இந்திரநீலம் - 53

பகுதி ஒன்பது : அஞ்சிறை அன்றில் – 4

பிரம்ம முகூர்த்தத்திற்கு நெடுநேரம் முன்பாகவே அமிதை வந்து ருக்மிணியை அவள் இரு கால்களையும் தொட்டு எழுப்பினாள். “திருமகளே, இந்நாள் உன்னுடையது” என்றாள். சிறு தொடுகைக்கே விழித்துக் கொள்பவள் அவள். முதல் சொல் கேட்கையில் புன்னகைப்பாள். முகம் மலராது அவள் விழிமலரக்கண்டதில்லை அமிதை. “நலம் திகழ்க!” என்றபடி விழித்து இருகைகூப்பி வணங்கி வலது காலை மஞ்சத்திலிருந்து எடுத்து வைத்து எழுந்தாள்.

“இன்று புதுநீர்ப் பெருவிழவு இளவரசி. அரசர் வரதாவை வணங்கி மணம் கொள்ளும் நாள். அன்னையுருவாக அருகே தாங்கள் இருக்க வேண்டும். எழுந்தருள்க!” என்றாள் செவிலி. புன்னகைத்து “என் கனவுக்குள் நான் வரதாவில்தான் நீராடிக் கொண்டிருந்தேன். இடைக்குக்கீழ் வெள்ளி உடல் கொண்ட மீனாக இருந்தேன்” என்றாள் ருக்மிணி. செவிலி நகைத்து “முற்பிறவியில் மீன்மகளாக இருந்திருப்பீர்கள் இளவரசி” என்றாள்.

இளம்சேடி சுபாங்கி வாயிலில் வந்து வணங்கி “நீராட்டுக்கென அனைத்தும் சித்தமாக உள்ளன இளவரசி” என்றாள். “இதோ” என்றபடி தன்னிரு கரங்களையும் விரித்தாள். ஆழியும் வெண்சங்கும் செந்நிறக் கோடுகளாக விழுந்த உள்ளங்கைகளை நோக்கினாள். நினைவறிந்த நாள் முதல் அவள் நோக்கும் இறையுருக்கள் அவை. சிறு மகவாக அவள் பிறந்து மண்ணுக்கு வந்தபோது வயற்றாட்டி தளிர்க்கைகளைப் பிரித்து அங்கு ஓடிய கைவரிகளைக் கண்டு விதிர்த்து பின் பேருவகைக் குரல் எழுப்பியபடி வெளியே ஓடி அங்கு நின்றிருந்த நிமித்திகர்களையும் நடுவே திகைத்து நோக்கிய பீஷ்மகரையும் பார்த்து “சங்கு சக்கரக் குறி! என் விழிமயக்கு அல்ல. அரசே, நிமித்திகரே, இதோ எழுத்தாணியில் எண்ணி வரையப்பட்டது போல. ஆழி இதோ. அவன் கைக்கொள்ளும் வெண்சங்கு இதோ!” என்று கூறினாள்.

முது நிமித்திகர் சுருக்கங்களடர்ந்த விழிகள் மேலும் இடுங்க, தலை குளிர் கொண்டதுபோல் நடுங்க இருகைகளையும் கூப்பியபடி முன்னால் வந்து செந்நிற தளிர் போல நீட்டி நின்றிருந்த இரு சிறு கால்களைத் தொட்டு தன் தலைசூடிய பின் உள்ளங்கால்களை குனிந்து நோக்கினார். “சகரரே என்ன?” என்று கைகூப்பி நடுங்கி நின்றிருந்த பீஷ்மகர் தழுதழுத்த குரலில் கேட்டார். “கால்களிலும் உள்ளன ஆழியும் வெண்சங்கும் அரசே” என்றார் சகரர். “என் சித்தம் சுழல்கிறது நிமித்திகரே, நான் கேட்பதன் பொருள் என்ன?” என்றார் பீஷ்மகர்.

உணர்வெழுச்சியால் உடைந்த குரலில் “இவள் திருமகள்.வான்முகிலென விரிந்த வைகுண்டம் தண்ணென உதிர்த்த பொன்மழைத்துளி. இப்புவியளக்க வந்த பெருமானின் மார்பணி. இங்கு எங்கோ அவன் தன்னை நிகழ்த்தியிருக்கிறான். உடன் நின்று வளம்புரிய வந்தவள் இவள். விதர்ப்பத்தின் காடுகள் செஞ்சடையோன் விரித்த முடித்தார்களாயின. விண்விட்டிறங்கிய கங்கையென இவள் வந்திருக்கிறாள்” என்றார். பீஷ்மகர் மேலும் பின்னடைந்து இருகைகளாலும் நெஞ்சைப்பற்றியபடி உதடுகள் துடிக்க விழிநீர்வார நின்றார். “இவள் பாதங்களை சென்னியில் சூடுங்கள் அரசே! தாங்களும் தங்கள் முதுமூதாதையர் அனைவரும் முடிசூடிய தவம் இவள் கால்களைச் சூடும்போது கனியும்” என்றார் சகரர். வயற்றாட்டிக்குப்பின்னால் வந்த அமிதை கண்ணீருடன் விம்மினாள்

