வெய்யோன் - 54

பகுதி ஏழு : நச்சாடல் 3

அவைக்காவலன் வந்து வரவறிவிக்க தன் அரசுசூழ் அறையிலிருந்து சுபாகுவும் சலனும் துர்மதனும் பீமவேகனும் தொடர வெளிவந்து படிகளில் ஏறி அவர்களை அணுகிய துரியோதனனின் முகத்தில் அரசர்களுக்குரிய பாவைச்செதுக்குத் தன்மைக்கு அடியில் உணர்வுநிலையாமை தெரிவதை கர்ணன் கண்டான். விழிகளை ஒரு புள்ளியில் அசையாமல் நிறுத்துவதென்பது உளநிலையின்மையை மறைப்பதற்கு ஷத்ரியர் கொள்ளும் பயிற்சி என்று அவன் அறிந்திருந்தான். ஆனால் மேலாடையின் நுனியைப்பற்றிய துரியோதனனின் விரல்கள் அசைந்து கொண்டிருப்பதையே அவன் விழிகள் முதலில் கண்டன.

துரியோதனனின் உதடுகள் உள்ளடங்கி அழுந்தியிருந்தன. துச்சாதனன் கர்ணனின் விழிகளை சந்தித்தபோது அவனும் துரியோதனனின் நிலையின்மையை உணர்ந்திருப்பதை காணமுடிந்தது. கர்ணன் தலைவணங்கி “அரசே, இவர் மகத மன்னர் ஜராசந்தர். எனது நண்பர். நமது நண்பராக இங்கு வந்துள்ளார்” என்றான். துரியோதனனின் விழிகள் சற்றே விரிந்தன. சீரான குரலில் “இந்நாள் மூதாதையரால் வாழ்த்தப்படுக! அஸ்தினபுரி பெருமை கொள்கிறது. நல்வரவு அரசே!” என்றான்.

ஜராசந்தன் உரத்த குரலில் “நான் மறுமுகமன் சொல்லப்போவதில்லை துரியோதனரே. ஏனென்றால் நாம் நிகரானவர். தங்களைப்போலவே நான் பிறந்தநாளிலும் தீக்குறிகள் தோன்றிற்று என்கிறார்கள் சூதர்கள்” என்றான். அசைவுக்காற்று பட்ட சுடரென ஒரு கணம் நடுங்கிய துரியோதனன் விழிதிருப்பி கர்ணனை நோக்க கர்ணன் நகைத்தபடி “அவர் தன்னை ஜராதேவியின் மைந்தனாகிய மலைச்சிறுவன் என்றுதான் முன்வைக்கிறார்” என்றான்.

துரியோதனனின் உதடுகள் எச்சரிக்கையான சிறு புன்னகையில் விரிந்தன. “ஆம், நானும் தங்கள் பிறப்புகுறித்த கதைகளை கேட்டுள்ளேன். வருக அரசே” என்றான். ஜராசந்தன் முன்னகர்ந்து முறைமைமீறி துரியோதனனின் கைகளைப்பற்றியபடி “தங்கள் தோள்கள் என்னுடையவை போலுள்ளன என்று சூதர்கள் சொல்லிக்கேட்டு வளர்ந்தேன். என்றும் அவை என் அகவிழியில் இருந்தன. ஒருநாள் நாமிருவரும் களிக்களத்தில் தோள் கோக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன்” என்றான்.

துரியோதனன் அதே புன்னகையுடன் “ஆம், அதற்கென்ன! வாய்ப்பு அமையட்டும். வருக!” என்றான். அவன் முறைப்படி கைகாட்ட அவர்கள் நடந்து துரியோதனனின் அறைக்குள் சென்றனர். சுபாகு முன்னால் சென்று பீடங்களை எடுத்து அமைக்க பீமபலன் வெளியே சென்று ஏவலர்களிடம் அவர்களுக்கான இன்நீருக்கும் உணவுக்கும் ஆணையிட்டான். பீடத்திலமர்ந்து கால் நீட்டி உடலை எளிதாக்கிய ஜராசந்தன் “தங்களை எப்போதும் மணத்தன்னேற்பு அவைகளில்தான் பார்த்திருக்கிறேன். என்னைப்போலவே நீங்களும் எப்போதும் வென்றதில்லை” என்றான். துச்சகன் வெடித்து நகைக்க துரியோதனன் அவனை நோக்கி திரும்பவில்லை.

