இருட்கனி - 51

கர்ணனும் அர்ஜுனனும் ஒருவரையொருவர் மீண்டும் அம்புமுனைகளால் சந்தித்துக்கொண்டனர். கால மடிப்புகளில் மீளமீள அவ்வாறு சந்தித்துக்கொண்டே இருப்பதைப்போல இருவரும் உணர்ந்தனர். நூற்றுக்கணக்கான சந்திப்புகளில் ஒவ்வொரு முறையும் உணர்ந்ததுபோல் அது அங்கு தொடங்கவில்லை, எவ்வண்ணமும் அங்கு முடியப்போவதுமில்லை என்ற உணர்வை அவர்கள் அடைந்தனர். எஞ்சியிருப்பது அத்தருணம் மட்டுமே. அதில் வெல்வது எவர் எனும் வினா. வென்ற பின் தொடர்வதென்ன என்பதை அவர்கள் அறியவியலாது. வெல்வது எதன் தொடர்ச்சி என்பதையும் அறியவியலாது. இருபுறமும் அறியமுடியாமைகளின் பெருவெளி அவர்களை இரு கைகளென அள்ளி அழுத்தி அருகணையச் செய்தது. இருவரும் பின்பக்கம் உணர்ந்த பெருவிசையை மறுகணமே முன்பக்கம் ஈர்ப்பென அறிந்தனர். அத்தனை நாளும் தாங்கள் ஒருவரை ஒருவர் கவர்ந்திழுப்பதாக எண்ணி மயங்கியது அவ்விசையையே எனத் தெளிந்தனர்.

அம்பு தொடுத்து ஒருவரையொருவர் எதிர்கொண்டதுமே அக்கணம் முடிவிலா கணங்களின் ஒழுக்கின் ஒரு துளி என ஆயிற்று. ஒவ்வொரு கணத்திலும் எவர் வெல்கிறார் என்பதே வினா. ஒவ்வொரு அம்பிலும் எந்த அம்பு முந்துகிறது என்பது. முந்தும் ஒரு அம்பு விண் நிறைந்திருக்கும் புடவிகள் அனைத்தையும் ஆளும் பெருநெறி ஒன்றின் துளி. அவ்வண்ணமே ஆகுக என்று பணிக்கப்பட்டவர்கள் அவர்கள். அவ்வண்ணமே தன்னை நிகழ்த்திவிட்டு இன்மை நோக்கி செல்பவர்கள். நிகழ்கின்றனவா கனவிலெங்கோ அலைகொள்கின்றனவா என்றறியாத களம். கொன்று கொன்று குவித்தனர் மானுடர். ஒன்றுள் ஒன்று புகுந்தன படைகள். மானுடர் ஒருவரை ஒருவர் எவ்வெல்லை வரை கொன்றழிக்க முடியும்? இரு பாம்புகள் ஒன்றை ஒன்று விழுங்கி இரண்டுமில்லாமல் ஆகிவிடக்கூடுமா என்ன?

ஒவ்வொரு அம்பும் தன் எதிர்அம்பை முன்னரே அறிந்திருந்தது. முன்பு நிகழ்ந்த பல்லாயிரம் களங்களில் அவை சந்தித்துக்கொண்டிருந்தன. உலோக முனைகள் முட்டி ஒலித்த மணியோசை முந்தைய கணங்களுடன் இணைந்து ஒரு ரீங்காரமென மாறி, ஊழி முதல் ஊழி வரை காலமிலி என்றே ஆகி, ஒலிக்குமொரு ஒலிக்கோடு. பல்லாயிரம் ஒலிக்கோடுகள். அவை ஒன்றையொன்று அறிவதே இல்லை. ஒருகணத்திலிருந்து மறுகணம் வரை விரிந்திருக்கும் யுகங்களில் அவை சென்றுகொண்டே இருந்தன. ஒவ்வொரு இடிமின்னலும், ஒவ்வொரு எரிகுமிழியும், ஒவ்வொரு புழுதிமலர்வும், ஒவ்வொரு மண்ணதிர்வும், ஒவ்வொரு குருதிநிணப்பொழிவும் அவ்வண்ணமே முன்னரே நிகழ்ந்திருந்தது. மீண்டும் நிகழவிருந்தது.