ஆடை களைந்து அவள் முழுதுடலுடன் மரத்தொட்டியில் நீராட்டுப் பீடத்தில் அமர்ந்தபோது அமிதை அவள் முன் அமர்ந்து குனிந்து செவ்விதழ்க் கால்களில் எழுந்த சங்கு சக்கரச் சுழிகளை அன்றென மீண்டும் நோக்கினாள். நீராட்டுச் சேடியர் இருவரும் இயல்பாக செம்பஞ்சுக் குழம்பையும் மஞ்சள் களபத்தையும் எடுக்கச் செல்பவர்கள் போல சென்று ஓரக்கண்ணால் அவ்வடையாளங்களை நோக்கினர். அரண்மனைப்பெண்டிரும் குடிகளனைவரும் அறிந்திருந்தனர் அதை. அவள் கால்களில் அவ்வடையாளங்கள் இருப்பது ஒரு கதையென்றே பலர் உள்ளூர ஐயம் கொண்டிருந்தனர். காணும்போது அந்த ஐயத்திற்காக குற்ற உணர்வு கொண்டு விழியுருகினர்.

சேடியர் அகல் விளக்கைத் தூண்டி நீராட்டறையை ஒளிபெறச் செய்தபின் அவள் உடலில் மஞ்சள் சந்தன பொற்குழம்பை பூசிப் பரப்பினர். நீண்ட கருங்குழலை விரல்களால் அளைந்து திரிகளாக வகுந்து நறுமண எண்ணெயை நீவினர். நீள்கரங்களின் நகங்களை ஒருத்தி செம்மை செய்தாள். தேக்கு மரத்தின் வரிகள் போல அடி வயிற்றில் இழிந்து சென்ற மயிர்வரிச்சுழிகளில் மென்பஞ்சுக் குழம்பிட்டாள் இன்னொருத்தி.

அமிதை அவள் கால்கள் தொடங்கி நெற்றியின் வகிடுமுனை வரை விழி நீட்டி ஏங்கினாள். எங்குளது மானுட உடல் கொள்ளும் இன்றியமையாத அச்சிறு குறை? முழுமையென்பது ஊன் கொண்டு வந்த உயிருக்கு உரியதல்ல என்பார்களே, இது விண்ணிழிந்த திருமகளேதானா என்று எண்ணியபடி விழிஅளந்தாள். நூறாயிரம் முறை தொட்டுத் தொட்டு அறிந்து உணர்ந்து நிறைந்து பின் அவள் சித்தம் ஒரு கணத்தில் ஒன்றை அறிந்தது. இவள் காலடி சூடி மண் மறையும் தகுதிகூட அற்றவன் சேதிநாட்டு அரசன்.

நீள்மூச்சுடன் “இளவரசி, சேதிநாட்டரசர் இன்று விழவுக்கு எழுந்தருள்வதையே நகரெங்கும் பேசிக்கொள்கிறார்கள்” என்றாள். “ஆம் அறிந்தேன்” என்று அவள் புன்னகை புரிந்தாள். “தங்கள் தமையனின் கணிப்புகளை முன்பு சொன்னேன்” என்று செவிலி அவள் கைகளில் மென்குழம்பைப் பூசி நீவி வழித்தபடி சொன்னாள். “தங்களை சேதி நாட்டரசர் கைப்பிடித்தால் விதர்ப்பமும் சேதியும் இணைந்து ஒற்றைப் பெருநிலமாகின்றன. கங்கைக்குக்கீழ் மகதத்தைச் சூழ்ந்தமர்ந்திருக்கும் இவ்விரு நிலங்களுக்கு மேல் மகதம் நட்பெனும் உரிமையை மட்டுமே கொண்டிருக்கும். பகை கொள்ளும் துணிவை அடையமுடியாது.”

“இது வெறும் அரசியல் கணக்குகளல்லவா?” என்று அவள் முடியைக் கோதியபடி சேடி கேட்டாள். “இளவரசியரின் மணங்கள் எப்போதும் அரசியல் சூழ்ச்சிகள் மட்டுமே” என்றாள் அமிதை. “அரசர் என்ன சொல்கிறார்?” என்றாள் நகம் சீர் செய்த சேடி. “இந்நாட்டின் முடி மன்னர் தலையிலமர்ந்திருக்கிறது. ஆணையிடும் நா இளவரசரின் வாயில் அமைந்துள்ளது. அதை அனைவரும் அறிவோம்” என்றாள் அமிதை.

