வெய்யோன் - 49

பகுதி ஆறு : விழிநீரனல் – 4

முதுமகள் கர்ணனிடம் கைநீட்டி “வள்ளத்தில் ஏறு” என்றாள். கர்ணன் அதன் விளிம்பைத்தொட அதிலிருந்த அனைவரையும் சரித்துக் கொட்டிவிடப்போவது போல் அது புரண்டது. துடுப்புடன் இருந்த நாகன் சினத்துடன் “தொடாதே! இது ஆழமற்ற வள்ளம். படகல்ல” என்றான். கர்ணன் கைகளை எடுத்துக்கொண்டான். “இன்னொரு வள்ளம் மறுபக்கம் இருந்து பற்றிக்கொண்டால் மட்டுமே உன்னால் இதில் ஏறமுடியும்” என்றான் நாகன்.

கர்ணன் துடுப்பை வைத்துவிட்டு தன் படகில் எழுந்து நின்றான். “முட்டாள், என்ன செய்கிறாய்? என்ன செய்கிறாய்? குழந்தைகள் இருக்கிறார்கள்” என்று நாகன் கூவினான். கர்ணன் தன் நீண்ட காலைத்தூக்கி வள்ளத்தின் நடுவில் வைத்து தன் படகிலிருந்து மறுகாலை எடுத்தான். “கவிழ்ந்துவிடும் கவிழ்ந்துவிடும்” என்று நாகன் கூவ படகிலிருந்த பெண்களும் குழந்தைகளும் கூச்சலிட்டனர்.

முதுமகள் அவனை புன்னகையுடன் நோக்கியிருக்க அலைகளில் ஆடும் அகல் திரியில் எரியும் சுடரென உடல் இயல்பாக நிகர்நிலை கொள்ள அவன் நின்றான். பின்பு காலைமடக்கி முதுமகளுடன் அமர்ந்தான். அவன் வந்த படகு அலைகளில் நிலையழிந்து சுழல பின்னால் வந்த வள்ளத்தில் இருந்த நாகன் கர்ணனின் படகை எட்டிப்பற்றி அதை தன் வள்ளத்துடன் கட்டிக்கொண்டான்.

முதுமகள் “நன்கு அமர்க!” என்றாள். கர்ணன் அமர்ந்ததும் அவள் இருளுக்குள் நாகவிழிகள் போல மின்னும் நோக்குடன் “நீ எவர் மகன்?” என்றாள். கர்ணன் “அறியேன்” என்றான். “நீ ஷத்ரியனா?” என்றாள். “சூதன்” என்றான் கர்ணன். “ஆனால் அங்கநாட்டுக்கு அரசன்.” அவள் முகம் சுருங்கி அவனை நோக்கி உறைந்திருந்தது. சிலகணங்களுக்குப்பின் அவள் உயிர்த்து “உன் பின்னால் எழுந்து நின்ற அந்த நாகத்தை முதன் முறை எங்கு பார்த்தாய்?” என்றாள்.

“சிற்றிளமையில் கண்ட ஒரு கனவில். முன்பு அதை நான் கண்ட காட்சியையே மீண்டும் கண்டேன். தவழும் சிறுகுழந்தையென தூளித்தொட்டிலில் கிடந்தேன். தொலைவில் குதிரைகளின் கனைப்பொலி. அப்பால் கொட்டிலில் ஒரு சினைக்குதிரையின் மூச்சு. காலையொளி நீள்விரிப்பென உள்ளே சரிந்துகிடந்த குடிலில் எவருமில்லை. தூசுகள் பதைத்துச்சுழலும் ஒளிக்குழாய்கள் சரிந்து மண்ணில் ஊன்றியிருப்பதை நோக்கியபடி நான் வாய்க்குள் கையை மடித்துவைத்து சப்பியபடி கால்களை ஆட்டிக்கொண்டிருந்தேன். வெளியே இருந்து மெல்லிய சலசலப்போசையுடன் நீரோடை ஒன்று சருகுகளை கலைத்தபடி உள்ளே வருவதை கேட்டேன்.”

“கையூன்றி, புரண்டு கால்கள் தூளித்தொட்டிலில் இருந்து தொங்க தலை தூக்கி அதை பார்த்தேன். பேருருவம் கொண்ட அரசநாகம். அதன் கரியஉடல் வழிந்துவர அதிலிருந்த பொன்னிற அம்புமுனைகள் வண்ணத்துப்பூச்சிகள் போல சிறகடிப்பதாக தோன்றின. தரையில் அதன் செதிலுடம்பு உரசும் ஒலி. வளைந்து எழுந்தபோது அதன் உடலே அதில் உரசும் ஒலி. ஓடை குளமானதுபோல தேங்கிச் சுழித்து சுருள்மையத்திலிருந்து தலைதூக்கி முளைத்ததுபோல் எழுந்து ஒற்றை இலையென படம் விரித்து நின்றது.”

