வெண்முகில் நகரம் - 68
பகுதி 14 : நிழல் வண்ணங்கள் – 3
கங்கையின் ஒழுக்குடன் வடகாற்றின் விசையும் இணைந்துகொள்ள பகல்முழுக்க படகு முழுவிரைவுடன் சென்றது. இருபக்கமும் அனைத்துப்பாய்களையும் விரித்து காற்றில் சற்றுக்கிச்செல்லும் பெரிய கழுகுபோல அது சென்றபோது கங்கையின் அலைநீர்வெளி ஒளிவிட்டபடி அடியில் சுருண்டு மறைந்தது. பூரிசிரவஸ் அமரத்தில் நின்று நீர்வெளியை நோக்கிக்கொண்டிருந்தான். கொந்தளித்துக்கொண்டிருந்த உள்ளம் நீரின் சீரான ஓட்டத்தை நோக்க நோக்க மெல்ல அமைதிகொண்டது. விழி அறியும் சீரான அசைவுகள் எண்ணங்களையும் சீரமைப்பது எப்படி என்று எண்ணிக்கொண்டான். வெளியே தெரிபவற்றுக்கு உள்ளம் அறியாமல் எதிர்வினையாற்றிக்கொண்டிருக்கிறது. உள்ளம் என்பதே அந்த எதிர்வினை மட்டும்தானா? நினைவுகளுக்கும் புறவுலகுக்குமான ஓர் ஓயா உரையாடல்.
ஆனால் எங்கோ புறம் வென்றுவிடுகிறது. நினைவுகளை அது தன் ஒழுங்கில் அடுக்கத்தொடங்கிவிடுகிறது. விழிகளை இழந்தவர்கள் நினைவுகளை எப்படி கையாள்கிறார்கள்? அவனுக்கு திருதராஷ்டிரர் ஓயாது இசைகேட்பது நினைவுக்கு வந்தது. இந்த வானை ஒளியை அலைநீர்வெளியை வண்ணங்களை நிழலாட்டங்களை நிகர்செய்ய எவ்வளவு இசை தேவை? அப்போது இசைகேட்டால் நன்று என்று தோன்றியது. ஆனால் உடனே அதை நோக்கி உள்ளம் செல்லாது என்ற எண்ணமும் வந்தது. படகுப்பாய்கள் முறுகி உறுமும் ஒலியும் வடங்கள் இறுகிநெகிழும் ஒலியும் மர இணைப்புகளின் நெரிபடும் ஒலியும் இணைந்து காற்றின் ஓசையுடன் கலந்து அவனை சூழ்ந்திருந்தன. அதன் தாளத்தை உள்ளமும் அடைந்துவிட்டிருப்பதை சற்று கழித்து அவன் உணர்ந்தான்.
அறியாமலேயே அவன் துயின்றுவிட்டிருந்தான். விழித்தபோது அவன்மேல் வெயில் சரிந்திருந்தது. அரைத்துயிலில் சென்று உள்ளறைப்பீடத்தில் படுத்தான். மீண்டும் விழித்தபோது குளிர்ந்தது. எழுந்து அமர்ந்து சரிந்துகிடந்த ஆடையை அள்ளிச்சுற்றியபடி வெளியே வந்தான். படகு அரையிருளில் சென்றுகொண்டிருந்தது. அந்தி கடந்துவிட்டிருந்தது. குகனிடம் எந்த இடம் என்று கேட்டான். ”அருகே இருக்கும் துறைநகர் ஃபர்கபுரி. ஆனால் நாம் எங்கும் நிற்கப்போவதில்லை இளவரசே” என்றான். ”காசியை எப்போது அடைவோம்?” என்றான் பூரிசிரவஸ். “விரும்பினால் நள்ளிரவுக்குள் சென்றுவிடமுடியும். இனிமேல் செய்திகளைப்பெற்றுக்கொண்டு முன்னால் செல்லலாம் என்று இளவரசரின் ஆணை” என்றான் குகன்.
செந்நிறமலர்கள் பூத்த புதர்போல பந்தங்களும் விளக்குகளும் ஒளிரும் ஃபர்கபுரி அப்பால் தெரிந்தது. கரையொதுங்கும் படகுகள் பாய்மடித்து விரைவழிந்து மூக்கு திருப்பின. சங்கொலியுடன் பெரும்படகு ஒன்று அங்கிருந்து சிறகுகளை ஒவ்வொன்றாக விரித்தபடி மையப்பெருக்கு நோக்கி வந்தது. கலிங்கத்துக்கொடி அதில் பறந்தது. பூரிசிரவஸ் இடையில் கைவைத்து ஃபர்கபுரி கடந்துசெல்வதை நோக்கி நின்றான். “இளவரசர் இன்னும் எழவில்லையா?” என்றான். “இல்லை, அவர்கள் மதுவருந்திவிட்டு படுத்திருக்கிறார்கள்” என்றான் குகன். பூரிசிரவஸ் பெருமூச்சுவிட்டான். துயின்று எழுந்ததனாலேயே உள்ளம் தெளிந்து அனைத்தும் எளிதாகவும் இனிதாகவும் மாறிவிட்டிருந்தன. அவன் சென்றுகொண்டிருப்பது ஒரு போருக்கு என்பதையே நினைத்துப்பார்க்கமுடியவில்லை.
