எழுதழல் - 11

மூன்று : முகில்திரை – 4

fire-icon”ஐந்தாண்டுகாலம் அன்னையுடன் மைந்தன் வளர்ந்தான். பகலுமிரவும் அவன் அன்னையுடனேயே இருந்தான். அவன் சற்று வளர்ந்ததுமே அவர்கள் பலியுணவுகொள்ள மன்றுக்கு வருவது நின்றது. உருவில் சிறியவனாக இருந்தாலும் சிட்டுக்குருவிபோல் விரைவுகொண்டவனாக இருந்தான் மைந்தான். அன்னை கைநீட்டுவதற்குள் பாய்ந்து சென்று அவள் எண்ணிய இரையை அவன் வென்றான். அவளை வில்லென்றும் அவனை அம்பென்றும் அழைத்தார் குடிப்பூசகர். அவனுக்கு பாணன் என்ற பெயரே நிலைத்தது” என்றார் கடம்பர். அபிமன்யூ தொலைவில் பாணாசுரரின் காவலரண்களின் வெளிச்சங்களை நோக்கியபடி மரக்கிளையில் அமர்ந்து அக்கதையை கேட்டிருந்தான்.

ஒருநாள் நிகும்பை மைந்தனுடன் நடந்து நாகபிலத்திற்குள் நுழைந்தாள். ஏழுநாட்களுக்குப் பின்னர் மைந்தன் மட்டும் திரும்பிவந்தான். சடைக்கற்றைகள் தொங்கிய தலையும் நீண்ட நகங்களும் மண்படிந்த மேனியுமாக வந்து மன்றில் நின்று இருகைகளையும் விரித்து “உணவு” என அசுர மொழியில் கேட்டான். அவனைக்கண்டு அஞ்சி அசுரர்கள் திகைத்து அகன்றனர். அவனுருவில் ஏதோ மலைத்தெய்வம்தான் வந்தது என எண்ணினர். “நான் இனி இங்குதான் இருக்கப்போகிறேன். என் அன்னை குகைக்குள் சென்றுவிட்டாள்” என்றான். அச்சம்நீங்கி அவர்கள் அவனை அணுகினர். உணவும் நீரும் அளித்து தங்கள் குடிக்குள் எடுத்துக்கொண்டனர்.

பாணன் அவர்கள் எவரும் எண்ணியிராத ஆற்றல்கள் கொண்டிருந்தான். அவன் அம்புகள் ஒருமுறைகூட குறிதவறவில்லை. உச்சிப்பாறையில் சரடில்லாமல் கைகளாலேயே தொற்றி ஏறி தேன் கொண்டுவந்தான். சீறி அணுகும் புலியை ஒருமுறைகூட பின்னெட்டு வைக்காமல் எதிர்கொண்டான். அரசநாகத்தை கைகளால் பற்றி எடுத்தான். பத்துவயதில் அக்குடியின் தலைவன் என அவனே எண்ணப்பட்டான். எதிரிக்குடிகள் அவனை அஞ்சின. மெல்ல அவன்குடி அக்காட்டிலிருந்த பன்னிரு அசுரகுடிகளுக்கும் தலைமைகொண்டது.

எழுபது காடுகளிலாக ஆயிரம் குடிகளாகப் பிரிந்துகிடந்தது அசுரகுலம். ஒருவர் மொழி பிறிதொருவருக்கு புரியவில்லை. ஒவ்வொருவரும் வெவ்வேறு குழூஉக்குறிகளும் குடிச்சடங்குகளும் தொல்நம்பிக்கைகளும் கொண்டிருந்தனர். காட்டின் வேட்டையெல்லைகளுக்காகவும் பெண்கவர்தலுக்காகவும் ஆநிரைகொள்ளலுக்காகவும் அவர்களுக்குள் பூசல்கள் நிகழ்ந்தன. குருதிவிழுந்தால் மீண்டும் போர் மூண்டு பழிநிகர் செய்யப்பட்டது. ஆகவே குடிப்போர்கள் ஒருபோதும் முடியவில்லை. அசுரர்கள் காட்டுக்குள் தனியாகச் செல்லவே அஞ்சினர். ஒவ்வொருவரும் தாங்கள் கொன்ற பிறகுலத்தவரின் மண்டையோடுகளை குடில்முகப்பில் வைத்து அணிசெய்தனர். அவர்களின் எலும்புகளால் காதணிகளும் மாலைகளும் செய்து அணிந்துகொண்டனர். பாணனின் ஜம்புகுடியின் தலைவர் மிருகர் அவரால் கொல்லப்பட்டவர்களின் மண்டையோடுகளையே உண்கலங்களாக பயன்படுத்தி வந்தார்.

மிருகருக்குப்பின் குடித்தலைமை இயல்பாகவே பாணனுக்குச் செல்லுமென அனைவரும் எண்ணியிருந்தனர். தன் மகளை மணம்கொண்டு குடிக்கோலை கையிலேந்தி அவன் மன்றமர்வான் என அவரும் எதிர்பார்த்தார். ஆண்டுக்கொருமுறை அன்னையருக்கு அளிக்கும் பலிக்கொடையின்போது பூசகர் அவருக்கு படையலன்னத்தின் முதற்கவளத்தை அளித்தபோது அதைப் பகுந்து பாதியை அருகே நின்றிருந்த பாணனுக்கு அளித்தார். “இல்லை, நான் இதை உண்ணவிழையவில்லை” என்று அவன் சொன்னான். பூசகர் “அவர் அளிக்கும் அவ்வன்னத்தின் பொருளென்ன என்று நீ அறிந்திருக்கவில்லை போலும். இளையோனே, அவருக்குப்பின் அவர் கையின் குடிக்கோல் உனக்குரியது என்று அதற்குப்பொருள்” என்றார்.

