வெண்முகில் நகரம் - 64
பகுதி 13 : பகடையின் எண்கள் – 5
படைத்துணைவனாகிய சகன் தொடர்ந்து வர பூரிசிரவஸ் அவைக்குச்சென்றபோது அவைநிகழ்ச்சிகள் முடியும் நிலையில் இருந்தன. அவனுக்காகத்தான் அனைவரும் காத்திருக்கிறார்கள் என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. ஏவலன் அவனுடைய வருகையை சொன்னதும் சுதீரர் அவனை அவைக்கு அறிவித்தார். வாழ்த்தொலிகள் நடுவே அவைபுகுந்து தலைவணங்கினான். அவைநடுவே சல்லியர் அரியணையில் அமர்ந்திருக்க அருகே இடப்பக்கம் அவரது பட்டத்தரசி விப்ரலதை அமர்ந்திருந்தாள். வலப்பக்கம் நிகரான அரியணையில் த்யுதிமான் இருக்க அவருக்கு மறுபக்கம் அவரது பட்டத்தரசி பிரசேனை அமர்ந்திருந்தாள். அவைமுகப்பில் ருக்மாங்கதனும் ருக்மரதனும் இருந்தனர். சுவடிகளை ஏந்திய இரு எழுத்தர் இருபக்கமும் நிற்க நடுவே பேரமைச்சர் திரயம்பகர் அமர்ந்திருந்தார். நாற்குடித்தலைவர்களும் வணிகர்களுமாக முழுமையாகவே அவை நிறைந்திருந்தது.
பூரிசிரவஸ் சல்லியருக்கு முறைப்படி வாழ்த்துக்களை தெரிவித்து தலைவணங்கினான். சல்லியர் நகைத்து மீசையை நீவியபடி “அஸ்தினபுரியின் அணுக்கம் உன்னை வாழ்த்துரைகளிலும் வணக்கங்களிலும் தேர்ச்சிகொள்ளச் செய்துள்ளது இளையோனே. விரைவிலேயே நீ ஒரு சூழ்மதியாளனாக அங்கே அமர்ந்திருப்பாய் என எண்ணுகிறேன்” என்றார். அந்தச் சொற்களிலிருந்த மென்மையான நஞ்சை உணர்ந்தாலும் பூரிசிரவஸ் புன்னகையுடன் “மலைமகன் ஒருவன் அடைவது அனைவரும் அடைவதல்லவா? அரசரின் வாழ்த்துரை என்னை முன் செலுத்தட்டும்” என்றான். சல்லியர் “என் வாழ்த்து உன்னுடன் எப்போதுமுண்டு பால்ஹிகனே” என்றார்.
”நான் அஸ்தினபுரியின் அரசகுடியிடம் செய்துகொண்ட சொல்லொப்புதலை முறைப்படி அறிவிக்கும்பொருட்டு வந்தேன் அரசே” என்றான் பூரிசிரவஸ். “நான் சென்றது பால்ஹிகக்கூட்டமைப்பின் பொருட்டு என்பதனால் அதை தலைவராகிய உங்களுக்கு அறிவிப்பது என் கடமை.” சல்லியர் கண்களில் சிரிப்புடன் “சொல்” என்றார். பூரிசிரவஸ் முறைமைசார்ந்த சொற்களில் சந்திப்பையும் புரிதல்களையும் சொல்லிமுடித்தான். “அஸ்தினபுரியின் அரசர் துரியோதனர் என்பதையும் அவருக்கே பால்ஹிகக்குடிகள் கட்டுப்பட்டவை என்பதையும் அவரிடம் நான் தெரிவித்தேன். மலையரசுகள் பத்தும் அவருக்குக் கரங்களாக அமையும் என்றேன். அது முன்னரே தாங்கள் தலைமை அமர்ந்து எனக்கிட்ட கட்டளை.” அவன் கைகூப்பி அமர்ந்துகொண்டான்.
மீசையை நீவியபடி சற்றே விழிசரிய த்யுதிமான் நோக்கிக்கொண்டிருந்தார். பின்னர் பெருமூச்சுடன் அசைந்து அமர்ந்து “புதிய செய்திகளை அறிந்திருப்பீர்” என்றார். “ஆம்” என்றான் பூரிசிரவஸ். “அது மத்ரநாட்டுக்கு நலம் பயப்பது”. சல்லியர் விழிகள் இடுங்கின. “பால்ஹிகக்குடிக்கே நலம் பயப்பது என்பது என் எண்ணம். நம் குடிகளில் ஒன்றில் அஸ்தினபுரி மீண்டும் மணம் கொள்வதைப்போல மதிப்புமிக்கது பிறிதென்ன?” திரும்பி அவையை நோக்கியபின் “ஆகவே மலைக்குடிகள் பத்தும் பாண்டவர்களுக்கு கடன்பட்டுள்ளன. நாம் அஸ்தினபுரியின் குடிகள் அல்ல, இந்திரப்பிரஸ்தத்தின் குடிகள்” என்றார்.
பூரிசிரவஸ் ”தங்கள் ஆணைப்படி அமைந்த பால்ஹிகக்கூட்டமைப்பின் குரலாக நான்…” என்று தொடங்க “இளையோனே, பால்ஹிகக்கூட்டமைப்பு இன்றில்லை. நான் அதைவிட்டு விலகிய செய்தியை அறிவித்துவிட்டேன். சௌவீரம் என் தலைமையை ஏற்றுக்கொண்டதாக இரண்டுநாட்களுக்கு முன்னரே தெரிவித்துவிட்டது. சகர்களும் துஷாரர்களும் ஒப்புக்கொண்டசெய்தி இன்று வந்தது. அதைத்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். எஞ்சியிருப்பவற்றில் பெரிய நாடு பால்ஹிகமும் யவனமும்தான். யவனர்களுக்கு வேறுவழி இல்லை. அவர்கள் கரபஞ்சகம் கலாதம் குக்குடம் துவாரபாலம் ஆகிய நான்கு பால்ஹிக மலைக்குலங்களை நம்பி வாழ்பவர்கள். அந்த மலையூர்களுக்கெல்லாம் எனது வீரர்களை அனுப்பியிருக்கிறேன். அவர்கள் பணிந்தாகவேண்டும்” என்றார் சல்லியர்.
