வெய்யோன் - 21
பகுதி மூன்று : சிறைபெருந்தாழ் – 9
வடகலிங்கத்தின் கங்கைக்கரை எல்லையில் இருந்த சியாமகம் என்ற பெயருள்ள குறுங்காட்டின் நடுவே ஆளுயரத்தில் கங்கையின் உருளைக்கற்களால் கட்டப்பட்ட சிறிய கொற்றவை ஆலயம் இருந்தது. அதற்குள் இரண்டு முழ உயரத்தில் அடிமரக் குடத்தில் செதுக்கப்பட்ட பாய்கலைப்பாவையின் நுதல்விழிச் சிலை ஒன்று காய்ந்த மாலை சூடி காலடியில் குருதி உலர்ந்த கரிய பொடி பரவியிருக்க வெறித்த விழிகளும் வளைதேற்றைகள் எழுந்த விரியிதழ்களுமாக நின்றிருந்தது. கருக்கிருட்டு வடிந்து இலைவடிவுகள் வான்புலத்தில் துலங்கத்தொடங்கின. காலைப்பறவைகள் எழுந்து வானில் சுழன்று ஓசைபெருக்கின. காட்டுக்கோழிகள் தொலைவில் ‘கொலைவில் கொள் கோவே’ என கதிரவனை கூவியழைத்தன.
ஆலயமுகப்பில் நின்றிருந்த நான்கு புரவிகள் சிறு செவியை கூப்பி தொலைவில் நடந்த காலடி ஓசையைக் கேட்டு மெல்ல கனைத்தன. உடனிருந்த வீரர்கள் எழுந்து புரவிகளின் முதுகைத்தட்டி அமைதிப்படுத்தினர். தலைவன் கையசைவால் அனைவரும் சித்தமாக இருக்கும்படி ஆணையிட்டான். வீரன் ஒருவன் மரக்கிளை ஒன்றில் தொற்றி மேலேறி தொலைவில் பார்த்து கையசைவால் அவர்கள் தான் என்று அறிவித்தான். காலடிகள் அணுகிவந்தன.
ஆந்தை ஒலி ஒன்று எழ தலைவன் மறுகுரல் அளித்தான். புதர்களுக்கு அப்பால் இருந்து துரியோதனனும் கர்ணனும் பின்னால் சிவதரும் வந்தனர். அவர்களின் உடல் காலைப்பனியில் நனைந்து நீர்வழிய ஆடைகள் உடலோடு ஒட்டியிருந்தன. சிவதர் மெல்லிய குரலில் “அரசர்” என்றார். வீரர்கள் தலைவணங்கினர். “நேரமில்லை” என்றான் தலைவன். கர்ணன் துரியோதனனை நோக்கி கைகாட்டிவிட்டு முதல் வெண்புரவியில் கால்சுழற்றி ஏறிக்கொண்டான்.
சிவதர் பால்நுரைத்த நீள்குடுவை போன்றிருந்த கொக்கிறகுகள் பதித்த அம்புகள் செறிந்த அவனுடைய அம்பறாத்தூணியை அளிக்க தலையைச் சுற்றி எடுத்து உடலுக்குக் குறுக்காக போட்டு முதுகில் அணிந்து கொண்டான். வில்லை குதிரையின் கழுத்திலிருந்த கொக்கியில் மாட்டி தொடைக்கு இணையாக வைத்தான். புரவியின் பின்பக்கங்களில் சேணத்துடன் பிணைக்கப்பட்டிருந்த இரும்புக் கொக்கிகளில் மேலும் நான்கு அம்பறாத்தூணிகளை இரு வீரர்கள் எடுத்து வைத்தனர்.
துரியோதனன் எடையுடன் தன் புரவியிலேறிக்கொண்டு வீரர்கள் அம்பறாத்தூணிகளை மாட்டுவதற்கு உதவினான். அவன் புரவி முன் கால் எடுத்துவைத்து உடலை நெளித்து அவன் எடையை தனக்குரியவகையில் ஏந்திக்கொண்டது. சிவதர் பேசாமலேயே கைகளால் ஆணையிட மூன்று புரவிகளும் சித்தமாயின. சிவதர் புரவியிலேறிக் கொண்டதும் திரும்பி காவலர் தலைவனிடம் அவன் மேற்கொண்டு செய்வதற்கான ஆணைகளை பிறப்பித்தார்.
அவர்கள் வந்த படகு குறுங்காட்டுக்கு அப்பால் கங்கையின் கரைச்சதுப்புக்குள் பாய்களை முற்றிலும் தாழ்த்தி சுருட்டி கொடிமரத்தை சரித்து நீட்டி இழுத்துக்கொண்டுவரப்பட்டு இரண்டாள் உயரத்திற்கு எழுந்து சரிந்திருந்த நாணல்களுக்கு உள்ளே இருந்த சேற்றுக்குழி ஒன்றுக்குள் விடப்பட்டிருந்தது. அதனருகே காவல்நிற்கும்படி அவர் சொல்ல அவன் தலைவணங்கினான். அவன் விலகிச்செல்ல பிற வீரர்கள் தொடர்ந்தனர். மீன்கள் நீரின் இலைநிழல்பரப்பில் மறைவதுபோல் ஓசையின்றி அவர்கள் காட்டில் அமிழ்ந்தழிந்தனர்.
