வெண்முகில் நகரம் - 69
பகுதி 14 : நிழல் வண்ணங்கள் – 4
தொலைதூரத்தில் கங்கையின் கரையில் அன்னையர் ஆலயத்தின் விளக்குகள் ஒளித்துளிகளாகத் தெரிவதை நோக்கியபடி கங்கையின் மையப்பெருக்கில் அவர்கள் நின்றிருந்தனர். கர்ணன் பெருமூச்சுடன் திரும்பி “உறுதியாகவே தோன்றுகிறது, அவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள்” என்றான். “உன் வீண் ஐயங்கள் அவை. இந்தத்திட்டத்தில் எந்தப் பழுதையும் நான் காணவில்லை” என்று துரியோதனன் சினத்துடன் சொன்னான். “இளவரசே, நீங்கள் அந்த இளவரசியுடன் கற்பனையில் வாழ்ந்துவிட்டீர்கள். ஆகவே அனைத்தும் முடிந்துவிட்டதென்ற உளமயக்குக்கு ஆளாகிறீர்கள். இன்னும் எதுவும் தொடங்கவில்லை” என்றான் கர்ணன்.
அது எத்தனை உண்மையான சொல் என்று பூரிசிரவஸ் வியந்துகொண்டான். துரியோதனன் சலிப்புடன் கைகளை அசைத்துக்கொண்டு விலகிச்சென்றான். துச்சாதனன் அருகே வந்து “என்ன செய்யலாம் என்கிறீர்கள் மூத்தவரே?” என்றான். “அவர்கள் காத்திருக்கிறார்கள்… நமக்கான ஒளியடையாளத்தை அவர்களும் பார்க்கமுடியும்” என்று சொன்ன கர்ணன் பெருமூச்சுடன் “இந்த இருளில் அவர்கள் எத்தனைபேர், எங்கிருக்கிறார்கள் என எப்படி அறிவது? இருளுடன் போர்புரிவதைப்போல இடர் பிறிதொன்றுமில்லை. இருள் முடிவற்றபொருள் கொண்டது” என்றான்.
கைகளால் படகின் விளிம்பைத் தட்டியபடி நின்றபின் திரும்பி “நம்மிடம் உள்ள மிக விரைவாக படகுகொண்டுசெல்லும் குகன் ஒருவனை அழை” என்றான். துச்சாதனன் காலடிகள் ஒலிக்க ஓடி படகின் மறு எல்லைக்குச் சென்று அங்கிருந்து கயிறுவழியாக இருளுக்குள் சென்று மறைந்தான். கர்ணன் நிலையற்று அலைந்தபடி கரையையே நோக்கிக்கொண்டிருந்தான். துச்சாதனன் திரும்பி வந்தபோது ஓரு குகன் அவனுடன் இருந்தான். மிக இளையவன். “உன்னால் அரைநாழிகைக்குள் கரைசெல்ல முடியுமா?” என்றான் கர்ணன்.
“அதற்கு முன்னரே செல்வேன் அரசே” என்றான் குகன். “என்னிடம் மெல்லிய தக்கைப்படகு இருக்கிறது, கங்கைநீரை எனக்கு நன்றாகத்தெரியும்.” கரைக்குச் சென்று அங்கிருந்து ஒரு சுடர் அசைவைக் காட்டும்படி கர்ணன் ஆணையிட்டான். “எதற்கு?” என்றான் அப்பால் நின்ற துரியோதனன் ஐயத்துடன். கர்ணன் மறுமொழி சொல்லாமல் “நீ செல்லவேண்டிய இடம் அது… “ என சுட்டிக்காட்டினான். அது அன்னையர் ஆலயத்திற்கு முன்னால் விஸ்வநாதர் ஆலயத்தருகே ஓர் இடம். “அந்த தூண்வெளிச்சம் தெரியும் இடம்… அதனருகே இருண்டிருக்கிறது. அது காடு என நினைக்கிறேன்.”
குகன் தலையசைத்தான். “சுடர் காட்டியதும் நேராக நீரில் குதித்து மீண்டும் நம் படகை நோக்கி வந்துவிடு…” என்றபின் அவனை போகும்படி சொல்லிவிட்டு கர்ணன் “இளையோனே, அந்த ஒளி தெரிந்ததும் நமது படகுகளில் இரண்டு கரைநோக்கி விரைந்துசெல்லவேண்டும். ஓரிரு விளக்குகள் மட்டும் போதும்” என்றான். துச்சாதனன் அவன் சொன்னதைப்புரிந்துகொண்டு தலையசைத்தான். “அரைநாழிகைநேரம் சரியாக இருக்கும்” என்று விண்மீன்களை நோக்கியபடி கர்ணன் சொன்னான்.
