வெண்முகில் நகரம் - 80
பகுதி 16 : தொலைமுரசு – 5
அஸ்தினபுரியின் கோட்டைவாயில் தொலைவில் தெரிந்தபோது சாத்யகி தேர்ப்பாகனிடம் “விரைந்துசெல், அன்னையின் தேருக்கு முன்னால் செல்லவேண்டும். அவர்கள் கோட்டைவாயிலை கடந்ததும் அவர்கள் தேருக்குப் பின்னால் மிக அருகே நாம் சென்றுகொண்டிருக்கவேண்டும்” என்றான். பாகன் தலையசைத்துவிட்டு புரவிகள்மேல் சவுக்கை சுண்டினான். புரவிகளின் குளம்படியோசை இருபக்கமும் அடர்ந்திருந்த காட்டுக்குள் எதிரொலித்தது.
அஸ்தினபுரியின் துறைமுகத்தில் இருந்து கோட்டைநோக்கிய பாதை வண்டிகளாலும் தேர்களாலும் புரவிகளாலும் நிறைந்து இடைமுறியாத நீண்ட ஊர்வலமெனச் சென்றுகொண்டிருந்தது. பொதிவண்டிகளுக்கு தனிநிரை என்பதனால் தேர்களும் புரவிகளும் முந்திச்செல்லமுடிந்தது. ஆயினும் அவை ஒன்றுடன் ஒன்று முட்டி மோதி தேங்கிச் சுழித்து வழிகண்டடைந்துதான் சென்றன. அத்தனைபேரும் நெடுநேரம் காத்திருந்த சலிப்பிலிருந்து விடுபட்டு வில்லில் இருந்து எழுந்த அம்புபோல உணர்ந்தமையால் குந்தியின் அரசத்தேரையோ கொடியையோ விழிமடுக்கவில்லை. வீரர்கள் புரவிகளை உசுப்பியும் சவுக்கோசை எழுப்பியும் அவர்களை ஒதுங்கச்செய்ததும் பயனளிக்கவில்லை.
கோட்டை முகப்பை சாத்யகியின் தேர்தான் முதலில் சென்றடைந்தது. அவன் கோட்டைக்காவலனை நோக்கிச்செல்ல அவன் முகத்தையோ தேரையோ நோக்காமல் “வண்டிகள் எல்லாம் வலப்பக்கம், தேர்கள் மட்டும் இடப்பக்கம்…” என்று கூவினான். சாத்யகி இறங்கப்போனதும் “இறங்காதீர்கள். வண்டிகளையோ தேர்களையோ நிறுத்தவேண்டாம். காவல்நோக்கு இங்கே கோட்டைவாயிலில் அல்ல. பெருமுற்றத்தில் படைவீரர்களிடம் சுங்கம் அளித்த முத்திரைப்பலகையை அளியுங்கள்…” என்று கூவினான். சாத்யகி இறங்கியதும் அவன் ”இறங்கவேண்டாம் என்று சொன்னேனே?” என அருகே வந்தான்.
“வீரரே, நான் யாதவனாகிய சாத்யகி. பின்னால் அஸ்தினபுரியின் பேரரசி குந்திதேவி தேரில் வருகிறார்” என்றான் சாத்யகி. “பேரரசி என்றால்…” என்று சொன்னவன் திகைத்து “ஆனால்…” என்றபின் “நான் தலைவரிடம் சொல்கிறேன்” என்று உள்ளே சென்றான்.
அஸ்தினபுரி குந்தியை நினைவுகூரவில்லை என சாத்யகி வியப்புடன் எண்ணிக்கொண்டான். அவர்கள் அவளை ஒரு புராணமாக நினைவிலிருத்தியிருக்கலாம். உள்ளிருந்து தலைமைக்காவலன் வந்து “வணங்குகிறேன் இளவரசே. தங்களுடன் வந்தவர் எவரெனச் சொன்னீர்கள்?” என்றான். “யாதவப்பேரரசி குந்திதேவி. இந்நகரின் அரசி” என்றான் சாத்யகி. “நான் இந்நகரத்தின் பட்டத்து இளவரசி பானுமதிக்கு பாஞ்சாலத்து இளவரசியின் செய்தியுடன் வந்த யாதவனாகிய சாத்யகி.”
அப்போதும் அவன் விழிகளில் ஏதும் தோன்றவில்லை. “ஆனால்… இருங்கள்” என அவன் உள்ளே சென்றபின் முதியவராகிய ஆயிரத்தவர் ஒருவர் மெல்ல படியிறங்கிவந்தார். ஒட்டிய முகமும் உள்ளே மடிந்த வாயும் நீண்ட காதுகளில் தலைகுப்புறத் தொங்கிய கடுக்கன்களுமாக அவர் உதிரப்போகிறவர் போலிருந்தார். “குந்தி தேவி இப்போது அஸ்தினபுரியில் இல்லை. அவர் துவாரகையில் இருக்கிறார்” என்றார். “நீங்கள் யார்?”
