இருட்கனி - 15
மூன்றாவது களத்தில் அமர்ந்திருந்த சூதராகிய காமர் வெண்கல்லாக அமர்ந்திருந்த புதனையும் வெண்சங்கு வடிவில் அருளிய திருமாலையும் வணங்கி தன் கையிலிருந்த நந்துனியின் நரம்புகளை சிறு வெண்கலக் கம்பியால் மீட்டி, நூறு வண்டுகள் ஒன்றையொன்று சுழன்று துரத்தும் இசையை எழுப்பி, அதன் மெல்லிய சுதிக்கு தன் நெஞ்சுக்குள் மட்டுமே ஒலித்த முதல் நாதத்தை பொருத்தி, மெல்ல மூக்குக்கு எடுத்து உதடுகளில் அதிரச்செய்து, குரலென்று வெளிக்கிளப்பி முதற்சொல்லை எடுத்தார். “ஓம்!” எனும் அவ்வொலி நந்துனியின் இசையின் மீது ஏறிக்கொண்டது. தழுவிப்பறக்கும் இரு வண்டுகள் என சுழன்று வானில் நின்றது. பின்னர் நந்துனியின் இசையை தான் வாங்கி பெருகி ஒற்றை சொல்லென்று நிலைகொண்டது. “ஓம்! ஓம்! ஓம்!” என்றார் காமர். “ஆம், இது நிகழ்ந்தது! இவ்வாறே நிகழ்ந்தது! ஆம், இவ்வாறே எப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது! ஆம், இது ஒன்றே மெய்மை! ஆம், இது என்றும் நிலை கொள்க! ஆம்! ஆம்! ஆம்!” என்று பாடி உரையெடுத்து கதை சொல்லத்தொடங்கினார்.
சூதரே, தோழரே, கேளுங்கள். நெடுங்காலத்துக்கு முன் இது நிகழ்ந்தது. கதிரோன் ஒளியை தன் கரிய உடலெனக் கொண்ட பேரழகனாகிய அங்கநாட்டரசன் கர்ணன் முன்னர் ஒருமுறை தன் படைத்துணைவருடனும் ஏவலருடனும் அங்கநாட்டுக்குத் தெற்கே விந்திய மலைகளுக்கு அப்பால் விரிந்திருந்த தண்டகக் காட்டில் வேட்டைக்குச் சென்றான். தண்டகத்தின் மையக்காட்டில் கோடையில் வேட்டையாடுவது எந்த வில்லவனுக்கும் விழைவு எழுப்பும் வெல்விளிக்கு உரியதாக இருந்தது. ஏனெனில் ஆண்டுக்கு அரைமழை மட்டுமே பெய்யும் அந்நிலத்தில் பெருவிலங்குகள் அரிது. முள்சூடிய குற்றிலைச் சிறுமரங்கள் ஆங்காங்கே எழுந்து வான்துழாவி காற்றுக்கு வளைந்து நிற்கும். அவ்வப்போது நிலம் வெளுத்து வானம் குடைகவிந்து கண்கூசும் ஒளியெனத் தெரியும். அங்கே இரவில் எழும் விண்மீன்கள் வலைச்சரடில் இறங்கிவரும் சிலந்திகள்போல மிக அருகில் வந்து நின்றிருக்கும். வெட்டவெளியில் துயில்பவர்களின் முகத்தருகே வந்து மின்மினி என எழுந்தமைந்து விளையாடும்.
அவ்வெறும் நிலவெளியில் பறவைகள் ஆயிரம் கண்கொண்டவை. கண்சொடுக்கும் நேரத்தில் எழுந்து பறக்கவும், எண்ணங்களை முன்னறியவும், அம்புக்கு முந்தி உடல் திருப்பி தப்பவும் பயின்றவை. சிறுவிலங்குகளோ எப்பொழுதும் நடுங்கும் உடலும், நொடி ஒலிக்கே மெய்ப்பு கொள்ளும் உள்எச்சரிக்கையும், எக்கணமும் மறையும்படி நிலமெங்கும் வளைகளும் கொண்டவை. அங்கு சென்று வேட்டையாடி வெறும்வானில் வெறும்நிலத்தில் வாழ்ந்து நாற்பத்தொரு நாட்கள் தங்கி மீள்வதென்பது ஒரு நோன்பென்று கொள்ளப்பட்டது. அதை தண்டக நோன்பென்று நூல்கள் உரைத்தன. வில்பயின்றதுமே இளவரசர்களை அங்கே அனுப்புவார்கள். அந்நோன்புக்குப் பின் அவர்கள் தங்கள் வில்லம்புமீதும் கைகள்மீதும் நம்பிக்கை கொள்வார்கள். பெருந்துணையாவதும், வழிகாட்டுவதும் அதுமட்டுமே என அறிவார்கள். அங்கு சென்று மீளும் அரசர்கள் அரண்மனையில் அறுசுவை உண்டு மென்பஞ்சுச் சேக்கையில் துயில்கையிலும் அதில் மெய்மறக்காமலிருப்பார்கள்.