கர்ணனை நோக்கி “இவரையும்கூட அவ்வாறுதான் பார்த்திருக்கிறேன். அங்கு நாமனைவரும் நம்மை அணியூர்வலத்திற்கென பொன்னும் மணியும் கொண்டு மறைத்துக்கொள்கிறோம். நம் உடலில் நாமே வரைந்த ஓவியம் ஒன்றைக் கொண்டு அவைமுன் வைக்கிறோம். எளிய ஆடையுடன் தங்களை பார்க்கையில் நான் பார்க்க விழைந்த அரசர் தாங்கள்தான் என்று உணர்கிறேன்” என்றான். துரியோதனன் புன்னகை என தோன்றத்தக்கவகையில் “ஆம், தங்களையும் இவ்வெளிய கோலத்தில் நான் எதிர்பார்க்கவில்லை” என்றான்.

“இதுவும் என் கோலமே” என்றான் ஜராசந்தன். “கட்டற்று இருப்பது என் இயல்பு. என் ஆற்றல் அவ்வாறே என்னிடம் கூடுகிறது. ஆனால் என் அரசு ஒரு கணமும் கட்டற்று இருக்கலாகாது என்று நானே வகுத்துக்கொண்டேன். மகதத்தின் ஒவ்வொரு வீரனையும் அரசு நோக்கிக் கொண்டிருக்கிறது. ஒரு பிழைகூட நானறியாது நிகழாது. எனக்கு ஆயிரம் காதுகள் பல்லாயிரம் விழிகள் என்று சொல்வார்கள்.”

துச்சாதனன் உள்ளே வந்து தலைவணங்கி “மகத அரசருக்கு வணக்கம். தங்களுடன் அகம்படியினர் எவரும் இங்கு வரப்போகிறார்களா?” என்றான். “இல்லை இளையோனே, நான் மட்டும்தான் வந்தேன்” என்றான் ஜராசந்தன். துச்சாதனன் விழிகள் கர்ணனை சந்தித்து மீண்டன. “இங்கு நம் நண்பராக வந்துள்ளார் மகதர்” என்றான் கர்ணன். “ஆம், உங்கள் அனைவருக்கும் நண்பராக” என்று சொல்லி நின்றிருந்த துச்சாதனனின் தொடையை மெல்ல அறைந்தான் ஜராசந்தன். துச்சாதனன் முகம் மலர்ந்து “அது எங்கள் நல்லூழ் அரசே. நாங்கள் உண்மையில் சந்தித்து தோள்தழுவ வேண்டுமென்று விரும்பிய ஒருவர் தாங்கள் மட்டுமே” என்றான்.

துச்சகன் உரக்க நகைத்து “ஆம், நான் எத்தனையோ முறை தங்களை கனவுகளில் கண்டிருக்கிறேன்” என்றான். துச்சலன் “காம்பில்யத்தில் நடந்த மணத்தன்னேற்பில் நான் மூத்தவரையும் தங்களையும் மட்டுமே மாறிமாறி நோக்கிக் கொண்டிருந்தேன். ஒரு கணத்தில் நீங்கள் இருவரும் ஒருவரே என்றுகூட எனக்குத் தோன்றியது” என்றான். சுபாகு “ஆம், நாங்கள் தம்பியர் உங்களிருவரையே நோக்கினோம்” என்றான். ஜராசந்தன் “நான் அதை காணவில்லை. ஏனென்றால் நான் சூரியன்மைந்தரையும் உங்கள் தமையனையும் மட்டுமே நோக்கினேன்” என்றான்.

துரியோதனன் மீசையை முறுக்கியபடி “தாங்கள் ஆயிரம் செவிகளும் பல்லாயிரம் விழிகளும் கொண்டிருப்பது இயல்பே. தங்கள் தந்தை பிரஹத்ரதரின் மைந்தர்கள் தங்களுக்கெதிராக கிளர்ந்திருந்தார்கள் அல்லவா?” என்றான். “ஆம். அவர்களை வென்றுதான் ராஜகிருகத்தை நான் கைப்பற்றினேன்” என்றான் ஜராசந்தன் இயல்பாக. “நான் மூத்தவன், ஆனால் தூயகுருதி கொண்டவன் அல்ல. எனவே மகதப்படைகளில் எட்டு ஷத்ரியப்பிரிவுகள் அவர்களுடன் சென்றனர். எனது அசுர குடிகளில் இருந்து போதிய படைகளை திரட்டிக்கொண்டேன். அவர்களே இன்றும் என் படைகள்” என்றான்.

