கார்கடல் - 14

ele1கர்ணனை வரவேற்க கௌரவப் படைமுகப்பிற்கு தம்பியர் இருவர் சூழ துச்சாதனனே நேரில் வந்திருந்தான். காவலரணுக்கருகே மெல்லிய மூங்கில் கம்பத்தில் உயர்ந்து பறந்த அமுதகலசக் கொடியை பற்றியபடி வீரனொருவன் நின்றிருக்க அவனுக்குப் பின்னால் படையிசை முழக்கும் சூதர் எழுவரும் அவர்களுக்குப் பின்னால் அஸ்தினபுரியின் படைத்தலைவர்கள் மூவரும் காத்து நின்றிருந்தார்கள். சமனும் சகனும் கைகளைக் கட்டி இருபுறமும் நின்றிருக்க ஓர் அடி முன்னால் அவன் நிமிர்ந்த உடலுடன் தோளில் விழுந்த கூந்தல் புலரிக்காற்றில் அலையடிக்க நோக்கி நின்றிருந்தான்.

தொலைவில் கொம்பொலி எழுந்தது. அது கௌரவப்படை எல்லையின் காவலரணின் அறிவிப்பு. பின்னர் அவனுக்குப் பின்னால் படைவிளிம்பிலிருந்த காவலரணில் கொம்பொலி எழுந்தது. கொம்பொலிகள் ஒன்றிலிருந்து ஒன்றென கடந்துசென்றன. ‘இந்நேரம் மூத்தவர் அறிந்திருப்பார்’ என துச்சாதனன் நினைத்துக்கொண்டான். அங்கநாட்டின் படைமுகப்பிலிருந்து அவர்களின் வருகையை அறிவிக்கும் கொம்போசை முழங்கியது. கௌரவப் படைகளின் கொம்போசை எழுந்து அவர்களை வரவேற்றது. அங்கநாட்டு படையிலிருந்து மறுவிளி எழுந்து அரசர் அணுகிக்கொண்டிருப்பதை தெரிவித்தது. யானைக்கூட்டங்களென இரு படைமுகப்புகளும் உரையாடிக்கொண்டன.

குறுங்காட்டை நோக்கியபடி துச்சாதனன் நின்றான். விழிகள் இருளை நோக்கி நோக்கி கூர்கொண்டன. முகிலொளியில் இலைகளையும் சிறுபறவைகளையும் காணமுடிந்தது. அவற்றினூடாக அங்கநாட்டின் கதிரோன் கொடி வானில் ஒரு பறவைபோல் சிறகடிப்பதை துச்சாதனன் பார்த்தான். அது கீழிருந்து வந்த பந்தங்களின் ஒளியை பெற்றிருந்தது. அவன் அணுகி வரும் அந்த ஒற்றைச் சிறகை விழிகூட்டாது நோக்கிக்கொண்டிருந்தான். சமன் “அணுகிவிட்டார்கள்” என்றான். அந்த மென்சொல் அனைவருக்கும் கேட்டது. அங்கிருந்தோர் ஓர் அடி முன்வைத்தனர். சிலர் ஆடைகளை சீரமைத்தனர். மூச்சொலிகளும் அணியொலிகளும் எழுந்தன.

கதிர்க்கொடிக்குப் பின்னால் கர்ணனின் யானைச்சங்கிலி பொறித்த போர்க்கொடி தெரியத் தொடங்கியதும் துச்சாதனன் அறியாது மெய்ப்பு கொண்டான். “வந்துவிட்டார்!” என்று அவனுக்கு வலப்பக்கம் நின்ற சமன் சொன்னான். “ஆம்” என்று சகன் பெருமூச்சின் ஒலியில் சொன்னான். “அவர் முன்னரே வந்திருக்கலாம்” என்றான் சமன். “இந்த ஊழ் விளையாட்டில் எவரும் எதையும் முடிவெடுப்பதில்லை, இளையோனே” என்று துச்சாதனன் திரும்பாமலேயே சொன்னான்.

மீண்டும் ஒரு கொம்பொலி எழுந்ததும் துச்சாதனன் கையைத் தூக்கி அசைத்தான். முகப்பில் நின்றிருந்த அமுதகலசக்கொடி ஏந்திய வீரன் நடந்து முன்னால் சென்றான். அவனைத் தொடர்ந்து போர்ப்பறைகளையும் முழவுகளையும் கொம்புகளையும் ஒத்திசைவுடன் முழக்கியபடி படையிசையினர் சென்றனர். கவச உடைகளில் பந்தங்களின் ஒளிகள் நெளிந்தாட எரிவடிவு எடுத்தவர்போல் படைத்தலைவர்கள் தொடர்ந்து நடந்தனர். கவசங்கள் ஒன்றுடன் ஒன்று உரசி ஒலிக்க துச்சாதனன் தம்பியர் இருவரும் இருபுறமும் அரை அடி பின்னால் நடந்துவர முன்னால் சென்றான்.

