வெய்யோன் - 24

பகுதி நான்கு : கூற்றெனும் கேள் 1

மங்கல இசை தொடர வாழ்த்தொலிகள் வரிசை அறிவிக்க கர்ணன் அவை புகுந்ததும் முதுவைதிகர் எழுப்பிய எழுதாக்கிளவியின் இன்னிசையும் அவையோர் கிளத்திய வீங்கொலி வரிசையும் அவைமுழவின் விம்மலும் உடன் இணைந்த கொம்புகளின் அறைகூவலும் அவனை சூழ்ந்தன. கைகளை தலைக்கு மேல் கூப்பியபடி சீர் நடையிட்டு வந்து வைதிகரை மும்முறை தலைவணங்கியபின் திரும்பி மூன்று முதுவைதிகர் கங்கை நீர் தெளித்து தூய்மைப் படுத்திய அரியணையில் அமர்ந்தான். அவன் மேல் வெண்குடை எழுந்தது. சாமரத்துடன் சேடியர் இருபக்கமும் அமைந்தனர். அமைச்சர் அளித்த செங்கோலையும் உடைவாளையும் பெற்றுக்கொண்டு மீண்டும் ஒரு முறை தலைவணங்கினான்.

அவன் அளிக்க வேண்டிய அன்றைய முதல் ஆணைக்காக காத்து நின்றிருந்த மறையவர் குலத்து இளையோன் முன்னால் வந்து வணங்கினான். முன்னரே எழுதி மூங்கில் குழலில் இட்டு மூடப்பட்ட அரசாணையை சிறிய வெள்ளித் தட்டில் வைத்து சிவதர் அவனிடம் நீட்ட அதைப் பெற்று “நன்று சூழ்க அந்தணரே! இச்சிறு செல்வம் உங்கள் நெஞ்சில் முளைவிட்டு சொற்பெருக்காக எழுக! நானும் என் குலமும் இந்நாடும் இதன் எதிர்காலமும் அச்சொற்களைக் கொண்டு நலம்பெற்று பொலிவுறுக!” என்றான் கர்ணன். “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றபடி இளையோன் அதை பெற்றுக் கொண்டான். திரும்பி அந்தணர் நிரையை வணங்கி அவையை வாழ்த்தியபின் அவன் தன் பீடத்தை நோக்கி சென்றான்.

நிமித்திகன் அறிவிப்புமேடையில் ஏறி தன் கைக்கொம்பை முழக்க அவை அமைதியடைந்தது. “அவையீரே, இன்று இவ்வவையில் அஸ்தினபுரியின் முதன்மைத் தூதராக வந்துள்ள அமைச்சரை வரவேற்கிறோம். குஜஸ்தலத்தின் சீர்ஷபானு குடியினரும் மறைந்த அமைச்சர் விப்ரரின் மைந்தரும் கோட்டைக் காவல் அமைச்சருமான கைடபர் இங்கு வந்து நம்மை வாழ்த்தியிருக்கிறார்” என்றதும் அவை “வாழ்க!” என்று குரல் எழுப்பியது. கைடபர் எழுந்து நின்று தலைவணங்கினார். “அஸ்தினபுரி அவையின் நெறியாணையை அவர் கொண்டு வந்துள்ளார். அதை அவர் அவைமுன் அளிப்பார்” என்று சொல்ல கைடபர் பொற்குழலில் அடைக்கப்பட்ட திருமுகத்தை அமைச்சர் ஹரிதரிடம் அளித்தார்.

“அஸ்தினபுரியின் பேரரசர் திருதராஷ்டிரரின் மைந்தரும் அரசர் துரியோதனரின் தம்பியுமான இளையகௌரவர் சுஜாதரும் வந்துள்ளார். அவர் கொண்டு வந்துள்ள தனிச்செய்தியை அரசருக்கு அளிப்பார்” என்று நிமித்திகன் சொல்ல சுஜாதன் எழுந்து அவையை வணங்கினான். “இச்செய்திகளின்மேல் அவையின் எதிரீடுகளை அமைச்சர் ஹரிதர் எதிர்நோக்குகிறார். அரசரின் முன்பு வைக்கப்படும் அச்செய்திக்குறிப்பு இங்கு மங்கலத்தை நிறைப்பதாக! அவற்றின்மேல் எழும் நமது எண்ணங்கள் நமது உவகையை பகிர்வதாக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றபின் மீண்டும் கொம்பை ஊதிவிட்டு அறிவிப்புமேடையிலிருந்து இறங்கினான்.

