வெய்யோன் - 44
பகுதி ஐந்து : பன்னிரண்டாவது பகடை – 4
மேற்குக்கோட்டை வாயிலுக்கு அப்பால் இருந்த குறுங்காட்டை அழித்து அங்கே இளைய கௌரவர்களுக்காக கட்டப்பட்டிருந்த புதிய அரண்மனைகள் தொலைவிலேயே புதியசுதையின் வெண்ணிறஒளியில் முகிலிறங்கி படிந்ததுபோல தெரிந்தன. மூன்றுஅடுக்குகள் கொண்ட எட்டு கட்டடங்கள் முப்பட்டை வளைவாக நகர்நோக்கிய உப்பரிகைகளுடன் அமைந்திருந்தன. சுற்றிலும் செங்கற்களாலான கோட்டை கட்டப்பட்டு அதில் சுண்ணச்சாந்து பூசப்பட்டிருந்தது. கோட்டை மேலிருந்தே அந்தத் துணைக்கோட்டையை அடைந்து சுற்றிவந்து மீள்வதற்கான பாதை இருந்தது. மாளிகையின் இருபக்கமும் இரு காவல்கோட்டங்கள் செங்கல்லால் கட்டப்பட்டு கண்காணிப்பு முகடுகளுடன் எழுந்து நின்றன.
மேற்கே காட்டுக்குள்ளிருந்து வந்த பெரிய கால்வாய் இரு கோட்டைகளுக்கும் நடுவே புகுந்து அஸ்தினபுரியின் பழையகோட்டைக்குள் நுழைந்து அங்கிருந்த ஏரியை நிரப்பிக்கொண்டிருந்தது. ஏரி மிகுந்து வழிந்த நீர் ஏழு கல்மதகுகள் வழியாக அருவிகளென சீறிக்கொட்டி நீள்வட்டமாக கல்லடுக்கு கரைகட்டப்பட்டிருந்த குளத்தில் விழுந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மென்மணல் வடிகட்டிகளுக்குச் சென்று தூய்மைபடுத்தப்பட்டு சுட்டகளிமண்ணாலும் மூங்கில்களாலும் ஆன கரவுக்குழாய்களினூடாக நகருக்குள் சென்றது. நகர் முழுக்க இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடிநீர்க்குளங்களுக்குச் சென்று நிரப்பி மிகுந்து வழிந்தோடி கிழக்குக்கோட்டை வாயிலை அடைந்து வெளிச்சென்று அங்கிருந்த குறுங்காட்டுக்குள் சிற்றருவியென கொட்டி பலகிளைகளாக வளைந்து குறுங்காட்டின் குருதி நரம்புகளாக மாறிச்சென்றது.
தேர் மேற்குப்பாதையில் திரும்பியதுமே கர்ணன் தொலைவில் தெரிந்த சுதை மாளிகைகளை நோக்கினான். அங்கு இளையகௌரவர்களுக்கான கொடிகள் பறந்துகொண்டிருந்தன. சிவதர் புன்னகையுடன் “அனைவருக்கும் சேர்த்து பன்றிக்கொடி என்று முடிவெடுத்திருக்கிறார்கள். இளவரசர்கள் என்பதால் ஆளுக்கொரு கொடி தேவை என்பது மரபு. அப்படி அமைக்கப்பட்டால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொடிகளை எப்படி அடையாளம் காண்பதென்று பேசப்பட்டது. சூதனொருவன் இளையகௌரவர்களின் முகங்களையே கொடியடையாளமாக வைக்கலாம் என்றான். அது ஒரு வேடிக்கைப்பாடலாக இங்கே ஒலிக்கிறது” என்றார். கர்ணன் புன்னகைத்தான்.
அரண்மனை வளாகத்தை கடந்துசெல்கையில் அவன் திரும்பி மேற்குமாளிகையை நோக்கினான். வடக்குக்கோட்டத்தின் மேற்குப்பகுதி சாளரங்கள் அனைத்தும் திறந்துகிடந்தன. ஒற்றைச்சாளரத்தில் இளஞ்செந்நிறத்தில் ஆடையசைவு ஒன்று தெரிய, அவன் உள்ளம் அதிர்ந்தது. முன்னால் நகர்ந்து தேர்ப்பாகனைத் தொட்டான். அவன் கடிவாளத்தை இழுத்து தேரைத் தயங்கச்செய்தான். அந்தச் சாளரத்தில் அமர்ந்திருப்பவளின் முகம் தெரியவில்லை. அவன் பாகனிடம் “யாரது?” என்றான். பாகன் “அவர் மகாநிஷாத குலத்து இளவரசி சந்திரகலை. அவர் எப்போதும் அங்குதான் அமர்ந்திருப்பார்” என்றான். “எத்தனை நாளாக?” என்றான் கர்ணன். “இரண்டு ஆண்டுகளாக… அவர் இங்கு வந்த ஓரிரு மாதங்களிலேயே இப்படி ஆகிவிட்டார்.”
“காந்தாரஅரசி சம்படை இருந்த அதே சாளரம்” என்றான் கர்ணன் பெருமூச்சுடன். தேரோட்டியை நோக்கி தலையசைத்து “செல்லலாம்” என்றான். சிவதர் “விதுரரின் அன்னை அதோ அந்தச் சாளரத்தில் அமர்ந்திருந்ததாகவும் அவர் மறைந்தபின்னரும் அவரை பலர் பார்ப்பதுண்டு என்றும் சொல்கிறார்கள்” என்றார். கர்ணன் விதுரரின் மாளிகையில் மேற்குநோக்கி திறந்திருந்த அச்சாளரத்தை பார்த்தான். அது உள்ளிருந்து மூடப்பட்டு வெளியே புழுதி படிந்திருந்தது. சிவதர் “அதை திறப்பதே இல்லை” என்றார். கர்ணன் “அவர் பெயர் சிவை” என்றான். “நீங்கள் பார்த்ததுண்டா?” என்றார் சிவதர். “இல்லை, சம்படையன்னையை பார்த்திருக்கிறேன்.”