சாத்யகி பொறுமையிழந்து “நீங்கள் யார்?” என்றான். “நான் ஆயிரத்தவனாகிய பிரகதன். இது என் ஆணைக்குக் கட்டுப்பட்ட கிழக்குக் கோட்டை வாயில்.” சாத்யகி உரக்க “நான் சாத்யகி. யாதவ இளவரசன். பட்டத்து இளவரசிக்கு முறைமைச்செய்தியுடன் வந்துள்ளேன். பின்னால் வந்திருப்பவர் யாதவ அரசி குந்திதேவி. அஸ்தினபுரியின் பேரரசி…” என்றான். “பேரரசி இங்கில்லை, துவாரகையில் இருப்பதாகப்பேச்சு.”
சாத்யகி சலிப்புடன் தலையை அசைக்க முதல் காவலனுக்கு அனைத்தும் புரிந்தது. “அது மார்த்திகாவதியின் கொடி… அப்படியென்றால் குந்திதேவி வந்திருக்கிறார்!” என்று கூவினான். கிழவர் “அவர் துவாரகையில்…” என சொல்லத்தொடங்க நூற்றுவனுக்கும் புரிந்தது. அவன் “சென்று மேலே மார்த்திகாவதியின் கொடியை ஏற்று. பெருமுரசு முழங்கட்டும்” என்றான். கிழவர் “இங்கே பாண்டவர்களும் இல்லை. அவர்களும் துவாரகையில் இருப்பதாகத்தான் சொன்னார்கள்“ என்றார்.
நூற்றுவர்தலைவன் குந்தியின் தேரை நோக்கி ஓடிச்சென்று பணிந்து “யாதவப்பேரரசியை பணிகிறேன். இங்கே முறையான அறிவிப்பு வரவில்லை. பெருங்கூட்டமாதலால் நாங்கள் இரவுபகலாக பணியாற்றுகிறோம். ஆகவே எங்கள் உள்ளங்கள் நிலையில் இல்லை” என்றான். குந்தி திரையை விலக்கி அவனை வாழ்த்திவிட்டு செல்லலாம் என்று கைகாட்டினாள். தேர்கள் கோட்டைக்குள் சென்றன. கிழவர் தேரை ஆர்வமில்லாத கண்களால் நோக்கி நின்றார். வாய் தளர்ந்து தொங்கி பல்லில்லாமல் சிறிய பொந்துபோல தெரிந்தது. “நான் வருகிறேன் ஆயிரத்தவரே” என்றபின் சாத்யகி தேரில் ஏறிக்கொண்டு குந்தியை தொடர்ந்தான்.
நகரம் பலமடங்கு மக்கள்தொகை கொண்டதுபோல தெரிந்தது. எங்கும் மனிதர்கள் நெரித்துக்கொண்டிருந்தனர். கொடிகள் தோரணங்கள் பாவட்டாக்கள் பரிவட்டாக்கள் மாலைகள் என நாட்கணக்காக பல திசைகளில் இருந்து பலர் சேர்ந்து அலங்கரித்து அலங்கரித்து அவை அனைத்து அழகையும் இழந்து விழிகூசும் வண்ணக்கொப்பளிப்பு மட்டுமென எங்கும் நிறைந்திருந்தன. தெருவில் நடந்த ஒவ்வொருவரும் தெய்வம் குடியேறிய விழிகொண்டிருந்தனர். எவரையும் நோக்காமல் தன் அகப்பித்து ஒளிர நகைத்தபடியும் கூச்சலிட்டபடியும் சென்றனர். சிலர் நடனமிட்டனர். கூட்டம்கூட்டமாக களிமகன்கள் கைகளில் மூங்கில்குழாய்களுடன் நின்று சிரித்து ஆடிக்கொண்டிருந்தனர்.
நகரம் துயின்று எழுந்தது போல தெரியவில்லை. அதே பித்துநிலையில் காலமில்லாமல் இருந்துகொண்டிருப்பதாகத் தோன்றியது. சவுக்கால் சொடுக்கியும் குதிரைகளைச்செலுத்தி உடல்களை விலக்கி வழியமைத்தும் செல்லவேண்டியிருந்தது. காவல்மாடங்களில் எவருமிருக்கவில்லை. முகப்பின் பெருமுரசை உள்ளிருந்த எந்தப்பெருமுரசும் ஏற்று ஒலிக்கவில்லை. தெருக்களில் திரிந்துகொண்டிருந்தவர்களில் அஸ்தினபுரியின் காவலர்களும் ஏராளமானவர்கள் இருந்தார்கள் என்பது தெரிந்தது. அனைத்து ஒழுங்குமுறைகளும் சிதைந்துபோய் நகரம் அதன் பலநூறாண்டுகால கால்பழக்கத்தாலேயே நடந்துகொண்டிருந்தது.
அரண்மனை முகப்பு வரை எவரும் அவர்களை பொருட்படுத்தவில்லை. கூட்டமாகக் கூடி நின்றிருந்த சிலர் தேரை நோக்கி கூச்சலிட்டனர். அவர்கள் குந்தியை ஏளனம் செய்வதாக சாத்யகி நினைத்தான். அதன்பின்னர்தான் அவர்கள் அனைத்து அரச ஊர்திகளையும் கூச்சலிட்டு ஏளனம் செய்வதை கண்டான். தேர்களுக்கு முன்னால் சென்ற கொடிவீரர்கள் அரண்மனைக்கோட்டையின் முகப்பை அடைந்தபோது உள்ளிருந்து காவலர்தலைவன் வெளியே வந்து திகைப்புடன் நோக்கினான். அதற்குள் அரண்மனைமுன்னாலிருந்து கனகர் கைவீசியபடி ஓடிவருவது தெரிந்தது.