புன்னகையுடன் “ஆகவே எஞ்சியிருப்பது பால்ஹிகநாடு மட்டுமே. உங்களுக்கும் வேறுவழியில்லை. அதை தெளிவாக சலனிடம் சொல்ல எங்களுக்கு தூதன் தேவைப்பட்டான். எவரை அனுப்பலாமென்று எண்ணிக்கொண்டிருந்தபோதுதான் நீயே கிளம்பிவரும் செய்தி வந்தது. உனக்காகத்தான் காத்திருக்கிறோம். நிலைமையை நீ உன் மூத்தவனிடம் உரிய சொல்கோத்து விளக்கு. பால்ஹிகர் ஒன்றாக ஆவதற்கு இதைவிடச் சிறந்த தருணம் இனி வாய்க்கப்போவதில்லை” என்றார் சல்லியர். பூரிசிரவஸ் அவையை நோக்கினான். அத்தனை முகங்களிலும் இருந்த மெல்லிய புன்னகையைக் கண்டு திரும்பி “தாங்கள் என் மேல் கொண்ட நம்பிக்கைக்கு பெரிதும் கடன்பட்டிருக்கிறேன் மத்ரரே. தாங்கள் என் தந்தைக்கு நிகரானவர். ஆகவே இது என் கடமை” என்றான்.
“பால்ஹிகக்குடிகள் ஒன்றாவது நிறைவளிக்கிறது. ஆனால் சிம்மத்தால் உண்ணப்படும் ஆட்டுக்குட்டிகள் சிம்மங்களாகின்றன என்ற கதையை பால்ஹிகநாட்டுச் சிறுவர்கள் நம்பமாட்டார்கள்.” அவையெங்கும் படர்ந்த மெல்லிய அதிர்ச்சியை பூரிசிரவஸ் கண்டான். அவன் உள்ளத்தில் உவகை எழுந்தது. “ஆம், நான் என் தமையனிடம் இவையனைத்தையும் சொல்லவிருக்கிறேன். ஆனால் அவர் பால்ஹிகநாட்டை ஆள்பவர். என் தந்தைக்கு நிகரானவர். அவர் ஒருபோதும் சொல்பிழைக்கமாட்டார். பால்ஹிகநாட்டின் பொருட்டு நான் அளித்த சொல் என் தந்தையின் சொல்லும் என் தமையனின் சொல்லும் ஆகும். மலைகளில் சொல் பொன்னுக்கு நிகரானது என்பார்கள். எங்கள் கருவூலச்சேமிப்பு வெறும் களிமண்ணாக ஆகிவிடுவதை எந்தை விரும்பமாட்டார்.”
சல்லியர் கண்கள் இடுங்கி விழிகளே தெரியாமலாயின. அவையினர் முகத்தில் பதற்றம் தெரிந்தது. “இளையோனே, நீ சொல்வதை நான் ஏற்கிறேன். சொல்லை முதன்மையாகக் கருதுவது உயர்பண்பு. ஆனால் இங்கே நாங்கள் வில்லையும் இணையானவையாக எண்ணுகிறோம்” என்றார் சல்லியர். அவையில் மெல்லிய சிரிப்பொலி எழுந்தது. ”ஆம், மத்ரநாட்டு விற்களும் அம்புகளும் மிகச்சிறந்தவை என அறிவேன். நெடுங்காலம் அவற்றைத்தான் நாங்கள் வாங்கிக்கொண்டிருந்தோம். இப்போது அவற்றைவிடக் கூரிய வில்லம்புகளை கூர்ஜரத்திலும் சிந்துவிலும் செய்கிறார்கள். நாங்கள் அங்கிருந்து வாங்குவது மேலும் எளிது.”
“நேராக அசிக்னி வழியாகவே கூர்ஜரம் செல்லமுடிகிறது. சிந்துவை அடையமுடிகிறது. நட்பின்பொருட்டே இன்னமும் அப்பாதையை தெரிவுசெய்யாமலிருந்தோம்” பூரிசிரவஸ் சொன்னான். “ஆனால் வணிகமென்பது இருவழி அல்லவா? அவ்வழியைத் தெரிவுசெய்தால் எங்களுக்கு அஸ்தினபுரி மேலும் அண்மையாகிவிடுகிறது. ஏனென்றால் கூர்ஜரமும் சிந்துவும் அஸ்தினபுரிக்கு அண்மையானவை. அவற்றின் வழியாகவே நாங்கள் அஸ்தினபுரிவரை வணிகப்பாதையை கண்டடையமுடியும். எல்லாவகையிலும் அது பால்ஹிகநாட்டுக்கு ஏற்றது..”
