வெய்யோன் - 8
பகுதி இரண்டு : தாழொலிக்கதவுகள் – 5
முதற்புலரியில் விழித்தபோது அன்னையின் சொல்லே கர்ணனின் நினைவில் எழுந்தது. தன் மஞ்சத்தில் கண்விழித்துப் படுத்தபடி உடைந்த எண்ணங்களை தொடர்ந்து சென்றுகொண்டிருந்தான். அன்றிரவு ராதை அதிரதனிடம் பேசியிருப்பாள். ராதை அதிரதனிடம் பேசுவதே குறைவு. அவர்தான் பேசிக்கொண்டிருப்பார். எங்கே அவர் நிறுத்தவேண்டும் என்று மட்டும்தான் அவள் சொல்வாள். சிறு சொற்களால், விழியசைவால், மெய்யுணர்த்தலால். ஆனால் அதன்பின்னர்தான் அவருக்கு சொல்வதற்கு மேலும் சொற்கள் இருக்கும். அவற்றை கர்ணனிடம் சொல்லத்தொடங்குவார்.
“இவளைப்போன்ற அடங்காக்குதிரைகளை புரவிநூலில் அசிக்ஷிதம் என்பார்கள். அவற்றை பழக்கப்படுத்தவே முடியாது. ஏனென்றால் அவை தங்களை மனிதர்களைவிட மேலாக நினைக்கின்றன. ஆகவே மனிதர்களை அவை கூர்ந்து நோக்குகின்றன. நம் முறைகள் அனைத்தையும் முன்னரே கற்றுக்கொள்கின்றன. நாம் சவுக்குடன் அணுகும்போது நம்மை எங்கே உதைப்பது என்று அவை எண்ணிக்கொண்டிருக்கின்றன. அவை நம்மை இழிவாக எண்ணுவது நாம் அருகே நெருங்கும்போது அவை மூக்கைச்சுளிப்பதிலிருந்து தெரியும்.”
உடனே வாய்விட்டு சிரித்து அவரே “உண்மையிலேயே அவை நம்மை விட மேலானவை என்பதுதான் இதிலுள்ள முதன்மையான இடர். அதை ஒப்புக்கொண்டால் நாம் நிறைவாக அடுத்த புரவியை நோக்கி சென்றுவிடமுடியும். அன்றி வென்றே தீருவேன் என இறங்கினால் நாம் அழிவோம். இயலாத எல்லைமேல் மோதுவது மடமை. ஏனென்றால் அங்கே நின்றிருப்பவை தெய்வங்கள். நல்ல குதிரைகளை நமக்கு அளித்த கனிந்த தெய்வங்களே இத்தகைய அடங்காப்புரவிகளையும் அளிக்கின்றன” என்பார்.
அன்னை சொல்லை தட்ட அதிரதனால் முடியாது என்று அவன் அறிந்திருந்தான். அவளுடைய விளக்கமுடியாத உறுதிகள் முன் சற்றே குமுறிவிட்டு அவர் பணிவதே வழக்கம். பணிவோம் என முன்னரே அறிந்திருந்தமையால் சற்று மிகையாகவே குமுறுவார். அவரது கொந்தளிப்பை பார்க்கையில் கர்ணனுக்கே அவர்மேல் இரக்கம் உருவாவதுண்டு. அவளுடைய ஆணையை ஏற்று அவர் முன்நாள் சொன்னதை முழுக்க மறந்து நின்றிருக்கும் அதிரதனைத்தான் அவன் அவரது இல்லத்தில் எதிர்பார்த்தான். ஒன்றுமில்லை, ஒரு சிறிய உளச்சிக்கல் என எண்ணி எண்ணி தன்னை ஆற்றுப்படுத்திக்கொண்டான்.
அவ்வெண்ணம் நீராடியது, ஆடை அணிந்தது, அணி கொண்டது, தேரில் ஏறி சூதர் தெருவை அடைந்து சிறு மாளிகை முன் நின்று இறங்கி படிகளில் ஏறி உள்ளே சென்றது. அவனைக் கண்டதும் ராதையில் நிகழ்ந்த நுண்ணிய மாற்றத்தை அவன் உள்ளம் அறிந்தது. அக்கணமே அவன் அறிய வேண்டியதனைத்தையும் ஆழுளம் உணர்ந்து கொண்டது. இல்லை இல்லை என்று மறுத்து சித்தம் சொல் தேடியது. அத்தகையதோர் தருணத்தை எதிர்கொள்ளும் எவரும் செய்வதுபோல மிக இயல்பாக எளியதோர் வினாவுடன் அவன் தொடங்கினான்.
