இந்திரநீலம் - 52

பகுதி ஒன்பது : அஞ்சிறை அன்றில் – 3

கார்காலத்து முதல் மழை வருவதை ருக்மிணி வரதாவில்தான் நோக்கினாள். தெற்கே வரதாவின்மேல் ஒளியுடன் எழுந்த வான்விளிம்பில் இளங்கன்னத்தில் ஒட்டிய மயிரிழை எனத்தெரிந்த கோடு அலைவுறுவதை காண முடிந்தது. விழிகூர்ந்தபோது அந்தக்கோடு அணுகிவருவதுபோல் தோன்றியது. தொடுவானம் வரதா ஒரு பட்டுப்பாய் எனச் சுருண்டு வருவதுபோல அணுகியது. பின் அவள் நீரின் ஓசையை கேட்டாள். வரதாவையும் கரையோரக் காடுகளையும் அறைந்தபடி மழை நெருங்கி வந்தது. அது வந்துவிட்டது என அவள் உணரும்போதே மாளிகையின் கூரை ஓலமிடத் தொடங்கியது. திரும்பி மறுபக்கம் பார்க்க கௌண்டின்யபுரியின் கூரையென அமைந்த அனைத்து மலர்த்தோட்டங்களையும் அறைந்து சாய வைத்தபடி மழை கடந்துசென்றது.

மழை ஒளி ஊடுருவும் மாட்டுக்கொம்புச் சீப்பு போல காட்டையும் தோட்டங்களையும் சீவிச் செல்வதாக எண்ணினாள். இல்லங்கள் மேல் நீர் ஓட கணநேரத்தில் நகர் நிறம் மாறியது. அடர்ந்து பின் நீர்த்திரையால் மூடப்பட்டு மங்கலாகியது. அவள் நோக்கியிருக்கையிலேயே நகரின் அனைத்து சாலைகளிலும் நீர் ஓடத்தொடங்கியது. படிப்படியாக இறங்கி வரதாவை நோக்கி சென்ற நகரின் தெருக்களிலிருந்து தெருக்களுக்கு பல நூறு நீரோடைகள் சிற்றருவிகளாக கொட்டின. பொன்னிறக் கணையாழிகள். கைவளைகள். நெளியும் பட்டுச்சால்வைகள்.

அணி செய்யப்பட்ட மங்கையின் உடல் போல் ஆகியது கௌண்டின்யபுரி. இளமங்கை கொள்ளும் உடல் நெளிவுகள். ஆடைக்குழைவுகள். நாணம்கொண்ட அவள் ஆடையை இழுத்து முழுமையாக மூடிக்கொண்டாள். அனைத்தும் மறைய தன் உப்பரிகையில் அமர்ந்திருந்த ருக்மிணியைச் சூழ்ந்து மழை மட்டுமே நின்றிருந்தது. மழை சொல்லும் ஒற்றைச் சொல் அன்றி எதையும் செவி அறியவில்லை. மழைதழுவிக்கரைக்கும் உப்புச்சிலையென ஆனாள். பிறிதிலாமலாகி நீரில் கரைந்து வரதாவில் சென்று மறைந்தாள்.

அமிதை வந்து வாயிலில் நின்று “உள்ளே வந்தமருங்கள் இளவரசி. இனி இன்று மாலை முழுக்க மழைதான்” என்றாள். அவள் உள்ளே சென்றபோது ஆவி எழும் இன்கடுநீரை மரக்குவளையில் அளித்தபடி “தங்களை ஈரம் ஒன்றும் செய்வதில்லை என்றாலும் கார்காலத்து முதல்மழை உடலுக்கு அவ்வளவு நல்லதல்ல” என்றாள். “இந்த மழையில் நகரில் அனைவரும் ஈரமாகத்தான் இருப்பார்கள்” என்றாள் ருக்மிணி. செவிலி நகைத்தபடி “இன்று சிறுவர் சிறுமியரை மழையில் இறங்க விடமாட்டார்கள் இளவரசி. நாளை புலரியில் புது வெள்ளம் கொண்டாடும் நாள். அதற்கு எழமுடியாது ஆகிவிடுமோ என்ற அச்சம் அனைவரிடமும் இருக்கும்” என்றாள்.

