வெய்யோன் - 61
பகுதி எட்டு :நூறிதழ் நகர் 5
விழவுகளில் மானுடர் தெய்வங்களாகின்றனர், தெய்வங்கள் மானுடராகின்றனர். இருளும் மிடிமையும் அச்சமும் சிறுமதியும் பின்கடக்க மானுடர் சிறகெழுந்து களியாடுகிறார்கள். உள்நிறைந்த விண்ணிசையை அணைத்து தெய்வங்கள் தங்கள் கால்களை மண்ணில் வைக்கிறார்கள். இந்திரப்பிரஸ்தத்தின் தெருக்களில் தோள்களால் முட்டிமுட்டி அலைக்கழிக்கப்படும் உடலுடன் அலையொழுக்கில் சிறுநெற்று என சென்றுகொண்டிருந்தபோது கர்ணன் அச்சொற்களை நினைவுகூர்ந்தான். அதைச் சொன்ன சூதன் எவன் என எண்ணக்கூடவில்லை. இதோ என் முன் வந்து நின்று நகைததும்பிச்செல்லும் இக்களிமகன் விண்ணிழிந்தவனா? மண்ணுயர்ந்தவனா? நீண்ட தாடி பறக்க கைவீசி நடமிட்டுச்செல்பவன் எங்குள்ளான்?
கர்ணன் நெடுமூச்செறிந்தான். அந்தத் தெருவில் அவன் மட்டிலுமே உடலை எடையென்றும் உள்ளத்தை எண்ணங்களென்றும் உணர்ந்துகொண்டிருக்கிறானா? அவன் அத்தனை முகங்களையும் விழிதொட்டு உலவி உளம்சலித்தான். அனைத்திலும் இருந்தது களிக்கொந்தளிப்பு. மானுடர் மறக்கவிரும்புவது எதை? ஒவ்வொரு கணமும் உள்ளத்தில் பொத்தி அணைத்திருக்கும் அனைத்தையும்தானா? நிணம்வழுக்க குருதிமழைக்க தலைகள் காலில் இடறும் போர்க்களத்தில் அவன் அக்களியாட்டை கண்டிருக்கிறான். இறந்த முகங்களிலும் சிலைத்திருக்கும் அக்களிவெறி. மானுடர் வெறுப்பது பொழுதென்று சுருண்டு எழுந்து நாள்என்று நெளிந்து காலமென்று படமெடுக்கும் நச்சை. காலத்தை வெல்வதே அமுது. அமுதுண்டவர் இவர். தேவர்கள் இவர்கள்.
தெருக்களெங்கும் தேன்மெழுகும் மீன்எண்ணையும் அரக்கும் சேர்த்து முறுக்கிய திரிகள் சுற்றப்பட்ட பந்தங்கள் நின்று நெளிந்தாடிய கல்தூண்கள் நிரைவகுத்தன. ஒன்றின் ஒளி எவ்வளவு தொலைவுக்கு எட்டுமென முன்னரே கணக்கிட்டு அவற்றை நட்டிருந்தமையால் அந்தியொளியிலென சிவந்திருந்தது நகரம். அல்லது பற்றியெரியும் காட்டைப்போல. அந்த ஒப்புமையிலிருந்து உள்ளம் விலகுவதேயில்லை என அவன் எண்ணிக்கொண்டான்.
சாலையோரங்களிலெல்லாம் சூதர்கள் நின்று பாடிக்கொண்டிருந்தனர். அவர்களைச்சூழ்ந்து நின்றவர்கள் அப்பாடலைக்கேட்டு வாழ்த்தொலி எழுப்பி நாணயங்களை அளித்தனர். அருகிலேயே நீண்ட கழிகளை சுழற்றி நிலத்தில் வைத்து அவற்றின் கணுக்களை மிதித்து மேலேறி அவற்றின் நுனியிலிருந்து பிறிதொன்றுக்குத் தாவினர் திரிகர்த்த நாட்டு கழைக்கூத்தாடிகள். கிளைகளுக்கிடையே தாவிப்பறக்கும் சிட்டுகள் போல அவர்கள் பறந்தலைந்தனர். அவர்களைத் தாங்கியிருந்த கழிகள் அலைந்தாடின. அவர்களின் கால்களாயின. பின்னர் அவர்களை மண்ணுடன் பிணைத்த சரடுகளாகத் தெரிந்தன.
முகமெங்கும் வண்ணங்களை பூசிய ஓவியக்கூத்தர்கள் கைகளை விரித்தும் வேடிக்கையொலி எழுப்பி கூவியும் குழந்தைகளை ஈர்த்தனர். ஒருவன் உடலின் முன்பக்கமும் பின்பக்கமும் முகங்களையும் மார்பையும் வரைந்திருந்திருந்தான். கைகளை இருபக்கமும் ஒன்றுபோலவே அசைக்கும் பயிற்சி கொண்டிருந்தான். முன்பக்கம் செந்நிறமும் பின்பக்கம் நீலநிறமும் பூசியிருந்தான். குழந்தைகள் அவனிடம் ஓடிச்சென்று பேசியகணம் சூழலில் மின்னிய ஒளிக்கேற்ப கணநேரத்தில் திரும்பிக்கொண்டான். அவன் நிறம் மாறிய விரைவைக்கண்டு அஞ்சி அலறியபடி குழந்தைகள் பின்னால் ஓடி அன்னையரை பற்றிக்கொண்டனர்.