அக்களத்தில் ஒருவரையொருவர் விழிகளால் தொடுத்துக்கொண்டு பிறர் உளரென்றே அறியாமல் அவர்களிருவரும் போரிட்டனர். அர்ஜுனனுக்குப் பின்னால் சுருதகீர்த்தியும் சுருதசேனனும் புறத்துணை அளித்தனர். அர்ஜுனனின் வண்ணநிழல்கள் என நின்று போரிட்டு அவர்கள் கர்ணனுக்குப் பின்னால் அரைவட்ட வடிவில் துணைப்புறம் சேர்த்த கர்ணனின் மைந்தர்களை தாக்கினர். விருஷசேனனின் அம்புகளால் சுருதகீர்த்தி முற்றாகவே தடுக்கப்பட்டான். திவிபதன் சுருதசேனனை தடுத்தான். எஞ்சிய கர்ணனின் மைந்தர்கள் இரு சரடுகளென முன் நீண்டு வந்து அர்ஜுனனைத் தொடர்ந்து எழுந்து வந்த பாஞ்சாலத்து வில்லவர் படையை எதிர்கொண்டனர்.

தேர்முகப்பில் அமர்ந்திருந்த இளைய யாதவர் அரைவிழி மூடி, இசைமயக்கில் அமர்ந்து யாழ் மீட்டுபவர் போலிருந்தார். ஒற்றைக்கையில் அவர் பற்றியிருந்த ஏழு கடிவாளச்சரடுகளும் ஏழு ஸ்வரங்களைச் சூடிய யாழ்நரம்புகள். அவற்றை அவர் சுண்டவில்லை. இழுக்கவும் இல்லை. இயல்பாக பற்றி மடியில் வைத்திருப்பது போலிருந்தார். ஆனால் அவற்றில் ஓடிய விரல்களின் வழியாக ஒவ்வொரு புரவியும் அவர் ஆணையை அறிந்தது. ஒவ்வொன்றும் தனித்தனியாக தங்கள் ஆணையை இயற்ற அவ்வசைவுகள் ஒன்றெனக் கூடி தேரை செலுத்தின. அத்தேர் மலர்களில் அமர்ந்து இலைச்செறிவில் ஊடாடி அலையும் வண்டுபோல் பறந்தது. சரிந்து சுழன்று எழுந்து வளைந்து முன்னெழுந்து பின்னமைந்தது.

இளைய யாதவரின் வலக்கையில் அமைந்த சவுக்கு காற்றில் வெறுமனே நெளிந்தது. அதன் நுனியிலிருந்த தோற்சரடு காற்றில் வளைந்து வளைந்து உருவாக்கிய வடிவங்கள் பின்நிற்கும் படையினருக்கான ஆணைகள் என்பதை சல்யர் உணர்ந்தார். அர்ஜுனனின் தேர் கர்ணனின் அம்புகளிலிருந்து ஒழிந்து எழுந்து அகன்று எதிரம்பை உமிழ்ந்தது. அது நாகமொன்றின் தலை. பின்புறம் அலைநெளியும் உடலே தொடரும் படை. அத்தேர் ஒரு சிறு ஆடி என்றும் அதிலிருந்து எழும் அம்புகள் ஒளிக்கதிர்கள் என்றும் தோன்றின. அவற்றை நோக்கி செல்லும் அம்புகள் அவ்வண்ணமே திரும்பி வந்தன. அர்ஜுனன் அத்தேரின் உலோகவளைவுகளில் நின்று நெளிந்தாடும் பாவை போலிருந்தான். அவன் முகத்தில் கணம்தோறும் மாறிக்கொண்டிருந்த உணர்வுகள் அக்களத்தின் எதிரொளிப்பு.

சல்யர் தன் தேர்த்தட்டில் அமர்ந்து கூச்சலிட்டுக்கொண்டிருந்தார். “சூழ்க! அவனை சூழ்ந்துகொள்க! இத்தருணம் இனி அமையப் போவதில்லை. இக்களத்தில் இதுவே உங்கள் இறுதிச் சந்திப்பு என்று அமையட்டும். அங்கனே, அவன் இடப்புறத்தை அடி. இதுவரை நோக்கியதில் அவன் இடப்புறமே காப்பு தளர்ந்தது எனத் தெரிகிறது. ஆகவேதான் அத்தேர் எப்பொழுதும் இடப்புறம் காட்டாது வலம் சுழிக்கிறது. இடப்புறத்தில் அடி. இடப்புறத்தில் அவன் தேரை உடை!” தேர்வலர்களின் எல்லைகளைக் கடந்து அவரே அப்போரை நிகழ்த்துபவர் என அவர் கொந்தளித்தார். “எளிய அம்புகள் இனி உதவாது. எல்லா எல்லைகளும் கடக்கப்பட்டுவிட்டன. ஐம்பருக்களின் மதம் கொண்ட அம்புகளை எடு… இதோ!” என்று கூவினார்.

