வெய்யோன் - 3

பகுதி ஒன்று : செந்தழல் வளையம் – 3

“செங்கதிர் செல்வ! தீராப்பெருஞ்சினம் கொண்டவர் தன்னையே முனிந்தவர் என்று அறிக!” என்றான் தென்திசைப்பாணன். குருதி விடாய் ஒழியா கூர்மழுவும் இமை தாழா செவ்விழியுமாக பரசுராமர் தென்திசை ஏகினார். “ஆம், அவ்வண்ணமே” என்று கூறி குரல் கொடுத்தபடி அவரைச் சூழ்ந்து பறந்தது கருவண்டு.

கோட்டைகளை உடைத்து அவர் நகர்புகுந்தார். அழுகையொலிகளும் அச்சப்பேரொலிகளும் சூழ தெருக்களில் கூற்றென நடந்தார். அரண்மனைக் கதவுகளை பிளந்தெறிந்தார். மைந்தருடனும் மனைவியருடனும் களித்திருந்த மன்னர்களை வெட்டி அவர்களின் மணிமுடிகளை அள்ளி எடுத்து நாழிகளாக்கி களஞ்சியப்பொன்னை அள்ளி ஐங்குலத்தோருக்கும் அறவோருக்கும் அளித்தார்.

அவர் சென்ற வழியெங்கும் எழுந்த புகையைக் கண்டு அழுகுரலைக் கேட்டு பிணந்தின்னிக் கழுகுகள் தொடர்ந்து வானிலொரு வழி அமைத்துக் கொண்டன. குருதியுண்டு குருதியுண்டு ஒளி கொண்ட கோடரியை அருகே போட்டு தென்திசைப் பெருநதி ஒன்றின் கரையில் அவர் அமர்ந்திருந்தார். அலைஅலையெனச் சென்ற நீர்ப்பெருக்கில் தோன்றிய முதல் பிருகுவின் முகம் கண்ணீருடன் “மைந்தா! ஏன்?” என்றது. திடுக்கிட்டு எழுந்து நின்றபோது நதிப்பெருக்கின் நீர்ப்பரப்பில் எழுந்த பெருமுகம் அழியா விழிகளுடன் அவரை நோக்கியது.

குனிந்து தன் மழுவை எடுத்து போர் வெறிக்கூச்சலுடன் மீண்டும் காட்டுக்குள் புகுந்தார். அவையோரே, எங்கும் அமரமுடியாதவன் செல்லும் வழி மிக நீண்டது. உறங்க முடியாதவன் வாழ்வு பல நூறு மடங்கு நீளம் கொண்டது. பதினெட்டு தலைமுறைகளாக மழுவேந்தி காட்டில் அலைந்தார் பரசுராமர். அனல் தொட்டு அனலான அழியா நீட்சி. அவருடன் எப்போதும் இருந்தது தம்சன் என்னும் கருவண்டு. மாறாத ஒற்றைப்பாடல் கொண்டது. கூர்நச்சுக் கொடுக்கு தீட்டி காத்திருப்பது.

நெருப்பு தேடி வருகின்றன நெருப்பாகும் விழைவு கொண்டவை. நர்மதையின் கரையில் மலைப்பாறை ஒன்றின்மேல் அருகே மழு சாய்த்து படுத்திருந்த பரசுராமரை அணுகி காலடியில் நின்றான் கருமுத்து உடல்கொண்ட இளமைந்தன் ஒருவன். அவன் நிழல் தன்னைத் தொட உணர்ந்து எழுந்து அமர்ந்து “யார் நீ?” என்றார். கைகூப்பி “படைக்கலம் பயில வந்தவன், எளிய வைதிகன்” என்றான். அவனை கூர்ந்து நோக்கி இரு தோள்களையும் தொட்டு ஊசலாடிய விழிகளுடன் “பெருந்தோள் கொண்ட அந்தணனை முதல் முறையாக பார்க்கிறேன்” என்றார்.

3

“நான் படைக்கலம் பயின்றவன். துரோணரிடம் இருந்தவன். அங்கு ஷத்ரியர்களால் அவமதிக்கப்பட்டு துரத்தப்பட்டேன். இழந்த பயிற்சியை முழுமை செய்ய ஆசிரியரைத் தேடி அலைந்தேன். குருஷேத்திரப் பாழ்நிலத்தில் அமைந்த சமந்த பஞ்சகத்தின் கரையில் சூதர்கள் உங்கள் புகழ் பாடக்கேட்டேன். அவர்களின் சொற்களிலேயே வழி கண்டு தொடுத்துக் கொண்டு இங்கு வந்தேன். அருள்க!” என்றான். அவன் விரல்களை நோக்கி “வேள்வி செய்து பழகிய விரல்கள் அல்ல இவை. வேதம் கேட்டு நிறைந்த விழிகளுமல்ல அவை. நான் ஐயுறுகிறேன். செல்!” என்றார்.

