இருட்கனி - 25
சாத்யகி அம்புகளைத் தொடுத்தபடி கர்ணனை நோக்கி சென்றான். அவன் செல்வதற்குள் கர்ணனும் திருஷ்டத்யும்னனும் போரில் முழுமையாக தொடுத்துக்கொண்டுவிட்டிருந்தார்கள். பாஞ்சால விற்படைவீரர்கள் திருஷ்டத்யும்னனைச் சூழ்ந்து பின்பிறை அமைக்க அவர்களை கர்ணனின் மைந்தர்கள் தடுத்து சிதைத்து விலக்கிக்கொண்டிருந்தனர். கர்ணன் பீமன் அகன்றதை, திருஷ்டத்யும்னன் வந்ததை, துணைக்க சிகண்டி எழுவதை உணராதவன் போலிருந்தான். அவனுடைய அரைவிழிநோக்கு அவ்வண்ணமே நிலைகொண்டிருக்க வில்மட்டும் துள்ளித்துள்ளிச் சுழன்று அம்புகளை சொரிந்துகொண்டிருந்தது.
ஒரு மெல்லிய மின்னலுக்குப் பின் விண்ணிலிருந்து இடியோசை எழுந்தது. முகில்கணம் விரிசலிட்டு அகல வானின் ஒளி களத்தின்மேல் அருவி எனப் பொழிந்தது. அதன் ஒளியில் அங்கு நின்றிருந்த தேர்முகடுகள் சுடர்களாயின. புரவிகளின் வண்ணம் மின்னியது. குருதிச்செம்மை தழல்போல் தெளிந்தது. மிக மெல்லிய நீர்த்திவலைகள் காற்றில் சிதறிப்பொழிந்து சுழன்றுகொண்டிருந்தன. யானைகள் கன்னங்கருமை கொண்டன. தரையில் குருதிகலந்த செம்மண் சேறாகி மிதிபட்டது. தேர்களின் சகடங்களால் அள்ளித்தெறிக்கப்பட்டு யானைக்கவசங்கள் மேல் நிணம் என, தசைத்துண்டுகள் என வழிந்தது.
அந்தப் போரில் முதல் அம்பை தொடுத்தபோதே அது சில கணங்களுக்குக்கூட நீடிக்காத போரென்பதை சாத்யகி உணர்ந்தான். அப்பாலிருந்து சிகண்டியும் அம்புகளை எய்தபடி வந்து கர்ணனுடன் போரிட்டார். சிகண்டியும் திருஷ்டத்யும்னனும் உடலில் சற்றும் ஆற்றலில்லாது தள்ளாடினார்கள். சிகண்டியால் தேர்ப்பீடத்தில் இருந்து எழவே இயலவில்லை. கர்ணனிடம் சிக்கிக்கொண்ட பீமனை காக்கும்பொருட்டே அவர்கள் தங்கள் வலியுடன், நிலைக்காத குருதியுடன், வெளிறித் தளர்ந்த முகங்களுடன், நிலையழிந்த உடல்களுடன் தேரிலேறி வந்திருக்கிறார்கள் என்பதை அவன் உணர்ந்தான். சிகண்டியின் அம்புகள் பெரும்பாலும் இலக்கை ஒழிந்தன. சாத்யகி தன் அம்புகளை கர்ணனை நோக்கி ஏவவே இல்லை. கர்ணனின் பாகனை கொல்ல இயலுமா என்றே முயன்றான்.
கர்ணன் அவர்கள் மூவரின் அம்புகளையும் தடுத்தபடி மேலும் மேலுமென பாண்டவப் படைகளுக்குள் நுழைந்துகொண்டிருந்தான். அவன் நுழைய வழியமைப்பதுபோல் பாண்டவப் படைமுகப்பு விரிந்து அகன்றது. சாத்யகி சிகண்டியையும் திருஷ்டத்யும்னனையும் காப்பது தன்னால் இயல்வதல்ல என்று உணர்ந்தான். மூவரில் ஒருவரேனும் அந்தக் களத்தில் விழக்கூடும் என்று தோன்றியது. கர்ணனின் வெற்றி துரியோதனனின் படைகளை ஊக்கம் கொள்ளச்செய்ய அவர்கள் பெருங்குரலில் “அங்கர் வெல்க! விண்ணோன் மைந்தன் வெல்க! கதிர்மைந்தன் வெல்க!” என வாழ்த்தியபடி முன்னகர்ந்தனர். கைகளை நீட்டிவைத்து வால் சுழற்றி அறைந்தபடி முதலை வேல்சூழ்கையை சிதைத்தது. இருபக்கமும் விலகிச் சிதறி சிறு குழுக்களாகி அக்குழுக்களாக ஆனதனாலேயே பாதுகாப்பின்மையை உணர்ந்து மீண்டும் சென்று இணைந்துகொண்டு வேல்வடிவை அடைந்துகொண்டிருந்தது பாண்டவப் படை.
