இருட்கனி - 52

பத்தாவது களத்தில் அமர்ந்திருந்த கும்பீரர் என்னும் சூதர் சுரைக்குடுக்கையின் மேல் கட்டிய மூங்கிலில் முதலைத் தோல் வார்ந்து உலர்த்தி இழுத்துக் கட்டி உருவாக்கிய மூன்று இழை குடயாழை மடியிலமர்த்தி அதை வலக்கையின் சிறுவிரலாலும் கட்டைவிரலாலும் நடுவிரலாலும் மீட்டி இடக்கையால் அருகில் இருந்த சிறுமுழவைத் தட்டி தாளமிட்டபடி கர்ணன் போருக்கெழுந்த களத்தின் காட்சியை கூறலானார். அவருடன் பிற சூதர்களும் இணைந்துகொண்டனர். பின்னிரவு அணைந்துகொண்டிருந்தமையால் காட்டுக்குள் இலைகளில் இருந்து பனித்துளிகள் சொட்டிக்கொண்டிருந்தன. முற்புலரியின் பறவைக்குரல்கள் சில எழுந்தன. ஆயினும் சிதைகளனைத்தும் மூண்டெழுந்து அனல் உறும புகை எழுந்தாட ஊன்நெய் உருகும் வாடையுடன் ஒளிர்ந்துகொண்டிருந்தன.

தோழர்களே, நான் குருக்ஷேத்ரக் களத்தின் தென்மேற்கு மூலையில் நோக்குமாடத்தில் அமர்ந்திருந்தேன். தென்னாட்டிலிருந்து களம்பாட அழைத்து வரப்பட்ட சூதன் நான். எனது முன்னோர்களில் எவரோ இக்குருக்ஷேத்ரக் களத்தில் அமர்ந்து இந்திரனும் விருத்திரனும் இயற்றிய பெரும்போரை கண்டனர். சொற்களில் அதை பொறித்தனர். உள்ளங்களில் அதை நிலைநிறுத்திச் சென்றனர். என் தலைவழியில் எவரோ இங்கு வந்து பரசுராமர் ஐந்து குளங்களை குருதியால் நிரப்பிய காட்சியை கண்டனர். என் மைந்தர் இங்கு காணப்போவதென்ன என்பதை இக்குருக்ஷேத்ரம் மட்டுமே அறியும். என் குருதியில் இருந்து முளைத்தெழுந்து இங்கே களம்பாட வந்துகொண்டே இருக்கிறார்கள். இங்கே இறப்பவர்களும் இவ்வாறு பிறந்து பிறந்து வந்துகொண்டே இருக்கிறார்கள். வலசைப்பறவைகள் வந்தமைகையில் மீன்களும் நண்டுகளும் முட்டை விரித்து வெளிவந்து பெருகி நிறைகின்றன.

குருக்ஷேத்ரம் குருதியால் கழுவப்படுகிறது. குருதியை உண்டு குருதிவண்ணம் கொள்கிறது. இங்கே ஒவ்வொரு சிற்றுயிரும் குருதியை அறிந்திருக்கின்றது. குருதியைத் தேடி பறவைகள் அணைகின்றன. குருதிக்கென மண்ணின் ஆழத்திலிருந்து நுண்ணுயிர்கள் முளைத்தெழுகின்றன. இங்கே ஒவ்வொரு கூழாங்கல்லிலும் குருதிவிழையும் தெய்வங்கள் உறைகின்றன. ஒவ்வொரு கல்லும் தெய்வச்சிலையான இம்மண்ணை வணங்குக! இதை அறநிலை என வகுத்த முன்னோரை போற்றுக! போர் வெங்குருதியின்றி அமையாதென்று நூல்கள் உரைக்கின்றன. துர்க்கை அன்னைக்கும் மகவீன்ற வேங்கைக்கும் குருதியே உகந்ததென்றறிக! குருதி தூயது. குருதியிலோடுகின்றன உயிர்க்குலங்களின் நினைவுகள். குருதியில் வாழ்கின்றன தெய்வங்கள் இட்ட ஆணைகள். குருதியாகி நின்றிருக்கிறது விண் நிறைத்துள்ள தழல். குருதி வெல்க! குருதி நிறைவுறுக! குருதி முடிவிலாது முளைத்து எழுக! ஆம், அவ்வாறே ஆகுக!