திரும்பி கர்ணனிடம் “ஒரே இரவில் மகதத்தின் மந்தணக்கருவூலம் ஒன்றை கைப்பற்றினேன். அதைக் கொண்டு தாம்ரலிப்தியில் இருந்து பீதர்களின் படைக்கலன்களையும் எரிபொருட்களையும் பெற்றேன். ஷத்ரியர்கள் இன்னும் வில்மேலும் வாள்மேலும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். பீதர்கள் அனலை ஏற்றி அனுப்பும் ஆயிரம் படைக்கலன்களை கண்டடைந்திருக்கிறார்கள். விண் தொட முகடெழுந்த பெருநகரத்தை எரிக்க ஒருநாள் போதும் அவர்களின் படைக்கலன்களுக்கு” என்றான் ஜராசந்தன்.

“தாங்கள் அவர்களை கழுவிலேற்றினீர்கள் என்று அறிந்தேன்” என்றான் துரியோதனன். “கழுவிலா?” என்றான் சுபாகு. “ஷத்ரியர்களையா? அதுவும் தங்கள் குருதியிணையர்களை!” ஜராசந்தன் புன்னகையுடன் அவனை நோக்கி “ஆம், அவர்களை வென்றேன். அவர்கள் என் நாட்டிலிருந்து தப்பியோடி வங்கத்தின் உதவியை நாடினர். வங்கத்தின் மேல் படையெடுத்துச் சென்று அவர்களை மீண்டும் வென்றேன். பிறநாட்டுடன் படையிணைப்பு செய்துகொண்டு மகதத்துடன் போரிடுவது அரசவஞ்சனை என்று அறிவித்தேன். அவர்கள் என் தலைமையை ஏற்று மகதத்தின் துணையரசர்களாக இருப்பார்கள் என்றால் மூன்று நிலப்பகுதிகளை அவர்களுக்கு அளிப்பதாகவும் கொடியும் முடியும் சூடி ஆளலாம் என்றும் சொன்னேன்” என்றான்.

“ஆனால் மகதமணிமுடி அன்றி பிற எதற்கும் அவர்கள் ஒப்பவில்லை. இழிகுடிக் குருதி கலந்த என் உடலுக்கு மகதத்தின் அரியணையில் அமரும் தகுதியில்லை என்று அறிவித்தார்கள். அதை என் மக்களும் நம்பினார்கள். அத்தகுதியை நான் ஈட்டவேண்டுமல்லவா? ஆகவே அவர்களை பிடித்துவந்து ராஜகிருகத்தின் அரண்மனைமுகப்பின் செண்டுவெளியில் கழுவேற்றினேன். மகதத்தில் என் முடிக்கெதிராக ஒரு சொல்லும் எண்ணப்படவே கூடாது என்று அறிவித்தேன்.”

துரியோதனன் மேலும் நிலையின்மை கொள்வதை அவன் உடல் அசைவுகள் காட்டின. “தாங்கள் அந்தணர்களையும் தண்டித்தீர்கள் என்று அறிந்தேன்” என்றான். நகைப்புடன் “ஆம், அந்தணர்கள் அரசர்களுக்கு உதவியானவர்கள். ஆனால் என் இளையோரின் ஆணவத்திற்கு நூற்றெட்டு அந்தணர்கள்தான் பின்புலம். அந்தணர்களை கொல்லமுடியாது. எனவே அவர்களை சிறைப்பிடித்து உடலில் ஐந்து இழிமங்கலக் குறிகளை பொறித்து நாடுகடத்தினேன். எதற்கும் எந்நிலையிலும் தயங்காதவன் நான் என்று என்னை காட்டினேன். மரத்திற்கு வேர்போல செங்கோலுக்கு அச்சம் என்பதே என் எண்ணம்” என்ற ஜராசந்தன் உரக்க நகைத்து “மகதநாட்டின் ஒவ்வொரு குடியும் அறிந்த ஜராசந்தன் இரக்கமற்ற அசுரன். அந்தணரும் அஞ்சும் அரக்கன். அரசே, அதுவே என் ஆற்றல்” என்றான்.

உணவுகள் பணியாளர்களால் உள்ளே கொண்டுவரப்பட்டன. ஜராசந்தன் திரும்பி “தம்பியர் ஏன் நிற்கிறார்கள்? அமரலாமே?” என்றான். “இல்லை, நாங்கள்…” என்று துச்சாதனன் சொல்லத்தொடங்க “அரசர்முன் முறைமைகளை கடைபிடிப்பீர்கள் என்று எனக்கு சொல்ல வருகிறீர்களா என்ன? நீங்கள் எப்படி உண்டாட்டு கொள்வீர்கள் என்று நான் அறிவேன். பாரதவர்ஷமே அறியும்” என்றான் ஜராசந்தன். துச்சாதனன் நகைத்து “ஆம், ஆயினும் தாங்கள் மகத மன்னர். தங்கள்முன்…” என்றான்.