அந்நோன்பின் ஏழு நெறிகளில் முதன்மையானது, ஒரு விலங்கை ஒருமுறைக்குமேல் அம்பெய்யலாகாது என்பது. பிறிதொன்று, நின்றுவிட்ட விலங்கை எந்நிலையிலும் கொல்லலாகாது. மூன்றாவது, ஒருவேளை உணவை மறுவேளைக்கு எஞ்ச வைக்கலாகாது. நான்காவது, ஒருவர் உண்ண பிறிதொருவர் பசித்திருக்கலாகாது. ஐந்தாவது, நூல்கள் ஒப்பாத ஊனை உண்ணலாகாது. ஆறாவது நெறி, முட்டையிடும் பறவையையும் குஞ்சுகாக்கும் பறவையையும் சினைவிலங்கையும் பாலூட்டும் அன்னைவிலங்கையும் எந்நிலையிலும் கொல்லலாகாது. ஏழாவதாக, ஒரு விலங்கு ஒளிந்து அல்லது மரங்களில் அமர்ந்துவிட்ட பின்னர் அதை நோக்கி அம்பெய்யலாகாது என வகுக்கப்பட்டது. தண்டக நோன்பை எவ்வண்ணமேனும் முறிக்க நேர்ந்தால் மீண்டும் தண்டக நோன்புக்குச் செல்வதற்கு முன்னர் குடித்தெய்வக் கோயிலில் பதினான்கு நாட்கள் உணவும் நீரும் நீத்து பிழைநோன்பு இயற்றி தூய்மை செய்துகொள்ளவேண்டும்.
தண்டக நோன்பை ஆண்டுக்கு ஒருமுறை நிகழ்த்துவது கர்ணனின் வழக்கம். தண்டகக் காட்டின் உள்நிலங்களில் வணிகப்பெருவழிகள் இல்லை. மலைவேடரும் தொலைவணிகரும் உருவாக்கிய ஒற்றைக் காலடித் தடங்களாக செம்மண் பரப்பில் விரிந்து செல்லும் பாதைகளினூடாக அவன் தன் ஏழு படைத்துணைவருடன் சென்றான். மலைச்சரிவில் நின்று செம்மண் நிலத்தில் சிவந்த கோடுகளாக பரவியிருந்த பாதைகளைப் பார்த்த கர்ணன் புன்னகைத்து தன்னுடன் வந்துகொண்டிருந்த பாங்கனிடம் “நீ சூதனாயிற்றே, இந்நிலத்திற்கு ஓர் உவமை கூறு’ என்றான். சூதன் “அந்தியில் நீராடும்பொருட்டு அணியாடை கழற்றிய மங்கையின் செவ்வுடலில் பதிந்த அணித்தடங்கள்” என்றான். கர்ணன் உரக்க நகைத்து “இவ்வண்ணம் எதையோ சொல்வாய் என்று எண்ணினேன். மழைக்காலத்து சேற்றில் மண்புழு ஊர்ந்த தடங்கள் என்று எனக்குத் தோன்றியது” என்றான்.
“தாங்கள் பிறிதொன்றை சொல்லமாட்டீர்கள் என்று நானும் அறிவேன்” என்றான் பாங்கன். “பெண்களின் உடல் குறித்து ஒரு வரியும் எழாது என்பதில் எனக்கு ஐயமே இல்லை” என்று படைத்துணைவன் சொன்னான். கர்ணன் வெடித்து நகைக்க அவன் சிரிப்பில் பிறரும் இணைந்துகொண்டனர். அப்பாதையினூடாக பயணம் செய்து அவ்விரவின் தங்குமிடத்தை அடைந்தனர். கோடையில் நீர்த்தடங்கள் அனைத்தும் வற்றி, ஊற்றுகள் ஓய்ந்து, ஆறுகள் வெறும் மலைப்பாதைகள்போல் மாற, பாறைகளில் நீரோடிய உப்பின் தடங்கள் பொரிந்திருக்க நிலம் சலிப்புற்றுச் சூழ்ந்திருந்தது. அதில் புழுதிமணம் கொண்ட காற்று மூச்சென ஓடிக்கொண்டிருந்தது. அடிவட்டத்து இலைகள் அனைத்தையும் உதிர்த்து, அடுத்த வட்டத்து இலைகளை வாடவிட்டுத் தழைத்து, உச்சித்தளிரில் மட்டுமே உயிரை வைத்துக்கொண்டு மரங்கள் விண்ணோக்கி காத்திருந்தன. உதிர்ந்த சருகுகள் காற்றில் அள்ளப்பட்டு பாறைச்சரிவுகளின் அடியில் குவிக்கப்பட்டிருக்க அவற்றினூடாக ஓணான்களும் அரணைகளும் பாம்புகளும் சலசலத்து ஓடும் ஒலி எழுந்துகொண்டிருதது.