கர்ணன் அவையின் வலப்பக்க நிரையில் அமர்ந்திருந்த சுஜாதனை அப்போதுதான் நன்றாக நோக்கினான். அஸ்தினபுரியிலிருந்து அவன் கிளம்பி வந்த ஒன்றறை வருடங்களுக்குள்ளாகவே சுஜாதன் ஓரடிக்கு மேல் உயரம் பெற்று கரியபெருந்தோள்களும் நீண்ட கைகளும் கொண்டு பிற கௌரவர்களைப் போலவே மாறிவிட்டிருந்தான். அவன் எழுந்து தலைவணங்கியபோது என்றோ கண்டு மறந்த இளம்துரியோதனனை அருகே கண்டது போல் கர்ணன் உளமகிழ்ந்தான். கைடபர் தாடியில் வெண் இழைகள் ஓட, விழிச்சாரலில் சுருக்கங்கள் படிந்து, நோக்கில் ஒரு கேலிச்சிரிப்பு கலந்து பிறிதொருவராக மாறியிருந்தார்.

ஹரிதர் இருகைகளையும் கூப்பி “அஸ்தினபுரியின் செய்தியுடன் வந்திருக்கும் தங்கள் இருவரையும் இந்த அவை வணங்கி வரவேற்கிறது. அஸ்தினபுரியின் பேரரசரின் முகமென இளையவர் சுஜாதரும் அவர் அமர்ந்திருக்கும் அரசுக்கட்டில் முகமென அமைச்சர் கைடபரும் இங்கு எழுந்தருளியுள்ளார்கள். அவர்களை வாழ்த்துவோம்” என்றார். அவையினர் கைகளைத் தூக்கி உரத்த குரலில் வாழ்த்தொலி எழுப்பினர்.

கைடபர் தன் சால்வையை மீண்டும் ஒருமுறை சீரமைத்தபடி முன்னால் வந்து வணங்கி “கதிரவன் மைந்தரை, நிகரில் வில்லவரை, அஸ்தினபுரியின் முதன்மைக்காவலரை, எங்கள் குடிச்செல்வத்தை, அங்க நாட்டரசரை அடியேன் வாழ்த்தும் பேறுகொண்டேன். இன்று அரண்மனையின் ஆட்சிநோக்கராகப் பணியாற்றும் நான் பேரமைச்சர் விதுரரின் வணக்கத்தையும் நூறுதலைமுறை முதிர்ந்த அஸ்தினபுரியின் அவையின் வாழ்த்தையும் இந்த அவைக்கு அறிவிக்கிறேன்” என்றார். அவர் திரும்பி கைகாட்ட சுஜாதன் முன்னால் வந்து தலைவணங்கி “அங்க நாட்டரசருக்கு அஸ்தினபுரியின் பேரரசர் திருதராஷ்டிரரின் வாழ்த்துக்கள். என் தமையனின் அன்புச்செய்தியுடன் இந்த அவை புகுந்துளேன்” என்றான்.

கர்ணன் புன்னகையுடன் தலைவணங்கி “நல்வரவு. என் நகரும் நாடும் பெருமை கொள்க!” என்றான். அவைநாயகத்திடம் “இத்தருணத்தின் நினைவுக்கென இங்குள அனைத்து ஆலயங்களிலும் மும்முறை மங்கல முழவு ஒலிக்கட்டும். இன்னுணவுப் படையலிட்டு நகர் மாந்தர் அனைவருக்கும் அளிப்பதற்கு ஆணை இடுகிறேன்” என்றான். அவைநாயகம் “அவ்வண்ணமே” என்றார். அவையினர் “வாழ்க!” என ஒலித்தனர்.

