இருட்கனி - 17
பாண்டவப் படைகளினூடாக அர்ஜுனன் புரவியில் மென்நடையில் சென்றான். இருபுறமும் பந்தங்கள் எரிந்த வெளிச்சப்பகுதிகளில் கூடி அமர்ந்து ஊனுணவுடன் கள்ளருந்திக்கொண்டிருந்த வீரர்கள் பேசிக்கொண்டிருந்த சொற்கள் துண்டுதுண்டாக செவிகளில் விழுந்தன. ஒரு சொல்லை பொருள்கொண்டுவிட்டால் அந்த உரையாடல் தேய்ந்து மறைவதுவரை செவியில் விழுந்தது. சிதைந்த சொற்களை உள்ளமே நிரப்பிக்கொண்டது. “கதிரவன் மைந்தர் என்கிறார். பரசுராமரின் வில்லேந்தியவர். அறிக, இக்களத்தில் இன்றுவரை அவர் வெல்லப்படவில்லை!” என்றார் ஒருவர். “அவ்வண்ணம் வெல்லப்படாதவர்களே பீஷ்மரும் துரோணரும்” என்றார் இன்னொருவர். “அவர்கள் வீழ்ந்ததே இவர் புகழ்சூடத்தான் என்று தோன்றுகிறது” என்றார் அப்பால் ஒருவர். “யாதவர் ஓட்ட வில்லேந்தி பார்த்தர் அமர்ந்திருந்தால் அவர்களை வெல்ல மூன்று தெய்வங்களாலும் இயலாது” என்று ஒருவர் இருளில் சொல்ல திரள் அமைதியடைந்தது. அச்சொல்லின் ஆறுதலில் அவர்கள் அமைந்தனர். இருளுக்குள் ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன. “ஆனால்…” என ஒருவர் தொடங்கினார்.
அர்ஜுனன் யுதிஷ்டிரனின் படைசூழ் அவைக்குச் சென்றபோது அங்கு கொந்தளிப்பான குரல்கள் வெளியே கேட்டுக்கொண்டிருந்தன. வாயிலில் நின்றிருந்த சுருதகீர்த்தி தலைவணங்கி “அவைதொடங்கி சற்று பொழுதாகிறது, தந்தையே… தங்களை கேட்டார்கள்” என்றான். “இளைய யாதவர் உள்ளே இருக்கிறாரா?” என்று அர்ஜுனன் கேட்டான். “ஆம்” என்று சுருதகீர்த்தி சொன்னான். அர்ஜுனன் உள்ளே சென்று யுதிஷ்டிரனுக்கு தலைவணங்கி ஓரமாக ஒரு பீடத்தில் சென்று அமர்ந்தான். அமர்கையில் இளைய யாதவருக்கு அருகே செல்லவேண்டுமென்ற எண்ணம் எழவில்லையெனினும் என்றுமுள வழக்கப்படி அவன் உடல் அவருக்கு இடப்பக்கம் இருக்கும் இடத்தையே நாடியது. அவன் வந்தமர்ந்ததை திரும்பிப்பார்த்து புன்னகைத்த பின் அவைநிகழ்வை செவிகொள்ளத் தொடங்கினார் இளைய யாதவர்.
அர்ஜுனன் உடலை எளிதாக்கி கால்களை நீட்டி கைகளை மார்பில் கட்டிக்கொண்டான். அவை வெப்பமாக இருந்தது. அங்கிருந்தோர் உடல்களிலிருந்து எழுந்த வெம்மை. அவன் திரும்பி நோக்க அவையின் சாளரங்கள் எல்லாம் திறந்தே இருந்தன. வெளியே காற்றே இல்லை என அவன் நினைவுகூர்ந்தான். வரும்வழியில் அத்தனை கொடிகளும் தழைந்து கிடந்தன. படைவீரர்கள் தலைப்பாகை துணிகளைக்கொண்டும் வெவ்வேறு பொருட்களைக்கொண்டும் விசிறிக்கொண்டிருந்த அசைவு தரையெங்கும் பறவைகள் இறங்கிவிட்டதுபோல தோன்றச்செய்தது. அவன் காவல்மாடத்தில் புரவியை இழுத்து நின்றபோது காவலன் வியர்வை வழிந்த உடலுடன் தலைப்பாகையைச் சுருட்டி வீசிக்கொண்டிருந்தான். “காற்றே இல்லை, உள்ளே சிறிய இடம்” என்றான். பின்னால் நின்ற முதிய காவலர் “இரு நாளில் பெருமழை எழும். ஐயமே இல்லை” என்றார். அவன் புரவிகள் வெக்கைக்கு தலைதாழ்த்தி செவிகோட்டி நிற்பதைப் பார்த்தபடி முன்னால் சென்றான்.