குறுங்காட்டின் விளிம்பை அடைந்து அவர்கள் காத்து நிற்க அப்பாலிருந்து கதிர்க்கொடி இலைத்தழைப்புகளுக்கு மேல் எழுந்து அணுகியது. கவச உடையணிந்த கொடிவீரனின் உடலை பார்த்த துச்சாதனன் சமனிடம் “பொழுதென்ன ஆகிறது?” என்றான். “வெள்ளி முளைத்துவிட்டது. இன்னும் ஒரு நாழிகைக்குள் ஒளி எழும்” என்றான் சமன். அங்கநாட்டின் முரசுக்குழுவும் தொடர்ந்து கவச உடையணிந்த பதினெட்டு வீரர்களும் வந்தனர். கர்ணனின் கொடி தெரிந்தது. பெருஞ்சங்கம் ஒலித்து அரசன் அணுகுவதை அறிவித்தது. இலைகளுக்கு அப்பால் அனலாட்டம் தெரிந்தது. ஒருகணம் காட்டெரி என உள்ளம் எழ மறுகணம் அது என்ன என்று நினைவு அறிவித்தது. அது கர்ணனின் பொற்தேர்.

அந்தத் தேரை துச்சாதனன் முன்பு பலமுறை பார்த்திருந்தான். அது முற்றிலும் வெள்ளியாலும் பொன்னாலும் கவசமிடப்பட்ட தேர். அணியூர்வலத்திற்கென பொற்தேர் அமைப்பதை பாரதவர்ஷத்தின் அரசர்கள் சிலர் தங்கள் குலப்பெருமைக்கென கொண்டதுண்டு. போர்த்தேரை பொன்னால் மூடுவதைப்பற்றி துச்சாதனன் கேள்விப்பட்டதே இல்லை. இளைய யாதவரின் பொற்தேர் சூதர்களால் பாடப்பட்டுக்கொண்டிருந்தது. பின்னர் இந்திரப்பிரஸ்தத்தின் அரசி திரௌபதி பொற்தேர் ஒன்றை உருவாக்கினாள் என்றும் அது துவாரகையின் பொற்தேரைவிடப் பெரியது என்றும் சொல் பரவியது. அப்போதுதான் அங்கநாட்டில் கர்ணன் பாரதவர்ஷத்தில் எவரிடமும் இல்லாத தேர் ஒன்றை அமைப்பதைப்பற்றி செய்தி வந்தது.

அப்போது துரியோதனனின் தனியறையில் அவர்கள் சொல்லாடிக்கொண்டிருந்தனர். அமைச்சர் கனகர் ஒற்றர்செய்திகளை சுருக்கி உரைத்து ஆணைகளைப் பெற்றுக்கொண்ட பின் சற்றே தயங்கி “பிறிதொரு ஒற்றர் செய்தி, அரசே” என்றார். இரு நாழிகைப்பொழுதாக ஓலைகளை கேட்டும், செய்திகளை உசாவியும், ஆணையிட்டும் சலிப்புற்றிருந்த துரியோதனன் கால்களை நீட்டி கைகளை விரித்து அமர்ந்தபடியே சோம்பல் முறித்தான். கனகர் “இது அங்கநாட்டிலிருந்து… முதன்மைச் செய்தி அல்ல. ஆனால் எண்ணுவதற்குரியது. ஆகவே இப்போது இதை உரைக்கிறேன்” என்றார். “சொல்க!” என்று துரியோதனன் சொன்னான்.

கனகர் தயங்கி “இது ஒருவகையில் எல்லை மீறல் என்பதை அமைச்சனாக நான் சொல்லியே ஆகவேண்டும். அரசனிடம் இல்லாத அரியவை எதையும் குடிகள் கொண்டிருக்கலாகாது என்றும் அடையப்பெற்றால் அரசனுக்கு அறிவித்துவிட வேண்டும் என்றும் நெறியுள்ளது. அரசனிடம் இல்லாத அரும்பொருள் ஒன்று குடிகளிடம் இருக்குமென்றால் அது அரசன் அவர்களுக்கு அளித்த கொடையாகவே இருக்கவேண்டும்” என்றார். துரியோதனன் அவர் சொல்வதை சரியாக செவிகொள்ளவில்லை. ஏவலனிடம் மது கொண்டுவரும்படி கைகாட்டிவிட்டு “அதனாலென்ன?” என்றான். ஆனால் சுபாகு என்ன செய்தி என்பதை ஒருவாறு உய்த்துணர்ந்துகொண்டான். அவன் விழிகள் மாறுபட்டன. “அதை நாம் பிறகு பேசுவோம், அமைச்சரே” என்றான்.

