இமைக்கணம் - 10

மூன்று : ஒருமை

wild-west-clipart-rodeo-31நைமிஷாரண்யத்திலிருந்து வெளியே வரும்வரை யமன் கர்ணனின் உருவில்தான் இருந்தார். கருக்கிருட்டில் தன் ஆலயமுகப்புக்கு வந்து அங்கிருந்து யமபுரிக்கு இமைக்கணத்தில் மீண்டார். உவகையுடன் தன் அரண்மனைக்குச் சென்று அதன் முதல்படியில் காலடி வைக்கும் வரை பிறிதொரு வினா இல்லாது நிறைந்திருந்தது அவர் உள்ளம். தூக்கிய கால் நின்றிருக்க திகைத்தபின் பின்னெடுத்து ஊன்றினார். திரும்பி தன்னைத் தொடர்ந்த காரானூர்தியை நோக்கிய கணமே மீண்டும் மண்ணுலகை அடைந்தார்.

அவரைச் சூழ்ந்த காலவடிவ ஏவலரிடம் “செல்க, இவ்வினாவைவிட விசைகொண்ட வினாவுடன் எவர் இருக்கிறார்கள் என்று அறிந்து வருக!” என்று ஆணையிட்டார். அவர்கள் சென்று மீண்டனர். துர்பதன் என்னும் காலவடிவன் “அரசே, அஸ்தினபுரியின் சோலைக்குடிலில் ஒருவரை நான் கண்டேன். படைக்கலப் பயிற்சிநிலையில் இரவும்பகலும் அம்பு தொடுத்தபடி இருக்கிறார். ஆயிரம் அம்புகளில் ஒன்று குறிதவறுகிறது. அதை எடுத்து சினத்துடன் தன் உடலில் குத்தி குருதி பெருக்குகிறார். அதன்பொருட்டு மீண்டும் ஆயிரம் அம்புகளை தொடுக்கிறார். நாட்களென வாரங்களென காலம் கடந்துசென்றுகொண்டிருக்கிறது. அவர் உள்ளம் அமைதிகொள்ளவில்லை” என்றான்.

“அவர் முதியவர். நரைத்த நீள்குழல் தோளில் விரிந்திருக்க வெண்தாடி விழுந்த மார்பும் பழுத்த விழிகளும் தொங்கிய மூக்கும் உள்மடிந்த உதடுகளும் கொண்டவர். களைத்துச் சரியும் இமைகளுடன் சற்றே துயிலில் அமைகிறார். எவரோ தொட்டதுபோல் விழித்தெழுந்து ‘ஏன்?’ என்கிறார். பின்பு வாயை துடைத்தபடி ‘ஆம்!’ என்கிறார். எழுந்துகொண்டு ‘ஆயின்…’ என்கிறார். அம்புகளை எடுக்கையில் ‘இல்லை! இல்லை!’ என தலையசைக்கிறார்” என்றான் துர்பதன்.

“அந்த விடுபடும் அம்பிலுள்ளது அவருடைய வினா” என்றார் யமன். “ஆம், அதை எவரிடம் வினவ விரும்புகிறார் என்றறிய நான் அருகிருந்து நோக்கினேன். நூறாவது முறையாக அம்பு தவறியபோது பற்களைக் கடித்தபடி ‘அவன்’ என்றார். தன் நெஞ்சில் அதைக் குத்தி குருதி வழிய ‘அவன் ஒருவனே’ என்றார். நான் ஆமென்று எழுந்து இங்கு மீண்டேன்” என்று துர்பதன் சொன்னான். அக்கணமே யமன் சென்று பீஷ்மரின் உடலுக்குள் புகுந்து மீண்டார். எடுத்த அம்பு கைதவற அதை பிடித்துக்கொண்ட பீஷ்மர் சினத்துடன் திரும்பி நோக்கினார். அவர் முகத்தில் அந்திப்பந்தங்களின் செவ்வொளி அலைகொண்டது.

அருகே அம்புகளை எடுத்தளித்துக்கொண்டிருந்த அவருடைய அணுக்க மாணவரான விஸ்வசேனர் “முதல் கைத்தவறல், ஆசிரியரே” என்றார். பீஷ்மர் இடப்புருவம் மேலெழுந்தமைய நோக்கி திரும்பிக்கொண்டார். இரண்டு அம்புகள் இலக்கெய்தியதும் வில்தாழ்த்தி “சொல், அதன்பொருள் என்ன?” என்றார். “நூல்களின்படி உளப்பிழையும் உடற்பிழையும் முதுமையின் தெய்வமாகிய ஜரையின் வருகைக்குறிகள்…” என்றார் விஸ்வசேனர். “அவள் இறப்பின் தெய்வமான மிருத்யூவின் அணுக்கி. அவள் ஊரும் தேரின் பரி.”