துரியோதனன் எதையும் நோக்காமல் படகின் மரத்தரையில் குறடு ஓசையிட நடந்தபின் திரும்பி “என்ன செய்யப்போகிறோம்? ஏன் இங்கே நிற்கிறோம்? கரையணையலாமே?” என்றான். “இளவரசே, நாம் கரைநோக்கி சென்றால் நம்மை எவரேனும் பார்ப்பார்கள்” என்றான் கர்ணன். “எவர்? நம்மை இங்கே எவரும் எதிர்பார்க்க மாட்டார்கள்” என்று துரியோதனன் உரக்க சொன்னான். கைகளை ஒன்றுடன் ஒன்று சேர்த்து இறுகப்பற்றி பிசைவது போல அழுத்தியபடி “நேரமாகிக்கொண்டே இருக்கிறது. எக்கணமும் கரையில் இருந்து ஒளியழைப்பு வரும்” என்றான்.
கர்ணன் அவனை நோக்காமல் கரையையே நோக்கியபடி “ஆம்” என்றான். “அழைப்பு வந்தபின் நாம் கிளம்பினால் கரைசேரவே நெடுநேரமாகிவிடும்” என்றான் துரியோதனன். “ஆம், அதைத்தான் நான் சிந்திக்கிறேன். பெரியபடகு கரையணைய சில நெறிகள் உள்ளன. கங்கையின் இப்பகுதியில் கரையோர எதிரோட்டம் இருக்குமென்றால் பெரிய படகுகள் சற்று தயக்கம் கொள்ளும். மேலும் நாம் பாய்களை சுருக்கவேண்டியிருக்கும். மீண்டும் விரிக்கவும் விரைவைக்கொள்ளவும் மேலும் காலம் தேவை.” அவன் கைகளால் படகின் விளிம்பை தட்டிக்கொண்டே இருந்தபின் திரும்பி “சென்றுசேர்ந்துவிட்டானா?” என்றான். “அரைநாழிகை ஆகவில்லை மூத்தவரே” என்றான் துச்சாதனன்.
துரியோதனன் “நாம் கரைக்கு செல்வோம்… அதைத்தவிர வேறுவழியில்லை. மேலும் இங்கே இப்படி காத்திருப்பது பொறுமையிழக்கச் செய்கிறது” என்றான். கர்ணன் அவனை திரும்பிப்பார்க்கவில்லை. இருளை நோக்கி நின்றவன் திரும்பி “இருவர் மட்டும் செல்லும் சிறியபடகுகள் இவர்களிடம் உள்ளனவா? இந்த குகன் சென்றதுபோன்றவை?” என்றான். “அது மென்மரம் குடைந்தபடகு… இருவர் செல்லமுடியுமென்றே நினைக்கிறேன்… இதோ கேட்டுவருகிறேன்” என்றான் துச்சாதனன்.
துரியோதனன் எரிச்சலுடன் “என்ன செய்யவிருக்கிறாய்? சிறுபடகில் கரைசேரலாமென்றா? மூடா, எப்படி இளவரசியரை நாம் அவற்றில் கூட்டிவரமுடியும்? சிறியபடகுகள் என்றால்…” என்றான். இடைமறித்து “பெரியபடகுகள் சித்தமாக கங்கைப்பெருக்கிலேயே நிற்கட்டும். வேறுவழியில்லை” என்றான் கர்ணன். “ஏன்? நாம் கரைக்குச்சென்றால்…” என்று சொன்ன துரியோதனன் தன் கைகளை ஓங்கி முட்டிக்கொண்டு “உன் வீண் அச்சத்தால் ஏதோ நாடகம் ஆடுகிறாய்… இங்கே எவர் இருக்கிறார்கள்?” என்றான். கர்ணன் தலையை தனக்குத்தானே என அசைத்தான்.
துச்சாதனன் இரண்டு குகர்களுடன் விரைந்து வந்தான். “மூத்தவரே, மூவர் செல்லமுடியும் என்கிறார்கள். இருவர் துழாவ வேண்டும்… மிகவிரைவாகவே கரையை அடைந்துவிடமுடியும்…” கர்ணன் முகம் மலர்ந்து “ஆம், அதுதான் நமக்குத்தேவை. மூன்று படகுகளை கொண்டுவரச்சொல். மூன்று குகர்கள் அவற்றை துழாவட்டும்” என்றான். பூரிசிரவஸ்ஸிடம் “நாம் மூவரும் அவற்றில் செல்வோம். துச்சாதனன் இங்கே படகுகளை நடத்தட்டும். நான் அம்புகளால் அளிக்கும் ஆணையை அவனால் புரிந்துகொள்ளமுடியும்” என்றபடி ஓடிச்சென்று தன் அம்பறாத்தூணியையும் வில்லையும் எடுத்துக்கொண்டான். “விற்கள்… அவை மட்டும் போதும்” என ஆணையிட்டபடி “செல்வோம்” என்றான்.
துரியோதனன் அவன் பெரிய உடலில் வழக்கமாக நிகழாத விரைவுடன் ஓடிச்சென்று வில்லையும் அம்புகளையும் எடுத்துக்கொண்டான். வடங்கள் வழியாக மூன்று தக்கைப்படகுகள் கங்கையில் இறக்கப்பட்டன. உடலை ஒடுக்கி கால்களை மடித்து அமருமளவுக்கே அவற்றில் குடைவு இருந்தது. அமரமுனையில் அமர்ந்த குகன் பெருந்துடுப்பை வைத்திருந்தான். துரியோதனன் அமர்ந்ததும் படகு சற்று அமிழ்ந்தது. குகன் மேலும் நுனி நோக்கி சென்றான். மூவரும் அமர்ந்ததும் கர்ணன் மேலே நின்ற துச்சாதனனை நோக்கி “ஆணைகளை நோக்கு” என்றபின் கிளம்பலாம் என்று கைகாட்டினான்.