அன்று போருக்கென எழுந்தவர்களில் பெரும்பகுதியினர் அதற்குள்ளாகவே களம்பட்டுவிட்டனர் என்று தெரிந்தது. சற்றே உடல் எம்பி கண் ஓட்டிய ஒரே நோக்கிலேயே முழுப் பாண்டவப் படையையும் பார்க்க முடிந்தது. அவர்களில் பெரும்பகுதியினர் எப்பயிற்சியும் இலாத எளிய ஏவலர்கள். அவர்கள் மீதூறிய அச்சத்தாலும் ஆணையிலாது அணிநிரக்க இயலாததாலும் படையின் பின்பகுதியில் முட்டித் ததும்பி நிலையழிந்துகொண்டிருந்தார்கள். நூற்றுவர்தலைவர்கள் மண்பட்டபோது புதிய நூற்றுவர்தலைவர்கள் வந்தனர். பலமுறை அவ்வண்ணம் வந்தபோது செவியாணைகளையும் விழியாணைகளையும் சொல்லாணைகளாக ஆக்கிக்கொள்ளும் பயிற்சி இல்லாதவர்கள் தலைமைகொண்டார்கள். படை செவியற்றதாக, வாயற்றதாக மாறியது. பழகாத யானை என முரண்கொண்டது. புரியாமையால், புரிந்துகொள்ளப்படாமையால் சினம் அடைந்தது. செய்வதென்ன என்று அறியாமல் தன்னைத்தானே சுற்றிவந்தது.
சாத்யகி கர்ணனின் அம்புகளால் சிகண்டி எக்கணமும் உயிர்துறப்பார் என்று எதிர்பார்த்தான். திருஷ்டத்யும்னன் தன்னைக் கருதியபடி போரிட சிகண்டி எதையும் எண்ணா படைமடத்துடன் போரிட்டார். ஆனால் மேலும் மேலும் தன் எஞ்சிய ஆற்றலை முழுதுறக் குவித்து விழிகூர்ந்து உடலொடுக்கி நின்று பொருதிய சிகண்டியைக் கண்டபோதுதான் அவரும் வில்லை ஊழ்கமென வாழ்நாளெல்லாம் பயின்றவர், வெல்லற்கரியவர் என்பதை புரிந்துகொண்டான். திருஷ்டத்யும்னன் கர்ணனின் அம்புகளால் அறைபட்டு தேர்த்தட்டில் விழுந்தான். மேலும் ஓர் அம்பால் அவனை கொல்ல கர்ணன் முயல அந்த அம்பை சாத்யகி தடுத்தான். கர்ணன் மீண்டும் தாக்காமலிருக்க கர்ணனின் புரவிகளை நோக்கி அம்புகளை தொடுத்தான். பாகன் திகைத்து தேரைத் திருப்ப அந்த இடைப்பொழுதில் திருஷ்டத்யும்னனின் பாகன் தேரை பின்னுக்குக் கொண்டுசென்று அவனை மீட்டான்.
கர்ணனின் தேர்ப்பாகன் களநுண்மை அறியாதவன். ஏழு புரவிகளில் ஒன்றிரண்டு விழுந்தாலும் தேர் நிலைமாறுவதில்லை. அக்கணத்தில் பாஞ்சாலனைக் கொல்வதே வெற்றியின் உச்சம். வெற்றியின் உச்சத்திற்கு முந்தைய கணத்திலேயே உளம் திருப்பும் தாக்குதலை எதிரிகள் செய்வார்கள். அந்த ஒருகணத்தை கடத்தலே போர்த்திறனின் முதன்மை அறைகூவல். சினத்துடன் பாகனை வசைபாடிய கர்ணன் பற்களைக் கடித்தபடி சாத்யகியை நோக்கி முழுமையாகத் திரும்ப முயல மறுபக்கம் சிகண்டியின் அம்புகள் அவனைத் தாக்கி நிறுத்தின. கர்ணன் சிகண்டியை நோக்கி திரும்பி அம்புகளை தொடுத்தான். சிகண்டி உடலை நன்றாகக் குறுக்கி சுண்டி எழக் காத்து புல்முனையில் நின்றிருக்கும் புழு என தேரில் இருந்தார். அவரிடமிருந்து எழுந்த அம்புகள் கர்ணனை வண்டுக்கூட்டம் என சூழ்ந்துகொண்டன.