“புதுவெள்ள நீராட்டு விழா அறிவித்தாகிவிட்டதா?” என்றாள் ருக்மிணி. “நாள் குறித்துவிட்டார்கள். இந்த மழை சற்று ஓய்ந்ததும் மணியோசை வழியாக நகருக்கு அறிவிப்பார்கள்.” என்ற அமிதை “அது தெய்வங்களுக்கான அறிவிப்பு. இங்குள்ள மானுடரனைவருமே முன்னரே அறிந்து விட்டனர். நாளை புதுநீராட்டு என்று கன்றுகளும் அறிந்திருக்கும்” என்றாள். “வரதா செந்நிறம் கொண்டுவிட்டதா?” என்றாள் ருக்மிணி. “இப்போது வரதா இருப்பதே தெரியவில்லையே” என்று அமிதை நகைத்தாள். “மாலையில் மழை சற்று விலகுமென்றால் பார்க்கலாம் வரதாவின் செந்நிறத்தை.”

ருக்மிணியின் குழலை மரவுரியால் நீவித் துடைத்துக் கொண்டிருந்த இளம் சேடி “நீர்நிறம் மாறிவிட்டது என்றான் தெற்குவாயில் காவலன்” என்று சொன்னாள். அமிதை “எந்தக் காவலன்?” என்று கேட்டாள். “குகர்களின் குலத்துதித்த காவலன், கிருபன் என்று பெயர். கீழே தெற்கு அரண்மனைவாயிலில் காவல் நிற்கிறான்” என்றாள் சேடி. “என்ன சொன்னான்?” என்று அமிதை கேட்டாள். “என் கைபற்றி சாளரத்தருகே கொண்டு சென்று வரதாவில் புது வெள்ளம் வந்துவிட்டது காண் என்றான்” என்றாள் சேடி. “எப்படி அவனுக்குத்தெரியும்?” என்றாள் ருக்மிணி.

“சேற்று மண் மணம் எழுகிறது என்றான். என்னை சாளரத்தருகே நிற்கச்செய்து கண்களை மூடி இந்தக் காற்றை முகர்ந்துபார் என்று சொன்னான். முதலில் நீர் மணம். அதன் பின் ஈரம் கொண்ட தழைகளின் மணம். அதன் பின் கலங்கிய கரை சேற்றின் மணம். ஒவ்வொன்றையாக சித்தத்தில் எடுத்து தனித்து விலக்கிய பிறகு நான் பெருகும் வரதாவின் புதுச் சேற்று மணத்தை அறிந்தேன்” என்றாள் சேடி. “அது சற்று பழகிய சந்தனமும் சுண்ணமும் சேர்ந்த மணம் கொண்டிருந்தது.”

அமிதை ஐயத்துடன் அவளை நோக்கி “குகனிடம் உனக்கென்ன குலாவல்?” என்று கேட்டாள் அவள் தலை குனிய ருக்மிணி அவள் மெல்லிய கரத்தைப்பற்றி “ஆழத்து நறுமணத்தை உணரச்செய்பவன் நல்ல காதலனே” என்றாள். செவிலி அவளிடம் “உங்களுக்கு எவரிந்த நறுமணங்களை சொல்லித்தந்தனர்?” என்றாள். “இன்னமும் நான் அறிந்திராத காதலன் ஒருவன்” என்றாள் ருக்மிணி. “ஒவ்வொரு மணமாக விலக்கி தன் மணத்தை அறிவிப்பவன்.”

ஆடைமாற்றும் தன் அறைக்குள் சென்று பீடத்தில் அவள் அமர்ந்தபோது அரண்மனைப்பகுதியிலிருந்து மூச்சிரைக்க ஓடிவந்த சேடி அவளிடம் “புதுவெள்ளப் பெருவிழவின் அறிவிப்பு விடுத்தாகிவிட்டது இளவரசி. அரண்மனை அலுவலர் அனைவருக்கும் ஓலை அளித்துவிட்டாரகள். நகரின் பன்னிரு மையங்களில் மழை விட்டதும் பெருமணி ஒலிக்கும். நாளை முதல் ஒளி எழுந்ததும் மன்னர் நதி தொட்டு புதுநீர் வணங்கும் நிகழ்வை தொடங்கி வைப்பார்” என்றாள். அமிதை “ஓலை பொறித்துவிட்டார்களா?” என்றாள். “ஓலை எழுதப்படுவதை கேட்டேன்” என்றாள் அவள்.

ருக்மிணி முகம் மலர “தந்தை என்ன செய்கிறார்?” என்றாள். “அரசாணைகள் ஏட்டில் பொறிக்கப்படுகின்றன. அரசர் தனது அறைக்குள் மதுக்கோப்பையுடன் மழை பெய்வதை நோக்கி அமர்ந்து இசை கேட்கிறார். பட்டத்து இளவரசர்தான் ஆணைகளை பிறப்பித்தார்” என்றாள் சேடி. “அரசரின் முத்திரைக் கணையாழி அவரிடம்தான் இன்றுள்ளது” என்றாள் அமிதை. ருக்மிணி “நான் தமையனை இப்போதே பார்க்க விழைகிறேன்…” என்றாள்.