“தாங்கள் உணவருந்தலாமே” என்றான் குகன். “இல்லை, அவர்களும் எழட்டும்” என்று பூரிசிரவஸ் சொன்னான். நன்றாக பசித்தது. படகின் அடியிலிருந்து சுட்டமீனும் அப்பமும் மணத்தன. சற்றுநேரத்தில் துச்சாதனன் உள்ளிருந்து வெளிவந்து பெரிய கைகளை தலைக்குமேல் தூக்கி சோம்பல்முறித்துக்கொண்டு அவனை நோக்கினான். அவன் உடலின் வியர்வை நாறியது. “நன்கு துயின்றுவிட்டேன் இளையோனே” என்றான். “இளவரசரை எழுப்புங்கள். நாம் ஃபர்கபுரியை கடந்துவிட்டோம்.” துச்சாதனன் திகைப்புடன் “கடந்துவிட்டோமா? ஃபர்கபுரியில்தானே நமக்கு பறவைத்தூது வரவேண்டும்?” என்று சொன்னபின் திரும்பி உள்ளே சென்றான்.
கர்ணனும் துரியோதனனும் வெளியே வந்தனர். துரியோதனன் “பால்ஹிகரே, ஃபர்கபுரியில் இருந்து செய்தி எதையாவது பெற்றீரா?” என்றான். “இல்லை, செய்தியை எனக்கு அனுப்பமாட்டார்களே” என்றான் பூரிசிரவஸ். “அறிவிலி போல துயின்றுவிட்டேன். நேற்றிரவு முழுக்க நான் துயிலவில்லை. விடியலில் கண்ணயர்ந்தபோது காசிநாட்டு இளவரசியின் செய்தி வந்தது. அதன்பின் ஏது துயில்?” என்று துரியோதனன் சொன்னான். நிலைகொள்ளாமல் “ஃபர்கபுரியின் ஒற்றனிடம் பருந்து வந்து சேரும். அவனிடம் தெரிவிக்கச் சொல்லியிருந்தேன்…” என்றான். பூரிசிரவஸ் என்ன என்பதுபோல நோக்கினான். “அனைத்தும் காசியில் சித்தமாக இருக்கவேண்டுமல்லவா? நான் வரும் செய்தியை பானுமதிக்கு அளித்துவிட்டேன். அவர்களின் செய்தி எனக்கு வரவேண்டும்.”
என்ன சொல்வதென்று பூரிசிரவஸ்ஸுக்கு தெரியவில்லை. ஆனால் உள்ளூர எங்கோ புன்னகை எழுந்தது. அதை துரியோதனன் எப்படியோ உணர்ந்தவன் போல தானும் சிரித்துக்கொண்டு “இத்தனைக்கு நடுவிலும் துயின்றிருக்கிறேன்” என்றான். “அது தங்கள் துணிவைக்காட்டுகிறது” என்றான் பூரிசிரவஸ். “நன்று, நீர் அவைப்பாடகராக இருக்கலாம்” என்று துரியோதனன் சொன்னான். முதல்முறையாக பூரிசிரவஸ் உள்ளூர புண்பட்டான். ஏன் என்று சிந்திக்கமுடியாமல் ஏதோ ஒன்று தடுத்தது. ஆனால் சினத்தில் உடலெங்கும் வெங்குருதி ஓடியது. மூச்சை இழுத்து நீர்த்துளிகள் நிறைந்த காற்றை இழுத்துவிட்டு தன்னை ஆற்றிக்கொண்டான்.
கர்ணன் வானை நோக்கிக்கொண்டு நின்றான். பின்னர் “செம்பருந்து உங்களை தேடித்தான் வருகிறது இளவரசே” என்றான். துரியோதனன் “எங்கே?” என்றான். வானை நோக்கியபோது எதையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. “அது தங்களைத்தேடி நம் படகுக்கு மேலேயே பறந்துகொண்டிருந்திருக்கிறது. இப்போதுதான் கண்டுகொண்டது” என்று சொல்வதற்குள் சிறகோசையுடன் செம்பருந்து வந்து காற்றிலாடியபடி இறகுகளைக் கலைத்து வடத்தில் அமர்ந்தது. துரியோதனன் கைநீட்டியதும் எழுந்து பறந்து வந்து அவன் கைவளைமேல் அமர்ந்தது. அதன் கால்களில் தோல்சுருள் சுற்றிக்கட்டப்பட்டிருந்தது. துரியோதனன் சுருளை எடுத்ததும் துச்சாதனன் அதைப்பற்றி தூக்கி உள்ளே கொண்டுசென்றான்.