“தந்தை இங்கில்லையா அன்னையே?” என்றான். என்றும் போல் புலரியில் அவர் குதிரை லாயத்திற்கு சென்றிருப்பார் என்று அறிந்திருந்தான். புன்னகையுடன் அன்னை “இன்று ஒரு சிறு புரவிக்கு முதற்கடிவாளம் மாட்டுகிறார்கள். இரவெல்லாம் உள்ளக் கிளர்ச்சியுடன் அதையே பேசிக்கொண்டிருந்தார். மணிவண்ணன் கோட்டத்து முதற் சங்கொலியிலேயே எழுந்து நீராடி கச்சை முறுக்கி கிளம்பிவிட்டார்” என்றாள். அச்சொற்களே அவளுக்கு வழிகாட்ட புன்னகை விரிய “புரவிகள் அவர் வாழ்விற்குள் நுழைந்தபடியே உள்ளன” என்றாள்.
கர்ணன் தரையிலமர்ந்து வாழைப்பூவை ஆய்ந்துகொண்டிருந்த அவளருகே அமர்ந்தான். “காலையில்தான் இதை கொல்லையிலிருந்து பிடுங்கினேன்… நீ உச்சிவேளைவரை இருந்தால் உண்டுவிட்டுச் செல்லலாம்” என்றாள். அவன் அதில் ஒன்றை எடுத்து வாயில் வைக்க அவள் பிடுங்கி மீண்டும் முறத்திலிட்டு “என்ன செய்கிறாய்? எதுவானாலும் வாயில் வைப்பதா?” என்றாள். “தேன்” என்றான் கர்ணன். “உன் அரண்மனையில் ஆளுயரப் பரண்களில் தேன் உள்ளதே!” என்றாள். “ஆம், ஆனால் அது மானுடர் சேர்த்த தேன். அதற்கு முன் தேனீக்கள் சேர்த்த தேன். இது மலர்த்தேன் அல்லவா?” ராதை சிரித்து “நன்றாகப்பேசு…” என்றாள்.
கர்ணன் அவளது ஒவ்வொரு அசைவிலும் தெரிந்த மெல்லிய செயற்கைத் தன்மையை தொட்டுத் தொட்டு உணர்ந்து உள்நடுங்கிக் கொண்டிருந்தான். அவள் அருகே அமர்ந்து தடித்த நரம்புகள் ஓடிய முதிர்ந்த கையைப் பற்றி தன் மடியில் வைத்தபடி “நானும் சூதனே. எனக்கும் குட்டிக் குதிரைகளை பெருவிருப்புடன் நோக்குவது பிடித்தமானது” என்றான். அன்னை “ஆம், ஒவ்வொரு குதிரையும் இவ்வுலகை ஒவ்வொரு வகையில் எதிர்கொண்டு புரிந்து கொள்கின்றது என்பார். ஒவ்வொரு நாளும் குதிரையை பார்த்தாலும்கூட ஒரு புதிய குதிரை எவ்வண்ணம் பழகும் என்பதை உய்த்துணர முடியாது என்பதில் உள்ளது பிரம்மத்தின் ஆடல் என்பார்” என்றாள்.
அவள் கையூன்றி எழுந்து “உனக்கென இன்னீர் எடுத்து வைத்தேன்” என்றாள். அவன் அவள் கால்களைப் பற்றி அழுத்தி அமரவைத்து “இல்லை அன்னையே, நான் அருந்திவிட்டுதான் வந்தேன். உங்கள் அருகிருக்கவே விழைந்தேன்” என்றான். “உனக்கென்ன அரசு அலுவல்கள் இல்லையா? முதற்புலரியில் அரசன் சூதர்குடியில் வந்து அமர்ந்திருப்பதை குடிமக்கள் விரும்பாதாகக் கூடும்” என்றாள். “நீங்கள் என் அன்னையென்று அறியாதவர் எவர்?” என்றான் கர்ணன். “ஆம். ஆனாலும் அது இன்று பழைய செய்தி. எது என்றும் மக்கள் முன் நிற்கிறதோ அது நாளடைவில் இயல்பென்றாகும். பின்னர் எங்கோ மானுடரின் சிறுமையால் சிறுமை என்று விளக்கப்படும்.”
