இருட்கனி - 53

அஸ்வத்தாமனின் பாகன் திரும்பி நோக்கி “முன்னேறவா, அரசே?” என்றான். “ஆம்” என்று அவன் சொன்னான். “முன்னேறுக!” பாகனின் விழிகள் மங்கலடைந்திருந்தன. அவன் ஆழ்ந்த துயிலில் இருப்பதுபோல் குரலும் கம்மியிருந்தது. இவன் எப்படி தேர்நடத்த முடியும் என்று அஸ்வத்தாமன் ஒருகணம் எண்ணினான். ஆனால் புரவிகள் அவன் கையின் அசைவால் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டன. சொல்லப்படுவதற்குள்ளேயே உடலசைவுகளிலிருந்தும் முகத்தின் மெய்ப்பாடுகளிடமிருந்துமேகூட அவன் ஆணைகளை பெற்றுக்கொண்டான். ஆடிவளைவில் தன்னை நோக்கிக்கொண்டிருக்கும் பாகன் எந்த வில்லவனுக்கும் தெய்வத்துணைபோல.

பாகனுடன் உடலால், விழியால், சொல்லால் உரையாடிக்கொண்டே இருக்கிறான் படைவீரன். அது தன்னுடன் தானே உரையாடுவதுபோல. அவன் காலையில் சொன்னது நினைவிலெழ “காலையில் ஒரு சொல் எஞ்சவிட்டாய்… என்ன அது?” என்றான். “என்ன?” என்றான் பாகன். “நீ காலையில் சொன்ன சொல்.” பாகன் “நினைவில்லை, அரசே” என்றான். “நீ சொன்ன சொல்… அது உண்டு செரிக்காத உணவுபோல் நஞ்சு என்றாய்.” பாகன் “நினைவில்லை…” என்றான். அஸ்வத்தாமன் சலிப்புடன் “செல்க!” என்றான். அப்பால் பாண்டவப் படையிலிருந்து அம்புகள் எழுந்து வந்து சூழ்ந்தன. “செல்க!” என அஸ்வத்தாமன் கைநீட்டி ஆணையிட்டான்.

அஸ்வத்தாமன் தன் படையை நோக்கி “விரைக! விரைக! எழுக!” என ஆணையிட்டபடி தேரில் படைமுகப்பு நோக்கி சென்றான். சிகண்டியை அவன் விழிகள் தேடின. படைகள் அதற்குள் சுழன்று திசைமாறிவிட்டிருந்தமையால் அவன் சென்றணைந்த முகப்பில் விராடநாட்டுப் படைகளே இருந்தன. அவற்றை தலைமை தாங்கி நடத்திய சாத்யகியை நாண்முழக்கியபடி அஸ்வத்தாமன் சந்தித்தான். இருவரும் கைபறக்க அம்புகளால் தாக்கிக்கொண்டனர்.

விராடப் படைகள் அக்களத்திற்கு வரும்போது போர்க்களப் பயிற்சியற்றவையாக இருந்தன. அவர்களில் சற்றேனும் படைப்பயிற்சி பெற்றவர்கள் முதலிலேயே போருக்கு வந்து பீஷ்மராலும் பின்பு துரோணராலும் முற்றழிக்கப்பட்டனர். பாண்டவப் படையின் ஏவலர்களும் தொழும்பர்களும் பெரும்பகுதியினர் விராட நாட்டிலிருந்தே வந்திருந்தனர். போர் விசைமிகுந்தோறும் மேலும் மேலும் ஏவலரும் படைதொழும்பரும் தேவைப்படவே படைகளை அனுப்பி விராட நாட்டிலிருந்து நிஷாதரையும் கிராதரையும் திரட்டிக்கொண்டு வந்திருந்தனர். அவர்கள் முதலில் விறகு கொண்டுவருபவர்களாகவும் வண்டிகளை இழுப்பவர்களாகவும் உடல்களை கொண்டுசென்று தென்புலம் சேர்ப்பவர்களாகவும் பணியாற்றினர். பின்னர் படைகள் குறையக்குறைய அவர்கள் படைகளென மாற்றப்பட்டு போர்முகப்புக்கு அனுப்பப்பட்டனர்.

