இமைக்கணம் - 11

wild-west-clipart-rodeo-31இளைய யாதவர் பீஷ்மரை “வருக, பிதாமகரே” என்று அழைத்துக்கொண்டு முன்னால் நடந்தார். தாடியைக் கசக்கியபடி தயங்கி நின்றிருந்த பீஷ்மர் பின்னர் தொடர்ந்துசென்றார். அவர்கள் இருண்ட முற்றத்தில் இறங்கி மரங்களினூடாக மெல்லிய தடமாகத் தெரிந்த ஒற்றையடிப்பாதையில் நடந்தனர். இளைய யாதவர் திரும்பவோ சொல்லெடுக்கவோ செய்யாமல் நேர்கொண்ட நோக்குடன் செல்ல பீஷ்மர் அவ்வப்போது நின்று அந்த இடத்தை கூர்ந்தபின் தொடர்ந்தார். அவர்களின் காலடியோசைகள் சூழ்ந்திருந்த இருண்ட மரக்குவைகளில் பலவாறாக எதிரொலித்து உடன் பலர் தொடர்வதுபோல் செவிமயக்கு கூட்டின.

கோமதியின் கரையை அடைந்ததும் இளைய யாதவர் நின்றார். அங்கே நீர்ப்பரப்பிலிருந்து எழுந்த மெல்லொளி இலைகளை நெய்மிளிர்வு கொள்ளச்செய்திருந்தது. அடிமரங்களில் நீரொளி அலையடித்தது. பீஷ்மர் பெருமூச்சுடன் நிற்க இளைய யாதவர் அங்கிருந்த சிற்றாலயம் ஒன்றை அடைந்தார். ஓங்கி நின்றிருந்த நாவல்மரத்தின் அடியில் நீட்டியிடப்பட்ட இரண்டு கற்பீடங்களின் மேல் சிறிய குத்துக்கற்களாக தெய்வங்கள் அமர்ந்திருந்தன. மேலிருந்த கல்லில் ஏழு வெண்ணிற நாகங்கள், கீழிருந்ததில் மேலும் ஏழு கருநிறநாகங்கள். அவற்றுக்கு அன்றும் புதிய மலர்மாலை இடப்பட்டிருந்தது. மேலிருந்து விழுந்த சருகு ஒன்று ஒரு நாகத்தின்மேல் அமைந்திருந்தது.

அவர்கள் அணுகியதை உணர்ந்து மரத்தின்மேலிருந்த கூகை ஒன்று குழறியபடி சிறகடித்தெழுந்தது. இளைய யாதவர் “பிதாமகரே, எதையும் தெய்வமென்று எண்ணலாம். எண்ணும் வடிவில் எழுவன அவை” என்றார். “மானுடரின் உச்சங்களிலும் தெய்வங்களே எழுகின்றன.” அவர் சொல்வது விளங்காமல் பீஷ்மர் நோக்கி நின்றார். இளைய யாதவர் “இங்குள்ளன ஏழும் ஏழுமென பதினான்கு தெய்வங்கள். நீங்கள் விடைகொள்ளவேண்டிய பதினான்கு நிலைகள் என இவற்றை கொள்க!” என்றார்.

பீஷ்மர் அவற்றை நோக்கியபடி சற்றே அணுகி “நாகங்களா?” என்றார். “ஆம், நாம் விடைகொள்ளவேண்டியவை. எப்போதும் நம்மை ஓசையின்றி பின்தொடர்பவை, மொழியின்றி உரையாடுபவை, இமைக்காது நோக்கிக்கொண்டிருப்பவை, சுருண்டு பதுங்கும் கலையறிந்தவை, நஞ்சு கொண்டவை” என்றார் இளைய யாதவர். “வெண்ணிற நாகங்கள் விண்ணுக்குரியவை. கருநிற நாகங்கள் மண்ணுக்கு. பகலும் இரவும் என அவை ஒன்றை ஒன்று நிகர்செய்கின்றன.” பீஷ்மர் தாடியை உருவியபடி நோக்கி நின்றிருக்க இளைய யாதவர் தொடர்ந்தார் “ஊழ்கம் பருந்து, ஊழ்வினை நாகம்.” பீஷ்மர் திரும்பி நோக்கி தலையசைத்தார்.