பாணன் “ஆம், அதை அறிந்தே மறுத்தேன். நான் இக்குடியினன் அல்ல” என்றான். ஜம்புகர் அவனை சூழ்ந்துகொண்டனர். முதியவர் ஒருவர் “என்ன சொல்கிறாய்?” என்று கூவினார். “நான் அசுரர்களின் ஆயிரம் குடிகளுக்கும் தலைவன். எந்த தனிக்குடிக்கும் உரியவன் அல்ல” என்று அவன் சொன்னபோது அங்கிருந்தோரில் இளையோர் மெய்சிலிர்த்தனர். முதியவர் ஒருவர் நகைத்து “அதை எப்படி முடிவுசெய்தாய்?” என்றார். “நான் அசுரகுலத்துப் பேரரசன் ஹிரண்யகசிபுவின் கொடிவழி வந்தவன். வைரோஜனரின் மைந்தனாகிய மகாபலியின் மைந்தன்” என்றான் பாணன். “அந்தக்குகைக்குள் சுவர்களில் அவர்கள் ஓவியங்களாக அமைந்துள்ளனர். மகாபலியிடமிருந்தே என் அன்னை என்னை கருத்தரித்தாள்.”

அவர்களால் அவன் சொற்களை பொருள்கொள்ள முடியவில்லை. அவை செவிகளில் பொய்யென்று ஒலித்தன. அவன் விழிகள் அவை மெய்யென்று காட்டின. “நான் அசுரகுடிகளை என் ஆயிரம் கைகளென இணைத்துக்கொள்வேன். என்னை சகஸ்ரஹஸ்தன் என்று என் கொடிவழியினர் பாடுவார்கள்” என்று அவன் சொன்னான். “நான் பிறந்தது அசுரர்களின் வெற்றியை நிகழ்த்தும்பொருட்டே. இம்மண்ணில் அசுரர்களின் பேரரசு ஒன்று எழவிருக்கிறது.” அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர். எங்கோ சிலர் பெருமூச்சுவிட்டனர்.

அவன் சொற்களை அவர்கள் எவரும் நம்பவில்லை, ஆனால் எளிதெனத் துறக்கவும் அவர்களால் கூடவில்லை. அசுரச்சக்ரவர்த்திகளைப்பற்றிய கதைகள் அவர்களிடையே எப்போதுமிருந்தன. இளமைந்தர் அவற்றைக்கேட்டே வளர்ந்தனர். வளர்ந்தபின் அவை காடுகளுக்குள் ஒடுங்கி வேட்டையாடி வாழும் எளிய மலைக்குடிகளின் கனவுகள் மட்டும்தானோ என ஐயம் கொண்டனர். ஆகவே அக்கனவுகளை மேலும் மேலுமென வளர்த்து மைந்தர்களுக்கு சொல்லிச்சென்றனர். அந்நாளுக்குப்பின் பாணனை நோக்கும் விழிகளனைத்தும் மாறின. அவனிடம் விளையாட இளையோர் அஞ்சினர். அவனை ஒருமையிலழைக்க முதியோர் நாத்தயங்கினர்.

ஒருநாள் அவர்கள் வேட்டைக்கென அடர்காட்டைக் கடந்து சென்றபோது தொலைவில் வெண்பனியின் அலைகள் என எழுந்துவந்த வடக்குமலைகளைக் கண்டு பாணன் நின்றான். அவற்றில் ஒரு மலைமுடி மட்டும் சாயுமொளியில் பொன்னெனச் சுடர்ந்தது. “அது என்ன?” என்று அவன் மூத்தவரிடம் கேட்டான். அவர் “அது கிரௌஞ்சமுடி. முன்பொருகாலத்தில் வானில் வெள்விடைமேல் இடம் அமர்ந்த தேவியுடன் சென்றுகொண்டிருந்த தொல்சிவத்தின் வெண்ணிற மேலாடை நழுவி விழுந்து அமைந்ததே இந்த மலையடுக்கு என்று தொல்கதைகள் சொல்கின்றன. கைலையின் கிரௌஞ்சப் பறவைகளிலொன்று அவர்களுக்குக் காவலென பின்னால் பறந்துகொண்டிருந்தது. சிவம் அதனிடம் சென்று என் மேலாடைக்கு காவலிரு. பிறிதொருவர் அதை அணியலாகாது என்றது. பொற்சிறகை விரித்து மேலாடைமேல் வந்தமர்ந்தது கிரௌஞ்சம். அதுவே அந்த மலைமுடியென்றாகியது.”