கனகர் குந்தியை வணங்கி “அஸ்தினபுரிக்கு பேரரசி திரும்பி வந்தது ஆலயம் விட்டுச்சென்ற தெய்வம் மீண்டதுபோல” என்று முகமன் சொன்னார். ”அஸ்தினபுரி தங்களை வணங்குகிறது. அரசகுலம் வரவேற்கிறது.” குந்தியின் முகத்தில் ஏதும் வெளிப்படவில்லை என்றாலும் அவள் கடுமையான எரிச்சலும் ஏமாற்றமும் கொண்டிருப்பதை அவளருகே சென்று நின்ற சாத்யகி உணர்ந்தான். “விதுரர் இருக்கிறாரா?” என்றாள். “ஆம், நாளைமறுநாள் இளவரசி துச்சளைக்கு திருமணம். இங்கே ஒவ்வொருநாளும் ஏழெட்டு அரசத் திருமணங்கள். அமைச்சர்கள் எவரும் தன்னிலையில் இல்லை” என்றார் கனகர்.
“என் அரண்மனை ஒழிந்துதானே இருக்கிறது?” என்றாள். “ஆம் பேரரசி. தாங்கள் இங்கிருந்து சென்றபின்னர் அங்கே எவரும் குடியிருக்கவில்லை. தாங்கள் வரும் செய்திவந்ததுமே தூய்மைப்படுத்தி அலங்கரித்து சித்தமாக்க ஆணையிட்டேன். அனைத்தும் ஒருங்கியிருக்கின்றன.” குந்தி திரும்பி சாத்யகியை நோக்கி “மாலையில் அரசவை கூடுமென நினைக்கிறேன். நீ உன் பணிகளை முடித்து அவைக்கு வா” என்றாள்.
சாத்யகி தலைவணங்கி “ஆணை” என்றான். “நான் பாஞ்சால இளவரசியின் செய்தியுடன் காசிநாட்டு இளவரசியை சந்திக்கவேண்டும்.” குந்தியின் விழிகளில் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் அவள் அச்சொற்களை குறித்துக்கொண்டாள் என்பதை சாத்யகி அறிந்தான். கனகர் “காசிநாட்டு இளவரசிதான் இங்கு மூத்தவர். ஆகவே அனைத்துச் சடங்குகளுக்கும் அவர்தான் முதன்மை கொள்ளவேண்டியிருக்கிறது. அனைத்து வரவேற்புகளும் அவர் பெயராலேயே நிகழ்கின்றன. இரவும்பகலும் அவருக்கு பணிகள் உள்ளன. தங்கள் வருகையை அறிவிக்கிறேன்” என்றார்.
குந்தி மேலும் ஏதும் பேசாமல் தன் முகத்திரையை இழுத்துவிட்டுக்கொண்டு படிகளில் ஏறி இடைநாழி வழியாக சென்றாள். அவளை வழிகாட்டி அழைத்துச்சென்ற ஏவலன் கைகளால் பிறரிடம் ஏதோ ஆணையிட்டுக்கொண்டே சென்றான். அப்போதுதான் அரண்மனையிலிருந்து பெண்கள் எவரும் வந்து குந்தியை வரவேற்கவில்லை என்பதும் மங்கலத்தாலமும் இசையும் எதிரே வரவில்லை என்பதும் சாத்யகிக்கு தெரிந்தது.
கனகர் “தாங்கள் உறைய சிறுமாளிகையே உள்ளது யாதவரே. இங்கே மாளிகைகளை கண்டடைவதுபோல பெரும்சிக்கல் ஏதுமில்லை. உண்மையில் இருபது பாடிவீடுகளை மேற்குவாயிலுக்கு அப்பால் காட்டுக்குள் அமைத்திருக்கிறோம். இளவரசியின் மணநிகழ்வுக்காக அரசர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். அத்தனைபேரையும் தங்கவைத்துவிட்டாலே நான் பாரதவர்ஷத்தின் திறன்மிக்க அமைச்சன் என எனக்குநானே சொல்லிக்கொள்வேன்” என்றார். சாத்யகி தலையசைத்து “நான் சற்று ஓய்வெடுக்கிறேன். அதற்குள் காசிநாட்டு இளவரசியிடம் செய்தியறிவித்து ஒப்புதலை எனக்கு அளியுங்கள்” என்றான்.
மதிய உணவருந்தியபின் அவன் காத்திருந்தான். கனகரின் பணியாளன் வந்து இளவரசி அவனை புஷ்பகோஷ்டத்தின் அரசியர் அறையில் சந்திக்க சித்தமாக இருப்பதாக சொன்னான். சாத்யகி இடைநாழியில் அவன் சொல்லவேண்டிய சொற்களை நினைவுகூர்ந்தபடி சென்றான். தூதுச்சொற்களை நினைவிலமைக்கும்போது அவற்றை ஒரு குறிப்பிட்ட தாளத்தில் ஒழுங்கமைத்துக்கொள்வதும் அவற்றிலுள்ள சொற்களை எண்ணிக்கொள்வதும் அவனுடைய வழக்கம். அறுபது சொற்கள். அறுபது என்று சொல்லிக்கொண்டே சென்றான்.
