இருட்கனி - 16

புலரியில் கர்ணன் எழுந்து வெளியே வந்தபோது கண்முன் பேருருவென நின்ற இருண்ட மரம் ஒன்றைக்கண்டு வேறெங்கோ வந்துவிட்டதாக எண்ணி மலைத்தான். பின்னர் அண்ணாந்து நோக்கியபோது அது ஐந்து தலைகள்கொண்ட நாகம்போல் தெரிந்தது. பத்து மணிக்கண்களின் ஒளி விண்மீன்கள் போல வானில் நின்றது. சீறி அலையும் நாவுகளை காணமுடிந்தது. கீழே புடைத்தவேர்கள் என சுழன்று எழுந்திருந்தது நாகத்தின் சுருளுடல். எழுந்த உடலில் செதில்கள் இருளுக்குள் மெல்லொளி கொண்டிருந்தன. அவன் இலைத்தழைப்பில் காற்றோசை என அதன் சீறலை கேட்டான். அது கனவென்று உணர்ந்ததும் அவன் பதற்றம் தணிந்தது. பெருமூச்சுவிட்டு அண்ணாந்து நோக்கியபடி நின்றான்.

நாகம் மெல்ல படம்தாழ்த்தி கீழிறங்கியது. “என்னை நீ அறிவாய்” என்றது. “ஆம்” என்றான் கர்ணன். “நாம் முன்னரே கண்டிருக்கிறோம். நைமிஷாரண்யத்தில் இளைய யாதவரின் குடிலில்.” கர்ணன் “அது என் கனவு அல்லவா?” என்றான். நாகம் “நான் கனவுகளின் தலைவன்” என்றது. “என் பெயர் கார்க்கோடகன். நான் அறியாத எவரும் இப்புவியில் இல்லை. ஏனென்றால் நான் ஆழங்களை ஆள்பவன்” என்றது. கர்ணன் “வணங்குகிறேன், அரவரசே” என்றான். “உன்னை தொடர்பவன் என் இளவலாகிய மணிகர்ணன். உன் அம்பில் இன்னமும் வாழ்பவன் என் மைந்தனுக்கு நிகரான தட்சன்” என கார்க்கோடகன் சொன்னது. “நீ இன்று போர்த்தலைமை கொள்ளவிருக்கிறாய். நான் உன்னை வாழ்த்திச் செல்லலாம் என்று வந்தேன்.” கர்ணன் “தங்கள் அருள் என்னை மகிழ்விக்கிறது” என்றான்.

“நீ என்றும் இருண்ட ஆழங்களுக்கு உகந்தவன்” என்றது கார்க்கோடகன். “நான் இன்றைய போரில் உன்னுடன் இருக்கவிழைகிறேன். உன் தேரில் என் ஐந்துதலைகளுடன் ஐந்து புரவிகளாக அமைகிறேன். உன் அம்புகளில் ஒன்றாகிறேன். நீ விழைந்தால் விண்ணை இருளால் நிறைப்பேன். மண்ணை அனலால் மூடுவேன். இடியோசையும் மின்னலோசையும் எழுப்புவேன். நச்சுமழைபொழியச் செய்வேன்.” கர்ணன் புன்னகைத்து “அவ்வாறு நான் உதவிகோருவதும் பெறுவதும் என் ஆசிரியருக்கு இழிவு. அவர் அளித்த அரிய அம்புகள் என்னிடமுள்ளன. பிரம்மாஸ்திரமும் பிரம்மசீர்ஷாஸ்திரமும் பிரம்மாண்டாஸ்திரமும் வருணாஸ்திரமும் வாசவிசக்தி அஸ்திரமும் எவரிடமும் இல்லாதவை. அனைத்திற்கும் மேலாக என் ஆசிரியரின் சினமே அம்பென்றான பார்கவாஸ்திரம் மண்ணில் எவராலும் தடுக்கமுடியாதது. அவற்றால் நான் மூவுலகையும் வெல்லமுடியும்” என்றான்.

“ஆம், நீ அரிய அம்புகளால் ஆற்றல்கொண்டவன்” என்று கார்க்கோடகன் சொன்னது. “நான் உனக்கு ஏதேனும் நற்கொடை அளித்தாகவேண்டும். அது ஒரு கடன் என்னிடம் எஞ்சியிருக்கிறது.” கர்ணன் “நமக்குள் ஏதேனும் உரையாடல் நிகழ்ந்ததா என்ன? என்னிடமிருந்து எதையேனும் எடுத்துக்கொண்டீர்கள் என நான் அறிந்ததே இல்லை” என்றான். “அது நெடுநாட்களுக்கு முன்பு. அதை நான் உனக்கு காட்டுகிறேன்” என்றது கார்க்கோடகன். “பொழுது எழுந்துவிட்டது. நான் போர்க்கோலம் கொள்ளவேண்டும்” என்று கர்ணன் சொன்னான். “நாங்கள் வேறுகாலத்தில் வாழ்பவர்கள். எங்கள் காலம் உங்கள் காலத்தை இடைமறிப்பதே இல்லை. இக்கணமே நீ இங்கு மீண்டுவந்துவிடமுடியும்.” நாகம் தழைந்துவந்து “வருக!” என்றது.