விருஷசேனன் சாத்யகியை நோக்கி அம்புகளுடன் வந்தான். கர்ணனுக்கு நிகரானவன் என்று அவனை அறிந்திருந்தான் சாத்யகி. களத்தில் பலமுறை அதை கண்டுமிருந்தான். ஆயினும் அவன் இளையோன், எனவே முதற்சில கணங்களில் அப்போரை எளிதாகக் கடந்துவிடலாம் என்று எண்ணினான். ஆனால் விருஷசேனனின் அம்புகள் அவன் தேரை யானைத்துதிக்கைகள் என அறைந்தன. அலைகளில் என தேரை ஊசலாட்டின. தேர்ப்பாகன் கழுத்தறுந்து சரிந்து அமரத்தட்டிலேயே விழுந்தான். புரவிகள் நிலையழிய சாத்யகி பாய்ந்து பின்னால் நின்ற பிறிதொரு தேரிலேறிக்கொண்டான். அத்தேர்ப்பாகனையும் தேர்ப்புரவிகளையும் கொன்றான் விருஷசேனன். அவனுடைய அம்புகளை அறைந்து தெறிக்கவிட்டபடி மேலும் பின்னடைந்து பிறிதொரு தேரிலேறிய சாத்யகி மீண்டும் அம்புகள் வந்து பொழிய அப்போர் முடிந்துவிட்டது, அர்ஜுனன் படைமுகம் வந்தாலொழிய எதுவும் நிகழப்போவதில்லை என்று உணர்ந்தான்.
கர்ணன் நீளம்புகளால் அறைந்து சிகண்டியின் தேரை உடைத்தான். சிகண்டியின் பாகன் நெஞ்சில் தைத்த அம்புடன் சரிய இரு புரவிகள் கழுத்தறுந்து சரிந்து கால்களை உதைத்தபடி விரைந்த தேருடன் இழுபட்டுச் சென்றன. சிகண்டி அணிந்திருந்த இரும்பு நெஞ்சக்கவசமும் தலைக்குடமும் உடைந்தன. மேலும் இரு அம்புகள் உறுமியபடி சென்று தேர்த்தட்டை அறைந்து பிளக்க சிகண்டி ஒருகணம் தேரிலிருந்து மறைந்தார். அம்பால் அறைபட்டு தூக்கி வீசப்பட்டிருப்பார் என்ற எண்ணம் எழ சாத்யகி திரும்பிப் பார்த்தான். அப்பால் இரு யானைகளுக்கு நடுவே சிகண்டி மறைவதை கண்டான். கர்ணன் திரும்பி சாத்யகியை பார்க்க அவன் தேரிலிருந்து பின்னால் குதித்து படைகளுக்குள் சென்று மறைந்தான். கர்ணனின் கையசைவுக்கேற்ப அவன் மைந்தர்கள் இருவரும் இரு வாள்கள்போல உருமாறி பாண்டவப் படையை வகுந்து அகற்றினர். அந்த இடைவெளியினூடாக கர்ணன் முழுவிசையுடன் பண்டவப் படையின் மையம் நோக்கி சென்றான்.