தோழரே, குருக்ஷேத்ரக் களத்தில் கர்ணன் அர்ஜுனனை எதிர்கொண்டு அம்புகளால் அறைந்து போரிட்டு நின்றிருக்க நான் தொலைவிலிருந்து கண்டவை இவை. ஓங்கி தாழ்த்தப்படும் வாளில் எஞ்சுவதென்ன? பெரும்பாறை உருண்டு வந்து மூடிய விதையில் காத்திருப்பதென்ன? முதிர்ந்த நாகம் தன் நஞ்சை அருமணியாக்கும் விந்தைதான் என்ன? இக்களத்தில் நிகழ்ந்தவை கோடி. நிகழக் காத்திருந்தவை கோடி கோடி. சூதரே, நிகழாது எஞ்சியவை முடிவிலாக் கோடி. எங்குள்ளன அவை? எவ்வண்ணம் எழுந்து வரும் அவை? புவிமேல் முளைக்காத புல்விதைகள் கோடிகளின்கோடி அல்லவா? அவற்றை ஆளும் தெய்வங்கள் எதற்கு பணிக்கப்பட்டிருக்கின்றன?

குருக்ஷேத்ரப் போர்க்களத்தில் அன்று களமெழுந்ததுமே அஸ்வத்தாமன் தீய குறிகளை கண்டான். இடமிருந்து வலமாக சிறு கரிச்சான் கீச்சொலி எழுப்பி கடந்து சென்றது. அவன் குடிலில் இருந்து முதற்காலடி எடுத்து வைத்த இடத்தில் ஒரு சிறுகல் வலக்காலில் தடுக்கியது. புரவியில் ஏறி அமர்ந்து அதை கிளப்பியபோது வழக்கத்திற்கு மாறாக அது இடக்காலெடுத்து வைத்து முன்னால் எழுந்தது. நன்கு பயிற்றுவிக்கப்பட்ட புரவி. அது வலக்காலை மட்டுமே முதலில் எடுத்துவைக்கும். அவன் அதன் கழுத்தில் தட்டியபடி குனிந்து நோக்கினான். அவனுடைய தேர்ப்பாகன் அருகே நின்றிருந்தான். “பிழை இயற்றிவிட்டது, அரசே. பிறிதொரு புரவியை…” என அவன் தொடங்க அஸ்வத்தாமன் கைநீட்டி அவனை சொல்தடுத்தான். “தாங்கள் ஏறுவதற்கு முன்னரே ஏறிவிட்டீர்கள் என்று ஓர் உடற்குறி எழுந்தது. அது வலக்காலை எடுத்துவைத்துவிட்டது. ஏறிய பின் இடக்காலை…” என்றான் தேர்ப்பாகன். அஸ்வத்தாமன் அவனை வெற்றுவிழிகளுடன் நோக்கினான். தன் உடலில் அப்படி ஒரு அசைவு எழுந்ததா?

அவன் முகக்குறியில் சினமிருந்திருக்கலாம். மிகையாக சொல்லிவிட்டோமா என்று அஞ்சிய தேர்ப்பாகன் “என் விழிமயக்காகவும் இருக்கலாம்” என்றான். சினம் தன்னுள் இல்லை என அஸ்வத்தாமன் உணர்ந்தான். துயில்நீத்து களைத்து தசைகள் தொய்ந்த முகம் உள்ளத்துத் துயரையும் சலிப்பையும் சினத்தையும் மிகையாக வெளிப்படுத்துகிறது. “அதன் குறிப்பொருள் என்ன?” என்றான். அவன் “நான்…” என்றான். “சொல்க, புரவிகளைக் கொண்டு குறிப்பொருள் உரைக்கும் வழக்கும் குதிரைச்சூதர்களுக்கு உண்டு அல்லவா?” அவன் தயங்கி “அரசே, ஓங்கி அமையும் கை” என்றான். “சொல்” என்றான் அஸ்வத்தாமன். “அது உண்டு செரிக்காத உணவுபோல் நஞ்சு” என்றான் சூதன். அஸ்வத்தாமன் பொருள் விளங்காத விழிகளுடன் நோக்கிவிட்டு தலையை மட்டும் அசைத்தான்.