அவ்வுரையாடலுக்கு மிக அப்பால் அதில் ஒரு சொல்லையேனும் பொருள் கொள்ளாதவளாக நீள்விழிகள் சரிந்து முகம் கனவிலென மயங்க ருக்மிணி இருந்தாள். செவிலி “சேதி நாட்டு அரசரை நீங்கள் எவ்வண்ணம் ஏற்கிறீர் இளவரசி?” என்றாள். ருக்மிணி விழித்துக் கொண்டு “என்ன?” என்றாள். “உங்கள் உள்ளத்தில் சிசுபாலர் கொண்டிருக்கும் இடமென்ன?” என்றாள். “அளியர், என் அருளுக்குரிய எளியர்” என்றாள் ருக்மிணி.

அமிதை எழுந்து “அவ்வண்ணமென்றால்?” என்று வியந்து கேட்டாள். சேடி “இளவரசி சொல்லிவிட்டார்களல்லவா, பிறகென்ன?” என்றாள். அவள் நீர்வழியும் உடலுடன் எழுந்து மேடைமேல் அமர மென்பஞ்சுத் துணியால் அவள் உடலைத் துடைத்து நறுஞ்சுண்ணமிட்டு அகிற்புகையிட்டு குழலாற்றி அணியறைக்கு கொண்டு சென்றனர். சமையப்பெண்டிர் நால்வர் வந்து அவளை கைப்பிடித்து யவனநாட்டுப் பேராடி முன் அமர்த்தினர். இரு புறமும் நெய்விளக்குகள் எரியும் ஆடி கருவறை வாயிலென தெரிய பீடத்திலெழுந்த பொற்செல்வியின் சிலையென அவள் தெரிந்தாள். அங்கிருந்து அவர்கள் நடுவே இருந்தவளை நோக்கியவள் எரியும் தெய்வவிழி கொண்டிருந்தாள். ‘சேதிநாட்டரசர் இளவரசியைக் கைப்பிடித்தல் அனைவரும் விழையும் செய்தியல்லவா?”

நீராட்டறைப் பொருட்களை எடுத்துவைத்த சேடி திகைப்புடன் “சேதி நாட்டரசருக்கா? நம் இளவரசியா?” என்றாள். இன்னொருத்தி “நீ வியந்தென்ன? அவரை விரும்பி ஏற்பதாக இளவரசி சொன்னதை இப்போது கேட்டாயல்லவா?” என்றாள். அமிதை சினத்துடன் திரும்பி “விரும்பி ஏற்பதாக எவர் சொன்னார்?” என்றாள். “இப்போது அவர் சொற்களையே கேட்டோமே?” என்றாள் சேடி. “அறிவிலிகளே, அளியர் என்றும் எளியர் என்றும் சொன்னார். அவர் கருணைக்கு என்றும் உரியவராம் சிசுபாலர். இப்புவில் உள்ள அனைவருமே அவர் மைந்தரே. அவர் தன் ஆழ்நெஞ்சில் சூடும் ஆண்மகன் அவரல்ல.”

வியப்புடன் “பின் எவர்?” என்று சேடி கேட்டாள். திரும்பி கனவிலமர்ந்திருந்த ருக்மிணியை நோக்கியபின் “எவரென்று அவள் சித்தம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சித்தத்தை ஆளும் ஆன்மா அறிந்துள்ளது” என்றாள் அமிதை. இடையில் கைவைத்து நிமிர்ந்து சமையர் அவள் தோள்களில் தொய்யில் வரைந்து கைகளுக்கு செம்பஞ்சுக்குழம்பிடுவதை நோக்கி நின்றாள். அங்கிருந்த அறியா ஒன்றின் மேல் அறிந்த ஒரு அழகிய மகளை அவர்கள் சமைத்துக்கொண்டிருந்தனர்.

புதுப்பெருக்கு விழவின் பேரொலி அரண்மனையை சூழ்ந்திருந்தது. சேடி ஒருத்தி ஓடிவந்து “அணியமைந்துவிட்டதா என்று நோக்கிவரச்சொன்னார் அமைச்சர்” என்றாள். அமிதை “இன்னும் ஒருநாழிகை நேரமாகும்” என்றாள். “ஒருநாழிகையா?” என்றாள் சேடி. “சென்று சொல். இது மூதன்னையரின் நாள். இங்கு அணிகொண்டு எழுவது மூதன்னையரென்னும் தேன்குவை கனிந்து சொட்டும் துளி என” என்று அமிதை சொன்னாள். சேடி சொல்புரியாமல் நோக்கிவிட்டு “அவ்வண்ணமே” என்று திரும்பிச்சென்றாள்.

