இருட்கனி - 24

வேல்முனை முதலையை நோக்கி செல்ல, முதலை உடலை வளைத்து ஒழிந்து தன் வலக்காலால் அதை அறைந்தது. துரியோதனனும் துச்சாதனனும் இளையோரும் சேர்ந்து பீமனை தாக்கினார்கள். வேல்முனையின் விளிம்பிலிருந்து பிறிதொரு வேல்முனையென திருஷ்டத்யும்னனும் சாத்யகியும் சிகண்டியும் குவிந்தெழுந்து கர்ணனை நோக்கி சென்றார்கள். கர்ணன் தடையற்றவனாக பாண்டவப் படைகளை நோக்கி வந்தான். அவர்கள் மூவரும் தொடுத்த அம்புகளால் எவ்வகையிலும் அவனை தடுத்து நிறுத்த முடியவில்லை. விண்ணிலேயே அவர்களின் அம்புகள் முறித்து வீழ்த்தப்பட்டன. தேர்த்தட்டுகளிலிருந்து அவர்கள் கர்ணனின் ஒளிமிக்க விழிகளை மிக அருகிலெனக் கண்டனர். அவற்றிலிருந்த தெய்வ விழிகளுக்குரிய விலக்கம் அவர்களை அச்சுறுத்தியது.

கர்ணனின் அம்புகள் சீரான அலையாக எழுந்துகொண்டிருந்தன. அவற்றில் எழுச்சி தெரியவில்லை. ஆனால் மெல்ல மெல்ல அது விரிவடைந்துகொண்டிருக்கும் வளையம் என்றும், அதை எந்த விசையும் தடுக்கவியலாதென்றும் அவர்கள் கண்டுகொண்டார்கள். முதலில் சிகண்டி வில்லைத் தாழ்த்தியபடி பின்னடைந்தார். மறுபுறம் சாத்யகியும் கைதளர்ந்து பின்னடைந்தான். திருஷ்டத்யும்னன் அரைக்கணம்கூட விழிதிருப்பி அவர்களை பார்க்கவில்லை. ஆனால் அவனுடைய எண்ணத்தில் ஒரு பகுதி அவர்களைச் சென்று தொட்டு வந்தது. அந்த இடைவெளியை பயன்படுத்திக்கொண்டு கர்ணனின் வாளி அவன் வில்லை துண்டித்தது. அவன் தேர்தட்டிலிருந்து பாய்வதற்குள் பிறிதொரு அம்பு நெஞ்சை அறைந்து கவசத்தைப் பிளந்து எலும்பு மேல் பாய்ந்து நின்றது.

பின்புறம் தேர்த்தட்டில் அறைந்து மல்லாந்து விழுந்து இரு கைகளும் இழுபட்டு உதறிக்கொள்ள அவன் துடித்தான். அவன் உயிர்துறந்துவிட்டான் என்று எண்ணி பாண்டவப் படையினர் அச்சக் குரலெழுப்பினர். அவனுடைய பாகன் தேரை அக்கணமே கவிழ்த்து அதனடியில் திருஷ்டத்யும்னன் சிக்கிக்கொள்ளும்படி செய்ததனால் கர்ணனின் அம்புகளால் பருந்துக்கூட்டம் என வந்து அறைந்து அறைந்து தேரை உடைக்கவே இயன்றது. கழுத்தறுந்த பாகன் புரண்டு திருஷ்டத்யும்னன் மேல் விழுந்தான். அவனைச் சுற்றி வெட்டுண்ட தேர்ப்புரவிகள் விழுந்து உடல் துடித்தன. தேர் மகுடமும் தட்டும் சகடங்களும் குவியலாகி அவர்களை முற்றிலும் மூடிமறைத்தன. அப்பகுதியிலிருந்து வீரர்கள் விலகி அகல கர்ணனின் அம்புகள் மழைத்துளிகள் பாறையின்மேல் என விழுந்து துள்ளிச் சிதறிக்கொண்டிருந்தன.