புஷ்பகோஷ்டத்தின் மாளிகைமுற்றம் முழுக்க தேர்களும் குதிரைகளும் நிறைந்திருந்தன. கிளம்பிக்கொண்டிருந்தன, வந்து சேர்ந்துகொண்டிருந்தன. பொறுமையிழந்த புரவிகள் குளம்புகளால் தரையை தட்டின. பணியாட்கள் எங்கிருந்தோ ஓடிவந்தனர். எங்கோ விரைந்தோடினர். எங்கோ மங்கலப்பேரிசை எழுந்தது. பெருமுற்றம் முழுக்க மலர்கள். அவற்றை அந்தக்கூட்டத்தின் நடுவே புகுந்து கூட்டி அள்ளிக்கொண்டிருந்தனர். சில குதிரைகள் தலைநீட்டி மலர்தார்களை நாசுழற்றிப் பற்றி மென்றுகொண்டிருந்தன. ஒரு மூலையில் அறுந்துவிழுந்த மலர்மாலைகளை அள்ளிக்குவித்திருந்தனர். எவரும் எவரையும் நோக்கவில்லை. எந்த முறைமைகளும் அங்குநிகழவில்லை என்று தோன்றியது. ஆனால் ஒவ்வொன்றும் தன் போக்கில் நிகழ்ந்துகொண்டிருந்தன.
இடைநாழியில் அவனை தள்ளிவிட்டுக்கொண்டு நான்கு ஏவலர் முன்னால் ஓடினர். பன்னிரண்டு அணிப்பரத்தையர் கசங்கிய பட்டாடைகளும் களைப்பு நிறைந்த விழிகளுமாக சென்றனர். அவர்களுக்குப்பின்னால் தாலங்களை அடுக்கி தலையிலேற்றியபடி ஏவலன் சென்றான். இடைநாழியின் வளைவில் இசைச்சூதர்க்குழு ஒன்று யாழ்களுடனும் முழவுகளுடனும் அமர்ந்திருந்தது. இருவர் தவிர பிறர் துயின்றுகொண்டிருந்தனர். படிகளில் உதிர்ந்துகிடந்தது சதங்கையின் வெள்ளிமணிகள் என்று சாத்யகி கண்டான். எங்கும் இருந்த ஒழுங்கின்மைக்கும் குப்பைகளுக்கும் அப்பால் ஒரு மங்கலத்தன்மையை உணரமுடிந்தது.
அது ஏன் என்று எண்ணிக்கொண்டே சென்றான். இடைநாழிக்கு அப்பால் பெருங்கூடத்தின் வாயிலை அடைந்தபோது தோன்றியது, தெரிந்த அனைத்து முகங்களிலும் இருந்த உவகையினால்தான் என்று. வேறெந்த தருணத்திலும் அரண்மனைகளில் அவன் மகிழ்ந்த முகங்களை கண்டதில்லை. அரண்மனையின் ஊழியர்களனைவருமே சலிப்புகொண்டு அதைமறைக்க ஒரு பாவைமுகத்தை பயின்று ஒட்டிக்கொண்டு செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள். பழகியதடம்தேரும் மந்தைகள் போல. வேலுடன் வந்து வணங்கி அவனை அழைத்துவந்த ஏவலனுடன் பேசிய காவலன் நன்றாக களைத்திருந்தான். ஆனால் அவனிடமும் உவகையின் நிறைவு இருந்தது.
விழவுகளிலெல்லாம் எளியமனிதர்கள் உவகைகொள்கிறார்கள். அரசகுலத்தவரும் ஆட்சியாளர்களும் அப்படி மகிழ்வதில்லை. எளியமக்கள் அவர்களுக்கு மேலே இருக்கும் அனைத்தையும் விழிதூக்கி நோக்கிக்கொண்டிருப்பவர்கள். அரசுகளை, உயர்குடியினரை, முறைமைகளை, தெய்வங்களை. ஏதோ ஒன்று எங்கோ பிழையாகிவிடும் என்ற அச்சத்திலேயே அவர்களின் வாழ்க்கை செல்வதை முகங்களில் காணமுடியும். உண்மையில் அவ்வாறு பிழையாகி கழுவேறுபவர்களால் ஆனது அவர்களின் சூழல். அச்சம் அவர்களை தனிமைப்படுத்துகிறது. தானும் தன் சுற்றமும் மட்டும் பிழையிலாது கடந்துசென்றால்போதுமென எண்ணுகிறார்கள்.