“இளவரசி, நேற்றே சேதி நாட்டு அரசர் சிசுபாலர் நகர் புகுந்துவிட்டார். பட்டத்து இளவரசர் இன்னும் சற்று நேரத்தில் சேதி நாட்டு அரசர் தங்கியிருக்கும் பிருங்கமலைச்சரிவின் வசந்தமாளிகைக்கு செல்லவிருக்கிறார். அவர்கள் இரவு அங்குதான் தங்குகிறார்கள். இரவு நெடுநேரம் மதுவருந்திக் களிப்பதாகவும் விறலியரையும் பரத்தையரையும் பாணர்களையும் அமைச்சர்கள் அங்கு அனுப்புவதாகவும் சொல்கிறார்கள்” என்றாள் சேடி. ருக்மிணி “சேதி நாட்டு அரசரா? அவர் வந்தது எனக்குத் தெரியாதே” என்றாள் .

“மழை கருத்த நாள் முதல் தாங்கள் இங்கில்லையே. இங்குசூழும் எச்சொல்லும் தங்கள் செவி கொள்ளவில்லை” என்றாள் அமிதை. “சேதிமன்னர் சிசுபாலர் வந்தது முறைப்படி நகருக்கு முரசறைவிக்கப்பட்டது.புறக்கோட்டை வாயிலுக்கே பட்டத்து இளவரசர் சென்று எதிரேற்று அவரை அழைத்து வந்தார். இந்நகரமே அவர் வந்திருப்பதை அறியும். நம் குடியினர் நாளை வெளியாகப்போகும் அறிவிப்பு ஒன்றுக்காக காத்திருக்கின்றனர்” என்றாள் சேடி.

“என்ன அறிவிப்பு?” என்றாள் ருக்மிணி. “தாங்கள் அறியாததா?” என்றாள் சேடி. “உண்மையிலேயே அறியேனடி. என்ன அறிவிப்பு?” என்றாள் ருக்மிணி. “தாங்கள் இவ்வுலகிலேயே இல்லை என்று எண்ணுகிறேன் இளவரசி” என்று செவிலி நகைத்தபடி சொன்னாள். “தாங்கள் அறிந்திருப்பீர்கள் என்றும், தங்களிடமிருந்த இந்தக் களிமயக்கு அதன் பொருட்டே என்றும் இங்கு அரண்மனைப்பெண்கள் அனைவரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.”

சேடியை நோக்கி சினந்து திரும்பி “என்னடி சொல்கிறாய்?” என்று சற்றே எரிச்சல் காட்டினாள் ருக்மிணி. “சிசுபாலருக்கு தங்களை கைப்பிடித்து அளிக்க அரசரும் பட்டத்து இளவரசரும் உளம் கொண்டிருக்கிறார்கள். அதைத்தான் இந்நகரத்தினர் அறிந்து உவகை கொண்டிருக்கிறார்கள்.” ருக்மிணி எளிய செய்தியொன்றை கேட்டவள் போல “சிசுபாலருக்கா? என்னிடம் எவருமே கூறவில்லையே?” என்றாள்.

“இளவரசி, விதர்ப்பம் இன்று மகதப்பேரரசின் துணை நாடு. தங்களுக்கான மணமகன் மகதத்தின் துணை அரசுகள் ஒன்றில் இருந்தே வரமுடியும். மகதத்தின் துணை அரசுகளில் வல்லமை மிக்கது சேதி நாடு. அதன் அரசர் சிசுபாலரும் தங்கள் தமையன் ருக்மியும் இளவயது முதலே தோளணைத்து வளர்ந்த தோழர்கள். அப்போதே தங்கள் கையை அவருக்கு இளவரசர் வாக்களித்துவிட்டதாக அமைச்சர் சொன்னார். தங்கள் தந்தைக்கும் அது உவப்பானதே” என்றாள் அமிதை. “நாளை புது வெள்ள நிகழ்ச்சி முடிந்ததும் அரசர் அவையெழுந்து மக்களுக்கு மண உறுதியை அறிவிப்பார் என்றும் அதன் பின் மூன்று நாட்கள் இந்நகரம் மலர் கொண்டாடும் என்றும் அரண்மனை அமைச்சர்கள் பேசிக் கொள்கிறார்கள்.”

