வெண்முகில் நகரம் - 81
பகுதி 16 : தொலைமுரசு – 6
மலர்களும் தாலங்களும் பட்டாடைகளும் குவிந்துகிடந்த இரு சிறிய அறைகளுக்கு அப்பால் பெரிய கூடத்திற்குள் திறக்கும் வாயில் திறந்திருந்தது. அதற்குள் ஆடைகளின் வண்ணங்கள் ததும்பின. “அன்னை காலைமுதல் அங்கிருக்கிறார். வண்ணங்கள் நடுவே” என்ற பானுமதி “வாருங்கள்” என சாத்யகியை உள்ளே அழைத்துச்சென்றாள். கூந்தலில் இருந்து சரிந்த செம்பட்டாடையை எடுத்து சுற்றிக்கொண்ட அசைவில் அவள் புதிய எழில்கொண்டாள். அசைவுகளில் அவளிடம் அத்தனை விரைவும் வளைவும் எப்படி தோன்றுகின்றன என சாத்யகி எண்ணிக்கொண்டான். அசையும் பெண் உடலாகத் தெரிபவளல்ல, பிறிதொருத்தி. அசைவென்பது அவள் உள்ளம்.
மரத்தூண்களின் மேல் அலையலையாக வளைந்த உத்தரங்கள் கொண்ட வளைகூரையுடன் அமைந்திருந்த பெருங்கூடம் நிறைய பெண்கள் செறிந்திருந்தனர். பெரும்பாலானவர்கள் இளவரசியர். அனைவரும் ஒன்றுபோலிருப்பதாக முதலில் தோன்றியது. பின்னர் குலங்களாக முகங்கள் தெரிந்தன. பின்னர் அவன் சந்திரிகையையும் சந்திரகலையையும் அடையாளம் கண்டுகொண்டான். சந்திரிகையின் தோளில் சாய்ந்து சந்திரகலை துயின்றுகொண்டிருந்தாள்.
அன்னையரும் அரசகுலப்பெண்டிரும் சேடியரும் என எங்கும் பெண்ணுடல்கள். மின்னும் அணிகள். நெளியும் ஆடைகள். வளையல்களும் சதங்கைகளும் மேகலைகளும் குலுங்கின. பெண்குரல்கள் இணைந்தபோது ஆலமரத்தின் பறவைக்கூச்சல் போலவே கேட்டது. அதன் நடுவே காந்தாரி முகம் புன்னகையில் விரிந்திருக்க இரு கைக்குழந்தைகள் போல பெரிய வெண்கரங்களை மடிமேல் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். அவள் உடலே புன்னகைசெய்துகொண்டிருப்பதாக தோன்றியது.
சத்யசேனை கூட்டத்தை ஊடுருவி வந்து அமர்ந்துகொண்டிருந்த இளவரசிகளுக்கு அப்பால் நின்று ஏதோ சொன்னாள். ஓசைகளில் அது மறைய சத்யவிரதை ”என்ன?” என்றாள். “அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். மாலையில் வந்துவிடுவார்கள்.” அவளைக்கடந்துசென்ற சேடியின் கையிலிருந்த பெரிய பூத்தாலத்தால் அவள் முகம் மறைந்து மீண்டும் தோன்றியது.
“யார்?” என்றாள் காந்தாரி. அவளிடம் சொல்ல இருவரைக் கடக்க காலெடுத்து வைத்து முடியாமல் நின்று சத்யசேனை “சுஹஸ்தனும் திருதஹஸ்தனும் வாதவேகனும் சுவர்ச்சஸ்ஸும் ஆதித்யகேதுவும் மச்சநாட்டுக்கு சென்றிருந்தார்கள் அல்லவா? இளவரசிகளுடன் வந்துகொண்டு…” அவள் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே சுஸ்ரவை ஓடிவந்து “அக்கா, அமைச்சர் கனகர் தங்களை சந்திக்க வந்திருக்கிறார்” என்றாள். “என்னையா?” என்று சத்யசேனை திரும்பி ஓடினாள். காந்தாரி “இளவரசியர் எப்போது வருகிறார்கள்?” என்றாள்.
அதற்கு யாரும் மறுமொழி சொல்வதற்குள் தேஸ்ரவை மறுபக்கம் வந்து “சுதேஷ்ணை எங்கே? அங்கே கேட்கிறார்கள்” என்றாள். “இங்கில்லை” என்றனர். ஒரு பெண் எழுந்து பானுமதியின் அருகே வந்து “அக்கா, உங்களைத்தான் பேரமைச்சர் சௌனகரின் தூதர் கேட்டுக்கொண்டே இருந்தார்” என்றாள். பானுமதியைப்போலவே வெண்ணிறமான கொழுத்த உடலும் பெரிய கைகளும் உருண்ட முகமும் கொண்டிருந்தாள். சிறிய உதடுகளும் கண்களும் சேர்ந்து எப்போதுமே சிரித்துக்கொண்டிருப்பவள் போல காட்டின.
