் உயரமானது. அந்த அளவுகொண்ட வேறு இருக்கை அங்கே இல்லை.
பீஷ்மருக்கு நிகரான உயரம் கொண்ட உடல் கர்ணனுடையது. பீஷ்மர் தன் மெல்லிய கால்களை ஒன்றின்மேல் ஒன்று வைத்து கோத்து அப்பீடத்தில் வலமிருந்து இடமாக சற்றே சாய்ந்ததுபோல் அமர்வார். கர்ணன் இடமிருந்து வலமாக உடலை சரித்து, இரு கால்களையும் நன்கு நீட்டி, கைப்பிடிகளில் கைகளை தளர பதியவைத்து, விழிகள் நிலம் நோக்கி சரிந்திருக்க, குழல்கற்றைகள் தோளிலும் நெற்றியிலும் நிழல் வீழ்த்தி சுருள்கொண்டு நின்றிருக்க அமர்ந்திருந்தான். சில கணங்களிலேயே நெடுங்காலமாக அங்கு அமர்ந்திருப்பவன்போல் தோன்றினான். குருக்ஷேத்ரத்தின் அனைத்துச் சொல்லவைகளிலும் அவன் கலந்துகொண்டிருப்பதுபோல. எப்போதும் அவனை அங்கே உணர்ந்துகொண்டுதான் இருந்தோம் என்று துச்சாதனன் எண்ணினான்.
சகுனி எழுந்து “நாம் நம் படைநிலைமையை அங்கருக்கு முழுதாக விளக்கி அவரை இங்கு அழைத்து வந்திருக்கிறோம் என்று எண்ணுகின்றேன். நாம் போர்வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கையில் ஒரு பிழையென பிதாமகரின் களவீழ்ச்சி நிகழ்ந்துள்ளது. இப்போரை பத்து நாட்களும் முதன்மைகொண்டு நடத்தியவர் அவர். பாண்டவப் படைகளின் பெரும்பகுதியை அவர் ஒருவரே அழித்தார். நமது படைசூழ்கைகள் முழுக்கவே அவரை முன்னிறுத்தியே அமைக்கப்பட்டன. களத்தில் நம் அலகுக் கூரென அவர் இருந்தார். இப்போது அவருக்கு நிகரான வீரரொருவரை நிறுத்தி நம் படையை அமைக்கவேண்டிய நிலையிலிருக்கிறோம். அவர் வீழ்ந்தமையால் நம் படையில் ஏற்பட்டிருக்கும் தயக்கத்தை போக்க வேண்டியது முதற்தேவையாக உள்ளது. அங்கநாட்டரசர் கர்ணன் அதற்கு முற்றிலும் தகுதியானவர். ஆகவேதான் அவரை இங்கே அழைத்து வந்துள்ளோம்” என்றார்.
விழிதாழ்த்தி உடல் தளர்த்தி அமர்ந்திருந்த கர்ணன் அதை கேட்டவன்போலவே தெரியவில்லை. துரியோதனன் “அனைத்தையும் இளையோர் சொல்லியிருப்பார்கள், அங்கரே. ஆசிரியர் துரோணர் நமக்கு படைத்தலைமை ஏற்று நடத்துவார். அங்கப் படைகளுடன் முதன்மை கொண்டு இப்போரை நிகழ்த்தவேண்டியது உங்கள் பொறுப்பு” என்றான். கர்ணன் எழுந்து தலைவணங்கி “மறுசொல் இல்லை, உங்கள் விழைவெதுவோ அது ஆணையாக கொள்ளப்படும்” என்றான். பதற்றத்துடன் கைகளை நீட்டியபடி எழுந்து “இல்லை, இது எவ்வகையிலும் ஆணை அல்ல. உங்கள் நண்பனின் கோரிக்கை. உங்களிடம் காவல்கோருபவனின் பணிவுச்சொல்” என்றான் துரியோதனன்.
அவையை நோக்கி ஆழ்ந்த தணிந்த குரலில் கர்ணன் சொன்னான் “அவைக்கு இது என் சொல். எந்நிலையிலும் என் வில்லுடன் களம்நிற்பேன், எனக்கென எதுவும் கருதமாட்டேன். வெற்றியை ஈட்டி கௌரவ அரசருக்கு அளிப்பேன். அதை எதிர்க்கும் எவரையும் கொன்று வீழ்த்துவேன். வெற்றியன்றி எதற்கும் ஒப்பமாட்டேன். வென்றபின் அன்றி இக்களம்விட்டு மீளமாட்டேன். அறிக என் தெய்வங்கள்!” துச்சாதனன் மெய்ப்புகொண்டான். அவையிலிருந்தவர்கள் தங்கள் படைக்கலங்களைத் தூக்கி “ஆம், அவ்வாறே ஆகுக!” என்று வாழ்த்தினர். கர்ணன் தன் கையிலிருந்த உடைவாளைத் தூக்கி “வெற்றிவேல்! வீரவேல்!” என்றான். அவையின் குரல் வெடிப்புற்று பெருகி எழுந்தது.