துரியோதனன் உளக்கூர்கொண்டு “இப்போது பேசினால் என்ன? இப்போது வேறு உசாவல்கள் ஒன்றுமில்லையல்லவா? சொல்க!” என்றான். கனகர் “அரசே, அங்கநாட்டு அரசர் கர்ணன் தனக்கென பொற்தேர் ஒன்றை அமைத்துக்கொள்வதாக செய்தி வந்துள்ளது. பொன்னில் பொருளியற்றும் கலிங்கநாட்டுச் சிற்பிகள் நூற்றுவர் வந்து சம்பாபுரியில் குடியேறி இருக்கிறார்கள். சென்ற எட்டு மாதங்களாகவே இந்தத் தேரின் பணிகள் நடைபெறுகின்றன. ஆனால் ஏதோ நகைகள் வார்க்கப்படுவதாக நமது ஒற்றர்களும் மயங்கியிருக்கிறார்கள். தேர் பிறிதொரு இடத்தில் தனித்தனி மரச்சிற்பங்களாகவும் உறுப்புகளாகவும் செய்யப்பட்டது. நேற்று அந்தத் தேரின் முதல் வடிவை ஒருங்குகூட்டி நோக்கியிருக்கிறார்கள். அதில் பொற்தகடுகளும் வெள்ளிக்கம்பிளும் பொருத்தப்படுகின்றன. அதற்கான அளவெடுப்புகள் நிகழ்ந்துள்ளன” என்றார்.

“நன்று. அங்கு அவனுக்கு எப்படியோ பொழுதுபோகிறது” என்று துரியோதனன் சொன்னான். “ஆனால் அந்தப் பொற்தேரை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறார்? அதை தெருக்களில் ஓட்டிச்சென்றால் மீண்டும் தூய்மை செய்தெடுக்க பல நாட்களாகும். ஆண்டுக்கொருமுறை அணியூர்வலமாக அமர்ந்து செல்லலாம். குடிகள் வாழ்த்துவார்கள்” என்று துச்சாதனன் சொன்னான். உடனே நகைத்து “சூதர்களுக்காக நடிப்பதன்றி அரசர்களுக்கு வேறு பணி என்ன?” என்றான். கனகர் “அரசே, நம்மிடம் பொன்வேய்ந்த தேர் எதுவுமில்லை” என்றார். துரியோதனன் “நாமும் ஒன்று செய்யலாம் என்கிறீரா? பொன்னில் யானை ஒன்றை செய்யலாம். எனக்கு தேரிலூர்வது உவப்பல்ல” என்றான்.

“அவர் அஸ்தினபுரிக்கு கீழே முடிகொண்டிருப்பவர்” என்றார் கனகர். துரியோதனன் கண்களில் சினம் குடியேற “நமக்குக் கீழே அங்கநாடு உள்ளதென்று உமக்கு சொன்னவர் யார்? அங்கம் நமது நட்புநாடு. எனக்கு நிகரான அரியணை கொண்டவன் கர்ணன்” என்றான். “ஆம், அதை தாங்கள் பலமுறை சொல்லிவிட்டீர்கள்” என்று கனகர் சொன்னார். “ஆனால் அமைச்சனாக நான் எண்ணுவதை சொல்லியே ஆகவேண்டும். அரசே, நட்புநாடாயினும் தன்னிடம் இல்லாத அரும்பொருள் ஒன்றை பிற அரசர் கொண்டிருந்தார் என்றால் அதை சென்று வென்று வருவதே அரசரின் இயல்பாக இருக்கவேண்டும். சிம்மம் காட்டில் பிறிதொரு உறுமலை ஒப்பாது.”

துரியோதனன் “குடியவைகளில் எழும் அலர் ஒன்றை அமைச்சர்குரலென இங்கு வந்து சொல்ல வேண்டியதில்லை” என்றான். “ஆம், கர்ணன் பொற்தேர் வனைவான் என்றால் அவன் பொருளுடைமையில் என்னைவிட மேம்பட்டவன் என்று பொருள். ஒரு படி கீழிருப்பதில் எனக்கு எவ்விழிவும் இல்லை. மகிழ்கிறேன் என்றே கொள்க!” கனகர் “நீங்கள் சினந்தாலும் நான் முழுமையாக சொல்லிவிடவேண்டும். என் கடன் அது” என்றார். “அரசே, அரசனிடம் இல்லாத பொருள் குடிகளிடமோ துணைநாடுகளிடமோ இணைநாடுகளிடமோ இருக்கலாகாதென்று வகுத்தவர்கள் அரசியல் அறியாதவர்கள் அல்ல. செங்கோல் சூடி தழும்புகொண்ட கைகள் கொண்ட மூதாதையர் கூற்று அது.”