“தங்கள் செய்தியை அவைக்கு அறிவிக்கலாம் கைடபரே” என்றார் ஹரிதர். கைடபர் கைகூப்பியபின் திரும்பி அவைக்கும் கர்ணனுக்குமாக முகம் தெரிய நின்று “அங்கம் அஸ்தினபுரியின் முதன்மை நட்பு நாடுகளில் ஒன்று. அங்க நாட்டரசரோ அஸ்தினபுரியின் அரசரின் நெஞ்சு அமர்ந்த இளையவர். எனவே அஸ்தினபுரியில் உறுதி செய்யப்பட்ட மங்கல நிகழ்வொன்றை முதன்முதலில் இந்த அவைக்கு அறிவிக்க வேண்டுமென அவை விழைந்து அதைச் செய்ய நான் ஆணையிடப்பட்டிருக்கிறேன்” என்றார்.

அவை வாழ்த்தொலி கூவ கைதூக்கி கைடபர் தொடர்ந்தார் “மூத்தோரே, சான்றோரே, அஸ்தினபுரியின் அரசரின் தங்கையும் கௌரவ குலவிளக்குமான இளவரசி துச்சளையை சிந்து நாட்டரசர் ஜயத்ரதர் மணந்துள்ள செய்தி அறிவீர்கள். அவர்களுக்கு கொடிகொண்டு முடிசூடவென்று ஒரு மைந்தன் பிறந்துள்ளான். வைகாசிமாதம் வளர்நிலா ஏழாம் நாள் மண்நிகழ்ந்து நிமித்திகராலும் சைந்தவ மூத்தோராலும் சுரதர் என்று பெயரிடப்பட்டுள்ள அம்மைந்தர் வரும் ஆவணி முழுநிலவுநாளில் அஸ்தினபுரி நகர்புகுந்து அவையமர்ந்து கொடிவழியின் குலவரிசைகளை கொள்வதாக உள்ளார்.”

வாழ்த்தொலிகள் எழுந்து அவை விழவுக்கோலம் கொண்டது. கைடபர் “அஸ்வ வலயம் என்னும் காட்டில் குடில் அமைத்து தங்கியுள்ள பிதாமகர் பீஷ்மரிடம் சென்று இச்செய்தியை முறைப்படி அறிவித்து வாழ்த்துரை கொள்ளப்பட்டிருக்கிறது. அவையமர்ந்த ஆசிரியர்களான துரோணரும் கிருபரும் வாழ்த்துரை அளித்துள்ளனர். நகருக்கு இச்செய்தி முறைப்படி அறிவிக்கப்பட்டு விழவுக் களியாடல்கள் தொடங்கிவிட்டன” என்றார். “அஸ்தினபுரியின் முதல்மருகர் தொல்குலநெறிகளின்படி பேரரசி காந்தாரிக்கு நீர்க்கடன்கள் செய்யவும் நிலம்வாழும் நாளெல்லாம் நேர்க்குருதி முறையென நலம்கொள்ளவும் கடன்பட்டவர் என்பதை அறிந்திருப்பீர்.”

நிமித்திகன் கைகாட்ட அவை அமைதிகொண்டு அச்சொற்களை பெற்றுக்கொண்டது. “பாரதவர்ஷத்தை ஆளும் பேரரசான அஸ்தினபுரியின் ஒரே இளவரசியின் மைந்தர் குலமுறை கொள்ளும் தருணத்தில் அவர் தாய்மாமன் நிலையில் கோல்கொண்டு நின்று வாழ்த்தவும் அவர் முதல்குருதிப்புண் கொண்டு முதலணிபூண்டு முதல் அன்னச் சுவையறிகையில் மடியிருத்தி அருளவும் அரசர் துரியோதனன் அங்க நாட்டரசர் வசுஷேணரிடம் விண்ணப்பிக்கிறார். எங்கள் குலவிளக்கு மங்கலம் கொள்க! அவள் கைபிடித்தோன் வெற்றியும் சிறப்பும் பெறுக! அவர்களின் மைந்தன் எதிர்காலத்தை வெல்க! மாமன் என அமர்ந்து அவரை வாழ்த்தும் கதிர்பெற்ற கைகள் என்றும் வெல்க!”

செய்தி முடிவதற்குள்ளேயே அங்க நாட்டின் அவை முகட்டுவளைவு முழங்க பேரொலி எழுப்பி வாழ்த்தத் தொடங்கியது. பின் நிரையில் இருந்தவர்கள் எழுந்து நின்று கைகளைத் தூக்கி தொண்டை தெறிக்க “அஸ்தினபுரி வாழ்க! இளவரசி துச்சளை வாழ்க! இளவரசர் சுரதர் வாழ்க! துரியோதனன் வாழ்க! அங்க நாடு பொலிக!” என்று கூவினர். சற்றுநேரம் அங்கே ஒலிமட்டுமே இருந்தது. உடல்கள் காற்றில் பஞ்சுத்துகள்கள் என சுழன்று கொந்தளித்தன. காற்று சென்றபின் மெல்ல அவை படிவதுபோல அவை அமைதிகொள்ள நெடுநேரமாகியது.