வெறும் வில்லுக்கு உணவென்றே அவர்கள் கருதப்பட்டனராயினும் அவர்கள் அங்கு வந்த அச்சிறு நாட்களிலேயே போரெனில் என்ன என்று கற்றிருந்தனர். விராடநாட்டிலிருந்து வந்த போர்க்கலை பயின்ற வீரர்கள் விரைந்திறங்கி ஊர்களைத் தாக்கி மீளும் மலைப்போரிலேயே பயிற்சி பெற்றிருந்தார்கள். அவர்களுக்கு விரிநிலத்தில் நிகழ்ந்த குருக்ஷேத்ரப் போரில் பொருதி நிற்க இயலவில்லை. கைசலிக்க கைசலிக்க பீஷ்மரும் துரோணரும் அவர்களைக் கொன்று களத்தில் பரப்பினர். ஆனால் எந்தப் பயிற்சியும் இன்றி அங்கு வந்து, ஒவ்வொரு நாளும் போரைப் பார்த்த நிஷாதருக்கும் கிராதருக்கும் அவர்கள் விழிகளால் பெற்றுக்கொண்ட பயிற்சியே களம்நிற்க போதுமானதாக இருந்தது.

பல்லாயிரம் பேர் திரண்டெழுந்து மோதிக்கொள்ளும் போர்க்களத்தில் தேர்ந்த வில்லவர்கள்கூட குறிவைத்து இலக்கை தாக்குவது அரிதென்று இருந்தது. விற்களை நிரைவகுத்து விண்ணில் அம்புமழை எழுப்புவதே போரில் தேவைப்பட்டது. நிஷாதரும் கிராதரும் தங்கள் காடுகளில் வேட்டைக்கென பயின்றிருந்த விற்பயிற்சி அதற்கு போதுமானதாக அமைந்தது. களத்தில் உளம் பதறாது நிற்க அவர்கள் பயின்றிருந்தனர். பல நாட்கள் போர் முடிந்தபின் களமுகப்பிலிருந்து சிதைந்த உடல்களையும் எஞ்சும் உயிருடன் கூச்சலிடும் வீரர்களையும் அள்ளிக் கொண்டுசென்று தென்புலத்திற்கும் மருத்துவமனைக்கும் சேர்த்து பின்னர் உடலெங்கும் குருதியுடன் இரவைக் கடந்து எழும் போரின் பேரோசையைக் கேட்டு கனவுகளாக சமைத்தபடி அரைத்துயிலில் பகல் கடந்து மீண்டும் குருதியில் விழித்தெழுந்து அவர்கள் தங்கள் உள்ளத்திற்குள் பல நூறு போர்களை நிகழ்த்திவிட்டிருந்தனர். விழிகள் காணாதவற்றையே உள்ளம் கண்டது. மானுடர் உணராதவற்றை உள்ளுறையும் விலங்குணர்ந்தது. ஆகவே பாஞ்சாலப் படைகளைவிட களத்தில் தேர்ச்சி கொண்டவர்களாக இருந்தனர் விராடநாட்டு நிஷாதர்.

அவர்களின் அம்புகள் பட்டு உத்தரபாஞ்சாலத்தின் வீரர்கள் தேர்களிலிருந்து அலறி வீழ்ந்துகொண்டிருந்தனர். அவர்கள் அகன்ற இடத்தை ஈடுசெய்யும்பொருட்டு பின்னிருந்து படைகள் ஒழிவிலாது வரவேண்டுமென்று அஸ்வத்தாமன் கையசைவால் ஆணையிட்டான். அம்புகளை இடைமுறியாது அனுப்பியபடி சாத்யகியை அவன் எதிர்கொண்டான். சாத்யகி அஸ்வத்தாமனின் அம்புகளை நிகரம்பால் தடுத்தபடி கிராதரும் நிஷாதரும் அடங்கிய படைகளை பிறைவடிவில் விரியச்செய்து உத்தரபாஞ்சாலத்துப் படைகளை சூழ்ந்துகொள்ளும்படி அனுப்பினான். அப்பால் கிருதவர்மனும் கிருபரும் சேர்ந்து சிகண்டியை எதிர்ப்பதை அஸ்வத்தாமன் கண்டான். சிகண்டியின் வில்லை, விழியிலாத முகத்தைக் கண்டு மீண்டும் எங்கோ ஓர் ஆற்றங்கரையில் அவனுடன் அமர்ந்து சொல்லாடி விழிப்புகொண்டான்.