“வாழ்த்த எழுந்த கை என அதை எண்ணினேன். ஏதோ அளிக்க நீண்டு வருவதாக மகிழ்ந்து ‘வா’ என்றபடி கைநீட்டி சிரித்தேன். அகன்ற ஒற்றையிலையின் இருபக்க விளிம்புகளும் இதழ்களென விரிய அது ஒரு மலராகியது. செந்நிறப் புல்லிவட்டம் நீண்டு பறந்தது. என் முகத்தை நோக்கி அது குனிந்தது. அதன் பறக்கும் சீறலுடன் நாக்கு என் இதழ்களை தொட்டுச் சென்றது. சிரித்தபடி அதை பற்றுவதற்காக நான் காலுந்திப் பாய்ந்தபோது தொட்டில் ஆடத்தொடங்கியது. அணுகி அள்ளமுயன்று கைகளுக்குச் சிக்காமல் பின்னால் விலகிவந்து மீண்டும் சென்றேன்.”

“அதன் விரித்த படத்தை மிக அண்மையில் கண்டேன். இரு ஒளிமணிக்கண்களையும் படவளைவின் பரலடுக்கையும். அணைக்கவென எழுந்த அலைவளைவில் வில்லொன்று நாணேற்றப்பட்டு இறுகித்தளர்ந்தது. தொட்டிலின் ஆட்டத்திற்கேற்ப தன்னியல்பாக அசைந்த அதன் உடல் நடமிட்டது. முச்சுருளுக்குமேல் எழுந்த எழுதண்டு. வெறித்த கூர்நோக்கு. அது வாய் திறந்தது. செந்நிறச் சிப்பிக்குள் இரு வெண்முத்துக்கள்போல பற்கள். அடிநாக்கின் பதைப்பை கண்டேன்” கர்ணன் சொன்னான்.

“மீண்டும் பலநூறுமுறை அக்காட்சியை என் சித்தத்தில் தீட்டிக்கொண்டேன். ஒப்புமைகளாக. அணிச்சொற்களாக. பலமுறை அரசநாகங்களை சென்று நோக்கி அமர்ந்திருக்கிறேன். நான் அன்றுகண்ட நாகம் அவற்றைவிட பலமடங்கு பெரிது என உறுதிகொண்டேன்.” தலையில் எழுந்து பறந்த குழல்கற்றைகளை அள்ளி தோல்வாரால் முடிந்தபடி “அதன்பின் எப்போதும் அந்நோக்கை நான் என்மேல் உணர்கிறேன். அதன் விழிகளை வேறெவ்விழிகளைவிடவும் அணுக்கமாக அறிவேன்” என்றான்.

முதுமகள் நெடுமூச்செறிந்தாள். “அன்னையே, நீங்கள் அந்நாகத்தை அறிவீர்களா?” என்றான் கர்ணன். அவள் “ஆம்” என்றாள். கர்ணன் “நான் அதைப்பற்றி அறியவிழைகிறேன்” என்றான். அவள் மீண்டும் நீள்மூச்செறிந்து “நீ அறியும் தருணம் வரும்” என்றாள். “அத்தருணத்தை ஆக்குபவை எங்கள் தெய்வங்களே.” கர்ணன் தலைவணங்கினான். துடுப்பை வலித்த நாகன் “நாங்கள் ஏதும் அறிவதில்லை. எங்கள் சொற்களை காற்றில் பறக்கவிடுகிறோம். எங்கள் தெய்வங்கள் மீட்டுக்கொண்டு வந்து அளிப்பதை மட்டுமே எங்கள் அறிவெனக்கொள்கிறோம்” என்றான்.

“அன்னையே, நீங்கள் ஏன் இந்நிலம் விட்டுச் செல்கிறீர்கள் என்றறிய விழைந்தேன். அதற்காகவே வந்தேன்” என்றான். அவள் கைசுட்டி வடகிழக்கு வானைக்காட்டி “அங்கொரு பெருநகர் எழுந்துள்ளது. அதை இந்திரப்பிரஸ்தம் என்கிறார்கள்” என்றாள் முதுமகள். “ஆம்” என்றான் கர்ணன். “அந்நகரின் மங்கலப்பெருவிழவுக்கே நான் சென்றுகொண்டிருந்தேன்.” முதுமகள் “இப்பெருநதியெங்கும் நிறைந்து செல்கின்றன நாவாய்கள். அங்கே இருகரைகளிலும் செறிந்து பெருகிச் செல்கிறார்கள் மக்கள். அந்நகரம் பல்லாயிரம் கைகளும் கால்களும் விழிகளும் பெற்று பேருருவம் பெற்றுக்கொண்டிருக்கிறது” என்றாள்.

அவள் கைநீட்டி “அதன் பெயர் காண்டவப்பிரஸ்தம். எங்கள் மண் அது. ஆயிரம் தலைமுறைகளாக நாங்கள் அங்குதான் வாழ்ந்தோம். வேராக மண்ணுக்குள் இருந்தோம். பின் பாம்புகளாக நீளுடல்கொண்டு நீரையும் காற்றையும் ஆண்டோம். கைகால்கள் விரிந்து தலைகிளர்ந்து விழியும் மொழியும் கொண்டு மானுடராகி கனலையும் கையளந்தோம். எங்கள் தொல்குடிகள் அங்கே மாமன்னர் தட்சர் தலைமையில் வாழ்ந்தன. எங்கள் மைந்தர் ஒன்றுநூறெனப் பெருகிச்செறிந்தனர். எங்கள் மூதாதையர் அந்தமண்ணுள் சென்று உப்பாகி வேர்களால் உண்ணப்பட்டு கனிகளாகி திரும்பிவந்தனர்” என்றாள்.

