வெய்யோன் - 10

பகுதி இரண்டு : தாழொலிக்கதவுகள் – 7

சம்பாபுரியின் அவைக்கூடம் கர்ணன் அங்கநாட்டரசனாக வந்தபின் புதிதாக கட்டப்பட்டது. மாமன்னர் லோமபாதரால் கட்டப்பட்ட பழைய அவைக்கூடம் முப்பத்தாறு தூண்களுடன் வட்ட வடிவில் சிறியதாக இருந்தது. முதல் மாமன்னர் அங்கரின் காலத்திலிருந்து சம்பாபுரியின் அரசர்கள் அரண்மனையை ஒட்டிய ஆலமரத்தடியில் குடியினருடன் நிகரென தரையில் கால்மடித்தமர்ந்து அவையாடுவதே வழக்கம். லோமபாத மன்னரின் காலத்தில் மகத சக்ரவர்த்தி பிருஹத்ஷத்ரர் அங்கநாட்டுக்கு வருகை செய்ததை ஒட்டி மையப்பீடத்தில் அரியணை போடப்படும்வகையில் அமைந்த அந்த அவைக்கூடம் பத்மசபை என அழைக்கப்பட்டது.

கர்ணன் அங்கநாட்டுக்கு வந்ததும் மேலும் பெரிய அவைக்கூடத்தை வெளியே ஒழிந்துகிடந்த பெரிய குதிரைமுற்றத்தில் கட்ட ஆணையிட்டான். நூற்று எட்டு மரத்தூண்களுக்கு மேல் வளைந்த மூங்கில்களால் சட்டமிடப்பட்ட வண்டிக்கூரை கூட்டின்மேல் மரப்பட்டை வேயப்பட்ட கூரையும் பதினெட்டு நீள் சாளரங்களும் கொண்டது. முன்பு சம்பாபுரியின் பேரவையில் அந்தணரும் ஷத்ரியரும் வைசியரும் அன்றி பிறர் அவையமர முறையொப்புகை இருக்கவில்லை. உழவரும், சுமையாளரும், மீனவரும், குகரும் உள்ளிட்ட சூத்திரகுடிகள் அனைவருக்கும் இடமுள்ளதாக பேரவை ஒன்றை கர்ணன் அமைத்தான்.

அவ்வெண்ணத்தை முதலில் அங்கநாட்டு அவையில் அவன் சொன்னபோது சில கணங்கள் அவை திகைத்தது போல் அமர்ந்திருந்தது. கர்ணன் அந்த அமைதியைக் கண்டு திரும்பி அமைச்சரை நோக்கிவிட்டு “இது ஒன்றும் புதிய செய்தி அல்ல. முன்னரே மகதத்தின் அவையும் அஸ்தினபுரியின் அவையும் அவ்வாறே அமைந்துள்ளது. துவாரகையின் அவையில் வேடர்குலங்களும் அயல்வணிகரும் நிஷாதர்களும்கூட இடம்பெற்றுள்ளனர்” என்றான்.

அவையின் எண்ண ஓட்டங்கள் விழிகளில் தெரிந்தன. புன்னகையுடன் “நான் சூதன் மகன் என்பதாக எண்ணுகிறீர்கள்” என்றதுமே கலைந்த ஒலியில் “இல்லை, அவ்வாறல்ல” என்று சொன்னார்கள். “ஆம். நான் அதை அறிவேன். நான் சூதன்மகன் என்பதால் சூத்திரர்களுக்கு உரிய அரசனாக இருப்பேன் என்று ஐயம் கொள்கிறீர்கள். இந்த அவையமர்ந்த முன்னோர்களைச் சான்றாக்கி ஒன்று சொல்வேன், குடிமக்கள் அனைவருக்கும் நெறி நின்று முறை செய்யும் அரசனாக இருப்பேன்” என்றான். “ஆனால் என் கோல்கீழ் ஒருபோதும் சூத்திரரோ பிறரோ அயலவர் என்றும் கீழவர் என்றும் தன்னை உணரமாட்டார்.”