சாத்யகி போரில் உளம்சலிக்காதவனாக இருந்தான். சினத்தையும் எதிர்பார்ப்பையும் கடந்துவிட்டிருந்தான். ஆற்றுவனவற்றை செம்மையுறச் செய்வது அறிவிற்குறைந்தவர்கள் சிலரின் இயல்பு. அவர்கள் புறத்தை ஒழுங்கமைப்பதனூடாக தங்களை திரட்டிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் சலிப்படைவதே இல்லை. இன்னும் பல்லாண்டுகாலம் அவ்வண்ணம் அம்புகளை தொடுத்துக்கொண்டிருந்தாலும் இவன் பின்னடையப் போவதில்லை. வெல்லும் அம்பு ஓர் எண்ணத்தால் மேலெழுந்தது. தோல்வி ஒரு கணச் சலிப்பால் விடப்படும் இடைவெளியில் நிகழ்வது. இவன் சலிக்காத கடல். வேறு வழியில்லை என உணர்ந்து அஸ்வத்தாமன் பிரம்மாண்டாஸ்திரத்தை எடுத்தான். அதைக் கண்டதுமே சாத்யகி தன் தேரைத் திருப்பி பின்னால் கொண்டு செல்லும்படி ஆணையிட்டான்.

அவன் தேர் வளைந்து பின்னகர்வதற்குள் அஸ்வத்தாமனின் பிரம்மாண்டாஸ்திரம் சென்று அவன் தேரை தாக்கியது. சற்றே இலக்கு பிழைத்து தேருக்கு மிக அருகே அது தரையை அறைந்தது. ஆயினும் மண்ணும் புழுதியுமாக வெடித்து மலர்ந்தது. தேர் சிதைந்து துண்டுகளாக சிதற புரவிகள் ஊன் கீற்றுகளாக பறந்து எழுந்து பின்னர் பொழிந்தன. அம்பின் விசையில் சாத்யகி தேரிலிருந்து தூக்கி காற்றில் வீசப்பட்டான். நாற்புறமும் உடல்களெனத் தெறித்து அகன்ற கிராதப் படைகளின் நடுவே சிதைந்து கிடந்த யானையுடல் ஒன்றின்மீது சென்று விழுந்தான். அவன் உடலில் இருந்த கவசங்கள் அனல்கொண்டு பழுத்திருந்தன. யானை உடலின் நிணக்கூழில் விழுந்து புரண்டெழுந்தமையால் அவை உறுமலோசை எழுப்பியபடி வெப்பமழிந்தன. அவன் உடலிலிருந்து குருதிநீர் கொதித்த ஆவியெழுந்தது.

கொக்கிகளை வீசி அவனை கவர்ந்தெடுத்து பின்னால் கொண்டு சென்றனர் படைவீரர்கள். பிரம்மாண்ட அஸ்திரத்தால் கொன்று வீசப்பட்ட கிராதர்களின் உடல்கள் விண்ணிலிருந்து ஒவ்வொன்றாக நிலத்தை வந்தறைந்துகொண்டிருந்தன. சாத்யகி அப்பால் கொண்டுசெல்லப்படுவதை அஸ்வத்தாமன் கண்டான். அம்பின் வெடிப்புவிசையாலேயே அவன் அம்பின் அனலிலிருந்து அகற்றப்பட்டான். வெம்மையிலிருந்து அவனைக் காக்க ஊறித்திரண்டு காத்திருந்தது யானை. அறியா வல்லமை ஒன்றால் அவன் காக்கப்படுவதுபோல. அக்கணம் அஸ்வத்தாமன் உணர்ந்தான், அப்போரில் சாத்யகி கொல்லப்படப்போவதில்லை. அவனுக்கு வேறு களம் காத்திருக்கிறது. “செல்க! முன்செல்க!” என ஆணையிட்டு அந்தச் சிதைவுகளினூடாக தேர் செலுத்தி முன்னால் சென்றான் அஸ்வத்தாமன்.