முள் புதர்கள் மலைக்காற்றில் பல்லாயிரம் நாகங்களென சீறிக்கொண்டிருக்க அந்தக் காடு நான் மானுடருக்குரியவனல்ல என்று கூறிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு காட்சியிலும் வெளியேறுக எனும் எச்சரிக்கை இருந்தது. மலைப்பள்ளங்கள் அணுகாதே என விம்மலோசையில் முழங்கின. பாறை வெடிப்புகள் பசி கொண்டு வாய் திறந்திருந்தன. எங்கோ மலைநரி ஒன்றின் ஊளை துயரின் ஒலிவடிவென எழுந்தமைந்தது. உச்சிமலைப் பாறைகள் எக்கணமும் அதிர்ந்து நிலம் நோக்கி எழும் விழைவு கொண்டவைபோல் அச்சுறுத்தின. அவர்கள் சாய்ந்த பாறை ஒன்றின் அடியில் படிந்த மென்பூழியில் தங்கினார்கள். அன்று முழுக்க செய்த பயணத்தில் அவர்களின் கையிருப்பு நீர் தீர்ந்துவிட்டிருந்தது. கால்கள் வெடித்து புழுதிபடிந்து கிழங்குகள் போலிருந்தன. ஒவ்வொருவராக அந்தக் குளிர்ந்த பூழியில் விழுந்து அலுப்பொலி எழுப்பினர்.
கர்ணன் தன் வில்லுடன் எழுந்து பாறைகளிலிருந்து பாறைகளுக்குத் தாவி, இடுக்கில் முளைத்த புல்லை தின்றுகொண்டிருந்த முயலை கண்டான். காலடி கேட்டு அவனிடமிருந்து தப்பி ஓடிய முயல் பாறை முனையிலிருந்து தன் வளை நோக்கித்தாவும் கணத்தில் காற்றிலேயே அம்பை எய்து அதை கொன்றான். அன்று அந்திக்குள் அவன் மூன்று குழிமுயல்களை கொன்றான். அவ்வூனை எண்மரும் பகிர்ந்து உண்டு பசியாறிவிட்டு பாறைகளின் மேல் விண்மீன்கள் செறிந்த வானை நோக்கியபடி படுத்துக்கொண்டனர். பசி அடங்காததால் அவர்களுக்கு துயில் எழவில்லை. கர்ணன் “இதுவே நம் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கை போலும். இன்றும் முனிவர்கள் வாழும் முறையும் இதுவே. சிற்றுணவு, நெடுந்தேடல், வான் கீழ் தனிமை” என்றான். பாங்கன் நகைத்து “ஆம், பெண்டிரும் உடனில்லை” என்றான். கர்ணன் “தொல்மூதாதையருக்கு பெண்டிர் இல்லை எனில் நாமென்ன நதிகளுக்கும் மரங்களுக்குமா பிறந்தோம்?” என்றான்.
அத்தனிமையை வெல்வதற்கு விழைந்தவர்கள்போல் அவர்கள் நகைத்துக்கொண்டனர். விண்ணிலிருந்து சிறிய செந்தீற்றல்களாக இரு விண்மீன்கள் உதிர்வதை கர்ணன் பார்த்தான். “பேரரசர்கள் எங்கோ இறந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான். “ஆம், எழுவர். நான் ஏழு விண்தீற்றல்களை கண்டேன்” என்றான் பாங்கன். “அவர்கள் பிறப்பதை அறிவிக்கும் விண்மீன் ஏதும் உண்டா, சூதரே?” என்றான் கர்ணன். “அவர்கள் பிறக்கும்போது புதிய விண்மீன் ஒன்று எழுகிறது. ஆனால் வானின் பல்லாயிரம் கோடி விண்மீன் பெருக்கில் நம்மால் அதை அடையாளம் காண முடியாது. அரசே, பேரரசர்கள் பேரரசர்களாகவே பிறக்கிறார்கள். ஆனால் தங்கள் பெருஞ்செயல்களினூடாகவே அவர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள். உதிர்கையிலேயே உலகெங்கும் அறியப்படுகிறார்கள்” என்றான் சூதன்.