அன்று நிகழப்போவதென்ன என்னும் விந்தை உணர்வை அஸ்வத்தாமன் அடைந்தான். அன்று களம்படப் போகிறோமா என்ன? அவ்வெண்ணம் எழுந்ததுமே அவன் புன்னகைத்தான். இறப்பிலி என்று அவனை தந்தை வாழ்த்தியிருந்தார். இறப்பிலி என்று மைந்தரை வாழ்த்தாத தந்தையர் எவருளர்? ஆனால் தன் தவத்தை முழுதும் திரட்டி அவனுக்கு இறவாமை என அளித்துச் சென்றிருந்தார் தந்தை. தவத்தை அவனுக்கு அளித்துவிட்டு வஞ்சத்தை மட்டும் தனக்கென வைத்துக்கொண்டார். தலையில் ஓர் அருமணியென அவன் அந்த இறவாமையை சூடியிருந்தான். அதன் எடைக்குக் கீழ் எப்போதும் வாழ்ந்திருந்தான். மின்மினி தன் ஒளியால் ஏந்திச்செல்லப்படுவதுபோல் அது அவனை கொண்டுசென்றது.

இறவாதொழிதல். மலைகளைப்போல் காலமிலாது எஞ்சுதல். வானம்போல் அனைத்திற்கும் மேல் சொல்லின்றிப் படர்ந்திருத்தல். பிறந்த நாளிலிருந்தே இறப்பிலி என்னும் சொல்லை அவன் கேட்டிருந்தாலும் ஒருமுறைகூட அதன் முழுப் பொருள்விரிவு அவன் உளத்தில் எழுந்ததில்லை. முதல்முறையாக அன்று குருக்ஷேத்ரக் களமுகப்பு நோக்கி புரவியில் செல்லும்போது அந்தச் சொல்லின் முழுவிரிவும் வந்து அவனை சூழ்ந்தது. அன்று அக்களத்தில் அவன் வீழ்ந்துபட விழைந்தான். எஞ்சுவது ஒன்றுமில்லை என்றான பின்னர் உயிர் மிஞ்சி இருப்பதில் பொருளில்லை. இறப்பென்பது ஒவ்வொன்றுக்கும் பொருள் அளிக்கும் இறுதிச் சொல். அது உரைக்கப்படாதபோது அனைத்துச் சொற்களும் வெற்றொலிகளாகி விரிந்த முடிவிலா வெளியே அவனை சூழ்ந்திருந்தது.

தன் படைசூழ்கையை அவன் ஒரு நாழிகைக்குள் முற்றாக நோக்கி முடித்து களமுகப்பிற்கு சென்றான். அங்கு படைசூழ்கை அமைக்கத் தொடங்கிய நாள் முழுப் படையையும் விழிகளால் தொட முடியாது என்பதனால் பன்னிரு காவல்மாடங்களின் மீதேறி அங்கு பாகைமானியை பதித்து ஒவ்வொரு பாகைக்கும் விழிகளால் திசைஎல்லை வரை கோடிழுத்து கணக்கிட்டு பலகையில் சுண்ணக்கட்டியால் குறித்து தொகுத்து தான் அளித்த சூழ்கைத்திட்டம் பருவடிவம் கொண்டிருப்பதை உறுதிசெய்தபின் மீள்வது வழக்கமாக இருந்தது. எத்தனை நோக்கிய பின்னரும் உள்ளம் நிறைவுறாமல் மீண்டும் மீண்டும் காவல்மாடங்களில் ஏறி நோக்குவான். ஒரு பகுதியை உளம்போனபோக்கில் தெரிவுசெய்து அதை நுணுக்கமாக வரைவுடன் ஒப்பிடுவான். ஆனால் அன்று புரவிமேல் கால் வளையங்களில் பாதம் ஊன்றி உடலெழுப்பி நின்று நோக்கினாலே முழுப் படையையும் பார்க்கமுடியும்போல் தோன்றியது.