செல்வோம் என்று கர்ணன் தலையசைத்தான். சிவதர் தலையசைத்ததும் கர்ணன் கடிவாளத்தை இழுக்க அவன் புரவி மெல்லிய கனைப்பொலியுடன் முன்குளம்பை நிலத்தில் அறைந்து தலைகுனித்து பிடரி சிலிர்த்து தரை முகர்ந்து நீள்மூச்சுவிட்டது. அவன் கால்முள்ளால் தூண்டியதும் மெல்ல கனைத்தபடி சரவால் சுழற்றிப் பாய்ந்து குறுங்காட்டுக்குள் நுழைந்தது. இருபக்கமும் சிற்றிலைக் குட்டைமரங்கள் வீசி வீசி கடந்து செல்ல, முட்கிளைகள் வளைந்து அவர்களை அறைந்தும் கீறியும் சொடுக்கியும் பின்செல்ல குறுங்காட்டுக்குள் விரைந்தோடிச் சென்றன புரவிகள்.
குதிரையின் தலை உயரத்திற்குக் கீழாக தம் முகத்தை வைத்து கிளைகளின் எதிரடிகளை தவிர்த்தபடி அவர்கள் சென்றனர். காடெங்கும் புரவிகளின் குளம்போசை ஒன்று பத்தெனப் பெருகி துடியொடு துடியிணைந்த கொடுகொட்டி நடனத்தாளமென கேட்டுக் கொண்டிருந்தது. கருங்குரங்குகள் கிளைகளுக்கு மேல் குறுமுழவோசை எழுப்பி கடந்து சென்றன. ஆள்காட்டிக் குருவி ஒன்று அவர்கள் தலைக்கு மேல் பறந்து சிறகடித்துக் கூவியபடி எழுந்தும் அமைந்தும் உடன் வந்து பின் தங்கியது. நிலத்தில் விழுந்து சிறகடித்துச் சுழன்று மேலே எழுந்து மீண்டு வந்தது.
தலைக்கு மேல் எழுந்து வானில் கலந்த பறவைகளைக் கொண்டே போர்க்கலை அறிந்த எவரும் தங்களை அறிந்துவிட முடியுமென்று கர்ணன் எண்ணினான். அவன் எண்ணத்தை உணர்ந்தது போல சிவதர் தன் புரவியைத் தூண்டி அவன் அருகே வந்து “இப்பகுதியில் வேளாண்குடிகள் மட்டுமே உள்ளனர். இதை காவல்படைகளின் உலா என்றே எடுத்துக் கொள்வார்கள். ஏனெனில் இப்போது அங்கு மணத்தன்னேற்பு நிகழ்ந்து கொண்டிருக்கிறது” என்றார். மேலே இலைப்பரப்புக்கு அப்பால் வானம் இளங்கருமையின் அடிவெளியெனத் தெரிந்தோடியது.
குறுங்காட்டின் ஆழத்திற்குச் சென்றபின் புரவிகளை சற்று விரைவழியச் செய்து மூச்சு வாங்க விட்டபடி பெருநடையில் சென்றனர். துரியோதனன் தன் தோல் பையில் இருந்து நீர் அருந்தினான். கர்ணன் அவனை நோக்க நீரை கர்ணனை நோக்கி நீட்டியபடி “நம் படைக்கலங்களுக்கு இன்னும் வேளை வரவில்லை” என்றான். “பொறுமை. இங்கு நாம் ஒரு போரில் இறங்கினால் நகருக்குள் அந்நேரத்தை இழக்கிறோம்” என்றான் கர்ணன். “ஆயினும் குருதியின்றி எப்படி எல்லை கடப்பது?” என்றான் துரியோதனன். கர்ணன் “பொறுங்கள் அரசே, தங்கள் வாளுக்கும் அம்புக்கும் வேலை வரும்” என்றான். “செல்வோம்” என்றார் சிவதர்.
புரவியை தட்டியபடி மீண்டும் விரைவெடுத்து குறுங்காடுகளில் மூன்று மடிப்புகளில் ஏறி இறங்கி காடருகே இருந்த சிற்றூர் ஒன்றின் மேய்ச்சல் நிலத்தின் விளிம்பை அடைந்தனர். கண்தெளிந்த காலை தொலைவை அண்மையாக்கியது. மரப்பட்டைக் கூரையிட்ட சிற்றில்லங்களுக்கு மேல் அடுமனைப் புகையெழுந்து காற்றில் கலந்து நிற்பதை பார்க்க முடிந்தது. புலரியொளி எழவில்லை என்றாலும் வானம் கசிந்து மரங்களின் இலைகளை பளபளக்கச் செய்தது. புல்வெளியிலிருந்து நீராவி எழுந்து மெல்ல தயங்குவதை காணமுடிந்தது.
சிற்றூரின் காவல்நாய்கள் புரவிகளின் வியர்வை மணத்தை அறிந்து குரைக்கத் தொடங்கின. இரு செவ்வைக்கோல்நிற நாய்கள் மேய்ச்சல் நிலத்தில் புகுந்து காற்றில் எழுந்த சருகுகளைப் போல அவர்களை நோக்கி ஓடி வருவதை கர்ணன் கண்டான். “இந்தச் சிற்றூரை நாம் கடந்து செல்ல வேண்டுமா?” என்று திரும்பி சிவதரிடம் கேட்டான். “ஆம். ஆனால் இதை இன்னும் இருளிலேயே நாம் கடந்து செல்வோம் என்று எண்ணினேன்” என்றார் அவர். “விரைவாக விடிந்து கொண்டிருக்கிறது” என்று துரியோதனன் சொன்னான். “இங்கு காவல் வீரர்கள் இருந்தால் தலைகொய்து கடந்து செல்லலாம்.”