“பிறர் கொள்ளும் பொருள் வெறும் பொருளல்ல என்று உணர்க! அனைத்துப் பொருட்களும் அடையாளங்களே. செல்வம் என்பது என்ன? எப்பொருள் பிற அனைத்தாகவும் மாற்றிக்கொள்ளக்கூடியதோ அதுவே செல்வம் என்று பொருள்நூல்கள் வகுத்துள்ளன. ஓர் அருமணி போர்ப்படையென்றாகலாம். நகரமாக உருமாறலாம். குலப்பெருமையும் கோல்வண்மையுமாக வடிவுகொள்ளலாம். சொல்மதிப்பாக, புகழாக, தெய்வஅருளாக விளக்கவும்படலாம். கௌரவரே, அரசனின் செங்கோல் என்பது செல்வத்தின்மேல் நின்றிருக்கும் ஓர் அடையாளம் மட்டுமே. தங்கள் வறுமையில் வண்மையாகவும், இடர்களில் படையாகவும் எழும் செல்வம் அங்குள்ளது என அது குடிகளுக்கு அறிவிக்கிறது. அந்தக் கோல் நின்றிருக்கும் நிழல்களில் பிற கோல்கள் தணிந்திருக்க வேண்டும் என்பதனாலேயே அந்நெறி வகுக்கப்பட்டது.”

“தங்களிடமில்லாத செல்வம் அவரிடம் இருந்தால், தங்கள் தேரைவிட சற்றேனும் அது பெரிதாக இருந்தால், இந்நிலத்தில் உங்கள் சொல்லைவிட ஒரு படி மேலானது அவர் சொல்லென்றே குடிகளால் கொள்ளப்படும். அங்கநாட்டுப் படைகளால் மட்டுமல்ல நமது படைகளாலும் அவ்வாறே கருதப்படும். அது நம் ஆட்சிக்கு எவ்வகையிலும் நலம் பயப்பதல்ல” என்றார் கனகர். துரியோதனன் எழுந்துகொண்டு “மெய். நம் குடிகள் ஐயமற உணரட்டும், அவனே என்னைவிட மேம்பட்டவன். அங்கம் அஸ்தினபுரியைவிட ஆற்றல் கொண்டது. சம்பாபுரி பாரதவர்ஷத்தின் எந்நகரையும்விட செல்வம் நிறைந்தது. அவ்வாறே ஆகுக! அமைச்சரே, அதனால் அஸ்தினபுரிக்கோ எனக்கோ என் தம்பியருக்கோ எக்குறையும் வரப்போவதில்லை. எங்களைவிட எவ்வகையிலும் ஆற்றலும் பெருமையும் மிக்க ஒருவனால் பேணப்படுகிறோம் என்ற பெருமையும் நிறைவுமே எங்களுக்கு எஞ்சும்” என்றான்.

துச்சாதனனை நோக்கி “கர்ணன் சமைக்கும் அந்தப் பொற்தேரில் அவன் அமர்ந்து அணியூர்வலம் செல்வதை பார்க்க விழைகிறேன். அங்கநாட்டின் முடிகோள் விழா இன்னும் சில மாதங்களில் வருமென்று எண்ணுகிறேன்” என்றான் துரியோதனன். கனகர் “ஆம், சித்திரை மாதம் மகரராசியில் கதிரோன் நுழையும் நாளில்” என்றார். “அப்போது அஸ்தினபுரியின் அரசனென்றும் கர்ணனின் தோழனென்றும் சம்பாபுரிக்கு செல்கிறேன். அந்தத் தேருக்குப் பின்னால் எனது எளிய தேர் செல்லட்டும். அங்குளோர் அதை காணட்டும். இங்குளோர் உணரட்டும்” என்றான் துரியோதனன். சுஜாதன் “மூத்தவரே, நானும் வருவேன். இவர் சொல்லக் கேட்டதுமே அந்தத் தேரை என் அகத்தால் கண்டுவிட்டேன்” என்றான்.

ஆனால் அஸ்தினபுரியில் கர்ணனின் பொற்தேர் ஒவ்வாமையை உருவாக்கியது. மாற்றுருக்கொண்டு நகருலாச் செல்கையில் துரியோதனனின் செவிபடவே சொற்கள் விழுந்தன. “சூதன் கொள்ளும் பெருமிதம் சாரைப்பாம்பின் சீறலும் பத்தியும்போல” என்றார் ஒரு ஷத்ரிய முதியவர். “கூரையிலேறி நின்றிருக்கும் கோழி தான் உகிரும் அலகும் சிறுத்த வெற்றுயிர் என்பதையே உலகுக்கு சிறகடித்து சொல்கிறது. கூரை உயரமாகும்தோறும் அது வெறும் கோழி என்ற செய்தியே சென்று சேர்கிறது” என்றான் ஒரு முதிய சூதன். அன்று மாலை திரும்பிவருகையில் துச்சாதனன் துரியோதனனிடம் “எவ்வகையிலோ இச்செயல் வழியாக எளிய குடிகளை அவர் சீண்டுகிறார். அவர்கள் கசப்பும் சீற்றமுமே கொள்கிறார்கள். ஏன் இதற்கு துணிந்தார் என்ற எண்ணமே எனக்கு எழுகிறது, மூத்தவரே” என்றான்.