குகர்கள் துடுப்பால் பெரும்படகை ஓங்கி உந்தி சிறுபடகுகளை முன்செலுத்தினர். வில்லில் இருந்து அம்புகள் என அவை நீரில் பீறிட்டன. இருபக்கமும் மாறிமாறி துடுப்பிட்டபோது எடையற்ற படகுகள் கரைநோக்கி செல்லத்தொடங்கின. நீரில் துடுப்பு விழும் ஒலி மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. பெரிய படகுகள் நிழல் என மாறி கரைந்தழிந்தன. கரையின் வெளிச்சம் பெரிதாகிவருவதிலிருந்து படகுகளின் விரைவு தெரிந்தது. அலைகளை கிழிக்காமல் ஏறிக் கடந்து நீர்ப்படலத்தின் மேல் வழுக்கியதுபோல சென்றன அவை. பூரிசிரவஸ் தொலைவில் கரையில் சுடர் சுழல்வதை கண்டான்.
அவனுக்குப்பின்னால் வந்த படகில் கர்ணனும் அதற்குப்பின்னால் வந்தபடகில் துரியோதனனும் இருந்தனர். சுடர்சுழற்சியைக் கண்டதும் கங்கைப்பெருக்கில் நின்றிருந்த அஸ்தினபுரியின் இரு பெரியபடகுகள் பாய்விரித்தபடி அலைகளில் தாவி கரைநோக்கி சென்றன. உடனே கங்கைக்குள் நின்றிருந்த மூன்று வணிகப்படகுகளில் விளக்குகள் எரிந்தன. அவை எழுந்து அஸ்தினபுரியின் படகுகளை நோக்கி சென்றன. அருகே வந்த படகிலிருந்த துரியோதனன் “பீமன்! அவன் காத்து நின்றிருக்கிறான்” என்று கூவினான். “ஆம், நமது படகுகளை அவன் தாக்குவான். ஆனால் அவற்றில் இளவரசியர் இல்லை என்று தெரிந்துகொள்ள சற்றுநேரமே ஆகும்” என்றான் கர்ணன்.
அதற்குள் கரையில் அன்னையர் ஆலயத்தின் முகப்பில் எரிப்புள்ளி சுழன்றது “இளவரசியர் வந்துவிட்டனர்” என்று துரியோதனன் கூவினான். “நீங்களிருவரும் கரைக்குச்சென்று அவர்களை படகிலேற்றிக்கொள்ளுங்கள். நான் நீர்காக்கிறேன்” என்று கர்ணன் கூவினான். “விரைவு விரைவு” என்று துரியோதனன் குகனிடம் கூவினான். அவர்களின் படகுகள் கரைநோக்கி சென்றன. அப்பால் பீமனின் படகுகளில் இருந்து எழுந்த எரியம்புகள் அஸ்தினபுரி படகின் பாய்கள் மேல் விழுந்து எரிக்கத் தொடங்கின. அதன் வீரர்கள் பாய்களை இறக்கி அணைத்தபடி கூச்சலிட்டனர். மாறி மாறி எரியம்புகள் எழுந்தன.
அந்தப்படகுகளில் ஏதேனும் ஒன்று முழுமையாக எரியத்தொடங்குமென்றால் கங்கைவெளி ஒளிகொண்டுவிடும், அனைத்தும் தெளிவாக தெரியத்தொடங்கும் என பூரிசிரவஸ் எண்ணினான். கரையில் அன்னையர் ஆலயம் பெரிதாக மாறி ஆடிக்கொண்டே வந்தது. அங்கே ஒரு சிறியபடித்துறை இருந்தது. சேற்றுப்படுகை இல்லாமலிருந்தது நன்று என பூரிசிரவஸ் நினைத்தான். “விரைவு விரைவு” என்று துரியோதனன் கூவிக்கொண்டே இருந்தான். இருபடகுகளும் கரையோரத்து எதிரலைகள் மேல் எழுந்து விழுந்து மேலும் எழுந்து விழுந்து படித்துறை நோக்கி சென்றன.
படித்துறை அலைபாய்ந்தபடி எழுந்து அவர்களை முட்ட வந்தது. அதன் மேல் வெண்ணிற உடை இருளுக்குள் மின்ன ஓடியிறங்கிய ஐந்து காவலர்களை இருவரும் அம்பெய்து வீழ்த்தினர். படகுகள் படித்துறையை அணுகியதும் குகர்கள் துடுப்புகளை அதன் மேல் ஊன்ற அவை வளைந்து விலாவை படிமேல் முட்டி நின்றன. துரியோதனன் இறங்கி படிக்கட்டு மேல் ஓடினான். அவனை நோக்கி வாளுடன் ஓடிவந்த இருவரை பூரிசிரவஸ் அம்புகளால் வீழ்த்தினான். துரியோதனன் படிகளுக்குமேல் அன்னையர் ஆலயத்து சிறுமுற்றத்தில் நின்றிருந்த பல்லக்குகளை நோக்கி சென்றான்.