சல்லியரின் இடுங்கிய விழிகளை நோக்கி அவன் தொடர்ந்தான் “துஷாரர்களையும் யவனர்களையும் அசிக்னியுடன் இணைக்கும்பாதைகள் அனைத்தும் பால்ஹிகமண்ணில்தான் உள்ளன. அவர்களின் வணிகம் எங்களிடம்தான் சிறப்பாக நிகழமுடியும். பால்ஹிகமலைக்குடிகள் குருதிவழியில் எங்களுக்கு மிக அண்மையானவர்கள். எங்கள் வழியாக அஸ்தினபுரியிடம் வணிகம் செய்யவே அவர்கள் விழைவார்கள். பிற வணிகங்களை நாங்கள் விரும்பவில்லை என்றால் அவர்கள் அதை புரிந்துகொள்வார்கள்.” அவன் தலைவணங்கி அவையை நோக்கி “வணிகம் என்பது குடிமக்களின் பொருட்டே என பால்ஹிகர் நம்புகிறார்கள். ஆகவே மத்ரநாட்டிடமும் எங்கள் வணிகம் இனிதாக அமையவேண்டுமென்பதே எங்கள் எண்ணம் “ என்றான்.
அவை விரைத்ததுபோல் அமர்ந்திருந்தது. சல்லியர் எந்த அசைவும் இல்லாமல் அமர்ந்திருந்தார். பின்னர் அவர் சற்று நிமிர்ந்தபோது அவ்வொலி அவை முழுக்க கேட்டது. ”ஆகவே வணிகத்தை கூர்மையாக்கவே முயல்கிறீர்கள் அல்லவா?” என்றார். ”ஆம், அரசே. வணிகம் என்பது எப்போதும் இருசாராருக்கும் நலம் பயக்க வேண்டும் அல்லவா?” தலைவணங்கி “சிம்மத்திடம் வணிகம்செய்ய ஆடுகள் முன்வரா என்பது உண்மையே. ஆனால் சிம்மம் புதருக்குள் நின்றிருக்கும் வேங்கையை ஆடாக எண்ணிவிட்டிருக்கவும் வாய்ப்புண்டு அல்லவா?” என்றான்.
சல்லியர் சட்டென்று புன்னகை மலர்ந்து “இளையோனே, நீ சொல்வல்லவன். ஏற்கிறேன். நேரடியாகவே கேட்கிறேன். என் இளையோன் மகளை பாண்டவன் மணக்கிறான். குருதியுறவு இது. என் படைகளைத் துணைக்க படையனுப்பக் கடமைகொண்டவர்கள் அவர்கள். உங்களுக்கு ஏன் அஸ்தினபுரியின் கௌரவர் படையனுப்பி உதவ வேண்டும்? உன்னை மூத்த கௌரவன் தழுவிக்கொண்டான் என்பதனாலா? இல்லை அவன் ஊணறையில் உனக்கு ஊனுணவும் யவன மதுவும் தன் கைகளாலேயே பரிமாறினான் என்பதற்காகவா?” என்றார்.
விரைந்தோடிக்கொண்டிருக்கையில் கால்தடுக்கப்பட்டதுபோல பூரிசிரவஸ் உணர்ந்தான். விழுந்து உருண்டு நெடுந்தொலைவுக்குச் சென்று எழுந்து திகைத்து நின்றான். மதிசூழ்மொழி அதற்குரிய உள்ளொழுங்கை அடைந்ததும் மிக எளிதாக ஆகிறது. அடிப்படையான சில சொற்குறிகளைக் கொண்டு ஒரு தனிமொழியாக அதை வளர்த்து வளர்த்து பேசிக்கொண்டே செல்லமுடிகிறது. அதை அடைந்ததுமே வரும் தன்னம்பிக்கையாலும் அதை கையாளும் உவகையாலும் நெடுந்தொலைவுக்கு தன்னை மறந்து சென்றுவிட்டோம் என அறிந்தான். அந்த விரைவின் நடுவே நேரடியான வினாவை வைத்து சல்லியர் எளிதில் தன்னை வீழ்த்திவிட்டிருக்கிறார்.
“சொல் இளையோனே, எதற்காக உன்னைக் காக்க அஸ்தினபுரி வரவேண்டும்?” என்று சல்லியர் மேலும் கேட்டார். அவை நகைக்கத் தொடங்கியது. அந்த ஒலியலையை தன்னைச்சூழக் கேட்டபடி பூரிசிரவஸ் ஏதோ சொல்ல வாயெடுத்தான். எண்ணங்கள் முழுமைகொள்ளவில்லை. “நீ அவர்களுக்கு உதவுவாய், அல்லது கப்பம் கட்டுவாய் என்பதற்காகவா?” உண்மையில் அதைத்தான் அவன் சொல்வதாக இருந்தான். சல்லியர் தந்தைக்குரிய கற்பிக்கும் குரலில் “நீ இன்னும் முதிராதவன். கேள், பேரரசுகள் ஒருபோதும் தங்கள் சிற்றரசுகளின் பூசல்களில் தலையிடாது. அப்படி தலையிடத்தொடங்கினால் அவற்றின் படைகள் நாடெங்கும் சிதறிப்பரந்துவிடும். சிற்றரசுகள் தங்களுக்குள் மோதி அவற்றில் ஒன்று வல்லமை கொள்ளும் என்றால் அதையே அவை விரும்பும். ஏனென்றால் அதை மட்டும் வெல்வதும் கப்பம் கொள்வதும்தான் எளிது” என்றார்.
அவை இப்போது வாய்விட்டு சிரிக்கத் தொடங்கியது. ஆனால் சல்லியரின் முகம் மாறிக்கொண்டே சென்றது. குரல் ஓங்க “ஆகவே, பால்ஹிகர்களுக்கு தலைவன் யாரென்பது முடிவாகிவிட்டது. ஒரு கோட்டைகூட இல்லாத பூர்வபால்ஹிகம் எங்களை எதிர்த்து ஒருநாள்கூட போரிடமுடியாது. உன் தமையனிடம் சொல், அனைத்தும் முடிவாகிவிட்டது என்று” என்றார். அவை அமைதியாகியது அவரது விழிகளில் வந்த ஒளியைக் கண்டு பூரிசிரவஸ் அஞ்சினான். “இன்னும் எட்டுநாட்களில் இங்கே இளவரசிக்கு கன்யாசுல்கம் அளிக்க இளையபாண்டவர் வருகிறார். அப்போது பால்ஹிகர்கள் உரிய திறைகளுடன் வந்து அவைபணியவேண்டுமென ஆணையிடுகிறேன்” என்றார் சல்லியர்.