“இம்மண் தொட்டு ஆணையிடுகிறேன். நான் பிராமணனே” என்றான். மீண்டும் ஒரு கணம் நோக்கிவிட்டு “மண் அனைத்தையும் தாங்குவது” என்றார் பரசுராமர். “அவ்வண்ணமெனில் என் அன்னையின் பெயர் சொல்லி ஆணையிடுகிறேன்” என்றான். “சொல்! உன் அன்னையின் பெயரென்ன?” என்று பரசுராமர் கேட்டார். “ராதை” என்று அவன் சொன்னான். அவனை இமையாது நோக்கி சிலகணங்கள் அமைந்தபின் நீள் மூச்சில் கலைந்து “என்னுடன் இரு. இன்று மாலைக்குள் நீ என் மாணவனா இல்லையா என்று நான் உரைக்கிறேன்” என்றார். “அவ்வண்ணமே” என்று அவன் அவருடன் இருந்தான்.

மரங்களில் ஏறி நறுங்கனி கொய்து கொண்டு அளித்தான். குடிக்க புது ஊற்று தோண்டி தெளிநீர் கொண்டு வந்தான். முற்றிலும் வகுக்கப்பட்ட செயல்களை உடையவன். ஒன்றில் அமைந்த சித்தம் கொண்டவன். உடலை உளமின்றிச் செயலாற்ற விட்டவன். பயின்று அடங்கிய உளம் கொண்டவன். அவனை நோக்க நோக்க அந்த ஒன்று என்ன என்ற வினாவையே பரசுராமர் அடைந்தார். அவனுடன் ஆற்றங்கரையோரமாக காடு கடந்து பயணம் செய்தார். உச்சிப் பொழுதின் வெயில் மயக்குக்கு மரநிழலில் அமர்ந்த பாறை ஒன்றில் விழிமயங்கினார். அருகே அவன் அசையா கருமரம் என காவல் நின்றான்.

மாலையில் கதிர்வணக்கத்திற்காக உலர் தர்ப்பை கொய்து வரும்படி சொன்னார். அவன் கொண்டு வந்த தர்ப்பையை வாங்கி தோலாடை களைந்து சிற்றாடை அணிந்து அலை வளைந்தமைந்த நீர்ப்படலத்தில் இறங்கி குனிந்து நோக்கி நின்றார். உடல் சிலிர்த்தபின் நீள்மூச்சுடன் காயத்ரியை சொல்லி நீர் இறைத்து வணங்கினார். கையில் அம்பென நாணலை ஏந்தியபடி அவன் காவல் நின்றான். அந்தி பழுத்து உருகி நீர்மேல் பரவிக் கொண்டிருந்தது. இலைகள் தங்கள் நிழல்களில் புதைந்து மறையத்தொடங்கியிருந்தன.

அவர் கரை வந்து அவனை நோக்காது “நீராடி என்னை தொடர்” என்று ஆணையிட்டார். “அவ்வண்ணமே” என்று அவன் சென்று முழங்கால் வரை நீரிலிறங்கி நீரள்ள குனிந்தபோது அவனிலிருந்து அலறல் ஒன்று எழுந்தது. திரும்பி நோக்கிய அவர் அவன் உடல் விதிர்ப்பதை கண்டார். கால் தளர்ந்து விழப்போனவன் நிலைமீண்டு திரும்பி கால்களால் நீரைக் கிழித்தலைத்தபடி கரை நோக்கி ஓடிவந்தான். மணல் சரிவில் ஏறி நின்று திரும்பி நோக்கி உடல் நடுங்கினான்.

அவனுடைய ஆடையிலிருந்து நீர்வழிந்து கரைமணலை கரைத்தது. அவிழ்ந்து தோளில் புரண்ட கரிய சுரிகுழல் உதிர்த்த நீர்மணிகள் முதுகில் வழிந்தன. “என்ன?” என்று அவர் கேட்டார். “குருதி! குருதி!” என்று அவன் நீரை சுட்டிக்காட்டி சொன்னான். சற்றே திறந்த வாயுடன் நீர்த்துளிகள் இழிந்த தாடியுடன் அவர் அவனை நோக்கி நின்றார். பின்பு அவன் கனவிலிருந்து விழித்துக்கொள்வது போல சிறிய உலுக்கலுடன் உடல் மீண்டு “ஒன்றுமில்லை” என்றான்.