தேர் செல்லும் ஒலி சற்றுநேரம் நீடித்தது. “சிவதரே, இங்கு மேற்குநோக்கிய சாளரத்தருகே அமர்ந்து இறந்த இன்னொரு அரசியை தெரியுமா? சிவைக்கு அவர்தான் முன்னோடி” என்றான். “சிபிநாட்டு அரசி சுனந்தை. முதியவயதில் மூன்று மைந்தரை பெற்று குருதிவடிந்து இறந்தார். சந்தனு மாமன்னர் அவரது மைந்தர்தான். அவருடைய விசும்பல் ஒலி அரண்மனையின் மகளிர் மாளிகையில் இன்றும் கேட்பதாக சொல்கிறார்கள். அவரை ஒருமுறை நேரில் கண்ட அரசியர் அவரைப்போல ஆகிவிடுகிறார்களாம்.”
சிவதர் “ஆம், அரண்மனைகள் அனைத்திலும் அத்தகைய அழியாநெடுமூச்சுக்கள் எஞ்சியிருக்கும்” என்றார். ”சந்தனு மாமன்னரின் இளையமனைவி மாளவத்தைச் சேர்ந்த காந்திமதி. அவர் இச்சாளரங்களில் ஒன்றில் அமர்ந்திருந்தார். அவருக்குப்பின் சிவை” என்றான் கர்ணன். தேரோட்டியிடம் “இந்த இளவரசி எவரது மனைவி?” என்றான். அவன் “இவர் நாற்பத்தெட்டாவது இளவரசரான குந்ததாரரின் துணைவி…” என்றான். “மகாநிஷாதகுலத்து இளவரசியர் பன்னிருவர். அவர்கள் கவரப்பட்டபின் போதிய திறையளித்து கொண்டுவரப்பட்டவர்கள். பூஜ்யை, ஸுரை, விமலை, நிர்மலை, நவ்யை, விஸ்வகை, பாரதி, பாக்யை, பாமினி, ஜடிலை, சந்திரிகை, சந்திரகலை என்று அவர்களுக்குப் பெயர்” என்றான்.
கர்ணன் “இவள் இளையவன் சுஜாதனுக்காக கவர்ந்து வரப்பட்டவள் என எண்ணினேன். அவளைத்தான் வேறு எவரோ மணந்தான்” என்றான். தேரோட்டி உளஎழுச்சி கொண்டு “இல்லை அரசே, அவர் மல்லநாட்டு அரசி தேவப்பிரபை” என்றான். அவன் குலக்கதைகளை நினைவுகொண்டு சொல்வதனூடாக தன்னை நிறுவிக்கொள்பவன் என தெரிந்தது. “மல்லநாட்டிலிருந்து அவரை கவர்ந்து வருகையில் சுஜாதர் மிக இளையவர். அவருக்கு மணமுடிப்பதற்கான நாளும்கோளும் துலங்கவில்லை. ஆகவே அவரை வைசியஇளவரசர் யுயுத்ஸு மணந்தார். அவ்விளவரசிதான் அரண்மனையின் ஏழாவது உப்பரிகையிலிருந்து குதித்தவர்” என்றான்.
கர்ணன் திரும்பி நோக்க அவன் கைதூக்கி “உயிர்பிழைத்தார். ஆனால் அவரது இரு கால்களும் ஒடிந்தன. நெடுநாட்கள் மருத்துநிலையில் கிடந்தார். இப்போதும் அவரால் நடக்கமுடியாது” என்றான். சிவதர் அறியாமல் “ஏன்?” என்று கேட்டதுமே பிழையை உணர்ந்தார். தேரோட்டி உரக்க “ஏன் என்றா வினவுகிறீர்கள்? ஏன் என்று தெரியாத எவருளர்? மச்சர்குலமென்றாலும் அவர் அரசி. வைசியமகனுக்கு மனைவியாவதை அவர் எப்படி ஏற்கமுடியும்?” என்றான். கர்ணன் மாளிகைச்சாளரத்தை நோக்கிய விழிகளை விலக்காமல் வந்தான். சிவதர் அப்பேச்சை எப்படி விலக்குவதென அறியாமல் தவித்தார். தேரோட்டியின் முதுகுதான் அவர் முன் இருந்தது. சாட்டையால் புரவிகளை மெல்லத் தட்டியபடி அவன் மேலும் உரத்தகுரலில் சொன்னான்.
“வைசியஇளவரசர் யுயுத்ஸுவுக்கு சுவர்மர் என்று பேரரசர் இட்ட பெயரும் உண்டு. அதைக்கேட்டு அவரை ஷத்ரியர் என எண்ணிவிட்டார் இளவரசி. மாலையிட்டு மங்கலநாணையும் அணிந்தார். முதல்நாளிரவு மஞ்சம் அணைகையில்தான் அரண்மனைப்பெண்கள் உண்மையை சொல்லியிருக்கிறார்கள். அதையும் சூதர்கதைகளில் கேட்கலாம். சேடி ஒருத்தியிடம் செம்பஞ்சுக்குழம்பு கொண்டுவரும்படி தேவப்பிரபாதேவி ஆணையிட்டார். அவள் இளிவரலுடன் முகம் கோட்டி ‘நீ என்ன அரசியா? நீயும் என்னைப்போல் வைசியன்மனைவிதானே? நீயே சென்று எடுத்துக்கொள்’ என்றாள்.