கொந்தளிப்புடன் கைகளை அசைத்து பேசிக்கொண்டிருந்த யுதிஷ்டிரன் அவன் வருகையால் சற்றே அறுபட்டு மீண்டும் சென்று பொருத்திக்கொண்டு தொடர்ந்தார் “ஆகவேதான் சொல்கிறேன், இம்முறை நாம் போரை குறைத்து மதிப்பிடுவோம், நாம் ஏற்கெனவே வென்றுவிட்டோம் என்று எண்ணுவோம். கௌரவத் தரப்பின் முதன்மைப் போர்வீரன் இனிமேல்தான் தலைமைகொண்டு போருக்கெழுகிறான் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். பிறிதொருவர் வகுக்கும் படையில் திகழ்வது எல்லைக்குட்பட்டே தான் வெளிப்படுவது. தனக்கேயான படைசூழ்கையை வீரன் ஒருவன் அமைத்துக்கொள்வது முற்றிலும் வேறொன்று. கர்ணன் இதுவரை துரோணராலும் பீஷ்மராலும் கட்டுண்டவனாக இருந்தான். இப்போது அவனுக்கு முழு விடுதலை அளிக்கப்பட்டுள்ளது. படைசூழ்கை அவனை மையமாக்கியே அமைக்கப்படும். வென்றேயாகவேண்டும் என அவன் களமெழுவான். நாம் அவன் முன் நமது எளிய தன்னம்பிக்கையுடன் சென்று நின்றோமென்றால் தலைகொடுத்து அழிவோம்.”
அவையை சூழநோக்கி யுதிஷ்டிரன் தொடர்ந்தார். “இன்றுவரை கர்ணன் பெற்றுள்ள அரிய அம்புகள் என்னென்ன என்று நமக்குத் தெரியாது. நம் இளையோன் பெற்றுள்ள அனைத்து அம்புகளையும் சூதர்கள் பாடிப் பாடி பரப்பியிருக்கிறார்கள். அவனிடம் நாகவாளி இருப்பதை மட்டுமே நாம் அறிந்தோம், அதை சூழ்ச்சியால் ஒழிந்தோம். அதை மீண்டும் அவன் ஏவினால் என்ன செய்வதென்று நாம் அறியோம்.” இளைய யாதவர் “அவர் நாகவாளியை மறுமுறை ஏவமாட்டார்” என்றார். “இல்லை, ஆனால்…” என யுதிஷ்டிரன் தடுமாற “பிறிதொருமுறை அதை ஏவ இயலாது” என்றார் இளைய யாதவர். “ஆயினும் வேறு அம்புகள் இருக்கக்கூடும். இனி என்னென்ன அம்புடன் அவர் படையில் எழப்போகிறார் என்பதை நாம் எவரும் அறியமாட்டோம். அவற்றுக்கான மாற்றும் நமக்கு இன்னும்கூட தெரியாது” என்றார்.
அங்கிருந்த அனைவரும் ஒருவகையான நிலைகொள்ளாமை தெரிய ஒருவரையொருவர் விழி நோக்காமல் அமர்ந்திருந்தனர். அவர்கள் சொல்லெடுக்காமையால் அமைதி நிலவியது. அது அங்கிருந்த புழுக்கத்தை மூச்சடைக்கச் செய்வதாக ஆக்கியது. சகதேவன் “அவர்கள் சற்று முன்னர்தான் படைத்தலைவராக அங்கநாட்டரசரை தெரிவு செய்திருக்கிறார்கள் என்று அறிந்தேன்” என்றான். யுதிஷ்டிரன் “ஆம். அச்செய்தி இங்கு ஓலையாக வந்துவிட்டது” என்றார். திருஷ்டத்யும்னன் “அவருக்கு தேர்தெளிக்க சல்யர் அமர்த்தப்பட்டிருக்கிறார் என்கிறார்கள் ஒற்றர்கள்” என்றான். அவையிலிருந்த நிஷாதர்களும் அரசர்களும் வியப்பொலி எழுப்பினார்கள். “சல்யரா?” என்று குந்திபோஜர் கேட்டார். “ஆம்” என்றான் திருஷ்டத்யும்னன். “அவர் எப்படி ஒப்புக்கொண்டார்?” என்றார் குந்திபோஜர். “இக்களத்தில் எதுவும் நிகழும் என்பதை நாம் முன்னரே அறிந்திருக்கிறோம்” என்றார் நிஷாத அரசரான ஹிரண்யநபஸ்.
