எழுதழல் - 10

மூன்று : முகில்திரை – 3

fire-iconஅபிமன்யூ சாத்யகியின் அறைக்குள் நுழைந்து முகமன்கள் ஏதுமில்லாமலேயே “நாம் நம்மை கோழைகள் என அறிவித்துக்கொள்ளவேண்டியதில்லை, மூத்தவரே. எனக்கு இங்கிருக்கும் படை எதுவாக இருந்தாலும் அது போதும். இவர்கள் வேட்டுவர்கள். விற்திறன்கொண்டவர்கள். இவர்களைக்கொண்டே நான் பாணரை வென்று மீள்கிறேன்” என்றான். சாத்யகியின் அருகே சென்று “என் வில்திறனை நீங்கள் அறியமாட்டீர்கள். எந்தை எக்களத்திலும் தோற்றதில்லை. நான் அவர் மைந்தன். என்னை கிருஷ்ணார்ஜுனன் என்றே அழைப்பார்கள் என் ஆசிரியர்கள். ஒரு வாய்ப்பு கொடுங்கள்…” என்று அவன் கைகளை பற்றினான்.

ஏடு ஒன்றை நோக்கிக்கொண்டிருந்த சாத்யகி அதை கீழே வைத்துவிட்டு சீரான குரலில் “நாம் எதன்பொருட்டு அழைக்கப்பட்டிருக்கிறோம் என்றே நமக்குத்தெரியாது. போர்முகம் கொள்வதனால் அவர்கள் பணயப்படுத்தியிருப்பவருக்கு என்ன இடர் வருமென்றும் அறியோம்” என்றான். “எதுவானாலும் முதலில் ஓர் அடியைப் போடாமல் அவர்கள் முன்  சென்று நிற்கலாகாது. மூத்தவரே, எந்த பேரத்திற்கும் முன்னால் நம் ஆற்றலைக் காட்டியாகவேண்டும். இப்போது நாம் படைகொண்டு எழுவோம் என அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். குடலைக் கூர்வாள் என நான் அவர்களின் நிலத்தை ஊடுருவிச் செல்கிறேன். பேரழிவை உருவாக்குகிறேன்.”

அவன் கைகளைத்தூக்கி உரத்தகுரலில் “ஆம், அவர்களின் ஊர்களை எரித்தழிப்பேன். நீர்நிலைகளை சூறையாடுவேன். களமுற்றங்களில் தலைகளை உருட்டுவேன். எண்ணிக்கொள்க, அவர்களின் ஆயிரம்பெண்களை சிறைப்பிடித்து வைப்பேன். அவர்கள் அஞ்சி மறுவினை சூழ்வதற்குள் பேச்சுக்கு ஒருக்கமென்று அறிவிப்பேன். அவர்கள் முன் நிகரென்றமர்ந்து பேசுவேன்… நம்புங்கள். இல்லையேல் நாம் இழப்பது மிகுதி. ஒருவேளை இந்த பேரத்தில் நாம் வெல்லக்கூடும். ஆனால் நெடுநோக்கில் தோற்றவர்களாவோம். இது மீண்டும் மீண்டும் நிகழும்…”

சாத்யகி “நீ சொல்வதுபோல நிகழுமென்றால் நன்றே. இல்லையேல் என்ன ஆகும்?” என்றான். “என்ன இது? களம்கண்டவரல்லவா நீங்கள்? எந்தையின் முதல் மாணாக்கரல்லவா? ஆகவேதானே உங்களிடம் பேசவந்தேன். ஸ்ரீதமர் அமைச்சர், அவருக்கு போரின் உளநிலைகள் புரியாது… மூத்தவரே, போருக்குப்பின் தோல்வியடைந்தால் என்ன செய்வதென்று எந்த ஷத்ரியனும் எண்ணக்கூடாது. தோல்வியை எண்ணிவிட்டாலே தோல்விக்குரிய தெய்வமாகிய அபஜயை வந்து அருகே நின்றுவிடுவாள். துயரால் கனிந்த இனிய முகம் கொண்டவள். கண்ணீர் நனைந்த மெல்லிய சொற்களால் உரையாடுபவள். குளிர்ந்தவள். பின்னிரவின் காற்றுபோல மலர்மணம் கொண்டவள். வியாதிதேவிக்கும் நித்ராதேவிக்கும் இளையவள். அவள் வந்துவிட்டால் தவிர்ப்பது மிகமிகக் கடினம்…”

“இனிய சொற்களால் நம்முடன் உரையாடுவாள். முதலில் தோல்வியால் பெரிய இழப்பில்லை என்பாள். அச்சொல்லின் இனிமையை நம் உள்ளத்தின் ஒரு நுனி தொட்டாலும் மேலும் பற்றி அருகணைந்து போரில் தோற்பதும் வெல்வதும் நிகரே என்பாள். பின்னர் நம்மை தழுவியபடி வெற்றிக்காக போராடவேண்டாம், போராடுவது கடமை என்பதற்காக போராடும்படி சொல்வாள். நம்மை இறுகப்பற்றிக்கொண்டு வெற்றி என்பது வீண் ஆணவத்தையே அளிக்கும் என்பாள். தோற்றவர்களே காவியத்தலைவர்கள் என்பாள். தோல்வியடைவதன் வழியாக நாம் மேலும் ஆழமாக காலத்தில் நின்றிருக்க முடியும் என்பாள். இன்று தோற்பதே என்றைக்குமான வெற்றிக்கான வழி என்று சொல்வாள். தோல்வியே வீரனின் முழுமை என நம்மை நம்பவைப்பாள். தோல்வியை நோக்கி நாம் கைநீட்டுவோம். மன்றாடி அருகழைத்து நெஞ்சிலேற்றிக்கொள்வோம். தோற்றவர்களனைவரும் தோல்வியை விழைந்தவர்களே” என்றான் அபிமன்யூ.