பானுமதி “என்னையா? நான்தான் அவரை மாலைக்குமுன் சந்திப்பதாக சொல்லியிருந்தேனே?” என்றபின் “இவள் என் தங்கை அசலை. இளவல் துச்சாதனரை மணந்திருக்கிறாள்” என்றாள். அசலை “வணங்குகிறேன் யாதவரே” என்றாள். “என்னை அறிவீர்களா?” என்றான் சாத்யகி. “மிக நன்றாகவே அறிவேன்” என்று சொன்ன அசலை சிரித்து “சற்று முன்புதான் நீங்கள் அந்தப் பெருங்கூடத்தில் நின்றிருப்பதை பார்த்தேன். கேட்டு தெரிந்துகொண்டேன்” என்றாள்.
“ஆம், நின்றிருந்தேன். உங்களை நான் பார்க்கவில்லை.” அசலை ”நீங்கள் ஒட்டுமொத்தமாக பெண்களை பார்த்தீர்கள். நாங்கள் எவரையும் தனியாக பார்க்காமலிருப்பதில்லை யாதவரே. உங்களைப்பற்றி நிறைய சொன்னார்கள். உங்கள் ஐந்து அடிமைமுத்திரைகளை அறியாத பெண்களே இங்கில்லை” என்றாள். பானுமதி “சும்மா இரடீ” என அதட்டி “இவள் சற்று மிஞ்சிப்போய் பேசுவாள்…” என்று சாத்யகியிடம் சொன்னாள். சாத்யகி “அது அவர்களை பார்த்தாலே தெரிகிறது” என்றான் “நான் அரசவையில் பேசுவதற்கு பயிற்சி எடுத்திருக்கிறேன்…” என்றாள் அசலை.
“போதும்” என்றாள் பானுமதி. “இங்கே எழுந்து வராதே, அங்கே அரசியின் அருகே அமர்ந்துகொள் என்று சொன்னேன் அல்லவா?” அசலை “எவ்வளவுநேரம்தான் அமர்ந்திருப்பது? பேரரசிக்கு தன் மைந்தரின் மணமக்களை எண்ணி எண்ணி கைசலிக்கவில்லை. என்னையே நாலைந்துமுறை எண்ணிவிட்டார்கள். எண்ணிக்கை தவறித்தவறி மைந்தர்களின் மணமகள்கள் இப்போது பெருகிப்போயிருப்பார்கள்…” என்றாள். பானுமதி “நீயும் மடிநிறைய மைந்தரைப்பெற்றால் தெரியும்” என்றாள். அசலை சாத்யகியை நோக்கியபின் நாணத்துடன் சிரித்து “பெற்றுக்கொள்ளவேண்டியதுதான். இங்கே அரண்மனையில் நமக்கென்ன வேலை?” என்றாள். “ஆ… பேரரசி நம் குரலை கேட்டுவிட்டார்கள்.”
சாத்யகியை பானுமதி பெண்களினூடாக காந்தாரி அருகே அழைத்துச்சென்றாள். “அன்னையே, இளையயாதவரின் அணுக்கர், சாத்யகி” என்றாள். காந்தாரி உரக்கச் சிரித்தபடி கைகளை நீட்டி “என் அருகே வா மைந்தா… இத்தருணத்தில் என்னருகே நீ அல்லவா இருக்கவேண்டும்? உன் குழலணிந்த நீலப்பீலியைத்தான் தொட்டுக்கொண்டே இருந்தேன்” என்றாள். “நான் சாத்யகி அன்னையே… இளைய யாதவரல்ல” என்றான். “நீங்கள் வேறுவேறா என்ன? வா!” என்று காந்தாரி அவன் தலையை இரு கைகளாலும் பற்றி முடியை வருடினாள். “என்னருகே இரு மைந்தா! நான் மகிழ்ச்சியால் இறந்தால் அது அவன் அருளால்தான் என்று துவாரகைக்குச் சென்று என் குழந்தையிடம் சொல்.”
பானுமதி “அன்னை துயின்றே பலநாட்களாகின்றன” என்றாள். “எப்படி துயில்வது? பெண்ணாகி வந்தால் அன்னையாகி பெருகவேண்டும். மைந்தர் சூழ அமையவேண்டும். நான் இனி எதை விழையமுடியும்? என் மைந்தர் அஸ்தினபுரியை நிறைத்துவிட்டனர். அவர்களின் மைந்தர்கள் பாரதவர்ஷத்தை நிறைத்துவிடுவார்கள்” என்றாள் காந்தாரி. “கேட்டாயா இளையோனே? நேற்றெல்லாம் இந்தக் கூடத்தில்தான் இருந்தேன். என்னால் படுக்கவே முடியவில்லை. களைப்பு தாளமுடியாமல் படுத்தால் ஓரிரு சிறிய கனவுகளுக்குப்பின் விழிப்புவந்துவிடும். பின்னர் என்னால் துயிலமுடியாது. இங்கே கூடம் முழுக்க ஓசைகள். எப்படி துயில்வது?”