அர்ஜுனன் விழித்துக்கொண்டு “சல்யர் தேரோட்டவிருக்கிறாரா?” என்றான். அனைவரும் அர்ஜுனனை திரும்பிப்பார்க்க “அதனால் என்ன வேறுபாடு வரவிருக்கிறது?” என்றான் அர்ஜுனன். சகதேவன் “மூத்தவரே, தங்களுக்கு தேர்தெளிக்கும் இளைய யாதவருக்கு நிகரான ஒருவர் என்று சல்யரை சொல்கிறார்கள். அவர் அங்கருக்கு தேரோட்டுவார் என்றால் உங்களிடையே நிகழும் போர் அவரிடம் இன்றிருக்கும் சிறு குறைவை ஈடுகட்டிவிடுகிறது. அவர் உங்களை தன் அரிய அம்புகளால் வெல்லவும் கூடும்” என்றான். அர்ஜுனன் “என்னுடைய வெற்றி காண்டீபத்தாலோ அம்புகளாலோ அல்ல” என்றான். யுதிஷ்டிரன் “சல்யர் இன்னமும் ஒப்புக்கொள்ளவில்லை” என்றார். இளைய யாதவர் “அவர் ஒப்புக்கொள்வார். நாளை அல்ல, மறுநாள்” என்றார். யுதிஷ்டிரன் “அவர் தேர்தெளிக்கும் முறைமை நமக்கு அயலானது. மலைமக்களின் புரவிகளே மாறுபட்டவை” என்றார். “என் வெற்றி இப்போர்க்களத்தால்கூட நிகழ்வதல்ல” என்றான் அர்ஜுனன்.
யுதிஷ்டிரன் எரிச்சலுடன் “மீண்டும் நாம் வெற்றிகளைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். பெற்ற வெற்றிகள் அனைத்தையும் மறந்து இன்று புதிதாய் படையெழப்போகிறோம் என்பதே அங்கனை எதிர்கொள்வதற்கான ஒரே வழியாக அமையும் என்றுணர்க!” என்றார். சகதேவன் “வெற்றிகளைப்பற்றி நாங்கள் பேசுகிறோம். தோல்விகளைப்பற்றி நீங்கள் பேசுகிறீர்கள்” என்றான். யுதிஷ்டிரன் சீற்றத்துடன் “பேசியாகவேண்டும்… ஏனென்றால் அங்கன் சீற்றம் கொண்டிருக்கிறான். அவன் தரப்பில் நாம் செலுத்திய அழிவுகள் ஒவ்வொன்றும் அவர்களை விசைகொண்டெழச் செய்திருக்கின்றன. புண்பட்ட யானை என அவன் இன்று களம் வருவான் என்று சூதர்கள் பாடக்கேட்டேன். அத்துடன் இன்றே போர் முடித்து வெற்றிகொள்ள அவன் உறுதி கொண்டிருப்பான். பீஷ்மரும் துரோணரும் வெல்லாத இடத்தில் தான் வென்றால் பாரதவர்ஷமே தன் வில்லுக்கு அடிமையாகும் என்று அவன் அறிந்திருப்பான்” என்றார்.
“அது அவ்வளவு எளிதல்ல” என்று நகுலன் சொல்ல யுதிஷ்டிரன் சினத்துடன் அவனை நோக்கி திரும்பி “இந்த அவையில் அங்கனைப்பற்றி என் அளவுக்கு அறிந்தவர் எவருமில்லை என்றுணர்க! இந்த அறுபதாண்டுகளும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இரவுத் தனிமையிலும் நான் அவனையே எண்ணிக்கொண்டிருக்கிறேன். சென்ற பல ஆண்டுகளாக என் புலரியின் முதல் எண்ணமே அவனுடைய வில்லும் நாணொலியுமாக இருக்கிறது. நம்மால் வெறுக்கப்படுபவரை நாம் அறிவதில்லை, நாம் அச்சம்கொண்டிருப்பவரை நன்கு அறிகிறோம். நான் அவனை அஞ்சுகிறேன். தீயதெய்வம் என அவனை என்ணி நடுங்குகிறேன்” என்றார்.
அவையினர் மீண்டும் நிலைகொள்ளாத அசைவுகளை வெளிக்காட்டி அமைய யுதிஷ்டிரன் சொன்னார் “இன்றுவரை படைக்களத்தில் மாவீரர்களை கட்டுண்டு நிறுத்தியது போர்நெறி, குலநெறி. அதற்கப்பால் குருதியின் அறம். இக்கட்டுகள் ஒவ்வொன்றையும் நாமே அறுத்து அனைவருக்கும் அனைத்தையும் அளித்திருக்கிறோம். இனி எதுவும் தடையல்ல. எந்த நெறியாலும் முறையாலும் கட்டுப்படாத விசையுடன் அங்கன் போர்க்களம் எழும்பொருட்டுதான் நம்மையறியாமலேயே ஊழ் நம்மைக்கொண்டு இதை செய்ய வைத்ததா என்று சற்றுமுன் எண்ணினேன்.” “வீண்பேச்சு வேண்டாம். உங்கள் அச்சத்தை பரப்புவதனால் என்ன பயன்?” என்று நகுலன் சொல்ல “நான் பரப்புவது அச்சத்தை அல்ல, எச்சரிக்கையை. அறிவிலி!” என யுதிஷ்டிரன் சீறினார். நகுலன் ஒவ்வாமையுடன் முகம் திருப்பிக்கொண்டான்.