அமிதை வெளியே சென்று அரண்மனை இடைநாழிகள் வழியாக விரைந்தாள். அரண்மனைமகளிர் புத்தாடை அணிந்து பொலன்அணி மின்ன சிரிப்பும் களியாட்டுமாகச் சென்று கொண்டிருந்தனர். அரண்மனைப் பெருமுற்றத்தின் அணிவகுப்பின் ஒலி எழுந்து சாளரங்கள் வழியாக அறைகளை நிறைத்தது. அமிதை மங்கலச்சேடியரை அணித்தாலங்களுடன் ஒருங்கி நிற்கும்படி ஆணையிட்டாள். இசைச்சூதர் யாழ்களில் சுதி நிறைத்து முழவுகளில் கதி கூட்டி நின்றிருக்கிறார்களா என்று நோக்கினாள். ஒவ்வொன்றும் சித்தமாக இருந்தன. ஒவ்வொன்றும் சிறுபிழைகொண்டும் இருந்தன.

கோல்விழும் முரசின் உட்பக்கம் என அதிர்ந்துகொண்டிருந்த மாளிகை வழியாக ஒவ்வொன்றையும் சீர்நோக்கி ஆணையிட்டும் கடிந்து கூச்சலிட்டும் அவள் நிலையழிந்து ஓடினாள். அவள் அறிந்த அத்தனை புதுப்பெருக்கு விழவுகளும் அவள் உள்ளத்தை தேன்கூட்டில் தேனீக்களென மொய்த்தன. சிறகிசைக்க ரீங்கரித்து தொலைதூரத்து தேன்சுமந்து. அவள் ஓடியபோது அந்நினைவுகளும் கூட ஓடின. அவள் காலோய்ந்து அமர்ந்தபோது அவள்மேல் எடைகொண்டு அமர்ந்தன. மூச்சே அந்நினைவுகளாக இருந்தது. ஒருகணத்தில் அவள் அறிந்த அனைத்து புதுநீர் விழவுகளும் இணைந்து ஒற்றைநிகழ்வாயின.

புதுப்பெருக்கு என்பது விந்தியன் தன் மைந்தர் தலைதொட்டு வாழ்த்தும் நன்னாள் என்பது ஆயர்குடி நம்பிக்கை. கயிலை முடிசூடி அமர்ந்திருக்கும் இமவானின் இளையோன் என விந்தியனை சூதர் பாடுவர். அன்னையின் முப்புரம் அவன் முடியென அமர்ந்திருக்கிறது. தென்னகம் நோக்கி தமையன் புன்னகைக்க வடதிசை நோக்கி இளையோன் வணங்கி அமர்ந்திருக்கிறான். இமவானாலும் விந்தியனாலும் காக்கப்பட்டிருக்கிறது கங்கைப் பெருநிலம். அங்கு தழைக்கின்றன மூன்று அறங்கள்.

முதல்வெள்ளம் என்பது வரதா சூதகம் கொள்ளும் நாள் என்பது வேளிர்குடிகளின் பழஞ்சொல். ஒளி சிதற சிரித்துச் செல்லும் சிறுமி மங்கையென்றாகும் நாள். அதன்பின் எப்போதும் அவளது நீர்ப்பெருக்கில் குருதியின் நிறம் கலந்திருக்கும். கையில் அள்ளிய நீர் சற்று நேரம் கழித்து திரும்ப விடும்போது விரல் ரேகையெங்கும் வண்டல் படிந்திருக்கும். புதுப்பெருக்குக்குப்பின் வரதாவின் நீரை வயல்களில் தேக்குவார்கள். நீர்வற்றும்போது மண்ணில் செம்பட்டை படியப்போட்டதுபோல மென்சேறு பரவயிருக்கக் காண்பார்கள். அந்த மென்பரப்பை மூன்றுவிரல்களால் அழுத்தி அழுத்திச் சென்று பறவைகள் எழுதியிருக்கும் மொழி என்பது விந்தியன் தன் அமுதை உண்ணும் மானுடருக்கு அளிக்கும் வாழ்த்து.

விதர்ப்பத்தின் அனைத்துக் கிணறுகளிலும் வரதா ஊறி நிறைந்திருப்பாள். அனைத்துச் செடிகளிலும் இலைகளிலும் மலர்களிலும் அந்தச் செழுமை ஏறியிருக்கும். கனிகளில்கூட அந்த மணமிருக்கும் என்பார்கள். ஒவ்வொரு கன்றும் வரதாவில் எழும் புதுச்சேற்றின் மணமறியும். புது வெள்ளம் வந்த அன்றிரவு தொழுக்கள் முழுக்க பசுக்கள் கால்மாற்றி நின்று தலைதாழ்த்தி உறுமிக்கொண்டிருக்கும். கட்டுக்கயிற்றை இழுத்து வெளிநோக்கித் திரும்பி நின்று கண்கள் மின்ன நோக்கி நிலையழியும். புதுச்சேறு வரும் மணம் முதியோருக்குத் தெரியும். பழைய நினைவொன்று மீள்வது போல உள்நிகழ்ந்ததா வெளியே எழுந்ததா என்று மயங்கும்படியாக அந்த மணம் வந்தடையும். மூக்கு கூர்ந்து அதுவேதான் என்று உறுதி செய்வார்கள். அருகிருப்போரை கூவியழைத்து “புதுச்சேறு மணம்! வரதாவில் புதுவெள்ளம் எழுந்துள்ளது தோழரே” என்பார்கள்.