“என்ன சொன்னேன்?” என்று அவளே தொடர்ந்தாள். “நேற்று நான் ஒரு கனவு கண்டேன். பீமசேனன் இங்கே வந்து என்னை வணங்குகிறான். அவனுடைய உடல் மணத்தை என்னால் உணரமுடிந்தது. இந்தக்கூடம் முழுக்க பெண்கள். என் நூறு மைந்தர்களின் மணமக்கள். சிரிப்பும் பேச்சும் ஆடையணிகளின் ஓசையுமாக. நான் அவனிடம் மைந்தா என் மணமகள்களை வாழ்த்து என்று சொன்னேன். அவன் இவர்களை வாழ்த்தினான்.” சாத்யகி “அவரும் இன்னும் சிலநாட்களில் வந்துவிடுவார் அல்லவா?” என்றான்.
“நான் அதை விதுரரிடம் கேட்டேன், இங்கே துச்சளையின் திருமணம் நிகழும்போது பாண்டவர்களும் அவர்களின் மணமகள்களும் இருப்பதல்லவா நன்று என்று. அவர்கள் தங்கள் அரசியின் நகர்நுழைவை இந்த மணநிகழ்வுடன் கலக்க விழையவில்லை என்றார். இன்றுகாலைதான் யாதவஅரசி வந்திருப்பதை அறிந்தேன். அது மூதன்னையரின் அருள்தான். அவளும் என் மகளுக்கு அன்னை. அவளுடைய வாழ்த்தும் தேவை… அவளை என்னை வந்து சந்திக்கும்படி சொல்லி செய்தி அனுப்பினேன்… பானுவை அனுப்பி அவளை அழைத்துவரவேண்டும். என் மைந்தரின் மணமகள்களை அவளும் காணவேண்டும்…” சாத்யகி “ஆம்” என்றான்.
காந்தாரி சிரித்து “இத்தனை பெண்களுடன் எப்படி இருக்கிறது அரண்மனை என்று சத்யையிடம் கேட்டேன். வண்ணத்துப்பூச்சிகள் வந்து குவிந்ததுபோலிருக்கிறது என்றாள். காதுகளாலேயே என்னால் வண்ணங்களை அறியமுடிகிறது” என்றாள். கைநீட்டி “அவள் எங்கே? அவந்திநாட்டு இளவரசி, அபயைதானே அவள் பெயர்?” என்றாள். பானுமதி “ஆம், இங்கிருக்கிறாள் அன்னையே” என்றாள். காந்தாரி கையை வீசி “நேற்று நான் கண்கட்டை அவிழ்க்கவேண்டும் என்று சொன்னாளே அவள்?” என்றாள். பானுமதி “அவள் இளையவள் மாயை” என்றபின் மாயையை நோக்கி எழுந்துவரும்படி கையசைத்தாள்.
மாயை எழுந்து வந்து அருகே நிற்க அவளை இடைவளைத்துப்பிடித்து “கணவனுக்காக ஏன் கண்களை கட்டிக்கொள்ளவேண்டும் என்கிறாள். நான் சொன்னேன் எல்லா மனைவியருமே கணவனுக்காக கண்களை கட்டிக்கொண்டவர்கள் அல்லவா என்று” என்று சிரித்தாள் காந்தாரி. மாயை இடையை நெளித்து சாத்யகியை நோக்கி சிரித்தாள். “கணவனிடம் கண்ணை கட்டிக்கொண்டிருக்கலாம், வாயை கட்டிக்கொண்டிருக்கக் கூடாது என்று அறிவுரை சொன்னேன்… என்ன சொல்கிறாய்?” என்றாள் காந்தாரி. சாத்யகி ”நான் எதையும் அறியேன் அன்னையே” என்றான்.
“இவர்களெல்லாம் மாளவ குலத்தினர். அவந்தி அரசு மாளவத்தின் துணையரசாகத்தான் முற்காலத்தில் இருந்தது. மாளவத்தின் கொடிவழியில்தான் விந்தரும் அனுவிந்தரும் வந்திருக்கிறார்கள்” என்றாள் காந்தாரி. சாத்யகி “அனைவரும் பார்க்க ஒன்றேபோலிருக்கிறார்கள்” என்றான். காந்தாரி “அப்படியா? நான் தடவிப்பார்த்தே அதைத்தான் உணர்ந்தேன்” என்றாள். உடல் குலுங்கச் சிரித்து “ஆனால் இவர்களுக்குள் எத்தனை வேறுபாடுகள். அவந்தியே விந்தியமலையடிவாரத்தில் ஒரு சிறிய நாடு. அது தட்சிண அவந்தி உத்தர அவந்தி என இருநாடுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறதாம். ஆகவே இவர்கள் இருநாட்டினராக உணர்கிறார்கள்” என்றாள்.
சாத்யகி ”மாகிஷ்மாவதிதானே தலைநகரம்?” என்றான். ”தட்சிண அவந்திக்கு மாகிஷ்மாவதி தலைநகரம். அதை விந்தர் ஆட்சி செய்கிறார். உத்தர அவந்திக்கு புதியதாக ஒரு நகரை உருவாக்கியிருக்கிறார்கள். உஜ்ஜயினி. அது மாகாளிகையின் நகர். அதை அனுவிந்தர் ஆள்கிறார். நடுவே ஓடும் ஒரு ஆறுதான் இருநாடுகளையும் பிரிக்கிறது… என்னடி ஆறு அது?”