அவனருகே ஒருவன் உடலெங்கும் வரிவரியாக பச்சை மஞ்சள் சிவப்பு நிறங்களை பூசியிருந்தான். பார்த்திருக்கவே பச்சோந்தி போல தலையை அசைத்து தன் நிறங்களை அவன் மாற்றிக்கொண்டான். ஒருவன் வாயிலிருந்து தீயை பறக்கவைத்தான். மறுகணமே அதை நீரென ஆக்கினான். நீரில் பந்தத்தைக்காட்டி நெருப்பென ஒளிரச்செய்தான். பந்தங்களின் ஒளி கதிரவனுடையது அல்ல. அவன் சமைக்கும் உலகின் நெறிகளும் முறைகளும் விலக்கப்பட்டு மானுட ஒளியால் சமைக்கப்பட்ட நிகருலகம். அங்கு எதுவும் நிகழக்கூடும்.
பீதர்நாட்டான் ஒருவன் சாலையில் சென்றுகொண்டிருந்த மக்களுக்கு நேராக கத்திகளை வீச அவை எவரையும் தொடாமல் மறுபக்கம் சென்று தூண் ஒன்றில் குத்தி நின்றன. நீட்டிக்கட்டப்பட்ட சரடொன்றில் ஒரு புரவி ஏறி மறுபக்கம் சென்றது. இருகால்களையும் தூக்கி நின்றது எருமை. ஒருவன் பெரிய வெண்ணிறமாளிகை ஒன்றின் வாயிலைத் திறந்து குழந்தைகளை உள்ளே அழைத்தான். அவர்கள் நுழைந்ததும் அம்மாளிகையை பீதர்நாட்டு வெண்பட்டாக இழுத்துச்சுருட்டி கையிலெடுத்தான். வெட்டவெளியில் நின்று அவர்கள் கூவிநகைத்தனர்.
கர்ணனை நோக்கி ஒருவன் கைசுட்டி “உயர்ந்தவன்…” என்றான். கர்ணன் கடந்துபோக “டேய் நெட்டை… நெட்டைக்கோபுரமே…” என்று கூவினான். “பார்த்துப்போடா, உன் உயரத்தைப் பார்த்தாலே ஷத்ரியர் வாளால் அடிப்பார்கள்…” அவன் திரும்பிப்பார்க்காமை கண்டு “போ, உன் சோரியால் நிலம் நனையும். அவர்களின் தெய்வங்களும் உனக்கெதிராக போர்செய்யும்” என்றான். இன்னொருவன் “அவன் தன்னை வெய்யோன் மகன் என நினைக்கிறான்… அறிவிலியே, உன் காலில் கட்டியிருக்கும் மூங்கிலை எடு…” என்றான்.
அவன் திரும்பி நோக்காமல் நடந்தான். துரியோதனனின் உண்டாட்டிலிருந்து எழுந்து தன்னறைக்குள் சென்று பீடத்தில் அமர்ந்ததுமே அவனை நோக்கி சிலகணங்கள் ஒரு சொல்லும் உரைக்காமல் நின்ற சிவதர் யவனமதுவை கொண்டுவந்தார். அவன் அவர் விழிகளை நோக்காமல் மும்முறை அதை வாங்கி அருந்திவிட்டு மஞ்சத்தில் படுத்தான். விழுந்துகொண்டே இருப்பதுபோல தோன்றியது. எழுந்து தலையைப் பற்றிக்கொண்டு அமர்ந்தான். பின்பு எழுந்து அரச ஆடையை அகற்றி எளிய வெண்பருத்தி ஆடையையும் தோல்கச்சையையும் சுற்றிக்கொண்டான். அணிகளை கழற்றி வீசிவிட்டு வெளியே வந்தான்.
அங்கே காவலனின் மரவுரி தூணருகே இருந்தது. அதை எடுத்து சுற்றிக்கொண்டு இறங்கி அரண்மனையைக் கடந்து வெளியே வந்தான். அவ்வேளையில் அனைத்துக் காவலர்களும் களிவெறி கொண்டிருந்தனர். எங்கும் எவரும் எவரையும் நோக்கவில்லை. ஒரு காவலன் அவனை நோக்கி கைசுட்டி பற்கள் முழுக்க தெரிய உதடுகளை வளைத்துச் சிரித்து “அதோ போகிறார்! அவருக்காக குதிரைகள் காத்திருக்கின்றன” என்றான். அவனருகே இருந்த இன்னொரு காவலன் “ஹீ ஹீ ஹீ” என குதிரை போலவே ஒலியெழுப்பி நகைத்தான்.