தன்னை நோக்கி ஓடிவந்த இருவரை இடக்கையால் அறைந்து நிலத்தில் வீழ்த்தி ஒருவனை உதைத்துச்சரித்து பல்லக்கை அணுகி துரியோதனன் கூவினான் “இளவரசிகளுக்கு வணக்கம். நான் அஸ்தினபுரியின் இளவரசன் தார்த்தராஷ்டிரனாகிய துரியோதனன்… இறங்கி படகுகளில் ஏறுங்கள்” என்று உரக்கக் கூவினான். போகிகள் பல்லக்குகளை வைத்தபின் அஞ்சி பின்னால் நின்றனர். பூசகர் “என்ன நிகழ்கிறது? யார்?” என்று கூவியபடி ஓடிவர “விலகுங்கள்…” என்று அம்பை ஓங்கியபடி பூரிசிரவஸ் சொன்னான்.
பல்லக்கின் திரைகள் விலகி அன்னையர் ஆலயத்து நெய்விளக்கின் ஒளியில் பானுமதியின் முகம் தெரிந்தது. “இளவரசி” என்று துரியோதனன் திகைத்தவன் போல மெல்ல சொன்னான் “நான் பானுமதி… இவள் என் தங்கை பலந்தரை” என்று அவள் மெல்லியகுரலில் சொன்னாள். “படகில் ஏறிக்கொள்ளுங்கள்” என்று பூரிசிரவஸ் கூவினான். தன்னை நோக்கி வந்த ஒருவனை அம்பை கையால் வீசி வீழ்த்தினான். பானுமதி “நிறுத்துங்கள்… போரிடவேண்டாம்” என்று தன் வீரர்களுக்கு உரத்தகுரலில் ஆணையிட்டாள். அவர்கள் கையில் படைக்கலங்களுடன் பின்னகர்ந்தனர்.
“விரைந்துவருக இளவரசி…” என்று பூரிசிரவஸ் கூவினான். திரும்பிப்பார்க்கையில் அஸ்தினபுரியின் பெரும்படகொன்று பாய் எரிந்து எழுவதையும் கங்கைநீர்வெளி ஒளியலையாக ஆவதையும் கண்டான். பானுமதியும் பலந்தரையும் ஆடையை கையால் தூக்கியபடி சிற்றடிகளுடன் ஓடி படித்துறைக்கு வந்தனர். “ஏறிக்கொள்ளுங்கள்” என்றான் துரியோதனன். சிறிய படகைக் கண்டு அவர்கள் தயங்கினர். அப்பால் இரண்டு பெரிய படகுகள் எரியம்புகள் விடுத்தபடி அவர்களை நோக்கி வரத் தொடங்கின. “விரைவு… விரைவு” என்று துரியோதனன் கூவினான். துரியோதனன் படகில் பானுமதி ஏறிக்கொண்டாள்.
பலந்தரை தடுமாற பூரிசிரவஸ் “ஏறுங்கள் இளவரசி… நான் உடனிருப்பேன்” என்றான். பலந்தரை அதன் மேல் கால்வைத்து ஏறி அதன் அசைவால் நிற்கமுடியாமல் தடுமாறி உடனே அமர்ந்துகொண்டாள். குகன் படித்துறையை துடுப்பால் உந்தி நீருள் செலுத்தினான். இரு படகுகளும் அலைகளில் எழுந்தன. “குனிந்து படகுக்குள் ஒடுங்கிக்கொள்ளுங்கள்” என்று பூரிசிரவஸ் கூவினான். நெருங்கிவந்த பீமனின் படகுகளில் இருந்து எரியம்புகளும் அம்புகளும் எழுந்து வந்தன. மறுபக்கமிருந்து அஸ்தினபுரியின் படகுகள் அவர்களை நோக்கி வந்தன. “விரைவு… விரைவு” என்று துரியோதனன் கூவினான்.
அப்பால் கங்கைக்குமேல் அலைகளில் தன்னந்தனியாக ஆடி நின்ற படகில் கர்ணன் எழுந்து நின்றிருந்தான். அவன் வில் விம்மும் ஒலி கேட்டது. விரைந்து வந்த பீமனின் முதல் படகின் அமரத்தில் அமர்ந்தவன் அலறியபடி விழ படகு நிலைமாறி விரைவழிந்தது. பின்னால் வந்த படகு அதன் மேல் முட்டப்போய் திருப்பப்பட்டது. சுக்கானைப்பிடிக்க ஓடிவந்த இன்னொருவனையும் கர்ணன் கொன்றான். தொடர்ந்து மீண்டும் ஓடிவந்தவனையும் கொன்றதும் சுக்கானை நோக்கி எவருமே வராமல் படகு தயங்கி அலைமேல் அமைந்து நின்றது. பின்னால் வந்த படகிலிருந்து கர்ணன் மேல் அம்புகள் தொடுக்கப்பட்டன. அவன் இருளுக்குள் இருளின் அசைவாக மட்டுமே தெரிந்தான். அவ்வப்போது காற்றில் எரிந்தபடகின் தழல் எழும்போது மட்டும் செந்நிறக் கோட்டுருவாக அவன் முகம் தெரிந்து மறைந்தது.