“அவ்வாறல்ல, அது ஒரு வெற்றி. அனைத்து வெற்றிகளும் பிறரில் முதன்மையாக உருவாக்குவது ஒவ்வாமையைத்தான். ஏனெனில் எளியோரினும் எளியோர் எனினும், கடையரிலும் கடையர் எனினும் ஒவ்வொரு மனிதனும் தன் பகற்கனவில் பெருவெற்றிகளையும் அருஞ்சிறப்புகளையுமே தனக்குரியதென்று எண்ணிக்கொண்டிருக்கிறான். பிறர் அடையும் எதுவும் தனக்குரியதென்று கற்பனை செய்கிறான். ஆகவே பிறர் அடையும் வெற்றிகள் அவனை இழுத்து மெய்யின் வெறுமைக்குள் கொண்டு நிறுத்துகின்றன. அதையே ஒவ்வாமையாக, கசப்பாக, சீற்றமாக அவன் வெளிப்படுத்துகிறான். அதற்கான சொற்களை பின்னரே கண்டுகொள்கிறான். குலமென்றும் குடியென்றும் மரபென்றும் நெறியென்றும்” என்றான் துரியோதனன்.

துச்சாதனனின் தோளில் கைவைத்து அவன் தொடர்ந்தான். “ஆனால் மீண்டும் மீண்டும் இச்சிறப்பு சொல்லப்படுகையில் நுரை அடங்குவதுபோல் இவை அடங்கி அழிவதை காணலாம். ஏனெனில் வெற்றி என்பது எத்தனை நாமறித்து சொல்லாடினாலும் இல்லாமல் ஆகிவிடுவதில்லை. ஊழிக்காலம் முழுக்க அலைகள் அறைந்தாலும் கடலோரப்பாறை அங்குதான் இருக்குமென்று சூதர் சொல்லுண்டு. அந்தத் தேர் விழிக்கூடான ஒன்று. அது தெருவிலிறங்குகையில் அதன் அழகு வெல்லும். அதை கவிஞர் பாடத்தொடங்குவர். இதே மானுடர் அவர்களின் நாவுகளால் அத்தேரின் சிறப்பையும் அதில் ஊர்பவனின் அழகையும் பெருமையையும் சொல்லும் நாள் விரைவில் வரும்.”

துச்சாதனன் துரியோதனனை சிலகணங்கள் நோக்கிவிட்டு “அத்தகையதோர் தேர் நமக்கும் இருப்பின் நன்று என்று சுபாகு கூறினான்” என்றான். “இல்லை, இனி அஸ்தினபுரி ஒரு தேர் செய்யும் என்றால் அது அங்கநாட்டுத் தேரைவிட ஓர் அடி குறைவானதாகவும் ஒரு படி கீழானதாகவுமே இருக்கும். அவ்வாறொன்றைச் செய்து நிறுத்துவதென்பது நமது குடிகளால் விரும்பப்படாது. ஆகவே அஸ்தினபுரியில் இனி பொற்தேர் ஒருபோதும் அமைக்கப்படாது” என்று துரியோதனன் சொன்னான். துச்சாதனன் ஒன்றும் சொல்லவில்லை. “சொல்க, உனக்கு விழைவிருக்கிறதா?” என்றான் துரியோதனன். “மூத்தவரே, நான் உங்கள் இளையோன்” என்றான் துச்சாதனன்.

சம்பாபுரியின் செங்கதிரோன் ஆலயத்தில் நிகழ்ந்த பெருவிழவிற்கு அஸ்தினபுரியிலிருந்து துரியோதனனும் தம்பியர் எண்மரும் சென்றிருந்தனர். விழவுக்குப் பின் நிகழ்ந்த அணியூர்வலத்தில் அந்தத் தேர் முதல்முறையாக தெருவில் ஓடியது. விழாவுக்கென அமைக்கப்பட்டிருந்த மேடையில் அமர்ந்து அப்பால் தெரிந்த தேரை நோக்கிய துச்சாதனன் “மூத்தவரே, இது அணித்தேரல்ல, போருக்குரிய தேர்” என்றான். அதை முன்னரே உணர்ந்திருந்த துரியோதனன் தலையசைத்தான். துச்சகன் உள்ளக்கிளர்ச்சியுடன் “இரும்பிலும் பித்தளையிலும் சகடங்கள் வார்க்கப்பட்டுள்ளன. அதன் மரத்தூண்களுக்கு மேல் இரும்புக்கவசங்கள் உள்ளன. அதற்குமேல்தான் வெள்ளியும் பொன்னும் பரப்பப்பட்டுள்ளன” என்றான்.