கர்ணன் “தயங்கவேண்டாம், அமர்ந்து உண்க!” என்று துச்சாதனன் தோளில் தட்டினான். “அவ்வண்ணமே” என்று துச்சாதனன் துச்சலனிடம் கையை காட்டிவிட்டு அமர அறைக்குள் பீடங்களிலும் தரையிலும் மூத்தகௌரவர்கள் அமர்ந்தனர். துரியோதனன் தீயில் சுட்ட மான் தொடை ஒன்றை எடுத்து ஜராசந்தனிடம் அளித்து “தங்கள் மூதாதையர் மகிழ எங்கள் மூதாதையரிடமிருந்து” என்றான். ஜராசந்தன் பிறிதொரு மான் தொடையை எடுத்து துரியோதனனிடம் அளித்து “தங்கள் அன்பின் பொருட்டு” என்றான்.

அனைவரும் ஊன்உணவையும் கிண்ணங்களில் யவனமதுவையும் பரிமாறிக்கொள்ளும் ஒலிகள் எழுந்தன. துர்மதன் உரத்த குரலில் “மூத்தவர் உங்களைப்போன்றே சிலை ஒன்று செய்து அதனுடன் கதைப்போர் செய்கிறார் மகதரே” என்றான். துரியோதனன் அவனை மேலே பேசவிடாமல் தடுக்க திரும்பி நோக்குவதற்குள் ஜராசந்தன் துரியோதனன் தொடையில் அறைந்து “இதிலென்ன உள்ளது? என் அரண்மனையில் தங்களைப்போல் ஒன்றல்ல நான்கு பாவைகள் செய்து வைத்திருக்கிறேன்” என்றான். “கதைப்போருக்கு ஒன்று. மற்போருக்கு ஒன்று. ஒன்று என் மந்தண அவையில் ஓரமாக அமர்ந்திருப்பதற்கு. பிறிதொன்று…” என்றான்.

பேரார்வத்துடன் அருகே வந்த சலன் “பிறிதொன்று?” என்றான். தொலைவிலிருந்து சுபாகு “இதிலென்ன ஐயம்? உணவறையில் போட்டியிட்டு உண்பதற்காகத்தான்” என்றான். அவனை நோக்கி திரும்பி நகைத்தபடி “ஆம், அவ்வாறு ஒன்று தேவை என இப்போது உணர்கிறேன். நான் கொண்டிருக்கும் பிறிதொன்று என் மைந்தர்கள் பார்ப்பதற்கு… இளையோர் மாளிகையில்” என்றான்.

“அது ஏன்?” என்றான் கர்ணன். “அவர்கள் இளமையாக இருக்கும்போதே அஸ்தினபுரியின் அரசரைப்பற்றியே அதிகமாக பேசியுள்ளேன். அக்கதைகளின் தலைவனை அவர்கள் பார்க்க விழைந்தனர். ஒரு பாவையைச் செய்து அந்தப்புரத்தில் அவர்களுடன் வைத்தேன். இளமையிலேயே அதனுடன் விளையாடி அவர்கள் வாழ்க்கையில் ஒருபகுதியாக ஆகிவிட்டது” என்றான் ஜராசந்தன். “இன்று என் இளையவன் அச்சிலையை சிறிய தந்தையே என்று அழைக்கிறான்” என்றான்.

துச்சாதனன் நெகிழ்ந்து முழந்தாளிட்டு எழுந்து ஜராசந்தனின் தோள்களைத் தொட்டு “நன்று மகதரே, மைந்தர் நம் உள்ளத்தை அறிகிறார்கள்” என்றான். ஜராசந்தன் “உண்மை” என்றான். “ஏனென்றால் அவர்கள் நம் சொற்களை கேட்பதில்லை, நம் விழிகளை நோக்குகிறார்கள்” என்றான். கௌரவர்கள் அனைவரும் அருகணைந்து ஏதோ ஒருவகையில் ஜராசந்தனை தொட விழைந்தனர். கர்ணன் துரியோதனனை நோக்கினான். அவன் விழிகள் சுருங்கியிருந்தன.