“ஒவ்வொரு நாளும் எரிவிண்மீன்கள் உதிர்ந்துகொண்டிருக்கின்றன. அத்தனை பேரரசர்களா இவ்வுலகில் இருக்கிறார்கள்?” என்று கர்ணன் கேட்டான். “ஆழிசூழ் இவ்வுலகு அலகிலா விரிவுள்ளது. இங்கு ஆயிரத்தெட்டு நாடுகள் உள்ளன. அதிலொன்றே பாரதவர்ஷம் என்கிறார்கள். ஒவ்வொன்றிலும் பேரரசர்கள் திகழ்கிறார்கள். பேரரசர்கள் மானுடரில் மட்டுமல்ல, யானைகளில் கரடிகளில் சிம்மங்களில் புலிகளில் உண்டு. முயல்களில் எறும்புகளில் இங்குள்ள அனைத்துச் சிற்றுயிர்களிலும் பேரரசர்கள் உண்டு. தெய்வங்கள் அவர்களை மண்ணுக்கு அனுப்புவது பிறரை தலைமை தாங்கி வழி நடத்துவதற்காக. மண்ணின் உயிர்களை ஆற்றல் வழிநடத்தவேண்டும் என்று தெய்வங்கள் விரும்புகின்றன. அறங்களால் அவ்வாற்றல் உருவாகவேண்டுமென்று ஆணையிடுகின்றன. அறங்களை அக்குலம் நீடுவாழ்ந்து திரட்டிக்கொண்டிருக்க வேண்டுமென்று அமைக்கின்றன. ஒவ்வொரு உயிர்க்குலமும் பாலாழியெனக் கொந்தளித்து தன்னை தான் கடைந்து தனது பேரரசர்களை உருவாக்கிக்கொள்கிறது. அவர்களை மணிமுடியென தலையிலணிந்திருக்கிறது. குலக்கொடியென ஏந்தியிருக்கிறது. அரசே, நெற்றியில் அறிவின் விழியென அவர்களையே அக்குலம் கொண்டிருக்கிறது. கொடியோர் தோன்றும் குலம் நஞ்சை திரட்டிக்கொண்டது” என்றான் சூதன். கர்ணன் “நஞ்சு எழுந்த பின்னர் ஒவ்வொரு முறையும் தவறாமல் அமுது எழுகிறது. கம்சன் எழாவிடில் யாதவர் குலத்தில் கிருஷ்ணனும் எழுந்திருக்க மாட்டான்” என்றான்.
பதினெட்டு நாட்கள் அக்காட்டில் அவர்கள் தங்கினார்கள். ஒவ்வொரு நாளும் அவர்கள் உணவு குறைந்து வந்தது. அலைந்து திரிந்த தொலைவு மிகுந்தும் வந்தது. உடலுருகி, கன்ன எலும்புகள் புடைத்து, விலாக்கூடு வெளித்தெரிந்து, வயிறொட்டி இடைஎலும்பு அமர்கையில் பாறையில் உரச, கைகால்கள் சுள்ளிகள் என்றாக அவர்கள் ஒட்டி உருக்குலைந்தனர். “இம்முறை உணவு மிகக் குறைவாக இருக்கிறது. இந்நிலத்தில் நாம் எண்ணாத எதுவோ நிகழ்ந்துள்ளது” என்று அணுக்கன் சொன்னான். “தண்டகம் மாபெரும் காடு. அவ்வாறு அவ்வப்போது நிகழ்வதுண்டு” என்று கர்ணன் சொன்னான். “எங்கேனும் ஓரிடத்தில் மண்ணில் ஈரம் எஞ்சியிருக்கும். அதன்மேல் சற்று பசுமை பரவியிருக்கும். பறவைகள் அச்செய்தியை விண்பாதைகளினூடாக கீழே வாழும் உயிர்களுக்கு காட்டுகின்றன. யானைகள் முதலில் செல்கின்றன. குரங்குகள் பிறகு. மான்கூட்டங்களும் செந்நாய்களும் தொடர்கின்றன. ஒருகட்டத்தில் சிற்றுயிர்கள்கூட அப்பாதையை தேர்கின்றன. சில பகுதிகளில் முற்றிலும் உயிரசைவே இல்லாமல் ஆவதும் உண்டு.”
