எழுதழல் - 9
மூன்று : முகில்திரை – 2
பிரலம்பன் வந்து அபிமன்யூவின் அறைவாயிலில் நின்று வணங்கினான். அபிமன்யூ விழிதூக்கியதும் “படைத்தலைவர் அறையில் இருக்கிறார். தங்களை வரச்சொல்லி ஆணை வந்துள்ளது” என்றான். அபிமன்யூ எழுந்து குழல்கற்றைகளை நீவி தலைக்குமேல் விட்டுவிட்டு நடந்தான். “ஆடையணிகள்…” என பிரலம்பன் சொல்ல “தேவையில்லை” என்றான். பிரலம்பன் உள்ளத்திலோடிய எண்ணத்தை உய்த்துணர்ந்துகொண்டு “ஆம், இங்கே காற்றிலிருந்தும் சுவர்களிலிருந்தும்கூட செயலின்மையும் சோர்வும் வந்து மூடுகிறது” என்றான்.
அவர்கள் முற்றத்தை அடைந்ததும் அங்கே நின்றிருந்த காவலன் “அருகேதான். நடந்தே செல்லமுடியும்” என்றான். அபிமன்யூ மறுமொழி சொல்லாமல் நடந்தான். முற்றத்தில் வெயில் எரிந்துகொண்டிருந்தது. கூரைகள் அனைத்தும் அனல்கொண்டிருந்தன. பறவைகள் மரக்கிளைகளுக்குள் ஒடுங்கிவிட வானம் ஓசையில்லாமல் வெறுமை கொண்டிருந்தது. நிழல்கள் பணிந்தவையென உடன் வந்தன. காலடியோசைகள் அப்பாலெங்கோ கேட்டன.
சாத்யகியின் மாளிகைமுகப்பிலிருந்த காவலன் ஏதும் கேட்கவில்லை. அவர்கள் படிகளில் ஏறியபோது எதிரே வந்த ஏவலனும் வெற்றுவிழியையே அளித்தான். ஒவ்வொரு படிக்கும் உடலை உந்தி மேலெடுக்கவேண்டியிருந்தது. நடுவே ஒருமுறை மூச்சுவாங்குவதற்காக அபிமன்யூ நின்றான். இடைநாழியில் நிறைந்திருந்த காற்று பாழ்குளத்தில் நெடுநாள் தேங்கிய கரியநீர் என நெடியும் குளிரும் கொண்டிருந்தது. சுவர்களில் மழைநீர் கசிந்திறங்கி காய்ந்த வளையங்கள். தூண்களின் சந்திப்புகளிலெல்லாம் கரிபடிந்த சிலந்திவலைகள். அத்தனை மடிப்புகளிலும் மெல்லிய தூசுப்படலம். அந்த மாளிகை பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு அசைவிழந்து நின்றுவிட்டதுபோலிருந்தது.
காவலன் உள்ளே சென்றபின் வெளிவந்து அபிமன்யூவை உள்ளே செல்லும்படி பணித்தான். பிரலம்பன் வெளியே நிற்க அபிமன்யூ உள்ளே சென்றான். பீடத்தில் கால்களை நீட்டி கடும்களைப்பில் என அமர்ந்திருந்த சாத்யகி “வருக!” என்றான். அபிமன்யூ தன்னை அறிமுகம்செய்துகொண்டு முகமனுரைக்க அவன் மறுமுகமன் ஏதும் சொல்லாமல் அமரும்படி கைகாட்டினான். சாத்யகியின் இளமையான முகமே அபிமன்யூ நினைவிலிருந்தது. அவன் மீசையிலும் காதோரக்குழலிலும் நரை படிந்திருப்பதைக் கண்டதுமே அவன் உள்ளம் விலகிவிட்டது. அவன் விழிகளில் இருந்த அயன்மை மேலும் விலக்கம் அளித்தது.
சாத்யகி எதையேனும் கேட்பான் என அபிமன்யூ காத்திருந்தான். ஆனால் மடியில் இட்ட கைகளும் தொய்ந்த தோள்களுமாக சாத்யகி வெறுமனே நிலத்தை நோக்கிக்கொண்டிருந்தான். “நான் மாதுலரைக்கண்டு அழைத்துச்செல்ல வந்தேன்” என்றான் அபிமன்யூ. சாத்யகி தலையசைத்தான். “அங்கே அவரில்லாமல் ஒன்றும் நிகழாதென்று சொன்னார்கள். நிலமையை அறிந்திருப்பீர்கள்.” சாத்யகி “ஆம்” என்றபின் பெருமூச்சுடன் “ஆனால் நாம் இளையவரை எவ்வண்ணமும் எழுப்பவியலாது” என்றான். துடுக்கான குரலில் உரக்க “எழுப்பியாகவேண்டும். நான் வஞ்சினமுரைத்து வந்துள்ளேன்.” என்றான் அபிமன்யூ
சாத்யகி இதழ்கோட புன்னகை செய்து “இளையோனே, யாதவநிலத்தின் அரசியலைப்பற்றி உனக்கு என்ன தெரியும்?” என்றான். அபிமன்யூ “நான் இந்திரப்பிரஸ்தத்திலேயே இருந்தேன்… அங்கு முறையான ஒற்றர்படையும் இல்லை” என்றான். சாத்யகி “நிலைமை இதுதான், இன்று யாதவப்பெருநிலம் இளைய யாதவருடன் இல்லை. அவர் முற்றிலும் தனித்துவிடப்பட்டிருக்கிறார்” என்றான். “ஏன்?” என்றான் அபிமன்யூ திகைப்புடன். “ஏன் என்ற வினாவுக்கு இதுவரைக்கும் நூறு விளக்கங்கள் வந்திருக்கும், அனைத்தும் சரியானவை. ஆனால் அவை எவையும் விடைகள் அல்ல” என்றான் சாத்யகி. “மூத்த யாதவர் இளையவரிடம் கருத்துமாறுபாடுகொண்டு மதுராவுக்குச் சென்று பதினான்காண்டுகளாகின்றன. அறிந்திருப்பாய்.” “ஆம்” என்றான் அபிமன்யூ.