இருளில் துள்ளும் மீன்கள் போல அம்புகள் மின்னி மின்னி மறைந்தன. தொலைவில் அஸ்தினபுரியின் படகுகள் தெரிந்தன. அவை அசையாமல் அங்கே நிற்பதைப்போல தன் படகும் அலைகளில் ஊசலாடிக்கொண்டு நின்றிருப்பது போல விழிமயக்கு ஏற்பட்டது. இன்னும் எத்தனை தொலைவு? எத்தனை அலைவளைவுகள்! நிலையழிந்த பீமனின் படகின் அமரத்தில் ஒருவன் அமர்ந்து படகை திருப்பிவிட்டான். அதன் விலா கர்ணனை நோக்கிதிரும்பியது. அதிலிருந்து அம்புகள் எழ அவன் குனிந்து படகுக்குள் ஒண்டிக்கொண்டான். படகுக்குள் முதுகில் ஆமையோட்டு கேடயத்துடன் குனிந்திருந்த குகன் துடுப்பைத்துழாவி கர்ணனின் படகை விலக்கிச்சென்றான்.
துரியோதனன் தன்னை முந்திச்சென்றுவிட்டதை பூரிசிரவஸ் கண்டான். அவன் பெரிய படகை அணுகிவிட்டான். பெரியபடகில் இருந்து அவர்களை மேலே தூக்க வடம் கீழிறக்கப்பட்டது. மேலும் மேலும் அம்புகள் விழ கர்ணன் பின்னகர்ந்துகொண்டே இருந்தான். அவன் எரியம்பு ஒன்றை எய்ததும் அஸ்தினபுரியின் படகுகளில் ஒன்று எரியம்புகளை எய்தபடி பீமனின் படகை நோக்கி வந்தது. அதன் பாய் எரியத்தொடங்கியது. அதனுள் குகர்கள் கூச்சலிட்டபடி அதை அணைக்க முயல்வதும் பெரிய விற்களுடன் நின்றிருக்கும் வில்லவர்கள் குறிவைப்பதும் நெருப்பொளியில் தெரிந்தது.
அஸ்தினபுரியின் படகுகள் விரைந்து வந்து எரிந்து கனலெழுந்த பீமனின் முதல் படகை விலாவில் முட்டியது. அந்தப்படகு நிலையழிந்து அதை முந்தி வரமுயன்ற பீமனின் அடுத்த படகை தாக்கியது. துரியோதனன் பெரிய படகை அணுகிவிட்டான். அவன் படகின் மீது விழுந்த இரு வடங்களை அதன் கொக்கிகளில் இட்டதும் மேலிருந்து அப்படியே படகுடன் மேலே தூக்கிவிட்டனர். அதை நிமிர்ந்து நோக்கி ஒரு கணம் வியந்த பூரிசிரவஸ் பார்வையை தவறவிட்டுவிட்டான். அதற்குள் எரிந்துகொண்டிருந்த பீமனின் படகின் பின்னாலிருந்து வந்த விரைந்து செல்லும் சிறிய படகு பாய்விரித்து வல்லூறு போல அவனை நோக்கி வந்தது.
அவன் வில்லுடன் எழுவதற்குள் அவன் தொடையில்அம்பு பாய்ந்தது. அவன் படகை அந்த விரைவுப்படகு முட்டி புரட்டியது. பூரிசிரவஸ் நீருள் விழுந்தான். அவன் தலைதூக்கியதும் இன்னொரு அம்பு அவன் தோளைத் தாக்கியது. அவன் நீரில் மூழ்கும் போது விரைவுப்படகில் ஒருகையால் பாய்மரக்கயிற்றில் பிடித்துத் தொங்கியபடி மறுகையால் நீரில் விழுந்து ஆடை மிதக்கும் சுழிக்குள் இருந்து மூச்சுக்காக மேலே வந்த பலந்தரையை கூந்தலை அள்ளித் தூக்கி இடைசுற்றிப்பற்றி தன் படகில் ஏற்றிக்கொண்ட பீமனைக் கண்டான். அந்தப்படகு சுழன்று திரும்பி பாய்கள் வடிவம் மாற மேலும் விரைவுகொண்டு அலைகளில் ஏறிச்சென்று அதே விரைவில் எரிந்துகொண்டிருந்த பெரிய படகுக்கு அப்பால் மறைந்தது.
பூரிசிரவஸ்ஸின் வலத்தொடையும் இடது தோளும் அசைவிழந்திருந்தன. அவன் கைகளை நீட்டி நீட்டி படகின் விளிம்பைப்பற்ற முயன்றான். குகனின் வலிய கரம் அவன் தோளைப்பற்றியது. குகன் மறுகையால் படகை நிமிரச்செய்து அதில் அவனை தூக்கிப்போட்டான் நீரில் மிதந்த துடுப்பை எட்டி எடுத்துக்கொண்டு துழாவத் தொடங்கினான். குருதி வழியும் வெம்மையை பூரிசிரவஸ் உணர்ந்தான். அவனைச்சுற்றி அனல் வெளிச்சம் நீரில் அலையடித்தது.