“அவ்வண்ணமே ஆகட்டும். இது அவர்களின் விழிகளுக்காக அல்ல, என் உள்ளத்துக்காக” என்றான் கர்ணன். “அரசனுக்கு என்று தனிச்செயல் ஏதுமில்லை. அவன் செயல் அனைத்துமே குடிகளின் விழிகளுக்காகத்தான். மேடையேறிய நடிகன் இறங்க முடியும், அரியணை அமர்ந்த அரசன் இறங்கமுடியாது என்றொரு சொல் உண்டு” என்றாள் ராதை. ஒரு கணத்தில் அவ்வுரையாடல் முற்றிலும் சலிப்பூட்டுவதாக ஆவதை உணர்ந்த கர்ணன் அவளது இன்னொரு கையைப் பற்றி சற்றே பழுதடைந்த கட்டை விரல் நகத்தை தன் சுட்டு விரலால் நீவியபடி “அன்னையே, உங்களிடமிருந்து ஒரு நற்சொல் தேடி வந்துளேன்” என்றான்.
அவள் விழிகளைத் தாழ்த்தி “ஆம்” என்றாள். “தந்தையிடம் பேசினீர்களா?” என்றான். “ஆம், பேசினேன்” என்றாள். கர்ணன் சில கணங்கள் காத்திருந்தான். சொல்லின்றி அவன் உதடுகள் அசைந்தன. “சொல்லுங்கள் அன்னையே” என்றான். அவள் விழி தூக்கி “முதல் மனைவியாக நீ சத்யசேனையை ஏன் மணக்கலாகாது?” என்றாள். “அன்னையே…” என்று கர்ணன் உரக்க அழைத்தான். “நேற்றிரவு முழுக்க எண்ணியபின் இன்று காலை இதுவே எனக்குத்தோன்றியது” என்றாள் ராதை. “நீ செய்வதற்குரியது இது ஒன்றே.”
“நான் அஸ்தினபுரியின் அவையில் எப்படி நிற்பேன்?” என்றான் கர்ணன். சொல்லும்போதே அவன் குரல் குழைந்தது. ராதை சினத்துடன் “நிமிர்ந்து நில். சொல்லப்போனால் அவர்களின் திட்டங்களுக்கு வெறும் பகடைக் கருவாக நிற்பதைவிட உனக்கென்று ஒரு எண்ணமும் வழியும் உண்டென்று எழுந்து நின்று சொல்வதே உன்னை ஆண்மகனாக நிறுத்தும். எண்ணிப்பார், அவள் உனக்கு மணம் பேசத் தொடங்கி ஓராண்டு ஆகிறது. இன்று வரை பாரதவர்ஷத்தின் ஷத்ரியர் எவரும் அவள் மணத்தூதுக்கு மறுமொழி சொல்லவில்லை. அஸ்தினபுரியின் முத்திரைகொண்ட ஓலை அது. ஆனால் வாயில்தோறும் தட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதுவே உன்னை இழிவாகக் காட்டிவிட்டது” என்றாள்.
“ஆனால் அதற்கென ஒரு சூதமகளை நான் மணந்தால் மேலும் இழிவல்லவா?” என்றான். “என்னை இழிவுசெய்யவும் இறக்கி மண்ணில் நிறுத்தவும் விழையும் உள்ளங்களே என்னைச்சூழ்ந்துள்ளன.” ராதை “இல்லை, நீ அவளை மணந்தால் அது ஒரு மறுமொழி. நெஞ்சு விரித்து நின்று ஆம் நான் சூதன், சூதன் மகளை மணக்கிறேன், சூதனாகவே நாட்டை வென்றேன் என்று சொல்லும்போது அவர்கள் விழிதாழ்த்துவதை நீ காண்பாய்” என்றாள். கர்ணன் “பானுமதி…” என்று தொடங்க ராதை பொறுமையிழந்து “அவளைப்பற்றிப் பேச நாம் இங்கு அமரவில்லை” என்றாள். கர்ணன் “இல்லை” என்றான்.