அவை மெல்ல அடங்க ஜயத்ரதன் எழுந்து “இன்னும் ஒன்றுள்ளது, அதை நானே சொல்லவேண்டும் என தோன்றுகிறது” என்றான். “இது ஷத்ரியக் குடியவை. இங்கு முன்னரே சிலவற்றை தெளிவுறப் பேசிவிடுவது நன்று. இப்போர் முடிந்த பிறகு அங்க நாட்டரசர் அடையப்போவதென்ன? நட்பின் பொருட்டு அவர் வந்து இங்கு போர்புரியப்போகிறார் எனினும் போருக்குப் பின் அங்கத்தை ஷத்ரிய அரசுகளில் முதன்மையானதென்று அஸ்தினபுரி கொள்ளவேண்டுமென்றும், வென்றமையும் பேரவையில் அத்தனை ஷத்ரிய அரசர்களும் தங்களுக்கு மேல் கோன்மை கொண்டதாக அங்கத்தை கருதவேண்டுமென்றும் நான் எண்ணுகின்றேன்.”
பிரக்ஜ்யோதிஷ மன்னர் பகதத்தர் சீற்றத்துடன் எழுந்து “அது எங்ஙனம்? குடிப்பிறப்பு என ஒன்றுள்ளது…” என்று தொடங்க ஜயத்ரதன் கைவீசி நிறுத்தி “இப்போது களம் நின்று உங்களுக்கு வெற்றியை ஈட்டித்தருவதற்கு குடிப்பிறப்பு தடையாகவில்லை எனில் நாளை அவைமுதன்மைக்கும் அது ஒருபோதும் தடையாக இருக்காது, பகதத்தரே” என்று உரக்க சொன்னான். துரோணர் “நாம் இப்போது படைவெற்றி குறித்து பேசுவோம். பிற பின்பு” என்றார். “அல்ல, ஷத்ரியர்களின் அவைகளில் அங்கர் எவ்வாறு நடத்தப்பட்டார் என்பதை அறிவேன். இந்தப் படைசூழ்கை தொடங்குகையிலேயே சிறுமை செய்து வெளியேற்றப்பட்ட அவரை இன்று அடிபணிந்து இந்த அவைக்கு கொண்டுவந்திருக்கிறோம். அவருக்கு அவை முதன்மை அளிப்போம் எனும் ஒரு சொல் இங்குள்ள அவையிலிருந்து எழுவதை நாம் செய்யும் பிழையீடாகவும் கைமாறாகவும் கொள்வோம்” என்று ஜயத்ரதன் உரக்க கூவினான்.
அவை அமைதியாக இருந்தது. துரோணர் கசப்பு தெரியும் முகத்துடன் முனகலாக “அதை இப்போது பேசினால் வெறும் உளப்பிளவே உருவாகும்” என்றார். ஜயத்ரதன் “பேசிமுடித்தால் உளப்பிளவு இல்லாதாகும். நான் கூறுவதொன்றே. போர்வெற்றிக்குப் பின் அஸ்தினபுரிக்கு இணையான அவைமுதன்மை எந்த அவையிலும் அங்கத்திற்கு அளிக்கப்படவேண்டும். அங்கநாட்டரசர் கர்ணருக்கும் அவரது கொடிவழியினருக்கும் ஷத்ரியக்குடி என்றும் வாட்கடன் பட்டுள்ளதென்பதை இந்த அவையிலேயே நாம் அறிவிக்கவேண்டும்” என்றான்.
பிரக்ஜ்யோதிஷ மன்னர் பகதத்தர் “அதை இங்கு அறிவிக்க இயலாது. இது ஷத்ரிய அவை அல்ல” என்று சொல்ல ஏளனத்துடன் திரும்பிய ஜயத்ரதன் “இது எஞ்சிய ஷத்ரியர்களின் அவை. இங்குள்ளோர்தான் இனி ஷத்ரியர்களில் எஞ்சியிருப்பவர்கள்” என்றான். அவர் மேலும் ஏதோ சொல்ல கையசைக்க “ஒன்று செய்வோம். கர்ணருக்கு அவைமுதன்மை அளிக்க முடியாது என்று சொல்லும் ஷத்ரியர்கள் இப்போதே அவைவிட்டு நீங்கலாம் என்று அறிவிப்போம். எஞ்சுபவர்களைக் கொண்டு போர் நடத்துவோம். இங்கு அவர் ஒருவர் அன்றி எவரும் படைநிற்பதற்கு முதன்மையானவர் அல்ல” என்றான் ஜயத்ரதன்.