அவையை நோக்கி யுதிஷ்டிரன் தொடர்ந்தார் “அறுதியாக நான் சொல்வது ஒன்றே. பாதாளதெய்வங்களுக்குரிய தடையிலா ஆற்றலுடன் அவன் எழவிருக்கிறான். அவனை எதிர்கொள்வது எப்படி? அதை நாம் இங்கு எண்ணிச்சூழ வேண்டும். வென்றோம் என்று எண்ண வேண்டாம். ஒருவேளை இவ்வெற்றி அனைத்தும் அங்கன் முன் தோற்பதற்காக அமைந்ததாக இருக்கலாம். அங்கனுக்கு புகழ்சேர்க்கும் பொருட்டு அவன் தந்தை மண்ணில் இயற்றிய விளையாட்டாக இது இருக்கலாம். வெல்லற்கரிய பாண்டவர்களை, வெற்றி மட்டுமே அறிந்த மாவீரர்களை கடந்து வந்தவர்களை ஒரே ஒருநாள் போரில் வென்றான் அங்கன் என்று சூதர்கள் பாடும் நிலை எழக்கூடும்.”
பீமனின் குரல் எழுந்தபோதுதான் அவன் அங்கிருப்பதையே அர்ஜுனன் உணர்ந்தான். “மூத்தவரே, இந்த அவை கூடிய தருணத்திலிருந்து தோல்வியைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். நாம் தோல்வியை எப்படி அடைவதென்றுதான் திட்டமிடவிருக்கிறோமா?” என்றான். அக்கசப்பை புரிந்துகொள்ளாத யுதிஷ்டிரன் “அதைத்தான் பேசுகிறேன். நாம் வெற்றி பெற்றாகவேண்டும். ஆனால் வெற்றியை அடைந்துவிட்டோம் என்று எண்ணவேண்டியதில்லை. அது தோல்விக்கு நிகர். ஒருகணம் சற்றே திரும்பினால் போதும், தோல்வி அணைந்துவிடும். அதைத்தான் கூற வந்தேன்” என்றார். “ஆகவேதான் சொல்கிறேன்…” என அவர் மீண்டும் தொடங்க “அரசே, இன்னும் இந்த அவை பேசி முடிக்கவில்லை. பேசி முடிப்பது வரை தாங்கள் சொல்லடங்கி அரியணையில் அமர்வது நலம்” என்று இளைய யாதவர் கூரிய குரலில் சொன்னார்.
சற்றே திகைத்து பின் இரு கைகளும் தொய்ந்து விழ “ஆம், நான் பேசுவதற்கொன்றில்லை. நான் சொல்லவேண்டியதை பல முறை திருப்பித் திருப்பி சொல்லிவிட்டேன்” என்ற யுதிஷ்டிரன் சென்று தன் இருக்கையில் அமர்ந்தார். இளைய யாதவர் திருஷ்டத்யும்னனை நோக்கி “நமது படைசூழ்கை என்ன? எவ்வண்ணம் இப்போரை நிகழ்த்தவிருக்கிறோம்? அதை அவையில் உரையுங்கள்” என்றார். திருஷ்டத்யும்னன் எழுந்து அவையை நோக்கி தலைவணங்கி தன் படைசூழ்கையை விளக்கத் தொடங்கினான். “அவர்கள் நாளை மகரச்சூழ்கை அமைக்கக்கூடும் என செய்தி வந்துள்ளது. அல்லது கூர்மம். ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவு. அங்கர் ஒருபோதும் பதுங்கிவந்து தாக்கும் சூழ்கையை ஒப்பமாட்டார். பருந்துச்சூழ்கை அமையவும் வாய்ப்பு. இவற்றில் எதுவாக இருப்பினும் நாம் பிறைசூழ்கை அமைப்பதே உகந்தது. அவர்களை நாம் சூழ்ந்துகொள்ளவேண்டும். அவர்களை கவ்வி இறுக்கி நிலைகொள்ளச் செய்யவேண்டும்.”
அர்ஜுனன் நோக்கியபோது அவையினர் எவரும் அதை செவிகூரவில்லை என்று தோன்றியது. படைசூழ்கைகளினால் எப்பொருளும் இல்லை என்று அவர்கள் அனைவரும் எண்ணுவதுபோல. உண்மையிலேயே படைசூழ்கைகள் எதற்கும் எப்பொருளும் இல்லை என்பதை களம் ஒவ்வொரு நாளும் காட்டிக்கொண்டிருந்தது. படைசூழ்கைகளை பெருவில்லவர்கள் அதுவரை அடைந்த வெற்றிகளை, வெளிப்படுத்திய ஆற்றல்களை கொண்டு கணிக்கின்றனர். பெருவில்லவர்கள் அப்படைசூழ்கையின் அனைத்துத் தடைகளையும் மீறி அக்கணம் பிறிதொருவராக வெளிப்படுகிறார்கள். படைசூழ்கைகள் என்பவை வீரர்களை ஆற்றலுடன் எழுந்து அமரச்செய்யும் பீடங்கள் மட்டுமே. திருஷ்டத்யும்னன் “அவர்கள் கர்ணனை முன்னிறுத்துவார்கள். மகரமென்றால் தலை. பருந்தென்றால் அலகு. நாம் அவரை படைகளிலிருந்து பிரித்து தனிமைப்படுத்தவேண்டும். நம் வீரர்கள் அவரை வெல்லவேண்டும்” என தொடர்ந்தான்.