சாத்யகி சலிப்புடன் “சப்தபதவியூகத்தின் முகப்புப்பாடல்… கற்றிருக்கிறேன்” என்றான். “ஆனால் நான் இங்கே எளிய படைத்தலைவனாக அமர்ந்திருக்கவில்லை. இளைய யாதவரின் நிலத்தைக் காக்கும் பொறுப்பும் எனக்குள்ளது. பாணாசுரரின் ஆற்றல் என்ன என்று நமக்குத் தெரியாது. அவரது திட்டங்களென்ன என்றும் அறியோம். இந்நகரில் இருந்துகொண்டு நாம் அறியும் உளவுச்செய்திகள் மிகமிகக்குறைவு. ஆழமறியா நீர்நிலையில் தலைகீழாகப் பாய்வதற்குப் பெயர் வீரமாக இருக்கலாம், அறிவுடைமை என்று இருக்க வாய்ப்பில்லை.”

அபிமன்யூ சோர்வுடன் “எத்தனை பெரும்படையுடையவர்கள் என்றாலும் அவர்களும் நம்மை அஞ்சுகிறார்கள். ஆகவேதான் நம்மை தாக்காமல் பதினான்கு ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள். நம்முடன் மணவுறவு கொள்ள விழைகிறார்கள் என்பதனாலேயே நம்மை முற்றழிக்கவோ முழுதும் விலக்கவோ அவர்கள் விரும்பமாட்டார்கள். மூத்தவரே, யாதவர்களின் பூசல்களையும் பிளவுகளையும் நாம் அறிவோம், அவர்கள் நோக்கில் யாதவப்பேரரசு துவாரகை முதல் இங்கே சப்தஃபலம் வரை விரிந்து கிடக்கும் பெருநிலம். பல்லாயிரம் படைக்கலமேந்திய கைகளின் பரப்பு…” என்றான். “நாம் அவர்களை அறைவோம்… யானை வந்து அடித்தளத்தில் முட்டிய கோட்டை போல அவர்களை கட்டுக்குலையச் செய்வோம். அதன்பின் ஒவ்வொன்றும் எளிதாகும்… என்னை நம்புங்கள், நான் வெல்வேன்…” என்றான்.

சாத்யகி தலையை அசைத்து “நன்று, உனக்குப் போரிட ஒரு வாய்ப்பை அளிக்கிறேன். இப்போதல்ல, பாணர் கைப்பற்றியிருக்கும் பணயப்பொருள் என்ன என்று தெரிந்தபின்னர். இப்போது ஸ்ரீதமர் ஆணையிட்டபடி தூதுசென்று செய்தியறிந்து வருக! அதன்பின் அனைத்தையும் எண்ணிச் சூழ்வோம்” என்றான். அபிமன்யூ “மூத்தவரே, எண்ணிச்சூழ்வோம் என்பதன் பொருளென்ன என்று நானும் அறிவேன்… நான் சொல்வதை ஒருகணம் செவிகொடுங்கள். நீங்கள் என்னை விட்டுவிட்டு இந்நகரின் படைகளை நோக்குகிறீர்கள்” என்றான். சாத்யகி “நான் இளைய யாதவரை விட்டுவிட்டு யாதவருக்கு என்ன பொருள் என்று நோக்குகிறேன். விழியிழந்த மந்தை இது. அங்கே மறுதரப்பில் எழுபவர் எவர் என்று நீ அறிந்திருக்க மாட்டாய்… கேட்டுத்தெரிந்துகொள்…. இனி நான் சொல்வதற்கேதுமில்லை” என்றான்.

அபிமன்யூ சிலகணங்கள் செயலற்றவன்போல நின்றுவிட்டு “நன்று, எனக்கிடப்பட்ட ஆணையை தலைக்கொள்கிறேன். ஆனால் இது யாதவரின் மாட்சியின் சரிவு. விழித்தெழுந்தால் இதன்பொருட்டே நம்மை கொல்ல மாதுலர் படையாழியை எடுப்பார்… ஐயமே இல்லை” என்றபின் தலைவணங்கி வெளியே சென்றான்.

பிரலம்பன் படிகளில் சினத்துடன் இறங்கி வந்த அபிமன்யூவை நோக்கி சென்று “ஆணை என்ன?” என்றான். “ஆணையா? கையை காலிடுக்கில் பொத்திவைத்து துயில்க… அதுதான். செல்…! செல் மூடா” என்றான் அபிமன்யூ. பிரலம்பன் “நன்று, அதுவும் உகந்ததே” என்றான். “வெட்டிவீழ்த்திவிடுவேன்.. அறிவிலி.,” என்று அபிமன்யூ கூச்சலிட்டான். “நாம் தூதுசெல்லப்போகிறோம், அவ்வளவுதானே?” என்றான் பிரலம்பன். “இல்லை, தூதுசெல்ல நான் என்ன தர்ப்பையேந்திய அந்தணனா? நான் வில்லேந்திய இளம்விஜயன். இவர்கள் யார்? இவர்கள் சொல்லுக்கு நான் ஏன் கட்டுப்படவேண்டும்?”