ராதை தணிந்து “இவ்வளவும் நீ அவளுக்காகத்தான் எண்ணுகிறாய் என்று அறிவேன். அவள் உனக்கு நன்று செய்ய எண்ணுகிறாள் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவள் அறிந்த சிற்றுலகில் அதற்கு விடை தேடுகிறாள். அது இயல்வதல்ல. ஷத்ரிய மன்னன் ஒருவனின் பல மனைவிகளில் அவையில் இடமற்ற கடைமகள் ஒருத்தியின் மகளை நீ மணந்து ஆகப்போவதென்ன?” என்றாள். “அன்னையே…” என்று கர்ணன் தொடங்க ராதை கை தூக்கி “அரண்மனையில் ஷத்ரியர் உண்டு விடுத்த அறுசுவை உணவின் மிச்சமா அல்லது இங்கு உன் அன்னை உனக்கு சமைத்த புத்துணவா? எது உனக்கு விருப்பமானது சொல்” என்றாள். “இப்படி கேட்டால் என்னிடம் விடையில்லை” என்றான் கர்ணன்.
ராதை கடுமை தெரிந்த முகத்துடன் வாழைப்பூ இதழ்களை எடுத்து தட்டாரப்பூச்சியின் இறகுகளை பிய்த்தெறிவதுபோல அதன் மெல்லிய தாள்களை விலக்கி இதழ்களை எடுத்துப்போட்டபடி “சென்று விடை தேடு. ஆண்மகனாக அஸ்தினபுரியின் அவையில் எழுந்து நின்று என் தந்தை எனக்கிட்ட ஆணையே முதன்மையானது என்று சொல். அஸ்தினபுரியின் முடிசூடிய மாமன்னனும் தொல்குடியினர் அமைந்த அவையும் அரசனின் குலமகளும் சொல்லும் சொல்லைவிட உன் தந்தையின் சொல் உனக்கு பெரிதென்றால் அது உனக்கு பெருமையே அளிக்கும். தயங்கி சிறுமை கொள்வதைவிட துணிந்து பெருமை கொள்வதே வீரனுக்கு உகந்ததென்றுணர்” என்றாள்.
கர்ணன் இரு கைகளையும் கூப்பி அதில் நெற்றியை வைத்து தலைகுனிந்து அமர்ந்திருந்தான். ராதை அதை சிலகணங்கள் நோக்கியபின் கனிந்து அவன் கைகளைப்பற்றி “நான் சொல்வதை கேள். பிறிதொரு வழி எனக்குத்தோன்றவில்லை” என்றாள். நிமிர்ந்து நிறைந்த கண்களுடன் “அன்னையே, இவை அனைத்தும் உண்மையல்ல. நீங்கள் சொல்வது இதற்காக அல்ல என்பதைக் காட்டுகிறது உங்கள் மிகைச்சினம். சொல்லுங்கள், எதற்காக?” என்றான்.
அவள் தாழ்ந்த குரலில் “நேற்றிரவு உன் தந்தையிடம் பேசினேன்” என்றாள். “நானறிந்த அனைத்துச் சொல்முறைகளையும் எடுத்து முன்வைத்தேன். அவர் உறுதியாக இருக்கிறார். நீ அரசமகளை மணந்தால் அது தன் நிகர் இறப்பு என்பதில் அவருக்கு எந்த ஐயமும் இல்லை. அவ்வண்ணம் நிகழ்ந்தால் தன் வாழ்வு ஒரு தோல்வி என்று ஒப்புக்கொண்டு மாளவத்திற்கோ விதர்பத்திற்கோ எளிய ஒரு குதிரைக்காரனாக சென்றுவிட முடிவெடுத்திருக்கிறார்.” சினத்துடன் கர்ணன் “என்ன இது? என்ன மூடத்தனம் இது?” என்றான்.