“இளையோனே, அந்த ஆணை இன்றே பறவைத்தூதாக பால்ஹிகபுரிக்கு அனுப்பப்படும். அதற்குப் பணிவதாக உன் தந்தையின் ஓலை நாளை மறுநாள் பறவைவழியாக இங்கு வந்தாகவேண்டும். எந்த அரசனின் ஆணையும் வாளுடன் பிணைக்கப்பட்டது என்பதை நான் சொல்லவேண்டியதில்லை. உன் தந்தையின் தலையை சகலபுரியின் கோட்டைவாயிலில் கட்டித்தொங்கவிட நேர்ந்தால் மிக வருந்துபவன் நானாகவே இருப்பேன்.” அச்சொற்களுக்குப்பின் அவர் அவற்றை மீண்டும் தன் சித்தத்தில் ஓட்டி சற்று தணிந்தார்.
“அவர் என் நண்பராக சென்ற நாற்பதாண்டுகளுக்கும் மேலாக இருந்து வருபவர். முதன்முறையாக என் இருபத்திரண்டுவயதில் பால்ஹிகர்களின் எருதுவிழாவுக்குச் சென்றபோது அவரும் நானும் அறிமுகமானோம். புரவியில் ஏறி மலைச்சரிவுகளில் விரைந்திறங்குவதில் எங்களுக்கிடையே போட்டி இருந்தது. அன்றைய சோமதத்தரை நான் இன்றும் நினைத்திருப்பதனாலேயே இத்தனை மென்மையான சொற்கள். பொதுவாக இது என் இயல்பல்ல.” சல்லியரின் இதழ்கள் கேலியாக வளைந்தன. ”உன் தந்தைக்கும் பட்டத்து இளவரசனுக்கும் நான் இங்கிருந்து ஐம்பது பீப்பாய் உயர்தர மதுவை அனுப்புகிறேன். எஞ்சிய வாழ்நாள் முழுக்க அவர்கள் குடிக்கட்டும்” என்றபின் மெல்ல எழுந்துகொண்டார். அரசியரும் தியுதிமானும் எழுந்துகொண்டனர்.
அரியணையருகே நீண்டு கிடந்த மேலாடையை இழுத்து தோளில் அணிந்தபடி மீண்டும் தந்தைக்குரிய புன்னகை மலர்ந்த முகத்துடன் “ஆனால் நீ பயின்று சொன்ன மதிசூழ்சொற்களை விரும்பினேன். அவற்றை நீ இந்த அவையில் சிற்றரசனாக அமர்ந்துகூட சொல்லலாம். உரியமுறையில் பரிசும் பெறமுடியும்” என்றபின் திரும்பினார். அவை மீண்டும் சிரிக்கத்தொடங்கியது. சல்லியர் சுதீரரிடம் “ஓலையை இப்போதே எழுதிவிடுங்கள் அமைச்சரே. என் அறைக்குக் கொண்டுவாருங்கள், முத்திரையிடுகிறேன்” என்றார்.
பூரிசிரவஸ் பதற்றத்துடன் எழுந்து திரும்பி மத்ரநாட்டு அவையை நோக்கிவிட்டு உடல் துடிக்க விழிதிருப்பிக்கொண்டான். “அரசே” என அழைத்தபின்னரே சொல்லப்போவதென்ன என அவனே அறிந்தான். “பாண்டவர்களில் இளையவரின் இரண்டாம் துணைவியாக தங்கள் மகள் ஆவது அனைத்துவகையிலும் தங்கள் தகுதிக்குரியது. அதற்காக பால்ஹிகனாக நானும் மகிழ்கிறேன். இளவரசிக்கு நான் கொண்டுவந்திருக்கும் பரிசில்களை அளிக்க எனக்கு அனுமதியளிக்கவேண்டும்” என்றான். சல்லியரின் விழிகள் சுருங்கின. “இளவரசி இங்கே கற்றுக்கொண்ட கல்வியும் கலைகளும் பாஞ்சாலன் மகளை மகிழ்விக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை.”
சல்லியர் அந்தச் சொற்களால் புண்பட்டது முகம் சிவந்ததில் தெரிந்தது. ஆனால் அதன்மேல் ஒரு புன்னகையை பற்றவைத்துக்கொண்டபடி “உண்மை, பால்ஹிகப்பெண் குருகுலத்தின் அரசியாக ஆவது என்பது நல்லூழே. ஏனென்றால் அவள் இங்கே பேரரசியாவாள். அவள் காலடியில் தங்கள் முடிவைத்து வணங்கி பால்ஹிக மன்னர்கள் திறைசெலுத்துவார்கள். பால்ஹிகநாடுகளை இணைக்கும் மையவிசையாக அவள் திகழவேண்டுமென்பதே இறையாணை போலும்” என்றார். பூரிசிரவஸ் “ஆனால் அவர்கள் அங்கே இந்திரப்பிரஸ்தத்தில் அல்லவா இருந்தாகவேண்டும்? எளியவர்கள் அவர்களை சந்திக்க முடியாதல்லவா?” என்றான். சல்லியர் கைவீசி ”வந்துசெல்லலாம்… உன் கோரிக்கையை அவளிடம் சொல்கிறேன்” என்றார்.