அரண்மனை முற்றத்தில் பல்லக்குகளும் மஞ்சல்களும் தேர்களும் செறிந்திருந்தன. அவற்றினூடாக கால்கள் நிலையழிய கண்கள் பாதிமூடியிருக்க சிரித்துக்கொண்டும் கூச்சலிட்டுக்கொண்டும் மக்களும் காவலர்களும் தோள்கள் முட்ட அலைந்தனர். அவன் அவர்களை பிடித்துவிலக்கித்தான் சாலைக்கு வந்தான். இந்திரப்பிரஸ்தத்தின் களியாட்டில் கலந்து மறையமுடியுமென நினைத்தான். குளிர்நீர் குளத்திலென குதித்தான். ஆனால் அது நீரல்ல நீலஒளி மட்டுமே என்று தெரிந்தது. அச்சூழலில் அவன் மட்டுமே பருப்பொருளென கரையாமல் சென்றுகொண்டிருந்தான்.
ஒருகணம் உடல் விதிர்த்து மெய்ப்புகொண்டான். பின்னரே அது பந்தவெளிச்சத்தில் நெளிந்த தூண்நிழல் என்று தெரிந்தது. நீள்மூச்சு விட்டு உடல் அதற்குள் வியர்த்திருப்பதை உணர்ந்தபோது அருகே நின்றிருந்த குறிய உடல்கொண்ட முதியவன் அவன் கைகளைத் தொட்டு “வருக” என்றான். “யார்?” என்றான் கர்ணன் நடுங்கும் குரலில். “வருக அரசே!” என்றான் அவன். கர்ணன் சொல்வதை செவிகொள்ளத் தயங்காமல் அவன் நடக்கத்தொடங்கினான். “யார்?” என்று கேட்டபின் அவன் கூட்டத்தை விலக்கி முதியவனைத் தொடர்ந்து சென்றான்.
மரவுரி போர்த்த சிற்றுடலுடன் முதியவன் குனிந்து நடந்தபோது ஒரு விலங்கென தோன்றினான். மிக எளிதாக காலடிகளை எடுத்துவைத்து கூட்டத்தை ஊடுருவிச்சென்றுகொண்டே இருந்தான். அவனை எவரும் பார்க்கவேயில்லை என்பதை கர்ணன் கண்டான். அவர்கள் அவனை அறியவேயில்லை என்று தோன்றியது. புகையை ஒளியென அவன் கடந்துசென்றான். தேவனா? அல்லது இருள்தெய்வங்களில் ஒன்றா? அவன் தொடர்வான் என எப்படி அத்தனை உறுதியுடன் செல்கிறான்? ஆனால் தொடராமலிருக்கமுடியாது.
பெருஞ்சாலையிலிருந்து சிறியசாலைக்கும் அங்கிருந்து சிறியசந்து ஒன்றுக்குள்ளும் அவன் நுழைந்தான். இந்திரப்பிரஸ்தத்தின் மாளிகைகள் அனைத்துமே மையச்சாலைநோக்கி முகம்காட்டியிருந்தன. அவற்றுக்குப்பின்னால் ஏவலர்வாழும் சிறிய இல்லங்களும் அவர்கள் நடமாடும் கைவழிகளும் செறிந்திருந்தன. இருவர் மட்டிலுமே செல்லக்கூடிய சிறுபாதை நீர்வற்றிய ஓடைபோலிருந்தது. இருபக்கமும் மரப்பட்டைகளால் கட்டப்பட்ட சிற்றில்நிரைகள். அவற்றுக்குள் ஒற்றைவிளக்குகள் எரிய அமர்ந்தும் படுத்தும் மானுடநிழலுருக்கள் தெரிந்தன. அழுக்குநீரின் வாடை நிறைந்திருந்தது. அம்மாளிகைகளின் அழுக்குநீர்.
முதியவன் திரும்பி வருக என கையசைத்துவிட்டு இருண்ட சிறுசந்துக்குள் நுழைந்தான். கர்ணன் எலிக்குகை ஒன்றுக்குள் சென்ற உணர்வை அடைந்தான். இருள் இருபுறங்களிலிருந்தும் ஒட்டடைபோல பரவி அவன் முகத்தில்படிந்து தடுத்தது. மூச்சை அழுகலும் தூசும் கலந்த வாடை அழுத்தியது. முதியவன் திரும்பி இருட்டுப்பரப்பை கையால் தட்டி ஓசையெழுப்ப அது திறந்து செவ்வொளிப்பரப்பை காட்டியது. உள்ளே இருந்த நிழலுரு விலக முதியவன் அவனிடம் வருக என்று கைகாட்டி உள்ளே சென்றான்.
அது ஐவர்மட்டுமே அமரக்கூடிய ஒரு சிற்றறை. தலையை குனித்தே கர்ணனால் நிற்கமுடிந்தது. அவனுக்குப்பின்னால் வாயில் மூடியதும் இருட்டு நிறைந்தது. முதியவன் குனிந்து தரையிலிருந்த பலகைகளை அகற்றினான். இருளில் கண்கள் மின்ன “வருக!” என்றான். கர்ணன் “எங்கு?” என்றான். “எங்கள் இடத்திற்கு” என்றான் முதியவன். கர்ணன் தயங்க “நாங்கள் உரகர்கள். இம்மண்ணிலிருந்து இன்னும் நாங்கள் முற்றிலும் அகலவில்லை” என்றான். “எங்கள் மூதன்னையுடன் நீங்கள் செல்வதை கண்டோம்…” கர்ணன் பெருமூச்சுடன் தன் உடலைக்குறுக்கி அந்த சிறிய துளைக்குள் இறங்கினான்.