கர்ணன் “ஆம், இதோ!” என்று கூறி ருத்ராஸ்திரத்தால் அர்ஜுனனின் தேரை தாக்கினான். அதிலிருந்து சுழற்காற்று எழுந்து அப்பகுதியை மூடியது. பல்லாயிரம் கைகள் என அது அனைத்தையும் பிடித்து உலுக்கியது. மலையிறங்கும் பெருநதியிலெழுந்த சுழி என அள்ளித் தூக்கி சுழற்றியது. காவல்மாடங்களில் நின்றிருந்தவர்கள் அங்கே ஒரு ஆழி சுழன்று செல்வதை கண்டனர். தரையிலிருந்து புழுதியும் குருதிச்சிதர்களும் எழுந்து பக்கவாட்டில் வீசிஅறையும் மழைச்சாரல் என அவர்கள் மேல் பாய்ந்தன. அந்த ஆழியின் விளிம்பிலமைந்தவை தூக்கி அப்பால் வீசப்பட்டன. அதன் நடுவிலமைந்தவை மேலே தூக்கப்பட்டு மையக்குழியில் விழுந்து குவிந்தன. யானைகள் அடிபதற, புரவிகள் தெறித்துவிழ, தேர்கள் உலைந்து சரிய அச்சுழல்காற்று கடந்து சென்றது.

அதன் பின்னரே அதன் வெம்மையை ஒவ்வொருவரும் உணர்ந்தனர். புரவிகளின் குஞ்சிமயிர்கள் பொசுங்கின. கொடிகள் பற்றிக்கொண்டன. அன்றைய போர் அனலாடல் என அறிந்திருந்தமையால் ஒவ்வொருவரும் தோலாடைகளையே அணிந்து வந்திருந்தனர். துணியாடை அணிந்தவர்கள் அவை பற்றிக்கொள்ள நிலத்தில் படுத்து வெந்த ஊனில், உருகிய நிணத்தில், கொதிக்கும் சோரியில் புரண்டு ஆடையற்ற செவ்வுடலுடன் மண்ணின் கருவறைக்குள் இருந்து வருபவர்கள் என எழுந்தனர். ஆடையின்மையைக் கண்டு நாண அவர்களுக்கு பொழுதில்லை. விண்ணிலிருந்து பொழிந்தவற்றால் அவர்கள் மீண்டும் மண்ணுடன் சேர்த்து அறையப்பட்டனர். எரிகாற்று பல்லாயிரம் நரிகளின் கூட்டமென ஊளையிட்டபடி சூழ்ந்தது. உலோகப்பரப்புகள் ஒவ்வொன்றும் அனல்கொண்டன. அவற்றின்மேல் விழுந்த குருதித்துளிகள் தேனீக்கள் என ரீங்கரித்தபடி உலர்ந்து கருகின. ஊன்துண்டுகள் வெந்து உருகி சறுக்கி விழுந்தன.

“ருத்ரனின் மூன்றாம் விழி!” என்று வீரர்கள் கூவினர். அர்ஜுனன் மகேஸ்வராஸ்திரத்தால் அதை எதிர்த்தான். அனலுக்கு அனலே காப்பு என அனலெழுந்து அனலை தடுத்தது. கர்ணன் தொடுத்த மாருதாஸ்திரங்கள் சிறு சிறு புயல்காற்றுகளென குருக்ஷேத்ரக்களத்தில் வெடித்து, குமிழ்த்து எழுந்தும் அலைத்துப் பரவியும் வெளியை அதிரச்செய்தன. புரவிகளின் செவிப்பறைகள் அதிர அவை கனைத்தபடி நிலையழிந்து சுற்றின. தேர்கள் அவ்விசையில் குடைசாய்ந்தன. அவற்றை வந்தறைந்த மாருதவாளிகள் அவற்றை தரையிலிருந்து தூக்கி குப்புற கவிழச்செய்தன. குளம்புகள் காற்றில் உதைபட புரவிகள் முதுகு நிலத்திலறைய விழுந்தன. அவற்றின் அடிவயிறுகள் வெளிறித் தெரிய மேலிருந்து விழுந்த சிம்புகளும் உலோகத் துகள்களும் அவற்றை தாக்கின. அடுத்த அம்பில் அவை வெட்டுண்டு தனித்தனிப் புரவிகளாக விண்ணில் தெறித்து சுழன்று தலை ஒடிந்து மடிய நிலமறைந்து விழுந்தன. உடல் திறந்து குருதிக் கலங்களென சிதறின.