“ஆம், அது நன்று. இதற்காகத்தான் பேரரசுகளின் இளவரசிகளை வெளியே மணம் புரிந்து அனுப்புவதில்லை. அவர்கள் தங்கள் பிறந்தநாட்டிலேயே வாழ்கிறார்கள். அரசாள்கிறார்கள். அதன்பொருட்டுத்தான் அவர்களுக்கு மிகச்சிறிய சிற்றரசிலிருந்துகூட மணமகனை பார்க்கிறார்கள்…” என்றான் பூரிசிரவஸ். அவை முழுமையாகவே உறைந்துவிட்டதை அவன் திரும்பாமலேயே அறிந்தான். சல்லியரின் முகம் அவரை மீறி கோணலாக இழுபட்டது. பூரிசிரவஸ் “தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அரசே. குருதியுறவுக்காக மட்டுமே பேரரசர்கள் உதவுவார்கள். ஆனால் குருதியுறவுகள் எங்கே எப்படி மலருமென அறியமுடியாதல்லவா?” என்றான்.
அனைத்தும் முடிந்துவிட்டது என உணர்ந்ததும் பூரிசிரவஸ் ஆறுதலையும் பதற்றத்தையும் ஒருங்கே உணர்ந்தான். அவன் விழிகள் சல்லியரின் ஒவ்வொரு மயிர்க்காலையும் என கூர்ந்து நோக்கின. சல்லியர் அரைக்கணம் தன் இளையவனை நோக்கினார். பின்பு “ஆம், அதை புரிந்துகொண்டேன். அனைத்தையும் நோக்கி முடிவுசெய்வோம்” என்று சொல்லி புன்னகைசெய்தார். பூரிசிரவஸ் தலைவணங்க “நீடூழி வாழ்க” என்று வாழ்த்தியபின் திரும்பி நடந்துசென்றார். அவர் செல்வதை அறிவிக்கும் முரசுகளும் கொம்புகளும் முழங்கின. அகம்படியர் அவரை சூழ்ந்துகொண்டனர். அவர் செல்லும் வழியை ஒருக்க வீரர்கள் ஓடினார்கள். தியுதிமான் “நலம்பெறுக” என பூரிசிரவஸ்ஸை வாழ்த்திவிட்டு திரும்பிச்சென்றார்.
அவை கலைவதை பூரிசிரவஸ் வெறுமனே நோக்கி நின்றான். அவன் உடலும் உள்ளமும் ஓய்ந்திருந்தன. ஒவ்வொருவராக அவனை வணங்கி முகமன் சொல்லி பிரிந்துசென்றனர். ருக்மரதன் அவனருகே வந்து “பால்ஹிகரே, இரவு நெடுநேரமாகிறது. தாங்கள் துயிலாமல் வந்திருக்கிறீர்கள்” என்றான். பூரிசிரவஸ் “துயில் இனிமேல் வருமென நினைக்கிறேன்” என்றான். ருக்மரதன் “நீங்கள் பேசிக்கொண்டது என்ன என்றே எனக்குப்புரியவில்லை. ஆனால் தந்தைக்கு நிகராக நீங்கள் நின்றுபேசியதைக் கண்டு திகைத்தேன். அஸ்தினபுரியினரிடம் சென்று நிறைய கற்றுக்கொண்டிருக்கிறீர்கள்” என்றான். பூரிசிரவஸ் புன்னகையுடன் “நாளை காலை அவைகூடுவதற்கு முன்னதாக நான் இளவரசியைக் கண்டு என் பரிசில்களை வழங்கவேண்டும். அவைக்கு வந்து விடைபெற்று நான் பால்ஹிகபுரிக்கு மீள்கிறேன்” என்றான். திரும்பி சகனை நோக்கி போகலாமென தலையசைத்தான்.
மாளிகைக்குச்செல்லும் மரப்பாதையில் நடந்தபோது மதுமயக்கிலிருப்பதாகத் தோன்றியது. காற்றிலாடும் மரங்களின் மேல் பாதை ஆடுவதனால்தான் என விளங்க சற்றுநேரமாகியது. செல்லச்செல்ல உடலின் எடை கூடிக்கூடி வந்தது. அறைக்குச் சென்று அப்படியே படுக்கையில் விழுந்து கண்களை மூடிக்கொண்டான். உடலெங்கும் ஓடிய குருதி விரைவழிந்து மெல்ல அடங்குவதை உணர்ந்தபோது எங்கோ சிட்டுக்குருவி சிறகடிப்பதை கேட்டான். சிட்டுக்குருவியா என வியந்து கொண்டாலும் அவன் படுத்தபடியேதான் இருந்தான். மீண்டும் சிட்டு சிறகடித்தது. அவனருகே வந்து சிறகொதுக்கி அமர்ந்து மணிமூக்கைத் தூக்கி மெல்ல ரீக் ரீக் என்றது.
”பாலையில் சிறிய சிட்டுக்கள் உண்டு” என்று தேவிகை சொன்னாள். அவள் அறைக்குள் நின்றிருப்பதை அவன் அப்போதுதான் உணர்ந்தான். எழுந்தமர முடியாமல் உடல் எடைகொண்டு குளிர்ந்திருந்தது. “அவை விடியற்காலையில் மட்டுமே வெளிவரும். விரைவிலேயே புல்மணிகளை உண்டுவிட்டு முள்மரங்களின் நிழலுக்குள் சென்று ஒடுங்கிவிடும். இரவும் பகலும் பெரும்பாலான நேரம் அங்குதான் இருக்கும். நீங்கள் கேட்டிருக்கலாம். அவை இடைவெளியின்றி பூசலிட்டு ஒலித்துக்கொண்டிருக்கும்.” அவன் “ஆம், ஒருமுறை பார்த்திருக்கிறேன்” என்றான். “சிலசமயம் ஓநாய்கள் காற்றில் எம்பி எழுந்து அவற்றை கவ்விக்கொள்வதுண்டு. ஓநாய் அவற்றை வேட்டையாடுவது வெறும் சுவைக்காக மட்டுமே. ஓநாயின் ஒருவாய் உணவாகக்கூட அவை அமைவதில்லை.”