ருக்மிணி எந்த அலையையும் எழுப்பாது நீரில் மூழ்கும் நங்கூரக்கல் என அச்செய்தி தன்னுள் செல்வதை உணர்ந்தாள். “தங்களுக்கு உவகை எழவில்லையா இளவரசி?” என்றாள் செவிலி. “இல்லை. அச்செய்தி எனக்குரியதல்ல என்று தோன்றுகிறது” என்றாள் ருக்மிணி. “முதலில் அப்படித்தான் தோன்றும். இனியவை எவையும் கேட்டதுமே உவகையை அளிப்பதில்லை. அவை நம் நெஞ்சச் சதுப்பில் விதையென புதைந்து முளைத்து எழுந்து மலர்விட்டு கனிவிட்டு இனிமை கொள்ள வேண்டும். இன்றிரவு முழுக்க இனித்து இனித்து நாளை மணமகளாவீர்கள்” என்றாள் சேடி.

“நான் என் உளம் கொண்ட ஒருவரை இதுவரை உருவம் கொண்டு நோக்கியதில்லை. எங்கோ எவரோ தன் இனிய காதல் விழிகளால் என்னை நோக்கிக் கொண்டிருக்கிறார் என்றறிவேன். அவரது ஒலியோ விழியோ நானறிந்ததில்லை. ஆனால் இப்போது சேதி நாட்டரசர் என்கிறீர்கள். நமது அரசு விழாக்களில் மும்முறை அவரை பார்த்திருக்கிறேன். அவரே என்று என் உளம் சொல்லவில்லை” என்றாள் ருக்மிணி.

அமிதை நகைத்து “அவரே என்று எண்ணி மறுமுறை நோக்குங்கள் இளவரசி, அவரே என அறிவீர்கள். இவனே கணவன் என்று எண்ணி பெண்டிர் ஆண்மகனை நோக்கும் கணம் ஒன்றுண்டு, அதுவே அவர்கள் காதல் கொள்ளும் தருணம்” என்றாள். பெருமூச்சுடன் எழுந்த ருக்மிணி “பார்க்கிறேன், என்னுள் வாழும் தெய்வங்கள் ஏது சொல்கின்றன என்றறியேன்” என்றாள்.

அமிதை அவள் குழலை கைகளால் மெல்ல நீவியபடி “அந்தத் தெய்வம் நம் குடியின் மூதன்னையரில் ஒருத்தியாக இருக்கட்டும் இளவரசி” என்றாள். ருக்மிணி திரும்பி நோக்க “விதர்ப்பம் இன்று பாரதவர்ஷத்தின் எந்த அவையிலும் மதிப்புடன் அமர்த்தப்படுவதில்லை இளவரசி” என்றாள். “இந்த நாடு தன்னிலையழிந்து நெடுநாட்களாகின்றது.” ருக்மிணி தலைகவிழ்ந்து எண்ணங்களைத் தொடர்ந்தவளாக அமர்ந்திருந்தாள்.

“நெடுங்காலம் முன்பு இந்நாடு பன்னிரண்டு மலைக்குடிகள் செறிந்து வாழ்ந்த காட்டுச்சரிவாக இருந்தது. காட்டில் வேட்டையாடியும் வரதாவில் மீன்பிடித்தும் வாழ்ந்த எளிய மக்களின் அரசர் எவருக்கும் கப்பம் கட்டவில்லை. ஏனென்றால் அவரை ஓர் அரசரெனக்கூட பிறர் அறிந்திருக்கவில்லை. வரதா வழியாக தண்டகாரண்யத்தில் இருந்து பிற ஊர்களுக்குச் செல்லும் வைதிகரால் வேள்விக்குரியதல்ல என்னும் பொருளில் விதர்ப்பம் என்று அழைக்கப்பட்ட பெயரே இதற்கென இருந்தது.”

அமிதை சொல்லலானாள். நூற்றெட்டாவது அரசர் பீமகரின் காலத்தில் தண்டகாரண்யத்தில் இருந்து அவ்வழியாக மரக்குடைவுப்படகில் தனியாகச் சென்ற குறுமுனிவரான அகத்தியர் பசிகொண்டு அதன் கரையில் ஒதுங்கினார். மலையிறங்கத்தொடங்கியபின் அவர் உணவு உண்டிருக்கவில்லை. கரையில் நீரில் தூண்டிலிட்டு மீன்பிடித்துக்கொண்டு ஒரு சிறுமி அமர்ந்திருப்பதைக் கண்டார். காலைவெளிச்சத்தில் அவள் பொன்வண்டுபோல தோன்றினாள். அருகணைந்த அவரைக் கண்டதும் அவள் எழுந்து தன் இரு கைகளையும் கூப்பி அவர் அடிகளை வணங்கி “எங்கள் மண் தங்கள் அடிகளால் தூய்மையடைந்தது முனிவரே” என்றாள்.