விழவு அவர்களை அச்சத்திலிருந்தும் தனிமையிலிருந்தும் விடுவிக்கிறது. நாளையும் நேற்றுமில்லாத கணங்களை அளிக்கிறது. விழவென்பதே ஒரு களிமயக்கு. எந்த விழவிலும் கள்ளும் களிப்புகையும் முதன்மையானவை. கூடவே இசை. நடனம். நாடகங்கள். மழை வெயில் பனி. அனைத்துக்கும் மேலாக காமம். சில விழவுகளின் நினைவுகளன்றி இம்மக்கள் தங்கள் வாழ்நாளில் வேறெதையாவது உள்ளத்தில் சேர்த்துக்கொள்வார்களா? அவனை ஏவலன் ஒரு சிறுகூடத்தில் அமரச்செய்தான். அவன் அமர்ந்ததும் “நான் கேட்டுவிட்டு வருகிறேன் இளவரசே” என்று சொல்லி விலகிச்சென்றான்.
சாத்யகி கூடத்தில் இருந்தவர்களுடன் அமர்ந்து காத்திருந்தான். அவர்கள் அனைவரும் பட்டாடையும் அணிகளுமாக விழவுக்கோலத்தில் இருந்தனர். வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசகுடிகள் என்பது தெரிந்தது. ஒருவரை ஒருவர் அவர்கள் அறிமுகம் செய்துகொள்ளாமை முறைமைகளைப்பற்றிய தயக்கத்தால் அல்ல மொழியறிவின்மையால்தான் என்று தோன்றியது. அவன் விழிகளை சந்தித்ததும் தலைவணங்கி புன்னகைத்தனர். அவர்களின் தலைப்பாகைகளும் தலைவணங்குதலும் மட்டுமல்லாது புன்னகைகளும்கூட மாறுபட்டிருந்தன. அவர்களிடம் பேசலாமா என சாத்யகி எண்ணிக்கொண்டிருக்கையில் வெளியே மங்கல இசை எழுந்தது.
அனைவரும் எழுந்து நிற்க வெளியே இருந்து மங்கல இசைக்குழு உள்ளே வந்தது. தொடர்ந்து பொலித்தாலங்களுடன் அணிப்பரத்தையர் வந்தனர். ஏழு மூதன்னையர் கைகளில் நெல், மலர், மஞ்சள், கனிகள், நிறைகுடம், பால், விளக்கு ஆகியவற்றை ஏந்தி உள்ளே நுழைய தொடர்ந்து பன்னிரு இளவரசிகள் கைகளில் நெய்விளக்குகளை ஏந்தியவர்களாக நிரைவகுத்து உள்ளே வந்தனர். ஒவ்வொருவரும் இடக்கையால் தங்கள் பட்டாடையை மெல்ல தூக்கி வலக்காலை எடுத்து படிக்குள் வைத்து நுழைய வாழ்த்தொலிகளும் குரவையொலிகளும் எழுந்தன. மகாநிஷாதர் குலத்து இளவரசிகள் அவர்கள் என சாத்யகி அறிந்தான்.
”இளவரசியர் பூஜ்யை, ஸுரை, விமலை, நிர்மலை, நவ்யை, விஸ்வகை, பாரதி, பாக்யை, பாமினி, ஜடிலை, சந்திரிகை, சந்திரகலை ஆகியோரை விண்வாழும் மூதன்னையர் வாழ்த்தட்டும். அவர்களின் கால்கள் பட்ட இம்மண்ணில் அனைத்து வளங்களும் பெருகுக! தெய்வங்கள் இங்கு திகழ்க! ஓம் ஓம் ஓம்” என்று முதுநிமித்திகர் கோல்தூக்கி வாழ்த்தினார். இளவரசியருக்குப்பின்னால் ஒன்பது காந்தார அன்னையரும் வந்தனர். அவர்களுடன் கையில் மலர்த்தாலமேந்தி வருபவள்தான் பானுமதி என்று சாத்யகி புரிந்துகொண்டான். அவளுக்கு பலந்தரையின் சாயலிருந்தது.
அனைவரும் மலரும் மஞ்சளரிசியும் தூவி வாழ்த்துரைத்தனர். இளவரசியர் ஒவ்வொருவராக உள்ளே சென்று மறைய பின்னால் வந்தவர்கள் அந்தக் கூடத்தில் தலைகளாக நிறைந்தனர். தலைப்பாகையின் பசைமணம். வியர்வை வீச்சம். குரல்கள் உடல்கள்நடுவே கசங்கின. எவரோ “சாளரங்களை திறந்து வைக்கக் கூடாதா?” என்றனர். ”திறந்துதான் இருக்கின்றன” என எவரோ சொன்னார்கள்.
சாத்யகி பின்னால் சென்ற சந்திரிகையையும் சந்திரகலையையும் பார்த்தான். அவர்கள் அந்த இரைச்சலாலும் கொந்தளிப்பாலும் மிரண்டவர்கள் போல சுற்றிச்சுற்றி நோக்கினர். முகங்கள் களைத்து கன்றியிருந்தன. கண்மையும் நெற்றிக்குங்குமமும் காதோரப்பொன்பொடியும் வியர்வையில் கரைந்து வழிந்து தீற்றப்பட்டு தெரிந்தன.