அந்த மலைமுடியை நோக்கியபடி பாணன் அமர்ந்தான். அவன் உடல் தளர்ந்தது. விழிகள் மூடி ஊழ்கம் அமைந்தது. அவன் உடல் மெய்ப்புகொண்டு அதிர்ந்துகொண்டே இருப்பதை அவர்கள் கண்டனர். அவன் பின்னர் விழிதிறந்து “நான் அங்கே இருந்திருக்கிறேன்” என்றான். அவர்கள் “அங்கா? நீயா?” என்றார்கள். “ஆம், முன்பெப்போதோ நான் கைலையில் இருந்தேன்” என்று அவன் சொன்னான். அவன் விழிகள் பித்தனைப்போல வெறிப்பு கொண்டிருந்தன. அவர்கள் அவன் சொற்களால் அச்சமடைந்து அறியாமல் பின்னகர்ந்தனர்.

“அன்னையும் அத்தனும் பனிமுடிகளில் விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்களுடன் இளைமைந்தர்களாக கரிமுகனும் அறுமுகனும் களியாடினர். நான் கரியபேருருக்கொண்ட ஓர் மலைமுடியாக உருக்கொண்டு அவர்களை நோக்கிக்கொண்டிருந்தேன். அவர்களை காவல்காக்கும் ஆயிரத்தெட்டு கணங்களில் ஒருவனாக இருந்தேன். சிவகணமாக ஏதோ ஒரு கணத்தில் அறியாது நானும் அவர்களுடன் விளையாடினேன்” என்றான் பாணன். “அப்பன் என்னை நோக்கித் திரும்பி நீ விழைவது பிறிதொரு பிறவியில் நிகழும். சென்று நான் உனக்கென இட்ட இருக்கையில் அமர்ந்து தவம்செய். உன் தருணம் கனிகையில் மண்ணில் பிறப்பாய். என் மைந்தனென்றாவாய் என்றார்.”

அசுரர் ஒருவரை ஒருவர் நோக்கியபடி அமைதியாக இருந்தனர். பின்னர் மெல்ல அசைந்த முதிய அசுரர் “மகாகாளர் என்னும் சிவகணத்தின் கதை அது. அவர் கிரௌஞ்சமலையின் உச்சியில் வந்தமர்ந்து ஆயிரமாண்டுகள் ஊழ்கம் பயின்று சிவமைந்தனாகப் பிறந்தார் என்கின்றன கதைகள்” என்றார். “நான் அவனே. நான் சிவமைந்தன்… வேலேந்திய இளையோனுக்குத் தம்பி” என்றான் பாணன். முதியவர் “நாம் கிளம்புவோம். இருட்டி வருகிறது” என்றார்.

பாணன் எழுந்துகொண்டு “நான் கிரௌஞ்சமலையுச்சிக்கு செல்லவேண்டும். அங்கே எந்தையையும் அன்னையையும் கண்டு அவர்களிடம் நற்சொல் பெற்று மீள்வேன். ஆயிரம்குடிகளையும் என் கைகளென்றாக்கும் ஆற்றலை அவர் எனக்கு அளிப்பார்” என்றான். “கிரௌஞ்சமலையுச்சியில் மானுடர் ஏறமுடியாது. அது ஒற்றைப்பாறைத்தூண் போன்றது” என்றார் முதியவர். “நான் அங்கு செல்லவேண்டும்… என் அன்னை என்னிடம் சொன்னது அது, இப்போதுதான் அவள் சொன்னவற்றின் பொருளை அறிகிறேன்” என்றான் பாணன். “நான் சென்றதை நம் குடிகளிடம் சொல்லுங்கள். முழுநிலவு செங்கனல்போல் எரியும் ஒருநாளில் நான் மீண்டுவருவேன்” என்றபின் கிரௌஞ்சமுடியை நோக்கியபடி நடந்து சென்றான்.

மீண்டும் அவன் திரும்பிவந்தபோது ஏழாண்டுகள் கடந்துவிட்டிருந்தன. அதற்குள் அவனை அவர்கள் மறந்துவிட்டிருந்தனர். மறந்தவை அனைத்தும் சென்றுசேரும் கதைகளிலும் கனவுகளிலும் அவன் வாழ்ந்தான். பன்னிரண்டு ஆண்டுகளுக்கொருமுறை அசுரகுடிகள் ஆயிரவரும் ஹிரண்யகசிபுவின் குருதி தேங்கிய புண் என தொல்கதைகள் கூறிய தப்தமானசம் என்னும் மலைச்சுனையைச் சூழ்ந்திருக்கும் குறுங்காட்டில் கூடி உயிர்ப்பலி இட்டு ஊன்படைத்து மூதாதையரசனை வணங்கி மீளும் சடங்கு ஒன்றிருந்தது. அசுரவேதம் அமைத்தவனாகிய ஹிரண்யகசிபு அங்கே ஐந்து ஆள் உயரம்கொண்ட பெருங்கல்லாக நின்றிருந்தார். அக்கல்லின்மேல் பலிவிலங்குகளின் குருதியால் நீராட்டி செங்காந்தள் தொடுத்த மாலை அணிவித்து அதன் காலடியில் மும்முறை கோல்தாழ்த்தி வணங்கி வஞ்சினம் உரைப்பது அசுரகுடிகளின் வழக்கம்.