தேர்களை ஓட்டிய வீரர்கள் புரவிகளின் உடலுடன் இணைந்து சிதறிப்பரவினர். கன்மதமும் மண்மதமும் நீர்மதமும் காற்றுமதமும் சூடிய அம்புகள் வெடித்தன. கன்மதம் வெடித்து அனலென்றாகி அணைந்த பின்னர் கந்தகப் புகை மண்டியிருந்தது களத்தில். மண்மதம் அழுகும் ஊன் என கெடுமணம் கொண்டிருந்தது. நீர்மதம் தேங்கலின் தைலவாடையை. காற்றுமதம் குமட்டவைக்கும் ஆவியுடனிருந்தது. பருப்பொருள் ஒவ்வொன்றிலும் உறையும் வஞ்சத்தை வாற்றி எடுத்து ஊற்றிச்செய்த அம்புகள் அங்கே அப்பருப்பொருட்களாகி நின்று உறுமி ஆர்ப்பரித்தன. ஒவ்வொன்றும் பிறவற்றின்மேல் சீற்றம்கொண்டிருந்தது. நீர் அறைந்தது கல்லை. மண் மேல் மோதியது கல். நீருடன் முரண்கொண்டது காற்று. தோழரே, மானுடர் தங்கள் போருக்கென இயற்கைப் பெருவல்லமைகளை துணைக்கழைக்கிறார்கள். குனிந்து ஒரு கல்லை எடுக்கும் காட்டாளனில் தொடங்கியது அது. நதியோரங்களில் படிந்த செம்பும் மண்ணாழத்தில் புதைந்த இரும்பும் அவர்களின் வஞ்சத்தால் தங்கள் காலத்துயில் கலைந்து எழுந்தன. உருகி படைக்கலங்களாயின. குருதிகுடித்து கூர்கொண்டன. படைக்கலநிலைகளில் தெய்வங்கள் என அமர்ந்து பலி கோரின. வஞ்சம் வஞ்சம் என தவமிருந்தன. களம் களம் என காத்திருந்தன. எழுந்து வெறியாடுகையில் மானுடனை தங்கள் படைக்கலங்கள் என ஏந்திக்கொண்டன.

மானுடன் மேலும் மேலும் என வஞ்சமும் சீற்றமும் கொள்ள இன்னும் இன்னும் என எழுந்து வருகின்றன பருப்பொருட்களின் மதங்கள். கல்லில் எழுந்தது கன்மதம். பின் ஒவ்வொன்றிலும் எழுந்தன மதங்கள். உண்ணும் அன்னம் மதம்கொண்டு நஞ்சாகிறது. இனி மலரிலிருந்து எழும் போலும் கொல்லும் பெருவஞ்சம். வஞ்சம் கொண்ட பருப்பொருள் தன் வடிவத்தால் மறைக்கப்பட்ட நஞ்சை வெளியே எடுக்கிறது. சுருளவிழ்ந்து நாகம் நச்சுநா நீட்டுவதுபோல. கல்லின் கண் மின்னுவதை நான் கண்டதுண்டு. நிலம் முனகி எழுவதை, நீர் சீறி படமெடுப்பதை, காற்று இடியோசை கொள்வதை நான் கண்டதுண்டு. வஞ்சம் பருப்பொருட்களின் எல்லைகளை அழிக்கிறது. பருப்பொருட்கள் என்பவை பிரம்மத்தின் ஆணையால் எழும் ஏழாயிரம் தளைகளைப் பூண்டு நிலைகொண்ட ஆற்றல்கள். அவை வெறிகொண்டு தங்கள் வடிவத்தை களைகின்றன. தங்கள் உடலை அழித்து நெருப்பென்றும் நஞ்சென்றும் எழுகின்றன.

பிரம்மாண்டாஸ்திரம் இங்குள்ள அனைத்துப் பருப்பொருட்களையும் தளையறுத்துவிடுகிறது. பிரம்மாஸ்திரம் அவற்றை ஆளும் அனைத்து நெறிகளையும் சிதறடிக்கிறது. கட்டற்று எழுகின்றன பெருவல்லமைகள். மானுடனை ஆக்கிய ஐம்பருக்களும் கிளர்ந்தெழுந்து பிணைப்பறுத்து உருவழிந்து உடல்கரைத்து அவற்றுடன் கலக்கின்றன. இங்கே பின்னர் எஞ்சுவது அனல்கொந்தளிப்பு. ஒளிக்குழம்பல். ஓசையின்மை. வெறுமை. இருந்தவை எண்ணங்களில்கூட எஞ்சாத இன்மை. இருந்தவை சென்றொடுங்கும் பிரம்மம். இருந்தவற்றின் இருப்புகளையும் இழுத்து தன்னகத்தே கொண்டு சுருளும் வெறுஞ்சுழி. ஒவ்வொன்றையும் உருவழித்து வெறுமையின் இறுதிச்சுழியைச் சென்றடையும் தவத்தோர் கண்ட கனவுகளிலிருந்து சிதறி எழுந்த படைக்கலங்கள் அவை.