மீசையை முறுக்கியபடி “தங்களுக்கு முதல்மனைவியில் இரண்டு மகளிர் அல்லவா?” என்றான் கர்ணன். “மதுராவை ஆண்ட கம்சரின் மனைவியர்.” ஜராசந்தன் “ஆம்” என்று சொன்னான். “மகதத்து குலமுறைமைப்படி அவர்களை என் மகள்கள் என்று சொல்லவேண்டும். அவர்களின் அன்னை என் மனைவி அல்ல.” துரியோதனன் நோக்க “என் தந்தையின் முதல்மைந்தர் இளமையிலேயே போரில் இறந்தார். அவரது மனைவி என்னைவிட இருபது வயது மூத்தவர். அவரது மகள்களை நான் தந்தையென நின்று கம்சருக்கு கையளித்தேன். எனக்கு அப்போது பதினாறு வயது” என்றான். துச்சாதனன் “வியப்புக்குரிய சடங்கு…” என்றான். “தங்கள் மனைவியர் எந்நாட்டவர்?” என்றான் சலன், சற்றே மயக்கில்.

“எனக்கு பதினெட்டு மனைவியர்” என்றான் ஜராசந்தன். “பதினெட்டா?” என்றபடி பீமபலன் பின் நிரையிலிருந்து எழுந்தான். வியப்புடன் கைதூக்கி “பதினெட்டு மனைவியர்!” என்றான். ஜராசந்தன் திரும்பி நோக்கி “அயோத்திமன்னர் தசரதனுக்கு நூற்றெட்டு மனைவியர் இருந்தார்கள். ஆயிரத்தெட்டு மனைவியர் என்று சூதர்கள் பாடுகிறார்கள். மிதிலைமன்னர் ஜனகருக்கு ஆயிரத்தெட்டு மனைவியர். பதினாயிரத்தெட்டு மனைவியர் என்கிறார்கள். பாடல்களில் எனக்கு நூற்றெண்பது மனைவியர் என்று சூதர்களை பாடும்படி கேட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றான்.

வியப்பு அடங்காமல் “பதினெட்டு மனைவியர் என்றால்?” என்றான் துச்சலன். “எங்கள் பத்து அசுர குடிகள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு மனைவி வீதம் மணக்க வேண்டியிருந்தது. ஷத்ரிய மனைவியர் ஐவரை கவர்ந்து வந்தேன்” என்றான் ஜராசந்தன். “கொடிகளில் ஏறும்போது முடிந்தவரை கூடுதலாக பற்றிக்கொள்ளவேண்டும் என்பது என் அன்னையிடம் கற்றுக்கொண்டது. ஷத்ரிய இளவரசியரை மணக்க மணக்க நான் மேலும் மேலும் ஷத்ரியனாகிறேன். ஆகவே முடிந்தவரை மணத்தன்னேற்பு வழியாகவோ பெண்கோள் வழியாகவோ மகளிரை மணப்பதே என் வழக்கம்…” துச்சாதனன் “அப்படியென்றால் பெண்கோள் முடியவில்லை” என்றான். “உங்கள் மகள் வளர்ந்து பருவமடையும்போது நீங்கள் என்னை அஞ்சவேண்டும் துச்சாதனரே” என்றான் ஜராசந்தன்.

“கம்சரின் மனைவியர் எங்குள்ளனர்?” என்றான் கர்ணன். ஜராசந்தனின் நோக்கு மாறுபட்டது. “அவர்கள் குலமுறைப்படி என் புதல்விகள். குருதிமுறைப்படி அல்ல. ஆனால் மணமேடை நின்று கைதொட்டு அவர்களை மணமுடித்து அனுப்பியதாலேயே தந்தையென்று பொறுப்பு கொண்டேன். கம்சரின் இறப்புக்குப்பின் அவர்கள் இருவரையும் மதுரையின் இளைய யாதவன் அவமதித்து சிறுமைசெய்து துரத்தியடித்தான். நான் அதை ஒருகணமும் பொறுத்ததில்லை. இன்றும் என் குருதியில் அவ்வஞ்சம் உள்ளது. அதற்கென ஒருநாள் அவனை நான் களத்தில் சந்திப்பேன்” என்றான். “அதைச் செய்தவர் வசுதேவர்” என்றான் துச்சலன். “இல்லை, அனைத்துக்கும் அவனே பொறுப்பு. அவனறியாது எதுவும் நிகழ்வதில்லை” என்றான் ஜராசந்தன்.