துச்சாதனன் “இதை போர்க்களத்திற்கு கொண்டு வருவதுபோல அறிவின்மை பிறிதில்லை என்றே தோன்றுகிறது. பிற தேர்களைவிட அரைப்பங்கு உயரம். கண்கவரும் செம்மஞ்சள் ஒளி. எங்கிருந்தாலும் இது விழிக்கு துலங்கித் தெரியும். நெடுந்தொலைவிலிருந்தே நீளம்புகளை இதை நோக்கி தொடுக்க முடியும். யானைகள் இதைக் கண்டு சினக்கும். தன்னை தான் தான் என்று படைமுகப்பில் எழுந்து அறிவிப்பது போன்றது இத்தேரில் ஊர்வது” என்றான். துர்மதன் “இத்தேரிலா அங்கநாட்டரசர் இனி படைமுகம் வரப்போகிறார்?” என்றான். சுபாகு “படைமுகப்பில் எழுவதென்பது இருவகையானது. முதல்நாள் படைகளை ஊக்கப்படுத்தும்பொருட்டு அணிசெய்யப்பட்ட தேரில் அரசர்கள் ஊர்வது பாரதவர்ஷம் எங்குமிருக்கும் வழக்கமே” என்றான்.

சகன் “ஆனால் போர்க்களத்தில் பொன்னுக்கு இடமில்லை என்றல்லவா சொல்வார்கள்?” என்றான். சுபாகு “ஆம், அதைத்தான் சொன்னேன். அது நெறிமீறல். ஆனால் தெய்வங்கள் நெறிகளைக் கடந்தவை. போருக்கு படைகள் எழுகையில் முகப்பில் இப்பொற்தேர் வருமெனில் தங்கள் அரசன் இறையருள் கொண்டவன் என்றும் வெல்லற்கரியவன் என்றும் படைகள் எண்ணக்கூடும். போர்களில் வெல்வது எப்போதுமே படைகளின் உள்ளுறைந்த பெருமிதம்தான்” என்றான். துரியோதனன் நகைத்து “அவன் இப்பொற்தேரில்தான் படைமுகம் கொள்வான். முழுப் போருக்கும் இத்தேரிலேயே நின்றிருப்பான். அவன் ஆணவத்தை நானன்றி எவர் அறிவார்?” என்றான்.

“ஆனால்…” என்று துச்சாதனன் சொல்லத்தொடங்க “அதன் இடர்களனைத்தையும் அவன் அறிவான். அவ்விடர்கள் ஒன்றும் தனக்கொரு பொருட்டல்ல என்று அறிவிக்கிறான். இத்தேர் அவனுக்கு பிறர் சூட்டும் இழிவுகள் அனைத்திற்கும் அவன் உரைக்கும் செவ்வொளி கொண்ட மறுமொழி” என்றான். “போரில் பொன்னுக்கு ஒப்புதலில்லை அல்லவா?” என்று சமன் கேட்டான். “பொன்னணிகளுக்கு விலக்கு என்றே நூல்கள் உரைக்கின்றன. தேர் பொன்னால் கூடாதென்று எங்கும் சொல்லப்படவில்லை” என்று அப்பால் நின்றிருந்த பூரிசிரவஸ் கூறினான். நகைத்தபடி “ஏனென்றால் இதுவரை பொற்தேரில் எவரும் போருக்கெழுந்ததில்லை” என்றான்.

“போரில் பொன் முற்றிலும் பயனற்ற உலோகம். அது அணியென்று மட்டுமே இதுவரை பார்க்கப்பட்டு வந்தது. மரத்தூண்களுக்கு மேல் இரும்புக்கவசங்கள் அணிவிப்பது வழக்கம். உலோகத்தில் எவரும் தேர் செய்வதில்லை. அந்த எடையை போர்க்களத்தில் விரைந்து இழுக்க வேண்டுமெனில் ஏழு புரவிகள் போதாது. அதற்கு மேல் புரவிகள் என்றால் களத்தில் அவை விரைவதற்கு இடமிருக்காது. கடிவாளத்தால் அவற்றை ஆளவும் இயலாது. ஆகவே உறுதியான மென்மரத்தில் தேர்களைச் செய்து தூண்களுக்கு கவசமும் சகடங்களுக்கு பட்டையும் அணிவித்து போருக்குக் கொண்டுவருவதே இன்றுவரை வழக்கம்” என்றான் சுபாகு.

“இந்த தேரின் எடை என்ன என்று தெரியவில்லை. பேரெடை கொண்டிருக்கிறதென்றால் இதை போரில் எவ்வாறு விரைந்திழுப்பார்கள் என்பதும் புரியவில்லை. நாமறியாத கலிங்கத்துப் பொறிசூழ் திறனொன்று இதில் செயல்பட்டிருக்கக்கூடும்” என்று பூரிசிரவஸ் சொன்னான். துச்சாதனன் “இது வெறும் அணித்தேர். வேண்டுமென்றே போர்த்தேரின் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது” என்றான். “போருக்கெழாத போர்த்தேர்” என்றான் துச்சகன். துரியோதனன் “போருக்கெழுந்தால் பொன்னை வெல்ல இரும்பால் இயலாது” என்று சொல்லி மீசையை நீவிவிட்டு நகைத்தான். அவர்கள் அமர்ந்திருந்த மேடையிலிருந்து அப்பால் தேரின் கொட்டகை தெரிந்தது. பொற்கவசமணிந்த தெய்வம் கருவறையில் நின்றிருப்பதுபோல அது அங்கே சுடர்கொண்டிருந்தது.