தோள்தளர்ந்து கைகள் விலாதொட்டுச் சரிய “நீராடி மீள்க!” என்று சொன்னார். “அவ்வாறே” என்று அவன் சொன்னான். கொதிக்கும் நீரை அணுகுபவன் போல் தயங்கும் காலடிகளுடன் ஆற்றை அணுகி, மெல்ல வலக்கால் கட்டைவிரலால் நீர்நுனி தொட்டு, ஒரு கணம் கண்களை மூடி விதிர்ப்பு கொண்ட உடலை இறுக்கி, தன்னை உளவிசையால் முன் செலுத்தி, நீரிலிறங்கி கண்களை மூடிக்கொண்டு மும்முறை மூழ்கி அவ்வாறே எழுந்து திரும்பி நோக்காமல் கரையேறி கரைமணல் மேல் நின்றான். அவன் கால் பட்ட குழிகளில் நீர் ஊறி அதில் வானச் செம்மை குருதியென படர்ந்தது. இரு கைகளாலும் நீர்வழிந்த குழலை அள்ளி பின்னால் செலுத்தியபின் திரும்பி அவரைப் பார்த்து “செல்வோம்” என்றான்.

தலை அசைத்து அவர் முன் செல ஈர ஆடை ஒலிக்க அவன் பின்னால் வந்தான். காற்றில் அவன் உடைகள் உலர்ந்து ஓசை அவிந்தது. அவனும் உடல் தளர உள்ளம் முறுக்கவிழ எளிதானான். இருள் பரவத்தொடங்கிய அந்தியில் குறுங்காட்டின் புதர்களுக்கு நடுவே அன்றிரவு தங்கும் இடத்தை பரசுராமர் தேர்வு செய்தார். அவன் அங்கு சிறு குடில் ஒன்றை அமைத்தான். காட்டுக்குள் சென்று உலர் மரங்களை ஒடித்துக்கொண்டு வந்து சேர்த்து கற்களை உரசி நெருப்பிட்டு தழலேற்றினான். அதன் வடக்கே அவரும் தெற்கே அவனும் அமர்ந்தனர்.

இருளெனப் பொதிந்த குளிரில் நெருப்பின் இளவெம்மையின் அணைப்பில் இருவரும் உடல் குறுக்கி அமர்ந்திருந்தனர். தென்னகக் காற்றில், செந்நா விரித்தெழுந்த எரி சற்றே சுழன்று வடக்கு நோக்கி தெறித்துப் பறந்தது. பரசுராமர் அவனை நோக்கி “வடவை” என்றார். அவன் “ஆம்” என்றான். “கங்கையின் நீருக்கு அடியில் என் மூதாதையர் செலுத்திய வடவை குடி கொள்கிறது” என்று பரசுராமர் சொன்னார்.

“எந்தை ஊருவர் தன் உள்ளங்கையிலிருந்து கங்கையில் இறக்கிவிட்டது அது. நீரெல்லாம் கங்கையென்பதால் எந்த நீரை நோக்கி நான் கைநீட்டினாலும் இளம் புரவிக் குட்டியென துள்ளி வந்து முன் நிற்கிறது. செஞ்சிறகுப் பறவையென என் உள்ளங்கையில் வந்தமைகிறது. நான் செலுத்தும் அம்பு முனைகளில் குடி கொள்கிறது. என் இலக்குகளை பல்லாயிரம் நாக்குகள் என பெருகி உண்கிறது.”

“ஆம், எரி தீராப் பசி கொண்டது” என்றான். “சொல்! இன்று அந்த ஆற்றில் எதைக் கண்டாய்?” என்றார். “அது ஒரு கனவு” என்று அவன் சொன்னான். “சொல்!” என்றார். “என் சிற்றிளமையில் ஒரு நாள் புலர்காலைக் கனவில் அன்னையின் மடியில் தலைவைத்து நான் படுத்திருந்தேன். அந்த அன்னை எனக்கு முலையூட்டிய பெண் அல்ல. அவள் முகம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவள் முலைப்பாலின் மணத்தை அறிந்திருந்தேன். அவள் உடலின் வெம்மையை, அவள் மூச்சின் தொடுகையை நன்குணர்ந்திருந்தேன். என் குழலை வருடி காதுகளைப் பற்றி இழுத்து தோள்களை நீவி முதுகை உழிந்து சுழலும் அவள் மெல்லிய கைகளை பற்றிக்கொண்டிருந்தேன். மகவு அன்னையின் உடல் உறுப்பென ஆகும் அருங்கணங்களில் ஒன்று அது.”