“ஆம், மிகச்சிறியவை” என்று அவன் சொன்னான். “நான் மூத்தவளை அழைத்துக்கொண்டு வந்தேன். அவள் உங்களிடம் ஏதோ பேசவிழைகிறாள்” என்றாள் தேவிகை. “யார்?” அவன் படுத்தபடியே கேட்டான். தேவிகை திரும்ப அங்கே துச்சளை நின்றுகொண்டிருந்தாள். ”படுத்துக்கொள்ளுங்கள்” என்று அவள் சொன்னாள். “வாள்புண் மிக ஆழமானது. ஆறுவதற்கு நெடுநாளாகும்.” பூரிசிரவஸ் “வாள்புண்ணா? எங்கே?” என்று கேட்டதும்தான் தன் வலதுகை வெட்டுண்டிருப்பதை கண்டான். “எங்கே?” என்று அவன் கேட்டன். “இங்கு போரில் கையை வெட்டும் வழக்கம் உண்டு. ஆனால் விரைவிலேயே கைகள் முளைத்துவிடும்….” துச்சளை சிரித்தபடி வந்து கட்டிலில் காலடியில் அமர்ந்தாள். “அறிந்திருப்பீர்கள், கார்த்தவீரியரின் ஆயிரம் கைகளையும் பரசுராமர் வெட்டிக்குவித்தார்.”
பூரிசிரவஸ் பெருமூச்சுடன் “ஆம்” என்றான். “அதன்பின் யாதவர்கள் அனைத்துப்போர்களிலும் கைகளை வெட்டுவதை ஒரு பழிதீர்த்தலாகவே கொண்டிருக்கிறார்கள்.” “ஏன்?” என்றான். “அவர்கள் பழிதீர்ப்பது தெய்வத்தை“ என்று அவள் கரியமுகத்தில் வெண்பற்கள் தெரிய சிரித்தாள். “நான் விரைவில் நலமடைய விழைகிறேன்” என்றான் பூரிசிரவஸ். “நலமடைந்தாகவேண்டும் இளவரசே. நமது மணநிகழ்வுக்கு ஓலை எழுதப்பட்டுவிட்டது. மூத்தவர் அதை விதுரரிடம் அளித்துவிட்டார். ஆனால் அங்கநாட்டரசர் அதை ஏற்கவில்லை. பால்ஹிகக்கூட்டமைப்பினர் ஒருங்குகூடி வந்து கேட்டாலொழிய மகற்கொடை அளிக்கலாகாது என்கிறார்.” பூரிசிரவஸ் “அவர்கள் என்னுடன்தான் இருக்கிறார்கள். மத்ரநாட்டுடன் அல்ல. அவர்களை நான் அழைத்துவரமுடியும்” என்றான்.
“இல்லை இளவரசே, சௌவீரநாட்டு சுமித்ரர் தங்கள் ஒருமை மத்ரநாட்டுடன்தான் என அறிவித்துவிட்டார். சகநாட்டு அரசர் பிரதீபனும் கலாத குடித்தலைவர் சுக்ரரும் துவாரபால குடித்தலைவர் துங்கரும் இன்னமும் மறுமொழி கூறவில்லை.” பூரிசிரவஸ் “அது எளியதே. நான் என் தூதர்களை நேரடியாக சென்று பேசவைக்கிறேன்” என்றான். “அதை விரைந்துசெய்யுங்கள்” என்றாள். “இங்கிருந்த சிட்டுக்குருவி எங்கே?” என்றான் பூரிசிரவஸ். “சிட்டுக்குருவியா? இது இரவு. சிட்டுகள் வருவதில்லை.” “தேவிகை அதைப்பற்றித்தானே சொன்னாள்?” என்றான். “இளவரசே, தேவிகை என்பவள் யார்?” என்று துச்சளை கேட்டாள். “நான் இறந்துவிட்டேனா?” என்றான் பூரிசிரவஸ் தொடர்பின்றி. “இல்லை. நீங்கள் நோயுற்றிருக்கிறீர்கள். படைக்கலத்தால் உங்கள் தலை வெட்டுண்டிருக்கிறது.”
பூரிசிரவஸ் திகைத்து “தலையா?” என்றான். “ஆம் தலைமட்டுமே இப்போது படுக்கையில் இருக்கிறது.” பூரிசிரவஸ் தன் முழு உடலும் குளிர்ந்து நடுங்குவதை தலை தனியாக அமர்ந்து பார்ப்பதை உணர்ந்தான். சிட்டுக்குருவி சிறகடித்தது. ரீக் ரீக் என்றது. அது எவரோ மரப்பலகை முனக மெல்ல காலெடுத்துவைக்கும் ஒலி. அவன் புலனுணர்வுகள் ஒரே கணத்தில் விழித்துக்கொண்டன. எழுந்து படுக்கையில் அமர்ந்து வலக்கையை வாள் நோக்கி நீட்டி “யார்?” என்றான்.
கதவு மெல்ல ரீக் என்ற ஒலியுடன் திறந்தது. அங்கு நின்றிருந்த பெண்ணின் ஆடைநுனி மெல்ல காற்றில் படபடத்தது. “இளவரசே, நான் அணுக்கச்சேடி கனகை. தங்களிடம் இளவரசி பேச விழைகிறார்.” “யார்?” என்றதுமே உணர்ந்துகொண்டு பூரிசிரவஸ் எழுந்து நின்றான். “இவ்வேளையிலா?” என்றான். “அவர் அருகே சிற்றறையில் இருக்கிறார். தங்களிடம் பேசுவதற்காக வந்திருக்கிறார்.” பூரிசிரவஸ் தன் வாயை துடைத்துக்கொண்டு “இதோ” என்றான். நெகிழ்ந்திருந்த கச்சையை முறுக்கிக்கொண்டு குவளையிலிருந்து நீர் அருந்திவிட்டு “செல்வோம்” என்றான்.