“இது எளிய வேளாண்குடிகளின் சிற்றூர்” என்று மீசையை நீவியபடி கர்ணன் சொன்னான். “இன்று அவர்களின் நன்னாள். இல்ல முகப்புகளில் மாவிலைத் தோரணங்களும் மலர் மாலைகளும் சூட்டப்பட்டுள்ளன. புலரியிலேயே எழுந்து சமைக்கத் தொடங்கிவிட்டனர். அடுமனைப்புகையில் வெல்லத்தின் நறுமணம் உள்ளது” என்றார் சிவதர். “என்ன செய்வது?” என்று துரியோதனன் சிவதரிடம் கேட்டான்.
“செய்வதற்கொன்றுமில்லை அரசே. முழுவிரைவில் இச்சிற்றூரை கடந்து மறுபுறம் செல்லவேண்டும். அப்பால் ஒரு நிலச்சரிவு. அதன் மடிப்பில் உருளைக்கற்களும் சேறும் நிறைந்த சிற்றாறு ஒன்று ஓடுகிறது. அதைக் கடந்து புல்படர்ந்த சரிவொன்றில் ஏறினால் ராஜபுரத்திற்கு பின்னால் உள்ள குறுங்காட்டை அடைவோம். அரைநாழிகையில் அக்காட்டைக் கடந்து கோட்டையின் பின்பக்கம் உள்ள கரவு வழி ஒன்றை அடையலாம். அங்கு நமக்காக வழி ஒன்று ஒருக்கி காத்திருக்கும்படி இரு ஒற்றர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது” என்றார் சிவதர்.
“அப்படியென்றால் என்ன தயக்கம்? செல்வோம்” என்றபடி துரியோதனன் புரவியைத்தட்டி முழுவிரைவில் மேய்ச்சல் நிலத்தின் ஈரப்புல் படிந்த வளைவுகளுக்கு மேல் பாய்ந்தோடினான். அவனது புரவிக் குளம்புகளால் மிதிபட்ட புற்கள் மீது நீரில் கால்நுனி தொட்டுத் தொட்டு பறந்து செல்லும் பறவைத் தடமென ஒன்று உருவாயிற்று. “விரைக!” என்றபடி சிவதரும் தொடர்ந்து செல்ல மேலும் ஒரு சில கணங்கள் எண்ணத்தில் இருந்தபின் கர்ணன் தன் புரவியை தட்டினான்.
துரியோதனன் புரவியை எதிர்கொண்ட நாய் ஒன்று அதன் விரைவைக் கண்டு அஞ்சி வால் ஒடுக்கி ஊளையிட்டபடி பின்னால் திரும்பி சிற்றூரை நோக்கி குறுகி ஓடியது. அவ்வூளையின் பொருளறிந்து பிறநாய்களும் கதறியபடி ஊரை நோக்கி ஓடின. ஊருக்குள் அனைத்து நாய்களும் ஊளையிடத் தொடங்கின. அவ்வோசை கேட்டு தொழுவங்களில் பசுக்கள் குரலெழுப்பி கன்றுகளை அழைத்தன. சிலகணங்களிலேயே ஊர் கலைந்தெழுந்தது.
இல்லங்களுக்குள் இருந்து மக்கள் திண்ணைகளை நோக்கி ஓடி வந்து தங்கள் ஊர் மன்றை அடைந்த துரியோதனனின் புரவியை பார்த்தனர். இளைஞன் ஒருவன் கையில் நீள்வேலுடன் துரியோதனனை நோக்கி ஓடி வர இன்னொருவன் பாய்ந்தோடி ஊர் மன்று நடுவே இருந்த மூங்கில் முக்கால் மேடை ஒன்றின் மேல் தொற்றி ஏறி அங்கிருந்த குறுமுரசு ஒன்றை கோல் கொண்டு அடிக்கத் தொடங்கினான். துரியோதனனின் அம்பு அந்த முரசின் தோலைக் கிழித்து அதை ஓசையற்றதாக்கியது. இன்னொரு அம்பு முன்னால் வந்தவனின் வேலை இரு துண்டுகளாக்கியது.
திகைத்து அவன் இரு கைகளையும் வீசி உரத்து கூவ அனைத்து இல்லங்களுக்குள்ளிருந்தும் இளைஞர்கள் கைகளில் வேல்களும் துரட்டிகளும் கோல்களுமாக இறங்கி ஊர் மன்றை நோக்கி ஓடி வந்தனர். பெண்கள் கூவி அலறியபடி குழந்தைகளை அள்ளிக் கொண்டு உள்ளே சென்றனர். முதியவர்கள் திண்ணைகளில் நின்று கைகளை வீசி கூச்சலிட்டனர். இருவர் பெரிய மூங்கில்படல் ஒன்றை இழுத்துக்கொண்டுவந்து ஊர்முகப்பை மூடமுயன்றனர்
தாக்கப்படும் விலங்கு போல அச்சிற்றூரே அலறி ஒலியெழுப்புவதை கர்ணன் கண்டான். துரியோதனனின் புரவி ஊர்மன்றுக்குள் நுழைந்தது. அதைத் தொடர்ந்து வந்த சிவதர் கர்ணனை நோக்கி விரைக என்று கைகாட்டி குறுக்காக வந்த பெரிய கூடை ஒன்றை தாவி மறுபக்கம் சென்றார். அவரது கால்களால் எற்றுண்ட கூடை கவிழ்ந்து பறக்க அதற்குள் மூடப்பட்டிருந்த கோழிகள் கலைந்து குரலெழுப்பியபடி சிறகடித்தன.