“எனக்கு இப்போதே உணவளி” என்று அகத்தியர் ஆணையிட்டார். அவள் அருகே சூழ்ந்திருந்த காட்டுக்குள் ஓடிச்சென்று மலைக்கனிகளையும் கிழங்குகளையும் சேர்த்துக்கொண்டுவந்தாள். அவற்றை சற்றே உண்டு சுவைநோக்கி தேர்ந்து அவருக்குப் படைத்தாள். பசியில் விழிமயங்கும் நிலையிலிருந்த அகத்தியர் அக்கனிகளை உண்டார். தலைதொட்டு “மாமங்கலை ஆகுக!” என அவளை வாழ்த்தி மீண்டும் படகிலேறிக்கொண்டார்.

காசியைக் கடந்து கங்காத்வாரத்தை அடைந்த அகத்தியர் அங்கே ஒரு பேராலமரத்தின் அடியில் அமர்ந்து தான் எண்ணிவந்திருந்த பரிபூரணம் என்னும் பெருந்தவத்தை ஆற்றினார். பன்னிரண்டு ஆண்டுகால அருந்தவத்தின் முடிவில் ஆறு சக்கரங்கள் சுழன்றெழுந்து மையம் திறக்க நெற்றிப்பொட்டில் மலர்ந்த ஆயிரமிதழ்த்தாமரை விரிந்தபோது அதில் இளஞ்சூரியன் போல கண்கூச ஒளிவிடும் இரு மணிச்சிலம்புகளை கண்டார். ‘அன்னையே நீ யார்?’ என்றார். ‘உன் நெஞ்சமர்ந்த திரு நான். ககனம் நிறைக்கும் பொலி. மூவரையும் தேவரையும் பெற்ற அன்னை’ என்று அவருள் எழுந்த ஒளிப்பெருவெளியில் ஒலித்த குரல் சொன்னது.

‘நான் என்ன செய்யவேண்டும் அன்னையே?’ என்றார் அகத்தியர். ‘என் அழகை ஆயிரம் பெயர்களென பாடு. உன்னுள் உறையும் பெண்ணெனும் நான் எழுந்து புடவி பெருகுவேன். என் ஒளியால் நீ நிறைவாய்’ என்றாள் அன்னை. ‘அன்னையே, உன்னழகை காட்டுக! நான் அதை சொல்லென ஆக்குவேன்’ என்றார் அகத்தியர். ‘மைந்தா, மண்ணிலுள்ள பெண்களிலேயே மானுடவிழி என்னை காணமுடியும்’ என்று அன்னை சொன்னாள். ‘நான் பெண்ணென எவரையும் கண்டதில்லை அன்னையே’ என்று அகத்தியர் சொன்னார்.

‘கண்டிருக்கிறாய். அன்றுதான் உன் அகத்தை நிறைத்திருந்த கடுந்தவமெனும் முதுமரத்தில் இளந்தளிர் எழுந்தது’ என்று அன்னையின் வாக்கு ஒலித்தது. அது எவர் என்று அங்கே அமர்ந்து அகத்தியர் தன்னை நோக்கி உசாவினார். கங்கையில் நீரள்ளக் குனிந்தபோது அலைகள் முகங்களாக இருந்தன. விழிவிரித்து நோக்கியபோது இலைகள் முகங்களாக இருந்தன. விண்மீன்கள் முகங்களாக தெரிந்தன. பன்னிரண்டாவது நாள் அவர் எரிவிண்மீன் ஒன்று வான்கிழித்துச் சரிவதை கண்டார். அக்கணம் அகம் மின்ன அந்தப்பெண் எவளென்று தெளிந்தார்.

விதர்ப்ப மண்ணுக்கு அவர் மீண்டுவந்தபோது அவர் வரதாவின் கரையில் கண்ட அந்தச்சிறுமி பதினெட்டு வயதான மங்கையென்றாகியிருந்தாள். மன்னர் பீமகரின் ஒரே மகள். பெண்ணுக்குரியவை என நிமித்திகர் வகுத்த ஏழு அழகுகளும் கொண்டவள் என்பதனால் அவளை சுமுத்ரை என்று பெயரிட்டழைத்தனர். அவளை தங்கள் குடியில் எழுந்த மூதன்னை வடிவென வணங்கினர். அவள் மண்ணில் வைக்கும் காலடியெல்லாம் தங்கள் முடிசூடும் மலரென உணர்ந்தனர்.