பீஷ்மர் தலையசைத்து வில்லை எடுத்தார். “இன்றுவரை இந்தக் குறி ஏதும் உங்களில் எழுந்ததில்லை, ஆசிரியரே” என்றார் விஸ்வசேனர். “என்ன சொல்கிறாய்?” என்று பீஷ்மர் கேட்டார். விஸ்வசேனர் “ஒருகணமோ அரைக்கணமோ இங்கு இறப்பு வந்து அகன்றுள்ளதென்று என் உள்ளம் உணர்கிறது” என்றார். ஒருகணம் அவரை தளர்ந்த இமைகளுடன் நோக்கியபின் “நன்று” என்று புன்னகைத்தபடி பீஷ்மர் வில்லைத் தூக்கி அம்பை தொடுத்தார்.

நைமிஷாரண்யத்தின் தெற்குவழியினூடாக யமன் பீஷ்மரின் உருவில் காட்டுக்குள் புகுந்தார். நெடிய காலடிகளை தூக்கி வைத்து ஓசையற்ற நிழல் என காட்டுச்செடிகளை ஊடுருவிச்சென்று இளைய யாதவர் தங்கியிருந்த குடிலின் கதவை தட்டினார். மும்முறை தட்டியபோது உள்ளிருந்து “எவர் வந்திருப்பது?” என்று இளைய யாதவரின் குரல் ஒலித்தது. “காங்கேயனாகிய பீஷ்மன். யாதவரே, உம்மிடமன்றி பிறரிடம் கேட்கவியலா வினா ஒன்று என்னிடமுள்ளது. அதன்பொருட்டே வந்தேன்” என்றார் யமன்.

“வருக!” என்ற இளைய யாதவர் உள்ளே சிக்கிமுக்கியை உரசும் ஒலி கேட்டது. அனல் பற்றிக்கொண்டதும் சிறுசாளரம் ஒளி கொண்டது. கதவைத் திறந்து கையில் விளக்குடன் நின்ற இளைய யாதவரின் முகம் ஓவியப்பாவைபோலிருந்தது. யமன் கைகூப்பி “இரவில் உசாவவேண்டியவை போலும் இவ்வையங்கள்… நெடுந்தொலைவு கடந்து வந்தணைய பொழுதாகிவிட்டது” என்றார். “உள்ளே வாருங்கள், அஸ்தினபுரியின் பிதாமகரே” என்று இளைய யாதவர் அழைத்தார். சிலகணங்கள் தயங்கிவிட்டு யமன் குடிலுக்குள் சென்றார்.

wild-west-clipart-rodeo-31இளைய யாதவர் பீஷ்மரை நோக்கியபடி அமர்ந்திருந்தார். பீஷ்மர் தரையில் விரித்த தர்ப்பைப்பாய்மேல் நீண்ட கால்களை ஒடித்ததுபோல் மடித்து முதுகை நிமிர்த்தி அமர்ந்திருந்தார். தாடியை இடக்கை கசக்கி நீவி மீண்டும் கசக்கிக்கொண்டிருக்க வலக்கை மடியில் ஓய்ந்து அமர்ந்திருந்தது. தான் கேட்கும்வரை அவர் பேசப்போவதில்லை என்றுணர்ந்த இளைய யாதவர் “அஸ்தினபுரியின் பிதாமகரை என் குடிலுக்கு விருந்தினராகக் கொண்ட மகிழ்வில் இருக்கிறேன். நாம் இன்றுவரை இப்படி தனியாக சந்தித்துக்கொண்டதில்லை” என்றார்.

“ஆம்” என்று நிமிர்ந்த பீஷ்மர் எந்த முகமனும் இல்லாமல் நேரடியாக “நான் சென்றசிலநாட்களாக இடைவெளியில்லாமல் அம்புகளை தொடுத்துக்கொண்டிருந்தேன்” என்றார். “ஆம் அறிவேன், உங்கள் உள்ளம் வில்லம்பு என்பார்கள்” என்றார் இளைய யாதவர். “ஆம், இம்முறை அது ஒரு வதையென ஆகிவிட்டது” என்றார் பீஷ்மர். “ஆயிரம் அம்புகளை குறிதவறாது அனுப்புவதே என் இலக்கெனக்கொண்டேன். ஆயிரத்தில் ஒன்று பிழைத்துக்கொண்டே இருந்தது. பிழைத்த ஒவ்வொன்றுக்கும் ஆயிரம் அம்புகள் பிழையீடெனக்கொண்டேன். ஈராயிரமாகி மூவாயிரமாகி இன்று என் கணக்குக்குமேல் பன்னிரண்டாயிரம் அம்புகள் நின்றுள்ளன. பன்னிரண்டாயிரம் வருபிழைகள். அவைபெருகும் முடிவிலி” என்றார்.