அவனை தன் வாலால் தொட்டு கணப்பொழுதில் சுருட்டி அள்ளிக்கொண்டது. பின்னர் நீண்டு இருளில் எழுந்தது. கீழே குருக்ஷேத்ரம் துயிலெழுந்துகொண்டிருப்பதை அவன் கண்டான். எறும்புப்புற்று கலைந்ததுபோல் அது தெரிந்தது. வானில் முகில் மூடியிருந்தது. அங்கிருந்த நீராவிக்காற்று மூச்சடைக்கச் செய்தது. நாகம் கீழிறங்கியபோது அது ஒளிஎழாக் காடு எனக் கண்டான். அது அவனை கீழிறக்கிவிட்டு அப்பால் விழுந்து உடற்சுருள் நடுவிலிருந்து படம் தூக்கி மணிவிழிகளால் நோக்கியது. ஒற்றைத்தலைகொண்டதாக மாறியது. புரவியின் நீள்முகம். ஆனால் விழியசைவில் அது மானுட முகமாகவும் ஆகியது. “இந்த இடத்தை நீ அறிந்திருக்கவேண்டும். இது சதசிருங்கத்திலிருந்து அஸ்தினபுரிக்குச் செல்லும் வழி” என்று கார்க்கோடகன் சொன்னது.

“இவ்வழியே நெடுங்காலம் முன்னர் அஸ்தினபுரியின் யாதவ அரசி தன் ஐந்து மைந்தர்களை அழைத்துக்கொண்டு சென்றாள். கணவனை சதசிருங்கத்தில் எரியூட்டிவிட்டு, அவர்கள் விட்டுவந்த அரசு அங்கே உள்ளதா என்னும் ஐயம் நெஞ்சை அறுக்க, நம்பிக்கையிலிருந்து மேலும் எதிர்பார்ப்புகளுக்கும் அங்கிருந்து மிகைக்கனவுகளுக்கும் சென்று உச்சியில் சலித்து, சரிவில் உருண்டு தன்னிரக்கத்தின் ஆழத்தில் விழுந்து மேலும் மேலுமென துயருற்று, துயர் கசந்து, அக்கசப்பை வஞ்சமென மாற்றிக்கொண்டு, முகமிலா வஞ்சம் அலைக்கழிந்து எட்டி இலக்குகளை பற்றிக்கொள்ள அவர்கள்மேல் சீற்றத்தை திரட்டிக்கொண்டு, எரிந்து எரிந்து உச்சமடைந்து, மேலும் எரிய ஏதுமில்லாமல் அணையத்தொடங்கி குளிர்ந்தடங்கி வெறுமையைச் சென்றடைந்து அவ்வெறுமையில் திளைத்து அதன் அடியில் இருந்து ஒரு சிறுநம்பிக்கையை மீண்டும் கண்டெடுத்து பிறந்து இறந்து அலைக்கழிந்துகொண்டிருந்தாள். அங்கநாட்டரசே, முற்றாத் துயரே உச்சத்துயர், அது வளர்ந்துகொண்டிருக்கிறது.”

“அந்தச் சுனையை நோக்குக!” என்று கார்க்கோடகன் சொன்னது. “அதை நான் அறிவேன்” என்று கர்ணன் சொன்னான். “அதற்குள் நான் மூழ்கிக்கிடந்திருக்கிறேன். என் அன்னையை முதல்முறையாக அதனுள்ளிருந்துதான் பார்த்தேன். கையில் வாளுடன் அவள் என்னை நோக்கி வந்தாள். என்னை வெட்டினாள். நான் துண்டுகளாக அந்தச் சுனையில் சிதைந்து பரவினேன். என் விரல்களும் நாக்கும் மீன்களாயின. செவிகள் சிப்பிகளாயின. விழிகள் இரு குமிழிகளாக மிதந்தலைந்தன.” கார்க்கோடகன் நகைத்து “ஆம், அந்தச் சுனைதான்” என்றது. கர்ணன் முன்னகர்ந்து அதை நோக்கினான். அது வெண்ணிறப் பாலால் நிறைந்திருந்தது. மெல்லிய அலையுடன் பளிங்குப்பரப்பென ஓளிர்ந்த அதன்மேல் ஒற்றைச் செந்தாமரை மலர்ந்திருந்தது. கர்ணன் அதை நோக்கிக்கொண்டு நின்றான். “நீ அருந்திய பால் இது” என்று கார்க்கோடகன் சொன்னது. “நானா?” என்று கர்ணன் கேட்டான்.