“அங்கிருந்த அடர்குளிர்பசுங்காடுகளின் இருண்ட ஆழங்களுக்குள் நாங்கள் பிறர் விழிபடாது வாழ்ந்தோம். எங்கள் தெய்வங்கள் கேளாச்செவிகளுடன் இமையாவிழிகளுடன் பேசாநாவுகளுடன் காலற்றவிரைவுடன் எங்களை மும்முறை சூழ்ந்து காத்தன. புற்றுகளுக்குள் திறக்கும் கரவுப்பாதைகளினூடாக பாதாளப் பெருநாகங்களுடன் உரையாடி மீண்டு எங்கள் பூசகர்களில் ஏறி நெளிந்து நா சீறி எங்கள் மொழியை அள்ளி அணிந்துகொண்டு தொல்குறியும் திகழ்குறியும் தேர்குறியும் உரைத்தன. அச்சொற்களை நம்பி அங்கிருந்தோம்.”

முதுமகள் சொல்லின்மை விம்ம இரு கைகளின் காய்ந்த கொன்றைநெற்றுகள் போன்ற விரல்களையும் கூட்டி அதன்மேல் உதடுகளை அழுத்திக்கொண்டாள். “அந்நிலத்தை வென்றனர் மானுடர். வில்குலைத்து வந்த வீணன். அவனுக்குச் சொல்லளித்து நின்ற நீலன்!” என்று படகோட்டி கூவினான். முதுமகள் அவனை நோக்கி கைகாட்டிவிட்டு கர்ணனிடம் “எங்கள் காடு எரியுண்டது. எங்கள் பன்னிரு பெருங்குலங்கள் எரிந்துருகி அழிந்தன. எங்கள் தெய்வங்கள் அஞ்சி மண்புகுந்தன. மண்ணுக்குள் வாழும் கலையறிந்தவர் என்பதனால் நாங்கள் அங்கிருந்து விலகி அதைச்சூழ்ந்த சதுப்புக்காடுகளின் நாணல்களுக்குள் மறைந்தோம்.”

“ஆற்றங்கரைச் சேற்றுக்குழிகளுக்குள் தவளைகளையும் எலிகளையும் உண்டு இத்தனை ஆண்டுகள் காத்திருந்தோம். ஒவ்வொரு நாளும் மண்ணுக்குள் இருந்து எங்கள் தெய்வங்கள் எழுந்துவரும் என உடலே செவியென கூர்ந்தோம். எங்கள் அம்புக்கலங்களில் அழியாநச்சு நொதித்துக்கொண்டிருந்தது. கண்மூடினால் எங்கள் எரிந்தழிந்த காடு எங்களுக்குள் நின்று தழலாடியது. எங்கள் தொல்நிலம் மீளுமென்று எதிர்நோக்கி இருந்தோம்” என்றாள் முதுமகள்.

“நேற்று எங்கள் முதுபூசகன் ஒருவனில் எழுந்து மாமங்கலையான அன்னை மானசாதேவி எங்களுக்கு ஆணையிட்டாள்” என முதுமகள் சொன்னதும் அப்பாலிருந்த இளையோன் ஒருவன் கைநீட்டி “ஆணையிடவில்லை. எங்களை கைவிட்டாள்” என்று கூவினான். முதுமகள் திரும்பி அவனை நோக்கிவிட்டு “அதுவும் அன்னையின் விழைவென்றால் அவ்வாறே” என்றாள். கர்ணன் “என்ன ஆணை?” என்றான்.

முதுமகள் காட்டுக்கூகையின் குரலில் “இனி இந்நிலம் எங்களுக்கு மீளாது” என்று கூவினாள். “அதன்மேல் பிறிதொரு கொடி ஏறப்போகிறது. அந்நிலத்தைச் சூழ்ந்து நாடொன்று எழும். சதுப்புகள் ஊர்களாகும். காடுகள் கழனிகளாகும். அங்கெல்லாம் அவர்களின் கால்தடம் பட்டு மண் காய்ப்பு கொள்ளும். பொன் விதைக்கப் பழிமுளைக்கும். வேருக்குக் குருதி. வேலியெனச் செங்கோல். தளிரிடும் சொற்கள். கிளைவிரிக்கும் கேள். இளையோனே, அங்கே மலரென வெந்தழல் எழும்.”

“ஆனால் எழுந்த பெருநகரங்கள் அனைத்தும் அழியும். ஹிரண்யாட்சனின் வீரமாகேந்திரபுரியும் மகிஷாசுரனின் மிருத்திகாவதியும் கார்த்தவீரியனின் மாகிஷ்மதியும் சூரபதுமனின் மகேந்திரபுரியும் கற்குவியல்களாக மண்ணில் புதைந்துள்ளன. ராவணப்பிரபுவின் இலங்கையை கடல்கொண்டது. அவனை வென்ற ரகுவீரனின் அயோத்தியை காலம் கொண்டது. இன்றுள்ளன இவை. இந்திரப்பிரஸ்தம், துவாரகை, அஸ்தினபுரி…”

“இளையோனே, கல்மேல் கல்லமர்ந்து எழுந்த அத்தனை மாளிகைகளுக்கு அடியிலும் வேர்கள் புதைந்துள்ளன. வேர்கள் இறப்பதில்லை. ஒவ்வொரு கணமும் வெளிவரும். இடுக்கு தேடி தவித்தபடி அவை அடியில்தான் இருக்கும். ஐயமிருந்தால் உன் மாளிகையில் சென்று ஒரு சிறு பிளவை உருவாக்கிப்பார். மூன்று நாட்களில் வேர் ஊறி மேலெழுவதை பார்ப்பாய்” என்று முதுமகள் சொன்னாள். “மலர் உறங்கும். மரம்சூடும் பறவைகள் உறங்கும். இலையுறங்கும். இலைசுமந்த கிளையுறங்கும். அடிமரம் உறங்கும். வேர்கள் உறங்குவதேயில்லை.”