துரியோதனன் செய்தியை வாசித்துவிட்டு சுருளைச் சுருட்டி நீரிலிட்டான். திரும்பி “கர்ணா, அனைத்தும் சித்தமாக இருக்கின்றன. நாளை விடியல் முதல்நாழிகை மணி அடிக்கையில் அவர்கள் வரும் தேர் அன்னையர் ஆலயத்தை கடக்கும்” என்றான். அவன் உடலெங்கும் சிறுவனைப்போன்ற துள்ளல் குடியேறியது. “அவளே அனுப்பிய செய்தி இது. அவள் அங்கு வந்ததும் ஒரு சுடர் இடவலமாக இருமுறை சுழற்றப்படும்.” கர்ணன் “மிக எளிதாகத்தான் தோன்றுகிறது” என்றான். “ஆனால் பீமன் என்ன செய்யப்போகிறான் என நமக்கு இன்னமும் தெரியாது.” துரியோதனன் “அவன் செய்யப்போவது தெளிவாகவே இருக்கிறது… அவர்கள் மேலும் ஒருநாழிகைக்குப்பின் விஸ்வநாதரின் ஆலயத்த்தின் முன்பு அவளுக்காக காத்திருப்பார்கள்” என்றான்.
கர்ணன் “ஆம், ஆனால் முன்னெச்சரிக்கையாக ஒரு வீரனை அரண்மனையிலிருந்து அவர்கள் கிளம்பியதுமே அவன் கூடவே அனுப்பியிருந்தால்?” என்றான். “அவ்வீரன் செய்தியனுப்பினால் நாம் அவளைக் கவர்ந்ததுமே அவன் நம்மை வந்தடைந்துவிடமுடியும். இரு இடங்களுக்கு நடுவே விழிதொடும் தொலைவே உள்ளது.” “வரட்டும், இம்முறை நீரில் போர்நிகழும்” என்றான் துரியோதனன். “போரிடலாம். ஆனால் நம்மிடம் இளவரசியர் இருக்கிறார்கள். அதை அறிந்தபின் காசிமன்னன் நம்முடன் போருக்கு வராமலிருக்கமுடியாது. நாம் தனியர், அரைநாழிகைக்குள் போர்முடியவில்லை என்றால் சிறைப்படநேரிடும்.” கர்ணன் புன்னகைத்து “அதன்பின் நீங்கள் எந்த ஷத்ரியகுலத்திலும் மணம்புரிந்துகொள்ள முடியாதென்பதை எண்ணுங்கள்” என்றான்.
“தசசக்கரத்திலிருந்து நமதுபடைகள் நமக்குப்பின்னால் வணிகப்படகுகளாக வந்துகொண்டிருக்கின்றன. அவை நம்மை சூழ்ந்துகொள்ளும்” என்றான் துரியோதனன். “ஆனால் காசியின் முழுப்படையும் வந்தால் நம்மால் ஒன்றும் செய்யமுடியாது” என்றான் கர்ணன். எரிச்சலுடன் துரியோதனன் “அப்படியென்றால் என்ன செய்யலாம் என்கிறாய்? திரும்பலாமென்று சொல்ல வருகிறாயா?” என்றான். கர்ணன் “இல்லை, நாம் இளவரசியரை கொண்டு செல்வது உறுதி. ஆனால், இந்தத் திட்டமே மிக விரைந்து அமைக்கப்பட்டது. அனைத்து வழிகளிலும் எண்ணி நோக்கப்படவில்லை” என்றான். “எண்ணுவதற்கு நமக்கு நேரமில்லை” என்று துரியோதனன் உரக்கச் சொன்னான். “இப்போது இவளையும் பீமன் கொண்டுசென்றான் என்றால் அதன்பின் என் வாழ்க்கையில் பொருளே இல்லை.”
கர்ணன் முகம் சற்று சுளித்ததை பூரிசிரவஸ் கண்டு வியந்து விழிகளை ஏறிட்டான். அப்போதுதான் தொடக்கம் முதலே கர்ணனுக்கு அந்தப் புறப்பாடு பிடிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. அது சரியாக திட்டமிடப்படவில்லை என்பதல்ல அது. அவன் விழிகளை விலக்கிக்கொண்டு துச்சாதனனை நோக்கியதும் அதே உணர்ச்சியை அங்கும் கண்டான். புரிந்துகொள்ளமுடியாமல் மீண்டும் துரியோதனனை நோக்கினான். துரியோதனன் எரிச்சலும் சினமுமாக “நாம் என்ன செய்யவேண்டும் என்று சொல்ல வருகிறாய்?” என்றான். அந்த நேரடியான சினம் கர்ணனை தணியச்செய்தது. “சற்று எச்சரிக்கையாக இருப்போம், ஏற்கெனவே வென்றுவிட்டோம் என்று எண்ணிக்கொள்ளவேண்டாம், அவ்வளவுதான் நான் சொன்னது” என்றான்.
கர்ணனின் குரல் தாழ்ந்ததுமே பூரிசிரவஸ் அவன் உள்ளத்தை புரிந்துகொண்டான். புன்னகையுடன் இருண்ட நீர்வெளியை நோக்கினான். பொறாமை கொள்ளும் ஒரு தோழன் தனக்கு அமைந்ததே இல்லை என்ற எண்ணம் வந்தது. ஒரு இளையோனும் அமையவில்லை. பானுமதியை எண்ணிக்கொண்டான். அவள் வந்த முதற்கணமே இவ்விருவரையும் அடையாளம் கண்டுகொள்வாள். அப்போதுதான் திகைப்புடன் ஒன்றை அவன் நினைவுகூர்ந்தான், பெரும்பாலான தருணங்களில் துச்சாதனனை அவன் துரியோதனனின் படுக்கையறையில் தமையனின் மஞ்சத்திற்குக் கீழே தரையில் மரவுரி விரித்து துயில்பவனாகவே பார்த்திருக்கிறான்.