இளைய யாதவர் அங்கே சூழ்ந்திருந்த காட்டுச்செடிகளின் மலர்களைக் கொய்து பேரிலை ஒன்றில் கொண்டுவந்து நாகங்களின் முன் வைத்தார். “பிதாமகரே, இங்குள்ள நாகங்களிடம் விடைபெற்றுக்கொள்க! மும்முறை மலரள்ளி இட்டு செல்கிறேன் செல்கிறேன் என்று கூறுக! வாழ்த்துரைக்கும் நாகத்தின் சொல் என இந்த மரத்திலிருந்து மலரோ இலையோ உதிரும். கூறுவதற்கேதுமிருந்தால் அவர்களே தோன்றவும் கூடும். தடைநிற்கும் நாகம் படமெடுத்து எழுந்து முன்வந்து நிற்கும். அத்தடையை நிகர்த்தி விடைபெற்று செலவு கொள்க!”

பீஷ்மர் “ஆம்” என்றார். “ஒவ்வொருவருக்கும் என்ன கடன் உள்ளதென்று கண்டு ஈடுசெய்வேன். இளைய யாதவரே, இப்பிறவியில் எனக்கிருக்கும் கடன்கள் சிலவே. இந்நீண்ட வாழ்நாளை கடன் நிகர்த்தவே செலவிட்டேன் என்பதனால் முற்பிறவிக்கடன்களும் எனக்கு எஞ்சுவது அரிது. கனிந்து நெட்டற்று நின்றிருக்கிறேன், இங்கிருந்து விடுதலைகொள்ள இயலுமென்றே எண்ணுகிறேன்.” இளைய யாதவர் தலைவணங்கி “தனிமையில் அது நிகழட்டும். நீங்கள் கிளம்ப முடிவெடுத்தால் மரவுரியுடன் நான் வந்து நிற்பேன். அப்பால் காத்திருக்கிறேன்” என்று அகன்றார்.

wild-west-clipart-rodeo-31பீஷ்மர் நாகங்களை நோக்கியபடி நின்றார். பின்னர் குனிந்து மூன்று மலர்களை எடுத்து முதல் வெண்நாகத்தின் முன்னால் மும்முறை இட்டு “எந்தையே, எனக்கு விடைகொடுங்கள்” என்றார். கல்லின் நிழல் நீண்டு நீரொளிநிழலில் நெளிவுகொண்டது. பின் சிறிய வெண்ணிற நாகமென அது படம் தூக்கி எழுந்தது. அதன் விழிகளை நோக்கியபடி பீஷ்மர் கைகூப்பி நின்றார். அதன் குரலை செவியிலாது கேட்டார். “மைந்தா” என்று நாகம் அழைத்தது. “என் பெயர் உசகன், கனகை என்னும் பேரன்னையின் மைந்தனாகிய சிறுநாகம்.” பீஷ்மர் மெல்லிய சிலிர்ப்புடன் “ஆம், அந்தக் கதையை கேட்டிருக்கிறேன்” என்றார்.

“என் அன்னை நூறு மைந்தரை பெற்றாள். நூற்றுவருக்கும் தன் விழைவை பகிர்ந்தளித்தாள். இறுதித்துளியான எனக்கு அளிக்கவருகையில் அத்தனை அளித்தும் தன் விழைவு குன்றாமல் அப்படியே எஞ்சுவதை கண்டாள். அதை கைவிடாமல் அங்கிருந்து அகலமுடியாதென்று உணர்ந்தமையால் அனைத்தும் உனக்கே என ஒற்றைச் சொல்லில் அதை அளித்து அவள் மீண்டாள். நான் அன்னையின் விழைவை முற்றிலும் பெற்றவனானேன்.”

“என் உடன்பிறந்தார் மலர்தேடிச்சென்று குடிகொண்டனர். நான் மண்ணில் மலர்வதிலேயே ஒளியும் அழகும் கொண்ட மாமலர் ஒன்றை விழைந்தேன். அதில் புகுந்து எரிந்தழிந்தேன். என் விழைவு மீண்டும் பிறந்தது. அஸ்தினபுரியில் பிரதீபரின் மைந்தனாகிய சந்தனுவானேன்” என்றது நாகம். “சிற்றகலில் காட்டெரி எழுந்ததுபோல என் உடல்கொள்ளா பெருவிழைவு சூடி எரிந்தழிந்தவன் நான். இன்று அஸ்தினபுரியில் நிகழ்வன அனைத்தும் என் விழைவை விதையெனக் கொண்டு எழுந்தவை.”