கர்ணன் கைடபரின் சொற்கள் ஒலித்து முடிவதுவரை தன் உள்ளம் அவற்றை வெறுமனே நோக்கி மலைத்து அசைவற்றிருந்ததை உணர்ந்தான். வாழ்த்தொலிகள் எழுந்து கொந்தளித்துக் கொண்டிருந்த தன் அவையை விழிகளால் சுற்றிச் சுற்றி நோக்கியபோது ஓர் அதிர்வென அச்செய்தி அவன் உள்ளத்தை அடைந்தது. திரும்பி சிவதரை நோக்கினான். அவரது விழிகள் அவன் விழிகளை சந்தித்தன. சிவதரின் தோளில் இருந்த நீண்ட வடுவை நோக்கிவிட்டு கர்ணன் அவை நோக்கி திரும்பிக் கொண்டான். சிவதர் அமைச்சரை நோக்கி விழிகளால் ஏதோ சொன்னார். ஹரிதர் தலையசைத்தார்.

அமைச்சர் முன்னால் வந்து இரு கைகளையும் விரித்து அவையை அமைதி கொள்ளச் செய்தார். உரத்த குரலில் “இந்த அவை நுண்வடிவில் அங்க நாட்டின் நீத்தாரும் மண்வடிவில் மூத்தாரும் அமர்ந்திருக்கும் பெருமை கொண்டது. இச்செய்தி கேட்டு அவர்கள் அனைவரும் கொள்ளும் உவகையை இங்குள்ள சுவர்களை அதிரவைக்கும் இவ்வாழ்த்தொலிகள் காட்டுகின்றன. அஸ்தினபுரியால் நாம் சிறப்பிக்கப்பட்டிருக்கிறோம். பல்லாண்டுகளுக்கு முன்பு இளவரசியின் கைபற்றி மணநிகழ்வை நிகழ்த்தியவர் நம் அரசர். நீணாள் காத்திருப்புக்குப் பின் அவள் நெடுந்தவம் மைந்தனாகியிருக்கிறது. அவரை மடிநிறைக்கும் நல்லூழ் பெற்றமைக்காக அங்க நாட்டரசர் கொள்ளும் பெருமிதத்தையும் உவகையையும் பதிவு செய்கிறேன்” என்றார்.

கர்ணன் அதற்குள் தன்னை திரட்டிக்கொண்டு எழுந்து இரு கைகளையும் கூப்பி “இந்நாள் சிறக்கட்டும். இச்செய்தி இந்நகரை வந்தடைந்த இத்தருணத்தை சிறப்பிக்கும் பொருட்டு நகரின் தென்மேற்கு மூலையில் கொற்றவை அன்னைக்கு ஓர் ஆலயம் அமைக்கப்படும். அது அஸ்தினபுரியின் செல்வமகள் இளவரசியின் பெயரால் துச்சலேஸ்வரம் என்று அழைக்கப்படும். என் தங்கையின் அழகு முகத்தின் தோற்றமே அங்கு கோயில் கொண்டருளும் அன்னையின் முகமாக அமையட்டும். வலமேற் கையில் வஜ்ராயுதமும் இடமேல் கையில் அமுதகலசமும் இருகீழ்க்கைகளில் அருளும் அடைக்கலமுமாக அன்னை அங்கு கோயில் கொள்வாள். இனி இந்நகருள்ள நாள் வரைக்கும் பொழுது எழுந்து அணைவது வரை ஐந்து முறை துச்சளையின் பெயர் அவ்வாலய மணி முழக்கமாக இந்நகர் தழுவி எழக்கடவதாக!” என்றான்.