பிரலம்பன் “ஆனால்…” என்று தொடங்க “நான் முடிவெடுத்துவிட்டேன். இதோ இது என் கணையாழி… இதில் விருஷ்ணிகுலத்தின் முத்திரை உள்ளது. இதை கொண்டுசென்று வேடர்தெருவில் காட்டு. நான் கிளம்பிச்செல்கிறேன். நான் இதற்கு அடுத்த ஊரில் காத்திருப்பேன். வேட்டுவர்தெருவில் வில்லேந்தத் தெரிந்த அனைவரும் காட்டுப்பாதையில் வந்து என்னுடன் சேர்ந்துகொள்ளவேண்டும். இது அரசாணை” என்றான். பிரலம்பன் “ஆனால்…” என தயங்க “மூடா, இன்று இந்நகரில் அரசகுடியென்றிருப்பவன் நான் மட்டுமே. நான்   ஏன் சாத்யகிக்கு ஆணையிடவில்லை என்றால் அது அவர் தந்தையின் மாணவராக எனக்கு மூத்தவர் என்பதனால்தான்” என்றான் அபிமன்யூ.

fire-iconசப்தஃபலத்திற்கு அப்பால் நெடுந்தொலைவில் காடுதான் இருந்தது. அதன்பின்னர் இரண்டு குன்றுகள் நடுவே மார்த்திகம் என்னும் ஆயர்களின் சிற்றூர் கண்ணுக்குத் தெரிந்தது. தனியாக அவ்வூரில் நுழைந்த அபிமன்யூ அங்கிருந்த ஊர்த்தலைவரின் மாளிகையில் காத்திருந்தான். அவன் காட்டிய ஓலையைக்கொண்டு அவனை ஸ்ரீதமரின் தூதன் என்றுமட்டுமே ஊர்த்தலைவர் அறிந்திருந்தார். ஆகவே அவன் அங்கே நான்கு நாட்கள் காத்திருந்தது அவருக்கு விந்தையாக இருந்தது. ஆனால் அரசப்பணி என்பதனால் அவர் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. ஆனால் ஊரிலிருந்த எவரும் அவனிடம் எவ்வகையிலும் தொடர்புகொள்ளலாகாது என ஆணையிட்டிருந்தார்.

அபிமன்யூ பகலுமிரவும் நிலையழிந்தவனாக காத்திருந்தான். இரண்டாவதுநாள் முதல் எரிச்சலும் சினமும் கொள்ளத்தொடங்கினான். அவனிடம் ஊர்த்தலைவர் மட்டுமே பேசினார். ஒவ்வொரு சொல்லுக்கும் அவன் சினம் கொள்வதைக் கண்டதுமே அவன் அரசகுடியினன் என்பதை அவர் உய்த்தறிந்துகொண்டார். அவன் காத்திருப்பது எதை என அவர் முதலில் வியந்தார், அது ஊருக்கு நன்றுசெய்வதல்ல என்று ஐயம் கொண்டார். பின்னர் வரவிருப்பதை எண்ணி அஞ்சினார். இரவில் துயில்கொள்ளாமலானார். பகலில் துயில்பழுத்த விழிகளுடன் அபிமன்யூவை நோக்கும்படி தன் குடில்வாயிலில் தடியுடன் நாளெல்லாம் அமர்ந்திருந்தார். அந்தியிலும் புலரியிலும் ஊரின் தென்மேற்குமூலையில் அமர்ந்திருந்த மூதன்னையரின் கற்களுக்கு மலரிட்டு வணங்கினார்.

நான்காம் நாள் பின்னிரவில் புரவிக்குளம்படிகள் கேட்டபோது ஊர்த்தலைவர் திடுக்கிட்டு எழுந்து உடல்நடுங்கினார். துயிலுக்குள் ஆயிரம் புரவிகளின் குளம்படிகளாக்க் கேட்ட அவ்வொலி விழித்துக்கொண்டபோது இருளுக்குள் பாறைகள் உருண்டு அணுகுவதுபோலத் தோன்றியது. கோலூன்றி வெளியே வந்தபோது மீண்டும் அவை புரவிக்குளம்படிகளாயின. ஒரு படை அணுகிவருகிறது. எந்தப்படை? அவர் தன் குடிகளுக்கு ஆணையிட்டு எச்சரிக்கையளிக்க விழைந்தார். ஆனால் என்ன சொல்வதென்று தெரியவில்லை. இடக்கை தானாகவே ஆடிக்கொண்டிருக்க வாய் திறந்து நிற்க அணுகிவரும் இருளசைவுகளை நோக்கியபடி திண்ணையில் நின்றார்.

ஊரில் அனைவரும் துயிலெழுந்துவிட்டிருந்தனர். அகல்விளக்குகள் கொளுத்தப்பட்டு குடில்கள் விழிகொண்டன. வாயில்கள் திறந்து நகை பூண்டன. கைவிளக்குகளுக்குமேலே நிழல்கள் எழுந்தாட ஆயர்கள் ஊர்மன்றுநோக்கி வரத்தொடங்கினர். பூசகர் அருகே வந்து “படைகள்! எவருடைய படைகள்?” என்றார். குடித்தலைவர் “இங்கே இப்பொழுதில் வருகின்றன என்றால் அவை யாதவரின் படைகளே” என்றார். “யாதவப்படைகளா? இளையவரை சிறைப்பிடிக்கச் செல்கிறார்களா?” என்றான் இளைஞன் ஒருவன். குடித்தலைவர் சினம் கொண்டு “வாயைமூடு, மூடா” என்று சீறினார். அவன் “மூத்தவரின் படைகள் எப்போதுவேண்டுமென்றாலும் வரக்கூடும் என்று சொன்னார்கள்” என்றான்.