ராதை “அப்போது ஓர் மனைவியாக நான் எடுத்த முடிவு இது. அவர் கண்களை பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தக் கண்ணீர் என்னை வதைத்தது. இந்த ஓரிடத்திலாவது என் கொழுநன் வெல்லட்டும் என முடிவெடுத்தேன்” என்றாள். “அன்னையே” என்றான் கர்ணன். “ஒவ்வொரு சொல்லுக்கும் மறுசொல் உரைத்தும் இளிவரல் நகை செய்தும் நான் அவரை எதிர்கொள்வதை இதுவரை கண்டிருப்பாய். ஆனால் என் நெஞ்சுக்குள் என்றும் கொழுநனின் கால்களை தலையில் சூடும் பத்தினியாகவே இருந்திருக்கிறேன். இது அவரது உயிர்வினா என்றறிவேன். இதற்கு என்னிடம் ஒரு விடையே உள்ளது. இவ்வுலகே அழியினும் சரி, என் கணவர் வெல்ல வேண்டும்” என்றாள் ராதை.
கர்ணன் நீண்ட பெருமூச்சுடன் “புரிகிறது” என்றான். ராதை “மைந்தன் என நீ உன்னை எண்ணுவாய் என்றால் இது உன் அன்னையின் ஆணை” என்றாள். “அவ்வண்ணமே” என்றபடி கர்ணன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். ராதை வாழைப்பூவின் இதழ்களை கொய்துகொண்டிருந்தாள். அவள் கைகளில் கருநீலக் கறை படிந்திருந்தது. கருங்குருவி அலகு போன்ற நகங்கள். அவை தொட்டுத்தொட்டு விலகி ஒரு செய்கை மொழி பேசிக்கொண்டிருந்தன. அந்த மொழியை அறியமுடியுமா என அவன் எண்ணினான்.
அறுத்து விடுபட்டு அவன் எழுந்தான். ராதை சுவர் பற்றி எழுந்து முகம் கனிந்து கண்களில் நீருடன் “மைந்தா” என்றாள். அவன் “பிறிதொரு முறையும் தோற்றிருக்கிறேன் அன்னையே” என்றான். கசப்புடன் புன்னகைத்து “ஆனால் அது நன்று. தோற்கும்போதெல்லாம் மீள்வதற்கு ஒரு இடம் இருந்தது என்ற எண்ணம் எஞ்சியிருந்தது. அங்கும் தோற்க வைத்து என்னுடன் ஆடுகிறது ஊழ்” என்றான். சால்வையை எடுத்தணிந்தபடி “ஆவனசெய்யுங்கள் அன்னையே” என்றான்.
ராதை கைநீட்டி “இல்லை மைந்தா. என்றும் நீ என் மைந்தன். என் மடியில் முலையுண்டு உறங்கிய குழவிதான்” என்றாள். “இல்லை அன்னையே, நீங்களும் அறிவீர்கள். இத்தருணத்தில் நமக்குள் ஒன்று மெல்ல ஒலியின்றி முறிந்தது. இப்புவியின் மாறாநெறிகளில் ஒன்று முறிந்தவை மீண்டும் இணையாதென்பது.” ராதை அச்சொற்களால் குத்துண்டாள். அவள் உடலசைவிலேயே அந்த வலி தெரிந்தது. “மைந்தா” என்றபடி அவள் மேலும் முன்னால் நகர்ந்தாள். மிக இயல்பான அசைவால் அவள் தொடுகையை கர்ணனின் உடல் தவிர்த்தது. ராதை தளர்ந்த நடையுடன் பின்னால் நகர்ந்தாள்.