இடைநாழி காற்றில் மிதந்துகொண்டிருந்தது. மரங்களின்மேல் நகரம் அமைவதற்கான இன்னொரு பொருத்தப்பாடும் தெரிந்தது. இலைகளிலிருந்து எழுந்த நீராவியால் கீழிருந்து மெல்லிய வெம்மை வந்துகொண்டிருந்தது. பனிக்காற்றை மரக்கிளைச்செறிவு பெரும்பாலும் தடுத்துவிட்டது. தாய்ப்பறவையின் சிறகுச்செறிவுக்குள் என அரண்மனைத்தொகை அமைந்திருந்தது. காற்றில் மாளிகைகளும் படிகளும் அசைந்து முனகிக்கொண்டிருந்தன. குறட்டைவிட்டு அவை துயில்வதுபோல தோன்றியது. பெரும்பாலான சாளரங்கள் அணைந்து இடைநாழிகளில் மட்டும் சிறிய நெய்விளக்குகளின் ஒளி எஞ்சியிருந்தது. செந்நிற விண்மீன்கள் என அவை நிழல்முகில்குவைகளாகத் தெரிந்த காட்டுக்குள் இமைத்துக்கொண்டிருந்தன.
சிற்றறைக்குள் அவன் சென்றதும் கனகை மரப்பட்டைக்கதவை மூடினாள். உள்ளே சாளரத்தின் அருகே நின்றிருந்த விஜயை திரும்பி “இளவரசே” என்றாள். ”நலமா இளவரசி?” என்றான். “அவையில் திரைக்குள் நானும் இருந்தேன். தாங்கள் பேசியதை கேட்டேன். நான் அங்கு பேச அவையொப்பு இல்லை. தங்களிடம் பேசியாகவேண்டுமென விழைந்தேன். நள்ளிரவுக்குப்பின் இப்படி சந்திப்பது முறையல்ல. இதைநான் செய்வேன் என எவரும் இங்கு எதிர்பார்க்கமாட்டார்கள். ஆகவே எவருமறியாமல் சந்திக்கமுடியும் என நினைத்தேன்.” பூரிசிரவஸ் “ஆம், இளவரசி. இது முறையானதல்ல. பிறர் அறிந்தால் இருவருக்கும் இழிவே” என்றான். “என் நெறிபற்றி எவருக்கும் நான் விளக்கமளிக்கவேண்டியதில்லை. அதைப்பற்றி முதல் ஐயக்குரல் எழுமென்றால் இரண்டாம்குரல் ஒலிக்க நான் உயிருடனிருக்கமாட்டேன்” என்றாள் விஜயை. பூரிசிரவஸ் பதறி “அவ்வாறல்ல” என்றான்.
மெல்லிய நெய்யகல் ஒளியில் அவளை நன்கு பார்க்கமுடியவில்லை. அவளுடைய மிகச்சிறிய மூக்கும் கொழுவிய கன்னங்களும் கோடுவளைவுகளாக தெரிந்தன. செந்நிறமான பட்டாடை படபடத்தபடியே இருந்தது. அறைக்குள் ஒரு சிட்டுக்குருவி அஞ்சி நிலையழிந்து சுற்றிவருவதைப்போலவே பூரிசிரவஸ் உணர்ந்தான். “நான் தங்களிடம் அன்று பேசியதை நினைவுறுகிறீர்களா?” என்று விஜயை கேட்டாள். “நினைவுறமாட்டேன் என எண்ணுகிறீர்களா இளவரசி?”. என்றான் பூரிசிரவஸ். “மறக்கவே வாய்ப்பு. அஸ்தினபுரியின் இளவரசிக்கு தாங்களே அணுக்கமானவர் என்று அறிந்தேன். அதை இன்று தங்கள் சொல்லால் உறுதியும் செய்துகொண்டேன்.” பூரிசிரவஸ் “இல்லை, அது…” என தடுமாறி “இளவரசி, உண்மையில் அது நான் மிகையாகச் சொன்னது. மத்ரநாட்டின் ஓலை பால்ஹிகநாட்டுக்கு இன்று சென்றிருந்தால் அனைத்தும் முள்முனைக்குச் சென்றுவிடும். அதைத்தடுக்க எண்ணினேன்” என்றான்.
“ஆனால் அது உங்கள் உள்விழைவே. அது உண்மையும்கூட. அது எதுவோ ஆகட்டும்” என்று விஜயை சொன்னாள். “ஆனால் நான் என் சொல்லை விட்டுவிட விரும்பவில்லை. ஏனென்றால் எத்தனையோ இரவுகளில் அச்சொல்லை நெஞ்சோடு சேர்த்து நான் துயின்றிருக்கிறேன்.” பூரிசிரவஸ் “இளவரசி…” என சொல்ல வாயெடுக்க “நான் வாதிட வரவில்லை. என் நெஞ்சை உரைத்துச்செல்லவே வந்தேன். நான் உங்களை எண்ணி நெஞ்சுருகிவிட்டேன். இனி பிறிதொருவர் தீண்டுவதை எண்ணவும் முடியவில்லை. இந்த அரசு சூழ்தலும் நிலக்கணக்குகளும் எனக்குத்தேவையில்லை. நான் வெறும் பெண். வெறும் காதலி. மனைவியாகவும் அன்னையாகவும் மட்டுமே விழைபவள். நான் இளவரசியே அல்ல. இந்தப் பட்டும் பொன்னும் சத்ரமும் சாமரமும் ஏதும் எனக்குத்தேவையில்லை” என்றாள்.