அரசரின் மாளிகை வாயிலில் வந்து நின்ற அகத்தியர் “பீமகரே, உமது மகளை என் அறத்துணைவியென அடையவந்துள்ளேன்” என்றார். பீமகர் திகைத்து பின் அஞ்சி ஓடி வந்து வணங்கி “முனிவரே, அவள் இவ்வூரின் இளவரசி. ஏழழகு கொண்ட இளங்கன்னி. என் குடியின் அத்தனை இளையோராலும் அமுதுக்கு நிகரென விரும்பப்படுபவள். தாங்களோ முதிர்ந்து உடல் வற்றிய முனிவர். பெண்கள் விரும்பாத குற்றுடல் கொண்டவர். என் மகளை நான் தங்களுக்கு அளிப்பேன். என் சொல்லை அவள் தட்டவும் மாட்டாள். ஆனால் அவளுக்குள் வாழும் கன்னி என்றும் உங்களை வெறுத்தபடியே உடனுறைவாள்” என்றார்.

“அரசே, அவள் ஊழென்ன என்று அறிந்தே வந்தேன். அவளை அழையுங்கள். என்னுடன் வர அவள் விழைந்தால் மட்டுமே கைபற்றுவேன்” என்றார் அகத்தியர். பீமகர் தன் ஏவலரிடம் செய்தியைச் சொல்லி அனுப்பினார். அகத்தியர் தன் குற்றுடலுடன் வந்து அரண்மனை முற்றத்தில் நின்றிருப்பதை சுமுத்ரை தன் இல்லத்தின் பின்னாலிருந்த மகிழமரத்தடியில் நின்று நோக்கினாள். கைகூப்பியபடி வந்து முனிவர் முன் நின்று “தங்களுக்காகவே இச்சிற்றூரில் இத்தனை ஆண்டுகள் தவமியற்றினேன் இறைவா” என்றாள்.

“நீ உன் கன்னியுள்ளத்தின் ஆழத்திலும் பிறிது எண்ணமாட்டாய் என இவர்கள் அறியச்செய்” என்றார் அகத்தியர். சுமுத்ரை இரு கைகளையும் கூப்பி மூதன்னையரையும் வணங்கி தன் ஏழு அழகையும் அக்கணமே துறக்கவேண்டுமென வேண்டிக்கொண்டாள். அனைத்தழகையும் இழந்து வற்றி ஒடுங்கிய உடல்கொண்டு அங்கே நின்றாள். பீமகரும் குடிமூத்தாரும் கைகூப்பியபடி அவள் காலடியில் விழுந்து வணங்கினர். அவளே தங்கள் மூதன்னையரெனும் காடு பூத்துக்கனிந்து அளித்த விதை என தெளிந்தனர்.

குடிமூத்தார் அவள் கைபற்றி முனிவருக்கு அளித்தனர். மங்கலத்தாலியை ஏற்று ஏழு அடிவைத்து சுமுத்ரை அவருக்கு தவத்துணைவி ஆனாள். ஏழுமுத்திரைகளையும் துறந்த அவளை அவர் லோபாமுத்ரை என்று அழைத்தார். அவளுடன் மீண்டும் கங்காத்வாரத்தை அடைந்தார். அந்த ஆலமரத்தின் அடியிலேயே ஒரு சிறுகுடில் கட்டி அவளுடன் அமைந்தார். “கன்னியே, உன்னை என் தவத்துணையாகவே கொண்டேன். காமம் கடந்து கருவென உறையும் மெய்மையை காண்பதை மட்டுமே இலக்கெனக் கொள்பவன் நான்” என்றார். “ஆம், நான் அதற்கென்றே துணைவந்தேன்” என்று லோபாமுத்ரை சொன்னாள்.

கங்கைக்கரை ஆலமரத்தடியில் தன்னை முற்றொடுக்கி அமர்ந்து உள்ளுசாவினார் அகத்தியர். மூன்றாண்டுகாலம் முயன்றும் மூலாதாரமே திறக்கவில்லை என்று உணர்ந்தார். கண்ணீருடன் எழுந்தோடி கங்கையின் கரையில் சென்று நின்று நெஞ்சுருகிக் கேட்டார் ‘அன்னையே, என் உள்ளம் ஒரு சொல்லேனும் இல்லாமல் பாழ்வெளியாகக் கிடப்பதேன்? எங்கு நான் என் விதைக்கருவூலத்தை இழந்தேன்?’