அவனுக்குப் பின்னால் கூச்சலிட்டபடி உத்தரபாஞ்சாலத்தின் படைகள் முன்னெழுந்து வந்தன. சற்று முன்பு வரை கிராதர்களின் அம்புகளால் தங்கள் தோழர்கள் வீழ்ந்ததைக் கண்டு அவர்கள் அச்சம் கொண்டிருந்தனர். அவ்வாறு அஞ்சியதை எண்ணி அப்போது சீற்றம் கொண்டனர். விழுந்து கிடந்து துடித்த கிராதர்களின் கழுத்தை வெட்டி தலைகளைத் தூக்கி அப்பால் எறிந்தனர். வேல்களை ஓங்கி அவர்களின் நெஞ்சுகளில் குத்தி உடல் பற்றிச் சுழன்று அப்பால் தாவினர். அஸ்வத்தாமன் தனக்கு சுற்றும் உத்தரபாஞ்சாலப் படைவீரர்கள் கொந்தளித்துக் கொண்டிருப்பதை பார்த்தான். போர் மூண்டு அத்தனை நாட்களாகியும்கூட வெறிகொண்டு அமலையாட அவர்களால் இயல்கிறது. உள்ளிருந்து குருதி கேட்கும் அத்தெய்வம் ஒருகணமும் விடாயடங்கவில்லை.

அங்கு வந்த படைகளில் எஞ்சும் சிலரே தாங்கள் என்ற உணர்வு அவர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை. அக்களத்திலிருந்து உயிருடன் செல்லப்போவதில்லை என்றும் தெரியவில்லை. இருப்பு என்பது முடிவிலாச் சுருள் என அவர்களின் அகம் நம்பியது. இன்மையின் முந்தைய கணம் அது என தோன்றவில்லை. இப்புவியில் எவ்வுயிருக்கேனும் தாங்கள் யாரென்று தெரியுமா? இயற்றுவது என்ன என்று எவ்வுயிராவது அறிந்திருக்குமா? சொல் பெருக்கிக்கொண்டிருக்கும் மானுடரோ சொல்லின்மையில் நெளிந்து கொண்டிருக்கும் சிறுபுழுவோ? சித்தத்தில் சற்றேனும் வேறுபாடு அவற்றுக்குள் இருக்குமா? வீழ்ந்த தலைகளை உதைத்து விளையாடிக்கொண்டிருந்தவர்களின் முகங்களில் வெறிக்களிப்பு நிறைந்திருந்தது. அவர்களிலெழுந்த தெய்வங்கள் குருதிக்களியாட்டு கொண்டிருந்தன.

அஸ்வத்தாமனின் படை பாண்டவப் படையைப் பிளந்து முன்னெழுந்து சென்றது. மறுபுறம் சூரியனின் ஏழு கதிர்களில் கிருதவர்மனின் கதிரும் கிருபரின் கதிரும் தயங்கி நின்றுவிட துரியோதனனும் சுபாகுவும் நடத்திய கதிர்கள் பாண்டவப் படையை பிளந்து சென்றன. சகுனி நடத்திய படையை எதிர்கொள்ள திருஷ்டத்யும்னன் விரைந்தான். மேலும் மேலும் ஊடுருவி உள் சென்றுகொண்டிருந்த அஸ்வத்தாமன் திருஷ்டத்யும்னனும் சிகண்டியும் இருபுறங்களிலாக விலகியபோது ஏற்பட்ட வெற்றிடத்தினூடாக சென்று யுதிஷ்டிரனை சந்தித்தான். எதிர்பாராது திரை விலக மேடையில் தோன்றிய பயிலா நடிகனென திகைத்து மறுகணம் தன்னை திரட்டிக்கொண்டு “எழுக! படை எழுக!” என்று ஆணையிட்டபடி அம்புகளைத் தொடுத்து அஸ்வத்தாமனை நோக்கி வந்தார் யுதிஷ்டிரன்.

அவருடைய இரு மைந்தர்களும் தயங்கிய அம்புகளுடன் அவரைத் தொடர்ந்து வந்தனர். அஸ்வத்தாமன் யுதிஷ்டிரனை வியப்புடன் பார்த்தான். அவர் சற்றும் அஞ்சவில்லை என்று தெரிந்தது. ஒவ்வொரு முறையும் அவர் அஞ்சுகிறார் என்றே போருக்குப் பின் களநோக்கர்களால் கூறப்பட்டது. அதை நம்ப அவர்கள் அனைவரும் விழைந்தனர். களத்தில் நிகழும் மறத்தை கணிப்புகள் வழியாக அரசர்கள் வெல்வதை உணர்ந்திருந்தமையால் ஒவ்வொருவரும் அதை அஞ்சினர், வெறுத்தனர். யுதிஷ்டிரனையும் சகுனியையும் வெறுக்காத எப்படைவீரரும் இரு தரப்பிலும் இருக்க வாய்ப்பில்லை. அவர்கள் இருவரையுமே கோழைகளென மீண்டும் மீண்டும் சொல்லி நிறுவிக்கொண்டனர். அஸ்வத்தாமனுக்கும் அவ்வெண்ணம் இருந்தது. ஆகவே அவருடைய தெளிந்த விழிகள் அவனை திகைப்படையச் செய்தன.