சல்யர் சீற்றத்துடன் எழுந்து “இங்கென்ன கௌரவப் படையை பிளப்பதற்கா நாம் வந்துள்ளோம்?” என்றார். “அவ்வாறு படை பிளக்குமென்றால் அது படைகளின் பிழை. அப்பிளவுக்கு ஒரு வாய்ப்பிருக்குமெனில் அதன் மேல் எதைக்கொண்டு பூசினாலும் நிற்கப்போவதில்லை” என்று ஜயத்ரதன் சொன்னான். துரியோதனன் “எனக்கு மாற்றுக் கருத்தில்லை. இவ்வெற்றியின் பயனாக நமது கோல் நின்றிருக்கும் அனைத்து அவைகளிலும் அங்கம் குடிமுதன்மையை அடையவேண்டுமென்றே நான் விழைகிறேன். அஸ்தினபுரிக்கும் ஒரு படி மேல் என அங்கம் அமையுமென்றாலும் எனக்கு மாற்றுச்சொல் இல்லை” என்றான்.
சல்யர் “எனில் அதை நான் விழையவில்லை. அது எவ்வகையிலும் இயல்வதல்ல” என்றார். “அரசே, இந்தப் போருக்குப் பின் வெல்பவர்கள் எவராயினும் ஆற்றல் குன்றியவராகவே இருப்பர். ஷத்ரிய குடிகள் ஒன்றென நின்றாலொழிய நிஷாதர்களும் அரக்கர்களும் அசுரர்களும் எழுந்து வந்தால் எதிர்க்க இயலாது. அன்று அவர்களை ஒன்றென நிறுத்துவது குடித்தூய்மையாகவே இருக்க இயலும். இப்போது இவ்வண்ணம் ஒரு பூசலுக்கான வாய்ப்பை உருவாக்கி அளித்தோமெனில் அது ஒவ்வொரு நாளும் வளர்வதாக அமையும்” என்றார். பகதத்தர் “ஆம், நாம் படைகொண்டு எழுந்ததே குடித்தூய்மை வெல்லவேண்டும் என்று. குடிமேன்மையை பலியிட்டு அப்போரில் வெல்லவேண்டும் என்று இன்று சொல்கிறீர்கள்… மடமை!” என்றார்.
அவை அமைதியாக இருப்பதைக் கண்டு துச்சாதனன் திகைப்புடன் முகங்களை மாறி மாறி நோக்கினான். அவர்கள் அனைவருமே பகதத்தரின் நோக்கு கொண்டிருப்பதாக தோன்றியது. அவன் துரியோதனனை பார்த்தான். துரியோதனன் ஏதோ சொல்ல எழுவதற்குள் கர்ணன் திரும்பி அவையினரை நோக்கி உரத்த குரலில் சொன்னான். “அவையினரே, நான் கோரவில்லை. இப்போருக்குப் பின் அனைத்து ஷத்ரிய அவைகளிலிருந்தும் ஒரு சொல்லும் எஞ்சாமல் கடந்து செல்வதென்றால்கூட எனக்கு மாற்று எண்ணமில்லை.” திரும்பி பகதத்தரிடம் “பகதத்தரே, இன்றுவரை கொடுப்பவனாகவே நின்றுள்ளேன். கொள்ளும்பொருட்டு எங்கும் கைநீட்டப்போவதில்லை” என்றான்.
துரியோதனன் “என் முடிவை இந்த அவையில் சொல்கிறேன்” என்று தொடங்க “வேண்டியதில்லை. இந்த அவையில் இப்பேச்சு இங்கேயே முடிவு கொள்க! நாம் போரைப்பற்றி மட்டும் பேசுவோம். நமக்கு இனி பொழுதில்லை” என்றான் கர்ணன். சகுனி எழுந்து “ஆம், அதையே நானும் எண்ணினேன். நமக்கு இன்னும் பல அவைகள் உள்ளன. இப்பேச்சை இங்கே நிறைவு செய்வோம்” என்றார். கர்ணன் தலைவணங்கி அமர்ந்தான். அவை நீள்மூச்சுகள் எழ மெல்ல இளகியமைவதை துச்சாதனன் கண்டான். சுபாகு அவன் தோளைத் தொட்டு “நன்று, இங்கே இதை பேசிமுடிக்க இயலாது” என்றான். துச்சாதனன் தலையசைத்தான்.