மாயை மெல்லியகுரலில் “வேத்ராவதி…” என்றாள். ”ஆம், வேத்ராவதி. அந்த ஆறு இவர்களுக்கு நடுவே ஓடுவதை ஒவ்வொரு பேச்சிலும் கேட்கலாம்” என்றாள் காந்தாரி. “ஐந்துபேர் விந்தரின் பெண்கள்…. யாரடி அவர்கள்?” ஒருத்தி புன்னகையுடன் “நாங்கள் ஐவர். அபயை, கௌமாரி, ஸகை, சுகுமாரி, சுகிர்தை” என்றாள். “நீ யார்?” “நான் சுகுமாரி.” “மற்ற எழுவரும் அனுவிந்தரின் பெண்கள்… மாயைதானே நீ? சொல் உங்கள் பெயர்களை” மாயை வெட்கத்துடன் சாத்யகியை நோக்கியபின் “கிருதை, மாயை, வரதை, சிவை, முத்ரை, வித்யை, சித்ரை” என்றாள்.
“பார், இத்தனை பெயர்கள். எல்லாமே தேவியின் பெயர்கள்கூட. இவர்களை எப்படி நினைவில் நிறுத்துவது? இப்படி மீண்டும் மீண்டும் கேட்டு பயிலவேண்டியதுதான்… இப்போது மூத்த இருவரின் மனைவியர் பெயர்கள்தான் நினைவிலுள்ளன. பானுமதி, இளையவள் பெயர் வைசாலி” என்றாள். அசலை கைதூக்கி “அன்னையே, என் பெயர் அசலை. அசையாதவள். மலைபோன்றவள்… மலை! மலை!” என்றாள். பெண்கள் சிரிப்பை அடக்கினார்கள்.
“நீயா மலைபோன்றவள்? கொடிபோலிருக்கிறாய்” என்றாள் காந்தாரி. ”அஸ்தினபுரியின் மடைமகனின் திறனை நம்பியிருக்கிறேன் அன்னையே. அடுத்த சித்திரையில் மலையாக மாறிவிடுகிறேன்.” காந்தாரி ”சீ, குறும்புக்காரி… கேட்டாயா யாதவா, இந்தக் கூட்டத்திலேயே இவளுக்குத்தான் வாய் நீளம்” என்றாள். ”இத்தனை பெயர்களையும் சொல்லிக்கொண்டிருந்தால் எனக்கு தேவி விண்மீட்பு அளித்துவிடுவாள்.”
சத்யவிரதை உள்ளிருந்து வந்து “அப்படித்தானே இளவரசர்களின் பெயர்களையும் நினைவில் நிறுத்தினோம்…” என்றாள். காந்தாரி முகம் சிவக்கச் சிரித்து “ஆம்…” என்றாள். “எங்களைவிட அவர்களின் தந்தை எளிதில் அவர்களை அடையாளம் கண்டுகொள்வார். காலடியோசையே அவருக்குப் போதுமானது.” சாத்யகி “இப்போது படைகளாலும் இருநாடுகளாகவா இருக்கின்றது அவந்தி?” என்றான்.
“ஆம், அதுதான் இவர்களிடையே இத்தனை உளவேறுபாடு… ஒரு நிலம் இரண்டாக இருந்தால் உள்ளங்களும் அப்படியே ஆகிவிடும். நான் இவர்களிடம் சொன்னேன். வேத்ராவதியை மறந்துவிடுங்கள். உங்கள் நாட்டை சுற்றிச்செல்லும் பெருநதியாகிய பயஸ்வினியை நினைவில் நிறுத்துங்கள். உங்கள் நாட்டுக்குமேல் எழுந்து நிற்கும் விந்திய மலைமுடியான ரிக்ஷாவதத்தை எண்ணுங்கள். நீங்கள் ஒன்றாக இருக்கமுடியும். இந்த அரண்மனையில் இடமில்லை. இது மிகத்தொன்மையானது. நாங்கள் பத்து அரசியரும் ஒன்றாக இருந்தமையால்தான் இதற்குள் வாழமுடிந்தது.”
சாத்யகி தன்னுள் சம்படை பற்றிய எண்ணம் எழுவதை ஓர் உடல்நிகழ்வு போன்றே உணர்ந்தான். அதை அவன் வென்றது அவனில் அசைவாக வெளிப்பட்டது. பானுமதி அவனை நோக்கியபோது அவள் அதை புரிந்துகொண்டாள் என்பது அவனுக்கு திகைப்பூட்டியது. மனிதர்கள் இத்தனை நுட்பமாக உள்ளங்களை புரிந்துகொள்ளமுடியுமென்றால் உள்ளம் என்பதுதான் என்ன?