கங்கை அலைகளென சென்றுகொண்டிருந்தது. விம்மியபடி அவர் மரத்தடியில் நின்றிருக்கையில் நெஞ்சுருகும் உணர்வுகொண்ட ஒரு பாடலை கேட்டார். இனிய கன்னிக் குரல் அதுவென்று உணர்ந்து அத்திசை நோக்கி சென்றார். அங்கே நீரலைகளில் ஏழழகு கொண்ட இளையவள் ஒருத்தி பாடியபடி நீராடுவதை கண்டார். அவளை எங்கோ கண்டதுபோல் உணர்ந்தார். மூன்று செய்யுட்கள் கொண்ட அப்பாடலையும் அவர் நன்கறிந்திருந்தார்.

நீராடி எழுந்த இளங்கன்னி ஆடையற்ற உடலில் நீர் வழிய வந்து கரையேறி அங்கிருந்த மரவுரியை எடுத்து அணிந்துகொண்டதும் முதுமை கொண்டு அழகுகளை இழந்து தன் துணைவி லோபாமுத்ரை ஆவதை கண்டார். திகைத்து அருகே ஓடிச்சென்று “நீ இப்போது பாடிய அப்பாடல் எது?” என்றார். “இறைவா, தாங்கள் தன்னைமறந்து கடுந்தவமியற்றியிருக்கையில் தங்கள் உதடுகள் உச்சரித்த செய்யுட்கள் அவை” என்றாள் லோபாமுத்ரை. “மீண்டும் சொல் அவற்றை” என்று அவர் கேட்டார். அவள் அஞ்சியபடி அவற்றை சொன்னாள்.

அவை காதலுக்காக ஏங்கும் கன்னியொருத்தியின் வரிகள் என்று அவர் உணர்ந்தார். அவ்வரிகள் தன்னுள் வாழும் கன்னி ஒருத்தியின் குரல் எனக்கண்டு வியந்து சென்று கங்கை நீரை நோக்கினார். அங்கு தன் முகம் கொண்ட அழகிய இளநங்கை ஒருத்தியின் பாவை புன்னகைக்கக் கண்டு சொல்லிழந்து நின்றார். லோபாமுத்ரையை அருகே அழைத்து “நோக்கு, இவளை நீ கண்டிருக்கிறாயா?” என்றார். அவள் “ஆம் இறைவா, நான் நீரில் பார்க்கையில் அழகிய இளைஞன் ஒருவனை என் தோற்றத்தில் காண்கிறேன். அவன் கனவிலெழுந்த கன்னி இவள்” என்றாள் லோபாமுத்ரை.

“இப்பெண்ணின் அழகை அவ்விளைஞன் உரைக்கட்டும்” என்றார் அகத்தியர். லோபாமுத்ரை “செந்தூரச் செந்நிறத்தவள். மூவிழியள். மணிகள் செறிந்த முடிகொண்டவள். விண்மீன் நிரையென புன்னகைப்பவள்” என தொடங்கி நூறு பெயர்களாக அவ்வழகை பாடினாள். ஒவ்வொரு பெயருக்கும் ஒருமலர் என உடலில் பூக்க பேரழகு கொண்டு தன் முன் நின்ற அவளை நோக்கி எஞ்சிய தொள்ளாயிரம் பெயர்களை அகத்தியர் பாடினார். அம்பிகையின் அழகு ஆயிரம் பெயர்மாலையாக விரிந்தது அவ்வாறுதான். விண்ணில் ஒரு பொன்முகிலாக அன்னையின் புன்னகை எழுந்து அவர்களை வாழ்த்தியது.

“கங்காத்வாரத்தில் அகத்தியர் அவளுடன் பெருங்காதல் கொண்டு வாழ்ந்தார். அவர்களுக்கு அழகிய இளமைந்தன் ஒருவன் பிறந்தான். அவனுக்கு திரிதஸ்யு என்று பெயரிட்டழைத்தனர். தன் அருந்தவத்துணைவியுடன் அங்கே அமர்ந்து தவநிறைவடைந்தார் அகத்தியர்” என்று அமிதை சொன்னாள். “லோபாமுத்ரையால் நம் குடி பெருமைகொண்டது. நம்மை ஷத்ரியர்களென பிறர் ஏற்றுக்கொண்டனர். பெருங்குடிகளில் இருந்து நம் அரசர் பெண்கொண்டனர். நம்குடியில் பிறந்த இளவரசிகள் கங்காவர்த்தமெங்கும் சென்று முடிகொண்டனர்.”