“உங்களை புரிந்துகொள்ளவே முடியவில்லை அரசே” என்றான் சுபாகு. “எளிய மலைமகன் எப்போது இரக்கமற்ற அரசராக ஆகிறீர்கள் என்பதை நீங்களாவது அறிவீர்களா?” ஜராசந்தன் சிரித்து “அறிவேன்…” என்றான். “கம்சர் ஆண்டது உங்கள் படைவல்லமையால். எப்படி அவர் சிறுகுழந்தைகளைக் கொன்றதை ஆதரித்தீர்கள்?” என்றான் இளையோனாகிய பலவர்தனன். ஜராசந்தன் “ஆம், நான் அதை அறிந்தேன். ஆனால் அவர் என் நண்பர். என் உடன்பிறந்தவரிடம் அப்போது போரிலிருந்தேன். மகதம் வங்கத்திலும் கலிங்கத்திலும் நான்கு போர் முனைகளில் படை செலுத்தியிருந்தது. எனவே மேற்கு முனைகள் அனைத்திலும் அமைதியை நாடினேன். நான் கம்சரை ஆதரித்தேயாகவேண்டும்” என்றான்.

“மைந்தர்கள் கொல்லப்பட்டதைக்கூடவா? என்றான் சுபாகு. “ஆம், என் எதிரிகுலத்து மைந்தர் அவர்கள்.” துச்சாதனன் “என்ன சொல்கிறீர்கள்?” என்றான். துச்சலன் “அறமறியாதவரா நீங்கள்?” என்றான். “என்ன அறம்? அம்மைந்தர் வளர்ந்து போருக்கு வந்தால் கொன்று குவிக்கமாட்டோமா என்ன?” உரத்த குரலில் “அம்மைந்தர் என்ன பிழை செய்தார்கள் மகதரே?” என்றான் சலன். “போரில் உங்கள் மூத்தவரும் அங்கரும் கொன்றுகுவிக்கும் எளிய வீரர்கள் மட்டும் என்ன பிழை செய்தனர்?” என்றான் ஜராசந்தன். “இரக்கமற்ற சொற்கள்” என்று துச்சாதனன் தலையசைத்தான். “இரக்கம் என்ற ஒன்று எந்தப் போர்வீரனிடம் உள்ளது? எல்லை வகுக்கப்பட்டு இடம்பொருள் குறித்து நம்மவர் பிறர் என கண்டு எழுவதன் பெயரென்ன இரக்கமா?”

கர்ணன் ஏதோ சொல்ல வாயெடுத்தான். “நான் எளியமலைமகன். என் எண்ணங்கள் மலைக்குடிகளுக்குரியவையே” என்றான் ஜராசந்தன். “அப்படியென்றால் இளைய யாதவர் செய்ததில் என்ன பிழை?” என்றான் கர்ணன். “படைகொண்டு சென்று இளைய யாதவன் மதுராவை வென்றது முற்றிலும் முறையானதே. கம்சரின் நெஞ்சு கிழித்ததை நான் ஏற்கிறேன். அவன் மதுராவின் அத்தனை படையினரையும் கொன்றழித்தான். அதையும் ஏற்கிறேன். அது அரசியல். என் நெஞ்சை அவன் கிழிப்பான் என்றால் அவன் நெஞ்சை நான் கிழிக்கலாம். படைகொண்டு செல்வதும் மண் வென்று முடிசூடுவதும் ஆண்களின் உலகம். ஆனால் ஒரு தருணத்திலும் பெண்டிரின் நிறைமதிப்பு அழியும் செயல்களை ஆண்மகன் செய்யலாகாது. அவன் செய்தது அது. அதன் வஞ்சம் என்னிடம் அழியாது.”

“இளமைந்தரை கொன்றவர் அவர்…” என்றான் துச்சாதனன். “ஆம், ஆனால் அனைவரும் மைந்தர்கள். குடிமக்களின் ஒரு பெண்குழந்தைகூட கொல்லப்படவில்லை. கொல்லப்பட்டிருந்தால் நானே கம்சனின் நெஞ்சு பிளந்து குருதிகொண்டுசென்று என் அன்னையின் ஆலயப்பலிபீடத்தை நனைத்திருப்பேன்.” கர்ணன் நகைத்து “இது என்ன அறமுறைமை என்றே எனக்குப்புரியவில்லை!” என்றான். “நாமனைவரும் அன்னையின் கருவறையில் பிறந்தவர்கள். ஒவ்வொரு பெண்ணும் தெய்வங்கள் வாழும் கருவறை. அங்கரே, நாங்கள் ஜரர்கள் ஒருபோதும் பெண்விலங்கை வேட்டையாடுவதில்லை.”