“தண்டகத்தில் உணவின்றி பசித்து இறந்த நோன்பாளர்கள் பலர் உண்டு. ஆகவேதான் தண்டக நோன்புக்கு கிளம்புவதற்கு முன் மைந்தரிடம் இறுதிச் சொற்களை கூறிவிட்டு, நீத்தாருக்குரிய இறுதிக் கடன்களையும் முடித்து எழவேண்டுமென்று சொல்லப்படுகின்றது” என்று படைத்தலைவன் சொன்னான். “ஆம், நாம் இங்கு சிக்கிக்கொண்டிருக்கிறோம்” என்று படைத்துணைவன் சொன்னான். “திரும்பிச் சென்றுவிடுவதே உகந்தது, அரசே” என்றான் காவலன். கர்ணன் சீற்றத்துடன் “தண்டக நோன்பை பன்னிருமுறை ஆற்றியிருக்கிறேன். இன்றுவரை நோன்பு முறித்ததில்லை. ஒரு நோன்பை முறித்தவன் அனைத்து நோன்புகளையும் முறித்தவனாவான். ஏனெனில் நோன்புகள் எப்போது வேண்டுமானாலும் முறிப்பதற்குரியவை என்ற எண்ணம் அவனில் விழுந்துவிடுகிறது. நோன்பை முறிக்கலாம் எனும் எண்ணமே நோன்பை முறித்த பிழைக்கு மூன்றிலொன்று என்பார்கள்” என்றான்.
படைத்தலைவன் “நான் அவ்வாறு கூறவில்லை. நாம் இங்கே எங்கேனும் பசுமை எஞ்சியுள்ளதா என்று மலைமேல் ஏறி பார்க்கலாமே?” என்றான். “அருகே எங்கேனும் பசுமை இருந்திருந்தால் வானில் பறவைகள் இருந்திருக்கும். நெடுந்தொலைவில் உள்ளது அது. அங்கு சென்று சேர இன்னும் குறைந்தது இருபது நாட்களாகும்” என்று கர்ணன் சொன்னான். பின்னர் “நாம் திரும்பிச்சென்று சாலையை அடைவதற்கும் இருபது நாட்களுக்குமேல் ஆகும். எவ்வண்ணமாயினும் நாம் இந்நிலத்தில் நோன்பு முடிவதுவரை இருந்தாகவேண்டும். தண்டகக் காட்டில் இறப்பது இங்கு மறைந்த முனிவர்களுடன் சென்றமைவது. நோன்பில் இறப்பவர்களுக்குரிய விண்ணுலகம் பொன்னொளியால் ஆனது. அங்கு முனிவர்களே தெய்வங்கள் வடிவில் அருள்புரிகிறார்கள் என்று தொல்நூல்கள் கூறுகின்றன” என்றான்.
மேலும் மேலும் உணவு குறைந்துகொண்டே சென்றது. ஏழு நாட்கள் அவர்கள் ஒரு துண்டு உணவைக்கூட அருந்தவில்லை. உடன்வந்த தோழர்கள் நடை மெலிந்து மூச்சிளைக்க ஆங்காங்கே அமர்ந்தனர். “இது நமது இறுதிப் படுக்கை அமையும் இடம் போலும். ஒவ்வொருவரும் இவ்விடமா இதுதானா என்று ஒவ்வொரு தருணத்திலும் உசாவிக்கொண்டிருக்கிறார்கள். இல்லை இல்லை என மீண்டு எழுகிறார்கள். இதோ இறுதியாக என்னுடையதை நான் கண்டடைந்துவிட்டேன்” என்று படைத்தலைவன் சொன்னான். கர்ணன் “நோன்புகளை நாம் கொள்வதே நமது இறுதி எல்லை என்ன என்று அறிந்துகொள்வதற்காகவே. நமது எல்லையை நாம் ஒவ்வொரு முறையும் புதிதென உணர்கிறோம். ஒவ்வொரு முறையும் அதை நீட்டி வைக்கிறோம். நான் எளிதில் தோற்பதாக இல்லை. நீங்கள் இங்கு அமர்ந்திருங்கள், நான் சென்று ஏதேனும் உணவு எஞ்சியுள்ளதா இக்காட்டில் என்று பார்க்கிறேன்” என்று சொல்லி கிளம்பினான்.
பசிக் களைப்பால் அவன் விழிகள் ஒளியிழந்திருந்தன. அவன் உள்ளம் தன்னை வெளியுலகிலிருந்து உள்ளிழுத்து ஆழத்தில் சுருட்டிக்கொண்டது. பசியும் களைப்பும் மீதூறுகையில் உள்ளம் தன்னை தான் சுற்றி இறுக்கிக்கொள்ளும் பாம்பென ஆகிறது. வளையிருளுக்குள் விழிமூடிக்கொள்கிறது. ஏனென்றால் மேலும் புதிய புலன்செய்திகளைப் பெற்று அடுக்கி வியனுலகு சமைக்க அதனால் இயல்வதில்லை. எனவே ஏற்கெனவே தான் சமைத்துச் சேர்த்துவைத்திருக்கும் உலகைக்கொண்டு அது ஒரு புறத்தை அமைத்துக்கொள்கிறது. அதில் வண்ணங்களையும் வடிவங்களையும் பெருக்கி அவ்வுயிரை அதில் வாழச் செய்கிறது. எங்கேனும் காட்டில் விழுந்து உலர்ந்த வாயும் வெறித்த விழிகளுமாக குருதி வற்றி இறந்துகொண்டிருக்கும் உயிரை கூர்ந்து பாருங்கள். அது தன்னுள் ஒளிமிக்க பசுமை நிறைந்த பிறிதொரு உலகில் திளைத்துக்கொண்டிருப்பதை அறிவீர்கள். அதன் இமைகள் கனவில் அசைந்துகொண்டிருக்கும். அதன் முகத்தில் துயரின்மையே தெரியும்.