ஒருமுறை சுற்றி வந்தபோது அத்தனை படைவீரர்களின் முகங்களிலும் ஒற்றை உணர்வே எஞ்சுவதுபோல் தெரிந்தது. அது என்ன என்ன என்று தொட்டுத் தொட்டுத் தவித்த உள்ளம் படைமுகப்பை சென்றடைந்தபோது தெளிந்தது. அது அக்களத்தில் இறக்க வேண்டுமெனும் விழைவே. ஒவ்வொரு கண்களிலும் முகக்குறியிலும் சாவு சாவு சாவு என்னும் ஊழ்கச்சொல் திகழ்ந்தது. அந்தப் படைவிரிவிலிருந்து அவ்வுணர்வு தனக்கு வந்ததா? அன்றி ஆடிப்பெருக்கில் தன் முகம் தெரிவதுபோல் அதுவே எழுந்து படையெனத் தெரிகிறதா? உளச்சோர்வு சாவுக்கான விழைவை உருவாக்குகிறது. உளச்சோர்வு பிழையுணர்விலிருந்து எழுகிறது. பிழையுணர்வு பொருளிலாச் செயலின் விளைவு. சாவினூடாக அப்பொருளின்மையை கடந்துவிட இயலுமென எண்ணுகிறது உள்ளம். சாவால் அனைத்தையும் முழுமையாக்கிவிட முடியும். பிசிறுகளை களைந்து அனைத்து முடிச்சுகளையும் இட்டு ஓர் அழகிய வடிவை உருவாக்கிக்கொள்ள முடியும்.

படைமுகப்பில் காம்பில்யத்தின் படைகள் மறுபுறம் படைக்கலங்கள் ஏந்தி அணி நிரந்து நின்றிருப்பதைப் பார்த்தபடி தன் தேரில் வில்லேந்தி நின்றபோது அஸ்வத்தாமன் ஓரிரு கணங்கள் துயிலுக்குள் சென்று எங்கெங்கோ திகழ்ந்து மீண்டான். அங்கிருந்த அத்தனை படைவீரர்களும் துயிலிலிருந்து எழுந்து மீண்டும் வழுக்கி வழுக்கி துயிலுக்குள் விழுபவர்கள்போல் தோன்றினார்கள். இப்போரை முடித்து வைக்கப்போவது துயில்தான். பிற அனைத்தையும்விட துயிலே பெரிதென உடல் முடிவுசெய்யும் தருணம். ஒத்தி வைக்கப்பட்ட துயில்கள், எஞ்சவிட்ட துயில்கள் அனைத்தும் ஒன்றெனத் திரண்டு பெருந்துயிலென மாறி வந்து சூழ்ந்துகொள்ளவிருக்கிறது. போர் முடிந்து திரும்புகையில் இறந்து கிடப்பவர்களைக் கண்டு அவர்கள் ஆழ்துயில்கொண்டிருக்கிறார்கள் என எண்ணி அத்துயிலுக்காக ஒருகணம் ஏங்கி திகைத்து மீளாத எவரும் அங்கில்லை.

அவன் ஒவ்வொருவர் விழிகளாக பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு சிறு துணுக்குறலுடன் திரும்பி தனது படையை பார்த்தான். உத்தர பாஞ்சாலத்தின் படையினரும் காம்பில்யப் படையினரும் ஆடிப்பாவைகள் என ஒருவரையொருவர் காட்டினர். பதினேழு நாள் போரில் குருதியும் புழுதியும் பட்டு வண்ணம் மறைந்து ஆடைகள் ஒன்றென ஆகிவிட்டிருந்தன. போர்க்களத்தில் திகழ்ந்து, இரவு துயில்புகுந்து ஆழங்களில் அலைந்து உள்ளங்கள் ஒன்றென மாறிவிட்டிருந்தன. விழிகளை தொட்டுத் தொட்டுச் செல்ல அத்தனை விழிகளும் ஒன்றே என்று கண்டு சலிப்புடன் அவன் தலையசைத்தான். ஒரு நிலத்தவர். ஒற்றைப் பெருங்குடியைச் சேர்ந்தவர்கள். இரு அரசர்களால் எதிரெதிரென பகுத்து நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அங்கு நின்றிருக்கும் படையினர் அனைவருமே ஒருகுடியர் ஒருநிலத்தர் அல்லவா? அனைவருமே பாரதவர்ஷத்தவர் அல்லவா?

ஒருமுறைகூட களத்தில் அவ்வாறு உள்ளம் நிலைகொள்ளாது எழுந்ததில்லை என்று அஸ்வத்தாமன் உணர்ந்தான். அத்தகைய எண்ணங்களை எப்போதும் அவன் இகழ்ந்தே வந்திருந்தான். அவ்வாறு சொற்கூட்டி விளையாடுவதில் தந்தைக்கு விருப்பம் இருந்தது. யுதிஷ்டிரன் பெருவிழைவுடன் அதில் ஈடுபடுவதுண்டு. அரிதாக அர்ஜுனனும் அதில் கலந்துகொள்வான். அப்பொழுதெல்லாம் சலிப்புடன் “இது அந்தி வெயிலில் தன்னுரு பார்த்து மகிழும் குழந்தைக்கு நிகரான பேதைமை. ஒவ்வொன்றும் நீள்நிழல் கொண்டிருக்கும் வெளி இது. ஒவ்வொன்றுக்கும் தெய்வங்கள் அளித்த அளவும் எடையும் மதிப்பும் மட்டுமுள்ள உலகிலேயே நான் வாழ விழைகிறேன்” என்றான். துரோணர் நகைத்து “ஒவ்வொன்றுக்கும் உருமாறும் நிழல்களை அளித்த தெய்வங்கள் அறிவிலிகள் அல்ல” என்றார்.