ஹரிதர் அவையின் உளக்குறிப்பைப் புரிந்துகொண்டு “நானே இதை இந்த அவையில் முன்வைக்க வேண்டுமென்று இருந்தேன் அரசே” என்றார். “ஏனெனில் மகதம் நமக்கு பெரும் அச்சுறுத்தலாக எழுந்து வந்து கொண்டிருப்பதை தாங்கள் அறிவீர்கள். யானையின் அருகே முயல் போல அங்கம் இன்று மேய்ந்துகொண்டிருக்கிறது. மகதமோ மேலும் மேலும் அசுர குலங்களையும் தொலைதூரத்து அரக்கர் குலங்களையும் நிஷாதர்களையும் மச்சர்களையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு வீங்கி பெருக்கிறது. இங்கு இன்னும் நாம் பழங்கால ஷத்ரிய அவை நெறிகளை பேணிக்கொண்டிருந்தோம் என்றால் நம் குடிகளிலேயே மகதத்திற்கு ஆதரவானவர்கள் பெருகக்கூடும்.”

அவை அச்சொற்களை ஒரு சிறு நடுக்கத்துடன் பெற்றுக்கொண்டதை காணமுடிந்தது. “இங்குள்ள சூதர்களுக்கும் சூத்திரர்களுக்கும் நிஷாதர்களுக்கும் இதுவும் அவர்கள் அவையே என்ற எண்ணம் வந்தாக வேண்டும். இதை தாங்கள் செய்யவேண்டுமென்பதே மூதாதை தெய்வங்களின் எண்ணம் போலும்” என்றார் ஹரிதர். “இது ஒரு தருணம். இதை தவறவிட்டால் மேலும் பழிபெருகும். தாங்கள் இங்கே சொன்னதைப்போல தாங்கள் சூதர்மகன். இங்குள்ள அடிநிலையர் தங்களில் ஒருவராக உங்களை எண்ணுகிறார்கள். தாங்களும் இதைச்செய்யவில்லை என்றால் இனி அது இங்கே நிகழப்போவதில்லை என்ற கசப்பே எஞ்சும்.”

அந்த வலுவான கூற்றை மீறிச்செல்ல அவையினரால் முடியவில்லை. வைதிகரான விஷ்ணுசர்மர் “ஆனால் சூத்திரர் அவை புகுந்தால்…” என்று தயங்கினார். கர்ணன் “கூறுங்கள் வைதிகரே, தங்கள் கூற்று மதிப்புடையதே” என்றான். “சூத்திரர் ஏன் அவை புகக்கூடாது என்று முன்னர் சொன்னாரென்றால் அவர்களின் குடிகளின் எண்ணிக்கை மிகுதி. குடிக்கொரு உறுப்பினர் என்று இங்கு அமரச்செய்தாலும் அவையை அவர்களே நிறைப்பர். இங்கு அவர்களின் குரலே மேலோங்கி ஒலிக்கும்” என்றார் விஷ்ணுசர்மர். “மேலும் ஒன்றுண்டு. இதுகாறும் அவர்கள் அரசநெறிகளில் ஈடுபட்டதில்லை என்பதால் அது குறித்த அறிமுகமோ, இனிமேல் கற்றுத் தெளியும் நூற்பயிற்சியோ, கொண்ட நிலை பிறழா உறுதியோ அவர்களுக்கு இருக்க வாய்ப்பில்லை.”

கர்ணன் மறுமொழி சொல்வதற்குள் ஹரிதர் “நன்று சொன்னீர் வைதிகரே, அவை அனைத்தையும் நாம் கருத்தில்கொண்டாகவேண்டும்” என்றார். “ஆனால் இவை இன்றுள்ளனவா என்று பார்ப்பதைக் காட்டிலும் இவற்றை எவ்விதம் களைவது என்பதே நமக்கு முதன்மையானது. மகதத்திலும் இந்திரப்பிரஸ்தத்திலும் அனைத்து குலங்களும் அடங்கிய பேரவைகள் எங்ஙனம் செயல்படுகின்றன என்று பார்த்தாலே அதற்கான விடை கிடைத்துவிடும். அதை செய்வோம். நாமொன்றும் புதிதாக எதையும் தொடங்கவில்லை” என்றபின் பிறர் மறுமொழி பேசுவதற்குள் “மகதத்தின் உயர்குடிகள் தங்கள் கீழ்க்குடிகளை பயிற்று எடுக்கமுடியும் என்றால் நம்மால் மிக எளிதாக முடியும். நாம் நம் அறத்திறனால் மேலும் நல்லெண்ணத்தை ஈட்டியவர்கள். நம் முன்னோர் காலம் முதலே கீழ்க்குடிகள் நம்மை தந்தையரென எண்ணிவருபவர்கள்” என்றார்.