“அதை கொண்டுவந்தவள் இவள்” என்று கார்க்கோடகன் சுட்டிக்காட்ட கர்ணன் திரும்பி நோக்கினான். சிவந்த நாய் ஒன்று செவிகளை முன்கோட்டியபடி மெல்ல காலடி எடுத்துவைத்து அணுகியது. கண்கள் அனல்துளிகள் என ஒளிவிட்டன. வால் நீண்டு தழைந்திருந்தது. “எட்டு அன்னையரில் சுவையின் தலைவியான பைரவி. நினைவுகளை ஆள்பவள். விழிநீரின் முலைப்பாலின் குருதியின் சுவையில் நிலைகொள்பவள். உன் குருதியன்னையின் முலைப்பாலை உனக்கு கொண்டுவந்தவள். பல்லாண்டுகளுக்கு முன்பு, நீ பைதலென இருந்தபோது. அன்றுமுதல் இக்கணம் வரை ஒவ்வொருநாளும் இங்கு அவள் முலைப்பாலை கொண்டுவந்தபடியே இருக்கிறாள். அவள்வழியாக வந்து இங்கே பெருகி நிறைந்துள்ளது இது” என்றது கார்க்கோடகன்.

கர்ணன் வியப்புடன் சுனையை நோக்கி “இவ்வளவு பாலுமா?” என்றான். “அறுபத்தைந்தாண்டுகாலம்” என்று கார்க்கோடகன் சொன்னது. கர்ணன் “ஆம்” என நீள்மூச்செறிந்தான். “அவள் உண்ட உணவின் ஒருபகுதி குருதியாகி பாலென்றாகி எழுந்தபடியே இருந்தது. ஒவ்வொருநாளும் அது பெருகியது. வெட்டுண்ட கள்ளிச்செடி என அவள் உடலெங்குமிருந்து பால் வழிந்தது…” என்றது கார்க்கோடகன். “இதில் நீராடுக… நீ இழந்த அனைத்தையும் மீளப்பெறுவாய்.” கர்ணன் மெல்ல அருகணைந்து அந்தச் சுனையில் நிறைந்திருந்த வெண்பாலை அள்ளி முகர்ந்தான். “நான் நன்கறிந்த மணம்… இந்த மணத்தை ஒவ்வொருநாளும் துயிலில் மெல்ல அமைகையில் உணர்ந்திருக்கிறேன். ஒவ்வொரு விழிப்பிலும் முதலில் இதையே பெற்றிருக்கிறேன்.” அவன் அதை தன் வாய்க்குள் விட்டுக்கொண்டான். “இன்சுவை… நான் நன்கறிந்த சுவை.”

கார்க்கோடகன் “அத்தனை பெண்டிரில் இருந்தும் உன்னை அகற்றிய சுவை” என்றது. கர்ணன் திரும்பி நோக்கினான். “செல்க!” என்றது நாகம். கர்ணன் அந்தப்பாலை அள்ளி அள்ளி அருந்தினான். சுவையில் அவன் உடல் மெய்ப்பு கொண்டது. உடலெங்கும் குருதியாக அந்தப்பால் ஓடுவது போலிருந்தது. குளிர்ந்த சுவை. இனிப்பு அல்ல என்றும் எண்ணும்போது இனிப்பென்றும் தோன்றுவது பாலின் சுவை. “இறங்குக!” என்றது நாகம். அவன் தன் காலை அவ்வெண்பரப்பை நோக்கி கொண்டுசென்றபின் விலக்கிக்கொண்டான். “உன் அழுக்குகள் ஐந்தும் அதிலிருந்து எழுந்தவைதான். ஆகவே தயங்கவேண்டாம்” என்று கார்க்கோடகன் சொன்னது. கர்ணன் தன் ஆடைகளை களைந்தபின் வெற்றுடலுடன் அதில் இறங்கினான். குளிர்ந்து உடல் மெய்ப்புகொண்டது. மெல்ல கைநீட்டி நீந்தி அச்சுனையின் நடுவே சென்றான். அதில் ஒரு சுழிப்பு இருந்தது. அது அவனை சுழற்றிச் சுழற்றிச் சென்றது.