ஆயிரம் குடித்தலைவர்களும் தங்கள் கோல்களுடன் பத்து நிரைகளாக நின்று மூதாதையை வணங்கி வாழ்த்தொலி எழுப்பியபோது காட்டுக்குள் இருந்து பெரிய கோலுடன் புலித்தோலாடை அணிந்து உடலெங்கும் நீறுபூசி சடைமகுடம் அணிந்து நெற்றியில் செந்நிற நிலைக்குறி அணிந்து  பாணன் தோன்றினான். குடித்தலைவர்களும் பூசகர்களுமன்றி பிறர் அப்போது அங்கே அணுகலாகாதென்ற நெறியிருந்தமையால் பூசகர் இருவர் அவனை நோக்கி ஓடி கைவீசி ஆணையிட்டு விலக்கினர். அவன் மீறி அணுகியபோது வாளால் அவனை வெட்டமுயன்றனர். வெறும்கைகளால் வாள்களைத் தடுத்து இருவரையும் தூக்கி மலைச்சரிவில் வீசிவிட்டு அவன் அருகணைந்தான்.

ஹிரண்யகசிபுவின் பெருங்கல்லின் முன்னால் நின்று தன் கையைத் தூக்கி அவன் கூவினான். “நான் மகாபலியின் மைந்தனும் வைரோசனரின் பெயர்மைந்தனும் ஹிரண்யாசுரரின் கொடிவழியினனும் கசியப குலத்தவனுமாகிய பாணன். அசுரர்களின் ஆயிரம்குடிகளுக்கும் நானே முதற்றலைவன். என் சொல்லுக்கு அப்பால் சொல்லெழுவது மூதாதையரைப் பழிப்பது. என் கோலுக்கு எதிராக கோல் எழுவது நம் தெய்வங்களை அறைகூவுவது. அசுரகுடிகள் அறிக, நானே மகாசுரன்.” அவர்கள் திகைத்து ஒருவரை ஒருவர் நோக்க சூரர்குடித்தலைவராகிய காளிகர் சினத்துடன் “நீ பித்தன்… இக்கணமே இங்கிருந்து விலகிச்செல்லாவிடில் உன் தலைகொய்து இங்கு வைக்க ஆணையிடுவேன்” என்றார்.

“காளிகரே, இங்குள்ள ஒவ்வொரு அசுரகுடிக்கும் அவர்கள் மூதன்னையரைச் சென்றடையும் வழி என்று ஒரு குகை உள்ளது. சென்று நோக்குங்கள். அங்கே என் ஓவியம் இருக்கும்…” என்றான் பாணன். “நம் மூதாதையர் வரைந்து வைத்த ஓவியம் அது. நான் பிறப்பதற்கு ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே. மகாபலி மண்மறைந்த அன்று நம் குடிப்பூசகரின்மேல் வெறியாட்டெழுந்த குடித்தெய்வங்கள் என் வடிவை அவர்களுக்குக் காட்டின. அறிக, நான் தெய்வங்களால் ஆணையிடப்பட்டவன்.”

அவர்கள் திகைத்து நோக்கி நிற்கையில் பூசகர் ஒருவர் “நான் உங்கள் உருவை கண்டிருக்கிறேன், பாணரே” என்றார். பிறிதொரு முதிய பூசகர் “ஆம், நானும் கண்ட நினைவுள்ளது” என்றார். “திரும்பிச்செல்க. உங்கள் குகைகளுக்குச் சென்று நோக்கி உறுதிசெய்துகொண்டபின் என்னிடம் வருக! அதுவரை நான் நாகபிலத்தின் வாயிலில் காத்திருக்கிறேன்” என்றான் பாணன். “அறிக, நான் கிரௌஞ்சமலையின் உச்சியில் தொல்சிவத்தை அன்னையுடன் நேரில் கண்டேன். நான் சிவகணமாகிய மகாகாளனின் மண்வடிவம். சிவனுக்கும் உமைக்கும் மைந்தன். கைமுகனுக்கும் குமருக்கும் இளையவன். அனலையும் புனலையும் ஆளும் ஆற்றல்கொண்டவன். இங்கு நிகழ்ந்து நிறைவுகொண்டு அங்கு எழும்பொருட்டு வந்தவன்.”

அவர்கள் ஒருவரோடொருவர் மெல்லியகுரலில் பேசிக்கொண்டு திரும்பிச்சென்றார்கள். சிலநாட்களுக்குள் அசுரர்களின் ஆயிரம் சிற்றூர்களிலும் அவனைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொருகுடியும் பூசகரும் குலத்தலைவரும் அடங்கிய சிறுகுழு ஒன்றை அமைத்து தங்கள் தொல்குகைகளுக்கு அனுப்பியது. அவர்கள் சென்று மீண்டு அங்கே பாணனின் உருவைக் கண்டதை குலமன்றில் முறைப்படி அறிவித்தனர். அதற்கு முன்னரே குடிகளனைவரும் பாணரை குலம்காக்க தெய்வங்களால் அனுப்பப்பட்டவர் என ஏற்றுக்கொண்டுவிட்டிருந்தனர். அறிவிப்பை குலத்தலைவர் கூறியதும் கூடிநின்றிருந்த ஆண்கள் தங்கள் வேல்களையும் வாள்களையும் தூக்கி வீசி வாழ்த்தொலி எழுப்பினர். பெண்கள் குரவையிட்டனர்.