கர்ணன் கைகளைக் கூப்பியபடி “ஆம்” என்றான். “இந்த நாகலந்தீவின் வேர்ப்படலம் நாங்கள்” என்றாள் முதுமகள். கர்ணன் “பாரதவர்ஷத்தை சொல்கிறீர்களா?” என்றான். கையசைத்து “அது உங்கள் சொல். இந்நிலத்தின் பெயர் நாகலந்தீவு. என்றும் அவ்வாறே அது இருக்கும்” என்றாள். கர்ணன் அவள் இதழ்கள் இருளில் அசைவதை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். படகோட்டிய நாகன் “அறிக அயலவனே, இங்குள அனைத்தும் எங்கள் பேரன்னையின் உடல்மேல் எழுந்தவையே. அவள் பெயர் நாகலாதேவி” என்றான். “அவளே மலைகள். அவளே நதிகள். அவளே தாழ்வரையும் விரிநிலமும். அவளே கடல். அவளே காற்று. அவளே எரி. அவளே விண்ணெனும்குடை.”

முதுமகள் “கரியபுறமும் வெண்ணிற அடியும் கொண்ட விராடநாகம் அவள். மேற்கே அவள் ஒளிவெண்மை கொண்ட கூர்வால் முடிவிலியில் எங்கோ நெளிந்துகொண்டிருக்கிறது. கிழக்கே அவள் ஆயிரம் கிளைகொண்ட கன்னங்கருந்தலை மாபெரும் சூரியன்கள் விழிகளாகச் சுடர அனல்கதிர்களென பகுநா எழுந்து பறக்க தேடிச்சென்றுகொண்டிருக்கிறாள். ஒவ்வொருநாளும் அவள் உடல்முறுக்கி வெண்ணிறம் காட்டுகையில் பகல் எழுகிறது. கருநிறம் கொள்கையில் இரவு அணைகிறது. அவள் உடல்செதில்கள் விண்மீன்களென மின்னுகின்றன. அவள் அனல்நா பறக்கும்போது மின்னல். அவள் சினக்கையில் இடி. அவள் மூச்சே புயல். இங்கு நாம் அவள் உடலெனும் கூரைக்கீழ் வாழ்பவர்கள்” என்றாள்.

ஒருபக்கம் கருமையும் மறுபக்கம் வெண்மையும் கொண்ட துளிமுட்டை ஒரு நாள். முப்பது முட்டைகளை சுற்றியிருக்கும் நாகம் ஒருமாதம். ஒருமாதமென்பது தென்னையின் ஒரு கணு. ஒருவருடம் கங்கையின் ஒரு நீர்த்தடம். பன்னிரண்டு வருடங்கள் குறிஞ்சியின் ஒருமலர். நூறுகுறிஞ்சிமலர்கள் பேராலமரத்தின் வாழ்க்கை. நூறு ஆலமர விதைகள் பாதாளநாகங்களின் ஒரு கண்ணிமைப்பு. ஆயிரமுறை அவை கண்ணிமைக்கையில் ஒரு பாதாளநாள். ஆயிரம் பாதாளநாட்கள் ஒரு பாதாளவருடம். ஆயிரம் பாதாளவருடங்கள் மண்மேல் ஒரு யுகம். அதற்கு முன்னிருந்த மலைகளும்கூட அப்போது எஞ்சா என்றறிக!

ஆயிரம் யுகங்கள் விண்ணாகிய பெருநாகத்தின் ஒரு நெளிவு. ஆயிரம் நெளிவுகள் அவளுடைய ஒருநாள். ஆயிரம் நாட்கள் அவளுக்கு ஒருவருடம். ஆயிரம் வருடங்கள் அவளுக்கு ஒரு வயது. ஆயிரம் வயதுக்குப்பின் அவள் ஒருமுறை சட்டையை உரித்திடுகிறாள். அவ்வெள்ளிக்கீற்றுகள் முகில்குவைகளாகக் குவிந்த கிழக்குமூலையில் ஆயிரம்சட்டைகள் ஒருகுவை. ஆயிரம்குவை எழுகையில் ஒரு விண்யுகம். இளையோனே, ஆயிரம் யுகங்கள் ஒரு மகாயுகம். ஆயிரம் மகாயுகங்கள் ஒரு மன்வந்தரம். ஆயிரம் மன்வந்தரங்கள் ஒரு கல்பம். ஆயிரம் கல்பங்கள் முழுமையடைகையில் அவள் தன் வாலை கண்டடைகிறாள்.