அவையினரில் சிலர் பேச விரும்பி அறியாது அதற்கான உடலசைவை உருவாக்கினர். ஆனால் ஒட்டுமொத்தமாக அவையினருக்கு அவர்கள் எழுப்பும் அனைத்து ஐயங்களுக்கும் ஹரிதர்தான் மறுமொழி சொல்லப்போகிறார் என்பது தெளிவானது. எனவே மேற்கொண்டு குரல்கள் எழவில்லை. ஹரிதர் புன்னகைத்து தலைவணங்கி “பேரவையில் மறுபடியும் வினாக்கள் எழாதது அது உளஒப்புதலை அளித்துள்ளதையே காட்டுகிறது அரசே” என்றார். கர்ணன் அவரை திரும்பி நோக்கிவிட்டு. “அல்லது, சொல்லத்தயங்கியவர் எவரேனும் இருந்தால் எழுந்து உரை எடுக்கலாம்” என்றான்.

அவையில் பலரிடம் எழப்போகும் உடல் அசைவுகள் எழுந்தாலும் எவரும் எழவில்லை. கர்ணன் “நான் மகதத்தின் அவை நடப்புகளை நன்கு கற்றறிந்துளேன். அவையை முன்னவை பின்னவை என்று அவர்கள் இரண்டாக பிரித்துள்ளார்கள். முன்னவையில் நூலறிந்த வைதிகரும் போர் முகம் கொள்ளும் ஷத்ரியரும் கருவூலத்தை நிறைக்கும் வைசியரும் அமர்ந்திருப்பார்கள். பின்னவை சூத்திரர்களுக்குரியது. அவர்களின் உட்குலம் ஒன்றுக்கு இருவர் என இங்கு உறுப்பினர் அமர்ந்திருப்பார்கள். இறுதி முடிவெடுக்கையில் குலத்திற்கு ஒரு கருத்தே கொள்ளப்படும்” என்றான்.

“ஆம், அது நன்று” என்றார் பெரு வணிகரான சுருதசோமர். வைதிகரான சுதாமர் “எனினும் ஒரு வினா எஞ்சியுள்ளது. இங்கு நடப்பது அவர்களுக்கு புரியவேண்டுமல்லவா?” என்றார். “வைதிகரே, அத்தனை குலங்களும் தங்களுக்குரிய குலநடப்புகளையும் அவைமுறைமைகளையும் நெறிகளையும் கொண்டுள்ளன. ஒவ்வொரு குலமும் ஒரு சிறு அரசே. எனவே முதல் சில நாட்களுக்குள்ளேயே அரசுசூழ்தலை அவர்கள் கற்றுக் கொள்வார்கள். இங்கு நடப்பது எதுவும் அவர்களுக்கு அயலாக தோன்றாது. மகதத்தின் அவையில் மலைவாழும் அரக்கர் குலத்து உறுப்பினர்கூட அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் அறியாத அரசு சூழ்தல் ஏதும் அங்கு இல்லை” என்றான் கர்ணன்.

முதியவரான பிரீதர் எழுந்து “ஆனால் எந்த மொழியில் இங்கு அவைசூழப் போகிறோம்? தெய்வங்களுக்கு உகந்த செம்மொழியிலென்றால் இங்குள்ள சூத்திரர்கள் அம்மொழி பேசுவார்களா?” என்றார். கர்ணன் பேச நாவெடுப்பதற்குள் ஹரிதர் “சிறந்த வினா அது, பெருவணிகரே” என்றார். “இங்கு விவாதங்களனைத்தும் அங்க நாட்டு சம்பா மொழியில் நிகழட்டும். அவற்றை வைதிகர் உயர் செம்மொழியில் தொகுக்கட்டும். ஆணைகள் செம்மொழியில் இருக்கட்டும். அவ்வாணைகளை சம்பாமொழியில் சூத்திர குலங்களுக்கு அளிப்போம். அவ்வழக்கம் ஏற்கெனவே இங்குள்ளது.”

அவையில் வணிகர் பகுதியில் மெல்லிய கலைந்த பேச்சொலி எழக்கண்டு ஹரிதர் அத்திசை நோக்கி திரும்பி “இன்றுவரை வணிகத்திற்கு உகக்காத குலமுடிவுகளை சூத்திரர்கள் தங்கள் அவைகளில் எடுப்பது வழக்கமாக உள்ளது. அரசாணைகளால் அவர்களை நாம் கட்டுப்படுத்தி வந்தோம். அவ்வாணைகள் பெரும்பாலும் ஏட்டிலேயே இருக்கும். ஏனென்றால் ஏடருகில் போர்வாள் இருந்தால் மட்டுமே அவை செல்லுபடியாகும். அது எப்போதும் இயல்வதல்ல. இங்கு அவைகூடி அவர்களும் சேர்ந்து அவ்வாணைகளை பிறப்பித்தால் அக்குலங்களும் அவ்வாணைகளை ஏற்றாக வேண்டும். ஏனென்றால் அவை அவர்கள் தங்களுக்குத் தாங்களே இடுபவை. வணிகர்களுக்கு மிக உகந்தது அவர்கள் இங்கு அவையமர்வது” என்றார்.