ஓடிச்சென்று பிறிதொரு தேரிலேறிக்கொண்டு கர்ணன் செல்வதை பார்த்தபோது பாண்டவப் படை உயிர்விடத் துடிக்கும் ஈசல்களின் திரளாக ஆகிவிட்டது என்னும் எண்ணத்தை சாத்யகி அடைந்தான். மறுகணம்தான் மிக அருகிலேயே யுதிஷ்டிரன் இருக்கும் எண்ணம் ஏற்பட்டது. தேரிலிருந்து பாய்ந்திறங்கி அருகிருந்த வீரர்களிடம் “அரசர் எங்கிருக்கிறார்? நோக்குக, அரசர் எங்கிருக்கிறார்?” என்று கூவினான். அதற்குள் அவனே கர்ணன் சென்று கொண்டிருக்கும் அத்திசையிலேயே யுதிஷ்டிரனின் கொடியை பார்த்தான். “இளைய பாண்டவர் எங்கிருக்கிறார்? இளைய பாண்டவரை அழையுங்கள். உடனே இளைய பாண்டவருக்கு செய்தி செல்லட்டும்!” என்று கூவினான். “அவர் ஏழு அம்புகளால் ஆழமாக அறைபட்டிருக்கிறார். மருத்துவர்களால் சூழப்பட்டிருக்கிறார்!” என்று ஒருவன் சொன்னான். “இல்லை கட்டுகளுக்குப் பின் தேரிலேறினார். இத்திசை நோக்கி வரும் வழியில் அவரை சல்யரும் கிருதவர்மனும் அஸ்வத்தாமனும் சேர்ந்து எதிர்க்கிறார்கள். மூவரையும் எதிர்கொண்டபடி அங்கு நின்றிருக்கிறார்” என்றான் இன்னொருவன்.
“செய்தி செல்லட்டும். உடனடியாக அவர் இங்கு வந்தாகவேண்டும்… உடனடியாக அரசரை காக்கவேண்டும்!” என்று சாத்யகி ஆணையிட்டான். “அரசரை காத்துக்கொள்க! அரசரை காத்துக்கொள்க!” என்று வானில் முரசுகள் முழங்கத்தொடங்கின. தன்னால் பிறிதொரு கணமும் போர்புரிய இயலாதென்று உணர்ந்து கால் தளர்ந்து வெறும் நிலத்திலேயே அமர்ந்து பின்னர் உடல் ஓய மல்லாந்து படுத்து வான் நோக்கி வெறித்தபடி ஒரு சில கணங்கள் மட்டுமே நீண்ட ஆழ்துயிலுக்குச் சென்றான் சாத்யகி. தன் மூச்சொலியைக் கேட்டு பின்னர் துடித்தெழுந்தபோது கர்ணன் யுதிஷ்டிரனை நெருங்கிவிட்டதை உணரமுடிந்தது.
அவன் எழுந்து யுதிஷ்டிரனை கர்ணன் தாக்கும் ஓசைக்காக செவிகொண்டான். அவர் பின்னடைந்துவிடவேண்டும், அவருடன் வில்லவர் சேர்ந்துகொள்ளவேண்டும். ஆனால் அவன் அங்கு செல்வதற்குள் போர் மூண்டுவிடும். “அவருடன் யார் இருக்கிறார்கள்?” என்றான். “அவரது இரு மைந்தர்கள்” என்றான் காவலன். “பிரதிவிந்தியனும் யௌதேயனும் போர்க்கலை தேராதவர்கள்… பிற மைந்தர்களேனும் அங்கே செல்லட்டும்” என்று கூவியபடி “என் வில் எங்கே? என் அம்பறாத்தூணி வருக!” என்று இருகைகளையும் நீட்டியபடி சாத்யகி தன் தேரை நோக்கி சென்றான். அந்த உளவிசைக்குப் பழகாத உடல் பின்னிருந்து எவரோ உதைத்ததுபோல் நிலைதடுமாறியது. என்ன நிகழ்கிறது என உணராத ஒருகணத்திற்குப்பின் தேரிலேயே தன் முகம் அறைபட விழுந்திருப்பதை உணர்ந்தான்.