அவர் சந்தனுவை கண்டார். அவர் விழிகள் துயர்கொண்டிருந்தன. “இங்கு மூச்சுலகில் காத்திருக்கிறேன். சுகாலன் என்னும் கந்தர்வன் என்னிடம் சொன்னான், விதைத்ததை அறுவடை செய்யாமல் முழுமை அமையாது என்று. நான் காத்திருப்பது அதற்காகவே. குருஷேத்ரக் குருதிவெளியில் என் விழைவுகள் இருபால் பிரிந்து நின்று போரிட்டு குருதிசிந்தி விழுந்தழிவதை நான் பார்த்தாகவேண்டும்.” பீஷ்மர் “நான் அதை தடுக்கவே நாளும் முயன்றேன், தந்தையே” என்றார். “நீ உன் தந்தையின் மீட்பை தடைசெய்தாய். மூன்று தலைமுறைக்காலம் அதை ஒத்திவைத்தாய்” என கசந்த புன்னகையுடன் சந்தனு சொன்னார்.

பீஷ்மர் குளிர்கொண்டவர் என நடுங்கிக்கொண்டிருந்தார். “என்னில் எரிந்த தீ இங்கே என்னை சூழ்ந்திருக்கிறது. எரிதழலால் ஆன காட்டில் கனல்பீடத்தில் அமர்ந்திருக்கிறேன்” என்றார் சந்தனு. “கையால் தொட்டறியாத ஏழு மைந்தரால் சூழப்பட்டிருக்கிறேன். வேறெங்கோ வஞ்சம் கொண்ட மூத்தவர் தேவாபி என்னை நோக்கிக்கொண்டிருக்கிறார். மைந்தா, என்னை முற்றிலும் மறந்துவிட்ட மூத்தவர் பால்ஹிகரால் மேலும் இரக்கமின்றி தண்டிக்கப்பட்டிருக்கிறேன்.”

பீஷ்மர் சொல்லிழந்து கைகூப்பினார். “நன்று, அது மைந்தனாக உன் கடன்” என அவர் தொடர்ந்தார். “நான் உன்னை பெருநோன்புக்கு தள்ளினேன். என் பெருவிழைவை நிகர்செய்ய நீ விழைவறுத்தவன் ஆனாய். புவியின் நெறி அது. வீரனின் மைந்தன் கோழை, அறிஞனின் மைந்தன் எளியோன், செல்வன் ஏழைக்கு தந்தையாகிறான்” என்ற சந்தனு “நீண்ட வாழ்நாளை எனக்கென அளித்தாய். இனியெதையும் நான் கோரவியலாது, நீ அனைத்தையும் விட்டுச்செல்வதே இயல்பானது. உன்னை வாழ்த்துகிறேன்” என்றார்.

பீஷ்மர் கைகளைக் கூப்பியபடி “பொறுத்தருள்க தந்தையே, நான் உங்கள்மேல் சினம் கொண்டதுண்டு. நனவிலல்ல, கனவில்” என்றார். “ஆம், நான் அறிவேன். இங்கே இந்தத் தழலில் குளிர்காற்றென்று வந்து தொடுவது அச்சினமே.” பீஷ்மர் “தந்தையே, என்ன சொல்கிறீர்கள்?” என்றார். “அப்போதுதான் நீ என் மைந்தனாக இருந்தாய்” என்றார் சந்தனு. “தந்தையே” என்று பீஷ்மர் கூவ புன்னகையுடன் அவர் முகம் மறைந்தது. மரத்திலிருந்து ஒரு பழுத்திலை உதிர்ந்து சுழன்றிறங்கியது.

“தந்தையே, நான் உரைத்த அச்சொல் இங்கே எஞ்சியிருக்கிறது” என்றார் பீஷ்மர். மீண்டும் உரக்க “தந்தையே, நீங்கள் என் மேல் சினம்கொள்ளாமல் இந்தக் கடன் முடிவதில்லை” என்றார். இருள்தான் அவர்முன் நின்றிருந்தது. அவர் குனிந்து அந்த இலையை எடுத்துப்பார்த்தார். புரியாதவராக அதை திருப்பித்திருப்பி நோக்கியபின் மீண்டும் கல்நாகத்தின் அடியில் வைத்து கைகூப்பினார்.