கர்ணன் கங்கை பெருகியோடும் சம்பாபுரியின் காடுகளில் அலைந்துகொண்டிருந்தான். இனிய மான்களை வேட்டையாடி தீயில் வாட்டி கொழுப்பு வாயோரம் வழிய, முழங்கைகளில் சொட்ட உண்டான். ஒளியே நீரென ஓடும் பெருக்கில் பாய்ந்து நீந்தித் திளைத்தான். தோழர்களுடன் மலையிலிருந்து புரவியில் பாய்ந்திறங்கினான். பாறைகளிலிருந்து பாறைகளை நோக்கி மூங்கில் கழைகளில் தாவி விளையாடினான். ஒருவரோடொருவர் அம்பு தொடுக்கும் போட்டி வைத்து அவற்றில் வென்று நகைத்தான். பின்னர் அக்கனவுலகிலிருந்து விழித்துக்கொண்டு தான் எரிவெயிலில் நிழலில்லா முள்மரத்தின் கீழ் நா வறண்டு தொண்டை அடைக்க அமர்ந்திருப்பதை கண்டான். தன்னை திரட்டி எழுப்பிக்கொண்டு மீண்டும் காட்டுக்குள் சென்றான்.
அப்போது ஒரு முனகலோசை அவன் செவிகளில் விழுந்தது. அவன் அதை இடம் தேர்ந்து, வழி கூர்ந்து அணுகிச் சென்றபோது சிறிய குகையொன்றுக்குள் ஒரு விழியிலாத மூதாட்டி கரிந்த கருகிய விறகுக்குவை என மான்தோல் கந்தலுடுத்த உடலை மடித்து ஒடுக்கி ஒரு மூலையில் அமர்ந்து விம்மி அழுதுகொண்டிருப்பதை பார்த்தான். அக்குகைக்கு வெளியே கீழிருந்து மேலேறி வரும் பாறைகளில் ஓர் உடல் கிடந்தது. அவன் கூர்ந்து நோக்கியபோது கொப்பரையில் நீருடன் மேலேறி வருகையில் விழுந்து உயிர் துறந்த இளமுனிவனின் உடல் அது என்று தெரிந்தது. அவன் இறந்து மூன்று நாட்களுக்கு மேலாகியிருந்தது. உடல் வீங்கி பின்னர் வெடித்து தோல் மட்கத் தொடங்கியிருந்தது. சிரிப்பவன்போல் உதடு பின்னிழுத்து பற்கள் உந்தி வெளிவந்திருந்தன. அங்கிருந்து ஓநாய்களும் சென்றுவிட்டிருந்தமையால் அவன் எஞ்சியிருந்தான். ஆனால் அவனை மண்ணுக்குக் கீழிருந்து எழுந்த புழுக்கள் உண்ணத்தொடங்கியிருந்தன.
சற்று நேரம் அந்த முனிவனை நோக்கி நின்றிருந்த பின்னரே அங்கு நிகழ்ந்ததென்ன என்று கர்ணன் புரிந்துகொண்டான். குகைக்குள் நுழைந்து அவ்வன்னையை அணுகிச் சென்றான். காலடியோசை கேட்டதும் அன்னை இரு கைகளையும் நீட்டி “மைந்தா! மைந்தா! நீதானா!” என்றாள். முழந்தாளிட்டு தவழ்ந்து அவளருகே சென்று “ஆம்” என அவன் முனகல்போல் ஓசையெழுப்பினான். “நீருக்குச் சென்றாயே! நெடுநேரமாயிற்றே! ஓரிரு நாட்கள் ஆகியிருக்கும் அல்லவா?” என்று அன்னை சொன்னாள். நடுங்கும் கைகளை நீட்டி “நீர் கொடு! என் உயிர் வறண்டு கொண்டிருக்கிறது! எங்கே நீர்?” என தவித்தாள். “இதோ” என நாவெழாது சொல்லி குகையிலிருந்து வெளிவந்து அப்பகுதியை விழிசூழ்ந்து பார்த்தான். பறவையோசையோ சிற்றுயிர்களின் மீட்டலோ இன்றி அந்தக் காடு அமைந்திருந்தது. உருவாக்கப்பட்ட கணம் முதல் பல்லாயிரம் ஆண்டுகள் ஒருமுறை ஒரு விரல்கூட தொடாத இசைக்கலம்போல.