கர்ணன் அவள் இல்லத்தின் படியிறங்க ராதை விரைந்த சிற்றடியுடன் ஓடிவந்து கதவைப்பற்றியபடி “மைந்தா… என்னை பொறுத்தருள். நான் வெறும் பெண். அதற்குமேல் ஏதுமில்லை” என்றாள். அவன் “அனைவரும் தங்களை எளிய மானுடர் என உணரும் ஒரு தருணம் உண்டு அன்னையே” என்றான். “நான் என்னை எண்ணி தருக்கிய நாட்களே இதுவரை இருந்தன. மாவீரனை வளர்த்தவள், என் காலடியில் வரலாறு சுழித்தோடுகிறது என்றெல்லாம் எண்ணிக்கொண்டேன். பீடத்திலமர்ந்து மற்ற மானுடரை அளவிட்டேன். நான் எளிய பெண். வெறும் மனையாட்டி. வேறெவருமில்லை…”
அவள் குரல் இடறியது. உதடுகளை அழுத்தி ஏதோ சொல்லவந்தவள் அடக்கிக்கொண்டாள். ஆனால் நெஞ்சு திறந்து எழுந்து வந்த பெருமூச்சு விம்மலாக வெளியேறியது. அவ்வொலியே அவள் எல்லையை உடைத்தது. “மைந்தா, உன் நிகரற்ற உயரத்தில் இருந்து இப்புவியை முடிவிலாது பொறுத்தருள்பவன் நீ. ஏனெனில் நீ சூரியன் மைந்தன்… உன்னிடம் நான் கோருவதும் இப்புவியில் ஒவ்வொன்றும் காலை முதற்கதிரிடம் இறைஞ்சும் காயத்ரியைத்தான். என் சிறுமையையும் இருளையும் எரித்தழித்து எனக்கு அளிசெய்க. இறப்பின்மையை அருள்க” என்றாள்.
கர்ணன் “அன்னையே, என் அன்னையின் இடத்தில் என்றும் இருப்பீர்கள். அணுவிடையும் உங்கள் மேல் நான் சினம்கொள்ள மாட்டேன். தந்தையிடமும் அதையே சொல்லுங்கள்” என்றான். அவள் கண்கள் நிறைந்து வழியத்தொடங்கின. அவன் திரும்பி அவள் தலைக்குமேல் எழுந்து நின்று குனிந்து நோக்கி “உங்களிருவருக்கும் நீத்தார்நீரும் நிறையன்னமும் அளிப்பவன் நான். விண்ணுலகில் உங்களுக்கு என் கண்ணீர் வந்து சேரும். நானும் உங்கள் காலடிகளிலேயே வந்தமைவேன்” என்றான். அவள் விம்மி தலைகுனிந்தாள்.
அவன் அருகணைந்து அவளுடைய முகவாயைப்பற்றி தூக்கி பெண்குரலில் நடித்து “அடி ராதை, என்ன இது? நீ அழுது இதுவரை கண்டதில்லையே? இளங்கன்னியர் அழுவதை அக்கார்வண்ணன் விழையமாட்டான் அல்லவா?” என்றான். அவள் ஈரக்கண்களுடன் சிரித்து “சீ, போடா” என்று அவனை அடித்தாள். “கலிங்கத்திலிருந்து ஒரு மாயவன் வந்திருந்தான். அவன் முதுமையை அழித்து இளமையைக் கொணர்வான் என்றார்கள். அவனைக்கொண்டுவந்து உங்களை கன்னியாக்கிப் பார்த்தாலென்ன என்று எண்ணினேன்” என்றான். “சீ, என்ன பேச்சு இது… போடா” என்றாள் ராதை.
அவன் அவள் கண்ணீரை துடைத்து “இந்தக் கன்னங்கள் மலர்மென்மை கொள்ளும். கண்களில் ஒளிவரும். சிரிப்பில் நாணம் வரும்” என்றான். ராதை அவனை உந்தி “என்ன பேச்சு இது? தள்ளிப்போ” என்றாள். “ஆனால் அப்படி நீங்கள் பேரழகியானால் துவாரகையின் அரசன் அவனுடைய ராதை என எண்ணிவிடுவானே என்று அஞ்சினேன்” என்றான். ராதை கடும் சினத்துடன் அவன் தோளில் அறைந்து “பேசாதே. அரிவாள்மணையை எடுத்து நாக்கை அறுத்துவிடுவேன். மூடா… என்ன சொற்கள் இவை?” என்றாள். “ராதை, என் எழிலரசி! உன் உள்ளத்தை அறியமாட்டேனா?” என்றான் கர்ணன்.
“போடா…” என்று அவள் அவனை அறைந்தாள். சிரிப்பும் நாணமுமாக அவள் முகம் மலர்ந்துவிட்டிருந்தது. கண்கள் பூத்திருந்தன. “என் முகத்தில் விழிக்காதே. போ… எங்காவது ஒழிந்துபோ!” அவன் குனிந்து முறத்தை எடுத்து “நறுந்தேன் மலர்களால் உன்னை வாழ்த்துகிறேன் சூதர்குலக் கன்னி. உன் அழியாக்காதலை அமரர் அறிவதாக!” என்றபடி வாழைப்பூவை எடுத்து அவள் தலைமேல் இட்டான். “சீ… அடக்கு… வை அதை…” என்று ராதை முறத்தைப் பிடுங்கினாள்.