“முடிவிலாத ஆடிப்பாவைகளும் தெய்வங்களே சமைப்பதுதான். அவற்றில் தெய்வங்களே விளையாடி மகிழட்டும்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். இதோ நான் நிழல்களுடன் ஆடிக்கொண்டிருக்கிறேன். இது அந்தி. மீளும் இரவு. நிழல்கள் நீண்டு நீண்டு மேலும் நீள முடியாமல் ஆகி நிலைத்து கரைந்து மறைகின்றன ஒற்றைப்பெருநிழலில். அப்பெருவெளிக்கருமையை அஞ்சுகிறது தனிநிழல். படம்விரித்து எழுந்து பொருட்களை, பொருள்வய உலகை சுற்றி வளைத்து நொறுக்கி விழுங்கி தன் வயிற்றில் அடக்கிக்கொள்கிறது. அவனுடைய எண்ணங்களை அறுத்தபடி முரசுகள் முழங்கத்தொடங்கின. “எழுக! எழுக!” என கைதூக்கி ஆணையிட்டு வில் குலைத்தபடி அவன் பாண்டவப் படைப்பெருக்கை நோக்கி பாய்ந்துசென்றான்.

சிகண்டி முன்னின்று நடத்திய பாஞ்சாலப் படையை அஸ்வத்தாமன் சந்தித்தான். சிகண்டியின் வில் வல்லமையைக் குறித்து அவன் கதைகளெனக் கேட்டிருந்தான். போர்நாட்களில் ஒவ்வொரு முறையும் மேலும் மேலும் அறிந்துகொண்டிருந்தான். ஒவ்வொரு மதிப்பீட்டையும் சிகண்டி கடந்து செல்வதை கண்டான். பின்னர் அறிந்தான், அப்போர்க்களத்தில் வஞ்சம் துளியும் இன்றி, வெற்றி தோல்வி என ஒருகணமும் கருதாது, போர்புரிபவர் அவர் என்று. அந்நிலையில் போர் வெறும் பயிற்சி என்றாகிவிடுகிறது. ஒவ்வொரு அம்பும் அதை தொடுப்பவனை பயிற்றுவிக்கிறது. ஒரு மெய்த்துளியை அம்பறாத்தூணியில் எஞ்சவிட்டே அது எழுந்து செல்கிறது. பயின்று தேர்ந்து கணம் தோறும் வளர்ந்து அவர் நின்றிருந்தார்.

சிகண்டியை அம்புகளால் எதிர்கொள்ளத் தொடங்கியபோதே அன்று புதிதெனப் பிறந்து அவர் வந்திருப்பதை அஸ்வத்தாமன் உணர்ந்தான். அவருடைய ஒவ்வொரு அம்பையும் தன் அம்பால் அறைந்து வீழ்த்திக்கொண்டிருக்கையிலேயே போர் நெடும்பொழுது நீடிக்க இயலாதென்று அவனுக்கு தெரிந்தது. சிகண்டியின் அம்புகள் அவன் தொடுத்த அம்புகளுக்கு நிகரான விசையும் எடையும் கொண்டிருந்தன. எனில் தன் அம்புகள் ஒவ்வொன்றையும் முற்றாக கணிக்க இயல்கிறது அவரால். ஒற்றை அம்புகூட முன்கணிக்கப்படாது வெற்றுப்பயிற்சியின் விசையால் தொடுக்கப்படவில்லை. எவ்வண்ணம் அதை கணிக்கிறார்? எங்கே திறந்திருக்கிறது என் வாயில்? அஸ்வத்தாமன் ஒவ்வொரு வழியாக உளம் செலுத்தி தன்னை தொகுத்து மூடிக்கொண்டான். ஆயினும் சிகண்டி அவன் அருகிலென, அகத்தே என திகழ்ந்து அவனை அறிந்திருந்தார்.