துரியோதனன் “நமக்கு இன்னமும் நேரமிருக்கிறது. நம் திட்டங்களில் என்ன இடர் ஏற்பட முடியுமென அமர்ந்து சிந்திப்போம்” என்றான். “அதற்கு முன் நாம் உணவுண்ணவேண்டும்” என்றான் கர்ணன். அவன் பேச்சை சற்று எளிதாக்க விழைவது தெரிந்தது. ஆனால் துரியோதனன் தேவையற்ற உரத்த நகைப்புடன் “ஆம், உண்போம். போருக்கு முன்னும் பின்னும் உண்டாட்டு தேவையல்லவா?” என்றான். திரும்பி குகனிடம் “உணவு! உணவு கொண்டுவருக!” என்று கூவினான். அந்த நிலையழிந்த நிலை பூரிசிரவஸ்ஸுக்கே சற்று ஒவ்வாமையை அளித்தது. காலால் சிறியபீடம் ஒன்றைத் தட்டி இழுத்துப்போட்டு அமர்ந்தபடி “பானுமதி என்றால் என்ன பொருள் இளையோனே?” என்றான் துரியோதனன்.
சற்று தயங்கியபின் “சூரியஒளிகொண்டவள்” என்றான் பூரிசிரவஸ். துரியோதனன் தொடையில் அடித்து நகைத்து “நன்று, ஒருபக்கம் சூரியமைந்தன். மறுபக்கம் சூரிய ஒளி. அஸ்தினபுரிக்கு இனி இரவே வரப்போவதில்லை” என்றான். “அமர்ந்துகொள்ளும் பால்ஹிகரே” என்று பீடத்தை தட்டினான். பூரிசிரவஸ் அமர்ந்தான். அப்பால் கர்ணன் அமர துச்சாதனன் கயிற்றைப்பற்றியபடி நின்றான். துரியோதனன் ”பிறவி நூல் கணிக்காமல் நேரம் குறிக்காமல் மணநிகழ்வு அமைவதில்லை. ஆனால் காந்தருவத்தில் அது தேவையில்லை. ஏனென்றால் கந்தர்வர்கள் அனைத்தையும் அமைக்கிறார்கள்” என்றான். நிமிர்ந்து வானை நோக்கி “விண்மீன்களாக நம்மை நோக்குபவர்களில் கந்தர்வர்களும் இருப்பார்கள் இல்லையா?” என்றான். ”ஆம்” என்றான் பூரிசிரவஸ். “கந்தர்வர்கள் மானுட உள்ளங்களை வைத்து விளையாடுகிறார்கள்” என்று சொல்லி துரியோதனன் பெருமூச்செறிந்தான்.
“தார்த்தராஷ்டிரரே, உம்மை மணம்கொள்ள காசி இளவரசி எதை கோரினாள்?” என்றான் கர்ணன். “அந்தக் கடிதத்தையே நீதானே படித்தாய்?” என்றான் துரியோதனன். “ஆம், படித்தேன். ஆனால் நானறியாத செய்தி ஏதேனும் வந்துள்ளதா என்று நோக்கினேன்.” துரியோதனன் சற்று புண்பட்டு “நீயறியாத மந்தணம் எனக்கு ஏது?” என்றான். கர்ணன் ஒன்றும் சொல்லவில்லை. ”சொல், ஏன் அப்படி கேட்டாய்?” என்றான் துரியோதனன். “இல்லை, எச்சரிக்கையாக இருக்கவேண்டுமே என்பதற்காகத்தான். மணம்புரிந்தபின்னரும்கூட பெண்களுக்கு சொல்லளிப்பதில் ஆண்மகனுக்கு முழு எச்சரிக்கை தேவை.” துரியோதனன் சிரித்து “மூடா, நான் அவள் காமத்திற்கு அடிமையாகி விடுவேன் என எண்ணுகிறாயா?” என்றான்.
கர்ணன் அமைதியாக நின்றான். ”சொல்” என்றான் துரியோதனன். “ஆம்” என்றான் கர்ணன். துச்சாதனன் நின்றிருந்த கயிறு முனகி ஆடியது. “மூடா” என்று கூறி துரியோதனன் உரக்க சிரித்தான். “நான் என்னை அறிவேன். அதைவிட நீ என்னை அறிவாய்… பெண்கள் விளையாடும் பகடை அல்ல நான்.” கர்ணன் மறுமொழி சொல்லாமல் இதழ்கள் வளைய நோக்கினான். “உன் உள்ளம் புரிகிறது. நான் நிலையழியவில்லை. ஆனால் என் உள்ளம் முழுக்க களிப்பு நிறைந்துள்ளது. அதை விலக்கவோ மறைக்கவோ நான் நினைக்கவில்லை. அதை முழுமையாக நிறைத்துக்கொள்ள என்னால் முடியவில்லையே என்றுதான் என் அகம் தவிக்கிறது.” துரியோதனன் தன் கைகளைத் தூக்கி “ஏனென்றால் இந்தக்கைகள் பெரியவை. கதைபயின்று இறுகியவை. அவற்றால் உவகையில்கூட நெகிழமுடிவதில்லை” என்றான்.