எவ்வகையிலும் அஸ்வத்தாமனுக்கு தான் இணையல்ல என்றும் ஐந்து அம்புகளுக்கு மேல் அவன் முன் வில்லுடன் நின்றிருக்க இயலாதென்றும் அறிந்திருந்தார் எனத் தெரிந்தது. அவருடைய முதல் தயக்கம் அச்சத்தினால் அல்ல என்று அவருடைய முகத்திலிருந்தும் உடலசைவிலிருந்தும் அஸ்வத்தாமன் உணர்ந்தான். அது பிறிதொன்று. போரெனும் நிகழ்வையே ஒவ்வாமையுடன் விலக்கும் ஒன்று அவருள் உள்ளது. ஒவ்வொருமுறையும் அதை மிதித்துக்கடந்தே அவர் போருக்கு எழுகிறார். அஸ்வத்தாமன் அவருடைய எல்லையை அறிய விழைந்தான். எக்கணத்தில் அவர் பின்னடைவார்? எத்தருணம் உடைவிற்குரியது?

யுதிஷ்டிரனின் மெய்க்காவல் படை அரசகாவலுக்கென்று அர்ஜுனனால் உருவாக்கப்பட்டது. விராடநாட்டிலிருந்தும் இந்திரப்பிரஸ்தத்திலிருந்தும் தன் முதன்மை மாணவர்களை தெரிவு செய்து பயிற்றுவித்து அப்படையை அர்ஜுனன் அமைத்தான். யுதிஷ்டிரனை போர்க்களத்தில் காத்து நின்ற அப்படை முந்தைய நாள் கர்ணனால் பெரும்பகுதி அழிக்கப்பட்டது. அன்று காலை திருஷ்டத்யும்னன் எஞ்சிய பாண்டவப் படையின் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் சிறந்த வில்வீரர்களை தேர்வு செய்து மீண்டும் அக்காவல் படையை ஒருங்கிணைத்தான். ஆயிரத்தெட்டுபேர் கொண்ட அப்படை நூறு தேர்களும் ஒவ்வொரு தேருக்கும் பத்து புரவி வில்லவர்களும் கொண்டது.

மெய்க்காவல் படையினர் விந்தையான தனிக் குழுவினர். ஒரு படையின் ஆற்றல்மிக்கவர் அவர்கள். ஆனால் பெரும்பாலும் போரை வெறுமனே நோக்கி நின்றிருக்க ஆணையிடப்பட்டவர்கள். ஒவ்வொரு கணமும் உள்ளத்தால் போர்புரிந்தபடி களத்தில் நின்றிருப்பவர்கள். அஸ்வத்தாமன் அணுகிவருவதை அவர்கள் விரும்பினார்கள். துடிப்புடன் முன்னெழுந்து யுதிஷ்டிரனை சூழ்ந்துகொண்டு “அரசே, இப்போரை எங்களுக்கு அளியுங்கள்… இதை நாங்கள் நிகழ்த்துகிறோம்!” என்று கூவினர். அஸ்வத்தாமன் உரக்க நகைத்து “யுதிஷ்டிரரே, வேளக்காரப் படைக்குப் பின் ஒளிந்துகொள்க! கோட்டைக்குள் அரண்மனையில் அமைந்து கொள்வது அதைவிடவும் நன்று” என்று கூவினான்.

அவனுடைய ஏளனத்தால் யுதிஷ்டிரன் சினமுறவில்லை “ஆசிரியர்மைந்தரே, நான் என்றும் இறப்புக்கு அஞ்சவில்லை. இனி சிறுமைக்கும் அஞ்சுபவன் அல்ல. என்னை சிறுமைசெய்பவனுக்கே அச்சிறுமைகளை அளித்து அப்பால் நின்றிருக்க நேற்று கற்றேன். எக்களத்திலும் நான் விரும்பிப் பின்னடைந்ததில்லை. என்னை பணயப்பொருளாக கைப்பற்றுவதை ஒழிதலின் பொருட்டே பின்னிற்கிறேன்” என்றார். “வில்தேராதவனே நான். ஆனால் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு சிறுபடைக்கலனையாவது தெய்வங்கள் அளித்துள்ளன” என்றபடி வில்குலைத்து அவனை நோக்கி வந்தார். அவருடைய அம்புகள் எழுந்து வந்து அஸ்வத்தாமனின் தேருக்குமேலும் தேரைச்சூழ்ந்தும் பறந்தமைந்தன.