ஒவ்வொரு அம்புக்கும் எதிரம்பு தொடுத்தபடி சிகண்டியை கூர்ந்து நோக்கிக்கொண்டு போர் புரிந்தான் அஸ்வத்தாமன். எவ்வண்ணம் கணிக்கிறார்? அவன் உள்ளம் எங்கோ முட்டித் தவித்தது. தன் முன் நின்று போரிடுவது ஒரு மனிதரல்ல, சிலை என்று ஆழம் உணர்ந்தமையின் தவிப்பு அது என சித்தம் கண்டடைந்தது. பின்பு ஒரு தண்தொடுகை என அவன் அறிந்தான், சிகண்டி தன் விழிகளை நோக்கவில்லை என்று. விழிகளின்மை அவரை சிலையென்றாக்கியது. விழிகளன்றி மானுடனை அறியும் வழி பிறிதொன்றுண்டா என்ன? சிகண்டியின் விழிகளை நோக்க இயன்றால் அவர் எண்ணுவதென்ன என்று உணர்ந்துகொள்ளலாம். விழிகள் விழிகள் விழிகள்… விழிகளில்லா முகம்போல் மூடப்பட்ட பிறிதொன்றில்லை.

சிகண்டி பாதி விழி மூடி துயில்பவர் போலிருந்தார். அவருடைய மெலிந்து நீண்ட இரு கைகளும் கொடிநடனம்போல் சுழன்று அம்புகளை தொடுத்தன. எவ்வண்ணம் என்னுள் நுழைகிறார்? எவ்வண்ணம் என்னை அறிகிறார்? அஸ்வத்தாமன் உள்ளம் அலைக்கழிந்தது. இரு படைகளும் அம்புகளால் தொடுத்துக்கொண்டு இரு முள்ளம்பன்றிகள் முட்களைக் கொண்டு போரிடுவதுபோல் போரிட்டன. உலோகங்கள் உரசிக்கொள்ளும் ஓசைகள் அங்கு ஒரு பெரும்சமையல் நிகழ்வதுபோல கனவுக்குள் மாயம் காட்டின. அங்கிருந்த அனைவருமே சிலகணங்கள் கனவுக்குள் சென்றனர். உடல்கள் முந்தைய கணத்தின் அசைவையும் விசையையும் முன்னெடுக்க அவர்கள் இன்னுணவு நறுமணம் கொண்டுநிறைந்த உண்டாட்டில் திளைத்துக் கூச்சலிட்டு திடுக்கிட்டு மீண்டனர்.

தன்னுணர்வு கொண்டபோது வியர்வை முளைத்திருந்தது. மெல்லிய குமட்டலும் எழுந்தது. முள்காடு காற்றில் உலைவதுபோல் வேல்களும் வாள்களும் சுழன்றன. உருகிவழிந்த வெயில் கண்களை கூசச் செய்தது. சென்று முட்டிய ஒரு கணத்தில் அஸ்வத்தாமன் உணர்ந்தான், சிகண்டி எவ்வண்ணம் தன் உள்ளத்தை உணர்கிறார் என்று. தன்னைப் பகுத்து ஒரு பகுதியை பிறரென்றாக்கி எதிர்நிறுத்தி போரிட்டுக்கொண்டிருக்கிறார். இப்போது எதிர் முனையில் அஸ்வத்தாமனாக அவரே நின்று பொருதிக்கொண்டிருக்கிறார். அவரை நோக்கி எதிர்வினையாற்றுவதனால் அவன் அவரால் நிகழ்த்தப்பட்டான். அவனேயாகி நின்று அவர் தன்னை நிகழ்த்திக்கொண்டிருந்தார். தன்னுடன் தான் பொருதுபவர் தன்னுடைய விழைவால் மட்டுமே தோல்வி அடைவார்.