தானும் கர்ணனைப்பற்றி எண்ணிக்கொண்டிருப்பதை உணர்ந்து அர்ஜுனன் நீள்மூச்செறிந்தான். அவ்வோசை கேட்டு இளைய யாதவர் திரும்பிநோக்கி மீண்டும் புன்னகைத்தார். முதல் முறையாக அப்புன்னகை அவனுக்கு எரிச்சலை உருவாக்கியது. ஒவ்வொரு முறையும் அப்புன்னகை ஒவ்வொரு பொருள் கொள்கிறது. உன்னை அறிவேன் என்று, நீயறியாததையும் அறிவேன் என்று, என்னை நீ அறிய இயலாது என்று, இவையனைத்திற்கும் நானே முழுமுதல் என்று, இவையனைத்தையும் கடந்தவன் என்று, இப்போர்க்களத்தின் பேரழிவில் சந்தையில் சிறுமைந்தனென மகிழ்ந்து திளைக்கிறேன் என்று, இப்போர்க்களம் என்னவென்றறியாது எங்கோ இருந்து தன்கனவிலென ஆழ்ந்திருக்கிறேன் என்று.
அவன் இளைய யாதவரை ஓரவிழியால் பார்த்தான். முதற்கணம் பார்வையில் முதியவர் என்றும் மீண்டும் மீண்டும் விழிதீட்டிக்கொள்கையில் இளமை வந்து படிந்து முகத்தசைகள் கூர்கொண்டு விழியொளி கூடி விளையாடும் இளஞ்சிறுவன் என்றும் அவர் மாறும் விந்தையை என்றுமென அன்றும் அறிந்தான். அவரைப் பற்றிய சூதர்களின் புகழ்பாடல்களில் எப்போதும் கிசோரகன் என்றே அவர் குறிப்பிடப்பட்டார். விளையாட்டுகளில் அனைவரும் சிறுவர்களே. விளையாடும்வரை சிற்றிளமை விட்டு செல்வதும் இல்லை. தன் வாழ்நாளில் விளையாட்டன்றி செயலெதையும் ஆற்றாதவர் போலிருந்தார்.
திருஷ்டத்யும்னன் சூழ்கையை விளக்கி முடித்து “இது முழுக்க முழுக்க அங்கரை உளம்கொண்டு உருவாக்கப்பட்டது. நீங்கள் பார்க்கையிலேயே இதை புரிந்துகொண்டிருக்க முடியும். எல்லா நிலையிலும் நமது படைகள் அனைத்தும் அங்கரையே வட்டமிடுகின்றன. அங்கரை ஓரிடத்தில் அசையாது நிறுத்த முடியுமெனில், அவர் நம்முள் ஊடுருவ முடியாதெனில் நாம் வென்றோம். இப்போரில் இளைய பாண்டவர் அங்கரை எதிர்கொள்வார், அங்கரை அவர் கொல்வார் என்று வஞ்சினம் உரைக்கப்பட்டுள்ளது. அவருக்கு இருபுறமும் படைத்துணையென அவர் மைந்தர் இருப்பர். பிறையின் தென்னெல்லை சாத்யகியால், வட எல்லை சிகண்டியால் நடத்தப்படும். பிறை முன்னகர்ந்து வளைத்துக்கொண்டதும் எட்டு சுருக்குக் கயிறுகளாக மாறி தன்னைத்தான் வீசிக்கொண்டு சென்று முதலையின் கைகால்களையும் தலையையும் வாலையும் உடலையும் கவ்விக்கொள்ளவேண்டும். அதை அசையாது நிறுத்திவிட்டாலே போதும்” என்றான்.
நகுலன் “இப்படைசூழ்கையில் எங்கள் இடம் என்ன என்று வகுக்கப்படவில்லை” என்றான். திருஷ்டத்யும்னன் “அங்கர் உங்களை கொல்லலாகாதென்பதே இப்படைசூழ்கையின் இலக்கு. இன்னும் நீடுநாள் இப்போர் நீடிக்க இயலாது. இப்போதே இருபுறமும் படைப்பிரிவுகளில் பெரும்பகுதி அழிந்துவிட்டிருக்கின்றது. எங்கோ ஒரு புள்ளியில் இப்போரை நாம் சொல்நிறுத்தி முடிவு செய்யப்போகிறோம். அதுவரை பாண்டவ அரசகுடியின் ஐவரும் உயிருடன் இருந்தாகவேண்டும். ஆகவே இளைய பாண்டவர் அர்ஜுனன் தவிர பிற அனைவரும் இப்படைசூழ்கையால் முற்றிலும் காக்கப்படுவார்கள்” என்றான். பீமன் “என்னை எவரும் காக்கவேண்டியதில்லை… நான் இன்று படைமுகம் நின்று அவர்களை முற்றழிப்பேன்” என்று கூறி கைநீட்டியபடி எழ இளைய யாதவர் கைதூக்கி அவனை அமர்த்திய பின்னர் “அஞ்சவேண்டியதில்லை, பாண்டவ ஐவருமே களம்நிற்கட்டும். கர்ணனால் கொல்லப்படும் வாய்ப்புள்ளவர் இளைய பாண்டவர் அர்ஜுனன் மட்டுமே” என்றார்.