வணிகர்களுள் ஒருவர் “ஆம், இங்கு உள்ளதைவிட மகதம் வணிகர்களுக்கு உகந்த நெறிகளை கொண்டுள்ளது” என்றார். இன்னொருவர் “அங்கே நாங்கள் அரசரிடமே அனைத்தையும் பேசிக்கொள்ளலாம். அவையேற்பு நிகழ்ந்தால் மட்டும்போதும். குடிகள் தோறும் சென்று அவர்களை பணியவேண்டியதில்லை” என்றார்.

வைதிகர்களின் முகம் மாறுபடுவதை கர்ணன் கண்டான். ஹரிதர் “இப்போது சூத்திரக்குலங்களில் முறையான வேள்விகள் எதுவும் நிகழ்வதில்லை. அவர்களின் குலச்சடங்குகளுடனே நின்றுவிடுகிறார்கள். இங்கு குலத்தலைவர்களாக வருபவர்களுக்கு அரசு முறையாக தலைப்பாகை கட்டும் உரிமையை அளிப்போம். செங்கோல் ஏந்தும் பொறுப்பையும் அளிப்போம். அதன்பின் அவர்களும் அரசர்களே. அவர்களின் குடிவாழும் சிற்றூர்தொகை வைதிகநோக்கில் ஒர் அரசே. அவர்கள் சிறிய அளவிலேனும் வேள்விகளை செய்தாக வேண்டும்” என்றார்.

வைதிகர்களின் முகங்கள் மாறுவதைக் கண்டு கர்ணன் புன்னகையுடன் ஹரிதரை பார்த்தான். ஹரிதர் சிரிப்பு ஒளிர்ந்த விழிகளால் அவனை பார்த்துவிட்டு “படைக் குலத்தாருக்கு மாற்றுக் கருத்து இருக்காதென்றே நினைக்கிறேன்” என்றார். ஷத்ரிய தரப்பிலிருந்து பலர் எழப்போனாலும் அவர்களின் தலைவராகிய முதியபடைத்தலைவர் கருணகர் கசப்பு படிந்த புன்னகையுடன் “சுற்றி வளைத்துவிட்டீர் ஹரிதரே. உங்களை அமைச்சராக அடைந்த அரசர் நல்லூழ் கொண்டவர்” என்றார். ஹரிதர் புன்னகைத்தார். “அவை முடிவெடுத்துவிட்டது. நான் இங்கு சொல்லெடுக்க இனி ஏதுமில்லை. எங்கள் வாள்களும் வேல்களும் அரியணைக்கு கட்டுப்பட்டவை” என்றார் கருணகர்.

“ஆம். அவை முடிவெடுத்துவிட்டது” என்றபின் ஹரிதர் திரும்பி கர்ணனிடம் “தங்கள் ஆணை” என்றார். “இந்த சிற்றவையில் அனைவரும் முறைமைப்படி அமர இடம் இருக்காது. அருகே ஒரு பெரிய அவைக்கூடத்தை அமைப்போம்” என்றான் கர்ணன். அவை கலைந்த குரலில் அதை ஆதரித்தது. “இந்த அவை ஏற்ற எண்ணங்கள் அரசாணையாகின்றன. அவை இந்த அவையையும் இதனால் ஆளப்படும் அங்கநாட்டையும் இங்குள்ள குடிகளையும் இனிவரும் கொடிவழிகளையும் கட்டுப்படுத்தும். ஆம் அவ்வாறே ஆகுக!” என்றார் ஹரிதர். கையசைத்து ஆணைகளை எழுதும்படி ஓலைநாயகங்களுக்கு ஆணையிட்டார்.