அப்போது அறிந்தேன், ஒரு காட்டுச் சுனை அருகே இருந்த சிறிய பாறை ஒன்றில் நாங்கள் இருந்தோம். காற்றில் சிற்றலை இளகிய சுனை மெல்ல அமைதி அடைந்தது. இலைகள் சொல் மறந்தன. சுனை காட்டிய நீலப்பேராடியில் அங்கொரு அன்னை மடியில் நான் படுத்திருந்தேன். நான் கண்ட அத்தோற்றத்தை அவளும் கண்டாள். சினம் கொண்ட பெண் புலியென உறுமியபடி என்னை உதறி அவள் எழுந்தாள். இடையில் அணிந்த உடைவாளை உலோகம் சீறும் ஒலியுடன் உருவி கையில் எடுத்தபடி நீரில் பாய்ந்து அங்கே அப்போதும் துயின்று கொண்டிருந்த என் பாவையை ஓங்கி வெட்டினாள்.

அஞ்சி எழுந்து பாறையில் நின்றபடி உடல் பதைக்க கைகளை விரித்து அசைத்து “அன்னையே” என்று நான் கூவினேன். “என்னை கொன்றுவிடாதீர்கள் அன்னையே… என்னை வாழவிடுங்கள்” என்று அழுதேன். என் சொற்கள் அவள் செவியில் விழுந்தாலும் சித்தத்தை தொடவில்லை. சிம்மப்பிடரி ஏறி களம் புகுந்த கொற்றவை போல் வாளை வீசி என் நிழலுருவை நூறு ஆயிரம் பல்லாயிரம் துண்டுகளாக வெட்டிச் சிதைத்தாள். அதிலிருந்து பெருகிய செங்கொழுங்குருதி கொப்புளங்களாக எழுந்து சுனை நீரை கொதிக்கவைத்தது. வேல் முனை பிடுங்கப்பட்ட புண்ணென ஆயிற்று சுனை. குருதியலைகள் மலரிதழ்களென விரிந்தன. குருதிநாவுகள் எழுந்து கரை மணலை நக்கின.

அக்குருதியில் கால்தவறி விழுந்து மீண்டும் எழுந்தாள். அவள் கூந்தலில் கன்னங்களில் தோள்களில் ஆடைகளில் விரல் நுனிகளில் வழிந்து சொட்டியது கொழுங்குருதி. யானை உடல் கிழித்து உள்ளே சென்று இதயத்தைக் கவ்வி மீளும் சிம்மம் போல, கருவறைப்பீடத்தில் குருதிக் கொடையாடி நிற்கும் கொற்றவைக் கருஞ்சிலை போல அவளைக் கண்டேன். அவள் கண்களில் இருந்த பெருங்களியாட்டைக் கண்டு திகைத்து சொல்லிழந்தேன். இரு கைகளாலும் நெஞ்சை மாறி மாறி அறைந்து பிடி யானை போல் பிளிறி காலெடுத்து வைத்து அவள் கரைக்கு வந்தாள்.

குருதியுடன் கொப்பளித்த சுனை மெல்ல செம்பளிங்குப் பரப்பென அமைந்தது. அதில் விரல்கள், தசைத்துண்டுகள், செவிகள், நாவு, மூக்கு, நிணத்தீற்றல்கள், நெளியும் நரம்புப்புழுக்கள், சிரிப்பென வெள்ளெலும்புச் சிதறல் என நான் இருந்தேன். என் விழிகள் மட்டும் இரு நீலமீன்களாக துயருடன் இமைத்தபடி அதில் நீந்தி நின்றிருந்தன.

“அன்னையே! அன்னையே!” என்றழைத்தபடி விம்மி அழுதுகொண்டு கண்விழித்தேன். என் அன்னை அருகில் துயில் எழுந்து “என்னாயிற்று? மைந்தா!” என்றழைத்தபடி என் தோள் தொட்டுத் தழுவி மார்புக்குள் என் தலையை புதைத்துக் கொண்டாள். என் குழலை வருடி “எதற்காக அஞ்சுகிறாய்? என் செல்வமே!” என்றாள். “அன்னையே, என்னை கொன்றுவிட்டீர்களே?” என்று நான் சொன்னேன். “யார்? யார்?” என்று அவள் கேட்டாள். “அன்னையே அன்னையே” என்று காய்ச்சல் படிந்த கண்களுடன் நான் அரற்றினேன்.