தேவப்பிரபாதேவி வெகுண்டு அவளை ஓங்கி அறைந்தார். ‘என்ன சொன்னாய் இழிமகளே?’ என்று மேலும் அறையப்போக அருகே நின்றிருந்த அவர் மூத்தவளாகிய மச்சநாட்டரசி தேவமித்ரை சிரித்தபடி ‘அவள் சொல்வது உண்மை. ஐயமிருந்தால் சென்று முதல் அரசியிடம் கேளடி’ என்று சொன்னார். உடன்பிறந்தவர்களாகிய தேவகாந்தியும், தேவமாயையும், தேவகியும் நகைத்தார்கள். தேவகாந்தி ‘ஐவரில் நீயே அழகி என எண்ணியிருந்தாய் அல்லவா? ஆணவத்துடன்தான் தெய்வங்கள் விளையாடுகின்றன’ என்றார்.
தேவப்பிரபாதேவி எழுந்து ஓடிச்சென்று மூத்த அரசியாகிய பானுமதியிடம் ‘உண்மையை சொல்க அரசி! இளவரசரின் உண்மைப்பெயர் என்ன?’ என்று கேட்டார். ‘இதையறியாமலா மங்கலநாண் பூட்டிக்கொண்டாய்? அவருக்கு சுவர்மர் என்பது படைக்கோள்பெயர். குலக்கோள்பெயர் யுயுத்ஸு’ என்றார் அரசி பானுமதி. தேவப்பிரபாதேவி உடல்நடுங்கியபடி ‘அவர் எவரது மைந்தர்?’ என்றார். ‘பேரரசரின் மைந்தர். இல்லையேல் நீ எப்படி இங்கு அரண்மனையில் இருக்கிறாய்?’ என்றார் அரசி. அழுகையில் உடைந்த குரலில் ‘அவரது அன்னை யார்?’ என்று தேவப்பிரபை கேட்டார்.
‘அதை இன்னும் நீ அறியவில்லையா?’ என்றபின் புன்னகையுடன் ‘அவர் பேரரசர் திருதராஷ்டிரருக்கும் அவரது வைசியர்குலத்து இசைத்தோழி பிரகதிக்கும் பிறந்தவர்’ என்றார் காசிநாட்டரசி பானுமதிதேவி. ஒருகணம் நெஞ்சைப்பற்றிக்கொண்டு அசைவற்று நின்றிருந்த தேவப்பிரபாதேவி அம்புபட்ட மான்போல கூவியபடி துள்ளி ஓடி சாளரம் வழியாக வெளியே குதித்துவிட்டார்.
கீழே அப்போதுதான் ஒரு மூங்கில்பல்லக்கு கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருந்தது. அதன் வளைவுக்கூரைமேல் விழுந்தமையால் உயிர்பிழைத்தார்… ஆனால் உடல் மூங்கிலால் துளைக்கப்பட்டுவிட்டது. கால் எலும்புகள் ஒடிந்தன” என்றான் தேரோட்டி. “மருத்துவர் எருமைத்தெய்வத்திடம் போராடி அவரை மீட்டனர். ஆனால் அவரால் கையூன்றியே நடக்கமுடியும்.”
கர்ணன் முகத்தில் உணர்வுகளேதும் தெரியவில்லை. மாளிகைகள் மிதந்து பின்னால் சென்றன. சிவதர் பேச்சை மாற்றும்பொருட்டு ஏதேனும் சொல்லவிரும்பினார். ஆனால் முற்றிலும் புதிய ஒன்றை தொடங்குவது மேலும் பிழையென்றாகும் என எண்ணி “நான் பலநாட்கள் அந்தியில் இங்கு நின்று நிஷாதஅரசியை நோக்கியிருக்கிறேன்” என்றார். “அவர் வெளியுலகை நோக்கி அமர்ந்திருப்பதாக தோன்றும். ஆனால் உயிர்வெளியாக அவர் புறத்தை நோக்கவில்லை. மாபெரும் ஓவியத்திரையாக நோக்கிக்கொண்டிருக்கிறார். திரைச்சித்திரங்களுக்கு திரும்பி அவரைப் பார்க்கும் உரிமை இல்லை என்று எண்ணிக்கொண்டேன்.”
“காந்தார அரசி சம்படையின் மைந்தன்தான் குண்டாசி” என்றான் கர்ணன். சிவதர் அவன் குரல் இயல்பாக இருந்ததனால் ஆறுதல்கொண்டு “ஆம், அதை நான் கேட்டிருக்கிறேன்” என்றார். கர்ணன் “குண்டாசியை நீங்கள் சந்தித்ததுண்டா சிவதரே?” என்றான். “மும்முறை பார்த்திருக்கிறேன்” என்றார் சிவதர். “இம்முறை நான் இன்னும் அவரை பார்க்கவில்லை. மதுவுக்கு அடிமை என்றார்கள்” என்றார். கர்ணன் “இளமையில் மண்வந்த தேவமைந்தன்போல் இருப்பான். பெரும்பாலும் அழகும் அறிவும் நற்குணமும் கொண்டவர்களே மதுவுக்கு அடிமையாகிறார்கள்…” என்றான். சிவதர் “மென்பளிங்குக்கல்லை கட்டடமூலையில் வைத்தால் அது எடை தாளாது சிதையும். அது நுண்ணிய சிற்பங்களுக்குரியது” என்றார்.