அதைக் கண்டு சீற்றத்துடன் தன் தேரைத் திருப்பி கர்ணனை நோக்கி செல்ல ஆணையிட்டு வில்நின்று துடிக்க போரிட்டபடி சிகண்டி முன்னெழுந்தார். கர்ணனின் அரைவிழிதான் அவரை நோக்கி திரும்பியது. சிகண்டியின் தேர்மகுடம் உடைந்தது. மறுகணம் வில் உடைந்தது. செயலற்று நின்ற அவர் இடையை தாக்கி தூக்கி வீசியது கர்ணனின் வாளி. முன்னர் திருஷ்டத்யும்னனின் தேரோட்டி செய்ததைக் கண்டிருந்த சிகண்டியின் பாகன் அக்கணமே தேரை கவிழவைத்து அதனடியில் சிகண்டியை சிக்கச்செய்து உயிர் காத்தான். ஆனால் வந்தறைந்த கர்ணனின் அம்புகள் தேரை துண்டு துண்டாக பறக்கவிட்டன. ஊன் குவியலாக அவர் மேல் தேர்ப்பாகனும் புரவிகளும் விழுந்தனர். தேருக்கு அடியில் சிகண்டியின் கால்கள் துடித்தன.

குருதியில் முற்றாக நனைந்து, கருவறை விட்டு வெளிவரும் குழவியென ஆகி தவழ்ந்து புரண்டு எழுந்து மீண்டும் புரண்டு விழுந்து கிடந்த உடல்களுக்கு நடுவே மறைந்துகொண்டார் சிகண்டி. அவர் சென்ற வழியெங்கும் அறைந்து நாணல்வேலிபோல் மண்ணில் நின்று சிலிர்த்தன கர்ணனின் அம்புகள். சாத்யகி தன் கையில் இருந்த வில்லுடன் திகைத்து நின்றான். கர்ணனின் விழிகள் அவனை நோக்கி திரும்பியபோது அவற்றிலிருந்த நோக்கின்மை அவன் உள்ளத்தை பதறச்செய்தது. தன் இறுதிக்கணம் அது என அறிந்ததுபோல் அவன் மெய்ப்பு கொண்டான். எங்கிருந்தோ என அவன் தன் இளமையில் நீராடிய ஒளிமிக்க நதி ஒன்று நினைவிலெழுந்தது. அவன் உள்ளம் இரண்டாகப் பிரிந்தது. ஒன்று அங்கே நீர் துழாவ பிறிதொன்று விழிமட்டுமாக நோக்கி நின்றது.

கர்ணனின் வில்லின் துள்ளல்களை, நாணின் அதிர்வுகளை ஒவ்வொரு அசைவையும் என தனித்தனியாக காண முடிந்தது. அவன் கை சுற்றும் ஒளி எனச் சுழன்று பின்சென்று வாளியொன்றை எடுப்பதை, நாணில் வைத்து இழுத்துத் தொடுப்பதை, அது சற்றே திரும்பி நாகபடம் போன்ற முனையுடன் காற்றில் அவனை நோக்கி வருவதை அவன் நூறுநூறு காட்சிகளால் ஆன தொடர் என கண்டான். ஆனால் அதை பிறிதொரு அம்பு அறைந்து தெறிக்க வைத்தது. “விலகிச் செல்க! யுயுதானரே, விலகிச்செல்க!” என்று கூவியபடி பீமன் அவர்களுக்கு நடுவே புகுந்தான். அவன் அம்புகள் கர்ணனைச் சூழ்ந்து மணியோசை எழுப்பியபடி அறைந்தன.

கர்ணன் முதல்முறையாக விழிகளில் சினத்துடன் திரும்பி பீமனை பார்த்தான். கைசலிக்காது அம்பு தொடுத்தபடி இருபுறமும் சர்வதனும் சுதசோமனும் துணைவர பீமன் கர்ணனை நோக்கி வந்தான். கர்ணனின் அம்புகள் விம்மல் ஓசையும் வெடிப்போசையும் எழுப்பி பீமனை தாக்கின. அவை புலியென உறுமின. யானை என பிளிறின. கழுகுகள் என அகவின. அவ்வோசைகள் இணைந்து காட்டெரியின் முழக்கமென்று மாறின. பீமனின் தேரின் உலோகப்பரப்புகள் வெம்மை கொண்டு அனல் என்றாயின. அவன் கொடி உடைந்து தெறித்தது. அவன் தேர்த்தண்டு ஏழுமுறை உடைந்தது. அருகிலிருந்த பிற வில்லவர்கள் அக்கணமே தங்கள் வில்லை அவனை நோக்கி எறிந்துவிட்டு தங்கள் தேரை பின்னுக்கிழுத்தனர். அவற்றைப் பற்றி அதே விசையில் அம்புகளை நாணேற்றி கர்ணனை அறைந்தான் பீமன்.

