வெய்யோன் - 62

பகுதி எட்டு : நூறிதழ் நகர் – 6

அழிவிலா நாகங்களின் தொல்கதையை அறிக! ஏழுசிந்துக்களின் படுகைகளிலும் கங்கைவெளியிலும் செறிந்த பெருங்காடுகளை ஆண்டது இருண்ட பாதாளங்களின் தலைவனாகிய வாசுகியை மூதாதையாகக் கொண்ட வாசுகி குலம். நாகர்கள் மண்ணில் பெருகி தங்களுக்கென்றொரு அரசை அமைத்தபோது உருவான முதல் அரியணை அது.

மண்மறைந்த சரஸ்வதியின் மானுடர் அறியும் ஊற்றுமுகத்தில் இருந்த நாகர்களின் தொல்நிலமாகிய நாகோத்ஃபேதத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட அத்திமரக்கிளையை நட்டு, அதனடியில் போடப்பட்ட கருங்கல் பீடத்தில் முதலரசர் வாசுகியை நாகர்குலத்து மூத்தோர் பன்னிருவர் கைப்பிடித்து கொண்டுசென்று அமரச்செய்து, செம்மலர் தூவி அரியிட்டு சரஸ்வதியின் ஆழ்நீர் தெளித்து வாழ்த்தினர். ஈச்சையோலையால் ஆன நாகபட மணிமுடியைச் சூடி நாகர்குலத்தின் முதல் அரசராக ஆக்கினர்.

அவர் மைந்தர் நந்தரிலிருந்து எழுந்தது வாசுகிப்பெருங்குலம். பேரரசர் நந்தவாசுகியின் மகள்களான சுப்ரமை, மாலினி, பத்மினி, மண்டனை ஆகியோரின் வயிற்றில் நாகர்களின் பிறநான்கு குலங்கள் பிறந்தன. சுப்ரமையின் மைந்தரிலிருந்து தட்சனை முதல்தெய்வமாகக் கொண்ட தட்ச குலம் தோன்றியது. மாலினியில் இருந்து ஐராவதகுலமும் பத்மினியில் இருந்து கௌரவ்ய குலமும் மண்டனையில் இருந்து திருதராஷ்டிரகுலமும் உருவாயின.

நந்தவாசுகியின் கொடிவழி கோடிசன், மானசன், பூர்ணன், சலன், பாலன், ஹலீமகன், காலவேகன், பிரகாலனன், ஹிரண்யபாகு, சரணன், கக்ஷகன், காலந்தகன் ஆகிய மாமன்னர்களின் நிரைகொண்ட பெருமையுடையது. காடுகளில் அவர்களின் சொல் நின்றது. மண்சென்றபின் மலையுச்சிகளில் அவர் கல் நின்றது. மன்றுகளில் என்றும் அவர்களுக்கே முதல் கேள்வி அளிக்கப்பட்டது. நாகவேள்விகளில் அவர்களுக்கே முதல் அவி படைக்கப்பட்டது.

கங்கைக் கரையில் அமைந்த அவர்களின் கான்நகரான பிலக்ஷசிலை கங்கைப்பெருக்கில் நிழல்வீழ்த்தி எழுந்து நின்ற நாகபேரம் என்னும் மலைமேல் ஏழு அடுக்குகளாக அமைந்திருந்தது. முதல் அடுக்கைச்சுற்றி ஓங்கி உயர்ந்து முகில்சூடி நின்ற தேவதாருமரங்களை இணைத்துக்கட்டிய உயிர்மரக்கோட்டை இருந்தது. அம்மரங்களின் கீழே செறிந்த புதர்களில் நச்சுப்பல் கொண்ட நாகங்கள் வாழ்ந்தன. அவை உறங்காவிழிகளும் அணையாச்சீற்றமும் கொண்டவை.

இரண்டாவது அடுக்கில் நாகர்குலத்து படைவீரர்களும் மூன்றாவது அடுக்கில் நாகவேடர்களும் நான்காவது அடுக்கில் நாகர்களின் படைத்தலைவர்களும் ஐந்தாவது அடுக்கில் குலப்பாடகர்களும் இருந்தனர். ஆறாவது அடுக்கில் வாசுகிக் குலமூத்தார் இல்லங்களும் ஏழாவது அடுக்கில் அரண்மனையும் அமைந்திருந்தன. நூற்றெட்டு உப்பரிகைகளும் பதினெட்டு குவைமாடங்களும் கொண்ட அம்மாளிகையின்மேல் வாசுகிகுலத்தின் ஏழுதலைநாக முத்திரை கொண்ட கொடி பறந்தது. விண்ணுலாவிய தேவர்களுக்கு வந்தமர்ந்து விடாய்குளிர்க என்னும் அழைப்பாகத் திகழ்ந்தது அது.

