வெய்யோன் - 16

பகுதி மூன்று : சிறைபெருந்தாழ் – 4

அஸ்தினபுரியின் அவையில் துரியோதனன் துணைவி பானுமதியுடன் கேட்டிருக்க கர்ணன் அமைதியிழந்து அமர்ந்திருக்க சூதன் தன் கதையை தொடர்ந்தான். அவன் அருகே அமர்ந்திருந்த இசைத்துணைவரின் கட்டைத்தாளம் அவன் கால்களை அசையச் செய்தது. உள்ளத்தை அடுக்கியது. சொற்களுக்கு குளம்புகளை அளித்தது.

“அரசே, அரக்கர்குலத்தில் திறல்மிக்க வீரனின் கருவை பெண்கள் தேடி அடையும் குலமுறை முன்பே இருந்தது. ஆகவே அந்தணர் சொல் கேட்டு வாலி மகிழ்ந்து தன் மாளிகைக்கு மீண்டதுமே சுதேஷ்ணையையும் பிறரையும் அழைத்து தீர்க்கதமஸிடமிருந்து தனக்கு குழந்தைகளை பெற்றுத்தரும்படி ஆணையிட்டார்” சூதன் சொன்னான். “அவர்கள் திகைப்புடன் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர். சிந்தை உறைய உடல் நிலைக்க விழிகளாக மாறி நின்றனர்.”

அவர்களுள் வாழ்ந்த அன்னையர் அவரது நிகரற்ற சொல்லாற்றலால் உளம் கவரப்பட்டிருந்தனர். அவர் சொல்லில் மழை பெய்தது, வெயில் எழுந்தது. பறவைகள் வானுக்கு அப்பால் இருந்து வந்தணைந்தன. நீருக்கு வளம் சேர்த்து சென்று மறைந்தன. மத வேழங்கள் அவர் முன் தலை தாழ்த்தி துதிக்கை சுருட்டி பணிந்தன. புவி எங்கும் நிறைந்து ஆளும் புவிக்கு அப்பாற்பட்ட பிறிதொன்றின் துளியென அவர் தோன்றினார். அவரை வயிற்றில் நிறைக்க அவர்களின் கனவாழம் விழைந்தது.

ஆனால் அவர்களுள் வாழ்ந்த கன்னியர் அவர் தோற்றத்தை வெறுத்தனர். கரிய உடலில் பொலிக்காளையின் மணம் வீசியது. தாடி அசைய எந்நேரமும் உணவுண்டபடி கைகளால் நிலத்தை அறைந்து கூச்சலிட்டபடி இருந்த கிழவரை அவர்கள் கண்டதுமே முகம்சுளித்து அகன்றனர். அவரிடம் எப்போதுமிருந்த காமவிழைவை எண்ணி உளம் கூசினர். அது அவர்களை புழுக்களென்றாக்கியது. அவர்களுக்குள் வாழ்ந்த தெய்வங்கள் அவரை நோக்கியதுமே சினம் கொண்டு பன்னிரு தடக்கைகளிலும் படைக்கலங்களுடன் எழுந்தன.

வாலியின் பட்டத்து அரசி சுதேஷ்ணை தீர்க்கதமஸை கண்ட முதற்கணமே உளம் திடுக்கிட்டு அந்த உணர்வழியாமலேயே இருந்தாள். விழியின்மை போல் பெண்களை அஞ்சச் செய்வது பிறிதில்லை. ஆணின் விழிமுன்னரே தன் உடலையும் உள்ளத்தையும் வைக்கின்றனர் பெண்கள். விழிகளூடாகவே ஆணின் அகத்தை அறிகின்றனர். விழி மூடிய முகத்தில் முற்றிலும் அகம் மறைந்தபோது உடல் வெளிப்படுத்திய வெறுங்காமத்தால் முழுப்புகொண்டவராக இருந்தார் தீர்க்கதமஸ்.