ஆயிரம்குடியினரும் சேர்ந்துவந்து பாணனை தங்கள் முதன்மைத்தலைவனாக ஏற்றுக்கொண்டார்கள். நாகபிலத்தின் முன்னாலிருந்த கடம்பமரத்தடியில் பாறைஒன்றில் அமர்ந்திருந்த பாணன் முன் வந்து நின்று தலைதாழ்த்தி வணங்கினர். அவனுக்குக் கைகளாக அமைவதாக கோல் நிலம்தொட ஆணையிட்டனர். மகாபலியின் அரசை மீட்டமைப்பதாக பாணன் வஞ்சினம் உரைத்தான். அவன் நாகபிலத்தின் முகப்பென அமைந்த பெரும்பாறைமேல் ஏறி நின்று தன் கோலைத்தூக்கி தொல்மொழியில் மூதாதையரை அழைத்து குரலெழுப்பியபோது அதன் எதிரொலி என அசுரகுலம் முழங்கியது. அவ்வொலியைக் கேட்டவர்கள் அனைவரும் மாற்றொலி எழுப்பினர். ஆயிரம் குடிகளும் ஒற்றைக்குரலில் கூவியபோது எழுந்த முழக்கம் காடுகளைக் கடந்து மலைச்சரிவிறங்கி சூழ்ந்திருந்த ஊர்களனைத்திலும் கேட்டது.

ஆயிரமாண்டுகளுக்குப்பின் அவர்கள் காடுகளில் அசுரர் வாழ்கிறார்கள் என்ற செய்தியை ஊரவர் அறிந்தனர். அது வெறும் தொல்கதையல்ல என்று அப்போதுதான் உணர்ந்தனர். அவ்வொலி இரவும்பகலுமென ஏழுநாட்கள் கேட்டுக்கொண்டிருந்தது. மன்றுகளிலும் இல்ல முகப்புகளிலும் நின்று அதைக் கேட்டு அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டார்கள். “ஆம், அவர்களேதான்… அவர்களின் தெய்வங்கள் ஆயிரமாண்டுகளுக்கொருமுறை மண்ணின் ஆழங்களிலிருந்து முளைத்தெழும் என்கிறார்கள்” என்றார் குடித்தலைவர் ஒருவர்.

“ஏழாண்டுகளில் சோணிதபுரம் உருவாகியது என்கிறார்கள். பாணர் தன் படைகளுடன் செல்கையில் வேங்கைக்காடு ஒன்றை கண்டார். காட்டெரி என எண்ணித் திகைத்து புகையில்லாமை கண்டு தெளிந்து அதை அணுகினார். ஆசுரம் என்னும் வேங்கையின் குருதிவாய் இது என அந்த இடத்தை அவர் வகுத்தார். அங்கே தன் நகரை அமைக்க ஆணையிட்டார். ஆசுரநிலம் முழுக்க வேஙகைமரங்களின்மேல் காவலரண்கள் அமைக்கப்பட்டன. சிறிதுசிறிதாக அசுரப்படை ஒருங்கிணைந்து தாக்கவும் ஆணைகளுக்கேற்ப ஒழுகியும் பிரிந்தும் இணைந்தும் போரிடவும் கற்றது. சூழ்ந்திருந்த நிலங்களை நோக்கி எல்லை விரித்தனர். திரிகர்த்தர்களையும் உசிநாரர்களையும் வென்றனர். பதினெட்டுமுறை ஷத்ரியர்களை அவர்கள் தோற்கடித்திருக்கிறார்கள். இன்று அவர்களின் காட்டாற்றலை அஞ்சாத ஷத்ரிய அரசுகள் ஏதுமில்லை” என்றார் கடம்பர்.

இரவின் குளிர் கூடிக்கூடி வந்தது. அவர்கள் ஆசுரத்தின் காவல்மாட விளக்குகளை நோக்கியபடி அமர்ந்திருந்தனர். “செய்யக்கூடுவதொன்றே, நரிபோல இருளில் பாய்ந்து சென்று அசுரப்படைகளுக்கு அழிவை உருவாக்கிவிட்டு புலரிக்குள் திரும்பிவந்து காடுகளுக்குள் பிரிந்து பதுங்கிவிடுவது. அவர்கள் நம்மை இங்கே தேடும்போது வேறோர் இடத்தில் தாக்குவது… போதிய அளவு அழிவை உருவாக்கியபின் நாம் அவர்களிடம் பேசமுடியும்…” என்றான் பிரலம்பன். அபிமன்யூ விளக்குகளை நோக்கி அமர்ந்தபின் எழுந்து “நம் படைகள் புறப்படட்டும்…” என்றான். “ஆனால் நாம் திரும்பிவரப்போவதில்லை. ஆசுரத்திற்குள் ஊடுருவிச்செல்லவிருக்கிறோம்.”