பீஷ்மர் சற்றுநேரம் தயங்கியபின் மீண்டும் மலர்களை எடுத்து மும்முறை உளம்நேர்ந்து இட்டு வணங்கினார். நாகநிழலில் இருந்து கங்கையன்னை எழுந்தாள். ஓசையில்லாத நெளிவுடன், கலுழ்ந்த விழிகளுடன் நின்றாள். “அன்னையே…” என்றார் பீஷ்மர். அன்னையின் விழிகள் தன்னை நோக்காமல் அலையழிவதை கண்டார். அவை துழாவி நோக்குவதென்ன என்று அவர் சுற்றிலும் நோக்கினார். “அன்னையே! என்னை நோக்குக, அன்னையே!” என்றார். அவள் “நீர்ப்பெருக்கு!” என்றாள். “அன்னையே, நான் உங்கள் எட்டாவது மைந்தன். கொல்லப்படாது எஞ்சியவன்!” என்றார் பீஷ்மர்.

“கொல்லப்படவில்லை… கொல்லப்படவில்லை” என்று அவள் மிக மெல்லிய ஒலியில் முணுமுணுத்தாள். அவள் முகத்தை நோக்கி “எண்மருக்கும் என எஞ்சியவன் நான். எட்டு வாழ்க்கைகளை இங்கு வாழ்ந்தேன்” என்றார். “எட்டு துயர்களை, எண்மடங்கு பொறுப்புகளை, எட்டாயிரம் மடங்கு சொற்களை சுமந்தேன், அன்னையே. என் கடன் இனியில்லை.” அன்னை “பெருக்கு… பெரும்பெருக்கு…” என்றாள். அவள் கண்கள் நிலையழிந்து அலைபாய்ந்தன. அழுகையிலென உதடுகள் நெளிந்தன.

அவர் அவள் ஆடையின் மடிப்பை பார்த்தார். அதிலிருந்து ஆமைக்குஞ்சு ஒன்று ஊர்ந்து மேலேறியது. அவள் உடலெங்கும் ஆமைக்குஞ்சுகள் பரவிக்கொண்டிருந்தன. “அன்னையே, இனியேனும் எனக்கு விடுதலை கொடுங்கள்.” கங்கை “நான் கைவிடுவதில்லை… உண்டுவிட்டேன்… விழுங்கி மீண்டும் வயிற்றுக்குள் செலுத்தினேன்…” என்றாள்.

அவள் உருவத்திற்கு மேலாக ஒரு மலர் விழுந்து மண்ணை அடைந்தது. அதை விழி நோக்கியதுமே அவள் தோற்றம் மறைந்தது. அவர் திகைத்தவராக நோக்கி நின்றிருந்தார். “அன்னையே!” என நலிந்த குரலில் அழைத்தார். “நான் செய்யவேண்டியதென்ன?” மீண்டும் “நான் முழுமை செய்யவில்லையா? என்னிடம் சொல்ல ஒரு சொல்லும் உங்களிடமில்லையா?” என்றார். மீண்டுமொரு மலர் அவர் தலைமேல் விழுந்தது. அவர் நெஞ்சு விம்ம கண்கள் கலங்க தன்னை அடக்கிக்கொண்டார். அந்த மலரை எடுத்து விழிகளில் ஒற்றிக்கொண்டு நாகத்திற்கு படைத்தார்.

மீண்டும் மலர் எடுத்து அவர் அடுத்த நாகத்தின்மேல் இட்டு வணங்கினார். அவர் விழிமுன் நாகச்சிலை கல்லென்றே நின்றிருக்க நீரொளிநிழலில் மரக்கிளைகள் ஆடிக்கொண்டிருந்தன. தன் மேலும் அசைந்த நிழலில் பிற அசைவுகளைக் கண்டு அவர் திரும்பி நோக்கினார். ஆடையற்ற ஏழு குழவியர் அவரைச் சூழ்ந்து நின்றிருந்தார்கள். திடுக்கிட்டவராக அவர் சற்றே விலகித்திரும்பி அவர்களை நோக்கினார். குழவியர் விழிகளில் அத்தனை துயர் எழ இயலுமா என உள்ளம் திகைத்தது.

“எங்களை நீ அறிவாய்” என்றது முதல் குழந்தை. “இல்லை, நான் எப்போதும் உங்களை உணர்ந்துள்ளேன், அறிந்ததில்லை” என்றார் பீஷ்மர். “எட்டு வசுக்களில் முதல்வன் நான். என் பெயர் தரன், என் இளையோனாகிய இவன் பெயர் துருவன். அவன் சோமன், நான்காமவன் அஹஸ்.” ஐந்தாவது மைந்தன் முன்னால் வந்து இரண்டு வெண்பற்கள் எழுந்த வாய் தெரியச் சிரித்து “என் பெயர் அனிலன். என் இரட்டையனாகிய இவன் அனலன். இளையோனாகிய அவன் பெயர் பிரத்யூஷன்” என்றான். பீஷ்மர் “நான் உங்களுக்கு யார்?” என்றார். “உன் உடன்பிறந்தார் நாங்கள். நீருள் பிறந்து மண்ணைக் காணாமலேயே மறைந்தவர்கள்.”