கர்ணன் பெருமூச்சுடன் “எப்போதும் என்னிடம் ஏதோ ஒன்றை சொல்வதற்கு எழுவதுபோலிருப்பான். மிகக்கூரிய சொற்களை சொல்லத்தெரிந்த ஒரே கௌரவன் அவன். ஆனால் இன்னும் அவன் என்னிடம் என்ன சொல்லவிரும்புகிறான் என்பதை சொன்னதில்லை” என்றான். தேரோட்டி “குடித்தே அழிகிறார். அரண்மனை அறையில் பூட்டிவைத்தார்கள். தெற்கிலிருந்து வந்த மருத்துவர்கள் பலமுறை அவரை நேர்படுத்தியிருக்கிறார்கள். சிலநாட்கள் சீராக இருப்பார். குளித்து நெற்றிக்குறி அணிந்து புத்தாடையும் அணிகளுமாக கோயில்களுக்கு செல்வார். மீண்டும் கால்களில் காற்று ஆட சந்தைகளில் பார்க்கமுடியும்” என்றான்.
அவர்களின் தேர் ஏரியை அணுகியபோது ஏரியின் மதகுகளிலிருந்து பொழிந்த சிற்றருவிகளின் ஓசை எழுந்து காற்றிலேறிச் சுழன்றது. அப்பொழிவுகள் உருவாக்கிய துமிப்புகை முன்காலை ஒளியில் சிறுமழைவிற்களை சூடியிருந்தது. நீராவி வந்து காதுகளை மூடி மழை வரப்போகிறது என்ற எண்ணத்தை உருவாக்கியது. தேர் சற்று மேடேறிச் செல்ல இடப்பக்கம் சிற்றருவிகளின் வெள்ளிவளைவுகள் தெரிந்தன. ஏரிப்பரப்பின் அலைவெளிச்சம் முகத்தின்மேல் பொழிந்து கண்களை கூசச்செய்தது. தேரைச்சூழ்ந்த ஒளியலைகளால் நீருக்குள் மூழ்கிச் செல்வதுபோல் தோன்றியது. ஏரிக்கரையின்மேல் அமைந்திருந்த அகன்ற கற்பாதையில் மிதந்து செல்வதைபோல் ஒழுகிய தேர் அங்கு அமைக்கப்பட்டிருந்த முற்றத்தை அடைந்து வளைந்து நின்றது.
முன்னரே அங்கு ஜயத்ரதனின் தேர் இருப்பதை கர்ணன் கண்டிருந்தான். சிவதர் “சிந்துநாட்டரசரின் தேரிலேயே இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசரும் வந்திருக்கிறார்” என்றார். கர்ணன் அப்போதுதான் அதை உணர்ந்து “ஆம்” என்றான். அவர்கள் இறங்கி நின்றதும் அங்கு நின்றிருந்த பிரமோதர் வந்து தலைவணங்கி “சிந்துநாட்டரசரும் பீமசேனரும் அங்கே நீர்விளையாடுகிறார்கள்” என்றார். கர்ணன் புன்னகைத்து “மறுகரையிலா?” என்றான். “ஆம், அங்கே சற்று ஆழம்குறைவு. இங்கு மதகுகளின் உள்ளிழுப்பும் உண்டு” என்றார் பிரமோதர். “கௌரவ இளவரசர்களும் அவர்களின் இளமைந்தர்களும் நீரில் இறங்கியிருக்கிறார்கள். மேற்குக் கரையின் ஏரிநீரே கலங்கி வண்ணம் மாறிவிட்டது.”
“நடந்துதான் செல்ல வேண்டுமா?” என்றான் கர்ணன். “இல்லை. புரவிகளில் செல்லலாம். தேர்கள் இதன்மேல் செல்வது ஏற்கப்பட்டதல்ல” என்றார். “நடந்தே செல்கிறேன்” என்ற கர்ணன் திரும்பி சிவதரை பார்த்தபின் ஏரியின் கரைப்பாதையில் நடந்தான். பிரமோதர் “நான் உடன் வரவேண்டுமா?” என்றார். “தேவையில்லை” என்றான் கர்ணன். “ஏனென்றால் ஒருவேளை அரசரே நீர்விளையாட்டுக்கு வரக்கூடும் என்றார்கள். அவரை எதிர்கொள்ள நான் இங்கு நிற்கவேண்டியுள்ளது” என்றார். கர்ணன் புன்னகைத்துவிட்டு சிவதருடன் நடந்தான்.
அவனுடன் நடந்த சிவதர் “அரசரே வந்தாலும் நான் வியப்புறமாட்டேன்” என்றார். “வரவில்லையென்றாலும் அவர் உள்ளம் இவர்களுடன் இங்கு நீர் விளையாடிக்கொண்டிருக்கும். என்றும் அவர் உள்ளூர விழைவது அதைத்தான்” என்றான் கர்ணன். “பீமசேனரின் தோள்களைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். அவை துரியோதனரின் தோள்களேதான்.” கர்ணன் அப்பேச்சை தவிர்க்க விழைந்து “ஆம்” என்றான். “காலையில் பீமசேனர் களம்சென்று பேரரசரிடம் தோள்கோத்து விளையாடியிருக்கிறார்.” கர்ணன் “வென்றாரா?” என்று கேட்டான். “இல்லை, மூன்றுமுறையும் பேரரசரே வென்றார். அவரை எவராலும் வெல்லமுடியாது.”
கர்ணன் “ஆம், அவை மானுடரின் தோள்களே அல்ல” என்றான். சிவதர் “அதன்பின் துரியோதனரும் பீமசேனரும் கதைகோத்தனராம். இருமுறை அவரும் இருமுறை இவரும் வென்றிருக்கிறார்கள்” என்றார். கர்ணன் “அவர்கள் நிகரானவர்கள்” என்றான். “எவர் வெல்லவேண்டுமென்பதை ஆட்டங்களின் தெய்வங்கள் பகடையுருட்டி முடிவுசெய்கின்றன.” சிவதர் ஏதோ சொல்லவந்தபின் வாயை மூடிக்கொண்டார். “என்ன எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்றான் கர்ணன். “இல்லை” என்றார் சிவதர். “சொல்லுங்கள்” என்றான் கர்ணன்.