தன் மேலாடையை விலக்கி வற்றிய வறுமுலையைத்தூக்கி அதன் வாடிய காம்பை என் வாயில் வைத்து “அருந்து என் அமுதே” என்று அவள் சொன்னாள். என் நீளக்கைகளை கால்களை தோள்களை ஒவ்வொன்றாக உதிர்த்து சிறு மகவாக மாறி அவள் முலையருந்தினேன். அவை மெல்ல கனிந்தன. குருதி மணமுள்ள இனிய பால் சொட்டுகள் என் வாயில் விழுந்தன. வறண்டு அனல் கொண்டிருந்த என் தொண்டையை குளிரச்செய்து அணைத்தன அவை.

அதிர்ந்து கொண்டிருந்த என் உடல் மெல்ல அமையத்தொடங்கியது. என் தோள்களை முதுகை கனிந்த அன்னைப்பசுவின் நாக்கென வருடிய அவள் கைகள் மேலும் மேலும் என்னை சிற்றுருக் கொள்ளச் செய்தன. கருக்குழந்தையாக்கின. தன் இடைவாய் திறந்து உள்ளே செலுத்தி வெங்குருதி குமிழிகளெனச் சூழ்ந்த சிற்றறைக்குள் அழுத்தி வைத்தன. அங்கே உடல் சுருட்டி உளம் கரைந்து மறைய துயின்று ஒடுங்கினேன்.

இளையவன் சொன்னான் “பின்பு அக்கனவு எப்போதும் என்னுடன் இருந்தது. மீண்டும் மீண்டும் அங்கே நான் துண்டுகளாக்கப்பட்டேன். தவித்தலையும் விழிகளுடன் துயில் மீள்வேன். இன்றும் அதுவே நிகழ்ந்தது.” இருள் மூடிய காட்டுக்குள் பறவைகளின் ஒலிகள் கேட்டுக்கொண்டிருந்தன. காற்று இலைகளை அசைத்தபடி கடந்து செல்லும் ஓசை. ஓர் அருவியின் அறைதல். நெடுநேரத்திற்குபின் பரசுராமர் அவ்விளையோன் கைகளை பற்றிக் கொண்டு “என்னுடன் இரு. என் படைக்கலத்திறன் அனைத்தும் உனக்குரியது. குன்றாப் புகழுடன் திகழ். நீ வெல்வாய்” என்றார்.

“ஏழ்புரவி ஏறியோன் மைந்தனே, அனைத்தையும் நெருப்பாக்கி உண்பது நெருப்பின் இயல்பு” என்றான் சூதன். “இளையோன் தன் ஆசிரியருடன் இருந்தான். ஒவ்வொரு கணமும் அவன் அவராகிக் கொண்டிருந்தான். வெங்கதிரோன் வெயில் கற்றையைச் செலுத்துவது போல் அம்புவிடக் கற்றான். அவர் கால் பதிந்து நடந்த அந்நிலம் என தன் உள்ளத்தை ஆக்கி ஒவ்வொரு அடியையும் பதித்துக் கொண்டான். ஆற்றல் முதிர்ந்த ஆசிரியர்கள் பேராற்றல் முதிர்ந்த மாணவர்களைப் பெறுவதென்பது இப்புடவி வளரவேண்டும் என்று விழையும் அப்பிரம்மத்தின் ஆணை.”

முதல்நாள் அவன் அணுகியபோதே கருவண்டு மும்முறை அவனைச் சுற்றி வந்து ‘இவனே! இவனே!’ என்று மெய் அதிர்ந்தது. பரசுராமர் புன்னகைத்து “ஆம், இவனே” என்றார். “இவன் ஏன் இங்கு?” என்றது வண்டு. “ஆம், அதை அறிந்தே நீ விடுபடுவாய்” என்றார் பரசுராமர். ஒவ்வொரு கணமும் இளையோனைச் சூழ்ந்து எங்கோ இருந்தது தம்சன். அதன் நச்சுக் கொடுக்கு கூர்ந்து இக்கணம் இக்கணம் என துடித்துக் கொண்டிருந்தது.