இருபுறமும் சூழ்ந்திருந்த மைந்தர்கள் தங்களுக்குள் போரிட்டுக்கொண்டார்கள். சுதசோமன் கர்ணனின் காலடிகளை மட்டுமே இலக்காக்கி அம்புகள் எய்து ஒருகணமேனும் கர்ணனின் உள்ளத்தை திசை திருப்பிவிட இயலுமா என்று பார்த்தான். கர்ணனின் வலப்பக்கத்து தேர்த் தண்டை மட்டுமே இலக்காக்கி அம்புகளை எய்து அவன் விழிகளை திருப்ப இயலுமா என்று முயன்றான் சர்வதன். பீமனுக்குப் பின்னால் நின்ற நகுலனும் சகதேவனும் கர்ணனின் மைந்தர்களையும் தேர்ப்பாகன்களையும் புரவிகளையும் கொல்ல முயன்றனர். ஐவரையும் தனி ஒருவனாகவே கர்ணன் அம்புகளால் எதிர்த்தான். அவன் மைந்தர்கள் பாண்டவர்களைச் சூழ்ந்து வந்த பாஞ்சாலத்து வில்லவர் படையை எதிர்கொண்டு பின்னடையச் செய்தனர். வில்லவர்கள் அலறி தேரிலிருந்து விழுந்தும் புரவிகள் கவிழ்ந்தும் நிலையழிந்தும் தேர்கள் கவிழ்ந்தும் பின்னணிப்படை சிதைந்து துண்டுகளாகி அப்பால் செல்ல வேல்முனை ஒரு தனித்த சிறு குழுவென்றாகி கர்ணனின் முன் சென்றது.

சாத்யகி தேர்த்தட்டிலிருந்து உடலை நெளித்துச் சரிந்து மருத்துவஏவலர்களின் முன் விழுந்தான். அவர்கள் அவனை அள்ளிச்சென்று படுக்க வைத்து கவசங்களை கழற்றினார்கள். அவன் உடலில் ஏழு இடங்களில் புதைந்திருந்த அம்புகளை பிடுங்காமல் அவற்றின் மேலேயே மெழுகையும் மரவுரியையும் வைத்துக் கட்டி இறுக்கி மீண்டும் கவசங்களை அணிவித்தனர். அவன் மதுவருந்தி எழுந்து நின்றபோது கால்கள் நீர்மேல் மிதக்கும் தெப்பத்தில் நிற்பதுபோல் அசைவதை உணர்ந்தான். கர்ணனின் தேர் பாண்டவர்களை நோக்கி திரும்பியதுமே கொக்கிகளை வீசி திருஷ்டத்யும்னனையும் சிகண்டியையும் பின்னுக்குக் கொண்டுவந்தனர் வீரர்கள். அவர்களை தூளிக் கட்டிலில் படுக்க வைத்து தூக்கிக்கொண்டு சென்றதை சாத்யகி கண்டான். “உயிர் இருக்கிறதா? உயிர் இருக்கிறதா அவர்களுக்கு?” என்று அவன் கூவினான்.

மருத்துவஏவலன் ஒருவன் கைவீசி விரல்செய்கை காட்டி திருஷ்டத்யும்னன் உயிருடன் இருப்பதை அறிவித்தான். “பாஞ்சாலர் எங்கே? பாஞ்சாலர் எப்படி இருக்கிறார்?” என்று சாத்யகி மீண்டும் கூவினான். அங்கிருந்து பிறிதொரு மருத்துவஏவலன் இன்னொருவரின் இடையில் கால்வைத்து மேலெழுந்து திரள்மேல் தலைதூக்கி சிகண்டியும் உயிருடனிருப்பதை அறிவித்தான். உளநிறைவுடன் கண்களை மூடி அருகிலிருந்த தேரை பற்றிக்கொண்டு சில கணங்கள் சாத்யகி நின்றான். ஒரு நொடியென எழுந்து உள்ளத்தை மூடி உடலுறுப்புகள் அனைத்தையும் செயலற்றதாக்கி பின்னர் எங்கிருக்கிறோம் என்பதையே அறியா வெளியொன்றில் நிறுத்தி மீளச்செய்த வெறுமையை அவன் அடைந்தான்.