அந்த அரசாணை சம்பாபுரியின் மக்களை திகைக்க வைத்தது. தெருக்கள் தோறும், அங்காடித்திண்ணைகள் அனைத்திலும், இல்லங்களிலும், பள்ளியறைகளிலும்கூட சில நாள் அதுவே பேச்சென இருந்தது. “இனி இச்சூத்திரத்தலைவர்கள் பல்லக்கில் ஏறி தலைப்பாகையும் கோலும் ஏந்தி நம் தெருக்களில் செல்வார்கள் போலும்” என்றார்கள் உயர்குடிகளின் மூத்தோர். “இப்போதே அவர்களிடம்தான் பொருள் சென்று சேர்ந்து கொண்டிருக்கிறது. இனி அப்பொருளை படைக்கலமாகவும் மாளிகைகளாகவும் மாற்றிக் கொள்வார்கள். அதன் பின் சொல் நம்மிடம் இருந்து அவர்களுக்கு செல்லாது. அவர்களிடமிருந்து நமக்கு வரும்” என்றனர் ஷத்ரியர்.

ஆனால் வைசியர் அச்செய்தியால் ஊக்கமடைந்தனர். “இங்கு வரும் அனைத்துக் குலங்களிடமிருந்தும் அவர்கள் ஊர்களில் முழுமையாக வணிகம் செய்வதற்கான வெண்கலப்பட்டயத்தை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்” என்றார் கடைத்தெருவின் பேச்சவையில் முதிய வணிகரான சுபகர். “அவர்களின் பொருள்மாற்று வணிகத்திற்கான பொருள்மதிப்புகளை வரையறைசெய்யவேண்டும். அவர்களின் நாணயமாற்றை முறைப்படுத்தவேண்டும்.” வணிகரான ஷிப்ரர் “நமக்கு அவர்கள் வாய்ப்பளித்தால் நாமே அனைத்தையும் வகுத்தளிக்கமுடியும்” என்றார். “நமக்குத்தேவை உள்ளே செல்வதற்கான ஒப்புதல். நம்மை வெளியேற்றுவது அவர்களின் பொறுப்பு” என்றார் மெலிந்த வணிகரான குசிகர். கூடியிருந்தவர்கள் நகைத்தனர்.

சூத்திரர் குலங்களில் அந்த அரசறிவிப்பு கர்ணன் நினைத்ததுபோல ஒற்றைப்பெருங்குரலில் வரவேற்கப்படவில்லை. ஐயங்களும் மாற்றுக்கருத்துகளுமாக பல மாதங்கள் சொற்கள் அலையடித்தன. ஒவ்வொரு குலமும் அரசின் அவையில் தங்களுக்குரிய இடம் எதுவாக இருக்கும் என்று ஐயுற்றன. பிற குலங்களுக்கு மேலாக ஒரு இடம் என்பதே அவர்கள் எண்ணத்தில் இருந்தது. ஆனால் அப்பிற குலங்களின் பெயர்களைக்கூட அவர்களால் முழுமையாக சொல்ல முடியவில்லை. “நாங்கள் மாமன்னர் அங்கரின் காலத்திற்கு முன்னரே இங்கு குடியேறி நிலம்திருத்தி கழனி சமைத்து கூலம் கொண்டவர்கள். எங்கள் அடுமனைபுகை கண்டு வந்தவர்கள் பிறர். எங்களுக்கான தனி இடம் அவையில் அமையும்போது மட்டுமே நாங்கள் வரமுடியும். எந்நிலையிலும் மேழிக்கூட்டத்தார் எங்களுக்கு நிகராக அவையமரக்கூடாது என்றனர் ரிஷப கூட்டத்தினர்.

“நாங்கள் இங்கு வரும்போது ரிஷப கூட்டத்தினர் பன்னிரு சிறு வயல்களுடனும் ஏழு கன்றுகளுடனும் ஈச்ச ஓலைக் குடில்களில் வாழ்ந்தார்கள். நாங்கள் ஆயிரத்தெட்டு கன்றுகளுடனும் அவற்றுக்குரிய மேழிகளுடனும் இங்கு வந்தோம். அவர்கள் மேழி பிடிக்கக் கற்றுக்கொண்டதே எங்களிடமிருந்துதான் என்றனர் மேழிக்கூட்டத்தினர். “இன்று எங்களிடம் விதைநெல் வாங்கி விதைப்பவர்கள் ரிஷபர்கள். எங்கள் அவைகளில் நின்றபடியே பேசும்தகுதியே அவர்களுக்குரியது. அவையமர்வதென்றால் அவர்களுக்கு முன்னால்தான். இல்லையெனில் நாங்கள் அங்கர்களே அல்ல.”