மரவுரியைப் போர்த்தியிருந்த ஆயன் “இவர் யார்? இவர் இப்படைக்காகவா காத்திருக்கிறார்?” என்றான். “இவர் எந்தப்படையைச் சேர்ந்தவர்? ஸ்ரீதமரின் தூதர் என்றால் ஏன் இவர்களுக்காகக் காத்திருக்கிறார்?” என்றான். இளைஞன் ஒருவன் “இவர் பாண்டவராகிய அர்ஜுனனேதான் என்று சொன்னார்கள்” என்றான். “யார் சொன்னார்கள்?” என்று குடித்தலைவர் அவனை நோக்கி பற்களைக்கடித்தபடி கேட்டார். “ஒரு பெண் கனவில் கண்டிருக்கிறாள். பின்னர் அத்தனை பெண்களும் அதையே சொல்லத் தொடங்கிவிட்டனர்.”

மலையிடைவெளியில் தோன்றிய நிழலுருக்கள் புரவிவீரர்களாக உருத்திரட்டி ஊரை அணுகின. குளம்படியோசைகள் நான்குதிசைகளிலும் இருந்து எழுந்தன. அத்தனை குடில்சுவர்களிலும் அவ்வோசை கேட்டது. “சுவர்கள் தவளைகள் போல் ஓசையிடுகின்றன ” என்றான் இளைஞன். அபிமன்யூ ஊர் வாயிலில் மூங்கில்கதவருகே சென்று அதன் கயிற்றைப்பிடித்து இழுத்து விரியத்திறந்தான். “யாரங்கே?” என்றான். ஊர்த்தலைவர் அவனை அணுகியதும் “பந்தங்கள் வரட்டும்…” என ஆணையிட்டான். இளைய யாதவர்கள் பந்தங்களை கொளுத்திக்கொண்டுவந்து ஊர்மன்றில் நிறுத்த முற்றம் செவ்வொளி கொண்டது.

முதல்புரவி வந்து தயங்கியது. “இளவரசே” என்று பிரலம்பன் அழைக்க “வருக!” என்றான் அபிமன்யூ. பிரலம்பன் புரவியில் உள்ளே வந்தான். தொடர்ந்து மேலும் இருவர் புரவிகளில் உள்ளே வந்தனர். பிற புரவிவீரர்கள் ஊருக்கு வெளியே பரவி நிரைகொண்டனர். அபிமன்யூ மன்றில் பீடமென போடப்பட்டிருந்த கல்லில் அமர்ந்தான். பிரலம்பன் அருகே வந்து தலைவணங்கி “சற்று பிந்திவிட்டது, இளவரசே” என்றான். குடித்தலைவரின் அருகே நின்றிருந்த ஒருவன் “இளவரசரா?” என்றான். இன்னொருவன் “நான் எண்ணினேன்… அவர் இளையபாண்டவர்” என்றான். “அர்ஜுனரைப்போலவே இருக்கிறார் என்று ஒரு முதுமகள் சொன்னாள். அவள் பிறந்த ஊர் வழியாக ஒருமுறை இளையபாண்டவர் அர்ஜுனர் செல்வதை கண்டிருக்கிறாள்.”

அபிமன்யூ “எத்தனைபேர்?” என்றான். “எழுபதுபேர்…” என்றான் பிரலம்பன். “சப்தஃபலத்தில் வெறும் ஏழுபேர்தான் வந்தனர். அப்போதுதான் நீங்கள் சொன்னது நினைவுக்கு வந்தது. சப்தஃபலத்திலிருந்தே இந்தக்குளிர் கிளம்பிப் பரவுகிறது. ஆகவே அவர்களை அழைத்துக்கொண்டு மறுபக்கம் விலகி காடுகளுக்குள் சென்றேன். அவர்களை அனுப்பி மேலும் மேலும் வேட்டைக்காரர்களை சேர்த்தேன். எவரிடமும் புரவிகள் இல்லை. ஆகவே வழியில் ஒரு வணிகர்குழுவைத் தாக்கி அவர்களிடமிருந்து புரவிகளை பறித்துக்கொண்டேன். அவர்களைக்கொண்டு மூன்று காவல்நிலைகளைத் தாக்கி புரவிகளைப் பறித்தேன்…”

அபிமன்யூ “நன்று, எழுபதுபேர் என்றால் அது ஒரு படை. நாம் எல்லையை அடைவதற்குள் நூறென்றாக்கிவிடலாம்…” என்றபின் திரும்பி குடித்தலைவரை அருகே வரும்படி கையசைத்தான். அவர் அருகணைந்து “பொறுத்தருளவேண்டும்… தாங்கள் இளமைமீண்ட இளையபாண்டவர் என அறிந்திலேன்” என்றார். “அறியாதிருத்தலே நன்று… நாங்கள் புலரியில் இங்கிருந்து கிளம்புவோம். எங்களுக்கு போருணவு ஒருக்குக…” என்றான். அவர் வாய்திறந்து விழிமலைத்து நின்றார். “என்ன?” என்றான் அபிமன்யூ .“போரா?” என்றார். “ஆம், போரேதான்… விரைவில்…” என்றான் அபிமன்யூ. “என்ன செய்யவேண்டுமென பிரலம்பன் சொல்வார். இவர் என் படைத்தலைவர்.”