தெற்கே கோதையின் கரையில் ஒரு நாள் உச்சிப் பொழுதில் உணவுண்டு சற்றே உடல் தளர மரத்தடியில் படுத்தார் பரசுராமர். ஆலமரத்தடியின் வேர் அவர் தலைக்கு கடினமாக இருந்ததால் “இளையோனே! உன் தொடையைக் காட்டுக!” என்றார். அவன் அமர்ந்து திரும்பி தன் வலத்தொடை மேல் அவர் தலையைத் தூக்கி வைத்தான். “ஏன் திரும்பினாய்? இடத்தொடை காட்டு, இது எனக்கு உகக்கவில்லை” என்றார். “அத்தொடை தங்களுக்குரியதல்ல ஆசிரியரே” என்றான் இளையோன். விழிதூக்கி “என்ன?” என்று அவர் கேட்டார். தலை தாழ்த்தி மெல்லிய குரலில் “அது ஒரு கனவு” என்று அவன் சொன்னான்.

“சொல்! அதைக் கேட்டு நான் கண் மயங்குகிறேன்.” அவன் சற்று தயங்கியபின் “ஆசிரியரே, என் தோள்கள் ஆற்றலுற்று நெஞ்சு விரிந்து எண்ணங்கள் அழுத்தம் கொண்டபோது கனவுகள் உருமாறத்தொடங்கியதை கண்டேன். ஒரு கனவில் கங்கையின் கரையில் நடந்து சென்றிருந்த காலடிச் சுவடுகளை கண்டேன். அக்கணமே அது எவருடையதென உணர்ந்தேன். ‘அன்னையே’ எனக் கூவியபடி அக்காலடிச் சுவடுகளை பின்தொடர்ந்து ஓடினேன். செல்லச் செல்ல அவை குறுகி சிறு பாதங்களாயின. அவ்விந்தையை உணர்ந்து விழி எட்டி நோக்கியபோது தொலைவில் சென்று கொண்டிருந்தவள் அழகிய இளம்பெண் என்று கண்டு திகைத்தேன்.”

அவளை எங்ஙனம் அழைப்பது என்று அறியாது தயங்கி நின்றுவிட்டேன். அவள் மேலும் மேலும் விலகிச் செல்வதைக் கண்டு கை நீட்டி இளையோளே நில் நில் என்று கூவியபடி மேலும் தொடர்ந்தேன். அருகணைந்தபோது மேலும் சிறுத்து சிறுமியென என் கண்ணெதிரே அவள் தோற்றம் உருமாறி வந்தது. ஆடையுலைந்த மங்கை. பூவாடை அணிந்த பெதும்பை. இடைமெலிந்த பேதை. சிறு தோள் கொண்ட மழலை. அருகணைந்து அவள் முன் நின்றேன். ஒளிரும் விழிகளால் என்னை நோக்கி சிரித்து “நான் அப்போதே ஓடி வந்துவிட்டேன். என்னை நீங்கள் பிடிக்க முடியாது” என்றாள்.

சிரிப்பென்றே ஆன சிறுமுகம். கழுத்தை சொடுக்கியபோது காதில் அணிந்திருந்த சிறு குண்டலங்கள் அசைந்தன. இதழ்களுக்குள் முத்தரிப் பற்கள் மின்னின. முழந்தாளிட்டு அவள் முன்னால் நின்று மலர்மொக்குகள் போன்ற இரு கைகளையும் பிடித்து “ஏன் என்னை விட்டு விலகி ஓடினாய்?” என்றேன். “விளையாடத்தான்” என்றாள். “இப்படியா விளையாடுவது? உன் காலடிகளைக் கண்டு உன்னைத் தேடி வந்தேன்” என்றேன். “இன்னும் அவ்வளவு தூரம் ஓடினால் நான் மறைந்துவிடுவேன்” என்றாள்.

“வேண்டாம். என்னுடன் இரு” என்று சொல்லி அவளை இடை வளைத்து இழுத்து என் நெஞ்சோடு அணைத்துக் கொண்டேன். “நான் உங்களை எவ்வாறு அழைப்பது?” என்றாள். “நீ என் மகளல்லவா? தந்தை என்றே அழை” என்றேன். மெல்லிய கொடிக் கைகளால் என் கழுத்தை வளைத்து பட்டுக் கன்னங்களை என் முகத்தருகே கொண்டு வந்து மென்மயிர்கள் என் இதழில் பட குழலணிந்த மலர்களும் கன்னங்களில் பூசிய கஸ்தூரியும் மணக்க “தந்தையே” என்றாள்.