காந்தாரி ”இங்கே இத்தனை செல்வங்களைக் கண்டதும் நான் நினைத்துக்கொண்டதெல்லாம் யாதவ அரசியைத்தான். அவள் என்னையும் என் மைந்தரையும் வெறுப்பவள் என அறிவேன். ஆனாலும் அவள் இங்கிருக்கவேண்டும் என விழைந்தேன். இவர்களைப் பார்த்தால் அவள் உள்ளமும் மலரும் என்றுதான் தோன்றியது” என்றாள்.
சாத்யகி “நான் அன்னையிடம் சொல்கிறேன். அவர் இங்கு வருவதில் மகிழ்வார் என்றே நினைக்கிறேன். இல்லையேல் நாளை இளைய யாதவர் வருகிறார். அவரிடம் சொல்லி அழைத்து வருகிறேன்” என்றான். காந்தாரி “இளைய யாதவன் நாளை வருகிறானா? ஆம், சொன்னார்கள்… நாளைதான்…” என்றாள். “அவன் வந்ததுமே இங்கு அழைத்துவரச்சொல். நான் பார்த்தபின்னர்தான் அவன் வேறு எங்கும் செல்லவேண்டும்” என்றாள். “ஆணை” என்றான் சாத்யகி.
பேச்சைமாற்ற விழைபவள் போல பானுமதி “பாஞ்சாலத்து இளவரசி எனக்கொரு பரிசு கொடுத்தனுப்பியிருக்கிறாள் அன்னையே” என்றாள். “ஒரு கணையாழி. வெண்கல் பொறிக்கப்பட்டது.” காந்தாரி “வெண்கல்லா? அது மிக அரிதானது அல்லவா? கொடு” என கையை நீட்டினாள். அவள் உள்ளங்கை மிகச்சிறியதாக இருப்பதை சாத்யகி வியப்புடன் நோக்கினான். சிறுமியருடையவை போன்ற விரல்கள். பானுமதி கணையாழியை கொடுத்ததும் அதை வாங்கி விரல்களால் தடவிநோக்கி “தொன்மையானது” என்றாள். “வெண்ணிற வைரம் நூறு மகாயுகம் மண்ணுக்குள் தவமியற்றியது என்பார்கள்.”
பானுமதி “ஆம் அன்னையே” என்றாள். “அந்தத்தவத்தால் அது இமய மலைமுடி என குளிர்ந்திருக்கும் என்று சொல்வதுண்டு.” காந்தாரி “சூதர் தீர்க்கசியாமர் இருக்கிறாரா பார். அவரை வரச்சொல்… இந்த வைரத்தைப்பற்றி அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்…” என்றாள்.
சத்யவிரதை வெளியே சென்றாள். சற்றுநேரத்தில் தீர்க்கசியாமர் சிறியமகரயாழுடன் நடந்து வந்தார். அவருடன் முதிய விறலி ஒருத்தியும் சூதச்சிறுவரும் வந்தனர். தீர்க்கசியாமர் உறுதியான கரிய சிற்றுடல்கொண்ட இளையவர் என்றாலும் முதியவர் போல மெல்ல காலெடுத்து வைத்து நடந்தார். அந்த நடையைக் கண்டபின் ஒரு கணம் கழித்தே அவருக்கு விழியில்லை என்று சாத்யகி அறிந்துகொண்டான். “இவரது சொற்கள்தான் எனக்கு மிகத் தெளிவாகத் தெரியக்கூடியவையாக உள்ளன… இங்கே நெடுங்காலமாக இவர்தான் அவைப்பாடகர்” என்றாள் காந்தாரி.
“தீர்க்கசியாமர் பிறவியிலேயே விழியற்றவர். முன்பு இங்கு பேரரசரின் ஆசிரியராக முதுசூதர் தீர்க்கசியாமர் என்பவர் இருந்தார். பீஷ்மபிதாமகருக்கே அவர்தான் ஆசிரியர் என்கிறார்கள். அவரது ஆலயம் தெற்குக் கோட்டைவாயிலருகே இசைச்சூதர்களின் நான்கு தெருக்கள் கூடும் முனையில் உள்ளது. அவரைப்போலவே விழியற்றவராகவும் சொல்லில் ஒளி கொண்டவராகவும் இவர் இருந்தமையால் அப்பெயரை இவருக்கும் இட்டார்களாம்” என்றாள்.
தீர்க்கசியாமர் சிறுவர்களால் வழிகாட்டப்பட்டு வந்து பீடத்தில் அமர்ந்தார். காந்தாரி அவரை வணங்கி முகமன் சொன்னதும் கைதூக்கி வாழ்த்தினார். ஓசைக்காக அவர் செவி திருப்பியதனால் சாத்யகியின் முன் அவரது முகம் தெரிந்தது. விழியிழந்த முகத்தில் எவருக்கும் என்றில்லாத பெரும்புன்னகை ஒன்றிருந்தது.