“என் எண்ணங்கள் ஏன் இவ்விதம் செல்கின்றன என்று எண்ணிக் கொண்டிருந்தேன்” என்றார் சிவதர். “எவ்விதம்?” என்றான் கர்ணன். “அதை சொல்லென ஆக்குவது சேற்றில் விதைப்பதற்கு நிகர். ஒன்று நூறு என விளைந்து பெருகி என்னிடம் திரும்பி வரும். என் உள்ளேயே இருண்ட களஞ்சியத்திற்குள் மூடி வைத்து விடுகிறேன்” என்றார். கர்ணன் அவரை ஒருமுறை சூழ்ந்து நோக்கியபின் விழிகளை திருப்பி மறுஎல்லை வரை நிறைந்து நீலம் ஒளிர்ந்துகிடந்த ஏரியை நோக்கியபடி நடந்தான்.
ஏரிக்காற்று அவர்களின் ஆடைகளை பறக்கச்செய்தது. கரைவிளிம்பில் அமர்ந்திருந்த நாரைகள் எழுந்து சிறகடித்து வானில் நின்று பின் மறுபக்கம் நோக்கி தங்கள் நிழல்பாவைகளை இழுத்தபடி சிறகசையாது மிதந்துசென்றன. சற்று நேரத்திலேயே நகரம் மூழ்கி பின்னால் சென்றதுபோல் தோன்றியது. ஏரி இடதுபக்கம் விழிதொடும் எல்லை வரை சிற்றலைப்பரப்பென கிடந்தது. மேற்குக்கோட்டையின் கரியகோடு மிகத்தொலைவில் அதன் எல்லையென தெரிந்தது. அதற்கு அப்பால் பச்சைத்தீற்றலென மேற்குக்காட்டின் மரங்களின் உச்சிகள் தெரிந்தன. ஏரிக்கரைச்சாலைக்கு வலப்பக்கம் ஏரியிலிருந்து நகருக்குள் செல்லும் பன்னிரண்டு பெரிய குழாய்கள் இறங்கி மண்ணுக்குள் புகுந்து மறைந்தன. அவற்றுக்குள் நீர் ஓடும் ஓசை மெல்லிய அதிர்வென ஏரிக்கரையில் பரவி கர்ணனின் இரு கால்களை அடைந்தது.
“நான் இங்கு அடிக்கடி வந்ததில்லை. இத்தனை பெரிய நீர்ப்பரப்பு இங்குள்ளது என்றெனக்கு தெரியும். அது அளிக்கும் விடுதலையையும் பலமுறை அறிந்திருக்கிறேன். ஆயினும் இங்கு வரத்தோன்றியதில்லை” என்றான் கர்ணன். “நீராடிச் செல்கையில் மறுநாளும் வரவேண்டுமென்று எண்ணாதவர் இல்லை. ஆனால் வருபவர் சிலரே” என்ற சிவதர் “நான் ஏரியில் நீராடுவதே இல்லை. அசைவற்ற நீரில் நீந்துவது என் கைகள் அறியாதது. கங்கைக்கரையில் பிறந்தவன்” என்றார். கர்ணன் திரும்பி நோக்கி “நகரமென இங்குளது மாபெரும் பகடைக்களம். எப்போதும் ஒரு காய் நம்மை நோக்கி நகர்த்தப்பட்ட பிறகே அந்தியுறங்கச் செல்கிறோம். நமது காயை நகர்த்தாமல் மறுநாளை தொடங்க நம்மால் முடியாது” என்றான்.
ஏரிக்கரையிலிருந்து நீர்ப்பரப்பை நோக்கி இறங்கிச்சென்ற செங்கல்லால் ஆன படிகளில் காலடியோசை கேட்க, கர்ணன் திரும்புவதற்குள் குண்டாசி தடதடவென ஒலியெழுப்பியபடி மேலேறி வந்தான். முன்னோக்கி விழுபவன்போல உடலை வளைத்தபடி வந்து மூச்சிரைக்க “அங்க நாட்டரசரை வணங்குகிறேன்” என்று அவன் சொன்னபோது கள்மயக்கிலிருக்கிறானா இல்லையா என்று அறிய முடியவில்லை. அவன் புத்தாடை அணிந்து நகைகள் போட்டிருந்தான். தலையில் புதிய தலைப்பாகை இருந்தது.
“வா இளையோனே! உன்னைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். பீமபலனிடம் கேட்டபோது நீ பெரும்பாலும் அரண்மனையிலேயே இருப்பதாகவும் இப்போது நூலாய்வில் மூழ்கியிருப்பதாகவும் சொன்னான்” என்றான் கர்ணன். குண்டாசி காற்றுபீரிடும் ஒலியில் நகைத்து “ஆம், நான் வெளியே வரும்போது என்னைப்பற்றி அப்படி பலரும் சொல்வதை கேட்கிறேன். அதிலிருந்து நான் செய்து கொண்டிருப்பது நூலாய்வு என்று தெரிந்து கொள்கிறேன்” என்றபடி அருகே வந்தான். அவனிடமிருந்த மெல்லிய நடுக்கமும், கழுத்துத் தசைகள் இறுகி இறுகி நெளிந்ததும், உதடுகளின் இருபக்கத்திலிருந்த சிறு கோணலும் அவனிடம் கள்மயக்கிருப்பதை காட்டின. கர்ணன் “பகலிலேயே…” என்றான்.