எருமைக்கூட்டங்கள் போல தேன்மெழுகிட்டு கருமைகொண்ட ஓலைக்குடைகள் வரதாவின் கரையணைந்து நீர் விளிம்பருகே நிரைவகுக்கும். அங்கு கரிய உடலில் நீர்வழிய சிரித்துப்பேசி நின்றிருக்கும் குகர்களிடம் “புதுமழையின் மணம்தானே?” என்று உறுதி செய்துகொள்வார்கள். “ஆம் வேளிரே, வரதா பருவம் கொண்டுவிட்டாள்” என்பார்கள் முதிய குகர்கள். ஆயரும் வேளிரும் நீரை அள்ளி முகர்ந்து அந்த மணம் அதிலிருப்பதை உணர்வார்கள். ஆயினும் நீர் தெளிந்தே இருக்கும். “எப்போது வந்தடையும்?” என்பார்கள். “இன்னும் எட்டு நாழிகை நேரம்” என்பார் முதிய குகர். “எப்படி சொல்கிறீர்கள்?” என்று வேளிர் கேட்க “உங்கள் வயலில் கதிர் விளைவதை எந்தக் கணக்குப்படி சொல்கிறீர்களோ அப்படி” என்று சொல்லி குகர்கள் நகைப்பார்கள். மழைச்சாரலுக்கு அப்பால் பற்கள் ஒளிவிட அச்சிரிப்புகள் நின்றிருக்கும்.

இல்லங்களை சேற்றின் மணம் நிறைக்கத்தொடங்கும். மெல்ல மெல்ல அத்தனை விதர்ப்பநாட்டுக் குடியினரும் அந்த மணத்துக்குள் திளைக்கத் தொடங்கியிருப்பார்கள். உண்ணும் உணவும் உடைகளும் அந்த மணம் கொண்டிருக்கும். “நெருப்பும் சேற்று மணம் கொள்ளும் நாள்” என்று அதை சொல்வார்கள். நாள்முழுக்க குலம்சூழச் சென்று வரதாவின் கரைகளில் கூடி நின்று நதியை நோக்கிக் கொண்டிருப்பார்கள். வரதா விழிகள் பட்டு சிலிர்த்து அடங்கும் புரவித்தோல் போன்று நீருடல் விதிர்ப்புற புரண்டும் விரிந்தும் சென்று கொண்டிருக்கும்.

வானம் பிளவுபட்டு கதிரொளி மழைத்தாரைகள் வழியாகக் கசிந்து நீர்மேல் இறங்கும்போது உள்ளாழத்திலிருந்து எழும் புன்னகை வரதாவை ஒளி கொள்ளச்செய்யும். குளிருக்கு உடல் கூப்பி குடைகளுக்கு அருகில் நின்றிருப்பவர்களும் அந்த ஒளியைக் கண்டதும் “அன்னையே, வரம் தருபவளே, அடி பணிந்தோம், காத்தருள்க!” என்று வாழ்த்தொலி எழுப்புவார்கள். ஒளி விரிய விரிய வரதா செந்நிறப் பேருருக்காட்டி விரிவாள். நீலச்சிற்றாடை அணிந்திருந்தவள் செம்பட்டுப் புடவை சுற்றி நாணம் கொண்டிருப்பாள். “அன்னையே, குலம் காக்கும் இறையே, ஈசனின் மகளே, எங்கள் முடி சூடும் அடியே” என்று முதுவேளிர் தலை மேல் கைகூப்பி விழிமல்கி கூவுவார்கள்.

புதுப்பெருக்கு அன்றுவரை இல்லங்களில் தேங்கிய அனைத்து இருளையும் கரைத்துக் கொண்டு செல்லும் ஒளி. தொழுவங்களிலிருந்து கன்றுகளை கட்டவிழ்த்து விடுவார்கள். புதுச்சேறு மணம் பெற்ற அவை துள்ளிக் குதித்து தெருக்களில் பித்தெடுத்து ஓடும். அகிடு கனத்த அன்னைப்பெரும் பசுக்கள்கூட தன்னிலை மறந்து வால் சொடுக்கி ஆடுவதைக் கண்டு பெண்கள் வாய்பொத்தி நகைப்பார்கள். திமில் திமிர்த்த காளைகள் கொம்புதாழ்த்தி சேற்றுமண்ணை குத்திக்கிளறி மண்வழியும் முகங்களுடன் சிற்றடி வைத்து செல்லும்.