“குகர்கள் ஒருபோதும் மீன் பிடிப்பதில்லை. ஆற்றில் படகோட்டுவதினாலே நாங்கள் மச்சர்களுக்கு நிகரானவர்கள் அல்ல” என்றனர் குகர்கள். “மீன்கொளல் என்பது வேட்டை. உயிர்க்கொலைசெய்தல். அவர்களுக்குரிய இடம் மலைவேடர்களுக்குரியது. அதை அரசு ஏற்கட்டும், அவையமர்தலைப்பற்றி பேசுவோம்.” ஆனால் மச்சர்கள் “மீன்பிடித்தல் வேறு, வேட்டை வேறு. வேட்டையாடும் வேடர்கள் எண்ணவும் சொல்லவும் அறிந்த உயிர்களைக் கொன்று பழி சூழ்பவர். மீன்களோ விழிகள் மட்டுமே கொண்டவை. எனவே எங்களுக்கு கொலைப்பாவம் இல்லை. நாங்களிருக்கும் அவையில் வேடர்கள் நிகரென அமர்ந்தால் எங்கள் மூதாதையருக்கு மறுமொழி சொல்ல இயலாது” என்றனர்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குலத்திலிருந்து உறுப்பினர்கள் வந்து கர்ணனைக் கண்டு தங்கள் குலமேன்மையையும் குடிவரலாற்றையும் தெரிவித்துக் கொண்டிருந்தனர். திகைத்துப் போய் அவன் ஹரிதரிடம் “என்ன செய்வது? தேனீக்கூட்டை கலைத்துவிட்டோம் போலிருக்கிறதே” என்றான். “இவர்கள் எவரும் பிறரை ஒப்புக்கொள்ள சித்தமாக இல்லை. ஓர் அவையில் இவர்களை அமரவைப்பதும் எளிதானதல்ல. ஒவ்வொருவரும் தங்கள் பின் உள்ள ஒருவரைவிட மேலானவராகவும் மேலே உள்ள ஒருவருக்கு நிகரானவர்களாகவும் காட்டிக்கொள்ள முயல்கிறார்கள். இவர்களைக்கொண்டு ஓர் அவையை அமைப்பது இயலுமென்றே தோன்றவில்லை.”

“ஆம். ஆனால் அது இயல்பு. பாரதவர்ஷத்தின் எந்தப்போர்க்களத்திலும் மனிதர்கள் ஒன்றாக நிற்பதில்லை, ஒன்றாக இறப்பதில்லை” என்றார் ஹரிதர். “நாம் நூறாயிரம் குலங்களின் பெருந்தொகை” என்றான் கர்ணன். “ஆம், ஆனால் மிக எளிதாக இச்சிக்கலை கடந்து செல்ல முடியும்” என்றார் ஹரிதர். “அதற்கு தொன்று தொட்டே நூல்கள் காட்டிய வழிகள் உள்ளன. வைதிகரின் குலமே அதன் பொருட்டு உருவாக்கப்பட்டதுதான்.”

கர்ணன் அவரையே நோக்கிக் கொண்டிருந்தான். புன்னகையுடன் அவர் சொன்னார் “இங்கு ஒவ்வொருவரும் தேடி வருவதிலிருந்து நாம் அறிவது ஒன்றுண்டு. அத்தனை பேரும் இங்கு அவையில் அமர விழைகிறார்கள். அதைவிட குறிப்பானதொன்றுண்டு. ஒவ்வொருவரும் தங்கள் சார்பில் அவையமர்பவர் எவர் என்று முடிவு எடுத்து அனுப்பியிருக்கிறார்கள்.”

திகைப்புடன் சிரித்து “ஆம்” என்றான் கர்ணன். “இங்கு ஒருமுறை வந்தவர்கள் இனி அவையில் தங்களுக்கு இடம் தேவையில்லை என்று முடிவெடுக்க மாட்டார்கள். அத்தனை பேரிடமும் இருக்கும் பதவி விருப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும்” என்று ஹரிதர் தொடர்ந்தார். “கூடையில் இட்ட பொருட்களை குலுக்கினால் அவையே ஒன்றுடன் ஒன்று முட்டிமோதி புகுந்தும் விலகியும் தங்கள் இடங்களை அமைத்துக்கொள்ளும். அதற்குரிய காலத்தை அளிப்பதே நமது பணி.”