செந்நிறமும் பச்சைநிற விழிகளும் கொண்ட வாசுகிகுலத்தவர் நாகர்களில் உயரமானவர்கள். வில்லுடன் சென்று நதிகளில்செல்லும் படகுகளில் திறைகொண்டு அரசுக்கருவூலத்தை நிறைத்தனர். நீரோடும் தேனோடும் இணையும் நாகநச்சு ஏழு கொலைநோய்களுக்குரிய சிறந்த மருந்து என்றனர் மருத்துவர். பொன்கொடுத்து நஞ்சு பெற்றுச்செல்ல மருந்துவணிகர்கள் தக்கைப்படகுகளில் பிலக்ஷசிலையின் எல்லைவரை வந்தனர்.

வாசுகிகுலத்துச் செந்நாகர் இமையாவிழிகளால் பிறர் நெஞ்சுள் சென்று அவர்களின் மொழியைக் கற்று அக்கணமே மறுமொழிசொல்லும் மாயம் அறிந்தவர்கள். தங்களுக்குள் நாவாலும், தங்கள் குடிகளுக்குள் முழவாலும், விலங்குகளிடம் இசைக்கொம்பாலும், விண்ணாளும் தெய்வங்களிடம் இடியோசைகளாலும் உரையாடுபவர்கள். விழிநோக்கியிருக்கவே மறையவும் புகையெனத் தோன்றி உருத்திரட்டி அணுகவும் கற்றவர்கள்.

முடிசூடி மூதாதையர் அமர்ந்த கற்பீடத்தில் அமரும் அரசனை வாசுகி என்றே அழைத்தனர் பாடகர். முதல்வாசுகியின் பெருஞ்சிலை மரத்தாலும் அரக்காலும் மெழுகாலும் அமைக்கப்பட்டு குன்றின்மேல் அமைந்த பெரும்பாறையின் உச்சியில் நிறுவப்பட்டிருந்தது. பதினெட்டு பெரும் படங்களை விரித்து வளைந்த கூர்வாட்களென பல்செறிந்த பதினெட்டு வாய்கள் திறந்து அனல் நா பறக்க நிமிர்ந்திருந்த வாசுகியின் விழிகளுக்குள் எந்நேரமும் செங்கனல் சுடர்ந்தது. இருளில் அவ்வெரியொளியாலேயே கான்குடியினர் அப்பெருநாகச்சிலையை கண்டனர். பகலில் கங்கைநீரலைப்பரப்பில் தெரியும் வாசுகியின் பெருஞ்சிலை விழிசுடர நெளிந்தாடுவதைக் கண்டு படகில் செல்லும் வணிகர்கள் கைகூப்பி வணங்கினர்.

கல்லடுக்கிக் கட்டப்பட்ட வாசுகியின் சுருளுடலுக்குள் அமைந்த படிகள் வழியாக ஏறிச்சென்ற வீரர்கள் அவ்விழிகளுக்குள் அமைந்த எரிகலன்களில் இரவுபகல் ஓயாது ஊன்நெய் ஊற்றி எரியவிட்டனர். எரியெழுந்த புகை மேலிருந்த காற்றால் சுழற்றப்பட்டு திறந்த வாய்களினூடாக வெளிவந்தது. அனல்கக்கி விழி எரிய நோக்கும் வாசுகியை பிலக்ஷவனத்தின் உள்ளே நுழையும்போதே காணமுடிந்தது. அவ்விழிகள் தெரியாத எல்லைக்கு நாகர்கள் செல்லலாகாது என குலமுறைமை இருந்தது.

62

வாசுகிகுலத்தவரின் தெய்வமென சிவன் இருந்தார். எரிவிழி நுதலனுக்கு அவர்கள் ஏழுவகை ஊன்களை நாளும் அவியிட்டனர். அவர் அமர்ந்த சிறுகுகைக்குள் பதினொரு சினம்கொண்ட ருத்ரர்களை துணையமர்த்தி வழிபட்டனர்.

வடமேற்கே இமயமலைச்சாரலில் இருந்தது தட்சகுலத்தின் தலைநகரமான நாகசிலை. மலையின் கரடிமூக்கென வானில் எழுந்த கூர்முனையின் மேல் மென்பாறைகளைக் குடைந்து ஒன்றன்மேல் ஒன்றாக அமைக்கப்பட்ட ஆயிரம் குகைவீடுகளாலும் அவற்றின் மேல் அமைந்த நூறுஅறைகள் கொண்ட அரண்மனையாலும் ஆனது அந்நகர். மலைக்கழுகுகள் அன்றி பிற உயிர்கள் அணுகமுடியாத அந்நகரை சென்றடைவதற்கு மேலிருந்து இறக்கப்படும் நூலேணிகளன்றி வேறு வழியிருக்கவில்லை.