“யாதவரே, தங்களால் இத்தருணத்தில் போர்புரிய இயலாது” என்றார் முதிய படைவீரர் ஒருவர். அவரை கைகளால் விலக்கி “செல்க!” என ஆணையிட்டான். தேரில் ஏற முயன்றபோது நெஞ்சுக்குள் ஒரு தரை அறுபட்டுத்துடிப்பதுபோல் வலியெழுந்தது. “அரசரை காத்துக்கொள்க! அரசரை காத்துகொள்க!” என்று கூவியபடி தேரில் கையூன்றி உடலைத்தூக்கி எழுப்பி தேர்த்தட்டில் அமர்ந்து புரண்டு எழுந்து தேர்த்தூணைப் பற்றியபடி நின்றான். உடலில் அனைத்து தசைகளும் அனல்கொண்டவைபோல் எரிந்து துடித்தன. பற்கள் கிட்டித்து உரசிக்கொள்ள விழிகளில் நீர் கசிந்தது. “செல்க! அரசரை நோக்கி செல்க!” என்று பாகனுக்கு ஆணையிட்டான். பாகனின் சாட்டை புரவிகளின் மேல் விழுந்த ஒலியைக்கூட அவன் தன் உடலின் வலியாகவே உணர்ந்தான். தேரின் ஒவ்வொரு அசைவும், அதன் சகடங்கள் ஏறிய ஒவ்வொரு பொருளும் வலியென அவனை அடைந்தன.
சாத்யகியின் தேர் கர்ணன் பாண்டவப் படைகளை வகுந்து சென்ற வழியிலேயே சென்றது. படைவீரர்களும் யானைகளும் புரவிகளும் தேர்களும் சேர்ந்தும் உடைந்தும் கிடந்த வழியில் படகென அலைமோதி அவன் உடலைத் தூக்கி அங்குமிங்கும் வீசி கொந்தளித்துச் சென்றது அது. “இளைய பாண்டவர் வருக! இளைய பாண்டவர் வருக! அரசரைக் காக்க இளைய பாண்டவர் வருக!” என்று செய்திமுரசுகள் ஒலித்துக்கொண்டே இருந்தன. அந்த எச்சரிக்கையிலிருந்தே யுதிஷ்டிரன் அகப்பட்டுக்கொண்டிருக்கக் கூடும் என்று உணர்ந்து சகுனி “சூழ்ந்து கொள்க! இளைய பாண்டவரை சூழ்ந்து கொள்க!” என்று தன் படையினருக்கு ஆணையிட்டார். “இளைய பாண்டவர் முன்னகரலாகாது… அவர் சிறைநின்றாகவேண்டும்” என்று கௌரவ முரசுகள் முழங்கின.
சல்யர் வலப்பக்கமும் கிருதவர்மன் இடப்பக்கமும் நிற்க அஸ்வத்தாமன் அர்ஜுனனை எதிர்கொண்டான். அர்ஜுனன் அங்கு இறுதி மூச்சையும் திரட்டி போரிடுவதை தொலைவில் வானில் பறவைக்கூட்டம்போல் மின்னி எழுந்து சுழன்று கொண்டிருந்த அம்புகளின் கொப்பளிப்பிலிருந்தே சாத்யகி புரிந்துகொண்டான். அரைநாழிகைப் பொழுது போதும், அதற்குள் கர்ணன் யுதிஷ்டிரனை பிடித்துவிடக்கூடும். அத்தருணத்தில் ஓர் எண்ணம் அவனுக்கு எழுந்தது, யுதிஷ்டிரன் கர்ணனை பார்த்ததும் தோற்று தாள் பணியக்கூடும், யுதிஷ்டிரனை சிறைப்பிடித்து இழுத்துச்சென்று துரியோதனன் முன் நிறுத்தக்கூடும். போர் அக்கணத்துடன் முடிந்துவிடும்.
யுதிஷ்டிரனை கர்ணன் கொல்லப்போவதில்லை என்ற எண்ணம் அவனுக்கு எழுந்தது. அது ஏன் எழுகிறது என்று அவன் வியந்தாலும் அது மிக உறுதியாகவே தெரிந்தது. யுதிஷ்டிரனை எந்நிலையிலும் கர்ணனால் கொல்ல இயலாது. ஆனால் இப்போர் யுதிஷ்டிரனால்தான் முடியும். யுதிஷ்டிரன் சிறைப்படுவதுகூட தேவையில்லை. அவர் அவன் வில்லுடன் எழக் கண்டதும் தன் தோல்வியை ஏற்று மணிமுடியைக் கழற்றி கீழே வைப்பாரெனில், அதை கர்ணன் எடுத்துக்கொண்டு செல்வான் எனில் இப்போர் இங்கேயே முடியும். அந்த மணிமுடியை தான் விழைந்தவருக்குச்சூட்ட கர்ணனுக்கு உரிமையுள்ளது. களத்தில் மண்டியிட்ட எதிரியிடமிருந்து பெற்ற மணிமுடி மூதாதையரால் அளிக்கப்பட்டதற்கு நிகர். ஆம், அதுவே நிகழவிருக்கிறது. இவையனைத்தும் சென்று முனைகொள்வது அங்குதான்.