தன் வாலை தானே விழுங்கி அவள் இறுகத்தொடங்குகிறாள். சுருண்டு ஒரு பந்தாகி சுழியாகி புள்ளியாகி இன்மையென்றாகி மறைகிறாள். அப்பால் குனிந்து அவளை நோக்கிக்கொண்டிருக்கும் மாயை என்னும் மாபெரும் வெண்ணிறநாகம் புன்னகைபுரிந்து பிறிதொரு முட்டையை இடுகிறது. அதிலிருந்து மீண்டுமொரு நாகலாதேவி எழுகிறாள். சிறுவிரல் என நெளிந்து எழுகிறாள். பசிகொண்டு சுற்றும் நோக்குகிறாள். உண்ண அங்கே தானன்றி பிறிதில்லை என அறிகிறாள். சீறி வாய்திறந்து தன் வாலை நோக்கி பாய்கிறாள். மின்னல்கொடியென சீறி நீண்டோடும் வாலைப்பற்ற முயன்று வளைந்து ஒரு வட்டமாகிறாள்.

“நாகலாதேவி தன் வாலை கண்டடைவதை ஒரு சுழி என்கின்றனர் நாகமூத்தோர். சுழித்துச்சுழித்து அவளை விளையாடவிட்டு நோக்கி சிரிக்கும் மாயையை தன் முன்னாலிட்டு விளையாடிக்கொண்டிருக்கிறது சூன்யை என்னும் கருநிறப் பெருநாகம்” முதுமகள் சொன்னாள். “இப்புவியென்பது ஒளியென இருளென இன்மையென பெருகிச் சூழ்ந்திருக்கும் முடிவிலிக்கடற்பெருக்கில் அன்னை நாகலாதேவி இட்ட சிறுமுட்டை என்று அறிக! ஆகவேதான் இது நாகலம் எனப்படுகிறது. வடக்கே பனிபடு நெடுவரையும் தெற்கே அலைபடு குமரியும் கொண்ட இந்நிலம் நாகலந்தீவு என்று சொல்லப்படுகிறது.”

விண்ணுருவான அன்னை நாகலையின் வீங்கிய பெரும்பத்தியிலிருந்து பிரம்மனும் பறக்கும் நாவிலிருந்து விஷ்ணுவும் எரிவிழிகளிலிருந்து சிவனும் தோன்றினர். ஒன்று பிறிதை என உருவாக்கிப்பெருகிய பல்லாயிரம்கோடி பிரம்மன்களின் எண்ணங்களிலிருந்து உருவானவர்கள் பிரஜாபதிகள். மரீசி, அங்கிரஸ், அத்ரி, புலஸ்தியர், வசிஷ்டர், புலகர், கிருது என்னும் ஏழு முதல்முனிவர்கள் பிரம்மனின் தவத்திலிருந்து எழுந்தனர். பிரம்மனின் பெருஞ்சினத்திலிருந்து மகாருத்ரன் எழுந்தான். மடியிலிருந்து நாரதர். எண்ணங்களில் இருந்து சனகரும் சனாதனரும். இடத்தோளிலிருந்து தட்சபிரஜாபதியும் வலத்தோளிலிருந்து வீரணியும் பிறந்தனர். அவரது கால்களிலிருந்து கசியபர் பிறந்தார்.

தட்சனும் அசிக்னியும்கூடி அறுபது பெண்நாகங்களை ஈன்றனர். அதிதி, திதி, தனு, அரிஷ்டிரை, சுரசை, சுரபி, வினதை, தாம்ரை, குரோதவஸை, இரா, கத்ரு, முனி என்னும் பன்னிருவர் கசியபரை கூடி ஈன்ற மைந்தர்களே வானுளோர். அதிதியில் இருந்து ஒளிரும் உடல்கள் கொண்ட ஆதித்யர்கள் பிறந்தனர். விஷ்ணு, சுக்ரன், ஆரியமா, தாதா, த்வஷ்டா, பூஷா, விவஸ்வான், சவிதா, மித்ரன், வருணன், அம்சன், பகன் என்னும் பன்னிரு ஆதித்யர்களில் இருந்து ஆதித்யகோடிகள் எழுந்து விண்ணை நிறைத்தனர்.

அவள் இட்ட இரண்டாவது முட்டையில் இருந்து அனலன், அனிலன், ஆபன், சோமன், தரன், துருவன், பிரத்தியூடன், பிரபாசன் என்னும் எட்டு வசுக்கள் பிறந்தனர். திதியில் இருந்து தைத்யர்கள் பிறந்தனர். தனுவிலிருந்து தானவர்கள் பிறந்தனர். சுரபியிலிருந்து பதினொரு ருத்ரர்கள் பிறந்தனர். தட்சனின் பத்து மகள்களை தர்மதேவர் மணந்தார். இருபத்தேழுபெண்களை சோமன் மணந்தார். இருவரை பகுபுத்ரரும் இருவரை அங்கிரஸும் இருவரை கிருஸாஸ்வரும் மணந்தனர்.

தட்சனின் மகளாகி கசியபரை மணந்த இளையவள் வினதை கருடனை பெற்றாள். மூத்தவளாகிய கத்ரு பெற்றவையே உலகங்களைத் தாங்கும் உலகத்தை ஆளும் பெருநாகங்கள்.