மூழ்கி ஆழத்திற்குச் சென்றபோது அங்கே விந்தையான நிழல்கள் ஆடுவதை அவன் கண்டான். எழுந்து மூச்சுவிட்டு முகத்தில் விழுந்த மயிர்க்கற்றைகளை அள்ளி மேலே விட்டுக்கொண்டான். அவன் உடலும் உள்ளமும் எடையிழந்தன. அவன் சிரித்துக்கூச்சலிட்டு களியாட்டமிட்டான். ஒரு தருணத்தில் தன் சிரிப்பொலியை தானே கேட்டபோதுதான் தான் இளைஞனாக ஆகிவிட்டதை உணர்ந்தான். மூழ்கி எழுந்தோறும் அவன் இளமையடைந்துகொண்டே சென்றான். சிறுவனாக மதலையாக குழவியாக ஆனான். கால்களைத் தூக்கி கட்டைவிரலை வாயால் சப்பியபடி ஒரு குமிழி என அந்த வெண்நீர்ப் பரப்பில் சுழன்றுகொண்டிருந்தான். பின்னர் மெல்ல மெல்ல துயில்கொண்டான். இனிய துயில். எச்சங்களே இல்லாத துயில்.

அதற்குள் அவன் ஒரு கனவுகண்டான். எட்டு அன்னையர் அவனை நோக்கி எழுந்து வந்தனர். சுடரும் விழிகளும் நீட்டிய நாக்கும் நான்கு கைகளிலும் பாசமும் அங்குசமும் அருளும் அடைக்கலமுமாக எழுந்த ருத்ரசர்ச்சிகை, மழுவும் மானும் சூடி அஞ்சல் அருளல் காட்டிய ருத்ரசண்டி, எழுந்துநின்றாடிய நடேஸ்வரி, அமர்ந்து அளித்த மகாலட்சுமி, பேயுருக்கொண்ட சித்தசாமுண்டிகை, ஊழ்கத்தில் அமர்ந்த சித்தயோகேஸ்வரி, மின்படையும் அமுதகலமும் ஊழ்கமணிமாலையும் அருட்கையும் கொண்ட ரூபவித்யை. அவர்களின் முகங்கள் ஒன்றாக இருந்தன. அவ்விழிகள் அவன் நன்கறிந்தவை.

விரிந்த கைகளில் வாள், வில், உடுக்கை, கண்டாமணி, கட்டாரி, கதை, உழலைத்தடி, வஜ்ராயுதம், திரிசூலம், பாசம், அங்குசம் ஏந்தி அருள் காட்டி எழுந்தவள் பைரவி. அவனை அவள் அள்ளி எடுத்தாள். முத்தமிட்டு மடியிலமர்த்தி முலையூட்டினாள். அவளிடமிருந்து ருத்ரசர்ச்சிகையும் ருத்ரசண்டியும் நடேஸ்வரியும் மகாலட்சுமியும் சித்தசாமுண்டிகையும் சித்தயோகேஸ்வரியும் ரூபவித்யையும் அவனை பெற்றுக்கொண்டார்கள். அவர்கள் மாறி மாறி முலையூட்ட அவன் கால்கட்டைவிரலை நெளித்து சிறுகைவிரல்களை விரித்து சுவையில் திளைத்து இருகால்களையும் உதைத்துக்கொண்டு அமுதருந்தினான்.

அவன் தன்னை உணர்ந்தபோது அவன் முன் கார்க்கோடகன் நின்றிருந்தது. “ஒருகணம்” என அது கூறியது. “ஆம் ஒருகணம்” என்று கர்ணன் சொன்னான். “செல்க, கதிரவன் மைந்தனே! இப்புவியில் இனி நீ எண்ணி ஒழிந்தவை ஏங்கி கைவிட்டவை என ஏதுமில்லை” என்றது கார்க்கோடகன். “ஆம், நான் எவ்வகையிலும் இனி இங்கு பற்றுகொண்டிருக்கவில்லை” என்று கர்ணன் சொன்னான். “உனக்கு நானும் இனி கடனாளி அல்ல” என்ற கார்க்கோடகன் “நிறைவுறுக!” என வாழ்த்தி மெல்ல தேய்ந்து இருளுக்குள் மறைந்தது. கர்ணன் அதை நோக்கியபடி நின்றான்.

புரவி வந்து நிற்க அதிலிருந்து இறங்கிய துச்சாதனன் அவனை நோக்கி வந்தான். கர்ணன் அவனை நோக்கி “வருக, இளையோனே!” என்றான். கர்ணனின் முகத்தின் ஒளி துச்சாதனனை குழப்பியது. அவன் தன்னிலையில் இல்லையோ என அஞ்சியவன்போல நடைதயங்கினான். கர்ணன் “அஞ்சவேண்டாம். நான் சீருள்ளம் கொண்டிருக்கிறேன். அகிபீனாவோ மதுவோ மிஞ்சிப்போகவில்லை” என்றான். துச்சாதனன் அருகே வந்து “நான் அவ்வாறு எண்ணவில்லை மூத்தவரே” என்றான். “சொல், போருக்கு எழுந்துவிட்டாயா?” என்றான் கர்ணன். ‘கவசங்கள் அணிந்திருப்பாய் என எண்ணினேன்.”