சாத்யகி உடல் தளர்ந்து தேர்த்தட்டில் அமர்ந்தான். அதுதான் நிகழப்போகிறதென்று தெள்ளத்தெளிவாக கண் முன் கண்டான். அக்கணமே அக்காட்சி மீள மீள மெய்நிகர் என அவனுள் ஓடியது. யுதிஷ்டிரன் ஓர் அம்பால்கூட கர்ணனை எதிர்கொள்ளப்போவதில்லை. அவர் வில்லெடுத்துப் பயின்றே அவன் பார்த்ததில்லை. அவருக்கு இருபுறமும் துணை நிற்பவர்கள் தாங்களும் அவரைப்போலவே நூல் பயின்று வில்லறியாத இளையோர். கர்ணனின் ஐந்து அம்புகளைக் கூட அவர்களால் தடுக்க இயலாது. அதற்குள் ஏதேனும் நிகழலாம். அர்ஜுனன் தடைகடந்து வந்துவிடலாம். பீமன் மருத்துவர்களை மீறி களம்புகலாம். மைந்தர் வந்து காத்து நிற்கலாம். இவை என் விழைவுகள். நிகழவிருப்பது ஒன்றே.
சாத்யகி படைகளின் இடைவெளியினூடாக கர்ணனின் தேரை பார்த்தான். இருபுறமும் அவனை அழைத்துச் சென்றுகொண்டிருந்த மைந்தர்களின் தேர்களின் மகுடஒளிக்கு மேல் எழுந்து கதிர்த்தேவனின் ஆலயத்தின் பொற்கோபுரம்போல் நின்றிருந்தது. அத்தேர்களிலிருந்து எழுந்த அம்புகள் இருபுறமும் கிளம்ப பாண்டவப் படை அகன்று அகன்று அவர்களை உள்ளே ஏற்றுக்கொண்டது. சேற்றில் கற்களென அத்தேர்கள் புதைந்து இறங்கின. மிக அருகே யுதிஷ்டிரனின் கொடியை சாத்யகி பார்த்தான். யுதிஷ்டிரனை நோக்கி சென்ற கர்ணன் தன் நாணை ஒலித்து உரக்க கைதூக்கி அவர் அடிபணியவேண்டுமென்று ஆணையிட்டான். அவனது ஆணையை அவனுக்குப் பின்னால் சென்ற படைகளிலிருந்த முழவுகள் திரும்ப ஒலித்தன. “அடிபணிக! அடிபணிக! முடி எடுத்து நிலம் வைத்து அடிபணிக! உயிர் காத்துக்கொள்க!”
நெஞ்சு துடித்து, உடலெங்கும் அத்துடிப்பு பரவ கையிலிருந்து வில் நழுவாதிருக்க இறுகப்பற்றியபடி சாத்யகி அமர்ந்திருந்தான். அம்புகள் எட்டா அகல்விலிருந்தாலும் எழுந்து ஓர் அம்பையேனும் எடுத்து கர்ணனை நோக்கி தொடுத்து அங்குளேன் என அறிவிக்கவேண்டும் என்று எண்ணியபோதும்கூட உடலை அவனால் அசைக்க இயலவில்லை. ஆனால் அவன் எண்ணியதுபோல் யுதிஷ்டிரன் அஞ்சவில்லை. “இழிமகனே, இவ்வண்ணம் உன்னை இக்களத்தில் எதிர்கொள்ளும்பொருட்டே நான் இதுகாறும் உயிர் பிழைத்திருக்கிறேன் என்று எண்ணுகிறேன். என் வாழும் உடலிலிருந்து இம்மணிமுடியை நீ எடுக்கப்போவதில்லை…” என்று கூவியபடி அவர் கர்ணனை நோக்கி அம்புகளைத் தொடுத்தபடி பாய்ந்து முன்னால் வந்தார். அவருடைய இரு மைந்தர்களும் இருபுறம் துணை வந்தனர். “இது யயாதியின் மணிமுடி. குருவின், ஹஸ்தியின் மணிமுடி. இதை ஒருபோதும் சூதன் வெல்லமாட்டான்… விலகிச்செல், கீழ்மகனே” என்று யுதிஷ்டிரன் வில்லைத் தூக்கியபடி கூச்சலிட்டார்.