தட்சநாகர்கள் மலையுச்சியிலிருந்து அவர்கள் மட்டுமே அறிந்த பாறைச்செதுக்குப் பாதைகளினூடாக வரையாடுகளும் அஞ்சும் சரிவில் ஊர்ந்திறங்கி தங்கள் நகர்களுக்குள் சென்றனர். மெல்லிய பட்டுச்சரடுகளை இரும்புக்கொக்கிகளில் கட்டி தூக்கிவீசி அதனூடாக வலைச்சரடில் சிலந்தியெனச் சென்று காடுகளுக்குமேல் இறங்கும் கலையறிந்தவர்கள். தட்சநாகர்களை பறக்கும் நாகங்களின் வழிவந்தவர்கள் என்றனர் தொலைப்பாடகர். அவர்கள் வெண்பளிங்கு நிறமானவர்கள். விரிந்த நீலவிழிகள் கொண்டவர்கள்.

தட்சகுலத்தின் முதல் அரசர் சுப்ரமை தேவியின் மைந்தர் உபநந்தன். அவர் கொடிவழியில் வந்த புச்சாண்டகன், மண்டலகன், பிண்டசோக்தன், ரபேணகன், உச்சிகன், சுரபன், பங்கன், பில்லதேஜஸ், விரோகணன், சிலி, சலகரன், மூகன், சுகுமாரன், பிரவேபனன், முத்கரன், சிசுரோமன், சுரோமா, மஹாஹனு என்னும் அரசர்கள் நாகசிலையை ஆண்டனர். மஹாஹனுவின் மைந்தரான ஃபணனுக்குப்பின் அது ஃபணகுலமென அறியப்பட்டது. சுப்ரன், தவளன், சுத்தன், பத்ரன், பாஸ்கரன் என நூற்றெட்டு மன்னர்கள் அதையாண்டனர். அவ்வாறு பன்னிரு பெருங்குலவரிசைகளாலானது அவர்களின் மூதாதை நிரை.

மூதாதையருக்கான படையல்களிடும் பன்னிரு குகைகளுக்குள் மலைச்சுண்ணம் பூசப்பட்ட ஈரச்சுவர்ப் பரப்புகளில் கல்லரைத்த வண்ணப்பொடியைப் பூசி என்றோ வரையப்பட்ட ஓவியங்களில் ஒளிரும் செவ்வைரங்கள் பதிக்கப்பட்ட விழிகளுடன் நாகபட மணிமுடி சூடி, இடைக்குக் கீழே வளைந்து சுழித்த அரவுடலுடன் தேவியரை அணைத்தபடி நின்று அருள்புரிந்தனர் தட்சமூதாதையர்.

எப்போதும் வெண்முகில் சூழ்ந்த மழைவில் சூடி அமைந்திருக்கும் நாகசிலையை இந்திரகீலம் என்று அழைத்தனர் பிற குலத்தவர். தட்சர்களுக்கு அணுக்கமானவன் இந்திரன். முகில்நகருக்கு இந்திரன் வான்வழியாக இறங்கிவந்து பலிகொண்டு செல்வதாக தொலைப்பாடகர் பாடினர். எனவே தட்ச வெண்நாகர்கள் இந்திரன் மைந்தர் என்று அறியப்பட்டனர். அவர்கள் தங்கள் கைகளில் இந்திரன் அளித்த மின்படையை கொண்டிருந்தனர். கண்ணிமைத்து காட்சியாவதற்குள் அவர்களின் கைகளில் அது எரிசீற எழுவதைக் கண்டனர் அயலார்.

ஐராவத குலம் கிழக்கை ஆண்டது. பிரம்மபுத்ரையின் கரையிலும் அப்பால் மணிபூரக நாட்டிலும் செறிந்திருந்த நீலக்காடுகள் அவர்களின் நிலம். மாலினிதேவியின் குருதியில் வந்த சகரரின் மைந்தர்களால் ஆனது அம்மரபு. பாராவதன், பாரியாத்ரன், பாண்டரன், ஹரிணன், கிருசன், விஹங்கன், சரபன், மோதன், பிரமோதன், சம்ஹாதாபனன் என்னும் அரசர்களால் அவர்கள் தலைமுறைகள் தோறும் காக்கப்பட்டனர். அந்த மூதாதை அரசர்களின் பெயர்களை தங்கள் மைந்தர்களுக்கு இட்டு அவர்கள் இறப்பை வெல்லச்செய்தனர். அவர்களிலிருந்து எழுந்த பதினெட்டு அரசகுலநிரைகள் அவர்களின் குடிகாத்தன.