இருபுறமும் சூழ்ந்திருந்த குதிரைப்படையினர் அஸ்வத்தாமனை தொடர்ந்து வந்த உத்தரபாஞ்சாலத்தின் படைவீரர்களை தங்கள் திறன்மிக்க அம்புகளால் தொலைவிலேயே தடுத்து நிறுத்திவிட அஸ்வத்தாமன் மட்டும் தன் தேரில் முன்னகர்ந்து பாஞ்சாலப் படைவீரர்களிடமிருந்து அகன்று பாண்டவப் படைகளால் முற்றிலும் சூழப்பட்டான். இலக்கு பிழைக்காத அவனுடைய அம்புகள் பட்டு பாண்டவர்களின் மெய்க்காவல் படையின் வில்லவர்கள் அலறிவிழுந்தனர். ஆக்னேயாஸ்திரத்தால் அறைந்து தேர்களை பற்றி எரிய வைத்தான். மாருதாஸ்திரத்தால் தேர்களை தூக்கி கவிழ்த்தான். வாரணாஸ்திரத்தால் அவற்றை அள்ளிச்சுழற்றி அப்பால் விசிறினான்.

அவனுடைய அம்புகளை தடுக்கவியலாதென்று அவர்கள் உணர்ந்திருந்தனர். அவர்களின் தலைவன் “அரசே, பின்னடைக! இப்போரை நாங்கள் நடத்துகிறோம்! பின்னடைக!” என்று கூவினான். “உயிர்கொடுங்கள்! அரசருக்கு உயிர்கொடுங்கள்!” என்று துணைப்படைத்தலைவன் கூவ இருபுறத்திலிருந்தும் மெய்க்காவலர்கள் வெறியுடன் கூவியபடி திரண்டு யுதிஷ்டிரனை மறைத்தனர். யுதிஷ்டிரன் “விலகுக! இது என் ஆணை. விலகுக!” என்றார். “அரசே, எங்கள் கடன் இது” என்று மெய்க்காவல் படைத்தலைவன் கூவ “இந்திரப்பிரஸ்தத்தின் அரசனின் ஆணை இது. என் பொருட்டு பிறர் முன்னின்று உயிர்துறக்க நான் ஒப்பேன். விலகுக!” என்று யுதிஷ்டிரன் ஆணையிட்டார்.

அவன் தலைவணங்கி விலகாமல் நிற்க அஸ்வத்தாமன் “அஞ்சவேண்டியதில்லை. அவர்களை நானே விலக்குகிறேன்” என மகராஸ்திரத்தை தொடுத்தான். அது ஒன்று நூறாயிரமெனப் பெருகி அவர்களை கொன்று வீழ்த்தியது. உடைந்த தேர்களாலும் சரிந்த புரவிகளாலும் யுதிஷ்டிரன் வரம்பு கட்டப்பட எஞ்சிய மெய்க்காவலர் படையினர் சுற்றிவர முயன்றனர். தேடித்தேடி அவர்களைக் கொன்றபின் “வருக, அரசே!” என்றான் அஸ்வத்தாமன். “உங்கள் விற்தொழில் காட்டுக!” தன் மெய்க்காவலர்கள் மடிந்ததை நோக்கி நீள்மூச்செறிந்த பின் “ஆம், இதோ” என அம்புகளைத் தொடுத்தபடி யுதிஷ்டிரன் முன்னெழுந்து வந்தார்.

யுதிஷ்டிரனின் ஒவ்வொரு அம்பையும் உலர்ந்த சுள்ளியை ஒடித்தெறிவதுபோல் அஸ்வத்தாமன் அறைந்து வீழ்த்தினான். பிரதிவிந்தியனும் யௌதேயனும் ஊர்ந்த தேர்களை அவன் அம்புகளால் அறைந்து அச்சுகளையும் சகடங்களையும் ஒடித்து ஒருபக்கம் சாய்ந்து குடை நிலம்தொட விழச் செய்தான். அவர்கள் தேரிலிருந்து தாவி இறங்கி ஓட அம்புகளால் அடித்து புழுதி கிளப்பி அவர்கள் மேல் பொழியச் செய்தான். அவர்களின் தலைக்கவசங்களை உடைத்தான். மார்புக்கவசங்களும் தோள்கவசங்களும் உடைய வெற்றுடலுடன் அவர்கள் களத்தில் திகைத்து நின்றார்கள். யுதிஷ்டிரனிடம் “மைந்தர் உயிர்காப்பதென்றால் மணிமுடியைக் கழற்றி மண்ணில் வையுங்கள்” என்று அஸ்வத்தாமன் ஆணையிட்டான். “இக்கணமே… இல்லையேல் இருவரின் தலை உதிர்வதை காண்பீர்கள்.”