அவர் தலையசைத்தார். “உடனே சென்று உங்கள் பெண்டிர் அனைவரையும் எழுப்புக!” என ஆணையிட்ட பிரலம்பன் “இளவரசே, நான் படைத்தலைவனா? விளையாடவில்லையே?” என்றான். “நீர் என் படைத்தலைவர்… அந்த முத்திரைக்கணையாழி உம்மிடமிருக்கட்டும்” என்றான் அபிமன்யூ.

புலரியிருள் கரையத்தொடங்கியதும் அவர்கள் கிளம்பி வடமேற்காக செல்லத்தொடங்கினர். ஊர்முழுக்க கூடி நின்று அவர்கள் செல்வதை நோக்கியது. “போருக்கு இப்படி கவசங்கள் இல்லாமலா செல்வார்கள்? அம்புகள் பாய்ந்துவிடுமே?” என்றான் ஓர் ஆயன். “ஆம், ஆனால் அவர்கள் அம்பைத்தவிர்க்கும் கலை அறிந்தவர்கள்” என்றார் ஒரு முதிய யாதவர். “அந்த நுட்பம் எனக்குத்தெரியும். அது ஒரு பச்சிலை. அதை இடையில் கட்டிக்கொண்டால் நாம் அம்புகளிலிருந்து தப்பமுடியும்… ஆனால் ஷத்ரியர்களும் வேடர்களுமே அதை கட்டிக்கொள்ளமுடியும்” என்றார் இன்னொருவர்.

உப்பிட்டு உலர்த்தப்பட்ட ஊன்துண்டுகளை கோதுமை மாவுடன் சேர்த்து இடித்து உருட்டி வாழையிலைச்சருகுகளில் கட்டி ஈச்சையிலைப் பைகளில் இட்டு அவர்களுக்கு அளித்திருந்தனர். “ஆளுக்கு எட்டு உருண்டை ஊனுணவு. எட்டுநாட்களில் போர் முடிந்தாகவேண்டும்” என்றான் ஒருவன். “அவர்கள் வென்றபின் வீழ்ந்தவர்களின் உணவையும் எடுத்துக்கொள்வார்கள்” என்றான் இன்னொருவன். அவர்கள் விழிகளிலிருந்து மறைந்ததும் உடன்சென்று வழிகாட்டிய இளைஞன் திரும்பிவந்து “அவர்கள் பாணாசுரரிடம் போரிடச்செல்கிறார்கள்” என்றான்.

குடித்தலைவர் வாய் திறந்து மலைத்தார். ஒருவன் “எழுபதுபேரா?” என்றான். “ஆம், அவர்களை வழிநடத்துபவர் இளையபாண்டவர் அர்ஜுனரின் மைந்தர் அபிமன்யூ. அவரை எந்த மானுடரும் வெல்லமுடியாது என இந்திரனின் அருட்சொல் உள்ளது.” பூசகர் “ஆனால் பாணாசுரரை மானுடர் வெல்லமுடியாதென்று சொல்லப்பட்டுள்ளதே?” என்றார். “ஆம், அப்படித்தான் சொல்கிறார்கள்….” என்றார் ஒரு முதியவர். “ஒவ்வொருவரும் தெய்வங்களால்தானே வீழ்த்தப்படுகிறார்கள்? ஒவ்வொருவரிலும் அத்தருணத்திற்குரிய அச்செயலுக்குரிய தெய்வங்களெழுந்துதானே அதை நிகழ்த்துகின்றன?” என்றார் பூசகர். “பாணன் வெல்லப்படுவான் என்பதில் ஐயமில்லை.

சினத்துடன் ஓர் இளைஞன் “ஏன்?” என்றான். “அவர் மாவீரர். அவர் ஏன் வெல்லப்படாது நிலைகொள்ளலாகாது?” என்றான். பூசகர் ஒரு பாக்கை எடுத்து கடித்து அதன் துண்டை வாயிலிட்டபின் அனைவரும் தன்னை நோக்குவதற்கான இடைவெளியை அளித்து “கேள் இளையவனே, குவிந்தமணல் அவ்வாறே நிலைக்கலாகுமா?” என்றார். அவன் இல்லை என தலையசைத்தான். “ஏனென்றால் நிரப்புவதும் நிகர்செய்வதுமே காற்றின் கடனாக உள்ளது.” அனைவரும் விழிநிலைக்க அவரை நோக்கியிருக்க “ஊழின் நெறியை எவரும் உய்த்துணரவியலாது. அதன் தொழிலை எங்குநோக்கினும் காணலாம். அது நிகர்செய்வது. பாணர் மிஞ்சி எழுந்தவர். மேலும் மேலுமெனச் செல்பவர். மறுமுனை இணைகொண்டு எழுந்தாகவேண்டும்.”