சேஷன், வாசுகி, ஐராவதன், தக்ஷகன், கார்க்கோடகன், தனஞ்சயன், காளியன், மணிநாகன், பூரணநாகன், கபிக்ஞரன், ஏலாபுத்ரன், வாமனன், நீலன், அனிலன், கன்மஷன், சம்பளன், ஆரியகன், உக்ரகன், குலசபோதகன், சுமனஸ், ததிமுகன், விமலன், பிண்டகன், ஆப்தன், சங்கன், பாலிசிகன், நிஷ்டானகன், ஹேமகுகன், நகுஷன், பிங்கலன், பாஹ்யகர்ணன், ஹஸ்திபதன், முன்கரபிண்டகன், கம்பலன், அஸ்வதரன், காளிகன், விருத்தன், சம்வத்தகன், பத்மன், சங்குமுகன் என்போர் முதல்நாற்பதின்மர். இறப்பற்ற அவர்களை வாழ்த்துக!

கிலஸ்மாந்தகன், ஷேமகன், புண்டரீகன், கரவீரன், புஷ்பதம்ஷ்டிரன், வில்வகன், பாண்டூரன், மூஷகாதன், சங்கசிரன், ஹரிபத்ரன், ஹரித்ரகன், அபராஜிதன், ஜோதிகன், பன்னகன், ஸ்ரீவஹன், கௌரவ்யன், திருதராஷ்டிரன், சங்கபிண்டன், சுபாகு, விரஜஸ், சாலிபிண்டன், ஹஸ்திபிண்டன், பிடாரகன், சுமுகன், கௌணபாசகன், குடரன், குஞ்சரன், பிரபாகரன், குமுதன், குமுதாக்ஷன், தித்திரி, ஹலிகன், கர்த்தமன், பஹுமூலகன், பாகுலேயன், கர்க்கரன், அகர்க்கரன், அங்காரகன், குண்டோதரன், மஹோதரன் எனும் பின்நாற்பதின்மரும் வெல்லற்கரியவர்கள்.

“இளையோனே, அவர்கள் ஆயிரம் பெருஞ்சுருள்கள் என்றறிக! இப்புவியின் ஆடல்கள் அனைத்தும் அவர்கள் தழுவியும் பிணைந்தும் சீறியும் விலகியும் விழுங்கியும் உமிழ்ந்தும் ஆற்றும் விளையாடலே என்றுணர்க!” என்றாள் முதுமகள். தன்னைச்சுற்றி அலையடித்த யமுனையின் கருநீர்ப்பெருக்கை பல்லாயிரம் நாகநெளிவுகளாக கர்ணன் உணர்ந்தான். படகிலிருந்த நாகர்களும் அப்பெயர்களாலேயே சொல்வயப்பட்டு விழிகளென அமர்ந்திருந்தனர்.

“அன்னை கத்ருவின் இளையவள் பெயர் குரோதவஸை. பன்னிரண்டாயிரம் கோடி இருட்சுருள்களாக விண்ணை நிறைத்துக்கிடந்த எரிநாகம் அவள். அவளுடைய செவ்விழிகள் மேலைவானில் இரு செவ்விண்மீன்களாக நின்றன. அவளுடைய மூச்சில் எழுந்த அனலின் புகை பல்லாயிரம்கோடி கருமுகில்களாக வானில் படர்ந்திருந்தது. அவளுடைய சீறல் இடித்தொடர்களாக மேற்குத்திசையிலிருந்து எழுந்து வெளியில் பரவிச்சென்றது. அணையாத பெருஞ்சினமே அவள்” என்று முதுமகள் தொடர்ந்தாள்.

அன்னையின் முட்டையிலிருந்து எழுந்ததுமே தன் உடல்சுருளை தான் நோக்கி சினம்கொண்டு சீறி அதைத்தீண்டி கருகியமையால் அப்பெயர் அவளுக்கு இடப்பட்டது. பிறந்தநாள்முதல் தன்னை எவரும் தொட அவள் ஒப்பியதில்லை. அவள் பத்திகள் எங்கும் தாழ்ந்ததில்லை. நஞ்சு ஒழுகும் நதி என்று அவளை சொன்னார்கள். தன்னை தான் நோக்கினாலே சினம்கொள்பவள். தனக்குமேல் வெட்டவெளியன்றி பிறிதைச் சூடாத தருக்கு கொண்டவள். அவளை நோக்கி புன்னகைத்த பேரன்னை அவள் வால்நெளிவை ஒரு பிரஜாபதியென படைத்தார். புச்சர் என்று அவரை நாகங்கள் அழைக்கின்றன.

குரோதவஸையைக் கண்டு காதல்கொண்ட புச்சர் அவளை பெருநதியென வழிந்தோடி அணுகினார். அவரைக் கண்டதும் வெருண்டு புயலில் கடல் அலைகளெழுவதுபோல தன் ஆயிரம் பத்திகளை விரித்து நாக்குகள் பறக்க விழிகள் கனல அவள் சீறியபோது அவர் மேலும் காமம் கொண்டு அருகணைந்தார். அவள் அவர் படத்தைக் கொத்தி தன் நஞ்சை அவருக்குள் செலுத்தினாள். அதன் வெம்மையில் எரியுற்ற இரும்பென அனலுருவாகி உருகி வழிந்தோடிய கசியபர் சீறி பத்திவிரித்தெழுந்தார். அவள் அடங்கா சினத்துடன் அவர் உடலை வளைத்து இறுக்கி சீறி கொத்தக்கொத்த அம்முத்தங்களை ஏற்று கூசிச்சிரித்து உடல்நெளித்து வளைந்தெழுந்து அவர் மகிழ்ந்தார்.