அர்ஜுனன் உளம் தளர்வதை சல்யர் கண்டார். அது அவரை வெறிகொள்ளச் செய்ய “அறை அவனை! இத்தருணத்திலேயே அவனை அறைந்து கொல்!” என்று கூவினார். அர்ஜுனன் தன் தேருடன் பின்னடைந்ததும் அலைசுருண்டு பின்வளைவு கொள்வதுபோல் பாண்டவப் படை மடிந்தது. கர்ணனின் அம்புகள் அந்த இடைவெளியை சென்றறைந்து வெடித்துக்கொண்டிருந்தன. “அவன் ஆற்றல் மிக்க அம்பை எடுப்பான்… அவன் பின்னடைவது அதற்காகவே!” என்று சல்யர் கூவினார். கர்ணன் “அவனிடமிருக்கும் அம்புகள் எவை என பார்க்கிறேன்” என நகைத்தபடி அம்புகளை தொடுத்தான்.

அர்ஜுனனின் கை பின்னால் சென்றது. அவன் விழிகளில் சினம் ஒளிகொண்டது. அவன் பர்வதாஸ்திரத்தை எடுத்தான். அத்தருணத்திலேயே அதை உய்த்துணர்ந்த சல்யர் தன் புரவியின் அனைத்துக் கடிவாளங்களையும் ஓங்கி இழுத்து உரத்த கூச்சலுடன் தேரிலிருந்து தரையில் பாய்ந்தார். கர்ணனின் தேரில் கட்டப்பட்டிருந்த ஏழு மத்ரநாட்டுப் புரவிகளில் வலப்பக்கப் புரவிகள் நான்கும் கால்களை வயிற்றோடு மடித்து நிலத்தில் அமைய இடப்புறப் புரவிகள் மூன்றும் கால்களை நிலத்தில் அறைந்து விசைகொடுத்து மேலே தாவின. தேர் முழுமையாகவே கவிழ்ந்து உருண்டுகொண்டிருந்த சகடங்களின் விசை தரையிலிருந்த உடல்களை குருதிச் சிதைவுகளென தெறிக்க வைக்க முன்னால் சென்றது. நுகத்தில் கட்டப்பட்டிருந்த புரவிகள் கால்களை உதைத்தபடி காற்றில் நீந்தி பறப்பவைபோல் வளைந்து சென்று நிலத்தில் குளம்புகள் அறைபட தொட்டு உந்தி எழுந்து முன்னால் சென்றன.

கர்ணனின் தேர் நிலத்தில் படிந்து ஓடி எழுந்த அந்தக் கணத்தில் அர்ஜுனன் தொடுத்த மலையம்பு வெடியோசையும் விழிமறைக்கும் மஞ்சள்நிற ஒளியும் கந்தகம் எரியும் மணமும் கொண்டு எழுந்து வந்து கர்ணனின் தேரை மகுடத்தை உரசியபடி அப்பால் சென்றது. அத்தொடுகையில் கர்ணனின் தேர்முகடு கனன்று செங்குழம்புபோல் மாறியது. சரிந்த தேரின் தூணை பற்றிக்கொண்டு ஒடுங்கி நின்ற கர்ணன் அதிலிருந்து பிடிவிட்டு தாவி ஓடி அப்பால் சென்றான். விண்ணில் எழுந்து வளைந்து உறுமியபடி மீண்டும் அணுகியது அர்ஜுனனின் மலையம்பு. சல்யர் அருகிருந்த கவிழ்ந்த தேரொன்றை தன் தேரால் மோதி அதை தன் தேர்மகுடத்தின்மேல் தூக்கியபடி தேரை நிமிரச்செய்தார். கர்ணனின் தேர் மேலெழுந்த தேரை அறைந்து பல நூறு எரிதுண்டுகளாக விண்ணிலிருந்து பொழியவைத்தபடி மீண்டும் கடந்து சென்றது. காற்றில் வளைந்து ஓசை கொப்பளித்து ஒளி சீறியெழ மீண்டும் அணுகியது.

கர்ணன் நிலத்தில் அமர்ந்து அருணாஸ்திரத்தால் அறைந்தான். ஏழு வண்ணக் கதிர்கள் சிதற எழுந்த அந்த அம்பு குறி தவறி விண்ணில் ஊடுருவிப் பாய்ந்து எழுந்து வளைந்து திரும்பி வந்து கௌரவப் படையிலேயே விழுந்து வெடித்து மூன்று தேர்களை புரவிகளுடன் தெறிக்க வைத்தது. சினம்கொண்ட பருந்தென அறைதலோசை எழுப்பியபடி கர்ணனை மீண்டும் அணுகியது அர்ஜுனனின் பர்வதாஸ்திரம். சல்யர் “விழிகளால் அதை நோக்காதொழிக! அதன் ஒளியே அதன் திரையென்று உணர்க!” என்று கூவினார். கர்ணன் பாய்ந்து நிலம் படிய விழுந்து உருண்டு எழுந்து நிலத்தில் நெளிந்து வளைந்து சுழன்ற தேர்களின் நிழல்களைக் கொண்டு அம்பின் இடத்தை உய்த்தறிந்து சூரியாஸ்திரத்தால் அதை அறைந்தான். எக்காள ஓசையுடன் எழுந்த அவ்வம்பு சென்று அறைந்து பர்வதாஸ்திரத்தை சிதறடித்தது.