அங்கிருந்து விலகி ஓடிவிடவேண்டுமென்ற எண்ணமாக அது குவிந்தது. அது இயல்வதல்ல என்று உணர்ந்ததும் அனைத்துச் சொற்களையும் பொருளிழக்கச் செய்யும் சோர்வு என்றாகியது. பின்னர் திரும்பி போர்முகத்தை பார்த்தான். பீமன் கர்ணனை வெறிகொண்டு தாக்குவதை கண்டான். கர்ணன் பீமனை ஒரு பொருட்டாக எண்ணவில்லை என்று தெரிந்தது. ஆயினும் பீமனின் வெறியும் சினமும் பெருகிக்கொண்டே வந்தது. எண்ணியிராக் கணமொன்றில் பீமன் தன் தேரிலிருந்து பாய்ந்து இரு தேர்முகடுகள் வழியாகச்சென்று கதையைச் சுழற்றி கர்ணனின் தேரை ஓங்கி அறைந்தான். தேர் சற்றே நலுங்கி தூண் வளைந்து முகடு சரிந்தது. கர்ணன் தன் வில்லாலேயே பீமனை தடுத்தான். பீமன் துள்ளி விலகி நிலத்திலிறங்க கர்ணன் பாய்ந்திறங்கி அவனருகே செல்வதற்குள் பின்னிருந்து அவன் ஆவக்காவலன் கதையொன்றை எடுத்து அவனை நோக்கி வீசினான். ஒரு கையால் அதைப்பற்றி அதே விசையில் பீமன் தன் தலையை நோக்கி செலுத்திய கதையை தடுத்தான்.

அவர்கள் கதைப்போரிடலாயினர். பீமன் இரு கைகளாலும் கதையைப்பற்றி விசைகொண்டு துள்ளிச் சுழற்றி கர்ணனை அறைந்தான். கர்ணன் ஒரு கையால் அதைவிட எடை கொண்ட கதையை பற்றியிருந்தான். இன்னொரு கையை பறவையின் இறகுபோல சற்றே சரித்து நீட்டி கால்களை அரைமண்டிலமாக விரித்து நிலைகொண்டிருந்தான். அவன் விழியன்றி பிற எதுவும் அசையவில்லை. பீமனின் அடிகளை தடுப்பதற்கு அந்தக் கையும் கதையுமன்றி பிற உறுப்பெதுவும் எழவில்லை. ஏழு சுற்றுகள் அவர்கள் வந்து சுற்றி அடித்தனர். அவர்களைச் சூழ்ந்து கர்ணனின் மைந்தரும் பாண்டவர் தரப்பும் எய்த அம்புகள் ஒன்றையொன்று முட்டி மணியோசையுடன் ஒலித்துக்கொண்டு விழுந்தன. ஒருகணம் விழிநிறுத்தி நோக்கினால் வெறுங்காற்றில் எழுந்த முள்ளால் ஆன வட்ட வடிவ வேலிபோல் அவை தோன்றின.

அங்கே பிறர் எவரும் இல்லை என்பதுபோல் அவர்கள் இருவரும் வெறிகொண்டு கதைகளால் போரிட்டனர். பீமனின் விசை மேலெழுந்து மேலெழுந்து சென்றது. கர்ணன் ஒரு விழிக்கணம் திரும்புவதற்குள் பீமனின் கதை அவன் நெஞ்சை அறைந்தது. கர்ணன் மல்லாந்து மண்ணில் விழுந்து அதே சுழற்சியில் கதையை நிலத்தில் அறைந்து உடலைத் தூக்கி அப்பால் சென்றான். பீமன் முன் பாய்ந்து ஓங்கி ஓங்கி அறைந்த அடிகள் குருதிச் சேறென குழம்பிய சிவந்த மண்ணில் விழுந்து சிதர் தெறிக்கச்செய்தன. நிலமெங்கும் இருந்து செவ்விழுதுத் திப்பிகள் அவன் உடலிலும் முகத்திலும் பட்டு வழிய பீமன் தலை சிலுப்பி அவற்றை உதிர்த்து, நாசுழற்றி உதடுகளை நக்கிக்கொண்டு, நகைப்பவன்போல் பல்லிளித்து உறுமலோசை எழுப்பியபடி கர்ணனை மீண்டும் அறைந்தான்.