காந்தாரி “இவருக்கு நுண்ணிய இசை தெரியவில்லை என்று பேரரசர் சொல்வார். இசை கேட்கும் செவிகளும் எனக்கில்லை. ஆனால் பாரதவர்ஷத்தின் அனைத்து அரசர்களின் குலவரிசைகளையும் இந்நிலத்தின் அனைத்து நதிகளையும் மலைகளையும் இவர் அறிவார். இவர் அறியாத மானுடர் எவருமில்லை என்கிறார்கள். ஆனால் மற்றவர்கள் மனிதர்களை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். தீர்க்கசியாமர் மட்டும் தன்னந்தனிமையில் ஓர் உச்சிமலை முடியில் அமர்ந்து பாரதவர்ஷத்தை ஒட்டுமொத்தமாக நோக்கிக்கொண்டிருக்கிறார்” என்று சொன்னாள். “நான் இங்கிருந்து இவரது கண்கள் வழியாக பாரதவர்ஷத்தை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.”
”தீர்க்கசியாமரைப்பற்றிய புராணங்களை கேட்டிருக்கிறேன்” என்றான் சாத்யகி. “ஆம் இளவரசே. பாரதவர்ஷம் முழுக்க சூதர்களால் பாடப்படுபவர் தீர்க்கசியாமர். இன்று அவரை இங்குள்ள இசைச்சூதர்கள் சுவர்ணாக்ஷர் என்று வழிபடுகிறார்கள். பிறப்பிலேயே விழியற்றவராக இருந்தார். ஏழுமாதக்குழந்தையாக இருக்கும் வரை குரல் எழவில்லை. அவரது அன்னை அவர் இறப்பதே முறை என எண்ணி கொண்டுசென்று புராணகங்கையின் காட்டில் ஒரு தேவதாரு மரத்தின் அடியில் வைத்துவிட்டு வந்துவிட்டாள். அந்தமரத்தில் வாழ்ந்த கந்தர்வனாகிய தீர்க்கநீலன் குழந்தையைப் பார்த்து இறங்கி வந்து கையிலெடுத்து கொஞ்சி தன் இதழ் எச்சிலால் அமுதூட்டினான்.“
“விட்டுவிட்டுச் சென்ற அன்னை மனம்பொறாது திரும்ப ஓடிவந்தபோது குழந்தையின் அருகே ஒரு மகரயாழ்வடிவ களிப்பாவை இருந்தது. அதை யார் வைத்தார்கள் என்று அவளுக்குத்தெரியவில்லை. அதைக் குழந்தையுடன் சேர்த்து எடுத்துக்கொண்டுவந்தாள். அந்த யாழுடன் மட்டுமே குழந்தை விளையாடியது. அதனுடன் மட்டுமே பேசியது. அது வளரவளர யாழும் வளர்ந்தது. அதன் நரம்புகளுக்கேற்ப அதன் கைகளும் மாறின. இரவும்பகலும் அவருடன் அந்த யாழ் இருந்தது. கற்காமலேயே பாரதவர்ஷத்தின் அத்தனை கதைகளும் அவருக்குத் தெரிந்தன. பயிலாமலேயே அவரது விரல்தொட்டால் யாழ் வானிசையை எழுப்பியது.”
“அவர் சிதையேறியபோது உடன் அந்த யாழையும் வைத்தனர். அனல் எழுந்ததும் பொன்னிறமான புகை எழுந்தது. பொற்சிறகுகளுடன் வந்த தேவர்கள் அவரை விண்ணுக்குக் கொண்டுசென்றனர். அங்கே அவருக்கு பொன்னாலான விழிகள் அமைந்தன. கலைமகளை அவ்விழிகளால் நோக்கியபடி அவள் சபையில் அமர்ந்திருக்கிறார். என்பது புராணம். கலைமகளின் அவையில் அவருக்கு சுவர்ணாக்ஷர் என்று பெயர்” என்றார் தீர்க்கசியாமர். “இளமையிலேயே நானும் விழியிழந்திருந்தேன். செவிச்சொற்களாக உலகை அறிந்தேன். ஆகவே என்னை மூன்றுவயதில் அவரது ஆலயமுகப்பில் அமரச்செய்து அங்குலிசேதனம் செய்தனர்.”
அவர் தன் கைகளைக் காட்டினார். கட்டைவிரலை கையுடன் இணைக்கும் தசை வெட்டப்பட்டு விரல் முழுமையாக மறுபக்கம் விலகிச்சென்றிருந்தது. ”தீர்க்கசியாமரின் கைகளைப்போலவே கைகளை வெட்டிக்கொள்வதை நாங்கள் அங்குலிசேதனம் என்கிறோம். என் கை யாழுக்கு மட்டுமே உரியது யாதவரே. யாழின் அனைத்து நரம்புகளையும் கையை அசைக்காமலேயே என்னால் தொடமுடியும்.” சாத்யகி “இவ்வழக்கம் இங்கு பல சூதர்களிடம் உண்டு என்று கேட்டிருக்கிறேன்” என்றான். “அனைவரும் இதைச்செய்வதில்லை. பாடலன்றி வேறொரு வாழ்க்கையில்லை என்னும் இசைநோன்பு கொண்டவர்களுக்குரியது இது. இவர்கள் என் அன்னையும் இளையோரும். நான் இந்த யாழன்றி துணையில்லாதவன்.”