fire-iconஅபிமன்யூ மலையிடுக்கில் தன் புரவிமேல் அமர்ந்து காத்திருந்தான். வான்புலத்தில் அவன் உருவம் நிழல் எனத்தெரிந்தது. அதில் இமைமுடிகள் கூடத்தெரிவதை பிரலம்பன் விந்தையுடன் எண்ணிக்கொண்டான். அவர்களுக்குப் பின்னால் நான்குபேர்கொண்ட நீள்நிரையாக வேட்டுவர்களின் சிறிய புரவிப்படை விற்களும் வேல்களுமாக நாகம்போல வளைந்து நீண்டிருந்தது. பிரலம்பன் “அனைவரும் சித்தமாக இருக்கிறார்கள், இளவரசே. அவர்கள் வேட்டைக்காரர்கள் என்பதனால் இரவுத்தாக்குதலை முன்னரே அறிந்திருக்கிறார்கள்” என்றான். “ஆம், அவர்கள் முதற்குருதியைக் கண்டதுமே களிவெறி கொள்வார்கள்” என்றான் அபிமன்யூ. “சப்தஃபலத்தில் அவர்களின் நாய்கள் மட்டும் குரைப்பதைக் கண்டதும் அதை உணர்ந்தேன். விலங்கு குருதியை மறப்பதில்லை.”

அபிமன்யூ தன் கையிலிருந்த அரக்குச்சுள்ளியை நீட்ட அதன்முனையிலிருந்த குந்திரிக்கத்தை பிரலம்பன் பற்றவைத்தான். அதை காற்றில் சுழற்றி படைகளுக்கு ஆணையிட்டுவிட்டு அபிமன்யூ கடிவாளத்தை இடையில் கட்டிக்கொண்டு ஒரு கையில் வில்லும் மறுகையில் அம்புமாக பாய்ந்து சென்றான். ஒளிச்சுழலலில் உயிரசைவுகொண்டு எழுந்து அவனுக்குப்பின்னால் குளம்படியோசையின் பெருக்காக வேட்டுவர்களின் படை சென்றது. பிரலம்பன் அபிமன்யூவுக்கு இணையாக பாய்ந்துசென்றபடி “நான் மேற்கொள்ளும் முதல்போர் இது, இளவரசே” என்றான். அபிமன்யூ திரும்பாமல் “நான் மேற்கொள்ளும் முதல்போரும்கூடத்தான்” என்றான். பிரலம்பன் உடல் தளர அதை உணர்ந்து புரவி விரைவழிந்தது. குதிமுள்ளால் ஊக்கி அதை முன்செலுத்தினான்.

காவல்மாடங்களின் ஒளி அணுகிவந்தது. பிரலம்பன் தன் நெஞ்சு சிறகுபடபடத்து எழுந்து தொண்டையை அடைப்பதை உணர்ந்தான். புரவியிலிருந்து உடல் நழுவிவிழுந்துவிடுமென்று தோன்றியது. அம்பு ஒன்று இருளில் வந்து நெஞ்சைத்தைப்பதுபோல ஓர் எண்ணம் எழுந்தது. இப்போரில் அவன் இறந்துவிடுவானா? உடல் வெம்மைகொண்டு மறுகணமே வியர்த்து செவிகள் குளிர்ந்தன. மூச்சுவாங்க ஆவிபடிந்த கண்களுடன் சூழ்ந்து வந்துகொண்டிருந்தவர்களை நோக்கினான். இவர்களுக்கு அந்த அச்சமில்லையா? நான் மட்டும்தான் அஞ்சுகிறேனா? நான் கோழையா? பதினாறாண்டுகள் படைக்கலம் பயின்றிருக்கிறேன். அத்திறன் என்னை காக்காதா?

மூடா, அது களவிளையாட்டு. இது சாவின் பெருங்களம். இங்கே திறன் என ஏதுமில்லை, நல்லூழ் அன்றி துணையென ஏதுமில்லை. இதோ, இதோ, பறவைகள் கலைந்தெழுவதை காணப்போகிறார்கள். குளம்படியோசையைக் கேட்டு வில்லெடுக்கப்போகிறார்கள். அவர்களிடமிருப்பது நீளமான நிலைவில். அவர்களின் அம்புகள் வந்து தொடும் தொலைவுக்கு புரவியில் செல்பவர்களின் விற்கள் அணுகமுடியாது. இதோ எளிய பறவைகள் போல செத்து உதிரவிருக்கிறோம். என்ன அறியாமை! போரறியாச் சிறுவன் ஒருவனை நம்பி உயிரைக்கொண்டுவந்து படைக்கிறார்கள். அதைச்செய்தவன் நான். இதோ அறைகூவப்போகிறேன். வீரர்களே, இது போரல்ல, தற்சாவு. இது வீரம் அல்ல, அறியாமை. திரும்புங்கள், மீண்டும் வருவோம், மெய்யான விசையுடன் மீண்டும் வந்து வெல்வோம்.

அபிமன்யூ புரவியின் விசையை குறைக்காமலேயே வில்நாணை செவிவரை இழுத்து தண்டை விம்மச்செய்தான். அம்பு ஒன்றை எடுத்து “பற்றவையும்” என்றான். பிரலம்பன் அதன் அரக்குருளைமுனையில் அனலேற்றினான். எரியம்பு செந்நிறமான சிட்டுபோல வானிலெழுந்தது. வளைவாகப்பறந்து சிறிய எரிவிண்மீன்போல மாறிச் சென்று வளைந்து கீழிறங்கியது. ஓர் அம்பு அத்தனை தொலைவுக்கு செல்ல முடியும் என்பதை கதைகளில்கூட அவன் கேட்டிருக்கவில்லை. “ம்” என்றான் அபிமன்யூ. மீண்டும் அவன் பற்றவைத்த அம்பு எழுந்து சென்று அதே இடத்தில் விழுந்தது. அதன்பின்னரே பிரலம்பன் காற்று வீசும் திசைகணித்தே அபிமன்யூ படைகொண்டு வந்திருப்பதை உணர்ந்தான். அம்பு காற்றின் மேல் ஏறி மிதந்து சென்றது. எரியம்பு அனலின் எதிர்விசையால் விரைவழியுமென அவன் அறிந்திருந்தான். ஆனால் வீசுகாற்றில் அனலே சிறகென்றாகியது.