பெண்களுக்குள் உறைந்த காட்டு விலங்குகள் தீர்க்கதமஸை ஒரு கணமும் மறவாதிருந்தன. அவரது சிறிய அசைவைக்கூட அவர்களின் தோல்பரப்பே அறிந்தது. தனியறைக்குள்ளும் அவரது விழியின்மையின் நோக்கை தங்கள் உடலில் அவர்கள் உணர்ந்தனர். கனவுகளில் எரியும் கண்களுடன் வந்து இரையுண்ணும் சிம்மம் போல உறுமியபடி அவர்களை அவர் புணர்ந்தார். விழித்தெழுந்து நெஞ்சழுத்தி அவர்கள் தங்களை எண்ணியே வருந்தி தலையில் அறைந்து விழிநீர் சோர்ந்தனர்.

தீர்க்கதமஸ் காமத்தால் பசியால் நிறைந்திருந்தார். ஆணவத்தாலும் சினத்தாலும் எரிந்து கொண்டிருந்தார். மண் நிறைத்து விண் நோக்கி எழும் விழைவென்றே தெரிந்தார். அவர் வந்த ஓரிரு நாட்களுக்குள்ளேயே அக்குலத்தில் ஆண்கள் அனைவரிலும் அவரது விழைவு பற்றிக் கொண்டது. காமத்தில் தங்கள் ஆண்கள் அனைவரும் அவரென ஆவதை பெண்கள் எங்கோ ஒளிந்து நோக்கிய விழியொன்றினால் அறிந்து கொண்டனர். தங்களை அறியும் பெண்ணுடலுக்குள் அவருக்கான விழைவிருப்பதை ஆண்களும் அறிந்திருந்தனர். தொலைவில் மறைந்து நின்று அவரது கரிய பேருடலை நோக்கி இளைஞர் திகைத்தனர். இருப்பும் விழைவும் ஒன்றான தசைச் சிற்பம். விழைவு பல்லாயிரம் விழிகளாக பல்லாயிரம் கைகளாக மாறுவதை கண்டனர்.

கண்ணீருடன் மீண்டு வந்த சுதேஷ்ணை கைகூப்பி “எங்களை இழிவுக்கு தள்ளவேண்டாம். தன் கருவை வெறுக்கும் பெண்ணைப்போல துயர்கொள்பவள் பிறிதில்லை” என்றாள். வாலி சினந்து “என் குலத்திற்கு மூத்தவள் நீ. நமது குருதி இக்காடுகளை ஆளவேண்டுமென்றால் நாம் இயற்ற வேண்டியது ஒன்றே. வேதம் கனிந்த இம்முனிவரின் குருதி நம் குடிமகள்களின் வயிறுகளில் முளைக்க வேண்டும். சென்று அம்முனிவரிடம் அமைந்து அவரது கருவை பெற்று வருக! இது என்குரலென எழும் மூதாதையர் ஆணை” என்றார். சுதேஷ்ணை அக்காட்சியை அகக்கண்ணால் கண்டதுமே உளம்கூசி உடல் சிலிர்த்து “என்னால் அது இயலாது” என்றாள். “ஏனெனில் நான் அவரை அருவருக்கிறேன்.”

துணைவியை விரும்புபவர்கள் அவள் உள்ளத்தை ஒவ்வொரு கணமும் நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வொரு சொல்லிலேயே பாறைப்பிளவுக்குள் பாம்பின் கண்களைப்போல் அவளது காமத்தைக் கண்டடைந்த வாலி “நீ அவர் மேல் காமம் கொண்டிருக்கிறாய், அது நன்று. அவரது குருதியில் பிறந்த மைந்தன் எனக்கு வேண்டும்” என்றார். அவர் அறிந்த அக்காமத்தை அவள் அறிந்திருக்கவில்லை என்பதனால் அவள் நெஞ்சுலைந்து “இல்லை அரசே, எளியவளாகிய என் மேல் பழி தூற்றாதீர்கள். அவரை எண்ணினாலே என் உடல் நடுங்குகிறது. அவரை மானுடன் என்று எண்ணக் கூடவில்லை. விழியின்மை அவரை மண்ணுக்கு அடியிலிருந்து எழுந்து வரும் இருட்தெய்வம் என ஆக்கியிருக்கிறது. அவருடன் என்னால் அணைய இயலாது” என்றாள்.