கையை ஊன்றி எழுந்தமர்ந்து அப்பால் கர்ணன் பீமனின் படகை துரத்திச்செல்வதை பூரிசிரவஸ் நோக்கினான். ஆனால் அவ்விரு படகுகளுக்கும் நடுவே பீமனின் எரிந்துகொண்டிருந்த பெரிய படகு குறுக்காக வந்ததும் கர்ணன் விரைவை இழந்து தயங்கினான். அவன் மேல் தொடுக்கப்பட்ட அம்புகளைத் தவிர்த்து படகைத் திருப்பி பின்னால் வந்தான். அப்பால் காசியின் பெரும்படித்துறையில் முரசொலி எழுந்தது. எரியம்புகள் எழுந்து வானில் வெடித்தன. அங்கிருந்து மூன்று பெரிய படகுகள் பாய்விரித்து நீரில் எழுவதை எரிந்துகொண்டே சென்ற அஸ்தினபுரியின் படகின் ஒளியில் காணமுடிந்தது.
குகன் அவனை அஸ்தினபுரியின் படகை நோக்கி கொண்டுசென்றான். கொக்கியில் மாட்டப்பட்ட படகில் எழுந்து மேலே சென்ற பூரிசிரவஸ் படகின் மேல் விழுந்து மரத்தரையில் உருண்டு நீரும் குருதியும் வழிய ஒரு கணம் அசைவற்றுக் கிடந்தான். நீர்வெளியை நோக்கிக்கொண்டிருந்த துரியோதனன் “இனிமேல் நம்மால் போரிடமுடியாது. காசியின் படகுகள் கிளம்பிவிட்டன, திரும்பிவிடுவோம்” என்றான். படகின் உள்ளறைக்குள் நின்றிருந்த பானுமதி “பலந்தரை எங்கே? பலந்தரை என்ன ஆனாள்?” என்று கூவினாள். “இளவரசி… பீமசேனர்” என்று பூரிசிரவஸ் மூச்சிரைக்க கைகாட்டினான். முழங்காலை ஊன்றி எழுந்து நின்று கயிற்றைப்பற்றிக்கொண்டு நோக்கினான்.
கர்ணன் பீமனின் எரியும் படகை சுற்றிக்கொண்டு செல்ல முயன்றான். ”அவனால் முடியாது. அவர்கள் நெடுந்தொலைவு சென்றுவிட்டனர். இன்னும் சிலகணங்களில் அவன் பெரியபடகில் ஏறிவிடுவான்” என்று துரியோதனன் கூவினான். ”திரும்பி வரும்படி சொல்… அவனிடம் திரும்பி வரும்படி சொல்!” துச்சாதனன் திரும்பிவரும்படி ஒளிக்குறி காட்டினான். அதற்குள் மேலும் ஒன்றும் செய்வதற்கில்லை என்று கர்ணனே உணர்ந்துகொண்டு படகைத்திருப்ப ஆணையிட்டான். அஸ்தினபுரியின் படகுகளுக்கு நடுவே துரியோதனனின் படகு நுழைந்துகொண்டது. அப்பால் பீமனின் இருபடகுகள் முழுவிரைவில் செல்வது தெரிந்தது. நீர்ப்பரப்பில் இரு படகுகள் வானிலும் நீரிலுமாக எரிந்தபடி மிதந்து சென்றன.
“முழுப்பாய்களும் விரியட்டும்” என்று துரியோதனன் ஆணையிட்டான். கர்ணனின் படகு வந்தணைந்ததும் அதை மேலே தூக்கினர். மூச்சிரைத்தபடி அவன் நீர் சொட்ட வந்து கயிற்றில் அமர்ந்தான். அவன் தோளில் அம்பு ஒன்று தைத்திருந்தது. இன்னொருபடகிலிருந்து வந்த மருத்துவர்கள் ”உள்ளே வாருங்கள் அங்கரே” என்றனர். “இங்கே காற்று இருக்கிறது…” என்றான் கர்ணன். துரியோதனன் திரும்பி “இளையோனே, நீர் நலம் அல்லவா? மூச்சிலோ நெஞ்சிடிப்பிலோ ஏதேனும் மாறுபாட்டை உணர்கிறீரா?” என்றான். “நலம் மூத்தவரே” என்றான் பூரிசிரவஸ். “ஆனால் நான்..” அவனால் பேசமுடியவில்லை. “நான் தவறவிட்டுவிட்டேன்.”