இளைய யாதவர் புன்னகைபுரிந்தார். “யாதவரே, எங்கு பிழைக்கின்றது என் அம்பு என்று நோக்கிக்கொண்டிருந்தேன். கை ஓய்ந்து ஆயிரத்தை அணுகும்போது. வென்றேன் என எண்ணும்போது. உளம்குவியாதபோது. ஆம், ஆனால் அதுமட்டுமல்ல. முதல் அம்பே பிழைத்ததுண்டு. உளம்கூர்ந்தமையாலேயே அம்பு தவறியதுண்டு. இறுகப்பற்றினால், இளகப்பிடித்தால், குறிநோக்கினால், நோக்காது செலுத்தினால் எந்நிலையிலும் பிழைநிகழ்கிறதென்று பின்னர் கண்டேன். ஆகவே என்னால் ஆவதொன்றில்லை. இது இந்த ஆடலின் நெறி போலும் என நினைத்தேன்.”

இளைய யாதவர் “அனைத்தும் இணைந்ததே ஆடல்” என்றார். “ஆனால் என்னால் உளம்அமைய முடியவில்லை. அந்த பிழைத்த அம்புகளால் என் உடலில் ஒரு குருதிப்புள்ளி வைத்தேன். சிறுத்தையென உடலெங்கும் புள்ளிகள் நிறைந்தன. சலித்தெழுந்து ஒரு முறை அம்புநுனியை என் கழுத்திலேயே வைத்தேன். இப்புவியில் எவருக்கும் ஒன்றேனும் பிழைப்பதே இயல்பு, நான் தெய்வங்களின் முழுமையை நாடுகிறேனோ என்று எண்ணினேன். எவருக்கு ஒருபிழையும் நிகழாதென்று என்னுள் வினவிக்கொண்டேன். துரோணருக்கும் கிருபருக்கும் கர்ணனுக்கும் பிழைக்கும் என்பதில் ஐயமில்லை. பரத்வாஜர், அக்னிவேசர், சரத்வான்… ஒவ்வொரு பெயராக எண்ணிச்செல்ல உமது நினைவெழுந்தது…”

இளைய யாதவர் காத்திருந்தார். “யாதவரே, ஆயிரத்தில் ஒன்று தவறும் ஊழ் உங்களுக்கும் உண்டா? பன்னீராயிரத்தில் லட்சத்தில் கோடியில் ஒன்றேனும் பிழைபடுமா?” என்றார் பீஷ்மர். “இல்லை” என்று இளைய யாதவர் சொன்னார். “ஆனால் நான் நூற்றிலொன்றை பிழைவிடுவது வழக்கம்.” பீஷ்மர் புருவம்சுளிக்க நோக்கினார். “பிழைகளினூடாகவே இங்கு புவிநாடகம் நிகழ்கிறது, பெருநெறியரே” என்றார் இளைய யாதவர். “பிழைநிகழாதவற்றைக் கண்டு நான் அகல்கிறேன். அவற்றின் முழுமை வாயற்ற குடம். ஒருதுளியும் மொள்ளாது பெருக்கில் மிதக்கும் பொருளற்ற கோளம்.”

பீஷ்மர் பெருமூச்சுவிட்டார். பின்னர் “நன்று, நான் அப்பிழையை வெல்ல முயலக்கூடாதா?” என்றார். “வெல்ல முயலாவிடில் உங்களுக்கு வாழ்க்கையேது?” என்றார் இளைய யாதவர். “அனைத்தையும் துறந்து கானேகும்போது இறுதி அம்பையும் வீசுவீர்கள் என்றால் அம்முயற்சியை கைவிடலாம்.” பீஷ்மர் பெருமூச்சுவிட்டு “நான் கேட்கவந்தது அதைத்தான். நான் கானேக விழைகிறேன். என்னை அஸ்தினபுரியின் முதன்மைப் படைத்தலைவராக அறிவித்திருக்கிறார்கள். இத்தருணத்தில் விலகுவது பொறுப்பை துறப்பதாகாதா என ஐயுற்றேன். ஆனால் எண்ணுந்தோறும் நான் அப்பொறுப்புக்கு உகந்தவனல்ல என்று தெளிவுகொள்கிறேன்” என்றார்.