கிழக்குநாகர்கள் குறுகிய மஞ்சள்நிற உடலும் மின்னும் மணிக்கண்களும் முழங்கும் குரலும் கொண்டவர்கள். வெண்ணிற நாகத்தை துதிக்கை எனக் கொண்ட வெள்ளையானை அவர்களின் நகரமான மணிபுரத்தின் முகப்பில் பெரும்பாறை ஒன்றின்மேல் வெண்சுண்ணச்சிலையாக முகக்கை தூக்கி நின்றிருந்தது. தங்கள் எல்லைக்குள் பிறர் எவரையும் கடத்தாத நெறிகொண்டவர்களான மஞ்சள் நாகர்களை பிறர் கண்டதே இல்லை. அவர்கள் பாடகர்களின் கதைகளில் இறப்பற்றவர்களாக வாழ்ந்தனர்.

ஐராவதநாகர்களின் தெய்வமென சூரியன் இருந்தான். அவர்களின் முதல்நகர் அமைந்த மேருமலை கிழக்கே முகில்களுக்கு நடுவே மண்தொடாது நின்றிருந்தது. அதன் உச்சியில் இருந்த அர்க்கபீடத்தில்தான் அருணனின் ஏழு புரவிகளில் முதல்புரவியின் முன்னங்கால் வலக்குளம்பு படும். உடுக்குத்தோலை விரல்தொடுவதுபோன்ற அவ்வொலியை ஐராவதத்தவர் மட்டுமே கேட்கமுடியும். அக்கணம் அவர்கள் கிழக்குநோக்கித் திரும்பி “எழுக!” என்பார்கள். அச்சொல் கேட்டே அருணன் தன் புரவிகளை தெளிப்பான்.

வேசரத்தில் கோதை முதல் கிருஷ்ணை வரையிலான காடுகளில் வாழ்ந்த கௌரவ்ய நாகர்கள் மண்நிறத்தவர். கூர்மூக்கும் சிறுவிழிகளும் விரைவுகூடிய சிற்றுடலும் கொண்டவர்கள். கொப்பரைக்குடுவைகள் மேலேறி நீர்மேல் சறுக்கிச்செல்லவும் குழல்கொடிகளை வாயிலிட்டு மூச்சிழுத்தபடி நாளெல்லாம் நீருள் மூழ்கியிருக்கவும் பயின்றவர்கள். மென்மரம் குடைந்த சிறுபடகுகளில் அவர்கள் காடுகளுக்குள் சென்று வேட்டையாடி மீண்டனர்.

நாணல்களில் தங்கள் நச்சைத் தொட்டு தொடுக்கும் அம்புக்கலையால் அவர்கள் அனைவராலும் அச்சத்துடன் எண்ணப்பட்டனர். அசைவற்ற நீருள்ளும் நாகன் இருக்கலாம் என்று அஞ்சினர் நதிசெல்லும் வணிகர். தங்கள் திறைகளை நதிக்கரைப் பாறைகளில் வைத்து வணங்கிச்சென்றனர். கோதையிலும் கிருஷ்ணையிலும் செங்குழம்பு பூசிய ஐந்தலை நாகங்கள் அமர்ந்த திறைகொள்ளும் நாகநிலைகள் கொண்ட நூற்றெட்டு பாறைகள் இருந்தன. அவற்றை கொள்ளும் பதினெட்டு நாகர்குடிகள் நிலத்திலும் நீரிலுமாக வாழ்ந்தனர்.

நீர்நாகர் நதிக்கரைச்சேற்றுநிலங்களில் மூங்கில்கால்களில் எழுந்த சிற்றில்லங்களில் வாழ்ந்தனர். வாசுகியின் மகள் பத்மினியின் மைந்தரான பலவானின் குருதியில் பிறந்த ஏரகன், குண்டலன், வேணி, வேணீஸ்கந்தன், குமாரகன், பாகுகன், ஸ்ருங்கபேரன், துர்த்தகன், பிராதன், ராதகன் என்னும் அரசர்களால் செழித்தது அக்குலம். அவர்களின் தலைநகரமான நாகபுரம் கோதை சுழித்துச்சென்ற தீவொன்றில் அலையடிக்கும் நாணல்புல்லின் நுரைக்கு நடுவே சேற்றில் மிதக்கும் மூங்கில்தெப்பங்களின்மேல் அமைந்திருந்தது.

கோதையின் பெருக்கில் எழுந்தும் அமிழ்ந்தும் அசையும் மூங்கில்மாளிகைகள் ஒன்றோடொன்று வடங்களால் பிணைக்கப்பட்டு ஒரு நகராயின. அவ்வடங்கள் வழியாக நடந்து செல்ல அவர்களின் கால்கள் பயின்றிருந்தன. அவர்களின் மாளிகை நடுவே தனித்து மிதந்த தெப்பமாளிகையில் குலமூதாதை வாசுகியின் சிலை நாணல்பின்னி செய்யப்பட்டு நிறுவப்பட்டிருந்தது. அதைச்சூழ்ந்து அவர்களின் குலமன்னர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மூங்கில் என நடப்பட்டு அவற்றின் முனைகளில் அந்திதோறும் மீன்நெய் ஊற்றிய சிற்றகல் ஏற்றப்பட்டது.