அஸ்வத்தாமன் அவ்வுணர்வால் மேலும் மேலும் சீற்றம் கொண்டு விசை மிக்க அம்புகளால் சிகண்டியை அடித்தான். வியாஹ்ராஸ்திரம் நிலமறைந்து வாள்பற்கள் காட்டி மீசை விடைக்க உறுமும் வேங்கை என ஓசையிட்டபடி சென்றது. மிருகாஸ்திரம் காற்றில் பாயும் கலைமான் என ஊளையிட்டபடி பறந்து சென்று தாக்கியது. பஸ்மாஸ்திரம் புழுதி கிளப்பி திரையிட அதை மின்நெளிவென துளைத்துச்சென்று அறைந்தது வஜ்ராஸ்திரம். அனைத்து அம்புகளையும் அவற்றுக்கு ஈடான அம்பால் சிகண்டி தடுத்தார். ஒரு துளி சிந்தாமல் ஒரு புட்டியிலிருந்து இன்னொன்றுக்கு மதுவை செலுத்துவதுபோல. ஒரு சொல் துளியும் பொருள்குன்றாமல் புரிந்துகொள்ளப்பட்டதுபோல.

எவ்வண்ணம் அவ்வாறு முற்றாக பகுத்துக்கொள்ள இயல்கிறது? மானுடர்க்கு இயல்வதுதானா அது? ஏனெனில் அவர் ஒருவர் அல்ல, இருவர். ஆணும் பெண்ணும் ஓருடலில் குவிந்தவர். ஆணென்றும் பெண்ணென்றும் நின்று வாழ்ந்தவர். ஆணும் பெண்ணும் போரிட்டும் முயங்கியும் திகழும் களம் அவர் உடல். இங்கு ஒருமுனை நிறுத்தி மறுமுனையை எந்த எல்லை வரைக்கும் கொண்டு செல்ல அவரால் இயலும். பெண்ணொருபாகம் வைத்த பெருமானே இங்கு வந்தால் மட்டுமே இவரிடம் போரிட இயலும். முப்புரம் எரித்த அம்புகளுடன் அவர் எழுந்தாகவேண்டும். உமை தேரோட்டவேண்டும். மூவிழி அனல்வடிவுகொண்டு அம்புகளிலெழவேண்டும்.

இடியோசை எழுப்பிய பர்ஜன்யாஸ்திரம் நிலத்தை அறைந்து புழுதி கிளப்பியது. சுழன்று சுழன்று அறைந்தது வாயுவாஸ்திரம். சிகண்டி ஒருகணமும் உளமொழியவில்லை. தன் கை தளர்வதை அஸ்வத்தாமன் உணர்ந்தான். ஆனால் பின்னடைதல் தன் இயல்புக்கு ஒவ்வாதது. உயிர்கொடுப்பதே வழி. ஆனால் இறவாதவனை வெல்ல எவரால் இயலும்? ஈருடலனே இயன்றால் என்னை கொல்! உன்னை விழைந்து கேட்பதொன்றே, கொல்க என்னை! உன் அருந்தவத்தால் என்னை வெல்க! ஆற்றி அகன்று நின்றிருக்கும் உனது ஊழ்கத்தால் என்னை அழித்துச்செல்க! உன் அணைந்த வஞ்சம் இறுகிய கரும்பாறையால் அறைந்து என்னை விடுதலை செய்க!

அஸ்வத்தாமன் மேல் மேலும் மேலும் அம்புகளைத் தொடுத்தபடி சிகண்டி முன்னெழுந்து சென்றார். இருபுறங்களிலும் இருந்து திருஷ்டத்யும்னனின் படைவீரர்கள் வந்து சேர்ந்துகொள்ள சிகண்டி இரு கைகளையும் விரித்து முன்னால் வரும் கடல் நண்டுபோல் கௌரவப் படையை அணைக்க வந்தார். சகுனியின் ஆணை பின்னிருந்து ஒலித்தது. “உத்தரபாஞ்சாலர் பின்னடைக! படைகளை காத்துக்கொள்க! படைகள் அழியலாகாது! உத்தரபாஞ்சாலப் படைகளை மீட்டுக்கொண்டு பின்னடைக!” அஸ்வத்தாமன் இருபுறமும் திரும்பிப் பார்த்தான். கௌரவப் படை பாஞ்சாலர்களின் வில்லுக்கு முன் சிதறி அழிந்து நிலம் தழுவிக்கொண்டிருந்தது. “பின்னடைக!” என்று கைகாட்டியபடி மூச்சை இழுத்து வில் தாழ்த்தினான்.