“யாதவரே, போருக்குத் தேவை பற்று. அதன் மறுபக்கமாகிய வெறுப்பு. பற்று முதிர்ந்து விழைவாகி, விழைவே ஆணவமாகி, ஆணவம் சினமாகி அனலென பற்றிக்கொள்கையிலேயே களம்நின்று போரிடமுடியும். எனக்கு துரியோதனன் மீதோ, அஸ்தினபுரி மீதோ, அதனால் தலைமைதாங்கப்படும் வேதத்தரப்பின் மீதோ அணுவளவும் பற்றில்லை. இவர்கள் முற்றழிந்தாலும் நான் ஒருதுளியும் வருந்தப்போவதில்லை. மறுபக்கம் எதிர்நின்று போரிடவிருக்கும் பாண்டவர்கள் மீதோ அவர்களைத் துணைக்கும் அசுர, நிஷாத, கிராதவீரர்கள் மீதோ சற்றும் வெறுப்பும் விலக்கமும் இல்லை.”

“அவர்கள் வென்று இங்குள அனைத்தையும் முற்றழித்து தங்கள் கோலை நிறுவுவார்கள் என்றால் எனக்கு அதில் துயரில்லை. என் கொடிவழிகள் எவரும் பெயரென்றும் எஞ்சமாட்டார்கள் என்றால்கூட, நான் நம்பிச் சார்ந்திருந்த அனைத்தும் இனியில்லை என்று அழிந்துமறையும் என்றால்கூட அது எனக்கு எவ்வகையிலும் பொருட்டல்ல. அல்ல என்று நம்ப விழைந்தேன். பற்றையும் காழ்ப்பையும் நடித்தால் உள்ளமும் அதை சூடிக்கொள்ளக்கூடும் என்று எண்ணினேன். காழ்ப்பின், பற்றின் உச்சங்களை வெளிப்படுத்தினேன். ஆனால் உள்ளே நான் அகன்று நின்று அதை திகைத்து நோக்கிக்கொண்டிருக்கிறேன்.”

“இங்கு நான் செய்வதற்கு மெய்யாகவே ஏதுமில்லை. அது மெய்யா என் உளநடிப்பா என்று என்னையே மீளமீள கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தேன். ஐயமின்றி நான் எவற்றிலுமில்லை என்று இன்றுதான் தோன்றியது. அக்கணமே இனி எதிலும் ஈடுபடலாகாது என்று முடிவெடுத்தேன். யாதவரே, இங்கு நான் செய்வதற்கேதுமில்லை. அதைவிட செய்வன எனக்கு எவ்வகையிலும் பயனளிப்பவையல்ல. நான் செய்வன பிழைக்கவும் ஒவ்வாதவை நிகழவுமே வாய்ப்பு மிகுதி” என்றார் பீஷ்மர். “ஆனால் மீண்டுமொருமுறை எவரிடமேனும் ஒரு சொல் கோரிவிட்டு அகலலாம் என்று எண்ணினேன்.”

“ஏன்?” என்று இளைய யாதவர் கேட்டார். “கானேகும் எவரும் மறுசொல் உசாவுவதில்லை. மறுகணத்திற்கென காப்பதுமில்லை.” பீஷ்மர் “ஆம், நான் ஐயுறுவது இதுநாள்வரை நான் பெரும்பாலும் காட்டிலேயே இருந்தேன் என்பதனால்தான். இந்த நூறாண்டுகளில் மீண்டும் மீண்டும் நகர்நீங்கி காட்டுக்கு சென்றுகொண்டேதான் இருக்கிறேன். ஒவ்வொருமுறையும் திரும்பி வந்திருக்கிறேன். ஏதோ ஒன்றின்பொருட்டு. அழைக்கப்பட்டு வந்திருக்கிறேன், மகிழ்ந்தும் சினந்தும் கசந்தும் நானே வந்திருக்கிறேன். மீண்டும் நான் வரக்கூடுமா? என்னை வரச்செய்வது எது?” என்றார்.

“யாதவரே, நீர் ஆழ்ந்தறிந்தவர் என நான் அறிவேன். பாரதவர்ஷத்தில் களம்நின்று படைநடத்துபவர் குருநிலையின் முதன்மை ஆசிரியரும் ஆகி இருந்ததில்லை. அன்றாடம் அரசுசூழ்பவர் கானகத்துறவியென்று அமைந்ததும் இல்லை. மகளிருடன் ஆடிக்களிப்பவர் புலனறுத்து அகத்தமைந்திருக்கிறீர்கள். இளமைந்தனும் மூதறிஞனும் ஒன்றென்றாகி நின்றிருக்கிறீர்கள். நீங்களே எனக்கு நெறி உரைக்கமுடியும்” என்றார் பீஷ்மர். இளைய யாதவர் “ஒன்றை விட்டுவிட்டீர் பிதாமகரே, என்னைப்போல் அனைத்துமறிந்தும் கணம்தோறும் கலங்குபவரும் இல்லை” என்றார். “ஆம், அது நீங்களே தேரும் நூற்றிலொரு பிழையம்பு” என்றார் பீஷ்மர்.