துச்சாதனன் “ஆம், அணியவேண்டும். தங்களை சந்திக்கவேண்டும் என்று தோன்றியது” என்றான். “சொல்” என கர்ணன் அவன் கைகளைப் பற்றி தோளை வளைத்துக்கொண்டான். “போர்க்களம் வந்து பதினாறு நாட்களாகியும் உன் உடல் எடைகுறையவில்லை. தோள் சிறுக்கவுமில்லை” என்றான். துச்சாதனன் புன்னகைத்து “நான் சொல்லவந்ததை முதலில் சொல்லிவிடுகிறேன். நீங்கள் நேற்று கூறியவற்றை மூத்தவரிடம் சொன்னேன். இப்போர் அவருடையதல்ல, உங்களுடையது என்றார். வெல்வதும் கொள்வதும் உங்களுக்காகவே. அதற்கப்பால் அவர் ஒன்றும் சொல்வதற்கில்லை.”

கர்ணன் “ஆம்” என்றான். துச்சாதனன் “நான் சற்றுமுன் சென்று சல்யரை கண்டேன். அவரிடம் அரசர் சொன்னதை சொன்னேன். எவருக்கு என்னென்ன சொல் அளிக்கப்பட்டுள்ளது என்று அறியாமல் அவர் உங்களுக்கு தேர்தெளிக்க இயலாது என்றார்” என்றான். கர்ணன் “என் விழைவு அது. அரசாணையையும் அவர் ஏற்கமாட்டார் என்றால் நான் ஏதும் சொல்வதற்கில்லை” என்றான். துச்சாதனன் “மூத்தவரே, நான் புலரியில் ஒரு கனவுகண்டேன்” என்று ஒலிமாறிய குரலில் சொன்னான். சொல் என்பதுபோல கர்ணன் பார்த்தான். “நான் அவளை கண்டேன்” என்றான். கர்ணன் வெறுமனே நோக்க “அவள் அன்றிருந்த அதே வடிவில் அதே விழிகளுடன் என் முன் வந்தாள். முன்னரும் பலமுறை அவ்வண்ணம் அவள் என் கனவில் வந்ததுண்டு. நான் அப்போதெல்லாம் அஞ்சி நடுங்கி விலகி ஓடுவேன். நான் செல்லுமிடமெல்லாம் அவள் இருப்பாள். வியர்வை வழிய அலறியபடி விழித்து எழுந்து அமர்வேன். நான் அலறி எழுந்தாலே மூத்தவருக்கு ஏன் என்று தெரியும். எனவே எதுவுமே அவர் கேட்பதில்லை.”

“ஆனால் இம்முறை நான் அஞ்சாமல் அவள் விழிகளை நோக்கினேன். அவள் ஒன்றும் சொல்லவில்லை. விழிகள் மட்டும் எரிந்துகொண்டிருந்தன. நான் அவளிடம் ஒன்றும் சொல்லவில்லை. இருவரும் விழியோடு விழிநோக்கி நின்றிருந்தோம். பின்னர் நான் விழித்துக்கொண்டேன். வெளியே மரத்தடியில் படுத்திருந்தேன். இருண்டவானில் மின்னல்கள் அதிர்ந்துகொண்டிருந்தன. நான் விழிக்குள் ஒரு மின்னலைக் கண்டுதான் விழித்துக்கொண்டிருக்கிறேன் என உணர்ந்தேன். அவளிடம் நான் சொல்ல விழைந்தவை பல உண்டு. என் விழிப்புகளில் சொல்சொல்லென நான் சேர்த்து வைத்தவை. என்றேனும் என் சொற்களை அவள் செவிகொள்வாள் என நம்பினேன். அவற்றையெல்லாம் அக்கனவில் நான் ஏன் சொல்லவில்லை என வியந்தேன். உளம் ஏங்கி விண்ணில் அதிரும் சிறுமின்னலகளை நோக்கியபடி படுத்திருந்தேன். இடியோசை உறுமியபோது எங்கோ களிறு ஒன்று ஓசையிட்டது.”

“துயருடன் சலித்துக்கொண்டு மீண்டும் படுத்தபோது ஓர் எண்ணம் வந்தது. மீண்டும் துயின்றால் அக்கனவை மறுபடியும் அடையமுடியுமா? உள்ளிருந்து அக்கனவை மீட்டெடுத்தால் அச்சொற்களை அவளிடம் சொல்லவேண்டும். ஆம் என சொல்லிக்கொண்டு விழிகளை மூடி படுத்து துயில்கொண்டேன். மூத்தவரே, மெய்யாகவே நான் மீண்டும் அக்கனவை சென்றடைந்தேன். அதே நோக்குடன் நான் விட்டுச்சென்ற அதே இடத்தில் அவள் நின்றிருந்தாள். அவளருகே நெருங்கினால் என் உடல் அனல்கொள்ளுமெனத் தோன்றியது. நான் அவளிடம் சிலவற்றைச் சொல்லவே வந்தேன் என எண்ணினேன். ஆனால் சொல்லவேண்டி சேர்த்துவைத்த சொற்களை முழுமையாக மறந்துவிட்டிருந்தேன். என் நினைவை துழாவத்துழாவ உள்ளம் மேலும் ஒழிந்துகொண்டே வந்தது. திகைத்து நின்றபோது அவள் நீள்குழல் பறக்க என்னைநோக்கி வந்தாள்.