அவையினர் அனைவரும் வியப்புடன் திரும்பி அவரை பார்த்தனர். “பிற நால்வருக்கும் அங்கரால் எந்த உயிரிடரும் இல்லை” என்று மீண்டும் இளைய யாதவர் சொன்னார். நகுலன் “எவருடைய சொல்லுறுதி?” என்றான். இளைய யாதவர் “கர்ணனின் சொல்” என்றார். “எவருக்கு அளிக்கப்பட்டது?” என்றான் நகுலன். இளைய யாதவர் ஒன்றும் சொல்லவில்லை. அவையினரின் விழிகள் இருவரையும் மாறிமாறி நோக்கின. அர்ஜுனன் இளைய யாதவரின் புன்னகையை நோக்கியபின் திரும்பிக்கொண்டான். யுதிஷ்டிரன் “நீ பாம்பின் சொல்லுறுதியை நம்புகிறாய். சீறி ஆமென்றுரைக்கும், மும்முறை நிலம்கொத்தி ஆணை ஆணை ஆணை என்று கூறும். அப்பொழுதும் தன் வாலால் இல்லை இல்லை என்று நெளிந்துகொண்டிருக்கும். பாம்பின் சொல்லுறுதி என்பது அது தனக்கு எடுத்துக்கொள்வது மட்டுமே, பிறருக்கு அளிப்பதல்ல” என்றார். “கர்ணனை நான் அறிவேன்” என்று இளைய யாதவர் சொன்னார்.
யுதிஷ்டிரன் மேலும் ஏதோ சொல்ல முயன்றபின் தன்னை அடக்கிக்கொண்டார். “நாளை அவர் போர்க்களத்தில் எழும்போது அர்ஜுனன் காண்டீபத்துடன் அவரை எதிர்கொள்வார். நாளை நிகழவிருக்கும் அப்போரை நாம் அக்களத்தில் எழும் தெய்வங்களைக்கொண்டு மட்டுமே முடிவுசெய்ய இயலும். ஒவ்வொருவரும் தாங்கள் செய்ய வேண்டியதென்ன என்பதை முன்னரே அறிந்திருக்க இயலாது. எங்கிருந்து தொடங்குவது என்று மட்டுமே முடிவு செய்துகொள்ள முடியும். இப்படைசூழ்கை அதற்கு மட்டுமே. அவ்வாறே இதை அறுதி செய்வோம்” என்று இளைய யாதவர் சொன்னார். திருஷ்டத்யும்னன் “ஆம்” என்று தலைவணங்கினான்.
அர்ஜுனன் கைகளைக் கட்டியபடி நிலம் நோக்கி அமர்ந்திருந்தான். பெருமூச்சுடன் கைகளை உரசிக்கொண்டு “எனில் படையாணைகளை அரசர் பிறப்பிக்கட்டும். இந்த அவையை முடித்துக்கொள்வோம்” என்று குந்திபோஜர் கூறினார். “நாம் சென்று விழக்கூடும் பொறியொன்றையே இவ்வவைகூடுகையில் நான் சொன்னேன். அதை மீண்டும் சொல்ல விழைகிறேன். பீஷ்மரையும் துரோணரையும் வென்றுவிட்டோம் எனும் தருக்கு நம்முள் சற்றேனும் இல்லாமல் இருக்காது. இன்று நம்மை களத்தில் வீழ்த்தும் இடர் அதுவாக இருக்கலாம். அச்சிறுவாயிலினூடாக அழிவு நம்மை நோக்கி வரலாம்” என்றார் யுதிஷ்டிரன். நகுலன் “அதைப்பற்றி பேசிவிட்டோம்” என்றான். அவையினர் ஓசையின்றி தலைவணங்க யுதிஷ்டிரன் அவர்களை வணங்கி சகதேவனுடன் அவை விட்டு வெளியே சென்றார்.