அதை ஒழிந்து அமர்ந்து சுழன்றெழுந்த கர்ணன் பீமனின் நெஞ்சை தன் கதையால் தாக்கினான். பீமன் நிலைகுலைந்து பின்னடைந்த கணத்தில் எழுந்து தன் காலால் பீமனின் நெஞ்சை உதைத்து பின்னால் தள்ளினான். அவன் மீண்டும் ஒரு முறை ஓங்கி அறைந்தபோது பீமனின் கதை தெறித்தது. துள்ளி பீமனின் உடல்மேல் கால்வைத்து நின்று தன் கதையை அவன் தலைக்கென தூக்கி மும்முறை ஓங்கி பின்னர் நகைத்தபடி அதை அகற்றினான். பீமனின் மேலிருந்த தன் காலை எடுத்து அவனை விடுவித்து பின்னகர்ந்து “செல்க, மந்தா! இது உன் போரல்ல. எந்தக் காட்டிலும் செங்கழுகை வெல்லும் வேழம் பிறந்ததில்லை” என்றபடி புன்னகைத்து தாவி தன் தேரிலேறிக்கொண்டான்.

வெறுப்பும் சீற்றமும் கொண்டு பல்வெளிக்க இளித்த முகத்துடன் கர்ணனை நோக்கிக்கொண்டு கிடந்த பீமன் அவன் கால் எடுத்ததும் நெஞ்சு அதிர்ந்தான். முனகியபடி கையூன்றி புரண்டு ஒருக்களித்தான். அவனை திகைப்புடன் நோக்கி சூழ்ந்திருந்த பாண்டவப் படையினரின் விழிகளை ஒழிந்து தள்ளாடிய நடையுடன் தன் தேர் நோக்கி சென்றான். அப்பாலிருந்து நகுலன் “மூத்தவரே, தேரிலேறிக் கொள்ளுங்கள். பின்னடையுங்கள். மீண்டும் ஒருங்கிணைவோம்!” என்று கூவ அவனைப் பார்த்த கணத்திலேயே சீற்றம் பெருகியெழ பீமன் தன் நெஞ்சில் மாறி மாறி அறைந்து தலைதூக்கி ஓலமிட்டான். பின்னர் தன் தொடைகளையும் தோளையும் வெடிப்போசையுடன் அடித்துக்கொண்டு நிலத்தில் கையூன்றி எழுந்து குதித்து தன்னைத்தானே சுழன்றான். அவன் உடலில் இருந்து அவன் குருதியில் வாழும் தொல்குரங்குகள் வெளிவந்தன. கீச்சொலிகளும் சீற்றம்கொண்ட உறுமல்களுமாக கொந்தளித்துப் பாய்ந்து வாயில் நுரை எழ வெறிகொண்டு கூத்தாடினான்.

பின்னர் தன் தேரிலேறி அம்பை எடுத்து வில்லில் பூட்டி  ஏவியபடி கர்ணனை நோக்கி முன்னால் சென்றான். “மூத்தவரே, நில்லுங்கள்! நில்லுங்கள்!” என்று சகதேவன் கூவினான். நகுலன் “சேர்ந்து எதிர்ப்போம்! பின்னடைக! நாம் சேர்ந்து எதிர்ப்போம்!” என்று பின்விளி எழுப்பினான். எக்குரலும் அவன் செவிகளை எட்டவில்லை. அவன் அம்புகள் ஒன்றையொன்று தொட்டு எழுபவைபோல் கர்ணனின் தேர்முகட்டை தாக்கின. அம்புகள் சென்று உரசி கர்ணனின் தேரின் பொற்பரப்பு நசுங்கியது. கர்ணன் விழிகளில் சீற்றம் தெரிய “செல்க… அறிவிலி, அகன்று செல்க!” என்றபடி பீமனை தன் அம்புகளால் அறைந்தான். ஆனால் பெரும்சீற்றத்தால் ஆற்றல் கொண்டிருந்த பீமன் அந்த அம்புகள் அனைத்தையுமே விண்ணில் சிதறடித்தான். கர்ணனின் தேர்மகுடம் மீது அவன் அம்புகள் விண்கற்கள் என விழுந்தன.