“நான் கைகூப்பி அன்னையே என்றேன். அவள் முன் கால்மடித்து அமர்ந்தேன். நான் மகிஷன், உன் இடக்கால் என் மேல் அமைக! என்னுள் உருகும் இந்த நெஞ்சக்குமிழை செந்தாமரை என உன் கால்கள் சூடுக! என்னுள் அலைகொள்வன அனைத்தும் அமைதிகொள்ள அருள்க! என்றேன். அவள் என்ன சொன்னாள் என நான் அறியவில்லை. ஆனால் விழித்துக்கொண்டபோது என் உள்ளம் ஆழ்ந்த அமைதியை அடைந்திருந்தது. நான் எண்ணிய அனைத்தையும் சொல்லிவிட்டேன் என எண்ணிக்கொண்டேன். ஆனால் நான் எண்ணிய ஒன்றையும் சொல்லவில்லை. உண்மையில் நான் எண்ணியவற்றுக்கு மாறாகவே சொல்லியிருந்தேன். ஆனால் என்னால் மேலும் படுத்திருக்க இயலவில்லை. எழுந்து நின்று வானை நோக்கினேன். மின்னல்களை நோக்கி விழிவிரித்து நின்றேன். விடிவெள்ளி இன்று எழாது என அறிந்திருந்தேன். நேரக்கணியர் நாழிகை எண்ணி அறிவித்ததும் உங்களைத் தேடி வந்தேன்.”

கர்ணன் “நற்கனவுதான்” என்றான். “ஆம், காலையை அழகாக ஆக்கிவிட்டது. இருள் இத்தனை பேரழகு கொண்டது என நான் அறிந்ததே இல்லை. கண்கள் மும்மடங்கு காட்சித்திறன் கொண்டிருப்பதுபோலத் தோன்றுகிறது. செவிகள் ஒரு மலரிதழ் உதிர்வதையும் கேட்குமளவுக்கு நுண்மை கொண்டுவிட்டன. ஒவ்வொரு விலங்கின் மணத்தையும் தனியாக என்னால் உணரமுடிந்தது. மூத்தவரே, என் நினைவறிந்த நாள் முதல் இன்றுவரை வாழ்தல் என்பது இத்தனை இனியது என உணர்ந்ததே இல்லை. மகிழ்ச்சியாக இருக்கும்போது புலன்கள் எவ்வளவு கூர்மை கொண்டுவிடுகின்றன! அவ்வாறென்றால் உள்ளிருக்கும் ஓயாத்துயரால்தான் நாம் நம் புலன்களை களிம்புமூடச் செய்திருக்கிறோமா?” என்றான் துச்சாதனன்.

“நீ இவ்வாறெல்லாம் ஆழ்ந்து பேசலாகாது, இளையோனே. உன் உடல்நிலைக்கு இது நன்றல்ல” என்று கர்ணன் வேடிக்கையாக சொன்னான். “நான் வந்தது வேறொன்றையும் சொல்வதற்காகத்தான். மூத்தவரே, நாம் இனிமேல் இந்த மண்ணில்வைத்து பார்த்துக்கொள்ளவோ பேசவோ முடியாது. விண்ணில் இங்குள்ள எவற்றுக்கும் பொருளிருக்காது. ஆகவே இதை சொல்லவந்தேன். நான் உங்களிடம் பொறுத்தருளும்படி கோரவேண்டும்” என்றான் துச்சாதனன். “எதற்கு? நேற்று நீ பேசியவற்றுக்கா? அவை இயல்பான உணர்வுகள் அல்லவா?” என்றான் கர்ணன். “ஆம். ஆனால் இன்று உணர்கிறேன். ஒரு போரின் வெற்றிதோல்விகளுக்காக நாம் செயல்படக்கூடாது. நம் ஆழம் ஆணையிடும் திசையிலேயே செல்லவேண்டும். நீங்கள் அத்திசைநோக்கி செல்கிறீர்கள். இன்று இக்காலையில் நானும் அதை தெளிவாகக் காண்கிறேன்.”