fire-iconயாதவநிலத்தின் எல்லையில் அமைந்த கிராதகிரி என்னும் சிறிய மலையடிவாரத்தை அந்தியிருளுக்குள் சென்றடைந்ததபோது அபிமன்யூவின் படை மும்மடங்கு பெருகியிருந்தது. நான்குநாட்கள் தொடர்ந்து நிகழ்ந்த அப்பயணத்தில் பன்னிரு வேட்டுவச் சிற்றூர்களிலிருந்து படைதிரட்டினர். ஐந்து காவல்நிலைகளில் புரவிகளை கவர்ந்தனர். இறுதியாக கூர்மபாகம் என்னும் யாதவச் சிற்றூரிலிருந்து உணவுருளைகளை பெற்றுக்கொண்டார்கள். வழிகாட்டிச்சென்ற மூத்தவேட்டுவரான கடம்பர் “நாம் ஆசுரநிலத்தை அடைந்துவிட்டோம், இளவரசே” என்றார். “இந்த மலைக்கு அப்பால் ஒரு மான் துள்ளினாலும் அசுரர்களின் காவல்நிலைகளிலிருப்பவர்களால் பார்க்கமுடியும். இதற்கு இப்பால் நாம் இரவுதங்குவோம். அசுரநிலத்தை எப்போது கடப்பதென்று நீங்கள் எண்ணிச்சூழ்ந்து ஆணையிடுங்கள்.”

படைவீரர்கள் புரவிகளை அவிழ்த்து கடிவாளத்தை முன்னங்கால்களுடன் பிணைத்து மேயவிட்டனர். அவை நிரையாக அருகே ஓடிய சிற்றோடையை அணுகி நீர் அருந்திவிட்டு காட்டுக்குள் புகுந்தனர். உலருணவு உண்டு நீர் அருந்தியபின் இலைமெத்தைகளை விரித்து அனைவரும் துயிலத் தொடங்கினர். அபிமன்யூயும் பிரலம்பனும் கடம்பரும் மலையேறிச்சென்று அங்கே நின்றிருந்த பெரிய வேங்கைமரத்தின்மேல் ஏறி நின்று அசுரர்களின் காவல்நிலைகளை கண்டனர். “அவர்களின் காவல்நிலைகளைப் பார்ப்பதற்கு இரவே உகந்தது. நம்மை அவர்கள் காணமுடியாது. அவர்களின் பந்தங்கள் நெடுந்தொலைவுக்கு தெரியும்” என்றார் கடம்பர்.

இருளில் பந்தங்கள் எளிய வரைபடம் ஒன்றை வரைந்திருந்தன. சிலகணங்கள் நோக்கிவிட்டு “மிகச்சிறந்த காவலரண். காடுகளை இப்படி காவல்காக்கவியலும் என இந்திரப்பிரஸ்தத்திலோ அஸ்தினபுரியிலோ எவரும் அறிந்திருக்க மாட்டார்கள்” என்றான் அபிமன்யூ. “இவ்விருளில்கூட நாம் ஓர் எல்லைக்கு அப்பால் செல்லமுடியாது. கருங்குரங்குகளும் உச்சிக்கிளைப் பறவைகளும் ஒலியெழுப்பி நம்மை அறிவிக்கும். இங்கிருந்து சோணிதபுரம் வரை மலைச்சரிவினூடாகச் செல்லும் புரவிப்பாதையை நூறு இடங்களிலிருந்து வில்லவர் குறிபார்த்திருப்பார்கள்” என்றார் கடம்பர்.

“சோணிதபுரம் தெய்வங்களால் கட்டப்பட்ட வன்கோட்டை சூழ்ந்தது. உள்ளே அத்தனை தெருக்களிலும் அசோகம் செம்பாலை என செம்மலர்கள் விரியும் மரங்கள் மட்டுமே நட்டு வளர்க்கப்பட்டுள்ளன. வசந்தம் எழுகையில் அந்நகரம் காட்டுத்தீ எனத் தெரியும். ஆசுரநாட்டுக்குள் எங்கும் வண்டிப்பாதைகள் இல்லை. கால்களற்றவை தங்கள் காட்டுக்குள் நுழையலாகாதென்பது அசுரர்களின் மூதன்னையரின் ஆணை. வணிகர்கள் அத்திரிகளிலும் வீரர்கள் புரவிகளிலும் செல்வார்கள்” என்றார் கடம்பர்.

“நன்று, சாலை இல்லையேல் அக்கோட்டையை அழிக்கும் தண்டுவண்டிகள் அங்கே அணுகவியலாது” என்றான் அபிமன்யூ. அவன் சொன்னதை அப்போதுதான் உணர்ந்தவர்போல அவர் அவனை கூர்ந்து நோக்கினார். “பாணாசுரரின் குலமுறை என்ன, கடம்பரே?” என்றான் அபிமன்யூ. கடம்பர் அக்கேள்வியால் மீண்டு வந்து “நானறிந்த கதைகளெல்லாம் வேட்டைக்குடிப் பாடகரின் சொற்களில் எழுந்தவை” என்றார். “பாணர் காசியபகுலத்தவர். ஹிரண்யகசிபுவின் கொடிவழியினர். மகாபலியை மூதாதையாகக் கொண்டவர். அசுரகுலத்து அன்னை நிகும்பைக்கு எட்டாவது மைந்தனாகப் பிறந்தார். அப்போது அவர் குலம் சுருங்கி சிறுத்து காடுகளுக்குள் மரங்களுக்குமேல் அமைக்கப்பட்ட சிறுகுடில்களில் பறவைகளைப்போல வாழ்ந்துகொண்டிருந்தது.”