ஜராசந்தன் கள்ளால் கிளர்ந்திருந்தான். சிவந்த முகத்தில் மூக்கு குருதிபோல் தெரிந்தது. கைதூக்கி குரலை உயர்த்தி “நான் ஷத்ரியன்! ராஜசூயம் வளர்த்து என்னை ஷத்ரியன் என்று பாரதத்திற்கு அறிவித்தவன். பன்னிரு வைதிக குருமரபுகளால் மஞ்சளரிசியும் மலருமிட்டு முடிசூடிக் கொண்டவன். ஆனால் என் குருதியில் ஓடுவது ஜரா குலத்தின் முலைப்பால். அங்கு எங்கள் காடுகளில் பதினெட்டு அன்னையர் நிரைவகுத்திருக்கிறார்கள். பதினெட்டு கருவறைகள். பதினெட்டு முலைச்சுனைகள். பெண்டிரை சிறுமை செய்யும் எச்செயலையும் ஜரை மைந்தன் ஏற்கமுடியாது” என்றான். “ஆகவேதான் ஏகலவ்யனை அனுப்பி மதுராவை கைப்பற்றச் சொன்னேன். மதுவனத்தை மிச்சமின்றி எரித்தழிக்க ஆணையிட்டேன். யாதவர்களை முற்றழித்து இளைய யாதவனின் குருதியையோ சாம்பலையோ கொண்டுவரச்சொல்லி என் படைகளை அனுப்பினேன்.”

“இளைய யாதவன் அன்று தன் குலத்துடன் பெரும்பாலையைக் கடந்து புதுநிலத்தை அடைந்து துவாரகையை எழுப்பியிருக்காவிடில் யாதவகுலத்தின் ஓர் ஊர்கூட இங்கு எஞ்சியிருக்காது. இன்றும் அவ்வஞ்சமே என்னில் எஞ்சியுள்ளது. என் படுக்கையறையில் ஒரு மரக்குடுவை வைத்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் அவ்வஞ்சத்துக்காக ஒரு நெல்மணி எடுத்து குடுவைக்குள் போடுகிறேன். அது நிறைவதற்குள் இளைய யாதவனை அழிப்பேன். அவன் குருதிதொட்டு என் அன்னையர் பலிபீடத்தில் வைப்பேன்…” என்றான் ஜராசந்தன். “தீராப் பெருஞ்சினத்துடன் ஏகலவ்யன் என் படைத்தலைவனாக இன்றும் இருக்கிறான். யாதவர்களுடனான எனது போர் ஒரு போதும் முடிவுறப்போவதில்லை. அறிக, இப்புவியில் மகதமோ துவாரகையோ ஒன்றுதான் எஞ்சமுடியும்!”

துரியோதனன் கை இயல்பாக அவன் மீசையின் மேல் படிந்து மீட்டிக்கொண்டிருந்தது. அவன் விழிகள் சற்றே சரிந்து ஜராசந்தனை நோக்கிக்கொண்டிருந்தன. துச்சாதனன் “மூத்தவர் இந்திரப்பிரஸ்தத்தின் அணையாச்சுடரை இறுதிவரை காப்பதாக வாளேந்தி சூளுரை உரைக்கப் போகிறார்” என்றான். ஜராசந்தன் திரும்பி துச்சாதனனை நோக்கி ஒருகணம் சொல்லுக்குத் தயங்கியபின் “ஆம், அது இயல்பே. அஸ்தினபுரியின் அரசர் நல்லுள்ளம் கொண்டவர் என்று நானும் அறிவேன். உடன்பிறந்தாருக்கு மூத்தவராக ஒழுகுவதே குலமூத்தோன் கடன்” என்றான். “இந்திரப்பிரஸ்தத்தின் அணையாச்சுடருக்கு மறுபக்கம் வாளேந்தி நிற்கவிருப்பவர் இளைய யாதவர்” என்று கர்ணன் சொன்னான். “எனவே என்றேனும் ஒருநாள் களத்தில் அஸ்தினபுரியும் துவாரகையும் கைகோத்து ஒருபுறமென நிற்க நேரலாம். எதிர்ப்புறத்தில் மகதம் இருக்கும்.”

“ஆம், அதை நான் அறிவேன்” என்றான் ஜராசந்தன். “அதனால் என்ன? போரிடுவதும் மடிவதும் ஷத்ரியர்களின் கடன். அதற்கெனத்தான் இங்கு தோள்கொண்டு வந்துள்ளோம். ஒரு நாற்களப் பகடையாட்டத்தின் இருபுறங்களிலும் அமர்வது போன்றதுதான் அது.” திரும்பி துரியோதனனிடம் “அதன்பொருட்டு என் உளம்கவர்ந்த அஸ்தினபுரியின் அரசரிடம் நான் இன்று பகைமை கொள்ள வேண்டுமா என்ன?” என்றான். துரியோதனன் அதற்கு மறுமொழி சொல்லாமல் மீசையை முறுக்கிக்கொண்டிருந்தான்.