அவனது தேர்ப்பாகன் தேரை இழுத்து பின்னடையச் செய்ய கௌரவப் படைவீரர்கள் கூச்சலிட்டபடி ஒருவரோடொருவர் முட்டிக் கலைந்து பின்னடைந்தனர். நிலைக்கேடயங்களைத் தூக்கி ஒன்றுடன் ஒன்று ஒட்ட வைத்து இரும்புச் சுவரொன்றை சமைத்தபடி பின்நீங்கத் தொடங்கினர். தேரிலமர்ந்து பின்னடைந்து செல்கையில் அஸ்வத்தாமன் சிகண்டியின் முகத்தை நோக்கிக்கொண்டிருந்தான். அங்கு ஒருகணமாவது வெற்றியின் உவகை எழுந்தால் நான் வென்றேன். ஒருகணம் விழி தூக்கி பின்னடையும் என் முகத்தை அவர் நோக்கினால் இத்தருணத்தை கடந்தேன். ஆனால் அஸ்வத்தாமன் தன் முன் நின்றிருப்பதையே சிகண்டி அறியவில்லை. தன் முன் எழுந்து பொருதி மீள்பவன் எவனென்றே உணரவில்லை. எங்கோ ஏதோ களத்தில் அவர் தன் ஆடிப்பாவையுடன் போர்புரிந்துகொண்டிருந்தார்.

கௌரவப் படைகள் முற்றாக விலகி படைமுகப்பு ஒழிய இருபுறத்திலிருந்தும் கிருபரும் கிருதவர்மனும் நடத்திய கேடயப்படை வந்து முகப்பை மூடிக்கொண்டது. தளர்ந்து தேர்த்தட்டில் அமர்ந்த அஸ்வத்தாமன் ஒருகணம் அன்றைய போரின் தொடக்கத்தில் தான் பீஷ்மரை எண்ணிக்கொண்டதை நினைவுகூர்ந்தான். காலை அரையிருளில் படைமுகப்பில் நின்று தன் முன் விரிந்திருந்த பாண்டவப் படைவிரிவை பார்த்தபடி, தனக்குப் பின் எழுந்த கௌரவப் படையின் சூழ்கையை உள்ளத்தால் தொட்டுத் தொட்டு மீண்டும் ஒருமுறை சீர்நோக்கிக்கொண்டிருந்தபோது அப்போர்க்களத்தின் வெற்றிதோல்விக்கு அப்பால் சென்று உளம் சலிப்புற்று அவன் நின்றிருந்தான். அப்போது குருக்ஷேத்ரத்தின் போர் தொடங்கிய முதல் நாள் பீஷ்மரைக் கண்டதை நினைவுகூர்ந்தான்.

இருபுறமும் திசைதொடும் பெருக்கென படைகள் விரிந்திருக்க, போர் போர் என ஒவ்வொரு படைக்கலமும் துடித்துக்கொண்டிருக்க, படைமுகப்பில் நின்றிருந்த பீஷ்மர் விலக்கமும் சலிப்பும் கொண்டிருந்தார். அவர் உடலில் இருந்த தசைகள் அனைத்தும் தளர்ந்திருந்தன. கை தொங்கி தொடையை தொட்டுக்கொண்டிருந்தது. அதை உணர்ந்த கணம் தானும் அவ்வாறே நின்றிருப்பதாகத் தோன்றியது. இயல்பாக விழிதிருப்பி நோக்கியபோது கர்ணனின் மைந்தன் விருஷசேனனை பார்த்தான். கர்ணன் தேர்த்தட்டில் விஜயத்தை ஏந்தி வலக்கையால் மீசையை சுழித்தபடி நின்றிருந்தான். தளர்ந்த தோள்களுடன் சற்றே சாய்ந்த வில்லுடன் தேர்த்தட்டில் விருஷசேனன் நின்றிருந்தான். இருவருமே ஒன்றின் வடிவங்களென தோன்றியது. விருஷசேனனிலிருந்து வளர்ந்து எழுந்தவன் போலிருந்தான் கர்ணன். அன்றி பின்னடைந்து விருஷசேனனை வந்தடைவன்போல்.

முரசுகள் முழங்க விருஷசேனனின் இறப்பு அறிவிக்கப்பட்டது. “அங்கநாட்டு பட்டத்து இளவரசன் விருஷசேனன் மறைந்தார்! அங்கநாட்டு இளவரசர் மறைந்தார்! இளைய அங்கர் வாழ்க! விண்புகுக, மாவீரர்!” ஒருகணம் அந்த முரசொலியை அஸ்வத்தாமன் செவிகொண்டான். பின்னர் “எழுக படை! எழுக!” என ஆணையிட்டு தன் வில்லவர் படையை தொகுத்து போர்முகம் நோக்கி எழுந்தான்.