“நீர் அதற்கு வருந்தவேண்டியதில்லை. நாம் இளவரசர் விழைந்த பெண்ணை கைவிட்டுவிடவில்லை. அதை எண்ணி மகிழ்கிறேன்” என்றான் கர்ணன். ”அவர்கள் இப்படி மூன்றாம் கட்டத்திட்டத்துடன் வந்திருப்பார்கள் என்பதை என்னால் எதிர்பார்க்கமுடியவில்லை. அந்த விரைவுப்படகை இதற்கென்றே கொண்டுவந்திருக்கிறார்கள்.” மருத்துவர் பூரிசிரவஸ்ஸிடம் “உங்கள் காயங்கள் சற்று மிகை இளவரசே. படுக்க வைத்து ஒளியில்தான் மருத்துவம் பார்க்கவேண்டும்” என்றார். துச்சாதனன் தோளைப்பற்றியபடி பூரிசிரவஸ் எழுந்தான். கல்லால் ஆனதுபோல தோன்றிய காலை இழுத்துவைத்து நடந்தான். அவன் காலில் இருந்து குருதி நீருடன் கலந்து வழிந்தது.
துரியோதனன் “இளவரசி உள்ளே இளைப்பாறுக!” என்றான். பானுமதி ஒரு வீரனுடன் அடித்தள அறைக்குள் சென்ற மரப்படிகளில் இறங்கினாள். உள்ளறைக்குள் சென்ற பூரிசிரவஸ் அங்கே மஞ்சத்தில் படுத்துக்கொண்டான். மருத்துவர் சிறிய கூரிய கத்தியால் அவன் ஆடைகளைக் கிழித்து அகற்றினார். தொடையில் பாய்ந்த அம்பு சற்று ஆழமாகவே சென்றிருந்தது. தோளில் அதன் உலோகமுனை மட்டுமே புதைந்திருந்தது. ஒரு வீரன் கொதிக்கவைக்கப்பட்ட நீரை கொண்டுவந்தான். மருத்துவர் அதில் வெண்ணிறத்துணியை முக்கி அவன் குருதியைத் துடைத்தார். பின்னர் அம்பு தைத்த இடத்தின் இருபக்கமும் கத்தியால் மெல்லக்கிழித்து அகற்றி அம்பை உருவி எடுத்தார். பூரிசிரவஸ் மெல்ல முனகினான்.
“அகிபீனா தேவையா இளவரசே?” என்றார் மருத்துவர். ”இல்லை” என்றான் பூரிசிரவஸ் பற்களைக் கடித்தபடி. அருகே வீரன் ஒருவன் கொண்டுவந்து வைத்த தாலத்தில் மூலிகைத்தைலத்தில் ஊறிய பஞ்சு இருந்தது. அதை எடுத்து அம்பு உருவப்பட்ட காயத்தில் வைத்து அழுத்தி அதன்மேல் சூடாக்கப்பட்ட காரையிலையை வைத்து அழுத்தி மரவுரியால் கட்டு போட்டார். கட்டுபோட்டதும் வலி குறைந்து அனல் பட்டதுபோன்ற எரிச்சலுடன் அந்தத் தசை துடிக்கத் தொடங்கியது. தோளில் பட்ட அம்பையும் பிடுங்கி கட்டிட்ட பின்னர் “பெரிய புண்ணல்ல இளவரசே, இரண்டுவாரங்களில் தழும்பாகிவிடும்” என்றார் மருத்துவர். பூரிசிரவஸ் கண்களை மூடிக்கொண்டு “ம்” என்றான்.
அதுவரை உடல் வலியும் போர்நிகழ்வுகளுமாக நிறைந்திருந்த உள்ளம் மெல்ல அமைதிகொண்டது. காற்றடங்கிய புல்வெளி என அது அமைதிகொண்டு பரந்தது. அவன் பெருமூச்சுகள் விட்டான். அம்புபட்டு நீரில் விழுந்த முதற்கணம் போரும் இலக்கும் அனைத்தும் மறைந்துபோய் உயிர் பற்றிய அச்சம் மட்டும் நெஞ்சில் எழுந்ததை பூரிசிரவஸ் எண்ணிக்கொண்டான். இறந்துவிடுவோமா என்ற அச்சம். இறக்கமாட்டோம் என்ற நம்பிக்கை. ஏன் இதெல்லாம் என்ற திகைப்பு. இருக்கிறோம் என்னும் பேருவகை. மலைமுடிகளில் இருந்து மலைமுடிகளுக்குத் தாவுவதுபோல அந்த உச்சகட்ட உளநிலைகள் வழியாக சென்றுகொண்டே இருந்த ஒற்றைக்கணம். அதற்கிணையான ஓர் உச்சம் அவன் வாழ்வில் நிகழ்ந்ததில்லை. ஒரு வாழ்க்கை முழுக்க ஒரேகணத்தில் நிகழமுடியும். ஒருகணத்திலேயே அறிவதை எல்லாம் அறிந்து அடையக்கூடுவதனைத்தையும் அடைந்து அமையமுடியும்.