பீஷ்மர் “ஆம், நான் அறிவேன்” என்றார். “நாங்கள் எண்மர், எங்களிலிருந்து பிரிந்து மண்ணில் வாழும் உன்னை இன்மையென அருகே உணர்ந்துகொண்டே இருக்கிறோம். எங்களுக்கு உன் பெயர் பிரபாசன்” என்றான் அனிலன். “உங்கள் எண்மரின் எடையையும் என் மேல் எப்போதும் உணர்ந்துகொண்டிருக்கிறேன்” என்றார் பீஷ்மர். அனலன் புன்னகைத்து “எண்மரின் எடைகொண்ட பிறிதொருவன் அங்கிருக்கிறான்” என்றார். பீஷ்மர் திகைப்புடன் “ஆம்” என்றார். பிரத்யூஷன் இடைபுகுந்து “எண்மரல்ல, எண்ணாயிரம் மைந்தரின் குருதிக்குமேல் எழுந்தவன் அவன்” என்றான். சினத்துடன் அப்பேச்சை வெட்டி “நான் சலித்துவிட்டேன், விடுதலையை விழைகிறேன்” என்றார் பீஷ்மர். “அறிவதும் அடைவதும் துயரே என்பதனால் அமைவதே வழி என்று கொண்டேன்.”

அவர்கள் அமைதியாயினர். “என்னை விடுதலை செய்க! என் கணக்குகளை நிகர்செய்க!” என்று பீஷ்மர் மீண்டும் இறைஞ்சினார். தரன் திரும்பி நோக்கி சற்றே விலக அவனுக்குப் பின்னால் நிழல் என எழுந்த மைந்தன் “என் பெயர் ஆபன், இவர் மைந்தன்” என்றான். அவனுக்குப் பின்னால் நிழலாட்டமென விரிந்த மைந்தர் நிரையை பீஷ்மர் கண்டார். “இவர்கள் என் மைந்தர், இன்னும் நிகழாதவர். வைதண்டன், சிரமன், சாந்தன், த்வனி என இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். அவர்களுக்குப்பின் இருக்கும் இருளில் அவர்களின் மைந்தர்கள் எழுந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான் ஆபன்.

துருவனின் பின்னால் எழுந்த இருளுரு “நான் காலன், இவர் மைந்தன்” என்றது. “சோமனின் மைந்தனாகிய நான் வர்ச்சஸ்” என்றது இன்னொரு மகவு. அன்னையொருத்தி தன் மைந்தருடன் வந்து நின்றாள். “நான் அஹஸின் மைந்தர் தர்மனின் துணைவியாகிய மனோஹரி. இவர்கள் என் மைந்தர்களான திரவிணன், ஹுதஹவியவஹன், சிசிரன், பிராணன், வருணன்.” அவளருகே நின்றிருந்தவள் “நான் அனிலனின் துணைவி சிவை. என் மைந்தர்களான மனோஜவன், அவிக்ஞாதகதி என்போர் இவர்” என்றாள். “அன்னையே, இவர்கள் முன்னரே பிறந்ததில்லையா?” என்றார் பீஷ்மர். “நீ காலத்தை பின்திரும்பிப் பார்க்கிறாய்” என்றான் துருவன்.

“நான் இவர்களின் கொடிவழியில் வந்தவன், என்னை அக்னி என்பார்கள்” என்றான் செவ்வண்ணம் கொண்ட இன்னொரு மைந்தன். என் மைந்தன் குமாரன் இவன்.” குமாரன் திரும்பி கைகாட்டி “என் மைந்தர் சாகன், விசாகன், நைகமேயன்” என்றான். “நான் பிரத்யூஷரின் மைந்தன் தேவலன்” என்றான் ஒரு மைந்தன். “என் மைந்தர் இங்கு நின்றிருக்கிறார்கள். அவர்கள் நூற்றுவர்.” பீஷ்மர் சொல்லின்றி அவர்களை நோக்கிக்கொண்டிருந்தார். “நோக்க நோக்கப் பெருகும் இவர்கள் இப்புவியில் மைந்தர். பிற உலகொன்றில் கருவடிவர். பிறிதொன்றில் இறவாதோர். பிறிதொன்றில் பிறவாதோர்” என்றான் தரன். “ஒன்றென்று தோன்றுவது ஒன்றல்ல. காலமும் வெளியும் தொடுகையில் ஒவ்வொன்றும் முடிவிலியே.”