கௌரவ்யர்கள் தங்கள் மூதன்னையாகிய பத்மினியின் வடிவில் கொற்றவையை வழிபட்டனர். கொல்தவத்துக் கொடுமகள் அவர்களின் குடிநடுவே களிமண் குழைத்துக்கட்டிச் சுட்டு செவ்வோடாக ஆக்கப்பட்ட சிற்றாலயத்தினுள் ஊறித்தேங்கிய நீரின் இருளலைக்கு நடுவே குறுபீடத்தில் கற்சிலையென கண்கள் ஒளிர நின்றிருந்தாள். அவளுக்கு ஆண்டுக்கு நான்குமுறை பருவங்கள் தொடங்குகையில் முழுஎருமையை வெட்டி கொடையளித்தனர். முதல்கொன்றை, முதல்வேம்பு, முதல் மின்னல், முதற்பனிநாரை என அவர்களுக்கு அன்னையின் ஆணை வந்தது.

தென்னாகர்கள் என்றழைக்கப்பட்ட திருதராஷ்டிரகுலத்தவர் இரண்டு சிறுகுலங்களாக பிரிந்திருந்தனர். தென்தமிழ் நிலத்தின் மலைக்காடுகளில் வாழ்ந்த மலைநாகர் ஓயாது மழைபொழியும் இருண்டகாடுகளுக்குள் ஆடையற்ற உடலெங்கும் தேன்மெழுகும் அரக்கும் பூசி நச்சுநா கொண்ட அம்புகளுடன் தழைப்புக்குள் இலைப்பூச்சிகள் போல மறைந்து வாழ்ந்தனர். அவர்கள் வாழும் காடுகளில் புக முடிகொண்ட மூவேந்தரின் திறல்கொண்ட படைகளும் அஞ்சின.

அவர்களுக்கு மூவேந்தரும் வேளிரும் குறவர்குலங்களும் திறைகொடுத்தனர். திறைகொண்ட செல்வத்தால் அவர்கள் அமைத்த முடிநாகம், அரவுக்கோடு, நாகநிரை ஆகிய மூன்றுநகர்களும் ஓங்கி வளர்ந்தன. அவற்றை ஆண்ட அரசர்கள் பொன்னணிந்து பட்டுசுற்றி மணிபதித்த முடிசூடி அரியணை அமரத்தலைப்பட்டனர். மூவேந்தரும் சிற்றரசர்களும் அவர்களிடம் மகற்கொடை கொள்ளத்தொடங்கியதும் மலையிறங்கி வந்து தொல்தமிழ்க்குடிகளுடன் இணைந்தனர்.

அவர்கள் பதினெட்டு குடிகளாகவும் நூற்றியெட்டு கூட்டங்களாகவும் பிரிந்து வளர்ந்து தொல்தமிழ் நிலமெங்கும் பரவினர். குலங்கள் இணைந்து குடிகள் பிரிந்து புதிய குலங்கள் என்றாகி பரவ நாகன் என்னும் பெயர் மட்டுமே அவர்களிடம் பின்னர் எஞ்சியது. வில்லுக்கு நிகராக சொல்லும் பயின்று பாணரும் புலவரும் ஆயினர். அவர்கள் குன்றுதோறாடிய குமரனை வழிபட்டனர். வெல்வேலும் விரிசிறைச்சேவலும் மாமயிலும் கொண்ட அழகன் அவர்களின் குடிநடுவே எழுந்த தனிப்பாறைகளில் காவிக்கல்லும் வெண்கல்லும் உரசி வரையப்பட்ட ஓவியமென எழுந்தருளினான்.

பிறர் அறியாமல் வாழ்ந்தவர்கள் கடல்நாகர்கள். குமரிநிலத்திற்கும் தெற்கே கடலுக்குள் சிதறிக்கிடந்த நூற்றெட்டு சிறுதீவுகளில் அவர்களின் நாகநாடெனும் அலையரசு அமைந்திருந்தது. ஓங்கிய கரிய உடலும் ஒளிவிடும் பற்களும் வெண்சோழி விழிகளும் கொண்டவர்கள். நாணல்களைச் சேர்த்து செய்த படகுகளில் ஏறி ஆர்த்தடிக்கும் அலைகளில் தாவி தீவுகள் தோறும் சென்றனர். கடல்களில் மீன்பிடிக்கவும் தென்னக விரிநிலத்தில் இறங்கி கதிர்கொய்து கொண்டுவந்து தரவும் கடற்பறவைகளை பழக்கியிருந்தனர்.