எரியம்புகள் விழுந்த இடத்தில் கூரைகள் பற்றிக்கொண்டு அனலெழத்தொடங்கியது. அவர்கள் விரைவை குறைக்காமல் புதர்களையும் உருளைப்பாறைகளையும் கடந்து சென்றுகொண்டே இருந்தனர். எரியம்பு சென்ற தொலைவு வேட்டுவர்களை அபிமன்யூ மேல் பெருநம்பிக்கை கொள்ளச்செய்தது. அவர்களிடமிருந்து மெல்லிய பேச்சொலிகள் கேட்டன. “விஜயரின் மைந்தர்” என ஒரு குரல் சொன்னது. “தந்தையை வெல்பவர்” என்றான் பிறிதொருவன். அபிமன்யூ சற்றே திரும்பி இன்னொரு திசைநோக்கி அம்பை விட்டான். “அங்கே ஊர் இல்லை என எண்ணுகிறேன்” என்றான் பிரலம்பன் “ஆம், ஆனால் தைலமரங்கள் உள்ளன. அங்கே பறவைக்குரல்கள் எழவில்லை” என்றான் அபிமன்யூ. ஏழு அம்புகள் சென்று விழுந்ததும் தைலக்காடுகளும் பற்றிக்கொண்டன.

காவல்மாடங்களில் இருந்தவர்களின் உள்ளங்கள் எரியெழுகை நோக்கி சென்றுவிட்டதை பிரலம்பன் கண்டான். எரியறிவிப்புக்கு முரசுகள் முழங்கத் தொடங்கின. பல இடங்களில் முரசுகள் தொட்டுத்தொட்டு முழக்கமிட்டன. பெரிய மரங்களின் மேல் அமைந்த காவல்மாடங்கள் அணுகிவந்ததும் அபிமன்யூ முதல் அம்பைச் செலுத்தி ஒருவனை வீழ்த்தினான். பிரலம்பன் தன் வில்லை இழுத்து அம்பைச் செலுத்தினான். ஆனால் அதற்குள் படையினரிடமிருந்து கிளம்பிய அம்புகள் கிளிகள் போலச் சென்று மொய்க்க காவல்மாடத்திலிருந்தவர்கள் அனைவரும் கீழே விழுந்தனர். “நம்மவர் இருவர் காவல்மாடம் மீது ஏறியமர்ந்து எரியறிவிப்பை முழக்கிக்கொண்டே இருக்கட்டும்” என ஆணையிட்டான் அபிமன்யூ. “கடந்துவரும் எதிரிகள் எவரேனுமிருந்தால் அவர்களை அம்பெய்து வீழ்த்தட்டும்… நமக்குப்பின்னால் எதிர்கள் வராது நோக்குவது அவர்களின் பணி.”

இரண்டாவது காவல்மாடத்தை அவர்கள் வீழ்த்தியபோதும் அதிலிருந்தவர்கள் எதையும் அறியவில்லை. அங்கும் அபிமன்யூவின் படையினர் ஏறி எரியறிவிப்பை முழக்கிக்கொண்டிருக்க அவர்கள் ஆசுரநிலத்தில் ஊடுருவினர். எரிசூழ்ந்த அசுரச்சிற்றூரில் மக்கள் குடங்களில் நீருடன் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். குதிரைகளில் வந்திருந்த படைவீரர்கள் அவர்களுக்கு ஆணைகளை இட்டபடி சுற்றிவந்தனர். அணுகிவந்த புரவிப்படையை அவர்கள் அசுரர்களின் உதவிப்படை என்றே எண்ணினர். ஏனென்றால் அவர்களுக்குப்பின்னால் எரியறிவிப்புடன் காவல்மாடங்கள் முழங்கிக்கொண்டிருந்தன. அவர்கள் அடையாளம் கண்டுகொள்வதற்குள் அம்புகளால் வீழ்த்தப்பட்டனர்.

“எந்த ஆண்மகனையும் எஞ்சவிடவேண்டியதில்லை… அத்தனை இல்லங்களும் எரியவேண்டும்” என்று அபிமன்யூ ஆணையிட்டான். “அனைவரையுமா?” என்றான் பிரலம்பன். “அனைவரையும்… ஒருவர்கூட ஓடிச்சென்று பிறரை எச்சரிக்கலாகாது… ஓர் அம்பும் ஒரு முழவும்கூட இங்கே எஞ்சலாகாது…” பிரலம்பன் நெஞ்சடைக்க குரலெழாமல் நிற்க அம்புகளை செலுத்தியபடியே அபிமன்யூ முன்னால் சென்றான். ஓசையில்லாமல் மக்கள் விழுந்துகொண்டே இருந்தனர். கடம்பர் முன்னால் வந்து “என்ன சொன்னார்?” என்றார். அவன் திக்கித் திக்கி “எல்லாவற்றையும்… அனைவரையும்” என்றான். அவர் உரக்கநகைத்து “ஆம், அதுதான் முன்னரே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அவர் களமறிந்த தலைவர்… போர் என்றால் என்னவென்று அறிந்தபின் மண்ணுக்குவந்தவர்” என்றார்.