யுதிஷ்டிரன் அவர்களை ஒருகணம் நோக்கிவிட்டு “என் இறந்த உடலிலிருந்து அதை நீர் எடுத்துக்கொள்ளலாம்” என்றார். படைப்பின்னணியில் “அரசரை காத்துக்கொள்க! அரசரின் உயிர் காக்க எழுக!” என்று பாண்டவப் படையின் முரசுகள் முழங்கின. ஆனால் அர்ஜுனன் கர்ணனால், பீமன் துரியோதனனால், சாத்யகி கிருதவர்மனால், திருஷ்டத்யும்னன் சகுனியால், சிகண்டி கிருபரால் முற்றாக தடுக்கப்பட்டுவிட்டிருந்தனர். யுதிஷ்டிரன் அம்புகளை தொடுத்த பின் “இதுவே போர்முடிவென்பது தெய்வங்களின் எண்ணமெனில் நாம் எதுவும் செய்வதற்கில்லை. போரிடுக!” என்று கூவினார். அவருடைய அம்புகள் அஸ்வத்தாமனின் கவசங்களில் பட்டு தெறித்தன. தேர்த்தூண்களை வந்தடைந்து உதிர்ந்தன.

அஸ்வத்தாமன் தன் முகத்தருகே வந்த அம்பை கையிலிருந்த அம்பால் தட்டி தெறிக்கவிட்டு யுதிஷ்டிரனின் தேரை அறைந்து உடைத்தான். அவருடைய தேர்ப்பாகன் தேருடன் அலறியபடி சரிய புரவிகள் கட்டவிழ்ந்து கனைத்தபடி தாவி அகன்றன. அம்புகளுடன் குறுக்கே விழுந்த ஏழு புரவி வில்லவர்களை வீழ்த்தி ஏகாஸ்திரத்தால் யுதிஷ்டிரன் வில்லை அறுத்தான். தங்கள் தேர்களுடன் இருபுறத்திலிருந்தும் வந்து யுதிஷ்டிரனை காக்க முயன்ற வில்லவர்களை வீழ்த்தி அவர்களின் தேர்களை மண்ணிலிருந்து தூக்கி அறைந்தான். மேலும் முன்னகர்ந்து யுதிஷ்டிரனின் நெஞ்சக்கவசத்தையும் தோளிலைகளையும் உடைத்தான். “மணிமுடியை கழற்றி வையுங்கள், யுதிஷ்டிரரே. இனி போரில்லை… சிறுமைகொண்டு களம்நிற்பதை ஒழிக… மணிமுடியை கழற்றி வையுங்கள்.”

அமைதியான குரலில் “என் துண்டான தலையில் இருந்து அதை எடுத்துக்கொள்க, பாஞ்சாலரே! அதில் அறப்பிழையும் இல்லை. ஷத்ரியர்களுக்குரிய நெறி அது. உம் தந்தை நெறி மீறி இக்களத்தில் கொல்லப்பட்டதற்கு ஈடு செய்யலுமாகும்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். வில்தாழ்த்தி சில கணங்கள் நோக்கியபின் அஸ்வத்தாமன் “அரசே, முடிசூடிய அரசன் நடந்து கொள்வதற்கு சில நெறிகள் உண்டு. இக்கணம் வரை களத்தில் நெறிமீறாதவன் நான் ஒருவனே. இனியும் நெறிகளைப் பேணவே விழைகிறேன். இக்களம் எங்களால் முற்றும் வெல்லப்பட்டபின் முறைப்படி அந்த மணிமுடியை உங்கள் தலையிலிருந்து பெற்றுக்கொள்வோம். செல்க!” என்றான்.