அவர்களின் தலைநகரம் நாகநகரி மணிபல்லவத் தீவில் அமைந்திருந்தது. நாவலந்தீவிலும் சாவகத்தீவிலும் சம்புத்தீவிலும் அவர்களின் துணைநகர்கள் அமைந்திருந்தன. அவற்றில் நாகபடம் பொறிக்கப்பட்ட அரவுநாபோல நுனிபிளந்து பறக்கும் நீண்ட கொடிகள் உயர்ந்த குன்றுகள் மேல் எழுந்த கொடிமரங்களில் எழுந்திருந்தன. அவற்றைக் கண்டதுமே பாய்தாழ்த்தி வெண்கொடி ஏற்றிய படகுகள் கரையணைந்து திறையளித்துச் சென்றன.

திருதராஷ்டிர குலத்து மலைநாகர்கள் சங்குகர்ணன், பிடாரகன், குடாரமுகன், சேசகன், பூர்ணாங்கதன், பூர்ணமுகன், பிரகாசகன், சகுனி, தரி, அமாகடன், காமடகன், சுஷேணன், மானசன், அவ்யயன், அஷ்டவக்ரன், கோமலகன், ஸ்வஸனன், மௌனவேபகன், பைரவன், முண்டவேங்காங்கன், பிசங்கன் என்னும் பேரரசர்களால் ஆளப்பட்ட புகழ்கொண்டவர்கள்.

கடல்நாகர்கள் உதபாராசன், ரிஷபன், வேகவான், பிண்டாரகன், மஹாஹனு, ரக்தாங்கன், சர்வசாரங்கன், சம்ருத்தன், படவாஸகன், வராஹகன், விரணகன், சுசித்ரன், சித்ரவேகிகன், பராசரன், தருணகன், மணிகந்தன், ஸ்கந்தன், ஆருணி என்னும் மாமன்னர்களின் நினைவை போற்றினர்.

அவர்களின் தெய்வமென தென்றிசைமுதல்வன் இருந்தான். கல்லாலமரத்தடியில் அமர்ந்து கையருள் காட்டி அழியாச்சொல் உரைக்கும் அய்யன். மூத்தோன், கனிந்தோன், நீத்தோன், நிறைந்தோன். அவனை தங்கள் குடிநடுவே இருத்தி மலர்சூட்டி தாலிப்பனைத்தாளிலெழுதிய அகர எழுத்தைப் படைத்து வழிபட்டனர்.

அத்திமரம் எங்குள்ளதோ அங்கெல்லாம் நாகமூதாதையரை அரவுடலும் எழுபடமும் கொண்டவர்களாக நிறுவி வழிபட்டனர். ஏழும் ஐந்தும் மூன்றும் ஒன்றுமென தலையெழுந்த நாகமூதாதையர் அத்தி, ஆல், அரசமரத்தடிகளில் அமர்ந்து ஆள்வதனால் அழியா வளம்கொண்டதாகிறது இந்தமண். வாழ்த்தி எழுந்த கைபோன்ற அவர்களின் படங்களால் பொன்றா பேரருள் பெறுகிறது இது. இந்நிலமும் நிலம் வாழும் மானுடரும் மானுடர் கொண்ட நெறிகளும் நெறிகளை ஆளும் தெய்வங்களும் வாழ்க!

கர்ணன் தன் அறைக்குள் சிறிய உடல்கொண்ட முதியமனிதர் ஒருவர் உடல் ஒடுக்கி அமர்ந்திருப்பதை கண்டான். அவர் முகம் வெளிறி உயிரற்றது போலிருந்தது. இருபுழுக்கள் தழுவிநெளிவதுபோல இதழ்கள் அசைந்தன. அவை ஒலியெழுப்புகின்றனவா என ஐயுற்றபோதே அவன் சொற்களை கேட்கத்தொடங்கினான்.

மின்னலில் காலத்தை
முகில்களில் வடிவத்தை
இடியோசையில் உடலை
மழையிழிவுகளில் கால்களை
கொண்டவனை
வணங்குக!
அவன் அறியாத விழைவுகள்
இப்புவியில் ஏதுமில்லை
இளையோரே
விழைவன்றி இப்புவியில் ஏதுமில்லை

அவர் விழிகளை நோக்கியபோதுதான் அவர் உண்மையில் அங்கில்லை என தெரிந்தது. அது ஓர் உருவெளித்தோற்றமா என எண்ணியதுமே அவர் கரைந்தழியத்தொடங்கினார். அவன் திரும்பி தன் கையிலிருந்த அரவுரிச் சுவடியை வாசித்தான். அதிலிருந்து அவர் குரல் எழுந்து செவியறியாது அவனுள் நுழைந்தது.