“சமைத்து வை. நான் உச்சிகடந்தபின் வந்து உண்டுசெல்கிறேன்” என்றான் கர்ணன். “உண்மையாகவா? வருவாயா?” என்றாள் அவள் மகிழ்ச்சியுடன். “பொய்யாகவா சொல்வார்கள்?” என்றான் கர்ணன். “வந்து இன்றேனும் உன்னால் வாழைப்பூக்கூட்டை சரியாக சமைக்கமுடிகிறதா என்று பார்க்கிறேன்…” அவள் சிரித்து “நீ அள்ளி அள்ளி உண்ணும்போது இதை சொல்லிக்காட்டுகிறேன்” என்றாள். “உன் கணவரிடம் சொல்லி வை. நான் உச்சிப்பொழுதில் வரும்போது அவர் உரிய குதிரைச்சாணி மணத்துடன் உணவுண்ண இங்கிருக்கவேண்டும்.”
ராதை சிரித்து “வந்துவிடுவார். பெரும்பாலும் அந்த குதிரைக்குட்டி அவருக்கு வழக்கமான உதையை அளித்திருக்கும்” என்றாள். கர்ணன் “தத்துவத்தை குதிரைகள் இளவயதில் விரும்புவதில்லை. ஆகவேதான் நாம் அவற்றுக்குக் கடிவாளம் போட்டுவிடுகிறோம்” என்றபின் “வருகிறேன். இன்று நான் அரசவைக்குச் செல்லவேண்டும். பிதாமகர் இன்று வந்திருக்கிறார்” என்றான். ராதை “ஆம், அறிந்தேன். ஹரிசேனரின் இறப்புக்குப்பின் அவர் நகர்புகுந்ததில்லை என்றார்கள்” என்றாள்.
“நிழலை இழந்தவர் போல் உணர்கிறார் என்றனர் சூதர். அவர் நோக்கிலேயே ஒரு சுளிப்பு அவிழாது குடியேறிவிட்டிருப்பதை கண்டேன்” என்றபின் “வருகிறேனடி கோபிகையே” என்று சொல்லி விலக அவள் கையிலிருந்த வாழைப்பூவை எடுத்து அவன் மேல் வீசி “வராதே, அப்படியே போ” என்றாள். அவன் சிரித்தபடி முற்றத்தில் இறங்கி தன் தேர்நோக்கி சென்றான். மலர்ந்த முகத்துடன் அவள் வாயிலில் நின்றிருந்தாள். அவன் தேரிலேறியபின் அவளிடம் கையசைத்து தலையை சுட்டிக்காட்ட அவள் தடவிநோக்கி கூந்தலிழையில் இருந்த வாழைப்பூவை எடுத்து முறத்தில் போட்டாள்.
தேரை அவனேதான் ஓட்டிவந்தான். தேர்த்தட்டில் நின்றபடி அஸ்தினபுரியின் சூதர்தெருவழியாக சென்றான். இசைச்சூதர் குழுக்கள் ஆலயங்களில் இருந்து தங்கள் இசைக்கலங்களுடன் திரும்பிக்கொண்டிருந்தன. அவனைக் கண்டு அவர்கள் புன்னகைத்து தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அரசர்களைக் காணும்போது அளிக்கும் வாழ்த்தையும் வணக்கத்தையும் அவர்கள் அவனுக்கு அளிப்பதில்லை. தங்களில் ஒருவனைக் காணும் இயல்பான மகிழ்வே அவர்களின் முகத்தில் இருக்கும்.
தேருக்குப் பின்னால் ஒவ்வொரு சூதரில்லமாக தோன்றி முழுத்து உதிர்ந்து கொண்டிருந்தது. இல்லங்களுக்கு முன்னால் முதியசூதர்கள் கால்களை மடித்து அமர்ந்திருந்தனர். தந்தையர் தனையர்களுக்கு இசை கற்றுக்கொடுத்தனர். சூதர்குலப்பெண்கள் கைகளை முகவாயில் வைத்து அதை நோக்கி நின்றனர். கூரைகளுக்குமேல் அடுமனைப்புகை எழுந்து நின்றிருந்தது. அவ்வில்லம் சிறகடித்துப் பறக்கவிருப்பதுபோல தோன்றியது.