மீண்டும் ஒரு போர் என்றால் அவன் அஞ்சி நிற்பானா இல்லை அந்த கணத்திற்கான தவிப்புடன் முன்னெழுவானா என்று கேட்டுக்கொண்டான். அவனால் விடைசொல்லமுடியவில்லை. அந்த கணம் வரும்வரை அதை சொல்லிவிடமுடியாது என்று தோன்றியது. ஆனால் இதுதான் மானுடவாழ்க்கையின் உச்சம். முழுமைக்கணம். இதற்காகவே போர் என்றாலே மானுடர் தோள் தினவுகொண்டு எழுகிறார்கள். இதன்பொருட்டே பிறந்த கணம் முதல் படைக்கலம் பயில்கிறார்கள். இதற்காகத்தான் விழைவுகளைப் பெருக்கி வஞ்சங்களைத் திரட்டி செறித்துக்கொள்கிறார்கள். மானுடவாழ்வென்பதே இந்த ஒரு கணத்தை சுற்றித்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. தெய்வங்களை மானுடன் முகத்தோடுமுகம் காணும் இடம்.
அனைத்து கூர்முனைகளிலும் தெய்வங்கள் குடிகொள்கின்றன என்பார்கள் என எண்ணிக்கொண்டான். அது கொல்லர்களின் நம்பிக்கை. பருவடிவ படைக்கலத்தை கொல்லன் கூராக்கிக் கூராக்கிக் கொண்டுசெல்கிறான். கூரின் ஒரு புள்ளியில் அவ்வுலோகம் முடிவடைந்துவிடுகிறது. மேலும் கூர் எஞ்சுகிறது. அங்கே வாழ்கின்றன உலோகத்தை ஆளும் தெய்வங்கள். குருதியால் மட்டுமே மகிழ்பவை. ஊசி முனையோ வேல்முனையோ குருதிக்காக விடாய்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கணமும் காத்திருக்கிறது. அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்கிறது.
அவன் அந்த எண்ணங்களை விலக்க விரும்பினான். அவை அவனை அச்சுறுத்தும் ஆழ்சுழி ஒன்றை நோக்கி சுழற்றிக்கொண்டுசென்றன. உள்ளே வந்த ஏவலன் “தாங்கள் சற்று மதுவருந்தவேண்டும் என்று மருத்துவர் சொன்னார்” என்றான். பூரிசிரவஸ் தலையசைத்தான். மரக்கோப்பையில் ஏவலன் அளித்த மது இளம்சூடாக இருந்தது. குடித்ததும் நெஞ்சுக்குள் அதன் ஆவி நிறைந்தது. அது குருதியில் கலப்பதற்காக அவன் கண்களை மூடிக்கிடந்தான். மெல்லமெல்ல அது ஊறி ஊறி உடற்தசைகள் தளர்ந்தன.
எடைமிக்க காலடிகளுடன் துரியோதனன் உள்ளே வந்தான். “இளையோனே, நலமாக இருக்கிறீர் அல்லவா?” என்றான். “ஆம்” என்றான் பூரிசிரவஸ் பெருமூச்சுடன். துரியோதனன் அவன் அருகே பீடத்தில் அமர்ந்து கால்களை நீட்டி அதன்மேல் முழங்கைகளை ஊன்றி அமர்ந்தான். “நாம் காசியின் எல்லையை கடந்துவிட்டோம்” என்றான். பூரிசிரவஸ் புன்னகைசெய்தான். “வென்றுவிட்டோம் என்றுதான் பொருள். ஆனால் வெற்றி…” தன் கைகளைக் கோர்த்து மடிமேல் வைத்தபடி துரியோதனன் பெருமூச்சுவிட்டான். “வெற்றியை முழுமையாக நான் சுவைக்கவே போவதில்லை என்று படுகிறது பால்ஹிகரே.”
“தாங்கள் விரும்பியது மூத்த இளவரசியை மட்டும் அல்லவா? அங்கர் சொன்னதுபோல நாம் அவரை விட்டிருந்தால் அதுவல்லவா உண்மையான தோல்வி?” என்றான் பூரிசிரவஸ். “இன்று அவர் நம்முடன் இருக்கிறார். அஸ்தினபுரியின் பட்டத்தரசியாகப்போகிறார். அவர் சொல்தான் காசியை ஆளும்.” துரியோதனன் மெல்லிய குரலில் “ஆம்” என்றான். பின்பு “அவளை பீமன் மணம் கொள்வான். ஆம், உறுதியாக அவன்தான் மணம்புரிவான். ஏனென்றால் அது என்னை என்ன செய்யும் என்று அவன் அறிவான். என் கையிலிருந்து வென்று…” என்றபடி எழுந்துகொண்டான்.
பெருமூச்சு விட்டு எடைதூக்கிய கைகளை எளிதாக்குவது போல உடலை நெளித்தபின் “நிறைவின்மை அன்றி எதையும் நான் அடையக்கூடாதென்பதே தெய்வங்கள் வகுத்தது போலும்” என்றான் துரியோதனன். ”நான் உன்னிடம் ஒன்று சொல்லவே வந்தேன் இளையோனே. என் சொல் இன்னும் எஞ்சியிருக்கிறது. உன் உள்ளத்தில் இருக்கும் இளவரசியை சொல். நான் அவளை உன்னிடம் சேர்க்கிறேன்.” பூரிசிரவஸ் கண்களைத் திறக்காமல் பெருமூச்சுவிட்டு “நாளை சொல்கிறேன் இளவரசே” என்றான்.