கொத்திக்கொத்திச் சலித்து நாவிலிருந்த நஞ்சனைத்தையும் இழந்து அவள் தளர்ந்தபோது அவளுடைய பத்திகளை ஒன்றன்மேல் ஒன்றாக அழுத்தி அதை தன் உடற்சுருளால் கவ்விச் சுற்றி இறுக்கிக்கொண்டார். அவளை முகம்சேர்த்து அவள் எரிநாக்குகளை தன் நாக்குகளால் பிணைத்தார். அவள் ஆயிரம் வாய்களால் சீறி அவருள் திமிறி நெளிந்தாள். அவரைத் தழுவி வழுக்கி இறங்கி அவர் வாலைக்கவ்வி விழுங்கலானாள். அவர் நகைத்தபடி அவள் வாலைக்கவ்வி தான் விழுங்கினார். ஒருவரை ஒருவர் விழுங்கியபடி அவர்கள் கோடானுகோடி காலம் காமம் கொண்டாடினர்.

இருளும் ஒளியுமென ஒருவரை ஒருவர் நிறைத்தபடி விண்நிறைத்துக் கிடந்தனர். அவளுக்குள் அவரது கனவுகள் இறங்கிச்சென்றன. உயிர்துடிக்கும் விதைகள் சேற்றுப்பரப்பை என அவள் அடிவயிற்றை கண்டுகொண்டன. சினம் எரிந்தணைந்து தனிமையாகி பின் வஞ்சமென்றாகி அவளுக்குள் நிறைந்தது. ஆயிரம் யுகங்கள் தன் வஞ்சத்தின் அனல் தாளாமல் விண்வெளியில் நிலையழிந்து புரண்டுகொண்டிருந்தாள். உடல்திறந்து அவள் இட்ட முட்டைகளில் இருந்து பத்து கரியமகள்கள் எழுந்தனர்.

மிருகி, மிருகமந்தை, ஹரி, பத்ரமதை, மாதங்கி, சார்த்தூலி, ஸ்வேதை, சுரபி, சுரசை, கத்ரு என்னும் பதின்மரும் வளர்ந்து கன்னியரானார்கள். அன்னையின் வஞ்சம் அவர்களில் மைந்தராக முளைத்தெழுந்தது. அவர்களிடமிருந்து பறப்பவையும் நடப்பவையும் தாவுபவையும் என அனைத்து உயிர்களும் பிறந்தன.

குரோதவஸையின் உள்ளே கூடியெழுந்த சினம் பறவைகளில் அலகுகளும் உகிர்களும் ஆகியது. விலங்குகளில் கொம்புகளும் கோரைப்பற்களும் என எழுந்தது. தேள்களில் கொடுக்குகளும் பூச்சிகளில் முடிகளுமாகியது. அள்ள அள்ளக் குறையாத நச்சுக்கலமென அவள் உள்ளத்திலிருந்து அவை எழுந்துகொண்டே இருந்தன. மண்ணை மும்முறை நிறைத்தபின் அவை வாழ இடமின்றி ஒன்றையொன்று உண்ணத்தொடங்கின.

ஆயிரம்யுகங்கள் கடந்து தன் வஞ்சம் முளைத்துப்பெருகிய உயிர்க்குலங்களை குனிந்து நோக்கிய குரோதவஸை பெருமூச்சுடன் கண்மூடி சற்றே புரண்டுபடுத்தாள். அப்போது தன்னுள் அதேயளவுக்கு நஞ்சு எஞ்சியிருப்பதை கண்டாள். மீண்டும் சினந்தெழுந்து வால் சுழற்றி ஓங்கியறைந்து இடியோசை எழுப்பினாள். அவளுடைய எஞ்சிய சினமனைத்தும் அவள் இறுதிமகள்களில் குழவிகளாகியது. சுரசை நாகங்களை ஈன்றாள். அவள் தங்கை கத்ரு பத்திவிரிக்காத பாம்புகளை ஈன்றாள். இருள் விழுதுகளென நெளிந்த அவற்றைக் கண்டு குரோதவஸை தனக்குள் புன்னகைத்து ‘என்றுமிருங்கள்’ என்று சொன்னாள். அவள் வாழ்த்தொலி நான்கு திசைகளிலும் இடியென எழுந்தது. அவள் புன்னகை மின்னலென ஒளிவிட்டு அமைந்தது.

மண்ணில் பெருகிய பாம்புகளில் சுரசையின் மைந்தர் தருக்கி எழும் ஆணவம் கொண்டிருந்தனர். அவ்வாணவத்தையே நஞ்செனத் திரட்டி நாவு என கொண்டிருந்தனர். உடல்சுருட்டி எரிகுளமாக்கி நடுவே தழலெனத் தலைதூக்கி நாபறக்க நின்று எதிரியை நேருக்குநேர் நோக்கினர். சீறி மும்முறை தலைதிருப்பி மண்ணில் கொத்தி எச்சரித்தபின் சவுக்கின் சொடுக்கென சுழன்று வந்து நஞ்சூறிய நெடும்பல்லால் கொத்தி யானைகளையும் கருகச்செய்தனர். அவர்களில் ஊறியிருந்தது ரஜோகுணம்.