சுபாகு “ஏகலவ்யனின் வஞ்சம் எங்களால் பகிர்ந்து கொள்ளத்தக்கதே. ஏனெனில், எங்கள் மூத்தவர் கர்ணனும் அதற்கிணையான இழிவுறல் ஒன்றை அடைந்தவரே” என்றான். கர்ணன் அக்குறிப்பால் சற்று உளம்குன்றி “இல்லை, அது வேறு” என்றான். ஜராசந்தன் உணர்வெழுச்சியுடன் “ஆம், அது வேறு. வெய்யோன் அளித்த பொற்கவசமும் மணிக்குண்டலங்களும் அணிந்த அங்கரை எவரும் சிறுமை செய்ய இயலாது. இம்மண்ணின் அனைத்து அழுக்குகள் மேலும் படர்ந்து சென்றாலும் கதிரொளி இழிவடைவதில்லை. ஆனால் ஏகலவ்யன் என்னைப் போன்றவன். அசுரக்குருதி கொண்ட எனக்கு அவனடைந்த துயரென்ன என்று தெரியும்” என்றான்.

“அவன் கொல்லப்பட்டிருக்கலாம்… வெல்ல முடியாதவன் கொல்லப்படுவதே போரின் நெறி. ஆனால் வஞ்சம் அவ்வாறல்ல. அவ்வஞ்சத்திற்கான நிகரியை பாண்டவர்கள் அளித்தாக வேண்டும். அது பிறிதொரு களம்.” திரும்பி கர்ணனிடம் புன்னகை செய்து “வடங்களில் ஏறி விளையாடும் ஜராசந்தனை மட்டுமே தாங்கள் பார்த்தீர்கள் அங்கரே. அதை நம்பி என்னை இங்கு அழைத்து வந்தீர்கள். இப்போது இவ்வஞ்சங்கள் அனைத்தும் நிறைந்த என்னைக் கண்டு பிழை செய்துவிட்டதாக உணர்கிறீர்கள் அல்லவா?” என்றான்.

கர்ணன் “ஆம், உண்மையில் அவ்வாறே உணர்கிறேன்” என்றான். ஜராசந்தன் “என்றேனும் ஒருநாள் துவாரகையும் இந்திரப்பிரஸ்தமும் அஸ்தினபுரியும் மகதத்திற்கு எதிர்நிரையில் நின்று போர்புரியுமென்றால் ஆயிரம் தடக்கைகளில் படைக்கலங்கள் ஏந்தி வந்து நின்று உங்கள் ஒவ்வொருவரிடமும் பொருதி நெஞ்சுபிளந்து குருதியுண்ண சற்றும் தயங்காதவன் நான். என் தந்தையின் குருதியில் பிறந்த மூன்று உடன்பிறந்தவரை கழுவேற்றுகையில் அக்களத்தில் பீடம் அமைத்து அவர்கள் என் கண்முன் இறுதிச்சொல்லை உதிர்த்து அடங்குவதை நின்று நோக்கிவிட்டுத்தான் என் அரண்மனை புகுந்தேன். நீராடி உணவுண்டபின் அயோத்தியிலிருந்து வந்த நான்கு பாவாணர்களுடன் அமர்ந்து முதற்பெருங்கவியின் காவியத்தை படித்தேன். அதன் முதல் வரியை மூன்று முறை படிக்கச்சொன்னேன்” என்றான்.

திரும்பி கர்ணனிடம் சற்றே நஞ்சு ஒளிவிட்ட புன்னகையுடன் “நினைவு கூர்கிறீர்களா?” என்றான். “மா நிஷாத!” என்றான் கர்ணன். “ஆம். ‘வேண்டாம் காட்டுமிராண்டியே’ இல்லையா?” கர்ணன் தலையசைத்தான். “உங்கள் காவியங்கள் அனைத்தும் அந்த ஒற்றை வரியைத்தான் உள்ளூர கூவிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அசுரர்களாகிய நாங்கள் உங்களைப்பார்த்து அவ்வண்ணம் கூவுவதில்லை. ஹிரண்யனும் மகாபலியும் அதை சொல்லவில்லை. ‘எழுக மானுடரே’ என்றுதான் சொன்னார்கள்.” அவன் சிறிய விழிகள் மிளிர “களம் காண்போம்! களம் முடிவு செய்யட்டும்! வஞ்சங்கள் அல்ல, சூழ்ச்சிகள் அல்ல, களம்… அது முடிவெடுக்கட்டும்!” என்றான். கோப்பையை எடுத்து எஞ்சிய யவன மதுவை வாயில் ஊற்றிவிட்டு தொடையைத் தட்டி ஜராசந்தன் எழுந்தான்.