அர்ஜுனன் தளர்ந்த உடலுடன் அவையிலேயே அமர்ந்திருக்க பிறர் ஒவ்வொருவராக பேசியபடி எழுந்து சென்றார்கள். இளைய யாதவர் அவனிடம் திரும்பி “நீ இன்று நன்கு துயின்றாக வேண்டும்” என்றார். அர்ஜுனன் தலையசைத்தான். “நாளைய போர் கைகளாலோ படைக்கலங்களாலோ நிகழ்த்தப்படுவதல்ல. அது விழிகளாலும் எண்ணங்களாலும் நிகழ்வது. உன் உள்ளம் ஓய்வுகொள்ளட்டும்” என்று இளைய யாதவர் சொன்னார். அவன் தலைகுனிந்து அமர்ந்திருக்க அவர் மேலும் கனிந்த குரலில் “சித்தம் துயிலாது விழிசோர்பவன் முழுத் துயிலை அடைவதில்லை. இன்று உன் ஆழமும் முழுதமைய வேண்டும்” என்றார். அர்ஜுனன் “நான் ஆழ்ந்து துயின்று நெடுங்காலமாகிறது, யாதவரே” என்றான். “என் காலம் முன்னே விரிந்து கிடந்தது. அது என்னை துயிலவிடவில்லை. இன்று காலம் முழுக்க பின்னால் விரிந்துள்ளது. அது என்னை ஒருபொழுதும் துயிலில் அமையவிடுவதில்லை.”
“இன்று எவ்வண்ணமேனும் துயில்க! இன்று நீ துயின்றாக வேண்டும்” என்று சொன்ன யாதவர் எழுந்து “இன்று உன் உள்ளத்தை வருத்துவதென்ன என்று அறிவேன். நீ துரோணரை எண்ணிக்கொண்டிருக்கிறாய்” என்றார். அர்ஜுனன் நிமிர்ந்து “விந்தை என்னவெனில் நான் துரோணரை எண்ணவே இல்லை. மெய்யாகவே எண்ணவில்லை. சற்றுமுன் அவரது உடல் போர்க்களத்திலிருந்து ஏவலரால் ஒன்று சேர்க்கப்பட்டு கொண்டு செல்லப்படுவதை காவல்மாடத்தின் உச்சியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அவர்கள் அவர் தலையுடன் உடலை சேர்த்தார்கள். அவரது தலை கிடைக்க நெடுநேரமாயிற்று. அது கீழே விழுந்திருந்த பலநூறு தலைகளில் ஒன்றெனக் கிடந்தது. அது அங்கே படைக்கலம் பற்றியபடி இறந்து கிடந்த நிஷாதகுடி வீரன் ஒருவனின் அறுந்த கழுத்தின் அருகே விழுந்து இணைந்ததுபோல் இருந்தமையால் அவர்கள் பலமுறை அவ்வுடலை கடந்துசென்ற பிறகும் அவரை கண்டடைய முடியவில்லை. ஒருவனின் காலில் அத்தலை இடறி உருண்ட போதுதான் அது துரோணரென்று கண்டுகொண்டான். அவன் இந்தத் தலை விந்தையாக உள்ளது என்று கூறியபோது அப்பால் தந்தைக்காக தேடிக்கொண்டிருந்த அஸ்வத்தாமன் திரும்பிப்பார்த்தான்” என்றான்.
இரு கைகளையும் விரித்து பெருமூச்சுவிட்டு “அவன் முகத்தின் திகைப்பை அத்தனை குறைந்த ஒளியிலும் அவ்வளவு தொலைவிலும் நான் கண்டேன். அவன் அது தன் தந்தை என்று நடுக்குடன் மீளமீளச் சொல்வதை கண்டேன். பின்னர் அவர்கள் அவ்வுடலை நீத்தோர்சகடத்தில் வைத்து பொருத்தினார்கள். துரோணர் அந்த உடலில் மீண்டும் எழவே இல்லை. அந்தத் தலை உடல் சற்று அசைந்தபோது திரும்பிக்கொண்டது. இவையனைத்திலிருந்தும் விலகிக்கொண்டதுபோல. அஸ்வத்தாமன் ஒருகணம் அதை நோக்கியபின் திரும்பவேயில்லை. நான் விழியிமைக்காமல் நோக்கிக்கொண்டிருந்தேன். அந்த நிஷாத வீரன் எவன் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். சகடம் எழுந்தபோது அஸ்வத்தாமன் அந்த நிஷாத வீரனின் உடலையும் உடன் எடுத்துக்கொள்ளும்படி சொன்னான். அது பாண்டவர் தரப்பு உடல் என்று சுடலைஏவலர் சொல்ல தாழ்வில்லை அதை எடுத்துக்கொள்ளுங்கள் என்றான். அவர்கள் திகைப்புடன் ஒருவரை ஒருவர் நோக்கியபின் ஒப்புக்கொண்டார்கள்” என்றான்.