கள்வெறி கொண்ட நெஞ்சுடன் இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டு “மகளே” என்றேன். கையில் தூக்கி எடுத்தபடி எழுந்தேன். கூவிச் சிரித்து என் தோள்களில் அறைந்து “ஐயோ விழுந்து விடுவேன் விழுந்து விடுவேன்” என்றாள். “எப்படி விழுவாய்? என் தோள்களை பார்த்தாயா? நீ எத்தனை வளர்ந்தாலும் இப்படியே என்னால் தூக்க முடியும்” என்றேன். “என்னைத் தூக்கியபடி பறந்து செல்ல முடியுமா?” என்றாள். “முடியும். நான் ஆயிரம் வருடம் தவம் செய்து அரக்கனாவேன். அப்போதுன்னை சுமந்தபடி செல்வேன்” என்றேன். “இப்போது அரக்கனாகு, இப்போது அரக்கனாகு” என்று கால்களை அசைத்தபோது சிறு பொற்சலங்கைகள் குலுங்கின.

சுழற்றி அவளை இறக்கி நெஞ்சில் வைத்தேன். வாய்விட்டுச் சிரித்தபோது கழுத்தில் நீல நரம்புகள் எழுந்தன. நெற்றி படிந்த குறுமயிர் புகைச் சுருள்கள் போலிருந்தன. ஆடையின் பொன்னூல் உதிர்த்த மஞ்சள்பொடி படிந்த கன்னங்கள். வியர்வை படிந்த மூக்கு நுனி. சிரிப்பில் அதிர்ந்த சிறு இதழ்கள். “என் மலரே, என் முத்தே, என் செல்வமே” என்றவளை முத்தமிட்டேன். அவளை என் இடத்தொடை மேல் அமர்த்திக் கொண்டேன். அந்த எடையை உணர்ந்தபடி விழித்தபோது என் உடலெங்கும் தித்திப்பு நிரம்பியிருந்தது.

“ஆசிரியரே, நானென என்னை உணர்ந்த நாள் முதல் எப்போதும் என் கனவில் தேங்கியிருந்த கடும் கசப்பை அந்த ஒரு கனவில் மட்டுமே கடந்து சென்றேன். மீண்டுமொரு கனவு வரவில்லை. ஆனால் அக்கனவின் ஒவ்வொரு வண்ணத்தையும் தொட்டு பொன்னிறமாக வரைந்து கொண்டேன். ஒரு போதும் ஒளிமங்காத ஓவியமாக என்னுள் வைத்திருக்கிறேன்” என்றான் இளையோன்.

“ஆம், அது நன்று” என்றார் அவர். “நாம் கொடுங்கனவுகளை இன்கனவுகளால் மட்டுமே நிகர் செய்ய முடியும்” என்றபின் விழிகள் சரிய நீள்மூச்சுவிட்டார். “குருதி தெரியாத எந்தக்கனவும் இனியதே” என்றார். அவர் துயிலில் ஆழ்ந்தபின்னரும் அவரது முகத்தை நோக்கியபடியே மாணவன் அமர்ந்திருந்தான். தன் சிறுதுளையிலிருந்து வெளிவந்து பொன்னிறச்சிறகுகள் அதிர “கண்டு கொண்டேன். அந்த இடத்தொடை” என்றான் தம்சன். ரீங்கரித்தபடி பறந்து வந்து அவ்விளையோனின் இடத்தொடையில் அமர்ந்தான். தன் கொடுக்கைத் தூக்கி கூர் முனையால் அத்தசையை சொடுக்கினான்.

வலியில் அதிர்ந்த உடலின் அசைவை நிறுத்தி, ஒலி எழுப்ப எழுந்த இதழ்களை இறுக்கி இளையோன் உறைந்தான். தொடைத்தசையைத் துளைத்து குருதிக் குழாய்களைக் கிழித்து உட்புகுந்து சென்றான் தம்சன். கொழுங்குருதி அவனை திளைக்கச் செய்தது. சிறகுகளை அதிரவைத்து அதை சிறு துளிகளாக தெறித்தான். எட்டு கால்களாலும் தசைக் கதுப்பை கிண்டி வழி அமைத்து உள்ளே சென்றான். கருக்குழி என அணைத்துக்கொண்டது வெந்தசை. கனவிலிருந்து சுஷுப்திக்கு கொண்டுசென்றது. கடந்த பிறவியின் நினைவுகளால் நெஞ்சை நிறைத்தது.