புதுப்பெருக்கு நாளன்று பொங்குவதற்கென்று புது நெல்லை அறுவடைக்காலத்திலேயே கட்டி வைத்திருப்பார்கள். மஞ்சள் பட்டுத்துணியில் கட்டி தென்மேற்கு கன்னிமூலையில் கூரையில் தொங்கவிடப்பட்டிருக்கும் அந்த நெல்லை எடுத்து புதுக்கலத்தில் வறுத்து உலக்கையால் உருட்டி உமிகளைந்து வெல்லமும் தேங்காயும் கலந்து அக்கார அடிசில் செய்வார்கள். ஆவி பறக்கும் அக்கார அடிசிலை கொண்டுசென்று வரதாவின் கரையில் நின்றிருக்கும் அனைவருக்கும் அளிப்பார்கள். முதல் கைப்பிடி அடிசிலை வணங்கி வாழ்த்தி வரதாவிற்கு அளித்து உண்டு மகிழ்வார்கள்.

புலரி மணியோசை விதர்ப்பத்தின் கௌண்டின்யபுரியின் நகர் மையத்தில் அமைந்திருந்த ஆழிவண்ணன் ஆலய முகப்பு கோபுரத்தின் மேல் எழுந்தது. கௌண்டின்யபுரியின் நீண்ட தெருக்கள் யாழின் தந்திகளாக வானத்தின் நீள்விரலொன்று அதைத் தொட்டு மீட்டுவது போல அவ்வோசை எழுந்து பெருகியது. நகர் மக்கள் முந்தைய இரவே துயில் நீத்து விழவுக்கான ஒருக்கங்களிலிருந்தனர். தாழை மடல் தொன்னை கோட்டி அதில் அக்காரமும் அரிசிமாவும் ஏலமும் சுக்கும் கலந்து பெய்து செம்புக் கொப்பரைகளில் வைத்து நீராவியில் வேகவைத்த அப்பங்களை எடுத்து வாழை இலை மேல் ஆவி எழ குவித்துக் கொண்டிருந்தனர். நகர் முழுக்க தாழை அப்பத்தின் நறுமணம் எழுந்து நிறைந்திருந்தது.

நெடுநேரம் விழித்திருந்து தாழை தொன்னைகள் கோட்டியும் கோட்டிய தொன்னைகளை விளையாடக் கொண்டுசென்று கலைத்தும் களியாடிக் கொண்டிருந்த மைந்தர் ஆங்காங்கே சோர்ந்து விழுந்து துயின்றபோதும் அவர்களின் கனவுகளுக்குள் புகுந்து இன்சுவையாக மாறி நாவூறி வழியச்செய்தது அந்த மணம். மணியோசை அவர்கள் துயிலுக்குள் நீண்டு தொட்டு எழுப்பியது. சிலரை மணியொலித்து வந்த குழந்தையாக சென்று விளையாட எழுப்பியது. சிலரை அன்னையென அதட்டித் தொட்டது. சிலரை தந்தையென அள்ளித் தூக்கியது. சிலரை மூதாதை என தலை முடி அளைந்து உசுப்பியது.

எழுந்த மைந்தர் “அன்னையே விடிந்துவிட்டது. புது நீராட்டு விழா வந்துவிட்டது…” என்று கூவியபடி அடுமனைக்குள் ஓடி அங்கிருந்த அன்னையரையும் அத்தையரையும் அள்ளிப் பற்றிக் கொண்டனர். “நீராடாமல் அப்பங்களை உண்ணலாகாது. புது ஆடை அணிந்து குலக்குறி கொண்ட பின்னரே அப்பங்களில் கைவைக்க வேண்டும். செல்க!” என்று கடிந்தனர் அன்னையர். செம்புப் பெருங்கலங்களில் விறகடுப்பில் நீர் கொப்பளித்துக் கொண்டிருந்தது. இருளுக்குள் ஆடும் தழல்களைச் சூடி சூழ்ந்து அமைந்திருந்த சிறுகலங்களில் கொதிக்கும் நீரை அள்ளிவிட்டு பொருந்த குளிர்நீர் சேர்த்து பதமான வெந்நீர் ஆக்கினர் அக்கையர். சிறு மைந்தரை கைபற்றி இழுத்துச் சென்று நிறுத்தி தலை வார வெந்நீர் ஊற்றி கஸ்தூரி மஞ்சள் சேர்த்தரைத்த பயற்றுமாவைப் பூசி நீராட்டினர்.