“நான் கேட்பது என் அன்புக்கான மறுமொழியை மட்டுமே” என்று விஜயை படபடத்த குரலில் சொன்னாள். “பிறிது எச்சொல்லையும் நான் கேட்கவே விரும்பவில்லை.” பூரிசிரவஸ் “இளவரசி, இந்நிலையில் நான் என்ன செய்யமுடியும்?” என்றான். “நீங்கள் வீரர். வீரருக்குரிய வழியொன்றுள்ளது” என்று விஜயை சொன்னாள். “நாளை குடிப்பேரவையில் எங்கள் மலைக்குடியின் மூத்தார் அனைவரும் வந்திருப்பார்கள். அங்கே எழுந்து நின்று என்னை அழைத்துக்கொண்டு போகப்போவதாக அறிவியுங்கள். நான் உடன்படுகிறேனா என்று அவை என்னிடம் கேட்கும். எழுந்து நின்று அன்னைதெய்வங்கள் மேல் ஆணையிட்டு ஆம், உடன்படுகிறேன் என்று நான் சொல்வேன்.”
“அதன்பின் அவர்களிடம் இரண்டு வழிகளே உள்ளன. மண ஒப்புதல் அளிப்பது அல்லது எங்கள் குடியில் எவருடனேனும் நீங்கள் இறப்புவரை தனிப்போர் புரியவேண்டுமென கோருவது. எங்கள் குடி இன்னமும் தொன்மையான மலைமக்கள்தான். மலைநெறிகளைக் கடந்து எதையும் செய்ய மூத்ததந்தையாலும் முடியாது. அவர் குடித்தலைவர்களுக்கு கட்டுப்பட்டாகவேண்டும்… இன்று மத்ரநாட்டில் தங்களுடன் போரிட்டு நிற்க இளையோர் எவருமில்லை. வென்று என் கைகளைப்பற்றிக்கொண்டு நகர் நீங்குங்கள். உங்களை எங்கள் குலமே பாதுகாக்கும்…” என்றாள் விஜயை. “எங்கள் குடியிளைஞர்கள் தங்களை கொண்டாடுவர். நாங்கள் இன்னமும் வீரத்தை வழிபடும் பழங்குடியினர்தான்.”
பூரிசிரவஸ் “இளவரசி, சல்லியர் வாளெடுத்தால் அவரை நான் வெல்லமுடியாது” என்றான். “வாளெடுக்க மாட்டார். இளையோனிடம் வாள்பூட்டி அவர் வென்றால் அதைவிட குலத்திற்கு இழிவு பிறிதில்லை. அதை குடிமூத்தார் ஒப்பமாட்டார்கள். பிற எவரும் உங்களுக்கு ஈடில்லை” என்றாள் விஜயை. “ஆம்” என்றான் பூரிசிரவஸ். மேலும் சொல்ல சொற்கள் எஞ்சியிருப்பதுபோலிருந்தது. “அத்துடன் மூத்ததந்தை வாளெடுத்து உங்களை வென்றால் நானும் உங்கள் உடல்மேல் விழுந்து உயிர்துறப்பேன். என் ஆடைக்குள் குறுவாளுடன்தான் அவைக்கே வருவேன். அதையும் நான் அவையில் முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.”
அவளுடைய ஆடையின் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. பூரிசிரவஸ் பெருமூச்சுடன் “அவ்வண்ணமே செய்கிறேன் இளவரசி. நாளை தங்களை அவையில் சந்திக்கிறேன்” என்று சொன்னான். “இளவரசே, நான் பெண்ணாக என்னை எண்ணிய நாள்முதல் அறிந்த பெயர் தங்களுடையது. தங்கள் உருவத்தை ஒரு சூதன் வழியாக பட்டில் வரையவைத்து கொண்டுவந்து வைத்திருக்கிறேன். அதை நோக்கி நோக்கி நான் வளர்ந்தேன்…” என்றபோது அவள் குரல் இடறியது. “என் விழைவை இரு தந்தையரும் அறிவார்கள். சென்றமுறை அங்கே வரும்போது அதை தெளிவாகவே சொன்னேன்.”
“அரசியலில் பெண்களின் விழைவுகளுக்கு இடமில்லை இளவரசி” என்றான் பூரிசிரவஸ். “நான் அரசியலை அறியேன். நான் இளவரசி அல்ல. இந்த முடியையும் குடியையும் எப்போது வேண்டுமென்றாலும் துறக்கிறேன். மலைச்சரிவில் மண்குடிலில் உங்களுடன் ஆடுமேய்த்து வாழவும் சித்தமாக இருக்கிறேன்” என்று சொன்னதும் அவள் விசும்பி அழத்தொடங்கினாள்.
அவ்வொலியை கேட்டபடி பூரிசிரவஸ் செயலற்று நின்றான். அவளைத் தொட்டு அணைத்து ஏதேனும் சொல்லவிழைந்தான். ஆனால் அதை முறைமீறலாகவே அவன் நெஞ்சு உணர்ந்தது. பெருமூச்சுடன் “இளவரசி, தாங்கள் நெஞ்சாறவேண்டும். அனைத்தும் செம்மையாக முடியும்” என முறைமைச்சொல் சொன்னான். அவள் தன் மேலாடையால் முகத்தை மூடியபடி நீண்ட பெருமூச்சுகள் விட்டு தன்னை ஆற்றிக்கொண்டாள். “அன்னையர் சொல் துணையிருக்கட்டும்” என்றபின் திரும்பி வாயில் வழியாக வெளியே சென்றாள்.