“அனைவரையும் கொல்லவேண்டுமென்றால்…” என்றான் பிரலம்பன். “வீரரே, போரில் ஆற்றலென்பது கட்டின்மையே. எந்தவகைக் கட்டுப்பாடும் ஆற்றலை தடுப்பதுதான்… நம் வீரர்கள் வெறிகொண்டுவிட்டார்கள். இனி இறப்பு அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல” என்றபடி கடம்பர் முன்னால் ஓடினார். “எதுவும் மிஞ்சலாகாது… ஒரு குரல், ஒர் ஓசை…” என கூவினார். அபிமன்யூவின் வேட்டுவர்கள் அந்தச்சிற்றூரைச் சுற்றி வந்து தாக்கி எரியூட்டினர். கன்றுகளை அவிழ்த்துத் துரத்தினர். பெண்களையும் குழந்தைகளையும் சிதறடித்து காட்டுக்குள் செலுத்தினர். எஞ்சியவர் அனைவரையும் கொன்றனர்.

விடிவதற்குள் பதினெட்டு காவல்மாடங்களை அழித்து ஏழு ஊர்களை எரித்து அவர்கள் முன்சென்றுவிட்டிருந்தார்கள். காலையொளி எழுந்தபோது அவர்கள் மலைச்சரிவொன்றின் விளிம்பில் நின்றிருந்தனர். கீழே அசுரர்களின் பெரிய ஊர் ஒன்று நடுவே மன்றும் சூழ மூங்கில்செறிந்த வேலியுமாக எறும்புப்புற்றுபோல இயங்கிக்கொண்டிருந்தது. மந்தையைத்தாக்க சூழ்ந்து பதுங்கியிருக்கும் ஓநாய்கள் தாங்கள் என பிரலம்பன் உணர்ந்தான்.  அவர்கள் உடலெங்கும் கரிபடிந்திருக்க பேயுருவங்கள் போலத் தோன்றினர். “புரவியிலேயே உண்டு ஓய்வெடுப்போம்” என்றான் அபிமன்யூ. “அவர்கள் இன்னும் நாம் நுழைந்துவிட்டதை அறியவில்லை. எரிமுரசுகளின் ஒலியால் குழம்பியிருக்கிறார்கள். இவ்வூரை நாம் எளிதில் வெல்லமுடியும்.”

“இவ்வூரின் பெயர் சிருங்கபிந்து” என்றார் கடம்பர். “பாணரின் பன்னிருமனைவியரில் மூவர் இவ்வூரைச் சேர்ந்தவர்கள். இதன் தலைவன் கீர்மனின் முதல் மகள் பத்மையே அசுரப்பேரரசின் பட்டத்தரசி.” அபிமன்யூ “ஆம், அரசகுடியினரும் செல்வரும் வாழும் மூன்றுதெருக்கள் தெரிகின்றன. இதன் மக்களை பிணையென பிடித்துக்கொள்ள முடியும். இதன்கோட்டையும் நமக்கு நல்லரணாக அமையும். எத்தனை பெரிய படைவந்து சூழ்ந்தாலும் நான்குவாரம் நாம் இவ்வூரை தக்கவைத்துக்கொள்ள முடியும்.”

புரவிகளிலேயே உணவுண்டு நீர் அருந்தியபின் வேட்டுவர்கள் கீழே சிருங்கபிந்துவை நோக்கியபடி காத்து நின்றனர். புரவிகள் மூச்சு சீறியபடி, செவிகளை அடித்துக்கொண்டபடி, மெல்ல கனைத்தபடி கால்மாற்றிக்கொண்டன. சேணங்கள் ஓசையிட்டன. படைக்கலங்கள் மெல்ல முட்டின. அபிமன்யூ காத்திருப்பது காற்றுக்காக என பிரலம்பன் புரிந்துகொண்டான். மெல்ல அவர்களின் குழல்களையும் ஆடையையும் அலைபாய வைத்தபடி காற்று வீசத்தொடங்கியது.

அபிமன்யூ வில்லை எடுத்து சிருங்கபிந்துவின் தென்மேற்கே தெரிந்த வைக்கோல்போர்களை நோக்கி குறிவைத்தான். எரியம்பு எழுந்து சென்று வைக்கோல்குவையில் விழுந்ததுமே பாய்ந்து சரிவிறங்கி சிருங்கபிந்து நோக்கி சென்றான். படையினர் அவனைத் தொடர்ந்து சென்றனர். எரியம்புகளால் பற்றிக்கொண்டு தழலெழுந்து ஓங்கிய சிருங்கபிந்துவின் கோட்டைமுகப்பை உருண்டு மலையிறங்கிய பாறை எனச் சென்று தாக்கி உள்ளே நுழைந்தனர்.