பாறையில் வெட்டப்பட்ட சிறிய படிகள் நனைந்திருந்தன. ஆனால் கைகளுக்கும் கால்களுக்கும் அவை சிறந்த பிடிப்பை அளித்தன. முதியவன் விரைந்திறங்கி ஆழத்தில் மூழ்கி மறைய மேலே பலகைப்பரப்பு மூடுவதை கேட்டான். இருட்டுக்குள் “வருக!” என்று அவன் குரல் கேட்டது. “நெடுந்தொலைவா?” என்றான் கர்ணன். “இல்லை, வருக!” அவன் இறங்கிச்சென்றுகொண்டே இருந்தான். அருகே ஒப்பிட ஒன்றில்லாதபோது காலம் மட்டுமல்லாது தொலைவும் இல்லாமலாகிவிடுவதை உணர்ந்தான். காலத்தொலைவென தெரிந்தது எண்ணங்களே. எண்ணங்களோ சுழன்று சுழன்று ஒரு சுழியாகி நின்றன. அதைத்தான் சித்தமென்கிறார்கள். சித்த காலம். சித்தத்தொலைவு. சித்தமெனும் இருப்பு. சித்தமெனும் இன்மை. இன்மையென காலம். இன்மையென தொலைவு.
நன்கு வியர்த்திருந்தான். இந்திரப்பிரஸ்தத்தின் உயரத்தைவிட கூடுதலாகவே இறங்கிவந்துவிட்டோம் என தோன்றியது. அப்படியென்றால் யமுனை? மிக ஆழத்தில் சீறலோசையாக “வருக!” என்று முதியவனின் ஓசை கேட்டது. மூச்சிளைப்பை அகற்றியபின் கர்ணன் மேலும் இறங்கத்தொடங்கினான். எதுவரை என்னும் எண்ணம் அகன்றபின்னர் அதுவரை வந்ததைவிட மும்மடங்கு தொலைவுக்கு இறங்கினோமென்பதை உணர்ந்தான். தலைக்குமேல் எங்கோ இருந்தது நகர். அதன் ஒளிப்பெருக்கு. மானுடச்சுழிப்பு.
“அருகேதான்” என்றான் முதியவன் மிக ஆழத்தில். “ஆம், எங்குள்ளோம்?” என்றான் கர்ணன். “யமுனைக்கு அடியில் செல்லப்போகிறோம்” என்றான் முதியவன். “மிக உறுதியான பாறையால் ஆனது இப்பகுதி. ஆனால் இனிமேல் ஊற்றுக்கள் வரத்தொடங்கும்.” அவன் நீரோசையை கேட்கத்தொடங்கினான். கசக்கப்பட்ட கரும்பட்டு என சுரங்கத்தின் சுவர்கள் ஈரத்தால் மெல்லொளி கொண்டிருந்தன. சிறிய ஓடையாக அந்த நீர் சேர்ந்து எங்கோ பொழிந்துகொண்டிருந்தது. மூச்சுக்காற்று எங்கிருந்து வருகிறது? ஆனால் காற்று இருந்தது. எங்கிருந்தோ மென்மையாக வந்து பிடரியை குளிரத்தொட்டு சிலிர்க்கவைத்தது.
அப்பால் வெளிச்சம் தெரிந்தது. அது ஒரு வெண்துணியென முதலில் தோன்றியது. அதைச்சூழ்ந்திருந்த பாறையின் நீர்வழிவின் ஒளியாக மாறியது. அணுகிச்சென்றபோது ஒளி ஏறியபடியே வந்து கண்கள் கூசத்தொடங்கின. நீர்வழியும் விழிகளை மேலாடையால் துடைத்தான். அணுகிவிட்டோமென உணரும்தோறும் உடல் களைப்பால் தளர்ந்தது. “வருக அரசே” என்றான் முதியவன். “என்பெயர் காமிகன். இங்குள்ள உரகர்களில் நகருக்குச் சென்றுமீள்பவர்கள் எங்களில் சிலரே. மறுபக்கக் குறுங்காட்டுக்குள் பெரும்பாலானவர்கள் சென்று வேட்டையாடிவருகிறார்கள்.”
நீள்வட்ட வாயிலினூடாக நீளுருளை வடிவ அறைக்குள் நுழைந்தான். அதன் நடுவே சிறிய நெய்விளக்கு ஒன்று எரிந்தது. அதைச்சுற்றியிருந்த பீதர்நாட்டுப் பளிங்கால் அது வெண்தாமரைமொட்டுபோல சுடர்கொண்டிருந்தது. அக்கூடத்தின் சுவர்கள் உப்பாலானவை போல அவ்வொளியை ஏற்று ஒளிபெற்றிருந்தன. அவ்வொளி விழிக்குப் பழகியபோது அவன் அங்கே கூடியிருந்தவர்களை பார்த்தான். பத்துபேருக்குமேல் இருக்குமெனத் தோன்றியது.