இரு அம்புகளும் குருக்ஷேத்ரக்களம் முழுக்க படைவீரர்களின் பற்கள் ஒன்றோடொன்று உரசிக்கொள்ள, செவிப்பறை அடைக்க, முதுகெலும்பு கூசச்செய்து, உடற்திரவங்கள் வயிற்றில் குளிர்ந்து அழுத்த குறுகி அமர்ந்து நடுங்கவைக்கும் அதிர்வை எழுப்பியபடி கீழே வந்தன. விழிகள் வெண்ணிருளால் முற்றாக நிறைய, மூச்சு கரும்புகையால் அடைபட, வெடித்து நீண்ட சீழ்க்கை ஒலிகளென மாறி மெல்ல ஓசை அவிந்தன. விண்ணிலிருந்து குளிர்காற்று மழைபோல குப்புறப் பொழிந்து அங்கிருந்த அனைத்து குருதிச்சகதிப் புழுதியையும் அள்ளிச் சுழற்றி அப்பால் வீசி மீண்டும் ஓசைகளை துலங்கச்செய்தது. செவிகளை கைகளால் பற்றி இறுக்கி தலைகளைக் கவிழ்த்து உடல் வளைத்து நின்றிருந்த வீரர்கள் அனைவரும் கனவிலிருந்தென மீண்டெழுந்தனர். இடம் சூழல் அறிந்து இருப்புணர்ந்து போர்க்கூச்சலுடன் படைக்கலங்களை எடுத்து முன்னால் பாய்ந்தனர்.

சல்யர் தேர் நுகத்திலேறி அமர்ந்து கடிவாளத்தை சுழற்றி இழுத்து புரவிகளை விசையுடன் குளம்பொலிக்க விரையச்செய்து தேரை நிமிரவைத்தார். பேரலையில் எழும் நாவாய் என தேர் நிமிர்வுகொள்ள கர்ணன் பாய்ந்து தேர்த்தட்டில் ஏறிக்கொண்டான். சல்யர் உரத்த குரலில் “இனி அவனிடம் இருக்கும் அம்புகளென்ன என்று நம்மால் கூற இயலாது. இன்னும் ஆற்றல் கொண்ட அம்புகள் சில இருக்கும் என்பதில் ஐயம் வேண்டியதில்லை. இக்களத்தில் இன்னமும் வீரர்கள் எஞ்சுகின்றனர் என்பதனால் அம்புகளை வைத்திருப்பான். எந்த வீரனும் ஓர் இறுதி அம்பை கருதியிருப்பான். அதை அவன் எடுக்கலாகாது. உன்னிடமிருக்கும் ஆற்றல் மிக்க அம்பு நாகபாணம். எடு அதை! இதுவே தருணம். எடு அதை!” என்றார்.

கர்ணன் அதை கேளாதவனாக த்வஷ்டாஸ்திரத்தை அர்ஜுனனை நோக்கி தொடுத்தான். பிளிறலோசையுடன் சென்று அர்ஜுனனின் தேரருகே நிலத்தில் பதிந்து பெரிய குழி ஒன்றை உருவாக்கி புழுதி எழச்செய்தது. அதை அவன் எடுத்தபோதே உணர்ந்து தேரை திருப்பி அர்ஜுனனை காத்த இளைய யாதவர் தேரின் சகடங்கள் அக்குழியில் சரிய தேர் நிலையழிந்தபோது அர்ஜுனனிடம் ஏதோ கூற அர்ஜுனன் அதற்கிணையான கருடாஸ்திரத்தால் கர்ணனை அறைந்தான். தேரை சிட்டுக்குருவிபோல் தாவும் சுதியில் முன்னெடுத்து அதை ஒழிந்தார் சல்யர். பருந்தென எழுந்து வட்டமிட்டு அது திரும்பி வர கர்ணன் சாரங்காஸ்திரத்தால் அதை விண்ணிலேயே அடித்து வீழ்த்தினான். இரு அம்புகளும் முழங்கியபடி எரிவிண்மீன்கள் என வானில் சரிந்து அகன்றன.