நீர் சொட்ட, அரைமணி கிண்கிணி அசைய, இல்லங்களுக்குள் ஓடி “புத்தாடை! எனக்குப் புத்தாடை” என்று குரலெழுப்பினர் குழவியர். மஞ்சள் மலராடை அணிவித்து, குல முறைப்படி நெற்றியில் குறி சார்த்தி, ஏற்றிய நெய்விளக்கின் முன் கைகூப்பி நின்று மூதாதையரை வணங்க வைத்து, அதன்பின் வாழை இலையில் வெம்மை பறக்கும் அக்கார அப்பத்தைப் படைத்தனர். உண்டு வயிறு நிறைந்த மைந்தர் அதன் பின்னரே அன்று நீராடுவதற்கும் களியாடுவதற்குமான நாளென்பது நினைவுக்கு வந்து தெருக்களில் பாய்ந்திறங்கினர். தெருவெங்கும் படர்ந்திருந்த மழைச்சேற்றில் மென்கால்கள் மிதித்தோடினர். புத்தாடைகள் சில கணங்களிலேயே சேற்று வரிகளாயின.

சேறு மூடி சந்தனம் சார்த்தப்பட்ட ஆலயச் சிலைகளென மாறிய சிறுவர் எவரையும் அன்னையரும் அடையாளம் காண முடியவில்லை. கூவிச் சிரித்து ஒருவரை ஒருவர் சேற்றாலடித்து துரத்திப் பிடித்து கட்டிப் புரண்டு எழுந்து நகையாடி நகர் நிறைத்தனர் மைந்தர். அரண்மனையிலிருந்து அரசப்பெருமுரசு ஒலிகள் எழத்தொடங்கின. முதல் முரசொலியை வாங்கி காவல்மாடங்களின் நூற்றெட்டு முரசுகளும் ஒன்றிலிருந்து இன்னொன்று என சுடரேற்றிக்கொள்ளும் அகல் விளக்குகள் போல ஒலி பொருத்திக் கொண்டு முழங்கத் தொடங்கின. களியாட்டு களியாட்டு களியாட்டு என நகரைச் சூழ்ந்து அறைகூவின முரசொலிகள். எழுக எழுக எழுக என எக்களித்தன கொம்புகள். இங்கே இங்கே இங்கே என்று அழைத்தன பெருஞ்சங்கங்கள்.

மூங்கில் கூடையில் அப்பங்களைச் சுமந்தபடி நகர்ப்பெண்டிர் குரவையொலியுடன் தெருவிலிறங்கினர். ஒவ்வொரு குடியினரும் மூதன்னையர் வழிகாட்ட இளங்கன்னியர் தொடர அப்பங்களுடன் வரதாவின் சேற்றுக்கரை நோக்கி சென்றனர். இலையிட்டு மூடி கொடிகளால் ஆன கொக்கிகள் கொண்டு தூக்கப்பட்ட அகல்விளக்குகள் மென் சாரலிலும் அணையாது சென்றன. ஒளிக்குவைகளெனச்சென்ற அந்தச் சிறு குழுக்களை அரண்மனை மேலிருந்து நோக்கிய அமிதை நகர் இல்லங்களிலிருந்து விளக்குகள் கிளம்பி நதியை நோக்கிச் செல்லும் பெருக்கென அதை கண்டாள்.

“அன்னையே! அருள் புரிபவளே! நிலம் நிறைக்கும் நெடியவளே! எங்கள் இல்லத்தில் பொன்னிறைக்கும் பெரியவளே!” என்று கூவிய குரல்கள் கலந்து முரசொலிக்கு மேல் எழுந்தன. வரதாவின் பெருக்கின் மேல் விளக்குகள் ஏற்றப்பட்ட படகுகளுடன் குகர்கள் நிரைவகுக்க காற்றிலாடும் நகரொன்று அங்கே எழுந்தது. அமிதை மீண்டும் ருக்மிணியின் அருகே வந்தாள். அவளுக்கு தலைமுடிக்கற்றைகளில் தென்பாண்டி முத்துக்களைக் கோத்து அணிசெய்துகொண்டிருந்தனர்.

சேடி ஓடிவந்து “அரசர் எழுந்துவிட்டார் இளவரசி” என்றாள். அணிச்சமையம் செய்து கொண்டிருந்த முதியவள் “இன்னும் சற்று நேரம்…” என்றாள். “இன்னும் கால் நாழிகை நேரத்தில் பிரம்ம முகூர்த்தம் முடிந்துவிடும். அரசர் அணிமுற்றம் நோக்கி சென்று கொண்டிருக்கிறார்” என்றாள் அமிதை. “வரதா அணி கொள்ள வேனிற்காலம் முழுதும் நாம் காத்திருந்தோம். இளவரசி அணி கொள்ள இரு நாழிகை காத்திருந்தாலென்ன?” என்று ஒரு சேடி சொல்ல இன்னொருத்தி “ஆம்” என்றாள்.