இந்திரனின் ஆலயத்தருகே இருந்த சிறிய செண்டுவெளியில் குட்டிக்குதிரைகளை இருபுறமும் அமைக்கப்பட்ட மூங்கில் தட்டிகளுக்கு நடுவே கட்டிவைத்து மேலே ஏறி அமர்ந்து பயிற்றுவித்தனர். குதிரைகள் உடல் விதிர்த்து அவர்களை உதறின. கீழே விழுந்தவர்கள் எழுந்து நின்று உடைசீரமைக்க கூடியிருந்தவர்கள் கூச்சலிட்டு நகைத்தனர். குதிரை தோல் சிலிர்த்து வால் சுழற்றி சுற்றிவந்தது.
இசைச்சூதர்களின் நான்கு தெருக்கள் முட்டிக்கொள்ளும் முனையில் அமைந்த ஹிரண்யாக்ஷரின் ஆலயத்தருகே சூதர்கள் கூடியிருந்தனர். அவன் புரவியை கடிவாளத்தை சற்றே இழுத்து நிறுத்தினான். அங்கே இரு சூதர்குலச் சிறுவர்களுக்கு யாழ்தொட்டளிக்கும் சடங்கு நிகழ்ந்துகொண்டிருந்தது. ஆலயக்கருவறையில் பொன்னாலான விழிகளுடன் கையில் யாழுடன் ஹிரண்யாக்ஷர் அமர்ந்திருந்தார். அவருக்கு முன்னால் அரியும் மலரும் பொரியும் வெல்லமும் படைக்கப்பட்டு நெய்விளக்குகள் எரிந்தன.
ஆலயத்திற்கு வலப்பக்கமாக அஜபாலரின் சிறிய மண்சிலை இருந்தது. அதற்கும் மலர்மாலைகள் சூட்டப்பட்டிருந்தன. அவன் அந்தக் கூட்டத்தில் தீர்க்கசியாமனை தேடினான். சிலகணங்களுக்குப் பின்னர்தான் அனிச்சையாக விழிகளிலிருந்து விழிகளை நோக்கி தேடுகிறோம் என்று உணர்ந்தான். நோக்கை விலக்கி விரல்களை தேடத்தொடங்கியதுமே கிழிபட்ட கட்டைவிரல்களை கண்டான். தீர்க்கசியாமன் ஆலயத்தின் தூணில் சாய்ந்து மடியில் பேரியாழுடன் அமர்ந்திருந்தான்.
முதிரா இளைஞனாக வளர்ந்திருந்தான். ஆனால் தோள்கள் குறுகி முன்னால் வளைந்திருந்தன. சிறிய கூனல் விழுந்திருந்தது. மூக்கு முதுகழுகின் அலகுபோல கூர்ந்து வளைந்திருக்க உதடுகள் உள்ளடங்கியிருந்தன. விரல்கள் தானாகவே நரம்புகளில் உலவ யாழ் அதுவே பாடிக்கொண்டிருந்தது. அவன் எதிர்நோக்கி நின்றிருந்தான். தன் உள்ளம் ஏன் பதற்றமடைகிறது என எண்ணிக்கொள்ளவும் செய்தான்.
தீர்க்கசியாமன் திரும்பி அவனை செவ்விழிக்கோளங்களால் நோக்கினான். அவன் நெஞ்சதிர்ந்து கடிவாளத்தை அறியாமல் இழுக்க குதிரைகள் முன்கால் எடுத்து வைத்த அதிர்வில் தேர் குலுங்கியது. தீர்க்கசியாமன் புன்னகைசெய்தான். அவனைக் கடந்து அவன் பின்னால் பேருருவாக எழுந்த பிறிதொருவனை நோக்கி செய்த புன்னகை அது என தோன்றியது. கர்ணன் நீள்மூச்சுடன் கடிவாளத்தைச் சுண்டி தேரை கிளப்பினான்.