அந்தத் தேர் அதன் கொட்டகையிலிருந்து வெளிவருவதை முரசுகள் அறிவித்தபோது சம்பாபுரியின் குடிகள் ஒருவர் மீது ஒருவரென எழுந்தனர். தன்னைச் சுற்றி மானுட உடல்களாலான அலையொன்று சுருண்டு பொங்குவதை துச்சாதனன் கண்டான். ஓசை வந்தறைந்து அவர்கள் அமர்ந்திருந்த பட்டுத் திரைச்சீலை சூழ்ந்த மேடையை அதிரச்செய்தது. தேர்க்கொட்டகையின் முப்புறமும் தொங்கவிடப்பட்டிருந்த பட்டுத் திரைச்சீலைகள் வீரர்களால் இழுத்து மேலேற்றப்பட்டன. கடலலை பின்னடைவதுபோல அவை வளைவுகளென சுருங்கி மேலெழ அங்கே கனற்குவியலொன்று எழுந்ததுபோல் மின்னி நோக்கை பறித்தது அத்தேர். அதில் ஏழு புரவிகள் பூட்டப்பட்டிருந்தன.

“ஆம், ஏழு புரவிகள்தான்” என்றான் சுபாகு. “அதன் விரைவு என்னவென்று பார்க்கவேண்டும். ஏதேனும் பெருஞ்சாலையில் அது ஓடுகையிலேயே கணிக்க முடியும்.” பூரிசிரவஸ் “அல்ல கௌரவரே, அதன் சகடத்தின் முதல் அசைவிலேயே தெரிந்துவிடும். ஒரு தேரின் விசை என்பது எத்தனை விரைவில் அது விரைவு கூட்டுகிறது என்பதையே சார்ந்துள்ளது” என்றான். தேர் முகப்பின் அமரபீடத்தில் கர்ணனின் தேரோட்டியான அருணன் ஏறி அமர்ந்தான். அவன் பொற்பூச்சுள்ள இரும்புக்கவசங்கள் அணிந்து தலையில் செம்பருந்தின் இறகுகொண்ட இளஞ்செந்நிற தலைப்பாகை சூடியிருந்தான். சவுக்கால் மெல்ல காற்றில் ஒரு முறை அவன் சொடுக்கியதும் தேர் அசைந்து பொற்குழம்பு அலைகொள்வதுபோல் ஒரு ததும்பலை வெளிப்படுத்தியது. அங்கிருந்து வீசப்பட்டதுபோல் அது விசைகொண்டு அவர்களின் மேடையைக் கடந்து முன்னால் சென்றது.

பூரிசிரவஸ் “எடைமிக்க தேர் எவையும் இத்தனை விரைவு கொண்டிருப்பதில்லை” என்றான். “மும்மடங்கு விசை!” என்று சுபாகு சொன்னான். “எப்படி?” என்று சமன் கேட்டான். “எடை மிகுதி. அதில் ஐயமே இல்லை. இத்தனை உலோகத்தையும் தேர் தன்னில் ஏற்றிக்கொண்டுள்ளது. அவ்வெடை விசை குறையாது செல்லும் வண்ணம் ஏதோ பொறி அமைக்கப்பட்டுள்ளது” என்று பூரிசிரவஸ் சொன்னான். பின்னர் “இன்றிரவு நானே இத்தேரை சென்று பார்த்துவருகிறேன்” என்றான். துரியோதனன் வாய்விட்டு நகைத்து “இப்போதே அச்சிற்பிகளை வரவழைத்து கேட்டுவிடுவோம்” என்றான். “அல்ல, அதை நாமே அறிவதில்தான் நாம் பயில்கிறோம்” என்று பூரிசிரவஸ் சொன்னான்.

அப்பொற்தேர் களமுற்றத்திற்குச் சென்று நிற்க கதிரவன் ஆலயத்தில் வழிபட்டு அரசியர் இருபுறமும் துணைவர பொற்கவசங்களும் மணிக்குண்டலங்களும் ஒளிவிட செம்பருந்தின் இறகு சூடிய அங்கநாட்டின் சூரியபட மணிமுடியுடன் கர்ணன் படிகளில் இறங்கி கீழே வந்தான். சம்பாபுரியின் குடிகள் தங்கள் தலைப்பாகைகளையும் மேலாடைகளையும் தூக்கி விண்ணில் வீசி “அங்கநாட்டரசர் வெல்க! கதிர்மைந்தர் வெல்க! வெல்லற்கரிய வீரர் வெல்க! விழிதிகழ் வேந்தர் வெல்க! பெருங்கொடைச் செல்வர் வெல்க!” என்று வாழ்த்துக் குரலெழுப்பி கூத்தாடினர். கர்ணன் செம்பட்டு விரித்த படிகளினூடாக ஏறி தேரின் உள்ளமைந்த அரியணையில் அமர்ந்தான். இரு அரசியரும் இரு புறமும் அமர்ந்துகொள்ள தேர் கிளம்பி சம்பாபுரியின் தெருக்களினூடாகச் சென்றது.