அமிதை சினத்துடன் “நேரம் தவறினால் என்னைத்தான் சொல்வார்கள்… விரைவில் முடியுங்கள்” என்றாள். வைரங்கள் கோத்த நெற்றியணியை குழல்மேல் பொருத்தி பொன்னூசியால் கொண்டையில் நிறுத்தியபின் ஆடியை நோக்கி “நிறைந்தது” என்றாள் முதுசமையப் பெண். இளையவளொருத்தி பொன்னூல் பின்னிய பட்டாடையின் மடிப்புகளைப் பொருத்தி ஒரு பொன்னூசியைக் குத்தி “சமையம் எப்போதும் நிறைவதில்லை. ஒன்று குறைகிறது. அது இவ்வணி முடிந்தபிறகுதான் தெரியும்” என்றாள்.

அமிதை “இந்த அணிகள் என் திருமகளை அழகுறச்செய்வதில்லை. இவ்வணிகள் அனைத்திற்கும் முழுமை அளிப்பவள் அவளே. விலகுங்கள்” என்று சொல்லி அவள் தோள்களைத் தொட்டு “எழுக இளவரசி” என்றாள். முழுதணிக்கோலத்தில் விழிகளில் குடிகொள்ளும் தெய்வ நோக்குடன் அவள் திரும்பி “செல்வோம்” என்றாள். சாளரத்திற்கு வெளியே செவ்வைரங்கள் சுடரும் மணிமாலை போல் வரதா மாறிவிட்டிருந்தது. கரை விளக்குகள் நிலைக்க நீர்மேல் விளக்குகள் அலைய நடக்கும் பெண்ணின் முலைமேல் தவழும் செந்நிற இதழ்கள் கொண்ட காந்தள் மாலை என.

இடைநாழியின் மரத்தூண்கள் மெழுகு பூசப்பட்டு பந்த ஒளியில் மின்னிக் கொண்டிருக்க தரைமேல் செவ்வொளி படர்ந்திருந்தது. அவர்கள் நடந்த ஓசை தூண்களுக்கு மேலிருந்து உளமெழுந்த மாளிகையின் இதய ஒலியென எழுந்தது. வாயிற்காவலர் பந்தச்சுடரேந்திய வேல்களைத் தாழ்த்தி தலைவணங்கி விலகினர். படிகளிலிறங்கி பெருங்கூடத்தைக் கடந்து அவள் சென்றபோது அங்கு காத்திருந்த அணிச்சேடியர் மங்கலத்தாலங்களுடன் எழுந்து வாழ்த்தொலி எழுப்பினர்.

மங்கலச்சேடியர் அவளுக்கு முன்னால் சென்றனர். அணுக்கச் சேடியர் பணித்தாலங்களுடன் அவளுக்கு இருபுறமும் அணி வகுத்தனர். அவள் வருகையை அறிந்து முன்னால் சென்ற நிமித்தச்சேடி தன் கையிலிருந்த வலம்புரிச்சங்கை வாய்பொருத்தி ஊத “இளவரசி எழுந்தருளுகிறார்” என்று அப்பால் முதுநிமித்திகன் கூவினான். அக்குரலை ஏற்று மேலும் இரு நிமித்திகர் குரலெழுப்பினர்.

அரண்மனைப்பெருமுற்றத்தில் பீஷ்மகர் அரச அணிக்கோலத்தில் வலப்பக்கம் அமைச்சரும் இடப்பக்கம் படைத்தலைவரும் நின்றிருக்க காத்திருந்தார். அவருக்கு இருபக்கமும் பட்டத்தரசியும் சிற்றரசியர் நால்வரும் நின்றிருந்தனர். முற்றத்தின் வடக்கு எல்லையில் வேதியரும் தெற்கு எல்லையில் மங்கலச்சூதரும் காத்திருக்க முகப்பில் நூற்றெட்டு குதிரைவீரர் ஒளிரும் வேல்களுடன் சேணம்தொட்டு நின்றிருந்தனர்.

மங்கல இசையையும் வாழ்த்தொலிகளையும் கேட்டு திரும்பி நோக்கிய பீஷ்மகர் இருபுறமும் எழுந்த செம்பந்தத்தழலில் தெரிந்த ருக்மிணியை நோக்கி அன்று முதலில் காண்பவர் என நெஞ்சு நடுங்கினார். அவள் கால்களை நோக்கி அவர் விழிகள் தாழ்ந்தன. கருக்குழி மணத்துடன் தான் கையில் எடுத்து முகத்தருகே தூக்கி நோக்கிய சிறு செம்பாதங்களின் சங்குசக்கரக் குறிகளை அகவிழிகளால் கண்டார்.