மரவுரி போர்த்தி உடல்குறுக்கி ஒருவரோடொருவர் சேர்ந்து அவர்கள் அமர்ந்திருந்தமையால் முதல்நோக்கில் கரியபாறைகளென்றே தோன்றியது. மானுடரெனத் தெரிந்ததுமே விழிகள் மின்னத்தொடங்கின. பற்களின் வெண்மை துலங்கியது. மயிர்ப்பிசிர்கள் கூட பகைப்புலம் கொண்ட இருளில் எழுந்துவந்தன. காமிகன் சென்று அவர்களில் ஒருவரிடம் ஓரிருசொற்களை பேசிவிட்டு திரும்பி “வருக அரசே!” என்றான்.
மையமாக அமர்ந்திருந்தவர் “அமர்க!” என மெல்லியகுரலில் சொன்னார். “காண்டவக் காட்டின் அடிமண்ணுள்வாழும் உரகர்களின் தலைவனான என் பெயர் காளிகன். இங்கிருந்த எங்கள் குடிகளனைத்தும் விலகிச்சென்றதை பார்த்திருப்பீர்கள்.” கர்ணன் அவரை வணங்கிவிட்டு அமர்ந்தான். “நாங்கள் இங்குள்ள எங்கள் தெய்வங்களுக்கும் மூதாதையருக்கும் அன்னமும் நீரும் அளிப்பதற்காக இங்கு எஞ்சியிருக்கிறோம்” என்றார் காளிகர். “எங்கள் குலம் புல்வேர். எந்தக் காட்டெரியும் எங்களை முற்றழிக்க இயலாது.”
“என்னை ஏன் இங்கு கொண்டுவந்தீர்கள்?” என்றான் கர்ணன். “இது ஒரு கனவென்றே என் உள்ளம் மயங்குகிறது.” காளிகர் நகைத்து “அவ்வாறும் ஆகலாம்” என்றார். “ஏன் உங்களை அன்னை தேர்ந்தெடுத்தார் என்று எனக்கும் புரியவில்லை. அன்னை தேர்ந்தெடுத்ததனால்தான் உங்களை நானும் அழைத்துவந்தேன்.” கர்ணன் “நான்தான் அன்னையை தேடிச்சென்றேன்” என்றான். காளிகர் நகைத்து “அன்னையின் விழிகளை சந்தித்தீர்களா?” என்றார். “ஆம்” என்றான் கர்ணன். “அக்கணம் அவர் உங்கள் உள்ளத்தை கவ்விவிட்டார். நாங்கள் நாகங்கள். நோக்கு எங்கள் தூண்டில்.”
கர்ணன் மெல்ல அசைந்து அமர்ந்தான். காமிகன் மரக்குவளை ஒன்றில் நீர் கொண்டுவந்து அளித்தான். அதை வாங்கிக்குடித்தபோதுதான் அது நீரல்ல என்று தெரிந்தது. கடும்கசப்பு உடலை உலுக்கச்செய்தது. “நாகநச்சு கலந்த இன்நீர்” என்றார் காளிகர். “கொல்லாது. உள்ளத்தை களிகூரவே செய்யும்.” வேண்டாம் என தலையசைத்து கர்ணன் திருப்பி நீட்டினான். காளிகர் நகைத்தார். கர்ணன் வாயை சப்புக்கொட்டியபோது உடலே நாவாக தித்திப்பதை உணர்ந்தான். வாய் தேனூறும் குழியாக இருந்தது. நாவால் துழாவிவிட்டு அக்குவளையை கைநீட்டி பெற்றுக்கொண்டான்.
துளித்துளியாக அவன் அதை அருந்திமுடிப்பதை அவர்கள் நோக்கிநின்றனர். அவன் கோப்பையை கீழே வைத்துவிட்டு ஒரு பெரும் தேன்துளியெனத் ததும்பிய தலையைப்பற்றியபடி அமர்ந்திருந்தான். “உங்கள் திசையென்ன என்று தெய்வங்களே அறியும்” என்றார் காளிகர். “ஆனால் நீங்கள் எங்களவர்.” கர்ணன் விழிதூக்கி அவர்களை நோக்கி “நானா?” என்றான். “ஆம், உங்களை மாநாகர் என்று சொல்கின்றன எங்கள் நூல்கள். உங்கள் தலைக்குமேல் ஐந்துதலைநாகமொன்று எழுந்து நிற்கிறது. உங்கள் வலக்கையில் வில்லும் இடக்கையில் அம்பென நாகமொன்றும் அமைந்துள்ளன.” அவர் தன்னருகே இருந்த சுடரை சுட்டி “நோக்குக!” என்றார்.
வெண்சுடர்க்குமிழியின் அருகே விழுந்துகிடந்த ஒளிப்பரப்பில் நிழலாட்டத்தை கர்ணன் நோக்கினான். நீரலைகள் அமைய பாவை எழுந்து கூடித் தெரிந்து அலைகளாகி மறைவதுபோல அவன் அவ்வோவியத்தை கண்டான். “நானா?” என்றான். “நீங்களேதான். எங்கள் குறிச்சொற்களில் நீங்கள் சொல்லப்பட்டிருக்கிறீர்கள்.” கர்ணன் மீண்டும் அந்த வெளிச்சத்தை நோக்கினான். அது நிழலாகவே அசைந்தது. தெரிந்ததா இல்லை அச்சொற்கள் உருவாக்கிய மயலா?