பீஷ்மர் “நான் விடுதலைகொள்ள விழைகிறேன். விட்டுச்செல்ல விழைகிறேன்” என்று கூவினார். “எதிலிருந்து?” என்று அஹஸ் கேட்டான். “இங்கிருக்கும் பீஷ்மரில் இருந்தா? முன்பிருந்த பிரபாசனிலிருந்தா? வரவிருப்பவர்களிலிருந்தா?” பீஷ்மர் “இச்சுழலில் இருந்து” என்றார். “என்னை செல்லவிடுங்கள்… என் உடன்பிறந்தவர்களே, இனி இப்புவியிலென்னை உழலவிடாதீர்கள்” என்று கைகூப்பி இறைஞ்சினார். மெல்ல அவர்கள் அமைதியடைந்தனர். தரன் “நீ விழைவது அதுவெனில் நாங்கள் மறுக்கப்போவதில்லை” என்றான். “ஆம், நாம் அதை அளித்தாகவேண்டும்” என்றான் அனிலன். “நம் அருள் என்றும் அவனுக்கு இருப்பதாக!”

அவர்கள் ஒவ்வொருவராக இருளில் மறைந்தனர். பிறிதொரு இலை உதிர்ந்தது. ஒன்று தொடர்ந்து ஒன்றென ஏழு இலைகள் உதிர்ந்தன. பீஷ்மர் உடல்தளர்ந்தவராக உணர்ந்தார். பின்னர் ஒவ்வொரு இலையாக எடுத்து நாகத்தின் பீடத்தில் வைத்தார். மீண்டும் மூன்று மலர்களை எடுத்து நாகத்திற்குப் படைத்து கைகூப்பினார். அவர் முன் விழிகள் ஒளிர நீண்ட குழல்கொண்ட பெண் ஒருத்தி தோன்றினாள். அவளை அவர் முன்பு அறிந்திருந்தார். அவள் “ஆம், மீண்டும் மீண்டும் அணுகியகலும் ஊழ்கொண்டுள்ளோம்” என்றாள்.

அவர் அவளையே நோக்கிக்கொண்டிருந்தார். “பிரஹஸ்பதியின் மகளாகிய என் பெயர் வரஸ்ரீ. முன்பு உங்கள் துணைவியாக இருந்தேன். பின்னர் பிரிந்தேன். மீண்டும் மீண்டும் அணுகி அகல்கிறேன்.” பீஷ்மர் “ஆனால் நான் எப்போதும் உன்னை அடைந்ததில்லை” என்றார். “ஆம், நானும் ஒருபோதும் உங்களுடன் இணைந்ததில்லை” என்று அவள் சொன்னாள். “முற்றணுகாமையால் முழுதும் பிரியமுடியாமல் இவ்வூசலில் காலமிறந்து ஆடிக்கொண்டிருக்கிறோம். எப்போதும் ஒருசொல் நம்மிடையே சொல்லப்படாமல் எஞ்சுகிறது. அதிலிருந்து நமக்கு விடுதலையில்லை.”

“ஆனால் என் உள்ளக்காதல் மைந்தனாகியது. இவன் பெயர் விஸ்வகர்மன்.” அவள் தன் இடையிலிருந்த சிறுமைந்தனை அவருக்கு காட்டினாள். “இவர்கள் இவனுக்குப் பிறக்கும் மைந்தர்கள். அஜைகபாத், அஹிர்புத்தன்யன், த்வஷ்டா, ருத்ரன் என அவர்கள் பெயர்கொண்டிருக்கிறார்கள். உத்தமரே, அதற்கப்பால் நின்றிருப்பவர்கள் த்வஷ்டாவின் மைந்தர்களான விஸ்வரூபன், ஹரன், பகுரூபன், திரயம்பகன், அபராஜிதன், விருஷகவி, சம்பு, கபர்த்தி, ரைவதன், மிருகவியாதன், சர்வன், கபாலி. அவர்களை ஏகாதச ருத்ரர்கள் என்கிறார்கள்.”