இளைய யாதவர் நகைக்க பீஷ்மர் முன்னால் குனிந்து “இங்கிருந்து இறங்கிச் சென்று நான் கானேகினேன் என்றால் மீண்டு வருவேனா?” என்றார். “ஆம்” என்றார் இளைய யாதவர். பீஷ்மர் நெடும்பொழுது சொல்லின்றி அமைந்து மீண்டு “ஏன்?” என்றார். “ஆயிரத்திலொன்று பிழையம்பு. ஆகவே ஆயிரம் அம்புகளின் ஆற்றல்கொண்டது அது” என்றார் இளைய யாதவர். “ஆம், நான் அரசை, காமத்தை, மைந்தரை, குடியை துறந்தேன். துறந்தவற்றுடன் ஒவ்வொருகணமும் உடனிருந்தேன். என் வாழ்க்கை அம்புகளால் கங்கைக்கு அணைகட்டுவதாகவே அமைந்தது” என்று பீஷ்மர் சொன்னார்.

கசப்புடன் புன்னகைத்து “உதிர்வனவற்றின் வடு தாங்கிய உள்ளம் கொண்டவன் நான் என்று முன்பு ஒரு சூதன் பாடி கேட்டேன். மெய்யென்று தோன்றுகிறது” என்றார். இளைய யாதவர் “அவை ஒவ்வொன்றிலுமிருந்து நீங்கள் விடுதலை கொள்ளக்கூடும், பிதாமகரே” என்றார். “ஏனென்றால் முன்னரே விடுதலையின் இன்பத்துக்கு பழகியிருக்கிறீர்கள். எப்போதும் தனியராக இருந்தமையால் எவருமின்றி இருக்கக் கற்றிருக்கிறீர்கள். உங்களை அலைக்கழித்த அனலை உடல் இழந்துகொண்டிருக்கிறது. முதுமை என்பது தன்னளவிலேயே ஒரு துறவு.”

“ஆனால் இளமையைவிட முதுமையிலேயே தன்னுயிர்துறப்பும் துறவும் கடினமானவை” என்று இளைய யாதவர் தொடர்ந்தார். “இழக்கப்படுகையிலேயே ஒவ்வொன்றும் எத்தனை அரிதெனத் தெரிகின்றது. இழப்புகளாலான நீள்வாழ்நாளுக்குப்பின் இழக்கவிருப்பவை என எஞ்சுபவை நூறுமடங்கு அருமைகொண்டுவிடுகின்றன. அவற்றை நெஞ்சோடணைத்தபடியே முதுமையை கடக்கிறார்கள். முதியோர் எதையும் இழப்பதில்லை. பயனற்ற சிறுபொருட்களைக்கூட. எனில் உடலை, உயிரை, வாழ்வை எங்ஙனம் இழக்கவியலும்? இறுதிச்சொட்டு மூச்சுக்காக ஏங்கிப்போரிட்டு உயிர்துறப்பதே உயிர்களின் இயல்பான நெறி.”

சிறுமைபடுத்தப்பட்டவர்போல பீஷ்மர் முகம்சிவந்து நோக்கை திருப்பிக்கொண்டார். “மானுட இருப்பு ஆணவத்தால் ஆனது, பிதாமகரே. அதன்மேல் குலத்தால், கல்வியால், உடைமைகளால், வெற்றிகளால், தவத்தால் அடையாளங்களை ஏற்றிக்கொள்கிறார்கள் மானுடர். அவை ஒவ்வொன்றாக உதிர்ந்தழியும் முதுமையில் ஆணவம் மட்டுமே எஞ்சுகிறது. காப்பும் கவசங்களுமற்ற ஆணவம் மென்தோல்கதுப்பென இளங்காற்றில் வரும் இதழ் பட்டாலே புண்படுகிறது. நான் என பொறுப்பேற்றுக்கொள்கிறது. நானே என்றும் என்னால் என்றும் ஒவ்வொருகணமும் எண்ணிக்கொள்கிறது. நான் எனக்குப்பின் என துயர்கொள்கிறது.”