ஒரு கணத்தில் தன் தேரிலிருந்து பாய்ந்து இன்னொரு தேர்மகுடத்திற்குச் சென்று அம்பால் அடித்தான். அந்தப் பாய்ச்சலை எதிர்பாராத கர்ணன் திகைத்து பின்னடைய அவன் தோள்கவசத்தில் பாய்ந்தது அம்பு. பிறிதொரு அம்பு அவன் தொடையில் பாய்ந்தது. கர்ணன் முதல்முறையாக தேர்த்தட்டில் மண்டியிட்டு தன் வில்லை காத்துக்கொண்டு சுழன்று எழுந்து அடுத்த அம்பால் பீமனை அறைந்தான். பீமன் பிறிதொரு தேர்த்தட்டுக்குப் பாய்ந்து அங்கிருந்து அம்பு தொடுத்து கர்ணனின் கொடியை உடைத்தான். கர்ணனின் கொடி உடைந்ததைக் கண்டு கௌரவப் படைவீரர்கள் அச்ச ஒலி எழுப்பினர். பின்னிருந்து சகுனியின் குரல் “சூழ்ந்து கொள்க! அங்கரை சூழ்ந்து கொள்க!” என்று ஆணையிட அவ்வாணையே அவர்களின் அச்சத்தை மேலும் பெருக்கியது.

பீமன் யானைகள் மேலும் தேர்மகுடங்கள் மீதும் கால் வைத்து தாவி காற்றில் நின்றபடி மேலும் மேலும் அம்புகளால் கர்ணனை அறைந்தான். கர்ணனின் நெஞ்சிலும் தோளிலும் அவன் அம்புகள் பட்டன. அவன் வில்லின் நாண் அறுந்தது. அவ்வில்லை ஆவக்காவலனிடம் அளித்துவிட்டு பிறிதொரு வில்லை அவன் எடுப்பதற்குள் கர்ணனின் கைகளின் கங்கணத்தை உடைத்து தெறிக்க வைத்தது பீமனின் அம்பு. கர்ணன் நாணேற்றிய வில்லுடன் எழுவதற்குள் அவன் பாகன் தலையறுந்து அமரத்தில் விழுந்தான். புரவிகளில் ஒன்று கொல்லப்பட்டது. கர்ணன் முதல்முறையாக தன் வில்லைத் தூக்கி தலைநிமிர்ந்து சிம்மக்குரலில் உறும அவன் ஆவநாழியிலிருந்து எடுத்த அம்பு எடுக்கையிலேயே மும்மடங்காக நீண்டது. இழுத்து அதை எய்தபோது எழுந்த விம்மலோசையை யானைகள் அஞ்சி பின்காலெடுத்து வைத்தன. புரவிகள் நின்று செவிகோட்டி மெய்ப்பு கொண்டன.

அதைக் கண்டபின் பீமன் பிறிதொரு தேர்முனைக்குத் தாவ அந்த அம்பு காற்றிலேயே பாம்பென வளைந்து சீறி அவனை நோக்கி வந்தது. அவன் நெஞ்சக் கவசத்தை அறைந்து உடைத்து தேரில் பாய்ந்தது. பேரோசையுடன் பீமன் நிலத்தில் அறைந்து விழுந்தான். பீமனின் தேர் வெடித்துச் சிதறியது. கர்ணனின் நீளம்புகள் மீள மீள எழுந்து வந்து அவனை அறைந்தன. பீமன் புரண்டு கையூன்றி எழுந்து தாவி தப்ப முயல அம்புகள் அவனைச் சூழ்ந்து மண்ணில் தைத்து ஒரு வேலியிட்டன. அதன் நடுவே எழுந்த சிற்றம்புகளால் பீமனின் கவசங்கள் அனைத்தும் உடைந்தகன்றன. அவன் கால்தண்டைகளும் கங்கணங்களும் அறுபட்டன. அவன் தலையின் இருபுறமும் கூந்தலை மழித்தபடி சென்றன இரு பிறையம்புகள்.