மீண்டும் அனைவரும் அமரப்போகும்போது மங்கல இசை எழுந்தது. அவனருகே இருந்த சிறிய குழு எழுந்தது. “அவர்கள்தான். கொற்றவை ஆலயத்திலிருந்து வந்துவிட்டனர்” என்றார் ஒருவர். “அவர்கள் துர்க்கை ஆலயத்திற்கல்லவா சென்றார்கள்?” முதலில் சொன்ன வயோதிகர் “எல்லாம் ஒன்றுதான்” என்றபடி முன்னால் சென்றார். “இவர்கள் யார்?” என்று சாத்யகி அருகிலிருந்தவர்களை கேட்டான். அவர் “நான் கோசலநாட்டவன். இக்ஷுவாகு குலத்து மகாபாகுவின் இளையோன். எங்கள் அரசரை க்ஷேமதர்சி என்றுதான் சொல்கிறார்கள்” என்றார்.
“இல்லை, இவர்கள்” என்றான் சாத்யகி. ”இவர்கள் அவந்தி நாட்டினர் என நினைக்கிறேன். விந்தருடைய உறவினரும் அனுவிந்தருடைய உறவினரும் தனித்தனியாக நின்றிருக்கிறார்கள். நீங்கள் யார்?” சாத்யகி “யாதவன்” என்று சுருக்கமாக சொன்னான். அதற்குள் கூடத்திற்குள் வெளியிலிருந்து வந்த கூட்டம் புகுந்து அழுத்தி நெரிக்க அனைவரும் ஒருவரோடொருவர் ஒட்டிக்கொண்டனர். வாழ்த்தொலிகளும் குரவையொலிகளும் எழுந்தன.
நடுவே சென்ற இளவரசிகளை சாத்யகி நோக்கினான். நிமித்திகர் குலப்பெயருடன் இணைத்து அபயை, கௌமாரி, ஸகை, சுகுமாரி, சுகிர்தை, கிருதை, மாயை, வரதை, சிவை, முத்ரை, வித்யை, சித்ரை என அவர்களின் பெயர்களைக் கூவி வாழ்த்தினர். அனைவருமே நீளமான மூக்கும் சற்று ஒடுங்கிய முகமும் சிறிய உடலும் கொண்டிருந்தனர்.
அதற்குள் அடுத்த முழவொலி வெளியே எழுந்தது. கோசலர் “அவர்கள் எங்கள் இளவரசிகள்” என உரக்கக் கூவினார். “காமிகை, கௌசிகை, கேதுமதி, வசுதை, பத்ரை, சிம்ஹிகை, சுகிர்தை. அவர்களை ஏழு கன்னியர் என்று எங்கள் சூதர் பாடுவதுண்டு. சீதையின் குலத்தில் வந்தவர்கள் அவர்கள்…” இளவரசிகள் ஒவ்வொருவராக உள்ளே வந்ததைக் கண்டபோது சாத்யகி விந்தையான ஒன்றை உணர்ந்தான். ஒரு குலத்தைச்சேர்ந்த இளவரசிகள் அனைவரும் ஏறத்தாழ ஒரே முகம் கொண்டிருந்தனர். ஏழாகவும் பன்னிரண்டாகவும் சென்றாலும் அவர்கள் ஒருவரே என்று தோன்றியது.
அவனருகே கூட்டத்தைப்பிளந்து வந்த ஏவலன் ”இளவரசே, தங்களை பட்டத்து இளவரசி அழைத்துவரச்சொன்னார்கள்” என்றான். “எப்படிச்செல்வது?” என சாத்யகி தயங்கினான். “இங்கே இப்போது முறைமைகளென ஏதுமில்லை. முட்டிமோதிச்செல்லவேண்டியதுதான். வருக!” என்றான் ஏவலன். ”அத்தனைபேரும் அரசர்கள் என்றால் எப்படி முறைமையை நோக்குவது?”
கூடத்தின் மறுஎல்லையில் வாயிலை அடைவதற்குள் சாத்யகி நூற்றுக்கணக்கான தோள்களை, தலைப்பாகைகளை, கைகளை, இடைகளை அறிந்திருந்தான். உள்ளறையில் பெண்களின் ஓசைகள் நிறைந்திருந்தன. இடைநாழி சற்று இருட்டாக இருந்தது. உள்ளிருந்து மங்கலஇசையும் வாழ்த்தொலிகளும் குரவைகளும் கேட்டன.
வாயிலில் நின்றிருந்த சேடியிடம் அவனை ஏவலன் அறிவித்தான். மரத்தாலான சிறிய அறை. பழங்காலத்து உயரமற்ற கூரை. சிறிய வாயிலைத் திறந்து “உள்ளே செல்லுங்கள் இளவரசே” என்றாள் சேடி. அவன் குனிந்து உள்ளே சென்றான். சிறிய அலங்கரிக்கப்பட்ட அறை என்றாலும் பலவகையான பொருட்களால் அது நிறைந்திருந்தது. அவற்றினூடாக ஓர் மங்கலப்பொருள் போலத்தான் அவளும் தெரிந்தாள். சாத்யகி தலைவணங்கி வாழ்த்துரைத்தான்.
பீடத்தில் அமர்ந்திருந்த பானுமதி எழுந்து முகமன் சொல்லி அவனை வரவேற்றாள். “வருக யாதவரே. தங்களை சந்திப்பது இளையயாதவரை சந்திப்பது. நான் நல்லூழ் கொண்டவள். இந்நாள் வாழ்த்தப்பட்டதாயிற்று” என்றாள். சாத்யகி தலைவணங்கி “நற்சொற்களுக்கு மகிழ்கிறேன். ஆனால் நான் அலைகடலின் துமி மட்டுமே” என்றான். “காசிநாட்டு இளவரசியை வணங்குகிறேன். விஸ்வநாதரின் அருள் என்னுடன் இருக்கட்டும்.”