கர்ணன் ‘நீ பெரியசொற்களை பேசி முடித்தாயெனில் சொல், நாம் சேர்ந்து உணவருந்தலாம்” என்றான். துச்சாதனன் “ஆம், நாம் சேர்ந்து உணவருந்தவேண்டும். அதை எண்ணி வரவில்லை. ஆனால் அது மிகமிக இன்றியமையாததாகத் தோன்றுகிறது. இவ்வுறவின் உச்சம். இப்புவியில் நான் அடைந்த அனைத்து உறவுகளுக்கும் உச்சம்…” கர்ணன் “என்ன சொல்கிறாய் மூடா!” என அவன் தலையை தட்டினான். “நான் உங்களிடம் பொறுத்தருளக்கோரியது பாஞ்சால அரசியின் பொருட்டு.” கர்ணன் உடலில் மெல்லிய நடுக்கு எழ “என்ன சொல்கிறாய்?” என்றான். “நான் அவளுக்கு இழைத்த கீழ்மையின் பொருட்டு. நீங்கள் அதற்காக என்மேல் பிழையொறுப்பு செய்யவேண்டும். என்மேல் உங்கள் அகத்தில் எஞ்சியிருக்கும் சிறுகசப்பை முற்றாக அகற்றிவிடவேண்டும்.”

“அவ்வாறெல்லாம் இல்லை. அறிவிலி. இதையெல்லாம் எங்கிருந்து நீ எண்ணிக்கொள்கிறாய்? உனக்குள் எண்ணம் என ஒன்று ஓடுவதாகவே நான் உணர்ந்ததில்லையே?” என்றான் கர்ணன். துச்சாதனன் “நான் நன்கு அறிவேன். இதைக்கூட அறியாவிட்டால் நான் என்ன மானுடன்? மூத்தவரே, உங்களுக்குள் என் மேல் வெறுப்பு உள்ளது. அச்செயலை நீங்கள் பொறுத்துக்கொண்டதே இல்லை. உங்களால் இயலாது” என்றான் துச்சாதனன் “ஏன், நானும் அச்செயலில் உடனிருந்தேன்” என்றான் கர்ணன். “ஆம், ஆனால் அது மற்றொன்று. நான் செய்தது அதுவல்ல.” துச்சாதனன் “எண்ணி எண்ணி எண்ணங்களின் அடியில் தள்ளிவிட்டது இது. மூத்தவரே, ஐவரல்ல அறுவர். அறுவரில் முதல்வர் நீங்கள்.”

கர்ணன் கடும்சினத்துடன் “வாயை மூடு!” என்றான். ஆனால் துச்சாதனன் அதை கேட்கவில்லை. “நான் அவளிடம் மட்டுமல்ல, அறுவரிடமும் தலைமண்ணில் வைத்து பிழைமறக்கும்படி கோரவேண்டியவன்.” கர்ணன் அவன் மேல் தன் கையை வைத்து “வேண்டாம்…” என்றான். “அவர்களிடம் நான் பிழையொறுப்பு கோரவேண்டியதில்லை. அதற்கு நிகராக அவர் என் நெஞ்சுபிளந்து குலைபறித்தெடுப்பார். குருதி அள்ளிக் குடிப்பார். அக்குருதியால் அவள் தன் குழல்நீவி முடிப்பாள். அதுவே போதுமானது. நீங்கள் எஞ்சியிருக்கிறீர்கள். ஆகவேதான்…” கர்ணன் உரக்க “போதும்!” என்றான். “நான்…” என துச்சாதனன் சொல்ல “போதும்!” என கர்ணன் கூவினான். “ஆம்” என்றான் துச்சாதனன். சிலகணங்கள் இருவரும் உறைந்து நின்றனர். மெல்ல உலைந்து உயிர்ப்புகொண்டு “வா என்னுடன்” என்றான் கர்ணன்.

இருவரும் மெல்ல நடந்தனர். கர்ணன் இருமுறை பேசப்போவதுபோல தொண்டையை கனைத்தான். ஆனால் துச்சாதனன் வேறொரு உலகில் என நாற்புறமும் விழியோட்டி நடந்து வந்தான். “மூத்தவரே, எனக்கு விந்தையான ஓர் எண்ணம் எழுகிறது. அதை சொன்னால் நீங்கள் என்னை ஏளனம் செய்வீர்கள்…” கர்ணன் நகைத்து “செய்வேன், சொல்” என்றான். “செய்யுங்கள்” என துச்சாதனன் நகைத்தான். “நான் இப்போது எண்ணினேன். இவ்வுலகில் வண்ணங்கள் இருப்பது எத்தனை பெரிய இறைக்கொடை என்று. வண்ணங்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு. செந்நிறத்தை நோக்குகையில் அதுவே பேரழகு என தோன்றுகிறது. நீலம் இன்னொரு பேரழகு என உடனே தெரிகிறது. பசுமை பொன்றா உவகையை அளிக்கிறது. பொன்னிறம் கொந்தளிக்கச் செய்கிறது. எத்தனை பேரளி கொண்டு வண்ணங்களை அள்ளி மானுடருக்கு வழங்கியிருக்கின்றன தெய்வங்கள்!”