காளிகர் திரும்பி தலையசைக்க அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் எழுந்து அந்த அறையின் மூலையிலிருந்து வெவ்வேறு பொருட்களை எடுத்துவந்தனர். கர்ணன் அவ்வறையின் சுவர்களை பார்த்தான். பாறையின் அப்பகுதி மட்டும் உப்பாலானதாக இருக்க அதைக்குடைந்து அவ்வறை உருவாக்கப்பட்டிருப்பதை உணர்ந்தான். “உண்ணும் உப்பல்ல, இது ஒளிவிடும் சுண்ண உப்பு” என்றார் காளிகர் அவன் நோக்குவதைக் கண்டதும். அவனுக்கு குமட்டலெழுந்தது. தலை எடைகொண்டு கழுத்தை அழுத்தியது.
ஒருவர் அச்சுடர்முன் தரையில் வெண்ணிறக் கல் ஒன்று உருவாக்கிச்சென்ற ஒளிவிடும் கோடால் கோலமொன்றை வரையத்தொடங்கினார். ஒற்றைக்கோடு நெளிந்து சுழித்து நாகங்களாகியது. நாகங்கள் பின்னிமுயங்கி உருவாக்கிய சுருள்களும் வட்டங்களும் கோணங்களும் கலந்த பரப்பின் நடுவே விழியுருவாக்கும் அனைத்து வடிவங்களும் நிகழ்ந்தன. நாகத்தின் தலைகள் வாய்திறந்து வால்களை விழுங்கின. அனைத்து நாகங்களும் தங்கள் வால்களை தாங்களே விழுங்கும் வடிவம் நினைத்துப்பார்க்கமுடியாத விரைவில் முழுமைகொண்டது. அதை அவர்கள் பல்லாயிரம்முறை வரைந்துகொண்டே இருக்கக்கூடும்.
அவன் ஒருகணம் அந்தச் சுருள்வழிகளில் ஓடினான். பல்லாயிரமாண்டுகாலம் அப்பாதையின் முடிவிலியில் பதைத்து கூவி ஓடிக்களைத்து விழுந்து விழிதிறந்தான். அக்கோலத்தின் நடுவே பெரிய நாகபடமொன்று வாய்திறந்து நாபறக்க நின்றது. அதன் நடுவே இரு நீலக்கற்களை காளிகர் வைத்தார். சுடரொளி ஏற்று அவை விழிகளாக மாறின. நாகமுகம் நோக்கு கொண்டது. கர்ணன் அதிலிருந்து கண்களை விலக்கமுடியாதவனாக நோக்கியிருந்தான்.
இருநா பறப்பதுபோல. உடற்சுருட்கள் நெளிவதுபோல. ஒரு சீறலோசை கேட்டது. அவன் மெய்ப்புகொண்டு அவ்விழிகளை நோக்கினான். மீண்டும் அது ஒலித்தபோதுதான் காளிகரின் முகம் மாறியிருப்பதை கண்டான். அவர் விழிகள் நாகவிழிகளாக இருந்தன. மூச்சு சீற மெல்ல குழைந்தாடினார். அவர் அருகே அமர்ந்திருந்த ஒருவர் சிறிய உடுக்கில் இரட்டை விரலோட்டி விரைதாளம் எழுப்பினார்.
காளிகரின் கைகள் நாகங்களைப்போல நெளிந்தாடத்தொடங்கின. அவ்வசைவை நோக்க நோக்க அவை நாகங்களாகவே மாறுவதை அவன் கண்டான். இருநாகங்கள். இல்லை ஒன்று வாலென துடித்து நெளிந்தது. ஒன்று தலையென செருக்கி அசைந்தது. இருகைகளும் இணைந்து ஒற்றைப்பெருநாகமென்றாயின. நாகம் சீறி வளைந்து நீண்டு நெளிந்து வளைந்தது. தன் உடலை பிறிதொன்றென ஆக்கத்தவிப்பதுபோல. தன் உடல் நடுவே சிக்கிய வெளியை நிறைக்க விழைவதுபோல. சூழ்புடவியில் அதுமட்டுமே எஞ்சியதுபோல. தன்னைத்தழுவியே அது தன்னை உணரலாகுமென்பதுபோல.
துடிதாளமிட்டவர் உறுமித்தோல் அதிரும் குரலில் பாடத்தொடங்கினார்.
ஏழுலகங்களையும் தாங்கும் தலையை
இருள் வடிவாகிய உடலை
விண்மீன்களென மின்னும் விழிகளை
முடிவிலியின் கை மோதிரத்தை
இன்மையின் செவிக்குண்டலத்தை
அண்டம் படைத்த அன்னையின்
சிலம்புவளையத்தை
நாகமுதல்வனை வணங்குக!
வாசுகியை வணங்குக!
வாலென தலையென வெளிநிறைக்கும்
வானுருவனை வணங்குக!