“இது என் ஆணை” என்றபின் அவளை திரும்பி நோக்காது எழுந்து சென்று மறைந்தார் வாலி. விம்மும் நெஞ்சை அழுத்தி கண்ணீர் விட்டபடி அவள் இருளில் தனித்திருந்தாள். மறுநாள் அரசனின் ஆணை பெற்ற முதுசேடி வந்து சுதேஷ்ணையிடம் “முனிவருடன் சேர உன்னை அனுப்பும்படி எனக்கு ஆணை அரசி. உன்னை மலரும் நறுமணமும் அணிவித்து அவரது மஞ்சத்து அறைக்கு கொண்டுசெல்ல வந்தேன்” என்றாள். சுதேஷ்ணை ஏங்கி அழுதபடி “அன்னையே, இன்றிரவு இதை செய்வேனென்றால் ஒவ்வொரு நாளும் இதை எண்ணி நாணுவேன். பெண்ணென பிறந்துவிட்டாலே கருவறை சுமக்கும் ஊன்தேர்தான் நான் என்றாகிவிடுமா? இரவலனின் திருவோடு போல் இதை ஏந்தி அலைவதன் இழிவு என்னை எரியச் செய்கிறது” என்றாள்.

“குலமகளென நம் குடியின் ஆணையையும் துணைவியென உன் கணவனின் ஆணையையும் அன்றி பிறிதெதையும் எண்ண நீ கடமைப்பட்டவள் அல்ல. விழிதொடும் எல்லையை தெய்வங்கள் வகுத்தளிக்கின்றன. உன் உளம் தொடும் எல்லையை நீயே வகுத்துக் கொண்டால் அறங்கள் எளிதாகின்றன. விரிந்து பரவுபவர் எங்கும் நிலைகொள்ள முடியாதவர். எத்திசையும் செல்ல முடியாதவர். அரசி, இன்றிரவு இது உன் கடமை” என்றாள் முதுமகள்.

ஏழு முதுமகள்கள் அவளை சிற்றோடையின் மலர்மிதந்த நீரில் ஆட்டினர். தலையில் பன்னிரு வகை மலர்களைக் கொண்டு பின்னல் அமைத்தனர். நறுமணம் வீசும் கோரோசனையையும் புனுகையும் ஜவ்வாதையும் அவள் உடலெங்கும் பூசினார்கள். இரவு ஒலிகொண்டு நீர்மணம்கொண்டு தொலைவின் குளிர்கொண்டு இருள் எடைகொண்டு சூழ்கையில் தன் அருகே எரிந்த நெய் விளக்கின் ஒளியில் கண்ணீருடன் அமர்ந்திருந்தாள் சுதேஷ்ணை. “நாங்கள் சென்று முனிவரின் அறையை சித்தப்படுத்திவிட்டு வருகிறோம்” என்று முதுமகள்கள் சென்றதும் நீள்மூச்சுடன் எழுந்து தன் அறை வாயிலில் கூடி நின்ற சேடியரை நோக்கினாள். அவள் உள்ளத்தில் ஓர் எண்ணம் எழுந்தது.

16

“இன்று சென்றால் நான் நாளை மீள மாட்டேன் என்று எண்ணுகிறேன் தோழியரே” என்றாள். “அவரிடம் என்னை அழைத்துச் செல்வதற்கு குறுங்காட்டின் வகிடெனச்செல்லும் நீண்ட பாதை ஒன்றே உள்ளது. பிறவிழி படாது இருளிலேயே அதை கடக்க வேண்டும். எனக்கு மாற்றாக நானென அங்கு செல்ல உங்களில் எவரேனும் உள்ளீரோ?” ஒரு கணம் அக்கன்னியர் கண்களில் எரிந்து அணைந்த அனலைக்கண்டு அவள் நெஞ்சு நடுங்கியது. எவரும் எதுவும் சொல்லாமல் விழிநட்டு நின்றிருந்தனர். மூக்குத்தடம் வியர்க்க ஒருத்தி மூச்சுவிட்ட ஒலி மட்டும் கேட்டது.