கல்லெனக்கிடந்தது இப்புவி என்றறிக! இளையோரே, அதை சொல்லென்று சூழ்ந்து உயிரென்று ஆக்கி முளையென்று எழுப்பி உலகென்று பெருக்கி காயென்றும் கனியென்றும் மலரென்றும் மாளோர் அமுதென்றும் ஆக்கியது விழைவே. விழைவின் வடிவங்களே நாகங்கள். சொடுக்கும் சவுக்குகள். கூவும் நாக்குகள். அறிவிக்கும் விரல்கள். நாகவிழைவால் சமைக்கப்பட்டது இப்புவி. தேவர்களுக்கு அன்னமென, தெய்வங்களுக்கு களிப்பாவையென, காலத்திற்குப் பகடை என அவர்களால் படைக்கப்பட்டது.

இங்குள்ள உயிர்க்குலங்கள் அனைத்தும் அங்கிரஸ, கஸ்யப, பிருகு, வசிஷ்ட பெருங்குலங்களைச் சேர்ந்தவையே. தட்சரின் அறுபது பெண்மக்களிலிருந்து பிறந்தவர்களே விண்நிறைந்த ஆதித்யர்களும் தானவர்களும் தைத்யர்களும் ருத்ரர்களும் தேவர்களும் தெய்வங்களுமென்றறிக! அவர்களுக்கான அவி சமைக்கும் கலம் இப்புவி. அதை ஆக்குபவர்கள் அழியாபெருநாகங்களில் இருந்து எழுந்த ஐங்குலத்து நாகர்கள்.

மேற்குத்திசையாண்ட தட்சர்குலத்து ஆறாயிரத்து எழுநூற்றெட்டாவது தக்ஷர் மகாபுண்டரர். முதல்தட்சருக்குப்பின் அந்நகர் தட்சசிலை என்றே அழைக்கப்பட்டது. நாகநாடு விட்டு வான் நீங்கும் விண்சுடரின் காலடிகள் இறுதியில் பெயரும் இடம் தட்சசிலை என்றனர் பாடகர்கள். அங்கே பன்னிரண்டுலட்சம் நாகர்கள் நச்சுநா கொண்ட அம்புகளும் இமையா விழிகளும் கொண்டு எதிரிகளை நோக்கி அமர்ந்திருந்தனர் என்றனர்.

ஆயிரமாண்டுகாலம் கோல்கொண்டமைந்து மண்புகுந்து வேராக ஆன மகாபுண்டரரின் எழுநூறு மைந்தர்களில் முதல்வர் பைரவர். இளையவர் அருணர். பைரவர் வெண்ணிறம் கொண்டிருந்தார். அருணரோ உருகி ஓடும் பொன்னிறத்தவர். பைரவர் அரசாள அருணர் படைத் துணைகொண்டார். மூத்தவர் எண்ணுவதற்கு அப்பால் எண்ணமற்றவராக இருந்தார் இளையவர். நாகங்கள் நெறியையே ஒழுக்கெனக் கொண்டவை. நாகங்களின் ஒவ்வொருநெளிவும் எண்ணி அமைக்கப்பட்டிருக்கிறது என்கின்றன தொல்பாடல்கள்.

பொன்னிறம்கொண்ட அருணர் நாகர்குலத்துக் கன்னியரால் காமுறப்பட்டவர். அன்னையரால் மகிழப்பட்டவர். மூத்தவரால் மைந்தரென எண்ணப்பட்டவர். வில்திறல் வீரர். சொல்லெண்ணி அமைக்கத்தெரிந்தவர். ஊழ்கத்திலமர்ந்து தன்னை தான் சுருட்டிக்கொண்டு ஒன்றென்றும் அன்றென்றும் ஆகமுடிந்தவர்.

தட்சநாகர்களின் முதற்பெருந்தெய்வமென இருந்த இந்திரன் தன் வெண்முகில் யானைமேல் மின்கதிர்ப்படைக்கலம் சூடி அவிகொள்ள வந்தபோது கீழே பொன்னிற அணிகலம் ஒன்றைக்கண்டான். அருகணைந்தபோதுதான் மலையுச்சிமேல் நின்று தன்னை நோக்கிய அருணர் என்று உணர்ந்தான். விண்ணவர்கோன் புன்னகைத்து தன் மின்கதிரை வீசியபோது அருணர் செந்தழலாக சுடர்ந்தணைந்தார். “மைந்தா, எனக்கு அவியிடுக!” என்றது விண்மொழி.