பாணரின் அன்னை நிகும்பை அக்குடியில் மூதன்னையர் ஊரும் பிச்சி என அறியப்பட்டிருந்தாள்.  அசுரர்களின் மூதாதையர் வாழும் மலைக்குகை ஒன்று சோணிதபுரியின் வடமேற்கே உள்ளது. பெரும்பாம்பின் திறந்த வாய் போன்ற அக்குகையை நாகபிலம் என்றனர். குறைமைந்தர் பிறந்தால் அக்குழவியைக் கொண்டுசென்று அக்குகைக்குள் வீசிவிடுவது அவர்களின் வழக்கம். அக்குகைக்குள் வாழும் மூதாதையர் அக்குழவியை உண்டு மீண்டும் ஒன்றை அவர்களுக்கு அளிப்பார்கள். பிறிதுதருணங்களில் எவரும் அக்குகையருகே செல்வதில்லை.

சிறுமிப்பருவத்தில் காட்டில் தோழியருடன் தேனடை கொய்யச் சென்ற நிகும்பை சிற்றோடை ஒன்றில் இறங்கி நீர் அருந்துகையில் பாறையில் கால்வழுக்கி பெருக்கில் விழுந்தாள். நாகமென அவளை சுற்றிப்பிடித்து சுழற்றி அள்ளிக்கொண்டு சென்றது மலையாறு. தோழியர் கூச்சலிட்டு அலற அவள் உருண்டு கடும்புதர் செறிந்த இருளுக்குள் மறைந்தாள். அவர்கள் அந்திவரை அவளைத்தேடிவிட்டு திரும்பிவந்தனர். மறுநாள் அவளை தேடிச்சென்ற அசுரர் எங்கும் அவளைக் காணாமல் அவள் இறந்துவிட்டாள் என்று எண்ணி திரும்பிவந்தனர். அவளை அக்காட்டாறு நாகபிலத்திற்குள் கொண்டுசென்று எறிந்தது. இருண்ட ஆழத்திற்குள் அலறியபடி விழுந்து எங்கோ மறைந்தது அது.

நீருண்ணும் பசுமுகம் என புடைத்து நின்ற சுண்ணப்பாறையை பற்றிக்கொண்டு கரையேறிய நிகும்பை அங்கே குகைகளின் சுவர்களில் அசுரர்களின் இறந்த மூதாதையர் அனைவரும் ஓவியங்களாக வரையப்பட்டிருப்பதை கண்டாள். அவர்களின் விழிகள் இருளுக்குள் மணிகளென மின்னின. பின்னர் அவர்களின் முகங்கள் உயிர்கொண்டன. அவர்கள் புடைப்பு கொண்டு எழுந்தனர். அவளுடன் உரையாடலாயினர். ஏழு நாட்களுக்குப்பின் அவள் பிச்சியைப்போல் திரும்பிவந்தாள்.

Ezhuthazhal _EPI_10

அவள் ஊருக்குள் நுழைந்தபோது அது அவள் உயிர்சூடிய பேய் என அஞ்சி அசுரகுடியினர் குடில்களுக்குள் புகுந்து வாயில்களை மூடிக்கொண்டனர். அவள் அன்னையும் தந்தையும் அஞ்சி ஒளிந்து சுவரிடுக்கினூடாக அவளை நோக்கி கலுழ்ந்தனர். அவள் எவரையும் அழைக்கவில்லை. ஊர்மன்றிலிருந்த பீடப்பாறையில் ஆலமரத்தடியில் நிமிர்ந்த தலையுடன் கால்மடித்து அமர்ந்தாள். இரண்டுநாட்கள் அசைவிலாது அங்கேயே அமர்ந்திருந்த அவளைக் கண்ட மூதன்னை ஒருத்தி அவள் குடித்தெய்வம் ஏறிய ஊர்தி என அறிந்தாள். அவள் கால்மடித்து அமர்ந்திருந்த முறை மூதன்னையருக்குரியது என்றாள்.

பலியும் மலரும் கொண்டு வணங்கியபடி அவர்கள் அவளை அணுகினர். பலியூனை எடுத்து அவள் உண்டாள். மலர்களை எடுத்து அழுக்குபற்றி சடைகொண்டிருந்த கூந்தலில் சூடினாள். அவர்களை நோக்கி புன்னகைத்து அவர்கள் கேட்டிராத மொழியில் வாழ்த்தினாள். அவள் அன்னையும் தந்தையும் உடன்பிறந்தாரும் கண்ணீருடன் இல்லத்திற்கு வரும்படி அழைத்தனர். அவர்களை அவள் விழிகள் அறியவே இல்லை. தனக்குத்தானே சிரித்துக்கொண்டும் தலையாட்டிப் பேசிக்கொண்டும் அங்கேயே இருந்தாள்.

அதன்பின் அவள் இல்லம் மீளவில்லை. பசிகொள்கையில் அந்த மன்றுப்பாறைமேல் வந்தமர்ந்து பலிக்கொடை கொண்டு திரும்பிச் சென்றாள். அவளை காடுகளுக்குள் வேட்டைக்கும் தேனெடுக்கவும் செல்கையிலும் அவர்கள் கண்டனர். காட்டுவிலங்கென புதர்களுக்கிடையே சென்றுகொண்டிருந்தாள். மலைக்குகைகளில் துயின்றாள். மரங்கள் மேல் அமர்ந்திருந்தாள். அவள் உடலில் ஆடைகள் அகன்றன. நீள்குழல் சடைப்பிரிகளாக ஆகியது. கைநகங்கள் நீண்டு சுருண்டன. அவள் சொன்ன அறியாத மொழியை அவர்கள் கனவுகளில் பொருளுடன் கேட்டார்கள். அப்பொருளை விழித்தெழுந்ததுமே மறந்தனர். அது ஹிரண்யகசிபுவும் வைரோசனரும் மகாபலியும் பேசிய தொல்மொழி என்றனர் பூசகர்.