“ஆம்” என பீஷ்மர் முனகினார். “அவ்வண்ணம்தான் இதுவரை இங்கிருந்தேன்.” இளைய யாதவர் “மெல்லிய நூல். அனைத்துப்பிடியும் அற்று மலைவிளிம்பில் தொங்குபவனுக்கு கொடிவள்ளி. அவன் உளமுருகிச் செய்யும் வேண்டுதல்களால் வலுவூட்டப்பட்டது. அவனுக்குரிய தெய்வங்களால் காக்கப்படுவது” என்று இளைய யாதவர் சொன்னார். “அதையும் நீங்கள் அறுத்து மீளக்கூடும். ஏனென்றால் பெருநோன்பு பூண்டு உளமுறுதியுடன் ஊழை எதிர்கொண்டு வெல்லும் திறன்கொண்டவர் என உங்களை நிறுவிக்கொண்டவர் நீங்கள்.”

அவர் சொல்லவருவதென்ன என்று புரியாமல் பீஷ்மர் நோக்கினார். கண்களுக்குமேல் நரைத்த புருவமயிர்கள் விழுந்துகிடந்தமையால் புதர்களுக்கு அப்பால் சிம்மம் பதுங்கியிருப்பதுபோல விழிகள் தெரிந்தன. “ஆனால் ஏன் நீங்கள் துறந்துசெல்லமுடியாது என்கிறேன்? பிதாமகரே, வாழ்தல் இயல்பானது. அதற்கு எந்தத் தூண்டுதலும் தேவையில்லை. உயிர்களுக்குள் வாழ்வதற்குரிய ஆணையை பிரம்மன் பொறித்திருக்கிறான். துறத்தல் மானுடர் தேர்வது. அதற்கு அவர்களுக்குள் இருந்து ஆணை எழவேண்டும். அதற்குரிய பயன் என்னவென்று உள்ளம் தெள்ளிதின் அறியவேண்டும்.”

“நான் துறப்பதனால் பயன்நிகழாதென்று எண்ணுகிறீரா?” என்று சற்று அடைத்ததுபோல் ஒலித்த குரலில் பீஷ்மர் கேட்டார். “ஆம்” என்றார் இளைய யாதவர். “ஏன்?” என்று பீஷ்மர் கேட்டார். “ஏனென்றால் இங்கு நிறைந்து அங்கு செல்பவர் அல்ல நீங்கள். இங்கு நிகழ்ந்து முடிந்தவரும் அல்ல.” பீஷ்மர் சீற்றத்துடன் “இல்லை, இதை நானே அறிவேன். நான் காடுகளில் ஒருகணம்கூட அஸ்தினபுரியையோ என் குடிகளையோ எண்ணாமல் பல்லாண்டுகாலம் வாழ்ந்திருக்கிறேன்” என்றார். இளைய யாதவர் “ஆம், அங்கெல்லாம் உங்கள் உள்ளத்திற்குகந்த அஸ்தினபுரி ஒன்றை உருவாக்கிக்கொண்டிருக்கிறீர்கள்” என்றார்.

பீஷ்மர் “இது அனைத்துமறிந்ததுபோல் பேசும் வீண்மொழி. அஸ்தினபுரியில் நான் மிகவிரும்பியது என் படைக்கலச்சாலையை. காட்டில் அதற்கிணையாக எதை உருவாக்கினேன்?” என்றார். இளைய யாதவர் “காங்கேயரே, அது நீங்கள் அஸ்தினபுரியில் உருவாக்கிய காடு. காட்டில் நீங்கள் அரசவையை உருவாக்கவில்லை என்று சொல்லமுடியுமா?” என்றார். பீஷ்மர் சிலகணங்கள் இமைக்காமல் நோக்கிவிட்டு விழிதாழ்த்திக்கொண்டார். இளைய யாதவர் “நீங்கள் துறந்து செல்ல இயலும், பிதாமகரே. ஆனால் தொடங்கிய புள்ளிக்கே மீளச்சுழன்று வந்துகொண்டிருப்பீர்கள். பெரும்பயனின்மையே அது” என்றார்.

அமைதியிழந்தவராக தன் கைவிரல்களை பின்னிக்கொண்டும் தலையை அசைத்துக்கொண்டும் இருந்த பீஷ்மர் அறியாதெழுந்த எழப்போகும் அசைவால் தானே திடுக்கிட்டு மீண்டும் அமர்ந்தார். பின்னர் தாழ்ந்த குரலில் “நான் செய்யவேண்டியது என்ன?” என்றார். “செயலாற்றுக!” என்றார் இளைய யாதவர். “ஒருதுளி இன்பமும் அதிலிருந்து எழவில்லை என்றால் மட்டும் செயலை நிறுத்திக்கொள்க!” பீஷ்மர் சினத்துடன் “இல்லை, துன்பம் மட்டுமே செயலில் இருந்து எழுகிறது” என்றார். “துன்பத்தை மட்டுமே செயல் அளிக்கிறதென்றால், செயல் மறுசெயல் என மீளாச் சுழலில் சிக்கவைக்கிறதென்றால் அதை ஏன் இயற்றவேண்டும்? விட்டேன் என துணிந்து விலகி ஏன் அமையக்கூடாது?”