“என் அங்குலிசேதனம் நிகழ்ந்த அன்று நான் ஒருவனைக் கண்டேன்” என்றார் தீர்க்கசியாமர். “கண்டீரா?” என்று சாத்யகி கேட்டான். “ஆம், கண்டேன். மிக உயரமானவன். மார்பில் செம்பொற்கவசமும் காதுகளில் செவ்வைரக் குண்டலங்களும் அணிந்திருந்தான். அவன் முகமோ விழிகளோ உடலோ எனக்கு தெளிவாகத் தெரியவில்லை. அவன் கவசத்தையும் குண்டலத்தையும் அண்மையிலென கண்டேன். இன்றும் அக்காட்சி என்னுள் அவ்வண்ணமே திகழ்கிறது. அன்று நான் கண்டதை பிற எவரும் காணவில்லை என்று அறிந்துகொண்டேன். அன்றுமுதல் பிறர் காணாததைக் காண்பவனாக என்னை ஆக்கிக்கொண்டேன்.”
”அவனை மறுமுறை காணமுடிந்ததா?” என்றான் சாத்யகி. “இல்லை, அவனை நான் மறுமுறை காணும்போது என் பிறவிநோக்கமும் முழுமையடையுமென நினைக்கிறேன். அதுவரை காத்திருப்பேன்.” காந்தாரி “இதையே சொல்லிக்கொண்டிருக்கிறார். இவர் கண்டது ஏதோ கந்தர்வனையோ தேவனையோதான் என்கிறார்கள்” என்றாள். தீர்க்கசியாமர் “இல்லை பேரரசி, அது சூரியன் என்கிறார்கள். அது சித்திரைமாதம். உத்தராயணத்தின் முதல்நாள். அன்று பிரம்மமுகூர்த்தத்தில் சூரியன் எழுந்தான். ஆயிரம் வருடங்களுக்கொருமுறை நிகழ்வது அது என்று நிமித்திகர் சொன்னார்கள்” என்றார். “அந்த நாளை இன்றும் நிமித்திகர் முழுமையாகவே குறித்து வைத்திருக்கிறார்கள்.”
“சூதரே, இந்த வெண்ணிற வைரத்தை தொட்டுப் பாருங்கள். இதைப்பற்றிய உங்கள் சொற்களை அறிய விழைகிறேன்” என்று நீட்டினாள் காந்தாரி. தீர்க்கசியாமர் அதை வாங்கி தன் விரல்களால் நெருடியபடி தலையை ஆட்டிக்கொண்டிருந்தார். பெருமூச்சு விட்டபடி அதை தன் முன் வைத்தார். “அழகிய வெண்ணிற வைரம். பால்துளி போன்றது. முல்லைப்பூ போன்றது. இளமைந்தனின் முதல்பல் போன்றது. இனிய நறுமணம் கொண்டது. பஞ்சுவிதைபோல் மென்மையானது. இது லட்சுமியின் வடிவம் அல்லவா?”
“பரமனின் தூய சத்வகுணத்தின் வடிவமானவள் லட்சுமி. மகாபத்மை. மணிபத்மை. ஆகாயபத்மை. அனைத்துச் செல்வங்களுக்கும் தலைவி. அனைத்து அழகுகளுக்கும் அரசி. அனைத்து நலன்களுக்கும் இறைவி. இரக்கம். மென்மை, அமைதி, மங்கலம் ஆகியவற்றின் இருப்பிடம். விழைவு, சினம், சோம்பல், அகங்காரம் ஆகியவை துளியும் தீண்டாத தூய பேரிருப்பு. வைகுண்டத்தில் உலகாற்றி உறங்குபவனுக்கு பணிவிடை செய்யும் பத்தினி. கயிலையில் எரிவடிவோனின் இயற்பாதி. சொல்லாக்கி புடவி இயற்றுபவனின் சித்தத்தில் அமர்ந்தவள். சதி. விண்ணரசி. மண்மகள். நீர்களின் தலைவி. செல்வம், செறுதிறல், மறம், வெற்றி, வீரம், மைந்தர், வேழம், கல்வி என எண்வடிவம் கொண்டு இங்கு எழில்நிறைப்பவள். அவள் கையமர்ந்த மணி இது. அவள் வடிவாக எழுந்தருளும் ஒளி.”
“இதை வைத்திருக்கும் இளவரசி சத்வகுணம் கொண்டவள். பெண்களில் அவள் பத்மினி. வெண்தாமரை நிறமும் கொண்டவள். தாமரைத்தண்டுபோல குளிர்ந்தவள். அன்பும் பொறையும் கொண்டு இந்த அரசகுடி விளங்க வந்த திருமகள். அவள் குணமறிந்து அளிக்கப்பட்ட இந்த வெண்மணி என்றும் அவள் வலது சுட்டுவிரலில் இருக்கட்டும். கொற்றவையால் திருமகளுக்கு அளிக்கப்பட்ட செல்வம். இது வாழ்க” என்றார் தீர்க்கசியாமர். “ஒரு தருணத்திலும் இதை தேவி தன் உடலில் இருந்து விலக்கலாகாது. இது அவருடன் இருக்கும் வரை தீதேதும் நிகழாதென்று என் சொல் இங்கு சான்றுரைக்கிறது.”