பீமன் காலெடுத்து வைத்து பின்னகர தேரொன்றில் முட்டி மல்லாந்து விழுந்தான். பாகனிழந்த கர்ணனின் எடைமிக்க தேர் அசைவிலாது நிற்க அவன் அதன் அமரத்தில் பாய்ந்து தேர்ப்புரவியின் மீது கால்வைத்து தாவி இறங்கி விஜயத்தை நீட்டி பீமனின் கழுத்தில் மாட்டி இழுத்துக்கொண்டு தன் தேரிலேறிக்கொண்டான். அதற்குள் இறந்த பாகனை அகற்றி அங்கே ஏறியமர்ந்த பிறிதொரு பாகன் தேரை அடித்துத் திருப்ப கர்ணனின் வில்லில் சிக்கி தள்ளாடும் கால்களுடன் பீமன் சென்றான். “செலுத்துக! செலுத்துக!” என்று கர்ணன் ஆணையிட்டான். பீமனை இழுத்தபடி கர்ணனின் தேர் படைமுகப்பில் வட்டமிட்டது. பாண்டவப் படைவீரர்கள் ஓலமிட்ட முழக்கம் எழுந்து சூழ்ந்தது.

பீமன் கர்ணனால் போர்க்களமெங்கும் சுழற்றப்பட்டான். பீமனைக் காக்கும்பொருட்டு அறைகூவியபடி எழுந்த நகுலனும் சகதேவனும் கர்ணனின் மைந்தர்களால் முற்றிலும் தடுக்கப்பட்டனர். “மூத்தவரே! மூத்தவரே!” என்று சகதேவன் கதறி அழுதான். அவன் அம்புகளைத் தடுத்து அவன் கவசங்களை உடைத்து இறுதியில் அவன் வில்லை மூன்று துண்டுகளாக்கியது விருஷசேனனின் அம்பு. நகுலனை தேர்த்தட்டிலிருந்து வீழ்த்தி அவன் தேரை கவிழ்த்தன திவிபதனின் அம்புகள். சர்வதனையும் சுதசோமனையும் சத்ருஞ்சயனும் பிரசேனனும் சுஷேணனும் சுதமனும் சேர்ந்து செறுத்தனர். சாத்யகி கூச்சலிட்டபடி களமுகப்பை நோக்கி ஓடிவர விருஷசேனன் அவனை நோக்கி திரும்பினான். கர்ணனின் அம்புகளுக்கு நிகரான விசைகொண்டிருந்தன விருஷசேனனின் அம்புகள். சாத்யகி தள்ளாடும் உடலுடன் அவனுடன் போரிட்டான். அவன் தேரை உடைத்தன அம்புகள். அவன் நெஞ்சிலறைந்து அப்பால் வீழ்த்தின.

களம் முழுக்க பீமனை இழுத்துச் சுழற்றி அலைக்கழித்த பின்னர் வில்லை உதறி அவனை அப்பால் வீழ்த்தினான் கர்ணன். அம்பால் சுட்டி “இழிபிறப்பே, காட்டுவிலங்கை களத்தில் கொல்வது நெறியல்ல என்பதனால் மட்டுமே உன்னை இன்று கொல்லாமல் விடுகிறேன். இனி எந்த வில்லவன் முன்னும் ஆணவத்துடன் எழாதொழிக உன் வில்! நீ கொண்டிருக்கும் உயிரென்பது இந்தச் சூதனின் கொடையென்று என்றும் உணர்க! சூதனின் எச்சில் தின்று வளர்த்த உடம்பு இதென்று  அன்னத்தை கையிலெடுக்கும் ஒவ்வொரு கணமும் இனி நீ அறிக! செல்”! என்றான்.

பீமன் கைகளை விரித்து மண்ணில் முழந்தாள் மடித்து மண்டியிட்டு “கொல்! என்னை கொல்! இழிமகனே, என்னை கொல்!” என்று கூவினான். “உன்னைக் கொன்றால் என்னால் கொல்லப்பட்ட மதிப்பை உனக்களித்தவனாவேன். என் கொடையினூடாக எவரும் சிறுமைப்படலாகாதென்று இதுவரை எண்ணியிருந்தேன். இன்று அறிகிறேன், கொடுப்பவனின் தருக்கை. செல்க, என் கையிலிருந்து உயிர்பெற்று மீண்ட இரவலனாக உன் குடியினரிடம் செல்க!” என்றபடி தன் தேரைத் திருப்பி பின்னால் சென்றான் கர்ணன். திகைப்புடன், கண்களில் வழிந்த நீருடன் உடல் நடுங்கிக்கொண்டிருக்க விரித்த இரு கைகளும் காற்றில் அலைபாய கர்ணனை நோக்கி அமர்ந்திருந்தான் பீமன்.