“அனைத்தும் தொடங்கியது விருஷ்ணிகளுக்கும் அந்தகர்களுக்கும் பிற யாதவகுலங்களுடன் எழுந்த பூசலாக” என்றான் சாத்யகி. “போஜர்களும் குங்குரர்களும் ஹேகயர்களும் இளையயாதவருடன் முரண்கொண்டு பிரிந்துசென்றனர். அஸ்வத்தாமாவின் சொல்லுறுதியைப் பெற்றுக்கொண்டு தங்களுக்கென ஓர் அரசை அமைக்க முயன்றனர். கார்த்தவீரியரின் மாகிஷ்மதியை மீட்டமைக்கவேண்டுமென்ற கனவு ஹேகயர்களை ஆட்டுவித்தது. இளைய யாதவர் தன் அனல்பேருருவை எடுத்து அவர்களை முற்றழித்தார். மறுசொல் ஒன்று அவர்களின் கனவிலும் எழாதபடி செய்தார்.”
“இன்று யாதவகுலங்களிடையே பூசலேதும் இல்லை. படைகள் ஒருங்குதிரண்டுள்ளன. ஆட்சி சீராக சென்றுகொண்டிருக்கிறது. யாதவர்களை எண்ணி அயலார் அச்சம் கொண்டுள்ளனர். சொல்லப்போனால் இங்கே இளைய யாதவர் பெரும் படைஎழுச்சி ஒன்றுக்காக ஒருங்குசெய்கிறார் என்றே பலரும் நம்புகின்றனர்” என்று சாத்யகி தொடர்ந்தான். “ஆனால் இன்று யாதவநிலமும் குலமும் பிறிதொருமுறையில் பிளந்துள்ளன. முழுமையாக.” அபிமன்யூ வினாவுடன் நோக்க சாத்யகி மெல்ல சிரித்து “மானுட உள்ளம் கொள்ளும் விந்தைநிலைகள் தெய்வங்களையே குழப்பிவிடும் போலும். இன்று விருஷ்ணிகளும் அந்தகர்களும் போஜர்களும் குங்குரர்களும் ஹேகயர்களும் ஒன்றாக இணைந்துள்ளனர். அனைவருக்கும் பொது எதிரியென்றிருப்பவர் இளைய யாதவர்.”
அபிமன்யூ “அதெப்படி?” என்றான். “இது அவர் உருவாக்கிய அரசு அல்லவா?” .சாத்யகி “ஆம், அதுவேதான் சிக்கல். சிம்மத்தின் உறுமல் நரிகளை ஒற்றைக்கூட்டமாக்குவதுபோல இளையவரின் ஆணை யாதவர்களை இணைத்தது என்கின்றனர் கவிஞர். யாதவர்களால் இணையவே முடியாதென்பதுதான் வரலாறு.ஆயிரம் கைகொண்ட கார்த்தவீரியரால்கூட அவர்களை இணைக்கமுடியவில்லை. ஹேகயகுடி பிறரை வென்றதனூடாக அவர் ஓர் அரசை நிறுவினார், அவ்வளவுதான். இளைய யாதவர் இணைத்தார். இவர்கள் ஒவ்வொருவர் நெஞ்சிலும் அச்சத்தை நிறுவினார். அந்த அச்சமே இன்று ஐயமாகவும் விலக்கமாகவும் ஓர் உச்சநிலையில் வெறுப்பாகவும் ஆகியிருக்கிறது.”
“துவாரகை இளைய யாதவரை வெறுக்கும் என்று நம்பமுடியவில்லை” என்றான் அபிமன்யூ. “இன்று துவாரகையில்கூட எவரும் அதை நம்பமாட்டார்கள். ஏன், வெறுப்பவர்களேகூட தங்களுடையது வெறுப்பு என அறிந்திருக்கமாட்டார்கள்” என்றான் சாத்யகி “இன்று துவாரகையில் ஐந்துகுலங்களுக்கும் மூத்தவர் நல்லவர் என்றும் குடிகள்மேல் அன்புகொண்டவர் என்றும் தோன்றிவிட்டிருக்கிறது. இளையவர் தன்நோக்கு மட்டுமே கொண்டவர், குடிகளை தனக்கென கையாள்பவர், எளியோர் மேல் அன்பில்லாதவர் என்கிறார்கள். அவருடைய விளையாட்டும் தழுவலும் வெறும் நடிப்பு என உண்மையிலேயே நம்புகிறார்கள்.”
“தாங்கள் அவரை மிகையாகக் கொண்டாடிவிட்டதாக குடித்தலைவர்கள் எண்ணுகிறார்கள்” என்றான் சாத்யகி. “விருஷ்ணிகுடித்தலைவர் என்னிடம் நேரில் அதை சொன்னார். என்ன இருந்தாலும் இவர் ஓர் யாதவர். பிறப்பின் எல்லை ஒன்றுள்ளது. அடையும் வளத்தின் எல்லையும் சேரும் நட்புகளின் எல்லையும் உள்ளது. பறவையின் வானம் முட்டைக்குள்ளேயே வரையறுக்கப்பட்டுவிட்டது. தன் சிறகுகளை அறிவதே பறவையென அது ஆவதன் முதல்படி. சிறகுகளின் ஆற்றலையும் எல்லையையும் அறிவதே பறவையின் மெய்மை என்றார்.”
“அவர் முகத்தைக்கூட நினைவுறுகிறேன். அதிலிருந்தது வெறுப்போ கசப்போ அல்ல. அச்சமும் ஐயமும் கூட அல்ல. எண்ணி எடுத்த உறுதிப்பாடென்றே தோன்றியது. நான் அவரிடம் இளைய யாதவரின் சிறப்புகளை சொல்ல வாயெடுத்தேன். கையமர்த்தி என்னை நிறுத்தி அவர் மேலும் பேசலானார். ஆம், இவர் சிலவெற்றிகளை பெற்றார். நகரொன்றை அமைத்து விரிநிலம் மீது ஆட்சியையும் அடைந்தார். இளமையிலேயே அவ்வெற்றிகளை இவர் பெற்றமையால் நாங்கள் நிலைகுலைந்துவிட்டோம். இவரை ஆழியும்சங்குமாக மண்நிகழ்ந்த விண்ணவன் என்றே கொண்டாடத் தலைப்பட்டோம். அந்த மிகைநம்பிக்கையை அவருக்கு நாங்களே அளித்தோம். தன் மதியிலும் ஊழிலும் அவர் கொண்டிருக்கும் மிகையெண்ணம் முன்பு நரகனும் ஹிரண்யனும் கொண்டிருந்ததற்கு நிகர். அதை தெய்வங்கள் பொறுக்கா என்றார்.”
அபிமன்யூ “எதிரிகள்தான் இளைய யாதவரை நம்புகிறார்கள் போல” என கசப்புடன் சொன்னான். “ஆம், அவர் வெல்லப்படமுடியாதவர், எதிரிகளை வேர்த்துளியும் எஞ்சாது அழிக்கும் இரக்கமற்றவர் என அறிந்திருப்பதனால்தான் நம்மைச்சூழ்ந்துள்ள ஷத்ரியர் அஞ்சி அடங்கியிருக்கிறார்கள். தங்கள் நடுவே ஒரு யாதவநிலம் உருவாகி கொடிகொண்டு பரவுவதை அவர்கள் எண்ணி எண்ணி மருகுகிறார்கள் என்பதில் ஐயமே இல்லை” என்றான் சாத்யகி. “ஆனால் நம்மவரின் எண்ணம் பிறிதொன்று. விருஷ்ணிகுலத்தலைவர் என்னிடம் சொன்னார், அத்தனை படைவெற்றிகளும் இறையருளாலும் சூழலின் விசைமுரண்களாலும் நிகழ்வதே என. குருகுலத்துடன் யாதவர் கொண்ட மண உறவு ஷத்ரியர்களை அச்சுறுத்தியது. பாண்டவப்படையைக்கொண்டே இளையவர் மதுரையை வென்றார். அஸ்தினபுரியின் படைவல்லமையை எண்ணியே யாதவநிலத்தை முற்றழிக்க முயலாமல் விலகினார். பாண்டவர்களைக்கொண்டே ஜராசந்தனை இளையவர் கொல்லமுடிந்தது. பாரதவர்ஷத்தில் ஷத்ரியர் பகைமுரண் கொண்டு நின்ற இடைவெளியில் உருவானதே துவாரகை. அந்த வெற்றிகளை பயன்படுத்திக்கொண்டு தன்னை தக்கவைப்பதே யாதவர்கள் செய்யவேண்டியது என்றார்” சாத்யகி சொன்னான். “அத்தனை தெளிவாக அரசுசூழ்கையில் ஈடுபடுபவர் அல்ல அவர். அச்சொற்கள் அவர்களுக்கிடையே சொல்லிச்சொல்லி கூரேற்றம் கொண்டவை… அவர்களின் குரல்களின் தொகையாக அதுவே எழுந்து நின்றுள்ளது.”
“இன்று நிலைமை முழுமையாக மாறிவிட்டது என்று அனைவரும் எண்ணுகிறார்கள். இந்திரப்பிரஸ்தம் தோற்றுவிட்டது. இனி அது எழுவதற்கான எந்தத் தடயமும் இல்லை. அவர்களின் படைகள் சிதறிவிட்டன. மகதத்தின் வீழ்ச்சிக்குப்பின் அஸ்தினபுரி இன்று அத்தனை ஷத்ரியர்களாலும் ஏற்கப்பட்ட தலைமையாக ஆகிவிட்டிருக்கிறது. இன்று ஷத்ரியர்கள் எண்ணினால் துவாரகையை அழிப்பது கீரையைக் கிள்ளுவதுபோல என்று குங்குர குடித்தலைவர் சொன்னார். ஆகவே ஷத்ரியர்களிடம் முரண்பாடில்லாமல் இந்த காலகட்டத்தைக் கடப்பது மட்டுமே யாதவர்கள் செய்யக்கூடும் உகந்த செயலாக இருக்கமுடியும் என்றார்” என்றான் சாத்யகி. அபிமன்யூ “அதாவது யாதவர் தங்கள் குடிவழக்கமான பிழைத்துக்கிடத்தலே வாழ்தல் என்னும் கொள்கைக்கு சென்றுவிட்டார்கள்” என்றான். “நன்று, குழியானை வட்டத்தையே வரையமுடியும்.”
சாத்யகி “அவர்களுக்கு இன்று மூத்தவர் உகந்தவராகத் தெரிவது அவர் துரியோதனரின் ஆசிரியர் என்பதனால்தான். பலராமர் ஒரு தருணத்திலும் தன் மாணவனை விட்டுக்கொடுத்துப் பேசுவதில்லை. சூதில் நகரைக் கவர்ந்தது மட்டுமல்ல அரசியை அவைநடுவே இழிவுசெய்ததும்கூட அவருக்கு பிழையெனப் படவில்லை. துரியோதனருடன் பலராமருக்கு இருக்கும் நல்லுறவு யாதவர்களுக்கு குடித்தெய்வங்கள் அளித்த பெரும்வாய்ப்பு என அந்தகர்குலத்தலைவர் என்னிடம் சொன்னார். அவ்வுறவை பேணிக்கொள்வதன் வழியாக ஷத்ரியர்களை அஞ்சி அகற்றமுடியும் என அனைவருமே எண்ணுகிறார்கள். ஆகவே அவரை தங்கள் முதற்தலைவர் என எண்ணுகிறார்கள். யாதவக்குலமுறைப்படியும் மூத்தவருக்குரியதல்லவா யாதவ நிலம் என்று என்னிடம் ஒரு முதியவர் கேட்டார்.”
“தன்னலம் போல உரிய சொற்களைக் கொண்டு வந்து தருவது பிறிதொன்றில்லை” என்றான் அபிமன்யூ. ”அவர்கள் தங்கள் சொற்களை வரலாற்றில் ஒலிக்கவிடுவதாக எண்ணுகிறார்கள். தொலைவுப்போருக்கு வில், அணுக்கத்தில் வாள் என்றல்லவா போர்முறை? நேற்று நமக்கு இளைய யாதவர் தேவைப்பட்டார். இன்று மூத்தவர் தேவைப்படுகிறார். போர்ச்சூழல் மாறியபின்னரும் படைக்கலத்தை மாற்றாமலிருப்பது அறிவின்மை என்றார் விருஷ்ணிகுலத்தலைவர். இளையவரை ஆதரித்தால் அவர் தன் ஆணவத்தாலும் அறியாமையாலும் யாதவக்குடியை அழித்துவிடுவார் என அவர்கள் கூறினர். மறுசொல்லில்லாமல் நான் தலைவணங்கி விடைபெற்றேன்” என்றான் சாத்யகி. “உண்மையில் என் தந்தையரும் அவ்வாறே எண்ணுகிறார்கள்.”
“இளைய யாதவர் இவரது படைக்கலமா? நன்று. அறியாமைக்கு எல்லை என ஒன்று இருக்கவியலாதென்று அறிந்துதான் சொல்லியிருக்கிறார்கள்” என்றான் அபிமன்யூ. சாத்யகி “எப்போதும் இப்படித்தான் இருந்திருக்கிறார்கள்” என்றான். “கார்த்தவீரியரின் அரசை அமைப்போம் என எழுந்தார்கள் ஹேகயர்கள். அவர்களின் குடித்தலைவர் என்னிடம் சொன்னார், கார்த்தவீரியனின் தோல்வியில் இருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று. அந்தணரையும் ஷத்ரியரையும் வெல்லமுடியாதென்பதை கார்த்தவீரியர் உணரவில்லை. தன் ஆயிரம் கைகளைக்கண்டு தெய்வங்கள் சினம்கொள்ளுமென்று எண்ணவில்லை. அக்கைகளை எண்ணி தருக்கினார். அவற்றை நம்பி களமிறங்கினார். அவர் அழிந்தபோது நம்மையும் இழுத்து வீழ்த்தினார். முப்பது தலைமுறைக்காலம் நாம் மண்ணோடு மண்ணாகக் கிடந்தோம். இன்று இறையருளால் மீண்டெழுந்திருக்கிறோம். மீண்டும் ஒருவனின் ஆணவத்திற்கு நம் மைந்தரையும் கன்றுகளையும் நிலத்தையும் பலிகொடுக்கவேண்டுமா என்றார்.”
“இவர்களை நம்பி இளைய மாதுலர் இல்லை என்பதை முகத்தின்மேல் காறி உமிழ்வதுபோல சொல்ல விழைகிறேன்” என்றான் அபிமன்யூ. “ஏதேனும் ஓர் அவை அமையும், அன்று சொல்கிறேன். மூத்தவரே, யாதவக்குடியும் பாண்டவர்களும் நீங்களும் நானும் மட்டுமல்ல, இப்பாரதவர்ஷமே இளைய யாதவரின் படைக்கலங்களே. முதன்மைப்படைக்கலங்கள் இரண்டே, பீமசேனரும் எந்தையும். இருகைகளிலும் அப்படைக்கலங்களை ஏந்தி அவரால் பாரதத்தை வெல்லமுடியும். அதுவே நிகழவிருக்கிறது” என எழுந்துகொண்டான்.
முதல்விடியலிலேயே அபிமன்யூ பிரலம்பனுடன் சப்தஃபலத்தைச் சூழ்ந்திருந்த காட்டுக்குள் சென்றுவிட்டிருந்தான். முந்தைநாள் இரவில் பிரலம்பனிடம் “நாம் இந்நகரில் இருக்கலாகாது. இங்கே திசைகள் அனைத்திலிருந்தும் சிலந்திவலைகள் கிளம்பி வந்து நம்மை பற்றிக்கொள்கின்றன…” என்று சொன்னான். பிரலம்பன் “நிமித்திகர்கள் நாளை அந்தியில் அவைகூடி நாள்கணித்துச் சொல்வதாக கலிகர் சொன்னார்” என்றான்.
அபிமன்யூ “அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் ஏதோ செய்யவிருக்கிறேன். அது என்ன என்று எனக்குத்தெரியவில்லை. அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்” என்றான். பிரலம்பன் “தாங்கள் என்ன செய்ய இயலும்?” என்றான். “மூடா, நான் ஏதும் செய்வதற்கில்லை என்றால் நான் ஏன் இங்கு வரவேண்டும்?” என்றான் அபிமன்யூ. அந்தச் சொல்லின் பொருள் புரியாமல் இருமுறை இமைத்துவிட்டு பிரலம்பன் தலையசைத்தான்.
சப்தஃபலத்தின் தென்மேற்குமூலையில் இருந்த சிற்றாலயத்தில் சிறிய கற்சிலையாக கைகளில் மலரும் அமுதகலமும் சுடரும் கொண்டு அருட்கை மலர்ந்து அமந்திருருந்த சப்தஃபலகன்னிகை விருஷ்ணிகுலத்தின் துணைக்குடியான மாதனிகர்களின் மூன்று கொடிவழிகளுக்கும் பொதுவான தெய்வம். இருண்டகாட்டின் இலைவரிப் பாதையினூடாக அவர்கள் அங்கே சென்றடைந்தபோது மென்வெளிச்சம் எழுந்திருந்தது. ஆலயத்திற்குள் அமர்ந்திருந்த தேவியை நோக்கி கைகளைக் கட்டியபடி அபிமன்யூ நின்றான்.
பிரலம்பன் “மாதனிகர்களின் மூதாதையாகிய மதனர் இங்கே குடிவந்தபோது அவருக்கு முதல்பசு கிடைத்த இடம் இது என்கிறார்கள்” என்றான். அபிமன்யூ தலையசைத்தான். “இளைய யாதவர் இங்கே வந்து இருண்டு அமர்ந்தபின்னர் சென்ற பல ஆண்டுகளாக இங்கே பூசெய்கை என ஏதும் நிகழவில்லை என்றார்கள். இங்கு வரும்பாதையைப் பார்த்தபோது அதை நானும் உணர்ந்தேன். அவை காட்டுவிலங்குகள் மட்டுமே காலடிவைப்பவை.” அபிமன்யூ சுற்றிலும் நோக்கி அங்கே மலர்ந்திருந்த வெண்மந்தார மலர்களைக் கொய்து கொண்டுவந்து தேவியின் காலடியில் வைத்தான். வணங்கி நிமிர்ந்து “மாமங்கலை அன்னையின் அருளால் மாதுலர் விழித்தெழவேண்டும்” என்றான்.
அவர்கள் காட்டில் வேட்டையாடினார்கள். வானில் பறக்கும் புட்களின் சிறகுகளில் ஒன்றை மட்டும் அம்பால் வீழ்த்துவதே அபிமன்யூவிற்கு உகந்த வில்லாடல் என்பதை பிரலம்பன் கண்டான். வியந்து வாய்திறந்து நின்ற அவனை நோக்கி “செலுத்தப்பட்ட அம்புகளை மீண்டும் சேர்த்துக்கொள்வோம், தீர்ந்துவிட்டது” என்றான். “இக்காட்டுக்குள் அவற்றை எப்படி…” என பிரலம்பன் தயங்க “நான் இங்கிருந்தே கற்களை வில்லில் வைத்து அடிக்கிறேன். அவை சென்று விழும் இடங்களில் அம்புகளும் கிடக்கும்… சென்று நோக்குக!” என்றான். அம்புகளைச் சேர்த்து மீண்டுவந்த பிரலம்பன் “இவை மானுடருக்கு இயல்வன என்று சிலநாட்களுக்கு முன்பு எவரேனும் சொல்லியிருந்தால் சூதர்கதை எனச் சொல்லியிருப்பேன்” என்றான்.
“ஒற்றைப்புள்ளியில் உளம்குவிப்பதன் வெற்றி இது, பிறிதொன்றுமில்லை. ஒவ்வொரு நாளும் நாம் இத்தகைய பலநூறு கைவிழியுளப் பயிற்சிகளை செய்துகொண்டுதானிருக்கிறோம்…” என்றான் அபிமன்யூ. பிரலம்பன் கிளைகளுக்குள் புறாவின் சிறகடிப்பைக் கண்டான். அவர்கள் அங்கே வந்ததுமே இடையில் பொதிந்து வைத்திருந்து அரண்மனைக்குத் திருப்பியனுப்பிய புறா அது. அவன் கைநீட்ட அது வந்து அமர்ந்தது. அதன் காலில் இருந்த செய்தியில் அபிமன்யூ உடனடியாக அரண்மனைக்குத் திரும்பும்படி ஸ்ரீதமரின் ஆணை இருந்தது.
அபிமன்யூ “விழித்துவிட்டார். ஆம் அதுதான்… நான் எண்ணியிருந்ததேதான். நான் வருவதற்காகவே இவையனைத்தும் இவ்வாறு காத்திருந்தன… செல்வோம்” என பரபரத்தான். புரவியை மேலும் மேலும் உதைத்து பாயவிட்டான். அவனைத்தொடர்ந்து சென்ற பிரலம்பன்மேல் மரக்கிளைகள் வளைந்து வந்து அறைந்தன. முட்கள் அவன் உடலை கீறிச்சென்றன. இரு சுனையோடைகளை தாவிக்கடந்து மலைச்சரிவில் உருளைப்பாறைகள் உடன் உருண்டிறங்கப் பாய்ந்து சப்தஃபலம் நோக்கி சென்றான். உடன்சென்ற பிரலம்பன் மூச்சிளைத்தபடி “இளவரசே, புரவியில் கால்கள் ஒடிந்துவிடக்கூடும்… “ என்று கூவிக்கொண்டே இருந்தான்.
அரண்மனையை அடைந்து காவல்மாடத்தை கடப்பதற்குள் காவலர்தலைவன் சதமன் எதிரே வந்தான். “இளவரசே, உடனே அமைச்சரை சந்திக்கும்படி ஆணை” என்றான். “அரசர் எழுந்துவிட்டாரா?” என்றான் அபிமன்யூ. “யார்? அரசர் மதுராவில் அல்லவா இருக்கிறார்?” என்றான் சதமன். அபிமன்யூ ஒருகணம் அவனை நோக்கிவிட்டு புரவியைச் செலுத்தி முன்னால் சென்றான். முற்றத்தில் இறங்கி படிகளில் ஏறி ஸ்ரீதமரின் அமைச்சுநிலைக்குச் சென்றபோது வழியிலேயே கலிகரை கண்டான். “மாதுலர் மீண்டுவிட்டார் அல்லவா?” என்றான். “யார்? இளையவரா? மெய்யாகவா? நானறியேன்” என்றார் அவர்.
அவன் அமைச்சுக்குள் நுழைவதற்குள் ஸ்ரீதமர் எழுந்து அவனை நோக்கி வந்து “கலிகரிடம் நீங்கள் கேட்டது செவிப்பட்டது. நான் அழைத்தது பிறிதொன்றுக்காக” என்றார். அபிமன்யூ தளர்ந்து “என்ன?” என்றான். “அமர்க!” என கைகாட்டி அமர்ந்துகொண்ட ஸ்ரீதமர் இரு ஓலைச்சுருள்களை எடுத்து அவனிடம் அளித்து “நம் எல்லையிலிருந்து வந்த செய்தி…” என்றார். அபிமன்யூ அவற்றை விழியோட்டாமல் பீடத்திலிட்டுவிட்டு “சொல்க!” என்றான். “நம் எல்லைகள்மேல் பாணாசுரனின் படைகள் தாக்குதல் நடத்துவது அடிக்கடி நிகழ்ந்துவருகிறதென அறிந்திருப்பீர்கள்.”
“அறிந்திருக்கவில்லை” என்றான் அபிமன்யூ. “அறிக. இப்பூசல் தொடங்கி நெடுநாட்களாகின்றது ஹிரண்யகசிபுவின் மைந்தர் பிரஹலாதரில் இருந்து பிரிந்த ஏழு குலங்களில் ஒன்று வைரோசனர். வைரோசனர்களிலிருந்து உருவானது மகாபலி பிறந்த பாலிகம் என்னும் குடி. அதிலிருந்து பிரிந்துருவான மகாபாணம் என்னும் குடியில் பிறந்தவர் பாணர். மகாபலியின் காலத்திலேயே முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு அசுரர் தங்கள் தொல்நிலங்களை கைவிட்டுவிட்டு அடர்காடுகளுக்குள் சென்றுவிட்டனர். அதன்பின் அவர்களின் வரலாறென்பதே நிலங்களை விட்டு பின்வாங்குவதுதான். பாணர் மெல்லமெல்ல அத்தனை தொல்குடி அசுரர்களையும் ஒருங்கிணைத்து ஆற்றல்மிக்க அரசொன்றை அமைத்தார். சோணிதபுரம் இன்று ஷத்ரியர்களே கண்டு அஞ்சும் பெரிய கோட்டைநகர்.” என்றார் ஸ்ரீதமர்.