சாத்யகி துடித்து உயிர்கொண்டு “செல்க! செல்க!” என பாகனை ஊக்கி தேரைக் கிளப்பி கர்ணனை நோக்கி சென்றான். கர்ணனின் மைந்தர்களான விருஷசேனனும் திவிபதனும் பின்னால் திரும்பி அவனை நோக்கி வந்து அவனை தடுத்தனர். அவர்கள் இருவரையும் அவன் தன் வில்லால் எதிர்கொண்டான். அவர்களின் அம்புகளைக் கடந்து செல்ல தன்னால் இயலாதென்பதை ஒருசில அம்புகளுக்குள்ளே உணர்ந்தான். பளிங்குச் சுவரொன்றால் அவன் கர்ணனிடமிருந்து பிரிக்கப்பட்டவன் போலிருந்தான். பட்டுத்திரைக்கு அப்பால் என பறக்கும் அம்புகளினூடாக கர்ணனும் யுதிஷ்டிரனும் போரிடும் காட்சி தெரிந்தது. கர்ணன் தன் அம்புகளால் யுதிஷ்டிரனின் தேர்ப்புரவிகளை சிதறடித்தான். தேர்ப்பாகனை வீழ்த்தினான். புரவிகள் அலறியபடி சரிந்து விழ யுதிஷ்டிரன் நிலைகொண்ட தேர்த்தட்டில் நின்றபடி கர்ணனை நோக்கி அம்புகளை தொடுத்தார்.
அவரில் எழுந்த அந்த வெறி வியப்பூட்டியது. ஒவ்வொரு அம்புக்கும் சினமும் வெறியும் மிகுந்தவராக கூச்சலிட்டுக்கொண்டே போரிட்டார். அவருடைய அம்புகளில் ஒன்று கர்ணனின் தோளை தாக்கியது பிறிதொன்று அவன் தொடையை தாக்கியது. கர்ணன் அதை எதிர்பார்க்கவில்லை என்பதனால் சீற்றத்துடன் முன்சென்று யுதிஷ்டிரனின் தேர்த்தட்டை அம்புகளால் அறைந்தான். முள்ளால் வேலியிடப்பட்டதுபோல் கர்ணனின் அம்புகள் நடுவே யுதிஷ்டிரன் நின்றார். ஆயினும் அவர் தொடர்ந்து போரிட்டார். பற்கள் தெரிய “கீழ்மகனே, ஒருபோதும் உன் முன் இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசன் மண்டியிடப் போவதில்லை. என் தலை கொய்து இம்மணிமுடியுடன் செல். குருதியுடன் மட்டுமே இம்மணிமுடி உன் கைக்கு வரும். அக்குருதிக்கு நீயும் உன் குலமும் நூறு தலைமுறைக்காலம் நிகர்த்திறை கொடுக்கவேண்டியிருக்கும்” என்று கூவினார்.
கர்ணன் யுதிஷ்டிரனின் தேரின் ஆரத்தை உடைக்க அது ஒருபக்கமாக சரிந்து அவரை கீழே தள்ளியது. வில்லுடன் சரிந்து தேர்த்தட்டிலிருந்து உருண்டு கீழே மண்ணில் விழுந்து குருதிச்சேற்றில் புரண்டு எழுந்தபோது அவர் ஏந்தியிருந்த வில்லையும் அம்பையும் அறைந்து உடைத்து துண்டுகளாக தெறிக்கவிட்டான் கர்ணன். அவர் தொடர்ந்து போரிடும் வெறியுடன் குனிந்து கீழே கிடந்த ஒரு வில்லை எடுத்தபடி முன்னால் வர அதையும் உடைத்தான். அவர் காதில் அணிந்திருந்த குண்டலங்கள் இரண்டையும் அறைந்து தெறிக்க வைத்தான். சிறிய கூரிய அம்புகளால் அவருடைய கால்களின் கழல்களை, கைகளின் கங்கணங்களை, இடைக்கச்சையை, ஆரங்களை, நெஞ்சக்கவசத்தை, தோளிலைகளை ஒவ்வொன்றாக அம்புகளால் அறைந்து உடைத்து விழச்செய்தான். அவர் விரல்களில் அணிந்திருந்த கணையாழியைக்கூட ஓர் அம்பு உடைத்தது.