வேதச்சொல் கேட்டு ஆடும் எரியென அவ்விசைக்கேற்ப நடமிட்டது காளிகரின் சிற்றுடல். அவர் கைகளில் எழுந்த நாகம் தவித்துச் சீறியது. துயர்கொண்டு வாலால் நிலத்தை அறைந்தது. சினந்தெழுந்து ஓங்கிக் கொத்தியது. அதன் மூச்சொலியால் அவ்வறையின் சுவர்கள் அஞ்சிய எருமையின் தோற்பரப்பென அதிர்வுகொண்டன.
“நெளிபவனே
முடிவற்றவனே
தன்னில் முழுமைகொண்டவனே
தானென எழுந்து நிற்கும் தலையே
இன்மையென அசையும் நுனியே
இருத்தலெனும் புரியே
இருளெனும் சுழியே
எந்தையே வாசுகியே
உன்னை வணங்குகிறேன்
நீ இருளை ஆள்பவன்
ஒளியென்பதோ உன் இரு விழிகள்
நீ ஆழங்களை ஆள்பவன்
நிலமென்பதோ உன் பொருக்கு
நீ வேர்களின் இறைவன்
மரங்கள் உன் கனிவு
எந்தையே எளியோருக்கு அருள்க!
முடிவற்ற கருஞ்சுருளே
இக்கனவுக்குள் விரிந்தெழுக!
அந்தத்தாளம் தன் உடலெங்கும் ஓடிக்கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான். உடலின் ஒவ்வொரு தசையும் இறுகி இறுகி எடைகொண்டது. கல்லென்றாயிற்று உடல். கல்லைவிட பல்லாயிரம் மடங்கு எடைகொண்டதாயிற்று. அந்த மண்ணில் உளைசேற்றிலென மூழ்கிக்கொண்டிருந்தான். மூழ்கிச்செல்லச்செல்ல உடல் இனிய களைப்பை உணர்ந்தது. ஒவ்வொரு உறுப்பையாக கழற்றி வைத்துவிடவேண்டுமென்பதைப்போல.
அவன் அச்சொற்களை வாசித்துக்கொண்டிருந்தான். அவன் கையிலிருந்த சுவடியிலிருந்து நேரடியாக சித்தம் நோக்கி சென்றது அவ்வறிதல்.
நாகலந்தீவின் திசைநான்கும் நாகர்களுக்குரியதென்றறிக! பனிமலையடுக்குகள் எழுந்த வடக்கே வாசுகி பன்னிரண்டாயிரம் கோடி பெருஞ்சுருள்களாக படர்ந்திருந்தார். நீலக்கடல் அலையடித்த தெற்கே திருதராஷ்டிரனின் கருஞ்சுருள்கள் மலைகளென மாறி அலைகளை மாலையென சூடிக்கொண்டன. மேற்கே தட்சன் எல்லைக்குன்றுநிரையென எழுந்திருந்தார். அவர்மேல் சாமரம் சூடி நின்றன முகில்கற்றைகள். கிழக்கே ஐராவதனின் பச்சைப்பெரும்படம் எழுந்து நின்றது. அதை மேரு என்றனர். அதன் உச்சியில் கால்வைத்தே நாகலந்தீவில் கதிரவன் எழுந்தான்.
ஓசையற்ற காலடிகளும், இமையாவிழிகளும், நாநுனி நஞ்சும் கொண்டவர்கள் நாகர்கள் என்று அறிக! பசுமை எழுந்த காடுகள் அவர்களால் ஆளப்பட்டன. அங்கே அவர்களுக்காக ஏழுபடம் எழுந்த தெய்வங்கள் எல்லைகாத்தன. அக்காடுகளில் அவர்கள் மூச்சின் நஞ்சுக்காற்று வீசியது. அவர்களின் பார்வை இலைநுனிப் பனித்துளிகளுடன் கலந்திருந்தது. நாகர்கள் அழிவற்றவர்கள் என்றறிக! நாகர்கள் வெல்லப்படாதவர்களென்றறிக!
அவனருகே வந்து நின்ற சிவதர் “அரசே, இது பின்னிரவு. தாங்கள் துயில்கொள்ளவேண்டிய வேளை” என்றார். “இச்சுவடியை என் அறைக்குள் பார்த்தேன். இதை இங்கு வைத்தது யார்?” என்றான் கர்ணன். “இதுவா?” என்று சிவதர் குனிந்து நோக்கினார். “அரசே, இது சுவடி அல்ல. இது பாம்புரிப்படலம்.” திகைப்புடன் அவன் நோக்கினான். மிகமெல்லிய பாம்புரியை சீராக வெட்டி சுவடியென்றாக்கியிருந்தனர். “அதில் எழுத்துக்களேதும் இல்லையே” என்றார் சிவதர். அவன் குனிந்து நோக்கினான். வெறும் வெள்ளிநிறப் பரப்பு.