“அசுரகுடிகள் பெருகிக்கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு தங்கள் தொல்நிலங்கள் அனைத்தும் தேவையாகின்றன” என்றார் ஸ்ரீதமர். “அவர்களின் தொல்நிலங்களில் பெரும்பகுதி இன்று யாதவர்களின் நிலம். ஆகவே நமக்கும் அவர்களுக்கும் இடையேயான மோதலை தவிர்க்கவேமுடியாது.” அபிமன்யூ “நாம் அவர்களின் நிலங்களை பிடுங்கிக்கொண்டோமா?” என்றான். “இளையோனே, நிலத்தைக் கைப்பற்றாமல் அரசு இல்லை. அசுரர்நிலங்களையும் நிஷாதர்நிலங்களையும் வென்று எரியூட்டி காட்டை அழித்து புல்வெளியாக்கினால் மட்டுமே யாதவர் பெருகமுடியும். யாதவர்நிலத்தைப்பிடுங்கி வேலிகட்டி நீர்நிறைத்தாலொழிய மருதநிலம் உருவாகாது…”
“இந்தத் தொல்நகர்கூடஅசுரர்களுக்குரியதே” என்று ஸ்ரீதமர் தொடர்ந்தார். “இதை முன்பு சப்தபாணம் என அழைத்தனர். அடர்காடு இது. இங்கே தன் மேய்ச்சல்நிலத்தை அமைத்து மதனர் குடிபெருக்கினார்.” அபிமன்யூ “பாணர்கள் இப்போது எல்லைகளை தாக்கியிருக்கிறார்களா?” என்றான். ஸ்ரீதமர் “அவர்கள் எல்லை கடந்து வந்து நம் ஆநிரைகளைக் கவர்ந்துசெல்வது சென்ற பத்தாண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. நம் மேய்ச்சல்நிலங்களில் மூன்றிலொன்றை அவர்கள் கையகப்படுத்தியும்விட்டார்கள். நாம் ஒன்றும் செய்யமுடியாத நிலையில் உள்ளோம். தொடர்ந்து எல்லைகளை பின்னிழுத்துக்கொண்டிருக்கிறோம்” என்றார் ஸ்ரீதமர்.
“அவர்கள் நம்மை போருக்கு அறைகூவுகிறார்கள். இதுவரை ஏழுமுறை பாணரின் ஓலை வந்துவிட்டது. துவாரகை பாணரின் மேல்கோன்மையை ஏற்றுக்கொள்ளவேண்டும், தொல்நிலங்களை அளித்து பின்வாங்கவேண்டும், ஆண்டுக்கு இருமுறை கப்பம் வழங்கவேண்டும், அசுரவேதத்தை இறைச்சொல் என ஏற்கவேண்டும், பாணருக்கு யாதவ இளவரசி ஒருத்தியை மணம்புரிந்து கொடுக்கவேண்டும் என ஐந்து கோரிக்கைகள். அவற்றுக்கு நாம் இன்றுவரை மறுமொழி அளித்ததில்லை. நாம் அஞ்சும்தோறும் ஒவ்வொருமுறையும் கோரிக்கைகள் கூடிவருகின்றன.”
“மூத்தயாதவர் என்ன சொல்கிறார்?” என்று அபிமன்யூ சினத்துடன் கேட்டான். “மதுராவுக்கும் பாணரின் ஓலைகள் சென்றன. பாணருக்கு எதிராக அஸ்தினபுரியின் படைகளையும் அஸ்வத்தாமரின் படைகளையும் திரட்டி போர்மேற்கொள்ளவிருப்பதாக அவர் தன் அவையில் அறிவித்தார். ஆனால் குடித்தலைவர்களும் அமைச்சர்களும் பொறுத்திருக்கும்படி அவருக்கு சொன்னார்கள். பாணர் படைமேற்கொண்டால் வடக்கெல்லையில் இருக்கும் சப்தஃபலத்தைத்தான் முதலில் தாக்குவார். இளைய யாதவரை அவர் வெல்லட்டும், அதன்பின் தாங்கள் சென்று பாணரை வென்றால் யாதவருக்குத் தலைவர் எவர் என்ற வினாவே எழாது என்றார்கள். மூத்தவர் காத்திருக்கிறார்.”
அபிமன்யூ பெருமூச்சுடன் “என்னை சோர்வுறச்செய்பவை இந்த அரசுசூழ்தல்கள்தான். இவை அறிவால் இயற்றப்படுபவை என்கிறார்கள். அது பொய், முழுமையாகவே ஆணவத்தால் இயற்றப்படுபவை இவை” என்றான். ஸ்ரீதமர் “எல்லைகள் மேல் தாக்குதல் நிகழ்ந்துகொண்டிருக்கையிலேயே பாணரின் ஓலை வருவது முன்னரும் இருமுறை நிகழ்ந்துள்ளது. இம்முறை பாணரின் ஓலையில் நான் இதுவரை காணாத குறிப்பு ஒன்று உள்ளது. நான் அச்சொற்றொடரை படிக்கிறேன்” என்றார் ஸ்ரீதமர். “கணம்பிந்தாமல் உங்கள் தூதனொருவன் என் அவைக்கு வருவான் என்றும் இளைய யாதவன் என் அடிபணிந்து இரந்து மன்றாடும்படி நான் கைப்பற்றியிருப்பதென்ன என்று அறிந்துசெல்வான் என்றும் என் ஆணைகளை அவனால் புரிந்துகொண்டு அங்கே வந்து சொல்லமுடியும் என்றும் நம்புகிறேன்.”