பின்னர் பிறைஅம்பொன்று வளைந்து சென்று அவர் இடையில் அணிந்திருந்த ஆடையைச் சீவி அறுத்துச் சென்றது. இடையாடை கீழே நழுவ அவர் பதறி அதை இரு கைகளாலும் பற்றினார். அவர் குழலை ஓர் அம்பு சீவி மழித்துச்செல்ல அவர் கைதூக்கி தலையை காக்க முயன்றபோது இன்னொரு அம்பு வந்து ஆடையைப் பிடுங்கி கொண்டுசென்றது. உள்ளே காமஉறுப்பை மட்டும் இறுக்கிக் கட்டியிருந்த தோல்சிறுகச்சு தெரிய ஆடையற்ற உடலுடன் திகைத்தவராக யுதிஷ்டிரன் நின்றார். பிறிதொரு அம்பினால் அவர் மணிமுடியை அறைந்து கீழே விழச்செய்தான். மேலும் மேலும் அம்புகளை அவன் செலுத்த அவை பறவைகள் ஊன்துண்டை கொத்துவதுபோல் அந்த மணிமுடியை அடித்து அடித்து களத்தில் துள்ளித் தெறிக்கவைத்தன. மணிமுடி வலியுடன் குதித்தது. ஒளிய விழைவதுபோல சகடங்களின் இடுக்குகளில், சிதைந்த உடல்களின் மடிப்புகளில் ஒண்டிக்கொண்டது. உருண்டு துடித்து தவித்து எம்பி எம்பி குதித்து உருவழிந்தது.
கர்ணன் யுதிஷ்டிரனிடம் “யுதிஷ்டிரா, உனக்குரியது இந்த மான்தோல் சிறுகச்சையும் சடைமுடியும் கமண்டலமும்தான். அரசனென்று தருக்கி அரியணையில் இனி அமராதே. கோழையே, பெண்ணையும் மண்ணையும் விரும்புவதை மறைத்து அறம்பேசும் வீணனே, செல்க! சென்று காட்டில் தவம் செய். நீ கற்ற அரசியலையும் நெறியையும் முற்றிலும் மறந்து உன் விழைவுகளுக்கு உன்னை ஒப்புக்கொடு. அவற்றை மெய்யென ஏற்றுக்கொண்ட பின்னர் அவற்றை துறக்க முயல்க! உன் இழிநடிப்புகளைத் துறந்து மெய்யுணர்ந்தாய் என்றால், அவற்றுக்கு அப்பால் ஒருகணமேனும் எழுந்து நின்றாயெனில், ஏழு பிறவிக்கு அப்பாலென்றாலும் உனக்கு விடுதலை இயல்வதாகும். செல்க! செல்க, மூடா!” என்றபின் தேரை திருப்பிச் சென்றான். அவன் மைந்தரும் உடன்சென்றனர். வில்தாழ்த்தி சாத்யகி யுதிஷ்டிரனை நோக்கினான். அவரை சென்று எதிர்கொள்ளக்கூடாது என்று உணர்ந்தான்.
யுதிஷ்டிரன் உடல் நடுங்கித் துள்ள, இரு கைகளும் அலைபாய, கண்ணீர் வழிய, உதடுகள் துடிக்க அங்கே நின்றார். அவரது மணிமுடி வெட்டுண்ட தலை என குருதியாடி செஞ்சேற்றில் பாதி புதைந்து கிடந்தது. அதை ஒருமுறை நோக்கியபின் திரும்பி தன் படைகளை நோக்கி சென்றார். ஒரு வீரன் அதை எடுக்கச் செல்ல “ம்!” என்னும் ஆணையோசையால் அவனை அகற்றினார். அப்பால் பாண்டவப் படையைப் பிளந்தெழுந்த அர்ஜுனன் கர்ணனை தன் அம்புகளால் எதிர்கொண்டான். அம்புகள் அம்புகளுடன் தொடுத்துக்கொள்ள அவர்களிடையே மீண்டும் போர் மூண்டது. சாத்யகி தன் தேரைத் திருப்பி அத்திசை நோக்கிச் செல்ல ஆணையிட்டான்.