கையில் படைக்கலமோ உணவோ ஏதுமின்றி கார்முகில் காண மலையுச்சியில் நின்றிருந்த அருணர் திகைத்து மறுகணமே தன் கையை நீட்டி கடித்து குருதிக்குழாயை உடைத்து பன்னிருசொட்டு வெந்துளிகளை இந்திரனுக்கு அவியெனப் படைத்தார். இந்திரன் மகிழ்ந்து “நீ எனக்கு உகந்தவன். ஒவ்வொருநாளும் உன் குருதியை எனக்கு அளி. உன்னை நான் பெருந்தந்தையாக்குவேன்” என்றான். இமையார்க்கரசனின் கோல்வந்து தொட்டுச்செல்ல அருணர் நிகரற்ற விழைவும் இணைசெல்லும் ஆற்றலும் கொண்டவரானார்.

ஒவ்வொருநாளும் பிறர் அறியாது இந்திரனுக்கு அவியளித்து வந்தார் அருணர். எனவே மேலும் மேலும் ஒளிகொண்டவரானார். தட்சகுலத்தில் அவரது மைந்தர்களே பிறந்ததைக் கண்டு மூத்தோர் ஐயம்கொண்டனர். ஒருநாள் இருளுக்குள் மெல்லச்சென்று மலைமடுவொன்றில் அமர்ந்து நுண்சொல் உரைத்து தன்குருதியை அவியிட்டு இந்திரனை அழைத்து அருணர் வேள்விசெய்வதை அவர்கள் மறைந்திருந்து கண்டனர். மின்னலென இந்திரனின் நாக்கு வந்து அவியை உண்டுசென்றது.

மறுநாள் குலமன்றுகூடி இளையவரை நிறுத்தி அவர் செய்வது குலப்பிழை என்று அறிவுறுத்தினர். மூத்தோர் வாசுகியை பனையோலைகொண்டு படைத்து குருதித்துளிசொட்டிய அன்னப்பருக்கை அளித்து அமர்த்தி சான்றாக்கி ஆணையிட்டனர். இனிமேல் குலவேள்வியிலல்லாது இந்திரனுக்கு அவியளிக்கலாகாதென்றனர். அவ்வறிவுறுத்துகையை தான் ஏற்கமுடியாதென்று அருணர் சொன்னார். “நான் என் குருதியில் ஒருதுளியை நாளும் விண்ணரசுக்கு அவிகொடுப்பதாக தன்னாணை செய்துள்ளேன்” என்றார். “அது கூடாது. இது குலமூப்பின் ஆணை” என்றனர் தந்தையர். “நான் இந்திரனுக்கு மட்டுமே கடன்கொண்டவன்” என்றார் அருணர்.

“அவ்வண்ணமெனில் இன்றே உன்னை குலநீக்கு செய்கிறோம். இனி உனக்கும் சேர்ந்தவருக்கும் ஐங்குலத்து நாகர்கள் எவரிடமும் சொல்லுறவோ நீருறவோ நினைப்புறவோ கூடாது. விலகுக!” என்றனர். அவ்வண்ணமே என்று தருக்கியுரைத்து அருணர் தட்சசிலைவிட்டு விலகினார். அவர் குருதிகொண்ட நூற்றுவர் மட்டும் அவருடன் செல்ல எழுந்தனர். “ஆண்கள் மட்டுமே குலம்நீங்க முறைமைகள் ஒப்புகின்றன. பெண்கள் குலத்திற்கு உரிமைகொண்ட செல்வம்” என்றனர் தட்சநாக மூத்தோர். தன்னைப்போல் பொன்னுடல்கொண்ட நூறு ஆடவருடன் அருணர் தலைதூக்கி நெஞ்சு விரித்து நாகசிலையின் படிகளில் இறங்கி நிலம்வந்தார்.

கிழக்கும் மேற்கும் தெற்கும் வடக்கும் நாகர்களே நிறைந்த நாகலந்தீவில் அவர் செல்ல இடமிருக்கவில்லை. ஐந்துபெருங்குலங்களுக்கும் அவர் அயலவர் என்றானார். வெயிலெரிந்துகொண்டிருந்த வெளியில் நின்று “எந்தையே, நான் இயற்றவேண்டியதென்ன?” என்று வான்நோக்கி கூவினார். “நானுளேன்” என்று இடியோசை முழங்கியது. விண்ணில் இந்திரவில் எழுந்தது. இளமழை பெய்து அவர்களை அழைத்துச்சென்றது. “இது நம் தெய்வங்கள் நமக்களிக்கும் வழி இளையோரே” என்று கூறி உடன் வந்தவர்களை அருணர் அழைத்துச்சென்றார்.

மின்னல் எழுந்து அவர்களுக்கு வழிசுட்டியது. இடியோசை எழுந்து ஆணையிட்டது. நீலநீர் பெருகும் ஏழுநதிகளை, பசுங்காடுகள் எழுந்த ஒன்பது படுகைகளை புல்விரிந்த பன்னிருநிலங்களைக் கடந்து அவர்கள் பனிமலை முகடுகள் வடக்கே அரண்வகுத்த உத்தரபேரம் என்னும் இடத்தை சென்றடைந்தனர்.