“சபரி, உன்னால் இயலுமா?” என்று அவள் தன் உடலை ஒத்த தோற்றம் கொண்ட சேடியிடம் கேட்டாள். அவளோ பின்னால் சென்று சுவரை ஒட்டி நின்று “இல்லை அரசி. நான் அஞ்சுகிறேன்” என்றாள். அவள் இதழ்கள் சொன்னதை விழி சொல்லவில்லை. சுதேஷ்ணை “நீ செல்க!” என்றாள். அவள் தலை குனிந்து “ஆணை” என்றபோது விழிநீர் உருண்டு மூக்கு நுனியில் சொட்டியது. மிக விரைவாக அவளை மலர்சூட்டி மணம் பூசி அணிசெய்து மலர்த்தாலமும் கனிகளும் ஏந்தி பிற இரு சேடியருடன் தீர்க்கதமஸின் மஞ்சத்தறை நோக்கி அனுப்பி வைத்தாள் சுதேஷ்ணை.

அன்றிரவு முழுக்க சேடியர் சூழ தன் அறைக்குள் துயிலாது காத்திருந்தாள். சேடியரும் துயிலவில்லை என்பது அவ்வப்போது எழுந்த நெடுமூச்சுகளிலிருந்து தெரிந்தது. எதை எண்ணிக்கொண்டிருக்கிறோம் என்றெண்ணியபோது அவள் உடல் மெய்ப்பு கொண்டது. கருமுதிராத கன்றை பசுவின் வயிறு கிழித்து எடுப்பதுபோல் மறுநாள் காலையில் கதிரவன் எழக்கண்டாள். கருக்கிருட்டிலேயே திரும்பி வந்த சபரி சேடி ஒருத்தியின் துணையுடன் சென்று கங்கையில் நீராடி மாற்றாடை அணிந்து தன் குடிலில் தனித்திருந்தாள். அவளை தன்னிடம் அழைத்து வரும்படி சுதேஷ்ணை சொன்னாள். வந்தவள் இரையுண்ட மலைப்பாம்பென அமைதி கொண்டிருப்பதை உடல் அசைவுகளில் உணர்ந்தாள்.

மதம்கொண்ட கண்களைத் தாழ்த்தி கை கூப்பி தலைகுனிந்திருந்தவளிடம் “பொறுத்தருள் தோழி. என் அரசுக்கென இதை நீ செய்தாய். என்னால் இயலவில்லை. அவரை நான் மானுடன் என்று எண்ணவில்லை” என்றாள். “மதவேழம் சிறுசுனையை என” என்றாள் பின்னால் நின்ற முதுசேடி. அப்போது ஒரு கணம் அனலொன்று அவ்வறையை கடந்துசென்றது போல் சபரியின் முகத்தில் தோன்றிய செம்மையைக் கண்டு சுதேஷ்ணை உளம் அதிர்ந்தாள். பிறிதொரு சொல் எடுக்காமல் செல்க என்று கைகாட்டினாள்.

மறுவாரமும் அவள் அவரிடம் செல்ல வேண்டுமென்று வாலியின் ஆணை வந்தது. அம்முறை பிறிதொரு சேடியை அவள் அனுப்பினாள். திரும்பி வந்த அவளும் சொல்லிழந்து தன்னுள் நிறைந்து தனிமை நாடுபவளாக ஆனாள். அவர்களைக் கண்ட பிற சேடியர் ஒவ்வொருவரும் தீர்க்கதமஸிடம் செல்வதற்கு விழிகளால் முந்தினர். அவர்களின் விழைவு சுதேஷ்ணையை மேலும் மேலும் அகம் பதறச்செய்தது. பன்னிரண்டு சேடியர் மாறி மாறி தீர்க்கதமஸுடன் இரவுறங்கினர்.