கர்ணனின் புரவி ஊரை புல்வெளியிலிருந்து பிரித்த சிற்றோடையை தாவிக்கடந்து ஊர் மன்றுக்குள் நுழைந்தபோது படைக்கலன்களுடன் ஓடிவந்த இருவர் அவனை நோக்கி திகைத்தபடி கைசுட்டி ஏதோ கூவினர். முதியவர் ஒருவர் உரத்த குரலில் “கதிரவன் மைந்தர்! கதிரவன் மைந்தர்!” என்று கூச்சலிட்டார். அத்தனை பேரும் தன்னை நோக்கி திரும்புவதைக் கண்ட கர்ணன் வியப்புடன் கைகளைத் தூக்கினான். அவர்கள் படைக்கலன்களை உதிர்த்துவிட்டு தலைவணங்கினர். ஒருவர் “கதிரவன் மைந்தன்! இச்சிற்றூரில் கதிரவன் மைந்தன் எழுகிறார்” என்றார். ஒரு கிழவி “வெய்யோனே, எங்கள் இல்சிறக்க வருக” என்று கைகூப்பி அழுதாள்.
துரியோதனன் அவர்கள் நடுவே ஊடுருவிச் சென்ற தன் புரவியை கடிவாளத்தைப்பற்றி திருப்பி “உங்களை இங்கு அடையாளம் கண்டு கொண்டிருக்கின்றனர் அங்கரே” என்றான். அவனருகே சென்று நின்ற சிவதர் “இம்மக்கள் அவரை அறியார். வேறொருவரென அடையாளம் கண்டு கொண்டுவிட்டனர் போலும்” என்றார். “கதிரவன் மைந்தன் என்கிறார்களே?” என்றான் துரியோதனன். ஒரு முதுமகள் இரு கைகளையும் விரித்து தெய்வதமேறியவள் என “பொற்கவசம்! பொலியும் மணிக்குண்டலங்கள்! நான் கனவில் கண்டபடியே” என்றாள். “என் தந்தையே! என் இறையே! எவ்வுயிர்க்கும் அளிக்கும் கொடைக் கையே!”
“ஆம், ஒளிவிடும் குண்டலங்கள்” என்றாள் பிறிதொருத்தி. “புலரி போல் மார்புறை! விண்மீன் என காதணிகள்.” கர்ணன் தன் கைகளைத் தூக்கி அவர்களை வாழ்த்தியபடி அச்சிற்றூரின் இடுங்கிய தெருக்களை கடந்து சென்றான். இருபக்கமும் தலைக்கு மேலும் நெஞ்சுக்கு நிகரிலும் கைகூப்பி மக்கள் வாழ்த்தொலி எழுப்பினர். “கதிர் முகம் கொண்ட வீரர் வாழ்க! எங்கள் குடிபுகுந்த வெய்யோன் வாழ்க! இங்கெழுந்தருளிய சுடரோன் வாழ்க! அவன் மணிக்குண்டலங்கள் வாழ்க! அவன் அணிந்த பொற்கவசம் பொலிக! அவன் அணையில்லா கொடைத்திறன் பொலிக!”
துரியோதனன் கர்ணனை திரும்பித் திரும்பி பார்த்தபடி சென்றான். ஊரைக் கடந்து உருளைக்கற்கள் சேற்றுடன் பரவியிருந்த சரிவில் புரவிக் கால்கள் அறைபட்டு தெறிக்க கூழாங்கற்கள் எழுந்து தெறித்து விழும் ஒலிகள் சூழ இறங்கிச் சென்றபோது துரியோதனன் திரும்பி “எதைப் பார்த்தார்களோ அங்கரே? சூதர்கள் பாடும் அந்த மணிக்குண்டலங்களையும் பொற்கவசத்தையும் பார்க்காதவன் நான் மட்டும் தானா?” என்றான்.
கர்ணன் “எளிய மானுடர், கதைகளில் வாழ்பவர்கள்” என்றான். “இல்லை, கற்பனையல்ல. அவ்விழிகளை பார்த்தேன். அவை தெய்வங்களைக் காண்பவை என்றுணர்ந்தேன். கர்ணா, ஒரு சில கணங்கள் அவ்விழிகள் எனக்கும் கிடைக்கும் என்றால் உன் கவசத்தையும் குண்டலத்தையும் நானும் பார்த்திருப்பேன்” என்றான் துரியோதனன். “சொல்லாடுவதற்கான இடமல்ல இது. இன்னும் ஒரு நாழிகைக்குள் நாம் நகர் நுழைந்தாக வேண்டும்” என்று கர்ணன் சொன்னான். சிவதர் அங்கிலாதவர் போல் இருந்தார். “சொல்லுங்கள்” என்றான் கர்ணன். “நாம் முறையென சென்று கொண்டிருக்கிறோம் அல்லவா?” சிவதர் விழித்துக் கொண்டவர் போல திரும்பி “ஆம். நகர் நுழைந்துவிட்டால் நாம் களம் நடுவில் இருப்போம்” என்றார்.
புல்வெளிச்சரிவில் புரவிகள் மூச்சுவாங்கி பிடரிசிலிர்த்து எடைமிக்க குளம்புகளை எடுத்து வைத்து வால் சுழற்றி மேலேறின. அவற்றின் கடைவாயிலிருந்து நுரைப் பிசிறுகள் காற்றில் சிதறி பின்னால் வந்து தெறித்தன. அப்பால் இலைகள் கோடிழுத்து உருவான தொடுவானின் விளிம்பில் கதிர்ப்பெருக்கு எழுந்தது. பறவைகள் கொண்டாடும் பிறிதொரு புலரி. எங்கோ ஒரு பறவை சங்கென ஒலித்தது. பிறிதொரு பறவை மணியென இசைத்தது. யாழ்கள், குழல்கள், முழவுகள், முரசுகள். எழுந்து கலந்து ஒலித்தன செப்பல்கள், அகவல்கள், அறைதல்கள், கூவல்கள், துள்ளல்கள், தூங்கல்கள். விண்ணகம் சிவந்து கணந்தோறும் புதுவடிவு கொள்ளும் முகில்களின் ஊடாக வெய்யோன் எழும் பாதை ஒன்றை சமைத்தது. மிதந்தவை என கடற்பறவைகள் ஒளியுருகலை துழாவிக் கடந்து சென்றன. அவை சிறகுகளால் துழாவித் துழாவிச் சென்ற இன்மைக்கு அப்பால் இருத்தலை அறிவித்து எழுந்தது செவியறியாத ஓங்காரம்.
சிவதர் கர்ணனிடம் “அரசே அப்பால் உள்ளது ராஜபுரத்தின் உயிர்க்கோட்டை” என்றார். குறுங்காடுகளுக்கு மேல் பச்சைப் புதர்களின் சீர்நிரை ஒன்று சுவரென தெரிந்தது. “அதுவா?” என்றான் கர்ணன். “ஆம், மூன்று ஆள் உயரமுள்ள மண்மேட்டின் மீது நட்டு எழுப்பப்பட்ட முட்புதர்கள் அவை.” துரியோதனன் “புதர்க்கோட்டை என்றபோது அது வலுவற்றதாக இருக்கும் என்று எண்ணினேன். இதை சிறிய படைகள் எளிதில் கடந்துவிட முடியாது” என்றான். கர்ணன் “ஆம். யானைகளும் தண்டு ஏந்திய வண்டிகளும் இன்றி இக்கோட்டையை தாக்குவது கடினம். பாரதவர்ஷத்தில் முன்பு அத்தனை கோட்டைகளும் இவ்வாறே இருந்தன. கற்கோட்டைகள் நாம் மேலும் அச்சம் கொள்ளும்போது உருவானவை” என்றான்.
துரியோதனன் தன் குதிரையை தொடைகளால் அணைத்து குதிமுள்ளால் சீண்டி “விரைவு” என்றான். வில்லை கையில் எடுத்து நாணை கொக்கியில் அமைத்து இழுத்து விம்மலோசை எழுப்பினான். அவ்வோசையை நன்கு அறிந்திருந்த மரத்துப் பறவைகள் கலைவோசை எழுப்பி வானில் எழுந்தன. கர்ணன் தன் வில்லை எடுத்துக் கொண்டான். சிவதர் அவர்களுக்குப் பின்னால் தன் புரவியை செலுத்தினார். மூவரும் இடையளவு உயரமான முட்புதர்கள் மண்டிய வெளியினூடாக சென்றனர். அவர்களின் உடலில் வழிந்த பனித் துளிகளின் ஈரத்தில் காலையொளி மின்னியது. புரவிகள் மிதித்துச் சென்ற மண்ணில் ஊறிய நீரில் செங்குருதியென நிறைந்தது.
துரியோதனன் அமைதி கொண்டுவிட்டிருந்தான். அவனுடைய உடலுக்குள் வாழ்ந்த ஆழுலகத்து பெருநாகங்கள் படமெடுத்துவிட்டன என்று தோன்றியது. தோள்களிலும் புயங்களிலும் தசைகள் இறுகி விம்மி நெளிந்து அமைந்துகொண்டிருந்தன. இரை நோக்கி பாயும் பருந்தென சற்றே உடல் சரித்து தலை முன்நீட்டி காற்றில் சென்றான். கர்ணனின் விழிகளில் மட்டுமே உயிர் இருப்பதாக தோன்றியது. குறுங்காட்டைக் கடந்ததும் சிவதர் அந்தப்பக்கம் என்று கையால் காட்டினார். கர்ணன் துரியோதனனை நோக்கி விழியசைக்க அவன் தலையசைத்தான். மூவரும் அக்கோட்டையை நோக்கி சென்றனர்.
முட்புதர்கள் ஒன்றோடொன்று தழுவிச் செறிந்து எழுந்த பசுங்கோட்டை முற்றிலும் மண் தெரியாததாக இருந்தது. அதன் மேல் வாழ்ந்த பறவைக்குலங்கள் எழுந்து வானில் சுழன்று அமைந்து எழுந்து கூச்சலிட்டுக் கொண்டிருந்தன. சிவதர் தொலைவில் தெரிந்த மஞ்சள் அசைவொன்றைக்கண்டு “அங்கே” என்றார். அவர்கள் அணுகிச்செல்ல மஞ்சள் துணியொன்றை அசைத்தபடி நின்றிருந்த படைவீரன் ஓடிவந்து தலைவணங்கி “விடியலெழுந்துவிட்டது அரசே” என்றான். “மறுபக்கம் நகரம் முழுமையாகவே எழுந்துவிட்டது.” சிவதர் “விழவெழுந்துவிட்டதா?” என்றார். “முதற்கதிரிலேயே முரசுகள் முழங்கின” என்றான் அவன்.
கையால் இங்கு என்று காட்டி அழைத்துச் சென்றனர் வீரர். கோட்டைப்பரப்பில் நடுவே புதர்களை வெட்டி புரவி ஒன்று நுழையும் அளவுக்கு வழி அமைக்கப்பட்டிருந்தது. “புரவிகள் ஏறுமா?” என்றான் துரியோதனன். “தானாக அவை ஏறா. நாம் ஏறிய பிறகு கடிவாளத்தை பிடித்திழுத்து ஏற்றி மறுபக்கம் கொண்டு செல்ல வேண்டும்” என்றான் கர்ணன். “முதற்புரவி ஏறிவிட்டால் அடுத்த புரவிகள் அச்சமழிந்து கற்றுக்கொண்டுவிடும்” என்றார் சிவதர். வீரர்கள் மூவர் அங்கிருந்தனர். அவர்கள் ஓடிவந்து புரவிகளின் கடிவாளங்களை பற்றிக்கொண்டனர்.
துரியோதனனும் கர்ணனும் சிவதரும் புரவிகளிலிருந்து இறங்கி மண்மேட்டில் படிகளைப்போல் வெட்டப்பட்டிருந்த தடங்களில் கால்வைத்து முள்செதுக்கப்பட்ட கிளைகளை பற்றிக்கொண்டு மேலேறினர். அப்பால் சென்று இறங்கி மறுபக்கம் இருந்த குறும்புதர்க்காட்டில் நின்றபடி துரியோதனன் பொறுமையிழந்து கையசைத்தான். இரு வீரர்கள் கோட்டையின் மண்மேட்டின் உச்சியில் நின்றபடி முதல்புரவியின் கடிவாளத்தைப்பற்றி இழுக்க பின்னால் நின்ற இருவர் அதை பின்னாலிருந்து தள்ளி மேலேற்றினர்.
தும்மியபடியும் மெல்ல சீறியபடியும் தயங்கிய புரவி தன் எடையை பின்னங்காலில் அமைத்து தசைவிதிர்க்க நின்றது. பின்னால் நின்ற வீரன் அதன் வாலைப் பிடித்து தள்ள கடிவாளத்தைப் பற்றிய இருவர் இழுக்க அது முன்னிருகால்களையும் அழுந்த ஊன்றி அவர்களின் விசையை நிகர்செய்தது. “இப்படி புரவியை மூவர் இழுக்க முடியுமா?” என்றான் கர்ணன். சிவதர் “இழுத்து மேலேற்ற முடியாது. ஆனால் அது மேலேற வேண்டுமென்று நாம் விரும்புகிறோம் என்பதை அதற்கு தெரிவிக்க முடியும். மேலேறாமல் நாம் விடப்போவதில்லை என்று உணர்ந்து கொண்டால் அது மேலேறும்” என்றார்.
வலுவாக கால்களை ஊன்றி அசைவற்று புட்டம் சிலிர்க்க கழுத்துத்தசைகள் இழுபட்டு அதிர நின்ற புரவி அஞ்சியதுபோல கனைத்தபடி இரு அடிகளை பின்னெடுத்து வைத்து தலையை உதறியது. முன்னால் இழுத்த வீரர் இருவர் மரங்களை பற்றிக்கொண்டு தசைகள் புடைக்க முழு ஆற்றலுடன் அதை இழுத்தனர். திடீரென்று கால்களைத் தூக்கி முன்வைத்து குளம்புகளால் நிலத்தை அறைந்து மேலேறி உச்சிக்கு வந்து மறுசரிவில் சரிந்து பாய்ந்து குளம்புகள் நிலமறைய வந்து சுழன்று நின்றது. அதன் கனைப்போசை கேட்டதும் மறுபக்கம் நின்ற இருபுரவிகளும் எதிர்க்குரல் எடுத்தன. அவற்றில் ஒன்று தானாகவே பாய்ந்து மேலேறி மறுபக்கம் வந்தது.
மூன்றாவது புரவி உரத்த குரலில் அங்கு நின்று கனைத்தது. இரு புரவிகளும் எதிர்க்குரல் கனைத்ததும் அதுவும் துணிவுகொண்டு ஏறி மறுபக்கம் வந்தது. கர்ணன் தன் புரவியில் ஏறுவதற்காக திரும்பியபோது மறுபக்கம் ஓடி வந்த இரண்டு கலிங்க வீரர்களை கண்டான். அவன் விழி அவர்களைத் தொட்ட மறுகணத்தில் அம்புகள் அவர்களைத் தாக்க இருவரும் அலறியபடி புதர்களில் முகம் பதிய விழுந்தனர். திரும்பிய துரியோதனன் உரக்க நகைத்தபடி தன் வில்லை எடுத்து அம்பு தொடுத்து பின்னால் வந்த இருவரை வீழ்த்தினான். மேலும் இருவர் அப்பால் நின்றிருந்தனர். என்ன நடந்தது என்று அவர்கள் உய்த்துணர்வதற்குள் அவர்களில் ஒருவனின் கழுத்தில் அம்பு பாய்ந்தது.
பிறிதொருவன் குனிந்து புதர்களினூடாக பாய்ந்தோடி தன் புரவியை அடைந்து அதன் மேல் ஏறி முடுக்கினான். அப்புரவியின் காலை கர்ணனின் அம்பு தாக்க அது சுழன்று நிலையழிந்து சரிந்து கீழே விழுந்தது. அதன் மேலிருந்த வீரன் நிலத்தை அடைவதற்குள் அவன் நெஞ்சில் அம்பு பாய்ந்து அவனை ஓசையழியச் செய்தது. “தொடங்கிவிட்டது!” என்று தொடையை ஓங்கித் தட்டியபடி துரியோதனன் நகைத்தான். கையசைத்தபடி கர்ணன் முன்னால் பாய்ந்தான். சிவதரும் துரியோதனனும் அவனை தொடர்ந்து வந்தனர்.
ராஜபுரத்தின் தெருக்கள் மரப்பலகைகளை மண்ணில் பதித்து உருவாக்கப்பட்டவையாக இருந்தன. இருபக்கங்களிலும் உயரமற்ற மரக்கட்டடங்கள் நிரை வகுத்தன. குளம்புகள் தரைமரத்தில் பட்டு பேரோசை எழுப்ப அம்மூவரும் தெருக்களில் சென்றபோது இருபக்கங்களிலிருந்த அனைத்துக் கட்டடங்களும் எதிரொலி எழுப்பின. அவற்றின் திண்ணைகளுக்கு ஓடி வந்த கலிங்கக் குடிமக்கள் அவர்களை உடனே அடையாளம் கண்டுகொண்டனர். ஒருவன் “துரியோதனர்! அஸ்தினபுரியின் அரசர்!” என்று கூவினான். சில கணங்களுக்குள்ளாகவே அனைத்துக் கட்டடங்களிலும் குடிமக்கள் முகப்புகளில் குழுமி கூச்சலிடத் தொடங்கினர்.
முதல் காவல்கோட்டத்தில் இருந்த வீரர்கள் “எதிரிகள்! எதிரிகள்!” என்று கூவியபடி விற்களுடனும் வேல்களுடனும் இறங்கி வந்தனர். சாலையை அடைவதற்குள்ளாகவே அம்பு பட்டு கீழே விழுந்தனர். கர்ணனின் அம்பில் மேலே முரசறையச் சென்ற வீரன் அம்முரசின் மேலேயே விழுந்து முரசுடன் புரண்டு ஓசையுடன் கீழே விழுந்தான். என்னவென்றறியாமல் கீழே விழுந்த முரசை நோக்கிச் சென்ற பிறிதொரு வீரன் அம்புபட்டு விழுந்தான். ஒருவர் மேல் ஒருவராக அம்பு பட்டு அவர்கள் விழ விழுந்தவர்கள் மேல் பாய்ந்து புரவிகளும் நகரை அமைத்த வட்டப்பெருவீதியை நோக்கி சென்றன.
தடித்த மரப்பலகைகள் சேற்றில் பதித்து உருவாக்கப்பட்ட அரசவீதியில் இருபுறமும் எழுந்த நூற்றுக்கணக்கான அணித்தூண்களில் மலர் மாலைகளும் பட்டுப் பாவட்டாக்களும் தொங்கி காற்றில் அசைந்தன. வண்ணத்தோரணங்கள் குறுக்காக கட்டப்பட்டு சிட்டுக்குருவிச் சிறகுகளென காற்றில் துடித்துக் கொண்டிருந்தன. மூவரும் பெருவீதியை அடைவதற்குள்ளாகவே அவர்கள் வந்த செய்தியை அனைத்து காவல் மாடங்களுக்கும் முரசுகள் அறிவித்து விட்டிருந்தன.
யாரோ “அஸ்தினபுரியின் படைகள் அரசர் தலைமையில்!” என்று கூவ அக்குரல் ஒன்றுபல்லாயிரமெனப் பெருகி நகரமெங்கும் அச்சத்தை நிறைத்தது. நகர்வாயிலை நோக்கியே பெரும்படை திரண்டு ஓடியது. கோட்டைக்குமேல் எழுந்த காவல்மாடத்து பெருமுரசங்கள் “படைகள்! படைகள்!” என்று அறிவிக்க நகரம் அச்சம் கொண்டு அத்தனை வாயில்களையும் மூடிக்கொண்டது. கடைகளுக்குமேல் தோல்திரைகளும் மூங்கில்தட்டிகளும் இழுத்து போர்த்தப்பட்டன. மக்கள் அலறியபடி இல்லங்களை நோக்கி ஓட சாலைகளில் விரைந்த படைகள் அந்த நெரிசலில் சிக்கிக்கொண்டனர்.
“கோட்டை தாக்கப்படுகிறது! கர்ணன் வில்லுடன் படைகொணர்ந்திருக்கிறார்” என்று ஒரு செய்தி பறவைக்காலில் எழுந்து அரண்மனை நோக்கி சென்றது. பறவை செல்வதற்குள்ளாகவே தொண்டைகள் வழியாக அது அரண்மனையை அடைந்துவிட்டிருந்தது. அரசர் அணிப்பந்தலில் இருந்தமையால் பிறிது எதையும் எண்ணாத படைத்தலைவன் யானைப்படையை கோட்டைவாயில் நோக்கிச்செல்ல ஆணையிட்டான். மூன்று யானைப்படைகள் கோட்டையின் மூன்றுவாயில்களையும் நோக்கிச்செல்ல அப்படைகளால் புரவிகள் தடுக்கப்பட்டன.
கலைந்து குழம்பிய நகரம் சருகுப்புயலடிக்கும் வெளியென தெரிந்தது. அந்தக் கலைதலே அவர்களைக் காக்கும் திரையென்றாகியது. மூன்று புரவிகளில் என அவர்கள் தனித்து நகர்த்தெருக்களில் வரக்கூடுமென எவரும் எண்ணவில்லை. அவர்களைக் கண்டவர்கள் திகைத்து கூச்சலிடுவதற்குள் அம்புகளால் வீழ்த்தப்பட்டனர். சாலைகளில் அவர்களை எதிர்கொண்டவர்கள் அனைவரும் என்ன நடக்கிறதென்றே அறியாதவர்களாக இருந்தனர். ஆனால் அவர்களின் அச்சமே செய்தியென்றாக சற்று நேரத்திலேயே அவர்கள் நுழைந்தது அனைவருக்கும் அறியவரலாயிற்று. சாலையின் இருபுறங்களிலும் வீரர்கள் விற்களுடன் அவர்களை சூழ்ந்துகொண்டனர்.
கர்ணன் தன் புரவியில் பின்னால் திரும்பி அமர்ந்தபடி தொடர்ந்து வந்த வீரர்களை அம்பால் தாக்கி வீழ்த்திக்கொண்டே சென்றான். முன்னால் வந்தவர்களை துரியோதனன் அம்புகளால் வீழ்த்தினான். சிவதர் இருவருக்கும் நடுவே நான்கு திசைகளையும் நோக்கி அறிவிப்புகளை செய்தபடியே வந்தார். “மாளிகை மேல் எழுகிறார்கள்” என்று அவர் சொன்னதுமே பெருமாளிகையின் கூரைமேல் வில்லுடன் எழுந்த வீரன் அம்பு பட்டு சரிந்த மரக்கூரை மேல் உருண்டு கீழே வந்து விழுந்தான். அவனை தொடர்ந்து வந்தவனும் உருண்டு வந்து முதல்வன் மேல் விழுந்தான்.
“காவல் மாடங்கள் மூன்று உள்ளன” என்றார் சிவதர். அவர்களைத் தொடர்ந்து வந்தவர்கள் கீழே விழுந்த உடல்களை தாண்டத் தயங்கி வால்சுழற்றி சுற்றிவந்த புரவிகளால் தடுக்கப்பட அதற்குப் பின்னால் வந்தவர்கள் “ஓடுங்கள்! விரையுங்கள்! தொடருங்கள்!” என்று கூவினார்கள். தங்களை தடுத்த சிறிய படையை உடைத்து முன்னால் சென்ற மூவரும் வலப்பக்கம் திரும்பி அங்கிருந்த காவல் மாடத்தை நோக்கி சென்றனர். அதற்கப்பால் மணத்தன்னேற்பு நிகழும் மன்று கொடிகளாலும் மலர் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அக்காவல் மாடத்தின் மேல் இருந்த முரசு “எதிரி !எதிரி! எதிரி!” என்று முழங்கிக் கொண்டிருந்தது. அதன் காவல் உப்பரிகைகளில் தோன்றிய வீரர்கள் போர்க்கூச்சல்களுடன் அம்புகளை எய்ய துரியோதனனின் தோளில் ஓர் அம்பு பாய்ந்தது. உலுக்கப்படும் மரத்தின் கனிகளென கர்ணனின் அம்பு பட்டு வீரர்கள் நிலம் அதிர விழுந்து கொண்டே இருந்தார்கள்.
ஒருகணமும் விரைவழியாமல் அந்தக் காவல் மாடத்தை கடந்து சென்றனர். அவர்கள் வருவதைக் கண்டதுமே அரண்மனை வளாகத்தை அணைத்திருந்த உயரமற்ற உள்கோட்டையின் தடித்த மரவாயிலை இழுத்து மூட வீரர்கள் முயன்றனர். கர்ணன் அந்தக் கதவின் இடுக்கு வழியாக அப்பால் இருந்த வீரனை அம்பால் வீழ்த்தினான். பிறிதொருவன் ஓடி வர அவனையும் வீழ்த்தினான். இரு கதவுகள் ஒன்றுடன் ஒன்று இணைவதற்குள்ளாகவே அவர்கள் அதைக் கடந்து உள்ளே சென்றனர்.