இரு புறத்திலிருந்தும் எழுந்து தேர் மேல் பொழிந்த மஞ்சள் அரிசியும் மலர்களும் இளங்காலைப்பொழுதில் பொன் அலைகளாகவே தெரிந்தன. துரியோதனன் முகம் மலர்ந்து அதை பார்த்துக்கொண்டிருந்தான். ஏதோ ஒருகணத்தில் உளம்நெகிழ்ந்து தலைகுனிந்து இரு கைகளாலும் தன் கண்களை அழுத்திக்கொண்டான். துச்சாதனன் குனிந்து “மூத்தவரே…” என்றான். உடலில் மெல்லிய விதிர்ப்பொன்று ஓட சிறு விம்மல் துரியோதனனிடமிருந்து வெளிப்பட்டது. பின்னர் தலையைத் தூக்கி “இளையோனே, அவனன்றி இப்புவியில் பொற்தேரில் ஊரும் பெற்றி கொண்டவன் எவன்? கதிரவன் முகில்களில் எழுவதுபோல் ஒவ்வொரு அசைவிலும் பேரழகு!” என்றான்.

துச்சாதனன் திகைப்புடன் மூத்தவனை நோக்கினான். துரியோதனன் களிவெறி கொண்டு கண்கள் விழிக்க இரு கைகளையும் விரித்து “அறிக உலகு! அவன் தோழன் நான்! அத்தேரில் வாளேந்தி அவனருகே அணுக்கக்காவலனாக நிற்கும் பேறு கிடைக்குமென்றால் அது என் பிறவிப் பயன் என்றே கருதுவேன். அவன் தோழன் நான்! இப்புவி உள்ள அளவும் அவனது தோள்தோழன் என்றே நான் பெருமை கொள்கிறேன்!” என்றான். திகைப்புடன் “அரசே!” என்று பூரிசிரவஸ் சொல்ல துரியோதனன் எழுந்து கைகளை வீசி “வெற்றிகொள் வீரன் வாழ்க! அங்கநாட்டரசர் கர்ணன் வாழ்க! கதிர்மைந்தர் வாழ்க!” என்று குரல் எழுப்பினான்.

துச்சாதனன் அண்மையில் அரசர் வருகையை அறிவிக்கும் முரசொலி எழுந்துகொண்டிருப்பதை கேட்டுக்கொண்டிருந்தான். காட்டிலிருந்த அனைத்துப் பறவைகளும் கலைந்து வானில் எழுந்து சூழ்ந்து பறந்து முழக்கமிட்டன. அவையும் வரவேற்பொலி எழுப்பி வாழ்த்துக் கூவுவதாக அவன் எண்ணிக்கொண்டான். சூதர்கள் அவ்வாறுதான் எழுதுவார்கள் என்று எண்ணியபோது புன்னகைத்தான். தொலைவில் பொற்தேரின் முகப்பு தெரிந்தது. அவர்கள் அணுகிச்செல்ல தேர் அந்த முதற்காலைப் பொழுதின் முற்றிய இருளில் சூழ்ந்திருந்த பந்தங்களிலிருந்து அனலொளியைப் பெற்று பற்றிஎரிவதுபோல வந்துகொண்டிருந்தது. ஒரு மாபெரும் வேள்விச் சுடர் என்று துச்சாதனன் மீண்டும் எண்ணிக்கொண்டான். உடனே அதையும் எங்கோ சூதர் சொல்லியிருப்பார்கள் என்ற எண்ணம் எழ அவன் புன்னகைத்தான்.

ஜைத்ரம் என புகழ்பெற்றிருந்த அந்தப் பொற்தேரில் கர்ணன் கையில் வில்லுடன் நின்றிருப்பதை அவன் கண்டான். அக்கணம் பறவைகளின் ஒலி மாறுபடுவது அவனுக்குத் தெரிந்தது. அவனுக்குப் பின்னால் ஒன்றுதொட்டு பிறிதொன்று என கௌரவப் படையின் அத்தனை முரசுகளும் ஓசையிட்டன. அவன் அவற்றை நோக்கிவிட்டு திரும்பிப்பார்த்தப்போது வானில் முதற்கதிரின் ஒளி எழுந்திருந்தது. எங்கிருந்தென்றில்லாமல் சுடர்ப் பொழிவொன்று சாய்ந்து அப்பொற்தேரின் மீதும் அதில் அமர்ந்திருந்த பேரழகன் மீதும் விழுந்தது. இரு கைகளையும் கூப்பியபடி கண்களில் நீர்வழிய துச்சாதனன் நோக்கிக்கொண்டிருந்தான்.

வெண்முரசு விவாதங்கள்