“இங்கு பொலிருந்திருக்கும் பெண்களில் தேவியின் ஐந்து முகங்களும் நிறைவதாக! அவர்களின் அழகிய திருமுகங்கள் எழில்பெறட்டும். வீரத்திருவிழிகள் ஒளிபெறட்டும். அவர்களின் நெஞ்சில் அனலும் சொற்களில் பனியும் நிறையட்டும். அவர்கள் அள்ளிவைத்த விதை நெல் முளைவிடட்டும். அவர்கள் ஏற்றிவைத்த அடுமனைகளில் அன்னம் பொங்கட்டும். ஓம் அவ்வாறே ஆகுக!”
தீர்க்கசியாமர் பாடிமுடித்து தலைவணங்கினார். காந்தாரி உதடுகளை அழுத்தியபடி மெல்ல விசும்பி அழுதுகொண்டிருந்தாள். “அன்னையே… என்ன இது?” என்று பானுமதி அவள் கைகளை பற்றினாள். காந்தாரி அடக்கமுடியாமல் முகத்தை கைகளால் பொத்தியபடி பெரியதோள்கள் அதிர அழுதாள். பெண்கள் திகைப்புடன் நோக்கினர். அசலை அவளை தொடப்போக பானுமதி வேண்டாம் என கைகாட்டினாள். விசும்பல்களும் மெல்லிய சீறல்களுமாக காந்தாரி அழுது மெல்ல ஓய்ந்தாள். மேலாடையால் கண்ணைக்கட்டிய நீலத்துணி நனைந்து ஊற வழிந்த கண்ணீரை துடைத்தாள்.
”பேரரசி, தாங்கள் ஓய்வெடுப்பதாக இருந்தால்…” என பானுமதி சொல்ல வேண்டாம் என்று காந்தாரி கையசைத்தாள். “ஏனோ இதுதான் முழுமை என்று தோன்றிவிட்டதடி… இந்த இனிமை. இந்த நிறைவு. இதற்குமேல் இல்லை என்று தோன்றிவிட்டது. என்னுள் முகமற்ற பேரச்சம் நிறைந்தது. சொல்லத்தெரியவில்லை. அதன் பின் வெறுமை.” பானுமதி “அன்னையே, இன்பத்தின் உச்சத்தில் உள்ளம் அந்த நாடகத்தை போடுகிறது. சற்று பின்னால் வந்தபின் முன்னால் பாயும்பொருட்டு” என்றாள்.
காந்தாரி கண்ணீரைத் துடைத்தபின் பெருமூச்சுவிட்டு “இருக்கலாம்” என்றாள். “இருக்கலாம். அப்படித்தான் இருக்குமென எண்ணுகிறேன். என் மைந்தர்கள் இன்னும் வரவேண்டும். இன்னும் இளவரசிகளை நான் மடிமேல் வைத்து கொஞ்சவேண்டியிருக்கிறது.” அவள் முகம் மீண்டும் மலர்ந்தது. “இளையோனே” என்றாள். “அன்னையே” என்றான் சாத்யகி. “இளைய யாதவனை நான் பார்க்கவிழைகிறேன். உடனே…” சாத்யகி “நான் அழைத்துவருகிறேன்” என்றான். “நான் மட்டும் அல்ல. இங்குள்ள அத்தனை பெண்களும்தான் அவனை எண்ணி காத்திருக்கிறார்கள்…” என்று காந்தாரி சிரித்தாள்.
தீர்க்கசியாமர் எதையும் அறியாதவர் போல புன்னகை எழுதி பொறிக்கப்பட்ட முகத்துடன் இருந்தார். ”சூதர் எங்கே?” என்றாள் காந்தாரி. “இங்கிருக்கிறேன் அரசி.” காந்தாரி. “நன்று சொன்னீர். என் இல்லத்தில் லட்சுமி பெருகிநிறையவேண்டுமென வாழ்த்தினீர். நன்றி” என்றாள். சூதர் “நலம்திகழ்க!” என வாழ்த்தி எழுந்து வணங்கி பரிசில் பெற்று சென்றார்.
சாத்யகி “அன்னையே நான் கிளம்புகிறேன். மாலை அரசவைக்கு செல்லவேண்டும். அதற்கு முன் அன்னையையும் பார்க்கவேண்டும்” என்றான். காந்தாரி “இளைய யாதவனுடன் நாளை நீ வருவாய் என நினைக்கிறேன் மைந்தா” என்றாள். பின்னர் சற்று தயங்கி “நீ யாதவனை மட்டும் கூட்டிவந்தால் போதும். யாதவ அரசி இங்கு வரவேண்டியதில்லை. என் மகளிரை அவள் பார்க்கவேண்டியதுமில்லை” என்றாள். சாத்யகி “அது… முறைமைப்படி…” என்று சொல்லத்தொடங்க “வேண்டாம் மைந்தா” என்று காந்தாரி உறுதியான குரலில் சொன்னாள்.