“அவர்கள் நிஷாதனின் உடலை எடுத்த பின்னர் அவன் தலைக்காக தேடினார்கள். அது எங்கோ கிடந்தது. நிஷாத குலத்தைச் சேர்ந்த ஏவலர் எழுவரை கொண்டுவந்து அதை கண்டெடுக்கச் சொன்னார்கள். அந்தத் தலை துரோணரின் மேலாடை சுற்றிக்கிடந்தது. அதை நிஷாதன் என அவர்களால் எண்ணமுடியாமையால் பலமுறை கடந்துசென்றனர். பின்னர் அவர்கள் அவன் நெற்றியிலிருந்த குலப்பச்சை குறியைக்கொண்டு அதை அடையாளம் கண்டுகொண்டனர். அவர்கள் அதை உடலுடன் இணைத்து எடுத்துகொண்டு சென்றபோது நான் உளக்கொந்தளிப்புடன் காவல்மாடத்தின் மூங்கில்களைப் பற்றியபடி நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். அக்கணமே இடையிலிருந்து அம்பெடுத்தென் கழுத்தை அறுத்துக்கொள்ளவேண்டுமென்று எண்ணினேன். பின்னர் அத்தட்டிலேயே கால் தளர்ந்து அமர்ந்தேன். என் உள்ளம் வெறுமைகொண்டிருந்தது. பின்னர் ஆழத்திலிருந்து அந்த நிஷாத வீரனின் பெயர் என்ன என்று அறியும் ஆவல் எழுந்தது.”
“மெல்ல இறங்கி கீழே வந்தேன். ஒற்றரை அழைத்து செய்தியறிந்துவர ஆணையிட்டு அனுப்பியபின் படைகளினூடாகச் சென்றேன். நம் படைகள் போர் முடிந்து தளர்ந்து பிரிந்து சென்றுகொண்டிருந்தன. பெரும்பாலும் அடுமடையர்கள், ஏவலர்கள், போரென்றால் என்னவென்றே தெரியாதவர்கள். இளைய யாதவரே, குதிரைச்சூதர்கள்கூட படைக்கலம் எடுத்து போர்புரிந்ததை கண்டேன். எங்கும் கரிய புகை எழுந்து காடாக வான் தொட்டு நின்றிருந்தது. ஒருகணத்தில் துரோணர் மேல் கடும்வஞ்சத்தை அடைந்தேன். ஒருதுளியேனும் அவர் உள்ளம் நெகிழ்ந்திருந்தால், தன்னை விலக்கி மெய்காண இயன்றிருந்தால், இவ்வழிவை அவராலேயே தடுத்திருக்க முடியும் என்று தோன்றியது. அவர் தன்னலத்தால், ஆணவத்தால், தவிர்க்கவே முடியாத பற்று எனும் சிறுமையால் இழிவடைந்தார். பேரியல்புகொண்டோர் சிறு இழிவடைந்தாலும் அது பெருஞ்சரிவென ஆகிறது. பீஷ்மருக்கு நிகராகவே அவரும் இவ்வனைத்தையும் சமைத்தார். அவர் வீழ்ந்தபோதே அக்கணக்கு முடிவடைந்தது.”
“அக்கணத்தில் அவ்வெறுப்பினூடாக அவரைக் கொன்ற தன்னிழிவிலிருந்தும், அவர் மாணவன் என்ற துயரிலிருந்தும் முற்றாக விடுபட்டேன். இப்போது நீங்கள் கேட்பது வரை அவரைப்பற்றி ஒருகணமும் நான் எண்ணியதில்லை.” இளைய யாதவர் புன்னகைத்து “நன்று, எண்ணாதொழிவது நம்மை எளிதாக்குகிறது. விழிப்பிலும் செயல்களிலும் வேறுஎண்ணம் வந்து ஊடறுக்காது செய்கிறது. ஆனால் துயிலில் மறைந்தவை எழுந்து வரும். நாகங்கள் இரவுக்குரியவை” என்றபின் அவன் தோளைத்தட்டி எழுந்து சென்றார். அவரை நோக்கியபடி அமர்ந்திருந்தான் அர்ஜுனன்.
பின்னர் தன் மேலாடையை அணிந்துகொண்டு எழுந்து வெளியே வந்தான். காற்றில்லாத வெளியில் கள்ளின் புளித்த மணமும் வியர்வை வாடையும் குதிரைச்சாணியின் தழைநாற்றமும் கலந்து விண்ணிலிருந்து இறங்கிய நீராவியுடன் இணைந்து வீசின. அவன் மூச்சடைப்பதுபோல் உணர்ந்தான். அவனுக்காக ஒற்றன் காத்து நின்றிருந்தான். அர்ஜுனன் நின்றான். ஒற்றன் தலைவணங்கி “அவன் ஹிரண்யவாகாவின் கரையிலுள்ள ஹிரண்யபதத்தின் நிஷாதர்குடியை சேர்ந்தவன். அக்குடியை ஆண்ட சோனர் என்னும் பெயர்கொண்ட ஹிரண்யதனுஸ் என்னும் நிஷாத அரசர் அவன் தந்தை. அவருடைய இரண்டாவது அரசி விந்தையின் மகன். பெயர் சித்ரபாணன். அவன் தமையன் ஏகலவ்யன் முன்னரே இளைய யாதவரால் கொல்லப்பட்டான். தமையனுடன் இவனும் மகதப்படையில் பணிபுரிந்திருக்கிறான். நான்குவிரல் வில்லவன்” என்றான். அர்ஜுனன் தலையசைத்துவிட்டு நடந்தான்.