கைடபர் மலர்ந்த முகத்துடன் தலைக்கு மேல் கைகூப்பினார். அவை வாழ்த்தொலி எழுப்பி அலையடித்தது. கர்ணன் மீண்டும் தன் அரியணையில் அமர்ந்ததும் அமைச்சர் நிமித்திகனை நோக்கி கைகாட்டினார். அவன் அறிவிப்புமேடையில் ஏறி தன் அறிவிப்புக் கொம்பொலியை முழக்கியதும் அவையினர் வாழ்த்தொலியை நிறுத்திவிட்டு தங்கள் பீடங்களில் அமர்ந்தனர். நிமித்திகன் “அவையில் சுஜாதர் தன் செய்தியை அறிவிக்கும்படி அங்க நாட்டரசரின் குரலாக நின்று இறைஞ்சுகிறேன்” என்றான்.

சுஜாதன் புன்னகையுடன் கர்ணனையும் அவையையும் நோக்கி கைகூப்பி “என் இரண்டாம் தமையன் இளவரசர் துச்சாதனர் தொடங்கி நான்வரை வந்த தொண்ணூற்றுவர் சார்பில் அங்கநாட்டரசரை அடிபணிந்து பாதப்புழுதியை சென்னி சூடுகிறேன். எங்கள் அரியணை அமர்ந்தருளிய அரசர் துரியோதனர் ஒரு செய்தியை அங்க நாட்டு அரசர் வசுஷேணருக்கு அனுப்பியிருக்கிறார். அதை அரசரிடமே சொல்ல வேண்டுமென்று எனக்கு ஆணை. ஆனால் இப்போது அங்கரே ஆணையிட்டபடியால் இவ்வவையில் அதை உரைக்க விழைகிறேன்” என்றான். சுஜாதனின் நிமிர்வைக்கண்டு மகிழ்ந்து சிரித்தபடி “சொல்” என்று கர்ணன் கைகாட்டினான்.

சுஜாதன் தலைவணங்கி குரலை மேலும் உயர்த்தி “வசுஷேணர் அனைத்துப் பொறுப்புகளையும் அமைச்சரிடம் அளித்துவிட்டு உடனே கிளம்பி அஸ்தினபுரிக்கு வரவேண்டும் என்று என் தமையன் ஆணையிட்டிருக்கிறார். ஏனெனில் யவன மது அங்க நாட்டரசர் துணையின்றி சுவை கொண்டதாக இல்லை என்று அவர் கருதுகிறார்” என்றான்.

அவையின் முன்வரிசையினர் சிரிக்கத் தொடங்கினர். “என்ன சொல்லப்பட்டது?” “சொன்னது என்ன?” என்று பின் வரிசையினர் கேட்டு அறிந்தனர். அவை மெல்ல அச்சொற்களின் அனைத்து உணர்வுகளையும் புரிந்துகொண்டு சிரிக்கத் தொடங்க அவை முழுக்க பற்களாக விரிந்ததை கர்ணன் கண்டான். சிவதர் அவனிடம் குனிந்து “அலைநுரைகளைப்போல் பற்கள்” என்றார். கர்ணன் ஆம் என தலையசைத்தபடி எழுந்து சிரித்தபடி “அஸ்தினபுரியின் அரசரின் ஆணை என் சென்னி மேல் கொள்ளப்பட்டது. அவருடைய யவன மது இனிதாகட்டும்” என்றான்.

முன்நிரையில் அமர்ந்திருந்த ஷத்ரிய குலத்தலைவராகிய சித்ரசேனர் “அரசே, தாங்கள் அஸ்தினபுரியில் இருக்கையிலேயே மகிழ்வுடன் இருப்பதாக இங்குளோர் எண்ணுகிறார்கள். இந்த அரியணை தங்களை அமைதியிழக்கச் செய்கிறது. அதை அங்குள்ள அரசரும் அறிந்திருக்கிறார்” என்றார். அவர் சொற்களுக்குள் ஏதேனும் குறைபொருள் உள்ளதா என்று கர்ணன் ஒரு கணம் எண்ணினாலும் முகத்தில் விரிந்த புன்னகையை மாற்றாமல் “ஆம், இப்புவியில் நான் எங்கேனும் முற்றுவகை கொண்டு அமர்ந்திருப்பேன் எனில் அது என் தோழனின் அரியணைக்கு வலப்பக்கத்தில்தான்” என்றான்.