கர்ணன் “நகையாடவேண்டிய எண்ணம்தான்” என்றான். “மூத்தவரே, சற்று நின்று நோக்குக! இந்தக் கொடி. இதன் அழகிய பொன்னிறம். நாம் பொன்னிறத்தை நின்று நோக்கியது எப்போது? இளமைந்தனாக நோக்கியிருக்கலாம் இல்லையா? எந்த வண்ணத்தையாவது அது அழகிய வண்ணம் என்பதற்காக நோக்கியிருக்கிறோமா? பொன்னிறம் பொன்னென்று ஆகி வரவேண்டும். செவ்வண்ணம் மலர் என முன்னால் நின்றிருக்கவேண்டும். மூத்தவரே, இவ்வுலகின் வண்ணங்களை நோக்கி நோக்கி தெவிட்டுமா? இவற்றில் விழியாடி எவரேனும் நிறைந்து உயிர்விடலாகுமா? வண்ணங்களினூடாக தன்னை இங்கே நிகழ்த்துவது ஒன்றுண்டு. வண்ணங்களாக அது தன்னை கொண்டாடிக்கொள்கிறது. விழவென்று, பேருவகையென்று மட்டுமே வெளிப்பட இயல்வது அது. சற்று உளமெழுந்தால் அதை தொடமுடியும். கைநீட்டினால் தொட்டுவிடமுடியும். இதோ உங்களைப்போல் அருகே நின்றிருக்கிறது.”

“இன்னும் கதிரொளியே எழவில்லை. நீ நோக்கும் வண்ணங்கள் உன் விழிகளுக்குள் உள்ளன” என்றான் கர்ணன். ஏவலன் அவர்களுக்கு முகம்கழுவுவதற்கான தாலங்களை கொண்டுவந்தான். கர்ணன் முகம் கழுவிக்கொண்டான். “ஆம், அதைத்தான் நான் இப்போது எண்ணினேன். விடியலொளி எழுகையில் இக்களம் வண்ணங்களின் பெருங்கொந்தளிப்பாக மாறிவிட்டிருக்கும். இன்றுவரை இதை இப்படி நான் பார்த்ததே இல்லை. வெற்றிதோல்விகளின் வெளியாக மட்டுமே அறிந்திருக்கிறேன். மூத்தவரே, இங்கே நான் எதையுமே பார்த்ததில்லை. இவ்வுலகை நான் அறிந்ததே இல்லை. இன்றுகாலைதான் விழிகளுடன் செவிகளுடன் நாவுடன் பிறந்திருக்கிறேன். இப்போதுதான் என் உள்ளம் முகிழ்த்துக்கொண்டிருக்கிறது.”

“வா, உணவருந்துவோம்” என்று கர்ணன் அவன் தோளை அறைந்தான். “இன்றிருக்கும் உளநிலையில் உனக்கு உணவு அருஞ்சுவைகொண்டதாக அமையக்கூடும்.” துச்சாதனன் “மெய்!” என்றான். ஏவலனிடம் “இனிப்பு உள்ளதா?” என்றான். “தேனிலூறிய கிழங்குகள் உள்ளன” என்றான் ஏவலன். “கொண்டுவா… கலத்துடன் கொண்டுவா. நான் திகட்டத்திகட்ட உண்ணவேண்டும். எப்போது இனிப்பு திகட்டுமென தெரிந்துகொள்ளவேண்டும்” என்றான். “உனக்கு ஊன் திகட்டி நான் கண்டதில்லை. தேனும் திகட்ட வாய்ப்பில்லை” என்றான் கர்ணன்.

துச்சாதனன் உரக்க நகைத்தான். நகைப்பை அவனால் நிறுத்தவே முடியவில்லை. திகைப்புடன் திரும்பி நோக்கிய ஏவலனை நோக்கி கைசுட்டி “அவன் அஞ்சிவிட்டான்… அஞ்சி திரும்பி நோக்குகிறான்” என்றபின் மீண்டும் நகைத்தான். “போதும்” என்றான் கர்ணன். “நான் அரிதாகவே இவ்வண்ணம் நகைத்திருக்கிறேன் மூத்தவரே” என்றான் துச்சாதனன். மீண்டும் உரக்க நகைத்து “அவைகளிலும் அறைகளிலும் நகைப்புதான் எத்தனை கட்டுப்பாடுகள் கொண்டிருக்கிறது” என்றான். “ஏன் நகைப்பை அஞ்சுகிறது அவை?” என்றான். அவன் விழிகளில் நீர்கசிய அதை விரல்களால் அழுத்தித் துடைத்தபடி மீண்டும் விம்மிச்சிரித்தான்.