நிகும்பை கருக்கொண்டிருப்பதை பெண்கள் கண்டறிந்தனர். அவளை பேற்றுச்சடங்குகளுக்காகக்கூட இல்லங்களுக்குக் கொண்டுவர அவர்களால் இயலவில்லை. வயிறு பருத்துருண்டு முலைசெழிக்க அவள் காட்டுக்குள் அலைந்தாள். ஒருநாள் தேனெடுக்கச்சென்ற பெண்கள் அவள் உறுமுவதைக் கேட்டு நோக்கியபோது புதர்களுக்குள் குருதிவார அவள் ஈன்றுகொண்டிருப்பதைக் கண்டனர். அவர்கள் வந்துசொல்ல ஊரிலிருந்து வயற்றாட்டிகள் சென்று அவள் மகவை வெளியே எடுத்தனர். ஆண்மகவை பேற்றுமயக்கிலிருந்த அவள் முன் தூக்கி காட்டினர். அவள் சரியும் இமைகளுடன் அதை நோக்கினாள். பன்றிபோல உறுமினாள். பின்னர் அதை அவர்களிடமிருந்து பிடுங்கிக்கொண்டு காட்டுக்குள் ஓடினாள். அவள் சென்றவழியெங்கும் குருதி சொட்டியது.

அவர்கள் அலறியபடி அவளைத் தொடர்ந்து ஓடினர். அவள் நாகபிலத்தை அடைந்து உள்ளே நுழைந்தாள். அவர்கள் அஞ்சி நின்றுவிட அவள் மட்டும் மறுநாள் திரும்பிவந்தாள். குழவியை எண்ணி பெண்கள் நெஞ்சைப்பற்றியபடி அழுதனர். அது உயிர்ப்பும் உடல்முழுமையும் கொண்டிருந்தது. “முதல்சொட்டு முலையுண்ணவும் அதற்கு ஊழில்லையா?” என மூதன்னையர் ஏங்கினர். அவள் இருமுலைகளும் ஊறி வயிற்றிலும் தொடைகளிலும் வழிய கருக்குருதி கால்களை அடைந்து சொட்ட வெறிமின்னும் விழிகளுடன் வந்து மன்றில் நின்று கைவீசி உறுமி பலியூனுக்கு ஆணையிட்டாள்.

அதன்பின் அவள் மேலும் ஆறுமைந்தரை பெற்றாள். அறுவரையும் அக்குகைக்குள் வீசிவிட்டுத் திரும்பினாள். எட்டாவதாக அவள் கருக்கொண்டபோது அவர்கள் அக்குழவியையும் குகையே உண்ணும் என்றே எண்ணினர். “நாமறியாத ஒன்று அவளினூடாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது” என்றனர் பூசகர். “குகைவாழ்தெய்வங்கள் தங்கள் பலியூனை அவள் பெற்றளிக்க ஆணையிட்டிருக்கக் கூடும். அகலில் எழும் அனலை உறிஞ்சி உண்டுகொண்டே இருக்கிறது கடுவெளி. மீனிலும் புன்னையிலும் அதன்பொருட்டே நெய்யூறச்செய்கிறது அது.”

எட்டாவது குழந்தையை பின்னிரவில் நடுக்காட்டில் அவளே பெற்றாள். கையில் குருதிக்குழவியுடன் தொப்புள்கொடி காயாது இருவரையும் இணைத்திருக்க அவள் வந்து ஊர்நடுவே நின்று அறியாமொழியில் அழைத்தாள். அவர்கள் கதவுகளைத் திறந்து கையகல்களை ஏந்தியபடி வந்து நோக்கியபோது மிகச்சிறிய உடல்கொண்ட குழவி அவள் வலது கையில் இருந்தது. “குறைக்குழவியா?” என்றார் பூசகர். “ஆம், ஏழுமாதங்களே ஆகின்றன” என்றாள் மூதன்னை ஒருத்தி. “இக்குழவியை ஏன் அவள் குகைக்கு கொண்டுசெல்லவில்லை?” என்று இளம்பெண் ஒருத்தி கேட்டாள். அதன்பின்னரே அவர்கள் அவ்விந்தையை உணர்ந்தனர்.

அவள் அக்குழவியை தன் உடல்சேர்த்து வைத்துக்கொண்டு அவர்கள் அளித்த ஊனுணவை உண்டாள். அது ஓரிருநாளில் இறந்துவிடுமென அன்னையர் எண்ணினர். ஆனால் அவள் தன் வயிற்றுடனும் முலைகளுடனும் அதை சேர்த்து வைத்துக்கொண்டாள். கொடி காய்ந்து உதிர்ந்தது. குழவி முலையுண்டு உடல்கொண்டது. அவள் அம்மைந்தனை ஏந்தியபடி காடுகளுக்குள் அலைந்தாள். மைந்தன் முகம்தெளிந்து நோக்கு கொண்டான். அவனை அவள் ஊர்மன்றுக்குக் கொண்டுவந்தபோது அயல்விழிகளுடன் அவர்களை நோக்கினான். அவனை நோக்கி அவர்கள் கைநீட்டியபோது புலிக்குருளை என உறுமியபடி அன்னையை பற்றிக்கொண்டான். அன்னை வெண்பற்களைக் காட்டி சீறி அவர்களை துரத்தினாள். அவனை அவர்கள் எவரும் தொட்டதேயில்லை.