தன் துணைவியர் கருவுறாது சேடியர் கருவுற்றதை வாலி அறிந்தார். குலப்பூசகரை அழைத்து குறிநாடச் சொன்னார். அவர்கள் பன்னிரு அன்னையர் ஆலயத்தின் முன் அப்பெண்களை அமரவைத்து மலரீடும் ஒளியீடும் உணவீடும் நீரீடும் செய்து பூசெய் முறைமை முடித்தனர். மூதன்னை வெறியாடி பூண்டு எழுந்த பூசகர் தன் நீள்வேலை நிலத்தில் அறைந்து துள்ளிக் குதித்துச் சுழன்று பெருங்குரலெடுத்து கூவினர். “பன்னிரு பெருவைதிகர் கருவுற்ற மணிவயிறுகளுக்கு வணக்கம்! பன்னிரு வைதிகக் குலங்களை எழுப்பிய விதைநிலமாயிற்று எம் குலம்! வேதம் உரைத்து இவர்கள் வெல்லும் அவைகளில், இவர்களின் சொல்எழுந்து நிற்கும் மன்றுகளில், இவர்கள் விண்ணேறிச் செல்லும் தடங்களில் எழும் ஆலயங்களில் நம் குலப்பெயர் என்றும் நிலை பெறுவதாகுக! ஓம், அவ்வாறே ஆகுக!” கூடி நின்ற குலத்தார் மெய்விதிர்ப்புற்று கண்ணீர் துளித்து “ஆம், அவ்வாறே ஆகுக!” என்று கூவினர்.

அன்றிரவு சுதேஷ்ணை கண்ணீருடன் தனித்து தன் அறைக்கு வந்து கதவை மூடி இருளில் உடல் குறுக்கி அமர்ந்தாள். சினந்து அவள் அறைக்கு வந்த வாலி கதவை ஓங்கி அறைந்து “இழிமகளே, திற! அறையை திற இப்போதே!” என்றார். அவள் அசையாது அமர்ந்திருக்க ஓங்கி உதைத்துத் திறந்து உடைவாளை உருவி அவள் தலைமயிரைப் பற்றி இழுத்து வெட்ட ஓங்கினார். கைகூப்பி இறப்புக்குத் துணிந்து அவள் அசையாதிருக்கக் கண்டு வாள் தாழ்த்தினார். “உன்னிடம் நான் இட்ட ஆணை என்ன? இன்று இதோ என் அரசியர் அல்லாத பெண்கள் அவர் கருவை ஏந்தியிருக்கிறார்கள்” என்றார்.

அவள் கண்ணீருடன் விழிதூக்கி “இப்போதே நான் அவரிடம் செல்கிறேன். இத்தருணத்தில் மட்டுமே பெருவிழைவை உணர்கிறேன்” என்றாள். “செல்!” என்று வாலி ஆணையிட்டார். “இக்காடுகளை ஆளும் பெருங்குலத்தலைவனை கருவுற்று மீள். இம்முறை அது தவறினால் உன் தலை கொய்வேன் என்று தெய்வங்களைத் தொட்டு ஆணையிடுகிறேன்.” அன்று அவளே தன்னை மலரும் மணமும் மணியும் கொண்டு அணி செய்து கொண்டாள். புத்தாடை அணிந்தாள். இருளில் மலர்ச்செடியைக் கடந்து வரும் இளந்தென்றல் போல ஒரு நறுமணமாக குறுங்காட்டைக் கடந்து தீர்க்கதமஸின் குடிலை அடைந்தாள்.

அவருடன் இருக்கையில் ஒன்றை உணர்ந்தாள். ஆணென்பது முதன்மையாக தந்தை. காமமென்பது முதன்மையாக ஆண்மை. ஆண்மையென்பது முதன்மையாக கனிவின்மை. உவகை என்பது வெறும் விலங்காக எஞ்சுவது. முற்றிலும் நிறைந்தவளாக அவள் திரும்பி வந்தாள்.