பீஷ்மர் “என் தலை சுழல்கிறது. நான் பருவுடல்கொண்டு நின்றிருக்கும் இந்தக் காலத்திலேயே சித்தம்நிலைத்து அனைத்தையும் நோக்க விழைகிறேன்” என்றார். “மாயை என்பது அதுவே” என்று வரஸ்ரீ புன்னகைத்தாள். “அறிய முடிவதையே அறிவெனக் கொள்வது. உத்தமரே, இன்றென்றும் இங்கென்றும் இவையென்றும் எண்ணுவன பொய் என்று அறியாமல் எதை மெய்யென்று அறியமுடியும்?” பீஷ்மர் கால்கள் தளர அமர்ந்துகொண்டார். ‘இங்குள்ள ஒவ்வொன்றும் எங்குமுளவற்றால் ஆனவை. இன்றென்பது என்றுமென்றிருப்பது. இவையோ அனைத்துமென்றானவை. மெய்யென்பது முழுமை, உத்தமரே, துளியே நம் முன் மாயை என்று நின்றுள்ளது.”

பீஷ்மர் “இல்லை, இல்லை” என்று தலையை அசைத்தார். “இது என் சித்தச்சிடுக்கு. இத்தருணத்திலெழும் பித்து…” எழுந்துகொண்டு “அல்லது கொடுங்கனவு…” என்றார். “இது இமைக்கணக்காடு” என்றாள் வரஸ்ரீ. “இங்கு கணமே காலமுடிவிலி. உத்தமரே, கனவுகளில் காலம் ஒரு கணமே.” அவர் சூழ்ந்திருக்கும் இருளை நோக்கியபடி “இது அவன் ஏவிய மாயம்… அவன் என்னுடன் ஆடுகிறான்” என்றார். அவள் முகம் உருமாறியது. அவர் திடுக்கிட்டு பின்னால் நகர்ந்து மூச்சொலியாக அலறினார். அவள் சிரித்தபடி அணுக பின்காலடி வைத்தபடி “உன்னை முதற்கணம் கண்டபோதே எண்ணினேன் நான் உன்னை அறிவேன் என” என்றார்.

“நானே” என்று சிரித்தபடி அம்பை சொன்னாள். “நானன்றி வேறில்லை.” அவர் சினத்துடன் நின்று “என்னை வேட்டைவிலங்கென தடம் தேர்ந்து துரத்திவருகிறாய். இனி அஞ்சப்போவதில்லை. என்னை கொள்க! இருள்தீரா நரகமென்றாலும் இனி நான் ஒழியப்போவதில்லை” என்றார். அவள் விழிகள் கனிந்தன. “நான் எப்படி உங்கள்மேல் சினம்கொள்ள முடியும்?” என்றாள். “என்றும் உடனிருப்பவள் நான்.” அவள் தன் கையை நீட்டி “உளம் எஞ்சாது என் கையை பற்றுக! எஞ்சாமல் இழப்பதே காதலில் வெல்லும் வழியென்று நம்பி அணுகுக… இங்கே இச்சரடை முடிப்போம். இச்சுழலிலிருந்து இருவரும் கரையணைவோம்” என்றாள்.

ஆனால் அவள் இடையிலிருந்த மைந்தனின் விழிகள் செவ்வொளி கொண்டன. அவன் உதடுகள் குருதிச்செம்மையுடன் விரிய நாகமென நச்சுப்பற்கள் தெரிந்தன. வஞ்சத்துடன் புன்னகைத்தபடி அவன் கைநீட்டினான். அவர் பின்னால் நகர்ந்தபோது கால் தடுக்கி மல்லாந்து விழுந்தார். புரண்டு எழுந்தபோது அவள் கால்களை கண்டார். நிமிர்ந்தபோது மரத்தின் இரு கிளைகள் என அவள் முகமும் மைந்தன் முகமும் திகழக்கண்டார். எழுந்து காட்டினூடாக ஓடத்தொடங்கினார். வேரில் கால் பின்ன கீழே விழுந்து உருண்டு எழுந்தார்.