புன்னகையுடன் அவனை அமரும்படி கைகாட்டினாள். அதற்குள் கதவு திறந்து ஓர் இளவரசி உள்ளே வந்து திகைத்து நின்றாள். “வா…” என்றாள் பானுமதி புன்னகைசெய்து கை நீட்டியபடி. அவளுக்கு பதினெட்டு வயதுக்குள்தான் இருக்கும். முறைமைகள் எதையும் பயிலாத சிறுமி என அந்தத் திகைப்பு சொன்னது. “இவள் காந்தாரத்து அசலரின் மகள் ஸ்வஸ்தி… இளவரசர் சமர் இவளை மணந்திருக்கிறார்” என்று அவளை இடைவளைத்து அருகே இழுத்து தன் பீடத்தின் கைமேல் அமரச்செய்தாள். “இவர் யாதவ இளவரசர்…” என்றாள்.
அவள் சிறுமியென நாணத்துடன் உடல் வளைத்து தலையை திருப்பினாள். “அங்கே இளவரசியர் அவைபுகும் வழக்கமில்லை. ஆகவே இவளுக்கு எந்த அரசுமுறைமைகளும் தெரியாது” என்றபின் ”என்னடி செல்லமே?” என்றாள். அவள் பானுமதியின் தோளில் பூனை போல உடலை உரசியபடி “மூத்தவளே, என்னை பிரீதியுடன் போகச் சொல்கிறார்கள்” என்றாள்.
“ஏன் போனால் என்ன?” என்றாள் பானுமதி. அவள் தலையை நொடித்து “நான் அசலரின் மகள் அல்லவா?” என்றாள். “ஆம், ஆனால் இங்கே நீ கௌரவரின் மனைவி… ஒன்றும் ஆகாது. செல்!” அவள் தலையை மறுப்பாக ஆட்டி “நான் பிரீதியின் அருகே நிற்க மாட்டேன்” என்றாள். “சரி, நீ க்ரியையுடன் நின்றுகொள்… போ” என்றாள் பானுமதி.
“நீங்கள் வருவீர்களா?” என்று அவள் எழுந்து நின்று கேட்டாள். “இதோ வந்துவிடுவேன்” என்று பானுமதி சொல்ல அவள் வெளியே சென்றாள். பானுமதி சிரித்துக்கொண்டு “திடீரென்று அரண்மனை முழுக்க தங்கைகள். பெயர்களை நினைவில் பதிக்கவே ஒருவாரம் ஆகுமென நினைக்கிறேன்” என்றாள்.
”கௌரவ இளவரசியின் மணமும் நெருங்குகிறது என அறிந்தேன்” என்றான் சாத்யகி. “ஆம், அதுவும் பெரும்பணியாக எஞ்சியிருக்கிறது. இளவரசியர் பாதிப்பேர்தான் வந்திருக்கிறார்கள். அனைவரும் வந்துசேர்வதற்கு இன்னும் இரண்டுவாரமாகும்.” அதுவே தருணம் என உணர்ந்த சாத்யகி “பாஞ்சாலத்து இளவரசி நகர்புகும்போது இங்கே மங்கலம் முழுமைகொண்டிருக்கும் என நினைக்கிறேன்” என்றான். “ஆம், அவள் இளவேனிற்காலத்தின் முதல் மழைபோல வருவாள் என்று சூதர் ஒருவர் பாடினார்.” அவளுடைய சிரிப்பிலிருந்து அவளுக்கு திரௌபதிமேல் அன்பும் மதிப்பும் மட்டுமே உள்ளது என சாத்யகி புரிந்துகொண்டான்.
“என் தூதை சொல்லிவிடுகிறேன் இளவரசி” என்றான். “சொல்லுங்கள்!” சாத்யகி சொற்களை ஒருமுறை அகத்தில் கண்டுவிட்டு “பாஞ்சால இளவரசி தங்களிடம் சொல்லும்படி ஆணையிட்ட சொற்கள் இவை” என்றான். ஒப்பிப்பது போல “பெருஞ்சுழல் பெருக்கில் எதற்கும் பொருளில்லை. எது நிகழ்ந்தாலும் இங்கு நிகழும் மொத்த மானுடவாழ்க்கையையும் முழுமையாக பொறுத்தருளி விண்மீள்பவளே மூதன்னையாகி குனிந்து இங்கு பிறந்துவிழும் மைந்தரை வாழ்த்தமுடியும்.”
“நீங்கள் என்றோ ஒருநாள் அவருடன் தோள்தொட்டு நின்று ஏன் என்று கேட்பீர்கள் என அவர் நினைக்கிறார். அப்போது தெரியவில்லை என்றே அவர் மறுமொழி சொல்வார். அதை இப்போதே சொல்லியனுப்பியிருக்கிறார். இப்புவியில் அவர் அணுக்கமாக உணரும் முதல்பெண் நீங்கள். தங்கை என்று அவர்கள் அகம் நெகிழ்ந்து அணைத்துக்கொள்ள விழைபவர் நீங்கள்” என்று அவன் சொல்லிமுடித்தான்.