கர்ணன் தொடுத்த அஸ்வாஸ்திரத்தை சிறுத்தையின் பாய்ச்சலுக்கு இணையான வியாஹ்ரகதியில் தேரைச் செலுத்தி இளைய யாதவர் தவிர்த்தார். “எடு நாகபாணத்தை! அது ஒன்றே இத்தருணத்தில அவனை அழிப்பதென்று அறிக! எடு அதை!” என்று சல்யர் கூவினார். “அதற்கு மட்டுமே அவனைக் கொல்லும் ஆற்றலுண்டு. ஏனெனில் அதற்கு தானே தன் இலக்கு தேரும் திறனுண்டு. தேரை யாதவர் எப்படி திருப்பினாலும் அது அவனை தாக்கும். எடு நாக அம்பை!” கர்ணன் “மத்ரரே, ஒருமுறைக்குமேல் அதை அவன் மேல் தொடுப்பதில்லை என்று நான் சொல் அளித்திருக்கிறேன்” என்றான். “எவருக்கு? எவருக்கு அந்தச் சொல் அளிக்கப்பட்டது?” என்று கூவியபடி திரும்பினார் சல்யர். உடனே உணர்ந்துகொண்டு “அவ்விழிமகளுக்கா? உன் உயிர் கொண்டு சென்றிருக்கிறாள் அவள். அன்னைவிலங்கின் நிகரற்ற இரக்கமின்மையை அறியாதவனா நீ? முதல் குட்டியைத் தின்று எஞ்சும் குட்டிகளுக்கு அமுதூட்டுவது குருதி உண்ணும் விலங்குகளின் வழக்கம். உன்னை தின்கிறாள் அவள். இத்தருணத்தில் நீ கடந்து போகவேண்டியது அவளை மட்டுமே” என்றார்.

“குருதியை கடக்கலாம். முலைப்பாலைக் கடப்பது எளிதல்ல” என்று கர்ணன் சொன்னான். “நன்கு எண்ணுக… இத்தருணத்தில் உன் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நீ அவனை தவிர்த்தால் உன் மைந்தரை கொண்டுசென்று அவன் அம்புகளுக்கு முன்னால் நிறுத்துகிறாய்… எண்ணிக்கொள், உன் மைந்தர் இக்களத்தில் நிலம்பட்டார்களெனில் அதன் முழுப் பொறுப்பும் உனக்கே. நீ அவளுக்கு அளித்த அச்சொல் உன் குடிக்கு நஞ்சு என்று உணர்க!” என்றார் சல்யர். கர்ணன் “இச்சொற்கள் அனைத்தையும் நீங்கள் முன்னரே உரைத்துவிட்டீர்கள், மத்ரரே. இவை அனைத்தையும் நானே எனக்கு உரைத்தும்விட்டேன். அதற்கப்பால் என்னுள்ளம் இதையே ஆணையிடுகிறது” என்றான். எரிச்சலும் துயருமாக “உன்னை கைவிட்டவளுக்காகவா உன் குடியை பலிகொடுக்கிறாய்?” என்று சல்யர் கூவினார். “கைவிட்டவர்களுக்காக அளிக்கையில்தானே கொடை மேலும் பொருள் கொள்கிறது?” என்று கர்ணன் சொன்னான்.

“தாய்மையைப்போல் பெரும்பொய் ஒன்றில்லை” என்று சல்யர் கூவினார். “உறவுகளில் பொய்யானது அதுவே. ஏனென்றால் அது மிகை. முழுப் பொய்யைவிடப் பெரிய பொய்யே மிகை என்பது. பெண்ணை இல்லத்தில் கட்டுறுத்த முந்தையோர் சொன்ன பொய் அது… அதை ஏற்கும் பெண் இற்செறிப்பாள். நம்பும் ஆண் பெண்ணால் ஏமாற்றப்படுவான்.” கர்ணன் “இப்புவிவாழ்க்கையே மாபெரும் பொய்யென்று இக்கணம் அறிகிறேன். அப்பொய்களில் முதன்மையானது தாய்மை. அதை தழுவி நின்றிருக்கையிலேயே இப்புவி வாழும். இதை உடைத்த பின் இங்கு உருக்கொண்டு நின்றிருக்கும் கருத்தென எதுவும் எஞ்சாது” என்றான். “கீழ்மை! கீழ்மை!” என்று சல்யர் தன் சவுக்கால் தன் தலையில் அறைந்தார். “எடு உன் நாகவாளியை! இது உன் தந்தையின் ஆணை! உன் குருதித்தந்தையின் ஆணை இது!” என்று நெஞ்சிலறைந்தபடி ஓலமிட்டார்.