குருதி பெருகி வழிந்து தன் தோளைத் தொட்டபோது கண்விழித்த பரசுராமர் அதைத் தொட்டு தன் கண்ணருகே நோக்கினார். தன் நெஞ்சு துளைத்து வழிந்த குருதியென்றே முதலில் அவர் நினைத்தார். பின்பு அங்கு வலியில்லை என்றுணர்ந்து, ஒரு கை ஊன்றி உடல் திரும்பி அவன் தொடையை பார்த்தார். “யார் நீ?” என்று கூவியபடி எழுந்தார். “நீ அந்தணன் அல்ல. இத்தனை வலி பொறுக்கும் திறன் கொண்ட அந்தணன் இப்புவியில் இல்லை. நீ ஷத்ரியன்” என்றார்.

“இல்லை முனிவரே, நான் அந்தணனும் அல்ல ஷத்ரியனும் அல்ல” என்றான். “சொல்! நீ யார்?” என்றார். “தேரோட்டி மைந்தன்” என்றான் அவன். “இல்லை, நீ அவர்களுக்கு பிறக்கவில்லை. குருதியால் நீ ஷத்ரியன்” என்றார் அவன் ஆசிரியர். “அதை நான் அறியேன்” என்றான் அவன். “அறிவாய். உன் நெஞ்சறிந்த மாறா உண்மை என்றொன்று உண்டென்றால் அது அதுவே” என்றார். அவன் சொல் இழந்து விழிதாழ்த்தினான். “சொல், இக்கணமே சொல். ஒருபோதும் ஷத்ரியருக்காக வில்லெடுப்பதில்லை என்று என் கால்தொட்டு ஆணையிடு” என்றார்.

அவன் கைகூப்பி “ஆசிரியரே, உண்ட உணவு குருதியாகிறது. சொன்ன சொல்லே ஆத்மாவாகிறது. இரண்டையும் உதறும்படி சொல்கிறீர்கள்” என்றான். “அச்சொல்லை நீ எனக்களிக்கவில்லை என்றால் உன்னை தீச்சொல்லிட்டு அழிப்பேன்” என்றார் பரசுராமர். “அவ்வண்ணமே ஆகுக! எது வரினும் என் தோழனுக்கென எழுந்த என் கைகள் தாழா” என்றான். செறுசினத்துடன் கைம்மண் எடுத்து தூக்கி கடுஞ்சொல் கூற வாயெடுத்தும் பரசுராமரால் “ஷத்ரியருக்கு என நீ களத்தில் எழுந்தால் நான் கற்பித்தவை உனக்கு உதவாது போகட்டும்” என்றே சொல்லமுடிந்தது. மண்ணை நிலத்திலிட்டு “தீராப்புகழ் கொள்க! விண்ணுலகில் வாழ்க!” என்று வாழ்த்தியபடி முகம் திருப்பிக்கொண்டார்.

கைகூப்பி “அவ்வண்ணமே ஆகுக!” என்று குனிந்து அவர் கால் நின்று தொட்ட மண்ணைத் தொட்டு தன் சென்னி சூடி எழுந்தான். குருதி வழிய இடக்காலை அசைத்து மெல்ல நடந்தான். அவன் குருதியிலிருந்து கருக்குழந்தை என வெளிவந்து சிறகுவிரித்து ரீங்கரித்தெழுந்த தம்சன் மெல்லிய பாடலுடன் அவனைச் சூழ்ந்து பறந்தது. இறக்கை பற்றியெடுத்து நாணலால் அதைக் குத்தி எடுத்து தன் கண்ணருகே கொண்டு வந்து அதன் ஆயிரம் விழிகள் இணைந்த பெருவிழிகளை நோக்கி அவன் கேட்டான் “நீ அறிந்தது என்ன?”

“ஆணவம் அமைந்திருப்பது இடத்தொடையில். அங்குதான் மங்கையை அமரவைக்க வேண்டுமென்பார் ஆன்றோர்” என்றான் தம்சன். அவன் சொல்வதென்ன என்று விளங்காமல் “என்ன?” என்று அவன் மீண்டும் கேட்டான். “அங்கிருக்கட்டும் இந்த ஆறா வடுவின் அணையா பெருவலி” என்றபின் சுண்டப்பட்டது போல் தெறித்து கீழே விழுந்து புழுதியில் புரண்டு எழுந்தான். எட்டு பெருங்கைகளுடன் நின்று “என் பெயர் அளர்க்கன். நான் சொல்மீட்சி பெற்று விண்ணேகுகிறேன் இக்கணம். நிறைவடைக!” என்றான். அவன் செல்வதை இளையோன் புரியாத விழிகளுடன் நோக்கி நின்றான்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்