“பாஞ்சாலரே, இது உயிர்க்கொடை எனில் நான் இதை ஏற்க இயலாது” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “நான் பேரரசன். எவரிடமிருந்தும் கொடைபெறலாகாது.” அஸ்வத்தாமன் வியப்புடன் நோக்கி பின் புன்னகைத்து “அளியால் அல்ல, நெறிநின்று மட்டுமே இதை சொல்கிறேன்” என்றான். “தாங்கள் இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசர். நான் உத்தரபாஞ்சாலத்தின் சிற்றரசன். நான் இப்போது மணிமுடியை பறித்தால் அது தனித்து வந்த அரசனிடம் கொள்ளையடித்ததாகவே ஆகும். அது கிராதரும் நிஷாதரும் கொள்ளும் வழிமுறை. உங்கள் படையை வென்று கொடிமுறித்த பின்னரே நான் அம்மணிமுடியை முறைப்படி கொள்ளவேண்டும்” என்றான்.

“எனில் சிற்றரசனென எனக்கு தலைவணங்கி பணிந்து பின்னகர்க!” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “அன்றி என் தலை கொய்து இம்மணிமுடியுடன் செல்க… நீர் என்னை களம்வென்றீர் என்றே என் குடி கருதுமென சொல்லளிக்கிறேன்” என்றார். அஸ்வத்தாமன் ஒருகணம் சொல்லிழந்தபின் மீண்டு “வணங்குகிறேன், பேரரசே!” என்று தலைகுனிந்தபின் தேர்ப்பாகனிடம் “தேரை பின்செலுத்துக!” என்று ஆணையிட்டான். தேர் பின்னூர்ந்து கௌரவப் படைகளுடன் இணைந்து கொண்டது.

தேர்த்தட்டில் தளர்ந்து அமர்ந்த அஸ்வத்தாமனை நோக்கி முதிய தேர்ப்பாகன் திரும்பி “தங்கள் ஆணைக்கு கட்டுப்பட்டவன் எனினும் இதை நான் சொல்லியாகவேண்டும், அரசே” என்றான். ஒருபோதும் அத்தகைய சொல்லையோ நோக்கையோ அவனிடம் கண்டிராத அஸ்வத்தாமன் திகைத்தபடி நோக்க “ஒன்றை அளிப்பவன் நிகரான ஒன்றை எதிர்பார்க்கிறான். அது அளிக்கப்படாவிடில் சினமடைகிறான். ஆறாப் பெருஞ்சினமொன்றின் விதை உங்கள் நெஞ்சில் ஊன்றப்பட்டுவிட்டது” என்றான் பாகன்.

“என்ன சொல்கிறாய்?” என்று கூவியபடி முன்னகர்ந்த அஸ்வத்தாமன் “யார் நீ?” என்றான். பாகன் “வஞ்சம் மீதூறலாம். அதன்பொருட்டே நீங்கள் நெறிமீறவும்கூடும்” என்றான். “யார்? யார் நீ?” என்று அஸ்வத்தாமன் கூச்சலிட்டான். பாகனின் கண்கள் இறந்த உடலில் விழித்திருப்பவை போலிருந்தன. “அறப்பெருஞ்செல்வன் முன்னால் நின்று தருக்கிவிட்டீர்கள். சொற்களைக் கேட்கும் தெய்வங்கள் சூழ்ந்திருக்கும் இப்பெருங்களத்தில் நின்று அதை சொல்லிவிட்டீர்கள்.” அஸ்வத்தாமன் உடைந்த குரலில் “யார்? யார்?” என்றான். “எவருக்கும் விலக்கில்லை” என்றான் பாகன். “என்ன?” என்றான் அஸ்வத்தாமன்.

அதற்குள் வலப்பக்கமிருந்து பறந்து வந்த பிறைஅம்பொன்று பாகனின் தலையை கொய்து சென்றது. தலையறுந்த உடல் வெறியாட்டெழுந்த பூசகன் என நடுக்கு கொண்டு அவன்முன் அமர்ந்து பின் கால்கள் இழுத்துக்கொண்டு துடிக்க தலை அப்பால் விழுந்து கீழே பெருகிப் பரந்திருந்த தலையுடல்கால்நெஞ்சுதொடைகளின் பரப்பில் மறைந்தது. அறியாமல் தலைக்கென விழிதேடிய பின் தலைதிருப்பி நோக்கியபோது குருதி குமிழியிட்டெழ பாகனின் உடல் அமரத்திலிருந்து மறுபக்கமாக சரிந்தது.