“மணம்கொள்ளும்போது ஆண்கள் நிலையழிகிறார்கள்” என்று கர்ணன் சொன்னான். “ஏனென்றால் அதுவரை அவர்களை சூழ்ந்திருந்த தனிமை ஒன்று கலைக்கப்படுகிறது.” பூரிசிரவஸ் அவன் முகத்தை நோக்க விழைந்தான். ஆனால் கர்ணன் இருண்ட ஆற்றைநோக்கி திரும்பியிருந்தான். ”தனிமையா… எனக்கா?” என்றான் துரியோதனன். “நான் பிறந்தநாளிலிருந்து தனிமையை அறிந்ததில்லை. இவன் என்னுடன் எப்போதும் இருக்கிறான். உன்னை சந்தித்த நாளுக்குப்பின் நீயும் என் உள்ளே உடனிருக்கிறாய்.” கர்ணன் ஏதும் உரைக்கவில்லை. குகர்கள் உணவுடன் வந்தனர். வேகவைத்த பெரிய மீன்கள், அப்பங்கள், ஊன். பூரிசிரவஸ் “மது தேவையில்லை. விடியலில் அது நம்மை சோர்வுறச்செய்துவிடும்” என்றான். “அஞ்சவேண்டாம், இல்லை” என்று சொல்லி மீசையை நீவியபடி துரியோதனன் சிரித்தான்.
உணவுத்தட்டுகள் அகல்வது வரை அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. ஒவ்வொருவரும் தங்களுக்குள் ஆழ்ந்து உண்டுகொண்டிருக்க மெல்லும் ஓசை மட்டும் உரையாடல் போலவே ஒலித்தது. துரியோதனன் எழுந்து இடையில் கைவைத்து விண்மீன்களை நோக்கி நின்றான். “எத்தனை விண்மீன்கள். கோடிக்கணக்காக இருக்கும் என நினைக்கிறேன். அவை இம்மண்ணில் வாழ்ந்த முனிவர்கள் என்கிறார்கள்” என்றான். “ஆதித்யர்கள்” என்றான் கர்ணன். “முனிவர்கள் அல்லவா ஆதித்யர்களாக ஆகிறார்கள்?” என்று துரியோதனன் கேட்க கர்ணன் மொழியில்லாமல் குவளையில் கை கழுவினான். “என்னை அவர்கள் நோக்குகிறார்கள் என்று எண்ணத்தான் நான் விரும்புகிறேன்… அவை வெறும் ஆதித்யவெளிச்சங்கள் என்று எண்ண விரும்பவில்லை.”
அவர்கள் அங்கே நிற்பதையே அவன் உணரவில்லை என்று தோன்றியது. அவன் முகமே விண்மீன் ஒளியில் மலர்ந்து தெரிந்தது. “எத்தனை விழிகள்! அவை என்னை அறியுமா? என் இந்தக்கணத்தை?” கர்ணன் துச்சாதனனின் விழிகளை நோக்கியபின் “நாங்கள் உள்ளே சென்று சற்றுநேரம் இத்திட்டத்தை சரிபார்க்கிறோம். நீங்கள் விண்மீன்களை நோக்கிக்கொண்டிருங்கள்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றான். துரியோதனன் புன்னகையுடன் பூரிசிரவஸ்ஸிடம் “அவர்கள் என் உள்ளத்தை உணரமுடியாது பால்ஹிகரே. நீர் அறிவீரா? நீர் பெண்கள் மேல் காதல்கொண்டிருக்கிறீரா?” என்றான்.
பூரிசிரவஸ்ஸின் நெஞ்சு படபடத்தது. இதுதான் தருணம். இப்போதுதான் சொல்லவேண்டும். ஆம் எனும் ஒரு சொல். அனைத்தும் மாறிவிடும். இத்தருணத்தில் துரியோதனனால் அதை ஒருபோதும் மறுக்கமுடியாது. ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்… ஆனால் அவன் தலைகுனிந்து “இல்லை” என்றான். “ஏன்?” என்றான் துரியோதனன். “தெரியவில்லை” என்றான் பூரிசிரவஸ். “எனக்கும் அது புதிராகவே உள்ளது. பெண்கள் விரும்பும் இளையோன் நீர்.” பூரிசிரவஸ் மீண்டும் தொண்டைக்குள் அந்தச் சொல்லை உணர்ந்தான். “ஆனால் நான் அப்படி அல்ல. அஞ்சும் பெண்களை அன்றி நான் கண்டதில்லை.வெறும் அரண்மனைப்பெண்கள்…”
துரியோதனன் மீண்டும் விண்மீன்களை நோக்கினான். “ஒரு பெண் என்னை விரும்பும்படி நான் இருக்கிறேன் என்றால்…” என்றபின் சிரித்தபடி திரும்பி “என்னிடம் மென்மையானவை சில எஞ்சியிருக்கின்றன. அவை என்னை தோற்கடிக்கவும்கூடும். ஆனால் அது எனக்கு பிடித்திருக்கிறது. நெடுநாளாயிற்று என் ஆழங்களில் வெளிக்காற்று பட்டு” என்றான். சட்டென்று அவன் முகம் மாறியது. “இப்போது உமது நெஞ்சுக்குள் கடந்து சென்றதென்ன என்று அறிவேன். அவள் என்னை விரும்பாமல் என் அரியணையை விரும்பியிருக்கலாம் அல்லவா என்றுதானே நினைத்தீர்?”