பானுமதி எந்த முகமாற்றமும் இல்லாது அதைக் கேட்டு அமர்ந்திருந்தாள். சொல்லி முடித்து சாத்யகி அவள் மறுமொழிக்காக காத்திருந்தான். அவள் மெல்ல அசைந்து பின் புன்னகைத்து “அதற்கு மறுமொழி ஏதும் தேவையில்லை யாதவரே. அவர் இங்கு வரும்போது சென்று தழுவிக்கொள்வது மட்டும்தான் நான் செய்யவேண்டியது” என்றாள். சாத்யகி தலைவணங்கினான்.
“இத்தருணத்தில் நான் விழைந்த சொற்கள்தான் இவை. இந்தக் கொப்பளிப்புக்கு அடியில் என் அகம் மிகமிக நிலையழிந்திருந்தது. அச்சமோ ஐயமோ… தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் இவ்வரண்மனைக்குள் இளவரசியர் வந்துகொண்டே இருக்க நான் அமைதியிழந்தபடியே சென்றேன்.” அவன் அவளை புரியாமல் நோக்கியிருந்தான். அப்போது அவள் ஏதோ ஒருவடிவில் காந்தாரி போலிருந்தாள். தடித்த வெண்ணிறமான உடல். சிறிய விழிகள். சிறிய மூக்கு. சிறிய இதழ்கள்.
“இச்சொற்களும் எனக்குப்புரியவில்லை. ஆனால் இதைப்பற்றிக்கொண்டு நீந்தலாமென நினைக்கிறேன். நான் இங்கு அடையும் இந்த நிலையழிவை அங்கிருந்து உணர்ந்து அவர் சொல்லியனுப்பியிருக்கிறார்” என்றாள் பானுமதி.
சாத்யகி “இளவரசி இந்தக் கணையாழியை அவரது அன்புக்கொடையாக தங்களுக்கு அளிக்கும்படி சொன்னார்கள்“ என்றான். தந்தப்பேழையில் இருந்த கணையாழியை அவன் அளிக்க அவள் எழுந்து அதை வாங்கிக்கொண்டு திறந்து அதன் மணியை நோக்கினாள். ”பால்துளி போலிருக்கிறது” என்றாள். அவனும் அதைத்தான் எண்ணினான். செம்பட்டுப்பேழைக்குள் மழலையுதடுகளில் எஞ்சிய பால்மணி போல தெரிந்தது.
“இளைய அன்னை எப்படி இருக்கிறார்கள்?” என்று பானுமதி கேட்டாள். “அவர்களை நான் இன்னும் சந்தித்ததில்லை. முறைமைப்படி சென்று பார்த்து வணங்கவேண்டும். ஒப்புதல் கேட்டு செய்தி அனுப்பியும் மறுமொழி வரவில்லை.” சாத்யகி மெல்லிய புன்னகையுடன் “அவர்கள் நகர்நுழைந்ததை நகர் இன்னும் அறியவில்லை. அவர்கள் யாதவப்பேரரசி என்பதை யாதவர் மறந்துவிட்டனர். அந்தச் சினத்துடன் இருக்கிறார்” என்றான்.
“இங்கே ஒவ்வொருநாளும் நூற்றுக்கணக்கான நகர்நுழைவுகள்” என பானுமதி அந்த அங்கதத்தை புரிந்துகொள்ளாமல் சொன்னாள். “காந்தாரப்பேரரசிக்கு நிகராகவே யாதவப்பேரரசியும் வந்தமர்ந்து புதிய மணமகள்களை வாழ்த்தவேண்டும். அதுதான் மூதன்னையருக்கு உகந்தது. நீங்கள் அதை அவரிடம் சொன்னால் நன்று.” சாத்யகி ஒன்றும் சொல்லவில்லை. அவன் அமைதியை அவள் உடனே புரிந்துகொண்டு “சந்திக்கமுடிந்தால் நானே சொல்லிக்கொள்கிறேன்” என்றாள். ”ஆம் இளவரசி, அதுவே நன்று” என்றான் சாத்யகி.
பானுமதி எழுந்துகொண்டு “அன்னையை பார்க்க வாருங்கள்” என்றாள். “நான் அவர்களிடம் முறைமைப்படி ஒப்புதல் பெறவில்லை” என்றான். “ஒப்புதலா? அன்னை காய்த்த ஆலமரம்போலிருக்கிறார். மொய்த்திருக்கும் பறவைகள் ஒலியாலேயே அவரை நீங்கள் அடையாளம் காணமுடியும். வருக!” சாத்யகி “நான் சந்திப்பதில் முறைமைப்பிழை இல்லை அல்லவா?” என்றான். பானுமதி “யாதவரே, நீங்கள் இளைய யாதவரின் புன்னகையை கொண்டுவருபவர். நீங்கள் இங்கே செல்லக்கூடாத இடமென ஏதுமில்லை. அன்னை இன்று இங்கே ஒரே ஒருவரை மட்டும் சந்திக்க விழைவாரென்றால் அது உம்மையே” என்றாள்.