கருக்கிருட்டில் நீராடி வரும் வழியில் பன்னிரு அன்னையர் ஆலயத்தின் முன் கைகூப்பி நின்று வணங்குகையில் காலைமலர் மணமொன்று ஆழ்காட்டில் விழுந்து எழுந்து வந்த குளிர் தென்றலில் ஏறி அவளைச் சூழ்ந்து உள்ளத்தின் ஆழத்தில் எண்ணமொன்றை எழுப்புகையில் அறிந்தாள், தான் கருவுறப்போவதை. அங்கிருந்து கூப்பிய கைகளில் கண்ணீர் உதிர திரும்பிவந்தாள். மறுநாள் வாலியின் இரண்டாவது மனைவி பிரபை தீர்க்கதமஸுடன் இருந்தாள். அவரது பிறமனைவியர் சுதேவியும் பானுப்பிரபையும் சந்திரப்பிரபையும் அவருடன் இரவு அணைந்தனர். அவர்கள் கருவுற்று ஐந்து மைந்தர்களை ஈன்றனர்.

அங்கன் வங்கன் கலிங்கன் புண்டரன் சுங்கன் என்று ஐந்து பேருடல் மைந்தர்கள் அவரது ஆறாப்பெருவிழைவின் வடிவங்களென அப்பெண்டிரின் வயிறு திறந்து இறங்கி மண்ணுக்கு வந்தனர். கரியதோற்றம் கொண்டவர். விழைவு எரியும் கனல் துண்டுகளென விழிகொண்டவர். ஆணையிடும் குரல் கொண்டவர். கருவிலேயே அவர்களுக்கு வேதத்தின் செயல்பருவம் அளிக்கப்பட்டிருந்தது. முக்குணங்களுடன் அது அவர்களில் வேரூன்றி கிளைபரப்பி நின்றது. நான் என்றும் எனக்கு என்றும் இங்கு என்றும் இப்போது என்றும் அவர்களில் நுரைத்துக் கொப்பளித்தது புவியணைந்த முந்தையரின் முதற்சொல்லென திகழ்ந்த எழுதாக்கிளவி.

தன் இடக்காலால் தாளமிட்டு சற்றே சுழன்று விரல் தொட்ட வீணை எழுப்பிய ரீங்காரத்துடன் குரலிணைத்து சூதன் சொன்னான். “அவையீரே, அவ்வாறு உருவாயின ஐந்து பெருங்குலங்கள். அங்கன் வங்கன் கலிங்கன் புண்டரன் சுங்கன் எனும் ஐந்து மைந்தரால் பொலிந்தார் வாலி. ஐந்து பெரும்தோள்கள், ஐந்து விரிமார்புகள், ஐந்து விழைவுகள். ஐந்து அணையாத சினங்கள். ஐந்து இலக்குகள் கொண்ட அம்புகள். அங்கமும் வங்கமும் கலிங்கமும் புண்டரமும் சுங்கமும் என ஐந்து நாடுகள் பிறந்தன. வேதச் சொல் நிலை நிறுத்திய அவர்களின் மேல்கோள்மையை காடுகளிலும் சதுப்புகளிலும் கடல்நிலங்களிலும் வாழ்ந்த நூற்றெட்டு குடிகளும் ஏற்றன.

விழியிழந்த காமம் கொண்டிருந்த தீர்க்கதமஸின் குருதியில் இருந்து மேலும் குலங்கள் எழுந்தன. உசிதை எனும் காட்டுப் பெண்ணில் பிறந்தனர் உசிநாரர்கள். சௌப்யை எனும் காட்டுப் பெண் சௌப்ய குலத்தை உருவாக்கினாள். பதினெட்டு அசுர குடிகளுக்கும் அவர் குருதியிலிருந்து மைந்தர் எழுந்தனர். பிரஜாபதிகள் உயிரின் ஊற்றுக்கள். நூறு பொருள்கொண்ட வேதச்சொல் அவர்களின் குருதித்துளி.

வற்றா பெருவிழைவே உடலென்றான தீர்க்கதமஸ் முதுமை அடைந்தார். அவர் குருதியில் வாழ்ந்த தெய்வங்கள் அனைத்தும் மண்ணிறங்கி பரவின. தசைநார்கள் அவரது விழைவை வாங்கி வெம்மை கொள்ளாதாயின. ஒருநாள் அவர்முன் படைக்கப்பட்ட உணவுக்குவை முன் அமர்ந்தவர் ஓர் உருளை அன்னத்தை எடுத்து கையில் வைத்து அசைவற்று அமர்ந்திருந்தார். அவர் வயிற்றின் அனல் அணைந்திருந்தது. தன்னை கங்கையின் கரையில் கொண்டு சென்று அமர வைக்கும்படி அவர் தன் மைந்தர்களிடம் கூறினார்.

தீர்க்கதமஸின் குருதியில் பிறந்த ஆயிரத்தெட்டு மைந்தர்கள் பொன்மஞ்சள் மூங்கிலால் ஆன சப்பரம் ஒன்றை சமைத்தனர். அதில் அவரை ஏற்றி அங்கனும் வங்கனும் கலிங்கனும் சுங்கனும் நான்கு முனைகளை தூக்கிக் கொண்டு செல்ல, புண்டரன் கொம்பூதி முன்னால் சென்றான். கோல்கள் ஏந்தி தந்தையை வாழ்த்தியபடி மைந்தர்கள் அணி ஊர்வலமாக அவரை தொடர்ந்தனர். அவர்கள் அவரது பெயர்களைச் சொல்லி வாழ்த்தினர். தீர்க்கசிரேயஸ் என்றும் தீர்க்கபிரேயஸ் என்றும் அவர் அழைக்கப்பட்டார்.

கங்கைக்கரையை அடைந்து அங்குள பெரும்பாறை ஒன்றின் மேல் அவரை அமர்த்தினர். வடக்கு நோக்கி தர்ப்பையில் அமர்ந்த தீர்க்கதமஸ் தன் மைந்தரிடம் “கிளைகள் அடிமரத்தை நோக்கலாகாது. திரும்பி நோக்காமல் விலகிச்செல்க!” என ஆணையிட்டார். “தந்தையே, தங்கள் குருதியிலிருந்து நாங்கள் கொண்ட பெருவிழைவாலேயே இங்கிருக்கவும் இவற்றையெல்லாம் மீறி வளரவும் ஆற்றல் கொண்டவரானோம். எங்கள் குடிக்கெல்லாம் முதல்அனலென வந்தது தங்கள் காமம். விழியின்மையால் பெருநெருப்பாக்கப்பட்ட அந்தக் காமத்திற்கு தலைவணங்குகிறோம். அதுவே எங்களுக்கு பிரம்மத்தின் வடிவம் என்று அறிகிறோம். என்றும் எங்கள் குலங்களில் அவ்வனல் அழியாது எரியவேண்டுமென்று அருள்க!” “ஆம், அவ்வாறே ஆகுக!” என்று தீர்க்கதமஸ் அருளுரை புரிந்தார்.

தனிப்பாறை மேல் பனிரெண்டு நாட்கள் உணவின்றி நீரின்றி தன்னை மேலும் மேலும் ஒடுக்கி சுருங்கி அவர் இறுதித் தவம் இயற்றினார். வேதவேதாங்கங்களைச் சுருக்கி ஒற்றைவரியாக்கினார். அதை ஓம் எனும் ஒற்றைச் சொல்லாக்கினார். அதை ஒலியின்மையென அவர் ஆக்கிக்கொண்டபோது சங்கு சக்கர தாமரை கதாயுதத்துடன் அவர் முன் எழுந்த பரந்தாமன் “வருக!” என்றார். அவரை நோக்கி “உனது உலகில் மாற்றிலா காமத்திற்கு இடமுண்டா?” என்றார் தீர்க்கதமஸ்.

“இல்லை, அனைத்து உணர்வுகளும் சாந்தமெனும் இறுதி உணர்வால் சமன் செய்யப்பட்ட உலகே வைகுண்டமென்பது” என்றார் பெருமாள். “விலகுக!” என்றார் தீர்க்கதமஸ். மானும் மழுவும் சூலமும் உடுக்கையும் ஏந்தி முக்கண் முதல்வன் எழுந்தருளிய போது “அங்குளதா அணைதல் அறியா காமம்?” என்றார். “இங்கு அனைத்தையும் தூய்மைப்படுத்தும் அனல் ஒன்றே உள்ளது. எஞ்சுவது நீறு” என்றார் சிவன். “நன்று, அகல்க!” என்றார் தீர்க்கதமஸ்.

வஜ்ரமும் தாமரையும் ஏடும் விழிமணிமாலையும் என தோன்றிய நான்முகனிடம் “அங்குளதா படைத்தலன்றி பிறிதறியாத காமம்?” என்றார். “இங்குளது படைத்தல். ஆனால் அதில் பற்றென ஒன்றில்லை” என்றார் கலைமகள் கொழுநன். “நன்று, நீங்குக!” என்றார் தீர்க்கதமஸ். மேலும் மூன்றுநாள் தவம் செய்து அவர் உடல் ஒடுங்குகையில் வெண்ணிற யானைமேல் மின்னல்படையும் தாமரையும் ஏந்தி வந்து நின்றார் இந்திரன். “விண்ணவர்க்கரசே அங்குளதா முடிவிலி என நீளும் பெருங்காமம்?” என்றார். “ஆம், புல்நுனிகளிலும் காமம் மட்டுமே ததும்பி நிற்கும் பேருலகம் என்னுடையது” என்றார் இந்திரன்.

“அவ்வண்ணமெனில் என்னை அழைத்துச் செல்க!” என்றார் தீர்க்கதமஸ். ஐராவதம் நீட்டிய துதிக்கை முனையை அவர் பற்றிக் கொள்ள அவரைச் சுருட்டி எடுத்து தன் மத்தகத்தின் மேல் அமர்த்திக் கொண்டது. இந்திரன் தன் பாரிஜாத மாலையைக் கழற்றி அவர் தோளில் இட்டார். ஒளி மிக்க இருவிழிகள் அவர் முகத்தில் திறந்தன. இருண்ட நிழல்கள் ஆடும் மண்ணுலகை நோக்கி “அது என்ன?” என்று கேட்டார். “உத்தமரே, இத்தனை நாள் தாங்கள் இருந்த உலகு அது” என்றார் தேவர்க்கரசன்.

“இவ்விருளிலா மனிதர்கள் வாழ்கிறார்கள்?” என்றார் தீர்க்கதமஸ். “ஆம், அவ்விருளை ஒளியென நோக்கும் இரு துளைகள் அவர்களின் முகத்தில் உள்ளன” என்றார் அமுதுறைவோன். பொன்னொளியும் மலரொளியும் பாலொளியும் நிறைந்த விண்ணுலகை நோக்கி விழி திருப்பி “இனி நான் இருக்கும் உலகு அதுவா?” என்றார் தீர்க்கதமஸ். “ஆம் உத்தமரே, அங்கு விழியோடிருப்பீர், விழைவதையே காண்பீர்” என்றார் இந்திரன்.

“முதற்தந்தையை வாழ்த்துக! கட்டற்ற பெருவிழைவான கரியோனை வாழ்த்துக! மாளா பேருருவனை வாழ்த்துக!” என்று சூதன் கதையை சொல்லி முடித்தான். “இன்றும் எரிகின்றன ஐந்து நாடுகளின் அனைத்து இல்லங்களிலும் விழியிழந்த முதற்தாதை தன் சொல்லிலும் உடலிலும் கொண்ட பேரனலின் துளிகள். அடுப்பில் அனலாக. அகலில் சுடராக. சொல்லில் விழைவாக. கனவுகளில் தனிமையாக. ஆம், அது என்றென்றும் அவ்வாறே சுடர்க! ஓம்! ஓம்! ஓம்!”