அபிமன்யூ “என்ன அது?” என்றான். “வெறும் மிரட்டல்…” ஸ்ரீதமர் “இல்லை, வீண்சொல் அல்ல. நாம் அரிதெனக்கருதும் எதுவோ ஒன்று அவரிடம் உள்ளது” என்றார். அபிமன்யூ “நாம் என்றால்…?” என்றான். “சொல் சூழ்க! இளைய யாதவருக்கு மிக அரிதென்று இருப்பது ஒன்று அவரிடம் உள்ளது. அதைப்பெற இளையவர் அவரிடம் இரந்து மன்றாடவும் கூடும்.” அபிமன்யூ “இதை நாம் இளைய மாதுலரிடம் தெரிவிக்கவேண்டாமா?” என்றான். “தெரிவித்துவிட்டேன், அதே கல்முகம். அதே இருண்ட தண்மை” என்றார் ஸ்ரீதமர். அபிமன்யூ “நாம் என்ன செய்வது?” என்றான்.
“நாம் ஒரு தூதரை அனுப்புவதொன்றே வழி…. அரிய பணயப்பொருள் என அவர் சொல்வதென்ன என்று அறிந்துவரவேண்டும். அது நம் அரசகுலமகளிரில் எவரோ என நான் ஐயுறுகிறேன். அவர் நம் மகளிரை வென்று குருதியுறவுபூண விழைவுகொண்டிருந்தார்… ஆகவே நமக்கு பொழுதில்லை. தூதர் சென்று அவரிடம் பேசவேண்டும். அவர் சென்று மீள்வதுவரை நமக்கு காலம் கிடைக்கும். அவரிடமிருப்பது யாதவர்குலத்து இளவரசியரில் எவரோ என்றால் ஒருவேளை அந்த யாதவகுலம் நம்முடன் படைதிரண்டு வரக்கூடும். நல்லூழ் இருந்தால் பிற யாதவர்களும் சினம் கொண்டு எழக்கூடும். இறையாணை என்றால் இளையவர்கூட தருணம் கனிந்து விழித்தெழக்கூடும்…”
“எல்லாமே வாய்ப்புகள்தான்” என்றான் அபிமன்யூ. “ஆம், நாம் வேறு எதை நம்புவது? இங்கிருந்து உடனே கிளம்பிச்செல்ல தூதர் என நீங்களே இருக்கிறீர்கள். சென்று அவரிடம் பேசி மீளுங்கள்” என்றார் ஸ்ரீதமர். “நானா?” என்றான் அபிமன்யூ. “நான் வந்த பணி வேறு. அத்துடன் மூத்தவர் சாத்யகி இருக்கையில்…” ஸ்ரீதமர் “அவர் இங்கே இருக்கவேண்டும். எண்ணியிராக்கணத்தில் அசுரர் இந்நகரை தாக்கி வெல்லக்கூடும். ஒருவேளை இந்தச்செய்தியே அவரை நகரைவிட்டு விலகச்செய்வதற்கான சூழ்ச்சியாக இருக்கவும்கூடும்.”
அபிமன்யூ “நான் செல்கிறேன்” என்றான். “ஆனால் நாம் தூதுசென்றால் அஞ்சிவிட்டோம், பேசி வெல்ல முயல்கிறோம் என்றல்லவா பொருள்? சாத்யகி இருக்கிறார், என் வில்லுடன் நான் துணையிருப்பேன். படைகொண்டு சென்று பாணனுக்கு யாதவரின் ஆற்றல் என்ன என்று காட்டுவோம்.” ஸ்ரீதமர் சிரித்து “சப்தஃபலத்தின் வேட்டுவர்கள் அசுரரை வெல்வதா?” என்றார். “நான் வில்விஜயரின் மைந்தன், என்னை வெல்பவர் இப்புவியில் இல்லை” என்றான் அபிமன்யூ. “நீங்கள் தனியாகச் செல்ல இயலுமா என்ன? படைவேண்டாமா? இந்நகரைக் காக்கவே படைகள் இல்லை” என்றார் ஸ்ரீதமர்.
அபிமன்யூ கசப்புடன் “என்ன ஒரு சிறுமை!” என்றான். “ஆம், சிறுமைதான். ஏனென்றால் நம் நிலத்தில் கதிரவன் எழுவதேயில்லை. ஆகவே நாம் அஞ்சுகிறோம். நான் எண்ணுவன நிகழாவிட்டால் பணிந்தும் நயந்தும் அவர் கோருவனவற்றை அளித்து அப்பணயத்தை மீட்கவிருக்கிறோம். இதுதான் உண்மை” என்றார் ஸ்ரீதமர். “நீங்கள் ஷத்ரியர், வில்விஜயரின் மைந்தர். ஆகவே உரியமுறையில் தூதனுப்பியிருக்கிறோம் என பாணர் எண்ணுவார். அசுரர்கள் தாங்கள் மதிக்கப்படவில்லை என எண்ணினால்தான் பெருஞ்சினம் கொள்வார்கள். உங்களைக் கண்டதும் அவர் சற்று உளம் குளிரக்கூடும். நற்சொற்களை சொல்லவும் கூடும்.”
“நான் மூத்தவர் சாத்யகியிடமும் பேசிப்பார்க்கிறேன். என்ன செய்யமுடியும் என பார்ப்போம்” என்றபடி அபிமன்யூ எழுந்துகொண்டான்.