தங்கை கத்ரு பெற்றவர்கள் தமோகுணம் நிறைந்தவர்கள். உதிர்ந்த கொடிபோல மண்ணில் புதைந்த வேர்போல அவர்கள் சருகுகளுக்குள் அசைவழிந்து காலமிழந்து படுத்திருந்தனர். அவர்களின் தாடைகள் மண்ணிலிருந்து எழுவதேயில்லை. ஆனால் மண்ணில் நடப்பவற்றை எல்லாம் தங்கள் கட்செவியாலேயே அறிந்திருந்தனர். காத்திருத்தலையே கடுநஞ்சாக்கி கரந்திருந்தனர். குழந்தையின் விரல்போல தொட்டு நஞ்சு செலுத்தினர். கொத்துவது தெரியாமல் கொத்தி தொடர்வது அறியாமல் தொடர்ந்து விழுந்தபின் வந்து கவ்விக்கொண்டனர். ஓசையின்றி விழுங்கி மீண்டும் புதருக்குள் சுருண்டு காத்திருந்தனர். குரோதவஸையின் சினமே நாகங்கள். அவள் வஞ்சமே பாம்புகள்.

ஆணவ வடிவான நாகங்களே பாம்புலகை ஆண்டன. அவற்றால் தீண்டப்பட்டாலும் உயிர்கள் அவற்றை வணங்கின. ஒளிரும் சிற்றோடையென அவை நெளிந்தோடும் அழகை குரங்குகள் மரங்களில் அமர்ந்து நோக்கி மகிழ்ந்தன. சுருள்நடுவே எழுந்த அவற்றின் படத்தை தங்களை வாழ்த்த எழுந்த கை என எண்ணின யானைகள். கால்களில்லாமல் விரையும் அவற்றை தொடுவானத்தின் வில்லால் ஏவப்பட்ட அம்புகள் என மதித்தன மான்கள்.

பாம்புகளோ அனைவராலும் வெறுக்கப்பட்டன. மண்ணின் புண்களில் ஊறிய சீழ். ஈரச்சருகுக்குள் காடு கரந்துவைத்திருக்கும் கொலைவாள். உதடுகளுக்குள் உறைந்திருக்கும் ஓர் இழிசொல். ஆணவம் மண்மீதெழ முடியும். வஞ்சமே மண்ணுக்குள் ஊறிப்பரவி நிறையும் வல்லமைகொண்டது. நாகங்கள் நூறென்றால் பாம்புகள் பல்லாயிரமெனப் பெருகின. அவை காட்டின் நரம்புகள் என எங்கும் பரவி ஒலிகாத்து உடல் கூர்ந்து கிடந்தன.

நாகங்கள் பாம்புகளை வெறுத்தன. தங்கள் வடிவிலேயே அவையும் உடல்கொண்டிருப்பதனாலேயே அவை தங்களை சிறுமைசெய்வதாக எண்ணின. அவற்றை வேர்களென்றும் தங்களை விழுதுகளென்றும் வகுத்தன. மண்ணுள் இறங்கிய பாம்புகளை விண்ணிலிருந்து இழிந்த நாகங்கள் தேடித்தேடிச்சென்று கொன்றன. தங்கள் கூர்நஞ்சால் கொன்று விழுங்கி உணவாக்கின. நஞ்சாலோ விரைவாலோ உடல்நிறைவாலோ நாகங்களை வெல்லமுடியாத பாம்புகள் கரந்திருத்தலால் காத்திருத்தலால் எதிர்கொண்டன.

நாகங்களைக் கண்டதும் தன் உடலை வளைத்துச் சுருட்டி உயிர்துறக்கச் சித்தமாகும் பாம்பு ‘பெருகுக என் குலம்’ என்று தன்னுள் சொல்லிக்கொண்டது. காடுகள் தோறும் பொந்துகளிலும் புதர்களிலும் சருகுக்குவைகளிலும் பாறையிடுக்குகளிலும் அவற்றின் முட்டைகள் பெருகின. அவை திறந்து புழுக்கூட்டங்கள் போல பாம்புகள் வெளிவந்தன. சினந்து எழுந்து விழி ஒளிர நின்றிருக்கும் ஒவ்வொரு நாகத்தைச் சூழ்ந்தும் ஓராயிரம் பாம்புகள் புதர்களுக்குள் சுருண்டிருந்தன.

“சீறுவதும் சுருளுவதுமென இங்குவந்த பேரன்னையின் சீற்றத்துக்கு வணக்கம். முகமற்ற உடலற்ற நாக்கு மட்டுமேயென இங்கிருக்கும் விண்ணகத்து வஞ்சத்துக்கு வணக்கம். வேரும் விழுதுமென இம்மரத்திலெழுந்த தேடலுக்கு வணக்கம். ஓம்! ஓம்! ஓம்!” என்று முதுமகள் கைகூப்பினாள்.