சிரித்தபடி “காலையிலேயே…” என்றான் குண்டாசி. “துயிலெழுகையில் ஒரு மொந்தை நிறைய கடும்மதுவை குடிக்காமல் என்னால் என்னை உணரமுடியாது மூத்தவரே. இதுவரை பன்னிரண்டு முறை மதுவை கைவிட்டிருக்கிறேன். ஒவ்வொருமுறையும் மேலும் ஊக்கத்துடன் திரும்பி வந்திருக்கிறேன். இன்றுகாலையும் அப்படி திரும்பிவந்தேன்.” அவன் “ஆகவேதான் இந்தப்புத்தாடைகள்… எப்படி உள்ளன?” என்றான். “நன்று” என்றான் கர்ணன். “நான் இளவரசனைப்போல் இருப்பதாக சொன்னார்கள்… நான் இளவரசனைப்போல பேசவேண்டும் என முயல்கிறேன்.”
அவன் கையை நீட்டி விரலால் சுட்டி ஏதோ சொல்லவந்து அது பிடிகிடைக்காமல் கைவிட்டு “ஆனால் ஒன்று… இப்போது மது என்னை உளறச்செய்வதில்லை. அல்லது மது அருந்தாதபோதும் நான் மது அருந்தியவனாக பேசத்தொடங்கியிருக்கிறேன்” என்றான். “நன்று” என்றபின் கர்ணன் திரும்ப, அவன் கர்ணன் கையை தொட்டு “மூத்தவரே, அங்கு நீர்விளையாட்டு நிகழ்கிறது. இங்கிருந்து அதை பார்த்துக் கொண்டிருந்தேன்” என்றான். கர்ணன் “நீயும் இறங்கி நீந்தியிருக்கலாமே?” என்றான். அவ்வார்த்தைக்கு பொருளில்லை என அவன் அறிந்திருந்தாலும் அப்போது இயல்பாக கேட்கவேண்டியது அதுவே என்று தோன்றியது.
“நீங்கள் நினைப்பதுபோல் அல்ல மூத்தவரே. என்னால் நீந்த முடியும்” என்றான் குண்டாசி. “ஆனால் இங்கிருந்து அதை பார்த்துக்கொண்டிருக்கவே விரும்புகிறேன். விந்தையான ஒரு நிகழ்வு அது…” அவன் தன் தலையை கையால் தட்டி “பித்தெழுந்து சித்தம் பிறழ்ந்த கவிஞன் ஒருவனின் நாடகத்தை களிமயக்கில் கூத்தன் நடிப்பது போல” என்றான். சிரித்து “சரியாகச் சொல்லிவிட்டேன் அல்லவா? என்ன அருமையான சொல்லாட்சி! சிறந்த ஒப்புமை” என்றான். புருவம் சுளித்து “எது?” என்றான் கர்ணன். “இவ்விளையோரும் அவரும் நீராடுவது” என்றான் குண்டாசி.
கர்ணன் அவனை புரியாமல் நோக்கிக்கொண்டிருந்தான். குண்டாசி “அவரது கைகளால் மட்டுமே தூக்கப்படக்கூடிய பெருங்கதாயுதம் ஒன்று இங்குள்ளது அறிவீர்களா?” என்றான். “இங்கா?” என்று கேட்டான் கர்ணன். “ஆம், முன்பு புராணகங்கையில் அது கிடைத்தது. இங்கிருந்த பெருங்களிறான உபாலன் இறந்தபோது அதை எரியூட்ட புராணகங்கையில் குழிதோண்டினர். அப்போது அது தட்டுபட்டது. முதலில் ஏதோ மாளிகைமுகட்டின் மாடக்கலம் என்றே எண்ணினர். முழுமையாக எடுத்தபின்னரே அது கதைப்படை என தெரிந்தது.” கர்ணன் அவனை வெறுமனே நோக்கினான்
“மூத்தவர் பிறப்பதற்கு முந்தையநாள் அது நிகழ்ந்தது என்கிறார்கள்” என்றான் குண்டாசி. “மூத்தவரின் பிறப்புக்குமுன் எழுந்த தீக்குறிகளில் ஒன்றென உபாலனின் இறப்பை சொல்வதுண்டு நிமித்திகர். அந்த கதையை தூக்கும் வல்லமைகொண்ட ஒருவனே மூத்தவரைக் கொல்லமுடியும் என்று பின்னர் சூதர் பாடத்தொடங்கினர்.” வாயை சப்புக்கொட்டி உதடுகளின் பொருத்தில் நுரையென இருந்த எச்சிலை மேலாடையால் துடைத்தபடி “ஆகவே அவர் வெல்லற்கரியவர் என்று முடிவுசெய்துவிட்டனர். ஏனென்றால் பொதுவான கதைப்படைகளைவிட அது பதினெட்டு மடங்கு பெரியது. மானுடர் எவரும் அதை அசைக்கக்கூட முடியாது.”
“ஆம், பார்த்திருக்கிறேன்” என்றான் கர்ணன். குண்டாசி “ராகவராமனின் அணுக்கராகிய அனுமனின் கையிலிருந்த கதை அது என்கிறார்கள். இந்நகரின் முகப்பில் அதை நிறுவி அதற்கு ஐவேளை பூசைகள் செய்கிறார்கள். பெருந்தெய்வமென அது எழுந்தருளியிருக்கிறது. எதற்கு தெரியுமா?” என்றவன் குரல் தாழ்ந்தது. இருகண்களும் அகன்றன. கருவிழிகள் மேலும் அகல உள்ளே கருந்துளைகள் திறந்தன. “ஏன் தெரியுமா?” கர்ணன் “சொல்” என்றபடி பொறுமையற்ற உடலசைவுடன் திரும்பி சிவதரை பார்த்தான். அவர் கண்முன் விரிந்த ஏரியை நோக்கி சுருங்கிய கண்களுடன் நின்றிருந்தார்.