அவன் உதடுகள் அசைந்து கூறுவதென்ன என்பதை ஒருகணம் வியப்புடன் நோக்கிய சாத்யகி மறுகணமே அவன் செய்யப்போவதென்ன என்பதை உய்த்துணர்ந்தான். பீமன் எழுந்து அருகிலிருந்த அம்பொன்றை எடுத்து தன் கழுத்தை நோக்கி செலுத்துவதற்குள் தன் அம்பால் அந்த அம்பை அறைந்து தெறிக்க வைத்தான். புரவியை விரைந்து செலுத்தி தேரை அருகணைத்து பீமனை இடைவளைத்து தூக்கி தன் தேரிலேற்றிக்கொண்டான். “செல்க! பின்செல்க!” என்றான். தேர் விரைய “விடு என்னை! விடு! விடு!” என்று பீமன் உறுமினான். திமிறிச் சுழன்று தேர்த்தட்டில் விசையுடன் விழுந்தான்.

“இளவரசே, தாங்கள் கழுத்தறுந்து இக்களத்தில் விழுந்தாலும் அவன் அளித்த உயிர் என்பதே நிலைக்கும். இனி ஒருமுறையேனும் களத்தில் அவனை வென்று தாங்கள் பெற்றவற்றை திருப்பிக் கொடுக்காமல் உயிர்துறப்பதைப்போல் அறிவின்மை பிறிதொன்றில்லை” என்றான் சாத்யகி. பீமன் கொட்டும் குளிரருவியின் கீழே நிற்பவன்போல் உடல் அதிர்ந்துகொண்டிருந்தான். வியர்வையும் குருதியும் வழிந்த உடல் ஆங்காங்கே விதிர்த்தது. “எண்ணுக, இதற்கு பழிவாங்காது நீங்கள் மண்நீத்தீர்கள் என்றால் இக்கணத்தில் அடைந்த அனைத்து இழிவும் உங்களையே சாரும்! சூதர் சொற்களில் என்றும் அது நீடித்திருக்கும். உங்கள் மைந்தரைத் தொடரும்” என்றான் சாத்யகி.

பீமன் உளமுடைந்து விம்மினான். கர்ணன் அப்பால் திருஷ்டத்யும்னனை எதிர்கொள்வதை சாத்யகி பார்த்தான். “பாஞ்சாலர் புண்பட்டிருக்கிறார். இத்தனை விரைவாக களத்திலெழுவார் என்று எண்ணவில்லை. அவரைக் காத்து பின்துணை செய்தாகவேண்டும் நான்” என்றான். பீமனிடம் “செல்க அரசே, சென்று சற்று ஒய்வெடுத்து உணவும் மதுவும் அருந்தி படைமுகப்புக்கு மீள்க! நீங்கள் ஆற்றவேண்டிய பணி பிறிதுள்ளது” என்றபின் அணுகிய மருத்துவ ஏவலரை நோக்கி கைகாட்டினான். அவர்கள் வந்து பீமனை தூக்க முயல தேர்த்தட்டிலிருந்து புரண்டு நழுவி கீழிறங்கி மண்ணில் நின்ற பீமன் கால் தளர்ந்து பின்னால் விழுந்து நிலத்தில் அமர்ந்து தலையை முழங்கால் மேல் வைத்துக்கொண்டான். உள்ளிருந்தெழுந்த வெறியொன்று உந்த இரு கைகளாலும் மாறி மாறி தலையை ஓங்கி அறைந்தான்.

மருத்துவஏவலர் அவனை அள்ளிப்பற்றி சாய்த்து கீழே படுக்க வைத்தனர். பீமன் மதம்கொண்ட யானைபோல உறுமலோசை எழுப்பினான். தன் தேர் விரைந்து முன்செல்ல திருஷ்டத்யும்னன் கர்ணனை எதிர்கொள்வதை சாத்யகி பார்த்தான். அவனுக்கு மறுபுறம் தேர்த்தட்டில் சிறு பீடத்தில் அமர்ந்தபடியே போரிட்டுக்கொண்டு அவனுக்கு உதவிக்கு வந்த சிகண்டியையும் கண்டான். விரைந்து சென்று திருஷ்டத்யும்னனின் வலப்பக்கம் தான் இணைந்துகொண்டான்.