உண்மையில் அவன் அதைத்தான் எண்ணிக்கொண்டிருந்தான். “இல்லை அரசே” என்றான். “குலப்பெண்கள் அரியணைக்கணக்குகளுக்காக அப்படி ஒரு கடிதத்தை ஓர் ஆண்மகனுக்கு எழுதமாட்டார்கள்.” துரியோதனன் தலையை அசைத்து “இல்லை, அதுவே உண்மையாக இருக்கலாம். நான் பெண்கள் விரும்பாத கற்பாறையாகவே இருக்கலாம். அவள் விழைவது என் மணிமுடியும் செங்கோலுமாக இருக்கலாம். ஆனால் அதை நான் நம்ப மறுக்கிறேன். இன்னும் கொஞ்சநேரம்தான். நாளை அவளை நான் பார்த்துவிடுவேன். பார்த்த முதற்சிலகணங்களிலேயே அவள் எவரென அறிந்துகொண்டும் விடுவேன். இத்தனை விடாயுடன் தேடும் விழிகளுக்கு முன் அவள் எதையும் ஒளிக்கமுடியாது. வஞ்சமும் விழைவும் கொண்ட பெண் அவள் என்றால் அங்கேயே அனைத்தும் கலைந்துவிடும், அதை நான் அறிவேன். ஆனால் பால்ஹிகரே, இந்த இரவை அந்த ஐயத்தின்பொருட்டு நான் இழக்கவேண்டுமா என்ன? இதுபோன்றதோர் இரவு ஒருவேளை எனக்கு மீண்டும் வராமலேயே போகலாம்” என்றான்.
பூரிசிரவஸ் புன்னகைசெய்து “இளவரசே, காதல்கொண்ட உள்ளம் தன் கரவுகளை இழந்துவிடுகிறது. குழந்தையைப்போல கைநீட்டுகிறது. அதற்கு அன்புள்ள விழிகளையும் கைகளையும் தெரியும். தாங்கள் அறியாத உள்ளுணர்வொன்றால் அறிந்தது முற்றிலும் உண்மையாகவே இருக்கும். அன்னையும் தோழியும் ஆசிரியையுமாக அமையும் ஒரு குலமகளையே நீங்கள் அடையவிருக்கிறீர்கள்” என்றான். துரியோதனன் “உமது சொல் நிகழட்டும் இளையோனே” என நெகிழ்ந்த குரலில் சொன்னான். பெருமூச்சுடன் விண்மீன்களை நோக்கி “எத்தனை அதிர்வுகள்… ஒவ்வொரு அதிர்வுக்கும் மண்ணில் அவை எதையோ ஒன்றை அறிகின்றன என்கிறார்கள். இங்குள்ள மானுடன் ஒருவனின் முழுவாழ்க்கை அவற்றில் ஓர் அதிர்வுக்கு நிகரானது என்று என் செவிலி சொல்லியிருக்கிறாள்” என்றான்.
மீண்டும் பெருமுச்சு விட்டு “எளிய கற்பனைகள். குழந்தைத்தனமானவை. ஆனால் அனைத்து கல்வியையும் உதறி அக்கதைகளுக்கு திரும்பிச்செல்லும்போது அதுவரை அறியாத பலவும் புரிகின்றன” என்றான் துரியோதனன். கைகளை விரித்தபடி படகில் மெல்ல நடந்தான். “இந்த விண்மீன்களை எல்லாம் நான் சிறுவனாக இருக்கையில் நாள்தோறும் பார்த்திருந்தேன். ஆனால் இளமையடைந்தபின் இன்றுதான் பார்க்கிறேன். குழந்தைக்கதைகளை நோக்கி செல்ல ஒரு தருணம் தேவைப்படுகிறது.” பூரிசிரவஸ் “காதலின் தருணத்தை அழகுறச்செய்ய குழந்தைக்கதைகளுக்கும் இசைக்கும் மட்டுமே திறனுள்ளது இளவரசே” என்றான்.
துரியோதனன் நின்று “நீர் காதலித்துள்ளீரா?” என்றான். “உண்மையைச் சொல்லும். நீர் சொல்லும் சொற்கள் எனக்கு ஐயத்தை அளிக்கின்றன.” பூரிசிரவஸ் “இளவரசே, நான் நிறைவேறாக்காதல் ஒன்றை நெஞ்சில் நிறைத்துள்ளேன்” என்றான். வாய்தவறி அச்சொல் வந்து விழுந்துவிட்டதென உணர்ந்தான். “நிறைவேறாக்காதல் என்றால், முறையிலாக் காதலா?” என்றான் துரியோதனன் இடையில் கைவைத்து அவனை முழுமையாக மறைத்து தலைக்குமேல் முகம் எழுந்து நின்றவனாக. “இல்லை, அரசே. முறையானதுதான். நான் விரும்பும் பெண்ணை அடைவது எளிதல்ல.” அவன் கால்கள் நடுநடுங்கியதில் விழப்போவதாக உணர்ந்தான். கைநீட்டி வடம் ஒன்றை பற்றிக்கொண்டான்.
“அவள் உம்மைவிட குலமும் அரசும் கொண்டவளா?” என்றான் துரியோதனன். “ஆம்” என்றான் பூரிசிரவஸ். “அவ்வளவுதானே இளையோனே! இப்பாரதவர்ஷத்தை ஆளப்போகும் அரசனின் துணைவன் நீர். ஒரு சொல் மட்டும் சொல்லும், எவளென்று. என் முழுப்படைகளைக்கொண்டும் வென்று வந்து உமக்களிக்கிறேன். எவளென்றாலும் சரி.” பூரிசிரவஸ் நெஞ்சுள் நிறைந்த சுமையை மூச்சாக வெளிவிட்டான். “இல்லை” என்றான். “எவளென்று மட்டும் சொல்லும்…” துரியோதனன் முகம் மாறியது. “இது என் அழியாச்சொல் எனக் கொள்ளும். நீர் சொல்லும் பெண் யாராக இருப்பினும் அவள் உமக்குரியவள். என் உடன்பிறந்தாரும் நாடும் உயிரும் அதற்குரியவை.”
பூரிசிரவஸ் தன் காதுகளில் வெம்மையான காற்று படுவதுபோல உணர்ந்தான். “தருணம் வரட்டும் இளவரசே, சொல்கிறேன்” என்றான். “ஏன், இப்போது சொன்னால் என்ன?” என்றான் துரியோதனன். “நீங்கள் பெண்கொள்ளப்போகும் தருணம் இது. அதன்பின்னர் சொல்கிறேன்.” துரியோதனன் சிரித்து அவன் தோளை தன் கையால் எடையுடன் தட்டி “இது முடியட்டும், நாம் படையுடன் கிளம்புவோம்” என்றான். பூரிசிரவஸ் தலையசைத்தான். அவன் உடல் மெல்ல தளர்ந்தது. மென்மையான காற்று ஒன்று அவன் உள்ளத்தைத் தழுவிச்செல்வது போலிருந்தது.
துரியோதனனின் உள்ளம் திசைமாறியது. மீண்டும் விண்மீன்களை நோக்கினான். “எதிலும் பொருளில்லை என்று சொல்கின்றன” என்றான். “நீடித்து நிற்பவை என ஏதுமில்லை. விண்மீன் சிமிட்டல்கள் கணம் கணம் கணம் என்றே சொல்கின்றன. இக்கணத்தில் இங்கே மகிழ்வுடனும் நிறைவுடனும் வாழ்வதைவிட மேலான பொருள்கொண்ட எதுவுமில்லை வாழ்க்கையில்.” அவன் தனக்குள் என ஏதோ முனகினான். காற்றில் கையால் கதை ஒன்றை வீசினான். “நான் என் ஆசிரியரை நினைவுறுகிறேன். அவரிடமிருந்து நான் கற்றிருக்கவேண்டியது இதுதான். கற்க என்னால் முடியவில்லை. அவர் சிட்டுக்குருவிகளைப்போல அந்தந்த கணத்தில் வாழ்பவர். நேற்றும் நாளையும் அற்றவர். இளையோனே, என் நெஞ்சு முழுக்க வஞ்சத்துடன் அவர் முன் சென்றேன். அவரிடமிருந்து போர்க்கலையை கற்றேன். அவரிடமிருந்து எதை கற்கவேண்டுமோ அதை கற்கவில்லை. அதை இப்போது உணர்கிறேன்.”
மீண்டும் கதையை சுழற்றியபின் திரும்பி “ஆனால் என்னால் அது முடியுமென்றே தோன்றவில்லை. இந்த நாடு மணிமுடி அனைத்தையும் துறக்கலாம். ஆனால் தீராததும் அழியாததுமான ஒன்று…” துரியோதனன் மேலே சொல்லாமல் நிறுத்தி கைகளை கட்டிக்கொண்டான். திரும்பி அறைக்குள் நோக்கி “என்ன செய்கிறார்கள்?” என்றான். “வரைபடத்தை நோக்கிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் பூரிசிரவஸ். “காசியை வரைபடத்தில் நோக்க என்ன இருக்கிறது? விடிகாலையில் காற்று நன்றாகவே வீசும்….” என்றபின் அவன் வடத்தின்மேல் அமர்ந்தான். அவன் உடல் எடையால் அது வளைந்தது. மேலே பாயில் ஓர் அலையெழுந்தது.
“காசிநாட்டு இளவரசியை முன்பு பீஷ்மர் கவர்ந்து வந்தார் என்று அறிந்திருப்பீர். நம் கிழக்குக்கோட்டைக்கு வெளியே அவளுக்கு ஒரு சிறிய ஆலயம் உள்ளது. அங்கு கருநிலவுநாட்களில் அவளுக்கு குருதிக்கொடை கொடுத்து வணங்குகிறோம்” என்று துரியோதனன் தொடர்ந்தான். பூரிசிரவஸ் ”அறிவேன்” என்றான். “அவள் கொற்றவையென உருவெடுத்துச் சென்றபோது அவளுடைய மேலாடை முதலில் விழுந்த இடம் அது. அங்கிருந்து அவள் ஆடைகள் விழுந்த பன்னிரு இடங்களில் பன்னிரு ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. செந்தழலி அன்னை என அவளை வணங்குகிறார்கள்…” பூரிசிரவஸ் தலையசைத்தான். “காசிநாட்டு இளவரசி. மீண்டும் அதேகதை. அதே பெண்கவர்தல்…” துரியோதனன் தலையை அசைத்து “எண்ண எண்ண விந்தை” என்றான்.
பூரிசிரவஸ் ”ஆனால், இப்போது இளவரசியின் விருப்பப்படி செல்கிறோம்” என்றான். “ஆம், எப்படியோ இது நிகர்செய்யப்படுகிறது” என்றபின் “அவளை இன்னொரு அம்பை என்கிறார்கள். எரிகண்ணீர் உதிர்த்துச்சென்றவள் எரிகுழலுடன் மீள்கிறாள் என்று ஒரு சூதன் பாடக்கேட்டேன்” என்றான் துரியோதனன். அவன் அதுவரை அந்த ஒரு பெயரைச்சுற்றித்தான் வந்துகொண்டிருந்தான் என்று பூரிசிரவஸ் எண்ணிக்கொண்டன். அதைச் சொன்னதும் விடுதலையை அறிகிறான். அல்லது மேலும் பதற்றம் கொள்கிறான். பூரிசிரவஸ் ஏதேனும் மறுமொழியாக சொல்ல நினைத்தான். ஆனால் எதிரே அமர்ந்திருந்த கரியபேருருவை அவனால் மதிப்பிடமுடியவில்லை.
“காட்டெரி எழுந்து வருவதை சிறிய குளிரோடை தடுக்குமா என்று சொல்வார்கள்” என்று துரியோதனன் தனக்குள் என சொல்லிக்கொண்டான். “வீண்சொற்கள்… பொருளே இல்லை.” எழுந்து கைகளை விரித்து “ஆனால் எல்லாம் எப்படியோ ஈடுகட்டப்படுகின்றன. எங்கிருந்தோ இன்னொன்று கிளம்பி வருகிறது…” என்றவன் திரும்பி “இவள் குளிர்ந்தவள் என்று என் நெஞ்சு சொல்கிறது. அம்பையன்னையின் அகத்தில் அஸ்தினபுரிக்கென எஞ்சிய கனிவு இவளாக வருகிறது என்று தோன்றுகிறது” என்றான். பூரிசிரவஸ் “அவ்வண்ணமே ஆகட்டும்” என்றான். “ஆம், ஆகவேண்டும்… விழைவாக இருக்கலாம். ஏக்கமாக இருக்கலாம். ஆனால் விண்மீன்களுக்குக் கீழே நிற்பவன் வெறும் தனியன். வெறும் வேண்டுதலை மட்டுமே வெளிமுன் வைக்கமுடிந்தவன்.” அவன் கைகளை மீண்டும் கட்டிக்கொண்டு வானை நோக்கினான். பூரிசிரவஸ் அவன் பேசுவதற்காக காத்து நின்றான். ஆனால் துரியோதனன் முழுமையாகவே சொல்லின்மைக்குள் சென்றுவிட்டிருந்தான்.
துச்சாதனன் உள்ளிருந்து வெளிவந்து “நேரமாகிவிட்டது மூத்தவரே” என்றான். துரியோதனன் திகைத்ததுபோல நோக்கி “ம்?” என்றான். “முதற்சாமம். நாம் காசியில் அன்னையர் ஆலயங்களுக்கு நேராக கங்கைக்குள் நின்றிருக்கிறோம்.” பூரிசிரவஸ் திகைத்ததுபோல திரும்பி நோக்கினான். காசியின் விளக்குகள் மின்னும் படிக்கட்டுகளை தொலைவில் காணமுடிந்தது. மணிகர்ணிகா கட்டமும் அரிச்சந்திரகட்டமும் அனலெழுந்து தெரிந்தன. அணையா சிதைகள். வரணாவையும் அசியையும் இரு மாலைகளென தோளிலிட்ட நகரின் இரு செவ்விழிகள். “நம் படைகளுக்கு சித்தமாக இருக்கும்படி செய்தி அனுப்பு” என்றான் துரியோதனன் மெல்லிய குரலில். தன் கச்சையை இறுக்கியபடி வந்து படகுவிளிம்பில் கால் வைத்து வானை நோக்கி எரியம்புக்காக காத்து நின்றான்.