“அது அனுமனின் கதை அல்ல மூத்தவரே. நாம் நின்றிருக்கும் இந்த அஸ்தினபுரி நம் மூதாதை ஹஸ்தியால் உருவாக்கப்பட்டதல்ல. இதை உருவாக்கியதால்தான் அவர் ஹஸ்தி என்று அழைக்கப்பட்டார். இதை இங்கு அவர் ஏன் உருவாக்கினார்? இங்கு ஆறுகளில்லை. மலைகளின் பாதுகாப்புமில்லை. இங்கு ஏன் ஒரு நகரை உருவாக்கினார் என்றால்…” அவன் கைகளைத்தூக்கி “இங்கு ஏற்கனவே ஒரு அஸ்தினபுரி இருந்தது. அந்த அஸ்தினபுரியின் எஞ்சிய இடிபாடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட நகரம் இது” என்றான். மேலும் அணுகி ஆழ்ந்த குரலில் “அந்த அஸ்தினபுரிநகரம் அதற்கு முன் இங்கிருந்த இன்னொரு அஸ்தினபுரியின் சிதைவுகளால் உருவாக்கப்பட்டது” என்றான்.
கர்ணன் மீசையை நீவியபடி ஏரியின் ஒளி அலையடித்த முகத்துடன் நோக்கி நின்றான். “மூத்தவரே, மண்ணுக்கடியில் பல அஸ்தினபுரிகள் இருக்கின்றன. மிக ஆழத்தில் இருக்கும் அஸ்தினபுரி நாம் எண்ணிப்பார்க்கவே அஞ்சும் அளவுக்கு பேருருக்கொண்டது. அதில் எஞ்சிய ஒரு துளியே அடுத்த அஸ்தினபுரி. அதன் துளியே அடுத்தது. நாமிருக்கும் இந்த இறுதியான அஸ்தினபுரி இலைநுனியில் துளித்துத் தொங்கி ஆடி நிலையற்றிருக்கும் ஒரு சிறுதுளி. அதன் நீர்மையிலாடும் துளிநிழல்கள் நாம்.”
“நல்ல கற்பனை” என்றபின் கர்ணன் திரும்பினான். அவன் தோளைப்பற்றி “உங்களுக்கு விருப்பிருந்தால் சென்று அந்த கதைப்படையைப் பாருங்கள். எளிய படைக்கலம் அல்ல அது. அது ஏதோ ஒரு பெருஞ்சிலையின் கையில் இருந்தது. ஆனால் எந்தச் சிலை?” என்றான் குண்டாசி. “முற்காலத்தில் எங்காவது மாபெரும் அனுமன் சிலை ஒன்றை அமைத்திருக்கலாம்” என்றார் சிவதர். “அணுக்கரே, ராகவராமனும் அனுமனும் வாழ்ந்த காலம் நமது முனிவர்களின் சுவடிகள் எட்டும் தொலைவில்தான். இப்படி ஒரு பெருஞ்சிலையோ அதன் கையில் ஒரு பெருங்கதையோ அமைத்ததாக எந்தச் சிற்பநூலும் சொல்லவில்லை. எந்த முனிவரின் காவியமும் சொல்லவில்லை. நான் அதைத்தான் நூல்களில் மாதங்களாக அமர்ந்து ஆய்வுசெய்தேன்.”
“அப்படி இருந்தால்கூட அது எங்ஙனம் இங்கு வந்தது? புராணகங்கையின் நீரில் வந்தது என்கிறார்கள். புராணகங்கை இத்தனை பெரிய உலோகப் பொருளை உருட்டி வருமா என்ன?” என்றான் குண்டாசி. “என்ன சொல்லவருகிறாய்?” என்றான் கர்ணன். “மூத்தவரே, இங்கு ஒரு மாபெரும் சிலை இருந்தது. அந்தச் சிலையின் கையில் இருந்த கதை அது. கதை மட்டுமே நமக்கு கிடைத்திருக்கிறது. அந்த மாபெரும் சிலை இந்த மண்ணுக்குள்தான் இருக்கிறது. மண்ணுக்குள் புதைந்து அது புன்னகைத்துக் கொண்டிருக்கிறது” குண்டாசி சொன்னான். அவனது ஒருகண் அதிர்ந்தது.
“ஏன்?” என்றான் கர்ணன். “ஏனென்றால் அது பலிகொள்ளப்போகிறது… நூற்றுக்கணக்கான பலிகள். ஆயிரக்கணக்கான பலிகள். உடைந்து சிதறும் மண்டைகள். நீர்த்துளிகள் தெறிப்பதுபோல ஒவ்வொரு மண்டையும் சிதறும். மானுடத்தலை என்பது உடல்மிகுந்த குருதி கொதித்து நுரைத்து நிறைந்த ஒரு பானை அன்றி வேறேதுமில்லை. சிதறப்போகிறது செங்குருதி! வெண்மூளையுடன் சேர்ந்து நிணம் ஊறிப்பரவி கால்வழுக்கும் குருதி. ஆம், அதை நான் அறிவேன். அதைத்தான் இங்கிருந்து நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்” குண்டாசி நடுங்கும் குரலில் சொன்னான்.
“இதோ இந்த ஏரி… நீங்கள் இதை நீல நிறமாக பார்க்கிறீர்கள். நான் அதை சிவந்த நிறமாக பார்க்கிறேன். இது ஒரு ஏரியல்ல மூத்தவரே, இது ஒரு குருதிப்பெருக்கு. மூதாதையர் மேலே விண்ணுலகிலிருந்து பதைபதைத்து கீழ் நோக்குவதை பார்க்கிறேன். அவர்கள் என்னிடம் சொல்கிறார்கள் மூடா, குடித்துக் குடித்து உன் உடல் கெட்டுவிட்டது. உன் உயிர் படுதிரியென எரிகிறது. நீ இருப்பதே இந்த எச்சரிக்கையை அவர்களுக்கு கொடுப்பதற்காகத்தான், சென்று சொல் என்று!”