மூச்சுவாங்க நெடுந்தொலைவு ஓடி நின்று திரும்பி நோக்கினார். அவள் மிக அருகில் நின்றிருந்தாள். “ஓர் இமைக்கணத்திற்குள் எவ்வளவு தொலைவு ஓடமுடியும்?” என்றாள். அவர் “விலகுக… விலகுக!” என்று கூச்சலிட்டார். “முடியுமென்றால் நீங்களே விலகிச்செல்லுங்கள்” என்றாள் வரஸ்ரீ. “நான் அருள்பவள். ஒருபோதும் முனியாதவள். அருளின் ஆயிரம் கோடி தோற்றங்களாக உங்களை சூழ்ந்திருப்பவள்.”

பீஷ்மர் திரும்பி நோக்காமல் ஒவ்வொரு காலடியாக எடுத்து வைத்து நடந்தார். உறுதியுடன் தனக்கே என சொல்லிக்கொண்டார். “அகல்கிறேன். முற்றகல்கிறேன். இனியில்லை என்று. எச்சமிலாது, மீளாது.” காலுக்குக் குறுக்கே அவர் ஒரு வேரை பார்த்தார். அது என்னவென்று உணர்வதற்குள் சீறிப்படமெடுத்து அவர்மேல் பாய்ந்து கால்களை சுற்றிக்கொண்டது. நிலைதடுமாறுவதற்குள் பிறிதொரு நாகம் அவர்மேல் பாய்ந்து உடலைச்சுழற்றிக் கவ்வியது. அவர் புரண்டு மூச்சிரைத்து தவித்தார். பெரிய கருநாகம் அவர்மேல் படம் தூக்கியது.

திமிறியபடி “அரசே!” என்று அவர் சொன்னார். விழியற்ற நாகம் நாபறக்க சீறலோசையுடன் சொன்னது. “எனக்களித்த சொல் நிற்கிறது!” பிறிதொரு மஞ்சள் நாகம் அவர் மேல் வழுக்கி இறுகியபடி முனகியது. “எனக்களிக்கப்பட்ட சொல்லும்.” மேலும் மேலுமென நாகங்கள் வந்து அவரை பின்னிக்கொண்டன. இறுக்கி மேலும் இறுக்கி அவர் தொண்டையில் மூச்சு நின்று தெறிக்கச்செய்தன. கண்கள் துறித்து எழ நா பிதுங்கி நீள அவர் தவித்தார். சற்று அப்பால் அவர் மீண்டும் வரஸ்ரீயை கண்டார். அவளருகே நிழலென ஒரு பன்றி. “தேவி, என்னை காத்தருள்க! இதிலிருந்து எனக்கு மீட்பருள்க!” என்று அவர் கூவினார்.

அவள் ஓர் அடி முன்னால் கால்வைத்தாள். “அவள் என் துணைவி” என்றபடி பின்னிருந்து ஒருவன் தோன்றினான். எளிய ஆடை அணிந்த வேளான். அவர் திடுக்கிட்டு மேலே விழிதூக்கி அவளை பார்த்தார். அவள் ஏழுசிந்துவின் தொல்லூர்ச் சிறுபெண் போன்றிருந்தாள். “இங்கு இவளை நான் மணம் கொண்டிருக்கிறேன்” என்றான். அவர் தன் உடலை எரித்தபடி எழுந்த அனலை உணர்ந்தார். “இல்லை… நான் ஒப்பமாட்டேன்… என் தேவியை தொட்டால் உன் குருதிகொள்வேன். உன் குலத்தை அழிப்பேன்” என்று கூச்சலிட்டபடி எஞ்சிய உயிர்விசையை முழுதும் திரட்டி எழுந்தார்.

அக்கணம் அவரைச் சூழ்ந்திருந்த அத்தனை மரங்களும் பெருநாகபடங்களென்று உருமாறின. விழிகளும் நச்சுப்பற்களும் இருநாக்களும் கொண்டன. வெட்டுண்டவை என அவர் மேல் விழத்தொடங்கின. வெண்ணிற நாகங்கள். கருநிற நாகங்கள். வெண்மையும் கருமையுமென புறமும் அடியும் கொண்டவை. அவரை மண்ணுடன் அறைந்து சேர்த்து சுற்றி கவ்விக்கொண்டன அவை.

அவை தன்னைச் சுற்றி வரிந்து இறுக்குகையில் இறுதிமூச்செடுத்து பீஷ்மர் கேட்டார் “நான் அறியாதவர்களே, யார் நீங்கள்?” ஒரு நாகம் அவரை விழுங்குவதுபோல் வாய்பிளந்து முகத்தருகே அணுகி சொன்னது “உன் குலதெய்வங்கள், உன் ஒரு சொல் எழுவதற்காக காத்திருந்தோம்.”