ஹரிதரின் ஆணைப்படி முந்நூற்றி எட்டு வைதிகர்கள் அடங்கிய பெருங்குழு ஒன்று அமைக்கப்பட்டது. சம்பாபுரியின் வெளிமுற்றத்தில் ராஜ்யஷேம வேள்வி ஒன்று இயற்றப்பட்டு அதன் அவியுணவு சூத்திரர்களுக்கும் அனைத்துக் குலங்களுக்கும் என இணையாக பகுக்கப்பட்டது. அந்த வேள்வியன்னத்துடன் வைதிகர்கள் சூத்திரக் குடிகளின் தலைவர்களை தேடிச் சென்றனர். கர்ணன் “இது எங்ஙனம் அமையும் என்று ஐயம் கொள்கிறேன் அமைச்சரே” என்றான். ஹரிதகர் “ஆரியவர்த்தம் இவ்வண்ணம் அமைந்து வந்ததற்கு ஒரு வழிமுறை உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த நதி தன் பாதையை கண்டடைந்துள்ளது. ஆற்றுக்கு வழிசொல்லவேண்டியதில்லை, கரைகட்டினால் போதும்” என்றார்.

மூன்று மாதங்களுக்குள் அவர் விழைந்ததே நடந்தது. அத்தனை சூத்திரக்குலங்களின் குலதெய்வங்களும் வைதிக ஒப்புதல்கொண்டன. அவற்றுக்கு தொன்மங்கள் வகுக்கப்பட்டு சூதர்களால் பாடப்பட்டன. விஷ்ணுவும் சிவனும் பிரம்மனும் தேவியரும் அவர்களுடன் ஆடினர். அக்கதைகளின்படி அவர்களில் எவர் மேலோர் எவர் கீழோர் என்று உறுதிப்பட்டது. குலத்திற்கொரு வேள்வி முறைமை பிறந்து அதை இயற்றும் வேதியர் குலமும் உறுதியாயிற்று. சம்பாபுரியில் கர்ணன் நுழைந்த முதல் வருட நிறைவன்று ஒருங்கிய பெருவிழாவில் சூத்திரர் குலங்கள் அனைத்தையும் அவைக்கு வரவழைத்தான். அவற்றின் குடித்தலைவர்கள் தலைப்பாகையும் வாளும் சால்வையும் பல்லக்கில் ஏறும் உரிமையும் அளிக்கப்பட்டு குலக்குறியும் பட்டமும் கொண்டனர்.

அவர்களின் குலங்களுக்கு முன்னரே இருந்த அடையாளங்களை ஒட்டி அப்பெயர்கள் அமைந்தன. பல்லி குலத்தோரும் ஆமை குலத்தோரும் காளை குலத்தோரும் மேழி குலத்தோரும் அந்தப் பட்டங்களை அரசாளும் உரிமை என்றே புரிந்து கொண்டனர். “உண்மையிலேயே அவை அரசுகள்தான்” என்றார் ஹரிதர். “இருபுறமும் கூர்மை கொண்ட வாளென்று அதை சொல்வார்கள். நாமளிக்கும் பட்டத்தைக் கொண்டு தங்கள் குலத்தை முழுமையாக அவர்கள் கட்டுப்படுத்துவார்கள். பட்டத்தை அளித்தமைக்காக நமக்கு நன்றியுடன் இருப்பார்கள். ஒரு தருணத்திலும் நமக்கெதிராக ஒரு சொல்லையும் அவர்கள் சொல்ல முடியாது. ஏனென்றால் அப்படி சொன்னால் அவர்களை அரசராக்கிய நம் சொல்லை மறுத்தவர்கள் ஆவார்கள். நம் ஆட்சியை மேலும் மேலும் உறுதியாக்குவது அவர்களின் கடமை. இல்லையேல் அவர்கள் உறுதிகொள்ளமுடியாது.”

கர்ணன் நகைத்து “இத்தனை எளிதானது இது என்று நான் எண்ணியிருக்கவில்லை அமைச்சரே” என்றான். ஹரிதர் “அரசுசூழ்தலில் புதிய சிக்கல் என்றும் புதிய விடை என்றும் ஏதுமில்லை. இதுவரை என்ன நிகழ்ந்ததென்று பார்த்தாலே போதும்” என்றார். கர்ணன் “இந்த வழியை முன்னரே முந்திய அரசரிடம் உரைத்திருந்தீர்களா ஹரிதரே?” என்றான். “இல்லை…” என்றார் ஹரிதர். “அமைச்சர் எந்த அரசுமுறை மாற்றத்தையும் தானே உரைக்கலாகாது என்பது முன்னறிவு. ஏனெனில் அரசனிடமிருந்து வராத எந்த எண்ணத்தையும் அரசன் முழு நம்பிக்கையுடன் ஏற்பதில்லை. மெல்லிய ஓர் எண்ணம் அரசன் உள்ளத்தில் எழுந்தால் அதை வளர்த்து பல்லாயிரம் கை கொண்டதாக ஆக்கலாம். அதையே நானும் செய்தேன்” என்றார்.