“செயல் துன்பத்தை அளிக்கிறதென்றால் அதிலிருந்து இன்பமும் எழக்கூடும். செயலாற்றும் முறை மட்டுமே பிழையென்றிருக்கும்” என்று இளைய யாதவர் சொன்னார். “செயலின் பொருட்டே உங்கள் உடலும் உள்ளமும் அமைக்கப்பட்டுள்ளது. செயலாற்றாவிட்டால் இக்கைவிரல்கள் இப்படி அமைந்திருப்பதை என்ன செய்வது? விழிகள் கொண்ட ஒளியை எப்படி அணைப்பது? செயலால் துன்பம் விளைகிறதென்றால் எங்கோ நீங்கள் அதை கோருகிறீர்கள் என்பதனால்தான். கேட்காத எதுவும் இங்கே அளிக்கப்படுவதில்லை.”

“என்ன சொல்கிறீர்கள்? எவர் விழைவார் துன்பத்தை?” என்றார் பீஷ்மர் உரத்த குரலில். “நேரடியாக விழையமாட்டார்கள், உருமாறி வந்தால் வேண்டி ஈட்டி சேர்த்துக்கொள்வார்கள்” என்று இளைய யாதவர் சொன்னார். “அன்பை வேண்டி பொறுப்பின் துயரைச் சுமப்பவர் மானுடர். .காதலுக்காக பிரிவை. பற்றினால் இழப்பை. ஆணவத்தால் புறக்கணிப்பின் வலியை. உடைமையின் பொருட்டு எதிர்ப்பை. வெற்றிக்காக தோல்வியை. பிதாமகரே, இங்கிருந்து நோக்குகையில் எட்டுகால்களால் இரைதேடும் பூச்சிகளைப்போல மானுடர் துயர்தேடிப் பசித்தலைவதையே காண்கிறேன்.”

முகம் சுளித்து தலையை அசைத்தபடி “என்னிடம் சொல்விளையாடுகிறீர்” என்று பீஷ்மர் சொன்னார். பற்களைக் கடித்தபடி “முதியவரை குழவியர்போல் கையாள்கிறது இளையோருலகு” என்றார். இளைய யாதவர் “ஆம், அது நன்றல்லவா? வாழ்க்கையில் வந்துபடிந்த பிற அனைத்தும் அகன்று எதுவோ அதுமட்டும் எஞ்சியிருக்கும் நிலை?” என்றார். “என்னால் பிறிதொன்று சொல்லக்கூடவில்லை. செயல் முற்றிலும் வீணென்று எனக்குத் தோன்றுகிறது. அவ்வெண்ணத்துடன் என்னால் எதையும் செய்ய இயலாது” என மன்றாட்டின் ஒலியில் பீஷ்மர் சொன்னார்.

“காங்கேயரே, செயல் இன்பத்தையும் துன்பத்தையும் அளிக்கக்கூடாது. பயனென்றும் வீணென்றும் தோன்றலாகாது. செயல்நிகழ்வதையே சித்தம் அறியலாகாது. அந்நிலையில் செயல்நிறுத்தி அமைவர் சித்தர். பிறிதெவரும் செயலாற்றக் கடமைப்பட்டவரே” என்றார் இளைய யாதவர். பீஷ்மர் தளர்ந்து பெருமூச்சுவிட்டு “என்னைப்போல் இங்குள எளியோருக்கு செயலறுத்து எழுதல் இயல்வதே அல்ல என்கிறீரா?” என்றார்.

“வேர்களற்ற விண்ணிலெழ தாவரங்களுக்கு ஆணையில்லை, முகில்களைக் கண்டு கனவுகண்டு நின்றிருக்கவே அவற்றால் இயலும்” என்றார் இளைய யாதவர் புன்னகையுடன். “ஆனால், முகிலைக் கண்டுதான் தங்கள் தழைக்குவையை மரங்கள் படைத்துக்கொண்டன. இளவெயிலில் வெண்ணிலவில் முகிலின்கீழ் மண்முகிலென நின்றிருக்கையிலேயே மரங்கள் ஊழ்கப்பேரழகு கொள்கின்றன.” பீஷ்மர் மீண்டும் பெருமூச்சுவிட்டார். மீண்டும் ஒரு செறிவான அமைதி அவர்களிடையே திரண்டது.