அமைச்சர் “இரு செய்திகளும் இனியவை. அங்கத்திற்கு அஸ்தினபுரி எத்தனை அணுக்கமானது என்பது முதற்செய்தி. அங்க நாட்டரசருக்கு அஸ்தினபுரியின் அரசர் எத்தனை அணுக்கமானவர் என்பது அடுத்த செய்தி. இரு செய்திகளும் இந்நகரில் இன்று முதல் நீளும் மூன்று நாள் களியாட்டை தொடங்கி வைக்கட்டும்” என்றார். “ஆம், அவ்வாறே ஆகுக!” என்று அவை வாழ்த்தொலி எழுப்பியது.

கைடபரும் சுஜாதனும் சென்று தங்கள் பீடங்களில் அமர்ந்தனர். அவையின் தூண்களை ஒட்டி நின்றிருந்த அவைப்பணியாளர்கள் தாலங்களில் இன்கடுநீரும் சுக்குமிளகுதிப்பிலிக் கலவையும் எண்வகை நறுமணப்பொருட்களும் தாம்பூலச்சுருள்களுமாக பரவினர். அவை மெல்ல இயல்பு நிலைக்கு வந்தது. ஒவ்வொருவர் உடலிலும் உவகை அசைந்தது. ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளும் குரல்கள் கலந்தெழுந்த முழக்கத்தால் நிறைந்திருந்தது காற்று.

ஹரிதர் கர்ணன் அருகே வந்து சற்றே குனிந்து “சற்று குன்றியிருந்த சிந்து நாட்டரசரின் உறவு இதன் வழியாக வலுவடைவது அஸ்தினபுரிக்கு நலம் பயப்பதே” என்றார். கர்ணன் “ஆம்” என்று தலையசைத்தான். சேடி நீட்டிய தாம்பூலத்தை எடுத்துக்கொண்டு ஹரிதர் “சிந்து நாடு காந்தாரத்தை ஒட்டியுள்ளது. இந்திரப்பிரஸ்தத்தின் உறவுநாடுகளான சிபி நாட்டுக்கும் மத்ரத்திற்கும் அருகே அஸ்தினபுரிக்கொரு வலுவான துணை நாடு தேவை. ஜயத்ரதர் நாளும் என படைத்திறன் கொண்டு, பொழுதும் என கருவூலம் பெருத்து பேருருக் கொண்டு வரும் அரசர்” என்றார். “உண்மையில் இச்சில மாதங்களாகவே ஜயத்ரதரை எவர் துணைவராக்கப் போகிறார்கள் என்பதே பேசுபொருளாக இருந்தது.”

கர்ணன் தலை அசைத்தான். வெற்றிலைச்சுருளை கையில் எடுத்து வாயிலிடாமல் வைத்தபடி “சிவதரின் தோளில் உள்ள அந்த நீள்வடுவை பார்த்தீர்களா?” என்றான். “ஆம், அதை நான் அறிவேன். கலிங்க இளவரசியை கவர்ந்த அன்று சிவதர் புரவி இல்லாமல் கலிங்கப் படைகளிடம் சிக்கிக் கொண்டார். அவரை அவர்கள் சிறைபிடித்துக் கொண்டு செல்லுகையில் எதிரே வந்த ஜயத்ரதர் அடங்காச்சினம் கொண்டு அவரை வாளால் வெட்டினார்” என்றார். “போரில் அல்ல” என்றான் கர்ணன். “கைவிலங்கிட்டு புரவியில் கட்டி இழுத்துச் செல்லும்போது வெட்டியவன் அவன். எந்த நெறிகளுக்கும் ஆட்பட்டவன் அல்ல. சினம் அவனை கீழ்மையின் எல்லைக்கே இட்டுச் செல்கிறது.”

ஹரிதர் “ஆம். அவரைப்பற்றி எப்போதும் அப்படித்தான் பேசப்படுகிறது” என்றார். கர்ணன் “பிடியானையென உளம் விரிந்த என் தங்கைக்கு அத்தகைய ஒருவன் கணவனாக அமைந்ததைப்பற்றி எண்ணும்போதெல்லாம் சினம் எழுந்து உடலை பதற வைக்கிறது” என்றான். “அன்று அவன் கலிங்கமகளை மணம்கொள்ள வந்ததை எண்ணி துரியோதனர் கொண்ட உட்சினத்தை நான் நன்கறிவேன். துச்சளையின் வயிறுதிறக்காமையால் சிந்துநாட்டரசர் பிறிதொரு அரசியை மணம்கொண்டு பட்டம்சூட்ட விழைவதாக சொல்லப்பட்டது. சேதிநாட்டுக்கும் வங்கநாட்டுக்கும் கோசலத்திற்கும் மணம்கோரி தூதனுப்பியிருந்தார். அவர்கள் அஸ்தினபுரியை அஞ்சி அதை தவிர்த்தனர். விதுரர் மறைமுக எச்சரிக்கையுடன் மருத்துவர்குழு ஒன்றை அனுப்பியபின் அத்தேடலை நிறுத்திக்கொண்டான்.”