மீசையை ஒதுக்கிவிட்டு மறுகரையை நோக்கியபடி “சென்று சொல்லவேண்டியதுதானே?” என்றான் கர்ணன். “சொன்னேன். என்னை துச்சலர் ஓங்கி அறைந்து பிடித்துத் தள்ளினார். நான் அழுதபடி இங்கு வந்து அமர்ந்தேன். மூத்தவரே, நீங்கள் சொன்னால் கேட்பார்கள். சென்று சொல்லுங்கள்!” என்றான். “என்ன சொல்லவேண்டும்?” “இந்த ஏரியில் நீராடவேண்டாம். இது குருதி என்று சொல்லுங்கள். இவர்கள் அத்தனை பேர் தலையையும் உடைக்கப்போகும் கதைப்படை இங்கு உள்ளது என்று சொல்லுங்கள். அந்த கதையை எடுக்கப்போகிறவன் யார் தெரியுமா?”
“யார்?” என்றான் கர்ணன். “பீமன் அவன் பேர்… பீமன் என்றால் என்ன பொருள்?” சிவதர் “பெரியவன் என்று” என்றார். “ஆம், பெரியவன். நம்மனைவரைவிட பெரியவன். இன்னும் சில நாட்களில் அவன் உடலில் கொலைத்தெய்வங்கள் குடியேறும்” என்றான் குண்டாசி. “அத்தனை தெய்வங்களுக்கும் கருவறைகள் அமைந்த பேராலயம் என அவனுடல் மாறும். நம் தலைக்குமேல் கிளைவிரித்து விழுதுபரப்பி நிற்கும் ஆலமரமென அவன் எழுவான். அவன் கையில் அந்த கதை கொல்படையாகும். அதைச் சுழற்றி நம்மை அறைந்து சிதறடிப்பான். நமது தலைகள் பல்லிமுட்டைகள் என சிதறும். மூளையும் கொழுப்பும் நிணமும் கலந்து அவை தெறிப்பதை என்னால் பார்க்க முடிகிறது.”
குண்டாசியின் ஒரு கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது. அந்தவிழி அடிபட்டதுபோல துடிதுடித்தது. “வெறும் குருதிக் குமிழிகள் மூத்தவரே. எங்கள் தலைகள் எல்லாம் வெறும் குருதிக்குமிழிகள் அன்றி வேறொன்றுமில்லை. அதை நான் இங்கிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.” உரத்த வெறிக்குரலில் “இதோ தெரிகிறதே, இது என்ன? இது ஏரி என்று நீங்கள் பார்ப்பீர்கள். இது நீரல்ல. இது குருதிப்பெருக்கு… செங்குருதிப்பெருக்கு! இப்பெருக்கில் விழுந்து நீராடுகிறார்கள் மூடர்கள்! நான் சென்று அதை அவர்களிடம் சொன்னேன். துச்சலர் என்னை அடித்துத் துரத்தினார். ஆகவே இங்கு வந்து அமர்ந்திருக்கிறேன்” என்றான்.
அவன் குனிந்து கர்ணனின் கால்களை பற்ற வந்தான். “நீங்கள் சொன்னால் கேட்பார்கள். உங்கள் கால்களைப் பற்றி மன்றாடுகிறேன். சென்று அவர்களிடம் சொல்லுங்கள்!” அடைத்தகுரலில் “என்ன?” என்றான் கர்ணன். “அங்கு நீராடவேண்டாம் என்று சொல்லுங்கள். இக்குருதியில் ஆடவேண்டாம் என்று நான் மன்றாடுவதாக சொல்லுங்கள். அவர்களை கரையேறி எங்கேனும் நின்று கொள்ளச் சொல்லுங்கள். இங்கிருக்கும் அத்தனை கௌரவர்களும் அவர்களின் மைந்தர்களும் இந்நகரை உதறிவிட்டு தப்பி ஓடட்டும்.”
குண்டாசி விசும்பியபடி சொன்னான் “மூத்தவரே, பாரதநிலம் மிகப்பெரியது. அடர்காடுகள் உள்ளன. இவர்கள் அசுரர்கள். இவர்கள் வேட்டையாடி மகிழ்ந்து வாழும் காடுகள் உள்ளன. மீன் பிடித்து உண்ணத்தகுந்த பெருநதிகள் உள்ளன. மலைகள், தாழ்வரைகள், புல்வெளிகள்… மூத்தவரே, முடிவின்றி பெருகிக் கிடக்கிறது பாரதவர்ஷம். இங்கு வேண்டாம்! இந்நகரத்தின் அடியில் குருதிவிடாய் கொண்ட மாபெரும் கொலைத்தேவன் ஒருவன் துயில் கொண்டிருந்தான். இதோ அவன் கண்விழித்துவிட்டான். கொல்கருவியை நோக்கி கைநீட்டிவிட்டான். நான் சொல்வதை அவர்களிடம் சொல்லுங்கள்!”
“சரி” என்றபின் கர்ணன் திரும்பினான். “மூத்தவரே, நில்லுங்கள்! நான் சொல்வதை கேளுங்கள்!” என்றபடி குண்டாசி பின்னால் வந்தான். “செல்! விலகு!” என்றான் கர்ணன். உரக்க “இல்லை மூத்தவரே” என அவன் கைகளை பிடிக்க வந்தான். உரக்க “போதும், விலகு!” என்றான் கர்ணன். “மூத்தவரே…” என்றபடி அவன் பின்னால் வந்தான். கர்ணன் திரும்பிப் போகும்படி கைகாட்ட “சரி” என்றபடி அவன் நின்றுகொண்டான்.