நெடுநேரம் கழித்து கலைந்து “இளையவனே சொல்க, என்னை நீ எவ்வண்ணம் மதிப்பிடுகிறாய்?” என்று பீஷ்மர் கேட்டார். அவர் விழிகள் புதருக்குள் இருந்து வெளிவந்துவிட்டிருந்தன என்று தோன்றியது. “முடிசூடாமலேயே அஸ்தினபுரியின் அரசரென்றிருப்பவர்” என்றார் இளைய யாதவர். “நிகழாச் செயல் மும்மடங்கு விசைகொண்டது.” அவர் தலை நடுங்கிக்கொண்டிருந்தது. கழுத்தில் தசைநார்கள் இழுபட்டு இழுபட்டுத் தளர்ந்து அசைந்தன. இருவருக்கும் நடுவே காலம் இழுபட்டு விசைகொண்டு தெறித்து விம்மி நின்றது. உதடுகள் அசையாமல் “சொல்!” என்றார் பீஷ்மர். “நிகழாதன அனைத்தும் அவ்வாறே” என்றார் இளைய யாதவர்.

எதிர்பாராதபடி சினம் பற்றிக்கொண்டெழ, உடல் பதற, முகம் வலிப்புகொள்ள, வலக்கையால் தரையை அறைந்தபடி பீஷ்மர் எழுந்தார். “இனிப் பேச்சில்லை… உம்மிடம் இனி சொல்லவேண்டியன ஏதுமில்லை” என்று கைநீட்டி கூவினார். இளைய யாதவர் அசையாமல் அமர்ந்து நோக்கினார். “நான் கிளம்புகிறேன். துறந்து கானேகுகிறேன். இங்கு நான் ஆற்றுவதற்கொன்றுமில்லை. அங்கு சென்று பயனில ஆற்றுவேன் என்கிறீர். இங்கிருப்பினும் ஆற்றுவன பயனற்றவையே. எனவே செல்வதற்கே முடிவெடுத்திருக்கிறேன். எனக்கென்று ஓர் அறைகூவலை விடுக்காவிடில் இதில் ஒன்றியொழுக என்னால் இயலாதென்பதனால்தான் அதை உம்மிடம் சொல்கிறேன். அதன்பொருட்டே வந்தேன். நான் சென்றடையாமல் போகலாம், இங்கிருந்து சிறுமைகொள்ளாதிருப்பேன்” என்றார் பீஷ்மர்.

இளைய யாதவர் ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருக்க பீஷ்மர் மீண்டும் குரல் தணிந்தார். “செயலென்று இதுவரை சூழ்ந்தவை எல்லாம் வெற்றாணவமே என புரிகிறது. எதையும் அடையாவிடினும் ஆணவமற்று விலங்கென காட்டில் வாழ்ந்திறப்பது இனிதென்று எண்ணுகிறேன், யாதவரே” என்றார். இளைய யாதவர் தன் விழிகளில் சுடரொளிர அப்படியே நோக்கி அமர்ந்திருந்தார். பீஷ்மர் “சொல்க, உம்மிடம் ஏதோ எஞ்சியுள்ளது” என்றார். “பிதாமகரே, துறவுகொள்வதற்கு முன் ஈரேழு விடை கொள்ளவேண்டும் என்று அறிவீரா?” என்றார். பீஷ்மர் “ஆம்” என்றார்.

“பெற்றோர், உடன்பிறந்தார், மனைவி, மைந்தர், ஆசிரியர், அரசர், மூதாதையர் என நேரேழு. நாம் இழந்தோர், நம்மிடம் கடன்பட்டோர், நாம் கடன்பட்டோர், நம் மீது வஞ்சம்கொண்டோர், நாம் வஞ்சம் கொண்டோர், நம் பழிகொண்டோர், குடித்தெய்வங்கள் என எதிரேழு” என்றார் இளைய யாதவர். “அனைவரிடமும் முழுவிடை பெற்று நீங்கள் கானேகமுடியும் என்றால் அதை செய்க!” பீஷ்மர் “ஆம், அதை செய்தபின் கானேகுகிறேன்” என்றார்.

“அவை ஒவ்வொன்றையும் எளிய சடங்கு என்றாக்கி வைத்திருக்கிறார்கள், பிதாமகரே. அலைந்து சோராமல் தெய்வமுன்னிலையில் அவற்றை இயற்றமுடியும்” என்றார் இளைய யாதவர். “என்னுடன் வருக!” என்றபடி எழுந்தார்.

வெண்முரசு விவாதங்கள்