“ஆனால் தொல்நெறிகளின்படி ஏற்புமணத்திற்குச் சென்று பெண்கொள்ள ஷத்ரியர் அனைவருக்கும் உரிமையுள்ளது. ஆகவேதான் கலிங்கத்திற்குச் சென்றான். உடன் மகதத்தின் பின்துணையும் இருந்தது. கலிங்கமும் மகதமும் தன்னை ஆதரித்தால் அஸ்தினபுரி அஞ்சுமென கணக்கிட்டான்” என்று கர்ணன் சொன்னான். “அன்று அவனை அவைநடுவே சிறுமைசெய்தது திட்டமிட்டேதான். அதன்பின் எந்த அவையிலும் ஒரு வீரன் என்று சென்று நிற்க அவன் கூசவேண்டுமென எண்ணினேன். அதுவே நிகழ்ந்தது. ஓராண்டுகாலம் அவன் தன் நாடுவிட்டு நீங்கவில்லை.”

“அது நன்று” என்றார் ஹரிதர். “துரியோதனர் பொருட்டு நான் அதைச் செய்தேன். விதுரர் என் செயலை பொறுத்தருளக்கோரி ஒரு முறைமைச்செய்தியை சிந்துநாட்டு அவைக்கு அனுப்பி அப்பூசலை அன்று முடித்து வைத்தார். ஆனால் ஜயத்ரதனின் நெஞ்சு எரியுமிக்குவையாக என்னை எண்ணி நீறிக்கொண்டிருக்கும் என நான் அறிவேன்” என்றான் கர்ணன். “தருணம் நோக்கியிருப்பான். ஒரு சொல்லையும் வீண்செய்யமாட்டான்.”

சிவதர் “ஆம். முதல் சிலகணங்களுக்குப் பிறகு நானும் அதையே எண்ணினேன்” என்றார். “ஆனால் ஜயத்ரதருக்கும் வேறுவழியில்லை. அவர் அஸ்தினபுரியைச் சார்ந்தே நின்றாகவேண்டும். அவருக்கும் மகதத்திற்குமிடையே இருந்த மெல்லிய உறவும் இன்று முற்றாக முறிந்துள்ளது. வில்லேந்திய கர்ணர் துணையுள்ள துரியோதனரை வெல்ல இயலாதென்று அறிந்த ஜராசந்தர் கலிங்கத்தின் ஏற்புமணப்பந்தலில் அமைதிகாத்தார். அவை நடுவே தான் கைவிடப்பட்டதாக உணர்ந்த ஜயத்ரதர் மகதரை நோக்கி கைநீட்டி அசுரக்குருதி அவைநட்பறியாதது என்று காட்டிவிட்டீர் மகதரே என்று கூவி சிறுமைசெய்தார். ஜராசந்தர் புயம் தூக்கி போருக்கெழ உபகலிங்கர் கைகூப்பி இருவரையும் அமைதிப்படுத்தினார்.”

“இழிவுசெய்யப்பட்டதாக உணர்ந்த ஜயத்ரதர் வாளையும் வில்லையும் எடுத்துக்கொண்டு நகர்விட்டு நீங்கும்போதுதான் சிறைபட்ட என்னைக் கண்டார். மறுகணம் எதையும் எண்ணாமல் என்னை நோக்கி வந்து வாளால் என்னை வெட்டினார்” என்றார் சிவதர். “அன்று கலிங்கப் படைத்தலைவன் என்னை பின்னால் இழுத்து காக்கவில்லை என்றால் உயிர் துறந்திருப்பேன்.” கர்ணன் ஹரிதரிடம் “மூன்று மாதங்கள் சிவதர் கலிங்கத்தில் நோய்ப்படுக்கையில் இருந்தார். இவருக்கு ஈட்டுச் செல்வமாக பத்தாயிரம் பொன் நாணயங்களை அளித்து மீட்டுக் கொண்டுவந்தோம்” என்றான்.