“பெரும்புகழ்கொண்ட தமயந்தி பிறந்த குலம் இது இளவரசி” என்று அமிதை சொன்னாள். “இன்று சீரிழந்து சிறுமைகொண்டு நின்றிருக்கும் நிலம் இது. இழந்த பெருமையை இது மீட்பதென்பது தங்கள் சொல்லிலேயே உள்ளது. பன்னிரு தலைமுறைகளுக்குப்பின் பாரதவர்ஷத்தின் பெருவீரர்களில் ஒருவர் தங்கள் தமையரென இக்குடியில் பிறந்திருக்கிறார். இழிவகற்றி இந்நிலத்தை முதன்மையென அமர்த்த உறுதி கொண்டிருக்கிறார். அவருக்குத்தேவை நண்பரும் படையினரும். அதை அளிக்கும் சொல் உள்ளது தங்கள் உதடுகளில்தான்.”

ருக்மிணி “தமையன் இச்சொற்களை என்னிடம் சொல்லும்படி ஆணையிட்டாரா?” என்றாள். “ஆம் இளவரசி. சிசுபாலரின் படையும் துணையும் இருந்தால் மகதத்திற்கு நிகர்நிற்க தன்னால் முடியுமென எண்ணுகிறார். அதை தங்களிடம் நேரில் சொல்ல அவர் விழையவில்லை. அது முறையல்ல என்று அவர் அறிவார். தங்கள் சொல்லெனும் வாள் தன் கையில் அமைந்தால் படைக்களத்தில் நிமிர்ந்து நிற்கமுடியுமென்று உணர்த்தும்படி என்னிடம் ஆணையிட்டார்” என்று அமிதை சொன்னாள்.

வெளியே மழை துளிவிட்டு ஒலிசொட்டத்தொடங்கியிருந்தது. மரக்கிளைகள் அமைதி கொள்ள யாழ்க்கம்பிகள் என கூரையிலிருந்து நின்றிருந்த மழைச்சரடுகள் அறுபட்டு நீள் துளிகளாகவிழுந்தன. அவள் இடைதளர நடந்து சென்று சாளரத்தைப் பற்றியபடி மழையை நோக்கி நின்றாள். தொலைவிலெங்கோ மரக்கிளைகள் அசைந்தன. “மழை மறைகிறது” என்றாள் செவிலி. “இன்னும் சற்று நேரத்தில் பெருமணிகள் அறிவிப்பை வெளியிட்டுவிடும்.”

ருக்மிணி திரும்பி அறையைக் கடந்து மறுபக்கம் சென்று வரதாவை நோக்கினாள். நீர்ப்பெருக்கின்மேல் நின்றிருந்த மழைப்பெருக்கு மறைந்திருந்தது. முகில்களின் உள்ளே எங்கிருந்தோ கசிந்த ஒளி விளிம்புகளில் பரவியது. வரதாவின் ஆழத்திலிருந்து மணி வெளிச்சமொன்று மேலே வந்து நீரலைகளின் மெல்லிய தோல்பரப்பை மிளிரச்செய்தது. கூரை விளிம்புகள் அடங்கின. ஒவ்வொரு துளியும் ஒளி கொண்டது. தொலைவில் கோட்டை முகப்பின் பெரிய மணி மும்முறை மும்முறை என சீராக ஒலிக்கத் தொடங்கியது. அதன் பின் நகரத்தின் மணிகளும் ஒவ்வொன்றாய் அந்தத் தாளத்தில் ஒலியெழுப்பின. புதுப்பெருக்கு அறிவிப்பைக் கேட்டு நகரமெங்கும் உவகையொலி பொங்கி எழுந்தது.

அந்த மணியோசை கேட்ட அக்கணத்தில் ருக்மிணி அறிந்தாள், தன் கொழுநன் சிசுபாலன் அல்ல என்று. அதை எவரோ அவளருகே நின்று சொல்லின்றிச் சொன்னதுபோல திடுக்கிட்டுத் திரும்பி நோக்கினாள். அவனல்ல அவனல்ல என்று சித்தம் சொல்கொண்டது. அவன் எளியவன். அவள் காலடியைப் பணியும் வெறும் மானுடன். பெருவிழைவு ஒன்றாலேயே அவள் கண்படும் பேறு பெற்றவன்.