“என் அன்னை உங்கள் பெயரை சொல்வது வரை நீங்கள் எனக்கு தந்தையல்ல, மத்ரரே” என்று சல்யரை நேர்நோக்கி கர்ணன் சொன்னான். தளர்ந்து “முற்றாக அழித்துவிட்டாள் உன்னை. ஒரு துளி எஞ்சாமல் உண்டுவிட்டுச் சென்றுவிட்டாள்” என்றார் சல்யர். அத்தருணத்தில் சிம்மமென உறுமியபடி வந்த அம்பு ஒன்று கர்ணனின் இடப்புறம் காத்து நின்ற சுதமன் மேல் விழுந்தது. அவன் தேருடன் உடைந்து துண்டுகளாக தெறித்தான். கர்ணன் திகைத்து உடல் பதற திரும்பி நோக்கினான். சல்யர் “நோக்குக, உன் மைந்தர்…” என்று கூவுவதற்குள் அடுத்த அம்பை அர்ஜுனன் எடுத்தான். விருஷசேனன் “பின்னடைக! பின்னடைக, இளையோரே” என்று கூவியபடி தன் அம்புகளை அர்ஜுனன் மேல் தொடுத்தபடி முன்னடைந்தான். அவனுடைய அம்புகளைச் சிதறடித்தபடி வந்த அர்ஜுனனின் அம்பு அவன் நெஞ்சில் பாய்ந்து கவசத்தை உடைத்து உட்புகுந்தது. அவ்விசையில் அவன் தேர்த்தூண்கள் உடைந்து துண்டுகளாகச் சிதற புரவிகள் நிலையழிந்து ஒன்றையொன்று முட்டி தேரை சரித்தன. நெஞ்சில் பாய்ந்த நீளம்புடன் அவன் நிலத்தில் விழுந்து துடித்து ஓய்ந்தான்.

சல்யர் “அவனைக் கொன்றவன் நீ! உன் மைந்தனை உன் அன்னைக்கு பலியாக்குகிறாய்! குருதிகொள் கொற்றவை உன் குலத்தை உண்கிறாள்! அறிவிலி! அறிவிலி! அறிவிலி!” என்று கைநீட்டி கூவினார். கர்ணன் ஒருகணம் தன் இரு மைந்தரையும் விழிதிருப்பி நோக்கினான். உதடுகளை இறுகக் கடித்து முகத்தில் எழுந்த அனைத்து உணர்வுகளையும் உறைய வைத்து பாவகாஸ்திரத்தை எடுத்து தேர்த்தட்டில் நின்று துள்ளிய விஜயத்தின்மேல் தொடுத்து நாண் இழுத்து ஓங்கி அர்ஜுனனை அறைந்தான். அதை எண்ணியவர்போல் இளைய யாதவர் அவன் தேரை மேலும் மேலும் பின்னடைய வைத்தார். நீரில் மூழ்கி ஆழத்தில் மறையும் பெரிய மீன் என அர்ஜுனனின் தேர் பாண்டவப் படைகளுக்குள் மறைந்தது. அவனைச் சூழ்ந்து வந்த வில்லவர்களும் இருபுறமும் துணையமைத்த மைந்தர்களும் பெரிய வளையமென ஆகி அகன்று விலகினர்.

கர்ணனின் சினம் அனைத்தையும் அள்ளி வந்த பாவகாஸ்திரம் நிலத்தில் அறைந்து வெடித்து நீண்ட அமைதியொன்றை களத்தில் உருவாக்கி பின்னர் செவிகளனைத்திலும் தனித்தனியாக வெடித்து ஒலியின்மையை மீட்டி விழியின்மையில் அனைவரையும் உள்ளணையச் செய்து பின்பு எழுப்பியது. பலர் நிலத்தில் அமர்ந்து வாயுமிழ்ந்தனர். நிலத்தில் தலையைச் சேர்த்து உடல் நடுக்குற அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு மேல் விண்ணுக்கு எழுந்த சிதைந்த உடல்களும் தேர்த்துண்டுகளும் குருதிச் சிதைவுகளும் மழையெனப் பொழிந்தன.

சல்யர் தன் கடிவாளக்கற்றையை ஓங்கி தேர்த்தட்டில் வீசினார். “போதும்! இதற்கு மேல் இப்போரை நான் நடத்தலாகாது. நீ உயிர்கொடுக்கச் செல்கிறாய். உன்னை அதற்கு அழைத்துச்சென்றேன் என்னும் பழியுடன் இக்களத்திலிருந்து நான் மீள மாட்டேன். என் குடிமைந்தர் களம் விழுந்தமைக்கு நானே பொறுப்பென்று நாளை என் கொடிவழியினர் எண்ணலாகாது. இனி உன் தேரை நான் தெளிக்கப் போவதில்லை” என்று சொல்லி தேரிலிருந்து பாய்ந்து இறங்கினார். கர்ணன் “வாழ்த்திச் செல்க, மத்ரரே!” என்றான். சல்யர் நின்று திரும்பி அவனை பார்த்தார். உள்ளிருந்து எழும் ஒரு சொல் அவர் முகத்தை உருகச் செய்தது. உடலெங்கும் அது தவிப்பென வெளிப்பட்டது. ஆயினும் அதை கூறாமல் நடந்து படையின் பின்புறம் நோக்கி சென்றார்.