24

“இனி அதைப்பேசி எப்பயனும் இல்லை. மங்கலம் அறிவிக்கப்பட்டுவிட்டது. அது நிகழ்க! அதில் மாமனாக நின்று இளவரசருக்கு மண்சுவையும் மணிமுடியும் அளிக்கும்படி தாங்கள் கோரப்பட்டிருப்பது அனைத்து வகையிலும் அங்க நாட்டுக்கு பெருமையளிப்பது. அவ்வாய்ப்பைக் கோரி நிற்கும் முடிசூடிய மாமன்னர்கள் பலர் ஆரியவர்த்தத்தில் உள்ளனர்” என்றார் ஹரிதர். “ஆம். ஆனால் ஜயத்ரதனின் விழிகளை என்னால் எளிதில் எதிர்கொள்ளவும் இயலாது” என்றான் கர்ணன். குரல் இறங்க தலையசைத்தபடி “பின்னர் பலநாள் அதற்காக வருந்தியிருக்கிறேன். அந்த அவையிலும் அச்செயல் தவிர்க்கமுடியாத போர்முறையாகவே இருந்தது” என்றான்.

“களமறிந்தவர் என்பதனால் அவரும் அதை அறிந்திருப்பார்” என்றார் ஹரிதர். கர்ணன் “முதலில் படைக்கலமேந்தி என்னை எதிர்க்க வந்தவன் ஜயத்ரதன். அவனை இழிவுசெய்து அவையில் குன்றி அமரச்செய்ததனால்தான் பிறர் படைக்கலம் கொண்டு அன்று எழாமல் இருந்தனர். சிறுமை செய்வதென்பது போரின் உத்திகளில் ஒன்று. ஆனால் எப்போதும் பிறகு அது துயரளிப்பதாகவே உள்ளது” என்றான். “அது எல்லா களத்திலுமுள்ள நெறிதான் அரசே” என்றார் ஹரிதர். “சொல்லாடும் களத்திலும் சிறுமைசெய்யல் நிகழ்கிறது. அவையில் இறந்து அமைந்தவர்களும் உள்ளனர்.”

“கொல்லப்படுவதைவிட அவமதிப்பை அளிப்பது கொடியது. கொல்லப்பட்டவன் வீர சொர்க்கம் செல்கிறான். சிறுமைகண்டவன் ஒவ்வொரு கணமும் தழல் எரியும் நரகுக்கு சென்று சேர்கிறான்” என்றான் கர்ணன். “நான் ஜயத்ரதனை நேரில் சந்திக்கையில் அவன் கைகளைப் பற்றியபடி தலை தாழ்த்தி நான் செய்த பிழைக்காக பொறுத்தருளும்படி அவனிடம் கோரினால் என்ன?” ஹரிதர் “ஒருபோதும் அப்படி செய்யலாகாது. மைந்தன் பிறந்து அஸ்தினபுரியின் உறவு மேம்பட்டபின் அதைச் செய்வதென்பது நீங்கள் அஞ்சுவதாகவே பொருள்படும். அது அஸ்தினபுரியின் நட்பைப் பெறுவதற்கான ஒரு கீழ்மை நிறைந்த வழி என்றே விளக்கப்படும். இனி ஒருகணமும் உங்கள் தலை தாழக்கூடாது” என்றார்.

கர்ணன் மேலும் ஏதோ சொல்ல வாயெடுக்க அவர் தணிந்த உறுதியான குரலில் “ஏனெனில் உங்கள் தலை தாழச்செய்வதொன்றே இனி ஜயத்ரதரின் அணுகுமுறையாக இருக்கும். தருக்கி நிமிரும்போது மட்டுமே உங்களால் வெல்ல முடியும்” என்றார். கர்ணன் சிலகணங்கள் மீசையை நீவியபடி பின் “உண்மை” என்றான். பெருமூச்சுடன் “எத்தனை கணக்குகள்! எத்தனை ஆடல்கள்! எல்லாம் எதற்கென்றே தெரியவில்லை” என்றான். “அவை நாம் ஆடுவன அல்ல” என்றார் ஹரிதர்.