சித்திரை முழுநிலவு நாளில் சம்பாபுரியின் அனைத்து குலங்களும் அமர்ந்த பேரவை கூடியபோது அது சதுப்பு நிலத்தில் பறவைக்கூட்டம் போலிருந்தது. அமர்ந்திருந்தவர்கள் வெளியே எழுந்து சென்றனர். சென்றவர்கள் தங்கள் உற்றாரை கூட்டிக்கொண்டு வந்தனர். பிறர் இருக்கைகளில் ஓடிச்சென்று அமர்ந்தனர். அவர்களை எழுப்பி அவற்றுக்குரியோர் கூச்சலிட்டனர். கேலிப் புன்னகையுடன் ஷத்ரியர் அவர்களை திரும்பி நோக்கிக் கொண்டு அமைதியாக இருந்தனர். வணிகர்கள் ஒருவருக்கொருவர் மென்குரலில் பகடியுரைத்து சிரித்தனர். மெல்ல மெல்ல குலங்களுக்குள் பூசல் தொடங்கியது. முதன்மை இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் பின்பக்கம் திரும்பி நோக்கி ஏளனச் சொற்களை உதிர்க்க அங்கிருந்து அவர்கள் தங்கள் கோல்களுடன் முன்னால் கிளம்பி வந்தனர். வசைகளும் அறைகூவல்களும் வலுத்தன.

ஓசைகள் உரக்கத் தொடங்கியதும் ஷத்ரியர்கள் வினாவுடன் ஹரிதரை பார்த்துக்கொண்டே இருந்தனர். “அவர் நம்மை நோக்கி கண்காட்டட்டும். இன்றே சூத்திரர் அவையாட்சி முடிவுக்கு வரும்” என்றார் ஒருவர். “அதைத்தான் ஹரிதர் விழைகிறாரோ?” என்றார் இன்னொருவர். வணிகர்கள் அஞ்சத் தொடங்குவது தெரிந்தது. ஹரிதர் திரும்பி வைதிகர்களை நோக்கி “உத்தமர்களே, தாங்கள் அவையொழுங்குகளை அவர்களுக்கு கற்பிக்கவில்லை போலிருக்கிறதே” என்றார். அதுவரை அவ்வாறு எண்ணிப்பார்த்திராத வைதிகர் தலைவர் விஷ்ணுசர்மர் “ஆம் அமைச்சரே, முன்னரே சொல்லியிருந்தோம். மறந்துவிட்டனர்” என்றார்.

சூத்திரர்களின் அந்த ஒழுங்கின்மை தங்களுக்குத் திறனில்லை என்பதை அவைக்குக் காட்டுமென்று வைதிகர்கள் அவரது பதற்றத்திலிருந்து புரிந்து கொண்டனர். அவர் ஆணையிடுவதற்குள்ளாகவே அவர்கள் எழுந்து தங்களுக்குரிய சூத்திரத்தலைவர்களிடம் சென்று மெல்லிய குரலில் புகழ்மொழிகளைக் கூறி அதனூடாக நெறிகளை அறிவுறுத்தினர். சற்று நேரத்தில் அவை அடங்கி மெல்லிய முனகல்களும் அவ்வப்போது எழும் தும்மல்களும் சிரிப்புகளுமாக சீர் கொண்டது.

கர்ணன் சூதர் இசை முழக்க சேடியர் மங்கலம் ஏந்தி முன்னால் வர கொம்பும் குழலும் கட்டியம் கூற அவைக்குள் நுழைந்தபோது ஒற்றைப்பெருங்குரலில் வாழ்த்தொலி எழுப்பி அவனை வரவேற்றது அவை.

VEYYON_EPI_10

வைதிகர் கங்கை நீர் தெளித்து தூய்மைப்படுத்திய செம்பட்டுப் பாதையில் நடந்து புதிதாக அமைக்கப்பட்ட அரியணை மேடை மீது மாமன்னர் லோமபாதர் அமர்ந்த அரியணையில் வெண்கொற்றக் குடைக்கீழ் அவன் அமர்ந்தான். தன் முன் நிறைந்திருந்த அவையைப் பார்த்தபோது முதன் முறையாக தன்னை அரசன் என்று உணர்ந்தான்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக