வெண்முகில் நகரம் - 67
பகுதி 14 : நிழல்வண்ணங்கள் – 2
ஓர் உச்சதருணத்தில் உணர்வுகளை விழிகளில் காட்டாமலிருப்பதற்கு கற்றுக்கொள்வதுவரை எவரும் அரசு சூழ்தலை அறிவதில்லை என்று பூரிசிரவஸ் உணர்ந்த கணம் அது. அவன் விழிகளில் ஒருகணம் முழுமையாகவே அவனுடைய உள்ளம் தெரிந்தது. உடனே அதை வெல்ல அச்சொற்களை புரிந்துகொள்ளாதவன் போல நடித்து “சிசுபாலரா?” என்றான். ஆனால் அந்த நடிப்பு பெரும்பாலானவர்களால் பெரும்பாலான தருணங்களில் செய்யப்படுவதே என அறிந்து “அவரது கோரிக்கையில் பொருள் உள்ளது என்றே படுகிறது” என்றான். அது தன் விழிச்சொல்லுக்கு மாறானது என்று உணர்ந்து மேலும் ஏதோ சொல்ல முயன்றபின் நிறுத்திக்கொண்டான்.
துரியோதனன் “இளையோனே, ஒன்று தெரிந்துகொள்ளும். சிசுபாலர் எளியதோர் ஷத்ரிய அரசர் அல்ல” என்றான். “எது பாண்டவர்களை இயக்குகிறதோ அவ்விசையால் இயக்கப்படுபவரே அவரும். அவர் யாதவக்குருதி கலந்தவர். அக்காரணத்தாலேயே அவருக்கு வங்கனும் கலிங்கனும் மகற்கொடை மறுத்தனர். இழிவை உணர்பவனின் ஆழத்தில்தான் எல்லைமீறிய கனவுகள் இருக்கும். அவர் பாரதவர்ஷத்தை குறிவைக்கும் அரசர்களில் ஒருவர். அவருக்கு துச்சளையை ஒருபோதும் அளிக்கமுடியாது.” பூரிசிரவஸ் கர்ணனை நோக்கி பின் துரியோதனனை நோக்கி “அவ்வண்ணமென்றால்…” என்றான்.
கர்ணன் ”மேலும் அவர் பிறந்த நாள் முதல் எதிரியென அறிந்துவருவது இளைய யாதவனைத்தான். படிப்படியாக துவாரகை இன்று பேரரசாக எழுந்து நிற்கிறது. அதைப்போல சிசுபாலரை எரியச்செய்யும் பிறிதொன்றில்லை. ஒருநாள்கூட அவர் மதுவின்றி துயில்வதில்லை என்கிறார்கள்” என்றான். சிரித்துக்கொண்டு “சூதர்கள் சொன்னது இது. நம்பமுடியவில்லை, ஆனால் ஒற்றர்கள் உறுதிப்படுத்தினார்கள். சேதிநாட்டில் எங்கும் மயில்களே இல்லை. அவற்றின் தோகை கிருஷ்ணனை நினைவுறுத்துகிறது என்று அனைத்தையும் கொல்ல ஆணையிட்டார். ஆனால் அவ்வப்போது மயில்களை பிடித்துக்கொண்டு வருகிறார்கள். அவற்றை அவர் வதைத்துக்கொல்கிறார். கொளுத்தியும் எரிதைலங்களில் ஆழ்த்தியும் இறகுகளை முழுக்கப்பிடுங்கி வெயிலில் கட்டியிட்டும் அவற்றை துடிக்கவைத்து மகிழ்கிறார்” என்றான்.
“தன் கனவுகளுக்குரிய களமாகவே அவர் அஸ்தினபுரியை காண்பார்” என்றான் துரியோதனன். “அதை நாம் ஏற்கமுடியாது. நமக்குத்தேவை நம் களத்தில் நின்றிருக்கும் காய்கள் மட்டுமே.” பூரிசிரவஸ் மெல்ல அசைந்து “அப்படியென்றால்கூட நாம் அவரை நம் துணைவனாகத்தானே கொள்ளவேண்டும்? அவர் கொண்டுள்ள அப்பகைமை நமக்கு உகந்தது அல்லவா?” என்றான். “ஆம், அவருடைய பகைமையாலேயே அவர் கட்டுண்டுவிடுகிறார். அவர் ஒருபோதும் பாண்டவர்தரப்புக்கு செல்லமுடியாது. ஆனால் மகதத்தின் தரப்புக்கு செல்லமுடியும். அதுதான் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய இடம்.”
பூரிசிரவஸ் “இளைய யாதவனுக்கும் மகதத்திற்கும்தானே பகைமை? நமக்கென்ன? நாம் அவர்களை நமக்கு நட்புநாடாக கொண்டாலென்ன?” என்றான். “இளையோனே, மகதத்திற்கும் என் மாதுலருக்கும் தீர்க்கப்படவேண்டிய ஒரு சிறு கணக்கு இருக்கிறது. ஒரு குதிரைச்சவுக்கு அங்கே காந்தாரபுரியில் காத்திருக்கிறது” என்றான் துரியோதனன். “அது இளமையிலேயே நான் மாதுலருக்குக் கொடுத்த வாக்கு. மகதத்தின் அரியணையில் அப்பழைய குதிரைச்சவுக்கை வைப்பது என் கடமை.” பூரிசிரவஸ் அதை புரிந்துகொள்ளாமல் நோக்க “என் தாயை மகதனுக்கு மணமுடித்தளிக்க மாதுலர் விழைந்தார். அவரது கணக்குகளின்படி மகதமும் காந்தாரமும் இணைந்தால் பாரதவர்ஷத்தை ஆளலாம் என்று அன்று தோன்றியிருந்தது” என்றான் துரியோதனன்.
“அன்று புரு வம்சத்து உபரிசரவசுவின் குலத்தில் வந்த விருஹத்ரதர் மகதத்தை ஆண்டுகொண்டிருந்தார். குலமூதாதைபெயர் கொண்டிருந்தமையால் அவரை குடிகளும் புலவரும் சார்வர் என்றும் ஊர்ஜர் என்றும் ஜது என்றும் அழைத்தனர். அவருடைய மைந்தருக்கு மகதத்தின் பெருமன்னர் பிருஹத்ரதரின் பெயர் இடப்பட்டிருந்தமையால் அவரை சாம்ஃபவர் என்று குடிகள் அழைத்தனர். பிருஹத்ரதரின் தோள்வல்லமையையும் சித்தத்தின் ஆற்றலையும் சூதர்வழியாக மாதுலர் அறிந்திருந்தார். காந்தாரத்தின் மணத்தூதை பேரமைச்சர் சுகதரே மகதத்திற்கு கொண்டு சென்றார். காந்தாரம் தன் அனைத்து மிடுக்குகளையும் களைந்து இறங்கி வந்து இறைஞ்சுவதாகவே அதற்குப் பொருள். ஆனால் அன்று காந்தாரத்தவர்களுக்கு அரசுசூழ்தலின் முறைமைகள் அத்தனை தெரிந்திருக்கவில்லை.”
”அன்று விருஹத்ரதர் பெண்ணிலும் மதுவிலும் பகடையிலும் பாடல்களிலும் ஆழ்ந்திருந்தார். அரசை முழுக்க நடத்திவந்தவர் மகதத்தின் பேரமைச்சராகிய தேவபாலர். காந்தாரத்தின் அமைச்சராகிய சுகதருக்கு அரசு சூழ்தலின் நுட்பங்கள் தெரியவில்லை. தேவபாலரை அவர் ஓர் அமைச்சராக மட்டுமே எண்ணினார். அரசவையில் அவர் தேவபாலர் கேட்ட வினாக்களுக்கெல்லாம் அரசரை நோக்கியே மறுமொழி உரைத்தார். தேவபாலர் அவையில் தான் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தார். அவையில் அவருக்கு எதிரிகள் இருந்தனர். அவர்கள் புன்னகை பூத்தனர் என அவர் நினைத்தார். அரசரின் எண்ணத்தை காந்தாரத்திற்கு எதிராகத் திருப்ப அவரால் முடிந்தது.”
“தேவபாலரின் வழிகாட்டுதலின்படி சுகதர் கிளம்பும்போது அரசர் ஒரு பொற்பேழையை காந்தாரத்து அரசர் சுபலருக்கு பரிசாக அளித்தார். அந்தப்பரிசு என்ன என்று செல்லும்வழியில் திறந்து நோக்கவேண்டும் என்றுகூட சுகதருக்கு தெரியவில்லை. அவையில் அதைத் திறப்பதற்கு முன்னர் ஒருமுறை திறந்து நோக்கியிருக்கவேண்டும் என்று காந்தாரத்தில் எவருக்கும் தோன்றவில்லை. அன்று காந்தாரநகரியில் மாதுலர் சகுனி இல்லை. அவையிலேயே பெருமிதத்துடன் பேழையைத் திறந்த அரசர் சுபலர் அதற்குள் ஒரு பழைய குதிரைச்சவுக்கு இருப்பதைக் கண்டார். அயல்நாட்டு வணிகர்களும் சூதர்களும் நிறைந்த அவை அது. காந்தாரத்தை கங்காவர்த்தம் இழிவுபடுத்தியது என்றே மாதுலர் உணர்ந்தார். மாதுலர் அடைந்த முதல் இழிவும் அதுவே.”
”காந்தாரர் வேடர்குலம் என்பதைச் சுட்டும் செயல் அது. ஆனால் அது நிகழ்ந்ததும் நன்றே. மாதுலர் சகுனி அடைந்த பெருவஞ்சம் அங்கிருந்து தொடங்கியது. இன்று பதினாறு கைகளிலும் படைக்கலம் ஏந்திய காவல்தெய்வமாக நமக்கு அவர் அருள்புரிகிறார்” என்றான் துரியோதனன். “ஆனால் இன்று பிருஹத்ரதரின் மைந்தர் ஜராசந்தருக்கு எந்தக்குலச்சிறப்பும் இல்லையே. அவர் அசுரகுலத்து ஜரை என்ற அன்னையின் மைந்தர் அல்லவா?” என்றான் பூரிசிரவஸ். “ஆம், அது ஊழ்விளையாட்டு. ஆனால் அந்தக்குதிரைச்சவுக்கு அங்கே காத்திருக்கிறது. அது தன் ஆடலைமுடித்தாக வேண்டும்” என்று துரியோதனன் சொன்னான்.
“அத்துடன் இன்னொன்றும் உள்ளது” என்று கர்ணன் சொன்னான். “நீர் சொன்ன குல இழிவு இருப்பதனாலேயே ஜராசந்தரும் பாரதவர்ஷத்தை வெற்றிகொள்ளாமல் அமையமுடியாது. நாம் அவரை எங்கேனும் ஓரிடத்தில் களத்தில் சந்தித்தாகவேண்டும். வேறு வழியில்லை.” மீண்டும் அமைதி எழுந்தது. பல சிறிய கட்டங்களாக அது நீடித்தது. பூரிசிரவஸ்ஸே அதைக்குலைத்து “நாம் என்ன செய்யவிருக்கிறோம்?” என்றான். துரியோதனன் “நாங்கள் இளவரசிகளை மணப்பதை தமகோஷர் ஏற்றுக்கொள்கிறார்” என்றான். “ஆகவே ஒரு சிறியபடையுடன் சேதிநாட்டின் சூக்திமதிக்குள் ஊடுருவி இளவரசிகளைக் கவர்ந்து வரலாமென்று எண்ணுகிறோம்.”
என்ன சொல்வதென்று பூரிசிரவஸ்ஸுக்கு தெரியவில்லை. அவனுடைய திகைப்பை பார்த்துவிட்டு துரியோதனன் கர்ணனை நோக்கி புன்னகைசெய்தான். கர்ணன் “முதலில் இது ஒரு முழுமையான பெண்கவர்தல் அல்ல பால்ஹிகரே. தமகோஷர் நம்மை ஆதரிப்பவர் என்பதனால் சூக்திமதியின் முதன்மைப்படைத்தலைவர்கள் அனைவருக்கும் நம் வருகை அறிவிக்கப்பட்டிருக்கும். நகரைச்சுழித்தோடும் சூக்திமதியின் கரையில் அமைந்திருக்கும் கொற்றவை ஆலயத்திற்கு பூசனைசெய்வதற்காக இளவரசிகள் அனுப்பப்படுவார்கள். அவர்கள் இருக்குமிடத்தை நம் ஒற்றர்கள் நமக்கு தெளிவாகவே அறிவிப்பார்கள். அவர்களுக்கு பெரிய காவலும் இருக்காது. சொல்லப்போனால் அரசரே அவர்களை நமக்கு அளிக்கிறார் என்றுதான் பொருள்” என்றான்.
“கருஷகநாடு நம்முடன் நட்பில் உள்ளது. யமுனைக்கரையில் உள்ள அவர்களின் தலைநகர் வேத்ராகியத்திற்கு நாம் முன்னரே சென்றுவிடுவோம். யமுனை வழியாக வணிகப்படகுகள் போல உருகரந்து சென்று காத்திருப்போம். எரியம்பு தெரிந்ததும் சூக்திமதி ஆற்றுக்குள் நுழைந்து இளவரசியரைக் கவர்ந்து மீண்டும் யமுனைக்கு வந்து நேராக யமுனையின் ஒழுக்கிலேயே சென்று வத்ஸபுரியை அடைந்து அங்குள்ள துறையில் கரையேறி புரவிகளில் ஏறிக்கொண்டு இரவிலேயே கங்கையை அடைந்துவிடுவோம். ஃபர்கபுரியில் மீண்டும் கங்கைப்படகில் ஏறிக்கொண்டு காம்பில்யத்தைக் கடந்து தசசக்கரத்தை அடைவோம். அங்கேயே இளவரசிகளை மணமுடித்தபின்னர்தான் அஸ்தினபுரிக்கு திரும்புவோம்.”
“சிசுபாலர்?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “அவர் மதுராவின் எல்லைக்கு அரசரால் அனுப்பப்பட்டிருப்பார். செய்தியறிந்ததும் உடனே அஸ்தினபுரியை தொடர்புகொள்வார். அங்கு தந்தைக்கும் விதுரருக்கும் உண்மையிலேயே என்ன நடந்தது என்று தெரிந்திருக்காது” என்று துரியோதனன் சொன்னான். “திட்டங்கள் அனைத்தையும் நேற்றே முழுமையாக வகுத்துவிட்டோம். இன்றிரவே வணிகப்படகுகளில் நாம் கிளம்புகிறோம்” என்றான் கர்ணன். பூரிசிரவஸ் நிமிர்ந்து நோக்கினான். கர்ணன் “இளவரசரும் இளையோனும் நானும் செல்கிறோம். உடன் நீரும் வரவேண்டுமென்பது இளவரசரின் விருப்பம்” என்றான். “அதை என் நல்வாய்ப்பென்றே கொள்வேன்” என்று சொல்லி பூரிசிரவஸ் தலைவணங்கினான்.
“இன்று இரவு பிந்திவிட்டது. அறைக்குச்சென்று துயிலும். நாளை முதற்புள் ஒலிக்கும்முன் நாம் அஸ்தினபுரியை கடந்துவிட்டிருக்கவேண்டும்” என்றான் துரியோதனன். “ஆனால் பகல் முழுக்க நாம் படகில் துயிலமுடியும்… நிறைய நேரமிருக்கிறது.” பூரிசிரவஸ் எழுந்து தலைவணங்கி “அவ்வண்ணமே” என்றான். “இளையோனே, நீர் கவரப்போகும் முதல் இளவரசி என நினைக்கிறேன். இது நல்ல தொடக்கமாக அமையட்டும்” என்று சொல்லி துரியோதனன் சிரிக்க கர்ணனும் மெல்ல சிரித்தான். விழிகளாலேயே இளைய கௌரவர்களிடம் விடைபெற்றுவிட்டு பூரிசிரவஸ் திரும்பி வெளியே நடந்தான். உண்மையிலேயே துயில் வந்து உடலை ஒருபக்கமாக தள்ளியது. அறைக்குச் சென்று படுத்ததைக்கூட அவன் அரைத்துயிலில்தான் செய்தான்.
படகில் அவன் தேவிகையுடன் விரைந்து கொண்டிருந்தான். புடைத்த பாய்கள் கருக்கொண்ட வயிறுகள் போல அவனை சூழ்ந்திருந்தன. கொடியின் படபடப்பு கேட்டுக்கொண்டிருந்தது. எரியம்புகள் எழுந்து வந்து பாய்களின் மேல் விழுந்தன. பாய் எரியத்தொடங்கியது. அவன் பாய்மீது படுத்திருந்தான். அது ஓரத்தில் இருந்து எரிந்தபடியே அனல் கொண்டது. தீ நெருங்கி வந்தது. எழுந்துவிடவேண்டும். வெளியே சகலபுரியின் மரங்களின் சலசலப்பு. தீ மரங்களை எரிப்பதில்லை. வெளியே குதித்துவிட்டால் தீயிலிருந்து தப்பிவிடலாம். அவன் எழுந்துகொண்டபோது அறைக்குள் கூரியவாளுடன் கடுமையான விழிகளுடன் ஒருவன் நின்றிருந்தான். ‘யார் நீ?’ என்று பூரிசிரவஸ் கூவினான். அவன் ‘என்னை அறியமாட்டாய் நீ. நான் உன்னை அறிவேன்’ என்றான்.
‘அறிவேன், நீ சிசுபாலன்’ என்றான் பூரிசிரவஸ். அவன் நகைத்து ’ஆம், உன்னைக் கொல்லும்பொருட்டு அறைக்குள் புகுந்தேன்’ என்றான். பூரிசிரவஸ் கைநீட்டி தன் வாளை எடுத்தான். அவன் தன் வாளை வீசிய மின்னல் கண்களை கடந்துசென்றது. வாளுடன் பூரிசிரவஸ்ஸின் கை கீழே விழுந்து துள்ளியது. அவன் எழுவதற்குள் சக்கரம் ஒன்றால் தலைவெட்டப்பட்டு சிசுபாலன் அவன் முன் குப்புற விழுந்தான். சக்கரம் சுழன்று சாளரம் வழியாக வெளியே சென்றது. தலை அறைமூலையில் சென்று விழுந்து இருமுறை வாயைத்திறந்தது. வாயில் வழியாக உள்ளே வந்த சலன் ‘கிளம்பு’ என்று அவன் கையை பிடித்தான். ‘என் கை, எனது வாள்கொண்ட கை’ என்று பூரிசிரவஸ் கூவினான். ‘விடு, இனி உனக்கு அது இல்லை…’ என்று சலன் அவனை இழுத்தான். ‘இங்கே நீ இனிமேல் இருக்கமுடியாது. உன்னை கொன்றுவிடுவார்கள்.’
பூரிசிரவஸ் ‘தேவிகை? அவளை நான் கவர்ந்துவந்தேன்’ என்றான். ‘அவளை நான் மணமுடித்துவிட்டேன். பால்ஹிக அரசி அவள்தான்… வா’ என்றான் சலன். அவன் எழுந்து அவனுடன் சென்றபடி ‘என் கை அறுந்துவிட்டது’ என்றான். ‘குன்றில் மாடுமேய்ப்பதற்கு ஒரு கையே போதும், வா’ என்றான் சலன். ’விடுங்கள் என்னை’ என்று திமிறியபடி பூரிசிரவஸ் புரண்டு எழமுயன்றான். அஸ்தினபுரியின் படுக்கை அது. அவன் கதவை எவரோ தட்டிக்கொண்டிருந்தனர். மிகத்தொலைவில் ஏதோ உலோக ஒலி கேட்டது. தாழின் ஒலி. அல்லது வாளுரசும் ஒலி. அவன் எழுந்து அமர்ந்தான். வாயில் உண்மையிலேயே தட்டப்பட்டுக்கொண்டிருந்தது.
எழுந்துசென்று அவன் வாயிலை திறந்தான். அங்கே ஏவலன் ஒருவன் நின்றிருந்தான். “என்ன?” என்றான் பூரிசிரவஸ். “ஓலை” என்று அவன் ஒரு மூங்கில்குழாயை நீட்டினான். தலைவணங்கி கதவை உடனே மூடிவிட்டான். பூரிசிரவஸ் சிலகணங்கள் அது உண்மையிலேயே நிகழ்ந்ததா என்று வியந்தபடி நின்றபின் கையை பார்த்தான். குழல் கையில்தான் இருந்தது. அறைக்குள் திரும்பி அகல்விளக்கைத் தூண்டியபின் குழாயை உடைத்து உள்ளிருந்து தாலியோலைச்சுருளை எடுத்தான். அதில் மெல்லிய மணம் இருந்தது. துச்சளையின் மணம் அது. மூக்கருகே கொண்டு வந்து கூர்ந்தான். அது உளமயக்கல்ல, உண்மையிலேயே அவள் மணம்தான் அது. எப்படி அது ஓலையில் வந்தது?
‘இந்த மணம் என்னை எவரென சொல்லும்’ எனத் தொடங்கியது கடிதம். அவன் பிடரி புல்லரித்தது. எவரோ நோக்கும் உணர்வை அடைந்து சுற்றும் பார்த்தான். எழுந்துசென்று கதவைமூடிவிட்டு வந்து அமர்ந்துகொண்டான். அந்த மணம் எந்த மணப்பொருளாலும் வந்தது அல்ல. அது அவளுக்கு மட்டுமே உரிய மணம். அவள் அதை கழுத்திலோ முலைகளுக்கு நடுவிலோ வைத்திருக்கக்கூடும் என அவன் எண்ணிக்கொண்டான். மீண்டும் உடல் சிலிர்த்து கண்கள் ஈரமாயின. பெருமூச்சுடன் உடலை எளிதாக்கிக்கொண்டான். ‘என் மணநிகழ்வு அரசியலாக்கப்பட்டுவிட்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.’ அவனால் வாசிக்கமுடியவில்லை. அத்தனை நொய்மையானவனாக இருப்பதைப்பற்றிய நாணம் ஏற்பட்டதும் தன்னை இறுக்கி நிமிர்ந்து அதை நீட்டி வாசிக்கத் தொடங்கினான்.
‘நான் இளவரசி என்பதாலேயே இந்த அரசியலின் ஒரு பகுதி. ஆகவே எதையும் பிழை என மறுக்கவில்லை. ஆனால் இந்த ஆடலில் இறங்கி நான் விழைவதை அடையவேண்டுமென எண்ணுகிறேன். அதன்பொருட்டே இக்கடிதம்’ என்று துச்சளை எழுதியிருந்தாள். ‘சேதிநாட்டு சிசுபாலருக்கு நான் அரசியாவதை மூத்தவர் விரும்பவில்லை. ஆகவே இளவரசிகளை கவர்ந்துவர எண்ணுகிறார்கள். ஆனால் அதன்பின் சிசுபாலருக்கு நிகரான ஓர் எதிரியை தங்கள் அணிக்குள்ளேயே நிலைநிறுத்தும்பொருட்டு என்னை ஜயத்ரதருக்கு அரசியாக ஆக்கலாமென அவர் எண்ணக்கூடும். அதையும் நான் விரும்பவில்லை. ஏனென்றால் இதில் எந்த அரசரை நான் மணந்தாலும் என்றாவது ஒருநாள் நான் அஸ்தினபுரிக்கு எதிர்நாட்டின் அரசியாக ஆகக்கூடும். அது என் மூதன்னையரால் விரும்பப்படுவதல்ல.’
‘நான் இங்கே அஸ்தினபுரியிலேயே இருக்க விழைகிறேன். என் தமையனுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே பகை நிகழாது காப்பதே வாழ்நாள்முழுக்க என் பணியாக இருக்கக் கூடும். சொல்லப்போனால் என் தந்தைக்கும் தமையனுக்கும் இடையேகூட நான் எப்போதும் இருந்துகொண்டிருக்கவேண்டியிருக்கும். ஆகவே அஸ்தினபுரியின் இளவரசியாகவே நான் நீடிக்க உதவும் மணவுறவையே நாடுகிறேன்.’ பூரிசிரவஸ் அச்சொற்களை அவள் சொல்வதுபோலவே உணர்ந்து எவரேனும் அதை கேட்டுவிடுவார்களோ என அஞ்சி திரும்பிப்பார்த்தான்.
‘சேதிநாட்டு இளவரசியரைக் கவர்ந்து வரும்போது தமையன் உவகையுடன் இருக்கும் கணத்தில் என் கையை பரிசாக அளிக்கும்படி நேராகவே கோருங்கள். தமையன் சினக்கக்கூடும். அப்போது அருகே அங்கநாட்டரசர் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அவர் என் தமையனைவிட எனக்கு அண்மையானவர். ஒரு நிலையிலும் நான் உகக்காத எதையும் அவர் செய்யமாட்டார். அவர் என் விழைவு என்ன என்று கேட்பார். இந்த ஓலையை அவரிடம் அளியுங்கள். அவர் என்னிடம் நேரில் கேட்டாரென்றால் நான் ஒப்புக்கொள்வேன். அவர் முடிவெடுத்துவிட்டாரென்றால் அஸ்தினபுரியில் அதற்கு மறுமொழி இருக்காது. அவர் அரசநலனைவிட குடிநலனைவிட தன்நலனைவிட என் நலனையே முதன்மையாகக் கொள்வார் என நான் உறுதியாக எண்ணுகிறேன்.’
‘ஆகவேதான் தங்களை பிதாமகர் சந்திக்கவேண்டுமென நான் விழைந்தேன். அவரிடம் உங்களைப்பற்றி சொன்னேன். என் எண்ணத்தை சொல்லவில்லை. வடமேற்கின் படைத்தலைவராக தாங்கள் அமையமுடியும் என்றும் தங்களை நேரில் பார்த்தால் அதை அவரே உணர்வார் என்றும் சொன்னதை அவர் ஏற்றுக்கொண்டார். மணவுறவின் வழியாக அஸ்தினபுரியின் வலுவான துணைவராக தங்களை ஆக்குவது நன்று என்றபோது முதியவர் புன்னகைசெய்தார். அவரது உள்ளம் என்ன என்று அறியேன். அவர் என்னை அறிந்துவிட்டாரென்றால் அது என் நல்லூழ்.’
நெஞ்சு நிறைந்து விம்மியமையால் அவனால் அமரமுடியவில்லை. எழுந்து நின்றான். பின் மீண்டும் அமர்ந்துகொண்டான். சுவடியின் ஒவ்வொரு வரியையும் மீளமீள வாசித்தான். மெல்ல அவன் குருதியோட்டம் அடங்கியதும் எழுந்து அறைக்குள் உலவினான். எங்கும் நிற்கவோ எதையும் நோக்கவோ முடியவில்லை. எண்ணங்கள்கூட எதிலும் அமையவில்லை. அந்த ஓலையை கைவிட்டு இறக்கத் தோன்றவில்லை. அதை மார்பின்மேல் போட்டுக்கொண்டு படுத்தான். புரண்டபோது தலைமேல் வைத்தான். எழுந்து அரைஇருளிலேயே அதை மீண்டும் வாசித்தான். விரல்களால் தொட்டே அதன் எழுத்துக்களை அறியமுடியுமென தோன்றியது. கூர்ந்து நோக்கிக்கொண்டே இருந்தமையால் அந்த எழுத்துக்கள் சுவடிவிட்டு எழுந்து காற்றில் மிதப்பதுபோல விழிமயக்கு எழுந்தது.
மீண்டும் மீண்டும் அவள் முகம் நினைவுக்கு வந்து சென்றது. அவளை அத்தனை கூர்மையாக நோக்கினோமா என்ன என்று வியந்துகொண்டான். பெண்களை நோக்கும்போது குலமுறைமை விழிகளை தாழ்த்தச் சொல்கிறது. அகம் இன்னொரு கூர்விழியை திறந்துகொள்கிறது. அவள் காதோர மயிர்ப்பரவலை, இடக்கன்னத்தில் இருந்த சிறிய வெட்டுத்தழும்பை, நெற்றிவகிடில் இருந்த முடிப்பிசிறை, இடப்புருவம் ஒரு சிறு தழும்பால் சற்று கலைந்திருந்ததை, கண்ணிமைகளை, இதழ்களின் வளைவுக்குக் கீழிருந்த குழியை, மோவாயின் கீழே மென்தசை மெல்ல வளைந்து சென்றதை, கழுத்தின் மெல்லிய கோடுகளை, மிக அருகே என நோக்கமுடிந்தது. உடனே அகம் துணுக்குற்றது, அவன் நோக்கிக்கொண்டிருப்பது பாரதவர்ஷத்தின் பேரரசி ஒருத்தியை. அந்த ஓலை மிகுந்த எடைகொண்டதாக ஆகியது. அதை நழுவவிடப்போவதாக உணர்ந்தபின் மீண்டும் பற்றிக்கொண்டான்.
இரவு ஓசைகளாக நீண்டு நீண்டு சென்றது. இரவில் மட்டும் ஏன் ஓசைகள் அத்தனை துல்லியமான ஒத்திசைவுகொள்கின்றன? ஒவ்வொன்றும் ஒரு பெரிய ஒழுக்கின் சரியான இடத்தில் சென்று அமைந்துவிடுவது எப்படி? ஏன் எந்த ஒலியும் தனிப்பொருள்கொள்ளாமல் இரவென்று மட்டுமே ஒலிக்கின்றன? அவன் பெருமூச்சுகளாக விட்டபடி படுக்கையில் விழித்துக்கிடந்தான். படுத்திருப்பதுகூட உடலை வலிக்கவைக்கும் என்று அப்போதுதான் தெரிந்துகொண்டான். எழுந்து அமர்ந்தபோது துயிலின்மையும் பயணக் களைப்பும் உள்ளத்தின் எழுச்சியும் கலந்து உடலை எடையற்றதாக ஆக்கின. மென்மையான அகிபீனாவின் மயக்கு போல. எதையாவது அருந்தவேண்டுமென எண்ணினான். ஆனால் எழுந்துசெல்ல எண்ணிய எண்ணம் உடலை சென்றடையாமல் உள்ளுக்குள்ளேயே சுற்றிவந்தது.
தொலைவில் முதல்கரிச்சானின் ஒலி கேட்டதும் அவன் எழுந்து வெளிவந்தான். ஏவலன் அவனுக்காக காத்து நின்றிருந்தான். பயணத்திற்கு சித்தமாகி வந்ததும் ஏவலனிடமும் சகனிடமும் அவன் இளவரசருடன் செல்வதாக சொல்லிவிட்டு கிளம்பினான். புரவியில் ஏறி இருளுக்குள்ளாகவே விரைந்தான். விடியற்காலைக்குளிர் சாலையை தடித்த திரையென மூடியிருந்தது. அதைக்கிழித்து ஊடுருவிச்செல்லவேண்டியிருந்தது. சற்றுநேரத்திலேயே மூக்குநுனியும் காதுமடல்களும் உயிரற்றவைபோல ஆயின.
படகுத்துறையை சென்றடைந்தபோது அங்கே ஓரிரு பந்தங்கள் மட்டும் எரிவதையும், ஒளியில் துறைமுற்றத்தில் நின்ற புரவிகளையும் கண்டான். இறங்கி கடிவாளத்தை கையளித்தபின் சேவகனை நோக்கினான். அவன் ”இளவரசரும் பிறரும் முதற்படகில் ஏறிக்கொண்டுவிட்டனர்” என்று உதடசைக்காமல் சொன்னான். பூரிசிரவஸ் தலையசைத்தபின்னர் சென்று முதற்படகில் இணைந்த நடைபாலத்தை அடைந்தான். அங்கு காவல்நின்றிருந்த வீரன் தலைவணங்கி “உள்ளே அறைக்குள் இருக்கிறார்கள்” என்றான். படகில் அறைக்குள் நெய்விளக்கு எரிந்த ஒளி கதவின் இடுக்கு வழியாக தெரிந்தது. மற்றபடி அனைத்துப்படகுகளும் முழுமையாகவே இருளுக்குள் மூழ்கிக்கிடந்தன.
அறைவாயிலில் நின்ற ஏவலன் உள்ளே சென்று அறிவிக்க கதவுக்கு அப்பால் துரியோதனன் உரக்க எதிர்ச்சொல்லிட்டுக்கொண்டிருக்கும் ஒலி கேட்டது. “உள்ளே வருக பால்ஹிகரே.” பூரிசிரவஸ் உள்ளே சென்று தலைவணங்கினான். கர்ணனும் துச்சாதனனும் அறைக்குள் அமர்ந்திருந்தனர். அவனை அமரும்படி கைகாட்டியபடி “நாம் இன்று சூக்திமதிக்கு செல்வதாக இல்லை பால்ஹிகரே” என்றான் துரியோதனன். பூரிசிரவஸ் திகைப்புடன் நோக்கியபடி அமர்ந்தான். “நாம் நேராக காசிக்கு செல்லவிருக்கிறோம். நமது ஒரு சிறியபடைப்பிரிவை தசசக்கரத்திலிருந்து காசிக்கு வரச்சொல்லிவிட்டேன். காசியைத் தாக்கி காசிமன்னனின் மகள் பானுமதியையும் பலந்தரையையும் சிறைகொண்டுவரப்போகிறோம்.”
பூரிசிரவஸ் திகைப்புடன் கர்ணனை நோக்கிவிட்டு “ஏன்?” என்றான். “நேற்று பின்னிரவில் கிடைத்த ஒற்றர்செய்திகளின்படி பீமனும் நகுலனும் இப்போது காசிநாட்டை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள். அவ்விரு இளவரசிகளையும் அவர்கள் சிறையெடுக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். உண்மையில் அது காசிமன்னனின் திட்டமேதான். அதை நாம் தடுத்தாகவேண்டும்” துரியோதனன் சொன்னான். “காசி நமக்கு இன்றியமையாதது. மகதத்தின் ஒருபக்கம் அங்கமும் மறுபக்கம் காசியும் இருந்தால் மட்டுமே அதை நாம் கட்டுப்படுத்த முடியும். காசி பாண்டவர் கைகளுக்குச் செல்லும் என்றால் அதன்பின்னர் கங்காவர்த்தத்தில் அவர்களுடைய கொடிதான் பறக்கும். ஒருபோதும் நாம் அதை ஏற்கமுடியாது.”
“ஆம்” என்று பூரிசிரவஸ் சொன்னான். அவர்களின் திட்டமென்ன என்று அவனுக்கு அப்போதும் புரியவில்லை. “அத்துடன், காசிமன்னனின் இந்தத் திட்டத்தை நமக்கு அறிவித்தவர் காசிநாட்டு மூத்தஇளவரசி பானுமதியேதான்” என்று கர்ணன் சொன்னான். “அவளுக்கு புயவல்லமை மிக்க ஓர் அரசனை கணவனாக அடையவேண்டும் என்ற விழைவு உள்ளது.” துரியோதனன் புன்னகைத்து “ஆம், இந்த ஆட்டத்தில் பெண்களின் விழைவும் ஒரு கையே” என்றான். பூரிசிரவஸ் அவனுக்கு துச்சளையின் கடிதம் பற்றி தெரிந்திருக்குமோ என்ற ஐயத்தை அடைந்தான். ஆனால் துரியோதனனின் விழிகளை ஏறிட்டு நோக்கி அதை அறியும் துணிவு அவனுக்கு வரவில்லை.
“பானுமதியே அனைத்து செய்திகளையும் அறிவித்துவிட்டாள்” என்று துரியோதனன் சொன்னான். “அவர்கள் விஸ்வநாதர் ஆலயத்திற்கு நாளை புலரியில் வழிபட வருவார்கள். அவர்கள் அங்கே வரும் நேரம் பீமனுக்கும் நகுலனுக்கும் அறிவிக்கப்பட்டிருக்கும். ஆனால் அதற்கு நெடுநேரம் முன்னரே அவர்கள் கிளம்பிவிடுவார்கள். கங்கைக்கரையில் உள்ள மூன்று அன்னையர் ஆலயத்தின் முன்னால் அவர்களின் பல்லக்குகள் வந்ததும் நமக்கு செய்தி அனுப்பப்படும். நாம் அவர்களை அங்கிருந்து கவர்ந்துகொண்டு வந்து படகில் ஏற்றி கங்கையில் பாய்விரித்த பின்னர்தான் பீமனுக்கும் நகுலனுக்கும் அவர்கள் ஆலயத்திற்கு சென்று சேரவில்லை என்று தெரியவரும். தசசக்கரத்திலிருந்து வரும் நமது படகுப்படை நம்மைச்சூழ்ந்துகொண்டபின் அவர்களால் நம்மை தொடரவும் முடியாது.”
பூரிசிரவஸ் உடலை அசைத்து அமர்ந்தான். “ஐயங்கள் உள்ளனவா இளையோனே?” என்றான் துரியோதனன். “இது நம்மை திசைதிருப்பச்செய்யும் சூழ்ச்சியாக இருக்காதா?” என்றான் பூரிசிரவஸ். “இல்லை, பானுமதியின் தனிப்பட்ட செய்தி இது. பெண்கள் இதில் சூழ்ச்சி செய்யமாட்டார்கள்” என்று துரியோதனன் சொன்னான். “சிசுபாலரின் தங்கைகளை நாம் எப்போது கொள்கிறோம்?” என்றான் பூரிசிரவஸ். “முதலில் இது முடியட்டும். அந்த இளவரசிகளையும் கவர்வோம்.” பூரிசிரவஸ் சிலகணங்கள் எண்ணியபின் “காசிநாட்டு இளவரசி அஸ்தினபுரியின் பட்டத்தரசியாக ஆவாரா?” என்றான். துரியோதனன் “ஆம், அவள் இந்தத் தூதை அனுப்பியபின் அவளை என்னால் ஒருநிலையிலும் தவிர்க்கமுடியாது” என்றதும் அவன் கேட்கப்போவதை அவனே உய்த்துக்கொண்டு “சேதிநாட்டு இளவரசிகள் பட்டத்தரசிகளாக ஆகமுடியாது” என்றான்.
“அதை தமகோஷர் ஏற்கமாட்டார் என நினைக்கிறேன்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “இன்று அவர் நம்மை ஏற்கிறார் என்றால் அது அவரது மகள் அஸ்தினபுரியின் அரசியாக ஆவார் என்பதனால்தான். காசிநாட்டு இளவரசியை நீங்கள் மணந்ததை அறிந்தால் அவரது எண்ணம் மாறக்கூடும்.” கர்ணன் “ஆம், அதை நானும் எண்ணினேன்” என்றான். “அதைத்தான் நான் பேசிக்கொண்டிருந்தேன். இளவரசரின் எண்ணத்தை மாற்ற என்னால் முடியவில்லை. நாம் இன்னமும்கூட இதைப்பற்றி சிந்திக்கலாமென எண்ணுகிறேன்.”
துரியோதனன் உரக்க “எனக்கு தன் கணையாழியை அனுப்பிய பெண்ணை இன்னொருவன் கொண்டான் என்றால் நான் வாழ்வதில் பொருளில்லை” என்றான். “இது அத்தனை எளிதாக முடிவுசெய்யப்படவேண்டியதல்ல. இதில் நாம் பலவற்றை எண்ணவேண்டியிருக்கிறது” என்று கர்ணன் சொன்னான். “தமகோஷர் சிசுபாலரை நகரைவிட்டு அனுப்பவில்லை என்றால் நாம் இளவரசிகளை கவரமுடியாது … அதில் ஐயமே தேவையில்லை.”
துரியோதனன் ”நான் முடிவுசெய்துவிட்டேன். காசிநாட்டு இளவரசியை நாம் கவர்ந்தாகவேண்டும்” என்றான். விழிகளை விலக்கிக்கொண்டு “இன்னும் அவள் முகத்தைக்கூட நான் பார்க்கவில்லை. ஆனால் அவளையன்றி எவரையும் என் பட்டத்தரசியாக என்னால் ஏற்கமுடியாது” என்றான். பூரிசிரவஸ் “அப்படியென்றால் சேதிநாட்டு இளவரசியர்?” என்று கேட்டதும் துரியோதனன் எழுந்து கைகளை விரித்து உரத்த குரலில் “அவர்கள் எனக்குத்தேவையில்லை” என்றான். உரக்க “தார்த்தராஷ்டிரரே, சேதிநாடு நமக்கு காசியை விட முதன்மையானது” என்றான் கர்ணன். “ஆம், நாம் துச்சளையை சிசுபாலருக்கு அளிப்போம், அவ்வளவுதானே? சேதிநாடு நம்மைவிட்டுப்போகாது. அவருடைய பெருவிழைவுகளை பின்னர் பார்த்துக்கொள்வோம்.”
கர்ணன் ஏதோ சொல்லமுனைவதற்குள் துரியோதனன் “இனி இதில் பேச்சுக்கு இடமில்லை. நான் படகுகளை காசிக்குச் செல்ல ஆணையிடப் போகிறேன்…” என்றபின் திரும்பி துச்சாதனனிடம் “புறப்படுக!” என்று கைகாட்டினான். துச்சாதனன் தலைவணங்கி வெளியே சென்றான்.