“தண்ணீர்! மைந்தா, தண்ணீர் கொண்டு வா!” என்று அன்னை கூவிக்கொண்டிருந்தாள். கர்ணன் கீழிறங்கிச் சென்று அச்சடலத்தின் கையிலிருந்த சிறிய கொப்பரையை எடுத்தான். பின்னர் அதை மேலே கொண்டு வந்து அன்னைக்கு சற்று அப்பால் நின்று தன் அம்பை எடுத்து கைகளில் குருதிக்குழாயொன்றை வெட்டினான். அக்குருதியை அதில் விட்டு அன்னையின் அருகே கொண்டு சென்றான். “அன்னையே, நீர் கிடைக்கவில்லை. சிற்றுயிரொன்றை பிடித்தேன். அதன் இளங்குருதியை கொண்டுவந்திருக்கிறேன். இதை உண்டு விடாய் அமைக!” என்றான். விடாயில் செவிகள் அடைத்து விழிகள் உள்மடிந்து அணையும் சுடர்என இருந்த அன்னை “கொடு! கொடு!” என்று கைநீட்டினாள். கர்ணன் கொப்பரையின் செந்நீரை அவளுக்கு ஊட்டினான். அவள் பெருவிடாய் உடலின் அனைத்துத் தசைகளிலிருந்தும் பொங்கி எழுந்து நாவுக்கு வர கரைச்சேற்றில் மூச்சுக்குத் துள்ளும் மீனென உதடுகளும் நாவும் துடிக்க அதை அள்ளி உண்டாள். நாவால் நக்கி ஒரு சொட்டின்றி உண்டு பெருமூச்சுவிட்டு பசியாறினாள். “ஆம், நான் இறந்துகொண்டிருகிறேன். ஆனால் பசித்து ஏங்கி இறக்கும் உயிர்கள் செல்லும் நரகத்துக்கு செல்லமாட்டேன். நாநீருடன் சாகும் நல்லூழ் எனக்குண்டு. என் மைந்தன் இருக்கிறான்” என்று அவள் சொன்னாள். “ஆம்” என்று கர்ணன் கூறினான்.
அன்னையுடன் அந்த குகையில் எட்டு நாட்கள் கர்ணன் இருந்தான். அவள் உடல் ஒவ்வொரு நாளும் நோய்கொண்டு நலிந்து இறப்பை அணுகிக்கொண்டிருந்தது. தன் குருதியையே அவளுக்கு ஒவ்வொரு நாளும் நா ஈரம் என அளித்து விடாயும் பசியும் தீர்த்துக்கொண்டிருந்தான் கர்ணன். அவன் உடலில் இருந்து உயிராற்றல் முற்றாக வடிந்தது. அக்குகையிலிருந்து எழுந்து அகல இயலாதவன் ஆனான். கைகளாலும் கால்களாலும் உடலை உந்தி தவழ்ந்துசென்று தன் புதுக் குருதிக்குழாயொன்றை வெட்டி உடலில் எஞ்சிய சோரியையும் அவளுக்கு ஊட்டினான். அன்னை தன் உடலில் எஞ்சிய இறுதி மூச்சை விடும்போது “மைந்தா, இதுவரை என்னுடன் இக்குகையிலேயே இருந்தாய். நினைவறிந்த நாள் முதல் உன்னை தொட்டுத் தடவி தழுவி அறிந்திருக்கிறேன். இந்நாட்களில் ஒருமுறைகூட உன்னை நான் தொட இயலவில்லை. உன் சொல்லும் தெளிவுடனில்லை. வருக, உன்னை தழுவிக்கொள்கிறேன். உனக்கு முலையூட்டிய என் நெஞ்சில் உன் முகம் பதிந்தால் இறக்கும் இக்கணம் எனக்கு தெய்வங்கள் அளித்த நற்கொடை என்றாகும்” என்றாள்.