“சற்று முன் இதை நான் வாசித்தேன்.” சிவதர் “நாகர்களின் தீச்செய்கைக்கானது இது என எண்ணுகிறேன். இது இங்கிருக்க வேண்டியதில்லை.” கர்ணன் “இது இங்கே எப்படி வந்தது?” என்றான். “அதை நான் உசாவுகிறேன். நம் ஏவலரில் எவரோ நாகர்களின் ஒற்றனாக இருக்கக்கூடும். அரசே, அதில் தீச்செய்கை உள்ளது. அது கொடுங்கனவுகளை எழுப்பும். அக்கனவுகளினூடாக நாகங்கள் நம் சித்தத்தினுள் நெளிந்து ஏறுவார்கள். தங்கள் சொற்களை நம்முள் விதைத்துச்செல்வார்கள். இங்கே கொடுங்கள், அதை அப்படியே நெருப்பிலிட்டுவிடவேண்டும். விழிகொடுக்கலாகாது.”
அவன் “வேண்டாம்” என்றான். “அது அளிக்கும் அறிதல்கள் என்னை திகைக்க வைக்கின்றன.” சிவதர் “தீச்செய்கைகளுக்கு உள்ளத்தைக் கவர்ந்து உள்நுழையத்தெரியும் அரசே. நாகர்களின் காட்டிலுள்ள நாகவள்ளி என்னும் கொடியைக்குறித்து கேட்டிருப்பீர்கள். நாம் காட்டில் நின்றிருக்கையில் அது நம்மை மெல்ல தொடும். பிறந்த மகவின் தொடுகையென நம்மை அது மகிழ்விக்கும். காமம் கொண்ட கன்னியின் அணைப்பென நம்மை வளைக்கும். மூதன்னையின் வருடலென நம்மை ஆறுதல்படுத்தும். மூதாதையின் வாழ்த்தென தலையை தடவும். அம்மகிழ்விலேயே நம்மை அது முழுதும் சுற்றிக்கொண்டிருப்பதை அறியாமல் நின்றிருப்போம்” என்றார்.
“நாகவள்ளியிடமிருந்து தப்ப ஒரே வழிதான் உள்ளது. உள்ளத்தை அறுத்து தனித்தெடுத்து எஞ்சும் கையால் வாளை உருவி வெட்டி துண்டிப்பது. தயங்கும் ஒவ்வொரு கணமும் இறப்பே. அது தித்திக்கும் நஞ்சுள்ளது. தோல்துளைகள் வழியாக குருதியில் கலக்கும். நெஞ்சில் இனிய எண்ணங்களை நிறைக்கும். மழலைச்சொல் கேட்போம். காமப்பெதும்பையின் மதநீரை முகர்வோம். அன்னையின் முலைப்பால் சுவையை அறிவோம். அறுப்பது எளிதல்ல. அது பிறவிப்பேராழியை அறுப்பதற்கு நிகர். ஆனால் அறுக்காதவர் மறுநாள் அங்கே அக்கொடியின் ஆயிரம் சுருள்களுக்கு நடுவே வெள்ளெலும்புக்குவையாக கிடப்பார்கள்.”
கர்ணன் நீள்மூச்சுடன் “கொண்டு செல்லுங்கள்” என்றான். சிவதர் அதை தன் சால்வையிலிட்டு முடிந்து எடுத்துக்கொண்டார். “ஒரு பெருநகரின் நடுவே எலித்துளையென ஒரு பாதை. அது சென்றுசேர்க்கும் படிகத்தாலான அறை. பலநூறடி ஆழத்திலுள்ளது அது. அங்கே நான் விழிமயங்கி ஒரு துடிதாளத்தை, அடிக்குரலில் தொல்மொழிப்பாடலை கேட்டுக்கொண்டிருக்கிறேன்…” என்றான் கர்ணன். “நான் எப்போதும் அறிந்த மொழி. நானே என பாடப்படும் பாடல்.”
சிவதர் “அது இது உருவாக்கும் உளமயல். வெல்லுங்கள். அவ்வாறல்ல என்றே எண்ணிக்கொள்ளுங்கள். மஞ்சத்தை பற்றிக்கொள்ளுங்கள். பீடத்தை பிடியுங்கள். உங்கள் கைகளையே இறுகப்பற்றுங்கள். இங்கே பருவுருக்கொண்டு எண்ணத்தால் உணர்வால் மாறாமலிருக்கும் ஒன்றுடன் இறுகப்பிணையுங்கள். எஞ்சும் மயலை கடந்து வாருங்கள்” என்றார். அவன் “ஆம்” என்றான்.
சிவதர் வெளியே சென்றார். அவன் அங்கேயே தலை எடைகொண்டு கழுத்தை அழுத்த அமர்ந்திருந்தான். நீலச்சுடர்களாக விழிகளெரியும் ஒரு நாகத்தின் ஓவியத்தை நோக்கினான். மிக அருகே. ஆனால் அது அங்கில்லை. ஆனால் அவன் கையருகே இன்னொரு சுவடிக்கட்டு கிடந்தது. அவன் அச்சத்தால் மெல்ல அதிர்ந்தான். ஆனால் உள்ளம் இனிய பரபரப்பையே அடைந்தது. அதை எடுத்து விரித்தான். இளநீல எழுத்துக்கள் அலையழிந்த ஓடையின் அடித்தட்டின் வரிவடிவங்களென தெளிந்துவந்தன.