கர்ணன் “இல்லை அன்னையே, நான் மிக மெலிந்திருக்கிறேன். என் உடலை தொட்டால் தாங்கள் துயருறுவீர்கள் என்பதனால்தான் அருகணையவில்லை” என்றான். “உன் குரலும் பசியால் உருமாறி நடுக்குண்டிருக்கிறது. அது பிறிதெவருடையதோ என்று ஒலிக்கிறது. நீ மிக மெலிந்திருக்கிறாய் என்பதை நானும் அறிவேன். ஆயினும் இது என் இறுதிக்கணம். இனி எனக்கு பொழுதொன்றில்லை. வருக!” என்று அவள் கை நீட்டினாள். “நான் இக்குருதியை உண்டு ஆற்றலை திரட்டிக்கொண்டதே இரு கைகள் தூக்கி உன்னை நெஞ்சோடணைக்கும் விசை இவ்வுடலில் வேண்டுமென்பதற்காகத்தான்.” கர்ணன் நடுங்கும் உடலுடன் அருகே சென்று அவளருகே தலை தாழ்த்தி “அன்னையே” என்றான். அவள் அதிர்ந்து கொண்டிருந்த தன் கைகளை அவன் தலைமேல் வைத்தாள். அக்கணமே அவை துள்ளித் துடிக்கத் தொடங்கின. உதடுகள் அதிர்ந்து விம்மல் போலொரு ஓசை எழுந்தது. அனல்பட்ட நாகங்கள்போல அக்கைகள் அவன் உடல்மேல் தவித்தலைந்தன.
ஆனால் கர்ணன் இரு அன்னைப்பசுக்கள் இருபுறமும் நின்று தன்னை நக்குவதுபோல் உணர்ந்தான். அவன் இரு கைகளையும் பற்றிக்கொண்டு “நீ யார்?” என்று அவள் கேட்டாள். “நான் உங்கள் மைந்தன்!” என்று அவன் சொன்னான். “ஆம்” என்று அவள் சொன்னாள். அச்சொல்லே இறுதியாக அமைய அவள் உயிர் துறந்தாள். விண்ணில் எழுந்து அங்கிருந்து கீழே நோக்கி “பொழிக மாமழை!” என்று ஆணையிட்டாள். கீழ் வானில் “ஆம்! ஆம்! ஆம்!” என்று முகில்பேரொலி எழுந்தது. மின்னல்கள் அதிர்ந்து வானம் சுடர் கொண்டது. மரங்கள் மின்னி அணைந்தன. வான் கிழிந்து நீரென மாறி வந்து மண்ணை அறைந்தது. பல்லாயிரக்கணக்கான அருவிகள் மலைப்பாறைகளிலிருந்து ஒளி கொண்டெழுந்து ஆழங்களை நோக்கி சரிந்தன. ஓடைகள் உயிர் கொண்டு நெளிந்தன. காட்டாறுகள் ஓசை கொண்டன.
கர்ணனை அவன் அணுக்கர்கள் தேடிவந்து மீட்டபோது அவன் மழையில் நனைந்து வானமுதை உண்டு உயிர் சேர்த்து நினைவிழந்து படுத்திருந்தான். அவனை அவர்கள் தூக்கிக்கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே உணவருந்தி அவன் உயிர்கொண்டு எழுந்தான். அங்கநாட்டுக்கு சென்றுசேர்கையில் அவன் உடல் உள்ளே விளக்கேற்றி வைத்த படிகக்கட்டிபோல் ஒளிகொண்டிருந்தது. அவன் அரண்மனையில் ஏறுகையில் பெண்டிர் அனைத்துச் சாளரங்களிலும் கூடி அவன் உடல் கொண்ட அவ்வொளியையே திகைப்புடன் பார்த்தனர். அவன் தன் அறையில் அமர்ந்திருக்கையில் அகல்சுடர்களுக்கு நிகராக அவன் உடலும் ஒளி கொண்டுள்ளதை அமைச்சர்கள் கண்டு மலைத்தனர். அந்தி மயங்குகையில் விளக்கேற்றும் பொழுதிற்கு முன்னர் அவன் உடல் கொண்ட ஒளியாலேயே அவ்வறையின் தூண்வளைவுகளும் உலோகக் குமிழ்களும் மிளிர்வதைக் கண்டு ஏவலர்கள் அரண்டனர்.
நிமித்திகர் கூடி அவன் உடற்குறியும் நாட்குறியும் கணித்துநோக்கி இக்கதையை கண்டு கூறினர். “தெய்வங்களால் ஆயிரத்தெட்டு முறை வருடப்பட்ட உடல் கொண்டவன் இவ்வரசன். இப்புவியில் பிறிதொருவன் இனி இவ்வழகை கொள்ளப்போவவதில்லை. இதுவரை கொண்டதுமில்லை” என்றனர். காமர் சொன்னார் “பேரழகனை வணங்குக! ஊனில் அமைவதல்ல அழகு. குருதியால் அடையப்படுவதுமல்ல பேரழகு. அருளே அழகென்று எழுகிறதென்று பாடுக! ஆம், அழகுருவனைப் பாடுக!” அவரைச் சூழ்ந்தமர்ந்திருந்த சூதர்கள் தங்கள் இசைக்கலங்களை மீட்டியபடி “ஆம்! ஆம்! ஆம்!” என இணைந்தேற்றுப் பாடினர்.